Skip to Content

05. முரண்பாடுகள் உடன்பாடுகளாகும்

முரண்பாடுகள் உடன்பாடுகளாகும்

என். அசோகன்

நம்முடைய மானிட வாழ்க்கை பாஸிட்டிவ், நெகட்டிவ் என்ற எதிர்மறைகளால் நிறைந்துள்ளது. இப்படிப்பட்ட எதிர்மறைகள் நல்லது x கெட்டது, உண்மை x பொய்மை, வெற்றி x தோல்வி, வளமை x வறுமை, சுதந்திரம் x கட்டுப்பாடு, இன்பம் x துன்பம், வாய்ப்புகள் x பிரச்சினைகள் என்ற பல தரப்பட்டவைகளாக உள்ளன.

இப்படி எதிர்மறைகளாகத் தெரிபவைகளில் நமக்குப் பிடித்தமான நல்லது, உண்மை, வெற்றி, வளமை, சுதந்திரம், வாய்ப்புகள், இன்பம் போன்றவற்றை நாம் ஏற்றுக் கொண்டு பொய்மை, தோல்வி, வறுமை, பிரச்சினைகள், துன்பம் ஆகியவற்றை வேண்டாமென்று ஒதுக்கிவிடுகிறோம்.

முழுமையான நன்மை மற்றும் முழுமையான உண்மை என்பவை சத்தியஜீவிய நிலையில் தான் தென்படுகின்றனவேயொழிய நம்முடைய மானிட நிலையில் இல்லை. நாம் இருக்கின்ற பூவுலக பிஸிக்கல் நிலையில் நன்மை, மற்றும் உண்மை மட்டுமே இருக்க வேண்டும் என்பது இரவில்லாத பகல் மட்டுமே வேண்டும்என்பதற்குச் சமம். சச்சிதானந்த நிலையில் வலியின் சுவடே தெரியாத ஆனந்தம்மட்டும் உண்டு. ஆனால் நம்முடைய உடம்பு என்ற நிலையில் வலி என்ற உணர்வு நமக்கு அவசியம் தேவை. உடம்பைக் காயப்படுத்தும் வேலைகளை நாம் செய்யும்பொழுது வலி என்ற உணர்வு மூலம் தான் உடம்பு தனக்குக் காயம் ஏற்படுகிறது என்ற எச்சரிக்கையை நமக்குத் தருகிறது. இந்த வலியே இல்லாவிட்டால் நம் உடம்பைக் காயப்படுத்திக் கொள்ளக்கூடிய பல அறிவில்லாத செயல்களை நாம் செய்ய ஆரம்பித்துவிடுவோம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பல பேர் தம்முடைய கால் வலியை உணரக்கூடிய திறனையே இழந்து விடுகிறார்கள். அவர்களுக்குக் காலில் முள் குத்தினாலும் தெரிவதில்லை, காலில் சூடு பட்டாலும் தெரிவதில்லை.

இதன்படிப் பார்க்கும்பொழுது வலி என்ற உணர்வு இன்பத்திற்கு எதிரானதாகத் தெரிகிறதேயொழிய உண்மையில் அது நமக்கு நல்லதுதான் செய்கிறது. நம் உடம்பு முழுமையாக சத்தியஜீவிய மயமாகும் பொழுதுதான் நமக்கு வலி என்ற உணர்வே தேவை இல்லாமல் போகும். சத்தியஜீவிய உடம்பு வளைந்து கொடுக்கக்கூடிய தன்மை உடையது என்று அன்னை கூறுகிறார். ஆகவே எப்பேற்பட்ட அடி விழுந்தாலும் நம்முடைய உடம்பு அதற்கேற்றபடி வளைந்து கொடுப்பதால் காயம் படாமல் அதனால் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இப்படி எதிர்மறையாக மேலோட்டமாகத் தென்படுகின்ற இன்பம், துன்பம் என்ற உணர்வுகள் உண்மையில் உடன்பாடுகளாகச் செயல்படுவதுபோல மற்றும் சில எதிர்மறைகளும் உண்மையில் உடன்பாடுகளாகச் செயல்படுகின்றன. கட்டுப்பாடேயில்லாத சுதந்திரம் உண்மையில் நமக்கு நல்லது செய்யாது. அந்தக் கட்டுப்பாடும் இல்லாத சூழ்நிலையில் பல பேர் வாழ்க்கையில் குறிக்கோளையே இழந்து தம் இஷ்டத்திற்குச் செயல்பட்டுத் தம் வாழ்க்கையையே வீணாக்கிக் கொள்வார்கள். இதன்படிப் பார்க்கும்பொழுது நமக்குத் தேவையான இடங்களில் சுதந்திரமும், எனர்ஜி வீணாகக்கூடிய இடங்களில் கட்டுப்பாடும் தேவையென்று தெரிகிறது.

வாழ்க்கையில் நாம் வெற்றி பெறுவதையும், அதற்குண்டான வாய்ப்புகளையும் வரவேற்கிறோம். ஏனென்றால் இவற்றால் நமக்கு முன்னேற்றம் வருகிறது. ஆனால், பிரச்சினைகளையும், தோல்விகளையும் நாம் வரவேற்பதில்லை. ஏனென்றால், நம் முன்னேற்றம் இவற்றால் தடைபடுவதாக நினைக்கின்றோம். ஆனால் இத்தகைய கண்ணோட்டம் நாம் வாழ்க்கையை மேலோட்டமாகப் பார்ப்பதாக அறிவிக்கிறது. நமக்குவரும் பிரச்சினைகளும், தோல்விகளும்தான் நம்முடைய குறைபாடுகளை உணர்த்துகின்றன. இக்குறைபாடுகளை உணர்வதன் மூலம் அவற்றை அகற்றி, நம்முடைய பர்சனாலிட்டியை நம்மால் மேம்படுத்திக்கொள்ள முடிகிறது. தொழிலில் நஷ்டப்படுவதை யாரும் விரும்புவதில்லை. ஆனால் அப்படி நஷ்டப்படும் பொழுது தொழிலில் நாம் என்ன தவறு செய்கிறோம் என்பதை உணர முடிகிறது. தவறுகளையெல்லாம் திருத்திக் கொள்கின்றவர்கள் இறுதியில் தொழிலைத் திறம்பட நடத்தி, மற்றவர்களைவிட அதிக இலாபம் சம்பாதிப்பார்கள்என்பதும் உண்மை.

வருமானத்தை நாம் வரவேற்கிறோம். ஆனால் செலவை நாம் வரவேற்பதில்லை. வருமானம் என்றால் நம்முடைய கையிருப்பு கூடுகிறது. செலவு என்றால் நம்முடைய கையிருப்புக் குறைகிறது. அதனால் முதலாவதை வரவேற்கிறோம், இரண்டாவதை வரவேற்பது இல்லை. ஆனால், இத்தகைய கண்ணோட்டம் ஒரு மேலோட்டமான கண்ணோட்டம்தான். வருமானமும், செலவும் ஒன்றோடொன்று நெருக்கமான தொடர்புடையவை. நாம் சம்பாதிப்பதே செலவு செய்வதற்குத்தான். செலவுசெய்ய அவசியம் இல்லை என்றால் நாம் சம்பாதிக்கவே தேவையில்லை. சம்பாதிக்க விரும்புகின்றவர்கள் கூட செலவு செய்துதான் சம்பாதிக்க முடியும். ஒரு தொழில் செய்து சம்பாதிக்க விரும்புகின்றவர் இந்தத் தொழிலுக்குத் தேவையான மூலப் பொருள்கள், எந்திரங்கள் மற்றும் அந்தத் தொழில் ஈடுபடும் தொழிலாளிக்கான சம்பளம் என்று இவை சம்பந்தப்பட்ட செலவுகளை ஏற்காமல் அந்தத் தொழிலையே செய்ய முடியாது. அவசியமான மற்றும் முறையான செலவுகளுக்காக நாம் பணத்தைச் செலவு செய்யும் பொழுது மேற்கொண்டு பணம் நம்மை நோக்கி வருமென்று அன்னை சொல்கிறார். கிணற்றிலிருக்கின்ற நீரை நாம் வெளியேற்றும்பொழுது புது ஊற்று நீர் கிளம்பி, கிணற்றின் எல்லாப் பக்கங்களிலிருந்தும் சுரந்துவந்து காலியிடத்தை நிரப்புகிறது. இருக்கின்ற நீரை வெளியேற்றாமல் புது ஊற்றுச் சுரக்கப்போவதில்லை. இம்மாதிரியே இருக்கின்ற பணத்தைச் செலவு செய்யும்பொழுது அந்தக் காலியிடத்தை நிரப்புவதற்காகப் புதிய பணம் நம்மை நாடி வருகிறது.

ஸ்ரீ அரவிந்தர் தம்முடைய Life Divine புத்தகத்தில் எதிர் எதிராகச் செயல்படும் சக்திகள் ஒன்றிணையும்பொழுது பலன் கிடைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இயற்கை ஜடத்தையும், உயிரையும் இணைத்து உயிரினங்களைத் தோற்றுவித்திருப்பது உண்மையிலேயே ஓர் அற்புதமாகும். ஜடத்திற்கு வடிவமுண்டு, உயிருக்கு வடிவம் கிடையாது. இவை இரண்டும் எதிரெதிரான தன்மை உள்ளவை. ஆனால், இவை இரண்டும் ஒன்றிணையும்பொழுது உயிருள்ள உடம்பு பிறக்கிறது. இம்மாதிரியே ஜடமான மூளையிலிருந்து இயற்கை, அறிவை உற்பத்தி செய்துள்ளது. இதுவும் ஓர் அற்புதமாகும். இதே ரீதியில் வருங்காலத்தில் உடம்பில் ஆன்மா வெளிப்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. அந்தத் திசையில்தான் பரிணாமவளர்ச்சியும் நகர்ந்து கொண்டிருக்கிறது.

நம்முடைய அறிவினுடைய கண்ணோட்டம் குறுகியது என்பதால் எதிரெதிரான சக்திகள் ஒன்றோடொன்று உடன்பட்டு செயல்படும் என்பதை நம் அறிவால் ஏற்க முடிவதில்லை. இம்மாதிரியே ஓர் உண்மைக்கு இரண்டு மாறுபட்ட பக்கங்கள் இருக்கும் என்பதையும் நம் அறிவால் நம்ப முடிவதில்லை. பிரம்மத்தை எடுத்துக் கொண்டால், வடிவமில்லாத சச்சிதானந்தமாகவும் அதனால் இருக்க முடியும். அதே சமயத்தில் எண்ணற்ற வடிவங்களாக ஜட நிலையில் வெளிப்படவும் முடியும். ஆனால் நம்முடைய அறிவிற்கோ இவை இரண்டு மாறுபட்ட வெளிப்பாடுகளும் ஒரே பிரம்மத்தினுடைய இரு வேறு வெளிப்பாடுகள் என்பது ஏற்க முடியாததாக உள்ளது. இரண்டும் நேரெதிராக இருப்பதால் நம்முடைய அறிவு சச்சிதானந்தம் தான் இறைமயமானது என்றும், உலகம் இறைமயமானதில்லையென்றும் வாதாடுகின்றது.

ஆனால், நம்முடைய அறிவின் கண்ணோட்டத்தை விட்டுவிட்டு ஆன்மாவின் கண்ணோட்டத்தை ஏற்றோமென்றால், சச்சிதானந்தமும் ஜடமான படைப்பும் ஒன்றோடொன்று உடன்பாடானவைஎன்பது விளங்கும். சச்சிதானந்தம் அசையாத பிரம்மத்தைக் குறிக்கிறது. படைப்பு அசையும் பிரம்மத்தைக் குறிக்கிறது. இப்படி அசையாத பிரம்மமும், அசையும் பிரம்மமும் இணையும்பொழுதுதான் பிரம்மமே முழுமை பெறுகிறது. வடிவமில்லாத பிரம்மம் எண்ணற்ற வடிவங்களை உண்டுபண்ணிக்கொண்டே இருக்கிறது. அதனுடைய மௌனத்திலிருந்து இடைவிடாத இயக்கம் பிறந்துகொண்டேயிருக்கிறது. பிரம்மத்தினுடைய வடிவமின்மைதான் வடிவத்தின் மூலம் என்றோ, அதனுடைய மௌனம் தான் இடைவிடாத இயக்கத்தின் பிறப்பிடம் என்றோ நம் அறிவிற்குப் புரியாமல் இருக்கிறது. நம் அறிவிற்குப் புரிகிறதோ, இல்லையோ, இதுதான் உண்மை. நம்முடைய நிலையில் தெரிகின்ற எல்லா முரண்பாடுகளும் பிரம்மம் என்ற உயர்ந்த நிலையில் மேற்சொன்ன வகையில் உடன்பாடுகளாக மாறுகின்றன.

*****book | by Dr. Radut