Skip to Content

07. யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. நம் நிலை காலத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. நிலையை மாற்றவோ, காலத்தைச் சுருக்கவோ நாம் காலத்தைக் கடக்க வேண்டும். மனத்தையே கடப்பது சிறந்தது.

    நிலையை மாற்றுவதற்குப் பதிலாக மனத்தையே கடப்பது சிறந்தது.

    காலம் மாறும்பொழுது மனிதர்களும் மாறுகின்றனர். அத்துடன் மனநிலையும் மாறுகிறது. காலம் நம் நிலையை நிர்ணயிக்கிறது. நம்மால் அதை மாற்ற முடியாது. எந்த நிலையில் உள்ளவரும் காலத்திற்குப் பணிந்து போகவேண்டும், அனுசரித்துப் போக வேண்டும். இளைஞர்கள், தொழிலாளிகள், மாணவர்கள், மருமகள்கள் 50 ஆண்டுக்கு முன்னிருந்ததைப் போலிருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது.

    • அதுவும் நடக்கும். அது நடக்க நாம் காலத்தைக் கடக்க வேண்டும்.

    காலத்தைக் கடப்பது எனில் என்ன? கடந்த காலத்தையே நினைந்து உருகுபவர் உண்டு. அதைப் பொருட்படுத்தாதவருண்டு. அதிகமாகப் பொருட்படுத்துபவரை கடந்த காலம் ஆட்டிப் படைக்கும். "அதுதான் போய்விட்டதே. ஏன் அதை நினைத்து அதற்கு உயிர் கொடுக்கிறாய். நடப்பதைப் பார்" என அவருக்குச் சொல்வார்கள். கடந்த அனுபவத்தைப் போற்ற வேண்டும். நடந்து முடிந்தவற்றை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து சோர்வடைதல் சரியில்லை.

    • ஒருவர் கடந்ததிற்கு தம் நினைவால் உயிர் கொடுக்க மறுத்தால், அந்த அளவுக்கு அவரைக் கடந்த காலம் பாதிக்காது.
    • சந்தோஷம் அபரிமிதமானால் கடந்தது மறந்துபோகும். வெற்றி அதிகமானாலும் கடந்தது மறந்துபோகும்.
    • கடந்ததை நல்ல காரணத்திற்கோ, கெட்ட காரணத்திற்கோ மறக்கலாம்.
      கெட்ட காரணத்திற்கு மறக்க முயன்றால், அதிகமாக நினைவு வரும்.
      அப்படி மறந்துபோனால் நாள் கழித்து விஸ்வரூபம் எடுத்து எதிரில் வந்து நிற்கும்.
    • கடந்ததை மறப்பது காலத்தைக் கடப்பதாகும்.

    மனத்தையே கடக்கலாம்:

    சிந்தனை அழிவது மனத்தைக் கடப்பதாகும். அது பெரிய யோக சித்தி. அது முடியாத ஒன்றானால் நாம் ஏன் அதைக் கருத வேண்டும்? முடியாதது அன்பருக்கு முடியும்.

    பிரார்த்தனை பலிக்கும். எல்லாப்பிரார்த்தனைகளும் தவறாது ஒன்று விடாமல் பலிப்பதுண்டு. அவர் அன்னைக்குரிய அன்பர். நான் அன்னையைப் பல வருஷமாக அறிவேன். எனக்குப் பிரார்த்தனை தவறியதில்லைஎனக் கூறும் அன்பர் மனத்தைக் கடக்க வழியுண்டு. அப்படிப்பட்ட அன்பர் பிரார்த்திப்பதை நிறுத்தினால் இரு வகை- களான பலன் எழும். (1) பலிப்பது நின்றுவிடும், (2) பிரார்த்தனை செய்த பொழுது பலித்ததுபோல பிரார்த்திக்காதபொழுதும் பலிக்கும். அப்படிப் பலிப்பதற்கு நம் (level of consciousness) மனநிலை, ஜீவிய நிலை உயர்ந்துவிட்டதுஎனப் பொருள். அந்த அளவில் அது மனத்தைக் கடந்ததாகும். அந்நிலையைக் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தினால், பிரார்த்திக்க வேண்டியவை பிரார்த்திக்காமல் பலிக்கும் ஜீவியம் நிரந்தரமாகும்.

    • அது மனத்தைக் கடந்ததாகும்.
    • அந்நிலையில் மௌனம் மனத்துள் குடிகொள்ளும்.
    • மௌன சித்தி யோக சித்தி.
    • மௌனம் நிலையானால் மனத்தை நிரந்தரமாகக் கடந்துவிட்டோம். 

    ******

  2. நம் பார்வையை நிர்ணயிப்பது நம் நோக்கம். பிரபஞ்சத்தின் ஆத்மா தன் பரிணாம வளர்ச்சியை, தனி மனிதனின் நோக்கமாக வெளிப்படுத்துகிறது.

    நம் பார்வையை நிர்ணயிப்பது நம் நோக்கம்.

    • நோக்கம் மாறினால் கண்ணாடிக்கல் வைரக்கல்லாகும்.
    • விருது கொண்டு வரும் போலீஸ்காரனை அரெஸ்ட் செய்ய வருபவன் எனத் தவறாகப் பார்த்து பயப்படுபவன் போல் மனிதனிருக்கிறான்.
    • எலிசபெத், டார்சி மோசமான மனிதன், தன் குடும்பத்தை அழிப்பவன்என நினைக்கும் பொழுது, பெம்பர்லிக்கு அவள் ராணியாக வர அவன் ஏங்குகிறான்.
    • அபிப்பிராயம் வேறு, அங்குள்ள நிலைமை வேறு.
    • Pride and Prejudice என்ற கதை தவறான அபிப்பிராயம் செய்யும் பாதகத்தைக் கூறுகிறது.
    • அன்பர்கள் இன்று அதுபோல் வாழ்வைப்பற்றிக் கொண்டுள்ள அபிப்பிராயம் ஏராளம்.
      ஓர் அபிப்பிராயத்தை மாற்றினால் நிலைமை வாடகை வீடு சொந்த வீடாகுவது போல் மாறும்.
    • சேமித்தால் பணம் பெருகும் என்று அபிப்பிராயத்தைக் கைவிட்டு செலவு செய்தால் பணம் பெருகும் என்று கொண்டால் வருஷ வருமானம் மாத வருமானமாகும்.
    • குடும்ப டாக்டருடைய திறமையைப் பாராட்டி 40 அல்லது 50 முறை அவரிடம் சென்று 50,000 ரூபாய் வருஷத்தில் செலவு செய்து உடல் நலிவால் வாடும் குடும்பம், டாக்டர் வியாதியை உற்பத்தி செய்து பிறகு குணப்படுத்துகிறார் என பகவான் கூறுவதை நம்பினால் உடல் நலம் பெருகி, மனவளம் செழித்து, டாக்டரும் மருந்தும் மறந்து போகும்.
    • பிள்ளை டாக்டராக வேண்டும், என்ஜினியராக வேண்டும் என்று முயன்று வெற்றி காண்பவர், பிள்ளை படிக்க வேண்டும், அறிவுபெற வேண்டும்என மனத்தை மாற்றிக் கொண்டால் பெர்னார்ட் ஷாவும், தாகூரும் நம் வீட்டில் எழுவார் எனக் காண்பார்கள்.
    • ஜாதகப்படி எனக்கு எதுவுமில்லை என நம்பும் ஒருவர் அன்னையை ஏற்று, ஜாதகத்தை நம்ப மறுத்தால், 50,000 ரூபாய் பெறும் அவர் ஒரு ஏக்கர் நிலம் மனையாக மாறி 50 இலட்சமாகும்.
    • என்னால் ஆங்கிலம் இதுவரை பாஸ் மார்க் வாங்க முடிந்ததில்லைஎன்ற SSLC மாணவன், எனக்கும் இங்கிலீஷ் எழுத வரும்என்று நம்பியவுடன் பரீட்சையில் முதல் மாணவனாகத் தேறியது என் அனுபவம்.

      Spiritual Individual - ஆன்மீக மனிதன்

      உலகம் மனிதனுக்குப் பிரபஞ்சத்தில் ஆன்மீக மனிதன் என்ற அந்தஸ்தை வைத்துக்கொண்டு காத்திருக்கிறது. அதை ஏற்றால் உலகம் முழுவதையும் கடந்த சக்தி பெற்று, இறைவனின் பிரதிநிதியாகலாம் என்ற நோக்கத்தை ஏற்க முடியாமல், "என் கடனைத் தீர்க்க முடியவில்லை, எலக்ஷன் தோற்றது, குடும்பத்தின் எதிர்காலம் என்ன ஆகும்'' என்றெல்லாம் நினைத்து வருந்தும் மனிதனுடைய நிலை பரிதாபத்திற்குரியது.

    • மனம் மாறினால் மதர் வருவார்கள்.
    • ஒரு விஷயத்தில் மனம் மாறினால் தொண்டன் தலைவன் ஆவான்.
    • ஒரு நோக்கம் மாறினால் உலகை ஆள முடியும்.
    • பார்வை பவித்திரமானால், பண்பு தெய்வீகப் பண்பாகும்.
    • அனைவருடைய தயவை இன்று எதிர்பார்க்கும் மனிதன் மன மாற்றத்தால் அனைவருக்கும் உதவி செய்ய முடியும்.

தொடரும்....

******



book | by Dr. Radut