Skip to Content

11. அன்பர் அனுபவம்

அன்பர் அனுபவம்

அன்னை கேட்காமலேயே கொடுப்பவர்; கேட்பதற்கு அதிகமாகவும் கொடுப்பவர்.

“அன்னையை நினைத்த பிறகு நீ சாமான்ய மனிதன் இல்லை. நீ அன்னையின் ஒளியை உன்னில் சுமந்து நிற்கின்றாய்”.

தூய்மையான மனத்துடன் தியானம் செய்யச் சென்றால், உனக்குத் தேவையானவற்றை நீ கேட்காமலேயே அன்னை கொடுக்கின்றார். உனக்குக் கேட்கத் தெரியாதவற்றையும் அன்னை கருணையோடு வழங்குகின்றார்.

நீ அன்னையின்மீது முழு நம்பிக்கை கொள்வதால், முன்கூட்டியே அந்தக் காரியத்தை நல்ல விதமாகப் பூர்த்தி செய்ய வேண்டிய சூழ்நிலையை அவர் தோற்றுவிக்கின்றார்.

“நேரம் வந்துவிட்டது” என்று கூறுமாப்போலே நிலவரத்தைத் தலைகீழாக மாற்றி, உனக்குச் சாதகக் கதவைத் திறந்துவிட்டு, உன் வாழ்க்கையில் ஒளி ஏற்றுகிறார்.

மேற்கண்டவை ஸ்ரீ கர்மயோகி அவர்களின் ‘அன்னையின் தரிசனம்’ என்ற நூலில் ‘உன்னைத் தேடி வரும் அன்னை’ என்ற கட்டுரையின் வரிகள். இதற்குச் சான்றாக சிதம்பரம் மாரியப்பா நகர் தியான மைய அன்பர் திரு. கண்ணன் அவர்கள் பகிர்ந்து கொண்ட அனுபவம்.

அன்பரது வீட்டிற்கு பக்கத்துவீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் திருமண வயதை நெருங்கியவர். பெற்றோர் இல்லாத நிலையில் தம் உறவினர் அரவணைப்பில் வளர்பவர். அவ்வப்போது அன்பரது வீட்டிற்கு வந்து அவரது மனைவியுடன் அளவளாவுவது வழக்கம்.

அன்பருக்கு அன்னை அறிமுகமாகி, மையத்தில் ஞாயிறு தோறும் நடைபெறும் தியானக் கூடலுக்கு அவரும் அவரது மனைவியும் கலந்துகொள்ளச் செல்வதைக் கவனித்த அந்த பக்கத்து வீட்டுப்பெண், அன்பரது மனைவியிடம் பின்பொரு சந்தர்ப்பத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் எங்குச் செல்கிறீர்கள் எனக் கேட்டார். விபரம் அறிந்து தன்னையும் அடுத்த தியானக்கூடலுக்கு அழைத்துக்கொண்டு போகுமாறு கூறினார்.

அடுத்து வந்த ஞாயிறன்று, அன்பரின் மனைவிக்கு வீட்டில் வேலையிருந்ததால், அன்பர் மட்டும் தியானக் கூடலுக்குச் செல்வதாக உத்தேசம்.

அன்பர் புறப்பட யத்தனிக்கும்போது, பக்கத்துவீட்டுப் பெண் தான் கூறியபடி தியானக்கூடலில் கலந்துகொள்ளத் தயாராக வந்து நின்றார். அன்பருக்கு அப்பெண்ணைத் தனியே அழைத்துப் போக தர்மசங்கடம். மனைவியோ, நான் வரவில்லையென்றால் என்ன, அவளை காரின் பின் சீட்டில் அமர்த்தி அழைத்துச் செல்லுங்களேன் என்றார். அவ்வாறே அன்பரும் பக்கத்து வீட்டுப் பெண்ணும் அன்று தியான மையக் கூடலுக்குச் சென்றனர்.

தியான மையத்தில், அப்பெண்ணை பொறுப்பாளர்களிடம் அன்பர் அறிமுகப்படுத்தினார். அப்பெண்ணும் தியானக்கூடல் ஏற்பாடுகளில் கலந்துகொண்டு மலர்கள் அடுக்குவதில் உதவிபுரிந்தார். வீடு திரும்பிய பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. யாரோ உறவினர் சிலர் வந்து போனதை வீடு அறிவித்தது.

தியானக்கூடல் முடிந்து இல்லத்திற்கு வந்த அன்பருக்கு அவரது மனைவி அந்தச் சந்தோஷமான விஷயத்தைச் சொன்னார். நீங்கள் அந்தப் பெண்ணைத் தியானக்கூடலுக்கு அழைத்துச் சென்றிருந்த-பே õது, அவள் உறவினர் வாயிலாக அவளுடைய விபரம் அறிந்து, தற்செயலாக வரன் தேடி அந்த நேரத்தில் சம்பந்தம் பேச ஒரு குடும்பத்தினர் வந்திருந்தனர். பெண் தியானக்கூடலுக்குச் சென்றிருக்கும் விபரம் அறிந்ததும், அவளைக் கூப்பிட வேண்டாம் எனச் சொல்லி, பெரியவர்கள் மட்டும் கலந்து பேசிவிட்டனர். சம்பந்தம் முடிந்துவிட்டது என்றே நினைக்கிறேன். பெரிய பணக்கார குடும்பம். ஒரே பையன் என்றார்.

பின் நிச்சயமும் ஆகி, திருமணமும் நடந்தேறியது. ஒரே பையன் என்பதால் வீட்டையும் சொத்துக்களையும் அவளே நிர்வாகம் செய்யும் உரிமையும் பெருமையும் அவளைத் தேடி வந்து சேர்ந்தது கேட்காமலேயே அன்னை அவளுக்கு அளித்த வரம். தாயற்ற பெண்ணுக்கு தாயாக அவளைத் தேடி வந்து அவளுக்குத் தேவையானதைக் கேளாமலேயே தரும் அன்னையின் அளப்பறிய கருணையை அன்பரும் வியந்து உணர்ந்தார்.

அன்னையின் தரிசனம் நூலில் அதே கட்டுரையின் முடிவான வரிகளே நம்மைப் போன்ற அன்பர்களுக்கு சத்தியவாக்கான பற்றுக்கோடு:

‘அன்பனே, அன்னை உன்னைத் தேடி வருகின்றார். அவரை நீ பூரணமாக ஏற்றுக்கொள். அவரது அருளொளியில் திளைத்து, அன்பெனும் பிடிக்குள் அடங்கி, வாழ்வை ஒளிமயமாக மாற்றிக்கொள். வாழ்வு வருகின்றது, பெற்றுக் கொள்; வளம் வருகின்றது, வாங்கிக்கொள்’.

************



book | by Dr. Radut