Skip to Content

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

 

தம்பி - வாழ்க்கையிலேயே அப்படித்தானே. ஒரு வித்தியாசம்.  இதற்கெல்லாம் வாழ்க்கையில் வழியில்லை. அன்னையிடம் வழியிருக்கிறது. அதுதான் விசேஷம். அன்னையை அனைவருக்கும் அறிமுகப்படுத்த நினைப்பது சரியா?

அண்ணன் - எதையும் செய்யும் மனநிலை சரியாக இருந்தால் செய்யலாம். ஆசைப்பட்டுச் செய்தால் தவறாகிவிடும். அன்னையைப் பின்பற்றுவதே கஷ்டம். பிறருக்கு அறிமுகப்படுத்த முடியாது. அவர்களே தயாராக இல்லாமல் நாமே சொல்ல முடியாது. நீ நினைப்பதைப் போல் ஒரு பெரிய காரியம் நடந்துவிட்டால் அனைவரும் நம்புவார்கள் என்பது சரியில்லை.

தம்பி - கண்ணால் பார்த்தபின் ஏன் நம்பமுடிவதில்லை? என்னாலும் முடியவில்லையே.

அண்ணன் - இந்த விளக்கம் எல்லாம் சொல்லலாம். செய்வது சிரமம். மனிதன் நல்லது என்பதால் மட்டும் செய்யமாட்டான். இலாபமிருக்கிறதா என்று கேட்பான். இலாபமிருந்தால் மட்டும் செய்வான் என நிலையில்லை. மரியாதை வேண்டும் என்பான். மரியாதை வருவதால் மட்டும் செய்யமாட்டான். செய்யாவிட்டால் உள்ள மரியாதை போய்விடும் என்றால் செய்வான்.

தம்பி - அதுதான் பக்குவமோ?

அண்ணன் - ஆத்மீகப் பக்குவம் பெற சமூகப்பக்குவம் வேண்டும் போலிருக்கிறது. The social man needs social sanction to accept spiritual grace. சமூகம் முழுவதும் பக்குவப்பட்டால் தான் ஒருவர் முன்வருவார்.

தம்பி - நாமே கொடுக்க முயன்றால் ஏன் முடியவில்லை என இப்பொழுது புரிகிறது. சரி பக்குவத்தைப்பற்றிச் சொல்லுங்கள். நான் என் வரையில் செய்துபார்க்கிறேன்.

அண்ணன் - பிறருக்குச் சொல்ல வேண்டும் என்ற ஓர் இடம் தவிர உனக்குப் பக்குவம் உண்டு. நமக்கு நினைப்பவை பல நடக்கின்றன. பல நடப்பதில்லை. ஒன்று தவறாமல் நடந்தால் பக்குவம் வந்ததாக அர்த்தம்.

தம்பி - கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்தக் கூடாதா?

அண்ணன் - விஷயமில்லாவிட்டால் ஓரளவு வந்து நின்றுவிடும். அப்புறம் நகராது.

தம்பி - இந்த விஷயம் அப்படித்தானே நிற்கிறது.

அண்ணன் - பணம் தான் சுலபம். எந்தத் தொகை வேண்டுமானாலும், அதைப்பெறும் தகுதியை மனதால் பெற்றுவிட்டால் அது வந்துவிடும்.

தம்பி - பெரும் பணக்காரனுக்கெல்லாம் அத்தகுதியிருக்கிறதா?

அண்ணன் - அது வேறே பணம். பெட்டிக்கடைக்காரன் மாதம் Rs.25000

சம்பாதிப்பதும் ஒன்றாகுமா? அன்பர் சம்பாதிப்பதானால் அவர் நல்லவராக இருக்க வேண்டும். ஏராளமாகப் பணம் சம்பாதித்தவர்கள், பணமே குறியாக இருப்பார்கள். முக்கியமாக அவர்களுடைய கட்டுப்பாட்டிலுள்ள எவரையும் சம்பாதிக்க அனுமதிக்கமாட்டார்கள். தாம் சம்பாதிப்பதைவிட பிறர் சம்பாதிக்கக்கூடாது என்பதே பணக்காரன் கொள்கை. அன்பர் சம்பாதிக்க அனைவரும் சம்பாதிக்க வேண்டும் என்ற மனப்பான்மை வேண்டும். இது கஷ்டம். இப்படி நினைத்தால்,  அன்பருடனுள்ள எவர் மனமும் அன்பர் சம்பாதிக்க அனுமதிக்காது. அதை மீறிப் பணம் சம்பாதிக்க சாதாரணமாக முடியாது.

தம்பி - அப்படியானால், முடியாது என்றுதான் அர்த்தமோ?

அண்ணன் - முடியாது, வெகு சிரமம் என்று பொருளன்று. இன்றில்லாதது எனப் பொருள்.

ஏதோ முடியாததைக் கேட்கிறோம் என்று நினைப்பது வழக்கம். சைக்கிள் புதியதாக வந்தபொழுது அதை விடுவதை ஒரு வித்தையாக நினைத்தார்கள். இன்று அனைவரும் எளிதாக, சைக்கிள் விடுகிறார்கள். உலகம் மாறி அன்னையை அனைவரும் ஏற்றுக்கொண்டால், இன்று பகீரதப் பிரயத்தனம் அன்று எளிதாகத் தோன்றும்.

ஒரு கோடி பணம் வேண்டுமானால், அப்பணத்தைப் பெறும் தகுதியை மனத்தால் பெற்றபின் எந்தத் தொழிலைச் செய்தாலும், அத்தொகை வெகு விரைவில் அன்பரை நாடிவரும் என்பது ஆன்மீக உண்மை. இதை எடுத்துரைப்பது எளிதன்று. செய்து காண்பித்தாலும் நம்பிக்கை ஏற்படாது.

தம்பி - முக்கிய அம்சங்களை மட்டும் சொல்லுங்கள்.

அண்ணன் - பணத்திற்கும், மற்ற எந்தக் காரியத்தைச் செய்யவும் தகுதி ஒன்றே.

தம்பி - பணத்திற்கு மட்டும் சொல்லுங்கள்.

அண்ணன் - 1) தொகைக்குரிய தகுதியை மனம் பெற வேண்டும்.

2) முக்கியமானது ஒன்றுண்டு. இதே தொகையை அடுத்தவர் பெற்றால் மனம் நாம் பெற்றது போல் மகிழ வேண்டும்.

3) தகுதி என்றால் நிதானம், பொறுமை, தொழிலுக்குரிய அறிவு. 

தம்பி - இவை எளிமையாகத் தோன்றுகின்றனவே. 2ஆம் நிபந்தனையில் ஏராளமான பேர் அடிபட்டுவிடுவார்கள். அது நமக்குக் கவலையில்லை. மற்றவை எளிமையாகத் தோன்றுகின்றனவே.  

அண்ணன் - நீ சொல்வது உண்மை. உனக்குப் பலிக்காததற்கு வேறு ஒரு காரணம் உண்டு. நீ தகுதியற்றவர் பெற வேண்டும், நாதனுக்கு வேண்டும் என நினைப்பாய். நாதன் சோம்பேறி, பொறாமைக்காரன். அது பலிக்காது. அந்த எண்ணம் விலக்கப்பட்டால் உனக்குப் பலிக்கும். 1 கோடிக்கும், 100 கோடிக்கும் சட்டம் ஒன்றே.

தம்பி - அன்னை அருளால் பொறாமைக்காரர், சுயநலமி பெறுவதைக் கண்டுள்ளேன். அது எப்படி?

அண்ணன் - உழைப்புக்குப் பலனுண்டு. உழைப்புள்ளவனுக்கு அருள் துணைசெய்யும். பொறாமையை மீறி துணை செய்யும்.

தம்பி - சுயநலம், பொறாமையை விடுவோம். மனம் தகுதி பெற்றால் பலனுண்டு எனில் சுலபமாகத் தெரிகிறதே. சிலர் வாழ்க்கையைச் சிந்தித்துப் பார்ப்போம். எஸ்டேட் மானேஜர் பேர் உழைப்பாளியாயிற்றே. ஏன் அவருக்குப் பலிக்கவில்லை.

அண்ணன் - 1 லட்ச ரூபாய்க்கு வாங்கிய எஸ்டேட் 10 கோடி விலைக்கு உயர்ந்தது. உழைப்புக்குப் பெரும்பலன் உண்டாயிற்று.

தம்பி - அவருக்கு வரவில்லையே.

அண்ணன் - அருள் உழைப்புக்குப் பலனைக் கொடுத்துவிட்டது. அவர் அன்னையை ஏற்றுக்கொண்டு கர்வத்தைக் கரைத்திருந்தால் அவருக்கே பலிக்கும். அவர் தகப்பனார் பிறர் சம்பளத்தில் கமிஷன் பெற்ற கங்காணி. அதனால் இவர் உழைப்பின் பலன் அடுத்தவருக்குப் போயிற்று.

தம்பி - இவருக்கு அன்னையைப் பிடிக்கவில்லை.போய்விட்டார் அல்லவா! நீங்கள் சொல்வது போல் நல்லவர் ஒருவர் நினைவுக்கு வரவில்லை. கடத்தல், கள்ள மார்க்கட்காரர்கள் தான் நினைவு வருகிறது.

அண்ணன் - இதில் ஒரு ரகஸ்யம் உண்டு. நல்லவர் வந்தால் அவருக்கு ஏராளமாக பணம் வருகிறது. உடனே அன்னையை விட்டுப் போய்விடுகிறார்கள். ஏனென்றால், அவ்வளவு தான் நல்லது இருந்தது போலும்!

தொடரும்

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்

 

கிடைக்காத உரிமையை நினைத்து மனம் ஏங்கும் பொழுது, அன்னையை நோக்கிச் செல்லும் உயர்ந்த உரிமை காத்திருப்பதை நாம் மறந்துவிடுகிறோம்.

******

சம்பளமில்லாத பெரிய வேலை

ஒரு கம்பனியில் 3000 ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்தவர் திறமைசாலி. கம்பனி அவரை நம்பி முக்கிய வேலைகளை ஒப்படைத்திருந்தது. அவர் அன்னையை அறிந்தார், உடனே நண்பர் ஒருவர் புதுக் கம்பனி ஆரம்பிக்க விரும்பி அன்பர் உதவியை நாடினார். அதிகச் சம்பளம் தருவதாகச் சொன்னார். பழைய வேலையைவிட்டு அன்பர் புது வேலையை ஒத்துக் கொண்டார். முதல் மாதம் சம்பளம் வந்தது, அதுவே முடிவான சம்பளம். மையம் வந்து தம் நிலையைக் கூறினார்.

"உங்களை நம்பியுள்ள கம்பனியை விட்டு வந்தது தவறு என்றுணர்ந்து செய்யும் பிரார்த்தனை பலிக்கும்'' என்று கேள்விப்பட்டார். நடந்தவற்றை மனதில் கொண்டுவந்து பார்த்தார், தவற்றை உணர்ந்தார், மன மாற்றம், இடைவிடாது அன்னையை நாடியது. பலன் கிடைத்தது.

  • பழைய கம்பெனி அழைத்தது.
  • 6000 ரூபாய் சம்பளம் கொடுத்தது. அன்னையை ஏற்றபின் தவறு நடக்காது.
  • நடந்தால், மனம் மாறினால் தவறு விலகும், அல்லது பெரியது நடக்கும்.
  • நாமே மனத்தளவில் தவற்றுக்கு இடம் தாராவிட்டால் அன்பர்க்குத் தவறு இல்லை.

பொதுவாக அன்பர்கள் தவறு செய்யுமிடம் ஒன்று : தவறான மனமுடையவரை, அவர் நல்ல பழக்கத்தால், நல்லவர் என நினைத்து ஏமாறுவது, அது பெரிய தவற்றுக்குரிய பலனைத் தரும். 

*******

 வரி

அன்னை பக்தர் அயல்நாடு போய் திரும்பும்பொழுது வாங்கிவரும் பரிசுப் பொருட்களுக்கு வரி கட்டப் பிரியப்படவில்லை. அடுத்த பக்தர் தெரிந்த அதிகாரியிடம் சொல்லியதால், பெட்டிகளைச் சோதனை செய்யாமல் அனுப்பிவிட்டனர். இதை "அருள்" எனப் பேசுவது சரியில்லை. கட்ட வேண்டிய வரியைக் கட்டும் மனப்பான்மை வேண்டும். சிபார்சு வந்தால் ஏற்கக்கூடாது, அதுவே முறை. அந்நிலையில் அருள் எப்படிச் செயல்படுகிறதோ அதை ஏற்பதே சமர்ப்பணமான மனநிலை.

"நான் பக்தன் என்பதால், அன்னை அருள் எனக்கு வேண்டியவர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிகாரியை நான் அறிவதே அருளன்றோ?'' என்று நினைப்பது, பேசுவது தர்க்கத்திற்குரிய வாதமல்ல, குதர்க்கமாகும். ஆதாய மனப்பான்மைக்கு அருளைத் துணை தேடுவது அருளன்று, மருள்.

அதே அன்பர் அடுத்தமுறை வெளிநாடு சென்றார். குதர்க்கத்தை மனம் விட முடிவு செய்தது. பரிசு வாங்க மீண்டும் முடிவு செய்தார். அதற்குரிய வரிப்பணத்தையும் தயாராக முதலிலேயே எடுத்து வைத்துவிட்டார். மனம் தயாராகிவிட்டது. ஊர் திரும்பினார். வரி கட்டுமிடத்திற்கு வந்தார். Q வரிசையில் இவரே கடைசி. ஆபீஸர் இவர் பெயரை விசாரித்தார். பெட்டியைத் திறக்கச் சொல்லவில்லை. நீங்கள் போகலாம் என்றார்!

  • சட்டத்தை ஏற்பது சட்டம்.
  • வரியைக் கட்டும் மனப்பான்மை சரியான மனப்பான்மை.
  • சட்டத்தை ஏற்பதை விட, வரியைக் கட்டுவதை விட அன்னை முடிவை ஏற்பது சரி.
  • சட்டமும், வரியும் அன்னையை அடைய உதவும் கருவிகள்.
  • அன்னையே முடிவு.

********



book | by Dr. Radut