Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம் VI

யோக வாழ்க்கை விளக்கம் VI

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

II/84) சிருஷ்டி வந்த பின்னரே சத்தியம் தன்னையறியும்.
பரம்பொருள் தன்னையறிய வேண்டியதில்லை.

  • எந்த அவசியமுமற்ற பரம்பொருள்.
  • கடவுளை எல்லாம் அறிந்தவன், எல்லாம் வல்லவன், எங்கும் நிறைந்தவனென்கிறோம்.
  • மனிதன் தேவைகளாலானவன்.
  • தேவை ஆசையை எழுப்புகிறது.
  • சக்தி ஆசையாக மாறி திறமை உற்பத்தியாகிறது.
  • திறமைசாலியைப் போற்றுகின்றனர். அது பிரபலம்.
  • சிறியவனின் பெரும் திறமை பெரியவனுக்குப் பலஹீனம்.
  • தேவை புறம், ஆசை அகம்.
  • திறமையின் அடிப்படைகள் அகத்திலும், புறத்திலும் மனிதனைக் கட்டுப்படுத்துகின்றன.
  • வாழ்வில் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வது திறமை, வல்லமை.
  • பிறர் நம் தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்வருவது வாழ்வின் சிகரம், பதவி, அந்தஸ்து.
  • அதிகாரம் அதை நிர்பந்தமாகச் செய்கிறது.
  • அன்பு அதைப் பிரியமாகச் செய்கிறது.
  • தலைவன் தேவையைப் பூர்த்தி செய்யும் வாய்ப்பு தொண்டனுக்கு பாக்கியம்.
  • தேவையைக் கடந்தவன், மனித நிலையைக் கடந்தவன்.
  • மனிதன் தெய்வங்களைப் பாடிப் புகழ்ந்து துதிக்கிறான்.
  • பொருள் தேவையற்ற தெய்வத்திற்குப் புகழ் தேவைப்படுகிறது.
  • எதுவும் தேவைப்படாதது பரம்பொருள்.
  • எதுவும் தேவைப்படாத பரம்பொருள் ஏற்படுத்திக் கொள்ளும் தேவை சிருஷ்டி.
  • "தன்னையறிந்தின்பமுற வெண்ணிலாவே ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவ"என்றார் சுவாமி.
  • அதுவே மனித முயற்சியின் புனித உருவச் சிகரம்.
  • அதுவும் தேவையற்றது பரம்பொருள்.
  • வாழ்வு முன்னேறும் பொழுது மனிதன் நாடித் துடிப்பது, அவனைத் துடித்துத் தேடி வரும்.
  • டார்சி அவளுக்காக உயிரை விட்டான்.
  • அவள் துச்சமாக அச்சமின்றி வாய்க்கு வந்தபடி திட்டினாள்.
  • உலகில் எதுவும் அனந்தம், திட்டுவதும் அனந்தம்.
  • எதைப் பெறுகிறோமோ அதனால் அது பெருகுவது அனந்தத்தின் குணம்.
  • அதனால் "செலவு செய்தால் வருமானம் வரும்'' என்று அன்னை கூறுகிறார்.
  • இதன் தத்துவம்:
    செய்யும் செலவு, செலவு செய்வதை அதிகரிக்கும்.
    செலவு அதிகமானால் வரவு அதிகமாகும்.
    வரவு அதிகமாகாமல் செலவு செய்ய முடியாது.
    செலவு அதிகரித்தால் வரவு வளரும் என்பது அனந்தத்தின் அடிப்படை.
  • டார்சியைத் திட்டும்பொழுது எலிசபெத் தன்னுள் திட்டு வளர்வதைக் கண்டாள்.
  • அது மேதா விலாசம் genius. அதை அவள் விரும்பி அனுபவித்தாள்.
    (p.199 of the book Pride and Prejudice)
  • அவ்வளவு திட்டும் அவனைப் புறத்திலிருந்து அகத்திற்குக் கொண்டு போயிற்று.
  • சமூக சட்டப்படி அவள் அவனுக்குத் தேவையில்லை, துச்சம்.
  • அவன் நிலை சமூகத்தைக் கடந்த உள்ளம் உணரும் மனநிலை.
  • தேவையற்ற நிலையில் தேவையை எழுப்புவது பரம்பொருளின் சிருஷ்டி.
  • பரம்பொருள் பக்தனை அப்படியே விழைகிறது.
  • பக்தனைப் பரம்பொருள் தன்னில் உயர்ந்ததாகக் கருதுகிறது.
  • தன்னையிழந்த பரம்பொருள் தன்னை உணர்வது பக்தன் நிலை.
  • அந்நிலைக்கு உதவுவது பரம்பொருளின் பெரும் கடமை - அருள்.
  • டார்சி அந்நிலையில் அவளை நாடினான்.
  • அதன் விளைவாக அவனிடம் மன்னிப்புக் கேட்கும் நிலை அவளுக்கு ஏற்பட்டது.
  • விழுநர் வீழப்படுவார் நிலை - குறள் - அது தான் விரும்புபவர் தன்னை விரும்பும் நிலை செருக்கு தருவது என்கிறார் வள்ளுவர். அதுவே டார்சி நிலை.

*******

II/85) தன்னையறியாமல் தானாக இருக்க அது பிரம்மமாக இருக்க வேண்டும்.

  • எந்த நிலையும் சொந்த நிலையானது பிரம்மம்.
  • ஆதி, மூலம், சிருஷ்டிக்கப்படாதது, பிறப்பு இறப்பறியாதது பிரம்மம் எனப்படும்.
  • மேல் நாட்டார் அதை Absolute என்பர்.
  • ஆதியில்லாதது அனாதி.
  • ரூபமற்றது அரூபி.
  • அந்தமற்றது அனந்தம்.
  • எதற்கும் பிறப்புண்டு, பிறந்தறியாதது பிரம்மம்.
  • பிறந்தது இறப்பது சட்டம், பிரம்மம் பிறக்கவில்லை என்பதால், அதற்கு இறப்பில்லை.
  • எவரும் பிரம்மத்தை சிருஷ்டிக்கவில்லை, அதனால் அது சுயமானது.
  • அது எங்கும் நிறை பரம்பொருள்.
  • அது எல்லாம் வல்லது.
  • அது எதையும் அறிய வல்லது.
  • பிரம்மம் ஜீவன், பிரம்மம் ஜீவியம், பிரம்மம் ஆனந்தம்.
  • எதற்கும் அமைப்புண்டு, பிரம்மத்திற்கு அமைப்பில்லை.
    அமைப்பற்றது சாந்தி.
  • சப்தமற்றது நிசப்தம், எண்ணமற்றது மௌனம்.
  • எண்ணமற்றதும் மௌனம், அசைவற்றதும் மௌனம்.
  • அசைவற்ற மௌனம், எண்ணமற்ற மௌனத்தைக் கடந்தது.
  • எண்ணமும், அசைவுமற்ற மௌனம் பிரம்மத்திற்குரிய மௌனம்.
  • பிரம்மம், சச்சிதானந்தப் பிரம்மத்தைக் கடந்தது.
  • பிரம்மம் சிருஷ்டித்த பொழுது, முதலில் எழுந்தது சச்சிதானந்தம்.
  • சிருஷ்டி என்பது பிரம்மம் அகம், புறமாகப் பிரிவது.
  • மாயை சிருஷ்டியின் கருவி.
  • அநித்தியமானவையின் அஸ்திவாரமான நித்தியம் பிரம்மம்.
  • ஜீவியமுடையவற்றின் அடிப்படை ஜீவியம் பிரம்மம்.
  • மனிதனின் மகத்துவம் பிரம்மம்.
  • சகல ஜீவராசிகளின் மகிமை பிரம்மம்.
  • பிரம்மம் ஒரு ஜீவன்.
  • பிரம்மம் ஜீவியமான ஜீவன்.
  • ஜீவன் சிவன், ஜீவியம் காளி.
  • ஜீவனின் ஜீவியமான சக்தி ஹிருதய சமுத்திரம்.
  • ஆதியும் அந்தமுமற்ற பிரம்மம் அனாதி, அனந்தம்.
  • பிரம்மம் காலத்தையும், இடத்தையும் கடந்தது.
  • ஜீவன் ஜீவியமாக உள்ள நிலை ஆனந்தம்.
  • அனைத்தும் ஆனந்தத்தில் உற்பத்தியாகி, ஆனந்தத்தால் ஆதரிக்கப்பட்டு, ஆனந்தத்தில் முடிகிறது.
  • சிருஷ்டியில் ஜடம் ஆனந்தமயமான ஜீவன்.
  • பிரம்மம் பிரபஞ்சத்தில் ஆன்மீக சக்தியாகிறது.
  • ஆன்மீக சக்தியை மனம் தன் புலனால் அறியும் பொழுது, அது ஜட சக்தியாகும்.
  • இந்த சிருஷ்டியை பிரம்மம் அஞ்ஞானத்தாலானதாகச் செய்தது.
  • சிருஷ்டிக்கு அஞ்ஞானம் தேவையில்லை.
  • இந்த சிருஷ்டிக்கு அஞ்ஞானம் இன்றியமையாதது.
  • பிரம்மம் பொருளாகும்.
  • பிரம்மம் சக்தியாகும்.
  • பிரம்மம் ஆனந்தமாகும்.
  • அகமான பிரம்மம், புறமான சிருஷ்டியாவது அது தன்னை மனத்தின் பிரதிபலிப்பாகக் காண்பது.
  • ஆனந்தமயமான பேரானந்தத்தை நாடி சிருஷ்டித்தது.

தொடரும்....

******



book | by Dr. Radut