Skip to Content

11. அன்னை இலக்கியம் - தீபாவளி

அன்னை இலக்கியம்

தீபாவளி

சமர்ப்பணன்

எனக்கு எண்பது வயதிற்கு மேலாகிறது. எத்தனையோ அனுபவங்கள் மனக்கிடங்கின் இருளான மறதிப்பகுதிகளில் சிதறிக் கிடக்கின்றன. ஒரு சில அனுபவங்கள் மட்டுமே சுயமாக ஒளி வீசிக் கொண்டு மீண்டும் மீண்டும் நினைவிற்கு வந்து சிலிர்க்க வைக்கின்றன. கூடவே பண்புகளாலான மனிதன் பிரபஞ்சத்தைப் போல மகத்தானவன் என்பதை நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன.

பதினேழு வயதில் ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு குடும்பத்தோடு வந்தேன். மாம்பலத்தில் குடியேறினேன். அருகே இருந்த தியாகராய நகரின் வணிகத் தெருக்களில், கவலையற்ற பதின்ம வயதுச் சிறுவனாக, துணிச்சலான வாலிபனாக, மனைவியோடு போராடும் நடுத்தர வயதினனாக, குழந்தைகளுக்கு வாழ்வு அமைத்துத் தரும் ஐம்பது வயதினனாக, மருந்துகளை நம்பி வாழத்தொடங்கும் அறுபது வயதினனாக, எதற்காகப் பிறந்தோம், எதற்காக வாழ்கிறோம் என்று யோசிக்கும் எழுபது வயதினனாக, அனுபவங்களை அசைப்போடுவதைத்தவிர வேறொன்றும் செய்யமுடியாத எண்பது வயதினனாக பல பருவங்களில், பல வயதுகளில், பல ரூபங்களில் இந்தத் தெருக்களின் வழியே எண்ணற்ற முறைகள் நடந்திருக்கிறேன்.

இப்போது தியாகராய நகரின் வணிக வீதிகளில் நடப்பது குறைந்து விட்டது. நினைவு வீதிகளில்தான் மீண்டும் மீண்டும் நடக்கிறேன். சொன்னதையே திரும்ப திரும்பச் சொல்கிறேன். நான் நினைப்பது, சொல்வது எல்லாமே ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த, பிரிக்க முடியாத விஷயங்கள் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. மற்றவர்களோ எனக்கு வயதாகி விட்டதால் சம்பந்தமற்ற விஷயங்களைப் பொருத்தமற்ற நேரங்களில் திரும்பத் திரும்பப் பேசுகிறேன் என்று குறை கூறுகிறார்கள்.

இன்று தீபாவளி. ஏதோ தோன்றியதால் மெல்ல மெல்ல தியாகராய நகரின் வீதிகளில் நடக்கிறேன். ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு கடையும் ஒரு நினைவை எழுப்புகின்றன. ஒரு தீபாவளிக்கு முந்திய தினம்தான் என் அக்காவின் திருமணத்-திற்கு வழி பிறந்தது.

அந்தக் காலத்தில் ஆணவம், கன்மம், மாயை என்ற ஆன்மீக மும்மலங்களோடு, செலவு என்ற லௌகீக செயலை நான்காவது மலமாக சமூகம் பார்த்தது. இன்று செலவே மோட்சத்திற்கான சுலபமான வழி என்று எல்லோரும் நினைக்கிறார்கள். அதில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை.

அன்று? ‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்றொரு பழமொழி. அதை வேதாந்தியிடம் கேட்டால் ‘சிறுதுளி என்பது அளவுடையது. பெருவெள்ளம் அளவிலி. அளவுடையது உண்மையில் அளவிலியே. அதனால் சிறுதுளியின் உள்ளும், பின்னும் பெருவெள்ளம் உண்டு’ என்று விளக்கம் தருவார். எதையும் தன் சிறிய, குறுகிய மனதால் பார்க்கும் எளிய மனிதனோ நிறைய சிறுதுளிகளைச் சேர்த்தால் பெரு வெள்ளத்தைப் பார்த்துவிடலாம் என்று புரிந்து கொண்டான். அதனால் கணக்குப் பார்த்து பைசா, பைசாவாகச் சேர்த்தான். வருமானத்தை அதிகரிப்பதற்குப் பதில், செலவைச் சுருக்கிக் கொண்டான். தன் வசதியைச் சுருக்கிக்கொண்டான். தன் வாழ்வைச் சுருக்கிக் கொண்டான். கட்டற்ற ஆன்மாவும் மனிதனைப் பார்த்து புன்னகைத்து விட்டு தன்னைத்தானே சுருக்கிக்கொண்டது.

வாழ்நாளெல்லாம் சேர்த்த சிறு செல்வத்தை ஒரு கல்யாணம் நடத்துவதில் அல்லது ஒரு வீடு கட்டுவதில் செலவழித்து விட்டு மனிதன் வாழ்வை முடித்துக் கொண்டான். எப்படியெல்லாம் செலவைக் குறைக்கலாம் என்பதில் அவன் முழுச்சக்தியும் விரயமாயிற்று. தீபாவளியன்று தியாகராயநகர் கடைகளுக்கு வந்தால் ஓரளவு மலிவான துணிகளை விற்கும் கடைகளில்தான் கூட்டமிருக்கும். பட்டுத்துணி விற்கும் கடைகளில் முகூர்த்த சமயங்களில் மட்டும் கூட்ட நெரிசல் இருக்கும். ஆனால் அதெல்லாம் பழைய காலம்.

இப்போதெல்லாம் தினமும் தீபாவளிதான். தினமும் முகூர்த்தநாள்தான். எல்லாக் கடைகளிலும் எல்லா நாட்களிலும் மக்கள் பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை இருந்தால்தான் அதைப் பற்றிய பயமில்லாமல் நிகழ்காலத்தில் வாழ முடியும். இன்று இந்த நிமிடத்தில் பிரபஞ்சத்தின் அனைத்து காலமும் அடங்கி இருக்கிறது என்று அறிந்த ஆன்மீக ஞானி இறந்த காலத்தை நினைத்து ஏங்குவதில்லை. எதிர்காலத்தை நினைத்து அஞ்சுவதில்லை. எல்லோரும் ஞானிகள் ஆகிவிட்டார்களா?

வருமானம் வரும் என்ற நம்பிக்கையில் எல்லோரும் சந்தோஷமாக செலவழிக்கிறார்கள். அவர்களது நம்பிக்கை இதுவரை பொய்யாகாமல் வருமானம் வளருவது போலத் தோன்றுகிறது. அது என் சித்தமயக்கா, இல்லை உண்மைதானா என்று தெரியவில்லை.

பேருந்து நிறுத்த நிழற்குடை ஒன்றின் கீழே இருந்த பிளாஸ்டிக் இருக்கையில் அமர்ந்தேன். தூசி படிந்து அழுக்காக இருந்ததால் துண்டால் தட்டி விட்டு அமர்ந்தேன். சுற்றி இருப்பவற்றை நிதானமாகப் பார்த்தேன். எத்தனை பெரிய கடைகள்!

என் எதிரே இருந்த, என்னை எப்போதும் சிலிர்க்க வைக்கும் பல அடுக்குமாடி பட்டு ஜவுளிக் கடையை உற்றுப் பார்த்தேன். பிரம்மாண்டமாக இருந்தது. அறுபது வருடங்களுக்குமுன் சிறிய பெட்டிக்கடை போலிருந்தது. இப்போது நாடு முழுவதும் கிளைகள். வெளிநாடுகளில் கூட கிளைகள் இருக்கக்கூடும். எனக்குச் சரியாகத் தெரியவில்லை.

* * * *

1948-இல் அப்பா ஹைதராபாத்தில் ஒரு பெரிய அரசாங்க நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஒரே அக்கா. கல்யாணத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தாள். நான் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு, கல்லூரிக்கும் சென்று வந்து கொண்டிருந்தேன்.

இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேயர் சுதந்திரம் தந்தபோது இந்தியா, பாகிஸ்தான் என்று நாடு இரண்டாகப் பிரிந்தது. பல சிறிய ராஜ்யங்கள் இந்தியாவோடு சேர்ந்தன. சேராத ராஜ்யங்களை உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் இந்தியாவோடு சேர்த்துக் கொண்டிருந்தார். ராஜாவின் போக்கை ஒட்டி பட்டேலின் நடவடிக்கை இருந்தது.

அப்போது ஹைதராபாத் பெரிய சமஸ்தானம். அதன் அரசராக இருந்த நிஜாம் உஸ்மான் அலிகான் உலகிலேயே ஐந்தாவது பெரிய பணக்காரர். ஹைதராபாத் தனி நாடாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். இந்தியாவோ ஹைதராபாத் இந்தியாவோடு சேர வேண்டும் என்றது. நிஜாம் தன் உதவிக்கு அமெரிக்க அதிபர் உட்பட பல தேசத்துத் தலைவர்களின் உதவியை நாடினார். யாரும் உதவவில்லை. பட்டேல் இணைப்பு ஒப்பந்தத்தில் கையொப்பம் போடச் சொல்லி நிஜாமுக்கு தொடர்ந்து நெருக்கடி தந்து வந்தார். சில மதவாதிகள் பாகிஸ்தான் ஆதரவு நாடாக மாறிவிட்டால் இந்தியாவின் தொந்தரவு இருக்காது என்று நிஜாமை நம்ப வைத்தனர். காஸிம் ராஸ்வி என்பவர் பயிற்சியோ, படிப்போ இல்லாத ஆதாயத்தையும், ஆவேசத்தையும் மட்டும் நாடிய ஆட்களை வைத்து ஒரு ஆயுதம் தாங்கிய புரட்சிக் குழுவை ஏற்படுத்தினார். நிஜாமுக்கு ஆதரவான, இந்தியாவிற்கு எதிரான இயக்கம் அது. நிஜாமின் ராணுவத்தில் இருபதாயிரம் வீரர்கள்தான் இருந்தார்கள். புரட்சிக் குழுவில் இரண்டு லட்சம் பேர் இருந்தனர். புரட்சிக்காரர்கள் தாமாகவே எல்லா அதிகாரத்தையும் எடுத்துக் கொண்டு விருப்பம் போல செயல்பட்டனர். கட்டுப்பாடும், பயிற்சியும் இல்லாமல் ஆயுதம் ஏந்தினால் என்ன நடக்குமோ அது நடந்தது. எளிய அப்பாவி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்திய ராணுவம் ஹைதராபாத்திற்குள் நுழைந்தால், அதன்முன் அரைமணி நேரத்திற்குள் புரட்சிக் கூட்டம் மண்டியிட்டுச் சரணடைந்துவிடும். ஆனாலும் அரசியல் என்பதால் பேச்சு வார்த்தையும், அறிக்கை, சண்டைகளும் நடந்து கொண்டிருந்தன.

அடி இன்னமும் விழாததால் தம்மை மிக வலிமையான இயக்கமாக புரட்சிக் குழு நினைத்துக் கொண்டிருந்தது. கலகக்காரர்கள் அடங்கியவர்களை அதிகாரம் செய்தனர். கேள்வி கேட்டவர்களை அடித்தனர். விரும்பியதை பிடுங்கிக் கொண்டனர். சட்டம், ஒழுங்கு காணாமல் போய்விட்டது.

ஊரில் அமைதியின்மையும், இரு மதத்தினரிடையே பரஸ்பர நம்பிக்கையின்மையும் எதிர்காலத்தைப் பற்றிய அச்சமும் உண்டாகி வளர்ந்து கொண்டே இருந்தன. மனிதனை மனிதன் நம்பவில்லை. பலர் ஊரை விட்டே நிரந்தரமாகச் சென்று கொண்டிருந்தனர். அதனால் இந்தியாவிற்குள் நுழைவது எளிதாக இருந்தாலும் ஹைதராபாத்தை விட்டு எவரும் எளிதில் வெளியேறி விடாதபடி நிஜாமின் அரசாங்கம் சட்டம் போட்டு வைத்திருந்தது.

அக்காவை இந்தியாவில் கல்யாணம் செய்து தந்துவிட்டு என்னையும் சென்னைக்குப் படிக்க அனுப்பி விட்டு தானும் இந்தியா திரும்பி விடலாம் என்று அப்பா நினைத்துக் கொண்டிருந்தார். 1948-இல் ஹைதராபாத் இந்தியாவின் பக்கத்து நாடு. தனி நாடு.

அப்பா தனக்கு வேண்டிய, வேண்டாத எல்லா உறவினர்களுக்கும் அக்காவிற்கு வரன் பார்க்க வேண்டி கடிதம் எழுதினார். சென்னை என்கிற மதராசில் உள்ள நுங்கம்பாக்கத்திலிருந்த ஒரு நல்ல குடும்பத்தினர் இரண்டு நாட்கள் பயணம் செய்து ஹைதராபாத்திற்கு வந்து பெண் பார்த்தனர். அவர்களுக்குப் பெண் பிடித்துவிட்டது. அப்போதே சம்மதம் சொல்லி விட்டனர். மூன்று மாதங்கள் கழித்து ஒரு முகூர்த்தத்தைக் குறிப்பிட்டு ‘சென்னையில் திருமணம் வைத்துக் கொள்ளலாம்’ என்றனர்.

அக்கா சிற்றுண்டியும், காபியும் தந்தபோது மாப்பிள்ளை ‘தாங்க்ஸ்’ என்றார். புன்னகைத்தாள் அக்கா. தன்னறைக்குள் சென்றவள் நான் அவளை கவனிப்பதை அறியாமல் கண்ணாடி முன் நின்று ‘தாங்க்ஸ்’, ‘தாங்க்ஸ்’ என்று பல்வேறு பாணிகளில் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தாள். பார்க்க சந்தோஷமாக இருந்தது.

சீர்வரிசை பற்றிய பேச்செழுந்தபோது, பையனின் தகப்பனார், ‘நானும் உங்களைப் போல குமாஸ்தாவாகத்தான் இருந்தேன். கடவுளின் கருணையால் சுயதொழில் செய்து மிகவும் வசதியாக இருக்கிறேன். அதனால் மாதச் சம்பளத்தில் வாழ்வது எத்தனை கஷ்டமென்று எனக்குத் தெரியும். எனக்கும் பெண்ணிருப்பதால் சீர்வரிசை போன்ற சமூக வழக்கங்கள் உண்டாக்கும் சிக்கல்கள் பற்றியும் நன்றாகத் தெரியும். உங்கள் பெண்ணைக் கொடுங்கள். அது போதும்’ என்றார். அது போன்ற பெருந்தன்மையான வார்த்தைகளை முதல்முறையாக என் வாழ்வில் கேட்டேன்.

அவரது பெருந்தன்மை என் அப்பாவின் இயலாமை உணர்வையும், சிறுமையான அகந்தையையும் சீண்டிவிட்டது என்று நினைக்கிறேன். சீர்வரிசை, வரதட்சணை என்று எதுவும் கேட்காமல் பெண் பார்த்தவுடனே சம்மதம் சொன்ன மாப்பிள்ளை வீட்டார்மீது சந்தேகப்பட்டார்.

எங்கள் வீட்டு பெரியவர்களுக்கு பையனைப் பிடித்திருந்தாலும் ‘எதற்கும் இன்னொரு முறை விசாரித்துக் கொள்ளலாம். வேறு நல்ல வரன்கள் வரவும் வாய்ப்புண்டு’ என்று தோன்றியதால் ‘நல்ல நாள் பார்த்து மேற்கொண்டு எழுதுகிறோம்’ என்று மாப்பிள்ளை வீட்டாரிடம் சொல்லிவிட்டார்கள்.

அதற்கு பின்பு இரண்டு மாதங்கள் பல வரன்களை ஆராய்ந்தும் எதுவும் திருப்தியாக அமையவில்லை. முதலில் வந்த வரனே முழு திருப்தி தருவதாக இருந்தது.

அதனால் ஒரு நல்ல நாள் பார்த்து அப்பா மாப்பிள்ளை வீட்டாருக்கு ஓரங்களில் மஞ்சள் தடவி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார். தனக்குச் சம்மதம் என்றும், எல்லா உறவினர்களும் இந்தியாவில் இருப்பதால் தான் மாப்பிள்ளை வீட்டார் குறிப்பிட்ட முகூர்த்ததிற்கு ஒரு மாதம் முன்பாக சென்னை வந்து விடுவதாகவும், கல்யாண ஏற்பாடுகளைக் கலவரப் பிரதேசமான ஹைதராபாத்தில் செய்வதைவிட சென்னையிலிருந்து செய்வது உத்தமம் என்றும் எழுதி இருந்தார். அக்கா முகத்தில் வெட்கம். பெருமிதம்.

இந்தக் கலவரச் சூழலில் கடிதம் சரியான விலாசத்திற்கு உரிய நேரத்தில் போய்ச் சேருமா என்ற சந்தேகம் எனக்கு எழுந்தது. வெளியே சொன்னால் திட்டு விழும் என்பதால் சந்தேகத்தை வெளியிடவில்லை. மனிதனது நேரான சிந்தனைகளைவிட கோணலான சிந்தனைகள் எளிதாகப் பலித்துவிடுகின்றன.

நாங்கள் நால்வரும் அப்பாவின் நண்பரின் சிபாரிசு மூலம் ஹைதராபாத்தை விட்டு வெளியேற நிஜாமின் அனுமதி பெற்று இரண்டு நாள் பிரயாணம் செய்து சென்னை வந்தோம். அப்பாவின் அண்ணன் ரயில் நிலையத்தில் எங்களை வரவேற்றார். அவர் எங்களைவிட வசதி குறைவானவர். அப்பாவின் கடிதத்தின்படி நாங்கள் ஒரு மாதம் தங்க ஒரு நல்ல வீட்டையும், சமைக்க புதிதாக பாத்திரங்களையும், தலையணை பாய்களையும், பிற சில்லரைப் பொருட்களையும் ஏற்பாடு செய்திருந்தார். எங்கள் வசதிக்கு அது அதிகமான செலவு என்றாலும் ஒரு மாதம்தானே? மேலும் திருமணம் போன்ற நிகழ்ச்சியின் போது கணக்கு பார்த்து செலவு செய்தால் காரியம் நடக்குமா?

நன்றாகச் சிரம பரிகாரம் செய்தபின் ஒரு நல்ல நாள், நல்ல நேரமாகப் பார்த்து அக்காவைத் தவிர நாங்கள் மூவரும் மாப்பிள்ளை வீட்டிற்குக் குதிரை வண்டியில் சென்றோம். பெரியப்பா சைக்கிளில் வந்தார். மாப்பிள்ளை வீட்டைச் சற்று சிரமப்பட்டுத்தான் கண்டுபிடித்தோம். நாங்கள் தேடியது சிறிய வீட்டை. பெரிய அழகான வீடு நாங்கள் தேடும் வீடாக இருக்காது என்று தவறாக நினைத்தோம். ஆனால் அதுதான் மாப்பிள்ளையின் வீடு. வீட்டு வளாகத்திற்குள் சிறிய கார் இருந்தது. குமாஸ்தாவின் பெண்ணுக்குப் பெரிய அதிர்ஷ்டம். இல்லாவிட்டால் இப்படிப்பட்ட வீட்டில் வாழ வாய்ப்பு கிடைக்காது. வீட்டு வாசலில் பந்தல் அலங்காரம் அழகாக செய்யப்பட்டிருந்தது.

மகிழ்ச்சியோடு வீட்டினுள் நுழைந்தோம். எங்களைப் பிரியமாக வரவேற்றாலும் மாப்பிள்ளை வீட்டாரிடம் எங்களை அடையாளம் தெரிந்து கொள்ளாத ஒரு அந்நியத்தன்மை இருந்தது. மாப்பிள்ளையின் தகப்பனார் என் அப்பாவிடம், ‘மன்னிக்க வேண்டும். நீங்கள் ரொம்பவும் வேண்டியவர் என்பது தெரிகிறது. ஆனால் எனக்கு பொல்லாத மறதி. உங்கள் பெயர் சட்டென்று நினைவிற்கு வரவில்லை’ என்று பணிவுடன் கூறினார்.

அப்பா திடுக்கிட்டுப் போனார். அம்மாவும் நானுங்கூடத்தான். தயக்கத்துடன் அப்பா மாப்பிள்ளை வீட்டார் ஹைதராபாத்திற்கு பெண் பார்க்க வந்ததையும் தான் சம்மதம் என்று சமீபத்தில் கடிதம் எழுதியதையும் நினைவூட்டினார்.

மாப்பிள்ளை வீட்டார் திகைத்து விட்டனர். மாப்பிள்ளையின் தகப்பனார் ‘சார், பெரிய தப்பு நடந்துவிட்டது. உங்கள் கடிதம் எங்களுக்கு வரவே இல்லை’ என்றார்.

‘வீட்டு முன்னால் பந்தல் போட்டு அலங்காரமெல்லாம் செய்திருக்கிறீர்களே?’ என்று கம்மிய குரலில் கேட்டார் அப்பா.

‘உங்களிடமிருந்து கடிதம் எதுவும் வராததால் உங்களுக்கு எங்கள் சம்பந்தம் பிடிக்கவில்லை என்று நினைத்து விட்டோம்.

அதனால் வேறு இடங்களில் பெண் பார்த்தோம். ஒரு நல்ல இடம் அமைந்து இன்றைக்கு நிச்சயம் செய்கிறோம். அதற்குத்தான் இந்தப் பந்தல்’ என்றார் மாப்பிள்ளையின் தகப்பனார்.

பெருமூச்சு விட்டார் அப்பா.

‘இன்னாருக்கு இன்னார் என்று பகவான்தானே முடிவு செய்கிறார். நாங்கள் நிச்சயம் செய்யப் போகும் பெண் உங்கள் பெண் அளவிற்குத் திருப்திகரமாக இல்லை. ஆனாலும் என்ன செய்வது? இப்படி ஆகிவிட்டதே’ என்றார் மாப்பிள்ளையின் அம்மா.

‘எங்கள் பெண்ணிற்குத்தான் உங்கள் வீட்டில் வாழ கொடுப்பினை இல்லை’ என்றார் அம்மா.

‘நீங்களும் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு ஆசி தர வேண்டும்’ என்றார் பையனின் தகப்பனார். ஆனால் அப்படிச் செய்யும் உத்தேசம் எதுவும் என் அப்பாவிற்கு இல்லை என்பதால் சற்று நேரத்தில் விடைபெற்று வீடு திரும்பினோம்.

திரும்பும் வழியில் அப்பா வானத்தைப் பார்த்தபடி ‘எல்லாம் இந்த நிஜாமால்தான். அவன் ஒழுங்காக இந்தியாவோடு சேர்ந்திருந்தால் கலவரமோ, குழப்பமோ இருந்திருக்காது. என் கடிதம் மாப்பிள்ளை வீட்டிற்குக் கிடைத்திருக்கும்’ என்றார்.

அம்மா வருத்தமாக அவரை ஒரு முறை பார்த்தார். எதுவும் பேசவில்லை.

வீடு திரும்பியபின் அப்பா அம்மாவிடம் ‘எல்லோரிடமும் பெண்ணிற்குக் கல்யாணம் என்று கூறிவிட்டு வந்திருக்கிறோம். கல்யாணம் பண்ணாமல் திரும்பிப் போனால் என்னென்னவோ பேசுவார்கள்’ என்றார்.

‘அவளை எப்படியும் இங்கேதானே கட்டிக் கொடுக்க வேண்டும். இங்கே எத்தனையோ வரன்கள் உள்ளன. அலசிப் பார்த்து நல்லதாக ஒன்றை முடித்து விடலாம். என்ன, நீங்களெல்லோரும் ஓரிரு மாதங்கள் அதிகமாகத் தங்க வேண்டியிருக்கும்’ என்றார் பெரியப்பா.

‘அதனால் பாதகமில்லை. நீ சொல்வதுதான் சரி. உடனே வரன்களைப் பார்க்க ஆரம்பி’ என்றார் அப்பா.

அக்கா தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்பது போல சாதாரணமாக இருந்தாள். வழக்கத்திற்கு மாறாக உரத்த குரலில் சிரித்துப் பேசினாள். அன்றிரவு குப்புறப் படுத்து தூங்கும்போது அவள் முதுகு அதிர்வதைக் கவனித்தேன். அருகே சென்று மெல்லிய குரலில் ‘அழாதே அக்கா. பழையதை மறந்துவிடு’ என்றேன்.

சிறிது நேரம் கழித்து விருப்பமின்றி தலையை உயர்த்திய அக்கா ‘நானெங்கே அழுதேன்? நான் அவரைப் பற்றி எதுவும் நினைக்கவில்லை. எனக்கு வேறு வேலை இல்லையோ? உளறாமல் நீ போய்த் தூங்கு’ என்று கோபத்தோடு கூறினாள். சற்று தள்ளியிருந்த என் படுக்கையில் படுத்தேன். சிறிது நேரம் கழித்து பார்த்து போது அக்காவின் முதுகு மெல்ல குலுங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது.

வாழ்வு விரும்பி அளித்த பரிசை உதாசீனப்படுத்தியபின் அதே போல பரிசு மீண்டும் எளிதில் கிடைத்துவிடுவதில்லை. எதையும் அலட்சியம் செய்து தூக்கி எறியும்முன், மறுக்கும்முன் பல முறை யோசிக்க வேண்டும் என்ற அறிவு பல வரன்கள் கூடி வராமல் போன பின்புதான் எனக்கு வந்தது. வருபவர்கள் கேட்ட சீர்வரிசை செய்ய அப்பாவோடு நானும் வாழ்நாள் முழுவதும் வேலைபார்த்தால்தான் முடியும். அதற்குள் அக்கா மூதாட்டி ஆகிவிடுவாள்.

மூன்று மாதங்கள் கழிந்த பின்னும் எந்த வரனும் அமையவில்லை. அம்மா வேலையைப் பற்றி ஒரே ஒரு முறை அப்பாவிடம் பேசினார். ‘ஒரு மாதம்தானே விடுப்பு எடுத்திருக்கிறீர்கள்?’

‘வீணாகக் கவலைப்படாதே. என் மேலதிகாரி நம் ஆள்தான். அவர் பார்த்துக் கொள்வார். நான் நான்கு வருடங்கள் கழித்துப் போனாலும் என் இருக்கை எனக்காகக் காத்திருக்கும். என்னை யாரும் அசைக்க முடியாது’ என்றார் அப்பா.

சில நாட்கள் கழித்து வேலைக்கு ஏன் வரவில்லை என்று விளக்கம் கேட்டு அலுவலகம் அப்பாவிற்குக் கடிதம் அனுப்பி இருந்தது. பதறிப் போன அப்பா பலருக்குக் கடிதம் எழுதி விசாரித்தார். அப்பாவின் நண்பர் குடும்பத்தோடு நிரந்தரமாக கல்கத்தா போய்விட்டிருந்தார். அவருக்குப் பதில், அவரிடத்தில், புதிதாக மிகவும் கண்டிப்பான அதிகாரி வந்திருந்தார். அவர்தான் விளக்கம் கேட்டிருந்தார்.

என்ன செய்வது என்று அப்பா அடுத்து வந்த பத்து நாட்கள் யோசித்துக் கொண்டிருந்தார். அப்பா யோசித்து முடிவெடுக்கும் முன் அவரை வேலை நீக்கம் செய்து கடிதம் வந்தது. திகைத்துவிட்டார் அப்பா. தவறான நடத்தை என்று காரணம் காட்டி வேலை நீக்கம் செய்யப்பட்டிருந்ததால் கையில் கிடைக்க வேண்டிய தொகையைக்கூட போராடிப் பெற வேண்டிய நிலை.

வேலை போன செய்தி வெளியே தெரியும்முன் அக்காவிற்குக் கல்யாணம் செய்துவிட வேண்டும் என்று அப்பா துடித்தார். ‘ஹைதராபாத்தில் இருக்கும் சிறு நிலத்தை விற்று பணமாக்கலாம்’ என்றார் அம்மா. ‘அது இன்று நம் நிலமா இல்லை புரட்சிக்காரர்கள் நிலமா என்று தெரியவில்லையே. நாம் ஊரிலிருந்து கிளம்பும்போது, அதில் சிலர் ஆயுதங்க@ளாடு கூடாரம் போட்டுத் தங்கி இருந்தார்கள்’ என்று துயரத்துடன் கூறினார் அப்பா. நிலத்தைப் பற்றி விசாரித்து நண்பர்களுக்குக் கடிதம் எழுதினார். சாதகமான பதில் எதுவும் வரவில்லை. சரியாகச் சொல்வதென்றால் பதிலே வரவில்லை.

அதன்பின் அப்பா தன்னுள் ஆழ்ந்துவிட்டார். பேச்சு முற்றாக நின்றுவிட்டது. சிந்திக்கிறாரா, சிந்தனையற்றுப் போய்விட்டாரா என்று புரியவில்லை.

ஒரு நாள் அப்பா ‘என் கூட வா’ என்று அழைத்தார். வெகுதூரம் பேச்சின்றி நடந்தபின் ‘வீடு திரும்பலாம்’ என்றார். திரும்பும் வழியில், ‘வாழ்நாள் முழுவதும் நான் எதுவும் புரியாதவனாகத்தான் இருந்திருக்கிறேன். நாமாக எதையும் ஆரம்பிக்கக் கூடாது, தானாக வருவதை விட்டுவிடக் கூடாது,’ என்றார்.

‘எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது’ என்றேன்.

‘வாழ்க்கை எதையாவது செய்ய வைத்தாலும் கடவுளை நம்பித்தான் செய்ய வேண்டும். தன்னையோ, மனிதனையோ நம்பக் கூடாது. நான் தோற்று விட்டேன்’ என்றார்.

அப்பா இப்படி எல்லாம் பேசி நான் கேட்டதே இல்லை. என் மனம் சங்கடப்பட்டது. ‘உங்களுக்குத் துணையாக நான் இருக்கிறேன்’ என்று சொல்ல ஆசைப்பட்டேன். கூச்சத்தினால் சொல்லவில்லை.

‘நான் செய்த தப்புகளுக்கு நிஜாமை குறை சொல்வது சரியில்லை. அவர் உலகத்திலேயே பெரிய பணக்காரராஜா. நான் ஒன்றுமில்லாதவன். யதார்த்தமான உண்மை இதுதானே?’ என்றார்.

நான் மௌனமாக இருந்தேன்.

‘நிஜாம் நல்லவர்தான். சகவாசம் சரியில்லை என்பதால் ஏதோ தற்காலிக புத்திமாறாட்டம். இந்தியாவோடு சேர்ந்து விடுவார். சேராவிட்டால் பட்டேல் சும்மாவா இருப்பார்?’ என்றார்.

‘பட்டேல் கறாரானவர்தான்’ என்றேன்.

‘பாகிஸ்தான் பிரிந்தது கூட தப்புதான். நாமெல்லாம் ஒரு தேசம்’ என்றார் அப்பா.

‘ஆமாம்’ என்றேன்.

‘உன் அக்காவை நினைத்து நினைத்து என் மனம் பித்து பிடித்தது போலாகிவிடுகிறது, அதை மறக்க கொஞ்ச நாட்களாக ஹைதராபாத் இந்தியாவோடு சேர வேண்டும் என்று மட்டுமே திரும்பத் திரும்ப நினைத்து வருகிறேன். மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது. நீ பாகிஸ்தான் இந்தியாவோடு சேர வேண்டும் என்று நினைத்து வா’ என்றார் அப்பா.

‘அதெல்லாம் அரசியல் தலைவர்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம். நாமெல்லாம் சாதாரணமானவர்கள். நேரம் கிடைக்கும்போது ஒன்றும் தெரியாமலே, செய்தித்தாளில் வரும் பொய்களை வாசித்துவிட்டு, பெரிய விஷயங்கள் பற்றி விமர்சனம் செய்து சிரிக்கலாம். உடனே அதை மறந்து விட்டு நம் குடும்ப காரியங்களை மட்டும் பார்க்க வேண்டும். நம்மால் வேறென்ன செய்ய முடியும்?’ என்றேன். என் அப்பாவிடம் இந்த அளவு பேசியது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

‘தனி மனிதனின் மனவுறுதிக்கு, விருப்புறுதிக்கு, பிரபஞ்சம் கூட பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்’ என்றார் அப்பா.

‘மனிதன் மிகவும் சிறியவன். பிரபஞ்சம் மிகவும் பெரியது’ என்றேன்.

‘இல்லையில்லை. மனிதனுக்கு உள்ளேதான் பிரபஞ்சம் இருக்கிறது. நமக்குத்தான் அது தெரியவில்லை’ என்றார் அப்பா.

அப்பாவை நினைத்து எனக்கு கவலையாக இருந்தது. அக்காவிற்கு விரைவில் கல்யாணம் ஆகவில்லை என்றால் அப்பாவிற்கு என்ன ஆகுமோ!

வீடு திரும்பியபோது பெரியப்பாவும், ஒரு வயதான தம்பதியரும் வீட்டில் எங்களுக்காக காத்துக் கொண்டிருந்தனர். அம்மா மெதுவான குரலில் ‘சொல்லாமல் அப்பாவும், பிள்ளையும் எங்கே போனீர்கள்’ என்று கடிந்து கொண்டார்.

தம்பதியர் அக்காவைப் பெண் பார்க்க வந்திருந்தனர். அவர்களுக்குப் பெண் பிடித்திருந்தது. உடனே சம்மதம் சொல்லி விட்டார்கள். அரசாங்க அதிகாரியான தங்கள் பிள்ளைக்கு எப்படியாவது என் அக்காவை முடித்துவிட வேண்டும் என்ற ஆர்வம் அவர்களிடம் இருந்தது.

பிள்ளை வீட்டில் ஒரு பிரச்சனை இருந்தது. பிள்ளைக்கு ஒரே தங்கை. வீட்டிற்கு ஒரே செல்லப் பெண். நன்றாக படிக்க வேண்டும் என்று சர்வ கலாசாலைக்கு மேல்படிப்பிற்கு அனுப்பினார்கள். அவள் தன்னோடு படித்த, வேறு மதத்தைச் சேர்ந்த பையனை கல்யாணம் செய்து கொண்டு விட்டாள். அதனால் பல காலமாக இவர்கள் பையனுக்குப் பெண் கிடைக்கவில்லை.

‘எதையும் மறைக்க விரும்பவில்லை. எங்கள் நிலை என்னவென்று எங்களுக்கு நன்றாகத் தெரியும். உங்கள் நிலையும் தெரியும். உங்கள் விருப்பப்படி, வசதிப்படி வரதட்சணை, சீர்வரிசை செய்தால் போதும். எதுவும் செய்யாவிட்டாலும் பாதகமில்லை. கல்யாணத்தை மட்டும் நல்லபடியாக, கௌரவமாக நடத்திக் கொடுத்துவிடுங்கள். பையன் அரசாங்க அதிகாரி. பெரிய மனிதர்கள் வருவார்கள்’ என்றார் பையனின் அப்பா.

அப்பா இந்த கல்யாணத்திற்கு நிச்சயம் ஒத்துக் கொள்ள மாட்டார் என்று நினைத்தேன்.

‘எனக்குப் பூரண சம்மதம்’ என்றார் அப்பா. வேறொன்றும் சொல்லவில்லை.

அதன்பின் அக்கா வெட்கத்தோடு புன்னகைக்க ஆரம்பித்தாள். உண்மையான மென்மையான குரலில் பேச ஆரம்பித்தாள். வீடு மீண்டும் கலகலப்பாகியது, கையிருப்பு ஆயிரத்திற்கும் கீழேதான் என்றாலும், அந்தக் கவலையை மறைத்துக் கொண்டு கலகலப்பாக இருந்தோம். அல்லது இருப்பதாக நடித்தோம்.

தினமும் சில உறவினர்கள் வீட்டிற்குச் சென்று அழைப்பு தந்தோம்.

ஒரு நாள் அம்மா அப்பாவிடம், ‘கல்யாண நாள் நெருங்கிவிட்டது. நாம் ஒரு ஏற்பாடும் செய்யவில்லை’ என்றார்.

‘எனக்குத் தெரிந்தவர்கள். நண்பர்கள், சொந்தக்காரர்கள் எல்லோரிடமும் கடன் கேட்டு விட்டேன். சிலருக்கு உதவும் சூழ்நிலையில்லை, பலருக்கு உதவும் மனநிலையில்லை. கையில் ஆயிரம் ரூபாய் கூட இல்லை. அறுநூறுதான் இருக்கிறது’ என்றார் அப்பா.

‘எல்லோருக்கும் அழைப்பு தந்து விட்டோமே? கல்யாணம் நடக்குமா?’ என்று கேட்டார் அம்மா.

‘தெரியாது’ என்றார் அப்பா.

‘செலவிற்கு என்ன செய்வது?’ என்று கேட்டார் அம்மா.

‘அறுநூறு இருக்கிறதே! அதில் ஜவுளி வாங்கு’ என்றார் அப்பா.

‘அதற்கப்புறம்?’ என்று கேட்டார் அம்மா.

‘அதை அப்போது பார்த்துக் கொள்ளலாம்’ என்றார் அப்பா.

அம்மா பெரியப்பாவிடம் ‘கல்யாணத்திற்கு ஜவுளி எடுக்க வேண்டும்’ என்றார்.

‘எனக்குத் தெரிந்த ஒருவர் நல்ல தரமான துணிகள் விற்கிறார். விலை நியாயமாக இருக்கும். சிறிய கடைதான். சொன்னால் வீட்டிற்கே வந்து துணிகளைக் காட்டுவார்’ என்றார் பெரியப்பா.

‘நாளை நல்ல நாள். வரச் சொல்லுங்கள்’ என்றார் அம்மா.

‘பணம்?’ தயக்கத்துடன் கேட்டார் பெரியப்பா.

‘இருக்கிறது’ என்றார் அம்மா.

மறுநாள் மதியம் சொன்ன நேரத்தில் வீட்டு வாசலில் ஒரு கைரிக்க்ஷா ஜவுளி மூட்டைகளோடு வந்து நின்றது. வண்டியோடு நடந்து வந்தவர் ஒல்லியான கரிய மனிதர். வெள்ளை நிற முழுக்கை சட்டையும் வேட்டியும் அணிந்திருந்தார்.

‘எவ்வளவு வேண்டும்?’ என்று ரிக்க்ஷாக்காரரிடம் கேட்டார்.

‘ஒரு ரூபாய் தாருங்கள் சாமி’ என்றான் வண்டிக்காரன்.

‘ஒரு ரூபாயா!’ என்று கேட்டார் ஜவுளிக்கடைக்காரர்.

கூலியை முதலிலேயே பேசி இருக்க வேண்டும். இப்போது பேசினால் பிரச்சனைதான் உண்டாகி வளரும். இதுகூட தெரியாமலா வியாபாரம் செய்கிறார்?

வண்டிக்காரன் உலகப்போருக்குப் பின் விலைவாசி உயர்ந்து விட்டதைப் பற்றியும், தான் நியாயவான் என்பதால்தான் ஒரே ஒரு ரூபாய் மட்டும் கேட்பதாகவும் விளக்கம் தந்தான். அவன் சொன்னதை முழுமையாக, பொறுமையாகக் கேட்ட ஜவுளிக் கடைக்காரர், ‘நீ சொல்வதெல்லாம் உண்மைதானப்பா. நீ இவ்வளவு குறைவாக கூலி கேட்கிறாயே என்றுதான் ஆச்சரியப்பட்டேன். உன் உழைப்பிற்கு ஏற்ற கூலியை கேட்கப் பழகிக்கொள்’ என்று கூறி இரண்டு ரூபாய் தந்தார். ‘நாளைக்கு தீபாவளி, வழக்கம் போல கள்ளுக்கடைக்குத்தானே நேராகப் போவாய்?’

‘சாமி, அந்தப் பழக்கம் எனக்கு உண்டுதான். ஆனால் இன்றைக்குக் குடிக்கப் போவதில்லை. இந்தப் பணத்தில் சம்சாரத்திற்கும், குழந்தைகளுக்கும் பலகாரம் வாங்கித் தரப் போகிறேன்’ என்றான்.

இவரிடம் ஜவுளி வாங்குவது விவேகமான செயல்தானா என்ற சந்தேகம் எழுந்தது. உழைப்பிற்கு ஏற்ற கூலி! விலை இரட்டிப்பாகத்தான் சொல்வார். ஒருவேளை பெரியப்பாவிற்கும் இதில் ஒரு பங்கு இருக்குமா? பெரியப்பா அப்படியெல்லாம் செய்யமாட்டார். விவரம் தெரியாமல் இந்த கடைக்காரரை நம்பி இருப்பார்.

ஜவுளிக்காரர் வாசலில் நின்றிருந்த எங்களைப் பார்த்து நட்புடன் புன்னகைத்து, வணங்கினார். வண்டிக்காரன் மூட்டைகளை கூடத்திற்குள் கொண்டு வந்து வைத்தான்.

‘கிளம்பும்போதே வீட்டிற்குப் போக வேண்டும், அவசரம் என்றாயே? நீ கிளம்பு’ என்றார்.

‘இல்லை சாமி. உங்களைத் திரும்பக் கடையில் விட்டுவிட்டுப் போகிறேன்’ என்று கூறிய வண்டிக்காரன் வெளியே நிழலான இடத்தில் அமர்ந்து கொண்டான்.

பாய் விரித்து எல்லோரும் அமர்ந்ததும் அம்மா ஜவுளிக்காரருக்கு இனிப்பும், காபியும் தந்து உபசரித்தார். வண்டிக்காரனுக்கும் தந்தார். பரஸ்பர விசாரிப்புகளுக்குப்பின் பட்டுத் துணி மூட்டைகளை அவிழ்த்தார் ஜவுளிக்காரர்.

அக்காவும் அம்மாவும் ஆவலுடன் ஒவ்வொரு சேலையாகப் பிரித்து விரித்துப் பார்த்து, பிடித்தவற்றைத் தனியாக எடுத்து வைத்தனர். ஒவ்வொரு சேலையைப் பற்றியும் ஒரு சுவாரசியமான கதையையோ, தகவலையோ ஜவுளிக்காரர் சொல்லிக் கொண்டிருந்தார். எதையும் வாங்குங்கள் என்று வாய் திறந்து சொல்லவில்லை.

அப்பா தனக்குச் சம்பந்தமில்லாத விஷயமிது என்பது போல ஏதோவொரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தார். எனக்கு எல்லாத்துணிகளும் நன்றாக இருப்பது போலிருந்தது. ஆனால் விலையைப் பற்றிய பயமிருந்து கொண்டே இருந்தது.

மாலையில்தான் துணிகள் தெரிவு செய்வது முடிந்தது. பெண்ணிற்கு, மாப்பிள்ளைக்கு, சம்பந்தி வீட்டாருக்கு என்று எடுக்க திட்டமிட்டிருந்ததைவிட அதிகமாகவே ஜவுளி எடுக்கப்பட்டிருந்தது. எல்லாவற்றையுமே வாங்கிவிட வேண்டும் என்று தோன்றியது, ஜவுளியின் தரம் அப்படி. ஜவுளிக்காரரின் தரம் அப்படி. எடுத்து வைத்தவற்றில் பலவற்றை மனமே இல்லாமல் அக்காவும், அம்மாவும் வேண்டாமென விட்டனர். ஆசைக்கு அளவில்லை. கையிருப்பிற்கு அளவுண்டு.

அதன்பின் விலை விசாரிப்பு ஆரம்பமாயிற்று. நான் எதிர்பார்த்தது போல அநியாய விலை இல்லை. குறைவாகவே இருந்தது, மொத்தம் ஆயிரத்து இருநூறு ரூபாய். நாங்கள் எதுவும் கேட்காமலேயே நூறு ரூபாய் தள்ளுபடி செய்த ஜவுளிக்காரர், ‘இதற்குமேல் என்னால் குறைக்க முடியாது’ என்று பணிவுடன் கூறினார். ஐந்தாயிரம் ரூபாய்க்கு தி.நகரில் சிறிய வீடு வாங்க முடிகிற காலமது.

அம்மா கம்மிய குரலில், ‘ரொம்ப சந்தோஷம். எங்களுக்கு துணிகளும், விலையும் பிடித்திருக்கின்றன. ஆனால் உடனே அவ்வளவு பணம் தரும் சூழ்நிலையில் இல்லை. அறுநூறு ரூபாய் தருகிறோம். மீதியை கல்யாணம் நடந்ததும் தருகிறோம்’ என்றார். இதை எந்தக் கடைக்காரரும் ஏற்கமாட்டார் என்று தெரிந்தே அம்மா வேண்டினார். எப்படியாவது பெண்ணிற்கு கல்யாணம் நடந்தால் போதும் என்பது அவர் மனப்போக்கு.

ஜவுளிக்காரர் எதுவும் பேசாமல் அம்மாவையே கூர்ந்து பார்த்தார்.

‘அது சரிவராது என்றால் எங்கள் துணிகளை நீங்களே வைத்திருங்கள். முன்பணம் தந்து விடுகிறோம். கல்யாணத்தன்று துணிகளைத் தாருங்கள்’ என்றார் அம்மா.

‘ஏதாவது பிரச்சனையா?’ என்று கேட்டார் ஜவுளிக்காரர்.

‘அதெல்லாம் ஒன்றுமில்லையே’ என்றார் அம்மா.

‘கல்யாணப் புடவைக்கும், திருமாங்கல்யத்துக்கும் யாரும் கடன் சொல்ல மாட்டார்கள். நீங்கள் சொல்கிறீர்கள் என்றால் நிச்சயம் ஏதோ பிரச்சனை இருக்கிறது. என் வாடிக்கையாளர்களை என் குடும்ப உறுப்பினர்களாகத்தான் பார்க்கிறேன். நீங்களும் என்னை இந்தப் பெண்ணின் தாய்மாமா என்று நினைத்துக் கொண்டு பேசுங்கள்’ என்றார்.

அம்மா அழ ஆரம்பித்து விட்டார். கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டே இருந்தது. அக்கா அம்மாவின் மடியில் முகத்தை புதைத்துக்கொண்டாள்.

அப்பா ஏதாவது பேசுவார் என்று அவரைப் பார்த்தேன், அவர் என்னைப் பார்த்துவிட்டு மௌனமாக இருந்தார். எவரும் பேசாமல் இருந்தால் காரியம் நகருமா? நான் பேச ஆரம்பித்தேன். அக்காவை முதன்முதலில் பெண் பார்க்க வந்தவர்கள் சம்மதம் சொல்லியதிலிருந்து இன்று நடந்ததுவரை கோவையாகச் சொல்லி முடித்தேன்.

‘கல்யாணத்திற்கு எவ்வளவு தேவைப்படும்?’ என்று கேட்டார் ஜவுளிக்காரர்.

‘ஆறாயிரமிருந்தால் கல்யாணத்தைக் கௌரவமாக நடத்தி விடலாம்’ என்ற அம்மா பெருமூச்சு விட்டார்.

‘நான் வாடகைக் கட்டடத்தில் சின்ன கடை வைத்திருக்கிறேன். சொந்தக் கட்டடம் வாங்க பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். என்னிடம் ஏழாயிரம் இருக்கிறது. அதை வைத்துக் கல்யாணத்தை நிம்மதியாக முடித்து விடுங்கள். அதன்பின் என் பணத்தை நிலத்தை விற்றோ, அல்லது அலுவலகத்திலிருந்து வரும் பணத்தைக் கொண்டோ திருப்பிக் கொடுத்து விடுங்கள்’ என்றார் ஜவுளிக்காரர்.

அவர் கேலி செய்கிறாரோ என்று எனக்குத் தோன்றியது. அம்மாவிற்குப் பணத்தை அப்போதே வாங்கி கல்யாணத்தை முடித்துவிட வேண்டும் என்ற பதற்றம் உண்டாகி விட்டது அவரது உடலசைவுகளில் தெரிந்தது. எல்லோரும் அப்பாவைப் பார்த்தோம்.

‘அய்யா, எங்கள் நிலைமையை அல்லது நிலையில்லாமையை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய அரசியல் நிலையில் நிலம் யாருக்குச் சொந்தம் என்று தெரியவில்லை. எனக்குச் சொந்தமானது எனக்கேதான் என்ற நிலை வந்தாலும் என்ன விலைக்கு விற்க முடியும், விற்ற பணத்தை இந்தியாவிற்குக் கொண்டுவர முடியுமா என்பதெல்லாம் தெரியவில்லை. நான் பணி நீக்கம் செய்யப்பட்டவன், எவ்வளவு பணம் வரும் என்றும் தெரியாது’ என்றார் அப்பா.

‘இதெல்லாம் தெரிய வேண்டிய விஷயங்களே இல்லை. மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது மட்டுமே எனக்குத் தெரிய வேண்டும். அதை மட்டுமே கவனிப்பேன். அடுத்ததாக மனிதர்களைச் சந்திக்கும்போது வாழ்வு என்ன சொல்கிறது என்று கவனிப்பேன். இரண்டுமே எனக்குத் திருப்தியாக உள்ளன’ என்றார் ஜவுளிக்காரர்.

‘எங்களுக்கு உதவுவதால் உங்களுக்கு என்ன ஆதாயம் கிடைத்துவிடப் போகிறது? நாங்கள் மிகவும் சாதாரணமானவர்கள்’ என்றேன்.

‘காந்திஜி பணத்திற்காகவா விடுதலைப் போராட்டம் நடத்தினார்? விவேகானந்தர் பணத்திற்காகவா யோகம் செய்தார்? அவர்களோடு ஒப்பிட்டால் நானெல்லாம் சாக்கடைப் புழுவிற்குச் சமானம். எனக்கென்று கடவுள் விதித்தது ஜவுளி வியாபாரம். அதை பணத்திற்காகச் செய்யவில்லை. நம் நாட்டிற்குச் சேவையாக செய்கிறேன். இந்தியா போன்ற ஆன்மீக தேசத்திற்குச் சேவை செய்வது ஆண்டவனுக்குச் செய்யும் சேவை’ என்றார் ஜவுளிக்காரர்.

‘சேவை இருக்கட்டும். இப்படிச் செய்வதால் உங்களுக்கு என்ன லாபம் கிடைத்துவிடப் போகிறது? அதுதான் என் கேள்வி’ என்றேன்.

என் அம்மாவும், அக்காவும் என்னைப் பதற்றத்துடன் பார்த்தார்கள். வலிய வந்த வாய்ப்பை நான் எதிர்கொண்ட விதம் அவர்களுக்குப் பதற்றத்தை உண்டாக்கிவிட்டது.

‘நெசவாளிகள், வேலைக்காரர்கள், வாடிக்கையாளர்கள் என்று பலவகையான மனிதர்களோடு பழகும் வாய்ப்பு வியாபாரம் செய்யும்போது கிடைக்கிறது. அது ஆண்டவனோடு பழகுவது போன்ற வாய்ப்பு. மனிதன் கடவுள்தானே? என் பொறுப்பில் வரும் எல்லோரையுமே என் குடும்பத்தினர் என்று நினைப்பதால் வேற்றுமையே தெரிவதில்லை. வேற்றுமையும், பிரிவினையும் இல்லாதபோது நமக்குள் பிறக்கும் சக்தியை, சந்தோஷத்தை அனுபவித்துப் பார்த்தால் பணத்தைப் பொருட்படுத்தாத பக்குவம் வந்து விடும். என்னுடைய உள்ளத்தின் வளர்ச்சிதான் எனக்குக் கிடைக்கும் ஆதாயம். அதைவிட பெரிய ஆதாயம் உண்டா? உங்களுக்குப் பணம் தருகிறேன் என்றேன். நீங்கள் வேண்டாம் என்று மறுத்து விடுவீர்களோ என்று எனக்குப் பதற்றமாக இருக்கிறது’ என்றார் ஜவுளிக்காரர்.

அப்பா பலமாதங்களுக்குப் பின்பு முதல்முறையாகப் புன்னகைத்தார்.

என்னால் நம்ப முடியவில்லை. ஒருவேளை வரிகட்டாத கள்ளப் பணமாக இருக்குமோ? அல்லது கள்ளநோட்டை மாற்றுகிறாரா? விவரம் தெரியாமல் என் குடும்பத்தினர் பிரச்சனையில் சிக்கிக் கொள்ள விடமாட்டேன்.

‘நாங்கள் வெளியூரிலிருந்து சமீபத்தில் வந்தவர்கள். சங்கடத்தில் இருப்பவர்கள். நெருங்கிய சொந்தக்காரர்களே உதவவில்லை. எதை நம்பி எங்களுக்குப் பணம் தருகிறீர்கள்? நாங்கள் பணத்தைத் திருப்பித் தராவிட்டால் உங்களால் என்ன செய்ய முடியும்?’ என்று கேட்டேன்.

‘அய்யா. சின்னப் பையன். துடுக்குத்தனமாக பேசும் வயது. மன்னித்து விடுங்கள்’ என்று கெஞ்சும் குரலில் அம்மா பேசினார். ‘ஆமாம், சின்னப் பையன். மன்னித்து விடுங்கள்’ என்றாள் என்னைவிட ஒரே ஒரு வயது பெரியவளான அக்கா. இவள் எப்போது பெரிய மனுஷி ஆனாள்?

என்னைப் பார்த்து நட்புடன் புன்னகைத்த ஜவுளிக்காரர், ‘தம்பி, மனிதன் பிறப்பதற்கு முன்பே நம்பிக்கை, போன்ற பண்புகள் பிறந்து விட்டன. சூரியன் காலையில் காலம் தவறாமல் வந்து விடுவான், மலர்ந்து விடலாம் என்ற நம்பிக்கையில்தானே செடிகளில் மொட்டுக்கள் பிறக்கின்றன? கணக்கு பார்க்காமல், இனம் பார்க்காமல் வானம் மழை தரும். அதைப் பதுக்கி வைக்காமல் நிலம் நீர் தரும் என்ற நம்பிக்கையில்தானே செடிகள் வாழ்கின்றன? நிலம் விலையின்றி புல் தரும் என்ற நம்பிக்கையில்தானே மான் துள்ளி ஓடுகிறது? சூரியன் இருக்கும் நம்பிக்கையில்தானே சந்திரன் இருக்கிறது? ஜடமும், தாவரமும், மிருகமும் ஒன்றின் மீது ஒன்று நம்பிக்கை வைக்கின்றன. மனிதன் மனிதனை நம்பக் கூடாதா? எத்தனையோ பண்புகள் இருக்கின்றன. பண்புகள் மூலம் பிரபஞ்சத்தைப் பார்க்கலாம். எந்த ஒரு பண்புக்கும் பிரபஞ்சம் கட்டுப்பட்டு விடும்’ என்றார்.

அப்பா உரக்கச் சிரித்தார்.

‘நாங்கள் நல்லவர்கள், நியாயமானவர்கள் என்பதால் பணம் தருகிறீர்கள். போக்கிரிகளுக்கு இதேபோல தருவீர்களா?’ என்று கேட்டேன்.

‘நான் சரியாக இருக்கும்வரை, சரியானவர்கள் மட்டும்தான் என்னிடம் வருவார்கள்’ என்றார் ஜவுளிக்காரர்.

‘அய்யா, உங்களிடம் பணம் வாங்கி கல்யாணம் செய்தால் என் பெண்ணின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்’ என்றார் அப்பா.

‘மிகவும் நன்றி’ என்றார் ஜவுளிக்காரர். ‘நாளை காலையில் பணம் கொண்டு வந்து தருகிறேன். ஜவுளிக்கான பணத்தையும் கல்யாணம் முடிந்தபின் வாங்கிக் கொள்கிறேன்’ என்று கூறி விடை பெற்றார்.

அம்மா வண்டிக்காரனை அழைத்து ஒரு சிறு மூட்டை நிறைய தின்பண்டங்கள் தந்தார். இரண்டு பழைய புடவைகளும் தந்தார். ‘வீட்டில் கொடுத்து விடு’ என்றார்.

தீபாவளி கழிந்தபின் ஒரு வளர்பிறை தினத்தன்று, சுபயோக சுப முகூர்த்தத்தில் அக்காவின் கல்யாணம் நல்லபடியாக நடந்து முடிந்தது. அதற்கு முன்பே சர்தார் வல்லபாய் பட்டேல் ‘ஆப்பரேஷன் போலோ’ என்ற பெயரில் இந்தியப் படையை ஹைதராபாத்திற்கு அனுப்பி வைத்தார். கத்திகளோடு கோஷமிட்டுக் கொண்டு வந்த புரட்சிக்காரர்களை, துப்பாக்கிகளோடு வந்த இந்தியப் படை சுலபமாக அடக்கி சரணடைய வைத்தது. ஹைதராபாத் இந்தியாவோடு இணைந்தது.

‘இதை முன்பே செய்திருக்கலாம், நேருவும், பட்டேலும் இன்னும் கொஞ்சம் ஒற்றுமையாக, சுறுசுறுப்பாக, புத்திசாலித்தனமாக நடந்து கொண்டிருந்திருக்கலாம். இவர்களுக்குச் சரியாக நாடாளத் தெரியவில்லை’ என்று நானும் என் நண்பர்களும் தெருமுனையில் நின்று செய்தித்தாள்களை வாசித்தபடி, கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டோம். மறுநாள் புதிய திரைப்படம் வெளிவந்ததால், பட்டேலையும், ஹைதராபாத்தையும் மறந்து விட்டோம்.

அப்பா திரும்பவும் வேலைக்குப் போகவில்லை. அரசியல் குழப்பம் அடங்கி இருந்ததால் எங்கள் நிலத்தை நல்ல விலைக்கு விற்க முடிந்தது. அப்பா ஜவுளிக்காரருக்கு எட்டாயிரம் தந்தார். அவர் ‘கொடுத்த பணம் மட்டும் போதும்’ என்றார். ‘பணம் வாங்கிக் கொண்டு உங்களை சந்தோஷப்படுத்தினோம். எங்களுக்குச் சந்தோஷம் தர மறுக்கிறீர்களே?’ என்று அப்பா கோபித்துக் கொண்டதும் ஜவுளிக்காரர் சிரித்துக் கொண்டே எட்டாயிரத்தை வாங்கிக் கொண்டார்.

* * * *

அறுபது வருடங்களாக நான் என்னெதிரே இருக்கும் இந்தக் கடையில் மட்டும்தான் துணி வாங்கி வந்திருக்கிறேன். என் குடும்பத்து உறுப்பினரின் கடையில் வாங்காமல் வேறெங்கே வாங்குவேன்?

என் எதிரே இருந்த என்னை எப்போதும் சிலிர்க்க வைக்கும் பல அடுக்குமாடி பட்டு ஜவுளிக் கடையை உற்றுப் பார்த்தேன். பிரம்மாண்டமாக இருந்தது. அறுபது வருடங்களுக்கு முன் சிறிய பெட்டிக்கடை போலிருந்தது. இப்போது நாடு முழுவதும் கிளைகள். வெளிநாடுகளில்கூட கிளைகள் இருக்கக்கூடும். எனக்குச் சரியாகத் தெரியவில்லை. ஜவுளிக்காரரின் பிரம்மாண்டத்தின் முன் அவரது இந்த அடுக்குமாடி பட்டு ஜவுளிக்கடை சிறு பொம்மை என்று நினைத்துக் கொண்டேன். அடுத்த தீபாவளிக்கு நான் மீண்டும் இங்கு வந்து பார்ப்பேன்.

புதிதாக மேலும் ஒரு மாடி கட்டப்பட்டிருக்கும். புதிதாக இன்னும் ஒரு கிளை ஆரம்பிக்கப்பட்டிருக்கும். மெல்ல எழுந்து என் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

(முற்றும்)

(நான் மிகவும் மதிக்கும் ஒரு இலக்கிய மேதையின் நினைவுக் குறிப்புகளில் இருந்த ஓர் உண்மை நிகழ்ச்சி என் மனதை நெகிழச் செய்தது. அதை என் கற்பனையைக் கலந்து சிறுகதையாக எழுதி இருக்கிறேன். மேதையும் இருக்கிறார். கடையும் இருக்கிறது.)

*******



book | by Dr. Radut