Skip to Content

10. அன்னை இலக்கியம் - நல்லதோர் வீணை செய்து

அன்னை இலக்கியம்

நல்லதோர் வீணை செய்து

(சென்ற இதழின் தொடர்ச்சி)

இல. சுந்தரி

‘அது சரி பெரியம்மா. நீ ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?’ என்றாள் திடீரென்று.

‘உனக்காகத்தான்’ என்றாள் சுபா.

‘அது எப்படிப் பெரியம்மா? சுமதி உன் தங்கைதானே? உனக்கு முன்பே அவளுக்குத் திருமணமாகிவிட்டதா? இல்லை உண்மையில் நான் உன் குழந்தையேதானோ? தன் பணத்திற்கும், பகட்டிற்கும் என்னை வாரிசாக்கப் பார்க்கிறாளா?’ என்றாள்.

‘அம்மாவைப் பெயர் சொல்லி அவள், இவள் என்றெல்லாம் பேசக்கூடாது. அவளுக்கு எனக்கு முன்பே திருமணமாகி நீ பிறந்ததால் உன்னை என்னிடம் கொடுத்தாள்’ என்றாள் சுபா.

‘பெற்ற குழந்தையை வளர்க்கக்கூட முடியாமல் பெரிய தொழிலா?’ என்றாள் கோபமாக.

‘என்ன செய்வது ஆர்த்தி? அவள் திறமையும், உழைப்பும் தொழிலில் முன்னேற்றம் தந்தது. அவள் தன் தொழிலுக்கு உண்மையாயிருக்கிறாள். அதன் அவலங்களை வெறுக்கிறாள். அதனால்தான் உன்னைச் சிறப்பாக வளர்த்து, வாழ வைக்க உன்னை என்னிடம் தந்தாள். உண்மையைச் சொன்னால் நீதான் அவளுடைய மிகப் பெரும் சொத்து. அதை அவள் எனக்கு மனமுவந்து கொடுத்தாள்’ என்று சொல்லும் போதே கண்ணீர் வர, கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.

‘போதும் உன் தங்கை புராணம். சீக்கிரம் உன் சிநேகிதியைப் பார்க்கப் போகலாம் வா. இந்தப் பேச்சு, இந்தச் சூழல் எதுவுமே எனக்குப் பிடிக்கவில்லை. முற்றிலும் மாறுபட்ட சூழலுக்குப் போய்விடுவோம் வா’ என்றாள்.

அவள் வேகம் கண்டு சிரித்தாள் சுபா. மறுநாள் காலையே புறப்படுவது என முடிவு செய்து தேவையானவற்றையெல்லாம் ‘பாக்’ செய்துவிட்டு உறங்கப் போயினர்.

இரவு ஆர்த்தி உறங்கிய பிறகு, சுபாவைச் சந்தித்து வசந்தியுடன் தொடர்பு கொண்டு, சுபாவும், ஆர்த்தியும் வருவது பற்றித் தெரிவித்து வசந்தியின் சம்மதமும் கிடைத்து விட்டதைக் கூறினாள்.

‘அத்துடன் சுபா! இனி நான் என் மனத்தை மாற்றிக் கொள்ள முடிவு செய்து விட்டேன். என் குழந்தையின் அன்புக்காக இனி நான் ஏங்கப் போவதில்லை. அவள் நன்றாக இருந்தாலே எனக்குப் போதும் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டேன்.

அவள் மனம் என்னால் கசப்படைய வேண்டாம். சுபா இனி அவள் உன் குழந்தை. நீதான் அவளைப் பாதுகாக்க வேண்டும்’ என்றாள் சுமதி.

‘என்ன பேச்சு சுமதியிது? இம்முறை வெளியூர் போய்வந்தபின் எல்லாம் சீராகிவிடும். நீ மனத்தைத் தளரவிடாதே. நீ அந்தப் பெண்ணுக்கு, அதுதான் வசந்திக்கு எல்லாம் தெரிவித்துவிட்டாயா? என்னைப் பார்த்தால் புரிந்து கொள்வாளா?’ என்றாள் சுபா.

‘எல்லாம் தெரிவித்திருக்கிறேன். நீ அவளைப் பார்த்ததும் வசந்தி என்று பேச்சைத் தொடங்கு. ஆர்த்தி கெட்டிக்காரி. என்னைக் குற்றவாளிக் கூண்டில் வைத்திருக்கிறாள். உன்னையும் தவறாகப் புரிந்துகொண்டால் என் குழந்தைக்குப் பாதுகாப்பிராது’ என்று உணர்ந்து கூறினாள்.

சரி, கவலையை விடு. நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்றாள் சுபா.

மாலையும், மதியமும் கூடும் ஒரு சுமுகமான பொழுதில் ஆர்த்தியும், சுபாவும் பச்சிலைக்காடு என்னும் சிற்றூரை அடைந்தனர்.

காம்பவுண்டு சுவர் போல் வரிசையாய் அழகாய் முளைத்து வெட்டிவிடப்பட்ட பச்சைபசேர் என்ற செடிகளுக்கு மத்தியில் ஓர் இரும்புக் கதவு, அது திறந்தேயிருந்தது. அந்த வாயிலிலிருந்து வசந்தியின் வீட்டு வாயில் நிலைவரை இருபுறமும் செடிகள் வரிசையாய் வீற்றிருக்க அவற்றினிடையே பாதையிருந்தது. கம்பிக் கதவுக்கு வெளியே காரை நிறுத்தி இறங்கிக் கொண்டு பாதை வழியே வீட்டை நோக்கி ஆர்த்தியும், சுபாவும் வர, அவர்கள் வருகைக்காக வாயிற்புறத்தே காத்து நின்றாள் வசந்தி. அங்கிருந்தே பார்க்கிறாள் ஆர்த்தி. அம்மாவின் வயதிருக்கும். ஆனால் அம்மாவின் கவர்ச்சியில்லை. ஆனால் ஓரழகிருந்தது. பாரதியின் அம்மாவைப் போல குடும்பப்பாங்கான அழகில்லையிது. கோயிலில் குடிகொண்டு, விருப்பு வெறுப்பின்றி அனைவராலும் நேசிக்கப்படும் ஈஸ்வரியின் அழகிது. இந்த அழகு காலத்தோடு தொடர்பு கொண்டதன்று. காலம் கடந்த அழகு. மனித உருவில் மானுடம் கடந்த தோற்றம். முகம், கண், புருவம், என்று வர்ணிக்க முடியாத அழகு. அந்த அழகு அந்தப் பெண்மணியிடமிருந்து தன் கண்ணில் வந்து ஒட்டிக் கொண்டதோ. அவரைப் பார்த்து, எதைப் பார்த்தாலும் அழகாயிருக்கிறது. பிரமிப்பாயிருக்கிறது. அவள் ஆர்த்தியைப் பார்த்து அழகு ததும்பச் சிரித்தாள். புறவுலகில் இதுவரைச் சந்தித்த கசப்பெல்லாம் இனிப்பாக உருமாறுவது போல் என்ன இனிமை? பதிலுக்கு இவளும் சிரித்தாள். அவர்மீது தனக்குள் மிகுந்த அன்பெழுவதை உணர்கிறாள். இவர்தான் என் அன்னையோ? இவரிடம் என் மனம் ஏன் ஒட்டிக் கொள்ள ஆசைப்படுகிறது? பெரியம்மாவிடம் சிறுவயது முதல் வளர்ந்தேன். அவரிடம் எனக்குள்ள பாசம் இயல்புதான். ஆனால் இவர் எனக்கு என்ன உறவு முறை? பெரியம்மா தன் சிநேகிதி என்றல்லவா கூறினாள். ஒருவேளை முந்தைய பிறப்பின் பந்தமோ? என்று கணப்போதில் யாவும் எண்ணுகிறாள்.

பிரமித்து நிற்கும் ஆர்த்தியை நோக்கி, இறங்கி வருகிறாள் வசந்தி. ‘வா’ என்பது போல் புன்னகைத்துத் தலையசைக்கிறாள்.

ஓடிவந்து வசந்தியின் கையைப் பற்றி, ‘நானுங்களைச் சித்தி என்று கூப்பிடவா? பெரியம்மா என்று கூப்பிடவா?’ என்று எடுத்த எடுப்பில் அறிமுகமானவரிடம் பேசுவது போல் உரிமையுடன் கேட்டாள்.

‘உன் அம்மாவைவிடச் சிறியவளானால் சித்தி எனலாம். பெரியவளானால் பெரியம்மா எனலாம். சமவயதானால்?’ என்று எதிர்க்கேள்வி தொடுத்தாள் வசந்தி.

‘உங்களை அம்மா என்று அழைக்கத் தோன்றுகிறது’ என்றாள் நெகிழ்ந்த குரலில்.

‘கடவுள் அளித்த பரிசல்லவா நீ. அப்படியே கூப்பிடு’ என்று அருகில் வந்த ஆர்த்தியை அணைத்து முத்தமிட்டாள்.

இந்தவித பாசத்திற்கு ஏங்கிய சுமதியை எண்ணி மனதில் இரக்கங் கொண்டாள் சுபா.

இவர்களை உள்ளே அழைத்துச் சென்றாள் வசந்தி. பளிச்சென்று மின் விளக்குகள் வாயிற்புறம் முதல் தோட்டப்புறம் வரை ஒளியூட்டத் தொடங்கின. வீட்டின் ஒவ்வோரிடமும் பரிச்சயமான இடம்போல் தோன்றுகிறது. மான் குட்டி போல் ஒவ்வொரு இடத்திற்கும் துள்ளிச் சென்று மகிழ்கிறாள் ஆர்த்தி.

இரவு சாப்பாட்டின் போது அது வேண்டாம், இது வேண்டாம் என்னாது பிரசாதம் போல் மதித்துச் சாப்பிடுகிறாள்.

அதிகாலையில் எழுந்து இசைப்பயிற்சி செய்யும் ஆர்த்தி, வசந்தி தியானம் செய்வதைக் கண்டு அமைதியாக இருக்கிறாள்.

இரவெல்லாம் சுமதியை எண்ணி, உறங்காதிருந்த சுபா விடியலில் தூங்கிவிட்டாள். அவள் எழும் முன்பே, வசந்தியும், ஆர்த்தியும் குளித்து முடித்து, காலை, பலகாரம் தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தனர். வீட்டில் சமையல் வேலை ஏதும் அவசியமில்லாததால் எவ்விதப் பழக்கமும் இல்லாத நிலையில், இங்கு இட்லிமாவைக் கரண்டியால் கலக்கி இட்லி தட்டுகளில் உள்ள குழிகளில் திட்டமாக வார்த்து தட்டுகளை அதற்குரிய நடுத்தண்டில் வரிசையாக அடுக்கி, இட்லி குக்கரில் வைத்து மூடிவிட்டுச் சரியாக இருக்கிறதாம்மா? என்கிறாள் வசந்தியிடம் திரும்பி. டெமான்ஸ்ட்ரேட்டரைப் போல் வசந்தி நின்று கொண்டு வெரிகுட் பேபி என்று பாராட்டுகிறாள். சாதனை புரிந்த மகிழ்ச்சி முகத்தில் ஒளி வீச உற்சாகமாயிருந்தாள் ஆர்த்தி.

அப்பொழுதுதான் எழுந்து வந்த சுபா தன் தாமதத்திற்கு வெட்கி, ‘என்னை எழுப்பியிருக்கக் கூடாதா வசந்தி? இதெல்லாம் நான் செய்திருக்க மாட்டேனா?’ என்றாள்.

உடனே ஆர்த்தி, ‘அங்குதான் பெரியம்மா உன் ராஜ்யம். இது என் வீடு. இங்கு எல்லாம் நான்தான், இல்லையாம்மா?’ என்று வசந்தியைக் குறும்பாய்ப் பார்த்து சிரித்தாள்.

வசந்தி இவள் ஆர்வத்தையெல்லாம் தன் புன்சிரிப்பால் ஏற்றுக் கொண்டாள்.

சுபா வியந்து நின்றாள்.

‘என்ன பெரியம்மா வியந்து நிற்கிறாய்? ஹாஸ்டலில் தங்கிப் படித்துவிட்டு சொந்த வீட்டிற்கு வந்தது போல் இருக்கிறது. ஒரு வேளை போன பிறவியில் இந்த வீட்டில் வாழ்ந்திருப்பேன் போலும்’ என்றாள். ஒவ்வொரு நேரமும் புதுப்பொலிவுடன் காணப்பட்டாள் ஆர்த்தி.

வசந்தியின் படிக்கும் அறை. தனித்துவம் வாய்ந்தது. வீடு முழுவதும் ஒரு தெய்வசாந்நித்யம் இருந்தது. படிக்கும் அறையில் சாந்நித்யம் ததும்பி வழிகிறது என்று சொல்லத் தோன்றும் கண்ணாடிக் கதவிட்ட சுவரோடு அமைக்கப்பட்ட அலமாரிகளில் அழகுற அடுக்கப்பட்டுள்ள புத்தகங்கள். ஒரு கம்ப்யூட்டர், உட்கார்ந்து படிக்க ஏதுவாக அழகிய டேபிள், சேர்கள். அறையின் மறுபுறம் சிறிய மேடையமைப்பும் அதில் அழகிய வீணையும் வைக்கப்பட்டிருந்தது.

இந்த வீணையின் பக்கம் அடிக்கடி வந்து நின்று மெல்ல அதன் தந்தியை வருடி விட்டுப் போக ஆசைப்படுவாள் ஆர்த்தி.

அவளுடைய இந்த ஆர்வத்தை வசந்தியும் கவனிப்பாள். ஒருநாள் மாலை வேளையில் வசந்தி, நடுமுற்றத்துப் பூந்தொட்டி களுக்கு நடுவே அமர்ந்து அமைதியாக இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தாள். ஆர்த்தி மெல்ல வந்து அவள் அருகில் அமர்ந்தாள். ஆர்த்தியைப் பார்த்தவுடன் வசந்தி, சின்னஞ்சிறு கிளியே என்ற பாரதியின் பாடலை மிக இனிமையாகப் பாடத் தொடங்கினாள். உடனே ஆர்த்தி, உள்ளே ஓடிப்போய் வீணையைத் தூக்கிக்கொண்டு வந்து விட்டாள். சுபாவும் அவர்கள் இருவரையும் ரசித்துக் கொண்டு ஒரு புறம் அமர்ந்தாள். வசந்தி சிறிதும் எதிர்பாராத நிலையில், ஆர்த்தி வீணையின் தந்தியில் சுருதி சேர்த்துக் கொண்டு, வசந்தியுடன் இணைந்து அந்தப் பாடலை வீணையில் வாசித்தாள்.

ஆர்த்தி ஏதோ ஆவலுடன் வீணையை அடிக்கடி வருடிப் பார்ப்பதாக எண்ணியிருந்த வசந்திக்கு இது வியப்பாகவும், களிப்பாகவுமிருந்தது. பாடி முடித்தவுடன் அவளைத் தன் பார்வையில் பாராட்டினாள் வசந்தி. வீணையை மெல்ல நகர்த்தி வைத்துவிட்டு வசந்தியின் மடியில் உரிமையுடன் தலைவைத்துப் படுத்துக் கொண்டாள். அவள் தாயன்புக்கு ஏங்குவது புரிந்தது. அவளை மெல்ல வருடிக் கொடுத்து அணைத்து முத்தமிட்டாள். ‘ஆர்த்தி! உன்னிடம் இறைமை இருக்கிறது. நீ வீணையிசைத்த போது அது வெளிப்பட்டு என்னைத் தழுவிக் கொண்டது’ என்றாள். ‘அம்மா! உங்கள் பாட்டில் மயங்கியல்லவோ நான் வீணை இசைத்தேன். உங்களிடம் உள்ள தெய்வீகம்தான் என்னை இயக்கியது’ என்றாள்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த சுபா, சுமதியை நினைத்துக் கண்கலங்கினாள். இந்தப் பாடலுக்கு அவள் திரைப்படத்தில் நடித்தபோது கிடைத்த பாராட்டையும், அந்தப் புகழுக்குக் காரணம், தான் உண்மையிலேயே ஆர்த்தியின் மீது கொண்ட பாசம் வெளிப்பட்டதே என்பதையும் அவள் சுபாவிடம் கூறியிருந்தாள். ‘அந்தக் காட்சியில் நான் பாடுபட்டு நடிக்கவில்லை. என் உள்ளத்து நீண்ட நாள் ஆவலை அப்போது உண்மையில் வெளிப்படுத்தினேன். மக்கள், அதை என் நடிப்புத் திறன் என்று எண்ணிப் பாராட்டுகின்றனர். எனக்கு மட்டும் மனம் இல்லையா என்ன?’ என்று கூறி சுபாவிடம் அழுதாள். அவள் விரும்பும் அந்த ஆர்த்தியின் பாசம் வசந்தியிடம் பாய்ந்து கொண்டிருப்பதைக் கண்ணிமைக்காமல் கண்டாள் சுபா.

வசந்தியின் ஒவ்வொரு செயலிலும் ஆர்த்திக்கு ஈடுபாடிருந்தது. வசந்தி மணிக்கணக்காகத் தவம் போல் படிப்பாள். ஆர்த்தியும் அதுபோலவே படிக்க ஆரம்பித்தாள். அங்குள்ள புத்தகங்களில் ஒன்று கூட பொழுதுபோக்கோ, பாலுணர்வைத் தூண்டுவதோ இல்லை. ஒவ்வொன்றும் ஓர் உயர் பொருளை நோக்கி அழைத்துச் செல்லும் அமரத்துவம் வாய்ந்தவை. வசந்தியின் செயல்களில் நேர்த்தியிருந்தது. செய்யும் முறையில் நளினமிருந்தது. பேச்சில் கனிவு இருந்தது, உறுதியுமிருந்தது.

கம்ப்யூட்டர் முன் அமர்ந்து திடீர் திடீரென புரோக்ராம் செய்வாள். எல்லாம் ஆங்கிலத்தில் இருந்தாலும் ஆர்த்தி அழகுறப் படிக்கும் அளவு மொழியறிவு பெற்றிருந்தது உதவியாயிருந்தது. எல்லாம் உயர் பொருள், உயர்வுணர்வு என்ற நிலையில் இருக்கும். புரிவது சற்று கடினமாயிருந்தாலும், சுவாரசியமாயிருக்கும். தனக்கும் அவளைப் போலவே படிக்க, கம்ப்யூட்டரில் செயல்பட மிகவும் ஆர்வமாக உள்ளது என்பாள் ஆர்த்தி.

கல்லூரிப் படிப்பை முடித்துவிடு. ஓரளவு மொழியறிவு, இலக்கியரசனை எல்லாம் பெற்றுவிட்டால் நிறைய படிக்கவும், சாதிக்கவும் காத்திருக்கிறது. இன்ஜினீயரும், டாக்டரும், வக்கீலும் சாதிக்க முடியாததை உனக்குள்ளே சாதிக்கக் கூடிய அற்புதத்தைக் கண்டுபிடிக்கலாம் என்று உற்சாகப்படுத்துவாள் வசந்தி.

வீட்டைச் சுற்றியும், அந்த குடியிருப்பைச் சுற்றியும் பட்டாம் பூச்சி போல் சுற்றிவருவாள். ஒவ்வொரு பூவையும் தனித்தனியே ரசித்து மகிழ்வாள். ‘ஏனம்மா இந்தப் பூக்களைப் பார்க்கும் போது இவ்வளவு மகிழ்ச்சியுண்டாகிறது?’ என்பாள்.

‘அவை நம்மைப் போல தனக்கென ஒரு வாழ்வை அமைத்துக் கொள்ளாமல், அர்ப்பணிப்பாகச் செயல்படுகின்றன. இறைவனுக்கு உவந்தது அர்ப்பணிப்பு. இந்தச் சிறப்பால் அவை பெருமையுடையன. பெருமையுடையதையெல்லாம் நீ நேசிக்கிறாய். அப்படிப்பட்டவர்களுக்கு அவை களிப்பைத் தரும்’ என்பாள் வசந்தி.

‘அம்மா! உங்களை ஒன்று கேட்கலாமா?’ என்றாள் ஆர்த்தி.

‘நிறைய கேட்கலாம். தெரிந்ததைச் சொல்வேன்’ என்றாள் வசந்தி.

‘நீங்கள் வீணையைத் தேர்வு செய்து போற்றி வருகிறீர்களே? வீணைதான் சிறந்த இசைக்கருவியா?’ என்றாள். ‘ஏனென்றால் எனக்கும் வீணை என்றால் மிகவும் ஈடுபாடு. வாசிப்பதற்கு மட்டுமில்லை. அதைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்கிறது’ என்றும் கூறினாள்.

‘நீ பாரதியாரின் நல்லதோர் வீணை செய்தே என்ற பாடலைப் படித்திருக்கிறாயா?’ என்றாள் வசந்தி.

‘கேள்விப்பட்டிருக்கிறேன். சரியாகத் தெரியாது’ என்றாள் ஆர்த்தி.

‘முதலில் அதையல்லவா படிக்க வேண்டும்’ என்று கூறிவிட்டு பீரோவைத் திறந்து பாரதியார் கவிதைகளை எடுத்துவந்து அவளிடம் கொடுத்தாள். புக் மார்க்’ வைக்கப்பட்டப் பக்கத்தைப் பிரித்தவுடன், ‘நல்லதோர் வீணை செய்து’ பாடல் கண்ணில் பட்டது. பொறுமையுடன் படித்தாள்.

நல்லதோர் வீணை செய்தே அதை
நலங்கெடப் புழுதியி லெறிவ துண்டோ?
சொல்லடி சிவசக்தி! – எனைச்
சுடர்மிகு மறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி சிவசக்தி! நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
விசையுறு பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்
நசையறு மனம்கேட் டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர் கேட்டேன்
தசையினைத் தீச்சுடினும் - சிவ
சக்தியைப் பாடும்நல் லகங்கேட்டேன்.
அசைவறு மதிகேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

‘ஆகா! எவ்வளவு அற்புதமான பாடல். என் உளக்கருத்தோடு ஒத்துவரும் பாடல். சொல்லத் தெரியாது என் மனம் தவிப்பதை பாரதிப்புலவன் பாடிவைத்திருக்கிறானே. எத்தனை தெளிவாக இருக்கிறது? இதைத்தான் நான் தினமும் சொல்ல நினைத்து சொல்லத் தெரியாது விழிக்கிறேனோ’ என்று தோன்றியது. கண்ணீர் வழிவதை மெல்ல விரலால் துடைத்துக் கொண்டாள்.

புத்தகத்தை இவளிடம் கொடுத்துவிட்டு கம்ப்யூட்டரில் அப்போதுதான் மனதில் உதித்த ஒரு செய்தியைச் சேகரம் செய்துவிட்டு எழுந்து வந்தாள் வசந்தி.

வசந்தி அருகில் வருவதைப் பார்த்தவுடன் ஆர்த்தி எழுந்து கொண்டாள். கையில் பிரித்த புத்தகத்துடன், போதி மரத்துப் புத்தன் போல் நிற்கும் வசந்தியை, பாசத்துடன் பணிவும் சேர்த்து வெளிப்படும் பார்வையால் பார்த்தாள்.

‘என்ன ஆர்த்தி? படித்தாயா?’ என்றாள் இதமாக.

‘ஆம். படித்தேன்’ என்று பணிவுடன் சொன்னாள் ஆர்த்தி.

‘இப்போது புரிகிறதா? நான் ஏன் வீணையை ஆராதனைப் பொருளாக, வழிகாட்டும் குருவாக மதிக்கிறேன் என்று?’ என்றாள் வசந்தி.

வார்த்தைகளற்ற மோனத்தில், ஒரு பெரும் குருவின் சந்நிதானத்தில் நிற்பது போல நின்றாள் ஆர்த்தி.

மனிதப் பிறப்பின் உயர்வினை உணர்ந்து ஒருவன் வாழத் தேவையானவற்றைப் பாரதி பராசக்தியிடம் கேட்கிறார். அவையில்லையெனில் இனிய இசையைத் தரும் வீணை அதனை மீட்டி இசைப்பயன் கொள்வார் இன்மையால் பயனற்றுக் கிடப்பது போல மனிதனும் தன்னைப் பண்படுத்தி தன்னில் இறைமையை வெளிப்படுத்தாத வெறும் மனிதனாய்க் கிடப்பான் என்ற வாழ்வுக் குறிக்கோளை அந்தப் பாடலில் தான் உணர்ந்து கொண்டேன். அன்றே ‘வீணை’ என் குருவாயிற்று. வழிகாட்டியாயிற்று. வழிபடு பொருளாயிற்று என்று வேகப்படாமல் இனிமையாய்க் கூறினாள் வசந்தி.

‘நீங்கள் சொல்வது போல் எனக்கு விளக்கம் சொல்லத் தெரியவில்லை. ஆனால் நான் என் குழந்தைப் பருவத்திலேயே வீணையை விரும்பி மீட்டத் தொடங்கிவிட்டேன். என் பிஞ்சு விரல்கள் சிவக்கும் அளவிற்கு வீணை வாசிப்பேன். ஏதேனும் வேதனை என்றாலும் ஆவேசமாய் வாசிப்பேன். பாரதியின் பாடலைப் படித்த பிறகுதான் என் மனக்குமுறல் என்னவென்று எனக்குப் புரிகிறது’ என்றாள் ஆர்த்தி.

‘நீ சிறு பெண். அவசரப்படவேண்டாம். பொறுமையாய்ச் சிந்தித்தால் யாவும் புரியும். புரிந்து கொள்வது என்பதற்கு முடிவு ஏதுமில்லை’ என்றாள் வசந்தி.

‘இன்னும் ஒன்று கேட்க வேண்டும் வசந்திம்மா. நீங்கள் எப்போதும் தனியாய் இருக்கிறீர்களே? உங்களுக்கு வெறுமையாய் இல்லையா?’ என்றாள்.

‘தனிமையா? இல்லை ஆர்த்தி. நான் தனிமையில் இல்லை என்னைச்சுற்றி மரம், செடி, கொடி, மலர், புத்தகம் என்று இத்தனை ஜீவன்கள் இருக்கும்போது நான் எப்படித் தனியாளாவேன். இவை தீங்கு செய்ய எண்ணாத இனிய நண்பர்கள்’, என்றாள் வசந்தி.

‘எப்படியம்மா இப்படியெல்லாம் உணரமுடிகிறது உங்களால்.

மனிதர்களையே மனிதர்கள் புரிந்து கொள்ளாத உலகில் வாய்பேசாத இவற்றுடனெல்லாம் எப்படி உங்களால் தொடர்பு கொள்ள முடிகிறது’ என்று வியந்தாள் ஆர்த்தி.

‘அவை பேசவில்லையென நாம் எண்ணுகிறோம். அப்படி எண்ணுவது உண்மையில்லை ஆர்த்தி. அவற்றின் பேச்சை நம்மால் கேட்க முடியவில்லை என்பதுதான் உண்மை. அவற்றுடன் ஒன்றி வாழும் போது அவற்றின் உணர்வு நமக்குப் புரியும்’.

ஆரோவில் என்ற ஓரிடத்தில் ஓர் ஆலமரம், பாண்டிச்சேரியில் ஸ்ரீ அரவிந்தாஸ்ரமம் என்ற அமைப்பில் தெய்வத்தாயாய் இயங்கிக் கொண்டிருந்தவரிடம் தன் துயரத்தைக் கூறியிருக்கிறது. உடனே அவர் ஓர் அன்பரை அந்த இடத்திற்கு அனுப்பி அம்மரத்தின் துயரத்தை நீக்கிவிட்டு வருமாறு கூறினாராம். அந்த அன்பரும் அந்த ஆலமரத்தைத் தேடிச்சென்று பார்த்தபோது அதன் மீது கோடரி ஒன்று கொத்தி மாட்டப்பட்டிருந்ததால் அந்த மரம் துன்பப்பட்டிருப்பதை உணர்ந்து கோடரியை நீக்கி விட்டு, அப்படிச் செய்தவரிடம், ‘இனி இவ்வாறு மரத்தில் கொத்தித் தொங்கவிட வேண்டாம்’ என்று சொல்லியும் வந்தாராம். இதைப் படித்தபோது நான் மனம் நெகிழ்ந்தேன். அன்றிலிருந்து இவற்றுடன் தூய அன்பால் ஒன்றி வாழப் பழகி விட்டேன். தனிமையுணர்வு ஏதுமில்லை. இன்னொன்று மிகச் சிறந்த செய்தி. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ‘சைத்திய புருஷன்’ என்ற பகுதி உள்ளது. அது இறையுணர்வால் உண்டாக்கப்படுகிறது. அதைக் கண்டுபி டித்து அதனோடு ஐக்கியப்பட வேண்டும். பிறகு நிர்மலமான நித்தியவுணர்வால் வாழலாம். அங்குத் தனிமை, அச்சம், அவலம் ஏதுமிராது என்றாள்.

கிருஷ்ணனைத் தோழனாகக் கருதி சமமாய்ப் பழகிய அருச்சுனன், விசுவரூபதரிசனம் கண்டபின் ஆன நிலைதான் ஆர்த்தியின் நிலையும். அவளிடம் ஏற்பட்ட அன்பு மரியாதையுடன் கலந்த அன்பாயிற்று. தான் சிறுமி என்று அலட்சியம் செய்யாது தன்னிடம் உயர் விஷயங்களைக் கூறிய வசந்தியின்மீது நன்றி உணர்வும் கூடியது. ‘சரி இப்போது சாப்பிடப் போகலாம் வா. சிறிதுசிறிதாக எல்லாம் தானே விளங்கிக் கொள்வாய்’ என்று விலகிவிடாது அரவணைத்துக் கொண்டாள். அதாவது தான் எட்ட நின்று வழிபடவேண்டியவள் என்று குழந்தை அஞ்சி தன் உரிமையிழந்தோம் என்று ஏங்கக் கூடாது என்று அவள் ஏக்கம் புரிந்து நான் உன்னுடன்தான் இருக்கிறேன் என்று கூறாமல் கூறினாள்.

ஒரு மாலைப் பொழுதில் மூவரும் வீட்டு முன்னிடத்திலுள்ள அழகிய பூச்செடிகளுக்கு நடுவேயுள்ள திண்ணையில் அமர்ந்து இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தபோது சற்று தொலைவிலிருந்த மற்றுமொரு குடியிருப்பைச் சுற்றியுள்ள மரஞ்செடி கொடிகள், ஏற்றக் கிணறு, நடுவே சிறுவர்கள் விளையாட சிறு மைதானம் போன்றவற்றைப் பார்த்துவிட்டு, அதை அருகில் சென்று பார்த்துவர ஆசைப்பட்டாள் ஆர்த்தி. ‘பெரியம்மா அதோ தெரிகிறதே அந்த இடத்திற்குப் போய் வரவா?’ என்றாள்.

‘அங்கெல்லாம் போகலாமோ கூடாதோ? இங்கிருந்தே பாரேன்’ என்றாள் சுபா.

‘இல்லை சுபா. அங்கெல்லாம் பயம் ஒன்றுமில்லை. நல்ல மனிதர்கள் நடமாடும் இடம்தான் அது. போய் வரட்டும்’ என்றாள் வசந்தி.

‘ஆர்த்தி போய்ப் பார்த்துவா. இங்கென்ன? எங்கு வேண்டுமானாலும் நாம் போய் வர முடியும்’ என்று வசந்தி தொடங்கியவுடன், ஆர்த்தி ‘நம்முள் இருக்கும் அந்த அற்புதப் பொருளுடன் தொடர்பு கொண்டால்’ என்று முடித்தாள்.

இவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று புரியாமல் சுபா விழித்தாள். ஆர்த்தி சிட்டெனப் பறந்து விட்டாள்.

‘இவள் இவ்வளவு மகிழ்ச்சியுடனிருப்பதைச் சென்னையில் நாங்கள் பார்த்ததேயில்லை. குறிப்பாக இவள் தன் அம்மாவை மிகவும் வெறுத்தொதுக்குகிறாள். அவளைத் தெளிவு படுத்த வேண்டும். அதற்காகவே உங்களை என் தோழி என்று சொல்லி அழைத்து வந்தேன்’ என்றாள் சுபா.

‘அவளுக்குள் அற்புதமான விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அதை வெளியே வரவிடாமல் தடுக்கும் அடைப்புகளுமிருக்கின்றன. அடைப்பை நீக்கி விட்டால் எல்லாம் சரியாகிவிடும்’ என்றாள்.

வசந்திக்கு இரவு பகல் என்ற வேற்றுமையில்லை என்று எண்ணும்படி எப்போது வேண்டுமானாலும் எழுந்து அமர்ந்து தியானம் செய்கிறாள். திடீர் திடீர் என்று கம்ப்யூட்டரில் ஏதேனும் சேகரம் செய்வாள். அதிகாலைப் பொழுதிலோ மாலையிலோ சில வேளைகளில் வீணை இசைப்பாள்.

ஒரு நாள் மாலை வசந்தியை உடனே புறப்பட்டு வரும்படி யாரோ தெரிந்தவர் நயந்து கேட்கிறார். ‘சுபா, ஆர்த்தியும் நீயும் இங்கேயே இருங்கள், ஒரு நண்பர் உதவிக்காக அழைக்கிறார். போய்விட்டு அரைமணியில் வந்து விடுவேன்’ என்றாள். வாசலில் கார் வந்து நின்றது வசந்தி புறப்பட்டாள்.

வழக்கம் போல் ஆர்த்தி காடுமேடெல்லாம் சுற்றிவிட்டு வந்தாள். வசந்தி வெளியில் போயிருப்பது தெரிந்தது. ஏதோ கேட்க வேண்டும் என்று எண்ணினாள். ஆனால் என்னவென்றும் புரியவில்லை. தனக்கு உள்ளே சிறு குழப்பம் ஏற்படுவது போலுணர்ந்தாள். மனம் தவித்தது காரணம் சொல்லத் தெரியவில்லை. படிக்கும் அறைக்குள் சென்று வீணை வைத்துள்ள மேடையில் அமர்ந்தாள். பூப்போன்ற தன் மெல்லிய கைகளால் அதைக் கவனமாய் எடுத்து மடியில் வைத்துக் கொண்டு, சுருதி மீட்டினாள்.

நல்லதோர் வீணை செய்து என மெல்லிய குரலில் பாடிய வண்ணம் வீணையை வாசிக்கத் தொடங்கி விட்டாள். சுபாவிற்குக் கவலையாக இருந்தது. கோபமோ, அழுகையோ, குழப்பமோ ஏற்பட்டால் ஆர்த்தி வாசிப்பது வழக்கம். இப்போது மகிழ்ச்சியாகத்தானே இருந்து கொண்டிருந்தாள். இப்போது வசந்தியிருந்தாலும் அவளுக்கு ஆறுதலாயிருக்குமே என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே, கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டது. வாசலில் வந்து சுபா நிற்பதைப் பார்த்தாள் வசந்தி. காரை அனுப்பிவிட்டு மெல்ல அவளை நோக்கி வந்தவள், ‘ஏன் சுபா கலக்கமாயிருக்கிறாய்?’ என்று மெல்லிய குரலில் கேட்டாள்.

‘அவள் வீணை வாசிக்கத் தொடங்கி விட்டாள்’ என்று சொல்லும் போதே குரல் கம்மியது சுபாவுக்கு.

‘அதனால் என்ன நல்லதுதானே?’ என்றாள் வசந்தி. ‘இல்லை சுபா. அவள் கோபம், அழுகை, சோர்வு, இதற்கெல்லாம்தான் வாசிப்பாள்’ என்றாள்.

‘அதுவும் நல்லதுதான், யாவும் கரைந்துவிடும்’ என்றாள் ஆறுதலாய்.

சுபா மனம் தேறவில்லை என்பதை அறிந்த வசந்தி, ‘சரி வா உள்ளே போய் அவளைப் பார்க்கலாம்’ என்று ஆறுதலாய் அழைத்துப் போனாள். ஆர்த்தியோ, தன் சூழல் எதுவும் நினைவின்றித் தன்னை மறந்து பராசக்தியிடம் பாரதி கேட்ட வரத்தைத் தானும் கேட்கிறாள். பாடலின் இறுதி வரியை அவள் பாடப்பாட அவள் முன் பராசக்தியே வந்து நிற்பதாய் வசந்தி உணர்கிறாள். கண்ணீர் தாரைதாரையாய் கன்னங்களில் வழிந்தோட வீணையை அணைத்துக் கொண்டிருக்கும் ஆர்த்தியின் பக்கத்தில் போய் வசந்தி அமர்ந்தாள்.

ஆர்த்தியின் சின்னஞ் சிறு கைகள் பற்றியிருந்த வீணையை மெல்ல எடுத்து நகர்த்தி வைத்து அவளைத் தன்மேல் சாய்த்துக் கொண்டு, அவள் கண்ணீரைத் துடைத்தாள். ‘நீ வாசிக்கும் போது பராசக்தியே உன்முன் நிற்பதை நான் உணர்ந்தேன் ஆர்த்தி. உன்னை ஈன்றவள் பெரும்பேறு பெற்றவள். உன்னைக் கருவிலே சுமந்தபோது அவள், இறைமையை இதயத்திலே சுமந்திருக்கிறாள். இல்லையெனில் நீ இப்படி அற்புதப் பெண்ணாக இருந்திருக்கமாட்டாய். உன்னை ஈன்றவளைப் பார்த்து நான் பாராட்ட வேண்டும்’ என்றாள் வசந்தி.

‘என்னை ஈன்றவளையா? என் பிரச்சனையே என் தாய்தான். அவளை நினைத்தால்தான் என் அமைதி கெடுகிறது. மகிழ்ச்சி மறைகிறது. கலை என்ற பெயரால் கண்டவர்களுடன் கைகோத்து ஆடுபவள். அவளை ரசிக்கவும், புசிக்கவும் ஒரு கூட்டம் எப்போதும் காத்துக் கிடக்கும். அந்த மூச்சுத் திணறலில் அகப்பட்டுச் செத்து விடாதிருக்க என்னை அவள் என் பெரியம்மாவிடம் தந்தாள். நான் அவள் செய்த பேறு இல்லை. அவள் செய்த பாவம்’ என்று கதறி அழுதாள்.

‘அழு ஆர்த்தி. நன்றாக அழு. உன் தாயின் மீது நீ கொண்டிருக்கும் அழுக்கான எண்ணங்கள் கரையும்வரை அழு.

அதன் பிறகு அவளின் உண்மை உரு உனக்குப் புரியும். பெண்கள் உடலால் மட்டும் வாழ்வதில்லை ஆர்த்தி. மனதாலும் மனதைக் கடந்தும் வாழும் பெண்கள் உள்ளனர். உன் தாய் உடலால் வாழும் வாழ்வின் மாசு உன்மீது படியாதிருக்க மனத்தால் வாழ்ந்து உன்னைப் பெற்றிருக்கிறாள். நீ உன் தாயின் புறவடிவமன்று. அவள் அகத்தின் அழகிய வடிவம் நீ. இந்தவுண்மை தெரியாமல் நீ அவளைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய். அவள் உயர் உணர்வுகளோடு உன்னைச் சுமந்திருக்கிறாள்’ என்றாள்.

‘உங்களுக்கு அவளைப் பற்றித் தெரியாது. அவள் சேறு’ என்றாள் வெறுப்பாக ஆர்த்தி.

‘ஆமாம் ஆர்த்தி அந்தச் சேற்றில் மலர்ந்த செந்தாமரைதான் நீ. உன்னைக் கருவுற்ற நாளில் உன்தாய் எங்கிருந்தாள் எப்படியிருந்தாள் என்று கேட்டறிந்திருக்கிறாயா?’ என்றாள் வசந்தி.

‘எனக்கு நினைவு தெரிந்த நாளாய் நான் அவளிடம் விலகியே இருந்திருக்கிறேன். நான் எதுவும் அவளைக் கேட்டதில்லை’ என்றாள் ஆர்த்தி.

‘இம்முறை இந்த அம்மாவிற்காக (தன்னைக் காட்டி) அந்த அம்மாவிடம் உன்னைக் கருவில் சுமந்த நாட்களைப் பற்றிக் கேள்’ என்றாள் வசந்தி.

அன்றிரவெல்லாம் ஆர்த்தி அமைதியின்றி இருந்தாள். தன் தாயைப்பற்றி முதன் முதலாகச் சிந்தித்தாள். நான் ஏன் அவளை நினைத்தால் வெறுப்படைகிறேன். அவள் என்றேனும் என்னை வெறுத்தாளா? இல்லையே. தன் அவல வாழ்வின் சுவடு என் மீது பதிந்து விடக் கூடாதேயென்று தனி வீட்டில், அதுவும் தன் கண்ணிலிருந்து நான் மறைந்து விடக்கூடாது என்று பக்கத்திலேயே என்னை இருக்க வைத்து பெரியம்மா என்ற பெயரில் ஒரு பாசக்கடலை எனக்குப் பாதுகாப்பாக்கி, நான் காரியுமிழ்ந்தாலும் கசப்படையாது, கனிவுடன் என் அன்பிற்குக் காத்திருக்கிறாளே ஏன்? நான் காரணமின்றி அவளை வெறுக்கிறேனா? வசந்தியம்மா எவ்வளவு சிறந்தவர்? அவரே சொல்கிறார் என்னை ஈன்றவள் தெய்வீகத்தில் திளைத்திருப்பாளென்று. நீண்ட நேரம் கடந்து அயர்ந்து உறங்கி விட்டாள்.

விடியலில் எழவில்லை. வீணை இசைக்கவில்லை. அடுக்களையில் ரகளை செய்யவில்லை. தாமதமாய் எழுந்தவள் சோர்ந்திருந்தாள்.

கிளியாய்க் கொஞ்சி மகிழும் இவளுக்கு என்னாயிற்று என்று கலங்கினாள் சுபா. தனியே அவளையழைத்து, ‘சுபா! கவலைப்படாதே. அவளுக்குள் இருக்கும் வெறுப்பிற்கும், விருப்பிற்கும் இடையே போராட்டம் தொடங்கி விட்டது. வெறுப்பு வெளியேறிவிட்டால் கலகலப்பாகிவிடுவாள்’ என்றாள் வசந்தி.

‘பெரியம்மா! நாளை நாம் ஊருக்குப் போகலாம்’ என்றாள் ஆர்த்தி.

‘அதற்குள்ளாகவா? இங்கு உனக்குப் பொழுது போகவில்லையா? பிடிக்கவில்லையா? சந்தோஷமாய்த்தானே இருந்தாய்’ என்றாள் சுபா.

‘சந்தோஷமாய்ப் பொழுது போக்கினால் போதுமா? என் தோழிகள் எல்லோரும் ஏதேனும் சம்மர் கிளாஸ் சேர்ந்திருப்பார்கள். போனால் நானும் ஏதேனும் கோர்ஸ் செலக்ட் பண்ணி சேர்ந்து விடலாம்’ என்றாள்.

‘வசந்தி நாளை நாங்கள் புறப்படலாம் என்று நினைக்கிறேன்.

சுமதிக்குப் போன் செய்தால் கார் அனுப்பிவிடுவாள்’ என்றாள் சுபா.

‘வேண்டாம் சுபா. நானே அனுப்பிவைக்கிறேன். நாளை கார் வரும். நல்ல டிரைவர் கவனமாய் அழைத்துப் போவார்’ என்று கூறிவிட்டு, ‘ஆர்த்தி! நீ இங்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். பெரியம்மாவைக்கூடத் தொல்லை செய்ய வேண்டாம். எனக்குப் போன் செய். நானே வந்து அழைத்து வருகிறேன்’ என்றாள்.

‘ஆகட்டும் அம்மா. அப்படியே செய்கிறேன்’ என்றாள்.

காலையில் சுபாவிடமிருந்து போன் வந்தது. அவளும் ஆர்த்தியும் சென்னை திரும்புவதாக. கான்சல் செய்ய எண்ணியிருந்த கால்ஷீட்டை நிறைவு செய்வது என்று முடிவு செய்து ஸ்டூடியோவிற்குப் புறப்பட்டாள் சுமதி. ஆர்த்தி வரும் நேரம் அங்கிருந்தால் வீண் மனவேதனைகளைச் சுமக்க வேண்டிவரும். மனக்கட்டுப்பாடுடன் அவளைத் தவிர்ப்பதே நல்லது என்று எண்ணி ஆர்த்தியின் வரவிற்கு ஏங்கும் மனத்தை அடக்கினாள் சுமதி.

வீடு திரும்பிய ஆர்த்தி என்றுமில்லாத விசேஷமாய் ஆர்வமுடன் அம்மாவைத் தேடினாள். ஆர்வத்தை வெளிக்காட்டாமல், தேடுவது அடுத்தவர் அறியாது தேட வேண்டுமென்று எண்ணினாள். இல்லை, அம்மா வீட்டில் இல்லை.

அம்மாவின் அறைக்கதவு பூட்டியிருந்தது. அவுட் ஹவுஸுக்குப் போன் செய்து ‘அம்மா எங்கே போயிருக்கிறாள்’ என்று விசாரிக்கிறாள். ‘ஷூட்டிங்கிற்கு’, என்று பதில் வருகிறது. ‘எப்போது வருவாள்’ என்று விசாரிக்கிறாள். ‘தெரியாது’ என்று பதில் வருகிறது.

சுபாவிற்கு வியப்பாயிருந்தது. தன்னிடம் ஆர்த்தி எதுவும் கேட்கவில்லை. அவளே ஏதேதோ செய்து அம்மாவைத் தேடுகிறாள் என்று மட்டும் புரிகிறது. அதுவும் தான் கவனிப்பது போலுணர்ந்தாலும் தன் தோழிகளிடம் போனில் பேசி தன்னை அவள் திசை திருப்புவதும் சுபாவிற்குப் புரிந்தது. இந்த நாடகத்தில் பங்கேற்காமல் வேடிக்கை மட்டுமே பார்க்கிறாள் சுபா.

வழக்கம் போல் நிதானமாய் நடந்து கொள்ளாமல் தனக்குள் ஏற்படும் பரபரப்பை மறைத்து நடக்கவும் மிகவும் முயற்சி செய்கிறாள் ஆர்த்தி. வாசலில் சிறு சத்தம் கேட்டால் கூட முன்புற ஜன்னல் வழியே எட்டிப் பார்க்கிறாள். முன்பெல்லாம் கார் சத்தம் கேட்டாலே தன் அறைக்குள் போய்விடுவாள், இன்று அலை மோதிக் கொண்டிருக்கிறாள். ‘ஆர்த்திக் கண்ணு! காலையில் புறப்படும் போது கூட நீ சரியாகச் சாப்பிடவில்லை. இந்தா! ஒருவாய் வாயில் ஊட்டி விடுகிறேன்’ என்று சோற்றுக் கவளத்துடன் நின்றாள் சுபா.

‘எனக்குப் பசியில்லை பெரியம்மா’ என்றாள்.

‘சாப்பிட்டுவிட்டு அமைதியாக உறங்கு. அம்மா ஷூட்டிங்கிற்குப் போனால் சீக்கிரம் வரமாட்டாள் என்று தெரியாதா?’ என்றாள் சுபா.

‘அதைப்பற்றி இப்போ என்ன?’ என்று தனக்கு அதில் அக்கறையில்லை போலக் காட்டிக் கொண்டாள். பேருக்கு இரண்டுவாய் சாப்பிட்டுப் படுத்து விட்டாள். சுபாவும் வந்து அவளருகே படுத்துக் கொள்கிறாள். ஆர்த்தியின் தவிப்பு அவளுக்குப் புரியாமலில்லை.

மறுநாள் காலை எழுந்ததும், அடுத்த பகுதிக்குச் செல்ல ஒரு அவசியத்தை ஏற்படுத்திக் கொண்டு சென்று வந்தாள். அம்மா வந்து விட்டாளா? என்று தேடுகிறாள் இல்லையென்றதும் ஏமாற்றத்துடன் திரும்புகிறாள். சுபாவிற்குத் தெரியாது என்று எண்ணி ஒவ்வொரு ஸ்டூடியோவிற்கும் போன் போட்டு விசாரிக்கிறாள். வரவில்லை என்ற பதிலே வருகிறது. அம்மா எங்கே போயிருப்பாள் ஒருநாள் முழுதாகக் கடந்து விட்டது. இதுவரை அம்மாவை வெறுத்ததற்கு ஈடாகத் தேடினாள். ஓய்ந்து போய் அறைக்குள் முடங்கி விட்டாள். பகல் பத்து மணியிருக்கும் போன் அடித்தது. சுபாதான் எடுத்தாள். நாங்கள் நலமாகத் திரும்பி விட்டோம். நீ எப்போது வருவாய்? என்று பேசிக் கொண்டிருக்கிறாள் சுபா.

ஒருவேளை அம்மாவாக இருக்குமோ என்றெண்ணிய ஆர்த்தி, ‘யார் பெரியம்மா போனில்?’

‘என் தங்கை’ என்றாள் சுபா.

‘என்னவாம்? உன் தங்கை எங்கிருக்கிறாளாம்?’ என்கிறாள் ஆர்த்தி.

சுபாவிற்கு உள்ளூரச் சிரிப்பு. விலகினால் விரும்பி வரும் என்பது போன்றல்லவா இருக்கிறது ஆர்த்தியின் போக்கு என்றெண்ணிக் கொள்கிறாள்.

‘ஊட்டியிலிருந்து பேசுகிறாள்’ என்றாள் சுபா.

‘நாம் வந்து விட்டோம் என்பதைத் தெரிவித்தாயா?’ என்று தன் அவசரத்தை வெளிப்படுத்தாமல் சாதாரணமாகச் சொல்வது போல் சொல்கிறாள்.

‘தெரியும் அவளுக்கு. நாம் வந்து விட்டோம் என்பதைத் தெரிவித்து விட்டேன்’ என்றாள் சுபா.

‘பெண்ணைப் பார்க்க ஓடி வருவாளே?’ என்று கிண்டல் செய்வது போல் விசாரிக்கிறாள்.

இவள் இப்போது அம்மாவைச் சந்திக்க ஆசைப்படுவது சுபாவுக்குப் புரியாதா என்ன? அவள் ஒளிந்து கொள்வதுபோல் நடித்தால், இவள் தேடுவது போல் நடிக்கமாட்டாளா?

இரவு நீண்டது. ஆர்த்தியின் தவிப்பை வேடிக்கை பார்த்துவிட்டு தன்னையறியாமல் சுபா கண்ணயர்ந்தாள். மணி இரவு இரண்டு இருக்கும். வாசலில் கார்வரும் ஓசை கேட்கிறது. ஆர்த்திக்கு உறக்கமில்லை. சுபா உறங்குகிறாளா என்பதைக் கவனித்துவிட்டு, மெல்ல எழுந்து வாசல்புறம் பார்க்கும் ஜன்னலருகே வந்து நிற்கிறாள். காரிலிருந்து அம்மா இறங்குகிறாள். இத்தனை ஆர்வமாக அவள் அம்மாவின் வரவிற்குக் காத்திருந்ததில்லை. ஏன்? அம்மா வருவதே அவளுக்குப் பிடித்ததில்லை. ஆனால் இன்று? என்ன ரசவாதம் நடந்தது. அம்மா உள்ளே போய்விட்டாள். அம்மா உள்ளே வந்து விட்டாள் என்றதும் பக்கத்துப் பகுதி பெரிய கதவைத் திறந்து கொண்டு ஏதோ தேடுவது போல் பாவனை செய்கிறாள். ஷூட்டிங் முடிந்து வரும் போது ஏதேனும் பரிசுப் பொருள்களை வாங்கிவந்து தன்னிடம் அவமானப்பட்டு திரும்புவாளே. இன்று அவள் பரிசுடன் வரும் போது தான் அதை மறுக்கக் கூடாது என்று மனதில் நினைத்துக் கொண்டு அவள் தன்னிடம் வருவாள் என்று எதிர்பார்த்தவள் ஏமாறும் வண்ணம், இந்தப் பக்கம் திரும்பிக் கூடப் பாராமல் போய் விட்டாள் சுமதி. அவளால் தன்னைப் பாராமல் போக முடியாது என்று எண்ணிய அவள் எண்ணம் தகர்ந்து விழுந்தது.

தொடரும். . .

********

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அனந்தம் சுபாவத்தில் எய்தும் சமத்துவம் பொறுமை பிரம்மம் சுபாவத்தில் தன்னை அறிவது பொறுமை அடுத்த ஜீவன் அனைத்தும் பெற அவசரப்படுவது பொறுமை அடுத்த ஜீவனுக்கு ஆண்டவன் தரக்கூடியதை எல்லாம் தானே கொடுக்க முடியும் என்ற ஞான உணர்வாவது பொறுமை.
 book | by Dr. Radut