Skip to Content

12. அன்னை இலக்கியம் - திட்டு = தங்கச் சங்கிலி

அன்னை இலக்கியம்

திட்டு = தங்கச் சங்கிலி

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

இல. சுந்தரி

பாட்டிக்குத் தான் அதிகம் பேசிவிட்டோமோ என்ற அச்சம் எழுந்தது. மகன் வந்தால் என்ன சொல்வது என்ற கவலை வேறு. மதியவுணவிற்கு வீட்டிற்கு வந்த சார் தீபாவின் அறை பூட்டியிருப்பதைப் பார்த்து, "என்னயிது, இந்த நேரத்தில் ரூமைப் பூட்டிக்கொண்டு போகமாட்டாளே" என்றெண்ணி, "அம்மா, தீபா ரூம் ஏன் பூட்டியிருக்கிறது?" என்றார். சார் இல்லையென்றால், பாட்டியிடம் சொல்லிவிட்டுப் போவாள்.

"அவளுக்கு உடம்பு சரியில்லை போலிருக்கிறது. வீட்டிற்குப் போய்விட்டாள்'' என்று கூறிச் சமாளித்துவிட்டாள். நடந்தது தெரிந்தால் அவர் மிகவும் வருத்தப்படுவார். முதல் நாளே அவளை அடுப்பங்கரைக்குக் கூப்பிடாதே என்று விளையாட்டாகச் சொல்லியதை நினைவில் கொண்டாள் பாட்டி.

வீட்டிற்கு வந்த தீபா கண் கலங்கியிருந்ததைப் பார்த்து ரெங்கா தவித்துப்போனார். கோபத்தோடு வந்து கைப்பையை மேசைமீது "ணங்'கென்று வைத்தாள்.

"அவர் யார் என்னைக் கேட்பதற்கு? என்னிஷ்டம், நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன். இதற்குத்தான் இவர்கள் வீட்டிற்கு வேலைக்குப் போனேனா? வேலையும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம்'' எனக் கத்தினாள்.

அங்கு ஏதோ இவளுக்குப் பிடிக்காதது நடந்திருக்கிறது. இப்போது கேட்டால் கோபத்தை விசிறிவிட்டதுபோலாகும் என்று ஒன்றும் புரியாதவர் போலிருந்தார் ரெங்கா.

"அப்பா! இனி நான் வேலைக்குப் போகமாட்டேன்'' என்றாள் ஆத்திரமாக.

"சரிம்மா. உனக்குப் பிடிக்கவில்லையென்றால் போக வேண்டாம், விடு'' என்று கோபம் தணியப் பேசினார்.

ஆனால் சினம் கொண்டவர் சிந்திப்பதில்லை அல்லவா? அவள் தணியவில்லை.

"பின்னே என்னப்பா? அவர்கள் வீட்டிற்கு நான் எதற்குப் போனேன், சமைக்கவா போனேன்? அந்தப் பாட்டி, "நீங்கள் எனக்குச் செல்லம் கொடுத்து வளர்த்துவிட்டீர்கள். கண்டித்து வளர்க்கவில்லை. சமையல் கற்றுத் தரவில்லை' என்று பேசினார்'' என்றாள்.

(அவர் சொன்னது உண்மைதானே என்று உள்ளுக்குள் நினைத்துக்கொண்டார் ரெங்கா). "போனால் போகிறது, விடு. இனி அந்த வீட்டிற்கு நீ வேலைக்குப் போகவேண்டாம்'' எனச் சமாதானமாய்க் கூறினார்.

தன் அறையில் சென்று படுக்கையில் விழுந்தாள். மனம் அடங்கவில்லை. அப்பா எத்தனை நயமாகச் சொல்வார். அப்பொழுதெல்லாம் எதிர்த்துப் பேசிய தன்னால் பாட்டியை எதிர்த்துப் பேச முடியவில்லையே, ஏன்? ஏனிப்படி ஒன்று என் வாழ்வில் நிகழ்ந்தது? சார் தினமும் என் திறமையை எப்படியெல்லாம் பாராட்டுவார்? சாருக்குத் தெரிந்தால் என்ன நினைப்பார்? பாட்டி சாரிடம் சொல்லியிருப்பாரா, மாட்டாரா? ஒரே சிந்தனை, அவமான உணர்ச்சி. துவண்டுபோனாள் தீபா. ரெங்காவிற்குக் குழந்தை முகத்தைப் பார்க்கவே வேதனையாய் இருந்தது. பாட்டி கேட்டதில் தவறொன்றுமில்லை. ஆனால் அதைத் தாங்கிக்கொள்ளும் பக்குவம் தீபாவிற்கில்லையே. எல்லாம் அன்னை பார்த்துக்கொள்வார் என்று நினைத்து அமைதியானார்.

சார் போன் செய்தார். ரெங்காதான் போனை எடுத்தார்.

"தீபா உடம்பு சரியில்லை என்று வீட்டிற்குப் போனதாய் அம்மா சொன்னார்கள். தீபா இப்பொழுது எப்படியிருக்கிறாள்? இங்கிருந்தால் நான் வந்து டாக்டரிடம் அழைத்துப் போயிருப்பேனே'' என்று பரிவுடன் கேட்டார் சார்.

"அதெல்லாம் பெரிதாக ஒன்றுமில்லை. சொல்லிக்கொள்ளாமல் வந்துவிட்டாளாம், மன்னித்துவிடுங்கள். நான்கு நாட்களில் மீண்டும் வந்துவிடுவாள்'' என்று சமாதானமாகப் பேசினார் ரெங்கா.

"பரவாயில்லை, நானொன்றும் நினைக்கவில்லை. அவள் உடல்நலம்தான் முக்கியம். அவள் இல்லாமல் எனக்குக் கையொடிந்த மாதிரியிருக்கிறது. நான் ஏதாவது செய்ய வேண்டுமென்றால் சொல்லுங்கள்'' என்றார். "பெரிய மனிதர் பெரிய மனிதர் தான்" என்றது ரெங்காவின் மனம்.

"கவலைப்படும்படி ஒன்றுமில்லை. அவளுக்கும் இங்கே இருப்புக் கொள்ளாது. விரைவில் வந்துவிடுவாள்'' என்றார். அவரறியாமல் இப்படிப் பேச்சு வந்தது.

மாலை 5 மணியாகியும் தீபா அறையைவிட்டு வெளியே வரவில்லை. ரெங்கா மாலையில் தியானக் கூடலுக்குச் செல்ல வேண்டும். மெல்ல அவளிடம் சென்று, "முகம் கழுவிக்கொண்டு இந்தப் பாலைக் குடி. இன்று என்னுடன் தியான மையத்திற்கு வா. அந்தச் சூழல் எல்லாத் துன்பத்தையும் அழித்துவிடும்'' என்று இதமாகச் சொன்னார்.

சாதாரணமாய் அவள் தியான மையத்திற்குச் செல்வதில்லை. எழுத்து, படிப்பு, கம்ப்யூட்டர் சென்டர், லைப்ரெரி என்று நேரம் செலவிடுவாளே தவிர, அப்பாவின் அன்னைபக்தியில் அக்கறை கொண்டதில்லை. அன்னையை அப்பா வழிபடும் தெய்வம் என்று புரிந்துகொண்டிருந்தாளே தவிர அறிந்துகொள்ளும் ஆவல் இருந்தது இல்லை.

இன்று அவள் அகந்தை அடிபட்டு மனம் வலிக்கிறது. பழகிய இடங்களுக்குப் போகப் பிடிக்கவில்லை. எனவே, முகம் கழுவி, அப்பா பரிவுடன் எடுத்து வந்த பாலைப் பருகிவிட்டு, அப்பாவுடன் மையத்திற்குப் புறப்பட்டாள்.

அங்கு சென்றதும் பூக்களின் நறுமணம், ஊதுபத்தியின் மெல்லிய மணம், எல்லாவற்றையும் தாண்டி அலைஅலையாக ஏதோ பரவசம் வந்து மோதியது.

"தீபா! நான் இங்கே சர்வீஸ் மெம்பர். எனக்கென சில பணிகள் உண்டு. நீ (அங்கே அன்னை, பகவான் சின்னங்களை மலர்களால் அலங்கரிக்கும் பெண்களைக் காட்டி) இவர்களுடன் இங்கே இரு'' என்றார். அவளையொத்த இளம் பெண்கள் அவளை நட்புடன் பார்வையால் அழைத்துத் தங்களுடன் பணியில் சேர்த்துக் கொண்டனர். அக்கணமே எல்லாம் மறந்து போனது. ஸ்ரீ அன்னையின் சின்னத்தை மலர்களின் வண்ணங்கள் பொருந்துமாறு அமைத்து அழகுபடுத்திவிட்டாள். கூட இருந்த தோழிகள், "தீபா, ஒரே நாளில் இத்தனை அழகாக பூ அடுக்கியிருக்கிறாயே. நாங்கள் சிறிது சிறிதாகத்தான் செய்யக் கற்றோம். உன் அப்பா சொல்வார் தீபா திறமைசாலி என்று. அது உண்மைதான்'' என்று மனம் திறந்து பாராட்டினர். "இத்தனை நாள் நீ ஏன் வரவேயில்லை?'' என்றனர். உண்மையிலேயே தீபா சந்தோஷமாகிவிட்டாள்.

கூடல் தொடங்கியது. அவள் யாவற்றையும் கவனமாகப் பார்த்தாள், கேட்டாள்.

ஓரிளம் பெண் அன்னையைத் தான் ஏற்றபின் தனக்கு நேர்ந்த அனுபவங்களை உருக்கமாக எடுத்துரைத்தாள்.

ஒரு பெரியவர் அன்னையின் கோட்பாடுகளை ஏற்பது அன்னையை ஏற்பதுஎன்றும், மனமாற்றம் பெரும்பலன் தரும் என்றும் கூறினார். அத்துடன் தீபாவிற்குத் தேவையான ஒன்றும் அந்தப் பேச்சில் இடம்பெற்றிருந்தது. அது பின்வருமாறு:

திட்டு என்பது அதிர்ஷ்டத்தின் டிரான்ஸ்பர் ஆர்டர், நம்மை யாரேனும் திட்டினால் நாம் திருப்பித் திட்டக் கூடாது. திட்டினால் அன்னை மையத்திலிருந்து வாழ்வு மையத்திற்கு வந்துவிடுகிறோம். அன்னை நமக்குத் தர வந்த அதிர்ஷ்டத்தை இழந்துவிடுவோம்.

திட்டினால் எப்படிக் கோபம் வாராமலிருக்கும்? எப்படிப் பொறுத்துக்கொள்ள முடியும்? பொறுமையும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம். திட்டினால் திருப்பித் திட்டுவேன் என்பதைத் தினமும் காண்கிறோம். இது சரியா? தவறா? என்பது கேள்வி இல்லை. இதுவே நம் நிலை.(தீபாவிற்கு இதுவே தன்னிலைஎன்று தோன்றியது).

அன்பர் நிலை என்ன? திட்டினால் அவசியம் பொறுத்துக் கொள்ள வேண்டும். திரும்பத் திட்டக்கூடாது. மேலும் பிறர் நம்மைத் திட்டுவது நம்முள் உள்ள குறையின் பிரதிபலிப்பு. எனவே, அக்குறையைப் போக்க பிறர் நம்மைத் திட்டுவது ஒரு சந்தர்ப்பம். நாம் அதற்கு நன்றியுள்ளவராக இருக்க வேண்டும்.

ஒருவன் நம்மை வந்து திட்டினால், அவன் நம்மைத் திட்டியதாகப் புரிந்து கொள்கிறோம். நம்முள் உள்ள கெட்டகுணம் அழிய முடிவு செய்தபின், அது தானே அழிய முடியவில்லை என்பதால், அது அடுத்தவனை அணுகி அவன் கெட்டகுணத்தை (அதாவது திட்டும் குணத்தை அல்லது நம் குறையைச் சுட்டிக்காட்டும் குணத்தை) அசைத்து, என்னை வந்து திட்டு எனக் கேட்டுக்கொள்கிறது என்று நாம் புரிந்து கொள்வது இல்லை.

பிறர் நம் குறையைச் சுட்டும்போது எரிச்சல்படாமல் அதை ஏற்று, குறையை நிறைவாக மாற்றினால், நாம் அன்னையை நெருங்குகிறோம்என்று பொருள்.

இவ்வாறு சொற்பொழிவாளர் பேசியது அவளுக்கே பொருந்துவதாய் அமைந்தது. காலையிலிருந்து நிகழ்ந்தவற்றை எல்லாம் நினைவுகூர்ந்தாள். ஆம், பாட்டி இன்று என் குறையைச் சுட்டிக்காட்டிப் பேசினார். அது எனக்குத் திட்டியதாகப் புரிந்தது. ஆனால் இப்போது நானதை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்? சமையலைப் பற்றிய என் பிடிவாதம் தவறு என என் அடிமனம் உணர்ந்து, அது அழிய மறுத்ததால் பாட்டியின் கோபத்தை அசைத்து, என்னிடம் பேச வைத்தது. வீட்டிற்கு அடங்காத பிள்ளையை ஊரார் அடக்குவர்என்பது போலாயிற்று. அப்பா நயமாகச் சொன்ன போதெல்லாம் நான் அதை மதிக்கவில்லை. இன்று பாட்டியின் பேச்சு என் அகந்தையை தீண்டியது எனக்குப் பொறுக்கவில்லை. அதனால் அழுதுகொண்டு வந்துவிட்டேன். பாட்டி எனக்கு நல்லது செய்திருக்கிறார் என்பதை இச்சொற்பொழிவின் மூலம் அன்னை எனக்கு உணர்த்தினாரோ!

காலையிலிருந்த கோபம் சிறிது சிறிதாய்க் குறைந்து மறைந்துவிட்டது. முகம் மலர்ந்துவிட்டாள் தீபா. தோழிகள் வேறு அவளை மீண்டும் நாளை கூடலுக்கு வரவேண்டும் எனக் கூறி அன்புடன் வழியனுப்பினர்.

தீபாவைப் பற்றியிருந்த கெட்டகுணம் அவளைவிட்டு நீங்குவதற்குத்தான் அன்னை செய்த ஏற்பாடு இது என்று ரெங்கா அன்னைக்கு மானசீகமாய் நன்றி செலுத்தினார்.

அன்று வீடு திரும்பிய பிறகு இரவெல்லாம் தியானக் கூடல் காட்சியும், பேச்சுமே தீபாவின் மனதில் மீண்டும் மீண்டும் வந்தன. இனிமையாய் உறங்கி விழித்தாள்.

தியானமையச் சூழல் அவளுள் ஒரு விழிப்பை ஏற்படுத்தி- யிருந்தது. ஓர் அருமையான சூழலுக்குள் வாராததால்தான் இத்தனை நாள் எப்படி வாழ்ந்திருக்கிறோம்என்று புரிந்தது. தன் அத்தனை பிழைகளையும் பொறுத்துக்கொண்டு தன்னைச் சுதந்திரமாய் விட்டிருக்கும் தந்தையின் அருமையும் புரிந்தது. பரிவும் எழுந்தது. வீட்டிற்கு அடங்காத பிள்ளையை ஊரார் அடக்குவர் என்பதுபோல் அப்பாவிடம் எதிர்த்து உரையாடும் தன்னை பாட்டி தன் பேச்சால் அடக்கிவிட்டார் என்றுணர்ந்தாள். ஆனால் கோபப்படவில்லை. பாட்டி தனக்கு அதிர்ஷ்டம்தர வந்தவர் என்று மனப்பூர்வமாய் ஏற்றுக்கொண்டாள்.

மறுநாள் காலை வழக்கம்போல் பால் காய்ச்சி, காபி போட சமையலறைக்கு வந்த ரெங்கா, சமையலறைக் கதவு திறந்திருப்பதும், விளக்கு எரிவதையும் கண்டு, முன்தினம் மறந்துவிட்டோமோ என்று எண்ணியவண்ணம் உள்ளே வந்தவர், தீபா பால் காய்ச்சுவது கண்டு வியப்படைந்தார்.

"அப்பா, வாருங்கள். காபி தயார். உட்காருங்கள்'' என்று டபரா, டம்ளரில் பால் ஊற்றி, டிகாஷன் ஊற்றி, சர்க்கரை இட்டுக் கலக்கிக் கொடுத்தாள். சந்தோஷமாய் வாங்கிக் குடித்தார். தானும் ஒரு டம்ளரில் காபியுடன் வந்து அமர்ந்து, குடிக்க ஆரம்பித்தவள், முகம் சுருங்கி, "காப்பி எப்படியிருக்கிறதப்பா?'' என்றாள். "என் மகள் தயாரித்ததல்லவா? நன்றாகவே இருக்கிறது'' என்றார். "போங்கப்பா, பொய் சொல்றீங்க. ஒரே தண்ணியாயிருக்கு. நான் பாலில் தண்ணீரும் ஊற்றவில்லை. நீங்கள் போடும் காப்பிபோல் இல்லையே, ஏன்?'' என்றாள்.

ரெங்கா சிரித்தார். பிறகு, "காபி பௌடர் இன்னும் சிறிது கூடுதலாய்ப் போட வேண்டும். பிறகு காய்ச்சிய தண்ணீரை வேகமாக ஊற்றினால், பொடி கரைந்து தண்ணீர் டிகாஷன் வந்துவிடும். போட்ட காப்பிபொடி நனையும்படி சிறிது சிறிதாகக் கொதிக்கும் நீரை மெல்ல ஊற்ற வேண்டும். அப்போது பொடி கரையாமல் ஊறி, கெட்டிப்படும். பிறகு டிகாஷன் திக்காக வரும்'' என்றார்.

"ஓ! இப்படி ஒரு சூட்சுமம் உள்ளதா இதில்? மாலையில் பாருங்கள், அருமையான காப்பி தருகிறேன்'' என்றாள். இப்படி ஒவ்வொன்றாய்க் கற்றுக் கொடுத்தார்.

வெண்டைக்காயைக் கழுவி, ஈரம் போகத் துடைக்காமல் அரிந்துவிட்டாள். ஒரே குழகுழப்பு. பொறியல் உதிர்உதிராக வரவில்லை.

"என்னப்பா இது?'' என்றாள்.

வெண்டைக்காயை ஈரத்துடன் அரியக்கூடாது என்று சொல்லிக் கொடுத்தார். ரசம் ஒரு கொதி வந்ததும் நிறுத்தி, நெய்யில் கடுகு தாளித்தால் வாசனையாக, சுவையாக இருக்கும் என்பது போன்ற சமையல் சூட்சுமங்கள் யாவும் நாலே நாட்களில் கற்றுவிட்டாள்.

ஐந்தாம் நாள் உற்சாகமாய்ப் பழைய தீபா ஆனாள். "அப்பா, நானின்று சார் வீட்டு வேலைக்குப் போகப்போகிறேன்'' என்று புறப்பட்டாள்.

"சரிம்மா'' என்று மகிழ்வுடன் வழியனுப்பினார். நான்கு நாட்களில் வந்துவிடுவாள் என்று தான் தற்செயலாய்க் கூறியதை அன்னை அழகுற நிறைவேற்றியது கண்டு நன்றியால் சிலிர்த்தார்.

இவளைக் கண்டதும் சார் மகிழ்ந்துபோனார். "தீபா, ஆர் யு ஆல்ரைட்?'' என்றார்.

"ஆமாம் சார், குணமாகிவிட்டேன்'' என்று வாய் கூறியபோது (உடம்பால் அன்று, மனத்தால் என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்).

அவள் உடல் நலமாகி வந்த முதல் நாள் என்று புதிய வேலை ஒன்றும் கொடுக்காமல், வெளியே போய்விட்டார்.

தன் ரூமைத் திறந்து, பொருட்களை ஒழுங்கு செய்துவிட்டு, ஈமெயில் செக் செய்து, அவசர கடிதங்களை அனுப்பிவிட்டு, டீ டைம்மில் சமையலறைக்கு வந்தாள். பாட்டி அன்று வீட்டில் சமைப்பதாக யாவரிடமும் கூறியிருந்ததால், சமையலறையில் தடுமாற்றத்துடன் ஏதோ செய்துகொண்டிருந்தாள்.

"பாட்டி, நான் தீபா வந்திருக்கிறேன்'' என்று நாடக பாணியில் பழைய உற்சாகத்துடன் பேசினாள்.

பாட்டிக்கு வியப்பு. "தீபாவா?'' என்றார். அன்று பாட்டி தீபாவைப் பேசிவிட்டாளே தவிர, தீபா கோபித்துக்கொண்டு போனதால் தன்மீது தான் தவறு என்று அச்சப்பட்டுக்கொண்டிருந்தார். இன்று அவள் குறும்புக் குரலைக் கேட்டதும் மகிழ்ச்சியுடன், "தீபா, பாட்டி மேல் உனக்கு வருத்தமொன்றில்லையல்லவா?'' என்றார்.

"வருத்தமில்லை பாட்டி, சந்தோஷம். நன்றி சொல்லத்தான் வந்துவிட்டேன்'' என்றாள். பாட்டிக்குப் புரியவில்லை.

"பாட்டி, இப்படி வந்து உட்காருங்கள். இன்று நான் தான் சமையல் செய்யப்போகிறேன்'' என்று கூறியவண்ணம் பாட்டியை மெல்லப் பிடித்து, அழைத்து வந்து, டைனிங் டேபிள் முன்னுள்ள நாற்காலியில் உட்கார வைத்தாள்.

பாட்டிக்குத் திகைப்பு, சமையல் தெரியாது என்று அழுது கொண்டு போனாளே.

அவள் மளமளவென்று கறிகாய்களை எடுத்து, அரிந்து வைத்துக் கொண்டு, அப்பாவிடம் கற்ற சுவையான சமையலை விரைவாகத் தயாரித்து, டைனிங்டேபிளில் வைத்தாள்.

"பாட்டி எனக்கொரு பிராமிஸ் செய்து கொடுங்கள்'' என்றாள்.

"பிராமிஸா? எதற்கு?'' என்றார் பாட்டி.

"ஆமாம் பாட்டி. நான் சமைத்தேனென்று யாரிடமும் சொல்லக் கூடாது. சாருக்குத் தெரிந்தால் கோபிப்பார்'' என்றாள். பாட்டி சொல்லவில்லை என்று ஒப்புக்கொண்டார்.

கையோடு சாருக்கும் போன் செய்து, இன்று காரியர் சாப்பாடு எடுக்க வேண்டாம் என்று பாட்டி சொன்னதாகக் கூறிவிட்டாள்.

1 மணிக்கு சாப்பாட்டு அறையில் கூடிய வீட்டினர் மதிய உணவை இரசித்து, ருசித்துச் சாப்பிட்டனர். "பாட்டி, நம் சமையற்காரர் சமையலையும், ஹோட்டல் சாப்பாட்டையும் சாப்பிட்டு, இன்று உங்கள் சமையலைச் சாப்பிடுவது, வெயிலின் கொடுமையை நிழலின் அருமையில் உணர்வது போலிருக்கிறது. பாட்டி, உங்களுக்கு நிச்சயம் ஒரு பரிசு தர வேண்டும்.

ஏனப்பா, நாங்கள்தான் சமையல்காரர் சாப்பாட்டைச் சாப்பிட்டு வளர்ந்தோம். நீங்கள் எப்படி?'' என்றனர்.

"குழந்தைப் பருவத்தில் அம்மாவின் கைச் சமையல் சாப்பிட்டேன். திருமணத்திற்குப்பின் உன் அம்மாவின் சமையல் சில காலம் சாப்பிட்டேன். நீண்ட நாட்களாக சமையற்காரர் கையால் செய்த சாப்பாடுதான். நீண்ட நாட்களுக்குப் பிறகு அம்மாவின் கையால் சமைத்துச் சாப்பிடும் பேறு இன்றுதான் கிடைத்திருக்கிறது'' என்றார்.

இவர்கள் இப்படிப் பேசப் பேச, பாட்டிக்கு, தான் தீபாவைப் பேசியது உறுத்தியது. இத்தனை நன்றாகச் சமைத்து, அனைவர் பாராட்டையும் பெறும் தகுதிக்குரியவள் தீபாதான். ஆனால் தான் சமைத்ததை வெளியிடக்கூடாது என்று வாக்குறுதி வாங்கியிருக்கிறாளே என்று எண்ணியவண்ணமிருந்தார் பாட்டி.

"தீபா, இங்கே வா. நீ சாப்பிட்டுவிட்டாயா?'' என்றார் சார்.

"இல்லை சார். ஒரு சின்ன வேலை பாக்கியிருந்தது. அதை முடித்துவிட்டுச் சாப்பிட நினைத்தேன்'' என்றாள்.

"நல்லது. அதை முடித்துவிட்டு, இன்று ஒரு நாள் பாட்டியின் கைச் சமையலைச் சாப்பிடு. நாங்கள் எல்லோரும் அடைந்த சந்தோஷத்தை நீயும் அனுபவிக்க வேண்டாமா? யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்'' என்று கூறிச் சிரித்தார்.

பாட்டிக்கு மிகவும் சங்கடமாயிருந்தது. தீபாவும் மனதிற்குள் சிரித்துக்கொண்டு, "சரி சார்'' என்றாள்.

அதன்பிறகு சமையற்காரர் வரும் வரை தீபாதான் சமைத்தாள். யாருக்கும் தெரியாமல் பாட்டியை உடன் வைத்துக்கொண்டு சமைத்தாள்.

"பாட்டி, இனி சமையற்காரர் வந்த பிறகும் வாரத்தில் ஒரு நாளாவது உங்கள் சமையல்தான். அதுவும் உங்கள் வயோதிகத்தில் உங்களைச் சிரமப்படுத்தக்கூடாது என்பதால் தான்'' என்றனர் பேரப்பிள்ளைகள்.

மறுநாள் மதிய சாப்பாடு முடிந்ததும் மூன்று பேரர்களும் பாட்டியை அழைத்து, "பாட்டி, கண்ணை மூடிக்கொள்ளுங்கள். கையைக் காட்டுங்கள்'' என்றனர்.

பாட்டிக்கு ஒன்றும் விளங்கவில்லை. பாட்டியின் கண்ணை ஒரு பேரன் கையால் பொத்திக்கொள்ள, ஒரு பேரன் பாட்டியின் கையைப் பிடித்து, உள்ளங்கையை விரிக்க, ஒரு பேரன் அந்தக் கையில் ஒரு சிறிய பேழையை வைத்தான்.

"பாட்டி கண்ணைத் திறந்து பாருங்கள்'' என்று ஒரே குரலில் மூவரும் கூற, கண்ணைத் திறந்த பாட்டி, கையிலுள்ள சிறிய பெட்டியைப் பார்த்து, "என்ன இது?'' என்றார்.

"திறந்து பாருங்கள்'' என்றனர்.

திறந்தால், 2 பவுனில் ஒரு பொற்சங்கிலி. "இந்த வயதில் எனக்கெதற்கு சங்கிலி?'' என்றார் பாட்டி.

"உங்கள் வயதிற்கில்லை பாட்டி. உங்கள் சமைக்கும் திறத்திற்கு'' என்றான் ஒரு பேரன்.

"அதற்காகச் சொல்லவில்லை குழந்தைகளே, எனக்கு வயதாகிவிட்டது. நாளைக்கே நான் இறந்தால் இந்தச் சங்கிலிக்கு நீங்கள் மூன்று பேரும் போட்டியிட நேரும். உங்கள் ஒற்றுமை குறையும். அதற்காகத்தான் சொல்கிறேன்'' என்றார் பாட்டி.

"நாங்கள் போட்டியிடமாட்டோம். இது உங்கள் உரிமை. உங்கள் விருப்பம் போல் நீங்கள் எதுவும் செய்யலாம்'' என்றனர் மூவரும்.

"அம்மா, குழந்தைகள் உன் சமையலைப் பாராட்டிப் பரிசு கொடுக்கிறார்கள். நீ யாருக்கேனும் பரிசு கொடுக்க விரும்பினால் அது உன்னிஷ்டம்'' என்றார் சார்.

உடனே பாட்டி, "தீபா இங்கே வா'' என்றார். தன்னறையில் வேலையாயிருந்த தீபா பாட்டியின் அருகில் வந்தாள். "உண்மையில் இந்தப் பரிசுக்குரியவள் தீபாதான். அவள் சமைத்தாள் என்றால், நான் அவளை வேலை வாங்கியதாக உங்கள் அப்பா கோபித்துக் கொள்வார் என்று உண்மையைச் சொல்லாதிருந்தேன்'' என்று கூறிய பாட்டி சங்கிலியை தீபாவிற்கு அணிவித்தாள்.

"அப்படியா? கடைசியில் என் பி.ஏ.வை நீ வேலை வாங்கிவிட்டாயா? சங்கிலி பரிசளித்ததால் போனால் போகிறது என்று விட்டுவிட்டேன்'' என்றார் சார் விளையாட்டாக. தீபாவின் திருவுருமாற்றம் அதிர்ஷ்டமாய் வெளிப்பட்டது.

முற்றும்.

*******book | by Dr. Radut