Skip to Content

11. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கர்மயோகி

(33) அறிவு ஞானமாவது

 • சிறிய காரியங்களில் அறிவு பலன் தரும்படிச் செயல்படும்.
 • பெரிய காரியங்களில் பலன்  பெற ஞானம் தேவை.
 • ஒரு முறைகூட பிரார்த்தனை தவறாதவர்க்கு பிரார்த்தனை தவறினால் அறிவு பீதியுறும், "ஞானம் பிரார்த்தனையைக் கடந்த நிலையை இது காட்டுகிறது'' எனக் கூறும்.
 • இந்த ஊரில் எவரும் செருப்பு அணியவில்லைஎனில் அறிவு இங்கு செருப்புக்கு மார்க்கட்டில்லைஎனக் கூறும். ஞானம் செருப்புக்கு இங்கு அளவு கடந்த மார்க்கட்டுள்ளதுஎனும்.
 • ஐரோப்பாவே சரணானபின் இங்கிலாந்து ஹிட்லர்முன் எம்மாத்திரம்என அறிவு அறிவுரை கூறும்பொழுது ஞானம், "இதுவே பெரிய வாய்ப்பு'' என்று வழி காட்டும்.
 • இனி நம்புவதற்கு ஒருவருமில்லை, ஒரு வழியுமில்லை என்று அறிவு அறுதியிட்டுக் கூறும்பொழுது ஞானம், "இதுவே அன்னையை அழைக்க அற்புதமான தருணம். எந்த நேரத்திலுமில்லாதபடி அன்னை செயல்படுவார்'' எனக் கூறும்.
 • கிராமத்தில் தீராத ஜாதிப் பிரச்சினை அவிழாத சிக்கலான பின் அறிவு செய்வதற்கொன்றுமில்லையென விலகியபொழுது ஞானம் பிரச்சினையை கிராமம்என்ற சிறு பகுதியினின்று எடுத்து ஜில்லாஎன்ற நோக்கோடு பார்த்தல் நன்றுஎனக் கூறும். அந்த நோக்கில் எதிரிகள் சேர்ந்து பிரச்சினை விலகும்.
 • நம் சிறுஅம்சம் பிரச்சினையானால், நம் பெரிய அம்சத்தின் நோக்கில் பிரச்சினை தீரும். அல்லது வாய்ப்பாக மாறும்.

விவசாயிகட்கு கடன் கொடுத்தால் பணம் மீண்டும் வசூலாகாது என்ற நிலையில் அறிவு அந்த செயலில் ஈடுபடாது. ஞானம் அதே விஷயத்தை கிராமத்தின் நோக்கில் பார்க்காமல் பரந்த நாட்டின் கண்ணோட்டத்துடன் பார்க்கும்பொழுது கொடுக்க மாட்டார்கள் என்ற நிலை நிச்சயமாக வசூலாகும்என மாறுகிறது. அறிவிலிருந்து ஞானத்திற்கு மாறினால் பிரச்சினை தீருகிறது. நாட்டிற்குச் சேவை செய்ய முடிகிறது.

ஷெர்லக் ஹோம்ஸ் கதை:

வட்டிக் கடைக்காரனுக்குப் புதுஆள் வந்தது. காலை 10 முதல் 2 மணி வரை எழுத்து வேலைக்கு 1 நாளைக்கு 1 வாரச் சம்பளம் கொடுத்தனர். 2 மாதத்திற்குப்பின் அவ்வேலையில்லை. வட்டிக் கடைக்காரன் ஷெர்லக் ஹோம்ஸிடம் வந்து "இது என்ன?'' என்று கேட்டான். "ஏன் 1 நாளைக்கு 1 வாரச் சம்பளம் தருகிறார்” என்று வட்டிக் கடைக்காரனுக்குப் புரியவில்லை. ஏன் அது முடிந்தது எனவும் விளங்கவில்லை, எவ்வளவு யோசனை செய்தாலும் அவனுக்கு விளங்கவில்லை. அதுவே அறிவுக்கு அதிகபட்சம்.

ஷெர்லக் ஹோம்ஸ் கடையை வந்து பார்த்தான். அந்தப் புது ஆள் பெரிய கேடி. கடைக்குப் பக்கத்தில் பாங்க் இருக்கிறது. 10 முதல் 2வரை முதலாளியில்லாவிட்டால் அடுத்த அறை மூலம் பாங்க்கிற்கு சுரங்கம் தோண்ட முடியும்என்று தோன்றியது. ரோட்டில் வந்து தடியால் தட்டினால் உள்ளே மண்ணில்லாத சப்தம் வருகிறது. பாங்கில் விசாரித்தால் சமீபத்தில் சி 30,000 பவுன் வந்ததாகத் தெரிகிறது.

வட்டிக் கடைக்காரன் தன்னளவிலேயே எவ்வளவு யோசனை செய்வதும் புரியாது. அது அறிவு. ஷெர்லக் ஹோம்ஸ் வந்தவன் யார், இருப்பது என்ன இடம், அங்கு என்ன நடந்ததுஎன சந்தர்ப்பத்தை முழுமையாக்கிப் பார்ப்பது ஞானம்.

பகுதிக்குப் புரியாதது முழுமைக்குப் புரியும். அது அறிவு ஞானமாகும் பாதை.

அன்பருக்கு அதுபோன்ற அனுபவம் வந்தால் அவருக்கு யோகத் தகுதியுண்டு எனப் புரிய வேண்டும்.

என் மனையை சர்க்கார் எடுத்துக் கொண்டு 17,000 பெறுமான நிலத்திற்கு 2,500 கொடுப்பது அநியாயம் என்றார் ஒருவர். ஞானமுள்ளவர், "உங்கள் சொந்தப் பிரச்சினையைப் பொதுப் பிரச்சினையாக்கினால் இது மாஜி இராணுவ சிப்பாயின் நிலம். அதை எடுக்க சர்க்காருக்கு அனுமதியில்லை'' என்றார். சர்க்கார் உத்தரவு இரத்தாயிற்று. அந்த அன்பர் யோகம் செய்தால் அவருக்கு யோகம் பலிக்கும்.

(34) ஞானம் சித்திக்கு வாயில்

உலகம் விவசாயத்தை கண்டுபிடித்து கொண்டாடும் நாளில் வேதரிஷிகள் சச்சிதானந்தத்தைக் கண்டனர். வேத கால இலக்கியங்களில் ஏர் என்ற சொல் காணப்படவில்லை என்பதால் அக்காலத்தில் நிலம் உழப்படவில்லைஎன்று கூறுகிறார்கள். முக்கியமாக காய், கனி, பால், தயிர், வெண்ணெய், நெய் அவர்கள் உணவாக இருந்தன.

இந்த நூற்றாண்டில் ஜடம் சக்தியாலானதுஎன விஞ்ஞானிகள் கண்டதை உபநிஷதம் கூறுகிறது. அந்த ஆன்மீகப் பரம்பரை தேடியது மோட்சம்.

பகவான் மோட்சம் உயர்ந்த இலட்சியமில்லை. அதனுள் ஆத்மாவின் சுயநலம் உண்டுஎன்கிறார்.

மோட்சத்திற்கு ஏராளமான பேர் போனபின்னும் உலகம் துரியோதனாதிகளை விட்டகலவில்லை. தீமை தலைவிரித்தாடுகிறது, கொடிகட்டிப் பறக்கிறது.

திருவுருமாற்றம் பகவான் இலட்சியம்.

அது வந்தால் துரியோதனனும் அவன் சகாக்களும் இருக்க முடியாது.

உலகம் உய்வடையும்.

ஸ்ரீ அரவிந்தம் என்பது இந்த தத்துவம்.

அதன் அம்சங்கள்,

 • பிரம்மம் அசைவற்றது மட்டுமன்று, அசையக்கூடியதுமாகும். பிரம்மமே உலகமாயிற்று.

  பிரம்மம் சத்தியஜீவியம்மூலம் உலகை ஆனந்தத்திற்காக சிருஷ்டித்தது.

  இந்த தரிசனம் அலிப்பூரில் பகவானுக்குக் கிடைத்தபொழுது அதில் கோரம், விகாரமில்லை.

  மனிதன் மனத்தினின்று சத்தியஜீவியத்திற்கு உயர்ந்தால்,

  1. அவன் ஜீவன் மௌனத்தால் ஆட்கொள்ளப்படும்.
  2. அவன் மையம் மனத்திலிருந்து நகர்ந்து இதயத்திற்குப் பின்னால் போகும்.
  3. மேல் மனத்திலிருந்து அவன் நகர்ந்துவிடுவான்.
  4. அவனுடைய தியானம் ஜீவ நிஷ்டையாகும்.
  5. அவன் பார்வையிலோ, அனுபவத்திலோ தீமை வாராது, தோல்வி எழாது.
  6. காலமும், கர்மமும் அவனுக்குக் கட்டுப்படும்.
  7. அவனுக்கு யோகம்என்பது வாழ்வு, யோக சாதனம் என்பது சரணாகதி, சமர்ப்பணம்.
  8. பிறரில் தன்னையும், தன்னைப் பிறரிலும் காண்பான்.
  9. எங்கிருந்தாலும் அவன் அன்னைபால் ஈர்க்கப்படுவான்.
  10. அவன் செயல்கள் உலகில் பரவும். 
 • ஞானம் என்பது எப்படி சிருஷ்டி ஏற்பட்டது என்பது. பிரம்மம் - சச்சிதானந்தம் - சத்தியஜீவியம் - மனம் - வாழ்வு - உடல் என்ற சிருஷ்டி சத் பிரம்மம், புருஷா, ஈஸ்வரனாக மாறுவதால் ஏற்படுகிறது. அவற்றைக் காலமும், இடமும் தாங்கிப் பிடிக்கின்றன.
 • இந்த ஞானம் பரிணாமத்திற்கு நம்மை எடுத்துச் செல்லும். இந்த அளவுக்கு The Life Divine புரிவது ஸ்ரீ அரவிந்த ஞானம், பிரம்மஞானம் எனலாம்.
  • இந்த ஞானம் பலித்தால் அவருக்கு யோகம் சித்திக்கும்.
  • புரிவது அறிவு, மனம் ஏற்பது ஞானம், யோகம் அதைச் செயலாக மாற்றுவது சித்தி.

 

தொடரும்.....

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அதுபோன்ற திறனைப்பெற பண்பு உதவும். செய்யும்
காரியத்தின் முழுமையை அறிவது, மனத்திற்குரிய செயல்
பண்பு (work value of the mind).
 
செய்வதில் திளைப்பது உணர்வின் பண்பு.
 
காரியத்திற்குரிய எல்லாத் திறமைகளையும் பெறுவது செயலுக்குரிய பண்பு.
 
தானே நடக்கட்டும் என இருப்பது ஆன்மாவுக்குரிய பண்பு.
 
தானே நடப்பது ஆன்மாவுக்காக நடப்பது.

******book | by Dr. Radut