Skip to Content

மனித சுபாவம் III

கர்மயோகி

 

கேட்டது கிடைப்பதில்லை. கேட்காதது கிடைப்பதுண்டு. நேரு தம் மகளுக்குப் பதவியை நாடவில்லை. இந்திரா தம் மகனைப் பிரதமராக்க விரும்பினார். உன் திறமைகளைப் போற்று. கேட்காமலிருக்கக் கற்றுக் கொள். பெரியது உன்னை நாடி வரும்.

*******

நான் கேட்டனவெல்லாம் கிடைத்தன என்பவர் வெற்றி மேல் வெற்றி பெற்றவர். அவரும் கேட்காமலிருக்கப் பழகினால், அளவு கடந்த பெரியது அவரை நாடி வரும். கேட்காதது அனைவருக்கும் கிடைப்பதில்லை. அது கிடைக்கிறது எனில் அவர் உத்தமர்களில் உயர்ந்தவர். காமராஜைத் தேடி முதல்வர் பதவியும், பிரதமர் பதவியும் வந்தன. SSLC பாஸ் செய்யமுடியாது என்றவருக்கு வலிய சந்தர்ப்பம் M.A.யைப் பெற்றுக் கொடுத்தது. எட்டு வகுப்பு படித்த மாப்பிள்ளை கிடைக்குமா என்றிருந்தவருக்குப் பட்டம் பெற்றவரை வாழ்வு திணித்தது. ஒரே துணியுடன் வாழ்வை நடத்தியவருக்கு 50 டிரஸ்ஸும், நகைகளும் கேட்காமலேயே வந்தன.

திறமைகளையும், கடமைகளையும் போற்றினால், பெரியது உன்னை நாடும். அன்பிற்கு ஏங்கி மனம் கருகியவருக்கு, அளவுகடந்த பக்தி தன்னை அர்ப்பணம் செய்ய முன் வந்தது. தாய்ப்பாசம் பெறாத குழந்தையைப் பத்துபேர் அளவு கடந்த அன்போடு வளர்க்க முன் வந்ததுண்டு.

வாழ்க்கையில் முன்னேறியவுடன், ''இது போதும்" என்று முதலில் தோன்றும். குறைந்தபட்சம் மேலும் ஒரு படி முன்னேற முயலவேண்டும்.

******* 

வாழ்க்கையில் முன்னேற முடியாது என்பது உண்மை.

வாழ்வு முன்னேற்ற வாய்ப்பால் நிறைந்துள்ளது என்பதும் உண்மை. அனைவரும் முன்னேற விரும்புகின்றனர்.

ஒரு சிலரே முன்னேறுகின்றனர்.

ஒருபடி முன்னேறியவுடன், போதும் என்பவரே பெரும்பான்மையினர்.

தொடர்ந்த முன்னேற்றத்தை நாடுபவர் அரிது.

இவை நாம் அறிந்த உண்மைகள். இவற்றின் உட்கருத்தென்ன? முன்னேற்றம் எனில் அயராத உழைப்புத் தேவை. மனிதன் உயர்ந்ததிற்கு ஆசைப்பட்டாலும், உழைக்கத் தயங்குகிறான். எனவே ஒரு படி உயர்ந்தவுடன் "போதும், போதும், பேராசைப்படக்கூடாது'' என்று நிறுத்திக் கொள்கிறான். உழைக்கத் தயாரில்லாத சோம்பேறி உயர்ந்த இலட்சியத்தைச் சாக்காகக் காட்டி, தன் முன்னேற்றத்தைத் தடை செய்து கொள்கிறான்.

தம் சொத்தையெல்லாம் (risk) ரிஸ்க் செய்து வெற்றி பெற்றவர் போதுமான செல்வம் பெற்றபின் ரிஸ்க் எடுப்பதை நிறுத்தி விடுகிறார். நாட்டில் 6வது பணக்காரர் 100 வருஷமாகச் செல்வர் குடும்பத்தைச் சேர்ந்தவர். 70ஆம் வயதில் இளம் பிள்ளை போல் ரிஸ்க் எடுக்க முன் வருகிறார். சுமார் 3000 கோடிக்குச் சொத்துண்டு. அவர் மகனுக்கு 50 வயது. 70ஆம் வயதில் தகப்பனார் துள்ளும் சிறு வயதினர் போலிருக்கும்பொழுது 50ஆம் வயதில் (pessimistic) எதையும் நம்பாமல், எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் கட்டுப்பெட்டிபோல், "எதுவும் வேண்டாம்'' என்ற மனநிலையிலிருக்கிறார். திறமையுடையவருக்கும் முதலில் உள்ள ஆர்வம் முதல் வெற்றிக்குப் பின் இருப்பதில்லை.

உனக்கு உதவுபவர்க்கு நன்றி சொல்லக் கற்றுக் கொள்.

மனதால் நன்றியைத் தெரிவிப்பது நல்லது.

****

உதட்டால் நன்றியைப் பெரும்பாலோர் சொல்ல முடியும். சிலரால் அதுவும் முடியாது. கூடவேயிருந்து ஒவ்வொரு முறையும் "நன்றி சொல்" எனச் சொல்லிக்கொடுத்தாலும் ஒரு சிலருக்கு அது வாராது. தம்மை நல்லவர் என முழுமையாக நம்புபவர், பிறர் செய்யும் உதவிக்கு மனதால் நன்றி சொல்ல முயன்றால், அது எவ்வளவு கடினமானது எனத் தெரியும். சந்தர்ப்பமில்லாமல், அவசியமில்லாமல், 1500 சம்பள முள்ளவர்க்கு 50,000 ரூபாயை இனாமாகக் கையில் கொடுத்த பொழுது அவர் வாயாலும் நன்றி சொல்லவில்லை, எழுத்தாலும் நன்றி சொல்லவில்லை. அதன்பின் கொடுத்தவர், பெற்றவரைப் பத்து முறை சந்தித்துவிட்டார். ஒரு முறையும் அந்த நிகழ்ச்சியே பேச்சில் எழவில்லை! உத்தமப் புருஷர்களில் தலை சிறந்தவர் எனத் தம்மைப் பற்றி நினைப்பவர் இவர். பிறர் பலரும் தமக்கு நன்றியறிதலோடில்லை என வாய் ஓயாமல் பேசுபவர்.

நன்றியுணர்வு இயல்பாக மனிதனுக்கில்லை. வாயால் சொல்வதே சிறப்பு. மனத்தால் நன்றியை நினைத்தால், அவன் மனிதனில் உயர்ந்தவனாவான்.

எவரிடமிருந்து உதவியை எதிர்பார்க்கின்றாயோ, அவரிடமே உன் கர்வத்தைக் காட்டப் பிரியப்படுவாய் எனில், இந்தக் குணத்தை முயன்று விலக்குதல், உனக்கு முன்னேற்றத்தை அளிக்கும்.

*****

திருமணத்தைச் சாங்கியமாகவோ, சடங்காகவோ, விழாவாகவோ செய்யக்கூடாது என்ற கொள்கையால், நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும், பார்த்தபொழுது தெரிவித்துவிட்டு, எவரையும் அழைக்காமல், பத்திரிகை அச்சடிக்காமல், சொற்பொழிவில்லாமல், புரோகிதம் இல்லாமல் ஒருவர் திருமணம் செய்து கொண்டார். இத்தனையும் தெரிந்தும், தம்மை அழைக்கவில்லை என லேசாக அறிமுகமான நண்பர் மனதில் குறைப்பட்டுக் கொண்டு வெளியில் சொல்லாமலிருந்தார். திருமணமான நண்பரைப் பிறகு பார்த்தார். ஆறு மாதம் கழித்து அவருக்குத் திருமணம் வந்தது. கொஞ்சம் பணம் தேவைப்பட்டது. வேறு வழியில்லாமல் தம்மை அழைக்காதவரிடம் வந்து "திருமணச் செலவுக்குக் கொஞ்சம் உதவி வேண்டும்'' என்று கேட்டுப் பெற்றார். திருமணம் வந்தது. இவர் ஏராளமான பேரை அழைத்து பெரிய விழாவாகத் திருமணத்தை நடத்தினார். தம்மை அழைக்காத நண்பரை மட்டும் அழைக்கவில்லை. அவரிடம் பண உதவி 10 நாள் முன் கேட்டு வாங்கியது மறந்துவிட்டது. தம்மை அழைக்காதவரை, தாம் அழைக்காதது சரி. அவரிடமே போய் உதவி கேட்டது எப்படிச் சரி? இப்படிப்பட்டவருக்கு எவரும் ஒரு முறைக்கு மேல் உதவமாட்டார்கள். வருஷா வருஷம் காய்க்கும் மாமரத்தை ஒரு வருஷத்திற்கு மேல் காய்க்காமல் செய்வதுபோல் இவர்கள் நடந்து விடுவார்கள். பேனாவைப் பல வருஷம் உபயோகப் படுத்தலாம். ஒரு முறையோடு அது உதவாமல் போய்விடும். T.V. யை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்த முடியாது. ஷர்ட்டை ஒரு முறையே போட முடியும் என்றால், வாழ்க்கை எப்படிச் சுருங்குமோ, அப்படி இவர்கள் வாழ்வு சுருங்கும். அமுதசுரபியானது அன்னை அளிக்கும் வாழ்வு. அன்னை கொடுக்கும் வாழ்வு பாத்திரத்தை வற்றாத ஊற்றாக்கும், வாழ்வில் பாத்திரம் பல முறை பயன்படும். பாத்திரத்தில் போட்டால் இருக்கும். பாத்திரத்தால் உற்பத்தி செய்ய இயலாது.

எவரிடம் உதவியை நாடுகிறோமோ, அவரிடம் கர்வமாக (assertive) நடக்கப் பிரியப்படுபவர் ஒரு முறை பாத்திரத்தைப் பயன் படுத்தினால் அப்பாத்திரம் அவருக்கு அடுத்தமுறை பயன்படாதவாறு நடந்து கொள்கிறார். அவரைவிட்டு மனிதர்களும், பொருள்களும், நிகழ்ச்சிகளும், நல்லதும், வாய்ப்பும், தாமே விலகிப்போகும்.

சாந்தி, பொறுமை, ஆர்வம், ஒருநிலைப்படுதல், சமத்துவம், ஆகியவற்றைப் பெற முயல வேண்டும். ஏற்கனவே ஓரளவு இருந்தால், அவற்றை அதிகப்படுத்த முன் வர வேண்டும்.

********

மத்தியதரக் குடும்பத்தினர், தனிக்குடும்பம் வைத்தவுடன் பெரும் பாடுபட்டு வாங்கும் பொருள்களை நாம் அறிவோம். T.V. பார்ப்பதை விட வீட்டில் T.V. இல்லை என்பது மரியாதைக் குறைவு என்ற உணர்வு அவர்களை அதிகபட்ச முயற்சி செய்யச் சொல்கிறது. அப்படி அவர்கள் சேகரம் செய்பவை 15, 20 பொருள்களாகும். தேவைப்பட்ட அனைத்தும் சேர்ந்தபின், அப்பொருள்களின் தரத்தை உயர்த்த அதுபோன்ற முயற்சியை மீண்டும் கொள்வதைப் பார்க்கிறோம். மோபெட், மோட்டார் பைக்காகிறது. சிறிய பிரிஜ், பெரியதாகிறது, டி.வி.,கலர் டி.வி.யாகிறது.

சாந்தி, பொறுமை ஆகியவை மனவளத்திற்கு அவசியமானவை. அவற்றைப் பெறுவது மத்தியதரத்திற்குக் கீழுள்ளவர்கள், மத்தியதரத்தை எட்டுவது போன்றது. அவற்றைப் பெருக்குவது (upper middle class) மேல்தர மத்திய தரத்தினரை எட்டுவது போன்றது.

சரித்திரத்தைப் பயன்தரும் வகையில் பயில வேண்டும். பூகோளம் பெரிய அறிவைக் கொடுக்கும். மேலும் விஞ்ஞான அறிவைப் பெற முயல்வது சிறப்பு. இலக்கியம் எல்லையற்ற பயன் தரும்.

********

(Biography) வாழ்க்கை வரலாறும், சரித்திரமும் பூரணக் கல்வியை அளிக்கும் என்கிறார் பகவான். சரித்திரத்தைச் சரித்திரமாக மட்டும் படித்தால் பரீட்சை பாஸ் செய்யலாம். அக்பர் காலத்தில் பீர்பால் அக்பருக்குப் பிறந்த குழந்தையின் செய்திகளைக் கொண்டு வந்தவிதம் மனிதனைச் சிந்திக்கத் தூண்டும். இலக்கியம் வாழ்க்கையைப் பிரதிபலிக்கக்கூடியது. நம் வாழ்க்கையை இலக்கியம் எப்படிப் பிரதிபலிக்கிறது என்று யோசனை செய்வது பலன் தரும். நம் வாழ்வோடு தொடர்புள்ள விஞ்ஞான அறிவை அதிகமாகப் பெற முயன்றால் வாழ்க்கை செறிவாக இருக்கும். பூகோளம் படிக்கின்றோம். நாட்டுப் படங்களைப் (map) பார்க்கிறோம். எப்படிக் கடற்கரையைப் பூகோளத்தில் நிர்ணயித்தார்கள் என்ற கேள்வி எத்தனை பேருக்கு எழுந்தது? அதில் பதில் எத்தனை பேருக்குக் கிடைத்தது? நமக்குக் கிடைத்ததா? என்றால் பூகோளம் நம்மைச் சிந்திக்கவைக்கும். மலை உயரத்தை எப்படி அளந்தார்கள்? சிங்கப்பூருக்கும் சென்னைக்கும் உள்ள தூரத்தை நிர்ணயித்ததெப்படி? இலண்டனிலிருந்து நியூயார்க்குக்கு 1950இல் முதலில் போன் வந்தது. நாட்டுத் தலைவர்கள் பேசத் துவங்கினார்கள் என்றால், கம்பி எங்கேயிருக்கிறது? கடல் அடியில் என்றால் எப்படிப் போட்டார்கள்? சரித்திரம், இலக்கியம், விஞ்ஞானம் எதுவானாலும் கூர்ந்து படித்தால் அறிவு விருத்தியாகும். புத்திசாலித்தனம் பெருகும். விஷயம் சேகரமாகும். சிந்தனை வளரும். வாழ்க்கை வளம் பெறும். 45ஆம் வயதில் SSLC படித்தவரானாலும், M.A. படித்தவரானாலும் தம் பாடங்களை இக்கண்ணோட்டத்தில் ஒரு முறை முழுவதும் (the entire syllabus) பரிசீலனை செய்தால், அளவு கடந்த பயன் ஏற்படும். முடிவில் தாம் ஒரு (level) நிலை உயர்ந்தது தெரியும். நடைமுறையிலும் ஒரு நிலை உயர்ந்துவிடும்.

நாம் வாழ்வில் எதையும் தீவிரமாகக் கருதுவதில்லை. பாடங்களை மட்டுமல்ல. இன்று நம்மைச் சுற்றி நிகழ்வனவற்றையே நாம் கவனிப் பதில்லை. குடும்பத்தில் இது போன்ற அக்கரை குடும்பத்தைச் செழிக்கச் செய்யும். (Neighbourhood) நாம் வாழுமிடத்தைக் கூர்ந்து கவனித்தால், அங்கு நமக்கு முக்கியத்துவம் வரும். தொழிலைப் பார்த்தால் பிரமோஷன் வரும். தன்னையே கருதினால் மனநிலை உயரும். அன்னையை இதுபோல் அதிகமாக அறிய முற்பட்டால், ஆன்மா மலரும்.

நீ இரகஸ்யமானவனானால், அதன் இலாபத்தை நீ அறிவாய்.

அதனால் ஏற்படும் சிரமங்களை யோசனை செய்து பார்.

*******

இரகஸ்யமானவர் பெரும்பாலும் வாழ்வில் வெற்றி பெற்றவராக இருப்பார். இரகஸ்யமாக இருந்து, தோல்வியடைபவர்களும் உண்டு. இரகஸ்யம் வெற்றியைப் பெற்றுத் தருவதால், அதை உடனே பயன்படுத்த ஆரம்பித்து விடுவார்கள்.

அனைவரும் சுயநலமாக உள்ள இடங்கள், வதந்தி கிளம்பும் இடம், போட்டி நிறைந்த இடங்களில் இரகஸ்யமாக இல்லாவிட்டால், எல்லாம் போய்விடும். இரகஸ்யம் அவசியம். யாரிடம் அவசியம், எந்த அளவில் அவசியம் என்பதைக் கருத வேண்டும். அவசியமான பொழுதே, இரகஸ்யம் பாதிக்கும், பெரிய அளவில் பாதிக்கும். எப்படி இரகஸ்யம் அவசியமோ, அப்படி (frankness) வெளிப்படையாக இருப்பதும், அளவு கடந்து அவசியம்.

நாளைக் காலை அமெரிக்கா போகும் கணவன், இன்று மாலை வரை மனைவியிடம் சொல்லவில்லை என்பது ஓர் இரகஸ்யக்காரர் நடத்தை. இது ஆபத்து. மனம் விட்டுப் போகும். வீட்டை விட்டு வெளியில் சொல்லாமல் போய், ஓரிரு நாள் கழித்து வருபவர்கள் பலர். கணவனுக்கு என்ன வேலை, என்ன சம்பளம் என்று மனைவிக்கே தெரியாமல் வைத்திருப்பவருண்டு. உடல் நலம் 50ஆம் வயதில் சரியில்லை என்பதை 25 பேர் உள்ள வீட்டில் எவரிடமும் சொல்லாதவர், திடீரென ஒரு நாள் இறந்து போனார். அவருக்கு என்ன என்று தெரிந்தபின், "தெரிந்திருந்தால் சுலபமாகக் குணப்படுத்தியிருக்கலாம்'' என்றனர்.

ஒருவர் வெளியூர் அடிக்கடி போவது வழக்கம். பொதுவாக வீட்டில் அட்ரஸ் கொடுப்பதில்லை. எந்த ஊர் போயிருக்கிறார் என்று மட்டும் தெரியும். இரகஸ்யமில்லை. பழக்கமில்லை. ஒரு நாள் அவர் சொற்பொழிவுக்காக 50 மைல் தாண்டிச் செல்ல வேண்டியிருந்தது. போகவில்லை.தம்பி இறந்ததாகத் தந்தி வந்தது. "நான் சொற் பொழிவுக்குப் போயிருந்தால், இந்தத் தந்திச் செய்தியை எனக்கு அனுப்பியிருக்க முடியாது'', என்றுணர்ந்த அவர், அதிலிருந்து வெளியூர் போனால் விலாசம் கொடுத்துப் போவது வழக்கம். பாண்டியிலிருந்து சென்னைக்குக் காரில் கிளம்பியவர் நண்பர் ஒருவருடன் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, ஏதாவது செய்தியுண்டா எனக் கேட்டார். ஒன்றுமில்லை என்றார் இரகஸ்யக்காரர். இவர் சென்னைக்கு வந்தபின் நண்பர் வீட்டில் அவரைச் சந்தித்தார். "நீங்கள் சென்னைக்கு வருவதாயிருந்தால் ஒன்றாக வந்திருக்கலாமே'' என்றார். இரகஸ்யம் அதன் சிறு வேலையைச் செய்தது.

இரகஸ்யம் எத்தனையோ சிறு சௌகரியங்களை இழக்கும், சமயத்தில் வாழ்க்கைக்கே முக்கியமானதையும் இழக்கச் செய்யும். 

குடும்பம், நட்பு, வியாபாரக்கூட்டு, பொது ஸ்தாபனம் ஆகியவற்றில் கடமைக்குரிய (frankness) வெளிப்படையான பழக்கமில்லாவிட்டால், வாழ்க்கையில் சௌகரியங்களை இழக்க நேரும். சமயத்தில் அதிர்ஷ்டத்தையும் இழக்க வேண்டி வரும்.

உன் திறமைகள் வந்தது எப்படி என ஆராய்ந்து உன் சமயத்தால் (religion) அது வந்ததா எனக் கவனி.

மனத்திற்குக் கசப்பானதை இன்று ஏற்கும் பொறுமை உன் அரசியல் அல்லது குடும்பப் பண்பிலிருந்து வந்ததா என்பதைக் கண்டுபிடி.

தவறான செய்திகளை நம்புவதன் காரணமென்ன? அவற்றின் அஸ்திவாரம் எது எனப் பார்.

இதுபோன்ற காரணங்களால் உன் மனநிலை பாதிக்கப்பட்டதை ஆராய்ந்து பார்த்து, தவறான பழக்கங்களை விட்டுவிடு. உன் நல்ல குணம் சந்தர்ப்பத்தால் வந்தது, பிறப்பால் ஏற்பட்டதன்று என்பதை அறிதல் அவசியம்.

********

கத்தோலிக்கச் சர்ச்சில் பயிற்சி பெற்றவர்கள், பொய் சொல்ல பயப்படுவார்கள். கட்டுப்பாட்டுடனிருப்பார்கள். வேதபாராயணம் செய்த குடும்பங்கள், கனபாடிகள் குடும்பத்தினருக்கு மனப்பாடம் எளிதில் வரும். வைஷ்ணவ, சைவக் குடும்பங்களில் பிரபந்தம் முழுவதையும் மனப்பாடம் செய்திருப்பார்கள், திருவாசகம், அருட்பா பாடல்களைக் குழந்தைகள் சிறு வயதில் ஏராளமாக மனப்பாடம் செய்து பாடியிருப்பார்கள். அவர்களுக்கு மனப்பாடம், செய்யுள், செய்யுள் எழுதும் திறன், உவமை, தமிழ் நன்றாக வரும். ஒவ்வொரு மதவழிபாட்டிலும், பல்வேறு திறமைகள் எழக்கூடிய பழக்கங்கள் உள்ளன. இன்று உனக்குக் கவி எழுத முடிகிறது. மனப்பாடம் வருகிறது. நினைவாற்றல் அதிகம், சரளமாக ஆங்கிலம் வருகிறது, என்பவை உன் குடும்பத்தின் வழிபாட்டால் வந்தன என்பதை அறியும் பொழுது, அவை நம் சொந்தத் திறமையல்ல, சூழ்நிலையால் ஏற்பட்டவை என்று அறிந்தால் மனம் தெளிவு பெறும். பெற்றோர் அன்னை பக்தர்கள், அதனால் குழந்தைகள் அன்னையை வழிபடுகிறார்கள் எனில், வழிபாடும், பக்தியும் மேலெழுந்ததாக இருக்கும். தானே அன்னையை அறிந்து ஏற்றுக் கொண்டால் அது சொந்த முடிவால் ஏற்றுக் கொண்டதாக இருக்கும். நமக்குப் பக்தி வந்த காரணம் தெரிந்தால், தெளிவு உற்பத்தியாகும்.

தகப்பனார் அரசியல்வாதி, எதிர்கட்சிப் பிரசாரத்தைப் பொருட்படுத்தமாட்டார் எனில் மகனுக்கு எதிரிகள் விஷயத்தில் பொறுமை யிருக்கும். தகப்பனார் நாட்டாண்மைக்காரர், மத்தியஸ்தத்திற்குப் போவார் எனில் மகனுக்குச் சிக்கல்களை அவிழ்க்கத் தெரிந்திருக்கும், கசப்பானவற்றை விலக்கி, அதிலுள்ள சாரத்தை எடுக்கத் தெரியும். இது தெளிவு. தெளிவாக நாம் நம்மை அறிவது உதவும்.

ஓர் ஆபீசிலிருந்து வந்த செய்தியை ஆபீசர் வாயிலாகவும், குமாஸ்தா வாயிலாகவும், பியூன் வாயிலாகவும் கேட்டால் அவை சமயத்தில் முழுவதும் மாறுபட்டும் இருக்கும். மேலதிகாரி இந்த ஊர் வழியாகப் போகிறார் அவரைப் போய்ப் பார்க்க வேண்டும் என்பது ஆபீசர் செய்தியானால், குமாஸ்தா வாயில் அது, "திடீர் இன்ஸ்பெக்ஷனாக'' மாறும். பியூனுக்கு அதே செய்தி "நம் ஆபீசில் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்'' என்று புரியும். உத்தியோகத்தின் நிலைக்கேற்ப செய்தியின் உருவம் மாறும். நாம் தவறான செய்திகளை நம்புகிறோம் என்றால் அது நம் வாழ்வில் வந்த காரணமென்ன என்று அறிய வேண்டும். தவறான செய்திகளை நம்புவதற்குக் கீழ்க்கண்டது போன்ற காரணங்களுண்டு.

  • எதற்கெடுத்தாலும் பயமுள்ளவர் தவறான செய்திகளை நம்புவார்.
  • சிறுவயதில் அளவுக்கு மீறி மிரட்டி வளர்த்த குழந்தைகள் நம்பும்.
  • செய்தியின் நிலைக்கும், நம் சமூக நிலைக்கும் உள்ள தூரம் அதிகமானால் நம்புவோம்.
  • எதையும் கேட்டவுடன் நம்பும் பழக்கமுள்ளவர் நம்புவர்.

நாம் எக்காரணத்தால் நம்புகிறோம் எனத் தெரிவது நல்லது.

நம் நல்ல குணம், பழக்கம், திறமை, நல்ல பெயர் ஆகியவை நமக்கு வந்ததற்குக் குடும்பம், மதம், ஜாதி, தொழில், ஊர் காரணமாக இருப்பதைக் கண்டால், அவை போக நமக்குள்ள நல்ல குணம் எவை எனப்பார்த்தால், அநேகமாக ஒன்றிரண்டு இருக்கும் அல்லது இருக்காது.

பிறப்பால் ஏற்பட்டவை மாறாது. வளர்ப்பால் ஏற்பட்டவை நிலைக்கும். ஆனால் crisis முக்கியமான சிக்கலான நேரத்தில் உதவாது. இந்தக் கண்ணோட்டத்தில் நம் கடந்த கால வாழ்வை நிர்ணயித்துப் பார்த்தால், நம்மை நாம் எடை போடுவது தெரியும். அது எதிர்காலத்தை நிர்ணயிக்க உதவும்.

பெரிய இலாபம் பெற பிரயாணச் செலவு செய்யத் தயாராக இல்லை என்பது சிந்தித்தால் புரியும்.

*******

சின்னபுத்தி, விசாலமான மனம் என்பவை எவரும் அறிந்ததே. 25 வருஷம் நன்கொடை வசூல் செய்ய அலைந்து Rs.2350/- பெற்றவருக்கு ஆண்டுக்கு 80,000ரூபாய் வருமானம் பெறும் எல்லாச் சௌகரியங்ளும் இருக்கின்றன என்பதைத் தெளிவாக அறிவுறுத்தியபின், இந்த யோசனை என்னிடம் வேலை செய்பவரிடமிருந்து வருவதால், நான் ஏற்கமாட்டேன் என்பதை அறிவீனம், சின்ன புத்தி, கண்மூடித்தனம் என்றால் பொருந்தும்.

நாள் தேவை என்பதை அன்னை தான் கொடுக்க முடியுமே தவிர வாழ்வில் அந்த அமைப்பில்லை. இதற்கான பிரயாணச் செலவைச் செய்ய, பலன் பெறுபவர் தயாராக இல்லை என்பதை எப்படி விவரிப்பது? வர்ணிப்பது? பகுத்தறிவுக்கும் இவருக்கும் தூரம் அதிகம். அறிவுக்கெதிரான செயல் இது. நம் வாழ்வில் இப்படிப்பட்ட செயல்கள் இருக்கின்றனவா என்று நாம் காண வேண்டும்.

ஓர் ஆஷாடபூதியைக் குருவாக ஏற்றுக் கொண்டு, அவரையே தெய்வம் எனக் கருதுபவர், அவரை விட்டகன்றால் அவருடைய ஆன்மநிலை உயரும் என்பதை அறிவது சிரமமில்லை.

******** 

Ph.D. பட்டம் பெற்றவர் ஒருவர். தமிழ் நாட்டில் 7 பேர் Ph.D பெற்ற காலத்தில் அவர் தமிழ் நாட்டில் சிறப்பாக விளங்கினார்.

ஸ்ரீ அரவிந்தர் எழுதியதைப் புரிந்து கொள்ள முடியாத மனிதனை, இவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்படிப்பட்ட மனிதன் கெட்டிக்காரன். அன்னைக்குப் பின் "அன்னை என்னை ஆசிரமத்தின் தலைவனாக்குவார்''. "ஸ்ரீ அரவிந்தர் செய்த யோகத்தைக் கடந்த நிலையில் சித்தி பெற்றவன் நான்'' என்பவரை Ph.D.  படித்தவருக்குப் புரியவில்லை என்பது விந்தை. கழைக்கூத்தாடி வித்தைகளையும், ஆன்மீகச் சிறப்பையும் பிரித்துப் புரிந்து கொள்ள முடியாமல் இறுதிவரை குருவாக இவர் ஏற்றுக் கொண்டார். அன்னையை நேரில் அநேகம் தடவை தரிசித்தும், அவர்கள் சேவைக்காக உயிரையே கொடுத்தும், அன்னையிடம் நேரடித் தொடர்பு இருந்தும், இவரால் "குரு''வின் நிலையை அறிய முடியவில்லை. இவர் குருவுக்கு அன்னை, ஸ்ரீ அரவிந்தர் எழுதியவை புரியா. அவர் படித்ததும் இல்லை. நன்றாகப் புரியாவிட்டாலும், பதிந்த அளவுக்கு நல்லது என பகவான் புத்தகத்தை (copy) பிரதி எடுத்துப் பழக்கம். Ph.D பட்டமும், பெரிய பதவியும் குருவைப் பற்றிய தெளிவைத் தரவில்லை. இவர் "குரு''வை விட்டகன்றால், அன்னையின் அனுக்கிரஹம் பிரவாகமாக வரும். இவரே ஏற்றுக் கொண்ட சிறுமதி இவரை அருகிலிருந்தும், அன்னையை விட்டுப் பிரித்து விட்டது.

பெற்றோர், நண்பர்கள், உடன் வேலை செய்பவர்களுடன் உன்னுடைய (attitude) நோக்கம் சரியில்லை எனில், உடனடியாக அதை மாற்ற வேண்டும்.

*******

தகப்பனார் சேமிப்பை எடுத்துத் தன் செலவு செய்ய வேண்டும், அவர் எப்படியாவது போனாலும் கேள்வியில்லை என்பது மனநிலையானால், அவன் மகனல்லன், மனிதனில்லை. சமூகத்தில் நடைப்பிணமாக இருப்பவன்.

பெற்ற தாயாரைக் கடைசிக் காலத்தில் காப்பாற்ற வேண்டிய அவசியத்தை உணராதவன், "என் மனைவி ஒத்துக்கொள்ளமாட்டாள்'' என்பவனை அவன் மனைவி கடைசிவரை கருதமாட்டாள்.

தாயாரை இழந்த, வயதிற்கு வந்த பெண்களுக்குத் திருமணம் தடைப்படும் வழியில் தம் சௌகரியத்தையும், சந்தோஷத்தையும் தேடும் தகப்பனாரைத் தடுத்து, பெண்கள் என்னாவது எனக் கேட்டால், "அதன் தலைவிதி அவ்வளவு தான்'' என்பவரை உலகம் பழிக்கும், கடைசி கடமையைப் பிறர் அவருக்குச் செய்வதையும் வாழ்வு தடுக்கும்.

சொந்த (தாய்) வீட்டுப் பெருமைக்கும், சௌகரியத்திற்கும், மகளின் வாழ்வை அடகு வைக்கவும், மகனின் வாழ்வை அழிக்கவும் முன் வருபவள், பாசமுள்ளவளல்லள்; சுயநலமும், வீண் கர்வமும் உடையவள். அன்பைப் பெற முடியாதவள், ஆதரவை விலக்குபவள்.

15 வருஷம் ஒரு வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் இனாமாகத் தண்டச் சோறு சாப்பிடுவதை உரிமையுடன் சாப்பிட்ட சொரணை கெட்ட ஜன்மம், அந்த வீட்டு அம்மாள் சாகப் பிழைக்க ஆஸ்பத்திரியில் இருக்கும்பொழுது போய்ப் பார்க்கவும் இல்லை எனில், அவன் மலஜலம் கழித்து அதிலேயே புரண்டு கிடப்பதை உலகம் அறியாமல் வாழ்வு செய்யும் என அவன் அறியமாட்டான்.

நண்பனுக்குத் துரோகம் செய்யும் வகையில் அவன் மனைவியை நாடுபவன், நாளை தன் மனைவி பகிரங்கமாகத் தவறான நடத்தையை அனுசரிப்பாள் என எதிர்பார்ப்பதில்லை.

இவர்களெல்லாம் சமூகத்தின் மேல் மட்டத்திலோ அல்லது சராசரியிலோ உள்ளவரில்லை. அடி மட்டத்தில் உள்ளவர்கள். இதுபோன்ற ஒரு குணம் நம்முள் மறைந்திருக்குமானால், அதை உடனே அகற்ற வேண்டும். அகற்றாமல் மனிதனாக வாழ முடியாது. முன்னேற்றத்தைப் பற்றிப் பேசுவது அறிவீனம்.

தொடரும்...

*******

ஜீவிய மணி 

பெரு நஷ்டத்தைப் பொறுமை பெரிய இலாபமாக மாற்றும்.

*******

Comments

         3RD page ; 4th para

         3RD page ; 4th para ;3rd line ;எடுக்கமுன்
         5thpage;   3rd para ; 2nd line ;அதிகப்படுத்தமுன்

        12th page 4th para ; 2nd line ;  அழிக்கவும்முன்

       G. Jayalakshmi.book | by Dr. Radut