Skip to Content

10. அன்னையே வரமொன்று கேட்கிறேன்

அன்னையே வரமொன்று கேட்கிறேன்

R. மகேஸ்வரி

அன்னையே வரமொன்று கேட்கிறேன்
இப் புதுவருடத்தில்.
ஆண்டுதோறும் புதுவருடம் புதிதாய்ப் பிறக்கின்றது
வயதொன்று ஏறுகிறது.
இந்த உடலுக்குரிய வயது தெரிகின்றது.
என் ஆன்மாவின் வயதென்ன என்றறியும்
ஞானத்தை வரமாகக் கேட்கின்றேன்
இப் புதுவருடத்தில்.

நான் யார்?
இந்தப் பிறப்பின் அர்த்தமென்ன?
எதற்காக இங்கு வந்திருக்கிறேன்?
இதில் என்னுடைய தனித்துவம் என்ன?
இக்கேள்விகளுக்கெல்லாம் விடையறியும்
ஞானத்தை வரமாகக் கேட்கின்றேன்
இப் புதுவருடத்தில்.

நான் யார் என்று பல்லாயிரம் முறை கேட்டபிறகு
நானொரு ஆன்மா என்று விடை தந்தாய்.
படிப்பதற்குரிய அறிவைக் கொடுத்தாய்.
ஆன்மாவின் வகையறியச் செய்தாய்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் ஆன்மநிலையில் இருக்கின்றேன்.
ஒரே நாளிலே ஒன்றிலிருந்து
மற்றொன்றுக்கு மாறுகின்றேன்.
என் ஆன்மாவின் உண்மைநிலையைக் காணும்
ஞான திருஷ்டியை வரமாகக் கேட்கின்றேன்
இப் புதுவருடத்தில்.

கைக்குழந்தை ஆன்மாவிலே நின்று
உலகத்தில் நடக்கும் கொடூரங்களை,
வன்முறைத் தாக்குதலை,
இயற்கையின் சீற்றங்களை, கொடுமைகளை,
ஈவிரக்கமற்ற முறையில் நடக்கும் அனைத்து
அனுபவங்களையும் உன்னுள்
பதிவுகளாக்கிக் கொள்கிறாய் என்கிறாய்.

குழந்தை ஆன்மாவென்று வந்தவுடனேயே,
இதைச் செய், அதைச்செய் என்று
ஆயிரமாயிரம் விதிகளையும் கட்டுப்பாடுகளையும்
வகுத்துக் கொண்டு அதை சந்தோஷமாகவோ,
கசப்பாகவோ ஏற்று அனுபவிப்பது ஒன்றுதான்
எனக்குரியது என்கிறாய்.

இளம் ஆன்மாவில் மனிதமாக நின்று,
உணர்வின் சந்தோஷங்களை அளவுகடந்து
அனுபவிக்கிறாய். பணம், புகழ், செல்வாக்கு,
வசதியென உடலின் உணர்வுகளெல்லாம்
அபரிமிதமாகப் பூரிக்கும் அனுபவத்தையும்,
பசிக்கு ஒரு பிடி உணவும் கிடைக்காத பிச்சைக்காரனாய்,
குளிரென்றும், மழையென்றும், புயலென்றும்,
ஒண்ட வழியில்லாமல், ஆதரவின்றி, அவமானப்பட்டு,
கதறித் தவிக்கும் வாழ்வின் அனுபவத்தையும்
சேகரித்துக் கொள்கிறாய் என்கிறாய்.

முதிர்ந்த ஆன்மா என்ற நிலையில்,
அன்புதான் பிரதானம்,
கொள்கைதான் முக்கியம்,
பண்புதான் உயர்வு,
சகோதரத்துவம், சமத்துவம்,
எல்லோருக்கும் எல்லாமும்,
சேர்ந்து வாழவேண்டும்,
கூடி வாழ்ந்து உயரவேண்டும்,
உறவென்றால் உயிரும் கொடுக்கவேண்டும்
என்கிற மனித உறவுகளுக்கு உயிர்கொடுக்கும்
அனுபவங்களை யெல்லாம் ஒவ்வொரு பிறவியாய்
பிறந்து அனுபவிக்கிறாய் என்கிறாய்.

வயதான ஆன்ம நிலைக்கு வந்தபின்

எல்லோரும் என்னுள்ளே
என்னுள்ளே எல்லோரும்

என்ற ஞானத்தை உணர்ந்து கொள்கிறாய்.
நீ யார் என்பதை அறிகிறாய்.
பார்வை அகன்று விரிந்து
புறவாழ்வின் பின்னே அதனுள்ளே மறைந்துள்ள
அகவாழ்வொன்று இருக்கின்றது என்பதை
திருஷ்டியால் பார்க்கிறாய்.
உள்ளே ஆழத்திற்குள் வெகு ஆழத்திற்குள்
போக வேண்டும் என்ற விருப்பம் கொள்கிறாய்.
உன் வாழ்வின் இலட்சியமே உன்னை அறிவது
என்பதில் மட்டுமே ஆர்வம் கொள்கிறாய் என்கிறாய்.

300 முதல் 600 மனித உடலில் பிறப்பெடுத்து
ஒவ்வோர் அனுபவமாக நிதானமாக சமநிலையுடன்
அனுபவித்து அனுபவங்களின் சாரங்களின் தொகுப்பாக நின்று
எல்லோரும் தான் பெற்றதைப் பெற வேண்டும் என்ற
தீவிரமான ஆசையின் அனுபவத்தை அனுபவிக்க
அடுத்த உயர்நிலை ஆன்மாவாக உடலில் சேர்கின்றது என்கிறாய்.

புத்தர், கிருஷ்ணன், ஏசு, முகம்மது நபி போன்ற
இறைதூதர்களாக, இறை வடிவங்களாக
மனித உடலில் புகுந்து வழிகாட்டியாக நின்று
தெய்வநிலை ஆன்மா அனுபவத்தைச் சேகரம் செய்கிறது என்கிறாய்.
அனுபவங்களை அனுபவிப்பதற்காக ஆன்மா பிறப்பெடுத்திருக்கின்றது என்றாய்.
இந்தப் பிறவியில் என் ஆன்மா எந்த அனுபவத்தை அனுபவிக்கிறது
என்பதை அறியும் திருஷ்டியை வரமாகக் கேட்கிறேன் இப்புது வருடத்தில்.

ஆனந்தம் தான் இவ்வுலகம் முழுவதும் பரந்து விரிந்து இருக்கிறது என்றாய்.
வலியும் சந்தோஷமும், கசப்பும் இனிப்பும், நல்லதும் கெட்டதும், பாவமும்
புண்ணியமுமென ஏன் இந்த இரட்டை வேடம்?
ஆன்மாவிற்கு அல்ல இந்த இரட்டை வேடம், மனத்திற்குத்தான் என்கிறாய்.
ஒத்துக் கொள்கிறேன்.
ஆன்மாவிற்கு எல்லாமும் அனுபவம்தான் என்கிறாய்.
ஒத்துக் கொள்கிறேன். அப்படியென்றால்,
அந்த ஆன்மாவை எனக்குக் காட்டு.
என்னின் ஒவ்வோர் அணுவிலும் ஒளிந்து கொண்டிருக்கிறது என்றாய்.
இந்தக் கண்ணாமூச்சி ஆட்டத்தைத் தொடராமல்,
என் ஆன்மாவை எனக்குக் காட்டு எனும்
வரத்தைக் கேட்கிறேன் இப் புதுவருடத்தில்.

வலியென்ற ஒன்றில்லை என்றாய்.
நீ சொன்னதை அப்படியே ஏற்றேன்.
கால் அடிபட்டது வலியென்று உணர்வு கூறியது.
மனம் தாங்க முடியாத வலியென்றது.
இதற்கு மேலிருந்து பார், உண்மை புரியும் என்றாய்.
ஜீவியத்திலிருந்து பார்த்தேன்.
உடனே மனம் தன் நாடகத்தை நடத்த இயலாமல் தவித்தது.
அடிபட்ட இடத்தில் வலியில்லை.
உடலென்ற நிலையில் நின்று பார்த்தால் மட்டுமே மனம்
தன் நாடகத்தை நடத்த முடியும் என்ற தெளிவு பிறந்தது.
வலியின் மறு பக்கத்தைப் பார், ஆனந்தம் தெரியுமென்றாய்.
மேலிருந்து பார்த்தால் வலி நிற்கிறது,
அடுத்த பக்கத்தைப் பார்க்க என்ன செய்வதென்று கேட்டேன்.
விசாரணைசெய் என்றாய்.
அடிபட்டது யார்? கால், அதாவது உடல்.
வலியென்று உணர்ந்தது யார்? உணர்வு.
வலிக்க வேண்டும் என்று கட்டளையிட்டது யார்? மனம்.
மேலிருந்து பார்த்தது யார்? ஜீவியம்.
இந்த நேரத்தில் வலி என்ற அனுபவத்தை பார்த்துக் கொண்டிருப்பது
யார்? ஆன்மா.
அடிபட்ட இடத்திலுள்ள ஆன்மா இதையோர் அனுபவமாகப் பார்த்து
கொண்டிருக்கிறது என்ற ஞானத் தெளிவுடன் பார்த்தால், ஒரு க்ஷணம் வலியின் அடுத்த பக்கமான ஆனந்தம் மின்னலாக தெறித்து, மறைந்தது.

ஆனாலும் அடுத்த முறை வலி வலியாகத்தான் தெரிந்தது. இது ஏனென்று கேட்டேன்.
நீ செல்ல விரும்புவது ஒற்றையடிப் பாதை.
நாங்கள் செல்வதோ ராஜ பாதை.
எல்லோரையும் போல நீயும் வலியை வலியாக,
சந்தோஷத்தை சந்தோஷமாக,
வேதனையை வேதனையாக,
துக்கத்தைத் துக்கமாக,
ஏற்று வாழாமல் புது பாதையை உருவாக்காதே!
என்று மனம் எங்கிருந்தோ மெதுவாகக் குரலெழுப்பியவுடன்
உணர்வு அதை வெகுவேகமாக ஆமோதித்த உடன்
உடல் வீண் வேலை என்று சொல்லி
வலியை மீண்டும் அனுபவிக்க ஆரம்பித்தது.
இதுதான் வாழ்க்கை.
உயர நினைத்தால் உன்னைக் கீழே இறக்கச் செய்வதுதான்
எங்களின் வேலை. எங்களை எங்கள் போக்கிலே விடு என்றன புலன்கள்.
இதை மறுத்து வாழ்வதற்குரிய உறுதியை,
ஞானத் தெளிவை வரமாக வேண்டுகிறேன்
இப் புதுவருடத்தில்.

ஆன்மா மட்டும் அனுபவிக்கும் ஆனந்த அனுபவத்தை
இந்த மனம், உணர்வு, உடலும் சேர்ந்து அனுபவிப்பதைப் பார்க்கும்
ஞானப் பார்வையை வரமாகக் கேட்கின்றேன்
இப் புதுவருடத்தில்.

ஒவ்வொரு செயலும் அனுபவத்தைக் கொடுக்கின்றது.
அந்த அனுபவத்தை ஆன்மா பதிவு செய்து கொண்டேயிருக்கிறது.
அதனுடைய வேலை பதிவு செய்வது மட்டுமே.
எந்தவோர் அனுபவத்திலும் சேராமல், கலக்காமல், பார்ப்பதால்,
பதிவு செய்வதால் என்றென்றும் ஆனந்தத்தில் மிதந்து கொண்டிருக்கிறது.
ஆனந்தத்தின் உச்சகட்டத்தை உணர்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
அதுதான் ஆன்மாவின் இயற்கை.
செயலுடன் கலக்கும்பொழுதுதான் எதிர்பார்ப்பு, வேதனை, சந்தோஷம், புகழ்.
விலகி நின்று பார்த்தால் விரக்தி வருவதில்லை,
அனுபவம் என்ற ஞானம் பிறக்கின்றது.
மனம் இந்த நாடகத்தில் எப்பொழுதும் பிறருடன் கலந்து பார்க்கத்தான் விரும்புகிறது.
ஆயிரமாயிரம் எண்ணங்கள் ஒரு நாளில் மனதில் உலவுகின்றது.

அதில் எதுவொன்றும் அதற்குச் சொந்தமில்லை.
அதற்கும் அது தெரியும்.
அதனால் அது ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு
தாவிக் கொண்டே இருக்கிறது.
சூழலில் இருப்பதைத் தனக்கென, தன்னுரிமையென சொந்தம் கொண்டாடுகிறது.
உணர்ச்சியைத் தனக்குத் துணை செய்ய உதவிக்குக் கூப்பிடுகிறது.
உடல் தனித்திராமல் தானும் சேர்ந்து கொள்கிறது.
எந்தவொன்றுடனும் கலக்காமல் ஆன்மாவின் அனுபவத்தை
அனுபவமாகக் காணும் ஞானத்தை வரமாகக் கேட்கிறேன்
இப் புதுவருடத்தில்.

பழக்கத்தில் தன்னை மறந்து இறந்துபோன செயலும்
உயிர் இருக்கின்றது என்பதை உணரச் செய்தாய்.
ஒவ்வொரு நாளிலும் புதுப் புது அர்த்தத்தைக் காட்டினாய்.
குளிப்பதில் ஆனந்த அனுபவத்தை இரண்டாம் மனிதமாய்
நின்று காணச் செய்தாய்!
இந்த ஆனந்த அனுபவத்தைச் சிறிது சிறிதாக நாள் முழுவதும்
அனுபவிக்கும் சக்தியின் திறனை வரமாகக் கேட்கிறேன்
இப் புதுவருடத்தில்.

எது நடந்தாலும் அது நல்லதற்கே!
எந்த அனுபவமாக இருந்தாலும் அது ஒன்றைப் புதியதாகக் கற்றுக் கொள்வதற்கே!
நடந்து கொண்டிருப்பவையெல்லாம் மாறிக் கொண்டேயிருக்கும் கனவுகளே!
அனுபவித்துக் கொண்டிருப்பவையெல்லாம் மாறிக் கொண்டேயிருக்கும் கனவுகளே!
இந்த உண்மையை ஒரு செயலில் உணரச் செய்யும் அனுபவத்தையும் தந்தாய்.
என்றென்றும் இந்த நினைவில் வாழும்
வாழ்வு நிலையை வரமாகக் கேட்கிறேன்
இப் புதுவருடத்தில்.

என்னை அறியும் ஞானத்தை வரமாக கேட்கிறேன்.
என்னைப் பார்க்கும் ஞானத்திருஷ்டியை வரமாகக் கேட்கிறேன்.
என் ஜீவியத்தை உணர்ந்து அனுபவிக்கும் பாக்கியத்தை வரமாகக் கேட்கிறேன்.
என்னை அறிவதால், பெறும் அனுபவங்களை சம நிலையில் அனுபவித்து
உயர்நிலை ஆன்மாவாக உயர வரம் கேட்கிறேன்.

கேட்பவற்றையெல்லாம் தருவதை வரமாகப் பெற்று
இப்பூவுலகத்திற்கு நீ வந்தாய்!
உன்னை அறியும் பாக்கியத்தை இந்தப் பிறவியில் எனக்களித்தாய்!
பரநலத்தைக் கருதும் ஞான குருவின் தெளிவுரைகளையும் காட்டினாய்.
உன்னுடைய ஆட்சியில் நானொரு துரும்பு, தூசியும்கூட.
இவையெல்லாம் கேட்க வேண்டும், கேட்க முடியும் என்ற
தெளிவைத் தந்த அன்னையே!
என் நமஸ்காரத்தையும் நன்றியையும்
இப் புதுவருட நன்னாளிலே
உந்தன் திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்.
வேண்டும் வரம் தந்தருள்வாய்!

 

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
யோகியாவதும், கிருகஸ்தனாவதும் பலராலும் முடியக் கூடியதாகும். குடும்ப வாழ்விலிருந்துகொண்டு, யோகம் செய்வது சிரமம். யோகி, ஞானத்தை மனத்தின் மூலம் தேடுகிறான் அல்லது இதயத்தின் மூலம் பக்தியைத் தேடுகிறான். குடும்பஸ்தன் ஆசையின் பிடியில் வாழ்கிறான். இவற்றைச் சேர்ப்பதற்கு, வாழ்வு மையம் மனத்தையும், பிராணனையும் விட்டகன்று, சைத்திய புருஷனை வந்தடைய வேண்டும்.
 
யோகத்தையும் வாழ்வையும் பூரணயோகம்
சைத்திய புருஷனில் இணைக்கிறது.book | by Dr. Radut