Skip to Content

12. அன்னை இலக்கியம் - என்கொல் திருஉளம்

அன்னை இலக்கியம்

என்கொல் திருஉளம்

சமர்ப்பணன்

என் அப்பா அளவாகத்தான் சாப்பிடுவார் என்றாலும் விதவிதமாக சாப்பிட பிரியப்படுவார். ஒரு நாள் ‘என்ன இது!

முந்திரி பகோடாவை, வெங்காய பகோடா போல செய்துவிட்டாய்’ என்று அம்மாவிடம் சொன்னார். சமையலறை தந்த சலிப்போடு அம்மா ‘வயிற்றுக்குள் போனால் எல்லாம் ஒன்றுதானே?’ என்றார். ‘அங்கேதான் நீ தப்பு செய்கிறாய்! மிருகம் உயிர் வாழ கிடைப்பதை அப்படியே சாப்பிடுகிறது. மனிதன்தான் சமைத்து சாப்பிடுகிறான். உயிர் சத்தோடு, அவனுக்கு ருசியும் தேவை. அளவோடு அனுபவிக்க வேண்டும். ருசியறிந்து அனுபவிக்க வேண்டும். அதை மனதில் வைத்துக் கொண்டு சமைக்க வேண்டும்’ என்றார்.

‘சதா சமையலறையில் உழல்வது பெண்ணுக்கு எவ்வளவு சிரமமான காரியம் தெரியுமா? எதையாவது நன்றாக இல்லை என்று குறை சொன்னால், நாளும் நெருப்பில் எரியும் பெண்ணின் மனம் எத்தனை வருத்தப்படும் என்பது ஆணுக்கு புரியவே புரியாது’ என்றார் அம்மா.

அப்பா ‘நான் சொன்னது தப்புதான். நாளை எனக்கு விடுமுறை. நீ எங்கேயாவது வெளியே போய்வா. முழு சமையலும் என்னுடையது. உனக்காக எத்தனை வகையாக சமைத்து வைக்கிறேன் பார்’ என்றார். சொன்னபடியே செய்யவும் செய்தார்.

விதவிதமாக சமைக்கவும், உண்ணவும், அனுபவிக்கவும் விரும்பிய அப்பாவிற்கு ஐம்பது வயதில் சாப்பிட முடியாமல் போய்விட்டது. பல மாதங்கள் சிரமப்பட்டபின் முற்றிய புற்றுநோய் என்று மருத்துவர்கள் சொன்னார்கள்.

சென்னையில் பிரபலமாக இருந்த மருத்துவமனையில் சேர்த்து, இரண்டுமுறை பல மணி நேர அறுவை சிகிச்சை செய்தபின்னும் ஆபத்தான கட்டத்தை தாண்டாமல்தான் இருந்தார். இயற்கை மனித உடலுக்கு ஒன்பது வாசல்களை தந்து வாழ வைத்தது. புற்றுநோய் அப்பாவின் உடலுக்கு ஒன்பதாயிரம் வாசல்களை தந்து அழிக்கப் பார்த்தது.

ஐந்து மாடிகள் கொண்ட மருத்துவமனையில், நான்காவது மாடியிலிருந்த அறையில் அப்பா பல வாரங்கள் இருக்க நேர்ந்தது. அம்மா காலையில் ஒரு முறையும், மாலையில் ஒரு முறையும் மருத்துவமனைக்கு வந்து அழுது அப்பாவை அதைரியப்படுத்தி விட்டு போவார்.

என் அப்பாவிற்குத் தெய்வ நம்பிக்கை கிடையாது. மருத்துவரையே தெய்வமாகவும், மருந்தையே பிரசாதமாகவும் நினைத்துக் கொண்டிருந்தார்.

போன வாரம் அப்பாவின் பால்ய நண்பர் ராஜாராமன் மருத்துவமனைக்கு விபூதி பிரசாதம் கொண்டு வந்தார். ‘ஜகதீசா, இந்த விபூதியை மூன்று நாள் பூசிக் கொள். பூரண குணம் கிடைக்கும்’ என்றார்.

அப்பா மறுத்து விட்டார். ‘சாம்பலாகப் போகும் உடம்பை சாம்பல் காப்பாற்றாது. பணம் பண்ணுவதற்காக பூசாரி ஏதாவது சொல்லியிருப்பார்’ என்றார்.

ராஜாராமனுக்குக் கோபம் வந்துவிட்டது. ‘உனக்கு நம்பிக்கை இல்லையென்றால் விபூதி வேண்டாமென்று சொல். தப்பே இல்லை. அடுத்தவன் நம்பிக்கையைக் கேலி செய்யாதே. உன் நம்பிக்கையைப் பற்றி நான் ஏதாவது சொன்னேனா? இவ்வளவு பெரிய அலோபதி ஆஸ்பத்திரியில் சேருகிறவனெல்லாம் பிழைத்துக் கொள்கிறான் என்றா நினைக்கிறாய்? மருந்தாபிஷேகம் செய்யும் விஞ்ஞான பூசாரிகளுக்கு நீ லட்சலட்சமாக தட்சணை தந்தாலும், கடவுள் கையில்தான் முடிவு இருக்கிறது’ என்றார்.

அப்பா சிரித்தார். ‘ராஜா, தினமும் கடவுளோடு பேசிக் கொண்டிருந்த ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு புற்றுநோய் வந்ததே? ரமண மகரிஷிக்கும் அதே வியாதிதானே வந்தது? இவர்களுக்கே ஒன்றும் செய்யாத கடவுள், எதிரியான எனக்கா எதுவும் செய்யப் போகிறார்?’ என்றார்.

‘அந்த மகான்களுக்கு வியாதி வந்ததற்கு காரணம் கூட இருந்தவர்களுடைய நடவடிக்கைகள்தான். புலி வால் பிடித்த நாயர் கதை தெரியுமா?’ என்றார் ராஜாராமன்.

‘வாலை விட்டால் புலி திரும்பி அடித்து விடும். விடாவிட்டால் புலியோடு காடெல்லாம் அலைய வேண்டும்’ என்றேன்.

‘எந்த யோகியும் புலி வால் பிடித்த நாயர் போன்றவர்தான். சீடர்கள் தரும் தொந்தரவு தாங்காமல் யோகத்தை பாதியில் விட்டால் வாழ்க்கை அடித்து விடும். சீடர்களின் அட்டூழியத்தைப் பொறுத்துக் கொண்டு, கூடவே வைத்திருந்தால், யோகமே செய்ய விடாமல் நிலைகுலைய வைப்பார்கள். பரமஹம்சர் விரும்பியிருந்தால் யோக சக்தியால் ஒரே நாளில் தன் வியாதியை குணப்படுத்தியிருக்கலாம். யோக சக்தியை அப்படி பயன்படுத்தக் கூடாது என்று அவர் நினைத்தார்’ என்றார் ராஜாராமன்.

‘வாழ்க்கைக்கு பயன்படாத யோகத்தாலோ, சித்தியாலோ மனிதனுக்கு என்ன பிரயோஜனம்?’ என்று கேட்டார் அப்பா.

‘பரமஹம்சர் வாழ்க்கையை உதறியவர். அப்படி நினைத்தார். ஆனால், வாழ்க்கையைத் தெய்வீகமாக நினைத்த யோகிகளும் இருக்கிறார்களே. அவர்களுக்கு உடல் இறைவன் தந்த கருவி. ஆன்மாவின் ஆடைதான் உடல். சிறு வியாதி வந்தால்கூட உடனே அதை யோக சக்தியால் சரி பண்ண வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள்’ என்றார் ராஜாராமன்.

அப்பா சிரித்தார். ‘சகலரோக நிவாரணம் தரும் சாமியார்களும், யோகிகளும் வீதிக்கு வீதி இருக்கிறார்கள்’ என்றார்.

‘படைப்பில் எல்லாமே இருமைதான். நல்லது ஒன்றிருந்தால் அதற்கு நேரெதிரான கெட்டதும் இருக்கும். ஆன்மிகம் இருந்தால் மதம் இருக்கும். உத்தம யோகி இருந்தால் போக்கிரி யோகி இருக்கத்தான் செய்வான். உலகத்தில் எத்தனயோ போலி டாக்டர்கள் இருக்கிறார்கள். நீ நல்ல டாக்டரிடம் போகாமலா இருக்கிறாய்? மனித முன்னேற்றத்திற்காக, உலக நன்மைக்காக எந்த சிறிய, பெரிய காரியத்திற்கும் யோகசக்தியைப் பயன்படுத்தலாம். அடுத்தவரை கெடுப்பதற்கும், கடவுளுக்கு எதிராகவும் அதைப் பயன்படுத்துவதுதான் தப்பு’ என்றார் ராஜாராமன்.

‘யோக சக்தியால் எல்லாம் முடியுமென்றால் டாக்டர்கள் எதற்கு? எல்லா ஆஸ்பத்திரிகளையும் மூடிவிடலாமா?’ என்று கேட்டார் அப்பா.

‘அபத்தமாக பேசாதே. உலகம் என்பது பலவகையான சக்திகள் மோதுமிடம். ஒவ்வொரு ரூபமும் சக்திதான். டாக்டர் என்பதும் ஒரு சக்தி. அதை ஏன் கடவுள் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது? அவன் மட்டுமே எங்குமிருந்து, எல்லாவற்றையும் அவனே செய்து கொண்டிருந்தால் சலிப்பு தட்டாதா? ஆண்டவனை நம்பினால் எந்தக் கருவியை வைத்து, எப்போது, எங்கு, என்ன நடத்த வேண்டுமோ அதை நடத்துவான்’ என்றார் ராஜாராமன்.

‘நம்பாவிட்டாலும் உனக்கு நடப்பதுதானே நடக்கப்போகிறது? மனித முன்னேற்றம் அறிவால் மட்டுமே உண்டாகிறது. புலன்களுக்கு பொருந்தி வராத இதையெல்லாம் நம்பாதே என்று என்னறிவு சொல்கிறது’ என்றார் அப்பா.

‘உன் அறிவு நம்பாமல் இருக்கலாம். ஆனால் உன் உடலுக்கு நம்பிக்கை இருக்கும். உன் உடலும், இந்த நாட்டு மண்ணும் ஒன்றுதான். ஆயிரம் தலைமுறை நம்பிக்கை உன் உடலுக்கு உண்டு. இந்தியன் கொஞ்சம் நம்பிக்கை வைத்தாலே எல்லாம் சரியாகி விடும். இதுவே வெளிநாட்டுக்காரன் என்றால் அவன் உடம்புக்கு நம்பிக்கை இருக்காது. யோக சக்தி லேசில் உள்ளே நுழைய முடியாது’ என்றார் ராஜாராமன்.

‘அப்படியானால் வெளிநாட்டுக்காரருக்கு மருந்து மட்டும்தான் தெய்வீக சக்தி போலிருக்கிறது’ என்றார் அப்பா.

‘வெளிநாட்டுக்காரனுக்கு சிரமம் என்றாலும் முயன்றால் முடியாதது இல்லை. இந்தியனைவிட அவன் அதிக தீவிரமான முயற்சி எடுக்க வேண்டும். கிரேக்க இளவரசன் டெமிட்ரிசின் உயிருக்கு ஆபத்து வந்தபோது அவன் அப்பா ஆன்டிகோனஸ் தியானம் செய்து மகனது நோயைத் தான் எடுத்துக் கொண்டான். மொகலாய இளவரசன் ஹுமாயூனுக்கு நோய் வந்தபோது அவன் அப்பா பர்கானத்து பாபர் ஆண்டவனுக்கு பிரார்த்தனை செய்து தன் உயிரை கொடுத்து பிள்ளை உயிரை காப்பாற்றினான்’ என்றார் ராஜாராமன்.

‘எந்தக் காலத்திலும் பெற்றவர்கள் உயிரை வாங்காமல் பிள்ளைகள் விடமாட்டார்கள் என்பதுதான் இந்தக் கற்பனைக் கதைகளிலிருந்து நான் புரிந்து கொள்வது. விஞ்ஞான காலத்தில் அறிவாளியான நீ இதையெல்லாம் நம்புவது ஆச்சரியமாக இருக்கிறது’ என்றார் அப்பா.

‘மருந்தால் குணமடைந்தவர்களுக்குத்தான் மருத்துவம் கணக்கு வைத்திருக்கிறது. குணமடையாதவர்களுக்கு கணக்கு வைப்பதில்லை. அந்தக் கள்ளக் கணக்கை காட்டி மருத்துவத்தை தவறில்லாத விஞ்ஞானமாக சித்திரிக்கிறார்கள். மேல்நாட்டுக்-காரன் சொல்கிறான், விஞ்ஞானம் சொல்கிறது என்றால் விஞ்ஞான கால நவீன மனிதன் அப்படியே நம்புகிறான். ஆதிமனிதன் மந்திரவாதிமீது வைக்கும் நம்பிக்கைக்கும், நவீன மனிதன் மருத்துவத்தின்மீது வைக்கும் நம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? இத்தனை முறை மந்திரம் சொன்னால் நல்லது நடக்கும் என்று அவன் நம்பினான். இத்தனை முறை மருந்து உண்டால் நல்லது நடக்கும் என்று இவன் நம்புகிறான்’ என்றார் ராஜாராமன்.

‘மருத்துவம் மனிதனின் துன்பத்தை விலக்க நினைக்கும் நல்ல நோக்கம் கொண்டது. மருத்துவர்களில் எத்தனையோ நல்லவர்கள் உண்டு’ என்றார் அப்பா.

‘அறியாமையில் இருப்பவர்கள் நல்ல நோக்கத்தோடு ஆபத்தான காரியத்தைச் செய்கிறார்கள். மருத்துவம் மனிதனுக்கு, அவன் மனதிற்கு, உடலுக்குக் கற்று தந்தது என்ன? பயம், அவநம்பிக்கை, மருந்தைச் சார்ந்திருப்பது. மருந்தை அவனால் சுலபத்தில் விட முடியாது’ என்றார் ராஜாராமன்.

‘மருந்தைக் குப்பை என்கிறாயா?’ என்றார் அப்பா.

‘அதைச் சாபவரம், நச்சமுதம் என்றுதான் சொல்ல வேண்டும். எத்தனையோ நோய்களை மருந்து குணப்படுத்துகிறது. எத்தனையோ சிக்கல்களை அறுவை சிகிச்சை சரி செய்கிறது. அதேசமயம், மனிதனின் நோயை எதிர்த்துப் போராடும் தன்மையையும், தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ளும் தன்மையையும் அழிக்கிறது. மரபணுக்களும், மருந்தும்தான் நோய்களுக்குக் காரணம்’ என்றார் ராஜாராமன்.

‘நோயாளி மருந்து சாப்பிட்டால் குணமாகிறதே?’ என்றார் அப்பா.

‘மருந்து குணப்படுத்துகிறது என்பதை விட, மருந்தின்மீது மனிதனுக்கு இருக்கும் நம்பிக்கை குணப்படுத்துகிறது என்று சொல்வதுதான் சரி. ஆனால் மனிதன் தன்னுள் இருக்கும்   சக்தியின்மீது வைக்கும் நம்பிக்கைக்கு எந்த நம்பிக்கையும் ஈடில்லை’ என்றார் ராஜாராமன்.

‘டாக்டர் சரியில்லை. மருந்தும் சரியில்லை! நோய் தீர்க்கும் நல்ல டாக்டர் ஒருவர் கூடவா உலகில் இல்லை?’ என்று கேட்டார் அப்பா.

‘நமக்குள் இருக்கும் ஆண்டவன்தான் எல்லாம் வல்ல டாக்டர். அவன்தான் சகலரோக நிவாரணி. மரணத்தைப்பற்றி பயப்படாமல் கடவுளிடம் பொறுப்பை விட்டால், அவன் திறமை லட்சம் டாக்டர்களின் கூட்டு முயற்சியைவிட அதிகமானது என்று தெரியவரும். மருந்தின்றிக் குணப்படுத்துவதை மனித உடல் மறந்து விட்டது. நமக்குள் இருக்கும் நோய் தீர்க்கும் சக்தியை நாம் நம்பாதிருப்பதுதான் நம் பிரச்சனை. மருந்து உடலில் விஷமாகாதபோது, ஆன்மிக சக்தியின் ஆதரவு இருந்தால், மருந்து நோயை குணப்படுத்தும். சக்தியை நேரடியாக செயல்பட அனுமதித்தால் மருந்தே தேவைப்படாது’ என்றார் ராஜாராமன்.

அப்பா என்னைப் பார்த்து ‘நீ என்ன சொல்கிறாய்?’ என்று கேட்டார்.

‘மனதில் பயமிருக்கும் போது மருந்து சாப்பிடுவேன்.

தைரியமாக இருக்கும்போது மருந்து சாப்பிட மாட்டேன். ஆனால் மருந்தில்லாமல் பல சமயங்களில் கடுமையான காய்ச்சலை ஒரு மணி நேரத்தில் சரி செய்திருக்கிறேன்’ என்றேன்.

‘எந்த வழியில்?’ என்று ஆர்வத்துடன் கேட்டார் ராஜாராமன்.

‘சில வருஷங்களுக்கு முன்னால் நம்மூரில் கோவண சாமியாரைப் பார்த்தேன்’ என்றேன்.

‘அந்த ஆள் குளிப்பதே இல்லையாமே’ என்றார் அப்பா.

‘ஆனால் அழுக்காக இருக்க மாட்டார். அவர் மீதிருந்து ரோஜாப்பூ வாசம் வரும்’ என்றேன்.

‘திருட்டுத்தனமாக குளித்துவிட்டு, காணிக்கையாக கிடைத்த காசில் சென்ட் வாங்கி போடுபவராக இருக்கும். அவர் கூட பழகினால் உன்னையும் கோவண சாமியாராக்கி விடுவார்’ என்றார் அப்பா.

‘அவர் பல விஷயங்கள் பேசுவார். அவருக்குக் காய்ச்சல் வந்தால் அதைச் சரி செய்ய உடலை நன்றாக வியர்க்க வைப்பாராம். எனக்கு அடுத்த முறை காய்ச்சல் வந்தபோது, நிறைய தண்ணீர் குடித்து விட்டு, இரண்டு ஸ்வெட்டர் போட்டு, கனமான மூன்று கம்பளி போர்வைகளுக்குள் படுத்தேன். ஐந்து நிமிஷத்தில் வியர்வை ஊற்றாக வர ஆரம்பித்தது. லேசில் பொறுக்க முடியாத கசகசப்பு. பொறுத்துக் கொண்டேன். அரை மணி நேரத்தில் காய்ச்சல் சரியாகிவிட்டது’ என்றேன்.

‘பார்த்தாயா, உன் பிள்ளை மருந்தே இல்லாமல் சில சமயங்களில் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்கிறான்’ என்றார் ராஜாராமன்.

‘பைத்தியக்காரத்தனம்! வைரஸ் அல்லது பாக்டீரியா உடலைத் தாக்கினால், உடல் எதிர்த்துப் போராடும். அதன் அறிகுறிதான் காய்ச்சல். கிருமியைக் கொல்லாமல் காய்ச்சல் எப்படிச் சரியாகும்? ஆதாரம் கேட்க மாட்டோம் என்கிற தைரியத்தில் மருந்தில்லா வைத்தியம் பற்றிப் பேசுகிறான். இவனைப் போய் அறிவாளி என்று நினைத்தேனே’ என்றார் அப்பா.

‘முதலில் உன் அறிவைச் சரி பார்த்துக் கொள்’ என்றார் ராஜாராமன்.

‘உனக்கு வயதாக, வயதாக கோபம் அதிகமாக வருகிறது. ரத்த அழுத்தம் அதிகமாகிவிடும். சாத்வீக உணவு சாப்பிடு. அடுத்த முறை நீ வரும்போது என்னென்ன சாப்பிட வேண்டுமென்று எழுதித் தருகிறேன்’ என்றார் அப்பா.

‘எப்போதும் சாப்பாடு பற்றிய நினைவுதானா?’ என்றார் ராஜாராமன்.

‘நான் அளவாக சாப்பிடுகிறவன். எதையும் மிதமிஞ்சி அனுபவிப்பவன் அல்ல’ என்றார் அப்பா.

‘ஆசையை அனுபவித்து விட வேண்டும் அல்லது விட்டுவிட வேண்டும். சரியோ, தப்போ அனுபவித்துவிட்டால் ஆசை கரைந்துவிட வாய்ப்பு உள்ளது. அனுபவிக்காத ஆசை, பேராசையாகி மனதை அரித்துக் கொண்டே இருக்கும்’ என்றார் ராஜாராமன்.

‘ஆசைகள் அனுபவித்தால் அதிகமாக வளரும்’ என்றார் அப்பா.

‘அதனால்தான் எந்த ஆசையையும் ஆர்வமாக மாற்ற வேண்டும் என்று யோகிகள் சொல்கிறார்கள்’ என்றார் ராஜாராமன். ‘இரண்டும் ஒன்றுதானே?’ என்று கேட்டார் அப்பா.

  ‘அகம்பாவமிருந்தால் ஆசை. அது இல்லையென்றால் ஆர்வம்’ என்றார் ராஜாராமன்.

‘என் வீட்டிற்கு வரும் எவரையும் நான் பசியோடு இருக்க விட்டதில்லை. எல்லோரும் வயிறார சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறேன். அதை என்னவென்று சொல்கிறாய்?’ என்றார் அப்பா.

‘அது ஆர்வம் போல தோன்றும் ஆசை. அடுத்தவர்கள் உன்னை நல்லவன் என்று பாராட்ட வேண்டும். அதுதான் உன் நோக்கம்’ என்றார் ராஜாராமன்.

‘சார். ஆன்மிகத்தைப் பற்றிய உங்கள் கருத்துகளைக் கொஞ்சம் தெரிந்து கொண்டேன். நீங்கள் விபூதி பூசுவதும், அடுத்தவருக்கு அதைச் சிபாரிசு செய்வதும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது!’ என்றேன்.

சிரித்தார் ராஜாராமன். ‘ஐம்பது வருஷ பழக்கம். வேறென்ன! செருப்புப் போடாவிட்டால் தெருவில் நடக்க பதற்றமாக இருக்கிறது. விபூதி பூசாவிட்டால் முகத்தைக் கண்ணாடியில் பார்க்க சங்கடமாக இருக்கிறது! அடுத்தவரும் பூசிக் கொண்டால் எனக்கொரு துணை ஆகிவிடும். மற்றபடி விபூதிக்கும், எனக்கும் சம்பந்தமில்லை’ என்று கூறி விடைபெற்றார்.

அவர் போனபின் அப்பா ராஜாராமனைப்பற்றியும் அவர் சொன்னவற்றைப்பற்றியும் ஒரு வாரமாகப் பேசிக் கொண்டிருந்தார். கேலியாகத்தான். “இதையெல்லாம் கேட்டால் ‘ஆத்திகனைவிட நாத்திகன்தான் கடவுளை அதிகமாக நினைக்கிறான். அதனால் நாத்திகனுக்கு ஆண்டவனின் அனுகிரகம் அதிகமுண்டு’ என்று ராஜாராமன் உளறுவான்” என்று அடிக்கடி சொல்லிச் சிரித்துக் கொண்டார்.

அவர் உடல்நிலை ஒவ்வொரு நாளும் மோசமாகிக் கொண்டு வந்தது. அப்பா இருந்த அறையின் கதவில் செவ்வக துவாரம் ஒன்றிருக்கும். நோயாளியின் நிலையைப் பொறுத்து பச்சை, நீலம், அல்லது சிவப்பு நிறத்தில் அட்டை செருகப்பட்டிருக்கும். சிவப்பு நிறம் என்றால் மிகவும் அபாயம் என்று பொருள்.

ராஜாராமன் வந்து சென்ற ஒரு வாரம் கழித்து அப்பாவிற்கு இரண்டு சிவப்பு நிற அட்டைகள் வைக்கப்பட்டிருந்தன. இடது, வலது கைகளிலும், மூக்கிலும் குழாய்கள் மாட்டப்பட்டு, அவற்றின் மூலம் நீர், மருந்து, காற்று ஆகியவை தரப்பட்டுக் கொண்டிருந்தன. அவர் திட உணவை வாயால் உட்கொண்டு பல வாரங்கள் ஆகியிருந்தன. வாய் மூலம் எந்த உணவு தந்தாலும் அது குடலை கடுமையாக பாதிக்கும் என்ற எச்சரிக்கை தரப்பட்டிருந்தது. மெலிந்து போய்விட்டிருந்தார். மிக சன்னமான குரலில் சில வார்த்தைகள் பேசினால்கூட அவருக்கு மூச்சிரைக்க ஆரம்பித்தது.

அதிகாலையில் மயக்கத்தில் திணறலோடு ஏதேதோ பேசினார். எல்லாம் அவர் வாழ்வின் பழைய நிகழ்ச்சிகள். அப்போது ‘தப்புதான், தப்புதான்’ என்று முணுமுணுத்தார்.

அவரருகே குனிந்து ‘என்ன தப்பு?’ என்றேன்.

லேசாக கண்விழித்தவர் சன்னமான குரலில் தெளிவாகப் பேசினார். ‘அப்போது எனக்குப் பத்து வயது. கிரிக்கெட் விளையாடும்போது நான் போட்ட பந்து, மரத்தடியில் சாப்பிட பிச்சை பாத்திரத்தோடு உட்கார்ந்த பையன் காலில் பட்டுவிட்டது. அவன் கோபத்தோடு என் பந்து மீது எச்சில் துப்பினான். எனக்கும் கோபம் வந்து விட்டது. அவன் பாத்திரத்தை மண்ணில் உருட்டிவிட்டேன். அன்னமெல்லாம் மண்ணில் விழுந்து விட்டது. அழுது கொண்டே ‘நான் நேற்றிலிருந்து சாப்பிடவில்லை. உனக்கென்ன, நன்றாக நான்கு வேளை சாப்பிட்டிருப்பாய்’ என்றான். ‘போடா’ என்று சொல்லிவிட்டு பந்தை எடுத்துக் கொண்டு வந்துவிட்டேன். இரண்டு மணி நேரம் விளையாடி முடித்தபின்தான் அவன் பசியோடு மரத்தடியில் சுருண்டு படுத்திருப்பதைக் கவனித்தேன். கஷ்டமாக இருந்தது. நானும், நண்பர்களும் சேர்ந்து அவனை எழுப்பி பன், பழம், டீ வாங்கித் தந்தோம். சந்தோஷமாக சாப்பிட்டான். ஆனால் அவன் அழுகை இப்போது என் வயிற்றில் குடியேறிவிட்டது’ என்றார் அப்பா.

‘அது சிறியவர்கள் விளையாட்டு. கோபத்தில் செய்த தப்பைத்தான் அப்போதே சரி செய்து விட்டீர்களே’ என்றேன்.

‘சரி செய்யவோ, மாற்றவோ இதென்ன மனுஷன் போட்ட சட்டமா? பிரபஞ்ச சட்டத்திற்கு விதிவிலக்குக் கிடையாது. சட்டம் என்றால் சட்டம்தான். தர்மதேவதை காந்தாரி மாதிரி கண்ணை கட்டிக் கொண்டிருப்பவள். எல்லாம் அறிந்தவனானாலும், அறியாப்பிள்ளையானாலும், ஆடுமாடு என்றாலும், மின்சாரக் கம்பியை தப்பாகத் தொட்டால் பலன் ஒன்றுதான். உனக்கு பசி என்றால் என்னவென்று தெரியாது. பசித்த ஏழை ரிஷிக்குச் சமானம். கர்மவினையை அனுபவித்துதானே தீர்க்க வேண்டும்?’ என்றார் அப்பா.

‘உடலுறுப்புகளை மாற்றி உயிர் வாழ்கிறார்கள். காதலை மாற்றி குடும்பம் நடத்துகிறார்கள். கொள்கையை மாற்றி கோஷம் போடுகிறார்கள். முயற்சி செய்தால் எதையும் மாற்றலாம். கர்மத்தையும் மாற்றலாம். அது மற்றவர்களுக்கு. நீங்கள் பகுத்தறிவாளி. கர்மத்தை நம்பலாமா? எதையாவது கற்பனை செய்து கஷ்டப்படாமல் தூங்கப் பாருங்கள்’ என்றேன்.

‘உனக்குத்தான் ஒன்றும் புரியவில்லை. அறிவே இல்லாதவன்’ என்றார் அப்பா. பின் ‘கர்மத்தை மாற்ற முடியும் என்றா சொல்கிறாய்?’ என்று கேட்டுவிட்டு மீண்டும் மயக்கமாகி விட்டார். மயக்கத்தில் தெளிவாகப் பேசிக் கொண்டே இருந்தார். வெளியில் நடப்பதை அறிந்தவராகத் தெரியவில்லை.

டாக்டர் கோசலன் பள்ளியில் என்னோடு படித்தவர். குடும்ப நண்பர். இதே மருத்துவமனையில் வேலை பார்ப்பவர். காலையில் ரகசியமாக என்னிடம் ஒரு தகவல் சொல்லியிருந்தார். ‘இன்றோ, நாளையோ எல்லாம் முடிந்து விடும் என்று தலைமை டாக்டர் நினைக்கிறார். வேண்டிய ஏற்பாடுகளை இப்போதே செய்ய ஆரம்பித்துவிடு. மாமாவின் உடலில் இனி கெட்டுப் போவதற்கு எதுவுமே இல்லை.’

அதன்பின் பகல் வழக்கம் போல கழிந்தது. மாலை ஐந்து மணிக்குமேல் இரண்டு மணி நேரமாக நர்சு உட்பட மருத்துவமனை பணியாளர்கள் எவருமே அப்பாவின் அறைக்குள் வரவில்லை. காரணம் தெரியவில்லை. அதை நான் பொருட்படுத்தவுமில்லை. நடப்பது நடக்கட்டும்.

முன்னிரவு நேரத்தில் ஜன்னலோரமாகப் போடப்பட்டிருந்த மேஜைக்கு அருகிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அடுத்தடுத்து அப்பாவைப் பற்றிய நல்ல நினைவுகள் எழுந்தபடி இருந்தன. அவர் சமைக்கும் உணவு வகைகள் நினைவிற்கு வந்தன.

குகனின் சமையல் ராமனுக்கு பிடித்தது போல, அவர் சமையல் எல்லோருக்கும் பிடிக்கும்.

கம்ப ராமாயணத்து கங்கை படலத்தில் ஒரு காட்சி. காடேகிய ராமன், கங்கைக் கரைக்கு வந்தான். அவன்மீது பேரன்பு கொண்டிருந்த படகோட்டி குகன் ‘பக்குவப்படுத்திய சுவையான தேனையும், மீனையும் உணவாக உமக்குக் கொண்டு வந்தேன். உமது திருவுளம் என்னவோ?’ என்ற பொருள்பட ‘தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆகத் திருத்தினென் கொணர்ந்தேன்; என்கொல் திருஉளம்?’ என்றான். இதுதானே சமர்ப்பணம்? ‘நான் கொணர்ந்தேன், நீ கொள்வாயாக’ என்ற வேண்டுகோளோ, பிரார்த்தனையோ, வற்புறுத்தலோ குகனிடம் இல்லை. ‘கொண்டு வருவது மட்டுமே நான் செய்யக் கூடியது. ஏற்பதும், ஏற்காததும் உன் விருப்பம். உன் திருவுளம் என்ன?’ என்று கேட்டான். ‘இவை வெறும் உணவல்ல. உன் உள்ளத்து உவகையாலும், அன்பாலும் அமைந்தவை. தவசீலர்களுக்கும், தேவர்களுக்கும் உரியவை. இவற்றை நான் ஏற்கிறேன்’ என்று மறுமொழி கூறி சைவனாக இருந்த ராமபிரான் அசைவனாக மாறுகிறான். எளியவனின் தூய சமர்ப்பணம், அவதார புருஷனையே மாற்றுகிறது. அது கர்மத்தை மாற்றாதா என்ன?

மேலே மலைமுடியில் கிடைக்கும் தேனையும். கீழே கடலடியில் கிடைக்கும் மீனையும் தன் தலைவனுக்கு கொண்டு வந்தான் குகன். உயர்ந்தது, தாழ்ந்தது என்ற பாகுபாடின்றி அனைத்தையும் தலைவனுக்கு அர்ப்பணம் செய் என்று குறிப்பால் உணர்த்துகிறானா இந்தப் படிப்பறிவில்லா படகோட்டி?

என்கொல் திருஉளம்!

அப்போது அப்பா சுவாசத்திற்காகப் போராடும் பெருமூச்சொலி என் கவனத்தை மாற்றியது. திரும்பி அப்பாவைப் பார்த்தேன். குழாய்கள் வழியே உடலுக்குள் செல்ல வேண்டியவை குழாய்களில் தேங்கி நின்று கொண்டிருந்தன. வாய் திறந்திருந்தது. கைவிரல்கள் ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்டிருந்தன. நெஞ்சு ஏறி, இறங்கிக் கொண்டிருந்தது. கண்கள் செருகத் தொடங்கி இருந்தன. உடனே எச்சரிக்கை மணியை பல முறை அழுத்தினேன். யாரும் வரவில்லை.

அப்பாவின் தலை லேசாக சரியத் தொடங்கியது. நான் குழாய்களை அசைத்து விட்டேன். அப்பாவை பிடித்து மென்மையாக உலுக்கினேன். ஆனால் நிலைமை மோசமாகிக் கொண்டே வந்தது. எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரம் வந்து விட்டதா?

அறையை விட்டு வெளியே வந்தேன். நர்சுகளின் அறைக்கு சென்றேன். எவருமில்லை. டாக்டர்களின் அறைக்குச் சென்றேன். அங்கும் எவருமில்லை.

மிகவும் வயதான பெண் ஒருவர் அங்குமிங்கும் அல்லாடிக் கொண்டிருந்த என்னைப் பார்த்து புன்னகைத்தார். ‘டாக்டர் ஒருவர் ஜாதி பெயரை சொல்லி நர்சை திட்டி விட்டாராம். பெரிய சண்டையாகி விட்டது. ‘டாக்டர் மன்னிப்பு கேட்டால்தான் வேலை செய்வோம்’ என்று சொல்லி நர்சுகள் சங்கம் வேலை நிறுத்தம் செய்கிறது. ‘மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை. நர்சு பொய் சொல்கிறார். அவரை விலக்கினால்தான் வேலை செய்வோம்’ என்று சொல்லி டாக்டர்கள் சங்கம் வேலை நிறுத்தம் செய்கிறது. எல்லோரும் தரைதளத்தில் கூடி கோஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். மற்ற பணியாளர்கள் சண்டையை வேடிக்கை பார்க்கப் போய்விட்டார்கள். லிப்ட்டைக் கூட மூடிவிட்டார்கள். இரண்டு மணிநேரமாக களேபரமாக இருக்கிறதே, உங்களுக்குத் தெரியாதா?’ என்றார்.

தெரியாது என்று தலையசைத்து விட்டு ‘அப்பா ஆபத்தான நிலையில் இருக்கிறார்’ என்றேன்.

‘கீழே போய் பார்ப்போம்’ என்றார் மூதாட்டி.

அப்பாவைப் பற்றிய பதற்றத்தை மறைத்துக் கொண்டு ‘நான் பார்த்துக் கொள்கிறேன். உங்களுக்கேன் மாடியிறங்கும் சிரமம்?’ என்றேன்.

‘அதிலென்ன சிரமம்? எனக்கு தொண்ணூற்றேழு வயதுதானே ஆகிறது! நானும் கீழேதான் போகிறேன்’ என்றார் மூதாட்டி. நம்புவதற்குச் சிரமமாக இருந்தது.

அவர் மறுத்தபோதும் அவரது கையிலிருந்த பையை நான் பலவந்தமாக வாங்கிக் கொண்டேன். என்னோடு மெதுவாக படியிறங்கினார்.

‘என் கொள்ளுப்பேரனுக்கு சுகமில்லை. பார்க்க வந்தேன்’ என்றார் மூதாட்டி.

‘வீட்டில் வேறு யாருமில்லையா?’ என்றேன்.

‘பையனை பார்த்துக் கொள்வதற்காக எல்லோருமே ஆஸ்பத்திரியில்தான் இருக்கிறார்கள். அதுவா முக்கியம்? அவனுக்கு உடம்பு சரியாக வேண்டாமா? அதனால்தான் நான் வந்தேன்’ என்றார் மூதாட்டி.

புரியாமல் ‘நீங்கள் டாக்டரா?’ என்றேன்.

‘நல்ல வேளையாக இல்லை’ என்ற மூதாட்டி ‘அப்பாவிற்கு என்ன?’ என்றார். நான் சொன்னவற்றை கவனமாகக் கேட்டுக் கொண்டார்.

அங்குமிங்கும் நான் பார்த்தபடி படியிறங்குவதைக் கண்ட மூதாட்டி ‘யாரைத் தேடுகிறீர்கள்?’ என்று கேட்டார்.

‘டாக்டர் கோசலன் என் நண்பர். அவர் ஏதேனும் உதவி செய்யக்கூடும்’ என்றேன்.

கீழே ஒரே குழப்பமாகவும், சத்தமாகவும் இருந்தது. டாக்டர்களும், நர்சுகளும் தனித்தனி குழுவாகப் பிரிந்து உட்கார்ந்து கொண்டு தங்களுக்குள் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். எனக்கு நன்கு அறிமுகமாகிருந்த நர்சுகளையும், டாக்டர்களையும் அணுகி அப்பாவின் நிலையைக் கூறினேன். அனுதாபத்துடன் கேட்டுக் கொண்டனர். ‘உங்கள் நிலைமை புரிகிறது சார். இதோ, இந்த பிரச்சனையை தீர்த்துவிட்டு வந்து விடுகிறோம்’ என்றனர். ‘டாக்டர் கோசலன் எங்கே?’ என்று விசாரித்தேன். ‘வீட்டிற்கு போயிருக்கிறார், அரைமணி நேரத்தில் வந்து விடுவார்’ என்றனர்.

நான் விசாரித்து முடிக்கும்வரை மூதாட்டி என்னுடனே இருந்தார். பின் என் கைகளை பற்றி பல வரிசைகளாகப் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் இருக்கைகள் இருந்த வரவேற்பறைக்கு அழைத்துச் சென்று, என்னை உட்கார வைத்து தானும் அமர்ந்து கொண்டார்.

‘நான் அறைக்குப் போக வேண்டும், அப்பா தனியாக இருக்கிறார்’ என்றேன்.

‘நோயாளி கூடவே இருப்பதும், விலகி இருப்பதும் சந்தர்ப்ப சூழ்நிலையைப் பொறுத்துச் செய்ய வேண்டியது’ என்றார் மூதாட்டி.

‘இப்போது நான் இருக்க வேண்டியது அவசியம்’ என்றேன்.

‘உன் அப்பா பிழைத்துக் கொள்வார்’ என்றார் மூதாட்டி.

‘எப்படிச் சொல்கிறீர்கள்?’ என்று கேட்டேன்.

‘என் அனுபவ ஞானத்தால் இங்கே நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்து சொல்கிறேன். மருந்து சூழல் உன் அப்பாவை விட்டு தானாக விலகி இருக்கிறது. நல்லது நடக்கப் போகிறது. நீ பதட்டப்படாமலிரு’ என்றார் மூதாட்டி.

‘நான் அவர் பிள்ளை. அப்பா பிழைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் கூட இருப்பது என் கடமை’ என்றேன்.

‘உன் மனம் மேற்பரப்பில் மட்டும் அப்படி நினைக்கிறது. அவ்வளவுதான் என்று டாக்டர் சொன்னதைத்தான் உன் மனம் உண்மை என நம்புகிறது. இந்த நேரத்தில் நீ அவர் கூட இருக்கக் கூடாது’ என்றார் மூதாட்டி.

கோசலன் வர நேரமாகும். வேறு டாக்டரோ, நர்சோ வரப்போவதில்லை. அப்பாவிற்கு என்னால் என்ன சிகிச்சை தர முடியும்? இந்தப் பெண்மணி சொல்வது உண்மையாக இருந்துவிட்டு போகட்டுமே.

‘தம்பி, நான் அறுபது வருஷங்களாக ஆன்மிக சக்தி என்னவெல்லாம் செய்கிறது என்று பார்த்து வருகிறேன். நோயை அது தீர்க்க வேண்டுமானால், பல விஷயங்கள் ஒத்துழைக்க வேண்டும். பலதரப்பட்ட ஆன்மிக சக்திகள் உண்டு. அவற்றின் வீச்சும், தீவிரமும் முக்கியம். நோயாளியின் நம்பிக்கை, ஆன்மிக சக்திக்கு வாசலைத் திறந்து வைக்கும். அவருக்கு வைத்தியம் பார்ப்பவருக்கு சக்தியிடம் நம்பிக்கை இருந்தால் உடனே பலன் தெரியும். இல்லையென்றால் மெல்ல பலன் தெரியும். நோயாளி இருக்கிற சூழலும், அவரை சுற்றி இருக்கிறவர்கள் மன நிலையும் வாழ்வா, இல்லையா என்பதை முடிவு செய்யும். நோயாளிக்கும், அவர் கூட இருப்பவருக்கும் இடையே உள்ள உறவு, அதிலிருக்கும் நுட்பங்கள் என்னவெல்லாம் செய்யும் தெரியுமா!’ என்றார் மூதாட்டி.

‘கூட இருப்பவர்கள் என்ன செய்து விடப் போகிறார்கள்?’ என்று கேட்டேன்.

‘நோயாளி பலவீனமாக இருப்பார். அவரை சுற்றி இருப்பவர்கள்தான் பொதுவாக நோயாளிக்குக் குணமாவதை துரிதப்படுத்துவார்கள் அல்லது தள்ளிப் போடுவார்கள். நோயாளி கூட நாமிருப்பதும், இல்லாமலிருப்பதும் முக்கியமல்ல. நம் மனநிலை, நம்பிக்கை எப்படி இருக்கிறது என்பதுவே முக்கியம். என் கொள்ளுப்பேரன் சரியாகப் படிக்க மாட்டான். பள்ளிக்கூடம் போகப் பிரியப்பட மாட்டான். மூன்று நாள் காய்ச்சல் வந்தது. வீட்டில் அத்தனை பேரும் அவனை கவனித்தார்கள். ‘எப்போது சரியாகிறதோ அப்போது பள்ளிக்கூடத்திற்குப் போனால் போதும், படிப்பு முக்கியமில்லை. நீதான் முக்கியம்’ என்றார்கள். தான் முக்கியஸ்தன் ஆகிவிட்டது பேரனுக்குப் புரிந்து விட்டது. உடனே காய்ச்சல்மீது பிரியம் வந்துவிட்டது. ஒரு மாதமாகியும் குணமாகவில்லை. அதைத்தான் என் வீட்டு மனிதர்களிடம் சொல்லிவிட்டு வந்தேன்’ என்றார் மூதாட்டி.

அவர் என்ன சொன்னபோதும், கொஞ்சம் கலக்கமாகத்தான் இருந்தது.

‘யோக சக்திமீது நம்பிக்கை இருக்கிறது. ஆனால், நமக்கோ, நம் குடும்பத்தினருக்கோ ஏதாவது பிரச்சனை வந்தால் படபடப்பு வந்துவிடுகிறது’ என்றேன்.

‘வெள்ளத்தில் சிக்கிய படகு போல மனம் பயத்தில் அல்லாடும். பயப்படாதே’ என்றார் மூதாட்டி.

படகு. படகோட்டி. குகன். தேன். மீன். என்கொல் திருஉளம்! மனம் அமைதியடைந்தது. அப்பாவை பிரம்மத்தின்முன் வைத்து என்கொல் திருஉளம் என்று மனதிற்குள் மீண்டும் மீண்டும் சொன்னேன். என் தோளை கோசலன் லேசாக தட்டியபோது விழித்துக் கொண்டேன். ‘என்னைத் தேடினாயாமே. என்ன விஷயம்?’ என்று கேட்டார்.

கோசலனிடம் அப்பாவின் நிலைமையைப் பற்றி சொன்னேன். ‘மாமாவை நீ விட்டுவிட்டு வந்து அரைமணி ஆகிவிட்டது. எல்லாம் முடிந்திருக்கும். ஆனால், கடைசி நேரத்தில் நீ கூட இருக்காமல் இங்கே ஏன் உட்கார்ந்திருக்கிறாய்?’ என்றார்.

திரும்பிப் பார்த்தேன். மூதாட்டி புன்னகைத்தார்.

‘அப்பாவோடு தனியாக இருக்க பயமாக இருந்தது. நீ என்னோடு வந்து அவரைப் பார்க்க முடியுமா?’ என்று கோசலனிடம் கேட்டேன்.

சற்று யோசித்துவிட்டு ‘நான் மட்டும் வேலை செய்தால் சங்கத்தில் கருங்காலி என்று கேலி செய்வார்கள். தேவையில்லாத பிரச்சனை’ என்றார்.

‘டாக்டர்கள் சங்கம் வைக்கலாமா?’ என்று கேட்டேன்.

‘கூடாதுதான். ஆனால் வைத்திருக்கிறோமே!’ என்ற கோசலன் ‘நீ மேலே போயிரு. நான் யாருக்கும் தெரியாமல் வருகிறேன்’ என்றார்.

மூதாட்டியிடம் விடை பெற்றுக் கொண்டு மேலே சென்று நான்காவது மாடியில் படிக்கட்டு அருகே காத்திருந்தேன். சிறிது நேரத்தில் கோசலன் சத்தமில்லாமல் படியேறி வந்தார். ‘நல்ல வேளை, யாரும் என்னை பார்க்கவில்லை’ என்றார். அவரோடு அப்பாவின் அறைக்குள் நுழைந்தேன்.

அப்பா படுக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்து செய்தித் தாளைப் புரட்டிக் கொண்டிருந்தார். குழாய்களும், மருந்து குப்பிகளும், அவற்றை தாங்கும் கம்பிகளும் அகற்றப்பட்டு ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்தன.

டாக்டர் கோசலன் என்னைப் பார்க்க, நான் அப்பாவைப் பார்த்தேன்.

‘பொறுப்பில்லாமல் எங்கே போய்விட்டாய்? உன்னை வெகு நேரமாகக் காணோமே என்று பயந்து கொண்டிருந்தேன். உனக்கு ஒன்றுமில்லையே?’ என்று கேட்டார் அப்பா. குரல் தெளிவாகவும், பலமாகவும் இருந்தது.

‘டியூபுகளை எடுத்தது யார்?’ என்று கேட்டேன்.

‘நீ அனுப்பி வைத்த நர்சுதான். பெயர் என்னவோ சொன்னாளே. மறந்து விட்டேன்’ என்றார் அப்பா.

‘நான் யாரையும் அனுப்பவில்லையே! எல்லோரும் வேலை நிறுத்தம் செய்கிறார்கள். கோசலன் மட்டும்தான் அறைக்கு வர சம்மதித்தார்’ என்றேன்.

அப்பா சிரித்தார். ‘கோசலன், இவன் தன்னை ஞாபகசக்தி நிபுணன் என்று சுயபெருமை பேசி மற்றவர்களுக்கு வழி சொல்கிறான். ஆனால் சொந்த வாழ்க்கையில் சின்ன விஷயங்களைக் கூட மறந்து விடுகிறான்!’ என்றார்.

நாற்காலியில் அமர்ந்த கோசலன் ‘மாமா, என்ன நடந்தது என்று விவரமாகச் சொல்லுங்கள்’ என்றார்.

‘கொஞ்ச நேரத்திற்கு முன்னால் எனக்கு மூச்சு விட சிரமமாக இருந்தது. இந்தக் கிறுக்கு பயலோ இளவயதுப் பெண்ணைப் பார்ப்பது போல நிலாவைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். அப்புறம் என் தோள்களைப் பிடித்து முரட்டுத்தனமாக உலுக்கினான். என்ன தோன்றியதோ என்னை அப்படியே விட்டு விட்டு வெளியே ஓடிப் போய்விட்டான். பத்து நிமிஷம் ஒரே வலி, வேதனை. அப்போது ஒரு சின்ன பையன் வந்தான். ‘போகலாமா’ என்று கேட்டான். அவன் வாய்விட்டு கேட்கவில்லை. எனக்கு அப்படி தோன்றியது. ‘அவசரகோலத்தில் எப்படி போகமுடியும்? பிள்ளைகளில் ஒருவருக்கு கூட இன்னும் கல்யாணம் பண்ணி வைக்கவில்லை. மனைவிக்கு எதிர்காலத்திற்கென்று எந்த ஏற்பாடும் செய்யவில்லை. அதெல்லாம் கூட பரவாயில்லை. வீட்டுக்கடனை இன்னும் கட்டி முடிக்கவில்லை. கட்டாமல் போனால் கடன்காரர்கள் கேவலமாக பேசுவார்கள்’ என்று நினைத்தேன். அந்த சின்ன பையன் ஒன்றும் சொல்லாமல் போய்விட்டான். ‘சரி, இன்னும் கொஞ்ச நாளாகட்டும்’ என்று அவன் சொன்னது போலவும் இருந்தது’ என்றார் அப்பா.

‘எந்த பக்கமாக வந்தான்? எப்படி போனான்? பணம், பொருள் எல்லாம் பத்திரமாக இருக்கிறதா?’ என்றார் கோசலன்.

‘அதையெல்லாம் கவனிக்கும் நிலையிலா நானிருந்தேன்?’ என்றார் அப்பா.

‘நிர்வாகியிடம் சொல்லி பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும். மாமா, நீங்கள் மேலே சொல்லுங்கள்’ என்றார் கோசலன்.

‘அதன்பின் ஒரு இளம்பெண் வந்தாள். வந்தவள் என் பக்கத்தில் நின்று சிறிது நேரம் என் முகத்தை பார்த்துக் கொண்டே இருந்தாள். ‘இறந்து விடுவோம் என்று பயமாக இருக்கிறதா?’ என்று கேட்டாள். ‘அதெல்லாம் இல்லை. ஆனால் சில கடமைகள் இருக்கின்றன’ என்று திக்கி திணறி சொன்னேன். ‘உங்கள் உடம்பு சரியாகும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?’ என்று கேட்டாள். ‘இருக்கிறது’ என்றேன். ‘அப்படியானால் சரி’ என்று சொல்லிவிட்டு எல்லா டியூபுகளையும் எடுத்து விட்டாள். என் வயிற்றில், அறுவை சிகிச்சை செய்த இடத்தில் கைவைத்து சிறிது நேரம் அழுத்தினாள். எல்லா வலியும் போய்விட்டது. கொஞ்ச நேரம் நெஞ்சை தடவிக் கொடுத்தாள். சரியாக மூச்சு விட முடிந்தது. என் கையை பிடித்து தூக்கி விட்டாள். என்னால் எழுந்து உட்கார முடிந்தது’ என்றார் அப்பா.

‘குழந்தைகள் வாசிக்கும் தேவதை கதையில்தான் இப்படி நடக்க முடியும்’ என்று என்னிடம் மெல்லிய குரலில் கூறினார் கோசலன்.

‘ஆனால் நடந்ததாக அப்பா சொல்கிறாரே’ என்றேன்.

‘அந்தப் பெண் ‘நன்றாக சாப்பிட வேண்டும். அதுதான் உங்களுக்கு மருந்து’ என்றாள். ‘நான் சாப்பிட தயார்தான். டாக்டர் அனுமதிக்கவில்லையே. எனக்கு நோய் வருவதற்கு முன்பே வீட்டில் ‘வயதாகிறது. சாப்பாட்டை குறைக்க வேண்டும்’ என்று சொல்லி பட்டினி போட ஆரம்பித்து விட்டார்கள்’ என்றேன். ‘இன்றிலிருந்து நீங்கள் நன்றாக சாப்பிடலாம்’ என்று கூறிவிட்டு தன் பையிலிருந்து ஒரு டிபன் பாக்ஸ் எடுத்தாள். அதில் அன்னம், காரமீன் குழம்பு, நாட்டு கோழி வறுவல் இருந்தன. ‘எல்லாம் உங்களுக்குத்தான்’ என்றாள். ஒரே மூச்சில் சாப்பிட்டுவிட்டேன். அருமை, அருமை! இப்படி ஒரு சுவையான உணவை நான் இதுவரை சாப்பிட்டதே இல்லை’ என்றார் அப்பா.

‘அது எப்படி சாத்தியம்? ஒரு வாய் கூட உள்ளே போயிருக்க வாய்ப்பில்லை’ என்றார் கோசலன்.

நான் அப்பாவின் உள்ளங்கையை முகர்ந்து பார்த்தேன். சோப்பு வாசனை வந்தது. ‘மீன் குழம்பு சாப்பிட்டதாக சொன்னீர்களே’ என்றேன்.

‘காரமீன் குழம்பு! மருத்துவமனையில் எதற்கு மீன்வாசம் என்று நினைத்து சாப்பிட்ட பின் சோப்பு போட்டு கழுவி விட்டேன்’ என்றார் அப்பா.

‘அவள் வேறென்ன சொன்னாள்?’ என்றார் கோசலன்.

‘என்னென்னவோ சொன்னாள். மறந்து விட்டேன். ‘நோயைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தால், நோய் தீர நாளாகும். இனிமேல் மருந்து, நோய் பற்றி நினைக்கவோ, பேசவோ வேண்டாம். நினைப்பதென்றால் சத்துணவு, ஆரோக்கியத்தை பற்றி மட்டும் நினைத்தால் போதும்’ என்றாள். அவள் வந்து போன பின் இந்த அறையே வேறு மாதிரி ஆகிவிட்டது. அவள் போட்டிருந்த ரோஜாப்பூ சென்ட் வாசனை இப்போது கூட வருகிறது!’ என்றார் அப்பா.

‘எனக்கு டெட்டால் வாசம் வருகிறது’ என்றார் கோசலன்.

‘எனக்கு பினாயில் வாசம் வருகிறது’ என்றேன்.

‘அவள் டாக்டரா, நர்சா?’ என்று கேட்டார் கோசலன்.

‘தெரியவில்லையே! சின்னப் பெண்தான். மிக லட்சணமானவள். தங்க பார்டர் போட்ட வெள்ளை பட்டு சேலை கட்டியிருந்தாள். டாக்டர்கள் என்றால் வெள்ளை கோட்டு போட்டு அதட்டி பேசுவார்கள். வெள்ளை கோட்டு போடாமல் இனிமையாகப் பேசினாள். அதனால் நர்ஸ் என்று நினைத்துக் கொண்டேன்’ என்றார் அப்பா.

‘வேறென்ன பேசினீர்கள்?’ என்று கேட்டேன்.

‘என்னென்னவோ பேசினோம். எல்லாம் மறந்துவிட்டது. போகும்போது ‘அன்பளிப்பு எதுவும் கிடையாதா?’ என்றாள். ‘எனக்கு பெண் குழந்தை இல்லை. நீதான் இனி என் மகள். என்னிடம் இருக்கும் எல்லாமே உனக்குத்தான்’ என்றேன். ‘உடம்பு சரியாகும் வரைதான் என் நினைப்பிருக்கும். அப்புறம் என்னை நினைக்கவா போகிறீர்கள்?’ என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டுப் போய்விட்டாள்’ என்றார் அப்பா.

‘கோசலன், இங்கே பல நோயாளிகள் இருக்கிறார்கள். அவர்களில் வேறெவரையோ கவனிக்க அனுப்பப்பட்டவள் அறைமாறி வந்து விட்டாளோ?’ என்றேன்.

‘அது நடக்க சாத்தியமுண்டு. ஆனால் மாமா எழுந்து உட்கார்ந்து பேசுகிறாரே! இது நடக்க சாத்தியமே இல்லையே?’ என்றார் கோசலன்.

‘ஆனால் நடந்திருக்கிறதே’ என்றேன்.

எனக்கு மட்டும் கேட்கும் மெல்லிய குரலில் கோசலன் பேசினார். ‘என் அறிவிற்கு தெரிந்தவரை இது நடக்க உளவியல் நோக்கில் ஒரே ஒரு சாத்தியம் உண்டு. அளவற்ற துன்பம், அழுத்தம் ஏற்படும்போது மனிதனின் ஆழ்மனக் கற்பனைகள், பிம்பங்கள், ஆசைகள் வெளியே வருகின்றன. குழப்பத்தில் இருக்கும் மனிதன் தன் கற்பனையால் உண்டான பிம்பங்களைக் கண்டு நிகழ்ச்சிகள் நிஜமாகவே நடப்பதாக நினைத்துக் கொள்கிறான். அது போன்ற சந்தர்ப்பங்களில் அவனுக்குள் அசாதாரணமான படைப்பூக்கமும், பலமும் உண்டாகும்.’

‘எந்த சிறு குழந்தையும் இது போன்ற கற்பனை கதைகளை உண்மையாக நடந்தது போல சொல்லும்’ என்றேன்.

‘ஆமாம். அது போன்ற பலத்தினால்தான் உளுத்துப்போன, ஒன்றுமே இல்லாத உடலை வைத்துக் கொண்டு மாமா தெம்பாக நிமிர்ந்து உட்கார்ந்திருக்கிறார். மனோமயக்கத்தில் அவரேதான் டியூபுகளைக் கழற்றி இருக்கிறார். கன்னடத்து இளம்பெண் வந்து குணப்படுத்தி விட்டுப்போனதாக சொல்கிறார். ஆனால் அவரால் ஒரு ஆதாரமும் தர முடியவில்லை. இந்த உளவியல் காரணத்தை தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை. இன்னும் சிறிது நேரத்தில் விழுந்து விடுவார். எதுவும் சாப்பிடவும் முடியாது. எல்லாம் முடிந்து விடும்’ என்றார் கோசலன்.

‘அங்கே என்ன ரகசியம்? கோசலன் ஏதாவது அன்பளிப்பு கேட்கிறானா?’ என்று கூறி உரக்க சிரித்தார் அப்பா.

‘கேட்டாலும் உங்களால் கொடுக்க முடியாதே! எல்லாவற்றையும் உங்கள் புதிய தத்துப் பெண்ணுக்கு கொடுப்பதாக சொல்லி விட்டீர்களே!’ என்றார் கோசலன்.

மீண்டும் உரக்க சிரித்தார் அப்பா. ‘நான் பெற்ற மூன்றுமே வெற்றுத் தடியர்கள். பெண் குழந்தை இல்லை என்று எத்தனையோ வருடங்களாக நானும், இவன் அம்மாவும் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறோம். பையன் என்பதால் தகப்பன் மூச்சுக்கு திணறும்போது அப்படியே விட்டுவிட்டுப் போய் விட்டான். இதுவே பெண் என்றால் அப்படிச் செய்திருப்பாளா? பெண்பிள்ளை பெண்பிள்ளைதான்’ என்றவர் தொடர்ந்து ‘பக்கத்துத் தெருவில் புதிதாக ஒரு ஒட்டல் வந்திருக்கிறதாம். கொத்து பரோட்டாவும் மட்டன் சால்னாவும் பிரமாதமாக இருக்கிறதாம். இந்த பத்திரிக்கையில் செய்தி வந்திருக்கிறது’ என்றார்.

ஏதோ சிந்தனையுடன் ‘என்னால் நம்ப முடியவில்லை’ என்றார் டாக்டர் கோசலன்.

‘என்னாலும் நம்ப முடியவில்லைதான். நம்மை விடவா ஓட்டல்காரன் நன்றாக சமைத்து விடப் போகிறான்? ஆனால் எதையும் சாப்பிட்டுப் பார்த்தால்தான் ஒரு முடிவிற்கு வர முடியும். இந்த கன்னடத்து பெண்ணை சமையலுக்கு வைத்து ஒரு ஒட்டல் ஆரம்பித்தால், அவளுடைய காரமீன் குழம்பிற்காகவே வியாபாரம் பிரமாதமாக நடக்கும்’ என்றார் அப்பா.

‘என்னால் நம்பவே முடியவில்லை’ என்றார் கோசலன்.

நான் அப்பாவையே பார்க்க ‘எனக்காக சொல்லவில்லையப்பா. நேரமாகிறதே. நீயும், கோசலனும் நல்லதாக ஏதாவது சாப்பிடுங்களேன் என்ற அர்த்தத்தில்தான் சொன்னேன்’ என்று சமாளித்தார் அப்பா.

‘சரி’ என்றேன்.

பின் அப்பா ‘அசைவம் சாப்பிட்டால், வாழைப்பழமும், பீடாவும் சாப்பிட வேண்டும். ஜீரணத்திற்கு நல்லது என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். பெட்டிக்கடைவரை கொஞ்சம் நடைபோட்டு விட்டு, அவற்றை வாங்கி வந்து விடுகிறேன்’ என்றார்.

‘நான்காவது மாடியிலிருந்து இறங்கப் போகிறீர்களா?’ என்று கேட்டேன்.

‘ஏன்? எனக்கென்ன கேடு?’ என்று கேட்டுக் கொண்டே கட்டிலிலிருந்து இறங்கினார் அப்பா.

அடுத்து வந்த ஒரு வாரமும் அப்பா நன்றாக சாப்பிட்டார். நாளுக்கு நாள் தெம்பு அதிகரித்தது. பெட்டிக்கடையில் பழமும், பீடாவும் வாங்க தினமும் நான்கு மாடிகள் தனியாக ஏறி இறங்கினார்.

டாக்டர் கோசலன் ‘என் உளவியல் விளக்கம் தவறாகிவிட்டது. அதனால் மாமா கூறுவது சரி என்றாகி விடாது. அவர் சொல்லும் பெண்ணை நேரில் பார்த்தால் மட்டுமே அவள் உண்மையில் இருக்கிறாள் என என்னால் நம்ப முடியும். அதுவரை மாமா சொன்னதை மயக்க நிலையில் உண்டான கற்பனை என்றுதான் நினைப்பேன். எப்படி சாப்பிடுகிறார், எப்படி ஜீரணமாகிறது என்பதை தலைமை டாக்டர்தான் விளக்க வேண்டும்’ என்று கூறி விட்டார்.

தலைமை மருத்துவர் ‘இந்த கேசை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. வீட்டிற்கு அனுப்பி விடுங்கள்’ என்று கூறி சிகிச்சையிலிருந்து விலகிக் கொண்டு விட்டார்.

ஒரு வாரத்திற்குள் அப்பா பூரண நலம் பெற்று வீடு திரும்பி விட்டார். அதன்பின் அப்பா பல வருடங்கள் உயிரோடு இருந்தார். சில மாதங்களுக்குள் அப்பா விருப்ப ஓய்வு பெற்று, போராட்டத்திற்குப் பின் ஓய்வூதியமும் வரத் தொடங்கி விட்டது. நாளெல்லாம் அலையும் சுயதொழில் செய்து வந்தார். கடுமையாக உழைத்தார். உடல் ஒத்துழைத்தது. எல்லாக் கடன்களும் அடைக்கப்பட்டு விட்டன. அம்மாவிடம் தங்க நகைகளும், வங்கியில் வைப்புத் தொகையும் சேர்ந்தன. பிள்ளைகள் அனைவரும் சுய சம்பாத்தியத்தில் வாழத் தொடங்கி விட்டோம். அண்ணனுக்கு அப்பா திருமணம் நடத்தி வைத்தார்.

ஒரு விஷயம்தான் இன்னமும் விடையில்லாப் புதிராக இருக்கிறது.

அப்பா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியபின், அவர் குறிப்பிட்ட உணவு விடுதியிலிருந்து பல வருடங்கள் வாரந்தவறாமல் அவருக்கு கொத்து பரோட்டாவோடு மட்டன் சால்னாவை நான் வாங்கித் தர நேர்ந்தது. அவற்றை அவர் முற்றத்தில் உள்ள தனது சாய்வு நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்து சாப்பிடும்போது ‘இதென்ன வயிறா, அரவை யந்திரமா’ என்று அம்மா கோபித்துக் கொள்வார். அதைப் பொருட்படுத்தாமல் ‘அவள் தந்த காரமீன் குழம்பு, நாட்டுக் கோழி வறுவலுக்கு எதுவும் ஈடாக முடியாது’ என்று பாராட்டிக் கொண்டே அவர் மட்டன் சால்னாவில் பரோட்டா துண்டை புரட்டித் தோய்த்து சாப்பிடுவதை பார்க்கும்போதெல்லாம் அன்று உண்மையிலேயே அப்படி ஒரு பெண் வந்திருந்தாளோ என்ற சந்தேகம் தோன்றத்தான் செய்தது. யாரவள்?

(முற்றும்)

*********



book | by Dr. Radut