Skip to Content

05. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

 

ஓம் நமோ பகவதே!

ஸ்ரீ அரவிந்தாயா நம:

ஸ்ரீ அன்னையே சரணம்:

ஸ்ரீ அன்னைக்கு என் நன்றிகளும், நமஸ்காரங்களும். மார்ச் 12ஆம் தேதி ஒரு போன்கால் வந்தது; தம்பி பேசினான். குரல் மிகவும் படபடப்பாக இருந்தது. "எனக்கு முடியவில்லை. உடலெல்லாம் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை" எனவும், "இடதுகால் செயலே இல்லை" எனவும் உடனிருந்தவரும் அவனுமாய் விஷயம் சொல்ல, தெரியவந்தது. நான் மிகவும் கலக்கமடைந்து அன்னையை அழைத்தேன்.

என் உறவினர் மூலமாக அவனை ஓர் ஹாஸ்பிடலில் இருந்து மற்றொரு நல்ல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். அவனது இடக் கால் சற்றும் அசைவின்றி நடப்பது ஒரு காலில் நொண்டியபடி நடக்க வேண்டியதானது. அந்த டாக்டர்கள் யோசித்துவிட்டு Doppler Scan செய்ய சொன்னார்கள். அந்த ரிப்போர்ட்டை நான் மாம்பலம் தியான மையத்தில் அன்னை பாதத்தில் வைத்து வணங்கிவிட்டு வந்து டாக்டரிடம் கொடுத்தோம்.

டாக்டர்கள் பார்த்துவிட்டு, அவனுக்கு ரத்தக்குழாயில் அடைப்பு இருக்கிறது. எனவே காலில் அதை நீக்குவதற்கு Vascular Surgery செய்ய வேண்டுமெனச் சொன்னார்கள். மேலும் செலவும் அதிகமாக ஆகும்என்றார்கள். சரி, அங்கிருக்கும் உறவினர்களுக்கு நாம் இருந்தால் தொந்தரவாக இருக்கும் என அவர்களிடம், நாங்கள் வேலூரில் பார்த்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டு, 4 நாட்கள் கழித்து வேலூர் வந்தோம்.

அங்கு அவனை "casualty" அவசர சிகிச்சையில் அனுமதித்து 10 டாக்டர்கள் சோதித்தனர். "கண்டிஷன் மிகவும் சீரியஸாக இருக்கிறது. வலி வந்த 12ஆம் தேதியே அழைத்து வந்திருக்க வேண்டும். இப்போது மிகவும் கஷ்டம். சொல்வதற்கு மன்னிக்கவும். அவரது இடக் கால் முட்டிக்குக் கீழ் இழக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் இரத்த குழாயில் அடைப்பு காரணமாய் கீழ்ப் பகுதி முழுவதும் கறுப்பாக ரத்தம் கெட்டு இருக்கிறது. இது பாதிப்படையச் செய்யும்" எனவும் கூறினார்கள். ஆப்பரேஷன் உடனடியாக செய்யவேண்டும் எனவும் என்னிடமும், நோயாளியான தம்பியிடமே கூறிவிட்டனர். அவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. அவனது நிலைமை, கால்இன்றி மீதி நாட்கள், மிக கஷ்டம். இதை நினைத்து குடும்பத்தினர் மற்றும் எல்லோரும் மிக வருந்தினர்.

எனக்கு ஒரு பழக்கம், ஒரு மணிக்கு ஒரு முறை அன்னையை நினைப்பது. சரியாக 9.04க்கு அவன் தியேட்டருக்கு (ஆப்பரேஷன்) சென்றான். முன்பாக நான் 9.00 மணி அளவில் அன்னையை பிரார்த்தித்தேன். அன்னையை வெள்ளை ஒளியாக அவனது காலில் படும்படி நினைத்தேன். இதுபோல் செய்யும்படி அன்னை அன்பர் சொல்லியிருக்கிறார். அதன்படி நினைத்தேன், வழிபட்டேன். அப்போது "அன்னை" வெள்ளைஉடை அணிந்து அவனது (தம்பியின்) காலை பார்ப்பது போலவும், மேலும் என்னையும் தம்பியையும் பார்த்து புன்முறுவல் செய்வதுமாகத் தோன்றியது. நான் மிகவும் கவலை மறந்தேன். "அன்னையின் பாதுகாப்பு" இருப்பதை எண்ணி கவலைப்படுவதைப் பாதியளவு குறைத்தேன்.

ஓர் அன்பர் சொல்வார், "ஸ்ரீ அன்னை என்று 400 முறை சொல்லி வந்தால் எந்த பிரச்சினையும் தீரும்" என்று. நான் அதைச் செய்ய முயன்று சில நடந்திருக்கின்றன. பிரச்சினைகள் மறைந்திருக்கின்றன. இம்முறை (தியேட்டர் வாசலில்) முயன்றேன். ஆனால் ஏதோ ஒரு தைரியம், மனோதிடம் என்னை மிகவும் குதூகலிக்கச் செய்தது. அதைச் சொல்வதையும் விட்டேன்.

"அன்னையின் பாதுகாப்பு" முழுவதும் இருப்பதாக முழுவதும் உணர்ந்து தெளிந்தேன்.

ஆப்பரேஷன் தியேட்டரில் இருந்து அவன் வந்தான். முதலில் நான் பார்த்தது அவனது இரண்டு கால்களையும். அவை இருந்தன. டாக்டர்கள் சொல்லியதுபோல் கால் (இடது) நீக்கப்படவில்லை. முழுவதுமாய் இருந்தது. அவனும் பெட்டில் பார்த்து அதையே கேட்டான். கால் இருப்பது மிகவும் சந்தோஷம்என முகத்தில் ஒரு தெம்பு வந்தது.

மேலும் ஒரு வாரம் பெட்டில் இருந்து, அடுத்த ஞாயிறே வீட்டுக்கு வந்தான். கால் சற்று வலிப்பதனால் சற்று நொண்டி நடக்கிறான். இது சரிவர 2 மாதம் ஆகும். அவனுக்கு அன்னையின் அருள் முழுவதும் கிடைத்திருப்பது எனக்கு மிக சந்தோஷம்.

அன்னையின் ஒளி மற்றும் பாதுகாப்பு என்றும் எங்களுக்கு கிடைக்க அன்னையின் பாதார விந்தங்களுக்கு என் ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்.

அன்னையின் பெயரே மந்திரம். அவரது ஒளி அனைத்து உடல், மன பிரச்சினைகளையும் களையும்என்பது முழுஉண்மை.

அன்னைக்கும் ஸ்ரீ அரவிந்தருக்கும் என் நன்றிகள் பல.

அன்னையையும் ஸ்ரீ அரவிந்தரையும் எனக்கு காண்பித்த குரு ஸ்ரீ கர்மயோகி அப்பா அவர்களுக்கும் என் நன்றியும் நமஸ்காரங்களும்.

-- வெங்கட், தர்மபுரி

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஜீவனின் ஆழ்ந்த நிலையும், மேலெழுந்தவாரியான நிலையும் மனம், உணர்வு, உடல் ஆகியவை இரு நிலைகளிலும் உள்ளன.
 
மனமும், உணர்வும் எல்லாநிலைகட்கும் உண்டு.

*****book | by Dr. Radut