Skip to Content

09. பெண்ணின் பெருமை

பெண்ணின் பெருமை

கர்மயோகி

தூய்மை என்பது இறைவனை மட்டும் நம்பி வாழ்வது என்பது அன்னை விளக்கம். இறைவனை சச்சிதானந்தம், புருஷன், ஈஸ்வரன் என அழைக்கிறோம். புருஷனை நம்புவது பிரக்ருதி, ஈஸ்வரனை அடுத்து செயல்படுவது சக்தி. ஆங்கிலத்தில் husband கணவன் என்ற சொல் பொருள் ஈட்டுபவன் எனவும், wife என்பது woman பெண் எனவுமாகும். தமிழில் புருஷன் என்பது ஆன்மீக அடிப்படையில் இறைவனாகும். பத்தினி, பாரியாள், மனைவி, இல்லக் கிழத்தி, சம்சாரம் என்ற சொற்கள் ஆன்மீக அடிப்படையில் கற்புடைய பெண்ணையும், குடும்ப பாரத்தை ஏற்ற பாரியாள் எனவும், மனைக்குரிய பெண்ணாகவும், இல்லத்தை இருப்பிடமாகக் கொண்டவள் எனவும் கூறும்.

பெண்மையின் முதல் அம்சம் தாய்மை. தாய்மை சுயநலமே அறியாத பரநலனுக்குரிய ஜீவனாகும். பெண்ணின் உடலமைப்பு பக்தியின் சின்னம் என்று பகவான் கூறுகிறார். மனிதனைப் படைக்க ஆண்டவன் முனைந்த பொழுது அதற்குரிய உருவம் அவனுக்குப் புலப்படவில்லை. பல கடவுள்கள் பல ரூபங்களைக் கொடுத்தவற்றை ஆண்டவன் நிராகரித்துவிட்டான். குரங்கு மனிதனாகப் பரிணாம வளர்ச்சி பெற்றது என்ற கொள்கை முழுவதுமாக நிரூபணமாகவில்லை என பகவான், ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு (species) பரிணாமம் உயரும் பொழுது கம்பளிப் பூச்சியின் கூடு போன்ற இடைப்பட்ட நிலையுண்டு. அது நம் கண்ணுக்குத் தெரியாத சூட்சும ரூபம் என்கிறார். அது டார்வினால் புறக்கணிக்கப்படுவதால் பகவான், டார்வின் கொள்கையை முழுவதுமாக ஏற்பதில்லை. கடவுள்கள் கொடுத்த பல்வேறு ரூபங்களில் இன்று நாம் தாங்கும் உடலின் ரூபம் இறைவன் ஏற்றது. அந்த ரூபம் பக்தியால் பழுத்து நிறைவு பெற்ற ரூபம் பெண்ணின் உடல் என்று பகவான் எழுதுகிறார். திருவள்ளுவர் பெண்ணின் பெருமையைப் பலவாறும் கூறுகிறார். பெண்களில் வாயில் ஊறும் நீர் எந்த நேரமும் இனிமையாக இருக்கும் என்று ஒரு கருத்து. அக்கருத்தை ஆமோதிப்பது போன்றது வள்ளுவர் சொல்: வாலெயில் ஊறும் நீர்.

காலையில் எழுந்தவுடன் முதற்காரியமாக நாம் செய்வது பல் துலக்கிக் குளிப்பது. பல் துலக்கியபின் வாய் தூய்மை பெறும். இடைவிடாத தியானத்தை மேற்கொள்ளும் காலங்களில் தூங்கி எழுந்தால் தியானம் கலைந்தது போலிருக்கும். அப்பொழுது பல் துலக்குமுன், வாய் தூய்மை பெறுவதைக் கவனித்தால் துலக்கிய பின்னிருப்பது போல் தெரியும். தியானத்தில் ஊறிய உடல் வாயைப் பல் துலக்கிய பின் உள்ள தூய்மைக்குக் கொண்டு வருகிறது. பிறப்பில் பெண்ணிற்கு அத்தூய்மையுண்டு. பெண்கள் வாசனைத் திரவியங்கள், மணமுள்ள சோப்பு, பவுடர்களை விரும்புவார்கள், அதிகமாகப் பயன்படுத்துவார்கள். பெண்ணின் பருவத்தில் மனம் நிறையும் சந்தர்ப்பங்கள் எழுவதுண்டு. அது வாழ்வில் பலருக்கும் பூர்த்தியாகும். உள்ளும், புறமும் நிறைவு நெகிழ்வு பெறும் பருவமிது. அந்நிலையில் பொதுவாக சிறந்த பெண்களுக்கு உடல் சுகந்தத்தால் சூழப்படும். இது கவர்ச்சி தராது, பக்தியை எழுப்பும். தேவி உபாசகர்கட்கு தெய்வம் பெண், பெண் தெய்வம், அவள் பாதம் பாதமலர், அதை நெஞ்சில் வைத்துப் பூஜிப்பது அவர்கள் வழிபாடு. அதுபோன்ற பக்தருக்கு அமைந்த மனைவி அவருக்கு வழிபடும் தெய்வமாக அமையும். அவரைப் பொருத்தவரை தேவியை பூஜிப்பதும், மனைவியை ஆழ்ந்த உணர்வில் பிரதிஷ்டை செய்வதும் ஒன்றே. அதுபோன்ற கணவன் இயல்பாக இனிமையாக இருக்கும் நேரம் மனைவி, தன்னை ஸ்தோத்திரம் செய்வதாகக் கூச்சப்பட்டு, அச்சப்படுவாள், சொல்வதும் உண்டு. "பையல் என்ற பொழுதே பரிந்தெடுத்தாள் தாய்'' எனக் கூறும் பட்டினத்தாரும் பெண்மையின் இப்பெருமையை உணர்ந்த முனிவர். இந்திய மரபில் குழந்தை தெய்வம். அதேபோல் நம் கலாச்சார சூழலில் பெண் வழிபாட்டுக்குரியவள், தெய்வ அம்சம் படைத்தவள். அவள் மாங்கல்யம் கணவன் உயிருக்குக் கவசம், அவள் ஆழ்ந்து நினைப்பது பூர்த்தியாகாமல் போவதில்லை, ஆவது பெண்ணால் என்பன நம் தமிழ் மரபு.

இயற்கையாகப் பெண்ணின் குரல் இனிமையானது. ஆன்மீக விளக்கப்படி அன்பு சத்தியத்துடன் கலந்தால் எழுவது இனிமை. குரல் உயிரை வெளிப்படுத்துவது, அது பிராணன். பெண் குரல் இனிமையானது என்பது பெண்ணின் உயிரில் இயல்பாக அன்பும் சத்தியமும் இணைந்துள்ளதற்கு அடையாளம். மனிதன் சுயநலம். சேவை பரநலம். தாய்மையால் பரநலம் - குழந்தையைப் பேணுவது - இயற்கையாகப் பெண்ணிற்கு அமைந்துள்ளது. குடும்ப வாழ்வும், மண வாழ்வும் பெண்ணிற்கு பிறர்க்குத் தன்னை அர்ப்பணிக்குமாறு இயற்கையிலும், சமூகத்திலும் ஏற்பட்டுள்ளது. பெண் மென்மைக்குரியவள். மென்மை வளமையின் இனிமை. இனிமையை இதமாக செயல்படுத்தும் வலுவான இதயத்திற்குரியது மென்மை. மென்மை அச்சத்திற்கோ, பலஹீனத்திற்கோ உரியதில்லை; வலிமையின் திண்மை. ஆன்மீக சாந்தி மௌனத்தைப் பெறுவதால் மென்மையாகிறது.

வீடு ஆணுக்கும், குடும்பம் பெண்ணுக்குமுரியது. பொருள் ஈட்டுவது ஆண். பெற்ற பொருளை பொறுப்புடன், கடமையுடன், பண்பாக, உரிய செயலுக்குப் பயன்படும்படிச் செய்வது பெண். திறமை குறைவானால் பெரும் பொருள் வீணாகும். பொறுப்பில்லாவிட்டால் உரியவர்க்குக் கிடைக்க வேண்டியது உரிமையற்றவரிடம் சென்றடையும். கடமை தவறினால் காலம் காட்டி உறுத்தும். பண்பு குறைந்தால் பெரும் செலவில் சிறு காரியம் அரைகுறையாக முடியும். இவை பெண்ணுக்கு அமைந்தது. இதைச் சாதிக்க அவளுக்கு செயலிலும், சொல்லிலும், உணர்விலும் கட்டுப்பாடுத் தேவை. கட்டுப்பாடு உயர்ந்தால் கடமை சிறக்கும், மிளிரும். கட்டுப்பாடு குறைந்தால், கட்டுத்தறியிலிருந்து விடுபட்ட மாடாகும் குடும்ப வாழ்வு.

பரம்பரை பரம்பரையாய் செல்வமும், அன்பும் பண்பாகப் பரிமாறப்பட்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் எங்கள் வீட்டில் சண்டை, சச்சரவை அறியேன். நாங்கள் குழந்தைகளாய் வளர்ந்த காலத்தில் பெற்றோர் எங்களை அடித்தது, திட்டியதில்லை. நாங்கள் அனைவரும் சுதந்திரமாக வாழ்ந்தோம். அதுபோலவே வளர்ந்தோம் என்பார்கள். அவர்கள் உடன் பயின்றவர் அனைவரும் சிறு உத்தியோகம் பெற்று, அதைப் பெரிதாகப் போற்றும் பொழுது இக்குழந்தைகள் ஆரம்பத்திலிருந்தே பெரிய உத்தியோகங்களைப் பெறுவார். வாழ்வில் அசந்தர்ப்பம், விபத்து இயல்பு. இதுபோல் வளர்ந்த குழந்தைகள் வாழ்வில் அவை அரிதாகும்; இல்லையென்பதே அனுபவமாகும். இலட்சியம் இக்குழந்தைகட்குண்டான இயல்பு. இலட்சிய இயக்கங்களை நாடிச் சென்று சேவை செய்வார்கள். இவையனைத்திற்கும் அடிப்படை பண்பான குடும்பமும் பக்குவமான பெண்களால் நடத்தப்பட்டதாகும்.

உலக சரித்திரத்தில் இதுவரையில்லாதவை அசோக சக்ரவர்த்தி படையெடுப்பைக் கைவிட்டது; மகாத்மா காந்திஜீ தான் நிறுவிய இயக்கம் அரசியல் பலன் பெற்றபொழுது தனக்கேயுரிய தலைமைப் பதவியை விரும்பி நேருவுக்களித்தது; பெண், அதுவும் இந்தியப் பெண்ணின் பண்பின் நோக்கம் அதுபோன்றது ஆகும். தான் நடத்தும் குடும்பத்தில் எழும் வாழ்க்கை வசதிகளை பிறருக்கு மட்டும் கொடுத்து, கொடுப்பதில் இன்பமுறுவது அப்பண்பு. இதைச் சாதிப்பது பொறுமை. அனந்தமாக பிரம்மம் அசைவற்றிருப்பதை ஸ்தாணு, சாந்தி, அமைதி என்பர். ஆன்மீக அமைதி மனித மனநிலையில் பொறுமையாகும். பூமியாளும் திறனைப் பெற்றது பொறுமை. பொறுமையின் பெருமையை அறிய பொறுமையற்றவரை நினைத்தால் புரியும். நாம் பொறுமையிழந்த நேரங்களுண்டு. அந்நேரம் நாம் பொறுமையைக் கருதினால், அதன் பெருமை விளங்கும். பெரிய காரியங்களில் பொறுமை முடியலாம். சிறிய காரியங்களில் பொறுமை சிரமம். ஒரு நாளைக்குப் பல முறை பல வழிகளில் பொறுமையை இழக்க நிர்ப்பந்தம் எழுவது குடும்ப நிர்வாகம். பொறுமையின்றி குடும்பமில்லை. பொறுமையாக வாழ்ந்து வளர்ந்த பெண்ணுக்குத் தான் பொறுமையுடையவள் எனத் தெரியாமலேயே இருப்பதுண்டு. நம்மிடம் நிறைந்துள்ள பெரிய நல்ல குணமிருப்பதே நாமறியாவிட்டால் அதுவே அதைப் பெற்றதற்குரிய இலட்சணம்.

சுதந்திரம் வருமுன் மக்கள் நிலை அவலமானது. அதிலும் பெண் நிலை மோசம். அவளுக்குத் திருமணமே தொழிலாக அமைந்தது. பெண்ணுக்குப் படிப்பு, தொழில் அன்று சொற்பம். தகப்பனார், கணவன், மகன் ஆதரவிலேயே வாழும் நிலை அவளுடையது. அக்காலத்தில் வறுமை அதிகம். குடும்பத்தில் மூல புருஷன் இறந்துவிட்டால் குடும்பம் தெருவுக்கு வரும். அதிகமாகப் பாதிக்கப்படுபவள் பெண். படிப்பும், வேலையும் அதிகரித்துள்ள இன்று இந்த அவலநிலை அளவு கடந்து குறைந்துள்ளது. ஒரு ஜில்லா, தலைநகரில் உள்ள பெரிய உத்தியோகஸ்தர்கள் 500 பேரில் முன் தலைமுறையில் கோயில் பூசாரி, கிராம கணக்குப்பிள்ளை, சர்க்கார் குமாஸ்தா, வக்கீல் குமாஸ்தா, ஜவுளிக்கடை கணக்குப்பிள்ளை ஆகியோரின் புதல்வர்கள் 400 பேருக்கு மேல். இந்த சாதனையின் முக்கிய பகுதி, பெரும் பகுதி, அக்குடும்பப் பெண்களைச் சாரும். கடைநிலையிலிருந்த குடும்பத்தை மத்தியதரவர்க்கக் குடும்பமாக அடுத்த தலைமுறையில் செய்தவர் பெண். சீனுவாச இராமானுஜம் தகப்பனார் ரூ.20/- சம்பளம் பெற்ற ஜவுளிக்கடை குமாஸ்தா. இன்று நிலை சமூகத்தில் உயர்ந்து மாறியுள்ளது. அதே குடும்பப் பெண்கள் தங்கள் ஆத்மீகப் பெருமுயற்சியால் மக்களை அடுத்த தலைமுறையில் இன்று டாக்டர், இன்ஜினீயராகவும், அமெரிக்காவில் வேலை செய்பவனாகவும் மாற்றியுள்ளனர். அன்று சமூகம் ஏழ்மையானது. இன்றைய சமூகம் ஏழ்மையினின்று விடுபடும் ஆர்வமுள்ள முன்னேற்ற நோக்கமுடையது. மாறிய நிலையில் பெண் சாதனை மகத்தானது. அனுசுயா திருமூர்த்திகளைக் குழந்தையாக்கினாள். நெறியான பெண்கள் முறையாகக் குடும்பம் நடத்தி மோட்சம் பெற்றனர். இந்து சமூகத்தில் இதுவே அதிகபட்ச இலட்சியம். ஆயிரமாயிரம் ஆண்டுகட்கு முன் இந்தியா பெற்ற இந்த இலட்சியத்தை மேல்நாடுகள் இதுவரை எட்டவில்லை. அவர்கள் வாழ்க்கை வசதி பெரியது, ஆன்மீக நிலை அளவு கடந்து தாழ்ந்தது.

பெண்ணுக்குச் சொத்துரிமையில்லை, ஊதியம் தரும் தொழிலில்லை, அறிவு தரும் படிப்பில்லை. உரிமை எனக் கூறும் எதுவும் அவளுக்கில்லை. அவளுக்குச் சிரமம் என எழுந்தால் கணவனையே நாட வேண்டும். கணவனே பிரச்சினையானாலும், கணவன் அவள் பிரச்சினையைக் காது கொடுத்துக் கேட்கவில்லை என்றாலும், அவள் நிலையென்ன? எதை நாட முடியும்? அவள் எரிச்சல்பட்டால் உள்ளதும் போகும். எரிச்சல்படும் உரிமையுமில்லை. இந்த நிலையில் அவள் "தெய்வமிருக்குதடி தங்கமே தங்கம்'' என்ற மனநிலையைப் பெறுகிறாள். இது அவல நிலை. அது அவளுக்குத் தெய்வ நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அது பெரிய நம்பிக்கை. அதனால் அவளால் குடும்பத்திற்கு அளவு கடந்து சாதிக்க முடிகிறது. அமெரிக்க கம்பனிகள் 100 ஆண்டுகளுக்கு முன் வாடிக்கைக்காரரைத் திருப்தி செய்வது அவசியம் என அறிந்து அதனால் அமெரிக்க கம்பனிகள் உலகெங்கும் பெரும் அளவில் வளர்ந்து பெருகின. பெண் அவள் நிலையால் குடும்பத்தினர் திருப்திப்பட உழைத்தாள். அதனால் அவள் குடும்பம் அந்த அவல நிலையிலும் அளவு கடந்து உயர்ந்தது. இன்று சமூகம் வளர்ந்து, ஏழ்மை குறைந்து, உரிமை பெருகும் நேரம். அன்பர்கட்கு அன்னை சூழல் ஆதரவு தரும் நேரம். இது போன்ற கிடைத்தற்கரிய வாய்ப்புகள் சமூகத்திலும், ஆன்மீகத்திலும் எழுந்துள்ளன. 20 ஆண்டிற்கு முன் ரூ.18,000/-த்திற்கு வாங்கிய மனை 5 இலட்சம் விலை போகும் நாளிது. அந்த அளவில் வாழ்வில் எல்லா துறைகளிலும் வாய்ப்பை எதிர்கொள்ளும் சூழலிது. இன்று பெண்கள் வாய்ப்பை அறிந்து, அன்னையை ஏற்று குடும்பத்தை வளர்த்தால், சர்க்கார் குமாஸ்தாவான மனிதர் இன்று தொழிலதிபராக முடியும். இந்த சந்தர்ப்பத்தை அநேகர் அறிவதில்லை. இது இன்றைய பெண்கள், அன்பரான பெண்கள் அவசியம் அறிய வேண்டியது.

பெண்களுக்கு சமயோசிதம் உண்டு. Intuition தானே யோசனை செய்யாமல் அறியும் அறிவும் பெண்கட்கு உண்டு. இவற்றை நல்ல முறையில், உயர்ந்த அளவில் பயன்படுத்தும் எந்த அன்பரான பெண்ணும் தம் மக்களை தொழிலதிபர்களாகவும், கோடீஸ்வரர்களாகவும் மாற்றும் வாய்ப்பு அபரிமிதமாக உள்ளது. இவற்றை அவர் கருத வேண்டும்.

பெண் கவர்ச்சியின் உறைவிடம். அது அவள் பிறப்புரிமை. அழகுக் கவர்ச்சியை அனைவரும் அறிவர். பண்பின் கவர்ச்சி பல மடங்கு பெரியது. உடை, அதன் வண்ணம் கவர்ச்சிக்காக ஏற்பட்டது என பகவான் குறிப்பிடுகிறார். எழுத்தாளர் கு.ப. ராஜகோபால் 1940இல் எழுதிய கதையில் இக்கருத்து சிறப்பாக வெளியாகிறது. கதை பூர்த்தியாகவில்லை. வேரோட்டம் எனப் பெயர் பெற்றது.

பிரசிடென்சி கல்லூரியில் பயிலும் மாணவன் சந்திரசேகரன் நிதானமும், நாணயமும் நிறைந்தவன், கண்ணியமானவன், பெண்களோடு எல்லா மாணவர்களும் சகஜமாகப் பழகும் பொழுது அதை நாடாதவன். லலிதா என்ற பெண் அழகும், அறிவும் பெற்றதுடன் அமைதியான பெருந்தன்மையுடையவள் என்பதால் கல்லூரியில் மாணவிகளிடம் ராணி எனப் பெயர் வாங்கியவள். எந்த மாணவனுக்கும் தன் மனத்தில் இடம் தராதவள். அவளுக்கு சந்திரசேகரனுடன் பழக விருப்பம். அவன் அவளுடன் பழகுவதற்கு ஏற்படும் சந்தர்ப்பங்களை வலிய தவிர்க்கிறான். அவளே முனைந்து அவனுடன் பழகினாள். அவளை ஏற்றுக் கொண்டு, ஹாஸ்டலை விட்டு வெளியேறி ஆர்வமாக அவளுடன் தனிக்குடித்தனம் அமைப்பது ஒரு புரட்சியாகிறது. தகப்பனாருக்கு என்ன பதில் கூறுவது, எப்படி அவரை சந்திப்பது, அவர் "முகத்தில் விழிக்காதே'' என்றால் என் செய்வது என்ற கேள்விகள் எழுவதை மீறி சந்திரசேகரனை குடித்தனம் ஏற்பாடு செய்ய வைத்தது, அவர் காதிற்கு எட்டி, கிராமத்திலிருந்து எள்ளும் கொள்ளும் வெடிப்பதாக வருகிறார். அவர் வரும் நேரம் அவன் கடைத்தெருவுக்குப் போயிருக்கிறான். லலிதா அவரைப் புரிந்து கொண்டு அமைதியாக மௌனமாக வரவேற்கிறாள். அவளை ஏறெடுத்துப் பார்க்காமல் பேசுகிறார். அவள் குரலினிமை அவரை ஆட்கொண்டது. சிரமப்பட்டு நிமிர்ந்து பார்க்கிறார். சாட்ஷாத் அம்மணியாகக் காண்கிறார். வந்த வேகம் தணிகிறது. குழந்தை என்கிறார், காபி சாப்பிடுகிறார். கணத்தில் அவர் தன்னையிழந்து மகனை அவளுக்காக ஏற்கிறார். நான்கு நாட்கள் தங்கி அனைத்தையும் ஆமோதித்துப் பாராட்டுகிறார். வீடு போய் லலிதா எனக் கதவைத் தட்டுகிறார்.

அவள் பெண்மையின் முழுமை தூய்மையின்
வலிமையாகி அவரை கணத்தில் ஆட்கொண்டது.

இது பெண்மையின் உச்சகட்டம். இந்த உயர்ந்த அம்சமில்லாத பெண்ணில்லை. இப்படிப்பட்ட பெண் தன் மக்களை உத்தமனாக வளர்ப்பாள். இவள் நாட்டிற்குச் சொத்து.

பெண்மை மனிதத் தன்மையின் சிறந்த பகுதி.

தொடரும்.....

********

ஜீவிய மணி
 
ஒரு படி உயராமல் சமர்ப்பணமில்லை.
 

*******



book | by Dr. Radut