Skip to Content

Agenda

Vol 7, P.9 

The ascetic truths are no longer true

தவம், நோன்பு, விரதம் இனி வரும் ஆன்மீகத்திற்குப் பயன்படா

இது கஷ்டப்பட்டு உழைத்த காசு என்று மனநிறைவுடன் பேசுவதை அறிவோம்.  குழந்தை  பெரியவனாகிப் பெயரெடுத்தபின், "எத்தனை இரவு கண்விழித்தேன்,    எவ்வளவு சிரமங்களை அனுபவித்தேன்'',  இதெல்லாம் அதன் பலன் எனத் தாய்  கூறுவாள்.

  • கஷ்டப்படாமல் பலனில்லை.
  • கஷ்டப்பட்டுப் பெற்ற பலன்  உயர்ந்தது.
  • வெற்றி உயர்வாக இருக்க வேண்டுமானால் எளிமையாக இருக்க வேண்டும்,  கஷ்டப்பட்டு வந்ததாக இருக்கவேண்டும்,

என்பவை உலகில் அனைவரும் ஏற்றுக்கொண்ட ஆன்மீக உண்மை. ஆணி மீது   படுப்பது, உடலைச் சாட்டையாலடிப்பது, சாப்பாட்டில் சாம்பலைச் சேர்த்துச் சாப்பிடுவது துறவிகள் சில சமயங்களில் மேற்கொள்ளும் பழக்கங்கள்.

  • இவற்றுள் உள்ள உண்மையை ஸ்ரீ அரவிந்தம் முழுவதும் ஏற்கிறது.
  • நாம்   பெறும்   பலனிலிருந்து   கஷ்டத்தை   அறவே   நீக்குகிறது ஸ்ரீ அரவிந்தம்.
  • ஆன்மீக அடிப்படையில் கஷ்டப்படவேண்டியதை அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும்  ஏற்றுக்  கொண்டனர்.  மனிதன்  உடலால்  வாழும் வரை கஷ்டப்பட்டே  பலன்  பெறவேண்டும்  என்பது  உண்மை.  உடலால் வாழும் மனிதன் மனத்தால் வாழ ஆரம்பித்துவிட்டால் கஷ்டம் பேர் அளவுக்கு விலகி, பலன் கஷ்டமில்லாமல் வரும் என்பதும் உண்மை. ஆன்மா முதிராதவரை  (child soul) ஆணி, சாட்டை, சாம்பல் தேவை. வளர்ந்த  ஆன்மாவுக்குக்  கஷ்டம்  தேவையில்லை  என்பது  பகவான் கூற்று.  இந்தியச்  சுதந்திரத்திற்காக  பகவான்  சூட்சுமத்தில்  ஆன்மீக சக்தியால் வேலை செய்ததால், பலன் கத்தியின்றி, இரத்தமின்றி வந்தது.

இந்தியா  பெற்ற  சுதந்திரம், ஆன்மீக  உழைப்புக்கு அவதிப்படவேண்டாம் என்று நடைமுறை எடுத்துக்காட்டாகக் கூறுகிறது.

மனம் இருளால் நிறைந்திருந்தால், விலங்கு போலிருந்தால், தீமையானதானால், கெட்ட எண்ணம் கொண்டதானால் கடுமைப்படுத்தாமல் இவை   நம்மை   விட்டுப்   போகாது. மனம்  ஒளியால்  நிறைந்து  மனித உள்ளமாக இருந்தால்,  நல்லெண்ணம், நல்லதால்  நிறைந்திருந்தால் அன்னையிடமிருந்து  ஆன்மீகப்  பலன்பெற,

கடுமை தேவையில்லை. இனிமையே விரதமாகும்.

மனமே  மனிதனின் மையம். மையம்  ஒளியால் நிரப்பப்பெற்றால் பலன் ஒளியை  நாடிவரும். இருளால்  நிரப்பப்பெற்றால் அது பலனை விலக்கும். இருளை   ஒளியாக மாற்ற கடுமை தேவை. உபவாசம் அவசியம். அதுவும் இருள் அழிய வேண்டும் என்ற எண்ணம் இருளை விட  ஆழமாக இருந்தால், அந்த எண்ணத்தைச்  சமர்ப்பணம் செய்ய முடியுமானால் அதுவும் தேவையில்லை. மௌனம் பெற 18 ஜன்மமாகும், அல்லது 1 1/2  கோடி  முறை  ஓம்  என்ற  பிரணவ  மந்திரத்தை  ஜபிக்க வேண்டும்.  பல ஆண்டுகள் தியானம் பயில வேண்டும் என்பது  மரபு.

அன்பர்கள் மனம் மலர்ந்து, மகிழ்ந்து அன்னையால் அது நிரம்பி, பூரித்து   அன்னையை அழைக்க ஆரம்பித்தால் சற்று நேரத்துள் மௌனம்   மனத்தைத்தொட்டு,  நிறைவதைக் காணலாம். மன மகிழ்வை உயர்த்தினால்,   மௌனநிலை  உயர்வதைக் காணலாம். இதுவே அன்னையின் மேற்சொன்ன  கூற்றுக்கு  விளக்கம்.

மரபுவழி கடுமையாகப் பெறும் பலன்களை அன்னையிடம் அகமகிழ்ந்து பெறலாம். 48 நாள் உபவாசம், நோன்பு இருந்து பெறும் பலனைக் காலையில் அன்னையிடம்  சமர்ப்பணம்  செய்தால்,  மாலையில்  பலன்  வருவதைக் காணலாம். எந்த  அளவுக்கு மனம் சந்தோஷமாக இருக்கிறதோ, அந்த அளவுக்குப் பலன் அதிகரிப்பதையும், விரைவில் வருவதையும் காணலாம்.

  • இதுவரை பெற்ற ஆன்மீகப்பலன் திண்ணைப் பள்ளியில் தோப்புக் கரணம், கோதண்டம், பிரம்படிப் பெற்றுக் கிடைத்த படிப்புபோன்றது.
  • இனிவரும்  ஆன்மீகப்பலன்  குழந்தைகள்  குதூகலமாகக்  கற்கும் புதிய  முறைகள்  போன்றது.

*******



book | by Dr. Radut