Skip to Content

10. அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்

அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

12. நோயற்ற வாழ்வு

உடல் தெய்வம் உறையும் இடம். திடகாத்திரமும், ஆரோக்கியமுமே அதன் இயல்பு, பிறப்புரிமை. நோயுறுதல் உடலுக்கு இயற்கையில்லை. இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த முன்னோர்களும், இன்றும் அதுபோல் வாழும் மலைவாசிகளும் மிக ஆரோக்கியமாக வாழ்தல் அதற்குச் சான்று. உடல் தன் இயற்கையை மறந்து மனித அறிவுக்குத் தன்னை உட்படுத்தி, மனத்தின் அடிமையாக இருப்பதால், மனத்தில் ஏற்படும் பயம், சஞ்சலம், சபலம், சந்தேகங்கள் உடலையும் பாதிக்கின்றது; அதனால் நோய் ஏற்படுகிறது என்கிறார் அன்னை. ஆயிரத்தில் ஒன்றே உண்மையான உடலைப் பற்றிய நோய். அதற்குத்தான் வைத்தியம் தேவை. மற்றவை மனத்தால் உடலில் உற்பத்தியான குறைகளாகும் என்கிறார் அன்னை.

உடல் இருளின் கருவி; பொய்யின் உறைவிடம்; புறக்கணிக்கப் படவேண்டியது என்பது இந்திய மரபு. உடலைப் பெற்றிருப்பதே மனிதனுடைய சிறப்பு. உடல் இல்லையானால் அவனது ஆன்மிகம் உச்சக்கட்டங்களை எட்ட முடியாது. உடல் தெய்வம்; தெய்வம் உறையுமிடம்; உடலில் புதைந்துள்ள ஆன்மிகம் வெளிப்பட்டால் உடல் திருவுருமாற்றம் அடைகிறது; அடைந்து, தெய்வங்களைக் கடந்த நிலையான சத்திய ஜீவனாகிறது (Supramental being) என்கிறார் அன்னை. துர்க்கை ஒவ்வோர் ஆண்டும் துர்க்கா பூஜைக்கு ஒரு நாள் முன்னதாக வந்து அன்னையைச் சந்தித்து, பூஜை முடியும்வரை இருப்பது வழக்கம். அன்னை தியானம் நடத்தும்பொழுது தவறாது வந்து தியான மண்டபக் கொரனாசில் இருந்து தியானத்தில் பங்குகொள்வது வழக்கம். அன்னை துர்க்கையிடம் சரணாகதியைப் பற்றிப் பிரஸ்தாபித்தபொழுது துர்க்கை, அதைத் தான் கருதுவதே இல்லை என்றார். தானே தெய்வம் என்பதால், இறைவனுக்குச் சரணடைய வேண்டும் என்று துர்க்கைக்குத் தோன்றவில்லை என்று சொன்னார். அன்னை துர்க்கையிடம் சரணாகதியின் பெருமையைப் பற்றிச் சொல்லி, அதை ஏற்றுக்கொள்ளுதல் சிறப்பு என்றார். துர்க்கை அதை ஏற்று, அந்தச் சிறப்பை உணர்ந்ததாக அன்னையிடம் பின்னர் விளக்கினார். அச்சமயம் (constant presence) இடைவிடாமல் இறைவன் நம்முள் உறைவதைப் பற்றி அன்னை சொல்லியபொழுது, அந்தப் பாக்கியம் உடல் இருந்தால்தான் பெற முடியும் என்று துர்க்கை சொன்னார். சூட்சும உடல் உள்ள தெய்வங்களுக்கு அந்தப் பேறு கிடையாது. ஸ்தூல உடலைப் பெற்ற மனிதனுக்கு மட்டுமே இறைவனைத் தன்னுள் நீக்கமற நிறுத்தி வைக்க முடியும் என்றார். அத்தகைய உயர்வு உடையது மனித உடல்.

அன்னை ஜபம், பாராயணம், ஆசனம், தியானம், இவற்றை இரண்டாம்பட்சமாகக் கருதுவார். பக்தி, பவித்திரம், தெய்வ நினைவு, சமர்ப்பணம் ஆகியவற்றை முக்கியமாகக் கருதுவார். என்றாலும் ஜபத்தின் தன்மையை விளக்கும்பொழுது உடலைத் தெய்வீகமயமாகச் செய்யும் திறனுடையது ஜபம் என்று அன்னை கூறுகிறார்.

உடலினது தெய்வத் தன்மையின் சிறப்பைக் கூறும்பொழுது, இறைவனிடம் தொடர்புகொள்ள ஆன்மா மூலமும், அறிவின் மூலமும், உணர்ச்சியின் மூலமும் உடல் செயல்படுகிறது என்றாலும், உடலுக்கு ஒரு பெருஞ்சிறப்புண்டு. நேரடியாக இறைவனிடம் தொடர்புகொள்ளும் திறனுடையது உடல் என்று அன்னை கூறுகிறார். சிறிதளவு அல்லது பெரிதளவு ஆன்மிகத்தைப் பெற உடல் மற்ற கரணங்கள் வழியாக இறைவனுடன் தொடர்புகொள்கிறது. முழுமையாக இறைவனைப் பெற உடல் முடிவு செய்துவிட்டால் நேரடியாகத் தொடர்புகொள்கிறது என்று அன்னை விளக்கம் அளிக்கின்றார்.

சரணாகதியை மற்ற கரணங்களைப் போலல்லாமல் பூரணமாக ஏற்றுக்கொள்ளும் திறனுடையது என்றும், எதை உடல் ஏற்றுக் கொண்டாலும் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் பாங்குடையது என்றும் அன்னை உடலின் தன்மையைச் சொல்கிறார். “எனது ஹிருதயம் நின்றுவிட்டது. ஆனால் உயிர் போகவில்லை’’ என்ற ஸ்ரீ அரவிந்தருடைய வாக்கியத்தை விளக்கவந்த அன்னை சத்தியஜீவ நிலையை (Supermind) அடைய வேண்டி நாம் முயலும்பொழுது கடைசிக் கட்டத்தில் உடலின் ஹிருதயத் துடிப்பு நின்றபின்னரே மனிதன் சத்திய ஜீவனாகிறான் என்கிறார். ஹிருதயம் நின்றுபோவது சத்தியஜீவ நிலைக்குப் போக வேண்டிய வாயிற்கதவு என்கிறார்.

அன்னை யோகத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் உடலைப் பற்றியே அதிகமாகப் பேசுவார். இதுவரை வந்த அவதாரங்கள் உலகுக்கு உண்மையை உணர்த்த வந்தன. ஸ்ரீ அரவிந்தருடைய அவதாரத்தில் இறைவன் அவதார புருஷனையே இந்த யோகத்தைச் செய்யச் சொல்லி உத்திரவிட்டிருக்கிறார் என்று அன்னை கூறுகிறார். அவதாரங்கள் எடுத்துக்காட்டாக அமைந்ததே பூவுலகச் சரித்திரம். அவதாரங்களையே யோகத்தைச் செய்யும் சாதகராக இறைவன் இம்முறை பணித்தது பூரண யோகத்தின் சிறப்பு என்கிறார் அன்னை.

இறைவன் அன்னை உடலை அடிக்கடி தொடுவதுண்டு. அந்த ஆத்மிக அனுபவம் முற்றி, பூரணமாகி, அன்னையின் உடல் ஒரு சமயம் முழுவதுமாக ஒரு கணம் இறைவனாகவே மாறியது. அதன்பின் அடிக்கடி அந்நிலை ஏற்பட்டு, ஒரு கணமாக இருந்தது நீடிக்க ஆரம்பித்தது. ஒரு சமயம் 15 நிமிஷம் அன்னையின் முழு உடலும் பூரணமாக இறைவனாக மாறி நிலைத்திருந்தது என்கிறார். இறைவனாக மாறும் தனிப்பெருஞ்சிறப்பை உடையது மனித உடல் என்பது அன்னையின் சித்தாந்தம். அந்த நிலையை அன்னையின் உடல் பெற்றதால், அவருடைய உடலைத் தீண்டிய எந்த உணர்வும் தன் தன்மையை நீடித்துப் பெற்றிருக்க முடியாது என்கிறார்.

மனிதனுடைய குறை அன்னையின் சூழலை அடைந்து அவருடலைத் தீண்டினால், குறை என்ற உணர்வே பிரபஞ்சத்தில் தன் வலுவை இழந்துவிடும். பொறாமைக்காரன் அன்னையைத் தரிசனம் செய்தால் அவனது பொறாமை வலுவை இழக்கும். உலகில் பொறாமைக்கே வலு ஓரிழை குறையும். தம் முன்னால் நிற்பவர்களுடைய உடலுடன் அன்னை இரண்டறக் கலந்து, தம்மையே மற்றவர்களாக உணர்வது உண்டு என்கிறார். குள்ளமான மனிதன் அவரைத் தரிசித்தால் தாமே குள்ளமாக இருப்பதைப்போல் அன்னைக்குத் தோன்றும்.

உடலின் பெருமையை இடையறாது பேசியவர் அன்னை. தெய்வங்களுக்கும் அதன் பெருமையை வலியுறுத்திக் கூறினார் அன்னை.

அன்னையை வணங்க ஆரம்பித்தபின் நோய் குறைவது வழக்கம். ஓரிரு ஆண்டுகளுக்குப்பின் (medical bill) டாக்டர் செலவு இப்பொழுது இல்லை என்று பலரும் சொல்வதுண்டு.

பிரார்த்தனையால் நோயைக் குணப்படுத்துவது ஒரு பழக்கம். நமக்கு நோய் என்று ஏற்பட்டால் மருந்து சாப்பிடுவதுண்டு, பிரார்த்தனை செய்வதுண்டு. மருந்தையும், பிரார்த்தனையையும் ஏற்றுக்கொள்வதுண்டு. அன்னையின் சக்தி நோயைக் குணப்படுத்த பிரார்த்தனை மூலம் செயல்படுவதுபோல், நம்பிக்கை மூலமும் செயல்படும். ஒளியாகப் பரவி நோயை அழிப்பதுண்டு; சாந்தியாகப் பொழிந்து நோயைக் கரைப்பது ஒரு வகை. சக்தியாக உடலில் நுழைந்து விரட்டுவதும் வழக்கம். நோயின் மூலமான பயத்தை அழித்து, அதன் மூலமாக குணம் ஏற்படும். நோயின் காரணமான கர்மத்தை விலக்கி, குணம் ஏற்படும். தவறான நம்பிக்கையால் நோய் ஏற்பட்டிருந்தால், அன்னையின் சக்தி அந்தத் தவற்றை விலக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி நோயை அகற்றுவதுண்டு. பலருடைய பிரார்த்தனை ஒருவரைக் காப்பாற்றியதுண்டு. பிறருடைய பிரார்த்தனை பலித்ததுண்டு. பூவின் சிறப்பை உணர்ந்தால், அதன் மூ லம் சிரமம் விலகும். Blessing packet-இன் மகிமையால் குணம் ஏற்படுகிறது. (Heart attack) ஹிருதய நோய் என்று ஏற்பட்டது, அதில்லை என்றாகி, வேறொரு சிறிய கோளாறு என்று மாறி விலகுவதுண்டு.

தொடர்ந்து ஆசிரமம் வருவதால் உடல் திறம் பெற்று நெடுநாட்களாக இருந்த தீராத வியாதி முயற்சியின்றி தானே மறைந்தது உண்டு. ஆப்பரேஷனுக்கு நாள் குறித்தபின் அன்னை பிரசாதம், ஆப்பரேஷன் தேவையில்லை என்ற நிலைமையைப் பலருக்கு ஏற்படுத்தியதுண்டு. எந்த மருந்துக்கும், எந்த டாக்டருக்கும் கட்டுப்படாத வியாதி அன்னையின் பிரசாதத்திற்கும் கட்டுப்படாத நிலையில், எந்தக் குணத்தால் அது ஏற்பட்டதோ அதை மாற்றிக் கொள்ள முன்வந்தவுடன் பிரசாதத்திற்குப் பலனாகக் குணமாவது உண்டு. உடலில் வியாதி எதுவும் இல்லாமல், தெம்பும் திறனும் நாளாவட்டத்தில் அழிந்து வந்து, இனி அதிக நாள் உயிருடன் இருக்க முடியாது என்ற நிலையில் அன்னைக்குப் பிரார்த்தனை செய்தால், அன்னையின் சக்தி உடலுள் பாய்ந்து, 3-ஆம் நாள் முழுப் பலமும் வந்ததுண்டு. குழந்தையின் தீராத வயிற்றுப்போக்கு பிரசாதம் வந்ததால் நின்று, பின் தொடர்ந்தபோது, பிரசாதப் பாக்கெட்டைக் குழந்தை மீது வைத்தவுடன் முழுமையாக நின்றதுண்டு. ஆக்ஸிஜன் (oxygen) கொடுத்த நிலையில் ரிடையர் ஆன கடைநிலை ஊழியரின் எலும்பும், தோலுமான உடல் அன்னையின் சக்தியை மறைமுகமாகப் பெற்று, 3 மணி நேரத்தில் ஆஸ்பத்திரியிலிருந்து வெளிவந்து, அதன்பின் 25 வருஷம் உயிரோடிருந்ததுண்டு. இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட பெரிய ஆஸ்பத்திரியில் இளம்பிள்ளை வாத வார்டில் மிகக் கடினமான கேஸாகச் சேர்க்கப்பட்ட 3 வயது குழந்தை, வார்டிலிருந்து 3 நாளில் முதல் கேஸாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது உண்டு. 8 வருஷமாக சித்த சுவாதீனமிழந்து எல்லா வைத்தியங்களுக்குப்பின் அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த மனநோயாளி, உறவினரால் சமாதி அருகில் தினமும் ஒரு முறையாவது 30 நாட்கள் பிரார்த்தனை செய்ததின் பலனாக, இந்தப் பெண்ணை இப்போது பார்த்தால் ஒரு காலத்தில் சுவாதீனம் இழந்தவர் என்று சொல்ல முடியாது என்ற அளவுக்கு குணமாகி, தீபாவளிப் பண்டிகையை முறையாகக் கொண்டாடியதுண்டு. நூறு கோடிக்கு அதிபதியான ஒருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அரை மணி நேரத்தில் மருந்து கொடுக்காவிட்டால் ஆபத்து என்ற நிலை வந்து, அவருடைய சொந்த ஆஸ்பத்திரியாலும் குணப்படுத்த முடியாத ஆபத்தான அந்த வியாதியை நீண்டநாள் அனுபவித்தவர், 5 மணிக்குச் சமாதி அருகில் உட்கார்ந்து பிரார்த்தனை செய்து 5 3/4 மணிக்கு எழுந்து முழு விடுதலை பெற்றதுண்டு. முதுகில் உள்ள கட்டியை ஆப்பரேஷன் செய்யுமுன் சமாதிக்கு வர வேண்டுமென வந்து, வீட்டுக்குப் போனவுடன் 10 வருஷமாக இருந்த கட்டி (ஞிதூண்t) தானே உடைந்தது உண்டு. ஒரு மாதமாகச் சாப்பிடும்பொழுதெல்லாம் புரையேறிக் கொண்டிருந்த குழந்தைக்கு அன்னை பெயரைத் தாயார் சொல்ல ஆரம்பித்தபின் 15 தரம் புரை ஏறியது 2 தரமாகக் குறைந்ததுண்டு. 15 வருஷமான முதுகுவலி அன்னையைத் தரிசித்தபின் பிரார்த்தனை செய்யாமலே மறைந்ததுண்டு.

உடல் நோயை மருந்தால் குணப்படுத்துவதே உலக வழக்கு. மந்திரத்தால் குணப்படுத்துவதும் உண்டு. ஜெர்மெனியில் ஒருவர் அசாதாரணமான திறமையுடன் பிறந்திருந்தார். வியாதியுள்ளவர் மீது அவர் கையை வைத்தால், வியாதி குணமாகிறது என்று அறிந்த 5 இலட்சம் பேர்வரை அவரிடம் வந்து குணமாகிப்போனார்கள். அந்நாட்டு சர்க்கார் அவருக்கு டாக்டர் பட்டம் இல்லை, அதனால் அவர் வியாதியை குணப்படுத்த லைசென்ஸ் பெற்றவர் இல்லை என்று ஜெயிலில் தள்ளியது. பிரான்சில் ஒரு தொழிலாளி (healer), வியாதிகளைக் குணப்படுத்துபவர் என்று பெயர் பெற்றவர், அன்னையைப் பற்றி கேள்விப்பட்டு தரிசனத்திற்கு வந்தார். (Supramental force) சத்தியஜீவிய சக்தியால் குணமான நோய் மீண்டும் வர முடியாது என்பதை இங்கு அறிந்து, ஆசிரமத்திலுள்ள அனைவரையும் ஞானம் பெற்றவரெனப் போற்றினார்.

உடலுக்குச் சொந்தமாக அபரிமிதமான சக்தியுண்டு. ஆபத்துக் காலங்களில் உடல் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதைப் பார்த்தால் அது தெரியும். கணக்கில்லாத திறமைகளைப் பயன்படுத்தி தன்னை மனிதன் ஆபத்துச் சமயங்களில் காத்துக்கொள்கிறான். ஆபத்து விலகியபின் என்ன நடந்தது, எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியாது என்று சொல்வதுண்டு. அறிவு, உடல் விஷயத்தில் குறிக்கிட்டு வம்பு செய்யவில்லை என்றால் உடலுக்கு நோய் வருவது குறைவு என்பது ஸ்ரீ அரவிந்தர் கூற்று. ஸ்ரீ அரவிந்தரே ஓர் உதாரணம் கொடுக்கின்றார். ஒரு பெண்ணுக்குக் கேன்சர் முற்றியபின் எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் டாக்டர்கள் அப்பெண்ணிடம் கேன்சர் குணமாகிவிட்டது என்று பொய் சொல்லிவிட்டனர். அதை அவர் நம்பினார். கேன்சர் விலகியது. மனதின் குறுக்கீடு விலகினால், உடல் தன்னை குணம் செய்துகொள்ளும் திறனுடையது. டாக்டர்களும் இந்த முடிவுக்கு வந்துவிட்டார்கள். உடல் தன்னைக் குணப்படுத்த முடிவு செய்தால் மட்டுமே நோய் தீரும் என்பதை மருத்துவ உலகமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

உடலின் விசித்திர விசேஷத்தை விளக்க ஸ்ரீ அரவிந்தர் வேறோர் உதாரணம் கொடுக்கிறார். மலையில் உள்ள காட்டுவாசி ஜுரம் வந்தால் பனியைப்போல் சில் என்றிருக்கும் மலை அருவியில் அரை மணி அல்லது ஒரு மணி நேரம் தண்ணீரில் உட்கார்ந்திருப்பான். அத்துடன் ஜுரம் விட்டுவிடும். இது மலைவாசிகளுடைய பழக்கம். இது அவர்களுடைய வைத்தியம். பனி (snow) பெய்ய ஆரம்பித்தால், நாம் ‘முதல் மழை’ என்பதுபோல முதலில் விழும் பனியை தரையில் விழுமுன் கையில் வாங்கி வயிறு நிறையச் சாப்பிட்டால், அந்த சீசன் முழுவதும் எந்த வியாதியும் வாராது என்பது அவர்கள் நம்பிக்கை. எந்தக் காரியங்கள் நம்மைப் போன்றவர்களுக்கு நிச்சயமாக மரணத்தைக் கொடுக்குமோ, அது அவர்களுக்கு உயிரைக் காப்பாற்றுகிறது. இதுவே உடலின் விசித்திரம்.

சத்தியஜீவியசக்தி (Supermind) 1956-இல் பூமியில் இறங்கி வந்து நாளுக்கு நாள் அதிகமாகச் செயல்படுகிறது எனவும், அதைப்பற்றி எதுவும் தெரியாதவர்களுக்கும் அது பலன் தருகிறது எனவும் அன்னை கூறுகிறார்.

Life என்ற பத்திரிகையில் ஒருவருக்குப் பென்சிலின் இன்ஜெக்க்ஷன் கொடுத்து (reaction) அது ஒத்துக்கொள்ளாமல் அதிர்ச்சி (shock) ஏற்பட்டு உயிர் போய்விட்டது பற்றி ஒரு கட்டுரை வந்தது. டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக முடிவு செய்தபின், அவர் சிறிது சிறிதாக உயிர் பெற்று எழுந்தார். எனக்கு உடல் ஒவ்வொரு பாகமாகச் செத்துப்போவதை உணர முடிந்தது. ஆனால் மரணத்தை எதிர்த்துப் போராட முடிவு செய்தேன். ஹிருதயத்தை மரணம் தொடும் வரை என் போராட்டம் பயனற்றதாக இருந்தது. ஹிருதயத்தைத் தொட்ட க்ஷணம் கொஞ்சம் உயிர் வந்தது. அது பரவி முழுவதும் உயிர் பிழைத்தேன் என்று அவர் சொல்கிறார். பூமியில் புதிதாக உள்ள சத்தியஜீவ சக்தி அவருடைய மரணப் போராட்டத்தை ஏற்று அவரைப் பிழைப்பித்ததாக அன்னை சொல்கிறார். முழு மூச்சுடன் இயற்கையை எதிர்த்து நிற்கும் திறன் அந்தச் சக்தியை ஈர்க்க வல்லது என்கிறார் அன்னை.

ஒரு பெண்ணின் தகப்பனாருக்குக் கேன்சர் முற்றிவிட்டது. டாக்டர்கள் கைவிட்டனர். அப்பெண் பிரார்த்தனையைக் கைவிடவில்லை. நம்பிக்கையை இழக்கவில்லை. தகப்பனார் பூரண குணம் அடைந்துவிட்டார்.

தீராத வியாதியால் ஜெர்மெனியப் பெண்ணின் கணவர் வாடும் பொழுது, அவள் அன்னைக்குச் செய்த பிரார்த்தனையால் அவர் பிழைத்தெழுந்தார்; எழுந்தவர் மனைவியைச் சண்டைக்கு இழுத்தார், அளவுகடந்து தொந்தரவு செய்தார். தகுதியில்லாதவருக்குப் பிரியத்தால் அடுத்தவர் பிரார்த்தனை செய்து அது பலித்தால், எவரால் பலன் ஏற்பட்டதோ அவர்களுக்குத் தீங்கிழைக்க பலன் பெற்றவர் மனம் விழையும் என்கிறார் அன்னை.

நோய் எதுவானாலும் பொதுவான பிரார்த்தனை தீவிரமாக இருந்தால், வேறெந்த முறையும் தேவையில்லை. அந்தப் பிரார்த்தனையின் தீவிரம் எந்த நோயையும் பூரணமாகக் குணப்படுத்தும்.

(தொடரும்)

*************



book | by Dr. Radut