Skip to Content

பகுதி 4

இரண்டு புத்தகங்கள்

மூன்று பாகங்கள்

56 அத்தியாயங்கள்

  1. முதல் எட்டு அத்தியாயங்கள் மனிதனுள் உள்ள முரண்பாடுகள்; ஜடம், ஆன்மாவுக்குள்ள முரண்பாடு; பாதாளம், பரமாத்மாவுக் குள்ள முரண்பாடு; பிரபஞ்சம், ஜீவாத்மாவுக்குள்ள முரண்பாடு; முரண்பாட்டின் ஆரம்பமான அகந்தை; அறிவுக்கும் புலனுக்கும் உள்ள முரண்பாடு பற்றியவை, நூலுக்கு முன்னுரையாக அமைந்துள்ளது.
  2. அடுத்த நான்கு அத்தியாயங்கள் சத் பிரம்மம், சித் - சக்தி, ஆனந்தமும், அதன் சிக்கல் அவிழுவதுமானவை.
  3. சிருஷ்டியை 5 அத்தியாயங்களில் மாயை, சத்திய ஜீவியம், மனம் எனப் பிரித்து விளக்குகிறார்.
  4. வாழ்வு, மரணம், வாழ்வின் சிக்கல், வாழ்வின் பரிணாமம் அடுத்த 4 அத்தியாயங்கள்.
  5. ஸ்ரீ அரவிந்தத்திற்கேயுரிய சைத்தியப் புருஷன் அடுத்த ஓர் அத்தியாயம்.
  6. மனம் புலன் வழி ஆன்மாவைக் கண்டு ஜடத்தை சிருஷ்டித்ததும், அஞ்ஞானம், தமோ குணம், பிரிவினையால் ஜடம் கட்டுண்டதும் அடுத்த இரு அத்தியாயங்கள்.
  7. சத், சித், ஆனந்தம், சத்திய ஜீவியம் தலை கீழே மாறி ஜடம், சைத்தியப் புருஷன், வாழ்வு, மனமானதும், பரிணாமமும் அடுத்த இரு அத்தியாயங்கள்
  8. 28ஆம் அத்தியாயம் முனி, ரிஷி, யோகி, தெய்வநிலைகளைப் பரிணாமத்தால் எட்ட ஸ்ரீ அரவிந்தர் கண்ட ஆன்மீகப் பாதையை விவரிப்பது.

    *****

  9. இரண்டாம் புத்தகத்தில் முதல் அத்தியாயம் பிரம்ம சிருஷ்டி, பிரபஞ்ச சிருஷ்டி, இரண்டாம் அத்தியாயம் பிரம்மத்தின் முழுமையை, பிரம்மம், புருஷா, ஈஸ்வரா மூலமும், மூன்றாம் அத்தியாயத்தில் பரமாத்மா, ஜீவாத்மா, அகந்தை மூலமும், நான்காம் அத்தியாயத்தில் positive, negative என்ற இரட்டைகள் மூலமும் கூறுகிறார்.
  10. ஐந்து, ஆறாம் அத்தியாயங்கள் மாயை என்பது இல்லாதது இல்லை, அஞ்ஞானமே எனக் கூறுகின்றன.
  11. ஏழு, எட்டு அத்தியாயங்கள் அஞ்ஞானத்தில் ஆத்மா சுய - அனுபவம் பெற்று அகந்தை ஆகிறது என்பதை ஞாபகம் மூலமாகக் கூறுகிறார்.
  12. நூலின் மையமான அஞ்ஞானம் - ஞானம் என்பது அடுத்த அத்தியாயம். பத்தாம் அத்தியாயம் ஞானத்தின் 4 வடிவங்கள்.
  13. பதினொன்று, பன்னிரண்டு அத்தியாயங்கள் அஞ்ஞானத்தின் வகைகள், ஆரம்பம். பதின்மூன்று அஞ்ஞானம் மேல்மனத்தில் முழுமை பெற்று ஞானத்தை விடப் பெரியதாவது.
  14. தீமை - தீமை என்பது வேறுபாடு குதர்க்கமாக மாறுபாடான வரலாறு.

    *****

  15. இரண்டாம் புத்தகத்தின் இரண்டாம் பகுதி பரிணாமம். இனி அஞ்ஞானமில்லை. பரமாத்மாவையும், ஜீவாத்மாவையும் உட்கொண்ட பிரம்மம் முதல் அத்தியாயம். அதை வெளிப்படுத்துவதே பூரண வாழ்வு என்பது இரண்டாம் அத்தியாயம்.
  16. பாதாளமும், பரமாத்மாவும் மனிதனில் இணைவது 3ஆம் அத்தியாயம். சேர்ந்தவை உயர்வது 4ஆம் அத்தியாயம். 7 வகை அஞ்ஞானங்கள் 7 வகை ஞானங்களாவது 5ஆம் அத்தியாயம்.
  17. 6, 7, 8 புனர் ஜென்மம்.
  18. 9, 10 மனிதன் ஆன்மீக மனிதனாவது.
  19. மூன்று திருவுருமாற்றம் மூலம் சத்தியஜீவியத்தை அடைந்து, சத்தியஜீவனாவது அடுத்த 11, 12, 13 அத்தியாயங்கள்.
  20. 56ஆம் அத்தியாயம் இப்பகுதியில் 14ஆம் அத்தியாயம். இது நூலின் சுருக்கமான "தெய்வீக வாழ்வு."

    ***** 

சிருஷ்டியும், பரிணாமமும் - பிரம்ம ஞானம்

பிரம்மார்ப்பணத்தால், பிரம்ம ஜனனமாகிறது

காலத்தைக் கடந்த, அனாதியான, பிரம்மம் முழுமுதற் கடவுள். குணங்களைக் கடந்து நிர்க்குணீ எனவும், ரூபத்தைக் கடந்து அரூபி எனவும் நாம் அவனை அறிவோம். நாமறியும் பிரம்மம் சச்சிதானந்தம். நாம் மனத்தால் பிரம்மத்தை அறிய முயல்வதால், பிரம்மம் புலப்படாது. புலன்கட்குப் புலப்படாத பிரம்மம் மனத்திற்குச் சமாதியில் சச்சிதானந்தமாகப் புலப்படுகிறது. பிரம்மம் அதையும் கடந்தது. மனத்திற்குப் புலப்படாத பிரம்மம் சத்தியஜீவியத்திற்குப் புலப்படும். சத்தியஜீவியத்திற்குப் புலப்படும் பிரம்மம் முழுமையுடையது. பிரம்மத்திற்குத் தேவையெனயொன்றில்லை.

ஆனந்தத்தை நாடி பிரம்மம்
உலகை சிருஷ்டித்தது.

ஆனந்தம் கண்டுபிடிப்பதிலுள்ளது. பிரம்மம் அனைத்தையுமறியுமாதலால், எதைக் கண்டுபிடிக்கவும் பிரம்மம் முயலலாம். பிரம்மம் கண்டுபிடிக்கக் கூடியதொன்றில்லை. எனவே தான் மறைந்து, மறைந்த பின் தன்னைக் கண்டுபிடிக்க பிரம்மம் முடிவு செய்தது. எல்லாம் பிரம்மம் என்பதால், பிரம்மம் எங்கு போய் மறையும்? தன்னுள்ளே தான் மறைய பிரம்மம் முடிவு செய்தது. தன்னுள் மறைந்த பிரம்மம், முழுமையாக மறைந்தால், மறைந்தது மறந்து விடும். மறந்த பின் நினைவு கூர்வது தன்னைத் தான் காண்பது. அதுவே பிரம்மம் அனுபவிக்க முடிவு செய்த ஆனந்தம்.

முழுமையான பிரம்மம் தன்னுள் தான் மறைய இரு பகுதிகளாயிற்று. நாம் அவற்றை சத், அசத் என்று அறிவோம். சிருஷ்டி சத்திற்குரியது. பரிணாமத்தில் அசத் முழுமை பெறுகிறது. சத் 4, 5 வகைகளாகத் தன்னை வெளிப்படுத்தி சிருஷ்டியை சாதிக்கிறது. சத் சித் ஆனந்தமாக மாறுவதை நாம் சச்சிதானந்தம் என்கிறோம். சத் புருஷன் பிரம்மா, புருஷா, ஈஸ்வரா எனப் பிரிவது அடுத்த கட்டம். சத் என்ற அகம் சத்தியம் என்ற புறமாகி, அதனிடையே ஆத்மாவை ஏற்படுத்துவது அடுத்தது. காலம், இடம் சத்புருஷனுடைய அகம், புறமாக வெளிப்படுகின்றன. சத், சித், ஆனந்தம் என்ற அகம் சத்தியம், ஞானம், அனந்தமென்ற புறமாவதால் அவை சேர்ந்து சத்தியஜீவியமாயின. சத் என்ற ஒன்று பலவான ஜீவாத்மாக்களானது பிரபஞ்சம் சிருஷ்டிக்கப்பட்ட வகை.

சத்தியஜீவியம் காலத்தைக் கடந்தது, காலத்திற்குட்பட்டது என இரண்டாகப் பிரிந்து இடையே மனம் அதன் உபகருவியாக ஏற்படுகிறது. சத்தியஜீவியத்திற்கு முழுமையுண்டு என்பதால் அது பிரம்மத்தையும், சிருஷ்டியையும், எதையும் முழுமையாகக் காணும். மனம் பிரிக்கும் கருவி. அதற்கு முழுமையில்லை. அதனால் ஓர் அம்சம், ஒரு பகுதியை மட்டும் ஒரு சமயம் காண முடியும். சத்தியஜீவியம்போல் முழுப் பார்வையுள்ளதன்று மனம். இருபிரிவுகட்கிடையே உற்பத்தியான மனம், மேற்பகுதியையும், கீழ்ப் பகுதியையும் மாறிமாறிப் பார்க்கும் திறனுடையது. இரண்டு பகுதிகளையும் ஒரே சமயத்தில் காண முடியாவிட்டாலும், மாறி மாறிப் பார்த்து முழுமையை முடிக்க முடியும்.

மனம் ஒரு பகுதியை மட்டும் காண முடிவு செய்தால், அடுத்த பகுதியைக் காண மறுத்தால், மறுப்பால் அஞ்ஞானம் எழுகிறது. மேற்பகுதியைக் காண முடிவு செய்த துறவி, வாழ்வைப் பார்க்க மறுக்கிறான். வாழ்வை ஏற்ற மனிதன் ஜோதியைக் காண மறுக்கிறான்.

மறுப்பு, அஞ்ஞானத்தின் ஆரம்பம்.

பிரம்மத்தின் முழுமையை அதனுடன் இரண்டறக் கலந்து பெறுவது பிரம்ம ஞானம். பிரம்மம் மறப்பது ஆதியின் அஞ்ஞானம். ஞானமான பிரம்மம் ஜடமான அஞ்ஞானமாக படிப்படியாக பிரம்மம், பிரபஞ்சம், உலகம், காலம், மற்ற லோகங்கள், ஜீவனின் மற்ற பகுதிகளை மறந்து எழுவகை அஞ்ஞானம் பெற்று முடிவில் ஜடமாகிறது. பரிமாணத்தால் இவ்வெழுவகை அஞ்ஞானங்கள், எழுவகை ஞானங்களாகும்.

மனம் தன் புலன் வழி ஆன்மாவைக் காண்பதால், ஆன்மா ஜடமாகக் காட்சியளிக்கிறது. மனத்தின் இருபகுதிகள் ஞானம், உறுதி. ஞானம் உறுதி மேல் செயல்படுவதால் சக்தி பிறந்து வாழ்வாகிறது. சக்தி சலனமிழந்து, ரூபம் பெற்று ஜடமாகிறது. ஜடத்துடன் சிருஷ்டி முடிகிறது.

உலகை சிருஷ்டித்தவர் பிரம்மா என்பது மரபு. பிரம்மா தெய்வலோகக் கடவுள். தெய்வலோகம் (overmind) மனத்தைச் சேர்ந்தது. பிரம்மா உலகை சிருஷ்டித்தார் எனில் மனம் சிருஷ்டித்தது என்றாகும். மனம் பகுதியானது என்பதால் முழுமையான உலகை அதனால் சிருஷ்டிக்க முடியாது. சத்திய ஜீவியம் அடுத்தது. சச்சிதானந்த முழுமை ஐக்கியமானது என்பதால், உலகில் உள்ள ஏராளமான பொருள்களை ஐக்கியம் சிருஷ்டிக்க முடியாது. சத்திய ஜீவியம் முழுமையை இழக்காமல் பிரிந்து நிற்கும் பெருமையுடையது. அதனால் சத்திய ஜீவியம் உலகை சிருஷ்டித்தது என அறிகிறோம்.

முழுமையான பிரம்மத்தை மனம் ஆத்மா, புருஷா, ஈஸ்வரா எனப் பிரித்து 3 ஆகக் காண்கிறது. அவை மூன்றும் பிரம்மத்தின் அம்சங்கள். தனித்தனியானவையில்லை. பரமாத்மா, ஜீவாத்மா, அகந்தை என்ற மூன்று நிலைகளும் சத்திய ஜீவியம் பிரம்மத்தின் தோற்றங்களாக்குவதால், அவை மூன்றும் ஒன்றே, ஒரே பிரம்மமே. Positive, negative நல்லது கெட்டது என நாம் உலகைப் பிரிக்கிறோம். உலகம் என்பது ஒன்றே. நமக்கு இரு பிரிவுகளாகத் தோன்றுகிறது.

இறைவன் ஞானம். அஞ்ஞானமாக மாறி அவன் மறைய முயன்றபொழுது, அஞ்ஞானத்தைப் பூர்த்தி செய்ய, மேல்மனத்தில் அஞ்ஞானத்தை மனம், காலம், அகந்தையுள் பொருத்தினான். அஞ்ஞானம் பூர்த்தியாயிற்று. அது வக்ரமாகி தீமையாயிற்று. இறைவன் தீமையைப் படைக்கவில்லை.

ஜீவாத்மாவும், பரமாத்மாவும் பகுதிகள். அவற்றை தன்னுட் கொண்ட பிரம்மமே முழுமை. அம் முழுமையான பிரம்மத்தை வெளிப்படுத்தும் வாழ்வே முழுவாழ்வு. இம் முழுவாழ்விலும் பாதாளமும், பரமாத்மாவும் முழுவதும் இணைவதில்லை என்பதால், மனிதன் தன் ஆத்மாவில் அவற்றை இணைத்து, இணைத்ததை இறை நிலைக்கு உயர்த்தி, எழுவகை அஞ்ஞானங்களை, எழுவகை ஞானங்களாக மாற்றி, ஆன்மாவை விடுதலை செய்கிறான்.

விடுதலை பெற்ற ஆன்மா பரிணாம வளர்ச்சி பெற பல ஆயிரம் பிறவிகள் தேவை.

பல பிறவிகளில் ஆன்மா பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் பிறக்கிறான். இவனது ஆன்மா பெற்ற வளர்ச்சியை, வாழ்வும், மனமும், உடலும் பெறும் பொழுது, மனிதன் மறுபிறவி எடுக்க வேண்டியதில்லை. அப்படி ஆன்மீக மனிதன் எழுகிறான். இனி அவனுக்குத் திருவுருமாற்றமுண்டு. அது 3 நிலைகளில் சைத்தியத் திருவுருமாற்றம், ஆன்மீகத் திருவுருமாற்றம், சத்தியஜீவியத் திருவுருமாற்றம். இவை முடிவு பெற உடலின் இருள் திருவுருமாற வேண்டும். அது பரமாத்மாவால் நடைபெற வேண்டும். அதுவும் முடிந்தபின் சத்திய ஜீவன் பிறக்கிறான். அதனது பூவுலக வாழ்வு தெய்வீக வாழ்வெனப்படும்.

தான் மனமில்லை, சத்திய ஜீவியம் என அறிந்த மனிதன் முழுமையைப் பெற, அகந்தையை இழந்து, பிரபஞ்சம் எங்கும் பரவி, அகத்துள் நிலைபெற்று, பிரம்மத்தை முழுமையாக அறிந்து, ஜடத்தை ஆன்மாவால் ஆளும் திறமை பெற வேண்டும். இவை திருவுருமாற்றத்தால் நடக்கும். அதற்குச் சரணாகதி இன்றியமையாதது. அவ்வாழ்வு எளிமையாகவோ, ஆடம்பரமாகவோ இருக்கும். இது நூலின் கடைசி அத்தியாயம் நெம்பர் 56.

சச்சிதானந்தம் மாயையால் மனம், வாழ்வு, உடல் என்ற உலகை சிருஷ்டித்துப் பரிணாமத்தால் பிரம்மத்தை அடைய அது தேடும் மார்க்கம் முரண்பாடு. ஜடத்திற்கும் ஆன்மாவுக்கும் உள்ள முரண்பாடு, பிரபஞ்சத்திற்கும் ஜீவாத்மாவிற்கும் உள்ளது, பரமாத்மாவுக்கும் பாதாளத்திற்கும் உள்ளது, அறிவுக்கும் ஞானத்திற்கும் உள்ளது, உடலுக்கும் வாழ்வுக்கும் உள்ள முரண்பாடு, வாழ்வுக்கும் மனத்திற்கும் இடையேயுள்ள முரண்பாடு, மனத்திற்கும் சத்திய ஜீவியத்திற்கும் உள்ளது ஆகியவை உடன்பாடாக பரிணாமம் பயன்படுகிறது. நூலை, சச்சிதானந்தத்தில் ஆரம்பிக்கும் முன் இவ்வகை முரண்பாடுகளை 8 அத்தியாயங்களில் நூலுக்கு பகவான் முன்னுரையாகக் கூறுகிறார்.

******



book | by Dr. Radut