Skip to Content

01. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஓம் நமோ பகவதே!

ஸ்ரீ அன்னைக்கும், பகவான் ஸ்ரீ அரவிந்தருக்கும், குருநாதர் ஸ்ரீ கர்மயோகி அவர்களுக்கும் என் பணிவான வணக்கங்கள்.

ஸ்ரீ அன்னை அவர்கள் என் வாழ்வில் எத்தனையோ பல நல்ல அனுபவத்தைத் தந்துள்ளார்கள். அதில் நான் மிகவும் முக்கியமாகக் கருதிய குழந்தைச் செல்வத்தைத் தந்தமைக்காக அன்னைக்கும், பகவானுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, அவ்வனுபவத்தை நன்றியுரையாக இக்கடிதத்தில் எழுதுகின்றேன்.

எனக்குக் கடந்த ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி 2007இல் திருமணம் அன்னையின் அருளால் நல்லபடியாக முடிந்தது. திருமணம் முடிந்ததும் அனைவரிடமும் அடுத்ததாக எதிர்பார்க்கப்பட்டது குழந்தைச் செல்வம். எனவேதான் அதை அன்னையிடம் பிரார்த்தனை செய்தேன். இப்படியாக ஒரு மாதம் சென்றது. பின் எனக்கு, தியான மையப் பொறுப்பாளர் அவர்களின் துணைவியார் கூறியது போல் பிரார்த்தனை செய்வோம் என்று அன்னையை மட்டும் நினைவுகூர்ந்து, அன்னையின் கண்களிலிருந்து ஒரு ஒளி தோன்றி, அவ்வொளி என் வயிற்றில் படுமாறும், அவ்வொளியே குழந்தையாகவும் உருவெடுப்பதாகவும் எண்ணிப் பிரார்த்தனை செய்தேன். முதல் இரண்டு நாட்கள் இவ்வாறு அன்னையின் கண்களிலிருந்து ஒளி தோன்றுகின்றது என்பதை என்னால் சரியாக உணர முடியவில்லை. காரணம், அன்னை மீது நம்பிக்கையிருந்தாலும், மனதில் பலவிதமான எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருந்ததால். பின், மூன்றாம் நாள் அவ்வொளியை என்னால் பார்க்கவும், அவ்வொளி என் வயிற்றின் மேல் படுகின்றது என்ற ஒருவிதமான அனுபவத்தையும் உணர முடிந்தது. இவ்வாறாக ஒரு மாதம் பிரார்த்தனை செய்தேன். இப்படி ஒரு மாதம் சென்ற பொழுதுதான் எனக்கு ஏன் இன்னும் மதர் நான் கேட்டதைத் தரவில்லை என்ற எண்ணம் தோன்றியது. இவ்வெண்ணத்துடனேயே அன்று மாலை தியானத்தில் அமர்ந்து மதரை பிரார்த்தனை செய்தேன். அப்பொழுதுதான் எனக்குத் தோன்றியது, நான் கேட்டதை மதர் அன்றே தந்துவிட்டார்கள் என்றும், நான்தான் அதை உணராமல் உள்ளேன் என்றும் எனக்குப் புரிந்தது. உடனே மதரிடம் நன்றியையும், மன்னிப்பையும் கேட்டேன். ஏன் என்றால், மதர் தந்ததை உணராமல் இருந்ததற்காக மன்னிப்பையும், என் பிரார்த்தனையை ஏற்று இவ்வயிற்றில் ஒரு நல்ல ஜீவனை உருவாக்கி தந்தமைக்காக நன்றி என்றும் கூறினேன். பின் டாக்டரிடம் கன்பர்ம் செய்தபிறகு அனைவரிடமும் கூறினேன். அன்று முதல் அக்குழந்தை வயிற்றில் இருக்கும் அந்த 10 மாதங்களும் எனக்கு மற்ற பெண்களைப் போல் தலைசுற்றல், வாந்தி, சோர்வு என்ற எந்த உபாதைகளும் இல்லாமல், தினமும் 3 மணி நேரம் டிராவல் செய்து அலுவலகம் சென்று, வேலையும் பார்த்து, ஒவ்வொரு நாளும் நல்லபடியாகச் சென்றது. கடைசியில் மருத்துவர்கள் கொடுத்த நாட்களுக்கு 10 நாள் முன்னதாக ஓர் அழகிய பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அப்பிரசவ நேரத்தில் எனக்கு B.P. அதிகமானதால் நார்மல் டெலிவரி ஆகாமல் போய்விட்டது. பின் குழந்தை பிறந்தும், ஒரு வாரம் குழந்தை ஓர் இடம், நான் ஓரிடமாக அல்லல்பட்டேன். அப்பொழுதும் நான் அன்னையிடம், "நான் என்ன தவறு செய்தேன். இக்குழந்தையைத் தந்தது நீங்கள், நீங்கள் மட்டுமே. அனைவரும் என்னை, "உனக்குப் பொறுமையில்லை. அதனால் உன் குழந்தைதான் கஷ்டப்படப் போகிறது. உனக்கு அன்னை மேல் நம்பிக்கையில்லை. எல்லாம் நீ என்று எண்ணுகிறாய்" என்றெல்லாம் கூறுகின்றார்கள். ஆனால் அன்னையே இக்குழந்தை என் வயிற்றில் உருவான நாள் முதல் அதைப் பெற்றெடுத்த நாள் வரை உங்களை மட்டும்தான் நம்பியுள்ளேன் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே இக்குழந்தையின் உடல்நலத்தை உங்களுக்குச் சமர்ப்பணம் செய்கின்றேன்'' என்று கூறி, அன்று இரவு படுக்கச் சென்றேன். பின், மறுநாள் அன்னை எனக்கு ஒரு நல்ல செய்தியைத் தந்தார்கள். குழந்தைக்கு எந்த ஓர் ஆபத்தும் இல்லை என்றும், அன்று மாலை 6 மணியளவில் குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்படும் என்றும் கூறினார்கள். எங்கள் குடும்பத்தில் அன்னையை அறிந்த நாள் முதல் சரியாக மாலை 6 மணிக்கு அனைவரும் ஒன்று கூடிப் பிரார்த்தனை செய்வோம். அப்பிரார்த்தனையின் அருளே அன்று மாலை 6 மணிக்கு என் குழந்தையை மதர் என்னிடம் கொண்டுவந்து சேர்த்தார்கள். அன்னையின் அருளால் இப்பொழுது என் குழந்தை நன்றாக உள்ளது. அக்குழந்தைக்கு 9.10.2008 அன்று Mirra Suraksha என்று மதர் சென்டரில் பெயரையும் சூட்டியுள்ளோம். இப்படி ஒரு நல்ல அனுபவத்தைத் தந்தமைக்காக மதர் அவர்களுக்கும் பகவான் ஸ்ரீ அரவிந்தர் அவர்களுக்கும் நன்றிகள் பல.

- ஹேமலதா தியாகு, சென்னை.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
மனிதன் தன் பண்பைப் பொதுவான அளவுக்கு உயர்த்தினால், மனிதன் கரைந்துவிடுவான். தனி மனிதனுடைய ஆசைகளுக்கு இறைவனுடைய நோக்கில் என்ன அர்த்தம் என்று புரிந்து கொள்வது உலகத்தை "அற்புதம்'' என்று அறிவதாகும்.
 
நம் ஆசைக்கு இறைவனின் உத்தரவு "அற்புதம்".

 
*****
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சமூகத்தின் அடியில் இருப்பவன் ஒரு காரியத்தைச் செய்ய படிப்படியாக நகரவேண்டும். மேல் மட்டத்திலுள்ளவர்கள் நேரடியாகச் செயல்படுகிறார்கள். காரியம் உடனே நடக்கிறது. வாழ்வின் அமைப்பை நமக்குட்படும்படிச் செய்ய வல்லது சமர்ப்பணம். ஆர்வம் அதிதீவிரமானால், சத்தியஜீவிய அமைப்பு நமக்கு எட்டும்.
 
தீவிர ஆர்வத்திற்கு சத்தியஜீவிய சக்தி கிட்டும்.

 

*****book | by Dr. Radut