Skip to Content

14. அன்னை இலக்கியம் - நல்லெண்ணம்

"அன்னை இலக்கியம்"

நல்லெண்ணம்

இல. சுந்தரி

நமக்கு என்ன அதிர்ஷ்டம் வேண்டுமோ, அது நம்மைச் சார்ந்தவர்க்கெல்லாம் வரவேண்டும் என சந்தோஷமாக மனம் கேட்க வேண்டும். நமக்கு அது கடைசியில் வரவேண்டும் எனவும் பிரார்த்திக்க வேண்டும். சச்சிதானந்தத்தில் சக்தி சித்திருந்து பிரியுமிடம், நல்லெண்ணம் அந்த இடத்திற்குரியது. அதுவே அன்னையின் பிறப்பிடம். எனவே, அன்னை என்பதை நல்லெண்ணம் என்பதன் மூலம் சொல்லும் முறையிது.

ஸ்ரீ கர்மயோகி

வாசு பக்தியும், பணிவுமுள்ள இளைஞன். பி.எஸ்.ஸி. கம்ப்யூட்டர் தேறியவன். பிரச்சினை ஒன்றிற்குத் தீர்வுகாணும் வாயிலாக ஓரன்பர் மூலம் தியான மையம் வந்தான். ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் கருத்துகளில் நாட்டம் ஏற்பட்டு, அன்னையை ஏற்று, தியான மையத்திற்குச் சேவை செய்யவும் ஆரம்பித்தான். கூடல்களில் பேசப்படும் அன்னையின் கோட்பாடுகளைச் செயல்படுத்தும் நாட்டமும் கொண்டான். அன்றைய கூடல் நல்லெண்ணம் பற்றிய கருத்துகள் பேசப்பட்டன.

நம்முடன் உள்ளவர் மீது நல்லெண்ணம் வேண்டும். சிறிது, சிறிதாக அதை விரிவு செய்து, பிறகு எட்ட இருப்பவர், வேண்டாதவர், அவர்கட்கும் அதிர்ஷ்டம் வரவேண்டும் என்று நினைக்க வேண்டும். அந்த நினைப்பு சந்தோஷம் கொடுப்பது நல்லெண்ணம் என்றெல்லாம் கூறப்பட்டது.

மனப்பூர்வமாக நாம் ஒன்றிற்கு ஆர்வப்பட்டால் அன்னை அதற்கு உதவுவார் என்பதைப் பல முறை கண்டிருக்கிறான். இந்த நல்லெண்ணத்தை மேற்கொண்டு, அதன் மூலம் அன்னையை மேலும் நெருங்கவேண்டும் என்று எண்ணினான். உடனே அன்னை அதற்கு ஒரு வாய்ப்பும் தந்தார். இவனும், எதிர்வீட்டுப் பாலுவும் ஒன்றாகப் படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள். வகுப்பில் எப்போதும் இவர்களுக்கு முதல் மதிப்பெண் வாங்குவதில் போட்டி. வென்றவர் மற்றவரைப் போயாகப் பாராட்டுவது வழக்கம். அது கடந்த காலம். வாசு அன்னையை ஏற்றபிறகு அன்னைக்குப் போட்டி பிடிக்காது என்று அறிந்தவுடன் யாருடனும் போட்டியிடுவதில்லை. தன் பங்கை இயன்றவரை சிறப்பாகச் செய்துவிட்டு அமைதியாகிவிடுவான்.

இப்போது "நல்லெண்ணம்" பற்றிய சொற்பொழிவு, அவன் தன் கடந்த காலத்தில் எதற்கெடுத்தாலும் பாலுவுடன் போட்டியிட்டு, அவர்களுக்கிடையே அடிக்கடி சுமுகமின்மையை ஏற்படுத்திய தன் செயல்களை எண்ணி வெட்கப்படச் செய்தது.

அன்றைய செய்தித்தாளில் வந்த விளம்பரம் இவன் படிப்பிற்கும், திறமைக்கும் ஏற்ற வேலைவாய்ப்பை அறிவித்தது. இந்த வேலை வாய்ப்பை பாலுவிடமும் கூறி, இருவரும் வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதில் பாலுவுக்கு முதல் வேலை கிடைக்க தன் மனம் விரும்பி பிரார்த்திக்க வேண்டும் என்று முடிவு செய்தான். சிறிது, சிறிதாகத் தன் மனத்துடன் பேசி இந்த முடிவை அது (மனம்) ஏற்கச் செய்தான். அதன்பிறகு பாலுவைத் தேடி எதிர்வீட்டிற்குச் சென்றான்.

"பாலூ, பாலூ" என்ற ஓரிரு முறை அழைத்தும் நண்பனின் பதில் குரல் வாராததால் முன் பக்கத்திருந்து ஓரடி உள்புறம் நகர்ந்து, சற்று குரலை உயர்த்தி "பாலூ" என்றான் மீண்டும்.

"டேய், உனக்குக் கண்ணா தெரியவில்லை? இங்கே தானே உட்கார்ந்திருக்கிறேன்" என்றான் பாலு.

"சாரிடா, எனக்கிருந்த பரபரப்பில் ஒன்றும் புரியவில்லை'' என்றான் வாசு.

"சாரி எனக்கு வேண்டாம். அதை என் அக்காவிடம் கொடு. பரபரப்பு எதற்கு?" என்றான் கேலியாக.

"எப்போதும் உனக்குக் கிண்டல்தான். இன்று செய்தித்தாள் பார்த்தாயா?'' என்றான் வாசு.

"ஆமாம், இந்தத் தண்டச்சோற்றுக்கு அது ஒன்றுதான் பாக்கி" என்றான் அலுப்பாக.

வீட்டில் யாரோ அவனை ஏதோ சொல்லியிருக்கிறார்கள் என்று புரிந்து கொண்ட வாசு, "தண்டச்சோறில்லாமல், எல்லோரும் மதிக்கும் மனிதனாக ஆவதற்கு ஒரு வழி வந்திருக்கிறது அதில்" என்றான்.

"ஏன், மன்மோகன் சிங்கிற்குப் பிரதமர் பதவி பிடிக்கவில்லையாமா? அதை நானே ஏற்க வேண்டும் என்று கெஞ்சுகிறாரா?" என்றான் கேலியாக.

"ஆமாம், இந்தக் கேலிக்கொன்றும் குறைச்சல்லை. இறையருள் இருந்தால் அதுவும் நடக்கும்" என்றான் வாசு.

"ஆமாம், இப்போதுள்ள தகுதிக்கு ஒன்றையும் காணோம்" என்று அலுத்துக் கொண்டான் பாலு.

"அதைத்தானே சொல்ல வந்தேன். இதோ பார், நம் படிப்புத் தகுதிக்கு ஏற்ப வேலையொன்று உள்ளது'' என்று விளம்பரத்தைக் காட்டினான் வாசு.

"ஆர்வமாக வாங்கிப் பார்த்தான். ஆனால் ஏனோ உடனே விரக்தியானான். போடா, இது பெரிய செய்தியா?'' என்றான்.

"ஏன், இது நமக்குப் பெரிய செய்தியில்லையா? நாம் படித்து முடித்து மூன்றாண்டுகளாக வேலை தேடிக் கொண்டிருக்கிறோம். நல்ல வாய்ப்பு ஒன்று வரும்போது முயற்சி செய்வது நம் கடமையல்லவா?" என்றான் வாசு.

"ஏன், இத்தனை நாட்கள் நாம் முயற்சி செய்யாமலா இருந்தோம்? விண்ணப்பத்திற்கும், போய்வரும் செலவிற்கும் கொடுத்தே என் வீட்டில் அலுத்துப்போய்விட்டார்கள். இதற்கு 50 ரூபாய் கொடுத்து விண்ணப்பம் வாங்க வேண்டும். பிறகு இண்டர்வியூவிற்குச் சென்னை செல்ல வேண்டும். 2 பேர் எடுக்க இரண்டாயிரம் பேருக்கு அழைப்பு அனுப்புவார்கள். இத்தனையும் போக, தகுதியிருந்தாலும் 50 ஆயிரம் டெப்பாசிட் கேட்பார்கள். இதெல்லாம் என் வீட்டில் நடக்குமா?" என்று அவநம்பிக்கையுடன் பேசினான் பாலு.

"அதுசரி, ஒன்றுமேயில்லாமல் "மாதம் பத்தாயிரம் சம்பளம். அதையும் உங்கள் வீட்டு வாசலுக்கே வந்து தந்துவிடுவோம். நீங்கள் பெரியமனசு பண்ணி முடிந்தபோது வந்தால் போதும்' என்று அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறாயா?" என்றான் வாசு.

அப்படியில்லைடா, இவ்வளவு செலவுக்கு எங்கே போவது?" என்று நொந்து பேசினான் பாலு. அவன் வீட்டு நிலவரம் அப்படி. வாசுவுக்குத் தன்னைப் பரிசோதிக்க இதுவே சிறந்த வாய்ப்பாக இருந்தது. அன்னை வந்தால் முதற்கட்டமாக வறுமை போவதைக் கண்டிருக்கிறான். இங்கும் அதற்குத் தேவையுள்ளது. பாலுவின் சீக்கிரம் சோர்ந்து போகும் குணமே அவனை முன்னேறவிடாமல் தடுக்கிறது என்பதையும் வாசு அறிந்திருந்தான். இருப்பினும் வலியப் போய் அவனைத் திருத்த முடியாதிருந்தான்.

எனவே, சிறிது சிறிதாகத் தன் முயற்சியைத் தொடங்கினான். "உனக்கும் சேர்த்து நானே விண்ணப்பப் படிவம் வாங்கிவிடுகிறேன். வா, பூர்த்தி செய்து அனுப்புவோம். இம்முறை எனக்காக இதை ஏற்றுக் கொள்" என்று நயமாகப் பேசி, அழைத்துப்போய் விண்ணப்பப் படிவமும் வாங்கி, நிறைவு செய்து, தன் செலவிலேயே அனுப்பிவிட்டான்.

"அன்னையே, என்னுள் இருந்து நீரே செயல்படப் பிரார்த்திக்கிறேன். என் விருப்பு, வெறுப்பு இதில் குறுக்கிடக்கூடாது. இதன்மூலம் நல்லெண்ணத்தை வளர்த்து, மேலும் உம்மை நெருங்க வேண்டும்" என்று அடிக்கடி பிரார்த்தித்தான்.

சிறிது நாட்களில் இண்டர்வியூவிற்கு அழைப்பு வந்துவிட்டது.

வாசுவிற்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. அதை நிதானமாக ஏற்றான். அன்னை விஷயத்தில் எந்த வடிவிலும் “நான்” வருவது சரியில்லை என்பதை அடிக்கடி கேட்டும், அனுபவித்தும் உணர்ந்திருக்கிறான். "அன்னையே, இது உம் கருணை" என்று நன்றியுடன் ஏற்றுக் கொண்டான். சற்று நேரத்தில் பாலு இவனைத் தேடி வந்தான். இவன் (பாலு) திடீர் திடீரென சோர்ந்து போவான். எனவே, கவனமாக அவனை அன்னைக்குச் சமர்ப்பித்தான்.

"வாசு, உனக்கும் இன்டர்வியூ கார்டு வந்திருக்கிறதா?" என்று கேட்டான்.

"ஆமாம், பாலு. வந்துவிட்டது. இந்த வாரக் கடைசியில் தான் இன்டர்வியூ. அதற்குள் நாம் தயாராகிவிடலாம்" என்றான் வாசு.

"சென்னை சென்று வர, அங்கு சாப்பாட்டுச் செலவிற்கு, ஒரு நல்ல டிரஸ் எடுக்க, இதற்கெல்லாம் பணம் வேண்டாமா?'' என்றான் பாலு.

"வேலை வேண்டுமென்றால் முறையாக நாம் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டாமா?" என்றான் வாசு.

"அதெல்லாம் சரிதான். நிச்சயமில்லாத வேலைக்கெல்லாம் என் வீட்டில் செலவு செய்யமாட்டார்கள். செலவில்லாமல், உள்ளூரிலேயே கிடைக்கும் போது நான் பார்த்துக் கொள்கிறேன். நீ மட்டும் போய் வா. அதைச் சொல்லத்தான் வந்தேன்" என்றான் பாலு.

"செலவெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். இதை ஒரு காரணமாய்ச் சொல்லி நல்ல வாய்ப்பை இழக்க வேண்டாம்" என்றான் வாசு.

"அப்படி உன் செலவில் எல்லாம் நடந்தால் என் மனத்தில் அடிமையுணர்வுதான் எழும். சுதந்திரமாக அதை என்னால் அனுபவிக்க முடியாது. நான் வரவில்லை. நீயே போய் வா" என்றான் பாலு.

"வேலை கிடைத்தவுடன் என் பணத்தைத் திருப்பிக் கொடு, வாங்கிக் கொள்கிறேன். இதற்காக ஒரு நல்ல வாய்ப்பை விட வேண்டாம்" என்றான் வாசு.

"வேலை கிடைத்தால், சரி. ஒருவேளை கிடைக்காமற் போனால் என்ன செய்வது?"

"இப்படி அவநம்பிக்கை படுவதை முதலில் விட்டுவிடு. உனக்கு நிறைய தகுதியிருக்கிறது. முயற்சிக்கும் திறமைக்கும் என்றும் பலனுண்டு".

"உனக்கும் தான் தகுதியிருக்கிறது, திறமையிருக்கிறது. எனக்குத் துணிவில்லை, என்னை விட்டுவிடு'' என்றான்.

"எப்பொழுதும் அளவை நிர்ணயிப்பது நம் குறுகிய கண்ணோட்டம்தான். எனக்குக் கிடைத்தால் உனக்குக் கிடைக்காது என்றோ, உனக்குக் கிடைத்தால் எனக்குக் கிடைக்காதென்றோ ஏன் நாமே வரையறை செய்ய வேண்டும்" என்றான் வாசு.

ஆனால் பாலுவுக்கு உள்ளூர ஓர் எண்ணம், ஒருவேளை இவ்வளவு நம்பிக்கையுள்ள அவனுக்கு வேலை கிடைத்துத் தனக்கு இல்லையென்றால் எத்தகைய ஏமாற்றம் ஏற்படும் என்று.

வாசுவின் நினைவோ வேறு மாதிரியிருந்தது. பாலுவுக்கு முதல் வேலை கிடைத்துவிட வேண்டும். தனக்கு இல்லையென்றாலும் பரவாயில்லை என்று நினைத்தான். அப்பொழுது உடன் வேறொரு நினைவும் வந்தது. அன்னை என்பது அனந்தம். அதற்கு அளவில்லை. அவன் அன்னைக்கு நாள்தோறும் பூ வாங்கிச் சமர்ப்பிப்பான். ஒரு நாள், ஊர்த்திருவிழா மற்றும் முகூர்த்தநாள். பெரும்பான்மை பூக்களும் திருவிழாவிற்கே போய்விடும். முகூர்த்த நாளுக்கு எஞ்சிய பூக்களும் போய்விடும். அன்று பூ வாங்கப் போன வாசு எல்லாக் கடைகளும் பூக்கள் விற்கப்பட்டு, வெறிச்சோடி இருப்பதைப் பார்த்தான். அப்போது மனம் தளராமல், "அன்னை அனந்தம். விழாவிற்குப் போனாலும், முகூர்த்தத்திற்குப் போனாலும் அன்னைக்கு, பூ இல்லாமல் போகாது. அன்னை அனந்தம்” என்று நினைவுபடுத்திக் கொண்டான். என்ன விந்தை, ஒரு பையன் அவனைப் பின் தொடர்ந்து ஓடி வந்தான். "உங்களை அந்தப் பூக்கடைக்காரர் கூப்பிடுகிறார்'' என்றான்.

திரும்பி பூக்கடைக்கு வந்தான். "சார், முன்னெல்லாம் நீங்கள் நான் வேலை பார்த்த கடையில் மதருக்குப் பூ வாங்குவீங்களே, நினைவிருக்கா? ஒரு தோட்டத்து பெரிய மல்கைப் பூவை மதருக்கென்று எடுத்து வைத்துக் கொடுப்பேன். முதலாளிகூட என்னைக் கேசெய்வார். இப்போது நானே சொந்தமாய்க் கடை வைத்துவிட்டேன். நீங்கள் மதருக்கு நம் கடையிலே வாங்கிக் கொள்ளலாம். இன்று, முதல் நாளே உங்களைப் பார்த்தது என் அதிர்ஷ்டம். இன்று மதருக்கு நானே பூ தந்துவிடுகிறேன்" என்று சொல்லி ஒரு பை நிறைய விதவிதமான பூக்கள் தந்தான். வாசுவுக்கு அன்னை தரிசனம் அது. "அன்னை அனந்தம் என்பது சத்திய வாக்கு. நம் பங்கு தூய நல்லெண்ணம். தகுதியுள்ள அனைவர்க்கும் அன்னை அளிப்பார். அவர் அனந்தமல்லரோ!" என்று உள்ளே நெகிழ்ந்தான்.

தொடரும்.....

*****book | by Dr. Radut