Skip to Content

02. யோக வாழ்க்கை விளக்கம் IV

யோக வாழ்க்கை விளக்கம் IV

 கர்மயோகி

641) சிருஷ்டியிலுள்ள பரம்பொருளும், அதற்கு முந்தைய நிலையிலுள்ள பரம்பொருளும் வேறு வேறல்ல. காலத்தால் அவை பிரிக்கப்பட்டவையல்ல. ஒன்றில் மற்றதுள்ளது. வெவ்வேறு பார்வைக்கு வெவ்வேறாக காட்சியளிக்கிறது. அதனால்தான் நம் பார்வை மாறினால் ஜடம் திருவுருமாறும் என்கிறார் பகவான்.

பார்வை மாறினால் ஜடம் திருவுருமாறும்.

மனம் மாறினால் வறுமை அதிஷ்டமாகும்.

ஒருவரை மகன், தகப்பன் என்கிறார். அவரது தம்பி, அண்ணன் என்கிறார். தகப்பனாரும், அண்ணனும் ஒருவரே. அவர் தகப்பனாராக இருந்து அண்ணனாக மாறுவதில்லை. அவரிடம் மாற்றமில்லை. கூப்பிடுபவர்களில் உறவு மாற்றமுள்ளது. அவருடைய நிலையோ, அவரோ மாறுவதில்லை. தம்பிக்கு அண்ணனாகவும், மகனுக்கு தகப்பனாகவும் அவர் காட்சியளிக்கிறார். Absolute, Relative பரம்பொருள், சிருஷ்டி என இரண்டை நாம் அறிவோம். எனவே பரம்பொருள் சிருஷ்டியாக மாறியுள்ளது என்று நினைக்கின்றோம். நம்முள் ஆன்மா, மனம் என இரு பகுதிகள் உண்டு. ஆன்மாவிலிருந்து பார்த்தால் பரம்பொருளாகவும், மனத்திலிருந்து பார்த்தால் சிருஷ்டியாகவும் காட்சியளிப்பது ஒன்றே. மாறிய பார்வைக்கு மாற்றம் தெரிவதால், பகவான் நம் பார்வையை நாமே முனைந்து மாற்றிக் கொண்டால், தேவையான திருவுருமாற்றம் ஏற்படும் என்கிறார்.

நாம் மனம் மாறியவுடன் சூழ்நிலை மாறுவதை அனைவரும் கண்டிருக்கிறோம். சூழ்நிலை மாறுவதைப்போல் பொருள்களின் குணமும் மாறும். கடைசிக்கட்டமான உடல் திருவுருமாற்றமும் நடக்கும் என்று பகவான் குறிக்கின்றார்.

மனநிலை சிருஷ்டிக்கும் தன்மையுடையது. புது மனநிலையை நாம் சிருஷ்டித்தால், புது சூழ்நிலை, புது குணம், புதுப் பொருள் உற்பத்தியாவதைக் காணலாம்.

ஜடம் திருவுருமாற்றமடைவது பூரண யோகத்தில் கடைசி கட்டம். அதையும் மனமாற்றத்தால் நடத்த முடியும் என்கிறார். நம் மனத்தில் ஜடமான பகுதியும் உண்டு. (சிந்திக்கும் பகுதியும், உணரும் பகுதியும், ஜடமான பகுதியும் மனத்திலும் - உணர்விலும் - உண்டு). சிந்திக்கும் பகுதிக்கு ஜடமான பகுதி கட்டுப்பட வேண்டும். நடைமுறையில் ஜடமான பகுதிக்குச் சிந்திக்கும் பகுதி கட்டுப்பட்டிருக்கும். தலைகீழான நிலை இது. இது மீண்டும் தலைகீழாக மாறினால், ஜடம் கட்டுப்படும். கட்டுப்பட்ட ஜடம் அடுத்த நிலையில் உணர்வு பெறும். அடுத்த நிலையில் திருவுருமாற்றம் பெறும்.

நாம் மாறாமல், தானே, எதுவும் செய்யாமல் நிலைமை மாறுமா என மீண்டும், மீண்டும் எதிர்பார்ப்பதே நம் வழக்கம். செயலை மாற்றாமல், மனதை மாற்றிக் கொண்டு - அல்லது மாறியதாக நினைத்துக் கொண்டு - நிலைமை மாறவில்லை என்று குறைப்படுவதுண்டு. மனம் உண்மையாக மாறினால், அதற்குரிய மாற்றம் நிச்சயமாக இருக்கும்.

********

642) மனத்திலிருந்து சைத்தியப் புருஷனுக்குப் போவது என்பது, ஆசையால் பீடிக்கப்பட்டவன் அதை மீறிவந்து அதன் பலனைச் சிந்திப்பது போலாகும். ஆசையை விலக்கி பலனை நினைப்பது மனத்திலிருந்து சைத்தியப் புருஷனுக்குப் போவது போன்றது.

நாம் மனத்தைப் பற்றி எவ்வளவு பேசினாலும், புலன்களை அறிவதுபோல் மனத்தை அறிவதில்லை. புலன்களை நாம் தெளிவாக அறிவோம். உணர்ச்சி நமக்குப் புரியக்கூடியது. அறிவுக்குரிய மனத்தை நாம் உணர்ச்சியை அறிவதுபோல் அறியமுடிவதில்லை. சைத்திய புருஷன் ரிஷிகள் அறிவது. நம்மைப் பொறுத்தவரை அது ஒரு சொல்லேயாகும்.

நாம் செய்யும் முக்கியக் காரியங்களை நாம் உணர்வால் செய்கிறோமே தவிர மனத்தால், அறிவால் செய்வதில்லை என நாம் அறிவதில்லை. உணர்வால் செய்ய முடியாது. அறிவால்தான் செய்யவேண்டும் என்ற நிலை ஏற்பட்டவுடன் அறிவு ஸ்தம்பித்து நிற்பதைக் காணலாம். MLA வீட்டில் பையன் துடுக்காக நம் மகனை அடித்துவிட்டான், ரோட்டரி கிளப் செக்ரட்டரி பதவிக்கு NGO-வை நிற்கச் சொல்கிறார்கள், ஊரில் முக்கியப்புள்ளி வீட்டில் அண்ணன், தம்பி பாகப்பிரிவினையை பழைய நட்பு, உறவு கருதி சின்னபுள்ளியை மத்தியஸ்தத்திற்கு அழைக்கிறார்கள் என்றால் இங்கெல்லாம் உணர்வால் செயல்பட முடியாது. MLA பையனை அடித்துவிட்டால் என்ன ஆகுமோ, ரோட்டரி கிளப் செக்ரட்டரியாக ஜெயித்தால் நிலைமையைச் சமாளிக்க முடியுமோ, பெரிய புள்ளி வீட்டுத் தகராறில் ஒரு பக்கம் தீர்ப்புச் சொன்னால் அடுத்தவருக்கு மனம் கசக்கும் என்றால், சாதாரண மனிதன் தன் அறிவைக் கலந்தால், ஒன்றும் புரியவில்லை என்று பதில் வரும். இதுபோன்ற சமயங்களில் நாலுபேர் செய்வதைப் போல் செய்வார்கள். அது மனத்தின் செயலன்று. சமூக உணர்வு. நாம் ஆசைப்பட்டு அதைத் திறமையாகப் பூர்த்திசெய்வதை அறிவின் செயலாகக் கொள்கிறோம். ஆசையும், திறமையும் உணர்வுக்குரியவை, அறிவுக்கன்று.

 மனத்திலிருந்து செயல்படுதல் என்றால், உணர்வையும், ஊரையும் ஒதுக்கி வைத்துவிட்டு அறிவுக்குப் புலப்படுதலை அறிதல் என்று பொருள். சாதாரண மனிதனுக்கு அந்தச் சந்தர்ப்பம் வந்ததில்லை. வந்தால், அவனுக்குக் கட்டுப்பட்டவரிடமே அது எழும். அங்கு அறிவு தெளிவுபடாது. அறிவால் தெளிவாகச் செயல்படுபவர் குறைவு. அவர்களே சைத்தியப்புருஷனை அடைய முயல்வது பலிக்கும். அவர்களுக்கு அது பெருமுயற்சி. ஆசை தன்னை ஆட்கொண்ட நிலையில் மனிதன் ஆசையை அறிவான். அதையே அறிவாகக் கொள்வான். 15 M.P.க்கள் ஜனாதிபதியைக் கண்டு பேசிவிட்டு வெளிவந்த பொழுது, அனைவரும் போய்க் கொண்டிருந்தபொழுது ஒருவர் பின்னால் தயங்கி நிற்பதைப் பார்த்து, என்ன யோசனை என்றொருவர் கேட்டார். இந்த மாளிகைக்கு என்று நான் அதிபதியாவேன்? என்றார். இவருடைய நிலையே ஆசையால் பீடிக்கப்படுவது. 65 வயதான உலகப்புகழ் பெற்ற பெரிய மனிதன் விருந்திற்குப் போன இடத்தில் ஒரு பெண்ணை வைத்த கண் வாங்காமல் வெட்கமின்றி பார்த்துக் கொண்டேயிருப்பதை அவரால் அறிய முடியவில்லை, தவிர்க்க முடியவில்லை. இவர்கள் ஆசையை விட்டகன்று, நிதானமாய்ச் சிந்திப்பது இந்த ஜன்மத்தில் முடியாது. அதுபோல் அறிவில் தெளிவுள்ளவன், அதைக் கடந்து வந்து ஆன்மாவைச் - சத்தியம் - நாடுவது முடியாது. யோகத்தை மேற்கொள்பவருக்கும், அருளுக்கும் பாத்திரமானவர்க்குமே உரியது அப்பாதை. இருமுயற்சிகளுக்கும் கடக்க வேண்டிய தூரம் ஒன்றேயாகும்.

********

643) நாம் கேட்பதை, தாங்கள் மகிழ்ந்தபொழுது தெய்வங்கள் நமக்கு வரமாக அளிக்கின்றன. பிரம்மம் தன்னிடமிருந்து எதையும் மனிதன் தன் திறமையால் பெறுவதை அனுமதிக்கின்றது. அன்னை நம்மால் பெற்றுக்கொள்ள முடியும் அத்தனையையும் நமக்களிக்க ஆர்வமாக இருக்கிறார்.

கேட்டதைக் கொடுக்கும் தெய்வம்.

எதையும் பெறவும் அனுமதிக்கும் பிரம்மம்.

பெறும் அளவுக்குத் தரும் அன்னை.  

ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகியவற்றிற்குரிய தெய்வங்களுண்டு என்பது நம் மரபு. தெய்வலோகத்து தெய்வங்களுக்கில்லாத சக்தியில்லை. அவர்களுடைய சக்தி அளவில்லாதது. தெய்வங்கள் பூமியின் அளவுடையவர்கள் என்கிறார் அன்னை. பிறப்பாலும், அமைப்பாலும் தெய்வங்களுக்குப் பூமியுடன் தொடர்போ, அக்கறையோ இல்லை என்கிறார் அன்னை. அதனால் மனிதன் தெய்வத்தோடு தொடர்பு கொண்டு ஏதாவது பெற வேண்டுமானால், அவர்கள் மனதை எட்டும் மார்க்கத்தை பூஜை, ஸ்தோத்திரம், திருவிழா, தவம், யோகம், மந்திரம் போன்றவற்றால் எட்ட முடியும் என்று கண்டு கொண்டுள்ளான். அப்படி எட்டினால், எட்டும்பொழுது தெய்வம் மகிழ்ந்தால், மனிதன் கேட்பதைக் கொடுக்கிறது என்று நாம் புராணங்கள், இதிகாசங்கள் மூலமாக அறிவோம். தெய்வத்தையும், சத்திய ஜீவியத்தையும், சச்சிதானந்தத்தையும் கடந்துள்ளது பிரம்மம். பிரம்மமே அனைத்திற்கும் ஆதி. தானே பிரம்மம் எவருடனும் தொடர்பு கொள்ளவில்லை என்றாலும், தன்னையடைந்தவர் எதைக் கேட்டாலும் கொடுக்கவல்லது. பிரம்மத்தை அடைபவர்கள் எதையும் -பொன், பொருள் - கேட்கும் நிலையிலிருப்பதில்லை. பிரம்மத்துடன் கலப்பதை விழைபவர்களே பிரம்மத்தை எட்டுவதால் கேட்பது, கேட்டுப் பெறுவது என்பது அங்கிருப்பதில்லை.

பகவான் ஸ்ரீ அரவிந்தர் இறைவனிடம் கேட்டது பற்றிச் சொல்கிறார். பூவுலகத்தில் இறைவன் வந்து, இறைவனின் திருவுருவம் பூர்த்தியாகி, மனிதன் இறைவனாகி, மனிதனுக்கடுத்த சத்தியஜீவன் பிறந்து சத்தியத்தின் ஆட்சி நிலவி, பொய்ம்மையும், இருளும், அறியாமையும், மரணமும் அழிந்து மனிதவாழ்வு தெய்வீக வாழ்வாக மாறவேண்டும் என பகவான் இறைவனைக் கேட்டார். அதை இறைவன் ஏற்றுக் கொண்டார். முதற்படியாக அதை நிறைவேற்ற இன்று உலகில் ஒரு சக்தியில்லாததால், சத்தியஜீவிய சக்தி அதைப் பூர்த்தி செய்யும் என்பதால், இறைவன் சத்திய ஜீவியத்தை உலகுக்கு அனுப்ப, - பொன்னொளியை அனுப்ப - பகவான் ஸ்ரீ அரவிந்தர் இறைவனானார், அன்னை இறைவனானார். பொன்னொளி பூவுலகத்தை எட்டியது. நின்று நிலவுகிறது. "மனிதன் அதிகபட்சம் பூவுலகுக்காக கேட்கக் கூடியதை, உச்சகட்ட தெய்வீக சக்தியை நாம் கேட்டோம்" என்கிறார் பகவான். இதுவரை ஆன்மா விடுதலை பெறவேண்டும் எனக் கேட்டனர். பூமியில் நோய், மூப்பு, துயரம், பாவம் அழியவேண்டும் எனக் கேட்ட மகாபுருஷர்கள் உண்டு. அதற்குரிய சக்தி வரவேண்டும் என நினைக்கவில்லை. மனிதன் இறைவனை நாட வேண்டும், அடையவேண்டும் எனக் கேட்டனர். மனிதவாழ்வு துயரத்திலிருந்து விடுபடவேண்டும் எனக் கேட்டனர். பகவான், மனித வாழ்வு தெய்வீக வாழ்வாக வேண்டும் எனக் கேட்டார். அந்த வாழ்வு பூவுலகில் மலரும்பொழுது, இன்றுள்ள தெய்வீக வாழ்வைவிட சிறப்பானதாக இருக்கும் என்கிறார். தெய்வங்கள் சூட்சுமமானவை. நம்மைப் போன்ற உடலைப் பெற்றவையல்ல. உடலில்லாவிட்டால் bliss ஆனந்தம் பெறலாம், அதற்கடுத்த கட்டமான சிருஷ்டியின் ஆனந்தம் (delight) பெறமுடியாது. உயர்ந்த கீர்த்தனையை அறிவது, அதற்குரிய சாகித்தியத்தை அறிவது போன்றது bliss ஆனந்தம். அதைப் பாடுவது பாடி இன்பம் பெறுவது போன்றது (delight) சிருஷ்டியின் ஆனந்தம். உடலில்லாததால் கடைசி கட்ட ஆனந்தம் தெய்வலோகத்திற்கில்லை. அது உடலுள்ள மனிதனுக்குண்டு. அதைப் பெற அவன் இருளிலிருந்து விடுபட வேண்டும். இதைப் பெற்றுத் தர இறைவன் பகவானாகவும், அன்னையாகவும் மனிதனைத் தேடி வந்துள்ளனர்.

நிலத்தின் தன்மையறிந்து, அதில் விளையக் கூடியதை அறிந்து, அதைப் பயிரிட்டுப் பாதுகாத்தால், நிலம் மகிழ்ந்து அறுவடையாகப் பயன் தருவதுபோல் தெய்வங்கள் ஸ்தோத்திரத்தால் மகிழ்ந்து நாம் கேட்பதை கொடுப்பார்கள். கடையில் எல்லாம் விற்கிறது. பணம் கொடுத்து எதையும் வாங்கலாம் என்பது நம் நிலை. ஒரு பெரிய இடத்தில் உன்னை chief guest முக்கிய விருந்தினராக அழைத்தால், 100 வகைப் பலகாரம் செய்து வைத்திருந்தால், நம்மால் முடிந்த அளவு கொடுக்க அவர்கள் பிரியப்படுகின்றனர். தெய்வம் நிலம் போலவும், பிரம்மம் கடை போலவும், அன்னை விருந்தாகவும் செயல்படுகின்றனர்.

தொடரும்...

Comments

யோக வாழ்க்கை விளக்கம்

யோக வாழ்க்கை விளக்கம் IV
 
641)
 
Para 4    -    Line 5    -     Relativeபரம்பொருள்      -      Relative பரம்பொருள்
 
642)
 
Para 2    -    Line  1   -    மனத்திருந்து                -     மனத்திலிருந்து
 
643)
Para 5    -    Line  2      -    தெய்வலோகத்துதெய்வங்களுக்கில்லாத  -  தெய்வலோகத்து தெய்வங்களுக்கில்லாத
Para 5    -    Line 15     -   என்பதுஅங்கிருப்பதில்லை    -      என்பது அங்கிருப்பதில்லை
Para   7    -    Line  1    -   மனிதன்     -    "மனிதன்
Para 10    -    Line  5    -   (delight)பெறமுடியாது      -    (delight)  பெறமுடியாது
Para 12    -    Line  7    -   mjசெயல்படுகின்றனர்      -   செயல்படுகின்றனர்
 
motnir



book | by Dr. Radut