Skip to Content

பகுதி 2

பகவான் - இவை அறியாமையின் முறைகள். அறியாமை பிடிக்கும் வரை அறிவு எப்படி வரும்?

பக்தன் - தியானம் உள்பட எதுவும் unconscious method எனப் புரிய வேண்டும்.

பகவான் - நூல் புரியவில்லை என்றால் புரிந்து கொள்ளும் முயற்சியைக் கைவிட்டால் மனம் மௌனமாகும். அடுத்த க்ஷணம் புரியும்.

பக்தன் - அது என் அனுபவம்.

பகவான் - அதைப் பார்த்த பின் புரிய மனம் ஆர்வமாக முயலும்.

பக்தன் - அதையும் பார்த்திருக்கிறேன்.

பகவான் - Urge உந்தல் உள்ளிருந்து எழுவனவற்றை வெளிப்படுத்தாமல் சரணம் செய்ய வேண்டும். படிப்படியாக மௌனம் எழும்.

பக்தன் - வாழ்வு உடலின் உணர்ச்சியை மனத்தில் எண்ணமாக மாற்றி உடலை மனத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது.

பகவான் - உடல், உணர்வு, மனம், ஆன்மா, சத்தியஜீவியம் என்ற நிலைகள் உள்ளன. கீழுள்ள நிலை மேலே வர வேண்டும். அப்படி ஒரு நிலை உயர்ந்தால் அதன் சிறப்பு முழுவதும் அதன் கீழுள்ள அத்தனை நிலைகட்கும் (saturated) பூரணமாக வேண்டும் என்பது பரிணாமத் தத்துவம்.

பக்தன் - உடலில் உணர்வு எழ வேண்டும், பிறகு மனம் ஜனிக்க வேண்டும்.

பகவான் - 19, 20, 21, 22 அத்தியாயங்கள் சுருக்கம் நீ சொன்னது. உடலுக்கும் மனத்திற்கும் இடைப்பட்டது வாழ்வு (உணர்ச்சி). உடலுக்கு மனத்தைப் பெற்றுத்தரும் முறை இது. உடலுக்குரியது செயல், மனத்திற்குரியது எண்ணம், உணர்வுக்குரியது சக்தி. உடலின் செயலில் எழும் உணர்ச்சியை மனத்திற்குக் கொண்டு சென்றால், மனம் அவ்வுணர்ச்சியை எண்ணமாக மாற்றுகிறது. உடல் அந்த எண்ணத்திற்குக் கீழ்ப்படியும்.

பக்தன் - ஊரில் தினமும் நடப்பது இது. வதந்தி என்கிறோம், கோள் என்கிறோம்.

பகவான் - நாட்டில் உள்ள திறமையைத் தலைமைக்குச் சொல்ல இடையில் இருவருடனும் தொடர்புள்ளவர் தேவை. ஆந்திராவில் ஒரு படித்த விவசாயி World Bankஇல் கடன் பெற்றிருந்தார். பாங்க் அவரை வெகுவாகப் பாராட்டியது. ஒருநாள் DSP அவரைத் தேடிக்கொண்டு வந்து அவசரமாக அவரை விமான நிலையத்திற்கு அழைத்துவந்து டிக்கட் வாங்கிக் கொடுத்து டெல்லியில் இந்திராவைப் பார்க்கும்படி அனுப்பினார். பாங்க் சேர்மன் இந்திராவை சந்தித்தபொழுது ஆந்திர விவசாயியைப் பற்றி விசாரித்தார். உடனே இந்திரா அவரைப் பார்க்க விரும்பினார். கீழேயுள்ள திறமை மேலே போக இடையே மனிதர் வேண்டும். பக்தர்கட்கு ஆன்மீகத் தகுதியுண்டு. அதை அன்னையறிய இடையே ஒரு பாலம் வேண்டும். நாம் செய்யும் செயலில் பலன் ஒன்று நூறானால் அச்செயல் நம்மை அன்னையிடம் சேர்க்கும்.

பக்தன் - காலம் சுருங்கும் என்ற பொழுது ஜீவியம் உயர வேண்டும் என்றோம்.

பகவான் - காந்தி, நேரு, பரமஹம்ஸர் உயர்ந்த ஜீவியம் உள்ளவர்கள். அவர்கள் பிறப்பில் உயர்ந்தவர்கள் என நினைக்கிறோம். அவர்கள் அறிந்தவற்றை (details) இளைஞர்கட்குக் கொடுக்க அதிக நாள் ஆகாது. விபரம் விஷயமாகாது.

பக்தன் - விவரத்தை மனிதன் (personality) விஷயமாக்குகிறது. அதுதானே முக்கியம்.

பகவான் - விவரங்களைக் கொடுக்கும்பொழுது விவரத்திற்குரிய தகுதியுடன் கொடுப்பது அவசியம். அதைச் சில மாதங்களில், ஒரு வருஷத்தில் கொடுத்து விடலாம். 15 வயது பையன் நேருவுக்குத் தெரிந்த விவரங்கள் அனைத்தையும் 2, 3 வருஷங்களில் பெற்றுக் கொண்டான் என்றால், அதற்குரிய சந்தர்ப்பத்தில் அந்த விவரம் விஷயமாக வெளிப்படும். அனுபவம் தரும் சந்தர்ப்பம் விவரத்தை விஷயமாக்கவல்லது.

பக்தன் - சொல்வது புரிகிறது. மேலும் கேட்கப் பிரியப்படுகிறேன்.

பகவான் - விவரமா, விஷயமா எது முக்கியம்? இரண்டும் முக்கியம்.

பக்தன் - விவரத்தை 3 மாதமில்லை, 3 வருஷத்தில் மாணவன் பெற முடியும் என்பது தெளிவு. அது (potential) வித்தாகத் திறமையைத் தரும். மலையும் மடுவாகவுமிருப்பதால் மனம் திகைக்கிறது.

பகவான் - நேருவின் தகுதிக்கு எல்லையில் களேபரம் பெரியது. அவர் தைரியமான முடிவெடுக்கிறார். நாம் ஆச்சரியப்படுகிறோம்.

பக்தன் - அது போன்ற தலைமையை எப்படி உற்பத்தி செய்ய முடியும்?

பகவான் - 15 வயது சிறுவனை ரோட்டில் ரௌடி மிரட்டுவது இந்த வயதிற்கு எல்லைக் களேபரம் போன்றது. சிறுவன் இதை இன்று சமாளித்தால் நாளை அதைச் சமாளிப்பான்.

பக்தன் - பையன் ஓட்டம் பிடிப்பான்.

பகவான் - பெரிய பள்ளிகளில் படிப்பவர், பெரிய குடும்பப் பையன்கள் இதுபோன்ற நேரங்களில் பயப்படாமல் பேசுவார்கள். பெரும்பாலும் தொந்தரவு விலகும். 5 வயது முதல் பயமில்லாமல் பயிற்சியிருந்தால், அன்னைச் சூழலில், அது வாராது. வந்தால் பையன் அச்சந்தர்ப்பத்தைச் சந்திப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ரௌடியால் பையனுக்குத் தொந்தரவு வாராது.

பக்தன் - இது ஒரு நாள் பயிற்சியில்லை. ஒருவகையான பயிற்சியில்லை. உடலைப் பற்றி விவரம் தெரிந்தால் (physiological details) மனம் மாறும். உலகத்து விவரங்கள் அனைத்தும் தெரிவதால் பையனுக்குப் பயம் என்பதே இருக்காது. பயிற்சி முழுப்பலன் தரும். பெருத் தலைவர்களைப் பள்ளி உற்பத்தி செய்யும்.

பகவான் - முறை முக்கியம். ஆசிரியர் பண்பு முக்கியம். சூழல் முக்கியம். மேதைகள், தலைவர்கள், உயர்ந்தவர்களை உற்பத்தி செய்யலாம். அன்னை தானே உற்பத்தியாகும் முறை என்பதால் அடுத்த கட்டங்களில் பலிப்பது ஏராளம், எளிது.

பக்தன் - முறைக்கு மூலம் உண்டா?

பகவான் - சரணாகதி.

பக்தன் - சரணாகதியைப் பள்ளியில் எப்படிப் பயில்வது, பயிற்றுவிப்பது?

பகவான் - விஷயத்திற்குச் சரணாகதி, விவரத்திற்குச் சரணாகதி, முறையைக் கற்பதற்குச் சரணாகதி, கற்பிப்பதற்குச் சரணாகதி.

பக்தன் - கொஞ்சநஞ்சம் புரிந்ததும் சரணாகதியைப் பற்றிப் போய்விட்டது.

பகவான் - விஷயம் பெரியது என நினைத்தால் மனம் சரணாகதியை நாடும். உடனே விஷயம் பலிக்கும். குழந்தை தெய்வம் என நினைத்தால் மனம் சரணாகதியை நாடும். குழந்தை சொல்வதை கிரஹித்துக் கொள்வான்.

பக்தன் - சரணாகதி என்றால் என்ன?

பகவான் - உலகில் விவரம், விஷயம், காலம், குழந்தை, படிப்பு, எல்லாமும் பெரியவை என்றால் மனம் அடங்கும். அது சரணாகதிக்குரிய மனநிலை.

பக்தன் - பிறப்பு, சுபாவம் என்பவையில்லையா?

பகவான் - 100 பிள்ளைகளில் ஒருவன் உயர்ந்து தலைவனானால் அது போதும். நம் முறைப்படி 10, 20 பேர் தேறுவார்கள். பள்ளியில் அனுபவம் அதிகமானால் 60, 70உம் தேறுவார்கள். பயந்தவன், அடம்பிடிப்பவன், கிறுக்கு போன்ற பிள்ளைகளை அவற்றை மீறிப் படிக்க வைக்கலாம். உயர்ந்த திறமைகளைப் பயிற்றுவிக்க பயம், அடம், கிறுக்கு போக வேண்டும். அது அடுத்த கட்டம்.

பக்தன் - பள்ளியில்லாத ஊருக்குப் பள்ளி வருகிறது. சாப்பாட்டிற்கில்லாத குழந்தைக்கும், பள்ளிக்கு அனுப்பமாட்டேன் என்பவருக்கும் அது உதவாது. 100 பிள்ளைகளில் 3, 4 பேர் தொழிலதிபர்களாகவும், நாட்டுத்தலைவர்களாகவும், உலகப் பிரசித்தி பெற்றவராகவும் வந்தால் முறை அற்புதம்.

பகவான் - 3இல் ஆரம்பித்து 30 வரை நிச்சயமாகப் போகலாம். நாம் நடத்தும் சென்டர்களில் இதைப் பயில வேண்டும்.

பக்தன் - சென்டர் பிரார்த்தனைக்குரியது. புஸ்தகம் விற்க, சொற்பொழிவு ஆற்றும் இடம். பயிற்சிக்கு இடம் தரமாட்டார்கள்.

பகவான் - பயிற்றுவிக்க 10 பேர் தயாரானால், இடம் தருவார்கள்.

பக்தன் - இதை நம்புபவர்கள் தம் வாழ்வில் முதலில் செய்வது அவசியம். போட்டி, பொறாமை, அலட்சியம் மனிதனுக்குப் பெரியது.

பகவான் - நமக்கு அவை பெரிதாக இல்லாவிட்டால் அது பலிக்கும். நீ கூறுவதைவிட நாமே போய்ச் சேவை என்று மாட்டிக் கொண்டால் உலகத்திற்குச் சேவை தேவையில்லை. பிறரை அழித்துப் பரிகாசம் செய்ய உலகம் காத்திருக்கிறது.

பக்தன் - அது இல்லாத உலகம் உண்டா எனத் தெரியவில்லை. பகவான் - வாய்மொழி முக்கியம். அது உலகை நமக்கு அறிவிக்கும். அதை அறிவது பண்பற்ற செயலென ஒதுங்கினால் நாம் உலகுக்குப் பலியாவோம்.

பக்தன் - சேவை அழிவுக்கு உத்தரவாதம். One becomes the Many. பரமாத்மா ஜீவாத்மா ஆயிற்று. ஆண்டவன் உலகைப் படைத்தான். எப்படி? என்பது பரம்பரை அறியா விஷயம். நான் புத்தகத்திலிருந்து புரிந்து கொண்டது,

One என்பது சத்.

சத் சத்தியமாகும் முன் ஆன்மாவாகிறது.

ஆன்மா என்பது பொருள். ஆன்மீகப் பொருள் Spiritual Substance.

மனம் ஆன்மீகப் பொருளை புலனால் காணும்பொழுது ஜடப்பொருளாகத் தெரிகிறது Material Substance.

மனம் தான் கண்டதை சிறு அணுவாகும்வரை துண்டு செய்கிறது.

துண்டுகள் ஒன்று சேர்கின்றன.

ஒன்று சேர்ந்த குவியல் தன்னைத் தனியாக உணர்கிறது.

இக்குவியல்களில் ஒவ்வொன்றையும் நாம் Many என்கிறோம்.

பகவான் - புரிந்து கொண்டது சரி. மேலும் என்ன கேள்வி?

பக்தன் - உதாரணம்.

பகவான் - One என்பது சத் என்ற சத் புருஷன். சுருக்கமாகப் புருஷனாகும்.

புருஷனை ஜீவன் எனவும் கூறுவோம்.

ஜீவனிலிருந்து ஜீவியம் வருகிறது.

இவையிரண்டும் எப்பொழுதும் முழுமையுடையது.

பகுதியாகா.

ஜீவியத்திலிருந்து சக்தி வருகிறது.

சக்தியைத் துண்டு செய்ய முடியும்.

ஒவ்வொரு துண்டும், அல்லது துண்டுகளின் குவியலும், ஒரு ஜீவாத்மா.

சக்தி துண்டானாலும், ஜீவனும், ஜீவியமும் அதை விட்டு நகர்வதில்லை.

ஜீவன் பின்னணியில் துண்டாடப்படாத நிலையுடையது. பூமியில் நிலம் உண்டு. நிலத்தைப் பிரிக்கிறோம். வரப்பால் பிரிக்கிறோம். ஒருவர் நிலம் மற்றவர் நிலத்திலிருந்து வேறுபட்டது. நிலம் பிரிக்கப்பட்டாலும் பூமி பிரிக்கப் படவில்லை. குடும்பம் என்பது கூட்டுக் குடும்பம். குடும்பம் என்பது ஒரு கருத்து. அதைப் பிரிக்க முடியாது. அண்ணன், தம்பி தன் வீட்டுக்குப் போகலாம். அது பிரிந்த நிலையானாலும் பிரிந்தது வீடு. குடும்பம் பிரியாமல் ஒன்றாய் உள்ளது. நிலம் பிரிந்தாலும், பூமி பிரிவதில்லை என்பதுபோல் ஜீவாத்மா பிரிந்து தெரிந்தாலும், உண்மையில் அது பிரிவதில்லை. ஒரு ஜீவன் பிரிந்து தோன்றுகிறது. பிரிந்த நிலையை வற்புறுத்தினால், சண்டை, பூசல் வரும். குடும்பத்தை வற்புறுத்தினால் சுமுகம் வளரும். உடலில் கை, கால், தலை, கண் போன்ற உறுப்புகள் வேறாகத் தோன்றுவது உண்மையானாலும், அவை உடலே, உடலின் பகுதிகளே. என்றும் பிரியா. பிரிக்க முடியாது. சிருஷ்டி சக்தியுடன் முடிவதாக நினைத்தால் பிரிவினை தெரியும். சக்திக்குப்பின் ஜீவனிருப்பதையும், ஜீவனிலிருந்து சக்தி எழுவதையும் கண்டால் பிரிவினைத் தோற்றம், முழுமை உண்மை என்பது விளங்கும்.

பக்தன் - ரிஷிகள் எப்படி இதைக் கண்டு கொள்ளவில்லை?

பகவான் - அவர் கருவி மனம். அது துண்டுகளைக் காண்கிறது. ஜீவனின் முழுமையை, ஜீவனும் சக்தியும் ஒன்றே என்ற முழுமையையும் சத்தியஜீவியம் காணும். சத்தியஜீவியம் அவர்கள் காலத்தில் மனிதனுக்குக் கருவியாய்க் கிடைக்கவில்லை. அதனால் அவர்கள் முழுமையைக் காணவில்லை.

பக்தன் - முறையையும் (process) காண முடியவில்லை. மேலும் ஓர் உதாரணம்.

பகவான் - சர்க்கார் இலாக்காக்கள் பல. ஆனால் அனைத்தும் சர்க்காரே. முழுமையான சர்க்கார், பல இலாக்காக்களாகத் தோன்றினாலும் சர்க்கார் ஒன்றே.

பக்தன் - அடிமனத்தின் தத்துவம், உதாரணம், விளக்கம், வியாக்யானம் தேவை. ரிஷிகளுடைய யோகம் மேல்மனத்தோடு ஏன் முடிந்தது, ஏன் அவர்கள் அடிமனத்தை நாடவில்லை? பகவான் - கிணறு என்று தோண்டு முன் மனிதன் ஆறு, குளம் அருகில் வாழ்ந்தான். குளம் வற்றிவிட்டால், வேறு நீர்நிலைகளைத் தேடிப் போனான். அன்று கிணறு வெட்டவில்லை. Bore-well போடவில்லை. கிணறு என்று வெட்டினாலும் 10 அடி, 20 அடிக்கு மேல் வெட்டுவதில்லை. பூமிக்கடியில் உள்ள குடிநீர் 97% எனவும் ஆறு, குளம், ஏரியில் உள்ளவை 3% எனவும் கணக்கிட்டிருக்கிறார்கள். Borewell போட்ட இடங்களில் மழையை எதிர்பாராமல் 12 மாதமும் பயிராகிறது. அன்றைய விவசாயத்தை இன்றைய விவசாயத்துடன் ஒப்பிட முடியாது.

பக்தன் - நான் இந்த உதாரணத்தை ஏற்கிறேன். அதைத் தொடர்ந்து பிரச்சினை எழுப்பவில்லை. புரிய உதவியாக இருக்கிறது.

பகவான் - சிருஷ்டி என்பது ஞானம் அஞ்ஞானமானதால் ஏற்பட்டது. சிருஷ்டிக்கு பரமாத்மா, பாதாளம் என இருபகுதிகள் உள்ளன (superconscient, subconscient). ஒன்று இரண்டாகப் பிரிந்து கூடுவது சிருஷ்டிப் பரிணாமம். பாதாளம் உடல், வாழ்வு, மனம் எனப் பரிணாமத்தால் உயர்ந்துள்ளது. விலங்குக்கு மனம் இல்லை. மேல் உலகம் தெய்வங்கட்கும், கீழ் உலகம் விலங்கினங்கட்கும், நடுவே மனிதனும் உள்ளான். தேவர்கள், தெய்வங்கள் ஜொலிப்பவர்கள். அவர்களுக்கு எதுவும் தேவையில்லை. பரிணாமமும் இல்லை. விலங்கிற்குப் பரிணாமம் முடியாது. இரண்டாகப் பிரிந்தவற்றைச் சேர்ப்பது பரிணாமம். அந்த வேலை மனிதனுக்குரியது.

பக்தன் - மனிதனுக்குரியது மேல்மனமா? அடிமனம் இல்லையா?

பகவான் - மனிதனுக்குரியது மேல்மனம். அடிமனம் மறைந்துள்ளது. சிருஷ்டி அஞ்ஞானத்தால் ஏற்பட்டது. ஞானம் என்பதை பரமாத்மாவுடன் இரண்டறக் கலப்பது என்றால், அடுத்த நிலையில் வெளியிலிருந்து பரமாத்மாவைப் புலனுதவியின்றி அறிவது என்கிறோம். மூன்றாம் நிலையில் பரமாத்மாவை அறிய முடியாமல் பிரபஞ்சத்தை மட்டும் அறிய முடிகிறது. அதை அறிவது அடிமனம். உலகில் எங்கு நடப்பதையும் அறியும் திறனுடைய மனம், பாதாளமும், பரமாத்மாவும் சேருமிடத்தில் உற்பத்தியாவது. சிருஷ்டியில் அஞ்ஞானத்திற்கு முழுமையளிக்க வேண்டியதாயிற்று. அஞ்ஞானம் முழுமையானால் பிரம்மம் தன்னை மறக்கும். தான் மறந்ததை மறக்கும். முழுமையான அஞ்ஞானத்தியிருந்து பிரம்மம் தன்னை நினைவுபடுத்தி வெளிவருவது பரிணாமம். அதுவே அது தேடும் ஆனந்தம். அந்த அஞ்ஞான முழுமையை எட்ட சிருஷ்டி அடிமனத்திலிருந்து ஒரு பகுதியைப் பிரிக்கிறது. பிரித்து அங்கு அஞ்ஞானத்தை முழுமைப்படுத்த ஞானத்தைக் காலத்திற்கும், மனத்திற்கும், கண்டத்திற்கும், அகந்தைக்கும் உட்படுத்துகிறது. அஞ்ஞானம் முழுமை பெறுகிறது.

பக்தன் - சைத்தியப் புருஷன் அடிமனத்தில் எப்படி வந்தது?

பகவான் - அடிமனமே பிரகிருதி, இயற்கை, பிரபஞ்சம் முழுவதும் தழுவியது. அதன் யுகாந்த கால அனுபவம் அதன் ஆத்மசாரம். அதுவே சைத்தியப் புருஷன். சமூகம் முழுவதும் மேல்மனத்திற்குரியது. நமக்கு சமூகமே எல்லாம். உள்ளபடி அடிமனமே எல்லாம். அடிமனமே எல்லாம். அதுவே மேல்மனத்தை ஆள்கிறது என்பது முதல் சித்தி.

பக்தன் - நமக்கு அடிமனம் என ஒன்றிருப்பது தெரிவதில்லை. பகவான் - 1947இல் சுதந்திர தின விழா August 15இல் கொண்டாட மேல்மனம் தயார் செய்யும்பொழுது, பஞ்சாபிலிருந்து லட்சக்கணக்கான அகதிகள் டெல்லி நோக்கிப் புறப்பட இருப்பதை அடிமனம் அறியும். செப்டம்பர் மாதம் 50 லட்சம் பேர் வந்தனர். சுதந்திரம் வந்து விட்டது. இனி சுபிட்சத்திற்கு வேலை செய்ய வேண்டும் என மேல் மனம் தயார் செய்யும் பொழுது, முழுமையை அறிந்த அடிமனம் செய்ய வேண்டிய வேலை நாட்டை ஒன்றுபடுத்துவது என்று அகதிகள் மூலம் கூறுகிறது. 1936, 37, 38இல் இங்கிலாந்து வசதிகளை நாடித் திட்டம் போட்டபொழுது, அடிமனம் வேலை அதுவன்று, ஹிட்லர் எழுகிறான் அவனை முதலில் அழிக்க வேண்டும் என்று கூறி இரண்டாம் யுத்தத்தை எழுப்பியது. ஹிட்லர் அழிந்தபிறகு சாம்ராஜ்யத்தை அழித்தது. பிறகு சுபிட்சம் பெருவாரியாக வந்தது.

பக்தன் - நமக்கு மனம் என்பது அடிமனமே. அதுவே அனைத்தையும் நிர்ணயிக்கிறது. அதற்கு வேண்டியதை மேல்மனத்திற்குப் பிடிக்காவிட்டாலும் வற்புறுத்திச் செய்யச் சொல்கிறது. அதைச் செய்வதால் மேல்மனம் தன் அஞ்ஞானத்தை இழந்து அடி மனத்தை அறிகிறது.

பகவான் - நாம் இடித்துக் காலை உடைத்துக் கொள்கிறோம் என்றால் அது accident. எதிர்பாராமல் நடந்தது எனக் கருதுகிறோம். அடிமனம் நம்மை இடித்துக் காலை உடைத்துக் கொள்ளச் சொல்கிறது என்பது தத்துவம். மேல்மனம் அஞ்ஞானத்தை விட்டு வெளிவரும்வரை - அறிவோடு நடக்கும்வரை - விபத்து வருவதில்லை. அஞ்ஞானத்தை விட்டு வெளிவர மறுத்து அடம்பிடித்தால், காலை உடைத்துக்கொள் இனிப் புரியும் என அடிமனம் கூறுகிறது.

பக்தன் - இது போன்ற விபத்துகள் வந்த பின் வாழ்வில் அதிர்ஷ்டம் வருவதை நம்மவர் அறிவார்கள்.

பகவான் - Alert விழிப்பாக இருப்பவர்க்கு விபத்து வருவதில்லை. அவர்கள் அறியாமையை வலியுறுத்துவதில்லை. மனிதனுக்கு இது கடுமையான சட்டம். இதன் பொருளை ஏற்றால் இனி அவன் வாழ்வில் சிரமமிருக்காது. அதிர்ஷ்டம் தொடர்ந்து வரும்.

பக்தன் - புயல், வெள்ளம், வறட்சி, பூகம்பம், எரிமலை வெடிப்பது மக்கள் மனம் மாற மறுப்பதால் என்று அன்னை கூறுகிறார். ஒருவர் தம் வாழ்வில் ஏற்பட்ட விபத்துகளை இப்படி அறிந்து மாற முடியுமா?

பகவான் - மாறுவது பரிணாமம். ஏதோ சில குடும்பங்கள் இது போன்ற நேரங்களில், "ஆண்டவன் இதுவரை எங்களுக்கு அந்தக் கஷ்டம் கொடுத்ததில்லை" என்பார்கள். பொதுவாக அவர்கள் அறிவுடையவர்களாக இருப்பார்கள்

பக்தன் - அடிமனம் கூறுவதை ஏற்பது life responseஐக் கவனித்தால் தெரியுமா? இதுவரை நடந்த தவறுகள் இனி நடக்காவிட்டால் அடிமனத்தை ஏற்பதாகுமா?

பகவான் - தவற்றை விலக்கினால் பிரச்சினையிருக்காது. அடிமனம் சூசகமாகக் கூறுவதைக் கேட்டு ஏற்கமுடிந்தால் அடுத்த 100 ஆண்டு இப்பொழுது வரும்.

பக்தன் - முதலில் கூறியது புரிகிறது.

பகவான் - அது புரியப் புரிய அடுத்தவை அடுக்கடுக்காகப் புரியும்.

பக்தன் - நமக்குப் புரிந்தவற்றை சரி என ஊர்ஜிதம் செய்தபின் உடன் உள்ளவரால் அதை ஏற்க முடியவில்லை.

பகவான் - உடனுள்ளவர் ஏற்கும் வகையில் நாம் அடிமனத்தை, அன்னையை ஏற்க வேண்டும். அல்லது அவர்களை ஏற்கக் கூடாது. விலக வேண்டியவர் தாமே விலகுவர். நாமே பிடித்துவைத்திருப்பது தொந்தரவு செய்யும்.

பக்தன் - சிலரை விலக்கினால் முழுமை எப்படி வரும்?

பகவான் - நம்மால் முடிந்தவரை ஏற்கலாம். முடியாததை ஏற்க முடியாது. முழுமை முழுமையாகும்பொழுது விலக்க வேண்டியவர் இருக்கமாட்டார்.

பக்தன் - நமக்குத் தகுதி வரும்வரை அந்தச் சட்டம் நமக்கில்லை. Negative எதிரானது இல்லை என்கிறார். சூன்யம் என்பது சக்திவாய்ந்தது என்பதெல்லாம் சொல்ல வேண்டும்.

பகவான் - 600 ஆண்டுகட்கு முன் இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு ஆப்பிரிக்கா வரும் கப்பல்கள் Cape of Good Hope கேப்முனை வரை வரும். அத்துடன் பூமி முடிகிறது. அதைக் கடந்தால் கப்பல் பாதாளத்தில் விழும் என நினைத்தார்கள். அது அந்த நாள் நம்பிக்கை. அதுபோல் நமக்குப் புரியாததை இல்லை என்பது தத்துவத்தில் சூன்யம் எனப்பட்டது. சூன்யம் என ஒன்றில்லை. பார்லிமெண்டில் ஆளும் கட்சிக்கு எதிர்கட்சி negative வேண்டாதவர். எதிர்கட்சிக்கு ஆளும் கட்சி வேண்டாதவர். அவர்கட்கு அதிகாரமிருந்தால் வேண்டாதவர்களை விலக்கி விடுவார்கள். ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் சேர்ந்ததே சர்க்கார். ஒரு பகுதி இல்லாமலிருக்க முடியாது. அப்படி இல்லாவிட்டால் பார்லிமெண்ட் இல்லை. ஆளும் கட்சிக்கு எதிரேயிருந்து ஆள உதவுவது எதிர்கட்சியின் கடமை.

பக்தன் - வீட்டு உதாரணம்.

பகவான் - ஒரு பையன் படிக்கிறான். அடுத்தவன் விவசாயம், வியாபாரம் செய்தால் பரீட்சை, அறுவடை மோதும். மோதும் பொழுது அடுத்தவர் காரியத்தின் முக்கியத்துவத்தை அறிந்து அனுசரிப்பது குடும்பம். "அறுவடைக்கு உதவாத பையன், என்ன பையன்" என்றும், "நீ படிக்காதவன், உனக்கு பரீட்சை என்றால் எப்படித் தெரியும்?" என்றும் ஆரம்பித்தால் இருவரும் ஒருவருக்கொருவர் வேண்டாதவராகி, வீடு இரண்டாகிறது. குடும்பத்தைக் கருதினால் அறுவடையும் முக்கியம், பரீட்சையும் முக்கியம்.

பக்தன் - ஒரு பகுதியால் சொல்ல முடியாததை அடுத்த பகுதி சொல்வதே நெகட்டிவ் என்பது இதுதானா? நெகட்டிவ் அம்சங்களை – தோல்வி போன்றவற்றை - அனுபவிக்காதவன் பாஸிட்டிவ் அம்சங்களை முழுமையாக அனுபவிக்க முடியாது. நிழலின் அருமை வெய்யிலில் தெரியும், என்பவை தெரிந்தாலும் சற்றுப் புதியதாக இருக்கிறது.

பகவான் - கெட்டது என்ற எண்ணம் பரம்பரையானது. கெட்டது என்று ஒன்றில்லை. அது வேறு என நினைக்க முடியவில்லை.

பக்தன் - அன்று கெட்டது என்றவற்றை இன்று நல்லது என சேர்த்துக்கொள்வதால் ஓரளவு புரிந்தாலும், மனம் இதமாக, பளிச்சென ஏற்பதில்லை.

பகவான் - IAS பயிற்சியை தாலூக்காபீஸ் முதல் ஜெயில், பிச்சைக்கார விடுதி வரை அளிக்கின்றனர். தாழ்ந்த இடம் என எதையும் ஒதுக்குவதில்லை. IAS ஆபீசர் முக்கியமான டிபார்ட் மெண்ட்களில் மட்டுமிருப்பதில்லை. எல்லா டிபார்ட்மெண்டுகளுக்கும் அதிகாரிகளாக இருப்பதால் எதையும் விலக்க முடியாது. வாழ்வில் நாம் எதையும் விலக்க முடியாது, விலக்கக் கூடாது.

பக்தன் - அவை தவிர வேறெதாவது உண்டா?

பகவான் - ஆண்டவன் விஷ ஜந்துகளை உற்பத்தி செய்திருப்பது எதனால்? வாழ்வு முழுமையானது. சிருஷ்டியில் எதையும் இரண்டாக, எதிரெதிராகப் பிரித்துக் காட்டுவதுபோல் நல்லது, கெட்டது உள்ளன. நல்லதை மட்டும் பாராட்டினால் வாழ்வில் முழுமையிருக்காது. கெட்டதும் சேர்ந்தால் தான் முழுமை.

பக்தன் - புரிகிறது. மனத்தைத் தொடவில்லை.

பகவான் - எந்தக் குடும்பத்திலும், சர்க்காரிலும், ஸ்தாபனத்திலும் எவ்வளவு பெருமையுடையதானாலும் இரகஸ்யம் என்பவை உண்டு. அவை தவறானவையல்ல, அவசியமானவை. Official Secrets Act என்று ஒரு சட்டம் உண்டு. ஓய்வு பெற்ற பின்னும் அந்த இரகஸ்யங்களை ஆபீசர்கள் வெளியிட்டால் ஜெயிலுக்குப் போக வேண்டும்.

பக்தன் - இது அதிகமாகப் புரிந்தாலும், ஏதோ குறையாக இருக்கிறது.

பகவான் - உங்கள் சொந்த அனுபவத்தில் குறையற்ற இரகஸ்யம் ஒன்று கூட இல்லையா?

பக்தன் - உண்டு.

பகவான் - அது வெளிவந்தால். . . . . .

பக்தன் - எல்லாம் போகும்.

பகவான் - இவை குறையற்ற ரகஸ்யங்கள். மற்றவை குறையான இரகஸ்யங்கள். மீதி விஷமான இரகஸ்யம்.

பக்தன் - அமிர்தத்தைவிட உயர்ந்த வாழ்வு திருவுருமாற்றத்தால் வர விஷம் தேவை எனப் புரிந்தாலும், மனம்?

பகவான் - பெரிய அளவு புரிந்தால் மீதி போகப் போகப் புரியும். மனத்தைத் தொடும்படிப் புரிய கொடுமை அனுபவிப்பவர்க்கு இன்பமானது என்ற அனுபவம் வேண்டும். வேகமாகப் போனால், வேகமாக சைக்கிளில் போனால் வேகம் தெரியும். ரயிலில் அதை விட வேகமாகப் போகலாம். வேகம் அதிகரிக்க பெரிய வண்டி தேவை. அந்த வேகம் அமைதியாகவும் தெரியும். அமைதியான வேகம் அதிவேகம்.

பக்தன் - பகுதியைக் காணும் மனம் சிறியது. முழுமையைக் காண மனம் பரந்திருக்க வேண்டும். பரந்த மனம் முழுமையை அறியும் பொழுது பகுதிக்குரிய வேகம் அமைதியாகும்.

பகவான் - ஆமாம்.

பக்தன் - சத், சித், ஆனந்தம், சத்திய ஜீவியம் தலை கீழே மாறி உலகம் உண்டானதை உதாரணம் மூலம் கூற முடியுமா?

பகவான் - ஒரு கம்பனி ஆரம்பிக்க முதல் போட்டு கட்டிடம் கட்டி, மெஷின் வாங்கி, பொருள்களை உற்பத்தி செய்து, நிர்வாகம் செய்து இலாபம் எடுக்கிறோம். நாம் போட்ட முதல் கட்டிடமாகவும், மெஷினாகவும் மாறுகிறது. செய்யும் வேலை சரக்காகிறது. கம்பனி ஆரம்பிக்கும் ஆர்வம் இலாபமாக வருகிறது. நிர்வாகத்திறமை சட்டம், ஒழுங்கு என மாறுகிறது.

பணம் - கட்டடம், மெஷின்

வேலை - சரக்கு

ஆர்வம் - இலாபம்

திறமை - சட்டம் ஒழுங்கு

போட்ட பணம், செய்த வேலை, காட்டிய ஆர்வம், திறமை உபரியாகிறது.

சத் - ஜடமாகவும்

சித் - வாழ்வாகவும்

ஆனந்தம் - சைத்தியப் புருஷனாகவும்

சத்திய ஜீவியம் - மனமாகவும்

மாறுவது சிருஷ்டி. இம்மாற்றத்தால் ஆனந்தம் பேரானந்தமாகிறது. இது சிருஷ்டி ஏற்பட்ட வகை. ரிஷிகள் சொல்லாதது. முதற்புத்தகத்தில் 27ஆம் அத்தியாயம் இப்படிக் கூறுகிறது.

பக்தன் - மீண்டும் பரிணாமத்தால் முன்நிலையை அவை அடைகின்றனவா?

பகவான் - அது பரிணாமம். ஆனந்தம் மேலும் அதிகரிக்கிறது.

பக்தன் - ஆனந்தம் தவிர வாழ்வில் வலியில்லை என்பதை விளக்க முடியுமா?

பகவான் - 3 வயதுக் குழந்தைக்கு எந்த நேரமும் சந்தோஷம் உண்டு.

பக்தன் - நாம் தலையிடாதவரை எல்லாம் ஆனந்தம் தான்.

பகவான் - அது நடக்க முயன்று ஓடினால் விழுந்து அழுகிறது. அது ஓடக் கற்றுக்கொள்வது. கற்றுக்கொள்வது ஆனந்தம். இடறி விழுவது வலி. எழுந்து மீண்டும் ஓடுகிறது. வலியைவிட ஆனந்தம் அதிகம். கற்றுக் கொண்டால் வலியில்லை, ஆனந்தம் மட்டும் இருக்கின்றது. வலி அறியாமைக்கு. ஆனந்தம் அறிவுக்கு. அறிவுக்கு ஆனந்தம் தவிர வேறில்லை.

பக்தன் - அது சரி, வலி இருக்கிறதல்லவா?

பகவான் - வலியும், ஆனந்தமும் உள்ள பொழுது எதையும் நாடும் உரிமை மனிதனுக்குண்டு. அந்தச் சுதந்திரத்தில் இறைவன் தலையிடுவதில்லை. வெயிலில் விளையாடும் பையனுக்கு வெயில் தெரிவதில்லை. நடக்கக் கற்றுக் கொள்ளும் குழந்தை விழுந்தால், எழுந்து ஓடும் குழந்தையும் உண்டு. அழும் குழந்தையும் உண்டு. வலியும், அழுகையும் பலஹீனத்திற்கு. பலஹீனம் பலமாக மாறுவது ஆனந்தம்.

பக்தன் - வலி என்பதை சிருஷ்டிக்கவில்லை. ஆனந்தத்தை மனிதன் வலியாகவும் உணருகிறான்.

பகவான் - சரி.

பக்தன் - எப்படிப் பார்த்தாலும் வலி என்பது சிருஷ்டியிலிருக்கிறது.

பகவான் - தொழிலில் லாபம் உண்டு. அதிக லாபமும் உண்டு. சரியாக செய்யவில்லை எனில் நஷ்டம் வரும்.

பக்தன் - அதுவே நான் கேட்பது. நஷ்டமே தொழிலிலில்லை என்று எப்படிக் கூறுவது?

பகவான் - நஷ்டம் அனுபவத்தைக் கொடுக்கும். அனுபவம் அதிக லாபத்தைக் கொடுக்கும். அதை நஷ்டம் என்பதை விட அனுபவம் என்று கூறலாம். அறிவு பெறும் அனுபவம், அறியாமை.

பக்தன் - நாம் அறியாமையை வலி என்கிறோமா?

பகவான் - ஆம். அந்த வலியும் அடிமனத்திற்கு ஆனந்தம் தருகிறது. வலி மேல் மனத்திற்குத்தான். வலி உணர்வின் அறியாமை.

பக்தன் - உலகில் வலியில்லை, அறியாமையிருக்கிறது. அறியாமையை உணர்ச்சி வலி என்கிறது.

பகவான் - சத் முதல் ஜடம் வரை உள்ள எட்டு லோகங்களிலும் அறியாமையில்லை என்று கண்டோம். அறியாமையில்லாத எட்டு லோகங்களில் அதிக ஆனந்தத்தை நாடி அறிவு தன்னுள் மறைந்து அறியாமையாகிறது.

பக்தன் - உபநிஷதம் ‘All is in each, each is in all’ எல்லா ஜீவன்களும் ஒருவரிலும், ஒருவர் எல்லா ஆத்மாக்களிலும் இருக்கிறார் என்று கூறுகிறது.

பகவான் - மேலும் அனைவரும் ஆண்டவனிலும், ஆண்டவன் அனைவரிலும் இருக்கிறார் என்றும் கூறுகிறது.

பக்தன் - ஒன்று பலவாகப் பிரிந்து, கலப்பது ஆனந்தம் உற்பத்தியாகும் வகை எனவும் கூறப்படுகிறது. கலப்பது ஆனந்தம். ஆனந்தத்திற்காகப் பிரிந்து கலப்பது.

பகவான் - மனிதன் மற்றவர்களுடன் உறவாட விரும்புகிறான். உறவு இன்பம். ஒரு திருமணம் என்றால் ஏராளமான உறவினர்களும் நண்பர்களும் ஒருவரை நாடி வருகின்றனர். அவர்கள் வீட்டு விசேஷத்திற்கெல்லாம் "ஒருவர்" போய்க் கலந்து கொள்கிறார். கலந்து உறவாடுதல் இன்பம் என்பது நம் வாழ்விலும் உள்ளது.

பக்தன் - சச்சிதானந்தம் என்பது 9ஆம் அத்தியாயம். அதன் முன்னுள்ள 8 அத்தியாயங்களும் முரண்பாட்டைப் பற்றிப் பேசுவது எதனால்?

பகவான் - பிரம்மம் சிருஷ்டியில் முதலாகச் செய்தது சத்புருஷன். சத் என்று ஏற்பட்டவுடன் அசத் ஏற்படுகிறது. சத்புருஷனை being என்றால் non being உண்டாகிறது. சத், சித், ஆனந்தம் மூன்றிற்கும் எதிரான அசத், அசித், நிரானந்தம் ஏற்படுகிறது. சிருஷ்டியே முரண்பாடு, முரண்பாட்டில் ஆரம்பிக்கிறது. முரண்பாடு என்று கூறாவிட்டால் (dualities) இரட்டைகள் எனலாம். சத், அசத் என்ற முரண்பாடு பிரம்மம் என்ற உடன்பாடு. ஒன்றான பிரம்மம் இரண்டாக - சத், அசத் - சிருஷ்டியில் எழுவதால், அதன் வகைகளை முதல் எட்டு அத்தியாயங்களில் எழுதினேன்.

பக்தன் - அவை எவை?

பகவான் - ஜடம், ஆன்மா எளிதில் விளங்கக் கூடிய முரண்பாடு, Ch. 2 & 3.

பாதாளம், பரமாத்மா அடுத்தது. - Ch. 5.

பிரபஞ்சம், மனிதன்                       - Ch. 6.

அகந்தை, சைத்தியப் புருஷன்  - Ch. 7.

எட்டாம் அத்தியாயத்தில் பாதாளத்திற்கும், பரமாத்மாவுக்கும் பொதுவான ஞானம், புலன்களால், அஞ்ஞானமாவதை ரிஷிகள் கண்டு கடந்ததைக் கூறுகிறார்கள். கண்டவர் அவற்றைச் சேர்க்க முனையாமல், பரமனையடைய முனைந்தனர். மேலும் முதல் அத்தியாயத்தில் உடலுக்கும், உணர்வுக்குமுள்ள முரண்பாடு, உணர்வுக்கும், அறிவுக்கும் உள்ள முரண்பாடு, அறிவுக்கும், ஆன்மாவுக்கும் உள்ள முரண்பாடுகளைக் குறிப்பிடுகிறேன்.

பக்தன் - முதல் அத்தியாயத்தில் வேதாந்தம் பரிணாமத்தைப் பற்றிப் பேசுகிறது என்று வருகிறது.

பகவான் - உணர்வும், அறிவும் முரண்பாடொழிந்தபொழுது விஞ்ஞானம் எழுந்ததைக் கூறி, அறிவும் ஆன்மாவும் இணைவதால் சத்தியஜீவன் பிறப்பான் என்ற விளக்கம் இருக்கிறதே.

பக்தன் - ஏன் சிருஷ்டி முரண்பாட்டில் ஆரம்பிக்கிறது?

பகவான் - முரண்பாடு, உடன்பாடு என்பவையோ மற்ற எதுவுமோ, எங்கும் இல்லை. மனிதன் மனத்தால் ஆனவன். அம்மனத்தின் பார்வைக்கு சத், அசத் முரண்பாடாய்த் தெரிகின்றன.

பக்தன் - மனத்தின் கீழுள்ள விலங்குகட்கு அது எப்படித் தெரியும்?

பகவான் - அது தெரியாது. விலங்குகட்கு உணர்வு தெரியும். அதுவே கடவுளாகத் தெரியும். மீனவனுக்குக் கடல் ஆத்தா. காட்டிலிருப்பவனுக்குக் காடு மோகினி. அவனுக்கு சத்தில்லை, அசத்தில்லை.

பக்தன் - மனத்தைக் கடந்தவனுக்கு,

பகவான் - அவனுக்கும் சத்தில்லை. பிரம்மம் முழுமையாகத் தெரியும்.

பக்தன் - முரண்பாடு நமக்குத்தானா?

பகவான் - நமக்கு போலீஸ் பாதுகாப்பு, திருடனுக்கு போலீஸ் கைது. நமது பிரச்சினையே எப்படி மனத்தைக் கடப்பது என்பதுதானே.

பக்தன் - காலத்தின் 3 நிலைகள் முரண்பாட்டிலும் வருமா?

பகவான் - முரண்பாட்டை முரண்பாடாக ஏற்பது காலம் முதல் நிலை. முரண்பாட்டில் எதிரி நமக்குட்படுவது கடந்த நிலை, இரண்டாம் நிலை. முரண்பாடு உடன்பாடாவது மூன்றாம் நிலை. உதாரணமாக, எதிரி முரண்பாடு. நம் பலமறிந்து எதிரி அடங்குவது அடுத்தது. எதிரி தன் தவற்றை உணர்ந்து நம் கட்சியில் சேர்ந்தபொழுது எதிரியாக இருந்த பொழுது எப்படியெல்லாம் நமக்குத் தொந்தரவு கொடுத்தானோ - அவை நமக்குத் தெரியாது - அவற்றை எல்லாம் சாதகமாக மாற்றிச் செய்தால், நம் நிலை பலமடங்கு உயருவது மூன்றாம் நிலை.

பக்தன் - 1947க்கு முன் ஆங்கிலச் சர்க்கார் நாம் தொழில் ஆரம்பிக்கத் தடையாக இருந்தது. 1947இல் அவர்கள் விலகிப் போனது நமக்குத் தடை விலகியது, வெற்றி. இனி நாம் தொழில் ஆரம்பிக்கலாம். ஆனால் அவர்கள் போகவில்லை. எதிரிகள் நண்பராக மாறினர். அவர்கள் முதலையும், தொழில் நுணுக்கத்தையும் கொடுத்து அசோக் லேலண்ட் போன்ற ஏராளமான தொழில்களை ஆரம்பிக்க உதவினர். நாமே அந்த அளவுக்கு முன்னேறியிருக்க முடியாது.

பகவான் - அது மூன்றாம் நிலை. எல்லா இடங்களுக்கும் வருவது.

பக்தன் - இரண்டாம் நிலை அடங்குவது. மூன்றாம் நிலை அன்பாய் ஆதரிப்பது.

பகவான் - முதல் நிலை கட்டை வண்டிபோன்றது. இரண்டாம் நிலை லாரிபோன்றது. மூன்றாம் நிலை விமானம்போன்றது. வாழ்வில் காணும் செய்திகளை இதுபோன்ற கருத்துகள் மூலம் சிந்தனை செய்வது நல்லது. ஜடமும், ஆன்மாவும் ஒன்று என்பதை ஏற்கும்பொழுது எளிமையாகப் புரிந்து ஏற்கலாம்.

பக்தன் - அதில் புரிய ஒன்றுமில்லையே.

பகவான் - புரிந்து கொள்ள ஆரம்பித்தால் ஒரே அத்தியாயத்துள் உலகமே வரும். ஜடம், ஜடம். நாம் சக்தி ரூபம் பெற்று, சலனமிழந்து ஜடமாயிற்று என்று கண்டோம். ஜடம் மீண்டும் சலனம் பெற ரூபம் அழிய வேண்டும். அது கற்பனைக்கு எட்டுமா?

பக்தன் - ஐஸ்கட்டி உருகி உருவமிழக்கிறது.

பகவான் - உருவமிழந்து நீராக ஓடுவது சலனம். அடுத்த கட்டம் மனம்.

பக்தன் - ஐஸ் கட்டியில் மனம் எப்படி வரும்?

பகவான் - மனத்தின் ஞானம் உறுதிமேல் செயல்பட்டு வாழ்வுச் சலனம் ஏற்படுகிறது என்றோம். நீர் எப்படி மனமாகும். நீர் புலனுக்குத் தெரியும். மனம் புலனுக்குத் தெரியாது.

பக்தன் - ஒன்றும் புரியவில்லையே.

பகவான் - பிரபஞ்சமனம் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் மூலம் நீரை உற்பத்தி செய்தது.

பக்தன் - அது சரி.

பகவான் - அதை நினைக்கும்பொழுது நீர் சக்தியின் சலனமாக மனத்திற்குத் தெரிய வேண்டும்.

பக்தன் - தெரியவில்லை.

பகவான் - ஜட சக்தி சப்தமாகி, ஆகாயமாகி, நீராயிற்று.

பக்தன் - அது தெரியும்.

பகவான் - எனவே நீர் ஆகாயமாகி, சப்தமாகி, ஜடசக்தியாகி, சக்தி அலைகளாகும்.

பக்தன் - புரிகிறது.

பகவான் - புரிவது அறிவு; சக்தி அலைகளாகத் தெரிவது அனுபவம். ஆன்மா, ஆன்மிகப் பொருளாகி, மனத்தின் மூலம் ஜடப்பொருளாகிறது.

பக்தன் - அது தெரியும்.

பகவான் - அது சக்தி அலைகளாகும். ஜடமும் சக்தி அலைகளாகும். இரண்டும் ஒன்றே என்று அறிகிறோம்.

ஜடமும், ஆன்மாவும் சக்தி அலைகளாவது - பிரபஞ்சத்தில் சந்திப்பது - முதல் நிலை.

ஜடமும், ஆன்மாவும் பிரம்மமாவது - பிரம்மத்தில் சந்திப்பது - இரண்டாம் நிலை.

அவை பரிணாமத்தில் ஜடம் ஆன்மாவாக வெளிப்படுவது மூன்றாம் நிலை, பிரம்ம ஜனனம்.

பக்தன் - ஜடமும், ஆன்மாவும் பிரம்மத்தில் சந்திப்பதே இரண்டாம் நிலையாகுமா?

பகவான் - அது மௌனமான பிரம்மம் காலத்தைக் கடந்தது. மௌனமான பிரம்மம், பரிணாமத்தில் சலனமான செயலாய் எழுவது, ஜடம் ஆன்மாவாகி செயல்படுவது - காலத்துள் காலத்தைக் கடந்த நிலை, அற்புதக் காட்சி.

பக்தன் - அதையே பிரம்ம ஜனனம் என்கிறோம்.

பகவான் - சரி. Unity in multiplicity, One in the Many, பிரம்மம் பரிணாமத்தில் தன்னையறிந்து தான் தேடிய இன்பம் பெறுவது.

பக்தன் - உலகம் அற்புத சிருஷ்டி. அங்கு துன்பமேயில்லை என்பது நம் பார்வைக்குத் தெரியும் வழியுண்டா?

பகவான் - தானே காண வேண்டும் என்ற அவா பூரணமானால் தெரியும்.

பக்தன் - நான் என்ன செய்யலாம்?

பகவான் - Knowledge by Identity, இரண்டறக் கலந்த ஞானமாக அவ்வவா ஆனால் தெரியும்.

பக்தன் - எண்ணத்துடன் இரண்டறக் கலக்க வேண்டுமா?

பகவான் - அப்படிக் கலந்தால் எண்ணம் ஆத்மாவில் தெளிவுபடும்.

பக்தன் - வேறென்ன செய்ய வேண்டும்?

பகவான் - நீ கேட்பது காட்சி, எண்ணமன்று.

பக்தன் - காட்சி புலன்கட்கு. எண்ணம் புலனில் இரண்டறக் கலக்க வேண்டும். அதுபோல் நமக்கு மனிதர்கள், தெய்வம் தெரிகிறது.

பகவான் - சிந்தனை உணர்வாகி, உணர்வே சிந்தனையாக வேண்டும்.

பக்தன் - புலன்களால், அற்புதத்தைக் காண முடியுமா?

பகவான் - புலன்கள் தூய்மையானால் காணும். புலன்களைத் தூய்மைப்படுத்த மனம் தூய்மையான எண்ணங்களை மட்டும் அனுமதிக்க வேண்டும்.

பக்தன் - எந்த அத்தியாயத்தில் புலன்கள் வருகின்றன?

பகவான் - இரண்டாம் அத்தியாயத்தில் அறிவிலிருந்து ஜீவியத்திற்குப் போனால் உலகை சக்திமயமாகக் காண்பது புலன். 9ஆம் அத்தியாயத்தில் ஹிருதயச் சமுத்திரம் தெரிவது புலனுக்குத்தான். ஸ்தாணுவின் அதிவேகம் அமைதியாய்த் தெரிவதும் புலன் அறிவதாகும்.

பக்தன் - புலன்கள் அகந்தையின் கருவிகளல்லவா?

பகவான் - அனுபவம் ஏற்படும்பொழுது அகந்தை அழிவதில்லை, விலகி நிற்கின்றது. அழிந்தால் அனுபவம் நிலை பெறும். உலகம் அற்புதம் என்பதை மனம் ஏற்பது பூரணமான பின், தியானம் முழுமையானால் காட்சியுண்டு.

பக்தன் - தியானத்தால் அடிமனம் போக முடியாது என்றீர்களே?

பகவான் - நிலையாகப் போக முடியாது. க்ஷணம் போகலாம். அதையே சரணாகதி, சமர்ப்பணம் மூலமாகப் போக நாளாகும்.

பக்தன் - உதாரணம்.

பகவான் - கல்லூரியில் நடக்கும் நாடகம் பார்க்கும் உரிமை கல்லூரி மாணவனுக்குண்டு. ஒருவருக்கு அது பிரியமானால், கல்லூரியில் சேரும்வரை காத்திருக்கலாம். அல்லது எந்த மாணவனுடனும் போய் நாடகம் பார்க்கலாம். நாடகம் பார்க்க எவராலும் முடியும். மாணவனாக அதற்குரிய தகுதிகள் தேவை.

பக்தன் - இந்தக் காட்சி இதுவரை எந்த ரிஷிகட்கும் தெரியாத காட்சியாக இருக்கிறதே.

பகவான் - அவர்கள் அதை நம்பவில்லை. அதனால் அதை நாடவில்லை.

பக்தன் - இன்று எவரும் சிங்கப்பூர் போகலாம். அங்கே தங்குவது வேறு விஷயம். கப்பல் ஏற்படுமுன் அது இல்லை என்பதுபோல் கொள் கிறேன். Matter சிக்கலான அத்தியாயம். Knot of Matter என்ற அத்தியாயத்தில் ஜடம் பரிணாமம் பெறத் தடையானவை Ignorance, inertia, division, பிரிவினை என வருகிறது. தெரியாதது அஞ்ஞானம், முடியாதது தமஸ் என்றும், பிரிவினை என்பது அகந்தை எனவும் கூறலாமா?

பகவான் - மனிதன் அஞ்ஞானத்துள் ஆனந்தமாக வாழ்கிறான் என்பதே உண்மை. அவன் வேதனைப்படுவதை மற்றவர்கள் அறியலாம். 1903இல் பிளேக் வந்தபொழுது தடுப்பு ஊசி போடுவதைப் பொதுமக்கள் எதிர்த்தனர். சர்க்கார் வலியுறுத்தவில்லை. 10 இலட்சம் பேர் இறந்தனர். அவற்றுள் ஆங்கிலேயர் 5 பேர். தடுப்பு ஊசி போட்டுக் கொண்டதால் 300 பேர் இறப்பதற்குப் பதிலாக 5 பேர் இறந்தனர்.

பக்தன் - இது அஞ்ஞானம். கர்மபலன் என்பர்.

பகவான் - உலகில் ஓர் ஏக்கரில் ஒரு லட்ச ரூபாயிலிருந்து 15 லட்சம் வரை சம்பாதிக்கின்றனர். இந்தியாவில் ரூ. 10,000 முதல் 1 லட்சம் வரை சம்பாதிப்பது எதனால்? அது தமஸ், கற்றுக் கொள்ள முயலவில்லை.

பக்தன் - பிரிவினைக்கு உதாரணம்.

பகவான் - பிரிவினைக்கு அடிப்படை தான் உயர்வு என்ற எண்ணம். தான் தனியேயிருந்தால் அதிகமாகச் சாதிப்பதாக நினைவு. ஆப்கானிஸ்தான் முஸ்லீம்கள் ஐரோப்பியரை விட, இந்தியரை விட உயர்ந்தவர் எனக் கூறுகிறார்கள். உயர்வு என்ற நினைவு அறியாமையை வலியுறுத்துவதால் எழுந்து பிரிவினையை நாடுகிறது. உயர்வு என்ற நினைவு செயல்படுவதால் பிரிவினை எழுகிறது.

பக்தன் - அப்படியானால் சுமுகம் எழத் தடையானது உயர்வு என்ற நினைவா?

பகவான் - அதுவும், சுயநலமும் பிரிவினையை வற்புறுத்தி சுமுகத்தை அழிக்கின்றன. இக்கருத்துகளை ஏற்பவர் ஒருமுறை செயல்பட்டால் எல்லாக் கருத்துகளும் தெளிவாகப் புரிய உதவும்.

பக்தன் - காட்சிக்கு உதவுமா?

பகவான் - செயல் (token act) முடியுமுன் அற்புதம் தெரியும்.

பக்தன் - சிருஷ்டியின் எல்லாக் கட்டங்களையும் வரிசையாக அறிவது பலன் தருமன்றோ?

பகவான் - ஊம்.

பக்தன் - வாழ்விலும், ஆன்மீகத்திலும் முக்கியக் கருத்துகளை ஸ்ரீ அரவிந்தத்துடன் ஒப்பிட்டு எழுதினால், 56 அத்தியாயத் தத்துவங்கள் மூலம் விளக்கம் தரலாமன்றோ?

பகவான் - ஆமாம்.

பக்தன் - சிருஷ்டியின் எட்டு நிலைகளையும், புருஷனின் 5 அம்சங்களையும் நான் எழுதிக் கொள்கிறேன்.

பிரம்மம்

 1. சத் - சத்புருஷன்.

  1. சத் - சித் - ஆனந்தம்.
    
  2. ஆத்மா - புருஷா - ஈஸ்வரா.
    
  3. சத்தான அகம் சத்தியமான புறமாகி ஆன்மாவை இடையில் உற்பத்தி செய்கிறது.
    
  4. அகமான காலம், புறமான இடம்.
    
  5. பிரபஞ்சத்தில் சத் (One) உலகமாகிறது (Many).

   
 2. - சத்தியம், ஞானம், அனந்தம் என்பவை சத், சித், ஆனந்தம் என்பவற்றின் புற நிலைகள்.

  - சத்திய ஜீவியம் என்பது சச்சிதானந்தத்தின் புறம்.
   
 3. ஆத்மா என்ற சொல் பிரம்மத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. இக்கட்டுரையில் ஆத்மா என்ற சொல் spirit, soul என்ற பொருளில் பயன்படும். சத், தன்னைப் புறமாக்கும் அனுபவம் spirit, ஆத்மா எனப்படும். உலகம் Spirit ஆத்மா என்பதாலானது. எந்த நிலையும் (plane) ஜீவியம், பொருள் (substance) எனப் பிரியும். Spirit ஆத்மா என்பது spiritual substance ஆன்மீகப் பொருளாகும்.
   
 4. சத்திய ஜீவியம் இரண்டாகப் பிரிகிறது. ஒன்று காலத்தைக் கடந்தது. அடுத்தது காலத்திற்குடையது. மனம் இப்பிளவின் நடுவில் உற்பத்தியாகிறது. மனம் எதையும் முழுமையாகப் பார்க்க முடியாதது. மனம் துண்டு செய்யும் கருவி. ஆத்மாவைப் புலன் வழி மனம் கண்டால் ஆத்மா மனத்திற்கு ஜடமாகத் தெரியும்.
   
 5. மனம் ஜடத்தைத் துண்டு செய்து அது துச்சமாகும்வரை துண்டு செய்கிறது. துண்டுகள் சேர்ந்து சிறு குவியல்களாகின்றன. ஒவ்வோர் குவியலும் அகந்தையாகும்.
   
 6. மனத்தில் இரு பகுதிகள் உள்ளன. அவை ஞானம், உறுதி. ஞானம் உறுதிமேல் செயல்பட்டால் சக்தி பிறக்கும். அதற்கு வாழ்வு எனப்படும். ஓரளவு ஞானம் தன்னை இழந்துவிடும்.
   
 7. ஞானம் தன்னை முழுவதுமிழந்தால் வாழ்வு ஜடமாகும். இத்துடன் சிருஷ்டி முடிகிறது. இனி வருவது பரிணாமம். 

பரிணாமம்

பரிணாமம் மனத்தில் ஆரம்பிக்கின்றது.

பிரகிருதியின் ஆத்மாவுக்கு சைத்தியப் புருஷன் எனப் பெயர்.

பிரகிருதியின் அனுபவச்சாரம் சைத்தியப் புருஷன்.

அது முதலில் மனத்தில் mental psychic என எழுகிறது.

இது ஒரே சமயத்தில் மேலும் கீழும் சஞ்சாரம் செய்கிறது.

மேலே போக சைத்தியப் புருஷன் முதலில் கீழே போய் மேலே எழ வேண்டும்.

கீழே போனது மேலெழுந்து வந்து முனிவர், ரிஷி, யோகி, தெய்வநிலைகளின் சைத்தியப் புருஷனாகி, பொன்மூடியைக் கடந்து ஈஸ்வரனாகி, சத்தியஜீவனாகும். கீழே போக வேண்டிய பகுதி பிராணனின் சைத்தியப் புருஷன், உடலின் சைத்தியப் புருஷனாகும். உடலில் ஜீவியம், பொருள் என இரு பகுதிகளிருப்பதால், பொருளின் சைத்தியப் புருஷனாகும் பொழுது அது சத்தியஜீவனாகிறது.

இதர விஷயங்கள்

- சத் என்பது ஜடமாகவும்,

சித் என்பது வாழ்வாகவும்,

ஆனந்தம் என்பது சைத்தியப் புருஷனாகவும்,

சத்திய ஜீவியம் மனமாகவும் தலைகீழே மாறி சிருஷ்டி பூர்த்தியாகிறது.

- பிரம்மம் ஆனந்தத்தைத் தேடி தன்னுள் தான் மறைந்து சிருஷ்டியை உண்டு பண்ணியது.

- ஒளிவது சிருஷ்டி, வெளிவருவது பரிணாமம்.

- சிருஷ்டியிலும், பரிணாமத்திலும் பிரம்மம் பிரம்மமாகவேயிருக்கிறது. தன் முழுமையை, பிரம்மம் எப்பொழுதும் இழப்பதில்லை. மனிதனுக்குப் பல்வேறு உறுப்புகளுண்டு. ஆனால் அவ்வுறுப்புகள் அவனிலிருந்து எப்பொழுதும் பிரிந்து போவதில்லை. பார்ப்பவர் தலையை மட்டும் பார்ப்பதால் மனிதன் என்பது தலை எனக் கூற முடியாது. கால்களை மட்டும் காண்பவர் மனிதனைக் கால்கள் என நினைப்பது உண்மையாகாது.

- பிரம்மம் தன் முழுமையை இழந்ததில்லை. என்றும், எப்பொழுதும் பிரம்மம் பிரம்மமே.

வாழ்வின் அடிப்படையான பல நம்பிக்கைகளையும் அதற்கேற்ற ஸ்ரீ அரவிந்தத்தின் கூற்றையும் கீழே எழுதுகிறேன்.

 1. பொருள்கள், சக்தி, ஆயுள் ஆகிய எதற்கும் அளவுண்டு.

  அன்னை வாழ்வில் ஆயுள் உள்பட எப்பொருளுக்கும் அளவு என்பதில்லை.
   
 2. வாழ்வின் ஜீவநாடி பொய்.

  சத்தியம் மட்டும் ஆட்சி செய்வது அன்னை வாழ்வு.
   
 3. மனிதன் கர்மத்திற்குக் கட்டுண்டவன்.

  கர்மம் மனிதனைக் கட்டுப்படுத்தாது.
   
 4. செல்வம், பதவி முக்கியம்.

  ஜீவியம் முக்கியம், அது மட்டும் முக்கியம்.
   
 5. ஊரில் நடப்பவை, இயற்கை நிகழ்ச்சிகள் நமக்குக் கட்டுப்பட்டவையல்ல.

  புறம் அகத்தைப் பிரதிபலிப்பதால், அகத்திற்குக் கட்டுப்பட்டது.
   
 6. ஓரளவு கடுமை, கொடுமை, வன்முறை தவிர்க்க முடியாதது.

  வாழ்வு கருணை மயமானது, அருளன்றி வேறெதுவும் அங்கில்லை.
   
 7. பொருள், காலம், சக்தி விரயமாவது இயல்பு.

  விரயம் என்று நாமறிவது இயற்கையின் விஸ்வரூபம்.
   
 8. ரத்தபாசம் பேசும்.

  அன்பு பாசத்தை விட உயர்ந்தது.
   
 9. வெற்றி தோல்வியுடன் கலந்தது.

  தோல்வியறியாத வெற்றி நிலையானது.
   
 10. மனித சுபாவம் மாறாது.

  சுபாவம் திருவுருமாறும்.
   
 11. குற்றம் பணம், பொருள், பெண்ணிலிருந்து எழுவது.

  அவை நெகிழ்வை நெருக்கமாக்கும்.
   
 12. பற்றாக்குறை என்பது எப்பொழுதும் எழக்கூடியது.

  அபரிமிதம் சட்டம். நாம் பிரியப்பட்டு பற்றாக்குறையை எழுப்புகிறோம்.
   
 13. மனிதன் மட்டமானவன், சுயநலம் அவனது பிறப்புரிமை.

  பெருந்தன்மையான அர்ப்பணம் இயல்பு.
   
 14. தலைவிதிக்குத் தலை வணங்க வேண்டும்.

  விதியை நாமே நிர்ணயிப்பது விதி.
   
 15. நட்பு, விஸ்வாசம், காதல் நீர்க்குமிழி போன்று நிலையற்றவை.

  அவைமட்டும் வாழ்வில் நிலையானவை.
   
 16. இலட்சியம் நடைமுறைக்குதவாது.

  இலட்சியம் வளர்ந்தால் வாழ்வில் வெற்றியுயரும்.
   
 17. உடலின் திண்மை மனத்தின் தூய்மையை நிர்ணயிக்கும்.

  மனம்போல் உடல்.
   
 18. படிப்பு என்பது பட்டம்.

  படிப்பும், கல்வியும், அறிவும் ஞானமாகா.

  ஆத்மா மனத்தால் பெறும் அனுபவம் ஞானம்.
   
 19. நாலு பேர்போல் நாமும் நடக்க வேண்டும்.

  ஊரையோ, மனச்சாட்சியையோ புறக்கணித்து ஆத்மாவைப் பின்பற்ற வேண்டும்.
   
 20. மனிதனாகப் பிறந்தவன் உடலால் உழைப்பது அவசியம்.

  மனமும் ஆன்மாவும் உடல் மூலம் உழைக்க வேண்டும்.

(வாழ்வின் நம்பிக்கைகள் 20 அல்ல, 200ம் ஆகும். மனித வாழ்வு சுருங்கியது, இருண்டது, துன்பமானது என்பதே அடிப்படை. பெரும் பீழையுள்ளது வாழ்வு. அன்னை வாழ்வு அழகானது, அருள்மயமான அதிர்ஷ்டமுடையது என்ற கருத்தின் தத்துவ அடிப்படைகளை மரபின் ஆன்மிகத் தத்துவங்களுடன் எழுதுகிறேன்.)

 1. மோட்சம் சிகரமானது.

  திருவுள்ளம் திருவுருமாற்றம்.
   
 2. ஆசனம், பிராணாயாமம், மந்திரம், தந்திரம், தியானம், ஜபம் கருவிகள்.

  உடலுக்குரிய முறை உதவாது. சரணாகதி மட்டுமே முறை.
   
 3. ஜீவாத்மா பரமாத்மாவையடைய வேண்டும்.

  ஜீவாத்மாவே பரமாத்மா.
   
 4. காலத்தைக் கடந்த நிலையுண்டு.

  இரண்டையும் கடந்த நிலை காலத்துள் உண்டு.
   
 5. ஆத்மா பிறப்பு, இறப்பில்லாதது. அது ஜீவாத்மா.

  இது ஆன்மீகப் பரிணாம யோகம். சைத்தியப் புருஷன் வளரும் ஆன்மா

  ஆத்மா வளர்ந்து பிரம்மத்தையடையும்.
   
 6. திரிகாலம் மனித வாழ்வைக் கடந்தது.

  காலத்தைக் கடந்த நிகழ் காலம் ஆத்மாவுக்குரியது.
   
 7. மனிதன் சிருஷ்டியின் சிகரம்.

  சத்தியஜீவன் அடுத்த மனித நிலை.
   
 8. மனம் உலகை சிருஷ்டித்தது. அகந்தை சிருஷ்டித்தது.

  சத்தியஜீவியம் சிருஷ்டித்தது.
   
 9. முரண்பாடே இயல்பானது.

  முரண்பாடு உடன்பாடு.
   
 10. ஜடம் ஆன்மாவிலிருந்து மாறுபட்டது.

  இரண்டும் ஒன்றே.
   
 11. சிருஷ்டி லீலை

  ஆனந்தத்தை நாடி பிரம்மம் ஒளிந்து வெளிவருவது சிருஷ்டி.
   
 12. கடவுளை அறிவது ஞானம், உலகை அறிவது அஞ்ஞானம்.

  ஞானம் அஞ்ஞானமாகிறது. அஞ்ஞானம் ஞானத்தைவிடப் பெரியது.
   
 13. உலகம் எப்படி உற்பத்தியாயிற்று என நாம் அறிய முடியாது.

  ஸ்ரீ அரவிந்தம் உலகம் எப்படி இறைவனிலிருந்து வந்தது எனக் கூறுகிறது.
   
 14. வாழ்வு இருண்டது.

  வாழ்வு சக்தியின் சிறப்பு.
   
 15. சிருஷ்டி ஏற்பட்ட வகையை நாம் அறியமுடியாது.

  புருஷன் தன்னிச்சையால் தன் சக்தியிலிருந்து சிருஷ்டித்தான்.
   
 16. சத், சித்திலிருந்து மாறுபட்டது. ஆனந்தம் வேறு.

  மூன்றும் ஒன்றே.
   
 17. ஆன்மா, மனம், சத்தியஜீவியம், வாழ்வு, ஜடம் விளக்கப்படவில்லை.

  ஸ்ரீ அரவிந்தம் விளக்கம் கூறுகிறது.
   
 18. தீமை தவிர்க்க முடியாதது.

  சுயமான நல்லதுண்டு.
   
 19. பிறவி அற, பிறப்பு வேண்டும்.

  ஆன்மா வளர மறுபிறப்புத் தேவை.
   
 20. வாழ்வை நீத்து ஆன்மாவையடைய வேண்டும்.

  வாழ்வனைத்தும் யோகம்.
   
 21. எதற்கும் உரிய காலம் உண்டு. நேரம் வாராமல் முடியாது.

  எதுவும் க்ஷணத்தில் முடியும்.
   
 22. ஆத்மா அகத்திற்குரியது.

  பிரபஞ்சமும், பிரம்மமும் அகத்தில் உள்ளன.
   
 23. ஜடம் ஆன்மாவை ஆளும்.

  ஆன்மா ஜடத்தை ஆளும்.

****

“The Life Divine” என்ற நூலில் உள்ள 56 அத்தியாயங்களுக்கும் ஒரு தத்துவம் உண்டு. சில அத்தியாயங்களில் பல தத்துவங்களும் வருகின்றன. அவற்றுள் 50 முதல் 100 வரை தத்துவங்களை எடுத்து விளக்கமாகப் புரிந்து கொண்டால் நூல் புரிய உதவியாக இருக்கும்.

 1. முரண்பாடு உடன்பாடு.
   
 2. ஜடமும் ஆன்மாவும் ஒன்று.
   
 3. அறிவுக்கு எட்டாதது ஜீவியத்திற்கு எட்டும்.
   
 4. பிரபஞ்சத்தில் ஜடமும், ஆன்மாவும் சக்தியாக சந்திக்கின்றன.
   
 5. எந்தத் தத்துவமும் காலைத் தரையில் வலுவாக ஊன்றுதல் அவசியம்.
   
 6. சர்வம் பிரம்மம், ஏகம் ஏகதுவித்தியம் என்பவற்றைச் சேர்த்து அறிய வேண்டும்.
   
 7. சன்னியாசி பிரம்மத்தை அறிந்ததைப்போல் விஞ்ஞானி ஜடத்தை அறிய வேண்டும்.
   
 8. சிருஷ்டியில் இறைவனை அறிந்ததைப்போல் பரிணாமத்தில் அறிய வேண்டும்.
   
 9.  ஆரியர் கண்ட ஒற்றுமையை சத்திய ஜீவியத்தில் காணும் பொறுமை வேண்டும்.
   
 10. சத்தில் ஊன்றிய காலை எடுக்காமல் அசத்திற்குப் போக வேண்டும்.
   
 11. பரமனும், பாதாளமும் இணைதல் அவசியம்.
   
 12. கடந்ததை விலக்குதல் கூடாது.
   
 13. பிரபஞ்சமும், மனிதனும் இணைய வேண்டும்.
   
 14. மரணத்தை விலக்கும் திறன் மனிதனுக்குண்டு.
   
 15. அறிவிலிருந்து உணர்வு விலகினால் ஞானம் ஏற்படும்.
   
 16. சூரிய மண்டலமும், எறும்புப் புற்றும் ஒன்றே.
   
 17. ஆரம்பம், முடிவு என்பவையில்லை.
   
 18. பிரம்மத்திற்கும் உலகுக்கும் உள்ள தொடர்பை அறிவது விவேகம்.
   
 19. சக்தி சத்தின் வெளிப்பாடு.
   
 20. விரயம் என்பதில்லை.
   
 21. வாழ்வில் தர்மமில்லை.
   
 22. சச்சிதானந்தம் ஆனந்தத்தைப் பொருள்களில் வெளிப்படுத்த முனைகிறது.
   
 23. ஜீவனின் ஆனந்தம் பிரகிருதியின் ஆனந்தமாவது பரிணாமம்.
   
 24. ஆனந்தத்தைத் தேடி ஆண்டவன் உலகை சிருஷ்டித்தான்.
   
 25. மாயை பிரம்ம ஜீவியம். அது எதையும் சிருஷ்டிக்கும்.
   
 26. சத்திய ஜீவியம் உலகை சிருஷ்டித்தது.
   
 27. ஜீவனின் பூரண எண்ணம் சத்திய ஜீவியத்தில் சிருஷ்டிக்கிறது.
   
 28. ஜீவியம் மூன்றாகப் - ஞானி, ஞானம், பொருள் - பிரிகிறது.
   
 29. சத்தியஜீவியத்திற்குக் கடவுள், ஜீவாத்மா, அகந்தை என மூன்று நிலைகள் உள்ளன.
   
 30. எல்லா ஜீவன்களிலும் கடவுள் உண்டு. கடவுளில் எல்லா ஜீவன்களும் உறைகின்றன. ஒரு ஜீவன் மற்ற எல்லா ஜீவன்களிலும் உள்ளது. எல்லா ஜீவன்களும் ஒன்றில் உள்ளன.
   
 31. சத்தியஜீவியம் இரண்டாகப் பிரியுமிடத்தில் மனம் உற்பத்தியாகிறது.
   
 32. மனம், சத்தியஜீவியத் தொடர்பை இழந்தால் அஞ்ஞானம் எழும்.
   
 33. பிரபஞ்சம் அழிந்தாலும் வாழ்விருக்கும்.
   
 34. ஞானம் உறுதி மேல் செயல்படுவதால் வாழ்வு உண்டாகிறது.
   
 35. அடிமனம் மேல்மனத்தை ஆள்வதை அறிவது முதல் சித்தி.
   
 36. மரணம் வாழ்விற்கு அமரத்வமளிக்கிறது.
   
 37. சக்தியும், ஜீவியமும் சேர வேண்டும்.
   
 38. உடல் உணர்வை மனத்தில் எண்ணமாக்கி அதற்கு உடலை உட்படுத்துவது வாழ்வு.
   
 39. இயலாமை போராடி வலுப்பெற்றால் சைத்தியப் புருஷன் மனதில் எழுகிறான்.
   
 40. ஜடம் சச்சிதானந்தம்.
   
 41. மனம் ஆன்மாவைப் புலன்வழி அறிந்தால் அது ஜடம்.
   
 42. அஞ்ஞானம், தமஸ், பிரிவினை ஜடம் பெற்ற தடை.
   
 43. சத்திய ஜீவியம் சிருஷ்டிப்பது என்பது பிரம்மம் சிருஷ்டிப்பதாகும்.
   
 44. பிரம்மம் பூரண முழுமையுடையது. மனம் அதைப் பகுதியாகக் காண்கிறது.
   
 45. ஜீவாத்மாவே பரமாத்மா.
   
 46. Negative வேண்டாதது என்றொன்றில்லை.
   
 47. மனம் இல்லாததை நினைக்க முடியாது.
   
 48. பாம்பும், ஆவியும் உள்ளவை.
   
 49. சுய-ஜீவியம் அஞ்ஞானத்தில் சுய-அனுபவம் பெறுவது அகந்தை.
   
 50. நினைவு காலத்திற்குரியது.
   
 51. ஆன்மாவையும், இயற்கையையும் மேலும் கீழும் அறிவது பூரணம்.
   
 52. ஐக்கியம், ஞானம், அடிமன அறிவு, அகந்தையின் அறிவு என நான்கு வகை அறிவுண்டு.
   
 53. ஏழு வகை அஞ்ஞானங்களுண்டு.
   
 54. மேல் மனத்தில் அஞ்ஞானம் பூரணமடைகிறது.
   
 55. அஞ்ஞானம் ஞானத்தை விடப் பெரியது.
   
 56. உலகில் தீமை படைக்கப்படவில்லை.
   
 57. ஜீவாத்மாவும், பரமாத்மாவும் உள்ளடங்கிய பிரம்மம் சத்தியம்.
   
 58. பூரணவாழ்வு கடந்தது உள்பட எதையும் விலக்காது.
   
 59. பரமாத்மாவும், பாதாளமும் மனிதனில் இணைய வேண்டும், இணைந்து உயர வேண்டும்.
   
 60. ஏழு வகை அஞ்ஞானங்கள், ஏழு வகை ஞானங்களாகத் திருவுருமாறும்.
   
 61. புனர் ஜென்மமில்லாமல் ஆன்மாவிற்குப் பரிணாமமில்லை.
   
 62. கர்மம் சக்திக்கு, ஜீவனுக்கில்லை.
   
 63. ஆன்மா வளரும்பொழுது உடலின் ஜீவியமும் வளர்ந்தால் உடலை மாற்ற வேண்டாம்.
   
 64. பிரம்மம் தன்னுள் ஜனித்த பின், பிறருள் ஜனிக்க உதவுவது சேவை.
   
 65. திருவுருமாற்றத்தின் நிலைகள் மூன்று.
   
 66. உடலின் இருளை, பரமனின் ஒளியே மாற்ற முடியும்.
   
 67. புறம் அகமானால், யுகம் க்ஷணமாகும்.
   
 68. தவிர்க்க முடியாத திருவுருமாற்றம் பெற சரணாகதி மட்டுமே முறையாகும்.

பக்தன் - புறம் அகமானால், யுகம் க்ஷணமாகும் எனில் எப்படி 100 ஆண்டு 100 நாளாகும் என்பதை மீண்டும் ஒரு முறை கேட்கப் பிரியப்படுகிறேன்.

பகவான் - 15 நாளில் USAக்குப் போகும் தபால் 15 நிமிஷத்தில் எப்படிப் போகிறது? தபாலில் உள்ள விஷயம் மின்சார அலைகளாக மாறிப் போவதால் வேகம் அதிகரிக்கிறது, புறம், காலம். அகம் காலத்தைக் கடந்தது. புறம் அகமாவது எனில் காலத்தில் செய்வதைக் காலத்தைக் கடந்து செய்யமுடியும் என்பதால் வேகம் வருகிறது.

பக்தன் - வீட்டில் 11 பேருள்ளனர் என்பதை மனதால் எண்ண முடியாமல் வாயால் பேரைச் சொல்லி விரல் விட்டு எண்ணுவது படிக்காதவன் நிலை. காலத்தில், செயலால் செய்வதைக் காலத்தைக் கடந்து செய்ய வேண்டுமானால் மனத்தால் செய்ய வேண்டும். வேகம் மனோ வேகம்.

பகவான் - மனத்தால் நினைப்பது, மனத்தால் செய்வதாகாது. செயலின் நுணுக்கத்தை மனம் அனுபவத்தால் அறிந்து, அது செயலாக மாறும் தீவிரத்துடன் மனம் செயல்பட வேண்டும்.

பக்தன் - மந்திரம் அப்படித்தான் சக்தி வாய்ந்ததாகிறதா?

பகவான் - இந்த நேரம் எந்த நாட்டிலும், எந்தக் காரியம் நடக்க வேண்டுமானாலும் அதற்குரிய கருவியைச் செய்ய முடிவதுபோல், அதற்குரிய மந்திரத்தை எழுதலாம்.

பக்தன் - மந்திரம் மனத்திற்குரியது. டெக்னாலஜி ஜடத்திற்குரியது. உலகம் அதை formula சூத்திரம் எனக் கருதுகிறது. அதன்படி, சொற்கள் பரவிவருகின்றன - Sustainable development என்ற தொடர் இப்பொழுது அப்படிப்பட்டது.

பகவான் - அந்த மந்திரம் வாய்ச் சொல்லாகவோ, மனத்தின் எழுச்சியாகவோ, ஆன்மாவின் அசரீரியாகவோ, ஆன்மா மனத்தில் வெளிப்படுவதாகவோ இருக்கமுடியும். நிலை மாறினால் வேகம் மாறும்

பக்தன் - உலகு அவற்றை அறியவில்லை.

பகவான் - உலகில் எதுவும் திடீரென உற்பத்தியாவதில்லை. 20ஆம் நூற்றாண்டில் நடந்த புரட்சிகள், போர்கள், விஞ்ஞான முன்னேற்றங்கள் அனைத்தும் எப்படிப் படிப்படியாக உருவாகின என சரித்திரம் கூறுகிறது. முன்கூட்டி அறிய சரித்திரத்தின் போக்குத் தெரிய வேண்டும். அது தெரிந்தால் வேண்டாதவற்றை விலக்கலாம். வேண்டியவற்றைத் துரிதப்படுத்தலாம்.

பக்தன் - நிகழ்ச்சி நடந்த பின் நாம் விழித்துக் கொள்கிறோம்.

பகவான் - 30,000 ஆண்டுக்குப் பின் வருவது தெரிவதால் 300 ஆண்டிற்குப் பின் வருவதைத் தெரிந்து கொள்ள முடியுமன்றோ.

பக்தன் - No. 18 சூரிய மண்டலமும் எறும்புப் புற்றும் ஒன்றே என்பதை அமெரிக்காவும், இந்தியாவும் ஒன்றே எனக் கூறலாமா?

பகவான் - அற்புதமான கேள்வி. 18இல் என்ன விசேஷம்? இரண்டும் ஒன்று என்று அறிந்தால் எறும்புப் புற்று, சூரிய மண்டலமாகலாம் என்பதே விசேஷம். அது பலிக்க நாம் அவற்றை பிரம்மத்திலிருந்து அறிய வேண்டும்.

பக்தன் - மாடு மேய்ப்பவன் மகனும், பேராசிரியர் மகனும் அறிவில் சமமானவர் என்றால், அறிவு என்றால் என்ன, கல்வியை எப்படி அறிவு வரும்படி - பட்டம் பெறும்படியன்று - போதிப்பது என்று தெரிந்தால் மாடு மேய்ப்பவன் மகன் படிப்பால் பேராசிரியர் மகனுக்குச் சமமாக வருவான் என்ற உதாரணம் சரி வருமா?

பகவான் - சரி. அதையும் கடந்த நிலையில் அவையிரண்டையும், - எறும்பு, சூரியன் - உற்பத்தி செய்யப் பயன்பட்ட சக்தி சமம் என்பது அது.

பக்தன் - நடைமுறையில் எப்படி அதை உணர்வது?

பகவான் - மேலும் ஒரு படி கடந்தால், எறும்பு, சூரியன் சிருஷ்டிக்க பிரம்மம் இரண்டிற்கும் தன்னை முழுமையாகக் கொடுத்தது என்பது தத்துவம்.

பக்தன் - அடுத்த நிலையும் உண்டா? நாம் எப்படி அறிவது?

பகவான் - எந்த நிலை விளக்கத்தை நாம் அறிய வேண்டுமோ, செயல்படுத்த வேண்டுமோ நாம் அந்த நிலையில் இருக்க வேண்டும்.

பக்தன் - இதெல்லாம் பகவானுக்கும், அன்னைக்கும் உரியதல்லவா? எங்களுக்கு எப்படிப் பொருந்தும்?

பகவான் - இந்தக் கேள்வி எந்த மனநிலையிலிருந்து எழுகிறது?

பக்தன் - சாதாரண மனித நிலை அது. அதுவே பலனை நிர்ணயிக்குமா?

பகவான் - எப்படிப்பட்ட டெக்னாலஜியை எந்த நிலை மக்கள் இன்று அனுபவிக்கிறார்கள்?

பக்தன் - எல்லோரும் எல்லாவற்றையும் அனுபவிக்கிறார்கள். விஞ்ஞானம் கண்டுபிடித்ததை வியாபாரம் தருவதால் எளியவரும் எட்டாததை அனுபவிக்கிறார்கள்.

பகவான் - USA எப்படி இந்நிலைக்கு வந்தது, இந்தியா எப்படி இங்கிருக்கிறது என்ற ஆராய்ச்சி ஆதிக்குப் போனால், முறை எளிதில் புரியும். புரிந்தால் செய்யலாம்.

பக்தன் - படிப்பு, அந்தஸ்தில் நாம் இன்று காண்பதை அப்படிப் புரிந்து கொண்டால், நாட்டு வளத்தில் காணலாம் என்றாகிறது.

பகவான் - இம்முறையறிந்து ஏழையைப் பணக்காரனாக்கினால், பயந்தவரை தைரியமாக்கினால், தாழ்ந்தவரை உயர்ந்தவராக்கினால், நாமும் அமெரிக்கா ஆகலாம்.

பக்தன் - இவையெல்லாம் இன்று நடக்கின்றன.

பகவான் - தானே நடப்பது மெதுவாக நடக்கும். முனைந்து செய்தால் முழுமையாக நடக்கும்.

பக்தன் - இது ஆபத்தான பாதை.

பகவான் - மிருகக்காட்சிசாலை அமைக்கும் பொழுது ஆபத்து அதிகம்.

பக்தன் - ஆபத்து என நாம் சொல்வது என்ன?

பகவான் - உத்தியோகம் டிரான்ஸ்பரானால் வேலை போகவில்லை. உடல் மாறினால் உயிர் போகிறது, ஆத்மா அழியவில்லை என்பதை அறியாதபொழுது இம்மாற்றத்திற்குரிய நிகழ்ச்சியை நாம் வெறுக்கிறோம். பெரியதை ஆபத்து என்கிறோம்.

பக்தன் - ஆபத்து என்பதே இல்லையா?

பகவான் - பெரிய ஆத்மா சாதிப்பதில் (adventure) வீரத்தைக் காண்பதுபோல் ஆவி அழிப்பதில் வீரத்தைக் காட்டுவதை நாம் சேதம் என்கிறோம்.

பக்தன் - இதுவரை உலகில் கேள்விப்படாதது.

பகவான் - பெருஞ்சேதங்களைக் கண்டு கலங்கக் கூடாது என உதாரணத்தின் மூலம் கூற முடியுமா?

பக்தன் - பள்ளிக்குப் போகும் குழந்தை அழுவதை நாம் பொருட்படுத்துவதில்லை.

பகவான் - 4 வயதுக் குழந்தை, 3 வயதுக் குழந்தை அதுபோல் அழுவதைக் கண்டு தானும் அது போலிருந்ததை நினைத்துச் சிரிக்கும். இங்கு மனம் ஏற்கும் அனுபவம், அறிவு இருப்பதைப்போல் வெள்ளம், புயலிலிருப்பதில்லை. விஷயம் ஒன்றே, அளவு வேறு.

பக்தன் - தத்துவம் புரிவது மனத்தைத் தேற்றும்.

பகவான் - கடவுள் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்கும்பொழுது, நம்மாலிருக்க முடியவில்லை.

பக்தன் - அவர்தானே இவற்றைச் செய்வது?

பகவான் - இவற்றைச் செய்து ஆனந்தம் அனுபவிக்கிறார்.

பக்தன் - துன்பம் துன்பமில்லை, ஆனந்தம் என்பது இதுதானா? உலக நிகழ்ச்சிகளில் பெரியது, சிறியது மூலம் இக்கருத்தை மேலும் சற்றுப் புரியுமாறு சொல்ல முடியுமா?

பகவான் - சொல்லலாம், சொல்வதற்கு அளவுண்டு. சொல்லாமல் செய்பவற்றைச் சேர்ந்தவை இவை.

பக்தன் - சொல்லாமல் செய்யும் காரியங்கட்கு எனக்கு உதாரணம் தோன்றவில்லை.

பகவான் - உதாரணம் ஓரளவுதான் தேவைப்படும், பயன்படும்.

பக்தன் - இனி உதாரணம் பயன்படாது என்ற எல்லைக் கோட்டிலுள்ளது எது?

பகவான் - - - - - - - - -

பக்தன் - மௌனமா?

பகவான் - தானே உள்ளிருந்து எழும் மௌனம் பேச்சும், பொருளும் பொருளை இழந்ததற்கு அடையாளம்.

பக்தன் - சொல்லை இழந்ததைப்போல், உணர்வை, செயலையும் இழந்து நாம் பெரிய மௌன அமைதியை அடைகிறோமன்றோ!

பகவான் - நூல் படிப்பவரை அந்த மௌனம், அமைதிக்கு அழைத்துப் போகிறது.

பக்தன் - நான் பார்த்திருக்கிறேன். Silence என்பது எல்லா நிலைகட்கும் உள்ளதா?

பகவான் - ஆம். மௌனம் மட்டுமன்று, எல்லா அம்சங்களும் எல்லா நிலைகட்கும் உள்ளன.

பக்தன் - ஏன் அப்படி?

பகவான் - அகண்டத்திலிருந்து, கண்டம்வரை எல்லாம் பிரம்மம் என்றால், பிரம்மத்துள் அனைத்தும் உள்ளன.

பக்தன் - அன்னிய பாஷையில் பேசினாலும், சில சமயம் என்ன பேசுகிறார்கள் என்று புரிவது இதுதானா?

பகவான் - சொல் வேறு, கருத்து ஒன்று என்பதால் பிறர் மனத்தின் கருத்து, நம் மனத்தை சொல்லில்லாமல் தொடுகிறது.

பக்தன் - இது அடிமனத் தொடர்பா?

பகவான் - புரியாது, வேறு பாஷையில் பேசுகிறார்கள் என்பதால் ஆழ்ந்து கவனிக்கிறோம். அடிமனம் செயல்படுகிறது.

பக்தன் - Silence behind Silence என்பது எந்த நிலை? பிரம்மத்தின் நிலையா?

பகவான் - பிரம்மத்திற்கு silence என்ற குணமும் இருப்பதாகக் கூறுவது பொருந்தாது.

பக்தன் - அன்னை வாழ்வு அளவு கடந்தது என்பதை நம் மனத்தைத் தொடும் விளக்கம், உதாரணம் மூலம் மீண்டும் ஒருமுறை கூறமுடியுமா?

பகவான் - சூட்சுமம் அதிகமானால் சுலபமாகப் புரியும். வாய் ஓயாமல் பேசுபவரின் பேச்சு அனந்தம் என்பதை ஏற்பதைப்போல் நம் கால்கள் அளவுகடந்து நடக்க வல்லவை என்பதை ஏற்க முடிவதில்லை. அது புரிய ஜடத்தை அறிய வேண்டும். ஜடப் பொருளும், சூட்சுமப் பொருளும் ஒன்றே என மனம் அறிவது ஓரளவு உதவும். ஜடம் ஏற்பட்டதை நினைவு கூறினால் இரண்டும் தத்துவப்படி ஒன்றே எனத் தெரியும். அனந்தம், அபரிமிதம், அளவுகடந்தது என்பவற்றை நாம் தொடர்ந்த செயலாகக் கற்பனை செய்கிறோம். நதி தொடர்ந்து ஓடுவதுபோல் வாய் ஓயாமல் பேசவேண்டும் என்பதில்லை. பேச முயலும் பொழுதெல்லாம் பேச்சு எழுவது வரையறையற்ற திறன் என்பது தெளிவு. திறனிருந்து செயல்படாவிட்டால், செயல்பட முடியாது எனப் பொருளன்று.

பக்தன் - ஜடம் தன் அபரிமிதத்தை வெளியிட முதலில் சூட்சுமமாக வேண்டுமா?

பகவான் - அது பொதுவானது. விலக்கானது, ஜடமே தன்னை அபிவிருத்தி செய்வது.

பக்தன் - ஓர் அச்சிலிருந்து ஆயிரக்கணக்கான பிரதிகளை அச்சிடுவதை ஜடம் அபரிமிதமாக வளர்வதற்கு உதாரணமாகக் கூற முடியாதா?

பகவான் - நல்ல உதாரணம்.

பக்தன் - வாழ்வின் ஜீவநாடி பொய். அன்னை வாழ்வு சத்தியத்திற்குரியது என்பதை எப்படி விளக்க முடியும்?

பகவான் - வாழ்வில் சத்தியம் தோற்பதற்கு உதாரணம் தேவையில்லை. பொய் ஜெயிப்பதற்கும் உதாரணம் தேவையில்லை. அன்னை வாழ்வில் சத்தியம் தோற்றதில்லை, பொய் ஜெயித்ததில்லை என்பதற்கு உதாரணம் வேண்டுமா?

பக்தன் - தேவையில்லை. கர்மத்தைப் பற்றியும் விளக்கம் வேண்டாம். 68ஆம் பக்க பட்டியலில் மேற்கண்டவை 1,2,3, அடுத்த 4, 5 இல் 4க்கு விளக்கம் தெரியும், 5உம் ஓரளவு தெரியும். இருப்பினும் மேலும் ஏதேனும் கூறலாமா?

பகவான் - நான் என்ன செய்வேன், பெண், கட்டுப்பட்டவள்; நான் சிறுவன், குடும்பம் பெரியவர்கட்கு நான் கட்டுப்படாமலிருக்க முடியுமா; ஊர் பெரிய விஷயம். அதனுடன் ஒத்துப் போவது நல்லது. எதிர்க்க முடியுமா? அழிவை நாடுபவனுக்கு அது குறுக்குவழி என்ற கருத்துகளை ஏற்கனவே பார்த்தோம். முடிவான முடிவு நம்முடையது என்றோம்.

பக்தன் - அவையெல்லாம் தெரியும். போதாது. ஊரைக் கடந்து இயற்கையின் புயலும், பூகம்பமும் நமக்குக் கட்டுப்படும் என்பது பெரிய விஷயம். பிரார்த்தனைக்குப் புயல் கட்டுப்படுவது அன்னைக்குக் கட்டுப்படுவது.

பகவான் - தத்துவம் புரிவது மனத்திற்குத் தெளிவு தரும்.

பக்தன் - ஒரு தத்துவம் ஆயிரம் கேள்விகளை விலக்கும்.

பகவான் - சிருஷ்டி பிரம்மாவின் அகம். சிருஷ்டி புறம். புறத்தின் ஆரம்பம் அகம். ஆதியும், ஆரம்பமுமான அகத்திற்குப் புறம் கட்டுப்படுவது இயற்கை.

பக்தன் - ஊரில் கலாட்டா, உலகில் போர் நடக்கிறது. நம் மனம் கடுகு.

பகவான் - DNA, gene கண்ணுக்குத் தெரியாது. நம் வாழ்வை ஆள்கின்றன. பிரதம மந்திரியின் அன்றைய ஒரு சொல் 50 ஆண்டுகளாக ஆயிரம் இடத்தில் சட்டமாக அமுலாகிறது.

பக்தன் - பிரதம் மந்திரிக்கே அவர் சொல்லுக்குரிய சக்தி ஆச்சரியம் தரும்.

பகவான் - தான் போட்ட சட்டம் உலகை ஆள்வதைக் கண்டும், சந்தேகம் எழுவது மனித இயல்பு. பக்தன் - சக்தியுள்ளவர்க்கு சந்தேகம் வருகிறது. இல்லாதவர்க்கு ஏன் வாராது. முதலில் சக்தியைப் பெற வேண்டும்.

பகவான் - சந்தேகம் போனால் சக்தி வரும். புறம் அகமானால் சந்தேகம் போகும், சக்தி எழும்.

வீட்டில் அடம் பிடிக்கும் குழந்தை, இரவு 11 மணிக்கு வீடு திரும்பும் கணவன், வாய் ஓயாமல் குறை கூறும் மனைவி, எதிர்மாறாக நடக்கும் ஊழியன் போன்றவை இருந்தால் அங்குச் சோதனை செய்ய வேண்டும்.

பக்தன் - அவன் செய்வது அத்தனையும் நம் "அகத்திற்குரியது என வைத்துக் கொள்ள வேண்டும்' என்று கூறுவீர்கள்.

பகவான் - வைத்துக் கொள்வதில்லை. அவர்கள் நடத்தை நம் மனதில் ஆரம்பித்தது. செய்வது நாம், வெளிப்படுத்துவது மற்றவர், என்று கொண்டால், அது பலிப்பதைப் பார்த்தும் நம்ப முடியாது.

பக்தன் - பார்த்தபின் ஏற்பது இயல்பன்று. கொஞ்சம் கொஞ்சமாக அதிகப் படுத்தினால், முடிவான பெரிய காரியங்கள் முடிவதைக் காணலாம் என்று நான் கண்டிருக்கிறேன்.

பகவான் - தான் கண்டதை, அறிந்ததை, அனுபவித்ததை, பாராட்டி அடுத்த அடுத்த நிலைகளில் பலன் பெறும் நோக்கம் நமக்கிருப்பதில்லை.

பக்தன் - விஷயம் வரும் பொழுதெல்லாம் ஒருவர் இதை எடுத்துக் கூற வேண்டியிருக்கிறது.

பகவான் - நாம் படித்தவர்களானாலும், physical being உடலால் செயல்படுவதால் மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது. மனம் அறிந்தாலும், செயலை நடத்துவது மூளை.

பக்தன் - 7ஆம் கருத்து வாழ்வு கருணைமயமானது, அருளன்றி வேறெதுவும் அங்கில்லை என்பது வெகு நாளாய்க் கேள்விப் படுவது.book | by Dr. Radut