Skip to Content

04. இறைமுயற்சி தொடங்குமிடம்

இறைமுயற்சி தொடங்குமிடம்

என். அசோகன்

ஆன்மா தன்னுடைய கவலைகளை மறந்தபொழுது அக்கவலைகளெல்லாம் மறைந்து போயின என்பதை அறிந்த ஆன்மா, அது ஏன் அப்படி நடந்தது என்று வியந்தது. ஆன்மாவின் அறியாமையைக் கண்டு இறைவன் சிரித்தார். ஸ்ரீ அரவிந்தருடைய பொன்மொழிகளில் ஒன்றில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. தனக்கு வந்துள்ள துன்பத்தைப்பற்றி மனிதன் நினைத்துக் கொண்டே இருப்பதால் அத்துன்பம் வலுவடைகிறது என்பது ஓர் ஆன்மீக உண்மையாகும். இந்த ஆன்மீக உண்மை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பயன்பட வழியேதுமுள்ளதா? இவ்வுண்மை பயன்படும் நிகழ்ச்சிகள் ஏராளமாக இல்லை என்றாலும், இவை அசாதாரணமும் இல்லை. டாக்டர் கைவிட்டபின் தீராத வியாதியிலிருந்து மனிதன் குணமடைகிறான். அந்நேரம் இத்தகைய நிகழ்ச்சிகள் வியப்பூட்டுவதாக இருந்தாலும், இவ்வியப்புணர்வைத் தாண்டி நம் அறிவு சிந்திப்பதில்லை. எப்படி இத்தகைய நிகழ்ச்சி நடந்தது என்று புரிந்து கொள்ள யாரும் தீவிர சிந்தனை செய்வதில்லை. நம்முடைய அறிவையே நாம் இறுதிக் கருவியாக நினைக்கிறோம். அறிவுக்கும் பின்னால் ஆன்மா என்ற ஒன்று இருப்பதை நாம் கருதுவதில்லை.

கிருஷ்ணா நதிக்கரையில் தாம் வாங்கிய புதுக்காரை ஒரு வழக்கறிஞர் ஓட்டிக் கொண்டு போய்க் கொண்டிருந்தார். திடீரென்று கார் ஆற்று வெள்ளத்தில் இறங்கிவிட்டது. எப்படியோ காரின் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்து, கரை வரைக்கும் நீந்தி வந்து கரையில் விழுந்து, சுயநினைவை இழந்துவிட்டிருந்தார். இரு நாள்கள் கழித்து அவருக்கு சுயநினைவு மீண்டது. அவரைச் சூழ்ந்து நின்றவர்கள் எல்லோரும் அவருடைய அசாதாரண தைரியத்தைப் பாராட்டினார்கள். மேலும், எப்படிப் பிழைத்துக் கரைக்கு வந்தார் என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டினார்கள். அவர்களுடைய கேள்விகளுக்கெல்லாம் அவரால் ஒரே பதிலைத்தான் வழங்க முடிந்தது. "எனக்கும் ஒன்றும் தெரியவில்லை. காரில் உட்கார்ந்தபடியே ஆற்றில் விழுந்தது நினைவு இருக்கிறது. அடுத்ததாக இங்கே மருத்துவமனையில் இருப்பது தெரிகிறது. இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை" என்றார். ஆனால் என்ன நடந்தது என்று நாம் யூகிக்கலாம். அறிவை நம்பிப் பிழைக்க முடியாது என்ற நேரம் வரும் பொழுது உடம்பில் மறைந்து இருக்கும் ஆன்மா (உடம்பின் ஆன்மா) விழித்துக் கொண்டு உடம்பிற்கு அசுர பலத்தையும், மனிதனுக்கில்லாத அதிமானுட அறிவையும் வழங்கி உடம்பைக் காப்பாற்றுகிறது.

மனிதனுடைய ஆற்றல் (energy) தீரும் நிலை வரும் பொழுது, வேலைக்குண்டான நிலை (plane of works) ஆற்றலால் நிரப்பப்படுகிறது. அற்புதமான விளைவுகளுக்குக் காரணம் இதுதான். ஜேன் ஆஸ்டின் (Jane Austen) என்ற ஆங்கில எழுத்தாளருடைய நாவல் ஒன்றில் இளம்பெண் ஒருவர், ராணுவ அதிகாரி ஒருவருடன் ஓடிப்போய்விடுகிறாள். இதனால் திருமணமாகாத அவளுடைய மற்ற நான்கு சகோதரிகளுடைய எதிர்காலம் இருண்டு போகிறது. ஓடிப்போன காதலர்கள் ஸ்காட்லாந்திற்கு (Scotland) சென்றிருக்கலாம் என்று யூகம் செய்கிறார்கள். ஏனென்றால் அங்குள்ள திருமணச் சட்டங்கள் 18 வயதுக்குக் கீழுள்ள பெண்களையும் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கின்றன. ஸ்காட்லாந்திற்குப் போவதற்குமுன் லண்டன் மாநகரத்தில் ஒளிந்து கொண்டிருக்கலாம் என்றும் சந்தேகம் இருந்தது. அவ்வளவு பெரிய மாநகரத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் தம் பெண்ணை விவசாயியான அவளுடைய தகப்பனார் எப்படித் தேடுவது? அவரும் தீவிர முயற்சி எடுத்துவிட்டு நம்பிக்கையை இழந்தார். அவருடைய மைத்துனர் லண்டனில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். கார்டினர் (Gardiner) என்ற பெயர் கொண்ட அவரும் தமக்குத் தெரிந்த முயற்சிகளை எடுத்துவிட்டு ஓய்ந்து போய் இருந்தார். பெண்ணின் தகப்பனாரும், மாமாவும் இனிமேல் முடியாது என்ற நிலைக்கு வந்து, அவரவர் வீட்டிற்குத் திரும்பி இருந்தார்கள். திடீரென்று ஒரு நாள் காலை இப்படி ஓடி வந்தவளின் சகோதரியான எலிஸபெத் என்பவளின் காதலன் டார்சி (Darcy) என்பவன் கார்டினரை அணுகி, ஓடிப்போன காதலர்களைத் தான் கண்டுபிடித்து விட்டதாகவும், இருவரையும் வீட்டிற்கு வரச் சொல்லி வற்புறுத்தியதாகவும் தெரிவித்தான். அது பலனளிக்காமல் போகவே லிடியா (Lydia) என்ற அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு ஓடிப்போன விக்காம் (Wickham) என்ற அந்த ராணுவ வீரனுக்கு ராணுவத்தில் ஒரு கமிஷண்ட் ஆபீஸர் (Commissioned Officer) பதவியை வாங்கிக் கொடுத்து, அவர்களுக்கு முறையாகத் திருமணமும் நடக்க ஏற்பாடு செய்துவிட்டதாகக் கூறுகிறான். அவன் கூறியபடியே திருமணமும் நடக்கிறது. மனித முயற்சி முடிகின்ற கட்டத்தில் இறைவன் தானே செயல்பட்டு காரியத்தை முடிப்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.

இம்மாதிரியே நம்முடைய தீராத பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் நமக்குள் இருக்கும் இறைசக்தியை நாம் செயல்பட வைக்கலாம். இதற்கான முக்கிய அணுகுமுறை என்னவென்றால், ஒரு தீராத பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று அறிவால் முயற்சி எடுப்பதை நாம் நிறுத்த வேண்டும்.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
நடக்காதது நடந்தபொழுது - உதாரணமாகக் கெட்டுப்போன கல்லீரல் வேலை செய்ய ஆரம்பித்தால் - ஆச்சரியமும் நன்றியும் எழுகின்றன. பலனை ஏற்பது முதல் நிலை. நம்பிக்கை பலனளித்தது என்பதை அறிவது நன்றியுணர்வு. மாறுதல்களின் பல நிலைகளை நுணுக்கமாக அறிவது ஞானம். எத்தகைய மாறுதல்கள் நல்ல பலனை ஏற்படுத்தின என்று அறிவது (process) மாறிய வகையை அறிவதாகும்.
 
பலன் குறைந்தபட்சம்; புரிவது அதிகபட்சம்.

*****

 book | by Dr. Radut