Skip to Content

கணவன், மனைவி

மனித வாழ்விலுள்ள ஒரே இன்பம் இல்லறத்தினுள் உள்ள நெருக்கமான உறவு என்று அன்னை கூறியுள்ளார். ஒருவர் மனதால் அடுத்தவரை முழுவதும் ஏற்றுக்கொண்டவர் எனில் அவர்கள் சந்திப்பில் தம் வயமிழந்து ஒருவரோ, இருவரோ தூக்கத்தில் ஆழ்வது அதன் புனிதத்திற்கு அடையாளம் என்பது அன்னை கூறியது. இறைவனை நிஷ்டையில் ஆன்மாவால் ஏற்பவர் பெறுவது சமாதி நிலை. மனதால் தாம்பத்யம் இனிய உணர்வால் கனிவது நம்மைத் தேடி வரும் தூக்கம். நட்புக்கும் இவ்வுயர்வுண்டு என்றாலும் இன வேறுபாடில்லாத இடத்தில் இயற்கை பூர்த்திபெறுவது உணர்வோடு நின்று விடும். ஆண் பெண் உறவே, இருவர் உறவைப் பூர்த்தி செய்யக் கூடியது.

ஓருயிரும், ஈருடலும் என்பது வழக்கு. ஆன்மீகத்தில் உடலின் சூட்சுமம் உயர்ந்த நிலையை அடைந்தால் ஈருயிரும், ஓருடலும் என்று இரு உடல்கள் சூட்சுமமாகச் சேரும் என்கிறார் பகவான். அந்நிலையும், இருவர் சேர்வதைப் பூரணப்படுத்தாது, உடல்கள் சேர்ந்தே பூரணம் பெறமுடியும்.

திருமணமும், புத்திர சந்தானமும் முதல் நிலை ஐக்கியம். அது விலங்குக்கும் உண்டு. அறிவு ஒன்று தவிர மனிதவாழ்வு விலங்கின் வாழ்விலிருந்து வேறுபட்டதில்லை என்கிறார் பகவான். இரண்டாம் நிலை ஐக்கியம். ஆசையால் உயிர் மற்றவர் உயிருடன் சேர்வதாகும். அதையே ஓருயிர் என்கிறோம். திருமண வாழ்வில் மனம் மனத்தோடு ஒன்ற வாய்ப்பில்லை. திருமண வாழ்வு அன்றாடத் தேவைகட்கும், சமூக நியதிகட்கும் உட்பட்டது. அறிவுடை எண்ணங்கள் கணவன், மனைவிக்கு இருக்கலாம். ஆனால் அவை திருமண வாழ்வினுள் வருவதில்லை. அடுத்த நிலை ஆன்மா. ஆன்மா தன் யாத்திரையைத் தனித்தே செய்ய வேண்டுமென்பதால், அங்கு இரு ஆன்மாக்கள் சேருவதோ, திருமண வாழ்வோ எழா. அதற்கடுத்தது சத்திய ஜீவியம். அந்நிலையில் ஓர் ஆன்மா, மற்ற எல்லா ஆன்மாக்களுடனும் இணைந்திருப்பதால், அடுத்த ஓர் ஆன்மாவுடன் மட்டும் கலந்த நிலையில்லை.

கணவனும், மனைவியும் முதல் நிலையோடு வாழ்வை முடிப்பதே உலக வழக்கு என்றாலும், நடைமுறையில் அடுத்த கட்ட ஐக்கியங்கள் - உயிர், மனம், ஆன்மா - காணப்படுவதில்லை என்றாலும், இருக்கக்கூடாது என்ற தடையில்லை. உடலால் கலந்தவர், உணர்வால் (உயிரால்) கலக்க முடியும், கலப்பதுண்டு. மேலும் மனத்தாலும் ஐக்கியமாகலாம். ஆன்மா ஐக்கியமாகத் தடை என எதுவுமில்லை. ஆனால் நடைமுறையில் இல்லை. பூரண யோகச் சட்டப்படி முதல் நிலையிலிருந்து அடுத்த உணர்வு நிலைக்குப் போனபின், உணர்வு உடலைப் பூர்த்தி செய்யும். அது ஏற்பட்டால் முதல் நிலை ஐக்கியம், இரண்டாம் நிலைப் பூரணம் பெறும். கணவன் காலையில்' க்ஷவரம் செய்து கொள்ளும்பொழுது சிறு காயம் ஏற்பட்டது. அடுத்த அறையிலுள்ள மனைவிக்கு மனத்தில் அதிர்ச்சி ஏற்பட்டு ஓடி வந்தாள். இது உணர்வின் ஐக்கியம். இது இருக்க முடியும், ஆனால் அரிது. இதுபோன்ற ஐக்கியம் ஆன்மா அளவிலும் இருப்பது (is a theoretical fact) தத்துவரீதியான உண்மை. நடைமுறையில் இருப்பதில்லை. அப்படியிருவர் ஒவ்வொரு நிலையாக உயர்ந்து வந்தால், சமூகம் அவர்களை ஏற்காது. சீக்கிரம் சமூகம் ஏதோ காரணத்திற்காக அவர்களை ஒதுக்கும், அல்லது அழிக்க முயலும். மேதைகளையும், ஞானிகளையும், அவதார புருஷர்களையும் வதைத்த உலகம் உண்மையான தம்பதிகளை விட்டுவைக்குமா? சமூகம் பொய்மையாலானது. நாம் கூறும் உறவு சத்தியத்தாலானது. சத்திய உறவு இவ்வுலகில் எழுவது சிரமம். எழுந்தால் சத்தியமாக உலகம் அதை அழிக்கும்.

இக்கட்டுரைகளில் நாம் முக்கியமாகக் கருதுபவை :

1) ஒற்றுமையற்ற தம்பதிகள் அன்னை மூலம் எப்படி ஒற்றுமையாகலாம்?

2) சுமுகமான தம்பதிகள் வாழ்வில் மனவளத்தை உயர்த்தும் வழியுண்டா?

3) சுமுகத்திற்கும், இதர வாழ்வின் அம்சங்கட்கும், குறிப்பாகச் செல்வத்திற்கும் என்ன தொடர்பு?

4) வாழ்வில் வரும் வசதி தம்பதிகளிடம் பிணக்கையும் ஏற்படுத்துவதுண்டு. அன்னையிடம் வரும் வசதி சுமுகத்தை அதிகப்படுத்த வேண்டுமல்லவா?

5) தாம்பத்ய வாழ்வின் இலட்சியம் என்ன? பக்தருக்கு அதில் மாறுபாடுண்டா?

6) எட்ட முடியாவிட்டாலும், அன்னை கோட்பாட்டின்படி தம்பதிகன் வாழ்வின் உயர்ந்த இலட்சிய சிகரம் எது?

7) தாம்பத்ய வாழ்வு எந்த அளவில் வாழ்வைச் சேர்ந்தது? அதன் தனிச் சிறப்பு எது?

8) நம்மைச் சுற்றியுள்ள தம்பதிகளில் சிலர்.

9) திருமணம் கூடாது என்று கூறும் அன்னையின் அருள் எந்த அளவில் எப்படித் தம்பதிகள் வாழ்வில் செயல்படும்?

10)அன்னையை அடையத் தம்பதிகள் வாழ்வு பயன்படுமா?

மேற்கூறியவற்றிற்குப் பதில் கூறுமுன் பொதுவான பல கருத்துகளை நாம் அறிய வேண்டும். அவையாவன,

 • திருமணம் என்பது இறைவனுக்கும், இயற்கைக்கும் தேவையில்லாதது.
 • பொதுவாகத் திருமணப் பிரச்சினைகள் வாழ்வுப் பிரச்சினைகளேயாகும்.
 • திருமணத்திற்கே உரிய பிரச்சினைகள் உண்டு. அவற்றுள் தலையாயது ஒருவர் அடுத்தவரை அதிகாரம் செய்ய விரும்புவது.
 • பணம், ஜாதி, மரியாதை, கொடுக்கல் - வாங்கல், வயது, சொத்து ஆகியவை வாழ்வில் பிரச்சினைக்குரியன. அவை திருமணத்துள் வந்தால் அவை திருமணப் பிரச்சினைகளாகா, வாழ்வுப் பிரச்சினைகளேயாகும்.
 • திருமணம் சமூகம் செய்த ஏற்பாடு.
 • நாட்டின் நாகரீகம், பண்பு சமூக நியாயத்தை நிர்ணயிக்கும். அவையே திருமணப் பிரச்சினைகளையும் நிர்ணயிக்கும்.
 • வயது குறைவானால் பணிவு அதிகமாக இருக்கும். வயது அதிகமானால் பணிவு குறையும்.
 • பிறர் நம் இஷ்டப்படி இருக்க வேண்டும் என்ற நோக்கமே பிரச்சினைக்கு அடிப்படை.
 • நாம் பிறரை அனுசரித்துப் போவது நாகரீகம். அந்த நோக்கம் பிரச்சினையை விலக்கும்.
 • வாழத் தகுதியற்றவர், திருமணத்திற்கும் தகுதியற்றவர். தகுதியற்றவர், திருமணம் செய்து கொண்டு பிரச்சினை வந்தது எனில் அது திருமணப் பிரச்சினையல்ல. வாழத் தகுதியற்றவனின் வாழ்வுப் பிரச்சினை.
 • உயர்ந்த பண்புள்ளவரும், தாழ்ந்த பழக்கங்களுள்ளவரும் சம்பந்தம் செய்தால் எழும் பிரச்சினை, problem of lack of culture not a marriage problem, திருமணப் பிரச்சினையில்லை, பண்பில்லாத குறை.
 • திருமணத்திற்கு அடிப்படை, வாழ்வுக்குரிய அடிப்படையான ஆரோக்கியம், வருமானம், நல்ல பழக்கம். அவை குறைவதால் எழும் பிரச்சினை திருமணப் பிரச்சினையாகாது.
 • மற்ற உறவு, நட்புபோல் தாம்பத்ய உறவை முறித்துக் கொள்ள முடியாது என்பதால் திருமணத்தில் எழுபவை திருமணப் பிரச்சினைகளாகும்.
 • விடமுடியாத உறவு என்பதால், கிராக்கி செய்ய அதிக இடம் உண்டு. அதை அளவு கடந்து வலியுறுத்துவதால் தீர்க்க முடியாத பிரச்சினையாகிறது.
 • வாழ்வுப் பிரச்சினைகள், குணப்பிரச்சினைகள், பண்பற்ற செயலால் ஏற்படுபவை ஆகியவற்றை நீக்கினால் திருமணப் பிரச்சினைகள் சொற்பம். அவற்றைத் தீர்ப்பது எது.
 • திருமணச் சிக்கல் என்பதில் பெரும்பாலானவை வேண்டுமென்றே சிக்கலை ஏற்படுத்தி அதனால் ஆதாயம் பெற முயல்வதால் ஏற்படும்''சிக்கல்'களேயாகும்.
 • புதிய சம்பந்தம், கலப்புத் திருமணம், ஆகியவற்றில் பிரச்சினைகள் சற்று அதிகமாக இருப்பதற்குக் காரணம் திருமணமல்ல, இதர காரணங்களேயாகும்.
 • கணவன் மனைவி பிரச்சினைகள் 10 இருந்தால், இதில் 7,8 இதர குடும்பத்தினர் ஏற்படுத்துவதாகும்.
 • பெண்ணானாலும், பிள்ளையானாலும், திருமணமானவுடன் புதிய பழக்கங்கள் தவறாது வெளிப்படும். அதை முன்கூட்டி அறிய முடியாது.
 • தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்கள் எழுந்தால், அவற்றை ஏற்கும் மனப்பான்மையில்லாமல், தவிர்க்க முயன்றால் திருமணம் முறியும்.
 • பெற்றோர் முயன்று பிரச்சினை ஏற்படுத்தித் தம்பதிகள் வாழ்வைச் சீரழிப்பது ஓரளவுண்டு.

 • திருமணமான பெண்ணை வீட்டில் தாயார் வைத்திருக்கக்கூடாது என்பது போன்ற நீண்ட நாளைய அனுபவத்தை மீறுவதால் ஏற்படும் பிரச்சினைகள் சிக்கலாகும்.
 • ஆண்பிள்ளை சம்பாதிக்க வேண்டும், பெண் சமைக்க வேண்டும் என்ற அடிப்படைச் சட்டத்தை புறக்கணிப்பதால் எழும் பிரச்சினைகள் திருமணப் பிரச்சினைகளாகா.
 • தம் வருமானத்தைவிட உயர்ந்த நிலையை எட்டத் திருமணத்தைப் பயன்படுத்திப் பிரச்சினை உற்பத்தி செய்பவர் உண்டு.
 • இயல்பாகப் பிரியம் என்பதே இல்லாத கணவன், பாசமில்லாத தாயார் ஏற்படுத்தும் சிரமங்கள் திருமணத்திற் குரியவையல்ல, அவர்கள் சுபாவத்திற்குரியது. திருமணமே ஆகாவிட்டாலும் அப்பிரச்சினைகள் எழும்.
 • வசதியான வீட்டுப் பெண் வசதியில்லாத வீட்டில் வந்து படும் சிரமம் அந்தஸ்திற்குரியது, திருமணத்திற்கில்லை.
 • வறுமையில் வளர்ந்த பையன் வசதி வந்தபின் மனைவியைச் சாப்பிட அனுமதிக்காதது வறுமைக்குரிய பிரச்சினை.
 • மனம் அடுத்தவரை நாடும் நேரம் திருமணம் கரைந்துவிடும்.
 • இடையிலுள்ள தோற்றம் வெறிச்சென்றிருக்கும்.
 • பாதிக்கு மேற்பட்ட திருமணங்களில் பிரச்சினை கிடையாது. வேண்டுமென்று பிரச்சினையை உருவாக்குவது மன்னிக்க முடியாத குற்றம்.
 • Power Corrupts, absolute power corrupts absolutely. அதிகாரம் கண்ணை மறைக்கும். பூரண அதிகாரம் குருடனாக்கும் என்பது ஆங்கில வாக்கு. திருமணத்தில் அன்பு செலுத்தினால் அடுத்தவர் அதிகாரம் செய்ய ஆரம்பிப்பார். அது தவிர்க்க முடியாதது.
 • பெண்மை சுதந்திரம் பெற்ற பின்னும் ஆணின் அதிகாரத்தை விழையும்.
 • பெண்மையின் ஆட்சியை மனதால் போற்றுவது ஆண் ஆயிரம் ஆண்டுகட்கு முன்னும் அறிந்த உணர்வாகும். (பீர்பால் கதை)
 • ஆணும், பெண்ணும் மனத்தால் லட்சம் பேரை விழைவதை மகாத்மா காந்தி கூறியுள்ளார்.
 • உடலின் தேவையைப் பூர்த்தி செய்யும்பொழுது உருவம், வயது தடையில்லை என்பது புராணங்கள் கூறுவது.
 • மனத்தால் விஸ்வாசமாக இருக்க முடியாது. அது ஆன்மாவுக்கேயுரியது.
 • காதல் உணர்வு வேகமுடையது. வேகமுடையது என்பதால் நீடிக்காது.
 • உலகப் பெரு இலக்கியங்களில் காதல் வேகம் மரணத்தில் முடிந்தது உண்டு.
 • வேகம் இளமைக்குரியது. இளமை குறுகிய காலமுள்ளது என்பதால் நிலையானதல்ல.
 • பெண்மை இனிப்பதைப்போல் ஆணறிந்த உணர்வு வேறில்லை.
 • தன்வயமிழந்த அன்பு தணியாத நேரம் உண்டு. அது தன்னையறியாதது.
 • பிரியம் என்பதும், நியாயம் என்பதும் முரணான உணர்வுகள். பிரியத்திற்கு நியாயமில்லை. நியாயத்திற்குப் பிரியமில்லை.
 • மனம் கவர்ச்சியை நாடும். அதன் ஆயிரம் ஆபாசங்களை மீறியும் நாடும். மனம் பண்பை நாடக் கூடியதில்லை. ஆன்மாவே பண்பை நாடும்.
 • செயலைத் தூய்மைப்படுத்தலாம். உள்ளுணர்வுக்கு அத்தூய்மையில்லை.
 • உள்ளத்தையும், அதன் ஆழத்தையும் அறியாதவரை உள்ளம் தூய்மையை நாடும்.
 • ஆழ்ந்த உள்ளம் அனைத்தையும் விரும்புவது. அது தூய்மையை நாடுவதில்லை.
 • சமூகம் ஏற்கும் உயர்வு தோற்றப் பொலிவு.
 • ஜாதியைப் போற்றிய காலம் உண்டு, பணத்தைப் போற்றிய நேரமுண்டு, அதிகாரத்தை அளவுகடந்து நாடியதுண்டு. அதுபோல் உலகம் உள்ளத் தூய்மையை நாடியதில்லை.
 • நிலையான பொய்யே உலகத்தின் சத்தியம்.
 • காலத்தையும் கட்டுப்படுத்தவல்லது கற்பனைத் திறன்.
 • தவமும், யோகமும் செய்யாமல் பரமாத்மாவை அழைக்கும் திறனுள்ளது பெண்ணின் தூய கற்பு நெறி. காலனும் கற்பின் திண்மைக்குக் கட்டுப்பட்டதுண்டு.
 • கற்பின் திண்மை மனத்தின் தூய்மைக்குரியது. சமூகம் ஏற்கும் உண்மை அதுவன்று.
 • இயற்கை நியதிகளையொட்டி வளரும் நாகரீகம் தழைக்கும்.
 • பெரும்பாலும் நாகரீகம் இயற்கையினின்று மாறுபடும், எதிராகவுமிருக்கும்.
 • சில சமயங்களில் நாகரீகம் இயற்கையையொட்டி ஆரம்பித்து, பின் இயற்கையின் போக்குக்கு எதிராகும். எதிரானபின் அது அழியும். திருமணம் அத்தகையது.
 • நாடோடி மனிதன் ஊராகி, ஊர், ஜாதி, சமூகமாகி (community), விவசாயத்தை மேற்கொண்டபொழுது சமூகத்தின் அடிக்கல்லாக (unit) குடும்பம் எழுந்தது. குடும்பத்தின் கரு திருமணம்.
 • விவசாயம் தொழிலாக (industry) மாறியபின் ஊர், ஜாதி சமூகம், கூட்டுக் குடும்பம் நசித்தது. அத்துடன் திருமணத்தின் கரு அழிந்தது. எதிர்காலத்தில் உலகில் திருமணத்திற்கு உயிரில்லை.
 • சுமார் 100 ஆண்டுகளில் private property சொத்து என்பது இருக்காது என்கிறார் அன்னை.
 • திருமணத்தின் ஜீவன் கற்பு. கற்பு உலகெங்கும் பெண்ணுக்கு மட்டும் விதிக்கப்பட்டது. கற்பின் ஆரம்பம் சொத்து.
 • எவனும் பிறர் பிள்ளைக்குச் சொத்துக் கொடுக்கமாட்டான் என்பதால், பெண் தான் பெற்ற பிள்ளை கணவனுடையது என நிரூபிப்பதே கற்பு.
 • உலகில் எந்த மொழியிலும் ஆணுக்குக் கற்பு என்ற கருத்துடைய சொல்லில்லை.
 • கற்பின் அடிப்படையான சொத்து அழியுமானால், கற்பும் அழியும். அதனடிப்படையில் எழுந்த திருமணமும் எதிர்காலத்தில் மறையும்.
 • இக்கருத்துகள் இன்று சமூகம் ஏற்காதவை என்பதால், இன்றுள்ள நிலையில் திருமணத்தின் கூறுகளும், அங்கு அன்னை செயல்படுவதும் மட்டுமே நமக்கு முக்கியம்.
 • அன்னை அனைத்துத் துறைகளிலும் முன்னோடி. முன்னோடியான கருத்தை ஏற்றால் அன்னையை அதிகமாக ஏற்கலாம்.
 • மனிதன் சமூகத்தின் அங்கமாக இதுவரை இருந்தான். இந்நூற்றாண்டில் தனிமனிதனானான். From a social being, man has become an individual. எதிர்காலத்தில் அவன் ஓர் ஆன்மாவாக வேண்டும்.
 • சமூகத்தையொட்டி வாழ்ந்த மனிதன், தன் சொந்த அறிவும், உணர்வும் வழி நடத்தும் மனிதனாவது, இன்று மனிதன் முன்னோடியாவதாகும்.
 • திருமணத்தை இக்கருத்தை மையமாக வைத்துப் பார்த்தால் திருமணம் நறுமணம் வீசும்.
 • தன் சொந்தப் பார்வையில் மனிதன் தேற வேண்டுமானால், மனச்சாட்சிப்படி நடக்க வேண்டும். குறைந்தபட்சம் மனிதன் நல்லவனாக இருக்க வேண்டும்.
 • தன் கருத்துப்படி ஒருவன் நல்லவனாக இருக்க முயன்றால், அவன் நல்லவனாகவோ, கெட்டவனாகவோ, இருப்பான் எனினும் திருமணத்தை வளப்படுத்த அதுவே தற்சமயம் போதும்.

நல்லெண்ணம் மட்டும் உள்ள நல்ல மனிதனின் திருமண வாழ்வை அன்னை அபரிமிதமான அமுத ஊற்றாக்குவார்.

 • நல்லவனாக இருக்க முதல் நிபந்தனை அவன் தன் எல்லாக் குறைகளையும் உணர்ந்தவனாக இருக்க வேண்டும்.
 • குறைகள் அனைத்தையும் மனிதன் உடனே அழிக்க முடியாது. குறைகளை வலியுறுத்தாத மனப்பான்மை அவசியம். செயலில் தம் குறைகட்கு எதிராக வலிந்து நடக்கும் மனப்போக்கு தேவை.
 • தன் குறைகளை வலியுறுத்தாததுபோல், பிறர் குறைகளைக் காண மறுத்தல் அவசியம்.
 • பிறர் குறைகளால் பாதிக்கப்படாமலிருக்க, அவரது நிறைவுகளுடன் மட்டும் தொடர்பு கொள்ள வேண்டும்.
 • நம்மை நாம் ஏற்பதுபோல், பிறரை நாம் ஏற்கவேண்டும். கணவன் அதைப்போல் மனைவியை ஏற்கவேண்டும். மனைவி கணவனை ஏற்கவேண்டும்.
 • பூரண யோகத்தின் அடிப்படை சுமுகம்.
 • தம்மை ஏற்பதுபோல் தம்பதியை ஏற்கும் மனநிலையில் சுமுகம் உற்பத்தியாகும்.
 • சுமுகம் வளமான வாழ்வின் அடிப்படை.

இந்த ஒரு கருத்தின் முக்கியத்தை உணர்ந்து, தம்பதியை ஏற்று, சுமுகத்தை உற்பத்தி செய்து, அதைச் சுமுக மலரால் வளர்க்க முன் வரும் அன்பருக்குப் பிரார்த்தனையே இல்லாமல் தாம்பத்ய வாழ்வு, ஆதர்ச தம்பதிகள் என்ற பெயரைப் பெற்றுத் தரும். மனத்தின் மேல் நிலையும், தோற்றமும் பொலிவும் பெறும். உள்ளே மனம் மனமாகவே இருக்கும். மனத்தைக் கடப்பது யோகம் என்பதால் அவ்விளக்கத்தை இங்கு கருதவில்லை.

 • இவற்றால் பலன் பெற முனைபவர் வாழ்வின் சிறுமை கருந்து அறவே விடுபட்டவராக இருக்கவேண்டும்.
 • நான் பொய்யே சொல்வதில்லை என்பவர் எது பொய், எது மெய் என்று அறியாதவர்.
 • அதைச் செய்ய மன வலிமை வேண்டும்.
 • செய்ய முடிவு செய்து அன்னையைக் கேட்டால், வலிமை தானே வரும்.
 • வாழ்வில் சாதிப்பவன் வாழ்வை அனுபவிப்பவன்.
 • வாழ்வை உயர்ந்த முறையிலும் அனுபவிக்கலாம், தாழ்ந்த முறையிலும் அனுபவிக்கலாம்.
 • திருமண வாழ்வை உயர்ந்த முறையில் அனுபவிப்பவன், வாழ்வில் அதிக அளவில் சாதிப்பான்.
 • திருமணத்தில் சாதனையைத் தேடுபவன், வாழ்வில் நல்ல முறையில் சாதிக்கவேண்டும்.
 • சுதந்திரம் அதிகமானால், சாதனை அதிகமாகும்.
 • உடனுள்ளவர்க்குச் சுதந்திரம் அளிப்பது ஒருவர் சாதனையை அதிகரிக்கும்.
 • சுதந்திரம் ஏற்பட்டவுடன் பிறர் சுதந்திரம் அளித்தவரை அழிப்பர்.
 • தனக்குள்ள வலிமையின் எல்லைக்குள் தம்பதிக்கு அளிக்கும் சுதந்திரம் திருமண வாழ்வின் சாதனையின் உச்சத்தை நிர்ணயிக்கும்.
 • தம்பதியின் குறையை வலியுறுத்தாவிட்டால் திருமணம் வெற்றிபெறும். திருமணத்திற்கு யோகப்பாங்கை அளிக்க விரும்புபவர் தம்பதியின் குறையைத் தம் குறையாக ஏற்க வேண்டும்.*
 • பொய் மட்டும் சொல்லும் கணவனைப் பெற்ற பொய்யே சொல்லாத மனைவி தம் ஜீவியம் ஆழத்தில் பொய் என ஏற்க வேண்டும்.*

* Devotees can ignore yogic conditions in marriage. It is written for information.

 • பொறுப்பாக, உயர்வாக உள்ள மனைவியைச் சில்லரையான கணவனுக்குப் பிடிக்காது. சிறுபிள்ளைத்தனம், சின்னபுத்தி, சில்லரை மனப்பான்மையுள்ள மனைவியே அவனுக்கு ருசியாக இருக்கும்.
 • சிறுபிள்ளைத்தனமான தம்பதிகள் பல சமயங்களில் சண்டையிட்டாலும், அன்னியோன்யமாகவும், ஆசையாகவுமிருப்பார்கள்.
 • மனம் திறந்து பேசுவது எளிய தம்பதிகளிடம் இல்லாத பிரச்சினைகளை எழுப்பும்.
 • பாசமான தம்பதிகள் நல்லவர்களாகவோ, உயர்ந்தவர்களாகவோ இருக்க வேண்டும் என்பதில்லை. பாசம் மட்டுமிருந்தால் போதும். மற்றவை நிறைவாகவோ, குறைவாகவோ இருக்கலாம்.
 • கணவனும், மனைவியும் அடிப்படையில் rivals போட்டியிடும் மனப்பான்மையுள்ளவர்கள்.
 • யார் குடும்பம் உயர்ந்தது என்பதே அடிப்படையான பிரச்சினை.
 • திருமணத்தால் தாழ்ந்துவிட்டோம் என்று நிரூபிக்க இருதரத்தாரும் முனைவது போட்டிக்கும், சண்டைக்கும் வித்து.
 • ஒருவர் மனம் திறந்து பேசியபொழுது சொல்லிய தம் குறையை, அடுத்தவர் சுட்டிக்காட்டினால், அப்பொழுது ஏற்படும் பிளவு பின்னர் மறைவதில்லை.
 • மனைவி என் சொற்படி நடக்க வேண்டும் என்பது கணவன் மனம்.
 • கணவன் என் பேச்சைக் கேட்க வேண்டும் என்பது மனைவி.

 • இரண்டும் தவறு. அழகாக, நேர்மையாக, இனிமையாக சுவையாகப் பழகுதல் சரி.
 • சந்தேகம் திருமண வாழ்வுக்கு மனத்தளவில் முடிவு கட்டும்.
 • குறையுள்ளவர், பிறர் மீது சந்தேகப்படுவார்.
 • சந்தேகத்திற்கு விஷயமில்லாதபொழுது, சந்தேகத்தைக் கிளப்பும்படி நடப்பது அறியாமை. ஒருமுறை சந்தேகம் எழுந்தால், பிறகு அது போகாது.
 • நல்ல பெண்களுக்குக் கெட்ட பழக்கங்களைத் தாயார் போதிப்பதும், அடக்கமான பையன்களை அளவுகடந்து பெற்றோர் தவறு செய்யத் தூண்டுவதும், திருமணப் பிரச்சினைகளெனக் கூறப்படுகின்றன. தவறு செய்ய மறுக்கும் தம்பதிகட்கு இது பிரச்சினையாகாது.
 • எந்தப் பெண்ணும் மணக்க விரும்புபவனை மணந்தவள் வாழ்வும் சீரழிவதுண்டு. ஏராளமான இளைஞர்கள் விரும்பிய பெண்ணை மணந்தவன் வாழ்வு சுமுகமாவதும் உண்டு.
 • மறைந்துள்ள குணங்கள் வெளிப்படுவதால் ஏற்படுவது இது.
 • அந்தப் பழைய நாளில் கணவனை ஆட்டிப் படைத்தவளுண்டு. இன்று கணவனைக் கண்டு நடுங்கும் மனைவியுண்டு. சுபாவம் சமூக நியதியை மீறிக் கடுமையாக இருப்பதால் எழும் நிலை இது.
 • நெடுநாள் மனம் கசந்த திருமணத்திலும் பெரிய வீட்டுப் பிரச்சினை, நோய் வந்தபொழுது கணவனுக்கு மனைவியே ஆதரவு, மனைவிக்கும் அப்படியே. அந்த உண்மையை மனம் எப்பொழுதும் நினைவிலிருத்துவது நன்று.
 • ஒருமுறை மனம் ஒருவரை மலர்ந்து உவந்தால், அதன்பின் எவ்வளவு சிறப்பான தம்பதி அமைந்தாலும் அது மலராது. மனம் ஒரு முறையே மலரும்.

 • மனத்தின் மலர்ச்சி வேறு, உடலின் கிளர்ச்சி வேறு.
 • தம் குறையை அடுத்தவர் கண்டுகொள்ளக்கூடாது என்பது ஒரு நிலை.
தம் குறையை மீறித் தம்மைப் போற்ற வேண்டும் என்பது மற்றொரு நிலை.
தம் குறையை நிறைவாக அடுத்தவர் கொண்டாட வேண்டும் என்பது ஒரு மனம்.
தம் நிறைவை அடுத்தவர் அறியவில்லை என நினைப்பவர் திருமண உறவை அறியாதவராகும். இருவருக்கும் உள்ள தூரம் அதிகமானால் ஏதோ ஒரு சமயம் அந்நிறைவை ஏற்பதும் உண்டு.
 • ஒருவருக்கு அவரிழந்த வாழ்வை அளிக்க விரும்பித் திருமணம் செய்தவர், அடுத்தவர் தம் வாழ்வைப் பாழ்படுத்தக் கங்கணம் கட்டிக்கொண்டிருப்பதைக் காண்பார்.
 • கணவனையோ, மனைவியையோ நினைத்து நிறைவடைபவர்களில் பெரும்பாலோர் அவர்கள் பண்பின் உயர்வைக் கருதுவதில்லை. மற்ற சிறிய விஷயங்களுக்காகவே நிறைவடைவர்.
 • தாம்பத்ய வாழ்வு மணம் வீசக் குடும்பம் மணம் நிறைந்ததாக இருக்க வேண்டும். குடும்பத்திலும், ஊரிலும் இல்லாத நிறைவு திருமணத்துள் வர முடியாது.
 • நாட்டை ஆளவும், வீட்டைப் பராமரிக்கவும் தேவையான பக்குவம் ஒன்றே என அன்னை கூறுகிறார்.
 • நல்லது, கெட்டது கலந்துள்ள வாழ்வில் எந்தச் செயலிலும் நல்லதே முனைப்பாக இருக்கும்படி நடக்கும் வலிமை குடும்பத்தலைவருக்கும், குடும்பத்திற்கும் இருந்தால், வீடு பராமரிக்கப்படும்.

 • முரடன் அன்பை முரட்டுத்தனமாகவே வெளிப்படுத்துவான்.
 • சிறப்பான மனிதர்க்கே சிறப்பான திருமண வாழ்வமையும். மட்டமான தம்பதிகள் அறிந்த உயர்ந்தபட்சச் சிறப்பு சுமுகம்.
 • தெலுங்கு அரசர்களைத் தாயின் பேரால் குறிப்பிடுவார்கள். (மைதிலி மகன், தேவகி மகன் என்பார்கள். தகப்பனார் பெயரைக் குறிப்பிடுவது குறைவு)
 • மனைவி சம்பளமில்லாத வேலைக்காரி; கணவன் காஷியரான ஆண்மகன் என்ற வீடுகளுண்டு.
 • வாழ்க்கை எளியது என்பதால், குடும்ப விஷயங்கள் மறைபொருளாக உள்ளவரை மனம் நிம்மதியான திருப்தியடையும்.
 • ஓர் அளவுவரை அற்புதமான வாழ்வை அற்புதமான மனிதன் ஏற்படுத்தலாம். அடுத்தவர் குறையை மீறியும் ஓரளவு வெற்றி பெறலாம். அடுத்தவரும் மனத்தால் உயர வேண்டும் என்ற நினைவு மாயையாகும்.
 • நேர்மை, நாணயம், சத்தியம், நன்றியறிதல், நட்பு போன்று கற்பு மிக உயர்ந்த பண்பு. காலத்தையும் வெல்லக்கூடியது.
 • கர்மத்தையும் அரிபொருளாக வெல்லும் திறனுடையது.
 • மீனவர் வாழ்வில் மனைவியின் பிரார்த்தனை கணவனின் வாழ்வைக்(உயிரை) காப்பாற்றுவது அன்றாட நிகழ்ச்சி. இந்தச் சக்தியை அவர்கள் கண்டுகொண்டதால், நாணயம் தவறுவதில்லை. நாணயம் தவறினால் இச்சக்தி போய்விடும் என்பது அவர்கள் நம்பிக்கை.
 • மேல் நாடுகளில் தகப்பனார் பெயரைப் பிள்ளைகள் பெறுவார்கள். சமீபகாலமாகத் தகப்பனார் அல்லது தாயார் பெயரைப் பிள்ளை விருப்பப்படிப் பெறலாம் என்ற சட்டம் அமுலுக்கு வருகிறது.

 • திருமணமாகாதவன் பெற்ற குழந்தை சட்டத்திற்குப் புறம்பானது என்ற சட்டம் மாறி இனி அப்படிப்பட்டவர்கள் சட்டத்திற்குப் புறம்பானவரில்லை என்றாகிவிட்டது.
 • அறிவுள்ள நம்பிக்கை (trust) அல்லது அறிவில்லாத மூட நம்பிக்கை போன்ற நம்பிக்கை என்பதில்லாமல் திருமணம் உயிரோடிருக்காது.
 • பீர்பால், எல்லாக் கணவன்களும் மனைவி பேச்சுக்கு அடக்கம் என அக்பருக்கு நிரூபித்தார்.
 • அரபு நாட்டிலுள்ள கிணறு ஒன்றில் திருமணமான பின் தண்ணீர் யார் முதலில் சாப்பிடுகிறார்களோ அவர் அடுத்தவரை அடக்குவார் என நம்பிக்கையுண்டு. திருமணமானவுடன் தம்பதிகள் அக்கிணற்றுக்கு ஓடுவர்.
 • இதுவரை தம் வாழ்வில் நடக்காததைத் தம்பதியிடம் நடத்திக்கொள்ள முயல்வது ஆணுக்கும், பெண்ணுக்கும் வழக்கம். பொதுவாக அது தவறான உரிமையாக இருக்கும். நான் ஒரு ஜீவனை எதிர்பார்த்திருந்தேன், அதுவும் என்னைக் கைவிட்டது என்று கூறித் தம் அநியாயத்திற்கு அணை கட்ட முயல்வார்.

இந்த மனப்பான்மையே பூசலுக்கு ஆரம்பம்.

 • வெளியிலிருந்து வரும் கணவனைப், பல மாதம் கழித்து வருபவரானாலும் முகமலர்ந்து வரவேற்கும் பழக்கமில்லாதவருண்டு. எங்கள் பிரியத்தை வெளியிட்டுக் கொள்ளமாட்டோம். என்பார். ஊருக்கு அனுப்பும்பொழுதும் முதல் நாளே சொல்லாமல் விடைபெறுவார். வந்து வழி அனுப்புவதில்லை. கணவனும் அது போலிருப்பான். இது விலங்குணர்ச்சி; அவற்றிடையேயுள்ள பழக்கம். காட்டுவாழ்வு வீட்டிலிருப்பதைக் காட்டும்.
 • எத்தனை பிள்ளைகளிருந்தாலும், எவ்வளவு நாளானாலும் சுயநலமான கணவன்மார்கள் பிரச்சினை எழுந்தவுடன் முதலில் நினைப்பது ஓடி விடுகிறேன்.
 • கணவனுடைய செல்வமோ, செல்வாக்கோ போனபின் ஏன் இவர் வீட்டிற்கு வருகிறார் என்று மனம் நினைக்கும்.
 • 30 வருஷம் தறுதலையான வாழ்வை நடத்திய கணவன் வந்தபொழுது, இன்றாவது பணிவிடை செய்யக் கிடைத்ததே எனச் செய்தவர் ஒரு பெண்.
 • வீட்டைவிட்டு அடுத்தவனுடன் ஓடிய மனைவியைத் தேடிப் பிடித்து, அவள் காலில் விழுந்து அழைத்து வந்து குடும்பம் நடத்தியவர் ஒருவர்.
 • எது சரி, எது தப்பு என்பதில்லை. எது சௌகரியம், எது தேவை, எது ருசி என்பதே மனித வாழ்வின் நியாயம்.
 • அன்னையுள்பட எதையும் தம்பதிகள் ஒருவர் மீது மற்றவர் திணிப்பது முறையாகாது. பலன் தராது.
 • மேலெழுந்தவாரியாக ஏற்படும் பிணக்குகட்கெல்லாம் குணக்குறையே காரணம். அடிப்படையாக எழும் தகராறுகட்கெல்லாம் சுயநலமே காரணம்.
 • கணவனுக்கு ஊறு செய்யும் தீய உள்ளம் படைத்த பெண்களை வேதம் விவரிக்கிறது. அதையும் மீறி பிரம்மம் சாதிப்பதாக வேதம் கூறுகிறது.
 • தன்னைப் பாதிக்காத எந்தப் பொய்யைத் தாயார் கூறினாலும் பிள்ளைகள் அப்படியே ஏற்பார்கள். திருமணத்திற்குப் பின் தாயார் இடத்தை மனைவி ஏற்பாள்.
 • திருமணமான அன்றே வாழ்வு சுடுகாடாயிற்று, வாழ்க்கை சலித்துவிட்டது, ஓடிவிடலாம் என்றுணர்ந்தவர் சுமார் பத்தில் ஒருவர்.

 • தம் பெருமையை நிலைநாட்டப் பிறரைக் குறைத்துப் பேசுவதும், தாலி கட்டியபின் தம் குறையைப் பெருமையாக வெளியிடும் மனப்பான்மையும் முதல்நாளே செயல்படும்.
 • கணவன் மனைவி அன்யோன்யமாக இருப்பது பெரும்பாலோர்க்குக் கண்ணை உறுத்தும்.
 • அடிப்படையே போனால் மனிதன் தலைகீழாக மாறுவான். அந்தஸ்து, பணம் வந்து மனத்தை மாற்றுவதற்குப் பதிலாக, மனம் மாறிப் பணமும், அந்தஸ்தும் வருவது அன்னை முறை. அன்னையை ஏற்றால் மனம் தானே மாறும்.
 • யார் வீட்டுக்கு வந்தால் தூக்குப் போட்டு கொள்வேன் என்றாரோ, அவருக்குப் பதவி வந்ததும், அவர் வீட்டிற்குப் போய்ப் பெருமைப்படுகிறார். இது மனித இயல்பு. திருமணத்தில் மனம் இந்த உண்மையை மறக்கக் கூடாது.
 • எவரை ஊரைவிட்டு ஓட்ட முயன்றாரோ, அவர் காரில் வந்திறங்கியபொழுது ½ பர்லாங் அவருடன் நடந்து வழியனுப்புவது மனிதனுடைய 'பெருந்தன்மை'.
 • குருடனாகப் பிறந்த தம்பியைச் "சூர்" என்று - குருடு - கேலி செய்து வீட்டைவிட்டு விரட்டிய குடும்பம் அவர் ஞானியாகச் சூர்தாஸ் ஆனபின் வெளியூர் போய் தேடிப்பிடித்துக் கட்டி அணைத்துக் கொள்கிறது.
 • விரட்டியவர்களும் மனம் மாறுவது அன்னைமுறை. விரட்டுவதற்குமுன் அவர் மனம் மாறுவது அன்னை மீது நம்பிக்கை.
 • பெரிய மனிதன், பணக்காரன், ஆசை மனைவி திட்டினால் உரைக்காது. அதைப் பெருமையாகவும் மனம் நினைக்கும். திட்டியது மறந்து போகும். உறவு நினைவு வரும். நினைவு இனிக்கும்.

 • மாற முடியாது என்பது மனிதனுக்குப் பிரச்சினையேயில்லை. நேரம் வந்துவிட்டால் எளிதாக மாறுவான். பணம் வந்தபின் பணத்திற்காக மாறுவதைவிட, மனம் உயர்ந்து மாறவேண்டும்.
 • நம் அனுபவம் பிறரை நம்பமுடியாது. கேலியாக, குத்தலாகப் பேசுவார்கள். நம் விஷயம் தெரிந்தால் கெடுத்துவிடுவார்கள். வெட்கமில்லாமல் சின்னத்தனமாக நடப்பார்கள். இங்கிருந்து கனடா போன பெண், இங்கு மனிதர்கள் நன்றாக இருக்கிறார்கள். பிரியமாகப் பேசுகிறார்கள். உதவி செய்ய முன் வருகிறார்கள். நம்மூர் போலச் சொற்களே காதில் விழுவதில்லை என்றாள். அவர்கள் behaviour பழக்கம் உயர்ந்ததாக இருக்கிறது. அந்த உயர்ந்த பழக்கம் அருளைப் பெற்றுத் தரும். அதுவும் உணர்ந்த மனநிலையானால், அருள் நிலையாகச் செயல்படும்.
திருமணம் வெற்றிபெற அதுபோன்ற பழக்கம், அதற்குரிய மனநிலை வேண்டும்.
 • முதல்நிலை குடும்பம் - சமூகம் ஏற்கும் முறையான குடும்பம். அடுத்தநிலை குடும்பம் - மனமுவந்த நல்லவர் உள்ள குடும்பம். முடிவானது உயர்ந்த குடும்பம் - உயர்ந்த மனம் அன்னையை ஏற்றுச் செயல்படுதல்.
 • தம் சிறிய சௌகரியத்திற்காக மகனின் வாழ்வையே மாற்றும் பெற்றோர், முதல் மருமகள் எதிர்பாராத நல்ல பெண்ணாகி விட்டதால், அடுத்த மருமகள் வந்தால் முதல் மருமகள் மாறிவிடுவாள், குடும்ப சௌகரியம் பாதிக்கப்படும் என்பதால் அடுத்த பிள்ளைக்குத் திருமணமே வேண்டாம் எனத் தாயார் முடிவு செய்தாள்.
 • நெருக்கம் ஐக்கியமாக வேண்டி நினைத்தால், அதற்குத் திருமணம் பெரிய கருவி. இதே வாய்ப்பைத் தவறாகப் பயன்படுத்தி, ஐக்கியத்திற்குப் பதிலாக அதே தீவிரத்துடன் சண்டையிடுகிறார்கள்.

 • Except in the pages of fiction there is no ideal marriage என ஓர் இந்திய மேதை எழுதினார். ஆதர்ச தம்பதிகள் கற்பனை உலகில் நிஜமானவர் என்பது நடைமுறை.
 • எதிர்த்து மட்டும் பேசும் அழகான பெண், திருமணமானபின் எதிர்த்துப் பேசுவதில்லை என முடிவு செய்தாள். அவளை அறிந்த வயதான பெண்மணியான பேராசிரியர், "You do not know how much your husband adores and idolises you" என்றார். உள்ளத்தால் உயர்த்தி உன் உருவத்தை உன் கணவர் வழிபடுவது உனக்குத் தெரியுமா என்றார். அவர் உருக்கம், வழிபாடு எல்லாம் அவள் மூடிய வாய்க்குரியது. வாயைத் திறந்தால் கூசாமல் சன்னியாசம் கொள்ளலாம்.
 • மனம் அடுத்தவரை ரசித்தால் 'திருமணம்' செத்துப்போகும்.
 • மனிதன் பணிவான், அல்லது அதிகாரம் செய்வான், அடுத்தவரைச் சமமாக நடத்தமுடியாது. அதற்கு மனக்கட்டுப்பாடு தேவை. அடுத்தவர் குறை காணாத பெருந்தன்மை வேண்டும். மனிதத்தன்மை வேண்டும். அது அரிது.
 • அதிகாரம் செய்யாவிட்டால் மணவாழ்வு ஜீவனற்றுப்போகும். பெண் ஆணை நாடுவதே அதற்காகத்தான். அதிகாரம், அதிக காரமாகிவிட்டாலும் ஜீவனிருக்காது. அன்பால் பணிவதும், அதிக உரிமையை எடுத்துக்கொள்வதும் மணவாழ்வுக்கு உயிரளிக்கும்.
 • அறிவுள்ள பழக்கம் பெரும்பாலும் பிணக்கைத் தீர்க்கும். அடுத்தாற்போல் அனுபவம் உதவும். இலக்கிய அறிவு தம்பதிகளைப் பக்குவப்படுத்தும். இவற்றைக் கடந்த நிலையில் அன்னை எப்பொழுதும் உள்ளார்.
 • திருமணம் என்று முடிந்தால் அவள் எதிர்காலம் முழுவதையும் நிர்ணயிப்பது ஒரு மனிதன் என்பதால், அங்கு அளவுகடந்த அதிகாரம் சேரும். அதை நன்முறையில் மட்டும் பயன்படுத்த மனிதனால் முடியாது.

அன்னையை அறிந்தபின் நடக்கும் திருமணங்களில் வழக்கமான பிரச்சினைகள் பெரும்பாலும் இருக்கா. இரு குடும்பமும் பக்தர்களானால் தம்பதிகள் வாழ்வு நம்ப முடியாதபடி அமையும். கணவன் எந்த நாட்டுக்குப் போய் யாரைப் பார்த்தாலும், எந்த வேலையைப்பற்றிப் பேசினாலும் மனைவியைப் பற்றியே பேசுவான். அப்படித் திருமணமான பெண் ஆங்கிலம் கற்றபொழுது எழுதிய 500 வாங்கியங்களில் 100க்கு மேல் மாமாவைப் பற்றியது.

தன்னூரிலும், உறவிலும் உள்ள சுமார் 1000 பேர் தன்னிடம் வந்து அந்தரங்கமாகப் பேசித் தமக்கு conscience keeper என்று பெயரளித்தனர். அதன் விளைவாகத் திருமணமாகாத இவ்விளைஞரிடம் பெற்றோர், இளைஞர், கணவன், மனைவி வந்து தொடர்ந்து பேசினர். இவர் கண்ட பலன் ஒன்றே. அங்குள்ள எந்தப் பெண்ணையும் மணக்க அவர் மனம் சம்மதிக்கவில்லை. திருமணம் வேண்டாம் என முடிவு செய்தார். வயது 32, 33 என்றாயிற்று. அன்னை அன்பர் பழக்கமானார். அன்னையைப்பற்றி பேச வாய்ப்புக் கிடைத்தது. ஏதோ ஓரூரிலிருந்து பெண் வந்தது. இளைஞர் முடிவை மாற்றவில்லை. அபூர்வமான பெண் என்றனர். ஆஸ்பத்திரியில் நர்ஸிங் காலேஜில் ஆசிரியர். அதைக் கருதவும் அவரால் முடியவில்லை. மேலும் வந்த செய்திகளால், போய் விசாரித்தார். இந்தக் காலத்தில் இதுபோன்று ஒரு பெண் பிறப்பதரிது. யாரோ கொடுத்துவைத்தவர் என வாய் தவறாமல் செய்தி கிடைத்தது. அவருக்கு திருமணமாயிற்று. அதே பெண்ணை மணந்தார். திருமணத்திற்கு முன் அவளைப் பற்றிக் கேள்விப்பட்டது இன்றுவரை - 30 ஆண்டுகளாக - உண்மை எனக் கண்டார். அது அன்னை சூழல் செய்த அற்புதம்.

வாழ்வில் அன்னை நுழைந்தால் அனைத்தும் மாறும். எந்த நிலைத் திருமணமானாலும், அன்னை வந்தபின் அது ஓரிரு நிலை உயரும். திருமணத்தை உயர்த்த முன்வந்தால், அதற்கேற்ற மனநிலையை ஏற்றால், நிலைமை அற்புதமாக மாறும். எவரும் நம்ப முடியாத மாற்றம் ஏற்படும். ஓரிரு உதாரணங்கள்,

திருமணமான 15 வருஷங்கட்குப்பின் கணவனுக்கு நிரந்தரமான வேலையில்லை; வருமானம் ஏதும் சரியாக இல்லை; பிள்ளைகள் இனி மேற்படிப்பு, கல்யாணம் செய்ய வேண்டிய நேரம்; மனைவிக்குப் பீதி எழுந்தது. வீடு ரகளையாயிற்று. வீட்டிலிருக்கக் கணவனால் முடியவில்லை. மண்ணெண்ணை, தற்கொலை, போன்றவையே பேச்சு. தற்செயலாய்க் கணவன் ஆசிரமம் வந்தார். மனம் அமைதியடைந்தது. மனைவியும் வரவேண்டும் என்ற ஆசை. கூப்பிடப் பயம். கூப்பிட்டார். மனைவிக்கு எரிச்சல், மறுத்தார். ஒரு சமயம் மனைவியும் வந்தார். இந்தச் சாமி மூலமாகவாவது வழி பிறக்காதா என்று தோன்றியது. கணவனுக்கு வேலை கிடைத்தது. ஆர்ப்பாட்டங்கள் மறைந்து அமைதி வந்தது. நிரந்தர வழியை மனைவி நாடினார். கணவன் கொண்டு வரவேண்டியவற்றை, அன்னையைக் கேள் என்ற உபதேசம், ஆச்சரியமாகப் பலித்தது. 4, 5 வருஷங்களில் 800ரூபாய் மாதசம்பளம் 9500ரூபாய் ஆயிற்று.

அடிப்படைப் பொறுப்பில்லாத மனிதன். தேவைகட்கே வழியில்லாத குடும்பம். முதல் நிலைப் பிரச்சினை, எளியது. சீக்கிரம் தீர்ந்தது. எனவே எல்லாம் நல்லபடியாக மாறியது.1000 ரூபாய் சம்பாதிக்கும் பக்தனுக்குத் திருமணமாயிற்று. மனைவி நினைத்ததுபோல் வாழ்க்கையில்லை. படிக்காத வசதியில்லாத பெண் கடையில் வேலை செய்பவனைக் கட்டிக்கொண்டு பெரிய மனக்கோட்டைகளை எப்படிப் பூர்த்தி செய்வது? அவள் முதலில் செய்த காரியம் மாமியாரை வெளியே அனுப்பினார். அதனால் அவள் எண்ணம் பூர்த்தியாகவில்லை. தாய் வீட்டுக்குப்போய் வரமாட்டேன் என்றார். அதுவும் பிரச்சினையைத் தீர்க்கவில்லை. அவள் மனம் வசதியான வாழ்வை நாடுகிறது. அவளுக்கு வசதியான வாழ்வு அமைய வழியில்லை. தனக்கு அடங்கிய கணவன். அறியாமையின் வேகத்தை அவன் மீது காட்டினாள். எண்ணெயைப் புடவையில் ஊற்றிக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தாள். அன்னையை அலறி அழைத்தான். அன்றைய பிரச்சினை தீர்ந்தது. வருமானம் 3000ரூபாய் ஆயிற்று. அவள் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. முடிவாகக் கணவன் மனம் மாற முடிவு செய்தான். மனைவி அன்னை பக்தையானாள். வருமானம் ரூ.10,000/= ஆயிற்று, மனைவி மாறிய பின் வருமானம் உயர்ந்தது. தொடர்ந்தும் பல மடங்கு உயர்ந்தது. அவளிடம் ஏற்பட்ட மாற்றம் ஆச்சரியமானது. அடிப்படையில் கணவன் மனம்மாறி அன்னையை ஏற்றுக்கொண்டதாலேயே நிலைமை மாறியது. அவனை அறிந்தவரெல்லாம் அவன் வீட்டு மாறுதலை நம்ப முடியாமல் காண்கிறார்கள்.

திருமணப் பிரச்சினை என்பது வாழ்வுக்குரிய பிரச்சினைகள் திருமண வாழ்வில் எழுவதாகும். அதன் திருமண அம்சம் மட்டும் நம் கருத்துக்குரியது. இதர அம்சங்களை விலக்கி, திருமணம், என்ற அளவில் உற்பத்தியாகும் சிக்கல்களை மட்டும் கருதினால் அது,

Taking undue advantage of another

ஆதரவற்றவரை அநியாயமாக நடத்துவது என்ற மனப்பான்மையால் எழுவது. இந்த மனப்பான்மை மனிதனின் சிறிய மனப்பான்மை. கடந்தகாலத்தில் இதற்குப் பலியானவர்கள் மனைவி, மனைவி வீட்டார். இந்த நாளில் நிலைமை மாறுவதால் கொடுமை இடம் மாறுகிறது. கணவனும், மாமியாரும் பலியிடும் வரிசைக்கு வருகின்றனர். நாடு முன்னேறுவதால் பெண் விடுதலை பெறுகிறாள். அது தலைகீழே மாறி ஆண் அடிமையாகிறான். அன்னையின் கொள்கை,

அடிமைத்தனம் அழிய வேண்டும் என்பதாகும்.

அன்னையை ஏற்க மனம் அடிமைத்தனத்திலிருந்து விடுபட வேண்டும். பிறரை அடிமைப்படுத்த நினைக்கும்வரை நமக்கு அடிமை மனப்பான்மையிலிருந்து விடுதலையில்லை. இது திருமணத்திற்கு மட்டும் உரியதல்ல. பிள்ளை வளர்ப்பு, கூட்டாளி, நட்பு, ஆபீஸ் வாழ்க்கை ஆகிய அனைத்து இடங்கட்கும் உரியது. இங்கும் வாழ்வுக்கும், அன்னைக்கும் வித்தியாசமுண்டு. ஒருவர் பரந்த மனப்பான்மையால் அடிமைத்தனத்திலிருந்து தன்னை மீட்டு, எவரையும் அடிமைப்படுத்துவதில்லை என முடிவு செய்தால் வாழ்வு அதன் சட்டப்படி

அவரைப் பிறருக்கு அடிமையாக்கும்.

இது தவிர்க்க முடியாதது. அன்னையை ஏற்றுக் கொண்டவர்க்கு இவ்வுயர்ந்த நோக்கமிருந்தால், எவரும் அவரை அடிமைப்படுத்த முடியாது. பக்தர் ஒருவருக்கு வாழ்விலுள்ள எந்தத் திருமணப் பிரச்சினை எழுந்தாலும் - அவற்றை நூறு விதமாக நாம் காண்கிறோம் - அவர் அன்னையை மேலும் ஏற்றுக்கொள்ள முன்வந்து, அதைச் சாதிக்கத் தாம் எவருக்கும் அடிமையாவதில்லை, எவரையும் அடிமையாக நடத்துவதில்லை என முடிவு செய்தால், அன்றே அவர் திருமணம் பிரச்சினைகளிலிருந்து விடுபடும்.

எந்த வகையானத் திருமணப் பிரச்சினையானாலும் அவர்

 • அன்னையை ஏற்க முன்வந்தால்,
 • அதற்காக அநியாயத்தைக் கைவிட முயன்றால்,
 • அநியாயம் போகப் பொய், சின்ன புத்தியைக் கைவிட்டால்,
 • அவர் மனம் தூய்மை அடைந்து,
 • நேர்மை, சத்தியம், நாணயம், புனிதன் என்ற பெயர் ஏற்பட்டு,
 • திருமணச் சூழல் அன்னை சூழலாகி,
 • பிரச்சினை தீர்ந்து, திருமண வாழ்வு நிலை ஒரு படி உயரும்.

கற்பனை உலகிற்கே உரியது அன்பான திருமண வாழ்வு என்ற கூற்றை மனித வாழ்வில் அவர் திருமணம் உண்மையாக மாற்றும். இருவரும் அதை நாடினால் எளிதில் நடக்கும்.

- அன்னை உலகில்லாதவற்றைச் சாதிப்பார்.
- உலகில்லாத மனப்பான்மையுடையவர் அச்சாதனையை நடத்துவார்.

திருமண வாழ்வில் திருப்தி

வாழ்வைப் பூர்த்தி செய்ய நாடுவது திருமணம். இதுவரை இல்லாத திருப்தியை நாடி செய்வது திருமணம். இதுவரை இருந்த திருப்தியையும் அழிப்பது அதன் நடைமுறை. இலட்சிய தம்பதிகள் என சொல்லிக் கொள்ள அனைவரும் ஆர்வம் கொள்கிறார்கள். இலக்கியத்தின் இலட்சணம் திருமணம், அது வாழ்வில்லை என்பது அனுபவம். 'கணவன் மனைவி' என்ற கட்டுரையில் திருமணத்தின் அடிப்படைகள் எழுதப்பட்டுள்ளன. காதல், அழியாக் காதல், இலட்சியத் திருமணம், ஆதர்ச தம்பதிகள் என்ற கருத்துக்களைக் கருதாது, திருமண வாழ்வு திருப்தி தராது என்ற உலகம் கண்ட முடிவுக்கு நடைமுறையில் பயன் தரும் கருத்துக்களைக் கருதுவது இக்கட்டுரை. இதன் முடிவு,

முழு முயற்சிக்கு முழு திருப்தியுண்டு.

இக்கட்டுரைக்கு முக்கியமான கருத்துகள் :

1. முயற்சியின்றி பலனில்லை.
2. உறவு என்பது பிரியம், அதிகாரமில்லை.
3. அதிகாரம் செய்யக் கூடாது என்றால் அங்கு அன்பு சுரக்க வழியுண்டு.
4. முடிந்தால் எதையும் செய்வேன் என்பவன் மனிதனில்லை, அவன் கணவனாக முடியாது.
5. நடக்கும் என்றால் நடத்திக் கொள்வேன் என்பது நல்லதல்ல, அவள் மனைவியாக முடியாது.
6. என்னால் சண்டை போட முடியாது என்பவரால் சுமுகம் எழும்.
7. பிறர் குறை பிணக்கு.
8. மனம் மாற்றாரை நாடினால் மணம் இல்லை.
9. சுத்தம் என்பது கை சுத்தம், வாய் சுத்தம், மனம் சுத்தமாகும்.
10. சுத்தமில்லாதவர்க்கு சுத்தமாக எதுவும் கிடைக்காது.
11. உழைப்பில்லை எனில் வருமானமில்லை.
12. பொறுப்பில்லை எனில் வசதியில்லை.
13. பொறுமையில்லை எனில் எதுவுமில்லை.
14. முயற்சி, பிரியம், பண்பு, சுமுகம், சுத்தம், உழைப்பு, பொறுப்பு, பொறுமை எந்த ஸ்தாபனத்திற்கும் அடிப்படை. ஸ்தாபனங்களில் சிறந்த குடும்பம் அவையில்லாமல் உருவாகாது.

மனிதன் சந்திரனுக்கும் போகிறான் என்பது திறமை. திறமையால் குடும்பம் உருவாகாது. குடும்பத்தின் கரு பண்பு. பண்பு குடும்பத்தை உற்பத்தி செய்யும். திறமை அதை உயர்த்தும். வாழ்வின் அடிமட்டத்திலுள்ளவர் ஆயிரக்கணக்கில் உயர் மட்டம் போகும்பொழுது திருமண வாழ்வில் திருப்தியடைய முடியுமா என்பது கேள்வியில்லை. முயன்றால் முடியும். அடிமட்டம் இன்று தான் உயர்மட்டமாகவில்லை. எந்த நாளிலும் உயர்ந்தவன் ஒரு நாள் அடியிலிருந்து வந்தவன். உயரே உள்ளது அனைத்தும் கீழேயிருந்ததுதான் என்பது உண்மை. அன்று உயர நாளாயிற்று. இன்று சீக்கிரம் பயனடையலாம், சீக்கிரம் பலன் பெற முயற்சி பெரியதாகவும், சிறந்ததாகவுமிருக்க வேண்டும்.

முயல்வேன் என்பவனுக்கு முடிவில் திருப்தியுண்டு.

பொதுவாக அனுபவமில்லாததால் இளம் வயதினர் திருமணமான 10 நாள், 20 நாளில் விவாகரத்து செய்வது மலிந்துவிட்டபொழுது அமெரிக்க சர்ச்சுகள் திருமணத்திற்கென 15 நாள் பயிற்சியை ஏற்படுத்தினர். இப்பயிற்சி பெற்றவர்கள் அவசரமாக ரத்து செய்வதில்லை. இதைக் கண்டபின் அமெரிக்க சர்ச்சில் திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் இப்பயிற்சியைப் பெற்றிருக்க வேண்டும் என்று சர்ச் சட்டம் போட்டது.

 • விவரம் தெரியாமல் நடக்கும் குறையை விவரம் தெரிவது தடுக்கும்.
 • அனுபவமில்லாமல் எழும் குறைகளைப் போக்க பயிற்சி அளிக்க முடியும்.

தாலுக்காபீஸில் குமாஸ்தாவாகச் சேரும் பட்டதாரிகளில் சிலர் இன்று சர்வீஸ் முடியும்பொழுது டிப்டி கலெக்டராக வருகிறார்கள். அதே பட்டதாரிக்கு 1½ ஆண்டு பயிற்சி அளித்து, I.A.S.இல் ஆரம்பத்திலேயே டிப்டி கலெக்டராக்குகிறார்கள். ஒரு டிப்டி கலெக்டர் செக்ரட்டரியாகவும், கவர்னராகவும் ஓய்வு பெறுகிறார். அதற்கெல்லாம் அடிப்படை இந்த 1½ ஆண்டு பயிற்சி. டிப்டி கலெக்டர் ஒரு ஜில்லாவில் பாதியை ஆள்கிறார். திருமணம் என்பது குடும்பத்தை ஆள்வது. திருமணத்தில் திருப்தி வர பயிற்சி பெற முடியும், நாமே நமக்குப் பயிற்சியளித்துக் கொள்ள முடியும் என்று நாம் அறிய வேண்டும். அதுபோன்ற பயிற்சிக்கூடங்கள் பரவலாக வந்துவிட்டால் விவாகரத்து 50%லிருந்து 5% ஆகக் குறையும். அது இன்று இல்லாததால், நாமே அப்பயிற்சியைப் பெற முயல வேண்டும்.

 • திருமணத்தில் எழுபவை எளிய பிரச்சினைகள்.
 • பயிற்சி எல்லா எளிய பிரச்சினைகளையும் முழுவதும் தீர்க்கும்.
 • படிப்பு, பண்பு, நகர வாழ்க்கை, நாகரீகம் உள்ள குடும்பங்களில் குடும்பப் பூசல் குறைவாக இருப்பது, பூசலைத் தவிர்க்க பயிற்சி பெற முடியும் எனக் காட்டுகிறது.
 • படிப்பும், பண்பும், பல தலைமுறைகளில் தரும் பயிற்சியை, ஒரு பயிற்சி சில நாட்களில் தரமுடியும் என்பது எல்லாத் துறைகளிலும் அனுபவம். திருமணம் விலக்கில்லை.

எல்லா பயிற்சியும் எல்லோர்க்கும் தேவையில்லை. எந்தப் பிரச்சினை எழுகிறதோ பயிற்சி அதற்குத்தான் தேவை. திருமணம் என்பது உறவு. நெருக்கமான உறவு. உறவு என்றால் பிரியம். பிரியமாக மட்டுமிருந்தால் பிணக்கு வாராது. பிரியத்தைக் கண்டவுடன் மனித சுபாவம் அதிகாரத்தை நினைக்கும். அதிகாரத்தைக் கருதினால் பிரியம் மறையும், உறவு முறியும். யார் அடுத்தவரை அதிகாரம் செய்வது என்பது திருமணமான முதல் நாள், இரண்டாம் நாள் முடிவாகும். மனிதன் சூட்சுமமானவன். அதிகாரம் செய்ய அணுவளவு இடமிருந்தாலும் விட்டுக்கொடுக்க மாட்டான். ஆயிரமாண்டிற்கு முன் பெண் மண்ணாக இருந்த நாளிலும் எந்த கணவனும் மனைவி பேச்சைக் கேட்பவன் என்று உலகம் அறியும் வகையில் பெண் உள்ளூர ஆட்சி செலுத்தினாள். இன்று இந்தியாவில் பெண்கள் கார் ஓட்டுகிறார்கள். அமெரிக்காவில் ஓர் இந்தியப் பெண் கார் ஓட்டிச் சென்றாள். எவரும் கண்டு கொள்ளவில்லை. அமெரிக்காவிலுள்ள இந்திய ஆண்கள் இப்பெண்ணை கோபமாகப் பார்த்து முறைக்கின்றனர். அமெரிக்கா ஆனாலும், காலம் 2001 A.D. ஆனாலும், அதிகாரம் உள்ளவரை ஆண்மகன் அதை செலுத்துவான். இது மனித சுபாவம்.

 • நாடு முன்னேறுகிறது.
 • நாட்டின் முன்னேற்றம் படிப்பிலும், வசதியிலும், நாகரீகத்திலும் தெரிகின்றது.
 • அதே தொழிலாளி, கூலிக்காரன், வேலைக்காரி, இளைஞர்கள், பெண்கள் ஆகியவர்கட்கு சமூகம் தரும் மரியாதை உயர்வதும் நாகரீக சின்னம்.
 • நம்மால் முடிந்தாலும், நியாயமில்லாவிட்டால், நாகரீகம் இல்லாவிட்டால் செய்யக்கூடாது என்பது அதுபோல் நாகரீக சின்னம். அதுபோல் கடந்த 50 ஆண்டுகளாக சமூகம் கைவிட்டன பல. குழந்தைகளை அடிப்பது, நடுத்தெருவில் சண்டை போடுவது, சத்தமாக ஆபீசில் பேசுவது, Qவில் நிற்காமல் கூட்டமாக அடித்து மோதுவது போன்றவை குறைகின்றன. இது நாகரீக சின்னம்.
 • கணவனும், மனைவியும் இந்த சின்னத்தை அதிகமாக நாடினால், பூசல் குறைந்து மறையும், திருப்தி ஏற்படும். முழு திருப்தி ஏற்படும்.

மனைவியிடம் கோபப்பட்டால் பொறுத்துக் கொள்வாள் என்பதால் அவளிடம் கோபத்தைக் காட்டுவது, கணவனை ஏமாற்றினால் கோபப்பட மாட்டான் என்பதற்காக ஏமாற்றுவது என்பவை சிறு விஷயங்கள் என்றாலும், அவற்றை விட்டுக் கொடுக்க மனம் வராது.

சிறு விஷயங்களில் உள்ள பெரிய மனப்பான்மை பெரிய விஷயத்தைப் பூர்த்தி செய்யும்.

இதுபோன்ற சிறு விஷயம் பெரிய விஷமாகி 10 நாள் ஆர்ப்பாட்டம், பெண் தாய் வீட்டுக்குப் போனது, அடிதடி சண்டை வரை வந்தது பலர் அனுபவம். விஷயம் சிறியது என்றாலும் விட்டுக் கொடுக்க மனம் வாராது. ஏன் அவர் விட்டுக் கொடுக்கட்டுமே என்று தோன்றும்.

 

பெரிய பலனான திருப்தி சிறு விஷயத்தில் மறைந்துள்ளதும், மிகப் பெரிய பலனை தரும் என்பதும் வாழ்வில் நாமறிந்தும் பின்பற்றாத உண்மை.

அதிகாரம் செல்லாத இடங்கள் ஆயிரம் உண்டு. செல்லுமிடங்களும் அநேகம் உண்டு. கணவன் மனைவி சண்டையில், இதெல்லாம் ஆபீசில் செல்லுமா, உன் அண்ணனிடம் நடக்குமா, ஏன் தெருவில் காய்கறி விற்பவனிடமும் நடக்காது என்று வாதம் வருகிறது.

 • செல்லாத இடத்தில் அதிகாரத்தை செலுத்த முயல்வதில்லை.
 • செல்லுமிடத்தில் அதிகாரத்தை செலுத்த முயலாதது நாகரீகம்.
 • செல்லாமல் செலுத்தவில்லை, செல்வதால் செலுத்துகிறோம் என்பதைவிட ஒரு சட்டம், முறை, ஒழுங்கு நியாயத்திற்குக் கட்டுப்படுவது நாகரீகம்.
 • இது சுயக்கட்டுப்பாடு.
 • சுயக்கட்டுப்பாடு ஏராளமான சண்டை வாக்குவாதத்தை விலக்கும்.

இது லேசான மாற்றம். ஆனால் வீடே மாறிவிட்டதாகத் தோன்றும். உண்மையில் இது பெரிய மனமாற்றம்.

மனிதனுக்குக் கட்டுப்படுவதை விட மனத்தின் நியாயத்திற்குக் கட்டுப்படுவது நீடிக்கும்.

அடுத்தவர் மனதில் நியாயமில்லை என்றால் மனம் விட்டுப் போகும். அது சுயநலம் என்று தெரியும். சுயநலம் தலை எடுக்காமல் அதிகாரம் எழாது. நியாயமில்லாமல் சுயநலமாக இருப்பவர் அதிகாரத்திற்குப் பணியும்பொழுது மனம் வாடும், சுருங்கும், அதன்பின் உள்ள அன்பு போகும், பிறகு வாராது.

திருமணத்தில் மட்டுமல்ல, வாழ்வில் எல்லா இடங்களிலும் ஏராளமான கட்டுப்பாடுகளை நாம் ஏற்றுக் கொண்டிருப்பதால் வாழ்க்கை நடக்கிறது. திருமணத்தில் அதுபோல் நமக்குரிய கட்டுப்பாடுகள் ஏராளம். பண்பு வெளிப்பட, திருப்தி ஏற்பட நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டுப்பாடுகளில் முக்கியமானவற்றுள் பலவற்றை இங்குக் குறிப்பிடுவோம். இவை எல்லா இடங்களுக்கும் பொது என்றாலும், நாம் திருமணத்திற்காக மட்டும் இங்குக் கருதுபவை இவை. வயதான பெற்றோரை நாடி 5 பிள்ளைகள் தம்பதியுடன் வந்தனர். அது family reunion குடும்பம் ஒன்று சேரும் நேரம். சுமார் 50 ஆண்டாக இக்குடும்பத்தில் உடன்பிறந்தவர்கள், சண்டையிட்டதில்லை என்பதை சண்டையும் பூசலுமான குடும்பத்தில் வளர்ந்தவர் கண்டு இதன் இரகஸ்யம் என்ன? என்று கேட்டார். அவர் பெற்ற பதில்,

சிறு வயதிலேயே எங்கள் பெற்றோர் கற்றுக் கொடுத்தது ஒரு சட்டம். எவரிடமும் அரசியல், பணம், ஜாதி ஆகிய மூன்றைப் பற்றியும் விவாதம் கூடாது. இந்த சட்டத்தால் எங்கள் குடும்பத்தினர் யாரிடம் பழகினாலும் சுமுகமாக இருப்பார்கள். எங்கள் குடும்பத்தினுள் எப்பொழுதும் சுமுகம் உண்டு.

நண்பரிடையே தகராறு அதிகமாக எழுவது பணத்தால்தான். வாக்குவாதம் அரசியலுக்கு வந்தால் வாதம் சண்டையாக மாறுகிறது. ஜாதியைப் பற்றிப் பேசிவிட்டால், அதுவும் தவறாகப் பேசிவிட்டால், அதுவே கடைசி முறை சந்திப்பாகும். மேற்சொன்னது எளிய சட்டம். ஆனால் 50 ஆண்டு சுமுகம் தந்த சட்டம் அது. அது போன்று திருமணத்திருப்திக்காக நாம் பின்பற்ற வேண்டிய சட்டங்களில் முக்கியமானவை,

 • எந்த குடும்பம் உயர்ந்தது என்ற வாதம் எழக்கூடாது.
 • அடுத்தவர் குறையை சுட்டிக்காட்டுதல் அவசியம் தவிர்க்கப்பட வேண்டும்.
 • அடுத்தவரிடம் நிறைவு இருந்தால் அதை மனம் பாராட்ட வேண்டும், வாயால் எடுத்துக் கூறலாம். கூறுவதைவிட உண்மையாக நம் மனம் பாராட்டினால், அடுத்தவருக்கு அது தெரியும்.
 • கணவன் வீட்டார் குறை வேறொருவரிடம் காணப்பட்டால், அதை கணவன் முன்னால் கண்டிக்கக்கூடாது. அவரைத் தானே சொன்னேன் என்பது சமாதானமாகாது. தன் வீட்டுப் பழக்கம் குறையானது என மனைவி நினைக்கிறாள் என்றால் கணவன் மனம் புண்படும். அதுபோல் புண்பட்டால், அதன் பிறகு ஆறாது. மனைவி வீட்டு நல்ல குணம் மற்றொருவரிடம் காணப்பட்டால் அதை ஏற்பது, பாராட்டுவது, மனைவியின் மனத்தை நமக்கு நிரந்தரமாகச் சேர்க்கும்.
 • விவரம் தெரியாதவரிடம் எடுத்துச் சொல்வது நல்லது. நல்லதை எடுத்துச் சொல்வதுபோல் கெட்டதை சொல்லாமலிருந்தால் போதாது. மனத்திலிருந்து அதை எடுத்துவிட வேண்டும். மனத்திலிருந்தால் ஒரு நாள் வெளிவரும்.
 • அடுத்தவரிடம் பொறுக்க முடியாததை என்னச் செய்வது என்று கேட்கக் கூடாது. கணவனோ, மனைவியோ அடுத்தவரில்லை. பொறுக்க முடியாதது என்பது இல்லை. பொறுமையைக் கற்றுக்கொள்ள ஏற்பட்டது என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை நாம் அதிகாரம் உள்ள இடத்தில் செய்கிறோம். தாம்பத்திய உறவில் அவசியம் செய்யவேண்டும். அதிகாரத்திற்குப் பணிவதுபோல் அன்பிற்குப் பணிந்தால், இல்லாத அன்பும் சுரக்கும்.
 • மாற்ற முயலக்கூடாது. மாற்ற முயன்றால் பழக்கத்தை மாற்றலாம். சுபாவத்தை மாற்ற முயலக் கூடாது. அது நிரந்தரப் பிளவுக்கு வழி செய்யும். நிர்ப்பந்தத்தால் இன்று ஏற்றாலும், சந்தர்ப்பம் மாறி, தம்பதிகள் பிரிய அது வழி செய்யும். எந்த சுபாவம் மாறப் பிரியப்படவில்லையோ அது விலகும் வழியை வாழ்வில் உற்பத்தி செய்யும்.

 • படித்த குடும்பத்தில் படிக்காத மாப்பிள்ளை வருவதுண்டு. அவன் தன்னை அதிபுத்திசாலியாகக் கருதுவதும் உண்டு. மாமனார் வீட்டில் அவன் படிப்பின்மையை கண்டு கொள்ளாமலிருப்பது கடினம். ஆயிரம் வழியாக அது வெளிப்படும். அந்த சூழ்நிலையில் மாமனார் குடும்பம் தன்னைக் குறைவாக நினைக்கவில்லை என்ற கருத்துப்பட அவனே நினைக்கும்படி நடக்க அதிகபட்ச பண்பு வேண்டும். ஒரு சொல் சொன்னாலும் இது போன்ற விஷயத்தில் அதுவே காலத்துக்கும் நிலைக்கும். சொல்லாமலிருக்க முடியாது. அது சண்டை என்று ஏற்பட்டுவிட்டால் முதலில் அதுதான் வெளிவரும். நம் மனதிலுள்ள அப்பெரிய குறை மருமகன் கண்ணில்படாமல் மற்ற விஷயங்களை வாக்குவாதம் செய்யவோ, சண்டை போடவோ பெரிய பண்பு போதாது. பக்குவமே தேவை.
 • எந்தக் குறையையும் முயன்று ஓரளவு நிறைவு செய்யலாம். அதைச் செய்ய வேண்டும். மனக் குறையை மாற்ற முடியாது. அதனால் ஆரம்பத்திலிருந்தே கூடியவரை மனத்தில் குறை எழ அனுமதிக்கக்கூடாது.
 • மனைவி, கணவனை ஏற்பதை, கணவன் மனைவியை ஏற்பதை மனதால் ஏற்க வேண்டும். மனம் அடுத்தவரை ஏற்காவிட்டால் மணம் இருக்காது. இதுவரை இல்லை என்றாலும், முயன்று மனத்தை ஏற்றுக்கொள்ளச் சொல்வது அவசியம்.
 • என்னுடைய 36 வருஷ சர்வீசில் எனக்கு Memo வந்ததில்லை, Black mark வந்ததில்லை என்பவர் பலர். திருமணத்தில் Red entry இருக்கவேண்டும். Memo பெறக்கூடாது. பெற்றால் அதை ஈடு செய்ய Red entry பெறவேண்டும்.
 • Decision-making என்ற கட்டுரையில் எப்படி காரியம் நிறைவேறும்படி முடிவுகள் எடுப்பது என்பது விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. புறம் நிறைவாக இருந்து, அகம் குறையாக இல்லாவிட்டால் காரியம் நிறைவேறும் என்று அம்முடிவு கூறுகிறது. குடும்பத்தில் கணவன் முக்கியமான விஷயங்களில் மனைவியிடம் இந்த சட்டத்தைப் பின்பற்றினால், அதே சட்டத்தை மனைவியும் பின்பற்றினால் இரண்டு பலன் இருக்கும்.

1. செய்யும் காரியங்கள் அனைத்தும் கூடிவரும்.
2. கணவன் மனைவியிடையே சுமுகம் நிலவும்.

ஒருவர் பின்பற்றினாலும் பெரும் பலன் வரும். முழுப்பலன் வர இருவரும் பின்பற்ற வேண்டும். உதாரணம் : வீடு கட்டுவது, பெரிய courseஇல் பிள்ளையை சேர்ப்பது, முக்கிய திருமணத்தில் பெரிய வரிசை வைப்பது, வடநாட்டு tour போவது போன்ற எந்த முக்கிய வேலையானாலும், அது நம் சக்திக்குட்பட்டதா, அதற்குரியவை, சாதனங்களிருக்கின்றனவா என்பவை எளிதில் விளங்கும். புறம் என்பது rational factual situation அறிவுக்குரிய விவரங்கள். அகம் என்பது அபிப்பிராயம். புறமும், அகமும் நிறைவான காரியங்களை மட்டும் செய்ய இருவரும் முடிவு செய்தால், எல்லாக் காரியமும் கூடிவரும். அதைவிட முக்கியமாக காரியம் கெட்டுப்போனால் பிறரை கணவனை, மனைவியை குறை கூறும் சந்தர்ப்பம் எழும். அது இம்முறையால் தவிர்க்கப்படும்.

சமர்ப்பணம் பயின்றவர் கணவன் மனைவி உறவை சமர்ப்பணத்திற்குட்படுத்தினால் இத்தனை விவரங்களும் நம் முயற்சியின்றி சமர்ப்பணத்துள் அடக்கம் எனக் காணலாம். இவ்வளவு முயற்சிகளையும் விவரமாக எடுத்துவிட்டு, எடுத்த முயற்சிகளை சமர்ப்பணம் செய்வது மேல்.

ஒரு புத்தகமாக எழுத வேண்டியவற்றை 5, 6 பக்கங்களில் சுருக்கமாக எழுதினாலும், கருவான இடங்களிருப்பதால் இக்கட்டுரை தம்பதிக்கு முழுப் பலன் தரும். எங்களுக்கு திருமணமாகி 10 ஆண்டாகிறது 5 அல்லது 35 ஆண்டாகிறது இப்படியெல்லாம் நாங்கள் இதுவரை நினைக்கவில்லை. ஏதோ நடந்தது. ஊரிலுள்ள குடும்பங்கள்போல் பல நேரம் சந்தோஷமாகவும், சில நேரம் கசப்பாகவும், எங்கள் சுபாவப்படி இதுவரை இருந்துவிட்டதால் எங்கள் சுபாவங்கள் வெளிப்பட்டு அவற்றிற்கேயுரிய உருவங்கள் பெற்றுவிட்டன. அன்றே நாங்கள் அன்னையை அறியவில்லை, என்று நினைப்பவர் உண்டு.

காலம் கடந்துவிட்டதால், கண்கண்ட தெய்வம் கைவிடாது என்பது அன்னைக்குரிய மந்திரம்.

இதுவரை நடந்தது, போனது போகட்டும் என்று நினைத்து, இனி திருப்தியை நாடுவோம் என்றால் இம்முறை பொறுமையாக தன் பலனைத் தரும். பொறுமை பெரியது, அன்னை அதனினும் பெரியது. திருப்திக்கு குறைவில்லை, குறைவேயில்லை என்று இனி பலன் உண்டு.

அதைக் கடந்த நிலையும் உண்டு :

இதுவரை கசந்தது என்பதால் இனி அதிக இனிமையுண்டு என்பது அந்த மந்திரம்.

அப்பலன் வேண்டுவோர் திருவுருமாற்றத்தை நாட வேண்டும். இதன் தத்துவத்தை மட்டும் குறிப்பிடுகிறேன்.

 • தாழ்ந்தது, தாழ்ந்ததில்லை.
 • தாழ்ந்தது திருவுருமாறினால் உயர்ந்ததினும் உயர்ந்ததாகும்.
 • திருவுருமாற்றம் ஏற்பட, இன்று நம் மனநிலையின் உண்மையை மனம் ஏற்க வேண்டும்.
 • ஏற்றபின் அம்மனநிலையை சரணம் செய்யவேண்டும்.
 • யோகத்தில் சரணாகதி மிகச் சிரமமானது, முடிவான கட்டம்.
 • குடும்பம் என்பதால் அவ்வளவு சிரமமிருக்காது.
 • மனம் மாறிய அதே நேரம் ஆச்சரியமாக வாழ்வு மாறும்.
 • இதைவிடக் கடினமானது ஒன்றுண்டு. இவ்வளவு சிரமப்பட்டு ஆயிரத்திலொருவர் பெறக் கூடியதை பெறுவதும் முடியும். பெற்ற பின் நமக்கே பொறுக்காது. நம் பழைய குணம் தலைதூக்கி கேலி, குத்தல், உறுத்தலுக்குரியவற்றை செய்யத் துடிக்கும். இதை செய்யாமலிருப்பது மனிதனுக்கு முடியாது. முடிந்தால் அவர் திருமண வாழ்வின் திருப்தி வளர்ந்தபடியிருக்கும்.

திருமண வாழ்வில் பூரண திருப்தி எழ உதவும் பரிபூரண ஞானம்

மேற்சொன்ன ஞானம் இன்று உலகில் இல்லை. இருப்பதாகச் சொன்னால் நம்புவதை விட கேலியாக நினைப்பார்கள். Life Divineனுடைய சிருஷ்டியின் இரகஸ்யத்தை வாழ்வில் பொருத்திப் பார்க்கும்பொழுது எழும் ஞானம் இது. இது உண்மையா என்றறிவது சுலபம். ஏனெனில் இந்த ஞானத்தின் சட்டம் வாழ்வின் சட்டம். பெரும்பாலும் தலைகீழாகவும், சில சமயங்களில் நேராகவும் செயல்படும் உதாரணங்கள் ஏராளம். எவரும் சொந்த வாழ்விலும், அனுபவத்திலும் பல இடங்களிலும் பார்க்கலாம். அந்த அனுபவத்தின் மூலம் இந்த சட்டத்தை திட்டவட்டமாக விளக்கலாம். புரிந்து கொள்வது எளிதல்ல. சிரமப்பட்டுப் புரிந்து கொள்ளலாம். ஏற்பது சிரமம். புரிந்து கொண்டதை ஏற்க முன் வருபவர்க்கு பூரண திருப்தி வாழ்வில் எழும். அது முக்கியமல்ல. மிக முக்கியம் என அனைவரும் கருதுவர். என் திருமண வாழ்வு எனக்குப் பூரண திருப்தி தரும் என்றால் எனக்கு அதற்கு மேல் எதுவும் தேவையில்லை என்பவர் பலர். அதைவிட முக்கியமானது ஒன்றுண்டு. அது பலித்தால், வாழ்வு உயர்ந்து, உயர்ந்த நிலையில் பூரண திருப்தி ஏற்படும். முதல் திருப்தி பிரச்சினைகள் மறைவதால் ஏற்படுவது. அடுத்தது வாய்ப்புகள் பூர்த்தியானபின் எழும் திருப்தி. வாய்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வாய்ப்பு இது எனவும் கூறலாம்.

பொதுவாக நம் அனுபவத்தில் கீழ்க்கண்டவற்றைக் காண்கிறோம். நான் கூறுவது இந்நிகழ்ச்சிகளை விளக்கும் சட்டம். இந்நிகழ்ச்சிகள் நல்லெண்ணத்தாலும், கெட்ட எண்ணத்தாலும், உதவி மனப்பான்மையாலும், போட்டி மனப்பான்மையாலும், துரோகத்தாலும் நடப்பவை. நமக்கு நல்லெண்ணம் நல்லது, கெட்ட எண்ணம் கெட்டது. சட்டம் இரண்டிற்கும் ஒன்றே. இங்கு முக்கியமாகச் சட்டத்தைக் கருதுவோம். ஒருவர் எண்ணம் அடுத்தவர் வாழ்வில் பலிக்கும், அடுத்தவர் வாழ்விலும் என்பதே அந்த சட்டம் .

சில உதாரணங்கள்,

1. எனக்கு நல்ல மாப்பிள்ளை அமையவில்லை, என் தங்கைக்கும் படித்த மாப்பிள்ளையை எதிர்பார்க்கும் நிலை நமக்கில்லை. என் தங்கைக்காவது படித்த மாப்பிள்ளை வேண்டும் என்ற எண்ணம் தங்கையின் வாழ்வில் பலித்தது.

2. ஏராளமாகப் படிக்க எல்லா சந்தர்ப்பங்களும், எல்லா வசதியும் உள்ளவர்க்குப் படிப்பில் நாட்டமே இல்லை. அதுபோன்ற சந்தர்ப்பம் எதுவும் இல்லாத உடன் பிறந்தவர் வாழ்வில் அது பெரிய பட்டம் பெற்றுக் கொடுத்தது.

3. குரு ஸ்தானத்திலுள்ளவர்க்கு பொருத்தமில்லாத அல்ப ஆசைகள். பிரபலம் எனில் உயிர். பணத்தில் மிகவும் நேர்மையானவர். ஆனாலும் ஆசை அதிகம். ஆயிரம் பேர் தன்னை நாடி வர வேண்டும் என்ற ஆவல் கட்டுக்கடங்காமல் வாயிலிருந்து வெளிவரும். அவைகள் தேவையில்லாத சிஷ்யன் வாழ்வில் அவை அபரிமிதமாக பலித்தன.

4. கணவன் சம்பாதித்த நாட்களில் ரூபாய் நோட்டை கையால் தொடும் பாக்கியமில்லாத பெண்மணிக்கு அவர் ஓய்வு பெற்றபின் வருமானம் முழுவதும் அவர் கையிலேயே வந்துவிட்டது. அது பெரிய வருமானம். மனைவியிடம் பணமே கொடுக்கக் கூடாது என்ற எண்ணம், இவர் கையில் பணமே வரக்கூடாது என்று பலித்தது இவருடைய எண்ணம் என இவருக்குத் தெரியுமா?

5. கணவன் அனைவருக்கும் உதவக் கூடியவர். அதனால் அவருக்குத் திருப்தி. நாள் கடந்து வாழ்வு மாறியபொழுது மனைவி அனைவருக்கும் ஆத்மீக உதவி செய்யக் கூடிய நிலை ஏற்பட்டது. அதனால் அனைவருக்கும் ஆத்ம திருப்தி. கணவனின் அம்சம் மனைவிக்கு அதிகமாகப் பலித்தது.

6. தான் கல்லூரி ஆசிரியராக வேண்டும் என்ற முயற்சி பலிக்காத நேரம், உடனிருந்த ஆசிரியர்களாவது அதைப் பெற வேண்டும் என முனைந்ததில் நெருங்கிய நண்பர் ஒருவரும், நேர் எதிரி ஒருவரும் அதைப் பெற்றனர்.

7. Pride and Prejudice கதையில் எலிசபெத்திற்கு விக்காம் மீது மனம் நிறைந்த ஆசை. அவள் ஆசை லிடியாவின் வாழ்வில் பலித்தது. அது எலிசபெத் தன்னையறியாமல் லிடியாவிற்களித்த பரிசு.

8. லஞ்சம் வாங்கும் ஆபீசர்கள் லஞ்சம் வாங்கும்பொழுதே இது தவறு என்னால் வாங்காமலிருக்க முடியவில்லை. என் மகனாவது சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அது பிள்ளைகள் வாழ்வில் பலிக்கும்.

 • கணவன் மனைவிக்கு தங்கையின் உரிமையைக் கொடுக்கப் படாதபாடுபட்டால் அது மனைவிக்குப் போவதில்லை. அவ்வெண்ணம் தங்கையின் வாழ்வில் அபரிமிதமாகப் பலிக்கிறது.
 • எது கணவனுக்கு இம்மியளவும் வர மனைவிக்குச் சம்மதமில்லையோ அது அவனுக்கு ஏராளமாக வருகிறது.
 • உரிமையில்லாத இடத்தில் கொடுக்க முடியவில்லை.
 • உரிமையுள்ள இடத்தில் கொடுக்காமலிருக்க முடியவில்லை.
 • திட்டு அதிர்ஷ்டத்திற்கு டிரான்ஸ்பர் ஆர்டர்.
மேற்சொன்னவை விளங்கினால் அவை நம் வாழ்வில் எந்த அளவு உண்மை என யோசனை செய்ய வேண்டும். பெரும்பாலும் உண்மை என்று தெரிந்தால் அது சரியாகப் புரிவதில்லை என்பது பொருள். நூற்றுக்கு நூறு உண்மை எனப் புரிந்தால் புரிவதாக அர்த்தம். அதற்குக் குறைந்து புரிவது சரியில்லை. புரியும் வரை நம் வாழ்வையும் மாமியார், மாமனார், கணவன், மனைவி, மைத்துனர்கள், குழந்தைகள், நண்பர்கள், உறவினர்கள் வாழ்வு தெரிந்த அளவுக்கு ஆராய்ச்சி செய்ய வேண்டும். பெரும்பாலும் புரிபவர்களைக் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டாம். முழுவதும் புரிகிறது என்பவர்களை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

 • அவர்கள் புரிந்த சட்டத்தை முழுவதும் மனதால் ஏற்று, அதற்கேற்ப மனம் மாறி செயல்பட முன்வருவார்களா? வருவார்கள் எனில் அவர்கள் செய்யக் கூடியது என்ன? அது ஒரு தீர்மானம்.
 • இதுவரை போனது போகட்டும். இனி என் மனைவிக்கு அல்லது கணவனுக்கு எது உரிமையோ பொருள், உரிமை, அதிகாரம், புகழ், பாராட்டு, சந்தோஷம், உடல் நலம் அதை நான் மனதால் கிடைக்க விரும்புவேன் என்று தீர்மானம் செய்ய வேண்டும்.
உரியதை உரியவர்க்கு உளமாரத் தரும் முடிவு.
ஒருவருக்கு ஏற்படும் மனமாற்றம் நல்ல கணிசமானப் பலன் தரும். பெரும் பலன் வேண்டுமானால் இருவரும் அம்முடிவுக்கு வரவேண்டும். முதற்பலன் flat secretary ஆனது போலும், அடுத்த பலன் மத்திய மந்திரி ஆனதுபோல் பெரும் வித்தியாசமுடையன.
 • நாம் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும், அடுத்தவருக்குச் சேர வேண்டியது எப்படியோ, தடம் மாறி, எப்பொழுதாவது கசங்கி, நசுங்கி வரப்போகிறது. என் மனம் மாறி அதை நான் கொடுக்க முன் வந்தால் அழகாக, அபரிமிதமாக உடனே வரும்,

என்பது தெரிந்த பின்னும் மனம் இசையாது. நம்பிக்கையில்லை என்று மனம் கூறும். அப்படியொன்றும் எதுவும் வாராது, வரும் என்றாலும் வேண்டாம் என்ற சொல் ஜபம்போல மனதிலிருந்து எழும். மனம் இந்த இடத்தில் மாறுவது பெரிய புரட்சி. இது ஒரு குடும்பத்தில் நடந்தால் அக்குடும்பம்,

 • அளவுகடந்த சந்தோஷத்தை,
 • எட்ட முடியாத உயரத்தில்,
 • அனுபவிப்பார்கள்.

***book | by Dr. Radut