Skip to Content

காவிய இதழ்கள்

சாவித்திரி

பகவான் ஸ்ரீ அரவிந்தர் பிறவியிலேயே ஒரு கவி. ஆங்கிலம் தவிர வேறு எந்த மொழியையும் அவர் தீவிரமாகப் பயின்றதில்லை. தாய்மொழியான வங்காளத்தையும் பிற்காலத்திலேயே கற்றுக் கொண்டார் என்பதால் ஆங்கிலமே அவருக்குத் தாய்மொழிபோல் அமைந்தது. எனவே சிறு வயது முதல் அவர் இயற்றிய செய்யுள்கள், காவியங்கள், நாடகங்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே உருவம் பெற்றன. இருளை விழுங்கும் ஒளி என்ற கருத்து ஆரம்ப காலத்திலிருந்தே அவரைக் கவர்ந்த கருத்து. மனித ஹிருதயத்திலிருந்து எழும் தெய்வீக அன்பு மரணத்தை வெல்லக்கூடியது என்ற கருத்தை அவர் பாராட்டினார். பகவான் மேற்கொண்ட பூரண யோகம், உலகில் மரணத்தை அழிக்கும் இலட்சியத்தைக் கொண்டது. ஒருவருடைய உயர்வு உலகைக் காப்பாற்றும் என்பது அவர் கொள்கை. பூரண யோகத்தை மேற்கொண்டு சத்திய ஜீவிய லோகத்தை அடைந்து மரணத்தை வெல்லும் சக்தியை அங்கிருந்து உலகுக்குக் கொண்டு வரமுடியும். அதுபோல் சில யோகிகள் சாதித்தால் அதன் மூலம் உலகத்திலேயே மரணத்தை அழித்துவிட முடியும் என்பது அவர் கொள்கை.

இந்தத் தத்துவத்தை விளக்கிப் பெருநூலாக Life Divine என்ற புத்தகத்தை 1920இல் எழுதி முடித்தார். ஆன்மீகத் தத்துவத்தை அறிவு ஏற்கும் வாயிலாக எழுதப்பட்ட நூல் இது. யோகமாக இதை மேற்கொண்டு சாதனையாக ஒருவர் இத்தத்துவத்தைப் பின்பற்றுவது எப்படி என்று Synthesis of Yoga என்ற நூலையும் 1920இல் எழுதி முடித்தார். இரு நூல்களும் சொல்வது ஒன்றே, ஒன்று தத்துவ வியாக்கியானம். மற்றது யோகப் பயிற்சி முறை. இந்நூல்களில் உள்ள தத்துவம், யோகம் ஆகியவற்றை மந்திரங்களாக மாற்றி காவிய வடிவில் சாவித்திரி என்ற பேரிலக்கியத்தை நெடுங்காவியமாக இயற்றினார். தத்துவம் விளங்கினால்தான் புரியும். விளங்காவிட்டாலும் அவர் எழுத்திலுள்ள மந்திர சக்திக்கு மற்ற பலன்கள் உண்டு. யோகம் பயின்றால்தான் பலன் தரும், பயிலாவிடினும் படித்தால் தியானம் வரும். அவர் எழுத்துகளிளுள்ள ஆன்மீக சக்தி, மந்திர சக்தியைவிட உயர்ந்தது என்பதால் அவர் யோகநூலைப் படித்தால், யோகம் பயிலாவிட்டாலும் மற்ற பலஆன்மிக உயர்வுகளான மௌனம், சாந்தி, ஜோதி, ஆனந்தம் ஆகியவை கிடைக்கும். சாவித்திரி காவியம் முறையாகப் பயின்றால் யோகம் பூர்த்தியாகும். சாதாரணமாகப் படித்தாலும் பகவானுடன் ஜீவனுள்ள தொடர்பைப் பெறலாம்.

1914இல் எழுதத் தொடங்கிய பகவான் 1920இல் எழுதுவதை முடித்துவிட்டார். அவருடைய பெரிய படைப்புகள் அனைத்தும் அதற்குள் ஆர்யா என்ற பத்திரிகையில் தொடராக வெளிவந்துவிட்டன. சாவித்திரியை மட்டும் 1950 வரை எழுதிக்கொண்டேயிருந்தார். 1900இல் முதல் வடிவம் பெற்ற இக்காவியம் பல நூறு மாற்றங்களைக் கடந்து 1950இல் முடிவு பெற்றது. தொடர்ந்து, இடையறாது பகவான் எழுதிய நூல் சாவித்திரி மட்டுமே. தம்முடைய பூரண யோகத்தில் அடுத்த அடுத்த கட்டங்களுக்குப் போக காவிய உருவத்திலுள்ள சாவித்திரியை ஒரு கருவியாகக் கொண்டதாக அவர் கூறுகிறார். பிரபலமடைந்த பேராசிரியர்கள் ஏராளமான எண்ணிறந்த நூல்களை வெளியிடுவதுண்டு. ஆனால் அவற்றுள் ஒரு புத்தகமே முக்கியமாகக் கருதப்படும். இந்தப் பல புத்தகங்களை எல்லாம் தம் எண்ணத்தை உருவாக்குவதற்குக் கருவியாகக் கொண்டேன் என்று அது போன்ற அறிஞர்கள் கூறுவதுண்டு. பகவான் தம் யோகம் சித்திபெற சாவித்திரியைக் கருவியாகக் கொண்டேன் என்கிறார்.

மஹாபாரதத்திலில்லாதது உலகத்தில் இல்லை என்பது வழக்கு. சாவித்திரியில் இல்லாதது இனி உலகத்தில் சிருஷ்டியாகப் போவதில்லை என்பது அன்னையின் அபிப்பிராயம். சத்தியவான் சாவித்திரி கதை மஹாபாரதத்திலுள்ளது. அதை நேரடியாக அதே கருத்தையும் கொள்கையும் ஏற்றுக்கொண்டு பகவான் எழுதவில்லை. தம் பூரண யோகத்தின் கருவை விளக்க மூலக்கதையைத் தகுந்தவாறு பகவான் மாற்றிக் கொண்டிருக்கிறார். சுருக்கமாக, பாரதத்தில் உள்ளவற்றை அளவு கடந்த நீளத்தில் மாற்றிய உருவத்தில் எழுதியிருக்கின்றார். சுமார் 1000 மடங்கு நீளத்தை வளர்த்திருக்கின்றார். பாரதத்தில் அஸ்வபதி உன்னதமான அரசன், புத்திரபாக்கித்திற்காக 18 ஆண்டுகள் தவமிருந்து சாவித்திரி எனும் தெய்வத்தைத் தரிசித்துச் சந்தானபாக்கியம் பெறுகிறான். சுமார் 10 வரிகளில் இது பாரதத்தில் சொல்லப்படுகிறது. பகவானுடைய காவியத்தில் அஸ்வபதி மனித குலத்தின் ஆன்மீகப் பிரதிநிதி. உலகம் இதுவரை மேற்கொள்ளாத இலட்சியங்களை மேற்கொண்டு, அவற்றைப் பெற யோகத்தை மேற்கொள்கிறார்.

ஸ்ரீ அரவிந்தர் சத்தியவான் சாவித்திரி கதையை ஆன்மீக நோக்குடன் பார்த்து வேத இரகஸ்யம் பொதிந்துள்ள கதை இது எனக் கருதினார். ஜீவனின் ஆன்மீகச் சத்தியத்தைத் தாங்கிவரும் ஆன்மாவாக அவர் சத்தியவானைக் கணித்தார். சாவித்திரி சூர்ய புத்ரி; பரம்பொருளின் தேவி அம்சம்; உலகை இரட்சிக்க அவதாரம் எடுத்தவர். தூமத்சேனா சத்தியவானின் தகப்பனார். ஒளிமயமான மனம் ஒளியை இழந்து, அதன் பிரதிபலிப்பாகப் பார்வையை இழந்து, இராஜ்யத்தைப் பறிகொடுத்து, நிற்கிறார். ஒளியின் உற்பத்தி ஸ்தானம் ஒளியை இழந்து, அதனால் வலிமை இழந்ததன் அறிகுறி சத்தியவானின் தகப்பனார். அஸ்வபதி அஸ்வத்திற்கு அரசன் (Life of the Horse ) இவர் தவத்தின் தலைவன். ஆன்மீகக் கனலாக எழுந்து மேலுலகங்களை எட்ட முயலும் தபஸ்வி இவர்.

இவை பூவுலகத்தின் ஆன்மிக நிலை. அதை வர்ணிக்கும் வகையில் பாத்திரங்களை ஸ்ரீ அரவிந்தர் உருவாக்கியுள்ளார். கரு பாரதத்திலுள்ளது. பாரதத்தில் கொடியாக இருந்த ஒன்றை சாவித்திரியில் அகண்ட ஆலமரமாக பகவான் சிருஷ்டித்து இருக்கிறார். தபஸ்விகள் நெடுநாட்களாக மோட்சத்தைப் பெற்று மோட்சலோக வெற்றியை அடைந்துள்ளனர். பூமாதேவியையும் தம் அடையாளமான மனித உடலையும் அவர்களால் தொடமுடியவில்லை. சொர்க்கமும், பூவுலகமும் ஒன்றே. பூவுலகிலேயே சொர்க்கத்தை அனுபவிக்க முடியும். உடல் ஆன்மீகத்திற்கு விலக்கன்று. உண்மையில் உடல் ஆன்மீகத்திற்கு விளக்கு என்பன போன்ற பூரணயோக இலட்சியங்களை நிறைவேற்ற பகவான் சாவித்திரி எனும் காவியத்தை ஒரு வாயிலாகக் கொண்டார். இவையெல்லாம் நடக்காது என்று முடிவாகத் தெரிந்து மனிதனுக்கு இவை நடக்கும் என்ற நம்பிக்கை வேண்டும். அந்த நம்பிக்கை ஒளியை அளிக்கவே ஸ்ரீ அரவிந்தர் முனைந்தார். இவை நடக்கலாம் என்று அவர் அறிவிக்க முன்வரவில்லை. இவை நடந்தே தீரும் என்பதை தம்மை நாடிய சாதகர்களுக்கு ஆன்மீக உள்ளுணர்வில் அறிவுறுத்தினார். உலகத்தின் சூட்சுமச் சூழலில் அப்பெரு நம்பிக்கையை நிலை நாட்டினார்.

எதிர்காலம் சொர்க்கலோக எழில் நிறைந்தது என்பதை விழிப்படைந்த ஆன்மாவின் சூட்சுமப் பார்வைக்குக் காட்டினார். 'முதல் நாள், தாம் ஆன்மீக அனுபவமாகப் பெற்றதை மறுநாள் பகவான் சாவித்திரியின் பாகமாக எழுதியிருக்கின்றார்' என்று அன்னை ஒரு சமயம் கூறுகிறார். ஒவ்வொரு முறை சாவித்திரியைப் படிக்கும் பொழுதும் புதியதாக ஒன்றைக் காணலாம் என்றும் கூறுகிறார். மனத்தைத் தெளிவாக வைத்துக் கொண்டு படித்தால் சாவித்திரியின் முழுப்பலனை அடையலாம். எண்ணங்கள் அற்ற மனமே தெளிவான மனமாகும். யோகம் செய்பவர்கள் மனத்தைச் சாவித்திரியில் பதித்துப் படித்தால் யோகத்தின் அடுத்த கட்டத்திற்குச் சாதகனை அழைத்துப் போவது தெரியும் என்கிறார் அன்னை.

மேல்நாட்டு மரபுப்படி இதிகாசங்கள் கதையின் நடுவில்தான் ஆரம்பிக்கும். அதையொடடி ஸ்ரீ அரவிந்தருடைய காவியமும் சத்தியவானுடைய மரணத்துடன் தொடங்குகிறது. அன்றாடம் உதிக்கும் சூரியனை அன்று உலகத்திற்கு ஒரு புது சூரியோதயமாகக் கருதி முதற்காண்டத்தை ஆரம்பிக்கின்றார். அதிலிருந்து சாவித்திரியின் தகப்பனாரான அஸ்வபதியின் யோகத்திற்குப் போகிறது காவியம். உலகம் இருளிலிருந்தும், மரணத்திலிருந்தும் விடுபட அஸ்வபதி யோகம் செய்கிறார். முதற்கட்டத்தில் கரணங்களின் தளைகளிலிருந்து அஸ்வபதி விடுபடுகிறார்.

ஜடத்திலிருந்து எழுந்து மேல்நோக்கிச் சென்று பிராணன், மனம், ஆகியவற்றை எட்டி மேலும் தொடர்ந்து தம் யோகப் பாதையின் பிரயாணத்தை அஸ்வபதி தொடர்கின்றார். தமக்காக மேற்கொண்ட யோகமில்லை இது. உலகத்தின் பிரதிநிதியாகத் தாம் மேற்கொண்ட தவம் இது என்பதும், வாழ்க்கையை உதறித் தள்ளிச் செய்யும் யோகம் இல்லை என்பதும் அவருக்குப் புரிகிறது. வாழ்க்கையின் சிக்கலும், உடலின் இருளும் அழிய மனித மனம் சத்திய ஜீவியமாக மாறி, இறைவனின் சுபாவத்தை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிந்து, நம்பிக்கையுடன் அஸ்வபதி யோகத்தை மேலும் தொடர்கிறார்.

முடிவில் அன்னை தரிசனம் கிடைக்கின்றது. கிடைத்த பெறும் பேற்றை ஏற்று மனம் நிம்மதியடைய வேண்டும் என தரிசனம் தந்த அன்னை (Divine Mother) அஸ்வபதிக்கு உபதேசம் செய்கிறார். மனிதனும்,பூவுலகமும் அனந்தனையும், சத்தியத்தையும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை என்று அன்னை விளக்கம் அளிக்கின்றார், 'சத்தியம் பூவுலகில் இன்று வந்துவிட்டால் பூவுலகம் தாங்காது, நொறுங்கிப் போகும்' என்றும் கூறுகிறார். தெய்வீக அன்னையின் அசரீரி வாக்கு அமுதம் அஸ்வபதிக்கு ஏற்றுக்ககொள்வதாக இல்லை. யுக யுகமாக உழன்ற மனிதப் பிறவியின் பிரதிநிதியல்லனோ அஸ்வபதி? தான் பெற்ற பேறு அஸ்வபதிக்கு திருப்தியளிக்கவில்லை. மனிதனால் பெற முடியாத ஒன்றை, தெய்வமே மனம் உவந்து கொடுத்தாலும் பெற்று அனுபவிக்கத் திறனில்லாத மனிதனை அன்னை புறக்கணிக்கக் கூடாது, தம் அருளால் அவனை அணைத்துக் கொள்ள வேண்டும். அவனை அணைத்துக் கொள்ள அன்னை அருள் வடிவமாகப் புவிக்கு வரவேண்டும் என்று அஸ்வபதி உருக்கமாகச் செய்த பிரார்த்தனை அன்னைக்கு ஏற்புடையதாக இருந்தது. அருள் அவதாரம் எடுக்கும் என ஆசீர்வதிக்கின்றார்.

'உன் குரலைக் கேட்டேன், பரம்பொருள் உன்னை நாடி வரும், இறுகிய தளைகள் உடையும், மனம் விரிந்து உலகை தன்னுள் கொள்ளும், தெய்வம் திருநடனம் புரிந்து மண்ணில் உலவும், மரணத்தைத் தாண்டி மனிதன் செல்வான், விதியை வெல்லும் வரம் பிறக்கும்' என்றார் அன்னை.

மேல்நாட்டு இலக்கியச் சட்டப்படி இதிகாசம் 12 புத்தகங்களை உடையது. பகவான் சாவித்திரியை முதலில் எழுதிய பொழுது 14 வரிகளில் முடித்துவிட்டார். காலப் போக்கிலும், யோக எழுச்சியாலும் 1950இல் அவர் முடிக்கும் பொழுது 12 புத்தகங்களாக காவியம் நிறைந்தது. மேற்சொன்ன சட்டத்துடன் முதல் இரு புத்தகங்கள் முடிகின்றன.

மூன்றாம் புத்தகம் அஸ்வபதியின் யோகத்தை மேலும் வர்ணிக்கின்றது. இதில் மூன்றாம் காண்டம் (Adoration of the Divine Mother) அன்னைக்குரியது. அடுத்த புத்தகம் சாவித்திரியின் பிறப்பையும், குழவிப் பருவத்தையும் விளக்குவதாகும்.

வளர்ந்தபின் பருவம் எய்தி தகப்பனாருடைய ஆசியுடன் கணவனைத் தேடி சாவித்திரி பரிவாரங்களுடன் புறப்படுகிறாள். சத்தியவானைக் காட்டில் சந்திக்கின்றாள். இந்த 3 காண்டங்களும் இலக்கிய நயத்தில் உலக இலக்கியங்களின் சிகரத்தைத் தாண்டியவை. அன்பின் மென்மை, உணர்வின் பவித்திரம், உடலையும், உள்ளத்தையும், உயிரையும் கடந்த உன்னத இலட்சியம், அது தனக்கேயுரியதைப் பெற்று பூரணத்தில் பூர்த்தி பெறுவது. ஆகியவை பரம்பொருள் உலகில் மனித உருக்கொண்டு தன் சிருஷ்டியை அடுத்த கட்டத்திற்கு வெற்றிகரமாக எடுத்துச் சென்று தன்னை தன் சிருஷ்டியில் அடுத்த உயர்ந்த கட்டத்தில் பூர்த்தி செய்து பெறும் நிறைவாகும். சத்தியவானுக்கு மாலை இட்டு, அவன் பாதங்களைத் தொட்டு சாவித்திரி நிறைகிறாள்.

அடுத்தது விதி. இரு காண்டங்களையுடையது இந்த ஆறாம் புத்தகம். துன்பத்தின் நிலைகளை விளக்கும் பகுதியிது. தீமையின் பிறப்பு, இறப்பு இங்கு பேசப்படுகின்றன. சாவித்திரி தனக்கென விதிக்கப்பட்ட கணவனைத் தேர்ந்தெடுத்துவிட்டாள். அவள் வாழ்வு பூரணம் பெற்றது. அரண்மனைக்கு வந்து பெற்றோருக்கு நடந்ததை அறிவிக்கின்றாள். என் பிராணன், பிராணபதியைக் கண்டது. என் மனம் ஏற்றுக் கொண்டது. தெய்வத் திருவுள்ளம் என்னில் பூர்த்தியாகிவிட்டது. முடிவான முத்திரை விழுந்து முடிந்துவிட்டது என்றறிவிக்கிறாள் சாவித்திரி. அஸ்வபதியின் திருஷ்டியில் சத்தியவான் தோன்றுகிறான். அவனுருவத்தின் மீது கரிய இருள் படர்ந்துள்ளது. பேரொளி ஒன்று தோன்றி கரிய இருளை விரட்டுகிறது. தளர்ந்த மனம் அஸ்வபதிக்கு மலர்ச்சி அடைகிறது. சாவித்திரியின் தாயார் கிலேசம் அடைகிறாள். நாரதர் அங்கு வருகிறார்.

உங்கள் ஞான திருஷ்டியால் என் மகளின் எதிர்காலத்தை எங்களுக்குச் சொல்ல வேண்டும் என இறைஞ்சுகிறாள் ராணி. சத்தியவானும சாவித்திரியும் சந்தித்தது சொர்க்கமும் உலகமும் சந்தித்ததாகும் என்று நாரதர் விளக்குகிறார். அத்துடன் சத்தியவானுக்கு ஆயுள் ஒரு வருஷ காலத்தில் முடிவதையும் கூறுகிறார். தாயார் கலங்கிவிட்டாள். சாவித்திரியின் மனதை மாற்ற முயல்கிறாள். மலையிலிருந்து எழுந்த நதி தன் கதியை மாற்றி மீண்டும் மலையை நோக்கிப் போகப் போவதில்லை. சாவித்திரி தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. இறைவனின் இதயத்தில் எழுதப்பட்ட ஒப்பந்தம் இது என்பதை சாவித்திரி அறிவிக்கின்றாள். மனித முகத்தில் இறைவன் மலர்ந்ததைத் தான் சத்தியவான் திருமுகத்தில் கண்டது சத்தியம் என்கிறாள் தெய்வத்தாயின் அவதாரமான சாவித்திரி. இன்றைய உலகம் இருக்கும் நிலையில் கல்லிலிருந்து சிலை செய்ய அதைச் செதுக்கியே செப்பனிட வேண்டும் என்பது போல் துன்பம் மனித வாழ்வில் தவிர்க்க முடியாது என்று நாரதர் ராஜமாதாவிடம் கூறுகிறார். உலகத்தைத் துன்பத்திலிருந்து விடுவிக்க வந்த அவதாரங்களும் அத்துன்பத்திலிருந்து தப்ப முடியாது என்பதை நாரதர் விளக்குகின்றார்.

சாவித்திரியின் தாயார் விதியிலிருந்து மகள் தப்புவது எப்படி என்று கவலையுறுகிறாள். விதியை மாற்ற சாவித்திரியால் முடியுமா என அஸ்வபதி நாரததைக் கேட்கிறார். 'தன்னுடைய விதியையும், அதன் மூலம் உலகத்தின் துன்பதையும் மாற்றும் ஆன்மீக ஆற்றல் சாவித்திரிக்குண்டு என்று நாரதர் பதில் இறுக்கின்றார். அது சாவித்திரியால் மட்டுமே முடியும் என்றும் கூறுகிறார். இதுவரை 24 காண்டங்கள் முடிகின்றன. அஸ்வபதியின் தவத்தின் நிலைகளை விளக்குபவை அவை. இனிவரும் 25 காண்டங்களும் அஸ்வபதியின் தவத்தை மனித வாழ்வில் சாவித்திரி பூர்த்தி செய்ததை விளக்குபவையாகும். அஸ்வபதியின் தவமும், சாவித்திரியின் வெற்றியும் பகவான் ஸ்ரீ அரவிந்தரின் பூரணயோகத்தின் வர்ணனைகளாகும். இந்த இரண்டாம் பகுதி

அன்னையின் யோகம் பூர்த்தியடைந்த பல நிலைகளை விளக்குவதாகும். அன்னை ஸ்ரீ அரவிந்தரின் யோகப் பாதையை விளக்கும் நூல் சாவித்ரியாகும். சாவித்திரியின் அடிகள் காவியத்தின் வரிகள் மட்டுமல்ல. அவை அன்னாரின் யோக அடிச்சுவடுகளாகும். அதனுள் மனிதன் தன் உள்ளுணர்வின் பிம்பத்தைத் தவறாது காணலாம். அதனால்தான் மனம் கலங்கியபொழுது சாவித்திரியை எடுத்து சில நிமிஷம் தியானித்து, திறந்து பார்த்தால் நம் மனநிலையைப் பிரதிபலிக்கும் வரிகளை நாம் காண்பது. ஒரு தொழிலதிபர் இக்கட்டான நிலையில் சாவித்திரியைப் பிரித்தபொழுது தம் கண்ணில்பட்ட வரியில் தம் தொழிலின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதைக் கண்டு பிரமித்தார். சாவித்திரியை இதுபோல் திறந்து பார்த்தால், எதிர்காலத்திற்கு வழிகாட்டியாக அமையும். அது சத்தியாவாக்கு. அத்துடன் அருளைக்கொடுத்து நம் அபிலாஷையைப் பூர்த்தி செய்யும்.

சாவித்திரிக்குப் பெற்றோர்கள் ஆசீர்வாதத்துடன் புதுவாழ்வு ஏற்பட்டு சத்தியவானுடைய மனைவியாக அவள் வாழும் வாழ்வு ஒவ்வொரு நிகழ்ச்சியையும் புனிதம் பவித்திரமடைந்ததாகச் செய்கிறது. விதிக்கப்பட்ட நாள் நெருங்குகிறது. தெய்வ அவதாரமானாலும், மனித உடலைத் தாங்கியிருப்பதால் விதிக்கு விலக்கன்று. மனம் தளர்ந்து, சோர்ந்து நிற்கிறாள் சாவித்திரி. அது சமயம் அவளது ஜீவனின் சிகரத்திலிருந்து ஒரு குரல் எழுந்து, அவளுடைய அவதார நோக்கத்தை நினைவுபடுத்தி, மனித குலத்தைச் சாவித்திரி கைவிடக்கூடாது என்றும், முழுமூச்சோடு யன்றால் சாவித்திரியால் விதியை வெல்ல முடியும் என்றும் கூறுகிறது.

தளர்ந்த மனித மனம், தயக்கமிழந்து, தாயின் சொல்லை ஏற்றுத் தன் புனிதயாத்திரையை உள்ளுறை லோகங்களில் ஆரம்பிக்கின்றது. அவையெல்லாம் அனந்தனின் இடம் என நாம் அறிந்துள்ளோம். அங்கிருந்து எழும் குரலைத் தெய்வத்தின்

ஆணையாக ஏற்கும் பாங்கு நம்மிடையேயுள்ளது. மனித உலகம், உள்ளுறை உலகமானாலும் நம் இலட்சிய எண்ணத்தை ஏற்பதாக இருப்பதில்லை. அவற்றேக்கேயுரிய அமைப்புகள் அங்குள்ளன. உள்ளுறை இராஜ்யங்களிலும் நல்லதும், கெட்டதும் கலந்தேயிருக்கும். பகுத்துணரும் தெளிவு மனிதனுக்குத் தேவை. அது இல்லாதவன் தீய சக்திகளுக்குப் பலியாவான் என்பது திண்ணம். மகாத்மா காந்தியை நினைத்து இன்றைய காங்கிரஸை நாடினால் ஏமாற்றமடைவோம். பிரதமந்திரியின் அலுவலகத்திற்கு உயர் தனிச் சிறப்புண்டு. எனினும் அங்குள்ள ஆபீஸர்களிலும் நல்லவர் யார், கெட்டவர் யார் என நாம் பிரித்துப் பார்க்க வேண்டும். ஸ்தாபனம், தோற்றம், இலட்சியம் வேறு; மனநிலை, உண்மைநிலை, ஸ்தாபனம் வேறு. எந்த உயர்ந்த ஸ்தாபனத்திலும் எந்த மட்டமான மனிதனும் இடம் பிடித்துக் கொள்வதுண்டு. பெரிய இடமாயிற்றே என்று நினைத்தவன் வெகுளியாக ஏமாற்றப்படுவான். இது உலகத்து நிலை. இதில் ஏமாந்தவர் அநேகர். தப்பித்தவர் சிலர். பூவுலகத்திலுள்ள இந்நிலைக்கு நிகரான ஆன்மீக நிலை உள்ளுறை லோகங்களிலும் உண்டு. சாவித்திரியின் யாத்திரை நீண்டது. முதல் நிலையில் 3 தேவிகள் எழுந்து சாவித்திரியுடன் உரையாடுகிறார்கள். அவை பிரபஞ்சத்தின் தெய்வங்கள். மனித வாழ்வை இன்று நிர்ணயித்துக் கொண்டுள்ள ஆன்மீக ஜீவன்கள். அன்புக்குரிய தெய்வம் ஒன்று; வலிமைக்குரியது அடுத்தது; ஞானச்சுடர் மூன்றாவது. ஒளிபிழம்பாக அவை காட்சியிக்கின்றன. ஒவ்வொரு தேவியும் சாவித்திரியின் ஆத்மா எனக் கூறுகிறது.

சாவித்திரியின் எண்ணம் பலிக்காது. (Divine Mother ) அன்னையின் அருளைச் சாவித்திரி பெற முடியாது. அது உலகில் நடக்காது. உலகம் அதற்குத் தயாராக இல்லை என்று இந்த மூன்று தேவிகளும் சாவித்திரிக்கு அறிவுறுத்துகின்றன. ஒவ்வொன்றும் தாமே முழுமுதற் கடவுள் எனவும் கூறுகின்றன. உலகத்தின் இன்றைய நிலையை அவை விவரித்து, இலட்சியம் பலிக்காது எனத் தெளிவுபடுத்துகின்றன. சாவித்திரி அசையவில்லை. நீ என்

ஆத்மாதான். ஆனால் என் ஆத்மாவின் ஒரு பகுதியே என ஒவ்வொரு தேவியிடமும் சொல்லிவிட்டு, சாவித்திரி மேலே செல்கிறாள்.

அதன் பிறகும் சிருஷ்டியின் இருள் அவளைத் தொடர்கிறது. சூன்யமான இருளில் சாவித்திரி நுழைய வேண்டியிருக்கிறது. ஆன்மீக ஒளிமுன் சூரியன் கருப்பாகத் தெரிவான். ஆன்மீக இருள்முன், நள்ளிரவு ஒளி நிறைந்ததாக இருக்கும் என்பது அன்னையின் விளக்கம். சூன்யமும், இருளும் சேர்ந்த உலகை சாவித்திரி அடைகிறாள். அவள் வலுவிழந்து, தெம்பிழந்து, சோர்ந்து, சருகாக மாறுகிறாள். இந்நிலையில் ஒரு புது உணர்வு சாவித்திரியைத் தீண்டுகிறது. இலட்சியத்தை எட்டிவிட்டதாக ஓர் உணர்வு, அதனால் ஒரு நிறைவு. அது ஆனந்தமயமான நிறைவாக இருக்கின்றது. இந்நிலையில் அவளது சைத்தியப் புருஷன் (psychic being) வெளிப்பட்டு அத்துடன் சாவித்திரி கலந்துவிடுகிறாள். அசையாத அழிவற்ற ஆன்மாவும், போராடும் மனித ஜீவனும் சந்தித்து இரண்டறக் கலந்தன என்கிறது காவியம். அடுத்தாற்போல் குந்தளினி எழுகிறது. பூரணயோகத்தில் சக்தி. மேலிருந்து கீழ்நோக்கி வந்து ஆறு சக்கரங்களையும் ஒன்றன்பின் ஒன்றாகத் திறந்து புதுப்பிக்கின்றது. பொதுவாக யோகத்தில் குந்தளினி மூலாதாரத்திலிருந்து புறப்பட்டு நாபி, இதயம், தொண்டை, புருவம், தலை ஆகிய இடங்களிலுள்ள சக்கரங்களை எழுப்பி, கடைசியில் சகஸ்ரதளத்தில் இறைவனுடன் கலந்த விடும்.

சாவித்திரியின் அனுபவம் பூரண யோக சித்தி என்பதால் சக்தி, மேலிருந்து கீழ்நோக்கி வருகிறது. சொர்க்கத்தை நம்முள்ளே அமைத்தோம். உடலை ஆனந்தமயமாக்கினோம். வேறென்ன வேண்டும். மேலும் வேண்டுமா? என கவி அந்நிலையை வர்ணிக்கிறார்.

உயர்ந்த தெய்வம் உறையும் இடம் ஒன்று ஏற்பட்டது. ஒருவர் சிறப்பு உலகை உய்விக்கும். வானத்தை எட்டிப் பிடித்துவிட்டோம்,

காலத்தின் அடிமை கடவுளுக்கு இடம் அளித்து விட்டான்,

என்ற கருத்துப்பட பகவான் இந்த வெற்றியை விளக்கியுள்ளார். சாவித்திரியினுள் திருவுருமாற்றம் தொடங்குகிறது. உலகை உய்விக்கும் கருவியாக அவள் உருவாகிவிட்டாள். சிருஷ்டி இதைக் கண்டு கொண்டு ஆனந்தக் கூத்தாடுகிறது. சாவித்திரியின் அன்றாடச் செயல்களில் தெய்வீகப் பொலிவு மிளிருகின்றது. சத்தியவான் மீதுள்ள மனைவியின் அன்பு, தெய்வச் சாயல் பெறுகிறது. எனினும் இதுவே முடிவன்று.

இத்தனையும் நடந்தபின் ஒரு நாள் ஒரு பயங்கரக் குரல் எழுந்து நானே மிருத்யு, நானே காளி, நானே மாயை, என் மூச்சுப்பட்டால் மனிதன் கருகிவிடுவான் என்று எக்காளமிட்டது.

வேறொரு குரலும் எழுந்து ஒலித்தது. மனித ஜீவன் பரம்பொருளினின்று விலகியுள்ளவரை மரணத்திலிருந்து தப்ப முடியாது. தான் எனும் அகந்தையை அழித்து பரம்பொருளுடன் ஐக்கியமானால் மரணம் அழியும், மேலும் தொடராது என்று அக்குரல் உபதேசிக்கின்றது. சாவித்திரி அதை ஏற்றுக்கொள்கிறாள். தன்னுள் உள்ள அனைத்தும் தன்னைவிட்டுப் போகின்றன. விடுதலை நாடி வருகிறது. உருவமும் தன்னைவிட்டகல்கிறது. நிர்வாண அனுபவம் என்றழைக்கப்படும் இந்த யோக சித்தி சாவித்திரிக்குக் கிட்டியது.

விதிக்கப்பட்ட வேளை நெருங்குகிறது. பழைய பயம் இல்லை. ஆழ்ந்த நிலையில் மனம் அமைதியாக இருக்கின்றது. பெண்மை நிறைந்த மனைவி, சக்தியாக மாறி ஆன்மீகப் பொக்கிஷமாக விட்டாள். பெரிய யோக சித்தி எனினும் இது சூன்ய நிலையேயாகும். அதனால் இதுவே முடிவான நிலையில்லை. ஒரு நாள் இது மாறி பரம்பொருளின் பூரணம் சாவித்திரியை ஆட்கொள்கிறது.

P.3 The darkness failed and slipped like a falling cloak from a reclining body of a God. இருள் தோல்வியுற்றது, தெய்வத்தின் உடலிலிருந்து நழுவிவிழும் ஆடைபோல் இருளின் திரை உலகினின்று விலகுகிறது

வேதத்தில் உஷைக் காலம் என்பதை இப்பகுதி விவரிக்கிறது. இறைவன் இருளாக மாறியபின் இருளால் புதைந்துள்ள ஒளி வெளிவர முயல்வதையும், அம்முயற்சியின் ஆனந்தத்தையும் அனுபவிப்பதற்காகவே இறைவன் சிருஷ்டித்தான் என்பது ஸ்ரீஅரவிந்தரின் லீலை என்ற தத்துவம்.

Child is the father of Man என்பது ஆங்கிலச் செய்யுளின் ஒரு வரி. தாயார் குழந்தை கற்பதைப் பொன்போலப் போற்றுகிறார். தகப்பனார் குழந்தையின் மழலையை ரசிக்கிறார். குழந்தை பேசுவது அனைத்தும் நாம் குழந்தைக்குக் கற்றுக் கொடுத்ததாகும்.

  • குழந்தை என்பது நம்முடைய சிறு உருவம்.
  • நாமறிந்த அனைத்தையும் குழந்தைக்குக் கற்பிக்க முயல்கிறோம். ஓரளவு குழந்தை கற்றாலும் நாம் சந்தோஷப்படுகிறோம், பெருமிதப்படுகிறோம்.
  • குழந்தையின் கல்வி முடியும் நிலையில் நம்மை விட அதிகமாகக் குழந்தை அறிகிறது.
  • நம்முடைய அறிவைக் குழந்தையினுள் ஒளித்து வைத்துள்ளோம். அது வெளிப்படுவதைக் காணும் ஆனந்தம் பேரின்பம்.
  • அதைப்போல் இறைவன் தன்னை நம்முள் ஒத்துவைத்து, அதைக் கட்டாயமாக வெப்படுத்தும் திறனை இழந்து

தானே மனிதனினின்று தெய்வம் வெளிப்படுவதை (பரிணாமம்) கண்டு ஆனந்தப்படுகிறான்.

  • மனிதன் தன் குழந்தையிடம் பெறும் இன்பத்தை இறைவன் மனிதனிடம் காண்கிறான்.
  • "சாவித்திரி'' காவியம் அந்த உஷைக்(விடியல்) காலத்தில் ஆரம்பிக்கிறது.
  • இருள் திரை விலகுவதுபோல் விலகும் நிகழ்ச்சியை மேற் சொன்ன வரிகள் குறிக்கின்றன.

இந்தப் பக்கத்தில் இறைவனின் ஸ்பரிசம் எதையும் சாதிக்கும், மறைபொருளின் பொலிவின் பெருமை, வழி தவறிய அற்புதம் இடமின்றி தவிப்பது, காலத்தின் நெஞ்சில் கனியும் நினைவு போன்ற கருத்துகள் உள்ளன. மகாபாரதச் சாவித்திரி எமனிடமிருந்து சத்தியவானை மீட்டாள். ஸ்ரீஅரவிந்தரின் சாவித்திரி எமனை இருளிருந்து ஒளியாக மாற்றி, உலகில் மரணத்தை அழித்தாள். சாவித்திரியின் எந்தப் பகுதியும் இந்த மையக் கருத்துடன் தொடர்புள்ளது. சாவித்திரி எந்த ஆன்மீக முயற்சியை - தவம் - எமனிடம் மேற்கொண்டாளோ, அதே போன்ற முயற்சியை மனிதன் வாழ்வில் மேற்கொண்டால், எமனை, சாவித்திரி ஒளிமயமாக்கியது போல் அன்பன் வாழ்வை அதிர்ஷ்டமயமாக்க முடியும்.

இறைவனின் ஸ்பரிசம் எதையும் சாதிக்கும்.

என்ற வரி இக்கருத்தைக் கூறுகிறது. இறைவனின் ஸ்பரிசத்தைப் பெறுவதெப்படி? மனிதன் அடுத்த மனிதனில் இறைவனைக் காண்பது இறை தரிசனத்தைவிடப் பெரியது. மனித உறவில் நாம் அடுத்தவரை - இறைவனை - இதமாகவும், இனிமையாகவும் தீண்டினால் இறைவனுடைய ஸ்பரிசத்தை நம் இதயம் பெறும்.

நல்லெண்ணத்தால் மட்டும் நிரம்பிய மனம் இறைவனுக்குரியதாகும்.

*****

P. 4 Obeyed the unforeseeing instant's urge, எதிர்பாராத உந்தலை ஏற்கும் மனிதன்,

மனிதன் தன்னை அறியாதவன், தன் வாழ்வு ஆழத்திற்குரியது எனத் தெரியாதவன். தன்னையேயறியாதவன், தன் ஆழத்தை அறிய முடியாது. அவன் உந்தல்கள் அனைத்தும் உற்பத்தியாவது அவ்வாழ் மனதில், அவற்றை அவனால் மீறமுடியாது.

ஒரு திசையில் செல்லும் மனிதனை ஆழத்து உந்தல்

அடுத்த திசைக்கு இழுக்கும்பொழுது தன்னை மீறி

அதை மனிதன் ஏற்பது அவன் அன்றாட வாழ்வு நிலை.

மனிதன் மனத்திற்குரியவன். மனம் இரு பகுதிகளாலானது. நாமறிவது மேல் மனம், நம் எண்ணங்களும், ஆர்வங்களும் அங்குள்ளன. அவற்றையே முடிவாக நாம் ஏற்கிறோம். கல்லூரி மாணவன் வாழ்க்கை அவன் வீட்டிற்குரியது. ஹாஸ்டலுக்குரியதன்று. ஹாஸ்டல் வாழ்வே முடிவானது என நினைக்கும் மாணவனைப் போன்றது மனித வாழ்வு. ஹாஸ்டலில் கட்டும் கோட்டைகளை வீட்டிலிருந்து வரும் ஒரு கடிதம் தகர்க்கும். வீடு நிலையானது, ஹாஸ்டல் தற்காலிகமானது. வீட்டிலிருந்து எழும் உத்தரவுகளை மாணவன் எதிர்பார்ப்பதில்லை, வந்தால் மறுக்கமுடியாதபடி ஏற்றுக்கொள்கிறான். மேல் மனத்தில் வாழும் மனிதன் ஆழ்மன உந்தல் எழுவதை எதிர்பார்ப்பதில்லை. வந்தால் தவிர்க்க முடியாதவை என ஏற்று அதன்படிச் செயல்படுகிறான். இது சம்பந்தமான கருத்துகளை, சாவித்திரி விவரிக்கிறது.

  • கண் மூடித்தனமான வாழ்வின் சுழல்கள்.
  • விதியின் கதியைத் தாங்கும் மனிதன்.
  • தெரியும் வழிகளின் தெளிந்த அழகு.
  • நீர்க் குமிழின் நித்தியானந்தம்.
  • மனித வாழ்வுக்குப் புறம்பான புனிதம்.
  • ஆழ்ந்துறையும் ஆன்மாவின் அமைதி.
  • மனத்தைத் தட்டி எழுப்பும் அறை கூவல்.
  • ஆசையின் மாயை அறிவிக்கும் வண்ணங்கள்.
  • இதயத்தின் இனிமை உணர்வுக்குப் புறம்பு.
  • தெய்வத்தின் வருத்தம் தேங்கிய இதயம்.
  • நித்தியத்தை வெல்லும் அநித்தியம்.
  • காலமென்னும் படுகுழியில் சிறு அசைவு.

P. 4 And buried its seed of grandeur in its hours அற்புதங்களின் வித்தை தாங்கிவரும் காலத்தின் பகுதிகள்.

தனித்திருந்து மனிதன் சிந்திக்கும்பொழுது எழுவது கற்பனை. இறைவனின் கற்பனை இயற்கையாக மாறியதைத் தத்துவம் காலம் என்கிறது. நான்கு அங்குல டிஸ்க்கில் 30,000 பக்க கலைக் களஞ்சியம் கம்ப்யூட்டரால் அச்சிடப்பட்டுள்ளது இன்றைய விஞ்ஞான சாதனை.

உலகத்தின் அற்புதங்களை இறைவன் காலத்துள்

வைத்துள்ளான்

என்பது மேற்கூறிய வரியின் கருத்து. ஜோஸ்யரிடம் போனால் நம் பிறந்த நாளைக் கேட்கிறார். நேரத்தைக் கூறுகிறோம். அவர் கட்டம் போட்டு நாள், நட்சத்திரம், லக்னம், ராசி, திசை என ஆயிரம் விவரங்களை எழுதுகிறார். அவர் கணக்கு முடிந்தபின் நாம் கூறிய நாள், மணி இவ்விரண்டிலிருந்து நம்முடன் பிறந்தவர், பெற்றவர்கள், நாம் வாழ்க்கைப்பட்டவர், நமக்குப் பிறந்தவர், செய்த தொழில், இனி செய்யப் போகும் தொழில், இதுவரை வாழ்வில் நடந்தவை, இனி நடக்கப் போகும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் கூறுகிறார். மேலும் அவரால் போன ஜென்மத்தையும், அடுத்த ஜென்மத்தையும் சொல்லமுடியும்.

நாம் கூறிய சிறு விவரங்களினின்று அவர் நம் உலகையே அறிந்து பேசமுடிகிறது என்றால் அந்த நேரம் என்ற ஒரு விஷயத்தில் வாழ்வு என்ற கடல் மறைந்துள்ளது. இந்த நேரம் நாம் பிறந்த நேரம்.

காலத்தின் நாழிகை இறைவன் பிறக்கும் நேரமாகும்.

  ஜோஸ்யர் நம் வாழ்வை அறிவார். ரிஷி நேரத்தில் இறைவன் ஜாதகத்தைக் காண்கிறார். அதுவே மேலே எழுதப்பட்ட காவியத்தின் வரியாகும். இதையொட்டி எழுந்த சித்திரங்களை பகவான் ஸ்ரீ அரவிந்தர் பலவகைகளாக எழுதுகிறார்.

  • வானமெனும் திரையில் வண்ணமெனும் எழுதுகோல் எழுதிய சூத்திரம்.
  • மறை பொருளான இலட்சியத்தின் சிறு குறிப்பான அற்புதம்.
  • அனந்தனின் மையத்தில் தெரியும் ஆனந்தத்தின் வதனம்.
  • தூரத்து இன்பத்தின் தூய உருவம்
  • காலத்தைக் கடந்த உலகிலிருந்து வரும் காலத்தின் தூதன்
  • நட்சத்திரங்களின் நடுநிலை வழுவாத கதி இயற்கையின் காதில் ஒலிக்கும் அவள் அடிச்சுவடுகளின் ஒலி
  • புவியின் மோனம் பூத்தெழுந்த புனிதம்
  • மனத்தின் எண்ணம் தெய்வவரமாகும் யோக சமர்ப்பணம்.

***

P .8. Yet only has outward self suffered and above மேல் மனம் மட்டுமே வாடி வதங்கியது

ஸ்ரீ அரவிந்தர் துன்பத்தைப் புதிய கோணத்தில் விளக்குகிறார். துன்பம் என நாமறிவது இன்பமே. ஆழ்மனம் விரும்பி நாடும் இன்பத்தை மேல் மனம் துன்பம் என்கிறது என்பது பகவான் விளக்கம்.

  • உடலை நோயினின்று குணப்படுத்த நாமே விரும்பி மருந்துண்டாலும் அது கசக்கிறது
  • பல நூறு மைல் கடந்து வந்து மலை ஏறினாலும் கால் அளவுகடந்து வலிக்கிறது.
  • வசதியற்ற பெற்றோர் பெரிய படிப்பில் மக்குப் பையனை விரும்பி, சிரமப்பட்டுச் சேர்த்து விட்டபின் படிக்க அவன் படும்பாடு பெரியது, பணமனுப்ப அவர் படும் பாடு அதனினும் பெரியது.

இது போன்ற நிகழ்ச்சிகளை நாமறிவோம். இவை நம் அனுபவத்திற்குட்பட்டவை. போன ஜென்மத்தில் அரசனாய் பிறந்தவன், அடுத்த ஜென்மத்தில் ஆண்டியாகப் பிறக்க ஆசைப்பட்டு பிறந்திருக்கிறான் எனில் அது ஆண்டிக்கும் புரிவதில்லை, அவனைக் காணும் நமக்கும் புரிவதில்லை. 3 வருஷமாகத் தோற்பதே வழக்கம், தோற்று இழந்த செல்வம் அதிகம் என்பவர் மீண்டும் சீட்டாட ஆசையாக வருகிறார் என்பதை நாம் கண்ணால் பார்க்கிறோம், நம்பமுடியவில்லை. அவர் தோற்க ஆசைப்படுகிறார், தோற்பதில் இன்பம் காண்கிறார் என்ற ஆன்மீக விளக்கம் அறிவுக்குப் புலப்படுவதில்லை.

ஸ்ரீ அரவிந்தம் என நாமறியும் தத்துவத்தின் முக்கிய அடிப்படைகளில் இது ஒன்று. இக்கருத்தை "சாவித்ரி'' வாயிலாக நாம் இங்குப் பல கோணங்களிலும் காண்கிறோம். சத்தியவானைப்பற்றிய உண்மையை சாவித்திரி அறிவாள். அறிந்தும் அவள் நிலை குலையவில்லை. அவள் மனநிலையை விளக்கும் பகுதிகள் இவை.

  • ஜீவனின் துள்ளலிலிருந்து ஒதுங்கிய சாவித்திரி
  • அன்பிற்குரியவரிடமிருந்தே மறைந்து நிற்கும் மாது
  • தெய்வத்தை உயர்த்தும் மனித கர்மம்
  • அனைவருக்கும் மகுடம் அவளே
  • தம் விதியையும் அறியாதவரின் பாரத்தை சுமப்பவள்
  • எதிரியின் வலிமைக்கு தம் இதயத்தால் ஜீவனப்பவள்
  • உதவியை நாடி அவளுள்ளிருந்து அழைப்பு எழவில்லை
  • வாய் திறக்கவில்லை, அழுகை வரவில்லை
  • எவருமறியாதது அவள் இரகஸ்யம்
  • தைரியமளித்த அமைதி பொலியும் முகம்
  • தனித்து நின்று உலகை உட்கொண்டவள்

****

பஸ்மாசூரன்

Page 7 இல் உள்ள சில கருத்துகள் :

1. கண்ணீர் கலந்த வாழ்வே பூமிக்குரியது 2. ஜோதியை மனிதன் வெறுப்புடன் நோக்குகிறான். 3. அருளை வழங்கும் அரவணைப்பை மறுப்பது மனிதன் 4. அவதாரப் புருஷனுக்குச் சிரச்சேதமளிக்கும் உலகம் 5. கிரீடத்தை அளித்தவனுக்குச் சிலுவையைப் பரிசளிக்கும் உலகம்.

ஸ்ரீ அரவிந்தர் அடிப்படையாகக் கருதும் தத்துவங்கள் இவை. உலகம் மட்டமான வாழ்வை ரசித்துச் சுவைக்கின்றது. ஜோதி மனிதனுக்கு நன்றியை எழுப்பவில்லை, வெறுப்பை உற்பத்தி செய்கிறது. அருளை நாம் பிறருக்கு அளித்தால் ஆர்வமாகப் பெறுவார் என நினைக்கிறோம். க்ஷணம் தாமதமின்றி உதறித் தள்ளுவது உலகம். அவதாரம் மனிதனை நாடி வந்தால் அவனைச் சிரச்சேதம் செய்ய முனைகிறது. கிரீடம் கொண்டு வந்தால் அவனைச் சிலுவையிலறைகிறது என்று சாவித்திரியில் 7ஆம் பக்கம் கூறுகிறது.

நாம் பிறருக்கு உதவி செய்தால் பெறுபவர் நன்றியுடனிருப்பார். மீண்டும் நமக்கு உதவி செய்வார். நமக்கு நல்ல பெயர் வரும் என அனைவரும் நினைக்கிறோம். உண்மை வேறு.

  • உதவி செய்பவர் செல்வாக்குடனிருந்து மேலும் அவரிடம் உதவியை எதிர்பார்த்தால் பெறுபவர் அடக்கமாக இருப்பார். உயர்வாகப் பேசுவார். செய்தவரை நல்ல மனிதர் என்பார்.
  • சொல்லும் பதில் உதவியைப் பொருத்ததன்று, செய்பவரின் பதவி, அதிகாரம், செல்வாக்கைப் பொருத்தது. மனிதன் அதிகாரத்திற்குப் பணிவான், நல்லதிற்குப் பணியமாட்டான்.
  • செய்தவர் பதவியில்லாதவரானால், அவர் ஏன் செய்கிறார், அதன் உள்நோக்கம் என்ன என்று கேட்டான். மனிதனால் அடுத்தவர் நல்லதை ஏற்கமுடியாது. பதவிக்குப் பணிய முடியும்.

அன்பர்கள் அனுபவம்.

  • வருமானத்தை பக்தர் அடுத்தவருக்கு 5 மடங்கு உயர்த்திய பொழுது நாம் அங்கு போனது தவறு என்றனர் பெற்றவர்.
  • எங்களுக்கு உதவி செய்வதால் உங்களுக்கு நல்ல பெயர் என்பதால் செய்கிறீர்கள் என்றனர் சிலர்.
  • உயிரைக் காப்பாற்றியவர் மீது திரும்பி பிழைத்தெழுந்தவன், அவர் உயிரையே எடுக்க முயன்று, அவரைச் சுற்றி 5 பேர் உயிரை எடுத்துவிட்டான்.
  • பொய்க் கேஸ் போட்டு, வாரண்ட் பிறப்பித்தான் 12 மடங்கு இலாபம் பெற்றவன்.
  • உதவி செய்யும் முன்பே உன் சொத்து முழுவதும் எனக்குக் கொடு என்றான் ஒருவன்.
  • 3 நாளில் 2 வேளை சாப்பிட்டவருக்குச் செய்த உதவியால் அவர் உயர்ந்து டாக்ஸியில் பயணம் செய்துவந்தது உதவி செய்தவரைப் பார்த்து வெட்கமின்றி என்னால் தானே நீங்கள் உயர்ந்தீர்கள்? என்று கேட்கும் மனிதப் பிறவி ஒன்று.
  • உதவிபெற்று உயர்ந்து, எதிரியாகி, உயிரை எடுத்து, பரமஎதிரியுடன் சேர்ந்து உன்னை அழிப்பேன் என்று கொக்கரிக்கிறான் அடுத்தவன் ஒருவன்.

நல்லது செய்து நல்ல பெயர் எடுக்கு முனைபவர் திறனற்றவரானால் தரைமட்டமாக்கப்பட்டு தலைமுறையே அழியும் என்பது ஸ்ரீ அரவிந்தம் கூறும் வாழ்வின் உண்மை.

****

P .10 This was the day when Satyavan must die இன்று சத்தியவான் மரணமடைய வேண்டிய தினம்

மேதை என்பதற்குப் பல அடையாளங்களுண்டு. சீனுவாச இராமானுஜம் கணக்கைப் பார்த்ததும் அதைப் போட்டுப் பார்க்காமல் விடையை அறிந்தார். அதுவே அவர் மேதாவிலாசம். பரீட்சை பேப்பரைத் திருத்தியவர் பையன் காப்பி அடித்ததாக நினைத்து பூஜ்யம் மார்க் போட்டார்.

மேதையின் அறிவு சிறப்பாக வெளிவருவதை உலகம் தவறாக அறியும். ஒருவன் சிறப்பை உலகம் தவறு எனக் கண்டால், அவர் மேதை என நாம் அறியலாம். மேற்கண்ட வரியை ஸ்ரீ அரவிந்தர் முழுக் காவியத்திலும் சிறப்பான அடியாகக் கருதினார். அதை ஒரு சாதகர் திருத்தச் சொன்னார்.

சாவித்திரியின் பயணம் சத்தியவானின் மரணத்தில் ஆரம்பிக்கிறது. காவியம் அஸ்வபதியின் யோகத்தில் ஆரம்பித்து, சாவித்திரியின் பிறப்பு, வளர்ப்பு, திருமணம் என்று தொடர்ந்து சத்தியவானின் மரணத்திற்கு வரும். Epic poetry பெருங்காப்பியம் நடுவில் ஆரம்பிப்பது என்பது மரபு, மரபை ஒட்டி ஸ்ரீ அரவிந்தர் காவியத்தை இங்கு ஆரம்பிக்கிறார். முதலில் ஸ்ரீ அரவிந்தர் சாவித்திரி எழுத ஆரம்பித்தது 1920க்கு முன். அதை 14 வரியுள்ள sonnet ஆக எழுதினார். சாவித்திரி மட்டுமே பகவான் இறுதிவரை 1950 எழுதிய நூல். காவியம் 12 புத்தகம் என்பது மரபு. அவர் திட்டம் அதுவன்று. ஆனால் 12 புத்தகமாகவே சாவித்திரி முடிந்தது. முதலில் தாமே எழுதினார். கையால் எழுதுவதும் உண்டு. டைப் அடிப்பதும் உண்டு. பார்வை மங்கியபின் பகவான் சொல்ல நிரோத்பரன் எழுதினார். 1950 ஜுன்மாதம் பகவான் நிரோத்பரனிடம் சாவித்திரியைச் சீக்கிரம் முடிக்க வேண்டும்' என்றார். அதுபோல் முடித்தார். 1950 டிசம்பரில்

பகவான் சமாதியான பின்னரே அவர் கூறியதன் அர்த்தம் விளங்கியது.

  • அமரத்துவத்தின் ஆனந்தம் புவியின் பரிசு.
  • காலத்தின் கடுமையைக் கருதும் மனநிலை.
  • ராஜ்யத்தின் உரிமை தணியாத ஆசை.
  • தீர்க்கமான அலட்சியத்தின் தூரத்துப்பார்வை.
  • வலியின் சிலையான சலனமற்ற தெய்வம்.
  • தணியாத பாதகத்தின் தர்மகர்த்தா.
  • வேதனையான விவாதத்தின் சுணக்கமான மையம்.
  • இருளினின்று பிறக்கும் தெய்வங்கள்.
  • சுவர்க்கத்தின் வேதனையும் போராட்டமும்.
  • சலனமற்ற சக்தியாக அவள் எழுந்தாள்.
  • காலத்தையும் விதியையும் காணும் ஆன்மா.
  • ஜீவராசிகளின் அஞ்ஞானக் குரல்.
  • காலத்தின் கதியை விழித்துணர்ந்தாள்.
  • அமரனின் அரவணைப்பில் மீண்டும் துவக்கினாள்.
  • வேதனையும் ஆசையும் செய்யும் தியாகம்.
  • சிந்தாத கண்ணீரின் நித்திய சடங்கு.
  • தெய்வத்தின் கடுமையால் பீடிக்கப்பட்டாள்.
  • காலம் கடந்த கவலையின் ஆழம் வாழ்வின் லட்சியமன்று.
  • புவியின் வேதனைக்கு வாரிசு.
  • தழலான இதயத்தின் நிழல்.

****

P.11 An Absolute supernatural darkness falls on Man sometimes when he draws near to God. இறைவனை நெருங்கும்பொழுது பூரண இருள் சூழ்வதுண்டு

ஒளியின் அடியில் இருள் என்பதும், விடியலுக்கு முன் இருள் அடர்ந்திருக்கும் என்பதும் வழக்கு. இதற்குரிய தத்துவம் என்ன? ஒளி இருளாக மாறுகிறது என்றால் ஒளி சுருங்கி, இருள் அதிகமாகிறது எனப் பொருள். இரண்டு முக்கியமான கருத்துண்டு.

  • அதிக இருள் என்பது அதிக ஒளி என்று பொருள்
  • மாற்றம் க்ஷணத்தில் எழுவது

ஆன்மீக ஒளியின் முன் நடுப்பகல் நள்ளிரவு போன்றது என்கிறார் அன்னை. அத்துடன் ஆன்மீக இருளின் மீது நள்ளிருள் பிரகாசமாக இருக்கும் என்கிறார். சூரியன் தரும் ஒளி ஜடத்தின் ஒளி, அது ஒளியன்று எனவும் ஒளி என்பது ஜீவியத்தின் பிரகாசம், அது ஜடத்தில்பட்டு பிரதிபலிப்பதால் ஏற்படும் ஒளியை நாம் சூரிய ஒc என்று காண்கிறோம் என்றும் பகவான் கூறும் தத்துவங்கள் நம் அறிவுக்கு எட்டாது. அவற்றை நாம் ஏற்க வேண்டுமானால் சில உதாரணங்கள் மூலமாக நாம் புரிந்துகொள்ள முயலலாம், நேரடியாகப் புரியாது.

  • வெண்மை என்பது 7 நிறங்கள் கலந்தது. கருப்பு என்பது எல்லா நிறங்களையும் தன்னுட்கொண்டது.
  • பணம் என்பது செக் அல்லது, நோட் அல்லது, வெள்ளி ரூபாயன்று, மனித உழைப்பு. மனித உழைப்பே பணம் எனப்படும். படிப்பு என்பது பட்டமன்று, மனத்தின் அறியும் திறனே படிப்பு எனப்படும்.
  • விஞ்ஞானிக்கும், ஆதிமனிதனுக்கும் அறிவு ஒன்றே - ஸ்ரீ அரவிந்தர்.

மேற்சொன்ன கருத்துகளில் பொதிந்துள்ள உண்மையை நாம் ஏற்பதுபோல் சாவித்ரியின் வரியில் மறைந்துள்ள கருத்தை நாம் அறிய முயலலாம். இந்தப் பக்கத்திலுள்ள மற்ற கருத்துகளின் பகுதிகள்,

  • எண்ணத்தின் இரகஸ்யத்தினுள் மறைந்தாள்
  • பல உருவகங்களில் மனம் திளைத்தது
  • உயிர் பெற்றெழுந்த பின், முடிவைக் கண்டது
  • நீர்க்குமிழி போன்றது, ஊனக் கண்ணிலிருந்து விலகியது
  • ஆன்மாவின் ஜீவனற்ற நிழல் கண்ணுக்குப் புலப்படாது
  • எதிர்காலத்தைத் தாங்கி வரும் பேய் போன்ற இதயம்
  • விரைந்து மறையும் நிகழ்ச்சியின் சுவடு
  • காலத்தின் ஓடை வேகமிழந்தது
  • புரியாத புலனின் கரைகள்
  • மறைந்துபோன மனித உருவங்கள்
  • அழிந்தவற்றின் சூட்சும உருவங்கள்
  • காலத்தைக் கணக்கிடும் சாட்சி
  • கண்ட கனவும், நினைத்த நினைவும்
  • நினைவெனும் வானில் பறந்தவை
  • பல வண்ண உள்ளுறை உதயம்
  • வாழ்வின் இராஜ பாதைகளும், அவற்றின் இனிய கிளை வழிகளும்

****

P 13. The world unknowing for the world she stood தன்னையறியாத உலகத்தின் சார்பாக அவள் வாழ்ந்தாள்

இப்பக்கத்திலுள்ள சில கருத்துகள்:

  • கடந்தவற்றை அறிதல் அவசியம்.
  • பழைய பாக்கி தீருதல் தேவை.
  • ஆன்மாவின் கடனைக் காலத்தில் செலுத்த வேண்டும்.
  • ஆன்மபலம் தவிர மற்றதை அறியாதவள்.
  • தனிமையில் ஆன்மா தவம் செய்கிறது.

பிரம்மாண்டமான வெற்றிகள் தங்கள் வருகையைப் பறை அறைவிப்பதில்லை என அன்னை கூறியுள்ளார். தியாகம் உண்மையும், பெருமையும் உடையதானால் உலகம் ஏற்றுப் போற்றும். அந்நிலையையும் தியாகம் கடக்குமானால், மனிதன் உயர்ந்து தெய்வமாகிறான். தெய்வ நிலையில் தியாகம் எவர் கண்ணிலும் படாது. படக்கூடாது.

  • ரோடு போட்டால் அதை உலகம் அறியும். ரோட்டைத் தாங்கும் பூமியை நாமறிவதில்லை.
  • தலைவனை உலகம் ஏற்கும். போற்றும், மகுடம் வைக்கும். அவனைப் பெற்றெடுத்த தாயை அறிய முயலாது. அவன் உலகுக்குச் சேவை செய்ய தங்களைத் தியாகம் செய்த குடும்பத்தை அறியாது.
  • பேர் உத்சவங்களில் உலகமே கலந்துகொள்ளும். அவற்றை நடத்திய ஆயிரம் சிப்பந்திகள் இருப்பதையே எவருமறியார். ஆன்மா அதன் கடமையைத் தனித்தே ஆற்ற வேண்டும்.
  • புத்தகம் பிரபலமானால் ஆசிரியர் விருது பெறுகிறார். புத்தகத்தை அச்சிட்டு வழங்கியவரும், உலகெங்கும் எடுத்துச் சென்று விற்பவருமான வியாபாரியையும் நாமறிவதில்லை.

எண் சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம். நாம் காண்பது அவர் முகம். முகமே மனிதன் எனக்கொள்கிறோம். ஆயிரம் உறுப்புகள் அரை வினாடி தவறாமல் செயல்பட்டு மனிதனாக இயங்கவைப்பதை அறியவோ, நினைக்கவோ, நம்மால் முடிவதில்லை.

ஆற்றில் 10 அடி தண்ணீர் ஓட பூமிக்கடியில் 100 அடி நீர் ஊற வேண்டும். கரையின் இருபுறமுள்ள ஆயிரம் ஏரி, குளம், கிணறுகள் நிரம்ப வேண்டும். ஒரு துளி வெள்ளம் பெருக ஓராயிரம் துளிகள் தங்களை மறைத்துச் சேவை செய்ய வேண்டும். இன்று மனிதன் ஒரு நாள் தன் கடமையைச் செய்ய, கடந்த அவன் வாழ்வு அடிப்படையாக அமைகிறது. எதிர்கால வாழ்வுக்கு அடிப்படையை இன்று அமைக்கிறது. சூழலில் நடப்பவை அனைத்தும் உறுதுணையாக நிற்கின்றன. ஒருவன் வாய்திறந்து பேச ஓராயிரம் ஆத்மாக்கள் மௌனமான இசைவு தரவேண்டும். பழைய பாக்கி தீர வேண்டும். காலம் தன் கடமையைச் செய்ய மனிதனை மௌனமாக வற்புறுத்தும். காலத்தைக் கடக்க மனிதனால் நினைக்க முடியாது.

பெற்றோர் பையனைப் பள்ளியில் சேர்க்கலாம். ஆசிரியர் பாடம் சொல்லித் தரலாம். அச்சகம் புத்தகத்தை அச்சிட்டுத் தரலாம். ஆனால் பரீட்சையில் பையன் தானே எழுத வேண்டும் என்பதுபோல உடலோடு உடலாக ஊர் வாழும், உணர்வோடு உணர்வாக உற்றார் உறையலாம். அறிவை அநேகம் பேர் ஏற்கலாம், ஆதரிக்கலாம். ஆனால், உலகத்திற்காகப் பிறந்த சாவித்திரியை உலகம் அறியவில்லை. உலகத்திற்காக வாழ்ந்தபொழுதும் உலகம் அறியவில்லை. உலக இருளை அழித்து ஒளியாக்கியபொழுதும் உலகம் சாவித்திரியை அறியவில்லை. இது அன்னையின் பூவுலக வாழ்வு.

அன்னை நம்மிடம் வாழ்ந்தார். உலகப் போர்களை வென்றார். அடுத்துவரும் உலகப் போரைத் தடுத்தார். மனிதனின் சிறுமையை ஏற்றுப் பெருமையாக மாற்றினார் என உலகம் அறியவில்லை. இனியும் அறியுமா எனத் தெரியவில்லை.

****

P. 14. Love came to her hiding the shadow, Death அன்பின் நிழல் அணைந்து வரும் மரணம்

முரண்பாடான உலகை மனிதன் ஏற்று வாழ வேண்டியது அவசியம். அந்த அவசியம் தவத்திற்கும், யோகத்திற்குமில்லை என்று ஆயிரமாயிரம் துறவிகளை இந்தியா உற்பத்தி செய்தது. விவேகானந்தர் அதனின்றும் சற்றுப் பிறழ்ந்து 'தரித்திர நாராயணனை' நமக்கு இலட்சியமாக அளித்தார். முரண்பாடு என்பது உண்மை. தவிர்க்க முடியாதது. தவிர்க்கப்பட வேண்டியதில்லை. ஏற்கப்பட வேண்டும். உடன்பாடாக முரண்பாட்டை ஏற்பது யோகம் என்பது ஸ்ரீ அரவிந்தம்.

முரண்பாட்டின் பின்னால் உயர்ந்த உடன்பாடுண்டு,

என்பது ஸ்ரீ அரவிந்தம் என்றும் கூறுவது. அக்கருத்தைப் பிரதிபலிக்கும் சாவித்திரியின் வரி மேலே கூறப்பட்டது. மரணம் வாழ்வுக்கு நித்தியத்துவம் அளிக்கிறது என்பது ஸ்ரீ அரவிந்தர் தத்துவங்களில் ஒன்று. சத் ஜடமாக மாறியது என்பது அடிப்படை. அதையொட்டி வாழ்வு life மரணமாயிற்று என்பது வாதம், விளக்கம். சிருஷ்டியை விளக்கும் பகவான் ஸ்ரீ அரவிந்தர்,

  • இறைவன் தன்னுள்ளே தன்னை மறைத்துக் கொண்டு,
  • சத் என்பதை ஜடமாகவும்,
  • சித் என்பதை வாழ்வாகவும்,
  • ஆனந்தத்தை ஆன்மாவாகவும்,
  • சத்திய ஜீவியத்தை மனமாகவும் மாற்றினான் என்கிறார்.

இதன் விளைவாக,

  • சத்தியம், பொய்யாகவும்
  • நல்லது, கெட்டதாகவும்
  • ஞானம், அஞ்ஞானமாகவும்
  • சக்தி, திறனற்றதாகவும்
  • அழகு, விகாரமாகவும்
  • அன்பு கொடுமையாகவும்
  • சந்தோஷம் வலியாகவும்
  • அனந்தம், கண்டமாகவும்
  • ஒளி இருளாகவும்
  • தூய்மை, அசுத்தமாகவும் மாறின.

இந்தப் பக்கத்திலுள்ள இதர கருத்துகள்:

  • தூய்மையின் சத்தியத்தை நித்தியமாகக் காட்டினர்.
  • தனிமையை இனிமையாக்கும் மனித உணர்வுகள்.
  • விலங்கின் விவரமில்லாத சிறு தேவை.
  • பூமாதேவியின் பயங்கர ஆவேசம்.
  • ஆயிரம் கோடி மரங்களின் அடர்ந்த பொறுமை.
  • வானமெனும் இரத்தினக் கம்பளத்தின் சிறப்பான சிந்தனை.
  • ஊர்ந்து செல்லும் காலத்தின் உள்ளுறையும் பாரம்.
  • சிந்தனைக்கு இடமளித்து சிவனை இருத்திய மனம்.
  • அனந்தனின் சுவடுகளைத் தாங்கும் உலகம்.
  • மலையின் எழுச்சியை இதயத்தின் எழுச்சியாகக் காணும் நோக்கம்.

****

P. 15. Even his godlike strength to rise must fall தெய்வ வலிமையும் பாய்வதற்கு பதுங்க வேண்டும்

இயற்கையின் முரண்பாடு, இறைவனுக்கு உடன்பாடு. இதயத்தின் பிணக்கு சிந்தனைக்கு அழைப்பு என்ற கருத்துகள் Life Divine முதல் அத்தியாயத்திற்குரியவை. ஸ்ரீ அரவிந்தத்தைச் சுருக்கமாகச் சொல்ல முடியும். நாம் வாழும் உலகம் சிருஷ்டி எனப்படும். இது காலத்தில் செயல்படுவது Becoming என்பது. மேல் உலகம் காலத்தைக் கடந்தது. சிருஷ்டியில் வாழ்பவன் மனிதன். சிருஷ்டியைக் கடந்த நிலை காலத்தைக் கடந்த நிலை. அங்கு உறைவது புருஷன், Being. இதுவரை யோகம் என்பது உலகத்தைவிட்டு மோட்சத்திற்குப் போவது. From Becoming to Being. ஸ்ரீ அரவிந்தம் சிருஷ்டியைப் பகுதியாகவும், புருஷனைப் பகுதியாகவும் காண்கிறது. சிருஷ்டியும், புருஷனும் சேர்ந்தது முழுமை. அந்த முழுமையின் மையம் சிருஷ்டியில் உள்ள புருஷனில் (Being of the Becoming) உள்ளது. அதுவே சைத்தியப் புருஷன். மேற்சொன்ன வரி தெய்வமும் பகுதி, பாய்வதற்குப் பதுங்கவேண்டும் என்கிறது. முழுமைக்கு அது தேவையில்லை. பிரம்மமில்லாமல் எதுவுமில்லை, சர்வம் பிரம்மம்.

சிருஷ்டிக்கும் வித்து பிரம்மம். அப்பிரம்மம் முழுமையானது. மனிதன் புருஷனைத் சுவர்க்கம் தேடுவதற்குப் பதிலாக, சிருஷ்டியிலுள்ள புருஷனை சைத்தியப் புருஷனைத் தேடினால் வாழ்வு தெய்வீக வாழ்வாகும். யோக வாழ்வில் ஆரம்பித்துத் தெய்வீக வாழ்வில் பூரணயோகம் முடிகிறது. நம் வாழ்வும், தெய்வத்தின் வாழ்வும் பகுதி என்பதே ஸ்ரீ அரவிந்தம்.

இந்தப் பக்கத்திலுள்ள இதர கருத்துகள்:

  • ஆன்மா அதன் ஆதியை தனியே சென்றடையும்.
  • பிரம்மாண்டமான சக்தி பின்னே போய் நின்றது.
  • அணுவில் உறையும் அனந்தனின் தழல்.
  • எல்லாம்வல்ல சூட்சுமக் குரு.
  • இரண்டு இரட்டைகள் உருண்டு தேறிய ஒருமை.
  • உருண்டு வந்த உச்சியைத் தாண்டும் குதிப்பு.
  • உயர்ந்த நிலைக்குரிய உன்னத நிதானம்.
  • புவியும் சுவர்க்கமும் ஆடும் ஊசல்.
  • வளர்பிறைபோல் வளரும் ஆன்ம வளம்.
  • பின்னத்தின் முழுமை பின்னணியில் தெரியும் ஆத்மா.
  • பிரம்மத்தையும் பிண்டத்தையும் இணைக்கும் சந்திப்பு.
  • அனைவர் முகத்திலும் பொயும் அவனுருவம்.
  • காலத்தினுள் காலத்தைக் கடந்த கல்பம்.
  • ஊனக் கண்ணுக்கு உயிரும் உயர்வும் தரும் உன்னதம்.
  • கர்மத்தின் வலிமையும் அருளின் சக்தியும் இணையும் இடம்.

****

P 16. In her he met his own eternity அவளுள் அவன் தன் பிரம்மத்தைக் கண்டான்

அன்றிலிருந்து இன்றுவரை மனிதன் இறைவனைத் தேடுகிறான். இறைவனைக் கடவுள் எனவும், சுதந்திரம் எனவும், சாகாவரமாகவும், ஜோதியாகவும் மனிதன் கருதுவதுபோல், காலத்தைக் கடந்த (eternity) நிலையாகவும் கருதுகிறான். பிரம்மம் காலத்தைக் கடந்ததால், அதையே பிரம்மமாகவும் மனிதன் நினைக்கிறான்.

  • எந்த வேலை செய்தாலும், எதைத் தேடினாலும் மனிதன் இறைவனையே நாடுகிறான்.
  • தனக்குத் தேவையானவற்றிலும், தன்னைக் கவர்வதிலும் இறைவனைக் காண்பது மனிதனுக்கு முக்கியம்.
  • மனிதன் தான் விரும்பும் பெண்ணை தெய்வமாக மனதில் வரிக்கிறான்.
  • பிரம்மத்தைத் தேடும் மனிதன் பெண்ணில் பிரம்மத்தைக் காண்கிறான்.
  • ஆரம்ப நிலையில் பெண்ணைத் தேடும் ஆண் தான் பெறும் பிள்ளைகளால் தன் உடலை நித்தியமாக்குகிறான்.
  • முடிவான கட்டத்தில் மனிதன் ஈஸ்வரனாகி, சக்தியைத் தேடி பூரணம் பெறும் பொழுது ஆன்மா நித்தியம் பெறுகிறது.
  • மரபு பெண்ணை விலக்கி தவத்தை நாடியது.
  • பூரண யோகம் பெண்ணை ஏற்று விலங்குணர்வை விலக்கி அவனுள் ஆன்மீகப் பூரணம் பெறுகிறது.

இந்தப் பக்கத்திலுள்ள இதர கருத்துகள்.

  • எதையும் தெய்வீகமாக்கும் ஆன்மீகம்.
  • இடையில் வெளியாக எழுந்தாலும் ஒளியின் இரகஸ்யம் ஒளிந்துள்ள இடங்களாகும்.
  • சொல்லை அமைதியாகத் தொகுத்தவள் அவள்.
  • அமைதியின் ஊற்றென அமைந்த பெருவெளிக் கண்டம்.
  • ஆதியின் அக்னி அமைதியாகப் பரவிய சமுத்திரம்.
  • தெய்வத்தின் வலிமையையும், மோனத்தின் பொறுமையையும் உடையவள்.
  • உள்ளத்து வெளி அவளுள் பரந்து நின்று தன்னைப் பிரதிபலிக்கிறது.
  • சூட்சும வெளியின் இதமான அரவணைப்பு உயர்ந்து திரண்டது.
  • அவளே அவனுடைய சொந்த இல்லமென உலவும் வகை.
  • அவளது இளமை அரியாசனத்தில் ஆனந்த கொலுவிருந்தது.
  • சுவர்க்கத்தின் அமைதியான கவசம் தெய்வீகக் குழந்தையைப் பாதுகாத்தது.
  • புவியின் கடும் சுவாசம் அப்பளிங்குக் கண்ணாடியைக் கரைப்படுத்தவில்லை.
  • மனித வாழ்வின் பாரத்தைச் சுமக்க அவள் முடிவு செய்தாள்.

****

P 17. Or hew the ways of Immortality அமரத்துவமான சுவர்க்கத்திற்குப் பாதை அமைப்போம்

காய கல்பம், சாகா வரம், மரணமிலாப் பெருவாழ்வு, அமரவாழ்வு என்பவற்றை மனிதன் சாகாமல் என்றும் உடல் உயிரோடிருப்பான் எனக்கொண்டு இந்தியத் தவசிகளும், ரிஷிகளும் காயகல்பம் தேடினர். வேதம் அமரத்துவம் என்பதைத் தெவாகக் கூறுகிறது.

  • அமரத்துவம் ஆத்மாவுக்கு, உடலுக்கோ, உயிருக்கோ (ஆவி) இல்லை.
  • அமரத்துவத்தின் இரு அம்சங்கள் Infinity அனந்தம், Universality பிரபஞ்ச முழுவதும் பரவுதல்.
  • அனந்தம் எல்லா நிலைகட்கும் உண்டு. ஜடம், வாழ்வு முதல் சத்வரை அனந்தம் உண்டு. ஆனால் அமரத்துவம் Supreme Infinityக்கே உரியது. Supreme என்பதைப் 'பர' என்று குறிப்பதுண்டு.
  • Universality பிரபஞ்சம் முழுவதும் பரவுதலும் எல்லா நிலைகட்கும் உண்டு. அமரத்துவம் Divine Universality க்கேயுண்டு.
  • ஆன்மா இவையிரண்டையும் - (Supreme infinity,divine universality ) உச்சகட்ட அனந்தமும், இறைவனுக்குரிய பிரபஞ்ச ரூபமும் - பெற்றால் அமரத்துவம் பெறுகிறது என்பது வேதம்.

சாவித்திரி கூறும் அமரத்துவம் உடல் வாழும் மனிதனுக்குரியது. உலகுக்குப் புதிய கருத்து. சாவித்திரி எமனை வென்று, அழித்து, மரணத்தை அழித்து உலகுக்கு அமரத்துவம் வழங்க வந்தவள். அதைச் சாதித்தாள். இப்பக்கத்திலுள்ள மற்ற கருத்துக்கள்:

  • எமனெனும் கருமேகத்துடன் போரிட வந்தவள் சாவித்திரி.
  • மரணம், வீழ்ச்சி, சோகம் ஆன்மாவை நோக்கி உந்தும்.
  • ஆயுதம் தாங்கிய அமரத்துவம் காலத்தின் கிடுக்கிப் பிடியைச் சமாளித்தது.
  • ஜடத்தின் இருளில் வாழ்வின் சிறு போராட்டம்.
  • தம் வலுவே எதிர்ப்புக்கு அளவுகோல்.
  • தெய்வீக அம்சங்களை தாக்கினான்.
  • ஆர்வம் நிறைந்த மனித இதயத்திற்கு அவனிதயம் துணை நின்றது.
  • விதியின் திரையில் விளையாடும் உருவம்.
  • தெய்வீக விளையாட்டின் வெற்றியும், தோல்வியும்.

****

P .18 Of limiting nature with a limitless soul சுருங்கும் பிரகிருதியும் விரியும் ஆன்மாவும்

ஆன்மா அனந்தமானது. காலத்தைக் கடந்தது. இடத்தால் கட்டுப்படாதது. புருஷன் எனப்படும் பிரகிருதி என்பது இயற்கை. புருஷப்-பிரகிருதி எனவும், பிரம்மம்-மாயை எனவும், ஈஸ்வர - சக்தி எனவும் இரண்டிரண்டாக உலகைப் பிரித்து ஞானிகள் கூறுகின்றனர். அதனால் வாழ்வு இயற்கையைச் சேர்ந்தது. துறவி வாழ்வை விலக்கி புருஷனை நாடுகிறார். வாழ்வு சுருக்கம் தருவது என்பதால் துறவறத்திற்குத் துணை செய்யாது. ஆனால் ஸ்ரீ அரவிந்தம் அடுத்த கட்டம் போய் அந்த வாழ்வும் பிரம்மமாயிற்றே, சர்வம் பிரம்மம் என்பதால், வாழ்வு பிரம்மமில்லாமல் இருக்கமுடியாதே என்கிறது. பிரகிருதியைவிட்டு விலகும், புருஷன் பிரகிருதியுள்ளும் இருக்கின்றானே என்று ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.

விரியும் ஆன்மா சுருங்கும் வாழ்வுக்கு வித்தாயிருப்பதால், வாழ்வு மையத்தை அதனுள் உள்ள ஆன்மாவுக்கு மாற்றினால் மனிதவாழ்வு, தெய்வீக வாழ்வாகும் என்பது ஸ்ரீ அரவிந்தம். ஸ்ரீ அரவிந்தரின் தத்துவம் அடுத்த கட்டங்கட்கும் போகும். இங்கு நாம் அதைக் கருதத் தேவையில்லை.

இப்பக்கத்திலுள்ள இதர கருத்துகள்,

  • காலத்தின் தலைவனுக்குரிய விளையாட்டுக் கருவி.
  • சதுரங்கத்தின் காய், விதியின் விளையாட்டை நடத்தும்.
  • அளவில்லாத அரங்கத்தின் ஊர்ந்துவரும் அசைவு.
  • புவியின் சொக்கட்டான் விதியுடன் விளையாடும்.
  • காலத்தில் வரைந்த மனித உருவம்.
  • கடுமையான மன்றத்தில் கட்டுப்பட்ட வாழ்வு.
  • ஆனந்தத்தை வெறுக்கும் காரிருள் சக்திகள்.
  • ஜடத்தின் பொக்கிஷம் சிம்மாசனம் பெறுகிறது.
  • வாழ்வு எனும் யாத்திரையில் தடை செய்யும் மரணம்.
  • வெடித்து விரியும் இதயத்தில் வைத்தெடுத்த முத்திரை.
  • சீறி எழும் மனதை மீறிவரும் கட்டு.
  • வலியை எழுப்பும் சாட்டை, லஞ்சம் தரும் மகிழ்வு.
  • அறியாமையின் அர்த்தமற்ற நீதிமன்றம்.
  • பரமனின் பாரம் தாங்காமல் அமிழும் பூமி.

****

P. 19. At the unseen's knock upon her hidden gates மறைபொருளான கதவில் கண்ணுக்குத் தெரியாமல் தட்டுவது

உலகில் ஒரு சிறு வேதனையுமில்லை. ஒரு க்ஷணம் கூட மனிதன் துன்பம் அனுபவிக்கத் தேவையில்லை என்ற ஸ்ரீ அரவிந்தம், அத்துன்பங்கள் உற்பத்தியான வகையை விளக்கி, அதிலிருந்து சாவித்ரி உலகைக் காப்பாற்றும் முறையை மனிதனுக்குரிய சொல், தெய்வத்திற்குரிய மந்திரம், யோகிக்குரிய தந்திரம், கவிக்குரிய உருவகம், திருஷ்டியுள்ளவர் காணும் அற்புதம், எதுவும் அறியாதவர்க்குரிய குருட்டுப் பார்வை ஆகிய பல வழிகளில் செய்யுளாக வகுத்தது சாவித்ரி. அவற்றுள் உள்ள சில சொற்றொடர்களைக் கீழேயும், முதன்மையானதைத் தலைப்பாகவும் இங்குக் காண்கிறோம்.

வலியிருந்து விடுபட மனிதனுக்குக் கதவுண்டு.

கதவைத் தட்டி எழுப்பும் அருள் உண்டு.

கதவு மறைந்துள்ளது.

தட்டும் குரல் காதுக்கோ, கண்ணுக்கோப் புலப்படாது.

புலனுக்குப் புலப்படாதது, தேடும் மனிதனுக்குத் தென்படும் என்ற சட்டம் வாழ்வுக்கும், யோகத்திற்கும் உண்டு என்று தெரிவிக்கும் வரி முதல் கூறியது.

  • இறவாத இலட்சியங்களை மரணத்தில் தேடுபவள்.
  • உலகத்தை வாழ்வில் நிர்ணயிப்பவள்.
  • அவள் பேச வேண்டிய சொல், செய்ய வேண்டிய செயலுண்டு.
  • வலி போக வேண்டும் எனும் வலிமையற்ற மனித இதயமன்று.
  • இறைவனின் ஊற்றுகளை இதமாக இதயத்தில் கண்டவள்.
  • ஜோதிமயமான புத்தகத்தை மூட சம்மதிக்காதவள்.
  • பிரபஞ்ச சாம்ராஜ்யத்தை எதிர்த்து நின்ற தனி மனுஷி.
  • மின்னல் தாக்கினால் மிளிர்ந்த வலிமை.
  • இருளின் தேவதைகளை மறுப்பின்றி ஏற்பவர்.
  • கடந்த காலச் சட்டத்தைப் பணிந்து ஏற்கும் பாங்கு.
  • மனம் மகிழ்ந்து பணிகிறது.
  • விதியின் வேதனைக்கு திறந்து காட்டிய நெஞ்சம்.
  • காலத்தின் கதிக்கும் வணங்காத முடி.

****

P 19. A colonist from Immortality. சொர்க்கத்திலிருந்து இங்குக் குடியேறியவர்

அவதார புருஷர்களை, அற்புதமான மனிதர்களை நாம் தெய்வப்பிறவி என்கிறோம். வானுலகில் பிறந்து மண்ணுலகில் வாழ்பவர்கள் என்ற விளக்கம் நெடுநாளாகப் பயன்படுவது. ஸ்ரீ அரவிந்தர் அந்த உபமானத்தை சாவித்திரியில் பயன்படுத்துகிறார். வேறோரிடத்தில் சாவித்திரியில் கூறுகிறார். தெய்வலோகத்தில் ஏராளமான ஜீவன்கள் புவியில் பிறக்க விழைகிறார்கள். அதற்குரிய கருவைத் தாய் வயிற்றில் கண்டால் கரு மூன்று மாதமான பின் அதனுள் இத்தெய்வப்பிறவிகள் நுழைய விரும்புகிறார்கள். கருவடைந்த பெண்கள் மனம் தெய்வ சிந்தனையால் நிரம்பி, இனித்து பக்குவப்படுவதை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தெய்வலோகத்திலுள்ளவர்கள் அங்கேயே இருக்கலாம். இறைவனை அவர்களால் அடைய முடியாது. இறைவனையடைய அவர்கள் விரும்பினால் அவர்கள் புவியில் மனிதர்களாகப் பிறக்க வேண்டும்.

உலகை உய்விக்க தெய்வம் புவிக்கு வருகிறது என்பது நாமறிந்தது.

இறைவனை அடைய தெய்வம் பூமியில் மனிதனாய்ப் பிறக்கிறது என்பது ஸ்ரீ அரவிந்தம்.

இப்பக்கத்திலுள்ள இதர கருத்துகளில் சில.

  • உலகத்தின் ஆசையால் உந்தப்பட்டு அவள் பிறந்தாள்.
  • நினைவுக்கெட்டாத நாளிலிருந்து தேடுவதில் முன்னணியில் உள்ளவள்.
  • புரியாத புதிரான நாடகத்தின் முதன்மையான பாத்திரம்.
  • உருவமற்றவன் உருவத்தால் தன்னையே தேடுகிறான்.
  • குருட்டு சூன்யம் வாழ முயன்று, கண் திறந்து பார்க்க முயல்கிறது.
  • இலட்சிய வெளியின் சிந்தனையாளரின் உழைப்பு.
  • பூமியின் ஊமைக் கனவிற்கு ஜோதிமயமான ஆற்றல் வருகிறது.
  • பெருவெளியினின்று இறங்கி வந்த பெரிய ஆத்மா.
  • க்ஷணத்தில் மறையும் சாம்ராஜ்யம்.
  • பூமாதேவியின் புலப்படாத பாதைகளில் சுடர்விளக்கான ஒளி.
  • அவனுடைய பிறப்பு ஆண்டவனின் சகுனம்.
  • மனித உடல் ஒளி ஊடுருவும் ஆடையலங்காரம்.
  • குருட்டு உலகை நடத்தும் பரமனை மூடி மறைப்பது.
  • பிரபஞ்சத்தின் காலமும், இடமும் அணைத்து ஆதரிப்பன.
  • இறைவன் பட்ட கடனை மனிதனுக்கும் பூமாதேவிக்கும் தீர்ப்பவன்.
  • தெய்வீக உரிமையான பெரிய பிதிரார்ஜிதம்.

****

P 21. And burst the bounds of consciousness and Time

ஜீவியத்தின் எல்லையை உடைத்தெறிந்தது;

காலத்தைக் கடந்தது

மரணம் வாழ்வின் உரிமை. மரணத்தால் வாழும் வாழ்வை சுற்றியுள்ள கதவுகளை ஆட்சி செய்வது விதி. அக்கதவைத் திறக்கும் உரிமையை இழந்தவன் மனிதன். அதை ஒருவன் செய்ய வேண்டுமெனில் அவன் வீரன். அவன் காலத்திற்குட்பட்டவனாக இருந்தால் அவன் வீரம் பலன் தாராது.

வீரம் உயர்ந்து காலத்தைக் கடந்த சிகரத்தினின்று எழும்பும் வீரன் அக்கதவை எட்டலாம், தட்டலாம், திறக்கலாம், உடைக்கலாம். வீரம் காலத்தைத் தடுத்து நிறுத்தும். சிருஷ்டியே அறியா வண்ணம் காலச் சக்கரத்தைப் பின்னோக்கிச் சுழலச் செய்யும். ஜீவன் நடந்து வந்தால், சந்தர்ப்பம் என்ற உலகில் தன்னைக் காண்கிறது. அவனுள் உள்ள லோகமாதா - சாவித்ரி - எழுவதால்காலமும், மரணமும் அவனுக்குக் கட்டுப்படுகின்றன. காலத்தைக் கடந்து மட்டுமன்று, காலத்தை உற்பத்தி செய்த ஜீவியத்தையும் கடக்கின்றது.

  • மரணத்திற்கு மரண அடி.
  • மூடிய கதவைத் திறக்கும் உரிமை.
  • காலத்தைக் கடந்த சிகரத்தின் கனவெனும் வீரன்.
  • விதியின் கதியைக் கூவி நிறுத்தியது.
  • காலச் சக்கரம் கருத்தின்றி சுழல்வதைத் தடுத்து நிறுத்திப் பின்நோக்கச் செய்தது.
  • ஜீவனின் சுவடு சந்தர்ப்பத்தைச் சந்தித்தது.
  • விதியின் இரும்புப் பிடியிலிருந்து ஜீவன் எழுந்து தன்னை அறிவித்தது.
  • லோகமாதா அவனுள்ளிருந்து எழுந்தாள்.
  • தெய்வத்தின் திருமுகம் மறைவினின்று வெளிவந்தது.
  • இறைவன் மனிதனில் மேலும் ஓர் வெற்றியைப் பெற்றான்.
  • சத்தியம் வீறுகொண்டு தழலென எழுந்தது.
  • மிருகமான யந்திரத்தின் பின் உள்ள பிரம்மமான இறைவன்.

*****

P 23. On sustenance from occult spiritual founts சூட்சும ஆன்மீக ஊற்றின் ஆதரவு

நாம் சாப்பிடுகிறோம், தெம்பாக வேலை செய்கிறோம். தெம்பு சாப்பாட்டிலிருந்து வருவதாக நினைக்கிறோம். சாப்பாடு உடலுறுப்புகளைச் சுறுசுறுப்பாக்குகின்றது. சுறுசுறுப்பான உடல் உறுப்புகள் பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு கொண்டு பிரபஞ்ச சக்தியை உள்ளே கொண்டு வருகின்றன. உடலை நடத்துவது சூட்சுமம் நிறைந்த பிரபஞ்ச சக்தி. இது நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. காரை ஸ்டார்ட் செய்ய பாட்டரியைப் பயன்படுத்துகிறோம். ஸ்டார்ட் ஆனபின் பெட்ரோலால் ஓடுகிறது. பாட்டரிக்கு ஸ்டார்ட் செய்வது மட்டுமே கடமை. சாப்பாட்டிற்கு உடலைச் சுறுசுறுப்பு ஆக்குவது மட்டுமே கடமை.

நாம் காண்பது சாப்பாடு, பாட்டரி. நம் கண்ணில் படாதது பிரபஞ்ச சக்தி, பெட்ரோல்.

உலகில் இயங்குவனவெல்லாம் ஆன்மாவால். ஆன்மா என்ற ஊற்று கண்ணுக்குத் தெரியாமல் சூட்சுமமாகச் செயல்படுகிறது. நாம் பள்ளியில் படிக்கிறோம். புத்தகம் செலவு செய்து வாங்குகிறோம். பிள்ளைகள் படிக்க ஏராளமான செலவாகிறது என்கிறோம். சர்க்கார் ஆசிரியருக்குச் சம்பளம் கொடுக்கிறது. கட்டடம் கட்டுகிறது. நிர்வாகம் செய்கிறது. நம் செலவு சிறியது. அதுவே கண்ணுக்குத் தெரிகிறது.

குடும்பம் நடத்தப் பாடுபடுகிறோம். இடையறாது உழைக்கிறோம். ஏராளமான செலவு செய்கிறோம். சந்தோஷமாக வாழ்கிறோம். இந்த சந்தோஷ வாழ்வைப் பெற நாம் எடுத்த முயற்சி பெரியது. அது மட்டுமே நாம் அறிவது.

  • அதன்பின் சர்க்கார் செய்யும் ஆயிரம் செலவுகளை நாம் அறியோம்.
  • அதைவிடப் பெரிய ஆதரவைச் சமூகம் தருகிறது என்றால் நமக்குப் புரியாது. ஆனால் அது பெரியது.
  • வாழ்வு சமூகத்தைவிடப் பெரியது. க்ஷணம் தவறாமல் வாழ்வு நம்மை வாழ வைக்கிறது.
  • வாழ்வுக்குப் பின்னால் ஆன்மா உண்டு.
  • ஆன்மாவின் சக்தி ஊற்றாக எழும்.
  • அது நம் கண்ணுக்குத் தெரிவதில்லை.
  • ஆன்மா சூட்சுமமாகச் செயல்படுவதால் தெரிவதில்லை.
  • ஆன்மா சூட்சுமம் நிறைந்தது, சக்தி நிரம்பியது, நாம் அறிவது கைம்மண் அளவு.

****

P 24. His thoughts stretch into infinitude எண்ணங்கள் அனந்தமாக நீண்டன

எண்ணம் மனதில் உதிப்பதாக நாம் நினைக்கின்றோம். அவை உடலில் உற்பத்தியாகின்றன என்று பகவான் கூறுகிறார். மனத்தில் எண்ணங்களைக் கவனித்தால் அவை ஓடியபடியிருக்கும். அவை அர்த்தமற்றவை. அவற்றை ஒதுக்கிப் பார்த்தால் நம் அபிப்பிராயங்களைக் காணலாம். அவற்றிற்கு ஒரு structure கட்டுக் கோப்பு உண்டு. நம் அனுபவம் ஒரு அபிப்பிராயமாகியிருக்கும். ஆராய்ச்சியால் அக்கட்டுக்கோப்பைக் கரைக்கலாம், உடைக்கலாம். அப்படி உடைந்தால் மௌனம் குடி கொள்ளும். அதன்பின் சிந்திக்கும் திறன் உண்டு. இது வலுவானது. இதைச் சுலபத்தில் கரைக்க முடியாது. முடிந்தால் மௌனம் வலுப் பெறும். இதன் பின்னணியில் மனம் உண்டு. சிந்திக்கும் திறன் மனத்தின் பல திறமைகளில் ஒன்று. நினைவு, சிந்தனை, பாகுபாடு, முடிவு, உஷார், தீர்ப்பு, நியாயம் என்ற திறன்களில் சிந்திக்கும் திறன் ஒன்று. சிந்திக்கும் திறனை கரைக்கலாம், உடைக்கலாம், முடிந்தால் சரண் செய்யலாம். அதேபோல் மனத்தையே கரைக்க முடியும். இது பெரிய யோக சித்தி. ராஜயோக சித்தி, அது நடந்தால்,

நாம் அகண்ட மௌனம் பூணுவோம்.

மனத்தின் அடியில் உணர்வும், உணர்வின் அடிப்படையாகச் செயலும், செயலுக்கு உறைவிடமாக உடலும் உள்ளன. இத்தொடர் நீண்டது. அனந்தமானது, முடிவற்றது. எண்ணத்திற்குரிய அஸ்திவாரம் இவை. மேலுலகில் ஜோதியுண்டு. சப்தம் பிறந்த இடம் அது. சப்தம் பிறப்பதற்கு முன் அது ஜோதியாக இருந்தது. சப்தத்தின் பிறப்பிடம் ஓம். சப்தம் என்பதைச் சப்த பிரம்மம் எனவும், சப்தத்திலிருந்தே சிருஷ்டி எழுந்தது எனவும் தத்துவம் கூறும். கீழிருந்து வரும் எண்ணங்கள் நினைவு, உணர்வு, செயலைக் குறிப்பன. மேலிருந்து வரும் ஜோதி சிருஷ்டியின் அற்புதங்களைக் குறிக்கும்.

இடையில் மனம் உள்ளது. ஞானத்தால் மனம் உயரவல்லது. உணர்வால் மனம் சிந்திக்க வல்லது. ஓம் பிறந்ததிலிருந்து உடல்வரை எண்ணமும், சொல்லும் பரவும் எனில்

எண்ணங்கள் முடிவற்றவை

என அறிகிறோம். பகவான் ஸ்ரீ அரவிந்தர் Thought seeks the Absolute எண்ணம் பிரம்மத்தை நாடுகிறது என்கிறார். நாம் பெற்ற அறிவை intellect என்கிறோம். அது ஜடமான மனம், அஞ்ஞானத்திற்குரியது. அறியாமை மனம். Intellect seeks oneness எனவும் கூறுகிறார். மனிதனுடைய அறிவு ஒருமைப்பாட்டை நாடுகிறது. ஆனால் அவன் சிந்தனை, எண்ணம் பிரம்மத்தை நாடுகிறது என்பது ஸ்ரீ அரவிந்தம். சிந்தனை என்ற சொல் சித் என்பதிலிருந்து வந்தது. அதுவே அதன் பிறப்பிடம்.

****

23, 24 ஆம் பக்கங்களிலுள்ள சில கருத்துகள்

  • வெண் கதிர்மேல் பரவி மறைந்த சூரியனைக் காணப் போனான்.
  • பிரம்மத்தின் பிரதிநிதியாக வாழும் ஆன்மா
  • வையகத்தைத் தாக்கும் எரிமலையான மனம்
  • ஒளியின் பாதையில் வேட்டையாடும் மனஉறுதி
  • சமுத்திரமே எழுந்து விடும் மூச்சு
  • தெய்வத்தின் சுவடான செயல்கள்
  • மரணப்பிடியிலுள்ள சிறு வாழ்வின் நாடகம்
  • சச்சிதானந்தத்தின் விளையாட்டு அரங்கம்
  • மாறுவேடம் புனைந்த மனிதன், மாயையான ரூபம்
  • அழியாத அநித்தியத்தின் புரியாத புனைவேடம்
  • காலத்தின் கதிக்குரிய யாத்திரீகன்
  • கூடுவிட்டுக் கூடு பாயும் பிரயாணி
  • புரியாத புதிர்களைத் தானே புனையும் தன்மை
  • ஊமை விதையில் ஊன்றிய பிரபஞ்சம்
  • நெளியும் புழுவில் மலரும் தெய்வம்
  • ஆத்மா கட்டவிழ்ந்து பரமாத்மாவை நாடும்
  • லோகமாதாவின் மார்பில் வளர்ந்தவன்
  • உழைப்பு, நம்பிக்கை, போர், அமைதி என்ற வட்டம்
  • மறைந்த சத்தியம், நழுவும் நித்தியம்
  • என்றும் காணாத இலட்சியத்தின் அச்சு
  • இறைவனின் பெருவெளியில் முரசுகொட்டி நுழைவோம்
  • நீண்ட மங்கலான புனித யாத்திரை
  • எழுவதும் வீழ்வதுமான எண்ணற்றச் சுழல்கள்
  • சக்தியின் அசையாத ஒருமை
  • நிலையற்ற உலகில் நிலையான நித்தியம்
  • அவன் கண்ணால் பார்க்கும் அவள் கண்கள்
  • அவன் முகத்தில் மலரும் அவள் முகம்
  • உடலும், ஆன்மாவும் தம் முத்திரை பெற்றன
  • பாதம்படாத மலை உச்சியை எட்டுவோம்
  • எவரும் காணாத ஏதோ ஒன்றைத் தேடுதல்

****

P 26 Deceived no more by form, he saw the soul. ரூபத்தைக் கடந்து ஆத்மாவைக் கண்டான்.

சிருஷ்டி என்பதை நாம் அறிவோம். ஸ்ரீ அரவிந்தர் சிருஷ்டியில் முதல் பகுதியைச் சிருஷ்டி எனவும், இரண்டாம் பகுதியைப் பரிணாமம் எனவும் கூறுகிறார். சிருஷ்டியின் சாரமாக அவர் கூறுவது,

  • பிரம்மம் சத் எனும் புருஷனாயிற்று. புருஷன் ஜீவன்.
  • ஜீவனுக்கு ஜீவியம் உண்டு.
  • சக்தி ஜீவியத்திலிருந்து வெளிப்படுகிறது.
  • சக்தி ரூபம், குணம் பெறுகின்றது.
  • ரூபமும், குணமும் தோற்றம்.
  • அதைக் கடந்த நிலையில் ஜீவியமும், அது வெளிப்படுத்திய சக்தியும் உண்டு.
  • ஜீவியத்தைக் கடந்த ஜீவன் ஆத்மா.

பொருள்களின் ரூபத்தைக் காணும் நாம் ரூபமே பொருளெனக் கொள்கிறோம். ஆத்மாவே அடிப்படை. ரூபத்தினடியில் மறைந்துள்ள ஆத்மாவைக் காண திருஷ்டி வேண்டும்.

இப்பக்கத்திலுள்ள இதர கருத்துகள் :

  • விவேகம் அவனை உயர்த்தி ஆத்மாவின் சிற்பியாக்கியது.
  • வையகத்தின் இரகஸ்ய அரண்மனையைக் கட்டியவன்.
  • காலத்தைக் கடக்க விழையும் காலத்தின் துளி.
  • சுதந்திரமும், சாம்ராஜ்யமும் மேலிருந்து அழைக்கின்றன.
  • ஆத்மாவின் விடியல் நிலத்தில் தெளிகின்றது.
  • ஜீவன் வளரும்பொழுது மனிதகுலத்தின் கட்டவிழ்கிறது.
  • பெரிய ஆத்மா பெரிய லோகத்தைக் காண்கிறது.
  • அறிவு வகுத்த அரண்களை ஞானம் அழிக்கிறது.
  • மனம் உயர்ந்து ஆத்மா பிரம்மத்துள் புதைகிறது.
  • முதல் அடி பூமியைக் கடந்து பரவெளியாக்குகிறது.
  • மூடிய இரகஸ்யக்குகையை அடைந்து நின்றான்.
  • எளிய செயலை அற்புதச் செயலாக்கினான்.
  • தெய்வீகக் காரியத்தைச் சாதாரணச் செயலாக்கினான்.
  • இயற்கைக்கு எட்டாத இலட்சியங்கள்.
  • ஜீவனுள் பொதிந்த இரகஸ்யம் தெரிந்தது.
  • மனத்தின் எண்ணத்தையும், இதயத்தின் உணர்ச்சியையும் பெற்றது.

****

Calling the adventure of Consciousness & Joy துணிச்சலான ஜீவியத்தின் சந்தோஷத்தை அழைப்பது

சத்பிரேம் என்ற பிரெஞ்சுச் சாதகர் அன்னையை நெருங்கி வந்த பொழுது அவரை அன்னை பூரணயோகத்தைப்பற்றி ஒரு புத்தகம் எழுதச் சொன்னார். அவர் எழுதினார். அந்நூல் உலகில் பிரபலமாயிற்று. அந்நூல் வெளியான பின் ஆசிரமம் வந்த மேல் நாட்டார் எவரையும் "எப்படி அன்னையைத் தெரிந்து கொண்டீர்கள்?'' எனக் கேட்டாலும் இப்புத்தகத்தின் மூலம் அறிந்தேன் எனப் பதில் வரும். அவர் எழுதிய புத்தகத்தின் பெயர்,

Adventure of Consciousness or Sri Aurobindo

Adventure என்பதற்கு நேரடியான தமிழ்ச்சொல் தெரியவில்லை. இருப்பது அத்தனையையும் விட்டு இல்லாததை தேடுவது என்பது ஒரு பொருள். வீரச் செயல் என்பது மற்றொன்று. முழு risk எடுத்துக்கொள்வது அடுத்த அம்சம், இத்தனையும் சேர்ந்தது adventure என்பதாகும்.

மலை ஏறுபவன், உலகம் சுற்றப் புறப்படுபவன், எதிரிகளை அவர்களிடத்தில் போய்ச் சந்திக்க முன் வருபவன், கரணம் தப்பினால் மரணம் என நிலையை விரும்பி நாடுபவனை adventurer என்கிறோம். இவர்களில் நூற்றில் ஒருவர் தப்பிப் பிழைப்பார். ஆயிரத்திலொருவர் வெற்றியடைவார். வாழ்க்கையில் பெரிய adventure எது என ராஜாஜி விவரிக்கும் பொழுது, "சிறுவயதில் திருமணமாகி மாமியார் வீட்டிற்குப் போகும் பெண் சந்திப்பது பெரிய adventure'' என்றார்.

ஐயங்காரான ராஜாஜி செட்டியார் காந்திஜி மகனுக்கு அந்த நாளில் பெண் கொடுத்தது ஒரு adventure ஆகும். 1919இல் பிரிட்டிஷ் சர்க்கார் இந்தியப் பத்திரிகைகள்மீது கைக்கூலிகளை ஏவியபொழுது இந்துப் பத்திரிகை, "நாங்கள் தேசபக்தியினின்றும், பத்திரிகை தர்மத் தினின்றும் வழுவமாட்டோம்'' என்று எழுதியது அதுபோன்ற செயல்.

ஹிட்லர் ஐரோப்பாவை முழுவதையும் வென்றபின் இங்கிலாந்து தனியாக நின்று எதிர்த்துப் போராடியதும் அதுபோன்ற செயலாகும். மதுரை மன்னனை நீதிகேட்டு கண்ணகி தன் நிலையை விளக்கியது, நவகாளிக்கு காந்திஜி போலீஸ் உதவியை மறுத்துப்போனது, ராஜஸ்தானில் வினோபாஜி கொள்ளைக் கூட்டத்தினரைச் சந்தித்து போலீஸுக்குச் சரணடையச் சொல்லியது, இந்து முஸ்லீம் கலவரத்தில் நேரு தைரியமாக நடந்தது, பெருந் தீவிபத்தில் தீயினுள் நுழைந்து உயிரைக் காப்பாற்ற முயல்வது, கோர்ட்டில் தனக்கெதிரான செய்தியைச் சொல்ல - உண்மை என்பதால் - முன்வருவது, கப்பல் மூழ்கும் பொழுது 400 பேர் விலகி குருடனுக்குத் தப்பிக்க வழிவிடுவது போன்ற செயல்கள் அப்படிப்பட்டவையாகும்.

யோகம் என்பது உடலை ஆராய்ச்சிக்கூடம் (laboratory) என மாற்றுவதாகும். விஞ்ஞானி பிராணிகள் மீது சோதனை செய்தால் யோகி அதுபோன்ற சோதனையைத் தன் உடல், மனத்தின் மீது செய்ய வேண்டும். சோதனை தவறினால் உடல் நோயுறும், மனம் ஸ்வாதீனத்தை இழக்கும் - பைத்தியம் பிடிக்கும். இங்கு தன் உயிரை யோகி risk செய்ய வேண்டியிருக்கிறது எனில் adventure of consciousness எனில் என்ன? மனத்திற்கு மேல் ஆன்மாவின் 4 பகுதிகளைக் கடந்து சத்திய ஜீவியம் வந்து ஜீவியத்தை (consciousness) அடையவேண்டும்.

அது தெய்வநிலையைக் கடந்தது. அங்கு கிடைக்கும் ஜீவியம் Mother's consciousness, அன்னை ஜீவியம். அது கிடைத்தபின் அதை இழக்கும் வகையில் செயல்படுவது Adventure of Consciousnessஆகும்.கிடைத்தற்கரிய அன்னை ஜீவியம் கிடைத்தபின் அதைக் கடந்து செல்ல எடுக்கும் யோக முயற்சி adventure of consciousness ஆகும்.

****

 

  P. 34. There  only were Silence and the Absolute

மௌனமும், பிரம்மமும் மிகுந்தன

ஒரு பரந்த மைதானத்தில் நாம் அமைதியைக் காண்கிறோம். பெருங்கூட்டம் அமைதியாக இருப்பதுண்டு. தியானத்தில் அமைதியுண்டு. சோகத்திலும் அமைதியுண்டு. உலகில் வாழ்வுக்குரிய அம்சங்கள் கணக்கில்லை. எந்த அம்சத்திற்கும் அதற்குரிய அமைதி (silence) உண்டு.

சப்தமில்லாத அமைதியை நிசப்தம் என்போம். எண்ணமற்ற அமைதியை மௌனம் எனக் கூறுவர். சிந்தனையில் திறனை இழந்த மனத்தின் அமைதி பேரமைதி. பிரம்மம் குணங்களற்றதால் அமைதி என்ற குணத்தையும் பிரம்மத்திற்குக் கற்பிக்க முடியாது. முடிவான அமைதி பிரம்மத்திற்குரியது. அதை ஸ்ரீ அரவிந்தர்,

Silence behind Silence என்கிறார்.

மௌனத்தைக் கடந்த மௌனம்.

இதுபோன்ற சொற்றொடர்கள் The Life Divineஇல் ஏராளமாக வருகின்றன. அவை மந்திர சக்தி வாய்ந்தன. மந்திரமாகப் பயன்படக் கூடியது மேற்சொன்னது. ஆங்கிலத்தில் சொன்னாலும், தமிழில் சொன்னாலும் சக்தி குறையாது. பகவான் எழுதியது என்பதால் ஆங்கிலத்திற்கு சக்தியுண்டு. தாய்மொழி உணர்வைத் தொடும் என்பதால் தமிழுக்கு சக்தியுண்டு. மொழிபெயர்ப்பால் தன் சக்தியை அழியா இலக்கியம், அமர காவியம் இழக்காது. அது மட்டுமன்று. இதை நினைத்தாலே அதன் மந்திர சக்தி செயல்படும்.

  • அவன் வாழ்வின் அஸ்திவாரம் காலத்தைக் கடந்தது.
  • அசையாத அகண்டம் அசைவுடன் கலந்தது.
  • ஊமை ரூபம் உலகத்தை அடக்கியது.
  • அசைவற்ற அமைதியில் புதுமையாக மனம் பிறந்தது.
  • திருஷ்டியின் எண்ணம்.
  • கருத்து கனியும் குரல்.
  • ஜடத்தின் ஈர்ப்பு, நம் உடலை இழுக்கிறது.
  • ரூபமற்ற சக்தி, ஆதியின் ஜோதி.
  • கடந்ததின் இனிமை, காலத்தின் கரு.
  • ஒளிமிகுந்த படபடப்பு ஒடுங்கி வரும் நேரம்.
  • பொன் போன்ற நாளின் மெதுவான தோல்வி.

****

 

Comments

Thanks gurunandri 

Thanks guru

nandri 

Thavathiru Sri Karmayogi

Thavathiru Sri Karmayogi ayya, en ulam urugha nandriyai thangalin padhagaluku samarpanam seyghiren.



book | by Dr. Radut