Skip to Content

10. லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன் - கருத்து

 

வாழ்வுக்கு நன்மையும், தீமையும் ஒன்றே.
நல்லதிலிருந்து கெட்டதும்,
கெட்டதிலிருந்து நல்லதும் எழும் (P.623)

நல்லது, கெட்டது என்பன மனிதனுக்கு. இறைவனுக்கும், இயற்கைக்கும் அப்பாகுபாடில்லை. மனிதனுக்கு அசுத்தம் உண்டு. விலங்கிற்கு அது இல்லை. காடு இயற்கைவளம் நிறைந்த இடம். கடலும் அப்படியே. காட்டில் சுத்தமில்லை. கடலடியில் சேறும் சகதியும் நிறைந்துள்ளன. கடலில் முத்தும், பவழமும் உற்பத்தியாகின்றன. காட்டில் அகிலும், தேக்கும் உண்டு. கொலை, உயிர்ச்சேதம் மனிதனுக்குத் தவறு, பாவம். மிருகம் கொலை செய்வதால் உயிர் வாழ்கிறது. பூகம்பம் ஏராளமான உயிர்ச்சேதம் உண்டு பண்ணுகிறது. இயற்கைக்கு அது தவறன்று. உலகப்போர் விளைவித்த சேதம் பெரியது. அதனால், அதன்பின் 50 ஆண்டுகளில் அதற்கு முந்தைய 500 ஆண்டுகளில் இல்லாத முன்னேற்றமேற்பட்டது. 1917இல் ரஷ்யாவில் புரட்சி எழுந்தது. போலீஸ்ராஜ்யம் ஏற்பட்டு 30 லட்சம் நிரபராதியான மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால் பின் தங்கிய நாடாக இருந்த ரஷ்யா வல்லரசாயிற்று. 1946, 1947இல் பஞ்சாபில் மேற்குப் பகுதியில் எல்லாஇந்துக்களும் கொலை செய்யப்பட்டனர். கிழக்குப் பகுதியில் எல்லாமுஸ்லீம்களும் கொல்லப்பட்டனர். அதன் பிறகு பஞ்சாப் பெற்ற முன்னேற்றம் பெரியது. பஞ்சாபும், ஹரியானாவும் இந்தியாவில் முதன்மையான மாநிலங்களாயின. கெட்டதினின்று நல்லது எழுகிறது. 1905இல் ஐன்ஸ்டீன் (theory of relativity) காலம், இடத்தைப்பற்றிய புது தத்துவத்தைக் கண்டுபிடித்தார். நோபல்பரிசு பெற்றார். அவருடைய தொடர்ந்த ஆராய்ச்சியால் அணுகுண்டு செய்யப்பட்டது. அதைவிடப் பெரிய பாதகமில்லை. துரியோதனன் சபையில் சூதாட்டத்தில் பாண்டவர் நாட்டை இழந்தனர். திரௌபதி மானபங்கப்படுத்தப்பட்டாள். அதன் விளைவாக அவள் பெற்றது கிருஷ்ண தரிசனம். நாட்டில் துரியோதனனின் வம்சம் அழிந்து நன்மை தலையெடுத்தது. 1960 முதல் 1980 வரை 200 பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன. அதன் ஒரேபலன் நாடெங்கும் ஸ்டிரைக், வருஷம் முழுவதும் கல்லூரிகள் மூடப்பட்டன. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அநியாயமாக அழிந்தது. கல்வித் தரம் அழிந்தது. பட்டம் பெற்றவர் எழுதப் படிக்கத் தெரியாதவராயினர். பசுமைப் புரட்சி 1965 முதல் 1990 வரை நாடெங்கும் பரவியது. உணவு உற்பத்தி 4, 5 மடங்கு பெருகியது. அதன் நேரடிவிளைவு மண் தரம்இழந்தது, நீர் விஷமாயிற்று, பூமிக்கு அடியிலுள்ள நீர் 300 அடிக்கும் கீழே போயிற்று. பெரிய நல்லதான பசுமைப் புரட்சியால் விவசாயமே சீரழிந்தது. நாடு 1985க்குப்பிறகு சுபிட்சமாயிற்று. போக்குவரத்து பேர்அளவில் பெருகியது. வீட்டிற்கு வீடு காராயிற்று, மோட்டார்பைக் சைக்கிள் போலப் பரவியது. பஜாஜ் நிறுவனம் உலகில் முதன்மையாயிற்று. காற்றில் புகை நிறைந்து மூச்சுவிடும் காற்று விஷமாக மாறுகிறது.

  • வாழ்வுக்கும், இயற்கைக்கும், இறைவனுக்கும், விலங்கிற்கும் நல்லதும் கெட்டதும் ஒன்றே.
  • எந்த நல்லது மூலமும் எந்தக் கெட்டதும் எழும்.
  • எந்தக் கெட்டதுமூலமும் எந்த நல்லதும் எழும்.
  • நல்லது, கெட்டதுஎன்ற பாகுபாடு மனிதனுக்குமட்டும் உண்டு.

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
உணர்வையும் எண்ணத்தையும் மீறிய சக்தியுடைய (will) திறனிருந்தால்தான் சமர்ப்பணத்தை ஆரம்பிக்க முடியும்.
 
முழுமனமும் கட்டுப்பட்டால் சமர்ப்பணம் உண்டு.

******

 



book | by Dr. Radut