Skip to Content

08. ஸ்ரீ அரவிந்தரின் ஆன்மிக சிந்தனைகள் - பாகம் 1

ஸ்ரீ அரவிந்தரின் ஆன்மிக சிந்தனைகள் - பாகம் 1

(சென்ற இதழின் தொடர்ச்சி)

மூலம்: ஸ்ரீ கர்மயோகி

விரிவாக்கம் மற்றும் சொற்பொழிவு: திரு. M. ஜகந்நாதன்

சொற்பொழிவு ஆற்றிய தேதி: 06.09.2015

2. வாதத்தில் தீவிரவாதியானால் உன்னைக் கண்டு பரிதாபப்பட வேண்டும். ஞானம் பரவியுயர்வதைத் தவற விட்டது உன் பாக்கியம்.

வாதம் வென்றால் வாக்கு தோல்வியடையும், லூசி வாதத்தில் முயன்று தோல்வியை நாடினாள். காரியம் அவளுக்கு வெற்றியாகப் பலித்தது. பலித்தபின்னும் லுப்டனுக்குப் புரியவில்லை. செயலில் வாதம் ஒரு பகுதி. அடுத்த பகுதி விஷயம், வழக்கு என்போம். தர்க்க ரீதியாகப் பொதுவாக ஒன்று வென்றால், அடுத்தது தோற்கும். நக்கீரன் வாதம் பிரபலம். பீர்பால் அக்பருக்கு இதன் ஓர் அம்சத்தை பெருக்குபவன் வாழ்விலும் மற்றோர் பெரிய அம்சத்தை திருமண வாழ்விலும் எடுத்துக் கூறினார். நெடுநாளைய பெருவாரியான அனுபவம் ‘வாதத்தை விட்டுக் கொடுக்க முன்வருபவன் வழக்கை ஜெயிப்பான்’. சிதம்பரம் தீட்சிதர்கள் வாதத்தின் வலிமையை அறிந்தவர். சோழனிடம் வெற்றிகரமாகப் பயன்படுத்தினர். அதே வாதம் சோழனுக்கு அவர்களிடம் வெற்றி பெற்றுத் தந்தது. விவேகம் வாதத்தை வலியுறுத்தாது. துரதிர்ஷ்டம் வலியுறுத்தும். வெற்றிகரமான வாதத்தின் குணம் மேலும் மேலும் தன்னை வலியுறுத்தச் சொல்லும். அந்த ஆசை காலை வாரி விடும். சர்ச்சிலுக்கு அது பள்ளம் வெட்டியது. இந்த நாகரிகத்தின் சிகரத்தைக் குறள் எளியவரிடம் தோல்வியை ஏற்கும் மனப்பான்மை சான்றோர்க்குரியது எனக் கூறுகிறது. ஆன்டனி டிராலப் எழுதிய 47 கதைகளில் அவர் உச்சக்கட்டமாக உருவாக்கிய பாத்திரம் Pallisar பாலிசர் என்பவர். உழைப்பாளி, உத்தமன், சேவைக்காக மட்டும் செயல்படுபவர். Gentleman to the core. பிரபுவின் பிரபலம் படைத்தவர். அவரைப்   பாத்திரமாகப் படைத்து Prime Minister, Dukes Children என்று இரு நாவல்கள் எழுதினார். அவர் எழுத்து சிகரத்தைத் தொட்ட இடம் இவை. முதல் நூல் பிரபலமடையவில்லை. அடுத்தது எடுபடவில்லை. அதில் வரும் பெண் கதாபாத்திரம் மேபல். அவள் வாழ்வு தனிப்பெரும் சிறப்புடையது. நாட்டில் 4 பேர்கள் பெற்ற Garter award பெற்றவர் தகப்பனார். மந்திரி சபையில் நெடுநாளிருந்தவர், சூதாடி. உயர்ந்த இடம், தாழ்ந்த பழக்கம். சுமார் 10 அல்லது 12 பிரபல இளைஞர்கள் பெரும் சொத்து படைத்தவர் மேபலை மணக்க விரும்பினர். அவள் சொத்து முழுவதும் தகப்பனார், சகோதரன் சூதாட்டத்தில் போய் விட்டது. பெண்ணின் அழகு பிரபலமானது. எவரும் அவள் அழகிற்கு ஈடில்லை. அழகு சௌந்தர்யம் - புற அழகு - மட்டுமல்ல. அறிவால் மிளிரும் அழகு அவளுடையது. 21 வயதில் அவளுக்கு 30 வயது நிதானம் உண்டு. சொத்து கண்முன் அழிவது அவள் மனத்தைத் தொடவில்லை. மாமன் மகன் Treger டிரிகர். இவளுக்கு சமமான அறிவும், வலிமையும், நிதானமும் உடையவன். இளம் வயது நட்பு இனிமையான காதலாயிற்று. இருவருக்கும் பணமில்லாததால் திருமணம் இயலாது. நட்பு உயர்ந்தது, விஸ்வாசம் முழுமையானது. 21-ம் வயதில் இருவரும் திருமணம் இயலாது என முடிவெடுக்கின்றனர். மேபல் அவனுக்கு விடுதலை தருகிறாள். அவனை விடுவித்தாள். அவளால் மனதால் விடுதலை பெற்று அடுத்தவரை கணவனாக ஏற்க மனம் இடம் தரவில்லை. இந்த நிலையில் சில்வர் பிரிட்ஜ் வருகிறான். இவன் முன்னாள் பிரதமர் முதல் மகன். நாட்டில் அதிக சொத்துள்ளவன். அவனால் விளையாட்டிற்காகவும் பொய் சொல்ல முடியாது. மெய் விஷயத்தில் மேபலுக்கும் கிட்டதட்ட அதே மனநிலை. சில்வர் பிரிட்ஜ் புயலாகப் புரள்பவன். பயங்கர வேகத்திலும் மனம் நிதானமானது. நிலையை இதுவரை இழந்தறியான். அன்று இங்கிலாந்தில் எந்தப் பெண்ணும் விரும்பும் இளைஞன் அவன். இவன் கல்லூரியில் சிறு விஷமம் செய்து வெளிவந்தவன். மனம் விஷமத்திலில்லை. வயதும் சந்தர்ப்பமும் விஷமம் செய்தது. படிப்பு போயிற்று. அதை நஷ்டமாகக் கருத முடியாத பெரு வாழ்வு அவன் அக வாழ்வு. சரியில்லாத நண்பர்களைச் சரியாக நடத்துபவன். ரேஸில் அவன் வயதினர் ப100 பெற்றாலும், இழந்தாலும் உலகம் வியக்கும். 1000 பவுனை அர்த்தமற்றதாக நினைக்கிறான் என்பதால் 70,000 பவுன் பந்தயத்தில் வந்து, ஏமாற்றப்பட்டு, இழந்தான். நிலைகுலையவில்லை, நஷ்டம் கண்ணிற்குத் தெரியவில்லை, மனத்தைத் தொடவில்லை. 12 பேரை மறுத்த மேபலை அவன் நெருங்கி வந்து உண்மையாக மணக்கும்படி கேட்கிறான். வாய்தவறி தகப்பனாரிடம் கூறுகிறான். அவர் மகிழ்ந்து மலர்ந்து பெண்ணை ஏற்க விரும்பினார். 21 வயது பெண் விவேகம், அறிவு, நிதானம், அழகு, அந்தஸ்து நிரம்பி அனைவரையும் கவருகிறாள். சில்வர் பிரிட்ஜ் பல முறை வந்து பிரியமாகக் கேட்கிறான். அவளுக்கும் இது பெரிய சந்தர்ப்பம். இந்த நேரம் ஓர் அமெரிக்க அழகி வருகிறாள். உலகமே அவளைக் கண்டு அதிர்ந்து பிரமிக்கிறது. அவள் உள்ளம் புரட்சி வீரம் பெற்றது. உருவம் அழகால் சிறப்படைவதற்குப் பதிலாக அழகு அவள் உருவத்தால் உற்சாகம் பெறுகிறது. அனைவரையும் அளவு கடந்து கவரும் அவள் அழகை மேபல் பாராட்டுகிறாள். சில்வர் பிரிட்ஜ் தன் நிலையிழந்து அவளுடன் போகிறான். மேபல் பார்த்து மனத்தால் மறுக்கிறாள். அவன் அமெரிக்கப் பெண்ணை மணக்க இயலாது என அவள் அறிவாள். தன்னை மறந்து அவளுடன் போகும் சில்வர் பிரிட்ஜ் மனம் திருமண விஷயத்தில் மேபலை ஏற்றுக் கொண்டது அசையவில்லை. தன் தகப்பனாருக்கு முன் தலைமுறை மோதிரத்தை மேபலுக்கு பரிசாக அளிக்கிறான். மறுத்தாள், வாதத்தை ஆரம்பித்தாள். வாதம் சரியானது. எல்லாக் கேள்விகளும் கேட்கிறாள். வாதம் ஜெயிக்கும் என அறிவாள். வாதம் முழுவதும் வென்றது. வழக்கு தோற்றது. தோற்றபின் அவள் எடுக்கும் பெருமுயற்சி, இழந்ததை அவள் ஏற்கும் மனப்பான்மை, இலக்கிய நயத்தோடு எழுதப்பட்ட நாவலிது.

சங்கரர் சென்ற இடமெல்லாம் வாதத்தில் வென்றார். நாடு முழுவதும் அவரை 1000 ஆண்டுகள் ஏற்றது. இது பெரும் வெற்றி. தத்துவம் உயர்ந்தால் வாதம் வலுவிழக்கும். இன்று நம் நாட்டில் “மாயப் பிரபஞ்சம்’’ என்பதைக் கேட்கவும் மனிதரில்லை. வாழ்வை உயர்த்தி பெருமளவில் விரிவுபடுத்தி வாழ்ந்து அனுபவிக்கும் இளைஞர்கள், பெரியவர்கள், 10 A/C, 8 வாட்ச் வைத்துள்ளனர். இவர்கள் வாழ்வில் உயர்ந்த உத்தமர்களில்லை எனினும், அதுபோன்ற உத்தமர் வாழ்விலும் வாழ்வை அனுபவிக்கும் இந்த அம்சம் உள்ளே வந்து ஆக்ரமித்துக் கொண்டது. வாதம் பெரியது. பெரு விஷயங்களையும் காப்பாற்றவல்லது. என்றாலும் அடிப்படையில் வாதம் வாழ்க்கை மிளிர உதவாது. ஆன்மிக ஞானம் அதற்குரியதல்ல. பகவான் எந்த விஷயத்தையும் சுட்டிக் காட்டுவார். பிருந்தாவனத்தை அவர் சுட்டிக் காட்டுவது ‘This humorous world’ — ‘இந்த இனிய சுவையுடைய உலகின் நகை முகம்’ என அவர் கூறும் பொழுது, வந்த வழியெல்லாம், திரும்பப் போன வழியெல்லாம் ஞானம் மணிகளாக சிதறிக் காணப்படும்.

(தொடரும்)

************

ஜீவிய மணி

வேலையைச் செய்து முடிக்கத் திறமை வேண்டும். புத்தகம் புரிய அறிவு தேவை. அது போல் அஞ்ஞானம் ஞானமாக மாற ஆன்மிக ஞானம் தேவை. மனம் பெற்ற ஞானம் போதாது. இயற்கைச் சக்திகள் முரணானவை. அவற்றை விலக்கியே செயல்பட முடியும். அது வாழ்வுக்குரிய செயல்கள். அச்சக்திகளை விலக்காமல், இணைத்து சுமுகமாகச் செயல்படச் செய்வது சிரமம். அச்சுமுகம் புதைந்துள்ள ஆத்மாவை வெளிவரச் செய்யும். பணமில்லாதவன் பிறருக்கு உதவ நினைப்பான். உதவுவதாகக் கூறுவான். அடிக்கடியும் சொல்வான். பணம் வந்து விட்டால் சொல்லமாட்டான். உதவி செய்யமாட்டான். பணம் வந்தபின் கொடுக்க முன்வருவது பெருந்தன்மை. அது அரிது. மனித குரு சித்தி பெற்றவர். தான் பெற்ற சித்தியைப் பிறருக்குத் தர முடியும். எவனொருவன் தன் ஆன்மிக ஜீவனைக் கண்டு கொண்டா@னா, அவனால் பிறருக்கு ஆன்மிக உதவி செய்ய முடியும். ஆன்மிகம் அகத்திற்குரியது. அது தரும் சித்தி, ஞானம் அனைத்தும் அகத்திற்குரியவை. அவை எதுவும் புறத்திலில்லை.

********



book | by Dr. Radut