Skip to Content

Life Divine - கருத்து

The physical mind sees things upside down 

ஜட  மனம்  விஷயங்களைத்  தலைகீழே  புரிந்து கொள்கிறது

தண்ணீரில் உள்ள பென்சில் உடைந்தது போல் தோன்றுவது தோற்றம்,  உண்மையன்று. 500 ஆண்டுகட்கு முன்வரை சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது    என்று நினைத்தார்கள்.  உலகம் தட்டையானது என்பதே வெகுநாள் வரை    அபிப்பிராயம். இவையெல்லாம்  நம் அறியாமை என படித்தவர்கள் அறிவதுபோல் வாழ்விலும், அரசியலிலும், படிப்பிலும் நம் அறியாமை வெளிப்படுவதை பகவான்  மேற்கண்டவாறு கூறுகிறார். அவற்றுள்  சில,

  • சர்க்கார் வேண்டுமென்ற பணத்தை அச்சடித்துக் கொள்கிறது.
  • ஆஸ்ப்ரின் தலைவலியைக் குணப்படுத்துகிறது.
  • ஊசிபோட்டால் வியாதி குணமாகும்.
  • பட்டம் பெற்றால் அறிவும் பண்பும் வளரும்.
  • நல்லவனுக்கு வாழ்வில் நல்லது நடக்கும்.
  • தெய்வம் நம் தேவைகளைப் பூர்த்தி செய்யும்.
  • மனிதன் நல்லவன் என்று பெயரெடுக்கப்  பிரியப்படுவான்.

மனிதன் உலகத்தை உற்பத்தி செய்தான். உலகிலுள்ள அத்தனையும் மனிதனால்   செய்யப்பட்டவை.  ஆனால் மனிதன் தான் உற்பத்தி செய்த பணத்தை  தன்னைவிட  முக்கியமாகக் கருதுகிறான். அதற்கு அடிமையாகிறான். இதைச்   செய்வது ஜடமான மனம். வாழ்வில் மனிதனுக்கு  ஏற்படும் பிரச்சினைகள்   அனைத்தும்  விஷயத்தைத் தலைகீழே புரிந்து கொள்வதால் ஏற்படுவதே.

சர்க்கார் பணம் அச்சடிக்க கணக்குண்டு. ஒரு ரூபாயும் மேலே அடிக்க உத்தரவில்லை. ஆஸ்ப்ரினுக்கு தலைவலியைக் குணப்படுத்தும் சக்தியில்லை.   வலியை  உணராத அளவுக்கு தலையை மறுக்கச் செய்யும்.  ஊசி போட்டால்   வியாதிபோகும் என்று பட்டிக்காட்டு மனிதரிடையே முழு நம்பிக்கை நிலவுகிறது.  பட்டம் பெற்றால் அறிவு வரும். அதனால் பண்பு வாராது. பண்பு பிறப்பில் வந்தது. கெட்டிக்காரன் சாதிப்பான். நல்லவனால் முடியாது. நாம் தெய்வத்திற்குச் சேவை   செய்ய வேண்டும். நம் தேவைகளைப் பூர்த்திசெய்வது  தெய்வத்தின்  கடமையன்று. மனிதன் நல்லவனாக இருக்கப் பிரியப்படுவதில்லை. நல்லவன் என்று  பெயரெடுக்கப் பிரியப்படுவான்.

பூரணயோகத்தின் முக்கியமான அடிப்படைகளில் ஒன்று :-

அறிவு உள்ளதை  உள்ளபடி புரிந்து கொண்டால் மரணம் உள்பட அனைத்து  பிரச்சினைகளும்  விலகும்.

ஒரு 15, 20 பேருக்கு - மேல்நாட்டவர் - மஞ்சள்காமாலை வந்தது. ஊரில்   இவர்களைச் சார்ந்த டாக்டர்கள் 16 பேர். பல நாட்களாகியும் வியாதி எவருக்கும்   குணமாகவில்லை. எனவே டாக்டர்களை மாற்றிப் பார்த்தார்கள். பலன்   தெரியவில்லை.  ஒரு டாக்டர் என்ன சாப்பிடுகிறீர்கள்  என விசாரித்து பப்பாளிப்பழம் சாப்பிடவேண்டாம்  என்றார். "மஞ்சள்  காமாலை'' குணமாயிற்று. பப்பாளிப்பழம் சாப்பிடுவதால் மஞ்சள் காமாலை சின்னங்கள் தெரிகின்றன.  மேல் நாட்டார், டாக்டர்கள், அதை  மஞ்சள் காமாலை என்று  முடிவு செய்து சிகிச்சை  செய்தனர்.

ஜடமான மனம் விஷயங்களைத் தலைகீழே புரிந்துகொண்டு இல்லாத  பிரச்சினைகளை  உற்பத்தி செய்கிறது என்கிறார் பகவான்.

********



book | by Dr. Radut