Skip to Content

07. வாழ்க்கையை நம் வழிக்குக் கொண்டு வரும் இரகசியங்கள்

வாழ்க்கையை நம் வழிக்குக் கொண்டு வரும் இரகசியங்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

17. அன்னையின் கருத்துப்படி பார்த்தால், எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் மேலோட்டமாகக் காணாமல், அந்நிகழ்ச்சியின் உள் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இப்படி ஆழ்ந்த அர்த்தத்தைப் புரிந்து கொள்ளும் பொழுது எந்த நிகழ்ச்சியும் நம் கட்டுப்பாட்டிற்குள் வரும்.

புதுவைக்கு வரும்முன் ஒரு ஜோஸ்யர் பகவான் ஜாதகத்தைப் பார்த்தார். அவர் பல விஷயங்களைக் கூறினார். அவற்றில் முக்கியமானது ஜாதகர் உலகிற்குப் புதிய தத்துவத்தை அளிப்பார் என்று கூறினார். பிற்காலத்தில் அது உண்மையான பொழுது, இந்த எண்ணமெல்லாம் தன் மனத்தில் அந்த நாளிலிருந்ததில்லை என்றார். வெளிமாநிலத்திலிருந்து ஸ்டெனோ வேலைக்கு விண்ணப்பம் செய்தவரை மில் முதலாளி வேலைக்கமர்த்தினார். பெண்ணின் அழகு, திறமை கருதி நான்கு பிள்ளைகளைப் பெற்ற தகப்பனார் மனைவி இறந்த பொழுது ஸ்டெனோவை மணந்து கொண்டார். அவர் திவாலாகி சொந்தமான நான்கு மில்களை இழந்தார். இதற்கிடையில் மனைவி பெரிய பெரிய பட்டங்களைப் பெற்று முடிவில் டாக்டரானார். பல்கலைக்கழக துணை வேந்தராகவுமானார். இதுபோன்ற செயல்களை எதிர்பாராதவை என்கிறோம். நம் வாழ்வில் நடக்கும் காரியங்களை நாம் விரும்பி ஏற்கிறோம். சிலவற்றை விரும்பாததால் மறுக்கிறோம். அன்னை கருத்துப்படி,

  • நடப்பவை அனைத்தும் நல்ல காரியங்களே.
  • எவ்வளவுக்கு எவ்வளவு வெறுப்பாக உள்ளதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அது பெரிய நல்ல காரியம். 

டார்சி ‘பரவாயில்லை’ எனக் கூறியது லிஸ்ஸிக்கு அவமானம். மனம் புண்பட்டது. மன்னிக்க முடியவில்லை. எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவள் சிரித்து ஏற்றுக் கொண்டாள். முடிவில் அது பெம்பர்லியை அவள் சீதனமாகப் பெறுவதில் முடிந்தது. ‘பரவாயில்லை’ என்பது ‘என்னை மணந்து கௌரவிப்பாயா?’ என்று எப்படி மாறியது என்று கதையிலிருந்தும் புரிந்து கொள்வது எளிதல்ல. அதுவே அன்னை கூறும் ஞானம். பூரண யோக ஞானம். விளக்க முயன்றால் பெரும் தோல்வி வரும். ஏனெனில் சூட்சும உலகில் நடப்பதை ஜட உலகுக்கு விளக்கும் முறையோ, மொழியோ இல்லை. இருப்பினும் முயன்று பார்க்கிறேன்.

  1. ‘வேண்டும்’ என்பதை ‘வேண்டாம்’ எனக் கூறுவது மனித சுபாவம். ஜேனிடம் பிங்க்லி டான்ஸ் ஆட ஆரம்பித்த பொழுது, டார்சி லிஸ்ஸியைக் “கண்டு” - காணாமல் - அவளால் கவரப்படுகிறான். அவள் தாழ்ந்தநிலை அவனுக்கு வெறுப்புத் தருகிறது. ஆனால் மனம் ஆழ்ந்து தன்னையறியாமல் அவளை நாடுகிறது. இதுபோன்ற நே ரங்களில் ஆழ்மனத்தை மேல்மனத்தால் வெளியிடுவதுண்டு.
  2. கரோலின் டார்சியை விரும்பி நாடுகிறாள். வாழ்வின் சட்டப்படி அது திரும்ப வருவதில்லை. அது டார்சியை லிஸ்ஸியை நோக்கிச் செலுத்துகிறது. முழுமையுள்ள நேரம் நாம் விரும்புபவர் நம்மை விரும்புவார். பகுதியான வேகம் நாம் விரும்புபவரை வோறொருவரை நோக்கிச் செலுத்தும். அந்தச் சட்டப்படி லிஸ்ஸி விக்காமை நாடுகிறாள். விக்காம் மிஸ்.கிங்கை நாடுகிறான்.
  3. அதிலிருந்து டார்சி மனம் லிஸ்ஸியில் லயித்து விட்டது. தன்னை நோக்கி அவன் வரும் வேகத்தில் அவள் அவனை விட்டு விலகிச் செல்கிறாள். லிஸ்ஸிக்கு ஜேன்மீது பாசம். அவளை அறிவில்லாதவள் என அறிவாள். பிங்க்லி ஜேனை நாடியது லிஸ்ஸிக்கு பூரணத் திருப்தி. அதே சமயம் தனக்கு வருபவன் பிங்க்லியைவிட உயர்ந்தவனாக இருக்க வேண்டும். அது டார்சியாக இருக்கும் என அவள் நினைக்கிறாள் என்பது என் சொந்த அபிப்பிராயம். அதனால் அவள் நெதர்பீல்டில் நான்கு நாட்கள் தங்குகிறாள். டார்சி தன்னிலையிழந்து விட்டான். அவளுடன் டான்ஸ் ஆட விரும்புகிறான். அவள் மறுத்து விடுகிறாள். அவள் மனம் விக்காமை நாடிச் சென்று அவனில் தன்னையிழந்து தன்னுள் உள்ள தாயார் உயிர் பெற்று, லிடியா மூலம் செயல்பட்டது. அவள் டார்சியை நெருங்கி வந்து தன் அவல நிலையை ஏற்றுக் கொள்ள உதவியது. அவள் தகப்பனாரின் பெருந்தன்மை திருமதி. கார்டினர் மூலம் பெம்பர்லிக்கு அவளை அழைத்துச் சென்று அதன் பிரபலத்தை உணர்த்திற்று. லிடியாவால் அவளும் அவனும் நெருங்கி வந்து மணந்தனர் என்பது கதை முடிந்தபின் நாமறிவது. இதை முதலிலேயே அறிவது சாத்தியமில்லை. புரியாவிட்டாலும், அதை ஏற்றுக் கொண்டால், அதன்படி நடப்பது முடிவை எளிதாக்கும்.
  • நம் வாழ்வை கவனித்தால் இது தெரியும்.
  • நாட்டு நிகழ்ச்சிகளும், உலகச் செய்திகளும் இதை உணர்த்தும்.
  • இது பூரண யோக ஞானம்.
  • பூரண யோக ஞானம் வாழ்வை யோகமாக்கும். 

*********

ஸ்ரீ அரவிந்த சுடர்

நாம் பிறருக்கு உதவி செய்யும் நேரம் உண்டு. உரியவர்க்குக் கடமையைச் செய்யும் நேரம் உண்டு. பிறருக்கு நாம் செய்வது உதவி என நாம் தீர்க்கமாக நினைப்பது உலக ரீதியாக முழு உண்மையானதானால் அதன் இரகஸ்யம்,

  • அந்த உதவி செய்ய நமக்குப் பூர்வ ஜென்மப் புண்ணியம் வேண்டும்.
  • அவ்வுதவி பின்னால் சொர்க்கத்தைத் திறந்து பிரம்மத்தைக் காட்ட அவசியம்.

அதில் துண்டாக உபரியாக (கொச்சையாக கொசுர் என்பது) வருவது நம் வாழ்விலும், கனவிலும், கற்பனைக்கும் எட்டாத பெரிய அதிர்ஷ்டமாக அமையும். அது சிறியது. ஆத்மா பெறுவது பெரியது என நாம் அறிவதில்லை.  

***********



book | by Dr. Radut