Skip to Content

11. அன்பர் அனுபவம்

அன்பர் அனுபவம்

சென்ற மாத மலர்ந்த ஜீவியத்தில் (டிசம்பர் 2015) வெளியிடப்பட்ட ஒரு அன்பரின் அனுபவத்தை வாசித்த புதிய அன்பர் ஒருவரது அனுபவத்தை இங்குப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.

சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை செய்பவர் அவர். மாதந்தோறும் ஒரு முதியோர் இல்லத்திற்கு அவர் வேலை செய்யும் சூப்பர் மார்க்கெட் சாமான்களை supply செய்வது வழக்கம். மேலும் அவரது நிர்வாகம் தர்ம காரியமாக சாமான்களை அம்முதியோர் இல்லத்திற்கு வழங்குவதும் வழக்கம். அப்படி டிசம்பர் 23 அன்று, சூப்பர் மார்க்கெட் அதிகாரி அன்னை அன்பரை முதியோர் இல்லத்திற்கு சாமான்களை deliver செய்து வரும்படி பணித்தார்.

முடிந்த நேரத்தில் மலர்ந்த ஜீவியம் படிக்கும் பழக்கம் கொண்ட அன்பர் அவர். முதியோர் இல்லத்தில் சாமான்களை சரிபார்த்து delivery முடிக்க நேரம் ஆகும் என்பதால், போகும்போது மலர்ந்த ஜீவியத்தைக் கையில் எடுத்துக்கொண்டு போனார்.

சென்ற இடத்தில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்த பொழுது, அந்த இல்ல மேனேஜர் அன்னை அன்பர் எனத் தெரிய வர, சந்தோஷமாய் அவரிடம், அன்னையைப் பற்றிப் பேசி, பின் தன் கையில் கொண்டு வந்த மலர்ந்த ஜீவியத்தில் வெளி வந்த அன்பர் அனுபவம் குறித்து வாசித்துப் பார்க்கச் சொன்னார். அவரும் படித்துவிட்டு, புத்தகம் கிடைக்கும் விவரங்களைக் கேட்டறிந்தார்.

மேனேஜர் மற்றும் டெலிவெரி செய்த அன்பர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த முதியோர் இல்லத்தில் இருந்த ஒரு வயதான மூதாட்டி, அன்பர் சென்றதும், அந்த மலர்ந்த ஜீவியத்தைக் கேட்டு வாங்கிப் படித்தார். அதில் பரம்பொருள் புத்தகத்தைப் படித்ததால் ஒரு அன்பருக்கு நிகழ்ந்த அனுபவத்தைப் படித்த அவர் தாம் வீட்டை விட்டு ஒரு முதியோர் இல்லத்தில் வசிக்க வேண்டியுள்ள தன் நிலையை எண்ணி வருந்தினார். மலர்ந்த ஜீவியம் மற்றும் பரம்பொருள் புத்தக விவரங்களை மேனேஜரிடம் கேட்டறிந்தார். அம்பத்தூர் மையத்திலிருந்து பரம்பொருள் புத்தகத்தை மேனேஜரிடம் பணம் கொடுத்து வாங்கி பக்தியுடன் படித்து வந்தார். அன்னையையும் மானசீகமாக பூஜித்தும் ஆராதித்தும் வந்திருக்கிறார்.

அவரது பேரன் 5-ஆம் வகுப்புப் படிக்கிறான். நன்கு படிக்கும் மாணவன். பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. கலந்து கொண்ட அவனிடம் வந்திருந்த விருந்தினர், அவனது விவரங்களைக் கேட்டனர். மேலும், நீ படித்துப் பெரிய ஆளாகி உன் தாய் தந்தையை எப்படிப் பார்த்துக்கொள்வாய் எனக் கேட்டனர். அப்பா அம்மாவிற்கு வயதானதும் நான் அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுவேன் என்று பதில் கூறி பையன் அனைவரையும் திகைக்க வைத்தான். ஏன் அப்படி எனக் கேட்டதற்கு, எனது பாட்டியும் முதியோர் இல்லத்தில்தான் உள்ளார். பாட்டி வீட்டில் இருந்தால் அம்மா, அப்பாவுக்கு டென்ஷனாக இருக்கும். பாட்டி அங்கு இருந்தால்தான் அவருக்கு சௌகரியமாகவும் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் இருக்கும் எனப் பதில் சொல்லி மேலும் திகைப்பூட்டினான். அனைவரும் இந்தப் பையனின் பெற்றோரைப் பார்க்க, அவர்களுக்குத் தலைகுனிவாக இருந்தது. இந்த வயதில் இப்படி ஒரு பதிலா என அதிர்ந்த தலைமை ஆசிரியை, பையனின் பெற்றோரை அழைத்து, பையன் இப்படிப் பேசுவது சரியல்ல. இந்த வயதில் இப்படி ஒரு பதிவு தவறு. கலந்து பேசுங்கள் எனக் கூறினார்.

வீட்டில் அதன்பின் என்ன நடந்தது என்று நாமறிவது அவசியமில்லை என்றாலும், அடுத்த நாளே இல்லத்திலிருந்து அம்மூதாட்டி தன் வீட்டிற்கு வந்து விட்டார் என்ற செய்தி அன்பரை அடைந்தது அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

கடந்த வாரம், சூப்பர் மார்க்கெட் ஊழியரான அன்பரிடம் முதியோர் இல்ல மேனேஜர் தொலைபேசியில் தொடர்புகொண்டு அந்த மூதாட்டியை இப்போதுதான் அவரது பிள்ளை வீட்டிற்கு அழைத்துக்கொண்டு சென்றார் என்று கூறி அன்பருக்கு நன்றி தெரிவித்தார். இந்த அளவு கருணையும், சக்தியும் உள்ளவரா அன்னை! என்று அம்மூதாட்டி நெகிழ்ந்து கரைந்தார் என்றும் கூறினார்.

ஒரு புதிய உள்ளத்தில் அன்னை என்ற வித்து விதைக்கப்பட்டு விட்டது. அது வேரூன்றிப் பரந்து வளர்ந்து விரிந்து உயரும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

************



book | by Dr. Radut