Skip to Content

அன்பர் அனுபவம்

மலர்களைப் பற்றிய என் அனுபவங்கள்:  

இக் கட்டுரையை ஆரம்பித்த விதத்திலேயே, அன்னை தம் சக்தியை உணர வைத்து எழுத வைத்துள்ளார். ஏனெனில் கட்டுரையை ஆரம்பிக்கும்பொழுது வீட்டில் current இல்லை. அதனால் current வந்த பிறகுதான் எழுதவேண்டும் என்ற நோக்கத்துடன், அன்னைக்கு ரூ.5.00 காணிக்கை எடுக்க பர்ஸில் கை வைத்துப் பணத்தைக் கையில் எடுத்ததும் current வந்து விட்டது. என் மனம் முழுவதும் சந்தோஷமும், அமைதியும் பொங்க என் கண்ணில் கண்ணீர் மல்க என் காணிக்கையை அன்னைக்குச் செலுத்திவிட்டு, எல்லா உண்மையான பிரார்த்தனைகளையும் அன்னை நிறைவேற்றிக் கொண்டு தான் இருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்தேன். இதையே என் முதல் அனுபவமாகக் கொண்டு, இந்த அனுபவக் கட்டுரையை எழுத ஆரம்பிக்கிறேன்.

அன்னை எனக்கு அறிமுகமாகிய விதம்

அதற்குமுன் நான் அன்னையைப் பற்றி மங்கையர் மலரில் வெளியான "வாழும் மகான்கள்'' கட்டுரையில், கமலி ஸ்ரீபால் அவர்கள் எழுதியிருந்ததைப் படித்தேன். அது எப்போது என்று சரியாக நினைவில்லை. அப்போதிலிருந்தே அன்னையின் மேல் எனக்கு ஒரு ஈர்ப்பு வந்தது. என் வழக்கமான சோம்பேறித்தனத்தால் அதைப் பற்றி மேலும் அறிய நான் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் ஒரு நாள் என் மகன் படிப்பு விஷயமாக என் சிநேகிதி வீட்டிற்குச் சென்றிருந்தேன். அப்போது அவர்கள் வீட்டில் ஸ்ரீ அன்னையின் படம் வைத்து மலர்களை அழகாக அடுக்கி வைத்திருந்தார்கள். நான் அவர்கள் மூலமாக அன்னையைப் பற்றி மேலும் விவரமறிந்து கொண்டேன். அவர்களிடமிருந்து ஒரு blessing packet-உம் கேட்டு  வாங்கிக் கொண்டேன். அவர் எங்கள் வீட்டுக்கு இரண்டு block தள்ளி இருக்கிறார். அவர் என்னை அன்னை அன்பர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். என் சிநேகிதி வீட்டுக்கு நேர் எதிர் வீடு தான் அவர்களின் வீடு.என்னை அவருக்கு அறிமுகப்படுத்திவைத்தார். அவர்களும் சந்தோஷமாக அன்னையை ஏற்றுக்கொள்ள நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்று விரிவாக எனக்கு விளக்கினார்கள். நானும் எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவர் எனக்குப் பல உதவிகள் செய்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, எங்கள் தெருவிலேயே தான் வசித்து வந்தார். அவர் பாண்டியில் செட்டில் ஆவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பு தான் எனக்கு அறிமுகமானார். காலந்தாழ்ந்து அவரிடம் சென்றதில், இவ்வளவு நாள் இவரைச் சந்திக்கவில்லையே என்ற மனவருத்தம் எனக்கு நீண்டநாள் இருந்தது.

அன்னையால் நான் பெற்ற அனுபவங்கள்

என் கணவர் திரு.மணவாளன் அவர்களின் engineer  பிரமோஷனுக்காக நான் அன்னையிடம் மிகவும் வேண்டிக்கொண்டேன். இது நல்லபடியாகக் கிடைக்கவேண்டும் என்ற ஆர்வத்துடன் நான் அன்னை அன்பரிடம் கேட்டேன். அப்போது அவர் உங்கள் promotion-ஐ அன்னையிடம் surrender செய்யுங்கள். Recommendation மேல் எல்லாம் நம்பிக்கை வைக்காதீர்கள். அப்படி recommendation தானாக வந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். ஆனால் என் மனதில் அன்னையைவிட அப்போது recommendation மேல்தான் ஈடுபாடு அதிகமாக இருந்தது. அதனால் என் தங்கையின் மூலம் வந்த recommendation-ஐ என் மனம் மிகவும் நாடியதால் இறுதியில் அது கூடிவாராமல் போனது. நான் செயல்பட்டவிதம் சரியில்லை என்று அவர்கள் சூட்சுமமாக எனக்கு உணர்த்தினார்கள். நானும் அதை ஏற்றுக்கொண்டு என் அறியாமையிலிருந்து சற்று விடுபட்டேன்.

அன்னையிடம் நான் கொண்டுள்ள தீவிரப் பற்றினால் ஏற்பட்ட நன்மைகளையும் இங்கு நான் சொல்ல விரும்புகிறேன். அன்னை அன்பர் இராணிப்பேட்டையை விட்டு, பாண்டிச்சேரிக்குச் சென்றபின்,  இராணிப்பேட்டையில் தியானம் நடத்த பொதுவான ஓர் இடம் கிடைக்கவில்லை. அதுவரை தியானம், அன்னை அன்பர் வீட்டில் நடைபெற்று வந்தது. அவர் பாண்டி சென்ற பின் அந்த சேவை விட்டுப் போகக்கூடாது என்று சில அன்பர்களின் வீட்டில் தியானம் ஏற்பாடு செய்திருந்தார். அவர் இராணிப்பேட்டையில் இருக்கும்வரை இதற்கான எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்திருந்தார். ஆனால் அன்னையின் விருப்பம் அவர் பாண்டிச்சேரியில்தான் இருக்க வேண்டும் என்று இருந்தது. அப்போதும் அவர் இந்த இடத்தின் மேலும், அன்பர்கள் மேலும் வைத்திருந்த ஈடுபாட்டின் காரணமாக, "இந்த இடத்தை விட்டுப் போனபின்னும் இராணிப்பேட்டைக்குப் பொது இடம் வேண்டும்'' என்ற எண்ணம் அவருக்குத் தீவிரமாக இருந்தது. இது எனக்கு நன்கு புரிந்தது. ஒருமுறை தரிசனத்திற்கு நான் பாண்டி சென்றபோது, இதைப்பற்றி என்னிடம் அவர் கூறியபோது, என்னையும் அறியாமல் நான் முயல்கிறேன் என்று வாக்களித்துவந்தேன். அதற்கு அவரும் உங்கள் முயற்சி sincere-ஆக இருந்தால் கண்டிப்பாகப் பலிக்கும் என்று கூறினார். வீட்டுக்கு வந்த பிறகு ஓரிரு நாட்கள் வீட்டு வேலையில் அதை மறந்திருந்தேன். ஆனால் அடிக்கடி ஞாபகம் வரத்தான் செய்தது. மூன்றாவது நாள் என் கணவர் ஒரு நண்பர் (அன்னை விஷயமாக அறிமுகமானவர்) வீட்டுத் திருமணத்திற்குச் செல்ல அரை நாள் லீவு எடுத்திருந்தார். அன்று என் மனம் அன்னை அன்பருக்கு வாக்களித்ததை எண்ணி அடிக்கடி சொல்லிக் காட்டிக் கொண்டே இருந்தது. என்னால் ஒரு level-க்கு மேல் இந்த எண்ணத்தைத் தாங்க முடியவில்லை. சீக்கிரமாக வேலையை முடித்துவிட்டு, என் மகனுக்குப் பள்ளியில் கேரியர் கொடுத்துவிட்டு, என் கணவர் வந்ததும் என் நிலைமையை விளக்கினேன். "மதியம் இன்னும் அரை நாள் லீவு போடுவதற்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனால் நீ எங்குப் போவாய்? யாரைக் கேட்பாய்?'' என்று கேட்டார். நான் தீர்மானமாக, "கண்டிப்பாக இது முடியும்'' என்று மட்டும் கூறினேன். ஒரு அன்னை அன்பர் தியான மையங்கள் எந்தெந்த இடங்களில் நடைபெறுகின்றன என்று சொற்பொழிவு ஆற்ற வந்தபோது கூறினார். அதுவே எனக்கு idea கிடைக்கச் செய்தது. அதை வைத்துக்கொண்டு வெளியில் பள்ளிகளில் try-பண்ணலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஏனெனில் டவுன்ஷிப்பில் அன்பர் இருந்தவரை, எல்லாப் பள்ளிகளிலும் கேட்டுப் பார்த்தார். ஆனால் அதற்கு permission கிடைக்கவில்லை. அதனால் எங்கள் காலனியை விட்டு வெளிப் பள்ளிகளில் முயலலாம் என்று தோன்றியது. முதலில் டவுன்ஷிப்புக்கு அருகில் உள்ள SIPCOT-இல் உள்ள CSI பள்ளியின் கரஸ்பாண்டன்டாகவிருந்த ஒரு டாக்டரை பார்க்கச் சொன்னார். நாங்களும் அவர் வீட்டுக்குச் சென்று பார்த்தோம். அவர் இடம் தருவதில் தமக்குள்ள பிரச்சனையை எடுத்துச் சொல்லி இது தன்னால் மட்டும் முடியாது என்று கூறி, அவர் வீட்டுப் பக்கத்து வீட்டில் உள்ள Lions club secretary ஐப் பார்த்து உதவி கேட்டால் அவர் உதவுவார் என்று கூறினார். நாங்கள் அவர்களைச் சந்தித்து விஷயத்தைச் சொன்னதும், மறு வார்த்தை எதுவும் பேசாமல் எங்களை அரசினர் சீர்திருத்தப் பள்ளிக்கு அழைத்துச் சென்று அதன் superintendent அவர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்கள், "பள்ளி பிள்ளைகளும் இதில் கலந்து கொள்ளலாமா?'' என்று கேட்டார். நாங்கள் சரி என்று சொன்னவுடன் சம்மதித்தார். பிறகு இவ்விஷயத்தை அன்பருக்குத் தெரிவித்தோம். இராணிப்பேட்டை தியான மையத்துக்கான இடத்தை அன்னை இரண்டு மணி நேரத்திலேயே கிடைக்கச் செய்துவிட்டார். Hall மிகவும் அருமையாக இருந்தது. சுமார் 400 பேர் உட்காரும் அளவுக்கு பெரியது. Fan, லைட் வசதிகளுடன் மைக் வசதியும் இருந்தது. அதற்குப் பிறகு அன்னை அன்பர் அவர்கள், நாங்கள் (இராணிப்பேட்டை அன்பர்கள்) எப்படி service செய்ய வேண்டும், எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று தங்கள் கைப்பட எங்களுக்குக் கடிதம் எழுதினார். அவர்கள் எங்களுக்கு எழுதிய ஒரே கடிதம் அதுதான். நாங்கள் எங்கள் வாழ்வில் பெற்ற மிகப் பெரிய பொக்கிஷமாக அந்தக் கடிதத்தை இன்றளவும் பாதுகாத்து வருகிறோம். நான் ஏற்கனவே சொன்னபடி ஓர் அன்பர் அன்னை எதற்காக promotion கொடுக்காமல் எங்களை இந்த இடத்திலேயே இருக்கச் செய்திருக்கிறார் என்று சொன்னதை நினைத்துப் பார்த்தபொழுது மிக்க ஆச்சரியமாக இருந்தது. இதிலிருந்துதான் எங்களுக்கு promotion கிடைக்கவில்லையானாலும் அன்னை எல்லாவற்றுக்கும் மேலாக எங்களை அவருக்கு service செய்ய இந்த இடத்திலேயே இருக்கச் செய்திருக்கிறார் என்ற உண்மை விளங்கியது. அன்னையின் ஆசிகளோடு, இன்றளவும் மாதந்தோறும் இராணிப்பேட்டையில் அன்னைக்காக service நடக்கிறது.

எனக்கும் என் கணவருக்கும் செடிகளிடத்திலும், மலர்களிடத்திலும் மிகவும் பிரியம் அதிகம். அன்னைக்காக மலர்கள் சேகரிப்பதில் மிகவும் சந்தோஷம். அதிகாலை 4 மணிக்கே, நானும் அவரும் எழுந்து வெளியே சென்று மலர்களைச் சேகரிப்போம். சில வீடுகளில் கேட்டும், சில வீடுகளில் கேட்காமலும் மலர்கள் எடுத்துக் கொண்டிருந்தோம். ஒரு நாள் பூ பறித்துக் கொண்டிருக்கும் போது என் கணவரின் மேல் பாம்பு ஒன்று மரத்தில் இருந்து விழுந்துவிட்டது. அவரும் ஏதோ செடியிலிருந்து (குவளைப் பூச் செடி) காய்தான் விழுந்துள்ளது என்று கீழே பார்த்தால் பாம்பு ஓடிக்கொண்டிருந்தது. நல்லவேளை அன்னையின் அருளால் ஒன்றும் ஆகவில்லை. இதைப்பற்றி அன்னையிடம் மிகுந்த பக்தியுள்ள அன்பர் ஒருவரிடம் கேட்டதில், வீடுகளில் மலர்கள் சேகரிக்காதீர்கள் என்று அறிவுரை கூறினார். அதை அன்னையின் அறிவுரையாக ஏற்று எங்கள் வீட்டு மாடியிலேயே மலர்ச்செடிகளை சேகரிக்க ஆரம்பித்தோம். வெளியே சென்று மலர்கள் பறிப்பதை அடியோடு நிறுத்தி விட்டோம். இன்று எங்கள் மாடியில், தோட்டத்தில் ஸ்ரீ அன்னையே வசிக்கிறார். அவருக்காக எங்களால் முடிந்த அளவு செடிகளை வைத்து வீட்டிலிருந்தே மலர்களைப் பறித்து வைக்கிறோம். நாங்கள் எங்களின் அதிகமான ஆர்வக்கோளாற்றினால் செய்த தவற்றை ஸ்ரீ அன்னை எங்களுக்கு உணர்த்தி, இன்று வெளியில் கிடைக்காத மலர்ச் செடிகளையெல்லாம் பரிசாகக் கொடுத்திருக்கிறார்.

ஒருமுறை நாங்கள் வெளியில் சென்றிருந்த சமயம் யாரோ இரு சிறுவயதுப் பெண்கள் எங்கள் மாடிக்குச்சென்று (அதுவரை நாங்கள் மாடியைப் பூட்டவில்லை) gladiolous செடியை பிடுங்கிச் சென்று விட்டிருந்தார்கள். செடிகளுக்குத் தண்ணீர் விடலாம் என்று மாடிக்குப் போனால், செடிகளை யாரோ பிடுங்கி எடுத்துக் கொண்டு போயிருப்பது தெரிந்தது. நான் மிகவும் வருத்தப்பட்டேன். அந்த வருத்தம் சொல்லிமாளாது. ஏனெனில் Bangalore-இல் இருந்து அதை வாங்கி வைத்து என்ன கலர் என்று பார்க்க ரொம்ப ஆவலாய் இருந்தோம். அன்னைக்காக வாங்கிய செடி காணாமல் போனதால் எனக்கு மனதே சரியில்லை. பக்கத்தில் உள்ளவர்களிடம் யாராவது வந்தார்களா என்று கேட்டதில் அவர்களுக்கும் விவரம் தெரியவில்லை. நான் அன்னையிடம் தீவிரமாகப் பிரார்த்தனை செய்தேன். "அன்னையே நீங்கள் என்ன செய்வீர்களோ எனக்குத் தெரியாது. அந்தச் செடி எங்கள் வீட்டுக்கு வரவேண்டும்'', என்று கூறினேன். இரவெல்லாம் மிகுந்த தலைவலி. அந்த கிழங்கின் விலை ரூ.4.00 தான். ஆனால் அன்னைக்கு வைத்திருந்தது திருடு போனதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காலையில் எழுந்தவுடன் மறுபடியும் அன்னையிடம் என் பிரார்த்தனையைக் கூறினேன். எப்படியோ ஆகட்டும் என்று விட்டுவிட்டேன். அன்று மதியம் இரு பெண்கள் எங்கள் வீட்டிற்கு வந்து "எங்களுக்கு செடி வேண்டும், ஏதாவது கொடுங்கள், நேற்று மாலை வந்தோம், நீங்கள் இல்லாததால் சென்று விட்டோம்'', என்று கூறினார்கள். இவர்கள்தான் இந்த வேலையைச் செய்தார்கள் என்று எனக்கு உடனே புரிந்து விட்டது. அவர்களை மதர் இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்று, எதற்காக நாங்கள் செடி வளர்க்கிறோம் என்பதை அவர்களுக்கு உணர்த்தி, "இதைப்போலத் திருடலாமா?'' என்று கேட்டேன். அவர்களில் ஒருத்தி உடனே வீட்டுக்குச் சென்று அந்தச் செடியை எடுத்து வந்து தந்துவிட்டாள். நானும் அவர்களுக்கு வேறு gladiolous கிழங்குகளும், செடிகளும் தந்து அனுப்பினேன். அன்னையின் சக்தியை நினைத்து மனப்பூர்வமாக என் நன்றியை அன்னைக்குத் தெரிவித்தேன். நான் மிகுந்த பக்தி வைத்துள்ள அன்னை அன்பருக்குக் கொத்தாகப் பூக்கும் white rose செடி அளிக்க மிகவும் விரும்பினேன். அந்தச் செடி என்னிடத்திலும், என் நண்பர் வீட்டிலும் இருந்தது. அப்போது எங்களுக்குச் செடி பதியன் போடத் தெரியாது. என் நண்பரும் அவரே தம் வீட்டில் பதியன் போட்டுத் தருவதாகக் கூறினார். அவர்கள் பதியன் போட்ட செடி எங்களுக்குக் கிடைக்கவில்லை. எனக்கோ அந்த அன்னை அன்பருக்கு எப்படியாவது அதைக் கொடுக்க வேண்டும் என்று விருப்பம். நான் அன்னையிடம் அந்த விருப்பத்தைச் சொன்னேன். ஒரே ஒரு ரூபாய் காணிக்கை வைத்தேன். அன்று மாலை நாங்கள் மாடியில் இருக்கும்போது Stanes நிறுவனத்தின் representative ஒருவர் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு வந்தார். அவர் ஆர்க்காட்டில் ஓர் உரக் கடையில் எங்களைச் சந்தித்திருந்தார். மறுபடியும் அவரைப் பார்க்கவில்லை. அவரை மறந்தும் விட்டோம். அவரை யார் என்றும் கேட்டுவிட்டோம். பின்னர் அவரே எங்களை இதற்கு முன்னர் சந்தித்ததின் விவரம் கூறி, செடிகளுக்காக யோசனை சொல்ல வந்ததாகக் கூறினார். எனக்கு மிக்க மகிழ்ச்சி.எங்களுக்கு ஏற்பட்ட எல்லாச் சந்தேகங்களுக்கும் விளக்கம் கேட்டு, Rose - பதியன் வைக்கும் முறையைப் பற்றியும் கேட்டோம். அவரும் எங்களுக்கு சொல்லிக் கொடுத்தார். அந்த முறையில் வைத்து 1 1/2 மாதத்திலேயே செடி நன்றாக வளர்ந்து, பூக்கவும் ஆரம்பித்துவிட்டது. அன்னைக்கு என் நன்றியைத் தெரிவித்து, நாம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் பூரணமாக இருந்தால் அன்னை நிச்சயம் கொடுப்பார் என்பதைப் புரிந்துகொண்டு அந்தச் செடியை அன்னை அன்பருக்குக் காணிக்கையாகக் கொடுத்தோம். பின்னர் என் பழைய நண்பரும் மறுபடி வந்து பதியன் வைத்துக் கொடுத்தார். ஒரு செடியை அந்த அன்னை அன்பருக்குக் கொடுத்ததால் எங்களுக்கு அதே செடி மூன்றாகியுள்ளது. நாம் கொடுப்பதைப் பெற்றுக் கொள்பவர் மனநிலை உயர்ந்ததானால் கொடுத்தவருக்கு அதைவிடப் பல மடங்காக திரும்பிவரும் என்ற ஆன்மீக உண்மையை அன்னை எங்களுக்கு உணரச் செய்தார்.

என் மூத்த தங்கைக்குத் திருமணம் நிச்சயம் ஆனது. என் பையனுக்குப் பரீட்சை நடந்து கொண்டிருந்ததால் அந்த நிகழ்ச்சிக்கு நான் செல்லவில்லை. மாப்பிள்ளையையும் பார்க்கவில்லை.B.Sc படித்திருந்தார். ஆனால் வேலை எதுவும் இல்லை. இவ்விஷயம் நான் அறிந்ததும் எனக்கு வேதனையாக இருந்தது. நான் இங்கு SIPCOT-இல் வேலை கிடைக்குமா என்று தெரிந்தவர்கள் மூலமாக முயன்றுகொண்டிருந்தேன். இதனால் அந்தப் பிள்ளை அடிக்கடி எங்கள் வீட்டிற்கு (இராணிப்பேட்டைக்கு) வந்து கொண்டிருந்தார். எனக்கு அந்தப் பையனைப் பார்த்ததும் இவர் ஏதோ சரியில்லை என்று மனதுக்குப்பட்டது. என் கணவரிடம் சொல்லி அடிக்கடி புலம்பினேன். "நாம் என்ன பண்ணுவது? உங்கள் வீட்டில் எடுத்த முடிவு'', என்று கூறிவிட்டார். திடீரென்று கல்யாணத்திற்கு ஒரு வாரம் இருக்கும்பொழுது, ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு வந்து, தனக்கு மனக் கோளாறு உள்ளதாகவும், அடிக்கடி mental depression ஏற்படுவதாகவும், அந்த நேரத்தில் தான் என்ன செய்கிறோம் என்று தனக்கேத் தெரியாது என்றும் ஒரு முறை கிணற்றில் விழுந்து காலில் கூட அடிபட்டிருப்பதாகவும் கூறினான். எனக்கு ஒரே shock. நான் அப்படியே upset ஆகிவிட்டேன். அழுகை பீரிட்டுக்கொண்டு வந்தது. தம்பி, தங்கை, அம்மா எல்லோரும் அழுதார்கள். என் தங்கை மாதந்தோறும் இராணிப்பேட்டை தியான மையத்திற்கு வந்து சேவை செய்பவள். அவளுக்குப் போய் "இப்படி ஒரு கதி நேர்ந்து விட்டதே'' என்று எனக்கும் இன்னும் வருத்தம் அதிகமாகி விட்டது. கல்யாணத்தை நிறுத்தி விட்டோம். அந்தப் பையனின் தந்தையை அழைத்துப் பேசி உண்மையை எழுதித் தருமாறு கேட்டேன். அவரும் அதற்கு இசைந்து என் தங்கையின் மேல் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், தாங்கள் தான் உண்மையை மறைத்ததாகவும் ஒத்துக்கொண்டு எழுதிக் கொடுத்தனர். நாங்கள் செய்த செலவுகளையும் திருப்பிக் கொடுத்தனர். எங்களால் இதைத் தாங்க முடியவில்லை. அடுத்த நாளே பாண்டிக்குச் சென்று அன்னையிடம் அழுது முறையிட்டோம். அன்னையிடம் என் தம்பி இதைப்பற்றித் தெரிவித்தான். அன்னை அன்பர் அவர்கள் நான் எழுதிய கடிதத்திற்குப் பதில் அனுப்பி சில அறிவுரைகளைக் கூறினார். மற்றோர் அன்பரும் எங்களுக்கு அறிவுரை கூறினார். சொசைட்டியிலுள்ள அன்பர் ஒருவர் என் தம்பியிடம், "அன்னை எல்லாம் நல்லதிற்குத்தான் செய்கிறார்'' என்றார். எனக்கு இப்படிப்பட்ட மாப்பிள்ளைதான் வேண்டும் என்று அன்னையிடம் கேட்பதைவிட அன்னையே நீங்கள் எனக்கு எந்த மாப்பிள்ளை அளித்தாலும் நான் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை எனக்குத் தாருங்கள் என்று பிரார்த்தனைச் செய்யச் சொன்னார். அன்னை அன்பரும் இதையேதான் சொன்னார்கள். என் தங்கையும் அதைப் பின்பற்றி எந்தப் பிரச்சனையும் இன்றி எங்களுக்குத் தெரிந்த இடத்திலேயே அதைவிட அழகான, நல்ல மாப்பிள்ளை அமைந்து இப்போது சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி கொண்டிருக்கிறாள்.

எங்கள் வாழ்வில் நடந்த ஒவ்வொரு பிரச்சினைக்கும் என் இனிய அன்னை ஒவ்வொரு விதமாக அருள் புரிந்து அதைச் சரி செய்தார். பொதுவாக மனிதனுக்குரிய நன்றி மறக்கும் குணம் எங்களுக்கு என்றும் இல்லாமல் அன்னையை மறக்காமல் ஒவ்வொரு நாளும் அன்னை எங்கள் வாழ்வில் நிலைக்க வேண்டுமென்று அவரையே வேண்டுகிறேன். ஸ்ரீ அன்னையே சரணம்.

- லீலா மணவாளன், ராணிப்பேட்டை.

**********

ஸ்ரீ அரவிந்த சுடர்

 

இறைவன் என்ற புதிருக்கு அவனே விடை.

வாழ்வில் இறைவன் புதிர். அவனை அடைந்தால் விடை எழும்.

********book | by Dr. Radut