Skip to Content

08. இந்தியர் வாழ்விலுள்ள முரண்பாடுகள்

இந்தியர் வாழ்விலுள்ள முரண்பாடுகள்

மூலம்: ஸ்ரீ கர்மயோகி

விரிவாக்கம் மற்றும் சொற்பொழிவு: திரு. N. அசோகன்

சொற்பொழிவு ஆற்றிய தேதி: 15.08.2015

தமிழர்களின் மூடநம்பிக்கைகளைத் தி.மு.க தலைவர்கள் கேலி செய்ததுண்டு. குறிப்பாக தமிழர்கள் அதிகமாக நம்புகின்ற ராகு காலம், எமகண்டம் ஆகியவற்றை எள்ளி நகையாடியதுண்டு. இந்த மூடநம்பிக்கையை நாங்கள் மதிக்கவில்லை என்பதற்காகவே அண்ணா அவர்கள் 1967-இல் ராகு காலத்திலேயே முதலமைச்சர் பதவியை ஏற்றார். ஆனால் அண்ணா அவர்கள் அகால மரணம் அடைந்தபின் அதன்பின் பதவி ஏற்ற எந்தத் தி.மு.க அமைச்சரும் ராகு காலத்தில் பதவி ஏற்கவில்லை. வங்காளிகளை எடுத்துக் கொண்டால், அவர்கள் மதவழிபாட்டையும், அரசியலையும் நன்றாகப் பிரித்து வைத்துள்ளனர். ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் , பகவான் ஸ்ரீ அரவிந்தர் ஆகியோர்கள் பிறந்த மாநிலம் என்பதால், நிச்சயமாக ஆன்மிக ஈடுபாட்டை அம்மாநிலத்தவரால் இழக்கவே முடியாது. இருந்தாலும், கம்யூனிச கட்சியினருக்கு ஆட்சி உரிமை அளித்துள்ளனர் என்பதும் உண்மை. ஆனால் அதற்கு ஒரு முக்கியக் காரணம் இல்லாமல் இல்லை. கம்யூனிச கட்சியினர் ஆட்சி அமைத்தால், தொழிலாளர் வர்க்கத்தினருக்கு நல்வாழ்வு கிடைக்கும் என்று வங்காளிகள் பெரிதும் நம்பினர். கல்கத்தாவில் ஏராளமான சணல் தொழிற்சாலைகள் உள்ளன. அதனால் அம்மாநகரமே தொழிலாளர்கள் நிரம்பிய நகரமாக இருந்தது. மேலும் வங்காளிகள் மிகவும் உணர்ச்சிவயப்பட்டவர்கள். சுபிட்சத்தையடைய விரைவு வழி ஒன்றுள்ளது என்று தெரிந்தால், அந்த வழியை அவர்கள் உடனேயே நாடுவார்கள். நாடு முழுவதும் காந்திஜி அவர்களின் சத்தியாக்கிரகத்தைப் பின்பற்றும்போது வங்காளத்தில் மட்டும் நேத்தாஜி அவர்களின் ஆயுதம் தாங்கிய அணுகுமுறைக்கு பெரிய ஆதரவு இருந்தது. காரணம் என்னவென்றால், ஆயுதம் தாங்கிப் போரிட்டால் சீக்கிரம் விடுதலை பெறலாம் என்று அவர் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். உணர்ச்சிவயப்பட்ட வங்காளிகளுக்கு ஆயுதம் ஏந்தினால் சீக்கிரம் விடுதலை கிடைக்கும் என்று எண்ணும் பொழுது அவர்கள் ஆதரவு நேத்தாஜிக்குப் பெருமளவில் கிடைத்தது. இதே ரீதியில்தான் கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வந்தால், உழைப்பாளிகள் விரைவில் உயர்வு பெறுவார்கள் என்று கம்யூனிசத் தலைவர்கள் செய்த பிரச்சாரம் வங்காளிகள் மனதைத் தொட்டது.

அதேசமயத்தில் எந்தக் கம்யூனிசத் தலைவரும் வங்காளிகளின் மத ஈடுபாட்டை நேரடியாகத் தாக்கிப் பேசவே இல்லை. தமிழ் நாட்டிலாவது திராவிட கழகத்தினர் சிலை வழிபாட்டினை அவமதித்துப் பேசினார்கள். ஆனால் வங்காளத்தில் நவராத்திரி வழிபாடுகள் ஒரு வாரத்திற்குமேல் விமர்சையாக நடக்கும். துர்க்கா பூஜா என்று துர்க்கை அம்மன் சிலையை அலங்கரித்து, வீதிவீதியாக ஊர்வலம் எடுத்துச் செல்வார்கள். இதையெல்லாம் எந்தக் கம்யூனிசத் தலைவரும் கண்டித்ததேயில்லை. ஆகவே வங்காளிகள் ஆன்மிகத்தையும், அரசியலையும் அறவே பிரித்து வைத்ததால் மத ஈடுபாடு கொண்ட வங்காளிகள் நாத்திகத்தை வலியுறுத்தும் கம்யூனிஸ்ட்களை ஆட்சி அமைக்க அனுமதித்ததில் ஆச்சரியமே இல்லை. மேலும் ஒன்றையும் நாம் கருத வேண்டும். ஆன்மிகத்தினுடைய சிறந்த அடையாளமே ஐக்கிய உணர்வுதான். காங்கிரஸ் கட்சிக்காரர்களும் தி.மு.க.வினரும் எலியும், பூனையும் போல விரோதிகளாக நடந்து கொண்டாலும் அந்த விரோதத்தை மீறி அவர்களிடையே ஒரு ஒற்றுமையை பாராட்டுவது ஆழத்தில் ஆன்மிகம் நன்றாக வேரூன்றி இருப்பதைக் காட்டுகிறது. இதற்குச் சிறந்த நிரூபணம் வேண்டும் என்றால் இந்திராகாந்தி அம்மையார் 1975-ஆம் ஆண்டு நாட்டில் எமர்ஜென்சியைக் கொண்டு வந்த பொழுது கருணாநிதி அவர்களைத் தொடர்பு கொண்டு பெருந்தலைவர் காமராஜர் அவர்களைக் கைது செய்யச் சொன்னார். காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்தது தி.மு.க. தான் என்றாலும் காமராஜர்மேல் மக்கள் வைத்திருந்த மரியாதையைக் கருணாநிதி அவர்கள் நன்கு அறிவார். ஆகவே அவரைக் கைது செய்வது தமிழருக்கே ஒரு பெரிய அவமானம் என்று முடிவு செய்து மத்திய அரசை எதிர்த்துக் கொண்டாலும் பரவாயில்லை, தான் இந்தக் காரியத்தை செய்ய மாட்டேன் என்று மறுத்துவிட்டார். இப்படி எதிர்கட்சியின் தலைவரிடத்தில் தி.மு.க தலைவர் அவர்கள் காட்டிய ஒரு ஒற்றுமை மாநிலத்தில் உள்ள ஆன்மிகத்தின் தீவிரத்தைக் குறிக்கிறது. அடுத்தபடியாக பெரியார் அவர்கள் மூதறிஞர் ராஜாஜியை அரசியல் ரீதியாக எதிரியாகவே பாவித்து நடத்தினார். இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அவருக்கு ஒரு சிக்கலான பிரச்சனை விஷயத்தில் சரியான அறிவுரை தேவைப்பட்டது. அவர் விரும்பி இருந்தால் சட்ட வல்லுநர்களையும், வழக்கறிஞர்களையும் சந்தித்து அறிவுரை கேட்டிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. இந்த அறிவுரையை வழங்குவதற்குச் சரியான நபர் ராஜாஜி அவர்கள்தான் என்று முடிவு செய்து அவரைச் சந்தித்து அறிவுரை கேட்டுக் கொண்டார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் ராஜாஜி அவர்கள் தமிழ்நாட்டில் குல கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்திய பொழுது ஜாதியை வலுப்படுத்துவதற்காக ராஜாஜி அவர்கள் திட்டமிட்டுச் செய்யும் செயல் இது. ஆகவே இதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து, அதன் விளைவாக ராஜாஜி அவர்கள் பதவியை இழக்க நேரிட்டது. இப்படி அடுத்தவர் ஆட்சியை கவிழ்த்துவிட்டு அவரிடமே அந்தரங்கமான விஷயங்களைப் பேசி அறிவுரை கேட்பது என்பது ஆழத்தில் ஆன்மிக ஐக்கியத்தை உணர்ந்தவர்கள் மட்டுமே செய்யமுடியும்.

4. இந்நாட்டில் மகாசரஸ்வதி, மகாகாளி, மகாலக்ஷ்மி என்று பெண் தெய்வங்களை வழிபடும் பழக்கமுள்ளது. ஆனால் நடைமுறையில் பெண்ணாகப் பிறந்தவர்களை மட்டமாக நடத்தும் பழக்கமுள்ளது. இந்த முரண்பாட்டை எப்படி நாம் புரிந்துகொள்வது?

நம் நாட்டில் போலியாக, ஒப்புக்காக எத்தனையோ வேலைகளைச் செய்கின்றோம். அதில் இதுவும் ஒன்று என்று வைத்துக் கொள்ள வேண்டும். ஒருபக்கம் ஆன்மிகம் நிறைந்த நாடு என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகின்றோம். ஆனால் அதற்கு முற்றும் மாறான வகையில் பொய், ஏமாற்று வேலை, ஊழல், அசுத்தம், பொய்சாட்சி சொல்வது என்று எத்தனையோ கெட்ட வழக்கங்களை வெட்கமில்லாமல் கடைப்பிடிக்கிறோம். கறுப்புப் பணத்தை எடுத்துச் சென்று கோவில் உண்டியலில் தெய்வத்திற்குக் காணிக்கையாக செலுத்தி ஆண்டவனின் அருள் கிடைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் பக்தர்களும் இந்நாட்டில் உண்டு. இப்படி ஆன்மிகத்திற்கு ஒத்துவராத காரியங்களைச் செய்துகொண்டு அதேசமயத்தில் தெய்வ பக்தியை வெளிப்படுத்திக் கொள்வது முரண்பாடாக இருப்பதாக எவரும் உணர்வதில்லை. பசுவையே தெய்வமாக வழிபடும் பழக்கமும் நம் நாட்டிலுண்டு. ஆனால் அதையாவது நன்றாக வைத்திருக்கிறோமா என்று பார்த்தால் அதுவுமில்லை. கிராமப்புறங்களில் வீடுகளில் உள்ள பசுக்கள் பெரும்பாலானவைகள் மெலிந்து காணப்படுகின்றன. அது ஈன்றெடுக்கும் கன்றுக்குட்டி பெண் கன்றாக இருந்தால் அதற்கு ஏதோ பால் கிடைக்கும். அது காளை கன்றாக அமைந்துவிட்டால், அதற்குச் சரிவர பால் கொடுப்பதே இல்லை. அது நாளாவட்டத்தில் பட்டினி கிடந்து உயிர்விடுகிறது. பசுவிற்கு வயதாகி இனிமேல் கன்று ஈனாது பால் சுரக்காது என்ற நிலை வந்துவிட்டால், இத்தனை நாட்கள் பால் கொடுத்ததற்காகவாவது அதனுடைய மீதி வாழ்நாளை நல்லபடியாகக் கழித்து, உயிரைவிட மாட்டின் சொந்தக்காரர் வழி செய்ய வேண்டும். ஆனால், பெரும்பாலானவர்கள் இதைக்கூடச் செய்வதில்லை. அது வயதாகிவிட்டது என்று தெரிந்தாலே சந்தைக்கு ஓட்டிச் சென்று நூறோ, இருநூறோ கிடைத்தால் போதும் என்று விற்றுவிடுகிறார்கள். அதை வாங்கிப் போகிறவன் கறிக் கடைக்குத்தான் எடுத்துச் செல்கிறான். பசுவை தெய்வமாக வழிபடுவோர், அதன் கடைசி காலத்தில் அதை சரிவர பராமரிக்கவும் மாட்டோம் என்று சொல்லும் நம் நாட்டு மக்களை எப்படிப் புரிந்து கொள்வது? பெண் தெய்வங்களை வழிபடும் நம் நாட்டில் பெண்களுக்குரிய மரியாதை கிடைக்கும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். ஆனால் அப்படி இல்லாமல் அது தலைகீழாக உள்ளது. இங்கேதான் நமது முன்னோர்கள் பெரும் தவறு செய்துவிட்டனர். அதாவது நம் நாட்டுப் பெண்கள் சமுதாயத்திடம் கணவனே கண்கண்ட தெய்வம், கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன், பதி பரமேஷ்வர் என்றொரு கலாச்சாரத்தைப் பெண்களுக்குக் கற்றுக் கொடுத்துவிட்டார்கள். பெண்களுக்கு படிப்பறிவு குறைந்த அக்காலத்தில் இப்படிச் சொன்னது அவர்கள் ஆண்களைத் தெய்வமாக வழிபடச் சொன்னது போலாகிவிட்டது. அதேசமயத்தில் நாம் ஆண்களின் நிலையையும் பார்க்க வேண்டும். உண்மையிலேயே தெய்வாம்சம் நிரம்பிய ஒரு ஆண்மகனைத் தெய்வமாக மனைவி வழிபடும் பட்சத்தில் தவறு ஏதும் வராது. இந்த ஆண்மகனின் தெய்வீக அம்சம் உண்மையில் வெளிப்படும் பொழுது அவன் மனைவியும், அவள் பெறும் பிள்ளைகளும் சீரும், சிறப்புமாக இருப்பார்கள். ஆனால் அதேசமயத்தில் எந்தச் சிறப்பும் இல்லாத ஒரு சாதாரண ஆண்மகனை மனைவி தெய்வத்திற்குச் சமமாக நடத்தினால், அந்தத் தகுதிக்கு மீறிய மரியாதை அவனுடைய அகம்பாவத்தை அளவிற்குமீறி வளர்த்து அவனிடம் மறைந்திருந்த அசுர குணங்களைத்தான் வெளிக்கொணரும். ஒரு வேலைக்காரனை முதலாளி அளவிற்குமீறி மரியாதையாக நடத்தினால், அவனுக்குக் கிடைக்கும் மரியாதை அவனை நிதானம் இழக்கச் செய்யும். இத்தனை நாட்கள் மரியாதையாக நடந்து கொண்டிருந்தவன் இன்று முதலாளியை விரட்டவும் துணிவான். அவரைப் பேர் சொல்லிக் கூப்பிடுவான். அவருக்கு எதிரே கால்மீது கால்போட்டு அமர்வான். அவரையே எடுபிடி வேலைகளையும் செய்யச் சொல்வான். அதாவது இதுவரை அவர் நினைத்துப் பார்க்காத விஷயங்களை எல்லாம் அவர் கண்முன்னே நிகழ்த்திவிடுவான். இதற்கு ஒரேவழி அவனுக்குக் கொடுத்த புதுமரியாதையை நிறுத்தி, அவனை பழைய நிலைக்கு இறக்குவதுதான்.

நம் நாட்டு பெண்கள் ஆண்கள் விஷயத்தில் இந்தத் தவறுதான் செய்துள்ளார்கள். எந்தச் சிறப்புமில்லாத ஆண்களைத் தெய்வ நிலைக்கு உயர்த்தி வைத்தபோது அவர்கள் அகம்பாவம் அசுர வேகத்தில் வளர்ந்து பெண்களை அடிமட்டமாக நடத்த ஆரம்பித்து விட்டார்கள். விளைவு என்னவாயிற்று? பெண்களுக்குச் சொத்துரிமை போயிற்று. கேள்வி கேட்கும் உரிமையும் போயிற்று. ஆண் தறுதலையாகச் சுற்றித் திரிந்தாலும், அவன் வீட்டிற்கு வந்துவிட்டான் என்றால், எந்தக் கேள்வியும் கேட்காமல் அவனுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தப் பணிவை மேலும் வலுப்படுத்த அவன் சாப்பிட்ட சாப்பாட்டின் மீதியை இவள் சாப்பிட வேண்டும். அதுவும் அவன் எத்தனை நேரம் கழித்து வந்தாலும், அதுவரையில் தான் சாப்பிடாமல் காத்திருந்து கணவருக்கு உணவு பரிமாறிவிட்டுதான் தான் உண்ண வேண்டும் என்றொரு பழக்கமும் இருக்கிறது. இப்படி எல்லாம் பெண்களை அடிமைப்படுத்தியதால், ஒரு பக்கம் பெண் தெய்வங்களை வழிபட்டுக் கொண்டும், மற்றொரு பக்கம் பெண்களைக் கொடுமைப்படுத்திக் கொண்டும் ஆண்கள் நடந்து கொள்வதில் ஆச்சரியமேயில்லை. பெண்களை சிறுமைப்படுத்துவதுதான் இந்நாட்டு ஆண்களின் வழக்கம் என்றாலும், அபூர்வமாக சில சந்தர்ப்பங்களில் பெண்கள் மிக உயர்ந்த பதவிகளுக்கு வருவதுமுண்டு. அப்படிப்பட்ட சமயங்களில் இந்நாட்டு ஆண்களே இப்படி உயர்பதவியில் இருக்கும் பெண்களுக்குப் பலத்த மரியாதை செய்கின்றனர். ஆனால் இப்படிப்பட்ட உயர்ந்த பதவிகள் ஏற்கனவே உயர்ந்த அந்தஸ்திலுள்ள பெண்களுக்குத்தான் கிடைக்கிறது. இந்திராகாந்தி அவர்கள் இந்நாட்டின் பிரதமர் ஆனார் என்றால், அவர் நேருஜியின் மகளாக இருந்தது ஒரு முக்கியக்காரணம் ஆகும். பெண் தெய்வங்களை நம் நாட்டில் எப்படி வழிபடுகின்றார்களோ, ஏறக்குறைய அதேமாதிரிதான் நம் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை அ.தி.மு.க.வினர் நடத்துகின்றனர். கட்சி வட்டாரத்தில் அவரைஅம்மா என்றுதான் அழைக்கிறார்கள். யாரும் பெயர் சொல்லி அழைப்பதில்லை. அமைச்சர்களாக இருந்தாலும் M.L.A-வாக இருந்தாலும் எல்லோரும் அவர்முன் கைகட்டி நிற்கிறார்கள். சாதாரண கட்சித் தொண்டர்கள் அவர் பாதம் பணிந்து ஆசி பெறுகின்றனர். கட்சிப் பொதுக் கூட்டங்களில் தெய்வத்தைத் துதிபாடுவதுபோல் அம்மாவிற்குப் புகழாரம் சூட்டுகிறார்கள். இதிலிருந்து நமக்கு என்ன புரிகிறது. இந்திய ஆண்கள் சாதாரண பெண்களைத்தான் அதிகாரம் செய்கிறார்களே தவிர பெண் என்பவள் அதிகாரத்திற்கு வந்துவிட்டால், அவளுக்குப் பாதபூஜை செய்யவும் தயாராக உள்ளனர். ஆகவே பெண்ணைத் தெய்வமாக வழிபடும் கலாச்சாரம் நம் நாட்டில் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அதற்கேற்ற சரியான சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமைந்தால், அந்தக் கலாச்சாரம் வெளிப்படும் என்று நாம் புரிந்து கொள்ளலாம்.

5. குடிப்பது உடல்நலனுக்குக் கேடு என்று ஒருபுறம் விளம்பரம் செய்யும் அரசு, மற்றொரு புறம் குடிப்பதற்கான விற்பனையை அனுமதிக்கிறது. இப்படி ஒருபக்கம் கண்டித்தும், மற்றொருபுறம் ஆதரித்தும் அரசு செயல்படுவது மிகவும் முரண்பாடாக உள்ளது. நாம் இதை எப்படிப் புரிந்துகொள்வது.

இம்மாதிரியான முரண்பாடான விஷயங்கள் நம் நாட்டு கலாச்சாரத்தில் நிறையவே உள்ளன. ஜாதி விஷயத்தில் அரசின் அணுகுமுறையை எடுத்துகொண்டால், ஒரு பக்கம் ஜாதிப் பிரிவினை கூடாது என்கிறது. அதாவது நாட்டின் ஒற்றுமையை ஜாதிப் பிரிவுகள் சீர்குலைக்கும் என்று அரசாங்கம் கருதுவதாகத் தெரிகிறது. ஆனால் அதேசமயத்தில் பள்ளிக்கூடச் சேர்க்கை, அரசு வேலை வாய்ப்பு என்ற விஷயங்களில் எல்லாம் ஜாதிச் சான்றிதழைக் கட்டாயமாக்கி உள்ளது. ஒரு மாணவனுக்கு சரியான ஜாதிச் சான்றிதழ் இல்லாமல் போனால், கல்லூரியில் அவனுக்கு இடமே கிடைக்காது என்ற நிலை வந்துவிட்டது. ஜாதிப் பிரிவினை நாட்டின் ஒற்றுமைக்கு எதிரி என்று பேசிவரும் அதே அரசாங்கம்தான் எல்லா தேவைகளுக்கும் ஜாதிச் சான்றிதழை வலியுறுத்துகிறது. இத்தகைய முரண்பாட்டை நம்மால் புரிந்துகொள்ள முடியுமா? இம்மாதிரியான முரண்பாடுகள் இன்னும் நிறையவே உள்ளன.

(தொடரும்)

***********



book | by Dr. Radut