Skip to Content

08. குறையை உணரும் தாழ்ந்த மனம்

குறையை உணரும் தாழ்ந்த மனம்

கர்மயோகி

The Mother என்ற நூலில் விலக்க வேண்டிய 27 குறைகளை மனம், உயிர், உடல் எனப் பகவான் பிரிக்கிறார். அவற்றுள் உடலுக்குரிய குறையொன்றை doubt ஐயம் எனக் குறிப்பிடுகிறார். உயிருக்குரிய குறையொன்றை suspicion, சந்தேகம் என்கிறார். இந்த 27 குறைகளையும் விலக்க முற்படுவது பெருமுயற்சி. அவற்றுள் இவையிரண்டு. விவரம் தெரியாமல் எழுவது ஐயம் doubt. மனிதனை நம்ப முடியாமல் எழும் மனநிலை சந்தேகம் suspicion.

  • வலிய உதவப்போவது அறிவின்மை, அது தொந்தரவில் முடியும்.
  • The unregenerate vital does not like to be under an obligation.
    நாகரீகமற்ற உணர்ச்சி பிறருக்குக் கடமைப்பட விரும்புவதில்லை - ஸ்ரீ அரவிந்தர்.
  • பிறர் கர்மத்தில் தலையிட நமக்குரிமையில்லை - அன்னை.
  • உதவி செய்யப்போனால், உபத்திரம் வரும் - பழமொழி.
  • உதவியைக் கேட்டால், கேட்பவரைக் கணித்து உதவுவது சரி. நாமாக உதவ முன் வரக்கூடாது.
  • கேட்பதற்கு முன் கொடுப்பது நாகரீகம் என்பது பண்புள்ள மக்களிடம் பழகும் முறை. மேற்சொன்னவை எளிய மக்கள் மனநிலை.
  • இவற்றை மீறி ஒருவர் நடந்தால் பலன் எதிராக வரும். அதிகபட்சம் கிடைத்தால் "புத்தி" வரும். வழக்கில் அதற்கு புத்தி கொள்முதல் எனப் பெயர்.

இவ்வளவையும் புறக்கணித்து ஒருவர் மனம் கேட்காமல் உதவினால், அந்த நல்லெண்ணத்திற்குரிய பலன் தவறாது வரும். அதில் புதைந்துள்ள அறியாமைக்குரிய பலனும் அவசியம் வரும். பிறருக்கு உதவும் பழக்கமுள்ளவர்க்கே இவை பிரச்சினை. சுயநலமான மனிதன் வாழ்வில் இந்த இக்கட்டான நிலை எழுவதில்லை. ஏனெனில் அவனுக்கோ பிறருக்கு உதவும் எண்ணம் எழுவதில்லை. டிராலப் கதையில் இது சம்பந்தமான நிகழ்ச்சியொன்று வருகிறது. அது நேரடியாக மேற்சொன்ன கருத்துகளைப் பிரதிபலிக்காது. தலைப்பைப் பிரதிபலிக்கும். கடன் வசூலாகாத நிலையில் தத்தளிப்பவர் பலர். அதற்குரிய காரணங்கள் பல. அவற்றுள் ஒன்றை இந்த நிகழ்ச்சி விளக்கும். மேற்சொன்ன கருத்துகளை அந்நிகழ்ச்சி நேரடியாக விளக்காவிட்டாலும், இவற்றின் உட்பொருளைச் சுட்டிக்காட்டும்.

Finn ஃபின் என்பவர் அயர்லாந்து M.P. அவருக்குச் சொற்ப வருமானம். அரசியல் செல்வாக்கால் M.P. ஆனார். அந்த நாட்களில் M.P.க்கு சம்பளமில்லை. அவர் நண்பர் சர்க்காரில் Under Secretary. ஆபீஸர். £1000 வருஷச் சம்பளம் உள்ளவர். 40க்கு மேற்பட்ட வயது. திருமணமாகவில்லை. பணக்காரக் குடும்பம். இவருக்குச் சொத்தில்லை, ஊதாரி. சொந்தமான வருமானமில்லை. சகோதரிக்குப் பெரிய வருமானம் உண்டு. இந்த ஆபீஸர் நண்பர் தாம் பெற்ற கடனுக்கு Finn ஃபின்னை ஜாமீன் கையெழுத்திடும்படிக் கேட்கிறார். ஃபின் மறுக்க முடியாமல் கையெழுத்திடுகிறார். 3 மாத தவணை காலாவதியான உடன் வட்டிக் கடைக்காரன் தொகையை வசூலிக்க ஃபின்னிடம் வருகிறான். அடிக்கடியும் வருகிறான். ஃபின் M.P.யாக இருப்பதால் கைது செய்ய முடியாது. கடன் வாங்கியது ஆபீஸர் நண்பர். வட்டிக் கடைக்காரன் ஃபின் உயிரை எடுக்கிறான். ஃபின்னால் பொறுக்க முடியவில்லை. நண்பர் கேட்கும் கேள்விக்குப் பராமுகமாகப் பதில் சொல்கிறார். Finnக்கு உயிர் போகிறது. வாழ்க்கை நரகமாகி விட்டது, சிம்மசொப்பனமாகியது. ஆபீஸர் சகோதரி இதைக் கேள்விப்பட்டு Finn ஃபின்னிடம் வந்து, "நீங்கள் என் சகோதரனுக்குக் கடன் கொடுத்தீர்களா?" எனக் கேட்கிறார். "இல்லை" என்று கூறுகிறார். பிறகு வட்டிக் கடையில் விசாரித்து, சகோதரன் கடனைக் கட்டிவிடுகிறாள். Finnக்குப் பெருந்தலைவலி, சித்ரவதையாக இருந்தது விடுதலை கிடைக்கிறது.

Finnக்கு வருத்தம், கவலை, அவள்மீது கோபம் வருகிறது எனக் கதாசிரியர் கூறுகிறார்.

Finn ஃபின் மனநிலை எனக்கு விளங்கவேயில்லை. கதாசிரியரே பிறகு விளக்கம் தருகிறார். Finn ஒரு M.P. அயர்லாந்திலிருந்து இலண்டன் வந்திருக்கிறார். கடன் தொகை £250. ஃபின்னுக்கு வருமானமில்லை. தகப்பனார் அதிக வருமானமில்லாத டாக்டர். அலவன்ஸாக £250 வருஷம் தருகிறார். இந்தக் கடனை கட்டும் திறன் ஃபின்னுக்கு இல்லை. ஆனால் இக்கடனை ஆபீஸர் சகோதரி அடைத்தது ஃபின்னுக்குக் கோபம். அவர் வந்து கடனை அடைப்பதால் தனக்கு (Finn) அக்கடனை அடைக்கும் அளவு வருமானமில்லையென்று தெரிந்துவிடுகிறது.

தன் ஏழ்மை நிலை வெளிவந்துவிட்டது என Finn வெட்கப்பட்டு, கோபப்படுகிறார்.

தான் மாட்டிக்கொண்ட சிக்கலிலிருந்து தப்ப ஆபீஸர் சகோதரி உதவியதால் அவருக்கு நன்றி சொல்வது ஃபின் கடமை. ஆனால் அவர்நிலை வறுமையானது. அது வெளிப்படையாகிவிட்டது என்பதால், கடனை அடைத்தவர் மீது கோபப்படுகிறார். அவரை வருத்தம் சூழ்ந்து கொள்கிறது.

1920 வாக்கில் ஜே. கிருஷ்ணமூர்த்தி என்ற இளைஞர் பிரபலமாகி World Teacher ஜகத் குரு எனப் பெயர் வாங்கினார். அவரைத் தேடி அன்று 6 கோடி ரூபாய் நன்கொடையாக வந்தது. அவர் ஏற்கவில்லை. திருப்பிக் கொடுத்துவிட்டார். அவர் அடிக்கடி கூறும் சொல் ஒன்றுண்டு. அதாவது,

You are hurt by your own position.
உன் குறையால் உனக்குக் கோபம் வருகிறது.

நம் குறை நம்மை பாதிப்பதால், நமக்குப் பிறர்மீது கோபம் வருகிறது. கோபம் வருவதற்கு இது ஒரு முக்கிய காரணம்.

இப்படிப்பட்ட குறையுள்ளவர் தம் அந்தஸ்திற்கு மேற்பட்டவருக்குக் கடன் கொடுத்தால், அக்கடனை எளிதில் வசூல்செய்ய முடியாது.

பணம் வலிமையுள்ள இடத்தை நோக்கிப் போகும். எளிமையான இடத்தை நோக்கி எளிதில் நகராது என்பது சட்டம்.

கடன் வசூலாகவில்லை என்பதற்குக் காரணங்கள் பல

  • அதனுள் ஒரு காரணம் கடன் பெற்றவர் உயர்ந்த அந்தஸ்தை, கடன் கொடுத்தவர் ஏற்பது. இது எளிதில் வசூலாகாது. நாள்பட்டு வளரும். வரும்பொழுது சிக்கலாகும்.
  • பணம் நம்மை நோக்கிவர (நம் பணமானாலும்) நமக்கு அதிக வலிமை இருக்கவேண்டும்.
  • வயது, பதவி, செல்வம், அந்தஸ்து, படிப்பு, ஜாதி, செல்வாக்கு காரணமாக, கடன் பெற்றவர் உயர்ந்தவரானால், அவர் உயர்வு என கொடுத்தவர் ஏற்றால், அப்பணம் வருவது சிரமம்.
  • இந்த உண்மை கொடுத்தவருக்குத் தெரியாது.
  • தெரிந்தால் எப்படி நிலைமையை மாற்றமுடியும்? "அப்படியானால் என் பணம் வாராது'' என முடிவு செய்வார்.
  • இந்த உண்மை மின்னலாக அவர் மனத்தைத் தொட்டால், அதை அவர் மனம் ஏற்றால், அந்த நேரம் கடன்பெற்றவர் நிலை சற்று பலஹீனமடையும்.
  • அதன் வழி கடன் கொடுத்தவர் அந்த எண்ணத்தை - அவர் உயர்ந்தவர் என்ற எண்ணத்தை - தன் மனத்திலிருந்து விலக்கினால், விடுதலைபெற வழி விடும்.
  • அன்னையை அதன் பிறகு அழைத்தால் பணம் திரும்ப வரும்.
  • இதை விலக்காமல் அன்னையை அழைத்தால் பல விஷயங்கள் நகரும், பணம் வாராது.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
நாம் ஏற்கனவே செய்ததை இன்று வேறொருவர் செய்யும் பொழுது அதிக கோபம் வருவது அகந்தை தீவிரமாகச் செயல்படுவதைக் குறிக்கும்.
 
பிறரில் நாம் காணும் நம் குறை அகந்தைக்கு விருந்து.

*****



book | by Dr. Radut