Skip to Content

அன்பர் கடிதம்

இனிய  அன்னைக்கு,

நீங்கள் எங்களிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கவில்லையென்றாலும்   எங்களுடைய கடமையாக நன்றியைச் சமர்ப்பணம் ஆக்குகின்றேன்.

என்னுடைய மாமனார் 84 வயதில் மே மாதத்தில் மாடியில் மதில் சுவரின்   மேலிருந்து கீழே விழுந்துவிட்டார். இதனால் இடுப்பிலுள்ள பந்துகிண்ண   மூட்டெலும்பு விலகி எலும்பு முறிவு ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு   எவர்சில்வர் தகடு ஆப்பரேஷன்  மூலம் பொருத்தப்பட்டது. எலும்பு  சேர்வதில்  பிரச்சினை இல்லையென்றால் எந்தவொரு குழப்பமும்  ஏற்பட வழியில்லை என்று டாக்டர்கள் கூறினார்கள். வீட்டிற்கு அழைத்து  வந்தபிறகு பார்த்தால் தம்    நினைவை,  ஞாபக சக்தியை இழந்தது தெரியவந்தது. தொடர்ந்தாற் போல் நாள்   முழுவதும் சம்பந்தம் இல்லாமல் ஏதோ ஒன்றை  பேசிக் கொண்டேயிருந்தார்.  அவருடைய  மகன்கள்  இதைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் பொறுமையை    இழந்து கொண்டிருந்தனர். மனித மனம் இப்பிரச்சினையிலிருந்து  தீர்வு விரைவில் கிடைக்கவேண்டும், அவருடைய  கடைசி காலம் நல்லபடியாக   இருக்கவேண்டும்   என்றே எதிர்பார்த்தது.  இந்தச் சந்தர்ப்பத்தில்  உங்களுடைய போட்டோ  ஒன்று  அவர்  படுக்கையின் எதிர்ப்புறத்தில் அவருக்குத் தெரியும் படியாக   வைத்திருந்தோம். அன்னை  மட்டுமே  இதைச்  சரி  செய்யவேண்டும்,  முடியும்  என்ற பிரார்த்தனை மட்டும்  தொடர்ந்தது. அவரின்   உடல் உபாதையும், மனக்  குழப்பமும் சேர்ந்து  வயதான  காலத்தில்  அவர்  சிரமப்பட்டது மிகவும்    கஷ்டமாக இருந்தது. ஆனால் நம்பிக்கை மட்டும் தளரவில்லை. யாருமே அவர்  திரும்பவும்  பழைய  நிலைக்கே  திரும்பி விடுவார்  என்று  எதிர்பார்க்கவில்லை. கடைசி காலம்  சிரமமில்லாமல் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மட்டுமே இருந்தது. புதியதாக எந்தவொரு மருந்தோ, சிகிச்சை முறையோ  கொடுக்கவில்லை. தினமும்  குளியலும், சாப்பாடும் தொடர்ந்து  கொடுக்கப்பட்டு  வந்தன. ஒரு சிறு விதை   முளைத்துச் செடி வளர்வது போன்ற மாற்றம் தென்பட  ஆரம்பித்தது.  அவரின்     நிலையில் ஏற்பட்ட முன்னேற்றங்களை  படிப்படியாக எழுத வேண்டுமெனில்   இச்சிறு கடிதம்  போதாது. ஒரு  நாள், என் மாமனார் முழுவதுமாக ஞாபக சக்தியும்,   எழுந்து நடக்கவும், கோர்வையாகப் பேசவும், தம் வேலைகளைத் தாமே செய்து  கொள்ளக்கூடிய  அளவிற்குச் சக்தியும் பெற்றார்.

எங்களின் பிரார்த்தனையை ஏற்று அவரைப் பழைய நிலைக்குக் கொண்டு  வந்தீர்கள்.  எல்லோருடைய  துன்பங்களும்  முழுவதுமாக நீங்கி நிம்மதி கிடைத்தது. உங்களின் ஆசி மட்டுமே இதைச் சாதித்தது எனலாம். எங்கள்   உணர்ச்சியை முழுவதுமாகச் சொல்வதற்கு எங்களிடம் வார்த்தைகள் ஏதும்   இல்லை. எங்களின் நன்றியைச் சமர்ப்பணம்  ஆக்குகின்றேன்.

*******

அருள் செயல்பட்ட வகையை அறிவது ஞானம், உணர்வது பக்தி.

ஆசிரியர்

********* 

ஸ்ரீ  அரவிந்த  சுடர்

சைத்தியபுருஷன் ஆன்மாவாகும். இது  நினைவின் உறைவிடமான மனமாகச்   செயல்பட  முடியும்.  பூர்வஜென்ம  ஞானமும் இதற்குண்டு. இதற்குச் செயல் திறனில்லை, நினைவு, அறிவு, வழிகாட்டும் திறனுண்டு. முடிவு, செயல், திகாரம்  இதற்கில்லை.  

*******

 



book | by Dr. Radut