Skip to Content

03. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

கர்மயோகி

முகவுரை

வேதம் முதல் இன்று வரை எழுந்த ஆன்மீக இயக்கங்களால் உலகில் ஏற்பட்ட மாறுதல்கள் ஏராளம். ஆனால், தீமையைப் பொருத்தவரை எந்தப் பெரிய மாறுதலுமில்லைஎன பகவான் அவர்தம் வாழ்நாளில் குறிப்பிட்டார். அந்த இலட்சியத்தைச் சாதிக்க அவர் உடலை விட்டுப்போய் 1956இல் சத்தியஜீவியம் உலகை வந்தடைந்தது.

அத்துடன் நரகம் அழிந்தது.

பகவான் பணியைத் தொடர்ந்து செய்த அன்னை இந்த யோகத்தை எவரும் செய்ய இயலாது எனக் கண்டு, தாமும் உடலை நீத்தார்.

சொர்க்கத்தை உலகுக்கு அப்பொழுது அளித்தார்.

1989இல் ரஷ்யா கம்யூனிஸத்தையும், எதேச்சாதிகாரத்தையும் கைவிட்டபொழுது அடுத்த 15 ஆண்டுகளில் உலகம் எப்படி மாறும் என அவர்களோ, மற்றவரோ நினைக்கவில்லை. குறைகளைக் கருதாமல், புதிய நிறைவுகளைக் கணக்கில் எடுத்தால், அவை கணக்கிலடங்கா. இந்தியா வீறுகொண்டு எழுவதைக் காண்கிறோம். பெங்களூரில் ஓர் ஏக்கர் நிலம் 100 கோடி விலை போகிறது என்பது செய்தி. இது பணம். அதை மட்டுமே கணக்கிட முடியும். மற்ற எல்லாத் துறைகளிலும் நரகம் அழிந்து, சொர்க்கம் எழுவதை உலகம் காண்கிறது. அன்பர்கள் சிறப்பான ஆன்மீக வாய்ப்பையுடையவர்கள். அவர்களில் ஒருவர் அனைத்தையும் அபரிமிதமாகப் பெறும் நேரம் வந்ததையறியாமல் எதிரான நிலைமைகளை அனுபவித்தபொழுது,

மனம் அன்னையை நோக்கி பக்தி, நம்பிக்கையுடன் சென்றால் அவருக்குள்ள வாய்ப்பு அபரிமிதமாகப் பலிக்கும் என்பதை விளக்க அவர் வாழ்வில் நேரடியாகக் கண்ட நிகழ்ச்சிகள் மூலம் அவருக்காக எழுதப்பட்ட 141 கட்டுரைகளை வெளியிடுகிறேன். இதற்குத் தலைப்பாக,

"அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு" என்றேன்.

நியூயார்க்கில் Investment Bankers கம்பனியில் வேலை செய்பவர்கள் சராசரியாக 1 மணிக்கு $33,000, i.e. ரூ. 13 இலட்சம் சம்பாதிக்கிறார்கள். இங்கு திருமண வெப்சைட் நடத்துபவர் 1 கோடி பேர் தம் சைட்டுக்கு வந்துள்ளனர் என்கிறார். ரூ.1,500 கோடி கடந்த 10 ஆண்டுகளில் அவர் பெற்றிருக்கக்கூடும்என்பது யூகம்.

‘வறுமை ஒழிந்துவிட்டது’ எனக் கூறத் தோன்றுகிறது. பதிலாக, திரண்ட செல்வம் அனைவரையும் நாடுகிறது எனலாம். 1989இல் நான் அன்பர்கள் எளிதாக 1 கோடி ரூபாய் சம்பாதிக்கலாம் என நினைத்தேன். 100 கோடி ரூபாய் சம்பாதிப்பது முடியும், எவராலும் முடியும் என நான் நம்புகிறேன். அந்த எண்ணத்தை இந்த அன்பருக்கு மனதில் பட எழுதிய கட்டுரைகள் இவை.

உழைப்பு பணம்.

கடின உழைப்பு பெரும் பணம்.

திறமையான உழைப்பு பெருகும் பணம்.

முறையான, திறமையான உழைப்பு சூட்சுமமான பணம்.

இனிமையாக அது இருந்தால் பெருகும் பணம் நாமறிந்த உலகளவு பெருகும்.

அறிவுள்ள உழைப்பு அபரிமிதமான பணம்.

ஆத்மாவின் உழைப்பு தவம், யோகம்.

ஆத்மாவின் திறன் பண்புகள். பண்புள்ள உழைப்பு ஆன்மீக உழைப்பு.

ஆன்மீக உழைப்பு அமிர்தமான, அபரிமிதமான, தொடர்ந்து வளரும் பணம் சூட்சுமமாகப் பெருகுவதாகும்.

ஆன்மீக உழைப்பு மனதால் வெளிப்பட நல்லெண்ணம் தேவை.

அது வாழ்வில் பலிக்க உறவு இனித்து, ஆன்மீகச் சுவைபெற வேண்டும்.

அது பலத்த அடிப்படைபெற மன, மெய், மொழிகளால் நல்லது மட்டும் வெளிப்பட வேண்டும்.

அறிவும், அன்பும் உள்ளவர் பண்புடையவரானால், நல்லெண்ணம் வெளிப்பட நடக்கும் நல்லுறவில் அயராது உழைக்க, உழைப்பு இனிக்குமானால், அவர் அன்னை அன்பரானால், அவரை நாடி திரண்ட செல்வம் தானே வரும்.

141 கட்டுரைகளைப் பற்றிய குறிப்பு

 • "நான் ஆர்வத்துடன் மனிதனுக்காகத் தயாரித்த உணவை அவன் மறுத்துவிட்டதால் தெய்வங்கட்குப் பரிமாறுகிறேன்" என்று அன்னை கூறினார்.
 • இந்த 141 கட்டுரைகள் 2 ஆண்டிற்கு முன் அருளின் மையத்தில் வாழும் அன்பருக்காக எழுதப்பட்டது. அவருக்குப் பயன்பட்டதா என எனக்குச் செய்தி வரவில்லை. யோகத் தகுதியுள்ள அன்பர்கட்குப் பயன்படும் வாய்ப்புண்டுஎன்பதால் வெளியிடுகிறேன்.
  • நான் "கூறும்" நோக்கம் "100 ரூபாய்" பெறுவது.
   நோக்கம் அது இல்லை. நோக்கம் அன்னை.
   "100 ரூபாய்" அன்னையை அடையும் வாயில்.
   தமிழ்நாடு தவப்பயன் பெற்றது.
   இந்தியா புண்ணிய பூமி.
   புதுவை பூலோகச் சுவர்க்கம்.
   நாம் அனைவரும் அன்னையை அறிவோம்.
   அவர் பரிணாம இலட்சியத்தை அறியோம்.
   அப்பரிணாம இலட்சியம் பிரபஞ்ச இலட்சியம்.
   நாமறியும் சமர்ப்பணம் பிரச்சினையைத் தீர்க்கும்.

   சமர்ப்பணம் வாய்ப்பையும் உற்பத்தி செய்யும்.
   அவை வாழ்க்கைக்குரிய சமர்ப்பணம்.
   யோகத்திற்குரிய சமர்ப்பணம் மௌனத்தை நாடும்.
   மௌனத்தைக் கடந்த மௌனத்தையும் அறியும்.
   ஆத்ம சமர்ப்பணம் அதையும் கடந்தது.
   அதிலும் நம்மைக் கடந்த பிரபஞ்ச நிலையுண்டு.
   அதையும் கடந்த பிரம்ம நிலையும் உண்டு.
   பிரம்மம் உலகில் அற்புதமாக எழுவது யோக இலட்சியம்.
   அதுவே இறைவன் நாடுவது.
   இறைவன் நாடும் இன்பம் இகவாழ்வில் அன்பருக்கும் உண்டு.
   அன்பன் பாக்கியம் செய்தவன்.
   பாக்கியம் யோக சித்தியாகும் மார்க்கத்தில் முதற் கதவு "100 ரூபாய்".

    -- ஆசிரியர்.

 • சிரபுஞ்சி இந்தியாவில் அதிக மழைபெறும் இடம். 425" மழை பெய்கிறது.
  இங்கு, கோடையில் தண்ணீர்ப் பஞ்சம்.
  கேட்கவே வினோதமாக இருக்கிறது.
 • அமெரிக்க சராசரி மழை 26.1".
  அமெரிக்க மக்கள் தொகையில் 2% மக்களே விவசாயம் செய்கின்றனர்.
  32 கோடி மக்கட்குரிய உணவு தான்யம் உள்நாட்டிலேயே உற்பத்தியாகிறது.
  உலகில் எந்த நாட்டு உணவுப் பற்றாக்குறையையும் சரிசெய்வது அமெரிக்கா.
  பெரும்பாலும் வானம் பார்த்த பயிரே வழக்கம்.
  அப்படியும் ஏராளமாக உபரி மார்க்கட்டிற்கு வந்து விலை சரிவதால் சர்க்கார் விவசாயிகளை, எல்லா நிலத்தையும் பயிரிட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறார்கள்.
  ஓர் ஏக்கர் பயிரிடாமல் கரம்பாகப் போட்டால் $1000 மான்யம் தருகிறார்கள்.
 • இந்தியாவில் சராசரி மழை 80".
 • 1965 வரை இந்தியா உணவுப் பற்றாக்குறை நாடாக இருந்தது.
 • வசதியில்லாமல் மனிதன் கஷ்டப்படுகிறான்.
  வசதியிருந்தும் கஷ்டப்படுபவர் உண்டு. அதிகமில்லையென்றாலும், உண்டு.
  26" மழையில் உபரி காணும் பொழுதும் 80" மழையில் பற்றாக்குறையாக இருப்பது மனித நிலை. நம் நாட்டில் 60% விவசாயம் செய்கின்றனர்.
 • 1870ஆம் ஆண்டில் அமெரிக்க செல்வம், வளம், சுபிட்சத்தை ஒரு பெருநூலாக எழுதிய ஆசிரியர் "இன்று ஒருவன் இங்கு பட்டினி கிடந்தால் அவன் தன்னையே தான் நொந்து கொள்ள வேண்டும். அமெரிக்கப் பன்றிகளுக்கு இங்கிலாந்து (duches) பணக்காரப் பெண்களைவிட, சிறந்த சாப்பாடுண்டு".
  • பலன் வசதியைப் பொருத்ததில்லை.
  • பலன் முயற்சியைப் பொருத்தது.

தொடரும்....

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சமூகத்தை ஏற்றுக் கொள்ளும் மனிதனை, சமூகம் ஏற்றுக் கொள்கிறது. சமூகத்தின் திறனை தன்னுள் பெற்றிருப்பவனை சமூகம் "தலைவன்'' என ஏற்றுக் கொள்கிறது.
 
ஊரை தன்னுள் காண்பவன் உள்ளுணர்வால் தலைவனாகிறான்.

******book | by Dr. Radut