Skip to Content

11. பழமொழிகளை முறியடிக்கும் அன்னை ஆன்மீகம்

பழமொழிகளை முறியடிக்கும் அன்னை ஆன்மீகம்

என். அசோகன்

நம் நாட்டுப் பழமொழிகள் கர்மம் என்ற அடிப்படையில் எழுந்தவை. மக்கள் கர்மம் என்பது, பழிக்குப்பழி வாங்குவது, மன்னிப்பை அறியாதது, நெல்லை வீசினால் கல்லடி தருவது என நினைக்கிறார்கள். முற்காலம் உலகெங்கும் பிழைக்க வழியில்லாத காலம். பிழைக்கும் வழியை மனிதன் கண்டுகொண்டபொழுது வாழ்வு இருண்ட லோகம் எனக் கண்டு, அதைச் சரிவர புரிந்து கொள்ளாதவர் நசுக்கப்படுவதையும் கண்டு சூடுகண்ட பூனையாக எழுதியவை இப்பழமொழிகள். நம் பழைய இலக்கியங்கள் இக்கருத்துகட்கு மாறாகச் செயல்பட்டதுடன், அவ்வடிப்படையில் நம் வாழ்க்கை வகுத்துக் கொடுத்ததை நம் மக்கள் பொருட்படுத்தவில்லை. என்றாலும் நடைமுறையில் வாழ்க்கையில் வெற்றியை சந்தித்தவர் அனைவரும் இப்பழமொழிகளைப் புறக்கணித்தவரே. அதனால் வெற்றி பெற்று, முதற் கட்டத்திலேயே விலகியவர் அனைவரும்.

பழமொழியைப் புறக்கணித்து வெற்றி பெற்றவர்
புறக்கணிப்பைப் புறக்கணித்து பழமொழியைப் பேசினர்.

மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் என்பது பழமொழி. இது அனைவரும் பின்பற்றுவது. ஆனால் ஒருவனுக்கு MLA பதவி வந்தபின் அம்மொழியை எவரும் பின்பற்றுவதில்லை. அதெல்லாம் பார்த்தால் முடியாது என்று அவன் அழைக்காவிடினும் அழைப்பைக் கேட்டு வாங்கி, கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் வருவது உலக இயல்பு. பழமொழியின் உண்மை சரி, எதிரானதும் உண்மை. இலட்சிய வேலையிருந்தால் எவர் தலைவாசலையும் மிதிக்கத் தவறக் கூடாது. மனிதனில் உயர்ந்தவன் இலட்சியத்திற்காகச் செய்வதை தாழ்ந்தவன் காரியத்திற்காகச் செய்கிறான். பழமொழியின் உண்மை ஒரு புறம், மனித நோக்கமே முக்கியமானது. நோக்கம் முடிவை நிர்ணயிக்கும். மனிதன் தனக்குப் பிடித்ததைப் பிடித்தது போல் தீவிரமாகச் செய்து, வரும் இலாபநஷ்டத்தை அனுபவித்து விட்டு, பேசும்பொழுது பொருந்துமிடங்களில் பழமொழியை கையாள்வது உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதாகும்.

மனிதனுக்குப் பழமொழியோ, இலட்சியமோ, குறளோ, நல்லதோ,
கெட்டதோ முக்கியமில்லை
அவனுக்கு அவன் மட்டுமே முக்கியம்.

அவன் பேசுவது கணக்கில் சேராது. பாவபுண்ணியம் உட்பட எதையும் மனிதன் பொருட்படுத்த மாட்டான். ஏன்? இலாபம், மரியாதைகூட அவனுக்குப் பொருட்டில்லை. முனைப்பு, ஆர்வம், ஆசை மட்டுமே முக்கியம். கெட்ட பழமொழிகளைக் காட்டுபவன், நல்ல பழமொழிகளைப் பின்பற்றுகிறானா?

மனிதன் சுயநலமானவன், அல்ப புத்தியுள்ளவன்
பொறாமைப்படுவான்,
ஆண்டவனையும் மிஞ்சுவதில் குறியானவன்.
மனிதன் மட்டமானவன்.
மனிதனை நம்புபவன் மோசம் போவான்.

எவருடைய வாழ்க்கையை எந்தக் கட்டத்தில் விவரமாக அறிந்திருந்தாலும், நம்பிக்கைக்குப் பாத்திரமானவரிலர் என்பது விளங்கும். அவன் வலியக் கட்டுப்படுமிடத்தில் சமூகம் அவனைக் கட்டுப்படுத்தும், கண்டிக்கும் என்றால், உலகம் திருந்தும். மற்றவை எல்லாம்
வைரவர், பிரசவ, மயான வைராக்கியங்களே.

அதையும் மீறி குடும்பப் பண்புக்கும், தன் சொந்தப் பண்புக்கும், ஏதோ காரணத்திற்காகவும் மனிதன் கட்டுப்படுவான். அது நேரம் வந்தால் தேறாது. நிலைகெட்ட மாந்தரே நிலையானவர். உலகில் மனிதப் பண்பு வளர்ந்தது ஓர் அதிசயம். திரு.பென்னட் எடுத்த முடிவு, லிஸ்ஸி எடுத்த முடிவு, டார்சி எடுத்த முடிவுகள் புரட்சிகரமானவை. அவை கதையில்லை. அது போன்ற மனிதர்களாலேயே உலகம் இயங்குகிறது. காலின்ஸ், லேடி காதரீன், லிடியா, விக்காம் போன்றவர்கள் உலகை வளப் படுத்துபவரிலர்.

இன்று எத்தனை பேர் காலேஜுக்கும், ஆபீசுக்கும் வேஷ்டி கட்டிக்கொண்டு, குடுமி வைத்துக் கொண்டு போக முன்வருவார்கள்? குடுமியும், வேஷ்டியும் போல் கர்மம் உலகில் கரைந்து விட்டது. நம் பழமொழிகள் அனைத்தும் கர்மத்தை நம்பி எழுதப்பட்டவை. ஆனால் அவற்றுள்ளும் உச்சகட்ட உயர்வாக பெரிய விஷயங்கள், அன்னை ஏற்கக் கூடியவை உண்டு. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற மொழி ஆசைப்படகூடாது என்பதை அழகாக வலியுறுத்துவது. நாம் இதைப்பின்பற்றி கண்ட முடிவு நம்மவரிடையே இன்று பையன் சரியில்லை, காசு சம்பாதிக்கும் ஆசை வந்து விட்டது என்று பேசுகிறோம்.

1980-க்கு முன்னால் அதுவும் 1940-இல் இந்தச் சொல் ஒருவரை திருடனுக்கு சமமாக்கி விடும். அன்றும் காசு சம்பாதித்தவனுக்குச் சமூகம் சரிவர மரியாதை கொடுத்ததும் உண்மை. சமூகம் முக்கியமானதை ஆழமாகக் கருதுவது எவரையும் முன்னுக்கு வர அனுமதிக்கக் கூடாது என்பதே. எவராலும், எவரையும் தடுத்து நிறுத்த இயலாது. அதனால் நடைமுறையில் பிரபலமான சொல் ‘ஜெயித்த கட்சி என் கட்சி.’ இது கேவலமான மனப்பான்மை. இதுவே இன்றைய நாட்டு மனப்பான்மை. இது நம் நாட்டிற்கு மட்டும் உரியதன்று. மனித குலத்திற்கே உரியது. மேல்நாட்டில் இதைக் கடந்து விட்டனர். செயலில் கடந்தாலும் மனத்தளவில் பழைய நிலையேயுண்டு. மனித சுபாவம் அன்னைக்குரிய விஷயமில்லை. ஆனால் அன்னை மனித சுபாவத்தை அறிந்ததைப்போல் யார் அறிந்தார் எனத் தெரியவில்லை. யார் அறிந்தாரோ, அறியவில்லையோ சாக்ரடீஸ் அறியவில்லை. ஊரில் உள்ள பெரிய மனிதர்களைக் குத்திக் கிளப்பி உயிரை இழந்தார். சாக்ரடீஸ் போன்றவர் அறிவும் (Mental Intelligence) வாழ்க்கையை அறிய உதவாது என்பது நாமறிவது, மக்களாட்சி உற்பத்தியான கிரேக்க நாட்டில் மக்களாட்சி சட்டப்படி (மெஜாரிட்டி) சாக்ரடீஸ் கொலை செய்யப்பட்டார். இன்றும் இக்குறை மக்களாட்சிக்குண்டு.

‘இருப்பதை விட்டு பறப்பதை நாடாதே’ என்ற பழமொழியைக் கேட்டபடியிருக்கலாம். எனக்குப் பிடிக்காததை நீ செய்யாதே என்பதை கூறும் பழமொழியிது. பழமொழி அதைக் கூறவில்லை. அதை மக்கள் அப்படி பயன்படுத்துகிறார்கள். இருப்பதை விடாமல் எதுவும் வாராது என்பது அன்னை வழி. அரிசிப் பானை, பர்ஸ் எதுவானாலும் துடைக்காதே என்பது சம்பிரதாயம். துடைத்து விட்டால் தொடர்பு அறுந்து விடும். அதனால் ஒரு மணி அரிசியாவது, ஒரு ரூபாயாவது பர்ஸில் இருக்க வேண்டும். கடைசி மணி, கடைசி ரூபாய் உள்ளவரை அபரிமிதமான அடுத்தது வாராது என்பது அன்னை. துடைக்காவிட்டால் வருவது பழைய ஏழ்மை. இருப்பதை விடாமல் எதுவும் வாராது என்பது அன்னை வழி.

ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் என்பது ஒன்று. இதிலுள்ள உண்மை பெரியது; சக்தி வாய்ந்தது. சமீப காலமாக ஓர் ஆபீசில் இருபது பேர் பணம் பெற்றால் ஒருவர் பெற மறுத்தால் அவர் லஞ்சம் வாங்குகிறார் என கம்ப்ளெயிண்ட் எழுதி அவரை டிஸ்மிஸ் செய்கிறார்கள். லஞ்சம் வாங்க மனமில்லாதவரும், லஞ்சம் வாங்கும் மெஜாரிட்டியை எதிர்ப்பது ஆபத்து. அன்னையை ஏற்பது உண்மையை முழுவதும் ஏற்பதாகும். உடனே அவர் அனைவருக்கும் எதிரியாவார். ஒரு இலட்சியவாதி இலட்சியமாகச் செயல்பட்டு அபரிமிதமாக வெற்றி பெற்று, தோற்று, நாள் கழித்து அவர் இலட்சியம் பெரு வெற்றி பெற்றது. அவர் அன்னையை 1935, 1936, 1937-இல் தரிசித்தவர். 1947-இல் அவர் இலட்சியம் வெற்றி பெற்று மூன்று ஆண்டு செல்வாக்கோடிருந்தார். வாழ்க்கை விழித்துக் கொண்டு அவருக்கு உள்ளதைக் கொடுத்து தரைமட்டமாக்கியது. அவர் வீழ்ந்த நிலையிலும் இலட்சியத்தைக் கைவிடவில்லை. 1960-இல் எதிரியே அவரைப் பாராட்டி பழைய நிலைக்கு அவரை உயர்த்த சம்மதம் தெரிவித்தபொழுது, அந்த அதிர்ஷ்டம் வேறொருவருக்குப் போய்விட்டது. ஊர் எதிராயிற்று. ஊருடன் ஒத்துப் போக இலட்சியவாதி முனைந்து பிரபலமடைந்தார். வெற்றி எதிரிக்குப் போய் விட்டது. வாழ்க்கை மெதுவாக விழித்தது. மகன் மூலம் அவருக்கு அவருடைய குணக் குறைகளை உணர்த்த ஆரம்பித்த பொழுது 40 ஆண்டுகளாக அவர் கட்டிய பிரபலம் என்ற கோபுரம் விரிசல் விட்டது. தரைமட்டமாகியது. ஊரைவிட்டே வெளியேறினார். உயிரை மாய்த்துக் கொண்டார். அன்னையை அவர் ஒரு காலத்தில் செய்த தரிசனம் அவரை கோபுரமாக உயர்த்தியது. ஊருடன் ஒத்துப் போக முயன்ற பொழுது தரையில் தள்ளப்பட்டு குழிபறிக்கப்பட்டுப் புதைக்கப்பட்டார்.

இது வாழ்வில் நாள் கடந்து, தவறாமல் பலிக்கும்.
அன்னை அதிர்ஷ்டமாகப் பலிப்பது அன்றே பலன் தரும்.

பழமொழிகளை நாம் இன்று ஏற்காமலிருக்கலாம், ஏற்பவரும் பின்பற்றாமலிருக்கலாம். ஆனால், அவை எப்படி உற்பத்தியாகி, உலகில் உயிருடன் பன்னெடுங்காலம் உலவி வருகின்றன என்பது சிந்தனைக்குரியது. இக்கட்டுரையில் அக்கருத்து முக்கியமாக இடம் பெறவில்லை. என்றாலும், குறிப்பாக ஓரிரு அடிப்படைகளைக் கூறலாம். ஒரு சொல், அதுவும் முதற்-சொல்ø ல குழந்தை பேசுமுன் அச்சொல் அதன் காதில் ஆயிரக்கணக்கான முறை விழுகிறது. பழமொழி சமூகத்தின் சிந்தனை எழுப்பும் முதற்சொல். அநேகமாக இன்று நாம் பழமொழி என்பது ஆரம்பத்தில் மக்கள் பழமொழியென உருவாக் கியதேயாகும். பழமொழி உருவம் மாறி புது மொழியாவதில்லை. பழமொழி பழைய மொழியாகவே நடமாடுகிறது. யானை வாயில் போன கரும்பு என்றால் மனிதன் அந்நிகழ்ச்சியைக் கண்டுள்ளான் என நாம் அறிகிறோம். அத்துடன் கட்டிய சுவர் இடிந்து விழுந்தால் மீண்டும் கட்டுகிறோம். பொருள் தொலைந்து விட்டால், தேடிக் கண்டுபிடிக்கிறோம். நாம் தவறாக நடந்து அண்ணனுக்குக் கோபம் வந்தால் நடத்தையை மாற்றி கோபத்தை அழிக்க முயல்கிறோம். இதுபோல் ஏராளமான காரியங்கள் நாம் செய்ய முயன்று பல வெற்றியாகவும், பல தோல்வியாகவும் முடிகின்றன. யானை வாயில் போன கரும்பு, சுயநலமாக எடுத்துக் கொண்ட பொருள் திரும்பி வராது என்பது நெடுநாளைய அனுபவம். பன்னெடுங்கால அனுபவம் வழக்காக மாறி, பழமொழி என வழங்குகிறது. போனது வராது. ஹெலனை டிராய் அரசன் தூக்கிப் போனான். பத்து ஆண்டுகள் கழித்து அவனைத் தோற்கடித்து ஹெலனை மீட்டனர். ஹெலனிருந்ததால் அவளை மீட்க முடிந்தது. கரும்பு யானை வாயின் மூலம் ஜீரணமாகும். எப்படி வர முடியும்? அன்னை எப்படி செயல்படுவார்? உலக சக்திகள் அன்னைக்குக் கட்டுப்படும். அதனால் அக்காரியம் நடக்கும்.

 • 30 ஆண்டுகளுக்குமுன் திருடன் கையில் போன புத்தகத்தை அவனே வீடு தேடி வந்து திருப்பிக் கொடுத்தான். — அது Synthesis of Yoga.
 • ஏமாற்றுவதில் கைதேர்ந்தவர் தனக்குச் சாதகமாக contract எழுதியதால் அன்பர் contract -ஐ ஏற்கவில்லை. அன்னையே நேரில் தலையிட்டு முழுச் சொத்தையும் அன்பர் கேட்காமலேயே வாங்கிக் கொடுத்தார்.
 • முதலமைச்சரே எதிரியாகி எடுத்துக் கொண்டுபோன ஸ்தாபனம் நிலைமை மாறி கோர்ட் மூலம் அன்பருக்கு வந்தது.

பழமொழிகட்கு வலிமையுண்டு. அதுவும் அச்சொல் எழுந்த அதே சந்தர்ப்பங்களால் முழு வலிமையுண்டு. அன்னையின் வலிமை அடுத்த உயர்ந்த கட்டத்திற்குரியது என்பதால், அன்பர் வாழ்வில் பழமொழி பலிக்காது.

‘கிட்டாதாயின் வெட்டென மற’ என்ற மொழி மனக்கிலேசத்தை விலக்கக் கூறிய உபாயம். இப்பழமொழி அன்னையிடம் எதிராகச் செயல்படும். கிட்டாத பொருளை நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் இருமடங்காகப் பலிக்கும். மனிதனின் அல்ப குணத்தாலோ, சந்தர்ப்பத்தாலோ கிட்டாதப் பொருள்கள், அன்னையருளால் நாள் கடந்து கிடைக்கும் பொழுது அபரிமிதமாக அளவு கடந்து கிடைக்கும். வாழ்விலேயே நாம் மறந்தால், வாழ்வு முனைந்து தரும் என்ற அனுபவம் அனைவருக்கும் உண்டு. எனக்கில்லை என்று நான் மறந்தபின் என்னைத் தேடி அது வந்தது என்பது நாம் பொதுவாகக் கேள்விப்படுவது. எவர் ஆர்வமாக, ஆத்திரமாக மறுத்தாரோ அவரே ஆர்வமாகத் தேடிவந்து கொடுப்பார் என்பதும் சிலர் விஷயத்தில் அனுபவம். மேலும் இல்லையென்ற பொருள் வரும்பொழுது பெரியதாக வரும். சர்க்கரை ஆலையில் பாகு கிடைக்காதவர் சில ஆண்டுகள் கழித்து அதே சர்க்கரை ஆலையை வாங்கினார்.

‘நல்லவர் செய்ய முடியாததை நாள் செய்யும்’ என்பது பழமொழி. எந்த நல்லவரும் செய்ய முடியும் என நினைக்கவும் முடியாததை அன்னை செய்வார் என்பதற்கு அன்பர் பிரார்த்தனைகள் அனைத்தும் உதாரணம். எவரும் SSLC பாஸ் செய்யாத வீட்டில் அன்னை அருளால் பையன் பட்டம் பெற்றான். எந்த நல்ல உள்ளமும் நினைத்தும் பார்க்க முடியாத உயர்ந்த செயல் உன்னதமாக அன்பர் வாழ்வில் நிறைவேறியது.

ஒரு இருபது மொழிகளை ஊன்றிப் படித்தால், நம்மால் எதுவும் முடியாது, உள்ளதைக் காப்பாற்றுவதேப் பெரியது, சும்மாயிருப்போம், அப்பன், பாட்டன் வாழ்ந்தது போல் வாழ்ந்தால் போதும் என்று ஊர்ஜிதமாகத் தோன்றும்.

 1. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
 2. இருப்பதை விட்டுப் பறப்பதை நாடாதே.
 3. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
 4. கிட்டாதாயின் வெட்டென மற.
 5. கொண்டவள் சரியில்லை எனில் கூறாமல் சன்னியாசம் கொள்.
 6. மாமியாரை மெச்சிய மருமகளுமில்லை, மருமகளை மெச்சிய மாமியாருமில்லை.
 7. யானை வாயில் போன கரும்பு.
 8. மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்.
 9. யானைக்கும் அடி சறுக்கும்.
 10. எதற்கும் நேரம் உண்டு.
 11. நாள் செய்வதை நல்லவர் செய்ய மாட்டார்.
 12. ஆடிப்பட்டம் தேடி விதை.
 13. ஆவதும் பெண்ணால், அழிவதும் பெண்ணால்.
 14. தாயைப் போல பிள்ளை, நூலைப் போல @சலை.
 15. கர்மத்திற்கும், காலத்திற்கும் கட்டுப்பட வேண்டும்.
 16. கடன் கேட்காமல் கெட்டது, பயிர் பார்க்காமல் கெட்டது.

இவையும் இதுபோன்ற அநேக பழமொழிகளும் நாட்டில் வழங்குகின்றன. பல நூற்றாண்டு உலக அனுபவம் இன்று ஒரு மனிதன் வாழ்க்கையை உருவாக்கும் சொற்கள் இவை. காலத்தால் வாழ்வு நமக்களித்த சாரமான ஞானம். ஐயமில்லை. ஆனால் அவை மாட்டு வண்டி, காங்கேயம் மாடு, வெள்ளிக் கொம்பு, வெள்ளிப் பிடி போட்ட டயர் வண்டி. இன்று யாரையாவது அதில் போகச் சொல்ல முடியுமா?

இலட்சியவாதிகள், இலட்சியம் பூர்த்தியாக, எதிரி வீட்டை நாடுவது இலட்சியத்தின் உயர்ந்த அம்சம். காந்திஜி, நேரு, ஜின்னா, ராஜாஜி, பெரியார் அவற்றைச் செய்துள்ளனர். ஆனால், இப்பழமொழி சக்தி வாய்ந்தது. சாதாரண மனிதன் இதை மீறினால், ஏன் இங்கு வந்தீர்கள் என்பது போல் வரவேற்பிருக்கும். சில ஊர்களில் அதைக் கேட்டு விடுவார்கள். ‘நாவினால் சுட்ட வடு மாறாதே’ என்ற அனுபவம் ஏற்படும். மரியாதைக்கு மட்டுமல்ல, பிரியமில்லாதவரும் அப்படியே, மாமனார் வீட்டில் மறுநாள் தங்க வேண்டி வந்தால், உடனே இவ்வனுபவம் எழும், மரியாதையில்லாதவர்க்கு மரியாதை கொடுத்தால், நீங்கள் திடீர் திடீரென வருவது சிரமம் தருகிறது என்றவர் மேலும் கூறுகிறார். நான் என் வீட்டில் கோவணத்துடனிருப்பேன், என் தகப்பனாரும் அப்படியேதானிருப்பார். நீங்கள் வந்து விட்டால் கஷ்டமாக இருக்கிறது என்றார். சொல்லியவர் பட்டம் பெற்றவர். தகப்பனார் பியூனாக ஓய்வு பெற்றவர்.

எதற்கும் அளவுண்டு

என்ற சொல் எந்தக் காலத்திலும், எந்தச் செயலுக்கும் தவறாமல் பொருந்தும். It is an eternal truth. ஆயிரம் காலம் அழியாத சத்தியம் அகல் விளக்காக ஆரம்பித்து, கலங்கரை விளக்காக உலகெங்கும் ஒளி வீசுகிறது. இப்பழமொழிகள் காலத்திற்குரியவை. அவை ஏற்பட்ட சமுதாயத்திற்குரியவை. என்றும் நின்று நிலைபெறும் ஆன்மீக விளக்கம் பெற்றவையில்லை, எழுந்த காலத்தில் ஏற்றத்துடன் விளங்கியவை. அன்பர்கட்கு அர்த்தமற்றவை.

கடன் கேட்காமல் கெட்டது என்பது பேருண்மை. அன்பர் கடனைக் கேட்கக் கூடாது என முடிவு செய்ததால் பணம் திரும்பி வந்த அனுபவம் ஒரு முறைக்கு மேலும் உண்டு. எதற்கும் நேரம் உண்டு என்பதை வைதீகர்கள் தெளிவாக அறிவார்கள். குளிகையில் இறந்தவரை எடுக்க மாட்டார்கள். அது ஆபத்து என அனைவரும் அறிவர். ஆகஸ்ட் 15, 1947 உலகம் புண்ணியம் செய்த நேரம். சம்பிரதாயப்படி நல்ல நேரமில்லை. அதனால் அரை மணி முன்னதாக சுதந்திர விழா ஆரம்பிக்கப்பட்டது. நாட்டுக்கும், உலகிற்கும் புனிதமான நேரத்தை, அறியாதவர் மெனக்கெட்டு கெட்ட நேரத்திற்கு உட்படுத்தினார். அதனால் வந்த ஆபத்தே இருபது இலட்சம் பேரிறந்தனர். ஒரு கோடி அகதிகள் இடம் பெயர்ந்தனர்.

The creative moment is more than an auspicious hour. மனித இதயம் ஆன்மாவிற்குரியது. நல்ல நேரம், கெட்ட நேரம் எளிய மனிதனுக்குரியது. அவன் மனதால் செயல்படுபவன். ஆன்மா விழித்தெழுந்த நேரம் அகில உலகமும் அன்பரை நோக்கித் திரும்பி அழைக்கும் நேரம். ஆகஸ்ட் 15, 1947 அதுபோன்ற உலகத்தைக் கடந்த பிரபஞ்சத்திற்கு உரிய உன்னதமான நேரம். இந்திய விடுதலையை நாற்பத்தி ஐந்து நாடுகட்கு அளித்த நேரம். சொல்லப் போனால் ஆன்மீக அனுபவப்படி 1947 ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஏழு ஆண்டிற்குமுன் உலகப் போரை வெல்ல வழிவகுத்த சுபமுகூர்த்தம். பாரத யுத்தம் குருக்ஷேத்திரத்தில் வெல்லப்பட்டது. அது ஜடலோக வெற்றி. திரௌபதியின் குரல் பரமாத்மாவுக்குக் கேட்ட நேரம் போர் சூட்சும உலகில் வெல்லப்பட்டது. 1945 ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஜப்பான் சரணடைந்தது. அது மௌண்ட்பேட்டன் தலைமையில் நடந்தது. அதனால் அவர் இந்திய சுதந்திரத்திற்கு ஆகஸ்ட் 15 ஆம் தேதியைத் தேர்ந்தெடுத்தார்.

1946-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி கடற்படை வீரர்கள் பம்பாயில் கலகம் செய்தனர். மறுநாள் இலண்டனில் பார்லிமெண்ட்டில் அட்லி காபினட் கமிஷன் அனுப்புவதாகக் கூறினார். எந்த நிகழ்ச்சியும் முன்கூட்டி அறிவிப்பதுண்டு. நேரம் என உலகம் அறிவது காலத்திற்குட்பட்ட நல்ல நேரம். அன்னையை நினைத்தவுடன் அந்த க்ஷணமே அந்நேரம் நமக்கு மட்டுமல்ல, நம்மைச் சேர்ந்த உலகத்திற்கே நல்ல நேரமாகிறது என்பது ஆன்மீக சத்தியம். இது பழைய மகான்களும் அறிந்தது. ‘நாளெல்லாம் நல்ல நாளே’ என நால்வரில் ஒருவர் பாடியிருக்கிறார்.

தாயைப்போலப் பிள்ளை, நூலைப் போல சேலை என்பது உண்மையானால், ஸ்டீவ் தாயார் பிறந்த குழந்தையைத் தன் திருமணம் கருதி முழுச் சுயநலமாகத் தன்னை விட்டுப் பிரித்து விட்டார். ஸ்டீவ் வாழ்நாள் முழுவதும் சுயநலமற்ற சேவைக்குரிய பெருவாழ்வு வாழ்ந்தார். அன்னைக்கு மட்டுமல்ல, காலம் மாறும்பொழுது, பழமொழி பழைய நாட்கள் போல் பலிப்பதில்லை.

மாமியாரை மெச்சிய மருமகளில்லை என்பது பூரண உண்மை. இது வேறொரு பேருண்மையின் சிறு பகுதி. எந்தப் பெண்ணும் அடுத்தப் பெண்ணை இயல்பாக வெறுக்கிறாள் என்பது உலக இலக்கியம் பொதுவாகக் கூறுவது. இது பெண்மைக்குரியது. மாமியாருக்கு மட்டும் உரிய சொல் அன்று. மேலும் ஒரு விஷயம் உண்டு. ஒருவரை அதிகாரம் செய்ய இடமிருந்தால் அந்த இடத்தை மனித சுபாவம் தவறாகப் பயன்படுத்தாமலிருக்காது. இது அதிகாரி, முதலாளி, தலைவன், பணக்காரன், வியாபாரி ஆகிய அனைவரும் சகஜமாகப் பயிலுவது. பொருள் கிராக்கியானால் கடைக்காரன் மரியாதை யாகப் பேசமாட்டான். பொருளை விற்க முடியாவிட்டால் மரியாதை உடனே எழும். இது மனித சுபாவம், அல்ப சுபாவம். மாமியார் மருமகளிடம் கண்டால் அது பழமொழியாக உருவாகிறது.

பழமொழிகள் அர்த்தமற்றவையாகியபடியால், நாம் இன்று புதுமொழிகளை எழுத வேண்டும். சுமார் முப்பது ஆண்டுகளாக grow by giving கொடுப்பது வளர்வது என்ற சொல் வழக்கில் வருகிறது. Customer satisfaction வாடிக்கையாளர் திருப்தி, வியாபாரியின் இலாபம் என்பது நூறாண்டாக அமெரிக்க மார்க்கெட்டில் உள்ளது. ‘நால்வர் காலத்தில் நாளெல்லாம் நல்ல நாளே’ என்ற சொல் எழுந்தது. ‘அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்’ என்பதை மாற்றி இன்று சுதந்திரம் சுபீட்சம் என்று நாம் கூற வேண்டும். Heaven and hell are not places of resort, but conditions of Mind என்பதும் இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்டதாகும். சொர்க்கமும், நரகமும் வாசஸ்தலமல்ல, மக்கள் மனநிலையாகும். திருப்பதி வெங்கடாசலபதி படம் நெடுநாளைக்குமுன் காப்பிரைட்டால் செயல்பட்டபொழுது, தேவஸ்தானத்திற்கு ஒருவர் காப்பிரைட்டை அழித்து விட்டால் அதிக வருமானம் வரும் என்றார். அது அதிக வருமானமில்லை. அன்று திருப்பதிக்கு தினமும் நூறு பேர் வந்தனர். இன்று 20,000 பேர் வருகின்றனர். வருமானம் படம் மூலம் ஆயிரமாயிரம் மடங்கு.

பழமொழி பழைய மொழி. புது உலகம் நாடாத மொழி.

நாட்டில் அன்றிருந்த ஆரம்பப் பள்ளிகளைவிட அதிக அளவு கல்லூரிகளும், உயர்நிலைப் பள்ளிகளும் வந்த நேரம், பழமொழி, பழைய மனநிலை, கட்டுப்பெட்டி, பஞ்சாங்க மனப்பான்மை இவைகளை கனவிலும் சேர்க்க முடியாத நேரம். அன்று வகுப்பில் ஐம்பது அல்லது நூறு மாணவர்களிருந்தனர். இன்று Oணடூடிணஞு வகுப்பைப் பத்து இலட்சம் மாணவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். 2000-ஆம் ஆண்டு பத்திரிக்கை ஆசிரியர், தன் மூவாயிரம் ஊழியரில் எவரும் தன்னைத் தவிர செல்போன் வைத்திருக்க அனுமதிக்கவில்லை! இன்று அவர் வீட்டு வேலைக்காரியும் அதை வைத்திருக்கிறாள்.

நூறு பேர் யோகம் செய்யத் தேவை. பன்னிரண்டு பேராவது செய்தால் சத்திய ஜீவியம் வரும் என்று 1920-இல் பகவான் கூறினார். 1950-இல் உடலை நீத்து சூட்சும உலகுக்குப் போய் 1956-இல் சத்திய ஜீவியத்தை உலகுக்கு அனுப்பினார். 1965-இல் பசுமைப் புரட்சி எழுந்து நாட்டை உயிர்ப்பித்தது. அதற்குமுன் 1960-இல் ஹிப்பிகளைக் கண்டு அன்னை இது புரட்சி என்றார். 1985-இல் டாம் பீட்டர்ஸ் சுதந்திரம் வேண்டுமென ‘புரட்சி’ செய்தார். பத்து ஆண்டுகளாக ஸ்டீவ் செய்த காரியம் — பாட்டு — உலகெங்கும் கோடிக்கணக்காகப் பரவுகிறது. அதேபோல் சினிமா CD-க்களும் பரவி விட்டன. இன்று புத்தகங்கள் புரட்சி வெள்ளத்தில் எணிணிஞ்டூஞு மூன்று கோடி புத்தகங்களையும் Amazon eBooks மூலமும் பொது உடமையாக்கி விட்டனர். 1865-இல் நீக்ரோக்கள் சட்டப்படி சுதந்திரம் பெற்றனர். 1945-க்குப் பின் பிரிட்டிஷ் காலனிகளும், மற்ற காலனிகளும் சுதந்திரம் பெற்றன. 1965-இல் வந்த பசுமைப்புரட்சி விவசாயிக்கு உலகெங்கும் வாழும் உரிமையைக் கொடுத்தது. செல்போன் பேசும் உரிமையை அளிக்கிறது. காப்பிரைட் போனபின் புத்தகங்கள் படிக்கும் உரிமையை அளிக்கிறது. ஞானம் சுதந்திரம் பெறுகிறது. கர்மமும் விடுதலை பெற வேண்டும்.

1950-இல் பகவான் சாவித்திரியை எழுதி முடித்தார். பாரதத்தில் சாவித்ரி சத்தியவானை மீட்டாள். ஸ்ரீ அரவிந்தத்தில்,

சாவித்ரி எமனை அழித்து விட்டாள்.
எமன் அழிவது மட்டுமல்ல,
எமன் ஒளிமயமான ஜீவனாகத் திருவுருமாறினான்.
இனி உலகில் பொய் புரட்டுக்கு ஜீவனில்லை
பழமொழியைப் புது மொழியாக்க வேண்டும்.

*******

ஜீவிய மணி
 
உலகத்தின் அற்புதங்களை இறைவன் காலத்துள் வைத்துள்ளான் என்கிறது சாவித்ரி.
 
ஜோஸ்யரிடம் போனால் நம் பிறந்த நாளைக் கேட்கிறார். நம் நாள், நேரத்தைக் கூறுகிறோம். அவர் கட்டம் போட்டு நாள், நட்சத்திரம், லக்னம், ராசி, திசை என ஆயிரம் விவரங்களை எழுதுகிறார். அவர் கணக்கு முடிந்தபின் நாம் கூறிய நாள், மணி இவ்விரண்டிலிருந்து நம்முடன் பிறந்தவர், பெற்றவர்கள், நாம் வாழ்க்கைப்பட்டவர், நமக்குப் பிறந்தவர், செய்த தொழில், இனி செய்யப்போகும் தொழில், இதுவரை வாழ்வில் நடந்தவை, இனி நடக்கப் போகும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் கூறுகிறார். மேலும் அவரால் போன ஜென்மத்தையும், அடுத்த ஜென்மத்தையும் சொல்லமுடியும்.
நாம் கூறிய சிறு விவரங்களினின்று அவர் நம் உலகையே அறிந்து பேசமுடிகிறது என்றால் அந்த நேரம் என்ற ஒரு விஷயத்தில் வாழ்வு என்ற கடல் மறைந்துள்ளது. இந்த நேரம் நாம் பிறந்த நேரம்.
 
காலத்தின் நாழிகை இறைவன் பிறக்கும் நேரமாகும்.
ஜோஸ்யர் நம் வாழ்வை அறிவார். ரிஷி நேரத்தில் இறைவன் ஜாதகத்தைக் காண்கிறார்.
 book | by Dr. Radut