Skip to Content

ஸ்ரீ அரவிந்தரின் கருணை

"அன்னை  இலக்கியம்"

ஸ்ரீ அரவிந்தரின் கருணை

S.அன்னபூரணி

"அரவிந்த் க்ளினிக்' என்ற பெயர்ப்பலகை பித்தளைத் தகட்டில் பளபளத்தது. அந்த ஆஸ்பத்திரியின் வாசலில் வெள்ளைப் புறா ஒன்று பறந்து வந்து அமர்ந்த மாதிரி, தீப்பெட்டி வடிவில் ஒரு வெள்ளை மாருதி வேன் நின்றது. அதிலிருந்து தூய வெள்ளை உடையில் நன்கு "பாலிஷ்' செய்யப்பட்ட கறுப்பு ஷுக்கள் அணிந்து கம்பீரமாகக் கீழே இறங்கினார் தலைமை டாக்டர் ரவீந்திரன்.

"குட் மார்னிங் டாக்டர்''.

முகம் பார்க்கும் கண்ணாடிபோல் பளபளத்த மொஸைய்க் தரையில் டக்டக்கென்று ஸ்ருதி லயத்துடன் ஷுக்கள் சப்திக்க எதிரில் தென்பட்ட ஒவ்வோர் ஆஸ்பத்திரி ஊழியருக்கும் புன்னகைத்தபடி பதிலுக்குக் காலை வணக்கம் சொல்லியபடி நடந்து சென்று தம் அறையை அடைந்தார். நேராகச் சுவரில் மாட்டப்பட்டிருந்த பகவான் ஸ்ரீ அரவிந்தரின் படத்தை நோக்கிக் கை கூப்பி மனதுக்குள் பிரார்த்தித்தார்.

"ஹே பிரபு! இந்த ஆஸ்பத்திரி என்னுடையதல்ல, தங்களுடையது. இங்கு வேலை செய்யும் ஒவ்வொருவருக்குள்ளும் நீங்கள்தான் இருக்க வேண்டும். வரும் நோயாளிகளை எனக்குள்ளிருந்து நீங்கள்தான் பரிசோதிக்க வேண்டும். இங்கு கொடுக்கப்படும் மருந்துகளில் உங்கள் சக்தி புகுந்து செயல்பட வேண்டும்.''

சுழல் நாற்காலியில் சென்று அமர்ந்தவர் மேஜையின் மீதிருந்த மணியைத் தட்டினார். ஸ்பிரிங் டோரைத் திறந்து கொண்டு உள்ளே வந்த அவரது அந்தரங்கக் காரியதரிசி விமலா அவரது பார்வையிலேயே குறிப்பை உணர்ந்து கொண்டு "குட் மார்னிங் டாக்டர்! எல்லா டாக்டர்களும் தங்களுடைய நோயாளிகளின் நிலைமையைப் பற்றிய குறிப்புகளுடன் தயாராகக் காத்திருக்கின்றனர். உள்ளே வரச்சொல்லவா?" என்றாள் முகமலர்ச்சியுடன். "குட்" என்ற ஒரு சொல்லிலேயே அவளின் திறமையைப் பாராட்டிவிட்டு  "அவர்களை வரச் சொல்" என்று உத்திரவிட்டார்.  

உள்ளே நுழைந்த டாக்டர்கள் இருக்கையில் அமர்ந்தனர். டாக்டர் உமாச்சந்திரன் "என் பொறுப்பிலுள்ள வார்டில் எந்தவித "எமெர்ஜென்ஸி கேஸும்" இல்லை. அந்த இருதய நோயாளி இன்று "டிஸ்சார்ஜ்" ஆகிப் போகிறார். ஒரு வாரம் முன்பு "அட்மிட்" ஆன ஆறுமுகத்திற்கு ஜுரம் வெகுவாகக் குறைந்து விட்டிருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் வீட்டுக்கு அனுப்பி விடலாம்" என்றார்.

"வெரிகுட்" என்று தம் திருப்தியை தெரிவித்துவிட்டுக் கண்ணாலேயே அடுத்த டாக்டரைப் பார்த்தார்.

"போன வாரம் "ஆபரேஷன்" ஆன நோயாளியின் புண் நன்றாகக் குணமாகிவிட்டது. இன்று தையல் பிரித்து விடலாம். வேறு முக்கிய "கேஸ்" எதுவுமில்லை" என்றார் டாக்டர் புருஷோத்தமன்.

இப்படி ஒவ்வொருவராகத் தம் பொறுப்பிலுள்ள நோயாளிகளின் நிலைமையை விவரித்துச் சொல்லச் சொல்ல ஒவ்வொன்றையும் தீவிர அக்கறையுடன் கவனித்துக்கொண்டே வந்த தலைமை டாக்டர் ரவீந்திரன், ஒவ்வொருவருக்கும் அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளையும், கொடுக்க வேண்டிய மருந்துகளையும் சிறு குழந்தைக்குக் கூடப் புரியும்படி விவரித்துச் சொன்னார். கடைசியாக "மிஸ்டர் அருண், நீங்கள் தானே புதியதாகச் சேர்ந்திருக்கும் "ஜுனியர் டாக்டர்?" All the best! நீங்கள் சிறிது காலம் சீனியர் டாக்டர்களுடன் இருந்து அவர்கள் மருத்துவம் பார்க்கும் விதத்தைக் கவனித்துக் கொண்டே வாருங்கள்" என்று கனிவான குரலில் கூறி கை குலுக்கிவிட்டு "வழக்கம்போல் பகவானின் கருணையாலும், உங்கள் அனைவரின் ஒத்துழைப்பாலும் தரிசன நாளுக்குப் பாண்டி போய்வருகிறேன்", என்றார்.

சக டாக்டர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் "சார் உங்களுக்கு நல்லபடியாகத் தரிசனம் கிடைக்க எங்கள் வாழ்த்துக்கள்.உங்கள் குருவிடம் எங்கள் சார்பாகவும், நம் ஆஸ்பத்திரியிலுள்ள நோயாளிகள் சார்பாகவும் வேண்டிக்கொண்டு வாருங்கள்" என்றனர் பணிவு கலந்த அன்புடன். 'Sure, sure' என்று உற்சாகத்துடன் தலையாட்டினார் ரவீந்திரன்.

அவர் அறையை விட்டு வெளியே வந்தவுடன் புதியதாகச் சேர்ந்த அருணுக்கு ஏராளமான சந்தேகங்கள், கேள்விகள்.அதற்கு விடை கிடைக்கவில்லையென்றால் மண்டையே வெடித்துவிடும் போலிருந்தது. 

"சார், எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வளவு பெரிய டாக்டர் கொஞ்சம் கூட "பந்தா" இல்லாமல் பழகுகிறாரே. ஒவ்வொருவரையும் எப்படி அக்கரையுடன் விசாரிக்கிறார், தொழிலில்தான் எத்தனைப் பற்று? அதை விட ஆச்சரியம், சமீபத்தில் வேலைக்குச் சேர்ந்த என் பெயரைக்கூட ஞாபகம் வைத்துக்கொண்டு என்னை வாழ்த்தினாரே. இந்த ஆஸ்பத்திரியின் சூழ்நிலை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இது ஆஸ்பத்திரி மாதிரியே இல்லை. ஒரு கோவில் மாதிரி இருக்கிறது. வழக்கமாக வரும் ஆஸ்பத்திரி மருந்து, டெட்டால் நெடியையும் மீறி, ஊதுபத்தி, மலர்களின் வாசனை! அதென்ன டாக்டர் அறைக்கு அறை ஒரு பெரியவரின் படம் வைத்திருக்கிறது. தாடி வைத்திருக்கிறார், பார்ப்பதற்கு ரவீந்திரநாத் டாகூர் மாதிரி இருக்கிறார். அவர் கண்களின் தீண்யம், கருணை மனதை வருடிக் கொடுப்பது போலிருக்கிறது.

டாக்டர் புருஷோத்தமனுக்குச் சிரிப்பு தாளவில்லை.

"டாக்டர் அருண், உங்கள் சந்தேகம் எனக்கு ஆச்சர்யத்தைத் தரவில்லை. உங்கள் கேள்விகளுக்கு விளக்கம் தருவது என் கடமை. டாக்டர் ரவீந்திரன் பாண்டியில் உள்ள ஸ்ரீஅரவிந்தரின் பக்தர். பாண்டியில் வருடத்தில் முக்கியமான நான்கு தரிசன நாட்கள் உள்ளன. அவை நான்கையும் தவற விடாமல் போய் விடுவார் டாக்டர். மற்றபடி வேறு எங்கும் வெளியூர் போய் பார்த்ததில்லை. அவர் மிகத் திறமையான டாக்டர். அவரை நம்பி எத்தனையோ நோயாளிகள் இருக்கின்றனர். அவர் ஒரு நடமாடும் தெய்வம். வைத்தியம் பார்ப்பதில் அவர் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்ப்பதில்லை. அவரைப் பொருத்தவரையில் சேவை செய்வதுதான் அவர் குறிக்கோள். அவரைக் கேட்டால் நான் என்ன செய்கிறேன்? எல்லாம் பிரபு அரவிந்தரின் கருணையாலல்லவோ நடக்கிறது. நான் வெறும் கருவிதான்" என்று பணிவோடு சொல்லிவிடுவார்.

அருணுக்குப் பிரமிப்பாக இருந்தது.

"சார் இதுவரைக்கும் எனக்கு வாழ்க்கையில் லயம் என்று பெரிதாக ஒன்றும் இருக்கவில்லை. One candle lights another என்பது போல அவருடன் பேசிய நொடியிலேயே அவருடைய vibration ஒரு சிறு பொறியாய் வந்து என் நெஞ்சில் பற்றிக்கொண்டுவிட்டது. எனக்கும் மனித குலத்துக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற தீராத ஆவல் ஏற்பட்டுள்ளது".

"இந்த ஆஸ்பத்திரிச் சூழ்நிலையில் இருக்கும் எந்த டாக்டருக்கும் இயல்பாக ஏற்படக்கூடிய உணர்வுதான்" என்று சொல்லி நிறைவுடன் சிரித்தார்.

அறைக்குள் டாக்டர் ரவீந்திரனின் எண்ணங்கள் இவ்வாறாக ஓடின."இன்று டாக்டர்கள் கொடுத்த "ரிப்போர்ட்'' படி பார்த்தால் இரவு கிளம்புவதற்குப் பதிலாக இன்று மதியமே பாண்டி கிளம்பிவிடலாம் போலிருக்கிறதே".

அவருக்குத் தெரியாது, அவருக்குச் சோதனையாக ஒரு நிகழ்ச்சி நடக்கப்போகிறதென்பது.

"பார்வதி வலி தாங்க முடியவில்லையே" புழுவாய்த் துடித்தார் நடராஜன்.

"என்ன பண்ணுகிறது உங்களுக்கு? இருங்க.நம்ம பாமிலி டாக்டரை அழைத்து வருகிறேன்", டாக்டர் வந்தார்.

"ஏம்மா எப்போதிலிருந்து இந்த வலி?"

"திடீரென்று காலையில் அடி வயிற்றை வலிக்கிறதென்றார். கொஞ்சங்கொஞ்சமாக வலி அதிகரித்து இப்பொழுது வேதனை தாங்காமல் அலறுகிறார். அவர் படும் வேதனை எனக்குச் சகிக்கவில்லை. உடனே ஏதாவது செய்யுங்களேன்" என்றாள் பார்வதி கண்ணீரும் கம்பலையுமாய்.

"இருங்கம்மா அவசரப்படாதீங்க" என்றவர் நடராஜன் வயிற்றில் ஒவ்வோர் இடமாகக் கையை வைத்து "இங்கே வலிக்கிறதா" என்று கேட்டு வந்தவர் அவர் கீழ் வயிற்றில் கை வைத்தவுடன் அலறிவிட்டார் நடராஜன்.

"ஏம்மா அவர் இன்று urine போனாரா?"

நடராஜனே "இல்லை டாக்டர். கீழ் வயிற்றில் கல்லைக்கட்டி வைத்த மாதிரி வலிக்கிறது". உடனே டாக்டர் சற்றுக் கவலையுடன் "அம்மா உங்கள் கணவருக்குச் சிறு நீரகத்தில் கல் இருக்குமென்று தோன்றுகிறது. அவரை உடனடியாக அருகிலுள்ள அரவிந்த் நர்ஸிங் ஹோமில் சேர்க்க வேண்டும். அவருக்கு ஓர் "எமெர்ஜென்ஸி ஆப்பரேஷன்'' செய்ய வேண்டும்".பார்வதி பயந்து போனாள். நடராஜனோ, "உடனடியாக அதற்கு ஏற்பாடு செய்யுங்கள். இந்த மாதிரி வலியால் துடிப்பதை விட இறந்துவிட்டால் கூடத் தேவலாம். என் எதிரிக்குக் கூட இந்த நிலை வரக் கூடாது".

"கவலைப்படாதீர்கள், அங்குள்ள டாக்டர் ரவீந்திரன் மிகவும் கைராசிக்காரர், அவர் எமனிடம் கூடப் போராடி உயிரை மீட்டு வருபவர். நீங்கள் உங்கள் கணவரை அவரிடம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாகக் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருங்கள்'.

வீட்டுக்குச் சென்று மதிய உணவை முடித்துக் கொண்டு பாண்டி கிளம்பிவிட வேண்டும் என்று எண்ணியவாறே டயலைச் சுழற்றினார். "மிஸ் விமலா, நான் மதியமே பாண்டிக்குக் கிளம்பலாமென்றிருக்கிறேன், கார் டிரைவரைத் தயாராக இருக்கச் சொல்லுங்கள்".

"ஐயம் சாரி டாக்டர், இப்பொழுதுதான் உங்களுடன் பேச நினைத்தேன் அதற்குள் நீங்களே முந்திக் கொண்டுவிட்டீர்கள். ஒரு அவசர கேஸ் உங்கள் நண்பர் டாக்டர் மோகன் அனுப்பியிருக்கிறார். Kidney stone case உடனடியாக "சர்ஜரி'' செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். நோயாளி படும் வேதனையைச் சொல்லி மாளாது".

ஒரு நொடி குழம்பிப் போனார். சட்டென்று இயல்பாகவே அவர் ரத்தத்தில் ஊறியிருந்த சேவை உணர்வும், இரக்க குணமும் முன் வந்து மேற்கொண்டு எதுவும் சிந்திக்காமல் "நோயாளியை  உடனே அனுப்புங்கள்" என்று உத்திரவிட்டார். போன் ரிஸீவரை வைத்த விமலாவுக்கு டாக்டரின் பெருந்தன்மை கண்களைக் கசிய வைத்தது.

அடுத்த ஒரு மணி நேரத்தில் நடராஜன் "ஆபரேஷன் தியேட்டருக்கு" அழைத்து வரப்பட்டு, சர்ஜரி வெற்றிகரமாக முடிந்தது. மயக்க நிலையில் அவரை "ஸ்பெஷல் வார்டில்" கொண்டு வந்து சேர்த்தனர். பார்வதி நன்றி உணர்வுடன் டாக்டரை நோக்கி இரு கரங்களையும் குவித்தாள். டாக்டர் ஆறுதலாக அவளைத் தட்டிக் கொடுத்துவிட்டு "கவலைப் படாதீர்கள் சரியாகிவிடும்" என்று உறுதியளித்துவிட்டுத் தம் அறைக்குத் திரும்பினார். அதுவரையில் தம் கடமையில் குறியாயிருந்ததால் பசி, தாகம் தெரியாமல் இருந்தவர் இப்பொழுது தான் யதார்த்த நிலைக்குத் திரும்பினார். காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாததால் ஏற்பட்ட களைப்பு, விடாமல் வேலை செய்த அசதி, இதற்கும் மேலாக மனதின் ஓர் ஓரத்தில் தரிசன நாளுக்குப் போக வேண்டும் என்கிற ஆர்வம் எல்லாம் சேர்ந்து ஒரு நிமிடம் அயர்ந்து போய் மேஜையின் மேல் தலையைக் கவிழ்த்தார். சட்டென்று குளிர்ந்த காற்று வீசவே தலை நிமிர்ந்தவர் திகைத்துப் போனார். தமக்கிருந்த அசதியால் பேனைக் கூடப் போடாமல் துங்கிவிட்டதை உணர்ந்தார். ஒரு டாக்டர் 'fan switch' ஐ த் தட்டிவிட, மற்றொரு டாக்டர் கையில் பழரசத்துடன் தயாராகயிருந்ததைக் கண்ட அவர் மனம் நெகிழ்ந்து போயிற்று. பழரசத்தை ஆவலுடன் வாங்கிக் குடித்தவர் உடலில் புதுத்தெம்பு ஏற்பட்டது.

"உங்கள் எல்லோரிடமும் நானே பேச வேண்டுமென்று நினைத்தேன். நான் இதுவரை எந்தத் தரிசன நாளையும் தவற விட்டதில்லையென்று உங்களுக்கே தெரியும். இப்பொழுது "சர்ஜரி'' செய்யப்பட்ட நடராஜனைப் பொருத்தவரையில் கவலைப்பட ஒன்றுமில்லை. ஆனாலும் இவரை விட்டு விட்டு நான் வெளியூருக்குப் போவது தெரிந்தால் "சைகலாஜிகலாக'' பாதிப்பு ஏற்படலாம். ஆகவே அவர் கண் விழித்தவுடன் வலி இருந்தால் என்ன மருந்து கொடுக்கலாம், ஜுரம் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லிவிட்டுப் போகிறேன். ஆனால் தப்பித்தவறிக்கூட நோயாளியிடம் நான் ஊரில் இல்லை என்ற விவரத்தைக் கூறி விட வேண்டாம். அப்படி அவர் என்னைப் பார்க்க வேண்டும் என்று கேட்டால் "டாக்டர் வீட்டுக்குப் போயிருக்கிறார் இதோ வந்து விடுவார்'' என்று சொல்லிச் சமாளியுங்கள். நாளை மறுநாள் காலையில் திரும்பிவிடுவேன்".

அனைவரும் கவனமாகக் கேட்டுக் கொண்டனர்.

காரில் பயணிக்கையில் ரவீந்திரனுக்கு மனம் உறுத்திக் கொண்டேயிருந்தது. "இந்த நிலையில் நோயாளியை விட்டுவிட்டு வருவது நியாயமா?" என்று ஒரு புறம் மனச்சாட்சி உறுத்தியது. மறு புறமோ இதுவரை தரிசன நாளைத் தவற விட்டதேயில்லையே. இந்த முறை மட்டும் ஏன் சோதனை? எது சரி, எது தவறு? நான் இப்போது பாண்டி வருவது சரியா பிரபு? என்று சொல்லியபடி, தம் கைப்பையைக் குடைந்து முந்தைய தரிசன நாட்களின் போது கொடுக்கப்பட்ட blessing card  ஒன்றை எடுத்தார். அதிலிருந்த வாசகங்கள் அவருக்குப் பதில் கூறும் படியாக 'Abandon all dharmas and take refuge in me,  i will relieve you from all your sins' என்றிருந்தது. இதைப் படித்த பிறகு ரவீந்திரனின் மனக்கலக்கம் அவரை விட்டு நீங்கியது.

பகவானின் சமாதி தரிசனம் அற்புதமாகக் கிடைக்கப் பெற்றார். நீண்ட நேரம் தியானம் செய்தார். தம்மை மறந்தார், ஆஸ்பத்திரியை மறந்தார், நோயாளிகளை மறந்தார், ஆழ்ந்த நிம்மதியுடன் காரில் திரும்பியவர் நேராக வீட்டுக்குக் கூடப் போகாமல் ஆஸ்பத்திரியை நோக்கிக் காரைச் செலுத்தச் சொன்னார். ஆஸ்பத்திரி கட்டிடத்தை நெருங்க நெருங்க அவர் மனதில் தம்மையறியாமலேயே சிறிது பதட்டம் தலை தூக்கியது.

நோயாளி நடராஜனை முதலில் பார்த்து விட்டுத்தான் வீட்டுக்குப் போக வேண்டும் என்று தீர்மானித்து அவர் அறைக்குள் நுழைந்தவர் திடுக்கிட்டுப் போய்விட்டார். படுக்கையில் அவரைக் காணோம், தவறு செய்து விட்டேனா? அவரைக் காணவில்லை என்றால் அவருக்கு ஏதாவது ஆகி விட்டிருக்குமோ? நினைக்கவே திகிலாக இருந்தது. நிச்சயமாக சர்ஜரி செய்யப்பட்ட அவர் எழுந்து நடமாட முடியாது. சற்றே நடை தள்ளாடத் திரும்பியவர் எதிரில் வந்தவரைக் கண்டதும் சிலையாகி விட்டார். ஹலோ டாக்டர் என்று உற்சாகமாகக் கையசைத்தவாறு நோயாளி போலல்லாமல் ஒரு ஆரோக்கியமான தோற்றத்துடன் வெளியிலிருந்து வந்தார் நடராஜன். டாக்டருக்கு தம் கண்களையே நம்ப முடியவில்லை.

"என்ன சார் இது நீங்க இருக்கும் நிலையில் எப்படி எழுந்து நடமாடுகிறீர்கள்? யார் படுக்கையை விட்டு எழுந்திருக்கச் சொன்னது?" டாக்டரின் குரல் கேட்டு ஆஸ்பத்திரி சிப்பந்திகள் அனைவரும் அங்குக் கூடிவிட்டனர்.

"டாக்டர் நீங்கள் இல்லாத நேரத்தில் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. ஆபரேஷன் முடிந்த அன்று இரவில் எனக்கு விழிப்பு ஏற்பட்டது. தாங்க முடியாத வலி, வேதனையால் நான் அலறிய அலறலில் ஆஸ்பத்திரிக் கட்டிடமே இடிந்துவிடும் போலிருந்தது. அதைக் கேட்டு எல்லா டாக்டர்களும் நர்ஸ்களும் கூடி விட்டனர். ஒரு டாக்டர் மருந்தைக் கொடுத்தார். மற்றொருவர் இஞ்சக்ஷன் கொடுத்தார். என்னால் சிறுநீர் கழிக்க முடியவில்லை. ஆயிரம் குத்தூசிகளால் குத்தப்பட்டதைப்போல அடிவயிற்றை வலிக்க ஆரம்பித்தது. எல்லோரும் என்னைக் கவனித்துக் கொண்ட போதும் நீங்கள் வந்து கவனிக்க வேண்டும் என்று நான் எதிர்பார்த்தேன். நீங்கள் வந்து விடுவீர்கள் என்று சொன்னார்களேயொழிய உங்களைக் காணவே முடியவில்லை. எல்லோரும் தங்களால் முடிந்த உதவியைச் செய்துவிட்டுப் போய்விட்டனர். அப்பொழுது தற்செயலாக என் அறைக்கு வந்த நோயாளி என் உடல் நிலைபற்றி விசாரித்தார். நான் உங்கள் பெயரைச் சொல்லி நீங்கள் வந்து கவனித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன்.அதற்கு "அவர் உங்களுக்குத் தெரியாதா டாக்டர் ரவீந்திரன் தம்முடைய குருநாதரைத் தரிசிப்பதற்காகப் பாண்டி போயிருக்கிறார். அவர் நாளைதான் வருவார்" என்ற தகவலைச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். அவர் போனாரோ இல்லையோ எனக்கு துக்கம் பீரிட்டுக் கொண்டு வந்தது. என் வலியினால் ஏற்பட்ட வேதனையை விட, இவரை நம்பி வந்த என்னை இவர் இப்படி நிர்க்கதியாய் விட்டுவிட்டுப் போய்விட்டாரே என்ற எண்ணம் கொடுத்த வேதனைதான் அதிகமாக இருந்தது. விம்மி விம்மி அழுதேன். சிறிது நேரத்தில் ஒருவர் வந்தார்

"ஏன் அழுகிறீர்கள்?" என்று கேட்டார்.

"டாக்டர் ரவீந்திரன் எனக்கு ஆபரேஷன் செய்துவிட்டு அவருடைய குருநாதரைத் தரிசிக்க சென்றுவிட்டார். எனக்கு சிறுநீர் கழிக்க முடியாமல் பயங்கர உபாதையால் அவஸ்தைப்படுகிறேன். நான் எவ்வளவு நம்பிக்கையோடு இவரைத் தேடி வந்தேன் தெரியுமா? இவர் இந்த மாதிரி என்னை அம்போவென்று விட்டுவிட்டுப் போனதை நினைத்தால் உடலின் வேதனையை விட மனம்தான் அதிக வேதனைப்படுகிறது" என்றேன்.

"கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை உங்களுக்கு சரியாகிவிடும்" என்று சொல்லி அவர் படுத்துக் கொண்டிருந்த என் காலருகே வந்து என் வலக்கால் கட்டை விரலைப் பிடித்துக் காலை ஆட்டினார். உடனே என்ன ஆச்சரியம்! எனக்குச் சிறுநீர் பிரிய ஆரம்பித்து வேதனையெல்லாம் ஒரு நொடியில் மறைந்து உடல் காற்றில் பறப்பது போல் லேசாகி விட்டது. உடனே என்னை அறியாமல் ஆழ்ந்து உறங்கி விட்டேன். இன்று காலை எழுந்த போது எனக்கு வலியின் சுவடே இருக்கவில்லை. என் புண் கூட ஆறிவிட்டது. வந்தவர் யார் டாக்டர்? அவரைக் கொஞ்சம் கூப்பிடுங்களேன் நான் அவருக்கு என் ஆத்மார்த்தமான நன்றியைத் தெரிவிக்க வேண்டும்" என்றார் குரல் தழுதழுக்க.

"நர்ஸ், நீங்கள் போய் நம் ஆஸ்பத்திரியிலிருக்கும் எல்லா டாக்டர்களையும் வரச் சொல்லுங்களேன்" என்று உத்தரவிட்டார். நடராஜன் எல்லோரையும் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கினார். "டாக்டர், இதில் யாருமே இல்லை. வந்தவர் மெல்லிய உடல்வாகு கொண்டவர், மாநிறமாக இருந்தார். அவருக்கு நீண்ட தலைமுடியும், நீண்ட தாடியும் இருந்தது. மிகச் சாதாரணமாக ஒரு வேஷ்டி மட்டும் அணிந்திருந்தார். அதன் நுனியை மேலே எடுத்து தம் தோள்களை மூடிப் போர்த்தியிருந்தார்'.

இந்த விவரங்களைக் கேட்ட ரவீந்திரனுக்கு லேசாகச் சந்தேகம் தட்டியது. ஸ்ரீ அரவிந்தரின் பலவிதமான போட்டோக்களை எடுத்து "நீங்கள் பார்த்தவரில் யாராவது ஒருவர் இந்த போட்டோவில் இருப்பது போல் இருந்தாரா?" என்று கேட்டார். ஒவ்வொரு போட்டோவாகப் பார்த்துக்கொண்டே வந்தவர் சட்டென்று பகவானின் பழைய போட்டோ ஒன்றைப் பார்த்து களிப்புடன் "இதோ இவர்தான், இவர்தான். யார் டாக்டர் இவர்? இவரை நான் சந்திக்க வேண்டுமே, இவரைக் கூப்பிடுங்களேன்" என்றார் ஆர்வத்துடன்.

"இவர்தான் என் குருநாதர். இவருடைய சமாதி தரிசனத்திற்காகத் தான் உங்களை அந்த மோசமான நிலையிலும் விட்டுப்போயிருந்தேன். அவரை நான் எப்படி அழைக்க முடியும்? அவர் பூதவுடலை நீத்துப் பல வருடங்கள் ஆகின்றன".

உடனே நடராஜன் மிகுந்த பவ்யத்தோடும், பக்தியோடும் "டாக்டர் நானும் இவரை வணங்க விரும்புகிறேன். எனக்கு இவருடைய படம் ஒன்று கொடுப்பீர்களா?" என்று கேட்டார். அவர் கோரிக்கைக்கு உடனே செவி சாய்த்த டாக்டர் நேராகத் தம் அறைக்குச் சென்று பகவானின் படத்தின் கீழ் நமஸ்கரித்து "பிரபோ எனக்குக் கெட்ட பெயர் வராமலிருக்க தாங்கள் பூத உடலில் வந்து வைத்தியம் செய்தீர்களோ? உங்கள் கருணைக்கு எல்லையேது?" என்று இரு கரம் கூப்பி கண்ணீர் மல்க வணங்கினார்.

********book | by Dr. Radut