Skip to Content

11. அன்பர்கள் கூறிய அனுபவங்களின் தொகுப்பு

மாம்பலம் தியானமையத்தில் இரண்டாவது ஞாயிறு அன்று அன்பர்கள் கூறிய அனுபவங்களின் தொகுப்பு

  1. ஓர் அன்னை அன்பர் தனது காலனியில் சில செம்பருத்திச் செடிகளை நட்டு, தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்தார். பூக்கள் பூக்க ஆரம்பித்தன. இவர் அதை பறித்து அன்னைக்கு சமர்ப்பணம் செய்யப் பிரியப்பட்டார். ஆனால் தினமும் இவர் பறிப்பதற்கு முன்பாகவே அப்பூக்கள் மற்றவர்களால் பறிக்கப்பட்டிருந்தன. நீண்ட நாட்களாக இது தொடர்ந்தது. பூக்களைப் பறித்து அன்னைக்குச் சமர்ப்பணம் செய்ய வேண்டும் என்ற ஆசையை மனதிலிருந்து எடுத்து, பரந்த மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளச் சொல்லி இவருக்கு எடுத்துரைக்கப்பட்டது. மனதை மாற்றிக் கொள்வது அவ்வளவு சுலபமான காரியமாக இருக்கவில்லை. ஆனாலும் முயற்சியை மேற்கொண்டார். வெகு விரைவிலேயே நூற்றுக்கணக்கான செம்பருத்திச் செடிகள் வேலியோரம் வரிசையாக நடப்பட்டு, சில நாட்களில் பூக்கள் பூத்துக் குலுங்க ஆரம்பித்தன. எல்லோரும் பூக்களைப் பறித்த பின்பும் மீதமாக அதிக அளவில் பூக்கள் செடியில் காணப்பட்டன. பிறகு என்ன, எல்லாமே அன்னைக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டது.
  2. ஓர் அன்பர் வேறு வீட்டிற்குக் குடிபெயர வேண்டும். முதல் நாள் அவரும், அவரது குழந்தைகளும் அவ்வீட்டிற்குச் சென்று தீவிரமாக அன்னையை அழைத்து, பிறகு வீடு திரும்பினர். மறுநாள் அப்புதிய வீட்டைச் சுத்தம் செய்து சாமான்களை பழைய வீட்டிலிருந்து புது வீட்டிற்கு மாற்றி தினப்படி வேலைகளை ஆரம்பித்தனர். அன்று மாலை, அவ்விடத்திலிருக்கும் அன்பரது நண்பர் வந்து, தண்ணீர் இல்லாமல் எப்படி சமாளித்தீர்கள் என விசாரிக்கும் பொழுது அன்பருக்கு அளவு கடந்த ஆச்சரியம். அன்பருக்குத் தண்ணீர் தட்டுப்பாடே இருக்கவில்லை. பிறகு விசாரித்த பொழுதுதான் தெரிந்தது, 300 வீடுகள் கொண்ட அக்குடியிருப்பில் மற்றவர்கள் எவருக்கும் தண்ணீர் வரவில்லை. அன்னையின் கருணை, நீராக அன்பருக்குக் கிடைத்தது.
  3. பதவி உயர்வு இடமாற்றத்துடன்தான் வரும் என்பது அன்பருக்குத் தெரியும். இருக்கும் இடத்திலேயே தொடர விரும்பினாலும், சரி அன்னை தங்கள் திருவுள்ளப்படி நடக்கட்டும் என பிரார்த்தனை செய்யத் தொடங்கினார். இட மாற்றலுடன் பதவியுயர்வு கிடைத்தது. முதலில் சற்று ஏமாற்றம் அடைந்தாலும், அன்னை கொடுப்பதை ஏற்றுக் கொள்வோம் என்ற மனநிலைக்குத் தயாரானார். என்ன ஆச்சரியம்! தொழிற் சங்கத்துடன் அதிக ஈடுபாடு இல்லாத போதிலும் அச்சங்கம் தானாகவே முன்வந்து முயன்று இவரது இடமாற்றல் உத்தரவை ரத்து செய்ய வைத்தது.
  4. ஓர் அன்பர் தனது அலுவலகம் நிறுவ இடம் தேடிக் கொண்டிருந்தார். அவரது தேவைகள் அதிக எதிர்பார்ப்புடன் இருந்தன. ஒரு பிரதான இடத்தில், பார்த்தால் எல்லோரையும் கவரும்படி நிறுவனம் அமைய வேண்டும் என எதிர்பார்த்தார். ஆனால் ஒரு modestஆன இடத்தில் இடம் கிடைத்து அலுவலகம் ஆரம்பமாயிற்று. அன்னை கொடுத்தது என அதனை ஏற்றுக் கொண்டார். வேறொரு ஊரில் அவருடைய நிறுவனத்தின் அடுத்த கிளைக்கு அவர் எதிர்பார்த்தபடி இடம் கிடைத்தது. ஆனால் அன்னை அமைத்துக் கொடுத்த முதல் நிறுவனம்தான் அவருக்கு அதிக இலாபத்தை ஈட்டித் தருகிறது.
  5. ஒரு தாயார், தான் டி.வி. பார்ப்பதைக் குறைத்துக் கொண்டார். அதற்கு எதிரொலியாக மகன் தனது படிப்பில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு அதிக மதிப்பெண்கள் பெற ஆரம்பித்தார்.
  6. கடைக்குச் சென்று சாமான்கள் வாங்கச் சென்றால் ஒரு நீண்ட வரிசை முதலிலேயே காத்துக் கொண்டிருக்கிறது. இரண்டு countersதான் திறந்துள்ளது. அன்பருக்குப் பொறுமை இழக்கிறது. ஏன் இந்த கடை முதலாளி நிறைய counters திறக்கக் கூடாது என நினைக்கிறார். நினைத்தது அன்பரல்லவா! அடுத்தவர் கோணத்தில் சிந்திக்க ஆரம்பித்தார். வேலைக்கு ஆட்கள் போதுமான அளவுக்கு இல்லைபோலும் அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கலாம் என்று அசைபோடும் க்ஷணத்திலேயே ஒரு புதிய counter திறக்கப்பட்டு அங்கு இவரை முதல் நபராக நிறுத்தினார் ஸ்ரீ அன்னை.
  7. வீடு கட்டித் தருகின்ற நிறுவனத்தில் ஆட்கள் தேவைப்பட்டது. அங்குப் போதுமான ஆட்கள் இல்லை. அதிக ஊதியம் கொடுக்க முன்வந்தும்கூட ஆட்கள் பற்றாக்குறை காரணமாக ஆட்கள் கிடைக்கவில்லை. அன்பருக்கு எதுவும் புரியவில்லை. நம் நாட்டில் சுபீட்சம் பெருகிவிட்டது. அதனால்தான் கீழ்மட்ட வேலைக்கு ஆள் பற்றாக்குறையாக உள்ளது என சந்தோஷப்பட வேண்டும் என்று ஸ்ரீ அப்பா அவர்கள், சம்பந்தப்பட்ட அன்பருக்கு அறிவுரை வழங்கினார்கள். அன்பரும் அப்பா அவர்கள் கூறியதை முழுமனத்துடன் ஏற்றுக் கொண்டார். பிறகு அவர் மனமாற்றத்திற்கு பரிசாக அன்னை, பீகாரிலிருந்து குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்ய நிறைய ஆட்களை அனுப்பி வைத்தார்.
  8. சுத்தத்தை எடுத்துக் கொண்ட அன்பர் வீட்டைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தார். அப்பொழுது ஒரு வருடமாக எங்குத் தேடியும் காணாமல் போய்விட்டதாக நினைத்த ஒரு முக்கிய பத்திரம் கிடைத்தது.
  9. வெளிநாட்டில் வேலை செய்துகொண்டிருந்த அன்பர் தாய்நாடு திரும்பினார். சென்னையில் குடியேற விரும்பி அங்குத் தங்குவதற்கு வீடு கட்டிக் கொள்ள முயற்சித்தார். ஆனால் அவருக்கு வேறொரு ஊரில்தான் வேலை கிடைத்தது. இதுவும் அன்னையின் சித்தம் என எடுத்துக் கொண்டு அவ்வூருக்குச் சென்று வேலையில் சேர்ந்தார். இட்ட பணியினை செவ்வனே செய்து முடித்தார். மீண்டும் சென்னைக்குத் திரும்பி, ஒரு கட்டிடக் கலை நிபுணரிடம் இன்ன இடத்தில் இம்மாதிரியான வீடு கட்டித் தருமாறு கேட்டார். அவரது விருப்பப்படியே அதே இடத்தில் அவர் கேட்டதைவிட உயர்வான ஒரு வீடு குறைந்த விலையில் இருப்பதனை அறிந்த பொழுதுதான் அன்னையின் லீலை அவருக்குப் புரிந்தது. அவர் சென்னையிலேயே இருந்திருந்தாலும் அம்மாதிரியான வீடு கட்ட குறைந்தது ஒரு வருடமாகியிருக்கும். வெளியூருக்கு அனுப்பிய அன்னை உள்ளூரில் அவ்வன்பருக்கு வீட்டை தயாராக்கிக் கொண்டிருந்தார்.

********

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அன்னை மூலம் பெறும் உறவு அகத்திற்குரியது.
அதுவே உறவு.
நேரடியாக உறவு கொள்ள நமக்குரிமையில்லை.
 

******



book | by Dr. Radut