Skip to Content

பகுதி 3

பகவான் - Fairy tales குழந்தைகட்கு தெய்வம் செய்யும் அற்புதங்களைக் கதையாகக் கூறுவதில் வீடு சர்க்கரையால் கட்டப்பட்டது என வரும். சாக்கலேட் வீடு, (cake) கேக்கால் செய்யப்பட்ட வீடு என வரும். அதுபோல் உலகம் ஆனந்தத்தால், ஆனந்தத்திற்காக, சிருஷ்டிக்கப்பட்டது என்பதால், இங்குத் துன்பத்திற்கு வழியில்லை. வாயிற்படி, கதவு, தாள் கடினமாக இருந்தாலும் சர்க்கரையாலேயே செய்யப்பட்டது என்பதால் சுவைத்துப் பார்க்கும்பொழுது இனிப்புத் தெரியும்.

பக்தன் - அன்பு பாசத்தை விட உயர்ந்தது என்பது 8.

பகவான் - பாசம் துடிக்கும், தன் திறனுக்குட்பட்ட உதவி செய்யும். தனக்குத் திறனில்லாத இடத்தில் உதவ முடியாது. திறனுள்ள இடத்திலும் வேண்டுமானால் உதவும், எதிரியாக மாறி தொந்தரவு செய்யும். அன்புக்கு முடிவில்லாத திறனுண்டு. எதிரியாக அன்பால் மாற முடியாது.

பக்தன் - ஊர்ப் பஞ்சாயத்து நியாயம் வழங்கும். IAS பரீட்சையில் ஒருவன் வாங்கிய மார்க்கை 83 என்பதை 38 என மாற்றி அடுத்தவனைத் தேர்ந்தெடுத்தால், ஊர், பரிதாபப்படும். அனுதாபம் தெரிவிக்கும். அங்கு நியாயம் வழங்க ஊருக்குத் திறமையில்லை. ஊர் பொறாமைப்படும் நேரம் உண்டு. நியாயத்தை மறுக்கும் நேரம் உண்டு. எதிராக மாறி கொடுமைப்படுத்தும் நேரமும் உண்டு. சட்டம் எதிரியாகாது. கொடுமைப்படுத்தாது. தத்துவம் விளங்கும் பொழுது, அனுபவம் உதாரணமாகிறது. No.9 தெரியும். No.10 மனித சுபாவம் ஏன் மாறாது, மரபு நிலையென்ன என்பவற்றைக் கூறும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.

பகவான் - சுபாவம் என்றால் என்ன? ஒரு குணத்தை வெளிப்படுத்தும் திறமை சுபாவம் எனப்படும். இனிமை என்று மனத்தில் எழுந்தால் அதைப் பிரியம் வெளிப்படுத்தும். கடுமை எழுந்தால் கோபம் வெளிப்படுத்தும். கோபத்தை நிர்ணயிப்பது கடுமை. கடுமை மாறாமல் கோபம் மாறாது.

பக்தன் - மனிதன் என்பவன் யார் என்ற கேள்வி எழுகிறது.

பகவான் - மனம் உடலைப் பெற்றால் மனிதன் உண்டாகிறான். மனம் துண்டு செய்யும் கருவி. ஆத்மாவை துண்டு செய்து உடலாக்கியது. துண்டு, பரிணாமத்தால் மீண்டும் ஆத்மாவுடன் சேரும். அதற்குமுன் சேராது. மரபு பரிணாமத்தை அறியாது. அதனால் மனித சுபாவம் மாறாது என்றனர். பூரண யோகம் திருவுருமாற்றத்தைக் கையாள்கிறது. இது மாற்றமில்லை, திருவுருமாற்றம். கோபம் சாந்தமாவது திருவுருமாற்றம். மாற்றம் கடினம், திருவுரு மாற்றம் அதிகக் கடினம். மனிதனுக்கு அவை கடினம். மனிதன் சரணாகதியடைந்தபின் திருவுருமாற்றத்தைச் செய்வது இறைவன். மனிதனால் முடியாதது இறைவனால் முடியும். மனிதன் இறைவனுக்கு இடம் கொடுப்பது கடினம்.

பக்தன் - 11ஆம் நெம்பர் பெண்ணையும் குற்றத்தையும் பற்றியது.

பகவான் - பணமிருந்தால் குற்றம் வரும் என்பது சரி. 3ஆம் நிலையில் பிரம்ம ஜனனத்தில், பணம் நெருக்கம் தரும், பெண் நெகிழ்வு தருவாள் என்பது சற்றுப் புதியது.

பக்தன் - பணமில்லாதபொழுது உறவுக்குத் தீவிரமில்லை. பணம் புரளும் பொழுது உறவுக்கு ஆயிரம் செய்திகள் வரும். ஒவ்வொரு நிகழ்ச்சியும் பணத்தால் நம்பிக்கையாக நடக்க வேண்டியிருப்பதால் நெருக்கம் அதிகமாகும். இருவரிடையே பெண் வருவது தமக்கை புருஷன் போன்ற உறவு. பெண் புனிதம், பவித்திரம், பத்தினித் தெய்வம். பணம் நம் மட்ட குணங்களை விலக்கும். பெண் பணம் தரும் நெருக்கத்தைப் பவித்திரமாக்குவாள். அக்காவுக்காகப் பார்க்கிறேன். மனிதனின் அவசரம், சந்தேகம், அவளால் பொறுமையாக, அவளுக்காக நம்பிக்கையாக மாறும். பெண் மரியாதைக்குரியவள். அதனால் நட்பை நயமாக்குகிறாள். இதற்கு மேல் சொல்ல முடியுமா?

பகவான் - அண்ணனை அன்பாக நடத்தலாம். அண்ணியை மரியாதையாகவும் நடத்த வேண்டும். பணமில்லாத உறவு பசையற்ற உறவு. பணம் நமக்குப் பதமான இதத்தைத் தரும். நண்பனை, அண்ணனைத் தெய்வமாக நடத்தலாம். அண்ணியை, நண்பன் தாயாரை, மனைவியைத் தெய்வமாக நடத்தினால் தெய்வம் நடமாடும். அவள் ஈஸ்வரி. அவளுக்குள்ள உயர்வுக்கு அவன் உயர முடியாது.

பக்தன் - ஆவது பெண்ணால். . . . . .

பகவான் - யோகத்தைப் பூர்த்தி செய்ய உதவும் கருவிகள், குணங்கள், சந்தர்ப்பங்கள், குரு போன்றவை ஏராளம். அவை அனைத்தும் பெண்ணிற்கு ஈடாகா. பெண் மனிதனை யோகத்தில் உயர்த்தும் அளவுக்கு குருவும் உயர்த்த முடியாது.

பக்தன் - ஏன்?

பகவான் - குரு ஒரு மெஷினுக்குப் பெட்ரோல்போன்றவர். பெண் மெஷினிலுள்ள ஒவ்வொரு பாகத்துடனும் இணையும் பாகம் போன்றவள். - ஆணியை மறை பூர்த்தி (nut & bolt) செய்வதுபோல் - பெண் ஆணின் ஒவ்வொரு குணத்தையும் பூர்த்தி செய்கிறாள்.

பக்தன் - Negative ஆக பூர்த்தி செய்வதை Positive ஆக பூர்த்தி செய்தால் திருமணம் யோகமாகும். நம் பண்பில் இவையெல்லாம் இருக்கின்றன.

பகவான் - தமிழ்ப் பண்பு ஆன்மீக உணர்வை பெண்மையில் குடும்பப் பெண்ணின் பண்பாக வடித்தெடுத்துள்ளது. போற்றினால் பெரிய பலன். இல்லை எனில் போர்க்களம்.

பக்தன் - No.12. பற்றாக்குறையில்லை என்கிறது.

பகவான் - பற்றாக்குறை என்றால் என்ன என யோசிப்போம். ஒரு வேலையைச் செய்ய போதுமான பொருள்கள் இல்லாதது பற்றாக்குறை. விவசாயத்தில் தண்ணீர்ப் பஞ்சம் என்பது வழக்கம். இதன் அடிப்படை என்ன? ஆதிநாளில் தண்ணீர் அபரிமிதமான இடங்களில் விவசாயம் ஆரம்பித்தது. அவை நதி தீரங்கள். நீர்வசதி அதிகமாக இருப்பதால் அவ்விடம் விவசாயத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால், நீர்ப்பஞ்சம் என்பதற்கு வழியில்லை. நாளடைவில் விவசாயம் பெருகி, நீரில்லாத இடங்களில் ஆரம்பித்துச் சில ஆண்டுகள் சௌகரியமாகவும், சில ஆண்டுகள் பற்றாக்குறையாகவும் வாழ்வு அமைகிறது. மனிதன் நீர் சரிவரக் கிடைக்காத இடத்தில் விவசாயத்தை ஆரம்பித்துப் பற்றாக்குறையை உண்டு பண்ணுகிறான்.

பக்தன் - மேலும் விவசாயம் என்று ஆரம்பித்தபொழுது அது ஓர் அதிசயம். ஒரு நெல்லை விதைத்தால் 1000 நெல் விளைவது அபரிமிதம். அதைக் கண்ட விவசாயி ஆச்சரியப்பட்டான். நிலத்தைத் தாயாக நினைத்து வணங்கினான். நீர் என்பது உணர்ச்சி. உணர்ச்சி பொங்க வாழ்பவனுக்கு நீர்ப் பஞ்சமில்லை. நாளடைவில் நிலம் மண்ணாகிறது. உணர்ச்சி வறண்டு போனால் நீர்ப் பஞ்சம் எழுகிறது. உணர்ச்சி எழுந்தால் பஞ்சம் நீங்கும். பகவான் - எந்தச் செயலும் அபரிமிதமாக ஆரம்பித்து உணர்ச்சிவசமாக மனிதன் வாழ்ந்தான். இந்த நிலையை மனிதன் அறிவில்லாமல் மாற்றி, உணர்ச்சியை இழந்து பற்றாக்குறையை உண்டு பண்ணுகிறான்.

பக்தன் - அறிவுக்குப் புறம்பானதை விடுத்து, உணர்ச்சி பெற்றால் பற்றாக்குறை விலகும். இது புரிகிறது. சுமார் பத்து விதங்களான பற்றாக்குறைகளை இதுபோல் விவரித்தால் நல்லது.

பகவான் - நீயே செய்தால் பலனிருக்கும். அத்துடன் உன்னை பாதிக்கும் பற்றாக்குறைகளை ஆராய்வது நல்லது.

பக்தன் - அறிவுக்குப் புறம்பானது என்பதை அறிவு எனக் கொள்கிறோம்.

பகவான் - அது அறிவிலியின் அறிவு. நாலு பேர் சொல்வதை நாம் செய்யப் பிரியப்படுவது அறிவாகாது. அவர்கள் சொல்வது வேறு, செய்வது வேறு.

பக்தன் - இப்படித்தான் மனிதன் அறிவு பெறுகிறானா?

பகவான் - சூட்சுமம் தெரிந்தால் போதாது.

பக்தன் - தெரிவதற்குரிய சூட்சுமம் வேறு, செய்வதற்குரிய சூட்சுமம் தனி.

பகவான் - விஷயம் சூட்சுமத்திலில்லை. சூட்சுமத்தை ஏற்கும் மனப்பான்மையிலுள்ளது.

பக்தன் - அதுதான் சரணாகதியா? அடக்கமா?

பகவான் - ஒரு சொல்லால் இக்கருத்தைப் புரிந்து கொண்டால் கருத்து மறந்து போகும், சொல் நிற்கும், பயன்படாது.

பக்தன் - சொல் இல்லாமல் புரிந்துகொள்வது படிக்காதவனுடைய பழக்கம்.

பகவான் - படித்து, சொல்லையறிந்த பின், சொல்லைக் கடந்த சூட்சுமத்தை, சூட்சுமத்தைக் கடந்ததை ஏற்க முயன்றால் மனம் விலகி, ஆத்மா முன்வரும்.

பக்தன் - சொல்லே தெரியாத மனிதனை சொல், சூட்சுமம், அதைக் கடந்து என்றெல்லாம் சொன்னால் அவன் என்ன செய்வான்?

பகவான் - மனிதன் தன் விஷயங்களை அப்படித்தானே புரிந்து கொள்கிறான்?

பக்தன் - அப்போ, அது பழைய விஷயம். எல்லாம் அவனுக்குத் தெரிந்தாலும், புதியதை தன் இஷ்டப்படி செய்ய முனைவதால் தவறுகிறது என்பது மீண்டும் வருகிறது.

பகவான் - வேண்டும் என்றால் செய்வான்.

பக்தன் - வேண்டாம் என்பவனை வேண்டும் என்ற நிலைக்குக் கொண்டு வருவதுதான் வேலையா?

பகவான் - அந்த வேலை அதிகப்பிரசங்கித்தனம் (altruism).

பக்தன் - அதைப் புறத்தில் செய்யாமல் அகத்தில் செய்ய வேண்டுமா?

பகவான் - அந்த எண்ணம் போகாமல், அகத்திலும் செய்ய முடியாது.

பக்தன் - அகத்தில் ஆழத்தில் செய்தால், புறத்தில் பலிக்குமா?

பகவான் - புறத்தில் பலிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தடை.

பக்தன் - எப்படிப் பார்த்தாலும் மனம் அடங்க வேண்டும்.

பகவான் - மனிதன் மனம் அடங்க வேண்டும் என்பதை மனத்தால் ஏற்க வேண்டும். பற்றாக்குறை என்பது அறிவு பற்றாக்குறை.

பக்தன் - No.13. மனிதனுக்குப் பெருந்தன்மை இயல்பு என்பது எப்படி?

பகவான் - மனிதன் தேடுவது மரியாதை. இறைவன் தேடுவது ஆனந்தம். மரியாதையில் ஆனந்தம் தேடுவது மனிதன். மரியாதை கிடைக்கவில்லை எனில் பிறர் மரியாதையை எடுக்கிறான்.

பக்தன் - எடுப்பதும், கொடுப்பதும் ஒன்றே!

பகவான் - மட்டமான குணம் இயல்பு என்பது திருவுருமாறினால் பெருந்தன்மையாகிறது.

பக்தன் - இதுவும் அதுவும் ஒன்றே என்பது பிரம்ம ஞானமா?

பகவான் - இரண்டும் பிரம்மம் என்பது பிரம்ம ஞானம்.

பக்தன் - திட்டுவது தித்திக்க வேண்டும் என்பது பிரம்ம ஞானம். No.14 விதியை நாமே நிர்ணயிக்கிறோம்.

பகவான் - நாம் சத்திய ஜீவியம் என்றால் விதிப்பது நாம். நாம் மனம் என்றால் விதிக்குப் பணிய வேண்டும்.

பக்தன் - நாம் ஒருவரைத் தேடிப் போகும்பொழுது, நம்மை கவனிக்கிறார்கள், அடுத்தவரைக் கண்டுகொள்ளவில்லை என்பது நமக்குப் படாது. அவரைக் கவனித்து நம்மைக் கவனிக்காவிட்டால் படும். அந்தஸ்துபடி விஷயம் நடக்கிறது. நாம் மாறிய மனநிலையில் - சத்திய ஜீவியத்தில் - இருந்தால், உடன் வருபவரைக் கவனிக்க மாட்டார் என்பது நம் மனத்திலிருக்கும். அவருக்கு நல்ல கவனிப்பு இருக்கும். இது நாம் விதியை நிர்ணயிப்பது.

பகவான் - பொருத்தமானது. பெரிய விஷயங்களில் இதைக் காண்பது முக்கியம்.

பக்தன் - தலைவிதியில்லை என அனுபவப்பூர்வமாக அறிவது பெரிய விஷயம். ஏழை தன் விதியை மாற்றிப் பணக்காரனானால் புரியும்.

பகவான் - பலிக்கும், புரியாது. பணம் வரும்பொழுது எதுவும் புரியாது. கவனித்துப் புரிந்து கொண்டால் பெரும் பணம் ஒன்றுமேயில்லை என்பதுபோல் நிலைமை உயரும். நிலைமையும், அந்தஸ்தும் ஒன்றுமேயில்லை என்பது பக்தி, நம்பிக்கை, அன்னை ஜீவியம். வருமுன் அது புரிவது யோகம், வந்த பின் அறிவது அதிர்ஷ்டம்.

பக்தன் - No. 15 நட்பு, காதல் உயர்வைப் பற்றியது. எவரும் ஏற்க மாட்டார்கள்.

பகவான் - இரத்த பாசம் உடலைப் பற்றியது. நட்பு உயிருக்குரியது. இலட்சியம் மனத்திற்குரியது. குருபக்தி ஆத்மாவுக்குரியது. ஆத்மாவுக்குரிய குரு பக்தி, நண்பன் மீது எழுவது ஆத்மார்த்தமான நட்பு. அதுவே பெண் மீது எழுவது காதல்.

பக்தன் - ஏன் இவை அழிகின்றன?

பகவான் - காதல், நட்பின் தரம் உயர்வானாலும், வலிமை பணத்தைவிடக் குறைந்ததாக இருந்தால், பணம் பிரச்சினையானபொழுது நட்பு அழிகிறது.

பக்தன் - உயர்ந்த காதலுக்கும் தரம் உயர்வாக இருப்பதால், வலிமை இருக்க வேண்டும் என்பதில்லை.

பகவான் - அழியாக்காதல், அழிவதில் எழுவதால் நிலையில்லாமல் போகிறது.

பக்தன் - அழியாத தரமுள்ள காதல் அழியும் சமூகத்தில் எழுவதால் அழிகிறதா?

பகவான் - காதல் அழியாதது. பணம் அழிவது. இது அதன் மூலம் நிலைக்காது.

அழிவில்லாதது அழிவதில் எழுவது காதல்

 • காதல் அழியாது, அதனால் அழிய முடியாது. அழிந்ததாக வரலாறில்லை.
   
 • அழியாதது அழியாததைக் காலத்திற்கும், காலத்தைக் கடந்தும் தேடுவது காதல்.
   
 • தேடுவது இன்பம். பெறுவது பேரின்பம்.
   
 • தணியாத தழல் வானை நோக்கி எழுவதற்கு முடிவில்லை. பெற்றால், பெரியதை நாடும். எட்டாததை எட்டும் முயற்சி எழும். அழிவும், மரணமும் அது அறியாதவை. தணியும் வேகமும், குறையும் குணமும் அதற்கில்லை.
   
 • அழிவதனுள் அழியாதது அன்பால் மலர்கிறது.
   
 • அழிவது, அழியாததாக மாற அழியாதது அழிவதனுள் அன்பாய் மலர்கிறது.
   
 • அழிவதன் வலிமை அனந்தம். தனக்கு அமரத்துவம் அளிக்க முயலும் அழியாததை அடியோடு அழிக்க அழிவது பெருமுயற்சி செய்து பெருவெற்றி பெறுகிறது. பெற்றதாக நினைக்கிறது.
   
 • அழியாதது அழிவதில்லை. சற்று பின்வாங்குகிறது.
   
 • தன்னை ஏற்கும்படி அழியாதது அழிவதை அனுதினமும் அணுகுகிறது. அதனால் காதலுக்குக் கண்ணில்லை, காலமில்லை. மரணம் அது அறியாதது.
   
 • பொய்க்கு உயிரளிக்க வரும் சந்தர்ப்பத்தை மனிதன் இழப்பதில்லை.
   
 • எதையும் அவன் பொய்க்கச் செய்வான்.
   
 • சத்தியம் பெரியதானால், அவன் அதிகமாக அழிக்க முயல்வான்.
   
 • முழுதோல்வி பெற்றபொழுது, பொய்யின் வெற்றியாக அதை அறிவிப்பான்.
   
 • இலட்சியம் இவ்வழி ஸ்தாபனமாகும்.
   
 • ஸ்தாபனத்திற்கு உயிரில்லை.
   
 • காதல் திருமணத்தால் அழியும் என்பர்.
   
 • இறப்பது காதலில்லை.
   
 • ஜீவனற்ற ஸ்தாபனம் காதலின் உயிரை எடுக்க முனையும்பொழுது மரணமடைகிறது.
   
 • காதலால் அழிய முடியாது.
   
 • இதுவரை அது அழிந்ததில்லை.
   
 • மரணத்தை அழிப்பது காதலின் இலட்சியம்.
   
 • ஜீவனற்ற சம்பிரதாயத்திற்குக் காதல் சாவுமணி.
   
 • காதலை நசுக்க அவை முனைகின்றன.
   
 • தான் அழிவதைக் காதல் இறந்ததாக உலகுக்குப் பறை அறிவிக்கின்றனர்.
   
 • பிறப்பில்லாத காதலுக்கு அழிவு எப்படி வரும்?
   
 • மனிதன் பிறப்பதற்கு முன் பிறந்த ஆத்மா அடுத்த ஆத்மாவை நாடுவது காதல். மனித வாழ்வுக்கு மரணமிலா பெருவாழ்வு தரவந்த காதலுக்கு மரணமுண்டா?

பக்தன் - இன்று திருமணம் மேல் நாடுகளில் இல்லை என்ற அளவுக்கு மக்கள் மாறியிருந்தாலும், பிரபலமான கதை, சினிமாவின் theme காதல். ஏன் அது?

பகவான் - காதல் திருமணத்தைக் கடந்தது, சமூகத்தையும் கடந்தது. அது அழியாது.

பக்தன் - ஏன்?

பகவான் - உடல் அழியும், எண்ணம் அழியாது.

பக்தன் - சரி.

பகவான் - மனிதனுக்கு நல்லெண்ணம் பிடிக்கும். பரிசு பெறும் படம் எல்லாம் ஓர் உயர்ந்த இலட்சியத்தைப் பற்றியது - நட்பின் விஸ்வாசம், குழந்தைக்கு ஆதரவு, சொல்லைக் காப்பது, மனம் விரும்பியவருக்கு உண்மையாக இருப்பது, வீரம், தைரியம் போன்றவை - அவற்றுள் சிறந்தது, சிகரமானது, காதல்.

பக்தன் - ஏன்?

பகவான் - உயர்ந்த உறவில் உச்சகட்டம் குருபக்தி, சாதாரண மனிதனுக்கு தேசபக்தி.

பக்தன் - ஆத்மா குருவை ஏற்பதால் அது உயர்ந்தது.

பகவான் - ஏற்பதில் ஞானம், உணர்வு, செயல் என 3 கட்டங்கள் உண்டு. குருவை ஏற்பது சிறந்தது என்பது ஞானம். குரு மீது பக்தி வருவது உணர்வு. அவருக்குப் பணிவிடை செய்வது செயல்.

பக்தன் - இவற்றுள் ஞானமே உச்சகட்டம்.

பகவான் - Ascent, descent என்பவை தெரிந்தவை.

பக்தன் - தெரியும், இருந்தாலும் சொல்லுங்கள்.

பகவான் - புரியாமல் பணிவது முதல் நிலை. பிடிக்கும் என்பதால் பணிவது இரண்டாம் நிலை. புரிந்து பணிவது மூன்றாம் நிலை. இது ascent. Ascentஇல் புரிவது ஞானம். உச்சி. புரிவதால் பிடிப்பது 4ஆம் நிலை. புரிவதால் பிடிக்கும் என்பதால் பணிவது 5ஆம் நிலை descent. 5ஆம் நிலை உச்சக்கட்டம்.

பக்தன் - Descentஇல் சேவை ஞானத்தை விட உயர்ந்தது. குரு பக்தி இந்த 5இல் எந்த நிலையிலும் இருக்கலாம்.

பகவான் - பாசம், நட்பை விட, குருபக்தியும் அதன் 5ஆம் நிலையும் உச்சக்கட்டம்.

பக்தன் - காதல் இதை விட எப்படி உயர்ந்தது?

பகவான் - இளமைக்குரிய காதல் உடலைப் பற்றியது. அது உயர்ந்து உயிருக்குரியதாகும். அது இலட்சியக் காதலாவது மனத்தை எட்டுவது. ஆத்மாவை எட்டுவது அதனினும் உன்னதமானது.

பக்தன் - இங்கும் descent உண்டா?

பகவான் - ஆத்மா மனதில் எழுந்தால் இலட்சியம் ஆன்மீக இலட்சியமாகும். அது 5ஆம் நிலை. ஆத்மா உயிரில் மலர்ந்தால் பரவசப்படுகிறோம். அதுவே உடலில் பூத்துப் பூரிப்பது நன்றியறிதல் 7ஆம் நிலை.

பக்தன் - குருவுக்குச் சேவை செய்வதைவிட இது எப்படி உயர்ந்தது? ஏன் அங்கு 5 நிலைகளையும், இங்கு 7 நிலைகளையும் கூறுகிறீர்கள்?

பகவான் - இரண்டு இடத்திலும் 5 நிலை அல்லது 7 நிலைகளை நாம் கொள்ளலாம். குரு உயர்ந்தவர் என்பதால் ஆன்மா அவர் விஷயத்தில் எளிதில் விழிக்கும். மனைவி பெண். அவள் விஷயத்தில் ஆன்மா விழிப்பது கடினம். அதனால் உயர்ந்தது.

பக்தன் - அதுதான் காதலை உயர்த்துகிறதா?

பகவான் - காதலை உயர்த்துவது இரண்டு. 1. பெண்மை 2. ஆத்மா.

பக்தன் - பெண்மையில் காதல் வாழ்வுக்குரியதாயிற்றே. ஆத்மா எப்படி அங்கு வரும்?

பகவான் - காதலில் ஆத்மா எழுவது கடினம். எழுந்தால் உயர்வு. இல்லையென்றால் திருமணம், குடும்பம். ஆத்மா வாராமல் காதலில்லை.

பக்தன் - காதலுக்குப் பெண்மை உயர்வு அளிப்பது எப்படி?

பகவான் - குருவுக்கு ஆன்மாவால் உயர்வைக் கடந்த சிருஷ்டியின் இரகஸ்யம் காதலுக்குரியது.

பக்தன் - பெண் ஆணுக்கு முரண்பாடான உடன்பாடு என்பதா?

பகவான் - உயர்வு உடன்பாட்டிலில்லை, முரண்பாட்டில் மறைந்துள்ளது. முரண்பாடு மீண்டும் உடன்பாடாவது பெண்மையில். குருவிடம் அந்த அம்சம் இல்லை. ஆத்மாவுக்குரிய உயர்ந்த அம்சம் உண்டு.

பக்தன் - பெண், குருவாக வேண்டுமா?

பகவான் - குரு ஆன்மீகப் பெருமையுடையவர், பெண் பரிணாமப் பெருமையுடையவள், ஆணுக்குக் கட்டுப்பட்டவள்.

பக்தன் - புரிகிறது. ஆன்மீக உயர்வு இரண்டாம் நிலை, பரிணாமம் 3ஆம் நிலை.

பகவான் - பெருமைக்குரிய குருவுக்குச் சரணடையலாம். தனக்குக் கட்டுப்பட்ட பெண்ணிற்குச் சரணடைய பெண் தன் பெருமையை அறியாதபொழுதும் தான் அதை அறிந்து ஏற்றுப் பணிவது, பெண்ணை சக்தியாக்கும், ஆணை ஈஸ்வரனாக்கும்.

பக்தன் - பெண் தாய்மை, வீடு, ஆண் தன்னை அடக்க வேண்டும் என்பவற்றைக் கடந்து வர வேண்டும் என்கிறார் அன்னை.

பகவான் - இப்படி ஒரு காதல் உலகில் இதுவரை மனிதர்கள் அறிந்ததில்லை.

பக்தன் - உடலிலிருந்து ஆத்மாவரை உயர்ந்தும், மீண்டும் இறங்கி வந்தும் காதல் பல நிலைகளில் உண்மையாக எழுந்ததே காதலிலக்கியம்.

பகவான் - உண்மையின் சாயல் இலட்சியத்தில் பட்டால் இலக்கியம், கதை, படம் உயர்கிறது. அது காதலில், ஏதாவது ஒரு துளி பட்டால், உயர்வின் உச்சியை எட்டுகிறது. காதல் எட்ட வேண்டிய கட்டங்கள் மேலும் உண்டு. அவற்றை எட்டும்வரை உலகம் காதலைப் போற்றும்.

பக்தன் - காதல் இளமைக்கு மட்டும் உரியதன்று.

பகவான் - எல்லாக் காதலிலக்கியங்களிலும் (adventure) தடையை மீறி செயல்படும் கட்டம் உண்டு.

பக்தன் - ஜீவனே தடையை மீறுவதால் வருவது தானே.

பகவான் - சமூகம், மனச்சாட்சி, தர்மம், நியாயம் போன்ற தடைகள் எல்லாம் நீங்கியபின், காதலிலட்சியம் எட்டாக்கனி என்பதால், அது யோக சித்தி என்பதால் அங்கும் adventure தடையை மீறுவது வரும்.

பக்தன் - ஆத்மா, பெண்மை, adventure மூன்றும் கலந்தது காதல்.

பகவான் - பரிணாமத்திற்குரிய ஆத்மா உயர்ந்து, உச்சியை அடைந்தபின் இறங்கி உடலுக்கு வந்து, முரண்பாடான பெண்மையில் உடன்பாட்டைத் தேடும் adventureஐ ஏற்பது காதல் எனப்படும்.

பக்தன் - பெண்ணின் ஆத்மாவை தன் ஆத்மாவால் அடைவது.

பகவான் - அது ascentஇன் பகுதி. அது descentஇல் பூர்த்தியாகும்.

பக்தன் - மனிதன் ஈஸ்வரனாகி, பெண் சக்தியாகிப் பூர்த்தியடையும் யோகம் காதல் எனப்படும்.

பகவான் - அதன் பொறியுள்ள இடமெல்லாம் பொறி பறக்கும்.

பக்தன் - காதல் சிருஷ்டியின் இரகஸ்யம் என்பது இதுவா?

பகவான் - Positive, Negative; சத், அசத் - இரட்டைகள் - என்பவை ஆண்மை, பெண்மை எனவும் பிரியும். அதை மனித வாழ்வில் ஆன்மீகப் புனிதத்துடன் காண்பது காதல் இதயத்தில் எழுவதாகும்.

பக்தன் - பக்தியை எந்தக் கட்டத்தில் வைக்கலாம்?

பகவான் - காதலுக்கு முன்னும், பின்னும் வைக்கலாம். காதலாகிக் கசிந்துருகினால் காதல் கனலாக எழுகிறது. அழியாதது, அழிவதில் எழுந்து அழிவது நாமறியும் காதல். அழியாதது, அழியாததில் அழிய முடியாமல் எழுவது அழியாக்காதல். அது ஆண்டவனுக்குரியது. தெய்வத்தைக் கல்லிலும், மண்ணிலும், பொருளிலும் காணலாம். மனிதனுக்குப் பெண்ணில், பெண்மையில் காண்பது எளிது.

உலகை உயர்விக்க வந்தது பெண்மை.
பெண்மையின் சிகரம் ஈஸ்வனின் சக்தி.

தவசிரேஷ்டர் பெற்ற பிரம்மானந்தம் பெரியது. அதைச் சமாதியில் பெற தவமிருந்தோர் பல ஜென்மமாக தவத்தில் லயித்தனர். அது உலகம் கண்ட உயர்வு. அதற்கடுத்த கட்டமும் உண்டு. அதையும் புனிதமாக்கும் அற்புதம் உலகில் உண்டு. அதுவே பெண்மை.

மனிதன் வானையும் கடலையும் கண்டான். தன் கண்களால் கண்டான். கடலை வென்றான், வானை அளந்தான். வான சாஸ்த்திரம் எழுதினான். அடுத்த ஆண்டு எந்த நிமிஷம் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் வரும் என எழுதினான். அவை மனித முயற்சியின் உன்னதமான உச்சி. அவன் கண்டவை, கண்டு விண்டுரைத்தவை பெரியவை. அவை அவன் ஊனக் கண்ணால், ஊனக் கண்ணுக்குப் பின்னாலுள்ள ஞானக் கண்ணால் கண்டவை. கண் பார்வையைக் கடந்து செல்வது டெலிஸ்கோப். அதையும் மனிதன் கண்டான். அதன்பின் ஞானக் கண் இன்னும் எழவில்லை.

ரிஷிகள் கண்ட பிரம்மம் பிரம்மாண்டமானது. அவர்கள் மனத்தைக் கருவியாய் பெற்றிருந்தனர். மனம் பிரம்மத்தைச் சமாதியில் ஊடுருவிக் கண்ட தரிசனம் பிரம்ம தரிசனம். தான் பெற்ற பேறு பெரியது. பிறருக்குச் சொல்லும் சொல் இன்னும் உலகில் உற்பத்தியாகவில்லை. மனத்தைக் கடந்தது உண்டு. அதை super-mind, சத்திய ஜீவியம் என்றனர் ரிஷிகள். சுவாமி விவேகானந்தர் தாம் நிர்விகல்ப சமாதியில் பெற்றதைக் கடந்தது உண்டு என பூதவுடலை நீத்தபின் சூட்சும உலகில் கண்டார். அதை உலகுக்கு அறிவிக்கும் கருவியாக பகவான் ஸ்ரீ அரவிந்தரைத் தேர்ந்தெடுத்தார். அறிவித்தார். தீட்சை பெற்ற பகவான் அதைக் கண்டார். கண்டவர் பிரம்மத்தைக் காண முயன்றார். பிரம்மத்தின் முழுமை தெரிந்தது. முழுமையான பிரம்மம் முடிவான உலகமாகக் காட்சியளித்தது. அது அற்புதம். ஆனந்தமயமானது. நாமறிந்த துன்பமும், நோயும் இல்லாத தூய லோகம் அது. அதை விழிப்பில் கண்டவர், உலகுக்கு அறிவிக்க - சுவாமி விவேகானந்தரின் ஆணையைப் பூர்த்தி செய்ய - பகவான் முயன்றார். அது தமக்குரிய பேறில்லை. அப்பேற்றைப் பெற்றது பெண்மை, பெண்மையின் சிகரமான சக்தி, ஈஸ்வரனுடைய சக்தி. சக்தி ஈஸ்வரனின் கருவியாகச் செயல்படக் காத்திருக்கின்றது. ஆனால் அது ஈஸ்வரன் தன்னைப் பணிக்கக் காத்திருக்கின்றது. இறைவனின் ஆணையை இகத்தில் பூர்த்தி செய்ய சக்தி ஈஸ்வரனின் ஆணையை ஏற்பது உலக இரகஸ்யம். அது சரணாகதி. பகவான் சிருஷ்டியின் இரகஸ்யத்தை அறிந்தார்.

சக்திக்கு ஈஸ்வரனான பகவான் சரணடைந்தார்.

அந்தச் சரணாகதி புவியின் பூரணத்தைத் தரவல்லது. பகவான் ஸ்ரீ அரவிந்தர் பிரம்மத்தை அடைந்தபொழுது வரம் கேட்டார். மனித குலத்தைக் கடந்த பூமாதேவிக்கு வரம் கேட்டார். முழுமையான பிரம்மம் முடிவான முழுமுதற் கடவுளிடம் ஸ்ரீ அரவிந்தர் பூமா தேவிக்குக் கேட்ட வரம்,

சத்திய ஜீவியம் ஜடத்தில் ஜனிக்க வேண்டும்

என்ற வரத்தைக் கேட்டார். வரமளிக்கப்பட்டது. பூரண சரணாகதியால் மனிதன் அதைப் பெறவேண்டும். ஈஸ்வரன் சக்திக்குச் சரணடைந்து பெற்ற வரம் மனிதன் தூய்மையான பெண்ணுள்ளத்திற்குச் சரணடைந்து பலிக்க வேண்டும். பெண்ணைப் பெண்மையின் பேறாக உணர்ந்து, ஆண்மை அனுபவிக்கும் சரணாகதி அனந்தம் ஆத்மாவாக வாழ்வில் மலர்ந்து மணம் வீசுவதாகும்.

 • பெண்மையின் தூய்மையான சிகரம் சக்தி.
   
 • சக்தியின் பராசக்தி அவதாரம் லோக மாதாவான அன்னை.
   
 • அவரை நாம் அடைய நம் மனம் விழைந்தால் போதும்.
   
 • அழைக்க ஆர்வமிருந்தால், அழைக்கும் முன் நம் முன் வருவார் அன்னை.
   
 • ஆத்மா சரணாகதியை ஏற்றால் அற்புதம் மனிதனை ஏற்கும்.
   
 • உலகில் பெரியவையுண்டு. பெரியவற்றைக் கடந்த பேரானந்தமுண்டு. அவை மனிதனை நாடி வருவதுண்டு. நாடி வந்தபோது நாட்டை ஆளச் செய்வதுண்டு.

உலகிலுள்ள எந்தப் பெரிய பேறும் ஆனந்தமாக மனிதனை நாடி வந்து மனிதனைத் தெய்வமாக்கியதுண்டு. அவையும் அவனுக்குரிய பெண் மூலம் அவனை நாடி வரும் பொழுது உயர்வு உன்னதமாகும். உன்னதம் உத்தமமாகும். உத்தமம் தன் இரகஸ்யத்தை உள்ளே உணர்த்திப் போகும். அந்த இரகஸ்யம் சரணாகதி. அவன் அவளுக்கு விரும்பிச் செய்யும் ஆத்மானுபவச் சரணாகதி. பெண்மைக்கு ஆண்மையின் சரணாகதி தான் பெற்ற பேற்றை உலகுக்குப் பெற்றுத் தரும்.

ஆண்மகன் ஆண்மையின் அழகு. பெண் பெண்மையின் பெரிய பேறு. ஆண்மை பெண்மைக்குச் சரணடையும்பொழுது அவனுள் உலகம் பூர்த்தியாகி, பூரணம் பெறுகிறது. அதுவே பரிணாமம் நாடும் பரமபதம்.

பகவான் ஸ்ரீ அரவிந்தர் ஆண்மையைச் சரணடைய ஆணையிட்டபொழுது, சரணாகதியை ஏற்ற பெண்மை எல்லையைக் கடந்து செல்லும் நேரம் வரும்பொழுது தவறாமல் பெண் தனக்குரிய பாணியில் செயல்படுவாள். அவனே ஈஸ்வரன் என்பதாலும், அவனுடைய சரணாகதி அவனே விரும்பிச் செய்வது என்பதாலும், எல்லையை மீறும் எழிலை இழுத்துப்பிடிக்கும் அவசியமும் உண்டு என்கிறார்.

பக்தன் - இந்த அம்சங்கள் உலக வழக்கில் அங்கும், இங்குமாக அவ்வப்பொழுது வெளிப்படுகின்றன.

பகவான் - தலைகீழே வெளிப்படுவது ஏராளம். அநேகமாக அனைத்து அம்சங்களும் அப்படி வெளிவருகின்றன. Context சந்தர்ப்பம் சரியில்லை என்பதால் எதையும் எடுத்து சரிவர விளக்க முடிவதில்லை.

பக்தன் - அந்த விளக்கம் நாம் வலியை வருந்தி அழைத்ததை விளக்குவது போலிருக்கும். Intellectuals are stupid என அன்னை கூறியுள்ளார். No. 20 வரை உள்ளவை விளங்கும். சொன்னால் அதையும் கேட்டுக் கொள்வேன். 20 உடலுழைப்பு.

பகவான் - உடலால் உழைப்பதைவிட அறிவால் உழைப்பதால் ஏராளமாக சம்பாதிக்கலாம் என்பதை அடுத்த படியில் ஆன்மீக உழைப்பு அபரிமித இலாபம் கொடுக்கும் என்பதற்கு விளக்கமே தேவையில்லை. இதுவரை எவரும் புரிவதாகக் கூறவில்லை.

பக்தன் - அறிவால் உழைப்பது என்றால் நினைப்பது, ஆன்மாவால் உழைப்பது எனில் தியானம் செய்வது என்று எடுத்துக் கொள்கிறார்கள். முக்கியமாக வேறு ஒன்றும் செய்ய வேண்டியதில்லை என்று கொள்கிறார்கள். அறிவால் உழைப்பதென்றால், வேலையை அறிவில் ஆரம்பித்து, உழைப்பை அறிவுக்கு மாற்றி, மற்றவற்றையெல்லாம் முன்போல் செய்வது எனப் பொருள்.

பகவான் - இந்தியச் சுதந்திரத்தை ஆன்மாவால், சூட்சுமத்தில் பெற்றார் எனில் சூட்சும லோகத்தில் வெற்றி கிடைத்துவிட்டது. இனி 5 அல்லது 10 ஆண்டு ஆயுதம் தாங்கிய போராட்டம் சுருங்கும் எனப் பொருள். பங்களாதேஷ் சண்டை சில நாட்களில் முடிந்தது அன்னை செயல்பட்டதால்தான். அதற்காக சண்டை போடாமலிருக்க முடியுமா?

பக்தன் - உலகப் போர் அப்படி ஜெயிக்கப்பட்டது. இதை எப்படி விளக்குவது?

பகவான் - செயலால் விளக்கலாம். 16 ஆண்டில் ஏற்பட்ட வருமான உயர்வு 16 மாதத்தில் வந்தால் அறிவு செயல்பட்டது புரியாதா?

பகவான் - அடுத்த 16 ஆண்டுகளில் பெறும் திறனை இன்று மனத்தால் 16 மாதத்தில் பெற்றால் புரியும்.

பக்தன் - எப்படி எழுதுவது?

பகவான் - எழுதலாம். நம்மவர்கள் நேரில் பேசினால் புரிந்து கொள்வார்கள். எழுதினால், மீண்டும் அதையே சொல்லும்படிக் கேட்பார்கள்.

பக்தன் - எவரும் சம்மதப்பட்டு வந்து கேள்வி கேட்க மாட்டார்கள்.

பகவான் - இடம் சுத்தமாவது முக்கியம்.

பக்தன் - கோணல் வழிக்கு வேலையில்லை. கோணலில்லாதவர்க்கு அருளுண்டு.

பகவான் - வேலை செய்பவர் திறமைசாலியாக இருந்தால் கடந்த 16 ஆண்டில் பெற்ற திறமை என்ன என்று தெரியும். 16 ஆண்டிற்குப்பின் தான் செய்யும் வேலையின் ஒவ்வொரு பகுதியும் எப்படித் தன் கையில் மாறும் என்பது பெரும்பாலும் புரியும்.

பக்தன் - முதற்காரியமாக 16 ஆண்டு கழித்து உயர்பதவியில் பெரிய சம்பளத்தில் வேலை செய்யாமலிருக்கலாம் என்று தோன்றும்.

பகவான் - அவர்கட்கு இது இல்லை.

பக்தன் - அது தவிர வேறு விதமான மக்களில்லை.

பகவான் - அப்படியானால் பேச வேண்டாம்.

பக்தன் - நான் கேட்டுக்கொள்கிறேன்.

பகவான் - செய்பவருக்குச் சொல்லலாம்.

பக்தன் - நான் செய்கிறேன்.

பகவான் - இந்த நிலைகள் எல்லா ஆபீஸ்களிலும் இருக்கின்றன. என்ன முக்கியம் என்றால் நம் மனம் இன்றுள்ள நிலையிலிருந்து படிப்படியாக ஒவ்வொரு கட்டமாக மனத்தால் நகர்ந்து கடைசி கட்டத்திற்கு வர வேண்டும்.

பக்தன் - அனுபவம் பெற்றபின் முதலிலிருந்ததைவிட தெளிவாகச் செய்வதை அறிவோம். மனம் அதை நாட வேண்டும். அதன் வழிச் செல்ல வேண்டும். அப்படிச் சென்றால் நான் சொல்லிய தவறு எழாது. இரண்டு முக்கியம்.

 1. கோணலாக இல்லாமல், நேராக இருக்க வேண்டும்.
   
 2. மனத்தால் உழைக்க ஆசைப்பட வேண்டும். இவை இரண்டும் இருப்பது அரிது.

பகவான் - 200 பேரை IASஇல் எடுத்தால் 4 லட்சம் பேர் எழுதுகிறார்கள். பலர் 5%, 15% மார்க் வாங்குகிறார்கள். IAS எழுதும்பொழுது அதற்காக தயார் செய்யக் கூடாதா? 61% வாங்கி செலக்ட் ஆகவில்லை என்று இருக்கக் கூடாதா?

பக்தன் - மனத்தால் உழைப்பது என்றால் என்ன?

பகவான் - வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பது ஆசை. ஒருவர் வீடு கட்டியவர் என்றால் அவருக்கு அனுபவம் உண்டு. அந்த வேலைகளைச் செய்யும்பொழுது மனம் ஏற்ற பொறுப்பை - பாரத்தை - அவர் அறிவார். அடுத்த முறை பெரிய வீடு கட்ட மனத்தால் பொறுப்புடன் அந்த வேலைகளை உண்மையில் செய்வதுபோல் செய்து முடித்தால், இப்பெரிய வீடு 1/10 சிரமத்துடன் முடிவதைக் காணலாம்.

பக்தன் - ஆன்மாவால் அதையே செய்வது எப்படி?

பகவான் - மனம் ஈடுபட்டுச் செய்ததை, ஆத்மா பற்றற்று மௌனமாகச் செய்யும்.

பக்தன் - நினைக்கக் கூடாதா?

பகவான் - பலன் கருதாமல், படபடப்பில்லாமல் "நினைக்கலாம்."

பக்தன் - அதற்கு நினைவு என்று பெயரா?

பகவான் - பெயர் எது வேண்டுமானாலும் கூறலாம். பற்றில்லாமல், மௌனமாகச் செய்வது ஆத்மா செயல்படுவது.

பக்தன் - மூன்றாம் நிலை, சக்தி செயல்படுவது, அன்னை செயல் எப்படி?

பகவான் - முயற்சியைச் சரணம் செய்தால் அன்னை செயல்படுவார்.

பக்தன் - இவையெல்லாம் செய்யத் தகுதியிருப்பதற்கு அடையாளம்?

பகவான் - Token act சொல்லும்.

பக்தன் - அடுத்தாற்போல் 67 - 69ஆம் பக்கங்களில் 23உம், 70 - 73ஆம் பக்கங்களில் 70உம் உள்ளன. எதைக் கேட்க?

பகவான் - கேட்டது திரும்ப வரும். வாராமலிருந்தால் நல்லது. வந்தால் பரவாயில்லை. இவை பெரிய விஷயங்கள். பலமுறை கேட்பது தவறன்று.

பக்தன் - No. 1. முரண்பாடு, உடன்பாடு என்பதில் புதியதாக அல்லது புதிய கோணத்தில் கூறக்கூடியதுண்டா?

பகவான் - முரண்பாடுதான் உடன்பாட்டின் உயர்வை உணர்த்துவது. உலகப் போர் உலகம் 1000 ஆண்டு முன்னேற உதவியது. நிர்ப்பந்தத்தால், அல்லது விரோதத்தால் பிரிந்துள்ள அண்ணன், தம்பி, நண்பர்கள், தம்பதிகள் பிரிந்துள்ளபொழுது மற்றவரை நினைப்பதைப் போல் சேர்ந்துள்ளபொழுது நினைப்பதில்லை.

பக்தன் - பாம்பு தவளையை விழுங்கும்பொழுது தவளை உணர்வது Divine love என்பது தத்துவம். ஏதோ ஓர் அளவில் நம் மனத்தைத் தீண்டும் அளவுக்கு இருந்தால் நல்லது. பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ என்பதும் மொழி. இறைவனை நாம் பிரிந்துள்ளதால் அவனை இடைவிடாது நினைக்கும் இன்பம் அவனோடு இரண்டறக் கலந்தபின் இருக்காது. அது அன்னையின் அனுபவம் எனப் படித்திருக்கிறேன்.

பகவான் -  பலனில் தெளிவாகக் கூறலாம்.

உணர்வில் இதற்கு மேல் கூற முடியாது.

அறிவில் தெளிவு ஏற்படுவது சிரமம்.

ஆத்மா கண்ணுக்குத் தெரியாது.

இதன் உச்சகட்ட அற்புதம் தெரிய ஒன்று செய்யலாம். நமக்கு விருப்பமில்லாத ஒருவரை நினைத்து, அவரிடம் நமக்குப் பிடிக்காததை விலக்கி, பிடித்ததை நினைவுபடுத்தி, நம் குணங்களுடன் எப்படி அவை ஒத்துப்போகிறது எனக் கண்டபின், அவரிடம் பிடிக்காத குணங்களை நினைத்து அத்துடன் ஒத்துப்போகும் குணம் ஒன்றைக் கருதினால், அதன் பெரும்பலன் ஏற்கனவே வந்தது தெரியும். பலனிலிருந்து உணர்வுக்குப் போவதும், உணர்விலிருந்து அறிவுக்கு வருவதும், அறிவிலிருந்து ஆத்மாவை நாடுவதையும் நினைக்க முடிந்தால், எல்லா முரண்பாடுகளும், உடன்பாடாகிவிடும்.

பக்தன் - எனக்குச் சில உதாரணங்கள் தெரியும். அவை இந்த உயர்வை எட்டுமா என்பதை அனுபவித்தவரே சொன்னால்தான் தெரியும். ஒருவர் உயிரை அடுத்தவர் எடுக்க முனைந்து முடிவான வெற்றி பெறும் நேரம் உயிரை அன்னையைக் கொண்டு காப்பாற்ற வேண்டும் என்று அவர் செய்த முடிவு அவரை ஸ்தூல உலகினின்று சூட்சுமத்திற்குக் கொண்டு போயிற்று. இது ஆன்மா பெற்ற பலன். அவரே பேசினால் விபரம் தெரியும். நாம் வெளியிலிருந்து பார்க்கும்பொழுது முழு விவரமும் தெரிந்து கொள்ள முடிவதில்லை. ஏதோ ஓர் அம்சம் அங்கும், இங்குமாகப் புரிகிறது. அதிகமாக நான் பெற்ற அனுபவம் உடன்பாடு முரண்பாடானவை.

பகவான் - தொழிலில் தெளிவாகத் தெரியும்.

பக்தன் - 8, 10 கம்பனிகள் மொத்தம் 800 கோடிக்கு 1989இல் பெற்றவர் அவற்றுள் 40 கோடி கம்பனியை மூட முடிவு செய்தார். நாம் அவரை அணுகிக் கம்பனியை மூட வேண்டாம் என்று கூறினோம். "நான் 25 ஆண்டுகட்குமுன் மாறிவரும் டெக்னாலஜியை சொற்பவிலைக்கு வாங்கினேன். இன்று உலகிலேயே இந்த டெக்னாலஜி பயன்படும் கம்பனிகள் சொற்பம். எவ்வளவு சீக்கிரம் மூடுகிறேனோ, அவ்வளவு நல்லது" என்றார். இந்த முரண்பாட்டை எப்படி உடன்பாடாக்கலாம் என report எழுதினோம். அவர் கம்பனி உடனே 40 கோடியிலிருந்து ஓரிரு ஆண்டுகளில் 100 கோடியாயிற்று. இன்டர்நெட்டில் இன்று அவருடைய siteஇல் அக்கம்பனி 500 கோடி எனவும், அவருடைய கம்பனிகளில் இது மட்டுமே இலாபகரமானது எனவும் பார்த்தோம்.

பகவான் - அவர் நீங்கள் கூறியதைப் புரிந்து கொள்ளாமல் பின்பற்றியதால் இக்கம்பனியில் அதிகப் பலன் வந்தாலும், அவர் நினைவு மற்ற கம்பனிகளில் பலிக்கிறது.

பக்தன் - 40, இந்த 13 ஆண்டில் 500 ஆனது உடன்பாடு. No. 52 நினைவைப்பற்றியது. நினைவு காலத்திற்குரியது,

பகவான் - ஜீவன், ஜீவியம், ஆனந்தம், மனம், வாழ்வு, ஜடம் ஆகியவை அனைத்தும் (unity) ஐக்கியமானவை. அவற்றுள் பிரிவினையில்லை. அதுபோல் காலத்திலும் பிரிவினையில்லை. பிரிவினை வாராமல் சிருஷ்டியில்லை, காலம் மூன்றாகப் பிரிகிறது. அது மனத்தாலும், அகந்தையாலும் பிரிகிறது. மேல்மனத்தில் பிரிவினை அதிகமாகத் தெரிகிறது. மனம் அடிமனமாகவே யிருந்திருந்தால், நினைவு தேவையில்லை. மேல்மனம் ஏற்பட்டு காலம் என்ற 3 நிலை உண்டானபின் நினைவு தேவைப்படுகிறது. நாம் இந்த அறையிலிருக்கும்பொழுது எல்லாப் பொருட்களும் நம் கண்முன்னேயிருப்பதைப்போல் அடிமனத்தின் முன் உலகமிருப்பதால், கடந்ததும், வரப்போவதுமிருப்பதால் அடிமனத்திற்கு நினைவு தேவையில்லை. அடுத்த அறைப் பொருள்கள், அடுத்த வீட்டுப் பொருள்கள், 5ஆண்டுக்கு முன் நடந்தவை கண் முன்னாலில்லை. அவற்றை எழுதிவைப்பதுபோல் நினைவு நிகழ்ச்சிகளைப் பதிவு செய்கிறது. அடிமனத்தில் கடந்தது, நிகழ்ந்தது, எதிர்காலம் ஓரளவு சேர்ந்து வரும். முதல் சித்தி அடிமனத்தை அறிவது.

சிருஷ்டி என்பது பிரம்மம் தன்னை உலகமாக மாற்றுவது. அப்படி மாறும்பொழுது முதல் நிலை சத்புருஷன். முடிவான நிலை ஜடம். இம்மாறுதலில் ஞானம் அஞ்ஞானமாகிறது. அஞ்ஞானம் மேல்மனத்தில் பூர்த்தியடைகிறது. மேல்மனம் என்பது மனம். அது தன்னைக் காலத்திற்கும், அகந்தைக்கும் உட்படுத்தினால் சிறியதாகிறது. நினைவு காலத்திற்குரியது. காலத்தைக் கடந்தால் நினைவிருக்காது. உலகம் முழுவதும் தெரிவதால் நினைவுக்கு வேலையில்லை. கடந்ததைப் பதிவு செய்து வைத்திருந்து நிகழ்காலத்திற்குக் கூறுவது நினைவு.

பக்தன் - பிரம்மம் தன்னை நினைவு கூர்வதே பரிணாமமில்லையா?

பகவான் - காலத்தைக் கடந்த பிரம்மம் காலத்திற்குத் தன்னை உட்படுத்திக் கொள்வதால் நினைவு கூர வேண்டியிருக்கிறது. சூட்சும லோகத்தில் பூமியின் நினைவு முழுவதும் பதிக்கப்பட்ட இடம் உண்டு. அங்கு போய் பூமி உற்பத்தியானது முதல் அறியலாம்.

பக்தன் - No. 63 புனர் ஜென்மம்.

பகவான் - பரம்பரை, புனர்ஜென்மத்தை அறியும். அதன் காரணத்தை அறியாது. ஆன்மா வளரும்பொழுது ஒரு கட்டத்தில் இனி இந்த உடலில் வளர முடியாது என்ற நிலை வந்தவுடன் அடுத்த உடலை ஆன்மா நாடுவது புனர் ஜென்மம். புனர்ஜென்மம் ஆன்மீகப் பரிணாமத்திற்கு அவசியம்.

பக்தன் - நான் அறிய வேண்டிய சூட்சுமம் இதிலிருக்கிறதா?

பகவான் - மனம், உடலில் பொதிந்துள்ள ஆத்மாவை அவற்றினின்று பிரித்து - விடுதலை செய்து - அதன் ஆதியுடன் சேர்ப்பது மோட்சம். நம்மவர் ஆன்மாவுக்கு மோட்சம் தேடியபொழுது அதே மோட்சம் மனத்திற்கும், உடலுக்கும் தேவை என நினைக்கவில்லை. அவையும் தேவை என்பதால் மறுபிறப்புத் தேவைப்படுகிறது.

பக்தன் - உதாரணம்.

பகவான் - கிராமத்துப் பள்ளியில் படிப்பு முடிந்து, நகரத்திற்குப் போய், அங்கிருந்து காலேஜிக்கும், பல்கலைக்கழகத்திற்கும் பையன் படிக்கப் போகிறான். அந்த மாறுதல்கள் அனைத்தும் கிராமத்திற்கே வந்தால், அது பையன் படிப்பதால் வந்தால், நம்மால் அதைக் கற்பனை செய்ய முடியாது. புனர்ஜென்மத்தைத் தவிர்த்து இதே உடலில் எல்லா மாற்றங்களும் வருவது அதுபோன்றது. பக்தன் - கிராமப் பள்ளி பல்கலைக்கழகமாவது வாழ்வில் காணாதது. ஆனால் கற்பனை செய்யலாம். ஒரு பையனுடைய படிப்பால் அது நடக்கும் என்பது என்ன?

பகவான் - பையனுடைய சிறப்பு உலகைக் கவர்ந்து பள்ளியை உயர்த்த முன்வர வேண்டும்.

பக்தன் - அதற்குப் பையன் உலகத்தைக் கடந்த உன்னதம் பெற்றிருக்க வேண்டும். No.69 புறம் அகமானால் யுகம் க்ஷணமாகும்.

பகவான் - சத்தியாரோகணம் என்ற அத்தியாயத்தின் - II/2, No. 27 - கரு இது. இதைப் பலவாறு கூறலாம்.

 1. கையால் செய்வதை மனத்தால் செய்தால் காரியம் விரைவில் முடியும்.
   
 2. கிராமத்து மனிதன் நெடுநாளில் செய்வதை டெல்லியில் உள்ளவர் போனில் முடிப்பார்கள்.
   
 3. சிறியவனுக்கு மலை, பெரியவனுக்குத் துரும்பு.

  சென்னைக்குப் போகப் பல மணி நேரமாகும். மனோவேகம் நினைத்தவுடன் மனத்தை, சென்னைக்குக் கொண்டு போகும். மனத்தால் நினைத்தால் உடலுக்குப் பலிப்பது ஆத்மாவின் செயல்.

 4. நிலை மாறினால் (planes) வேகம் அதிகமாகும்.
   
 5. புறம் அகமாவது இங்கு ஜடம் ஆத்மாவாவதாகும். அதுவும்,ஆத்மா அகத்திற்குரிய அமைதியான ஆத்மாயில்லை. பிரம்ம ஜனனத்தில் வாழ்வில் மலரும் ஆத்மா.
   
 6. புறம் அகமாவது அறியாமையின் உச்சியிலிருந்து அறிவின் உச்சக்கட்டத்தைக் கடந்து செல்வது. 

பக்தன் - No. 36 ஞானம் உறுதிமேல் செயல்படுவதால் வாழ்வு உண்டாகிறது. எதை இப்படிக் குறிப்பிடுகிறீர்கள்? ஆர்வம் எழுந்தால் தெம்பு வருவதைக் கூறுகிறீர்களா?

பகவான் - ஆர்வம் உணர்வு, மனமில்லை. ஆர்வம் எழ ஓர் எண்ணம் வேண்டும். அதைக் கூறுகிறேன். மரணப் படுக்கையிலிருந்த ஏழை ஒருவரை "வீடு கட்டலாம்" என்றவுடன் பிழைத்து எழுந்து வீடு கட்டி 25 ஆண்டுகள் மேலும் உயிரோடிருந்தார் என்பது எண்ணம் வாழ்வை உயர்ப்பிக்கிறது என்று காட்டுகிறது.

பக்தன் - உயிருக்குத் தெம்பு வருவதெல்லாம் மனத்தால் என்று கூறலாமா?

பகவான் - 36ஆம் நெம்பர் கூறுவதே அதுதான். எங்கு நாம் உணர்வைக் கண்டாலும், அதன்பின் ஞானம் இருக்கும்.

பக்தன் - No. 37 அடிமனம் மேல்மனத்தை ஆள்வதே முதல் சித்தி.

பகவான் - மேல்மனம், உள்மனம், அடிமனம் என்பவை அடுக்கடுக்காக உள்ளன.

பக்தன் - நாம் மேல்மனத்திலிருக்கிறோம், ரிஷி உள்மனத்திலிருக்கிறார். உள்மனத்திற்குப் போனால் ஆன்மீக மனத்திற்கு - முனி, ரிஷி, யோகி, தெய்வம் - உயரலாம் எனத் தெரியும்.

பகவான் - மனோமயப் புருஷனும், நிர்வாணக் கதவும் உள்மனத்திலுள்ளன. அடிமனம் அதையும் கடந்தது. சைத்தியப்புருஷன் அங்குள்ள குகையில் உள்ளான்.

பக்தன் - இதுவரை யோகங்கள்

 1. அகந்தையாலும்
   
 2. மேல்மனத்தாலும்
   
 3. காலத்திற்குக் கட்டுப்பட்டும்
   
 4. மனத்தாலும்

செய்யப்பட்டன என அறிவேன். 

பகவான் - காலத்திற்குக் கட்டுப்பட்டது எனில் கடந்த நிலையும் அதனுள் வரும்.

பக்தன் - காலத்தைக் கடந்தது எப்படி காலத்துள் வரும்?

பகவான் - காலம் என்பதற்கு இரு பகுதிகள் உள்ளன. கடந்தது மேற்பகுதி.

பக்தன் - ரிஷிகள் அடிமனத்தை அறியவில்லையா?

பகவான் - அறிவார்கள், யோகம் அங்கிருந்து செய்யப்படவில்லை.

பக்தன் - ஏன்?

பகவான் - அடிமனம் முழுமைக்குரியது. அங்கிருந்து யோகம் செய்ய சத்திய ஜீவியத்திலிருந்து யோகம் செய்ய வேண்டும். இதற்கு முன் அதை எவரும் கருதவில்லை.

பக்தன் - ஏன் இதை முதற் சித்தி என்று கூறுகிறீர்கள்?

பகவான் - முழுமை என்பது பாதாளமும், பரமாத்மாவும் சேர்ந்தது. அடிமனம் இவை சேருமிடத்திலுள்ளது. அடிமனமே உலகை ஆள்வது. மேல்மனம் அதன் கருவி. ஓர் ஆபீஸ் கிளார்க்குக்கு அதிகாரமில்லை. அதிகாரம் ஆபீஸுக்கு. கிளார்க் ஆபீசுக்கு எதிராக வேலை செய்வான். அடிமனம் ஆபீஸ், கிளார்க் மேல்மனம். கிளார்க் சொல்வதை எதையும் நம்ப வேண்டாம். அதுவே முதல் அனுபவம்.

பக்தன் - கிளார்க் ஆபீஸ் சொல்வதை அடியோடு மாற்றிப் பேசுவான்.

பகவான் - ஆபீஸ் கிளார்க்குக்குப் பிடிக்காதவற்றைச் செய்ய அவனை வற்புறுத்துவதுபோல் அடிமனம் மேல்மனத்திற்கு ஒவ்வாதவற்றைச் செய்யும்படி மேல்மனத்தை வலியுறுத்தும். அடிமனம் ஆனந்தமாக உணர்வதை மேல்மனம் வலியாக அறியும். குழந்தையின் தேவையைப் பெற்றோர் அறிவதைப்போல் நம் தேவையை அடிமனம் அறியும்.

பக்தன் - நெம்பர் 38 மரணம் வாழ்விற்கு அமரத்துவம் தருவது.

பகவான் - அன்பு, சிறுவர்களிடம் வெளிப்படும்பொழுது பரிசாகிறது. அன்பு உயர்ந்தது. சிறுவர்கட்கு அன்பு புரியுமானாலும், அது பரிசாக வெளிப்படுவது தெளிவாகப் புரியும். மனத்தில் உள்ள அன்பு, புறத்தில் பரிசாகக் காணப்படுகிறது.

பக்தன் - மரணம் வாழ்விற்கு முடிவு கட்டுகிறதே.

பகவான் - ஒரு குளத்தில் ஒரு குடம் நீரை முகந்து அதே குளத்தில் வேறு இடத்தில் ஊற்றினால் அதனால் நீர் குறைவதில்லை. நீரை முகந்ததும், மீண்டும் ஊற்றியதும் உண்மை. முகந்தபொழுது குளத்து நீர் குறைந்தது உண்மை. மீண்டும் நீர் குளத்தை வந்து அடைவதால் குளத்து நீர் மாறவில்லை.

பக்தன் - மரணம் எப்படி?

பகவான் - வாழ்வு அழியாதது. உலகில் சக்தி அழியாதது என்பது விஞ்ஞானம். வாழ்வு அழிவற்றது, குறையாதது. மிகைப்படாதது. ஓர் உடல் அழிவது மரணம். மீண்டும் அவ்வுயிர் வேறோர் உடலாகப் பிறப்பது புனர் ஜென்மம். வாழ்வுக்கு மரணத்தால் நஷ்டமில்லை, மாற்றமுண்டு. அழிவற்ற ஆத்மா அழியும். வாழ்வில், பிறப்பு, இறப்பென மாறிமாறி எழுவது வாழ்வுக்கு அமரத்துவம் தருவதாகும். உயர்ந்த நிலை தாழ்ந்த நிலையில் தன் அனந்தத்தை வெளிப்படுத்த தாழ்ந்த நிலையின் தாழ்ந்த சட்டங்களுக்குத் தன்னை உட்படுத்திக் கொள்கிறது.

பக்தன் - சக்தியும், ஜீவியமும் சேர வேண்டும். No. 39.

பகவான் - சிருஷ்டியின் நிலைகளை நாம் கீழ்க்கண்டவாறு கூறுகிறோம்.

பிரம்மம்

     ↓

சத்புருஷன்

     ↓

சித் -> சக்தி, ஜீவியம் எனப் பிரிகிறது

     ↓

சத்திய ஜீவியம்

     ↓

மனம்

     ↓

வாழ்வு

     ↓

உடல்

சித் என்ற நிலையில் சக்தியும், ஜீவியமும் பிரிகின்றன. பிரிவினை பூர்த்தியானபின் சக்தி வாழ்வாகிறது. பரிணாமத்தால் மீண்டும் மேலே போகும்பொழுது சக்தியும் ஜீவியமும் சேர்ந்து பூர்த்தியாகின்றன. சிருஷ்டியில் பிரிந்தவை, பரிணாமத்தால் பூர்த்தியாவது ஸ்ரீ அரவிந்தம். பிரிவது சிருஷ்டி, சேர்வது பரிணாமம்.

பக்தன் - மீண்டும் ஒரு முறை கூற முடியுமா?

பகவான் - பிரம்மம் முழுமை. அது சிருஷ்டிக்க வேண்டி தன்னுள்ளிருந்து ஒரு பகுதியாக சத்புருஷனை வெளிப்படுத்துகிறது. அடுத்த பகுதி அசத். சத்புருஷனுக்கு அடுத்த நிலை சித். சித் என்பது சத்தின் பகுதி. ஆனந்தம் சித்தின் பகுதி. சத்திய ஜீவியம் அவற்றின் பகுதி. மனம் சத்திய ஜீவியத்தின் பகுதி. வாழ்வு மனத்தின் பகுதி. ஜடம் வாழ்வின் பகுதி. இதுவரை சிருஷ்டி. ஜடம் வாழ்வாகி முழுமை பெறுவது பரிணாமம். வாழ்வு மனமாகி முழுமை பெறுகிறது. தொடர்ந்து மீண்டும் பரிணாமத்தால் பகுதி, முழுமை பெற்று பிரம்மத்தை அடைகிறது.

பக்தன் - இது புரிகிறது.

பகவான் - சித் என்பது இரண்டாகப் பிரிகிறது. இதை ஜீவியம், சக்தி எனலாம். ஞானம், உறுதி எனவும் கூறலாம். இவை பிரிவதால் சிருஷ்டி அடுத்த அடுத்த நிலைகளையடைகிறது. மனம் என்ற நிலையில் ஞானமும், உறுதியும் பிரிந்துள்ளன. ஞானம் உறுதிமேல் செயல்பட்டால் life energy பிறக்கிறது. இதுவே வாழ்வு எனப்படும். பரிணாமத்தால் மீண்டும் உயர்ந்து மேலே போகும்பொழுது ஞானமும், உறுதியும் அல்லது சக்தியும், ஜீவனும் சேர்கின்றன. இது தத்துவம்.

பக்தன் - உதாரணம்,

பகவான் - கம்பனியில் மானேஜராக உள்ளவர் அறிவாளியானால், தன் அறிவால் தீட்டிய திட்டத்திற்கு அவர் உயிர் தர முடியாது. முதலாளியைக் கேட்டு உத்தரவு பெற்று திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மானேஜர் நிலை உயர்ந்து, அவரே முதலாளியானால் இப்பொழுது மனதில் எழும் திட்டத்திற்கு அவர் உத்தரவு பெறத் தேவையில்லை. இந்நிலையில் திட்டமும் உயர்வும் இணைந்துள்ளன.

பக்தன் - உடல் உணர்வு மனத்தை எட்டி எண்ணமாகி உடலை ஆட்சி செய்கிறது என்பது நெம்பர் 40.

பகவான் - இயற்கைக்குப் பரிணாமம் என்பதும், சமூகத்திற்கு நாகரீகம் என்பதும் ஒன்றே - உடல் மனத்திற்குப் பணிவது.

பக்தன் - அன்று உடலால் வாழ்ந்த மனிதன் நாகரீகம் பெற்றதால் இன்று மனத்தால் வாழ்கிறான். இது தெரியும்.

பகவான் - தத்துவப்படி இது எப்படி சாத்தியமாகிறது என்பது 40ஆம் நெம்பர் விளக்கம். உடலுக்கு உணர்வுண்டு, அறிவில்லை. வாழ்வுக்கு அறிவில்லை என்றாலும், அறிவுடைய மனத்திற்கும் உணர்வுடைய உடலுக்கும் இடையே அது அமைந்துள்ளது. உடல் மனமாக உயரும் பரிணாமத்தை நிறைவேற்றும் கருவி வாழ்வு. உடலுக்கும், மனத்திற்கும் இடையே வாழ்வுள்ளதால் உடல் அடிபடும்பொழுது, உடலுக்குச் சிந்திக்கும் அறிவில்லை. தான் பட்ட அடியை மனத்திற்கு வாழ்வு மூலம் உடல் அனுப்புகிறது. மனம் அதை எண்ணமாக மாற்றி மீண்டும் எப்படி அடிபடாமலிருக்கும் என உடலுக்குக் கூறுகிறது.

பக்தன் - உதாரணம்,

பகவான் - ஒற்றன் ஊரைச் சுற்றி நடப்பவற்றை அரசனுக்குத் தெரிவித்தால் அதன் பேரில் அரசன் ஆணை பிறப்பிப்பான் என்பது வழக்கம்.

பக்தன் - ஊருக்கும், அரசனுக்கும் இடையில் ஒற்றனிருப்பதைப்போல் உடலுக்கும் மனத்திற்குமிடையே வாழ்வுள்ளது. நம்பர் 41 இயலாமை போராடி வலுப்பெற்றால் சைத்தியப்புருஷன் மனதில் எழும்.

பகவான் - நஷ்டத்தைப் புத்தி கொள்முதல் செய்யும் என்பதுண்டு. உடலிலும், வாழ்விலும் உள்ள பிணக்கை இயலாமை என்கிறோம். ஒத்துழைக்க வேண்டியவர் பிணக்கால் போராடுகிறார்கள். போராட்டம் இயலாமையை நீக்கி பலம் தருகிறது. போராடுவது உடல் அல்லது உணர்வு. சைத்தியப்புருஷன் இவற்றுள் புதைந்திருக்கிறான். தங்கம் கனிப்பொருளில் புதைந்திருப்பதைப்போல் சைத்தியப் புருஷன் உடலில் புதைந்துள்ளான். போராட்டம் நிலையை உடலிலிருந்து மனத்திற்கு உயர்த்துகிறது. புதைந்துள்ள சைத்தியப் புருஷன் வெளிவருகிறான்.

பக்தன் - கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் என்ற வழக்கு இவ்வுண்மையைக் கூறுகிறது. நம்பர் 42 ஜடம் சச்சிதானந்தம்.

பகவான் - இறைவன் உலகமானான் என்ற தத்துவத்தை சச்சிதானந்தம் ஜடமாயிற்று என்று கூறுகிறோம். சத்து, சித்து, ஆனந்தம், சத்தியஜீவியம் ஆகிய 4உம் ஜடம், சைத்தியப்புருஷன், வாழ்வு, மனமாகத் தலை கீழே மாறின என்பது ஓர் அத்தியாயம்.

பக்தன் - ஏன், எப்படி எனக் கூறினால் உதவும்.

பகவான் - சிருஷ்டிக்குரிய 8 நிலைகள் இவை. மேலுள்ள 4உம் மாறி கீழுள்ள 4ஆக மாறின. இது சிருஷ்டி. பரிணாமத்தால் இவை மீண்டும் மாறும் என்பது தத்துவம். தலைகீழே மாறுவது (self-absorption) தன்னுள்ளே தான் மறைவது.

பக்தன் - Self-absorptionயை விளக்க வேண்டும்.

பகவான் - Concentration நிஷ்டை என்பதும், self-absorption என்பதும் ஒரே வகையானவை. நாம் ஒரு வேலை செய்யும்பொழுது நம்மை மறந்து வேலையில் ஈடுபடுவது self-absorption தன்னுள் தான் மறைவது.

பக்தன் - புரிகிறது. மேலும் விளக்கம் தேவை.

பகவான் - சிருஷ்டியை ஆண்டவன் தன்னிச்சையாகச் செய்தான். இதை self-conception என்றோம். பல காரியங்களை ஒரு காரியமாக எடுத்துக் கொள்வது self-limitation, எடுத்துக் கொண்டதில் முழு ஈடுபாடு கொள்வது self-absorption.

பக்தன் - ஞானம், அஞ்ஞானமாக மாறுவது இப்படித்தானா?

பகவான் - ஆமாம், முதலில் தலைகீழே மாறி முடிவில் முழு ஈடுபாடு கொள்வது.

பக்தன் - சிருஷ்டியில் இது எப்படி, எங்கே ஏற்படுகிறது?

பகவான் - சத்திய ஜீவியம் இரண்டாகப் பிரிந்து மனம் ஏற்பட்ட பொழுது spiritual force தலை கீழே மாறி material force ஆகிறது. இதைச் செய்வது மனம்.

பக்தன் - தலை கீழே மாற்றுவது மனம்.

பகவான் - சத்தியஜீவியம் இரண்டாகப் பிரியும்பொழுது காலம், காலத்தைக் கடந்தது எனப் பிரிகிறது.

பக்தன் - காலத்தைக் கடந்த நிலை தலைகீழாகக் காலமாக மாறுகிறது எனக் கூறலாமா?

பகவான் - கூறலாம்.

பக்தன் - உதாரணத்தின் மூலம் கூறுங்கள்.

பகவான் - நாடு செழிப்பாக முன்னேற சர்க்கார் திட்டம் போட்டால், அதை நாம், நம் இலாபத்திற்காக எடுத்துக் கொள்கிறோம்.

பக்தன் - இங்குப் பொதுநலமான திட்டம் சுயநலமாக மாறுகிறது.

பகவான் - சுயநலமாக உற்பத்தியான பொருள் மார்க்கட்டில் வந்தால் பரநலமாகப் பயன்படுகின்றன. பரநலம் சுயநலமாவது சிருஷ்டி. சுயநலம் பரநலமாவது பரிணாமம். சுயநலம் அதிகப் பலன் பெற உலகை மறந்து உட்சோதியில் கலப்பது self-absorption. சிருஷ்டியின் தத்துவம் புரிந்தபின் நம் வாழ்வைப் பரிசீலனை செய்தால், இரண்டும் ஒன்று எனப் புரியும்.

பக்தன் - எனக்குப் புரியாததால், உங்களை எடுத்து விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பகவான் - நாம் செய்ய விரும்பும் எந்தக் காரியமும் - வீடு கட்ட - நாமே எடுத்த முடிவு self-conception. வீடு முடியும்வரை நாம் நம் கவனத்தை வீடு கட்டுவதில் மட்டும் செலவிடுகிறோம். இது self-limitation. வீடு எழும்பொழுது நாம் அவ் வேலையில் உலகை மறந்து விடுவது self absorption. இது போலவே நாம் எந்த வேலையையும் செய்கிறோம். நம் வேலைக்கு நாம் ஆண்டவன்.

பக்தன் - இது புரிகிறது.

பகவான் - தத்துவத்தைப் புரியும்படிச் சொல்லலாம்.

பக்தன் - நடைமுறையில் பலிப்பது நம் சுபாவம் personalityயைப் பொருத்தது.

பகவான் - சுபாவம் வேறுபடுகிறது என்றால் ஒரு காரியம் என வரும் பொழுது அந்த வேறுபாடு தெரியும், தெரியாமலிருக்காது.

பக்தன் - Associationஇல் செக்ரடரி எலக்ஷன் என்றவுடன் யார் மனம் என்ன நினைக்கிறது எனத் தெளிவாகத் தெரியும்.

பகவான் - வாழ்நாள் முடிவில் அன்றிருந்த சிறு வித்தியாசம் உச்சிக்கும், அடிமட்டத்திற்கும் உள்ளதாக முடியும்.

பக்தன் - ஒருவனுக்கு நிற்கத் தோன்றாது. அனைவரும் சேர்ந்து அவனை நிறுத்துவர். அடுத்தவன் நிற்கப் பிரியப்பட்டு, பிரியத்தை அடக்கிக் கொள்வான்.

பகவான் - சிறுதுளி பெருவெள்ளம். இது எதிரான பக்கங்களில் உள்ளது. இதை நடைமுறையில் காண்பது யோகம் பலிப்பதாகும்.

பக்தன் - 43ஆம் நம்பர் மனம் ஆன்மாவைப் புலன் வழி அறிவது ஜடம்.

பகவான் - சிருஷ்டியின் நிலைகளை மீண்டும் ஒரு முறை கூறுவோம்.

 1. முழுமுதற் கடவுள் - பிரம்மம் - அனாதி - அனந்தம் The Absolute.
   
 2. சிருஷ்டிக்க விரும்புகிறது.

  ஆனந்தம் தேடுகிறது.

  கண்டுபிடிப்பது ஆனந்தம்.

  தானே மறைந்து கண்டுபிடிப்பது பெரிய ஆனந்தம்.

  மறைந்ததை மறந்தால் கண்டுபிடிக்க முடியாது.

  முடியாதது முடிவது பேரானந்தம்.

  மறந்ததை நினைவுபடுத்துவது அருள்.

  ஆட்டம் இரு கட்சியுள்ளது.

  பிரம்மம் இரு கட்சியாகப் பிரிந்து ஆட்டம் ஆடுகிறது.

  ஒருவரே இரு கட்சியாகப் பிரிந்து ஆடுவது அற்புதம்.

  பிரம்மம் மறைய இடமில்லை.

  எனவே தன்னுள்ளே தான் மறைகிறது.

  மறைந்தது பிரம்மம், மறந்தது பிரம்மம்.

  மறைந்த பிரம்மம் தன்னை மறந்தது சிருஷ்டியின் சிறப்பு.

  தான் தன்னை மறந்ததை தானே நினைவு படுத்துவது அருள், ஆண்டவன் செயல்.

  நினைவு எழுவது கண்டுபிடிப்பது.

  அதுவே சிருஷ்டியின் ஆனந்தம் தருவது.

  இது சச்சிதானந்த ஆனந்தத்தை விடப் பெரியது.

  இந்த ஆனந்தம் மேலுலகுக்குரியது. நம் உலகில் இது மின்னல்போல் தோன்றி மறையும்.

  நிலையற்ற ஆனந்தம் நிலை பெறுவது ஜடத்தால், ஜடத்தில் வெளிப்படுவதால் அது நிலைபெறுகிறது.

  ஆதியான பிரம்மம் அசைவற்றது.

  அது காலத்தில் அஞ்ஞான இருளாகவும், காலத்தைக் கடந்து அசைவற்ற ஜோதியாகவுமிருக்கும்.

  அசைவில் ஜோதியாகப் பிரம்மமிருப்பது பரிணாமம்.

  இந்த ஆனந்தம் ரிஷிகட்கும், இறைவனுக்கும் இல்லாத ஆனந்தம்.

  இது பிரம்மானந்தம், பிரம்ம ஞானம் பெற்று, பிரம்மார்ப்பணத்தால் பிரம்மம் வாழ்வில் வெளிப்படுவது.

  பிரம்ம ஜனனம் என்பது ஸ்ரீ அரவிந்தம்.
   
 3. சிருஷ்டியின் முதல் நிலை

  சத் - அசத்
   
 4. சத் என்பது ஜீவனாகி சத் புருஷனாகிறது.

  இதற்கு 5 அல்லது 6 மாற்றங்கள், வெளிப்பாடுகள், extensions உண்டு.

  - சத் - சித் - ஆனந்தம் என்பது ஒன்று.

  - சத் என்ற அகம் சத்தியம் என்ற புறமாவது இரண்டு. - சத், சித், ஆனந்தம் என்ற அகநிலை,
  சத்தியம், ஞானம், ஆனந்தம் என்ற புறநிலையாவது சத்திய ஜீவியம் எனப்படும்.
  • இவற்றிடையே எழுவது ஆன்மா.
    
  • ஆன்மா என்பது substance பொருள்.
    
  • உலகனைத்தும் அதனால் ஆனது.
    
  • ஒன்றான சத் பலவான ஜீவாத்மாக்களாக மாறுவது பிரபஞ்சம் சிருஷ்டியாவது.
    
  • காலமும், இடமும் 4ஆம் மாற்றம்.
    
  • சத்புருஷன் மூன்றாகப் பிரிகின்றது.

   ஆத்மா - புருஷா - ஈஸ்வரா.

   ஆத்மாவைப் பிரம்மம் எனவும் கூறுவோம்.

   இப்பிரம்மம் க்ஷர, அக்ஷரப் பிரம்மமாகப் பிரிகிறது.

   க்ஷரப்பிரம்மம் என்பது உலகம்.

   
 5. சத்திய ஜீவியம் இரண்டாகப் பிரிகிறது. ஒன்று காலத்தைக் கடந்தது, அடுத்தது காலத்திற்குரியது.
   
 6. இவற்றிடையே மனம் ஏற்படுகிறது. மனம் சத்திய ஜீவியத்திலிருந்து பிரிந்த பகுதி. சத்திய ஜீவியத்திற்குள்ள முழுமை, மனத்திற்கில்லை. சத்திய ஜீவியம் உலகை முழுமையாகக் - முழுமையான பிரம்ம வெளிப்பாடாகக் காணும் - காணும். மனம் ஒரே சமயத்தில் சத்திய ஜீவியம் போல் இருபுறங்களையும் காண முடியாது. ஆனால் மாறி மாறிக் காணவல்லது. மேல்புறம் சத்திய ஜீவியத்தையும், கீழ்ப்புறம் பிரபஞ்சத்தையும் மனம், தான் விரும்பியபொழுது காணக் கூடியது.

  மனம் தன் பிறப்பை மறந்து மேல்புறம் காண மறுத்ததால் அஞ்ஞானம் ஏற்பட்டது.
   
 7. மனத்தின் இரு பகுதிகள், ஞானம் - உறுதி (will).
   
 8. ஞானம் உறுதிமேல் செயல்படுகிறது. அதனால் ஓரளவு ஞானம் அழிகிறது. சக்தி பிறக்கிறது. அது வாழ்வு எனப்படும்.
   
 9. ஞானம் சக்திமீது செயல்படும்பொழுது தன்னை இழக்க ஆரம்பித்தது முழுவதும் தன்னை இழந்தால் சக்தி, சலனமற்ற ஜடமாகிறது. 

ஜடம் உற்பத்தியாவதை மற்றொரு வகையாகவும் கூறலாம்.

சத்  -  சித்

சத்திய ஜீவியம் (காலத்தைக் கடந்தது)

ஆன்மா  <-  மனம்

சத்திய ஜீவியம் (காலத்திற்குரியது)

சத்தியம்

- மனம் ஆன்மாவைக் காண்கிறது. மனம் புலன் வழி ஆன்மாவைக் காண்கிறது. ஆன்மா மனத்திற்கு ஜடமாகக் காட்சியளிக்கிறது.

- மனம் புலன்வழி ஆன்மாவைக் காணும்பொழுது மனத்தின் பார்வைக்கு ஆன்மா ஜடமாகக் காட்சியளிக்கிறது.

பக்தன் - சிரமமாக இருந்தாலும், சிக்கல் அவிழ்ந்து சிருஷ்டி புரிவது போலிருக்கிறது. இதை வாழ்வில் பொருத்திக் கூற முடியுமா?

பகவான் - நூலின் எல்லாக் கருத்துகளையும் அறிந்தபின் அப்படிக் கூறினால் புரியும். இப்பொழுது சுருக்கமாகக் கூறினால் சில சமயம் புரியும். உணர்ச்சிமயமான மனிதன் செயலாற்ற முற்பட்டால் ஆன்மா மனம் வழி செயலில் வெளிப்படும். மனிதன் மனத்தை மையமாகக் கொண்டால் உலகத்திற்குரிய பலனும், மனத்திலிருந்து ஆன்மாவுக்குப் போய் ஆன்மாவை மையமாகக் கொண்டு செயல்பட்டால், ஆண்டவனுக்குரிய பலனும் வரும்.

பக்தன் - வளரும் ஆன்மா எங்குள்ளது?

பகவான் - மேலுள்ள படத்தில் மனத்தினுள் உள்ள ஆன்மா வளரும் ஆன்மாவாகும்.

வளரும் ஆன்மா செயல்படுவது marvel, அற்புதம், பிரம்ம ஜனனம்.

பக்தன் - நெம்பர் 44 அஞ்ஞானம், தமஸ், பிரிவினை ஜடத்திற்குத் தடை.

பகவான் - ஜடம் முதலில் அஞ்ஞானத்தால் சூழப்படுகிறது. ஞானம் தலை கீழேமாறி அஞ்ஞானமாவது ஜடத்தில் பூர்த்தியாகிறது. அதனால் அஞ்ஞானம் ஜடம் மீண்டும் சத்தாகத் தடையாகவுள்ளது. சக்தி முழுவதும் சலனத்தை இழப்பதால் ஜடம் ஏற்படுவதால், ஜடத்தில் தமஸ் - மந்தம் - உள்ளது. சத்தியஜீவியம் இரண்டாகப் பிரிந்து மனம் ஏற்படுகிறது. அம்மனம் ஜடத்தை உற்பத்தி செய்வதால் ஜடம் பிரிந்து நிற்கிறது. அது பிரிவினை. அஞ்ஞானம், தமஸ், பிரிவினை ஆகிய மூன்றும் விலகினால் ஜடம் சத்தாக மாறும்.

 1. அஞ்ஞானம் ஏழு வகைகளானது. ஏழும் அகல வேண்டும்.
   
 2. மந்தம் என்பது ஜடத்திற்குரியது. மந்தம் விலகினால் ஜடம் வாழ்வாகும். மனத்தின் வேகம் மனோவேகம். அது வாழ்வின் வேகத்தைவிட அதிகம். மௌனம் மனோ வேகத்தைக் கடந்தது. மேலே போகப் போக சத்திய ஜீவியத்தில் வேகம் ஒளியின் வேகத்தைவிட அதிகம்.அந்நிலையில் தமஸுக்கு வழியில்லை.
   
 3. பிரிவினை - ஒன்று பலவாகப் பிரிந்தது. பல ஒன்றாகப் பிரிவினையை இழந்து மாறுதல் அவசியம். சத்திற்குரியது ஐக்கியம். சித்திற்குரியது ஒருமை. சத்திய ஜீவியத்திற்குரியது சுமுகம். மனத்திற்குரியது விட்டுக் கொடுப்பது. வாழ்வுக்குரியது பிணக்கு. ஜடத்திற்குரியது முரண்பாடான பிரிவினை. பிரிவினை படிப்படியாக உயர்ந்து ஐக்கியத்தை அடைய வேண்டும். 

பக்தன் - நெம்பர் 45 சத்திய ஜீவியம் சிருஷ்டிப்பது என்பது பிரம்மம் சிருஷ்டிப்பதாகும்.

பகவான் - பிரம்ம சிருஷ்டி பிரபஞ்ச சிருஷ்டி என்ற அத்தியாயத்தில் உலகை மனம் சிருஷ்டிக்கவில்லை சத்தியஜீவியம் சிருஷ்டித்தது என்றோம். சத்தியஜீவியம் என்பது சச்சிதானந்தம் என்ற அகத்தின் புறமாதலால், அதை சச்சிதானந்தம் சிருஷ்டித்தது என்று கூறலாம். பிரம்மத்தின் முதல் நிலை சச்சிதானந்தம் என்பதால், அதையே பிரம்மம் சிருஷ்டித்தது எனவும் கூறலாம்.

பக்தன் - முனிசிபாலிட்டியும், மாநில சர்க்காரும் செய்வனவற்றை மத்திய சர்க்கார் செய்வதாகக் கூறுவது போலாகும்.

பகவான் - யார் செய்தாலும், முடிவாக அது மக்கள் பணம் என்பதால் சமூகம் தனக்குத் தானே செய்து கொள்வதாகக் கருதலாம்.

பக்தன் - உடல் செய்வதை மனம் செய்வது என்று சொல்வதைப் போலவா?

பகவான் - ஆமாம்.

பக்தன் - நம்பர் 46 பிரம்மம் முழுமையானது. மனம் அதைப் பகுதியாகக் காண்கிறது.

யானையைக் குருடர்கள் கண்ட உதாரணம் நூலில் வருகிறது. இன்னொரு உதாரணம் கூறுங்கள்.

பகவான் - சர்க்கார் என்பது முழுமையானது. தாலூக்காபீஸில் வேலை செய்பவனுக்கு அவனுடைய இலாக்காவே அனைத்து சர்க்காருமாகும். மற்ற இலாக்காக்கள் மனதில் படாது.

பக்தன் - நம்பர் 47 ஜீவாத்மாவே பரமாத்மா. இதை நான் பல்வேறு வழிகளிலும் அறிவேன். என்றாலும் மேலும் ஒரு முறை கேட்கப் பிரியப்படுகிறேன். எனக்குத் தெரிந்தது,

 • நாம் அகந்தையை ஜீவாத்மா என நினைக்கிறோம்.
   
 • அகந்தை அஞ்ஞானத்தில் ஜீவாத்மா, ஞானத்திலன்று.
   
 • அகந்தை பிரிந்து நிற்பது, ஒருமையோ, ஐக்கியமோ உடையதன்று.
   
 • அஞ்ஞானம் கரைந்தால் அகந்தை கரையும்.
   
 • அகந்தை மேல்மனத்திற்குரியது.
   
 • மேல்மனம் பகுதி.
   
 • அடிமனம் முழுமையானது.
   
 • அகந்தை அடிமனத்திலில்லை.
   
 • மேல்மனத்தில் அகந்தை, உள்மனத்தில் புருஷனாகி, அடிமனத்தில் சைத்தியப் புருஷனாகிறது.
   
 • காலத்தைக் கடந்து, பிரபஞ்சத்தை அறிந்தால் அகந்தை கரையும்.
   
 • அகந்தை கரைந்தால் புருஷன் வெளிவருவான்.
   
 • இது உலகத்து ஜீவன்.
   
 • இவன் உலகத்து அனுபவத்தை அகத்தில் காணலாம்.
   
 • அகத்தில் அவ்வனுபவத்தின் ஜீவன், ஜீவாத்மா. அவனை உற்று நோக்கினால் பரமாத்மா எனத் தெரியும். 

பகவான் - அதற்கு மேல் சொல்ல எதுவுமில்லை.

பக்தன் - ரிஷிகள் கண்டது, காணாதது எவை?

பகவான் - மனம் பரமாத்மாவை நிஷ்டையிலும், ஜீவாத்மாவை தியானத்திலும் காண்கிறது. அவை வேறாகத் தெரிகின்றன. சத்திய ஜீவியம் விழிப்பில் இரண்டையும் ஒன்றாகக் காண்கிறது. சத்திய ஜீவியம் ரிஷிகட்கில்லாததால் அவர்கள் முழுமையைக் காணவில்லை.

பக்தன் - இந்த அத்தியாயத்தில் பிரம்மமே உலகம், முரண்பாடு முடிவற்றதன்று, காலம் சிருஷ்டிகர்த்தா இல்லை என்று வருவதற்குக் காரணம் என்ன?

பகவான் - பிரம்மமே சிருஷ்டி என்பதும், பரமாத்மாவே ஜீவாத்மா என்பதும் ஒன்றே. முரண்பாடு முனைப்பின் தோற்றம், ஆதியின் அம்சமில்லை என்பதன் அடிப்படையில் பிரம்மம் சத், அசத்தாயிற்று. காலம் சிருஷ்டிக்கப்பட்டது என்றால் காலம் சிருஷ்டிக்கவில்லை என்பது தெளிவு.

பக்தன் - மேலும் அறிய வேண்டியவை இங்குண்டா?

பகவான் - இம்மூன்றும் முழுமையை உணர்த்துபவை. முழுமை மனதில் படும்வரை இவை தெளிவு தாரா. நாம் உயிரோடிருக்கிறோம் என்ற முழுமையை உணர்வது போல் நாம் வேறெதையும் உணர்வதில்லை.

பக்தன் - 48ஆம் நெம்பர் negative என்றொன்றில்லை.

பகவான் - அடிப்படையில் இது நமக்குப் புதியது. எதிரி, வேண்டாதது, உதவாது, ஆகாது, negative என்பதே நம் வாழ்வுக்கு அடிப்படை. அவையில்லை என்றால் பரீட்சையில்லாத பள்ளிக்கூடம் போலிருக்கும். ஊரில் திருடனில்லை என்பதை நம்ப முடியாது. வதந்தி என்றொன்றில்லை. ஆண், பெண் என்ற வேறுபாடில்லை என்பவை நம் கற்பனைக்கு எட்டாதவை. உண்மை வேறு. நம் உடலில் வேண்டாதது என்பதுண்டா? அதேபோல் வாழ்விலும் விலக்கப்படுவது, negative இல்லை என்றால் நம்ப முடியவில்லை. வழக்கு எனில் ஒருவர் ஜெயித்தால், அடுத்தவர் தோற்க வேண்டும். இந்த கோர்ட்டில் எந்த வழக்கிலும் தோல்வியில்லை என்பது சிந்தனைக்குப் புலப்படாதது எனினும், அதுவே உண்மை. புரிந்து கொள்வது சுலபம். ஏற்பது சிரமம். மேலும்,

 • வலியை அனுபவிக்காமல் ஆனந்தத்தின் முழுமையை அறிய முடியாது.
   
 • இரண்டாகப் பிரிவது மீண்டும் மூன்றாம் நிலையில் கூடுகிறது என்பதையும் உலகம் கருதுவதில்லை. அந்நிலையில் உயர்வு, பூரணம் பெறுகிறது. 

பக்தன் - உதாரணத்தின் மூலம் விளக்க முடியுமா?

பகவான் - மனிதன் வலியை வலியாக அனுபவித்தால் வலியும், ஆனந்தமும் பகுதியாகவே நிற்கின்றன. முழுமை எழுவதில்லை. வலியை ஆனந்தத்தின் மறு உருவம் எனக் கருதி ஏற்றால், வெகு சீக்கிரம் வலி ஆனந்தமாக மாறும். வலி அவனைப் பொருத்தவரை அழியும். இல்லையேல் ஆயுள் முழுவதும் வலி இருந்தபடியிருக்கும்.

பக்தன் - வேலை கற்க ஒர்க் ஷாப்புக்குப் போகிறவன் அதைத் தலைவிதியே என ஏற்றால் அவன் கடைசிவரை வேலையைக் கற்க மாட்டான். கூலியாகவே இருப்பான். இந்த வேலை நான் முதலாளியாவதற்குப் பயிற்சி என ஏற்றால் கொஞ்ச நாளில் முதலாளியாகி விடுகிறான்.

பகவான் - உதாரணம் பொருத்தமானது. வாழ்வில் வலியுள்ளவற்றை நாம் "இது ஆனந்தத்தின் வாயில்" என்று ஏற்றால் வலி நம் வாழ்வை விட்டுப் போகும். ஆரம்பத்திலேயே அந்த ஞானம் முழுமையானால், வலி ஆனந்தமாக உடனே மாறுவதைக் காணலாம்.

பக்தன் - நெம்பர் 49. மனம் இல்லாததை நினைக்க முடியாது.

பகவான் - எதிரேயுள்ளதைப் பார்க்கிறோம். நேற்று பார்த்ததை இன்று நினைக்கிறோம். பார்க்காததை எப்படி நினைவு படுத்துவது? கற்பனை என்பது சூட்சும உலகில் உள்ளதைக் "காண்பது." இன்று நடப்பவை ஏற்கனவே சூட்சும உலகில் உருவானவை. இனி வரப்போகும் நிகழ்ச்சிகள் இன்று சூட்சுமத்திலிருப்பதைக் கற்பனை செய்கிறோம். நேற்றோ, நாளையோ, இன்றோ இல்லாததைப் பார்க்கும் திறன் மனத்திற்கு இல்லை. பள்ளிக்கூட அட்டண்டென்ஸில் வகுப்பில் உள்ள பிள்ளைகள் பெயர் இருக்கும். வகுப்பில் இல்லாத பிள்ளைகள் பெயர் இருக்காது.

பக்தன் - மொழியில் சொல் அப்படித்தான். உள்ள நடைமுறைக்குச் சொல்லிருக்கும். தீட்டு, எச்சில் என்பவை ஆங்கிலேயருக்கில்லை. அதனால் ஆங்கிலத்தில் அதற்குச் சொல்லில்லை. மேஜை, நாற்காலி, கோட்டு என்பவை நம் நாட்டிலில்லை. அதனால் தமிழில் அதற்குரிய சொற்களில்லை. உள்ள பொருள்களுக்கே சொல்லிருப்பதைப்போல், மனம் இல்லாததை நினைக்க முடியாது என்பதை மாயை இல்லை என நூல் கூறுகின்றது.

பகவான் - ஆமாம்.

The Life Divineஇல் இரண்டாம் புத்தகத்தில் 5,6 அத்தியாயங்கள் மாயை பற்றியவை. இங்கு முக்கியமாகக் கூறப்படுபவை,

- ஜடமனம் நாத்திகம் பேசும். பிராணனும், பிராணனுக்குரிய மனமும் மாயையை நாடுகின்றன. சிந்திக்கும் மனம் பிரம்மத்தை நோக்கிச் செல்லும்.

- மாயை என்பது இல்லை என்பது தத்துவம். இருக்கிறது என்பது நம் கொள்கை.

- கனவையும், ஆவியையும் மாயாவாதிகள் உதாரணமாகக்கூறுகிறார்கள். கனவை அடிமனம் உண்மை என அறியும். ஆவி உலகம் உள்ளதைப் பிரதிபலிக்கிறது.

- இரு தத்துவங்கள் இருக்கலாம்.

 1. சித் மாயையைச் சிருஷ்டிப்பதால், உலகம் மாயையாகிறது.
   
 2. மனம் அஞ்ஞானத்தின் கருவி, அதனால் அஞ்ஞானத்தைக் கைவிட்டு, பிரம்மத்துடன் சேர முடியும். 

- பார்ப்பவன், பார்வை, பார்க்கும் பொருள் இவற்றுள் எதையும் இல்லை எனலாம்.

- நம் முன் அழியாத சத்தியமும், மாயையான உலகமும் உள்ளன.

- பிரம்மத்தின் நான்கு நிலைகள்.

 1. அக்ஷரப்பிரம்மம் என்பதே பிரம்மம்.
   
 2. சர்வம் பிரம்மம்.
   
 3. உள்ளனவெல்லாம் அக்ஷரப்பிரம்மம்.
   
 4. அது மற்றவற்றை பிரம்மத்தின் 4 நிலைகளில் காண்கிறது. 

- சங்கரர் கூறுவது அன்றிருந்த சிக்கலை உடைக்கிறது. ஆனால் அவரிடம் முழுப் பதிலில்லை.

- முழுமையான ஆத்மானுபவம் தர்க்கவாதங்களைத் தகர்த்தெறியும்.

- நாம் புதிர் என்பது மாயையில்லை, அஞ்ஞானம்.

பக்தன் - பழமொழி, திருக்குறள், வழக்கு, வாய்வாக்கு என்பவற்றுள் அன்னை கோட்பாடுகளில் பல வருகின்றன. சில நேரடியாகப் புரிகின்றன. மற்றவை புரியவில்லை.

பகவான் - ஸ்ரீ அரவிந்தம் கூறுவது முழுவதும் புதியது என்றாலும், இதன் வித்துகள் மரபில் உண்டு. விதியை மதியால் வெல்லலாம் என்பது அது போலொன்று. மதி என்பது மனம். ஸ்ரீ அரவிந்தம் மதியைக் கூறவில்லை. வளரும் ஆன்மாவைக் கூறுகிறது.

பக்தன் - "நமக்குச் செய்ய மாட்டார், வேண்டியவர்க்குச் செய்வார" என்ற சொல் வழங்குகிறது.

பகவான் - பாரபட்சம், சுயநலம், ஊழல், அநீதி ஆகியவற்றை இப்படிக் கூறுவர். இதையே அன்னையிடம் நமக்கு நடக்காது என்பர். எனக்கு வேண்டாம் என்பதை நமக்கு நடக்காது என்பார். ஒரு முதலாளியைப் பற்றி இப்படிக் கருதுபவர், இதை மாற்றி, "எனக்கு அன்னை மீது நம்பிக்கையிருந்தால் நடக்கும்" என்றால் நிலைமை மாறும்.

பக்தன் - நான் கேட்பது வேறு. "இவன் மனதிலுள்ள அநீதியை நியாயப்படுத்த இப்படிப் பேசுகிறான்" என்று நான் நினைக்கிறேன்.

பகவான் - தன் குறையைப் பிறர்மீது ஏற்றிப் பேசும் வழக்கம் இது. மேலும் தன் குறையை மீறி அனைவரும் தமக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற விருப்பம் இப்படிக் குறையாக எழுகிறது. "நான் பெற்றனவெல்லாம் உங்களால்தான். நான் நன்றியுள்ளவன்" என்று கூறுபவர் நல்லவர். அவருக்கு என்ன தெரியவில்லை, நன்றியறிதல் பலனுக்கு என்பது சுயநலம். பலனில்லை எனில் நல்லுணர்வில்லையா? பழக்கம் பலனுக்கு எனப் பேசுவது ஆதாய மனப்பான்மை என்று அறிய முடியாதவர்.

பக்தன் - கேட்டது கேட்டபடி பலிக்கிறது. சக்திவாய்ந்த தெய்வம் என்பவர் ஒருவர்.

பகவான் - என்னை எது வேண்டுமானாலும் கேட்கலாம் என்ற அன்னை, எதுவும் கேட்காத மனப்பான்மை நல்லது என்று கூறியிருக்கிறார். பலனுக்காகப் பிரார்த்திப்பது முதல் நிலை பக்தி.

பக்தன் - கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் என்பது முரண்பாடு உடன்பாடாவது என்று கொள்ளலாமா?

பகவான் - அவ்வுண்மையைக் கண்டவர் கூறியது இது.

பக்தன் - ஆவாதவன்தான் ஆபத்திற்குதவுவான் என்பது ஒரு சொல்.

பகவான் - இதுவும் அது போன்றதே. முரண்பாட்டிலுள்ள உடன்பாட்டை எடுத்துக் காட்டுகிறது. Mayor of Casterbridge என்ற நாவலில் எளியவன் மேயராகி, மீண்டும் எளிமையாகி, யார் கண்ணிலும் படாமல் சாகிறான். அவன் மேயராக இருந்தபொழுது வேலைக்கு நேரம் கழித்து வரும் கூலிக்காரன் வீட்டிற்குப் போய் அவன் அரை நிர்வாணமாக நிற்பதுடன் தெருவுக்கு இழுத்து வருகிறான். மேயருடைய மேனேஜர் அவனுடைய அவமானத்தைத் தடுக்கிறான். மேயர் மரணப் படுக்கையிலிருக்கும்பொழுது அன்று அவமானப் பட்டவன் மட்டும் உடனிருந்து உதவுகிறான். அவமானப்பட்டவன் பழிவாங்குவான். அது மேல்மனம். அடிமனம் அன்றைய அவமானத்தை அருளாகக் கருதுவதால், இன்று சேவை செய்ய முன்வருகிறது.

பக்தன் - எழுத்தாளர்கட்கு அடிமனத்தின் உண்மை தெரியுமா?

பகவான் - அவர்கட்கு வாழ்வின் இரகஸ்யங்கள் தெரியும். அவை யோகத்தின் அடிப்படை.

பக்தன் - வழக்கில்,

பணம் என்றால் எதற்கும் கட்டுப்படாது.

ஆண்பிள்ளை எப்படி வேண்டுமானாலும் இருப்பான்.

கேட்காத கடன் வாராது.

அதிகாரம் இருக்கிறது என்றால் அடங்க வேண்டும்,

என்பதை ஸ்ரீ அரவிந்தம் மூலம் விளக்க முடியுமா?

பகவான் - ஸ்ரீ அரவிந்தம் இதற்கு எதிரானது.

பணம் மனத்திற்குக் கட்டுப்படும்.

ஆண்பிள்ளையின் கட்டுப்பாட்டிற்குப் பலன் அதிகம்.

கேட்காவிட்டாலும் கடன் தானே வருவதுண்டு.

அதிகாரம் இருந்தால் பிறர்க்கு அடங்க வேண்டும்.

பக்தன் - இதெல்லாம் இலட்சியமா? நடைமுறையா?

பகவான் - இலட்சிய நடைமுறை.

பக்தன் - இப்படி நடக்க வேண்டும் என்று கூறுகிறீர்களா? நடக்கும் என்று கூறுகிறீர்களா?

பகவான் - இவையெல்லாம் அன்பர் அனுபவம். இலட்சியமாக மேற்கொண்டால், அன்னை அதிகமாகச் செயல்படுவார்.

பக்தன் - வழக்கு என்பதை விளக்க வேண்டும்.

பகவான் - உலகில் 100 ஆண்டிற்குப்பின் வருவது, 1000 ஆண்டிற்குப் பின் வரப் போவது முன்கூட்டித் தெரியும். வாழ்க்கை கோடிகாட்டும். அது போலுள்ளவை நீங்கள் கேட்பது. அவற்றுள் தவறானவை - கடன் கேட்காமல் வாராது - என்பவற்றிற்கு ஸ்ரீ அரவிந்தம் நேர் எதிரானது. அதிகாரம் அடக்குவது, அடங்குவது திருவுருமாற்றம். இக் கண்ணோட்டத்தில் வழக்கையும், ஸ்ரீ அரவிந்தத்தையும் ஒப்பிடுவது நல்ல முயற்சி.

பக்தன் - நெம்பர் 50 பாம்பும், ஆவியும் உள்ளன.

பகவான் - மாயாவாதிகள் பழுதைப் பாம்பு என நினைப்பது மாயை என்றனர். ஆவி உருவத்தை வாழ்க்கை மாயை என்பதற்கு உதாரணமாகக் கூறுகின்றனர். பழுது உள்ளது, பாம்பு உள்ளது. மாயை என்பது இல்லாததை நினைப்பது. இவையிரண்டும் உள்ளது. ஆவி என்பது ஜட உலகுக்குரியதல்லாவிடினும், சூட்சும உலகுக்குரியது. இவை மூன்றும் உள்ளவை என்பதால் மாயாவாத உதாரணங்கள் சரியில்லை.

பக்தன் - சங்கரர், புத்தர்களை வெல்ல மாயாவாதம் பயன்பட்டது. உலகம் மாயை என்பதை இன்று வெளிநாடுகளிலோ, இந்தியாவிலோ பேச முடியாது. நெம்பர் 51 சுய ஜீவியம் அஞ்ஞானத்தில் சுய அனுபவம் பெறுவது அகந்தை.

பகவான் - ஜீவியம் என்பது சத்திய ஜீவியத்திற்கு மேலே உள்ளது. சுயஜீவியம் எனில் ஜீவியம் தன் ஆதியான பிரம்மத்தை அனுபவிப்பது. பிரம்மம் ஜீவியத்தில் தன்னை அனுபவிப்பது அகம், மேல் உலகம். பிரம்மம் ஜீவியத்தில் புறத்தை அனுபவிப்பது வாழ்வு. புறம் அஞ்ஞானம், அகம் ஞானம். அஞ்ஞானத்தில் ஜீவியம் தன்னை அனுபவிப்பது அகந்தை.

பக்தன் - உதாரணமில்லாமல் புரியாது.

பகவான் - குடும்பத்தலைவர் கட்சியிலிருந்தால், கட்சியின் இலட்சியத்திற்காகக் குடும்பத்தை நடத்தினால் குடும்பம் கட்சிக்குச் சேவை செய்யும். கட்சித்தலைவர் குடும்பத்தில் கட்சியின் பேரால் தன் சௌகரியத்தை நாடுவது சுயநலம்.

பக்தன் - இரண்டாவது புரிகிறது.

பகவான் - கட்சிக்காகக் குடும்பம், குடும்பத்திற்காகக் கட்சி என்பவை எதிரெதிரான இரு நிலைகள்.

பக்தன் - அது புரியும்.

பகவான் - இருப்பது குடும்பம், பேசுவது கட்சி, நினைப்பது தன்னை, என்றால் மனிதன் சுயநலத்திற்காகக் கட்சியின் பேரால் குடும்பத்தைத் தனக்கு மட்டும் சேவை செய்யச் சொல்கிறான்.

பக்தன் - நடைமுறை புரிகிறது. தத்துவம் எப்படி?

பகவான் - தத்துவமும், நடைமுறையும் புரிவதே சரி. பிரம்மம் அஞ்ஞானத்தில் வந்து சுயமாக உணரும்பொழுது அஞ்ஞானம் அனுபவத்தை அகந்தையாக்கும்.

பக்தன் - பிரம்மம், ஆத்மா, அகந்தை என்ற 3 நிலைகளில் அகந்தை உற்பத்தியான வழி இதுவா?

பகவான் - ஆமாம்.

பக்தன் - 53, ஆன்மாவையும், இயற்கையையும் மேலும் கீழும் அறிவது பூரண ஞானம்.

பகவான் - மேலும் என்பது மேல்மனம். கீழ் என்பது அடிமனம். மேல் மனத்திலுள்ளது இயற்கை. அடிமனத்திலுள்ளது ஆன்மா. வாழ்வில் இயற்கையையும், தவத்தில் ஆன்மாவையும் அறிகிறோம். தவசி அறியும் ஆன்மா வளராத ஆன்மா, ஜீவாத்மா எனப்படும். அதுவும் உள் மனத்திலுள்ளது. முழுமை என்பது ஆன்மாவும், இயற்கையும் சேர்ந்தது. அதையறிய மேல் மனத்தில் ஆன்மாவையும், அடிமனத்தில் இயற்கையையும் அறிய வேண்டும்.

பக்தன் - புரிகிறது. மேலும் ஓர் உதாரணம் கூற முடியுமா?

பகவான் - கல்லூரி மாணவனுக்கு வாழ்க்கை தெரியாது. படிக்காமல் வாழ்வை வாழ்பவனுக்குப் படிப்பால் உலகை அறியும் திறனிருக்காது. அதிகம் படித்தவன் வாழ்வில் படிப்பின் பயன் வெளிப்பட வாழ்ந்தால், இரண்டையும் சேர்ந்த முழுமையை அறிவான்.

பக்தன் - சற்றுத் தெளிவு ஏற்படுகிறது. முழுமை என்னவென்று மனத்தைத் தொடவில்லை. 54 ஐக்கியம், ஞானம், அடிமன அறிவு, அகந்தையின் அறிவு என நால்வகை ஞானம் உண்டு.

பகவான் - வாழ்வில் பல பருவங்கள் உள்ளன. ஊர் என்பதும் பல நிலைகளில் உள்ளது. எதற்கும் பல உருவங்கள் உள்ளது போல ஞானத்திற்கும் 4 அறிவு உண்டு.

 1. இறைவனுடன் இரண்டறக் கலப்பது - ஐக்கியம்.
   
 2. அகந்தை அஞ்ஞானத்தால் மேல்மனத்தால் புலன் வழி உலகை அறிவது கடைசி கட்டமான சிற்றறிவு.
   
 3. அடிமனம் அறிவு அஞ்ஞானமானாலும், பிரபஞ்சம் வரை அகன்ற அறிவு.
   
 4. ரிஷியைக் கடந்த யோகி தெய்வ நிலைக்கு முன் புலன் உதவியின்றி நேரடியாக உலகை அறிவது ஞானம்.

பக்தன் - தவிர்க்க முடியாத திருவுரு மாற்றம் பெற சரணாகதியே முக்கியம். இவையிரண்டும் நானறிவேன். இருப்பினும் மேலும் கேட்கப் பிரியப்படுகிறேன்.

பகவான் - கடைசி அத்தியாயத்தின் (56ஆம் அத்தியாயம்) சுருக்கம் இவை. மனிதன் தன்னைப் பகுதியான மனம் என நினைப்பதை மாற்றி முழுமையான சத்திய ஜீவியமாகக் காண்பது யோகம் சித்திப்பது. இரட்டைகளாலான - நல்லது, கெட்டது; சத், அசத் - சிருஷ்டி பகுதி. முழுமையானது பிரம்மம். கெட்டது நல்லதாக மாறுவது திருவுருமாற்றம். இத்திருவுருமாற்றத்தால் பகுதி, முழுமையாகிறது. கெட்டது நல்லதானால், இனி கெட்டது இருக்காது. எல்லாம் நல்லதாகி விடும். அது முழுமை. மனிதன் பிரம்மமாகத் திருவுருமாற்றம் ஏன் தவிர்க்கப்பட முடியாதது எனில் பகுதி மூலம் சிருஷ்டி ஏற்பட்டது. மீண்டும் முழுமை பெற பகுதிகள் சேர வேண்டும். எதிரானவை சேர்வது திருவுருமாற்றம். அதனால் அது அவசியம்.

பக்தன் - சரணாகதி எப்படி இதைச் சாதிக்கிறது?

பகவான் - வலியவனுக்கு எளியவன் அடங்குவது சரணம். சரணாகதி அதுவன்று. நாம் எதன் பகுதியென நம்மை அறிகிறோமோ, அதுவாக நாம் மாறப் பிரியப்பட்டு அதன் சட்டங்களை நாம் ஏற்பது சரணாகதி.

பக்தன் - நாம் கல்லூரிக்குப் போகும்பொழுது பட்டம் எடுக்க விரும்புகிறோம். எடுத்தவுடன் கல்லூரியை விட்டு வெளிவருகிறோம். கடை, கட்சி, ஆபீஸ், கம்பனி ஆகியவற்றை நாம் நாடும்பொழுது ஒரு காரியத்திற்காக நாம் அதை நாடுகிறோம். அது முடிந்தவுடன் நாம் வெளியே வருகிறோம்.

பகவான் - வாழ்வில் நாம் எதையும் முழுமையாகக் கருதி அதனுடன் ஐக்கியமடைய முயல்வதில்லை. தபஸ்வி இறைவனோடு இரண்டறக் கலக்க முயல்கிறார்.

பக்தன் - இரண்டறக் கலப்பதும், திருவுருமாற்றமும் வேறுபடுமா?

பகவான் - சர்க்கரை நீரில் கரைந்து இரண்டறக் கலக்கிறது. அது திருவுருமாறுவதாகாது.

பக்தன் - வாழ்வில் திருவுருமாற்றத்திற்கு உதாரணமில்லையா?

பகவான் - முழுமையான உதாரணமில்லை. கணவன் மனைவி, நண்பர்கள், உடன்பிறந்தவர்கள், பெற்றோர் பிள்ளைகள் உறவில் அப்படி திருவுருமாறலாம். குருவும் சிஷ்யனும் அந்நிலைக்குரியவர்கள். அவை முழுமையான திருவுரு மாற்றங்களாக முடியாது.

பக்தன் - சரணாகதியை நாம் எவ்வளவு அறிந்தாலும் மனம் குறையாக இருக்கிறது.

பகவான் - பிரம்மம் சிருஷ்டியானது தலைகீழே மாறி சிருஷ்டி பிரம்மமாகும் முறை சரணாகதி. தன் ஆதியை சிருஷ்டி மீண்டும் அடையப் பயன்படுத்தும் முறை சரணாகதி.

பக்தன் - சரணாகதியின் முக்கியத்துவத்தை மனம் அறியவில்லை.

பகவான் - படிப்பு கல்வி தரும். கல்வி பகுதி. ஆர்வம் உற்சாகம் தரும். அதுவும் பகுதி. திறமையும் பகுதி. படிப்பு, ஆர்வம், திறமை மூன்றும் சேர்ந்து பெறும் முறை இருக்கிறதா? இருந்தால் அதுவும் முழுமையாகாது. ஏனெனில் ஆன்மா விட்டுப் போகும். அதுவும் சேர்ந்தாலும் முழுமை பெற முடியாது. வளரும் ஆன்மா விட்டுப் போகும். வளரும் ஆன்மாவுக்கு அதுவரை முழுமையுண்டு என்றாலும், ஜீவன் முழுவதையும் தழுவ வளரும் ஆன்மா முழுமை பெற வேண்டும்.

பக்தன் - முழுமை என்பதில் அத்தனை அம்சங்களுண்டா?

பகவான் - அம்சங்கள் சேர்ந்த முழுமை முழுமையாகாது. பக்தன் - எப்படி?

பகவான் - வீட்டிலுள்ள அத்தனைப் பொருள்களும், மனிதர்களும் சேர்ந்து குடும்பமாகாது. ஒரு மெஷினின் அத்தனைப் பாகங்களும் கூடையில் எடுத்தால் அது மெஷினாகாது. பகுதிகளின் தொகுப்பு உருவம் பெறாது. சரணாகதி நாம் (பகுதி) முழுமை பெறும் மார்க்கம்.

பக்தன் - பகுதி முழுமை பெறுதல் பெரிய விஷயம். அதையே மனம் சத்தியஜீவியமாவது எனக் கூறலாமா?

பகவான் - கூறலாம். மனிதன் இறைவனாகும் முறை சரணாகதி.

பக்தன் - உடலின் இருளை பரமனின் ஜோதியே மாற்ற முடியும் என்பது No.68.

பகவான் - இருள் உடலில் அடர்ந்துள்ளது. அதைக் கடந்த நிலை ஜடத்தின் இருள். உடலின் இருள் ஜடத்தின் இருளும் ஆகும்.

பக்தன் - மனத்தின் இருளைக் கல்வியால் போக்கலாம் என்பது போன்ற கூற்றா இது?

பகவான் - அறிவு மன இருளை விலக்கும். அனுபவம் உணர்ச்சியை ஒளி மயமாக்கும். உடல் எதற்கும் அசையாது. அதன் இருளைப் போக்கும் சக்தி உலகிலில்லை. அது இறைவன் ஒளி இறங்கி வந்தாலன்றி அசையாது.

பக்தன் - புரிகிறது. ஓர் உதாரணம் உதவும்.

பகவான் - கலவரங்களைப் போலீஸ் அடக்கும். பெரிய கலவரங்களை இராணுவம் அடக்கும். புரட்சியை இராணுவமும் அடக்க முடியாது. புரட்சித் தலைவனுக்கு அது அடங்கும்.

பக்தன் - 67ஆம் நம்பர் திருவுருமாற்றத்தின் நிலைகள் மூன்று.

பகவான் - சைத்தியத் திருவுருமாற்றம், ஆன்மீகத் திருவுருமாற்றம், சத்தியஜீவியத் திருவுருமாற்றம் ஆகிய மூன்று.

பக்தன் - நாமுள்ள நிலையிலிருந்து ஆரம்பித்துச் சொல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

பகவான் - நாமுள்ள நிலை மேல்மனம். எதைச் செய்ய வேண்டும் என்று சொல்லலாம். எதைச் செய்யக் கூடாது என்பதே முக்கியம்.

பக்தன் - அது அவசியம்.

பகவான் - மேல்மனத்தில் மனிதன் காலத்திற்கும், மனத்திற்கும், அகந்தைக்கும் கட்டுப்பட்டுச் சிறியவனாக இருக்கிறான்.

பக்தன் - அடிமனம் போக என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது?

பகவான் -

 1. சிந்திக்காவிட்டால் மனத்தைக் கடக்கலாம்.
   
 2. கடந்ததை, வருவதை நினைக்காவிட்டால் காலத்தைக் கடக்கலாம்.
   
 3. சுயநலமான தற்பெருமையில்லாவிட்டால் அகந்தையைக் கடக்கலாம். 

பக்தன் - இவற்றைச் செய்தால் அடிமனம் போக முடியுமா?

பகவான் - இவை மேல்மனத்தைக் கடக்கும் தகுதி தரும்.

பக்தன் - உள்மனத்தைக் கடந்து தானே அடிமனம் போக வேண்டும்?

பகவான் - தியானம் உள்மனத்திற்கும், சமர்ப்பணம் அடிமனத்திற்கும் அழைத்துச் செல்லும்.

பக்தன் - சைத்தியத் திருவுருமாற அடிமனம் போக வேண்டுமன்றோ?

பகவான் - சமர்ப்பணம் அடிமனத்தில் சைத்தியப் புருஷனை அடையச் செய்யும்.

பக்தன் - அது சைத்தியத் திருவுருமாற்றம்.

பகவான் - அது கல்லூரியில் சேர்வது போன்றது. சைத்தியத் திருவுருமாற்றம் பட்டம் பெறுவது போன்றது.

பக்தன் - மேலும் என்ன செய்ய வேண்டும்?

பகவான் - சைத்தியப் புருஷனை எட்டித் தொட்ட பின், எண்ணம், உணர்வு, செயல் ஆகியவை பூரணமாகச் சமர்ப்பண மானால் சைத்தியத் திருவுருமாற்றம் வரும்.

பக்தன் - இது சுருக்கமா?

பகவான் - ஆமாம். விளக்கமாகக் கூற வேண்டுமானால், இது மனத்தில் ஆரம்பிக்கும். எண்ணம் பூரணமாகச் சமர்ப்பணமானால், mental psychic மனத்தில் சைத்தியத் திருவுருமாற்றம் ஏற்படும்.

பக்தன் - அதுபோல் உணர்விலும், உடலிலும் ஏற்பட வேண்டுமா?

பகவான் - ஆம், அங்கு என்ன விசேஷம் என்றால் மனத்தில் ஏற்பட்ட சைத்தியத் திருவுருமாற்றம், உணர்வுக்குப் போகும்பொழுது, கூடவே அது முனிவர் மனத்திற்கு உயரும்.

பக்தன் - முனிவர் மனம் ஆன்மீக மனமாயிற்றே.

பகவான் - அதுவே விசேஷம். மனம் உடலை நோக்கிப் போகும்பொழுது ஆன்மீகத் திருவுருமாற்றம் முனிவர் மனத்தில் ஏற்படும்.

பக்தன் - முனிவர், ரிஷி, யோகி, தெய்வ நிலைகட்குரிய சைத்தியப் புருஷன் எழுவது, ஆன்மீகத் திருவுருமாற்றம் என்று கொள்ள வேண்டுமா?

பகவான் - ஆம். தெய்வீக மனத்தை இம்மாற்றம் கடப்பது சத்திய ஜீவியத் திருவுருமாற்றம்.

பக்தன் - மேலே அது நடக்கும்பொழுது கீழே உடலிலிருந்து சைத்தியப் புருஷன் வெளிவருவானல்லவா?

பகவான் - மேலே சத்திய ஜீவியத்தையடைவதும், உடலைக் கீழே தொடுவதும் ஒரே சமயத்தில் நடக்கும்.

பக்தன் - இவை மூன்று திருவுருமாற்றங்களுக்குரிய சுருக்கம். 67. பிரம்மம் நம்முள் ஜனித்த பின் பிறருள் ஜனிக்க உதவுவது சேவை.

பகவான் - பிரம்மம் நம்முள் ஜனிப்பது என்பது 3 திருவுருமாற்றங்களும் நம்முள் முடிவது.

பக்தன் - அதன் அடையாளங்களில் சில. . . . . .

பகவான் - மேல்மனம் அடிமனமாவது புலன் உதவியின்றி மனம் செயல்படுவது இதுவரை எரிச்சல் உண்டுபண்ணிய மனிதர் சந்தோஷம் தருவது அளவு கடந்த சக்தி உள்ளிருந்து எழுவது வாழ்வு முழுவதும் கண்ணெதிரில் தோன்றுவது பூர்வ ஜென்ம நினைவு ஆயுள் நீள்வது.

பக்தன் - பிறருக்குத் தருவது என்றால்?

பகவான் - நாம் பெறுவது முதல், தர முடிவது அடுத்தது, தருவது முடிவானது.

பக்தன் - பெற்றால் தர முடியாதா?

பகவான் - பெற்றது பூரணம் பெற்றால் தர முடியும்.

பக்தன் - முடிந்தாலும், தருவதற்கு நிபந்தனையுண்டா?

பகவான் - கேட்டால் தரலாம்.

பக்தன் - கேட்காமல் தரக் கூடாதா?

பகவான் - ஆத்மத் தகுதியிருந்தால் மறுத்தாலும் தரலாம்.

பக்தன் - சாதாரணமாகத் தரும் நிலைகள் எவை?

பகவான் - நமக்குத் தகுதியிருந்தால் பெறுபவர் நம்மை நாடி வருவார்.

பக்தன் - வேறு என்ன நிபந்தனைகள் உண்டு?

பகவான் - ஒரு வகையாகப் பார்த்தால் நிபந்தனைகள் ஏராளம். அடுத்த நோக்கில் எந்த நிபந்தனையுமில்லை.

பக்தன் - 65ஆம் நம்பரில் ஆன்மா வளரும்பொழுது உடலும் வளர்ந்தால் உடலை புனர் ஜன்மத்தால் மாற்ற வேண்டாம் என்பதும், நம்பர் 67.உம் ஒன்றுதானே.

பகவான் - விஷயம் ஒன்றே. அங்குச் சேவை மூலமும், இங்கு புனர் ஜென்மம் மூலமும் கூறுகிறோம்.

பக்தன் - 64. கர்மம் சக்திக்கு, ஜீவனுக்கில்லை.

பகவான் - ஜீவனிலிருந்து ஜீவியமும், ஜீவியத்திலிருந்து சக்தியும் பிரிகின்றன.

 • சக்தியைப் பிரிக்கலாம்.
   
 • ஜீவனைப் பிரிக்க முடியாது.

பக்தன் - வீட்டைப் பிரிக்கலாம், குடும்பத்தைப் பிரிக்க முடியாது என்பது போலவா?

பகவான் - ஆம். Traffic rules நமக்கு. முதல்வருக்கும், கவர்னருக்குமில்லை.

பக்தன் - ஆபீசருக்கு லீவுண்டு. மந்திரிக்கு லீவு என்பதில்லை. காரணம் காரியமானால் கர்மம் உண்டு, இல்லை என்றால் கர்மமில்லை என்பது சட்டமா?

பகவான் - கர்மம் காலத்திற்குரியது. ஜீவன் காலத்தைக் கடந்தது. அதனால் கர்மம் ஜீவனைப் பாதிக்காது.

பக்தன் - உதாரணம்

பகவான் - வக்கீலுக்கும், கட்சிக்காரனுக்கும் வெற்றி தோல்வியுண்டு. ஜட்ஜுக்கு இல்லை. துறவிக்கு வேந்தன் துரும்பு.

பக்தன் - 55 முதல் 61 முடிய மேல்மனம், ஏழு வகை அஞ்ஞானங்கள், தீமை, இரண்டையும் உட்கொண்ட பிரம்மம், கடந்ததை விலக்காத வாழ்வு, பாதாளம் ஆகியவற்றைப் பற்றியவை.

பகவான் - இதுவரை மனிதன் வாழ்ந்த வாழ்வு வேட்டையைப் பெரியதாக்கிய வாழ்வாகும். வருவதைக் கடந்ததுடன் ஒப்பிட முடியாது.

பக்தன் - ஆசாரத்தை அனாசாரமாக அறிய அறிவிருந்தும் மனிதன் அதைப் பெரிதாகக் கருதுகிறான்.

பகவான் - அனாசாரம் வசதியானால் அதை ஏற்றுப் போற்றுவான்.

பக்தன் - கிராப்பு, காபி, பஸ், ஹோட்டல், க்ஹ்ங், சென்ட், சுரிதார், பைப் வாட்டர், modern medicine, loud speaker போன்ற அனாசாரங்களைக் கைவிட்டு, ஒருவர் ஆசாரம் பேசினால், பேசுவது சரியாகும், ஏற்க முடியாது. தமக்குச் சௌகரியமான அனாசாரங்களை ஏற்றுக் கொண்டு ஆசாரம் பேசுவது சரியில்லை. மேற்சொன்ன பெரிய விஷயங்களை மனம் அறிய அந்த அளவாவது உண்மை வேண்டும்.

பகவான் - ஆசாரமும் பிரச்சினையில்லை, அனாசாரமும் பிரச்சினையில்லை. பிரச்சினை மனத்தின் உண்மையில் இருக்கிறது. நாம் கூறும் உண்மை மேல்மனத்திற்குரியது. உண்மை அடிமனத்திற்குரியது. அடிமனம் அறியாமை மனம் என்றாலும் அது பரமாத்மாவுடன் தொடர்புள்ளது என்பதால் அடிமனத்தில் பரமாத்மாவும் உண்டு.

பக்தன் - அடிமனத்தில் இந்த இருநிலைகள் உண்டென்பதை நான் இதுவரை கருதவில்லை.

பகவான் - மேற்சொன்ன எல்லாக் கருத்துகளும் முக்கியமானவை. அவை விளங்க அடிமனத்தை அறிவது முக்கியம்.

 1. அறியாமை என்பது அறிவிலிருந்து எழுவது என்பதால் அறிவைக் கடந்தது என்ற பொருளில் அறிவைவிட உயர்ந்தது.
   
 2. பரந்த அடிமனத்தில் ஞானம் பூர்த்தியாகாது என்பது போல் அறியாமையும் பூர்த்தியாகாது. அதனால் குறுகிய மேல் மனத்தை ஏற்படுத்தி அங்கு அறியாமையைப் பூர்த்தி செய்கிறது.
   
 3. அடிமனத்தில் பாதாளமும், பரமாத்மாவும் சந்திப்பதால் பரமாத்மாவால் பாதாளத்தை ஒளிமயமாக்குவது நம் கடன்.
   
 4. பரமாத்மாவையும், ஜீவாத்மாவையும் உட்கொண்ட பிரம்மமே முழுமை என்பது மரபிலில்லாதது. அதை சத்திய ஜீவியம் காணும் மனம் காணாது.
   
 5. பிரபஞ்ச அஞ்ஞானம் அழிய அகந்தை அழிய வேண்டும். அதன் மூலம் ஆதியின் அஞ்ஞானமும் அழியும்பொழுது பரமாத்மாவையும், ஜீவாத்மாவையும் உட்கொண்ட பிரம்மம் சித்திக்கும்.
   
 6. அகந்தை அழிந்தவுடன் தீமை அழிகிறது. அகந்தையே தீமையைக் காண்கிறது. தீமை சிருஷ்டிக்கப்பட வில்லை.
   
 7. வாழ்வு பூரணம் பெற எதையும் விலக்கக் கூடாது. கடந்ததையும் (transcendent) விலக்கக் கூடாது. 

பக்தன் - இத்துடன் தத்துவங்கள் முடிந்தாலும், நூலிலுள்ள இதர 1000 சிறு கருத்துகளையும் இதேபோல் விளக்கிக் கூறவேண்டும்.

பகவான் - கூறலாம், கேட்பது பயன் தரும். பயனடைய இதுவே போதும். அதையும் கேட்டுச் செயலால் பயன்பட முயன்றால் வாழ்வு யோக வாழ்வாகும்.

*****book | by Dr. Radut