Skip to Content

10. அன்பர் அனுபவம்

அன்பர் அனுபவம்

P. நடராஜன்

நம் நம்பிக்கை எத்தகையதோ, அதற்கேற்பவே பரிகாரம்

எனது இடக்கண்ணில் ஏற்பட்ட குறை நீங்கிய விஷயத்தில், என் நம்பிக்கை எதன்மீது இருக்கிறதோ அதன்வழி தீர்வு தர அன்னை காத்திருந்ததையும், அன்னை மீதான எனது நம்பிக்கையை நானே உணர்ந்து தெரிந்து கொண்ட விதத்தினையும் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

******

வேலை பளு காரணத்தால் ஏற்பட்ட கிட்டப்பார்வை குறைபாட்டிற்காக ஆறு மாதத்திற்கு ஒரு முறை புதுவை அரவிந்த் கண் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்வது வழக்கம். 2009 மார்ச் வாக்கில் அப்படிச் சென்றபோது, retina பிரிவில் ஸ்கேன் செய்து, எனது இடக்கண்ணில் மிளகாய் வடிவில் மெல்லிய ஜவ்வு படர்ந்திருப்பதைக் கண்டனர்.

அடிபட்டாலோ அல்லது infection ஆனாலோ கண்ணில் உள்ள திரவம் பாலில் ஏடு படிவதைப் போன்று படிந்து, கண் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் இவ்வாறான பாதிப்பு ஏற்படும் என்றனர். ஆனால் அப்படி ஏதும் கண்ணில் அடி எதுவும் பட்டிருக்கவில்லை. 3 மாதத்திற்கு ஒருமுறை checkup செய்து கொள்ளச் சொன்னார்கள். பார்வை மோசமானால் உடன் வரச் சொன்னார்கள். எப்பொழுது வேண்டுமானாலும் ஆப்பரேஷன் செய்து கொள்ளலாம். ஆனால் பார்வைக்கு உத்திரவாதம் தர முடியாது. மெல்லிய ஜவ்வை உரித்து எடுக்கும் போது விழி திரை கிழியலாம். எனவே கடினமான ஆப்பரேஷன் என்றனர்.

Epiretinal Membrane வளர்ந்து விழித்திரையைப் படர்ந்தால் பார்வை குறைந்து கொண்டே வரும். ஆப்பரேஷன் செய்தாலும் பார்வைக்கு உத்திரவாதமில்லை என்ற நிலை.

********

ஏன் உங்களுக்கு இது வந்தது என்று கேட்ட மனைவியிடம், வாழ்வில் அன்னை வந்த பிறகு, அன்னை மையமான வாழ்வு என்பதில், வாழ்வின் இலக்குகளாகச் சிலவற்றை ஏற்றுக்கொண்டிருந்தேன். திருமணத்திற்குப்பின் அது Vision without Mission என்பதாக இருந்ததால், எனது பார்வையில் (vision) திரை விழுகிறது எனத் தோன்றுகிறது என்று கூறினேன்.

மேற்கண்ட தெளிவில், அன்னை விருப்பம் எதுவோ அதுவே நடக்கட்டும் என இருந்தேன். ஒரு வேளை ஒரு கண் பார்வைதான் முடிவு என்றால் அதற்கும் தயார் என்ற நிலையில் எனது நம்பிக்கை இருந்தது.

ஸ்ரீ அன்னையின் அரவணைப்பைப் பெற ஸ்ரீ கர்மயோகி அவர்களின் எழுத்துகளே வழிகாட்டியென, ‘கண்ணொளி’ முதலான கட்டுரை மற்றும் கண் சம்பந்தமான எழுத்துகளைத் திரட்டிப் படித்தேன்.

அரவிந்த் கண் மருத்துவமனைக்குப் புறப்படுகையில் கீழ் வீட்டிலிருந்து சிறுவன் ஸ்ரீ கர்மயோகி அவர்களிடமிருந்து வந்த blessing பாக்கெட்டைத் தந்தான். ஸ்ரீ கர்மயோகி அவர்களின் ஆசியும் அன்னையின் அருளும் எப்போதும் நீங்காமல் இருப்பதை உணர்ந்தேன். அன்று டிசம்பர் 5.

வந்த blessing பாக்கெட்டுடன், hospital சென்றேன். பார்வை அதே நிலையில் உள்ளது. ஆகையால் ஆப்பரேஷன் தற்போது தேவை இல்லை; உங்களுக்குப் பார்வை தடைப்பட்டால் செய்து கொள்ளலாம் என்றனர்.

நாளாக நாளாகப் பார்வை மூன்று மடங்கு குறைந்தது. எண்ணெய்க் கறை பட்ட கண்ணாடி வழியாக பார்ப்பது போன்று இருந்தது. திட்டுத்திட்டாக மறைத்தது.

அரவிந்த் கண் மருத்துவமனையில் இருந்த செவிலியர் சகோதரிகள் கடினமான வேலைகளுக்கு இடையேயும் என்னிடம், “கவலைப்படாதீர்கள் அண்ணா நீங்கள் எதற்கும் வேறொரு டாக்டரிடம் கருத்துக் கேளுங்கள். இந்த டாக்டர் நிபுணர் என்றாலும் ஒருமுறை கேட்டுப் பார்ப்போமே. மேலும் எந்த நேரம் கண் பார்வை தடை ஏற்பட்டாலும் உடனே வந்து மருத்துவமனையில் சேருங்கள். ஞாயிறு அன்று அவசரம் என்றால், மருத்துவமனை விடுமுறை என்றாலும் எங்கள் ஹாஸ்டல் நம்பரில் கூப்பிட்டுச் சொல்லுங்கள். நாங்கள் உங்களுக்கு ஏற்பாடு செய்கிறோம்” என்று தனியே மருத்துவமனைக்கு வந்த என்னிடம் சொந்த சகோதர உறவு போல் வேண்டினார்கள். அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்தும், வழக்கத்திற்கு மாறாக வருவது அன்னையின் பூரண அன்பு என்பதை உணர்ந்தேன்.

மற்றும் சுற்றி உள்ளோர் வற்புறுத்த, நண்பருடன் சென்னை அகர்வால் மருத்துவமனை சென்று காண்பித்தேன். அங்கு ஆப்பரேஷன் பரிந்துரை செய்ய மாட்டோம், மிகவும் ரிஸ்க்கான ஆப்பரேஷன், நீங்கள் சொன்னால் செய்கிறோம் என்றனர். ஆனால் எங்களால் எந்தவித உத்திரவாதமும் தரமுடியாது என்றனர். அரவிந்த் மருத்துவமனையிலாவது பயம் வேண்டாம் ஆப்பரேஷன் செய்து விடலாம் என்றனர். இங்கு இவர்கள் சொல்வது இப்படி இருக்கிறதே என எண்ணித் திரும்பினேன்.

ஆப்பரேஷன் இல்லாது தனக்கு இருந்த PCOD வர்ம மருத்துவத்தில் கரைந்ததைக் கண்டிருந்த மனைவி, அந்த மருத்துவரிடம் கேட்கலாம் என்று கூற அவரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தேன். ஆப்பரேஷன் தேவையில்லை. குணமடைந்து விடலாம் என வர்ம ஆசான் கூற சிகிச்சையைத் தொடர்ந்து பெற்று வந்தேன். மருத்துவரின் தகப்பனார் அடிபட்டு மருத்துவமனையில் இருந்ததால் அவர் வேறொரு மருத்துவரைப் பரிந்துரை செய்தார். சிகிச்சைதடைபட்டது.

இன்டர்நெட்டில் Epiretinal Membrane பற்றிப் படித்தபோது, அது கண்ணில் ஏற்படும் scar போன்றது என அறிந்தேன்.

கழுத்தில் அவ்வப்போது ஏற்படும் scar, lotion apply செய்வதால் மறைவதைப் பார்த்திருக்கிறேன். மனம் lotion ஏதேனும் இருக்கும் என நினைக்கத் தொடங்கியது.

ஜனவரி வாக்கில், டெல்லியில் இருந்து தொடர்பில் இல்லாத அக்காவின் மகளிடமிருந்து Isotine எனப்படும் ஆயுர்வேத கண் மருந்து எதிர்பாராத விதமாகத் தானே வந்தது. டெல்லியில் இருந்த அக்காவின் கணவர், விஷயம் கேள்விப்பட்டு அம்மருந்தை அனுப்பியிருந்தார் என அறிந்தேன். அலோபதி மருந்தாளுநரான அவர் ஆயுர்வேத மருந்தை அனுப்பியிருந்தது வியப்பளித்தது. அதைப் பயன்படுத்தி வந்தேன். பார்வை குறையாமல் இருந்தது.

அலுவலகத்தில் அந்த கண் மருந்தைப் போடுவதைப் பார்த்த ஒரு நண்பர், அதன் விவரங்களைப் படித்துப் பார்த்து தனக்கும் ஒரு பாட்டில் வேண்டுமெனக் கேட்டு வாங்கிக் கொண்டார். கண்ணாடி போடும் பழக்கமுள்ளவர்கள் பயன்படுத்தி வந்தால் கண் பார்வை மேம்பட்டு கண்ணாடி போடும் அவசியம் இருக்காது என அதில் போட்டிருந்தது. மேலும், Immature Cataract, Glaucoma, Diabetic Retinopathy, Macular Degeneration, Retinitis Pigmentosa, etc., போன்றவற்றிற்கு பக்கவிளைவில்லாத பயனுள்ள மருந்து எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பயன்படுத்திய அந்த நண்பரும் நல்ல பலன் இருப்பதாகச் சொல்ல, அலுவலகத்தில் அம்மருந்து பரவியது.

5 மார்ச், 2010 அன்று செக் அப்பில் பார்வை அப்படியே இருந்தது.

ஏப்ரல் 12 அன்று டெல்லி டாக்டர் எனது ரிப்போர்ட்டைப் பார்த்து விட்டு, உடன் வரச் சொன்னார். பார்வைக்கு உத்திரவாதம் தருகிறோம். உடனே ஆப்பரேஷன் செய்ய வேண்டும், நன்கு வளர்ந்து இருக்கும் அந்த ஜவ்வு என்றார்.

டெல்லி சென்றேன். ஏப்ரல் 14 அன்று ஆப்பரேஷன் முன்பு எனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் நுழைந்தேன். அன்னையின் நினைவில் மூழ்கிய நிலையில் இருந்தேன். அக்காவின் கணவர், அறையின் சுவரில் ‘மா’ என்று ஹிந்தியில் frame செய்து மாட்டப்பட்டு இருந்ததைச் சுட்டிக் காட்டி, பயப்படாதே தம்பி! மதர் உனக்கு முன்னே வந்துவிட்டார்கள் என்றார். 10 வருடமாக டெல்லியில் உள்ளேன், நான் இது போல் படத்தைப் பார்த்ததில்லை என்று அவர் மேலும் கூறினார். மௌனமாக அன்னையினது பிரசன்னத்தை உணர்ந்து, அன்னையின் முத்திரை என்று கொண்டேன். ஒவ்வொரு இதயத்துடிப்பினையும் அன்னைக்குச் சமர்ப்பித்தபடி இருந்தேன்.

நல்ல முறையில் ஆப்பரேஷன் செய்து ஜவ்வை எடுத்தாயிற்று. Very Tough Membrane என்றார் டாக்டர். ஆப்பரேஷன் இரண்டரை மணி நேரம் ஆனது. சாதாரணமாக இருபது நிமிடம் ஆகும்; நான் நினைத்ததைவிட கடினமாக இருந்தது என்றார் டாக்டர். இடது கண் இருட்டில் பார்ப்பது போன்று இருந்தது. மாத இறுதியில் சரியாகும் என்றார். சொன்னபடியே, மாத இறுதிக்குள் பார்வை சகஜ நிலைக்கு வந்தது.

இந்த விஷயத்தில், எனது மனம் எதன்மீது உள்ளதோ அதன் மூலம் அன்னையின் அருள் செயல்பட்டது புரிகிறது. வர்ம மருத்துவம், ஆயுர்வேத மருந்து என்று போய் ஓய்ந்த நேரத்தில் அவசர கதியில், தொடர்பில் இல்லாதவரிடம் இருந்து அழைப்பு வந்து குணமானது. இந்த அனுபவம், எனக்கு ஸ்ரீ கர்மயோகி அவர்களின் கீழ்க்கண்ட வரிகளை நினைவுபடுத்துகிறது.

அன்னை பக்தனுடைய நம்பிக்கை எத்தகையதோ, அதற்கேற்பப் பரிகாரத்தை வழங்குவதும் வழக்கம். ஒரு பக்தருக்கு அன்னைமீது நம்பிக்கையுண்டு. ஆனால் வியாதி விஷயத்தில் மருந்துமேல் அதிக நம்பிக்கையுள்ளவராக இருந்து அன்னைக்குப் பிரார்த்தனை செய்தால், அன்னை வியாதியை மருந்து மூலம் குணப்படுத்துகிறார். 10 வேளை சாப்பிட வேண்டிய மருந்து இரண்டு வேளையில் பலிக்கிறது. பக்தனுக்குப் பரிகாரம் கொடுப்பதே அன்னைக்கு முக்கியம். அவனது நம்பிக்கையை மாற்ற முயற்சி செய்வதில்லை. - அன்னையின் வரலாறும் வழிபாடுகளும், பக்கம் 78 என் விஷயத்தில் அன்னைமீது நம்பிக்கை கொண்டிருந்தாலும், அலுவலக வேலை பளு, குடும்ப பாரம், மற்றவர்களின் கருத்து போன்றவற்றை மிஞ்சும் அளவு நம்பிக்கையையும் தீவிரத்தையும் கொள்ளாது சற்று பலவீனமாக இருந்தேன்.

மனம் எதில் செல்கிறதோ அதை அன்னையிடம் கூறி அது தானே நீர்த்துப் போகும்வரை (exhaust) விட்டு விட்டேன்.

பிரச்சனை எதுவானாலும் நமக்கும் அன்னைக்கும் இடை@ய எதுவும் இல்லை என்றால், பலன் வெள்ளமாக வரும்; பிரவாகமாகப் பெருகும் என்பது நன்கு புரிகிறது.

********



book | by Dr. Radut