Skip to Content

பகுதி 1

பகவானும் பக்தனும்

The Life Divine

The Life Divine நூலைப் பல ஆண்டுகளாகப் படித்தவர், பல முறை படித்தவர், பெரும்பாலும் புரிந்து கொண்டவர், பகவானை மானஸீகமாகச் சந்தித்துத் தமக்குப் புரிந்தவற்றையும், புரியாதவற்றையும் கூறினால், பகவான் என்ன பதில் கூறியிருப்பார் என்பதைக் கற்பனையாக எழுதுவது கீழ்க்கண்ட கேள்வி - பதில். பகவானை சூட்சும லோகத்தில் தரிசித்தால் அவர் மனம் நமக்குப் புரியும் என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டு இதை எழுதுகிறேன்.

பக்தன் - நூலில் நீங்கள் முக்கியமாகக் கூறுவது பிரம்மத்தின் முழுமை என நான் புரிந்து கொண்டேன்.

காலம்

பகவான் - அது அறிவுக்குப் புரியாது, தெரியாது என்பது முக்கியம்

பக்தன் - காலத்துள் காலத்தைக் கடந்த நிலைக்குப் புரியும், தெரியும் என நான் புரிந்து கொண்டது சரியா, தவறா?

பகவான் - அதுவே ரூபம், மௌனம், சலனம், சிருஷ்டியிலும் உள்ளது. பக்தன் - நூல் முழுவதும் இந்த நிலையை - காலத்தின் மூன்றாம் நிலையை - ஒவ்வோர் அத்தியாயத்திலும் அதற்கேற்றப கூறுகிறீர்கள் என நினைக்கிறேன்.

பகவான் - அது ஒரு வகையில் சரி. நான் அதை நேரடியாக, வெளிப்படையாக அங்கெல்லாம் எழுதவில்லை. அப்படி புரிவதால் உள்ளே ஏதாவது மாற்றம் தெரிகிறதா?

பக்தன் - அமைதி, ஜோதி தவிர வேறெதுவும் தெரியவில்லை.

பகவான் - அது என்ன அமைதி, என்ன ஜோதி எனப் புரிகிறதா?

பக்தன் - புரியவில்லை.

பகவான் - அவை இந்த மூன்றாம் நிலைக்குரிய அமைதி, ஜோதியாகும்.

பக்தன் - இதுவரை அப்படிப் புரியவில்லை. பிரார்த்தனை பலிக்கும் பொழுது பலன் பெறுவதன் பின் process, essence முறையும், மூலமும் உண்டு என்று நினைத்தேன். பலனே மூன்றாம் நிலைக்குரியது எனத் தோன்றவில்லை.

பகவான் - முறையும், மூலமும் எந்நிலைக்குரியதோ, அதே நிலைக்கே பலனும் உரியது என்று மனம் அறியாது. மனம் அவற்றைப் பிரித்துவிடும்.

பக்தன் - சர்வம் பிரம்மம், ஏகம் ஏகதுவித்தியம் என்று ரிஷிகள் அவற்றைக் கண்டபின், ஜீவாத்மா அழியக் கூடியது என்றது மனம் செய்ததா?

பகவான் - பலன் வரும் பொழுது சத்தியஜீவியமும் வருகிறது. மனம் பலனை அதனின்று பிரித்துத் தனியே பெற முயல்கிறது.

பக்தன் - மனம் குறுக்கே நிற்கிறது என்பதே உண்மையானால் மனத்தை விலக்கிப் படித்தால், The Life Divine தெளிவாகப் புரியும் என்பது உண்மையா?

பகவான் - உண்மை.

பக்தன் - ஆங்கிலம் சரிவரப் படிக்க முடியாத பெண் சாவித்திரியைப் படித்த பொழுது பல பக்கங்கள் தொடர்ந்து புரிந்ததாக எழுதியது உண்மை என்று கொள்ளலாமா?

பகவான் - அது மொழியறிவில்லாமல் நேரடியாகப் புரிந்து கொண்டது.

பக்தன் - இரண்டாம் புத்தகத்தின் முதல் அத்தியாயம் “பிரபஞ்ச சிருஷ்டி, பிரம்ம சிருஷ்டி” சத்திய ஜீவியம் சிருஷ்டிப்பதாகக் கூறுகிறது. அது புரியும். அந்த அத்தியாயம் அங்கு வரும் முக்கியத்துவம் என்ன?

பகவான் - 56ஆம் அத்தியாயத்தில் மனிதன் என்பவன் மனமில்லை, சத்திய ஜீவியம் என்று ஆரம்பித்து இனிப் பரிணாமம் ஞானத்திற்குடையது என்று முடிகிறது. உலகம் மனத்தை மனிதனுக்கெனக் கருதுவதால் நமக்கு எதிரியுண்டு. கடவுள் இல்லை, மோட்சம் வேண்டும், கர்மம் உண்டு, எதற்கும் எந்த நேரமும் பஞ்சம் வரும், துன்பமும், மரணமும் தவிர்க்க முடியாதவை எனப் பல கருத்துகள் உலகில் நிலவுகின்றன. அவற்றுள் ஒன்று உலகம் மனத்தால் சிருஷ்டிக்கப்பட்டது. அடுத்தது அகந்தையால் சிருஷ்டிக்கப்பட்டது. இக்கருத்துகள் மனதில் உள்ளவரை, கடைசி அத்தியாயம் - முக்கியமானது - புரியாது. அதை மாற்ற எழுதப்பட்டது முதல் அத்தியாயம்.

பக்தன் - கடைசி அத்தியாயத்தின் கடைசிப் பகுதியில் ஆன்மீக வாழ்வு எளிமையாக இருக்க வேண்டும் என்பதில்லை, எளிமையாகவோ, வளம் நிறைந்ததாகவோ இருக்கலாம் என்ற கருத்து மனம் நம்பும் மூடநம்பிக்கையை மாற்றக் கூறியதன்றோ!

பகவான் - அதற்குமுன் திருவுருமாற்றம் தவிர்க்க முடியாதது என்பதும் அப்படிப்பட்ட கருத்தாகும்.

பக்தன் - எப்படி?

பகவான் - செல்வமானாலும், சந்தோஷமானாலும், ராஜ்யமானாலும் நம் கருத்து என்ன? நம் கருத்து மனத்தின் கருத்து. மனம் செல்வம் அதிகப்படப் பிரியப்படும். எதுவும் வளர வேண்டும் என்பது மனம். திருவுருமாற்றம் என்பதே மனம் அறியாதது. அதனால் இந்த யோகம் பூர்த்தியாகத் திருவுருமாற்றம் அவசியம், வளர்ச்சி போதாது என்பது வலியுறுத்தப்படுகிறது.

பக்தன் - அதற்குமுன் சரணாகதியைப் பற்றிக் கூறுகிறீர்கள்.

பகவான் - திருவுருமாற்றத்தை சரணாகதியின்றி அடைய முடியாது.

பக்தன் - சரணாகதியைப் புரிந்துகொள்ள முடிவேயில்லை. சரணாகதியே யோகம் எனத் தோன்றுகிறது. புத்தகக் கருத்துகளை முடித்த பிறகு அதை விவரமாகப் பேச வேண்டும். இந்தக் கடைசி அத்தியாயத்தில் சரணாகதிக்கு முன் கூறும் எல்லாக் கருத்துகளும் இதுபோலவே நூலுக்கு முக்கியமா?

பகவான் - அதற்குமுன் கூறும் கருத்து யோகம் அகத்திற்குரியது.

பக்தன் - அது முன் அத்தியாயத்திலும் முக்கியமாக வருகிறது.

பகவான் - எந்தக் கருத்திற்கும் பல அம்சங்களுண்டு. நூலில் இதர சம்பந்தப்பட்ட அம்சங்கள் எழும்பொழுது அவை சுட்டிக் காட்டப்படும். முடிவாக வலியுறுத்துவது வழக்கம்.

பக்தன் - யோகம் அகத்திற்குரியது என்பதின் சிறப்பென்ன?

பகவான் - இரண்டாம் புத்தகம் 3ஆம் அத்தியாயத்தில் ஜீவாத்மாவே பரமாத்மா எனக் கூறும்பொழுது, பரமாத்மா பிரபஞ்சத்தின் மையமாக அகத்துள் தோன்றுகிறான் என்று கூறப்பட்டபொழுது இக்கருத்தை முதலில் காண்கிறோம்.

பக்தன் - இது இறைவனின் யோகம், மனிதனுக்குரியதன்று என்பது வெளிவருகிறது.

பகவான் - ஆம்.

பக்தன் - முன் அத்தியாயத்தில் - 26. சத்தியஜீவன் - புறம் அகமானால் யுகம் க்ஷணமாகும் என்று வருகிறது.

பகவான் - இந்த யோகத்தைப் புறத்தால் செய்ய முடியாது, மெதுவாகச் செய்ய முடியாது, முக்கால்வாசி செய்ய இயலாது. அதனால் அகம் முக்கியம் என உபநிஷதம் கூறுவதைச் சொல்லி முடிக்கிறோம்.

பக்தன் - அதற்குமுன் conscious, universal, full, powerful முழுமை, பிரபஞ்சம், சக்தி, விழிப்பு என்று வருகிறது.

பகவான் - புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் முரண்பாட்டைப் பற்றிப் படிக்கிறோம். மனம் சத்திய ஜீவியமாக வேண்டும் என்று முடிவான அத்தியாயத்தில் கூறுவதை மனத்தின் முரண்பாடு, சத்திய ஜீவியத்தின் உடன்பாடாக வேண்டும் என்று முதல் அத்தியாயம் சொல்கிறது. பக்தன் - காலத்திற்கு 3 நிலைகள் உள்ளதுபோல் அனைத்திற்கும் உள்ள 3 நிலைகளை எல்லா அத்தியாயங்களிலும் புரிந்து கொள்வது நூலைப் புரிந்துகொள்ள உதவும் என்பதே என் மனத்தில் ஆழமாக உள்ளது.

பகவான் - ஒருவகையில் அது சரி. அதுவே நூலைப் புரியப் போதும்.

பக்தன் - அதுபோன்று முக்கியமானது வேறு ஏதாவது உண்டா?

பகவான் - உண்டு. அவையும் இதனுள் வரும். அகம், புறம் என்பது புறம் வாழ்வு, அகம் தவம் என்பதுடன் எல்லா யோகங்களும் முடிந்து விடுகின்றன. மூன்றாம் நிலை புறத்தைத் தன்னுட் கொண்ட அகம். அது நமக்குரியது. பெரியது, கட்டுக்கடங்காதது. கடைசி அத்தியாயத்தில் அகம் வருவதைப் பார்த்தோம். அது தவசிகட்குரிய அகமன்று. பிரம்ம ஜனனத்திற்குரிய அகம். இதுவரை அறிந்த அகம் பிரம்மத்திற்குரியது, இது ஆன்மீகப்புரட்சி.

பக்தன் - உதாரணம்.

பகவான் - கார் கிராக்கியாக இருந்தபொழுது முன்பணம் கட்டிக் காத்திருந்தோம். சுலபமாகக் கிடைக்கும்பொழுது கார் வியாபாரி லோன் ஏற்பாட்டுடன் வீட்டிற்கு வருகிறார். இவையிரண்டும் நாம் அறிந்தது. கார் கிராக்கியாக இருக்கும்பொழுது மலிவாகக் கிடைக்கும் நேரம்போல் கார் கம்பனி நடந்தால், அந்தக் கம்பனி மிக மிகப் பெரிய கம்பனியாகும். இன்று அது உலகில் இல்லை. இதை அம்மூன்றாம் நிலையாகக் கொள்ளலாம்.

பக்தன் - மருமகளிடம் மாமியார் அன்பால் தானே மருமகளாக நடப்பது.

பகவான் - நாம் குழந்தைகளிடம் அதுபோல் நடப்பதுண்டு.

பக்தன் - மூன்று திருவுருமாற்றம் என்ற அத்தியாயத்திற்குப்பின் தெய்வீக வாழ்வு வரும் என நினைத்தேன். இடையில் இரண்டு வேறு அத்தியாயங்கள் உள. ஏன்?

பகவான் - கடைசி அத்தியாயத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள இந்த இரண்டு அத்தியாயங்களும் அவசியம்.

  1. அகத்தில் யோகம் க்ஷணத்தில் முடியும்,
  2. பாதாளம் பரமாத்மாவால் திருவுரு மாறும்,

- என்ற இரண்டும் பெரிய கருத்துகள். அவை 56 அத்தியாயத்தில் வருவதால் முன்கூட்டி இவை விளக்கப்படுகின்றன. 

பக்தன் - அகம் அவ்வளவு பெரியதா?

பகவான் - பிரபஞ்சத்தை உட்கொள்ளும் அகம் பெரியதன்றோ?

பக்தன் - இந்த யோகத்தில் புறத்தில் செய்வது ஒன்றுமில்லையா?

பகவான் - உலகத்தையும், பிரபஞ்சத்தையும் அகத்துள் கொண்டுபோனால், ஜடத்தை ஆன்மா ஆளும். யோகம் க்ஷணத்தில் முடியும். அசையாது உள்ளேயுள்ள பிரம்மம் அசைந்து வெளியில் உலகமாக ஜனிக்கும். எல்லாம் உள்ளேயிருக்கும்பொழுது வெளியில் என்ன இருக்கிறது? புறம் என்பதே அகமாயிற்றே.

பக்தன் - பிரம்மத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.

பகவான் - எல்லாம் ஒரே மாதிரியான அணுவால் செய்யப்பட்டவை என விஞ்ஞானம் கூறுகிறது. எல்லாம் சக்திமயமானவை எனவும் கூறுகிறது. எல்லாம் பிரம்மம் என்பது ஒருபடி தாண்டியது தானே.

பக்தன் - அதற்கும் அடுத்த கட்டம் பிரம்ம ஜனனமாயிற்றே.

பகவான் - பிரம்மத்தை மேலேயும், உள்ளேயும் அசைவற்ற அனந்தமாகக் காண்பது முடிவான சித்தி. அதற்கடுத்த இரண்டு கட்டங்கள்,

  1. அப்பிரம்மத்தை முழுமையான பிரம்மமாகவும்,
  2. அது சிருஷ்டியாக ஜனிப்பதுவும் அவை. 

பக்தன் - எதைத் தெரிந்தால் எல்லாம் தெரியும் என்பது பிரம்மத்தை உள்ளே அசைவற்றுக் காண்பது என்று கூறலாமா?

பகவான் - அது சரி. அசைவற்ற பிரம்மத்திற்கு அதைக் கடந்த சில நிலைகள் உள்ளன. இது அக்ஷரப்பிரம்மம்.

பக்தன் - அக்ஷரப்பிரம்மம், புருஷோத்தமன், ஈஸ்வரன், supreme கடந்த நிலை என்பனவெல்லாம் தெரிகின்றன. மேலும் விளக்கம் தேவை.

பகவான் - விளக்கம் மட்டும் புரியாது. அனுபவம் வருமுன் பெறும் விளக்கம் தெளிவு தாராது. இதுவரை ரிஷிகள் பரப்பிரம்மம், பராபுருஷா, பராத்பரா என்று கூறியவை முடிவான கட்டங்கள். முடிவானவை என்றாலும் அவை மனத்தின் சித்திக்கு முடிவானவை.

(MLA, மந்திரி பதவி, முதல்வர் என்பவை அரசியல் பதவிகளில் முடிவானவை என்றாலும், மாநிலத்தைப் பொருத்தவரை முடிவானவை. மாநிலம் பகுதி. அகில இந்தியாவில் அதே போன்ற பகுதிகள் முழுமையானவை. அச்சொற்களைப் பயன்படுத்தினால் பழைய பொருளை நினைப்பார்கள் என்பதால் பகவான் Supreme, Supracosmic, Transcendent என்ற ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துகிறார்.)

பக்தன் - இதுவரை கேட்டவை முடிவானவை, மனத்திற்கு முடிவானவை. பகவான் கூறுவது முழுமைக்கு முடிவானவை. அகந்தை காலத்தைக் கடந்தது என்றால் அகந்தையை ஜீவாத்மாவாகப் புரிந்து கொண்டது தவறு என்று எப்படிக் கூற முடியும்? வேத ரிஷிகள் சரணாகதியால் அகந்தையை அழித்து மோட்சம் பெற்றனர் என்றால் அவர்கள் சரணாகதியையும், அகந்தையையும் அறிந்தவர்கள்.

பகவான் - அது பெரிய விஷயம். அன்றைக்குப் பெரிய விஷயம். அதில் சந்தேகமில்லை.

பக்தன் - அந்தச் சரணாகதியும் திருவுருமாற்றத்திற்கு இல்லையே. இப்படிச் சொல்லலாமா? இளம் வயதில் எளிதில் தியாகம் செய்யலாம். வயது வந்த பிறகு கடினம். சிறிய சொத்தைத் தானம் தரலாம். பெரிய சொத்தைத் தானம் தருவது சிரமம். நம்மைச் சரணடையலாம், நம்மைச் சார்ந்தவர்கள் சார்பாகச் சரண் அடைவது கடினம் என்று சொல்லலாமா?

பகவான் - சரணாகதியும், அகந்தை அழிவதும் பெரியவை. நீ சொல்வதும் உண்மை. MLA பதவியை தம்பிக்கு விட்டுக்கொடுப்பதும், முதல்வர் பதவியை விட்டுக் கொடுப்பதும் ஒன்றாகாது.

பக்தன் - திருவுரு மாற்றம் என்றால் கெட்டது நல்லதாக மாறுவது எனக் கொள்கிறோம்.

பகவான் - கெட்டதோ, நல்லதோ self - existent good அந்த மூன்றாம் நிலையின் முழுமையை அடைவது திருவுருமாற்றம்.

பக்தன் - திருடுபவன், திருட்டை நிறுத்துவது திருவுருமாற்றம் என நினைக்கிறோம். அது மாற்றம். திருடுபவன், திருட்டை நிறுத்தியபின் திருட முடியாத மனநிலை பெற்று, அவன் வீட்டில் வரும் திருடனை ஆண்டவன் அருள் என அறியும் மனநிலை திருவுருமாற்றம் என்கிறீர்கள்.

பகவான் - ஆம். நாம் உள்ள எந்த நிலையும் பகுதி. அவை நல்ல பகுதியாகவோ, கெட்ட பகுதியாகவோ இருக்கும். மூன்றாம் நிலை முழுமை. பகுதி பிரம்மத்தில் முழுமை பெறுவது திருவுருமாற்றம்.

பக்தன் - அதைச் சாதிப்பதால் சரணாகதி பெரியதாகிறது. இலட்சியம் உயர்ந்தால் சரணாகதியின் தரம் உயருமா?

பகவான் - ஆம், வேதகால மோட்சம் ஆத்மா பெற்றது.

பக்தன் - அதையே உடல் பெறுவது திருவுருமாற்றம். அதுவும் நாம் பெறுவதுபோல் நம்முடன் உள்ளவர் அனைவரும், நம் உலகம் முழுவதும் பெற வேண்டும் என்பதா?

பகவான் - ஆம்.

பக்தன் - அமெரிக்காவுக்கு visa வாங்கிப் போவது, green card பெறுவது, citizenship பெறுவதுபோல் பல நிலைகள் உள்ளன. மோட்சம் என்றால் அமெரிக்காவுக்குப் போய் அங்கேயே தங்குவதுபோல. நாம் திரும்பி வந்து நம் வீட்டில் உள்ளவர், நம் ஊர், உலகம் அமெரிக்க செல்வத்தை இங்கு இப்பொழுது பெறுவது திருவுருமாற்றம்போல எனக் கூறலாம் போலிருக்கிறது.

பகவான் - பொருத்தமானது.

பக்தன் - பள்ளிக்கூடம், கல்லூரிகள் பலதரத்தவை. உயர்ந்தவை என்றால் உயர்ந்த பட்டம் தரும். நாம் கூறும் புதிய கல்வி பட்டத்தைக் கடந்தது, அறிவைக் கடந்தது, ஞானத்தையும் கடந்தது. அப்படி ஒரு பள்ளியை மனிதன் கற்பனை செய்ய முடியுமா?

பகவான் - நாம் புதியதைப் பழையதன் மூலம் புரிந்து கொள்கிறோம்.

பக்தன் - அது ஒன்றுதான் நாங்கள் அறிந்தது. பணிவு, அடக்கம் புரியும். சுதந்திரத்தில் அடக்கம் என்றால் அன்பால் ஆள்வது என்பது நம் வாழ்விலோ, இலக்கியத்திலோ, தவத்திலோ கேள்விப்படாதது. புதியதையும் தாண்டிய புதுமையுடையது. இந்த நோக்கம் The Life Divine புரிய உதவும்.

பகவான் - முரண்பாடு, உடன்பாடு இரண்டையும் அறிவோம். முதல் அத்தியாயம் கூறுகிறது. முதல் அத்தியாயக் கருத்துகளை - உடன்பாடு, ஆர்வம், சுமுகம், பரிணாமம், பகுத்தறிவு - கடைசி அத்தியாய முடிவுகளைக் கொண்டு ஆராய்ச்சி செய்யலாம்.

பக்தன் - அப்படி என்றால் ஆர்வம் பக்தியாகாது. மனம் சத்திய ஜீவியமாகும் ஆர்வம், பகுதி முழுமை பெறும் ஆர்வம், நம் நிலை திருவுருமாறும் ஆர்வம் என்றாகும்.

பகவான் - இது மனம் பரந்து விரிவதாகாது. இது மனம் உயர்ந்து, உயர்வதால் பரந்து விரிந்து, பரந்து விரிவதால் உயர்ந்து, மாறி, திருவுரு மாறி சத்தியஜீவிய நிறைவு பெற்று மனிதன் பிரம்மமாகி, பிரம்மம் பிரகிருதியில் ஜனிப்பதாகும்.

பக்தன் - இந்த விளக்கம் யோகச் சுருக்கம், The Life Divine முழுவதையும் கூறுகிறது. கேட்க நன்றாக இருக்கிறது. மனம் நிறைகிறது. இப்படி ஓர் இடம் இருப்பதாக நாங்கள் அறிய முடியாது. சரணாகதி இதைச் சாதிப்பதால் பிரம்ம முத்திரை பெறுகிறது.

பகவான் - இவ்வளவும் முடிந்த பிறகு மனம் இந்த சித்தி எளிமையாக இருக்க வேண்டும் என விழையும். எளிமை உயர்ந்தது என்பது மனம் ஏற்றது.

பக்தன் - அரச பதவி வந்த பிறகு மரத்தடியில் மர உரியுடனிருப்பது அவசியம் என மனம் வலியுறுத்தும். அமெரிக்கச் செல்வம் பெற்ற பின் நகரமெல்லாம் கிராமப்புறமாக இருந்தால் இலட்சியமாக இருக்கும் என ஏங்கும். ஆன்மீகம் ஆடம்பரமாகவும், வளமாகவுமிருக்கும் என மனம் ஏற்காது.

பகவான் - எளிமை, விஸ்வாசம், கற்பு, நாணயம், தர்மம் ஆகியவற்றை விட்டு வெளிவருவது மனத்திற்கு முடியாதது. தர்ம புத்திரர் சூதாடுகிறார். அதுவே நாம் ஏற்க முடியாதது. சொத்தை இழக்கிறார். தம்பிகளை இழக்கிறார். திரௌபதியை இழக்கிறார். அவளை மானபங்கப்படுத்துவதையும் ஏற்கிறார்.

பக்தன் - இதெல்லாம் வாழ்வில் இருக்கின்றன என்பதை பாரதம் படித்தாலும் நாம் ஏற்பதில்லை.

பகவான் - ஏற்று மகிழ்ந்து திருவுரு மாற்றுவது யோகம்.

பக்தன் - பகவான் குரலானாலும், மனம் கேட்கக் கூசுகிறது.

பகவான் - மனிதனுக்கு பகவான் வேண்டாம், அவனே வேண்டும்.

பக்தன் - அந்த நிலையை மனிதன் கடக்க முடியுமா?

பகவான் - தானே முடியாது.

பக்தன் - சரணாகதி செய்யுமா?

பகவான் - ஊம்.

பக்தன் - அது வேண்டாம்.

பகவான் - சரி, எழுந்து போகலாம்.

பக்தன் - ஏன், அதற்குள் போகின்றீர்கள்?

பகவான் - அந்தச் சரணாகதி வேண்டும் என்று சொன்னால், செய்ய முடியாது, வேண்டாம் என்றால் நூல் புரியாது. பேசுவது பலன் தாராது.

****

பல ஆண்டுகள் கழித்து பக்தன் பகவானைத் தேடி வருகிறான்.

பக்தன் - அன்று வேண்டாம் என்றதை இன்று வேண்டும் என்று வந்திருக்கிறேன்.

பகவான் - ஆயிரம் முறை ஒரு விஷயத்தை நாடினாலும் அது கிடைப்பதில்லை. அது தானே வருவது அருள். ஒரு முறை வாயால் வேண்டாம் என்றாலும் உடனே போய்விடும். இந்த ஜென்மத்தில் திரும்பி வாராது.

பக்தன் - ஏன் அப்படி?

பகவான் - அது புரிய அந்தச் சரணாகதியை மனம் ஏற்க வேண்டும்.

பக்தன் - அன்னையிடம் போனது, பலமுறை திரும்ப வருவதைக் கண்டிருக்கிறேன்.

பகவான் - முதலில் சொல்லியது அதிர்ஷ்டம். அடுத்த கட்டம் அருள். நீ பார்த்தது அன்னை அருள்.

பக்தன் - உதாரணம் மூலம் சொன்னால் தேவலை.

பகவான் - எவரும் தானே சம்பாதிப்பார்கள், பெற்றோர் சொத்தைப் பெறுவார்கள். அடுத்தவர் அவர் சம்பாதித்ததை மற்றவர்க்குத் தருவது வழக்கமில்லை.

பக்தன் - அது சுவீகாரம்.

பகவான் - சுவீகாரம் பிள்ளையில்லாத சொத்து. சிலர் அதையும் பெறப் பிரியப்பட மாட்டார்கள்.

பக்தன் - பிள்ளையிருக்கும்பொழுது ஏன் மற்றவர்க்குத் தருவான்?

பகவான் - அது உலக வழக்கன்று. அப்படி வந்தால் "வேண்டாம்" என்றால்,

பக்தன் - அது திரும்ப வாராது.

பகவான் - அதைத்தான் அதிர்ஷ்டம் மறுமுறை வாராது என்றேன்.

பக்தன் - பெறத் தகுதியில்லை என்று பொருளா?

பகவான் - ஊரில் ஒரு கம்பனி ஆரம்பித்து நாணயமானவரைத் தலைவராக்கினால் அது அருள் போன்றது.

பக்தன் - அவை 100 ஆண்டுகட்கு முன் இல்லாதவை.

பகவான் - அன்னை தருவது 1000 ஆண்டில் நடக்காதது.

பக்தன் - அதற்கு நம்மைப் பாத்திரமாக்கினால் "வேண்டாம்" என்றால் விலகுவது நியாயம். அப்படி விலகாமல் மீண்டும் மீண்டும் வருகிறதே.

பகவான் - அது பேரருள். அது வேண்டாம் என்றாலும் வரும். வருவதை நிறுத்தினால், மனிதன் அதன் பின்னே போய் அதைப் பெற 1000 ஆண்டாகும்.

பக்தன் - கவர்னர் நம் கிராமத்திற்கு வந்தபொழுது தருவதைப் பெற மறுத்தால், மீண்டும் நம்மால் கவர்னரை வரச் சொல்ல முடியுமா?

பகவான் - இனிமையைக் கசப்பாக வழங்குவது வாழ்வு.

பக்தன் - கசப்பை இனிமையாக நாட வேண்டுமா?

பகவான் - கசப்பை இனிமையாக நாடினால் அன்னை கசப்பை இனிமையாக்குவார்.

பக்தன் - மகன் தகப்பனாரை அன்னையைத் தரிசிக்கச் சொன்னால், தகப்பனாருக்கு மகன் தன் வழிக்குத் தம்மை இழுப்பதாகக் கசப்படைகிறார். ஏற்றால் தரிசனம் ஆனந்தப் பெரு வெள்ளமாகிறது.

பகவான் - நீ வேண்டாம் என்றது அப்படித்தான்.

பக்தன் - இப்பொழுது வேண்டும் என்றாலும் மனம் கசங்குகிறது.

பகவான் - கசப்பு அறியாமை என அறிவது அறிவு.

பக்தன் - கசப்பை இனிமையாக அறிவது பிரம்ம ஞானமா?

பகவான் - அப்படி அறிவது கசப்பை இனிமையாக மாற்றும்.

பக்தன் - அந்த ஞானம் முரண்பாட்டை உடன்பாடாக்குமா?

பகவான் - நாம் உடன்பாடு என்பது முரண்பாடு நீங்குவதாகும். Contradiction, conflict, compromise, reconciliation, harmony, union, unity முரண்பாடு, பிணக்கு, ஒத்துப் போவது, உடன்பாடு, சுமுகம், ஒருமை, ஒற்றுமை என ஜடத்திலிருந்து சத்வரை நிலைமை மாறும்பொழுது, முரண்பாடு மூன்றாம் நிலை உடன்பாடாகிறது. மூன்றாம் நிலை உடன்பாடு ஐக்கியமாகும். உதாரணம் தேவையில்லை.

பக்தன் - தினசரி வீட்டில், ஊரில், அரசியலில் நடப்பதுதானே. தத்துவம் நன்றாக இருக்கிறது. மனம் அமிர்தமாக வேண்டும். ஜடமும், ஆன்மாவும் இரு நிலைகளை உயர்ந்து அடைந்து ஒன்றாவதை இப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்.

பகவான் - தத்துவமாகச் சுலபமாகச் சொல்லலாம். மனத்தில் உணர்ச்சியாக எழுவது அனுபவம். எந்த மாமியாரைக் கட்டையால் அடிக்க அடிக்கடித் தோன்றுமோ, மனம் இருவருக்கும் மாறிய நிலையில் அவர்களைக் கட்டிப் பிடித்துக் கொள்ள ஆசையாக இருக்கும். அரசியலில் கட்சி மாறுபவர்களைக் காணலாம். மேடையில் ஏறி எதிர்க்கட்சித் தலைவரைத் திட்டும்பொழுது உணர்ச்சி வசப்பட்டு பேச்சு காவியமாகும். அவனே கட்சி மாறிய பிறகு தலைவர் துதிபாட துடிப்பதைக் காணலாம். அந்தக் கட்சியில் இதுவரை எவரும் அவரைப் பாராட்டாதவாறு ஆர்வமாகப் பேசுவான். திட்டியபொழுது காவியம் எழுந்தது. பாராட்டும் பொழுது இலக்கிய நயம் இசையாக எழும். அன்று வசைமாரி பொழியத் துடித்த மனம், இன்று சொல்லை மாலையாக்கிச் சூட விரும்பும். இது மாறிய உள்ளத்தின் மகிமை. அன்றும் பொய்யில்லை, இன்றும் உணர்ச்சி உண்மையானது. மனிதன் எதிரியாக இருந்து நண்பனாக மாறும் நிலை இது. மனிதச் சுபாவம் தெய்வக் கருணையாக மாறுவது முரண்பாடு உடன்பாடாவது. ஜடம், ஜடமாகத் தெரிகிறது. ஆன்மா தியானத்தில் ஜோதியாகத் தெரிகிறது. ஜீவன் அறிவு மையத்தை விட்டு ஜீவியத்திற்குப் போனால் ஜடமான ஜடம் சக்திமயமான அலைகளாகவும், ஜோதியான ஆன்மா அதே போன்ற சக்தி அலைகளாகவும் தோன்றி இரண்டும் ஒன்றே என அறிவுக்கு உணர்த்தும்.

பக்தன் - இந்த அனுபவம் ரிஷிகள் பெற்றதா? பெறாததா?

பகவான் - அவர்கள் பெற்றார்களா, பெறவில்லையா என்பது தெரியாது. பெற்றதாக எங்கும் சொல்லவில்லை. இது Cosmic Consciousness பிரபஞ்ச ஜீவியம்.

பக்தன் - ரிஷிகள் பெறாததை அன்னை நமக்குத் தருவார் என்பது இதுதானா?

பகவான் - தியானத்தில் பலருக்கு இந்த அனுபவம் ஏற்படும். தியானம் Unconsciousness ஆக இருப்பதால் அவர்கள் இதை அறிவதில்லை. நாம் உலகைக் கடந்து பிரபஞ்சத்தைப் பார்க்கும் நேரம் பலமுறை வந்தாலும், நாம் அதை அறிவதில்லை. அது பிரார்த்தனையின் பலனாக வருவதை நாம் பலன் என நினைக்கிறோம்.

பக்தன் - ஒருவர் காலின் மீது குழந்தை ஏறிக் குதித்தபொழுது கால் வலித்து டாக்டரிடம் காண்பித்தார். தசை (ligament) அறுந்து விட்டது, அது ஒன்றும் செய்யாது. அதிகமாக நடந்தால் வலிக்கும். வலிக்கு மாத்திரை தரலாம். அறுந்த தசை கூட வைத்தியமில்லை என்றார். அவர் அன்னையை நினைத்து வலிக்கும் இடத்தை வருடிக்கொடுக்க ஆரம்பித்தார். நாளடைவில் வலி நின்றுவிட்டது.

பகவான் - உலகில் இன்றில்லாத பலனை அன்பர்கள் இதுபோல் பெறும் நேரம் அவர்கள் ஆத்மா பிரபஞ்ச ஜீவியத்தைத் தொடுகிறது. அது தெரிவதில்லை. அதன் பலன் தெரிகிறது.

பக்தன் - அடுத்த கட்டத்தில் Transcendent Consciousness ஜடமும், ஆன்மாவும் இணைவதும் இதுபோல் என்றால், சைனாகாரனை கல்கத்தாவில் சூட்சுமத்தில் கண்ட அன்னை திரும்ப அனுப்பியது அதுபோல் எனக் கூறலாமா?

பகவான் - Transcendent என்றால் கடந்தது, கடந்து உயர்ந்தது எனப் பொருள். காலத்தைக் கடந்தது, அகம் - புறம் என்ற நிலைகளைக் கடந்தது, பிரபஞ்சத்தைக் கடந்தது, சச்சிதானந்தத்தைக் கடந்தது எனப் பொருள்.

பக்தன் - சிருஷ்டியில் சத்புருஷன் வெளிப்பட்டபின், வேறெதுவும் எழாத நிலையா?

பகவான் - நமக்குக் காலத்தில் இல்லாதது, பிரபஞ்சத்திலில்லாதது, அகத்திலில்லாதது, சச்சிதானந்தத்திலுமில்லாததது நடந்தால் அது கடந்தது எனப் பொருள். எதிரி படையெடுத்து வந்தவன் தானே திரும்பப் போனான் என்பது அது போன்றது. USSR தலைவர் தன் ராஜ்யத்தையும், தன் கட்சியையும் தானே கலைத்தார் என்பது இக்கடந்த நிலைக்குரியது. இந்நிலையில் சத்தும், அசத்தும் பிரம்மமாகத் தெரியும். அது தெரிவதில்லை. பலன் வரும்.

பக்தன் - 3½ லட்சம் முதல் போட்ட கம்பனியின் இரு பங்குதாரர்கள் கம்பனியின் மார்க்கட் விலை 20 லட்சம் உயர்ந்தபொழுது பணம் போட்டவர் அடுத்தவர் கூட்டாளியில்லை, வேலைக்கு வந்தவர், விலக வேண்டும் எனக் கேஸ் போட்டார். மார்க்கட் விலை 20 லட்சம் பெறும் என்றாலும் சிக்கலிருப்பதால் எவரும் 10 லட்சத்திற்கு மேல் தரமாட்டார்கள். பணம் போட்டவர் 5 லட்சத்திற்கு விலை கூறினார். விலை போகவில்லை. கேஸ் போட்டார். பிராதில் வக்கீல், என் கட்சிக்காரர் போட்ட பணத்தைத் திருப்பித் தருவேன் என்ற பங்குதாரர் தரவில்லை எனக் குற்றம் சாட்டினார். பங்குதாரர் 10 லட்சம் கொடுத்து விடுதலை பெறத் தயாராக இருக்கும்பொழுது எதிரி வக்கீல் 3½ லட்சம் கேட்பது வழக்கு அறியாதது. பக்தர் மனம் கடந்த நிலையை எட்டியதை பிராது கூறுகிறது என்று அறிய வேண்டுமா? நம் அன்றாட அனுபவங்களின் ஆன்மீக அர்த்தம் புரியுமானால், தியானத்தில் அந்த அனுபவம் ஏற்படும் என்று கூறலாமா?

பகவான் - ஆமாம். புத்தகம் புரியும். மனம் தடையில்லாவிட்டால் முழுமையாகப் புரியும். புரிகிறது என்பதும் புரியும்.

பக்தன் - பல அத்தியாயங்கள் தொடர்புள்ளன என்பதற்கு 5ஆம் அத்தியாயத்தையும் 17, 18 அத்தியாயங்களையும் கூறலாமா?

பகவான் - 5 உம் 6 உம் முதல் புத்தகத்தில் கூறுபவை எளியவை, அவற்றை 17, 18இல் விவரமாகக் கூறுகிறேன். 5இலும், 6இலும் பிரம்மம், பிரபஞ்சம், மனிதன் மூன்றும் ஒவ்வொன்றும் மற்ற இரண்டிலும் இருக்கிறது. பிரபஞ்சமும், மனிதனும் ஒருவரை ஒருவர் பூர்த்தி செய்கின்றனர் என்கிறேன். 17, 18 அத்தியாயங்களில் முன் கூறியவற்றை விவரமாக எப்படிச் சாதிப்பது என்பது பற்றியது. 5ஆம் அத்தியாயத்தில் வாழ்வு என்பது பிரம்மம், பிரபஞ்சம், மனிதன் ஆகிய மூன்றிற்கும் உரிய பொது மையம் எனவும் மூன்றையும் தன் வாழ்வில் இணைப்பது மனிதனுடைய கடமை என்றும், 17ஆம் அத்தியாயத்தில் எதை அறிந்தால் எல்லாவற்றையும் அறியலாமோ அது மேலேயுள்ளது. அதன் மூலம் கீழேயுள்ளதை அறிய வேண்டும் எனவும் கூறுகிறேன். 18ஆம் அத்தியாயத்தில் அதைச் சாதிக்க புறம் அகமாகவும், நாம் மேல் நோக்கியும் செல்ல வேண்டும். மனிதன் இறைவனையும், இயற்கையையும் தன்னுள் இணைத்து மேலே எழுவதைப் பரிணாமக் கோணத்தில் பார்க்க வேண்டும், இப்பரிணாமம் மேலும், கீழும் செல்லக் கூடியது. அதுவே அதன் பரிணாம இரகஸ்யம் ஆகும் எனவும் கூறுகிறேன்.

பக்தன் - ஏன் மேலும், கீழும் போக வேண்டும்?

பகவான் - உயர்வது போதும் எனில் மேலே போனால் போதும். முழுமை வேண்டுமெனில் மேலும், கீழும் போக வேண்டும். அத்துடன் பரிணாமம் எனில் புது ரூபங்களை ஏற்படுத்தி, உயர்த்தி, மேலே போய் அங்குள்ளவற்றுடன் இணைய வேண்டும்.

பக்தன் - புதிய செல்வம், பதவி வந்தால் மேலே உயருகிறோம். அதற்குரிய வீடு, வாகனம், பழக்கம் பெற வேண்டும். ஏற்கனவே அங்குள்ளவர் நம்மைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனால் தலைப்பு இந்த அத்தியாயத்திற்கு Ascent and Integration என்பது.

பகவான் - அஞ்ஞானத்தைப் பற்றி அறிவது முக்கியம்.

பக்தன் - பரிணாமம் என்பது ஞானம், அஞ்ஞானத்திலிருந்து வெளிவருவது என்றால் ஞானமும் அஞ்ஞானமும் முக்கியமாகின்றது. அவை முதல் புத்தகத்தில் வரவில்லை. 28ஆம் அத்தியாயத்தில் வரும்பொழுது பிறகு பார்க்கலாம் என வருகிறது.

பகவான் - இந்த சிருஷ்டிக்கு அஞ்ஞானம் முக்கியம். ஆனால் சிருஷ்டிக்கன்று. அஞ்ஞானமில்லாமல் சிருஷ்டியிருக்கலாம், இந்த சிருஷ்டி இருக்க முடியாது.

பக்தன் - வேதம், உபநிஷதம், ஸ்ரீ அரவிந்தம் இதுப்பற்றி எப்படி வேறுபடுகின்றன?

பகவான் - ஆண்டவனை அறிவது ஞானம் (சித்தி), அறியாதது அஞ்ஞானம் (அசித்தி) என்பது வேதம். ஞானமும் அஞ்ஞானமும் ஆண்டவனோடு முடிந்து விடுகின்றன. உலகம் புறக்கணிக்கப்படுவதால், முழுமையில்லை. ஆண்டவனை அறிவது ஞானம் (வித்யா), உலகத்தை அறிவது அஞ்ஞானம் (அவித்யா) என்பது உபநிஷதம். ஆண்டவன், உலகம் இரண்டையும் குறிப்பிடுவதால் வேதத்தை ஒருபடி கடந்து வருகிறது. ஆனால் ஆண்டவனையும், உலகையும் இணைக்கும் இடமில்லை என்பதால் முழுமையில்லை. ஸ்ரீ அரவிந்தம் ஞானம் (knowledge) தன்னுள் தானே மறந்து அஞ்ஞானமாயிற்று (ignorance) என்பதால் ஞானத்தையும் அஞ்ஞானத்தையும் இணைத்து முழுமையை ஏற்படுத்துகிறது. ஞானமே அஞ்ஞானம், அஞ்ஞானமே ஞானம் என்பது ஸ்ரீ அரவிந்தம்.

பக்தன் - ஏன் ஞானம் அஞ்ஞானமாக மாற வேண்டும்?

பகவான் - பிரம்மம் ஆனந்தம் பெற மறைந்து கண்டுபிடிக்க முடிவு செய்ததால் ஞானம் அஞ்ஞானமாகிறது.

பக்தன் - சத், சித், ஆனந்தம், சத்திய ஜீவியம், அவற்றின் 12 அம்சங்களும் அப்படி மறையும்பொழுது, ஏன் ஞானத்தைப் பற்றி மட்டும் பேச வேண்டும்?

பகவான் - சத், சித், ஆனந்தம், சத்திய ஜீவியம், ஆன்மாவின் 12 அம்சங்களும் தன்னுள் தானே மறைகின்றன. ஞானத்தைப் பற்றிக் கூறியதுபோல் இந்த 16 அம்சங்களையும் விளக்கிக் கூறலாம். வேதமும், உபநிஷதமும் ஞானத்தைப் பற்றிப் பேசியதால், நாமும் அதன் மூலமே பேச வேண்டியிருக்கிறது.

பக்தன் - ஞானம் எப்படி அஞ்ஞானமாகிறது?

பகவான் - மறதி மூலம் மறைந்து அஞ்ஞானமாகிறது. பிரம்மத்தை - ஆதியை - அறிவது பூரண ஞானம், அதை மறப்பது ஆதியின் அறியாமை.

பக்தன் - பிரம்மம் முயன்று தன்னை மறக்கின்றதா?

பகவான் - அதுவே சிருஷ்டி.

பக்தன் - மறதி சிருஷ்டியென்றால், நினைவு பரிணாமம் என்று கூறலாமா?

பகவான் - தான் மறைந்து மறந்ததை பிரம்மம் நினைவுபடுத்துவது பரிணாமம். கடவுளை மறப்பது பிரபஞ்ச அஞ்ஞானம். பிரபஞ்சத்தை மறப்பது அகந்தையின் அஞ்ஞானம். தான் காலத்தைக் கடந்தவன் என்பதை மறப்பது காலத்தின் அஞ்ஞானம். சிருஷ்டிக்குப் பல்வேறு லோகங்களுண்டு என்பதை மறப்பது மனத்தின் அஞ்ஞானம். நம் மனமும், உணர்வும், உடலும் ஒன்று என்பதை மறப்பது நம் நிலையின் அஞ்ஞானம். அடுத்து எதைச் செய்வது என்றறியாதது நடைமுறை அஞ்ஞானம்.

பக்தன் - இந்த அஞ்ஞானங்களைக் கடந்து ஞானம் பெறுவதெப்படி?

பகவான் - இவற்றின் சிக்கல் நம் நிலையிலிருப்பதால், (constitution) நாம் நம் நிலையை உணர்வது சிக்கலை முதலில் அறுக்க உதவும். உணர்வு அறிவை ஏற்க வேண்டும்.

பக்தன் - அது சுலபத்தில் முடியாதே. குறை கூறாதே என அறிவு கூறுகிறது. அறிவு சொல்வதால் குறை கூறாமலிருப்பது உணர்வு அறிவை ஏற்பதாகும்.

பகவான் - அறிவு ஏற்பதை உணர்வு ஏற்பதானால் குறையை உணரக்கூடாது.

பக்தன் - கூறாமலிருக்கலாம். உணராமலும் இருக்க முடியுமா?

பகவான் - இதைச் செய்த பிறகு மற்றவற்றிற்கு வழி பிறக்கும்.

பக்தன் - மற்ற நிலைகளைப் பற்றியும் கூறலாமா?

பகவான் - கூறலாம். ஒரு நிலையைக் கடந்தால் அதைப் பற்றிச் சொல்வது புரியும். உணர்ச்சி அறிவை ஏற்றால் மற்ற லோகங்களிருப்பது புரியும்.

பக்தன் - அது பெரிய விஷயமாயிற்றே.

பகவான் - அந்த லோகங்களில் சஞ்சாரம் செய்பவர் காலத்தைக் கடக்கலாம்.

பக்தன் - காலத்தைக் கடப்பது முடிவானதாயிற்றே.

பகவான் - அதற்கடுத்த 3 படிகள் உள்ளன.

பக்தன் - அது இருக்கட்டும், ஜீவாத்மா , பரமாத்மாவைப் பற்றி சொல்லுங்கள்.

பகவான் - ஜீவாத்மா விடுதலை பெற்று பரமாத்மாவை அடைவது மோட்சம், என்று இதுவரை கேள்விப்பட்டோம். இது ஆண்டவன் திருவுள்ளத்தைப் பூர்த்தி செய்யாது. பையன் வளர்ந்தபின் படித்து பட்டம் பெற்று வேலைக்குப் போனால் அவன் காரியம் பூர்த்தியாகும். பையனே குடும்பம். பையன் தானே படிக்கவில்லை. குடும்பம் அவனைப் படிக்க வைக்கிறது. படித்துப் பட்டம் பெற்று திரும்ப குடும்பத்திற்கு வந்து மற்ற பிள்ளைகளையும் தன்னைப்போல் படிக்க வைப்பது அவன் கடமையைப் பூர்த்தி செய்யும்.

பக்தன் - சரி, மோட்சம் வேண்டியதில்லை என்று ஏற்றுக் கொள்வோம். நீங்கள் சொல்வதை எப்படிச் செய்வது?

பகவான் - வீட்டில் எவரும் படிக்காமல், ஒருவனைப் படிக்கவைத்தால் அது மேலே சொன்னதுபோலப் போகும். எல்லாப் பிள்ளைகளும் படிக்க வேண்டும் என்றால் வீடு படிப்பை ஏற்கும். அனைவரும் படிக்க வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்து முயல்வது அனைவரும் படிக்க உதவும்.

பக்தன் - ஒருவன் படித்து சம்பாதித்துக் குடும்பத்தைக் காக்க வேண்டும் என்றால், ஒருவன் படிப்பான், சம்பாதிப்பான், குடும்பத்தை விட்டுப் போய் விடலாம். எல்லோரும் படிக்க வேண்டும் என்றால் நிலைமை மாறுகிறது. மனமே மாறும், வீட்டைவிட்டுப் போக முடியாது. படிப்பால் சம்பாதிக்கும் பணம் முக்கியமானால், அது வாராது. முக்கியத்துவத்தை பணத்திலிருந்து படிப்புக்கு மாற்றினால் படிப்பு அனைவருக்கும் வரும்.

பகவான் - படிப்பவன் சுயநலத்தை விட்டால்தான் அது முடியும்.

பக்தன் - அதுபோல் மோட்சம் முக்கியமில்லை, எல்லாக் கரணங்களும் திருவுருமாற வேண்டும் என்றால் அது முடியுமா?

பகவான் - ஜீவாத்மாவால் அதைச் செய்ய முடியாது. சைத்தியப் புருஷனே செய்யும். சைத்தியப் புருஷன் சுயநலமற்றது.

பக்தன் - ஏன் சைத்தியப் புருஷனுக்குள்ள பரநலம் ஜீவாத்மாவிற்கில்லை.

பகவான் - சைத்தியப் புருஷன் முழுமையை நாடுபவன். முழுமையை நாடினால் சுயநலம் வாராது. ஜீவாத்மாவுக்கு அம்முழுமையில்லை.

பக்தன் - சைத்தியப் புருஷனுக்கு முழுமை எப்படி வந்தது?

பகவான் - எல்லாக் கரணங்களின் அனுபவச் சாரத்தை ஆத்மாவில் சேர்ப்பது சைத்தியப் புருஷன். எல்லாவற்றையும் தழுவுவதால், அதற்கு முழுமையுண்டு.

பக்தன் - ஜீவாத்மாவே பரமாத்மா என்ற அத்தியாயத்தைக் கூறுங்கள்.

பகவான் -  நாம் அகந்தையை அழித்தவுடன்

புருஷன் வெளிவருகிறான்.

இவன் உலகத்து ஜீவன் (world being).

அகந்தை அழிந்தவுடன் நாம் அழிவதில்லை.

அகந்தை செய்த வேலையைப் புருஷன் செய்கிறான்.

உலகம் பெற்ற அனுபவத்தை ஒருவனுக்கு அளிக்கிறான்.

பக்தன் - மனிதன் என்றால் உலகத்தை அறிய வேண்டும் என்பதால் புருஷன் மனிதனுக்கு உலகத்தை அறிவிக்கின்றானா?

பகவான் - மனிதன் உலகத்தை மட்டுமன்று, பிரம்மத்தையும் அறிய வேண்டும்.

பக்தன் - அதை எப்படிச் செய்வது?

பகவான் - சுயநலம் போனவுடன் அகந்தை போய் விடுகிறது. மனிதனால் உலகத்தை அறிய முடிகிறது. அதேபோல் புறத்திலிருந்து அகத்திற்கு வந்தால் உலகம் உள்ளே தெரியும். அதன் மையமாகப் பிரம்மம் தெரியும். அந்தப் பிரம்மம் பரமாத்மா.

பக்தன் - ஜீவாத்மாவே பரமாத்மா என்று அறிய அகந்தை அழிந்து, உலக அனுபவத்தை உள்ளே பெற்று, புறத்திலுள்ள உலகை அகத்தில் கண்டால் ஜீவாத்மாவே பரமாத்மா எனத் தெரியும்.

பகவான் - இந்த வழியில் மோட்சமில்லை. ஜீவாத்மா திருவுருமாறி பரமாத்மா ஆகிறது.

பக்தன் - நாம் செய்ய வேண்டியது சுயநலத்தை அழிக்க வேண்டியது.

பகவான் - நம் சுயநலம் போனால் அகந்தை புருஷனாகும். உலகின் சுயநலம் போனால், பிரபஞ்ச ஆத்மா (world being) பரமாத்மாவாகும்.

பக்தன் - இவ்வளவும் நூலில் 1 பக்கத்தில் அடங்குகிறது. 40 பக்கமாயிற்றே அந்த அத்தியாயம்.

பகவான் - எப்படி ரிஷிகளும், விஞ்ஞானிகளும் இதைத் தவற விட்டு விட்டார்கள் என்பதை விளக்க அத்தனைப் பக்கங்களை எழுத வேண்டியுள்ளது.

பக்தன் - பிரம்மம், எத்தனை ரூபங்களெடுத்தாலும், பிரம்மமாகவே இருக்கிறது, மாறவில்லை என்பது நீண்ட விளக்கம். கட்டித் தங்கத்தால் நகை செய்தால் அதுவும் தங்கம் என்பதை மக்கள் மனத்தில் உள்ள கேள்விகளை எழுப்பி, பதில் சொல்ல பல பக்கம் விளக்கம் எழுத வேண்டியிருக்கிறது. எதிர்ப்பு என்பதை அதிகமாகப் பாராட்டக் கூடாது என்பது அடுத்தது. காலம் உலகை சிருஷ்டிக்கவில்லை என்பது மூன்றாவது.

பகவான் - 7 அஞ்ஞானங்களில் பிரபஞ்ச அஞ்ஞானத்திற்கடுத்தது காலத்தைப் பற்றிய அஞ்ஞானம். பிரபஞ்சம் முதலில் சிருஷ்டிக்கப்பட்டது. அதைத் தாங்க காலம் ஏற்பட்டது. காலம் உலகை சிருஷ்டித்தது என்ற கொள்கை நிலவுவதால், அது முரணானது என்பதால் சிக்கல் எழுகிறது, அறவில்லை.

பக்தன் - எதிர்ப்பு. . . . . .

பகவான் - பிரம்மத்தின் அடிப்படை unity ஒற்றுமை. மனம் அதைப் பிரித்துப் பார்க்கும்பொழுது எதிர்ப்பு ஏற்படுகிறது. மனமே முடிவன்று, சத்திய ஜீவியம் முடிவு, எதிர்ப்பைப் பாராட்டினால், மனமே முடிவாகும்.

பக்தன் - உதாரணம் தர முடியுமா?

பகவான் - 100 குடிசை வீடுகள் ஒன்றாக வரிசையாக இருந்தால் ஒருவர் அடுத்தவர் மீது பகைமை கொள்ளலாம். வீடு பற்றிக்கொண்டால் பகைமை போய்விடும்.

பக்தன் - நல்ல உதாரணம் இல்லையா?

பகவான் - பங்காளிக் காய்ச்சல் எலக்க்ஷன் வந்தபொழுது ஊரே ஒரு கட்சியாக ஓட்டுப் போடும்பொழுது பங்காளிகள் சேர்ந்து கொள்வார்கள்.

பக்தன் - குடும்பத்தில் எப்படி இதைக் கடைப்பிடிப்பது?

பகவான் - எவன் தன்னைக் குடும்பத்திற்கு, ஊருக்கு அர்ப்பணிக்கின்றானோ, அவன் பக்தனானால், நாட்டிற்கு, மாநிலத்திற்குத் தலைவனாவான்.

பக்தன் - அது என்ன சக்தி, எப்படி நடக்கிறது?

பகவான் - குடும்பத்தை ஏற்பது பரநலம், ஊரை ஏற்பது சேவை. அவை நம்மை அகந்தையினின்று விலக்கும். அன்பராதலால் அன்னைச் சூழல் அகந்தையற்றவரை பிரபஞ்சத்தையும், பரமாத்மாவையும் உணரச் செய்யும். அந்த சக்திகள் நம் வாழ்வில் செயல்படுகின்றன.

பக்தன் - மறுபிறவியைப் பற்றி நம் பரம்பரை என்ன கூறுகிறது?

பகவான் - மறுபிறவியுண்டு என்பதை அனைவரும் அறிவர். ஆத்மா மோட்சத்தை நாடுவதால் மறுபிறவி அதற்குப் பொருட்டன்று. மாயாவாதிக்கு மறுபிறவியும் மாயை. முழுமையாக விடுதலை பெற்ற ஆத்மா பரிணாம வளர்ச்சி பெற மறுபிறவி அவசியம்.

பக்தன் - நூலின் மறுபிறப்பைப் பற்றிய 3 அத்தியாயங்கட்குப் பின்னால் Evolution of man, Spiritual man என்ற அத்தியாயங்கள் வருவதால் மறுபிறப்பு அனுபவத்திற்குப் பின்னால்தான் மனிதன் பூரணம் பெற முடியும் எனக் கொள்ளலாமா?

பகவான் - அது நூலில் இரண்டாம் புத்தகத்தின் இரண்டாம் பகுதிக்குரியவை. அப்பகுதியில் முதல் அத்தியாயம் ஜீவாத்மாவோ, பரமாத்மாவோ முடிவல்ல, இரண்டும் சேர்ந்த பிரம்மமே முடிவு என்பது. அடுத்த அத்தியாயம் வாழ்வு என்பது முழுமையானது, பரமாத்மாவை விலக்காதது, கடந்ததையும் தன்னுட் கொண்டது என்பது. முடிவான பிரம்மத்தை மையமாகக் கொண்ட முழுமையான வாழ்வில், பரமாத்மாவையும், பாதாளத்தையும் மனிதன் தன்னில் இணைக்க வேண்டும் என்று மூன்றாம் அத்தியாயம் கூறுகிறது. இணைந்தபின் மேலே செல்வது அடுத்தது. ஐந்தாம் அத்தியாயம் 7 அஞ்ஞானங்களை விலக்குவது. பிரம்மத்தை அறிந்தாலும் வாழ்வில் ஏற்பது குறையாக இருக்கும். பரமாத்மாவும், பாதாளமும் இணைந்து உயர்ந்த பின்னும் அஞ்ஞானங்கள் மிஞ்சும் என்றாகிறது. புனர்ஜென்மம் என்பது ஆன்மா வளர்வது, பரிணாம வளர்ச்சி பெறுவது. பிரம்மத்தை வாழ்விலறிந்து முழுமைபெற்று அஞ்ஞானத்திலிருந்து விலகிய பின் பரிணாம வளர்ச்சி. இத்தனையும் முடிந்தும், மனிதன் முழு மனிதனாவதில்லை. ஒரு பிறவியில் இவ்வுடலின் திறமை தீர்ந்தபின் ஆத்மா புதிய அனுபவம் பெற புதிய உடலை நாடுகிறது. அப்படியின்றி ஆன்மா வளரும்பொழுது உடலின் ஜீவியமும் வளர்ந்தால் உடலை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்பது அடுத்தது.

பக்தன் - இவ்வளவும் முடிந்த பின் மனிதன் ஆன்மீக மனிதனாவதில்லையா?

பகவான் - தான் பெற்றதைப் பிறருக்கு அளிக்க முடிவது ஆன்மீக மனிதனாக்கும்.

பக்தன் - அதையும் சாதித்த பிறகுதான் திருவுருமாற்றமா?

பகவான் - அப்படித்தான் என்றாலும், அத்தியாயங்கள் வரிசைப்படி மாற்றம் எழுவதாகக் கொள்ள முடியாது. சொல்வதை ஒரே சமயத்தில் சொல்ல முடியாது என்பதால் அத்தியாயங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வருகின்றன. அவற்றுள் நீ கூறுவதும் உண்மை. முதல் புத்தகத்தில் 26, 27 அத்தியாயங்கள் கூறுவது ஜடம் உற்பத்தியான பிறகு எழுவது எனக் கொள்வது தவறாகாது. அதையே சட்டமாக எல்லா இடங்களிலும் சொல்ல முடியாது.

பக்தன் - முதல் புத்தகம் சிருஷ்டி ஏற்பட்ட வகை. இரண்டாம் புத்தகம் அஞ்ஞானம் ஞானமானதும், ஞானம் ஆன்மாவாவதும் என்று புரிகிறது.

பகவான் - ஞானம் ஆன்மாவாவதன் மூலம் திருவுரு மாறி சத்திய ஜீவியமாகிறது.

பக்தன் - பரிணாமம் அத்துடன் முடிகிறது.

பகவான் - Supramental beingக்கு அடுத்த species நிலை ஆனந்தமயப் புருஷன்.

பக்தன் - அதைப்பற்றி The Life Divineஇல் எழுதவில்லையா?

பகவான் - ஆம், எழுதவில்லை.

பக்தன் - ஆனந்தமயப் புருஷன் என்ன செய்து அவனுடைய பரிணாமத்தைப் பூர்த்தி செய்கிறான்?

பகவான் - ஆனந்தம் ஜீவியமாகி, ஜீவியம் சத்தாகி, சத் பிரம்மமானால் பரிணாமம் முடியும்.

பக்தன் - ஜீவியத்திலிருந்து Superconscientக்குப் போவதே பெரிய இரகஸ்யம் என்கிறீர்களே.

பகவான் - அது முடிவான இரகஸ்யம் (Supreme Discovery).

பக்தன் - தத்துவம் புரிகிறது. என்றாலும் உதாரணம் உதவும்.

பகவான் - சந்தர்ப்பம் எழும்பொழுது எல்லாவற்றிற்கும் உதாரணம் கூறுகிறேன்.

பக்தன் - மேல்மனம், உள்மனம், அடிமனம் விளக்கம் தேவை.

பகவான் - நாமறிந்தது அவ்வளவும் மேல்மனம்.

பக்தன் - உள்மனத்தில் புருஷனும், நிர்வாணமும், சைத்தியப் புருஷனுக்குரிய கதவும் உண்டு என்பதென்ன?

பகவான் - ரிஷிக்கு நிஷ்டை பலிக்கும்பொழுது சாட்சிப்புருஷன் தெரிவான். அது உள்மனத்திற்குரியது. அதன் மூலம் அவர் மோட்சம் பெறுகிறார்.

பக்தன் - எப்படி?

பகவான் - சாட்சிப் புருஷன் என்பது மனோமயப்புருஷன். ஜீவாத்மாவின் பகுதி மனத்திற்குரியது. அதன் மூலம் ஜீவாத்மாவையும், அதன் மூலம் பரமாத்மாவையும் ரிஷி அடைந்து மோட்சம் பெறுகிறார்.

பக்தன் - உள்மனம் பூரண யோகத்திற்கு உதவாதா?

பகவான் - பூரண யோகத்தில் மனத்திற்கு மேலேயுள்ள ஆன்மீக மனம் - முனி, ரிஷி, யோகி, தெய்வம் - வழியாக சத்தியஜீவியம் போகிறோம். அதற்கு உள்மனம் வழிவிடும்.

பக்தன் - உள்மனம் வந்து மீண்டும் உயர்ந்து ஆன்மீக மனம் செல்கிறோம். அப்படியே சத்தியஜீவியம் போக முடியாதா?

பகவான் - சத்தியஜீவியம் போக உள்மனத்தைத் தாண்டி அடிமனம் எட்ட வேண்டும். சைத்தியப் புருஷன் அங்குள்ளது.

பக்தன் - எது உள்மனம், எது அடிமனம் என்று கூற முடியுமா?

பகவான் - தியானத்தில் நாம் லயிப்பது உள்மனம். அப்பொழுது மௌனமிருப்பது முனிவர் நிலை. காட்சி தெரிவது ரிஷி நிலை. காட்சியுமின்றி நாளைக்கு நடக்கப் போவது யோகிக்குத் தெரியும். அது நமக்குத் தெரிவது யோகியின் நிலை. தடைகளைக் கடந்து தியானத்தால் காரியம் முடிவது தெய்வநிலையை எட்டியதற்கு அர்த்தம்.

பக்தன் - அடிமனம் என்பது?

பகவான் - தியானத்தில் மௌனம் வரும். ஓரிரு மைல் தூரத்தில் நடக்கும் செய்தி காட்சியாகவோ, ஒலியாகவோ தெரிவது அடிமனம்.

பக்தன் - எப்படி அது உண்மை என்று தெரியும்?

பகவான் - 10 மைல் தூரத்தில் பஸ்ஸில் நண்பர் தெரிகிறது. ½ மணிக்குப் பிறகு வருகிறார் என்றால் புரியும். அப்படி புரியாதவையும் தெரியும்பொழுது உண்மை என உணர்த்தும். நிரூபிக்க முடியாது.

பக்தன் - மனம் நிரூபணம் கேட்காது.

பகவான் - நிரூபணம் கேட்பவருக்கு இவையெல்லாம் தெரியாது.

பக்தன் - இதுவரை சொன்ன தத்துவங்களை நடைமுறையில் பயன்படுத்தும் வழியும், அங்கு, தத்துவம் எப்படி வெளிப்படுகிறது என்பதும் எனக்கு முக்கியம். பகவான் - ஓர் உதாரணத்தின் மூலம் 10 அல்லது 100 தத்துவங்களை விளக்கலாம். ஏனெனில் ஒன்றில் அடங்குவது பல, அனந்தம். ஒவ்வொரு முறையும் மனம் புதிய உதாரணம் கேட்கிறது. காலம் சுருங்குவது இன்று ஆயிரம் வழிகளில் நடக்கின்றன. அதை நாம் டெக்னாலஜி எனப் புரிந்து கொள்கிறோம். டெக்னாலஜியால் பயன்பட மனமும், ஜீவியமும் உயர்ந்திருக்கின்றன என்பதை நாம் காண்பதில்லை.

பக்தன் - உள்மனத்திற்குத் தியானத்தாலும், அடிமனத்திற்குச் சமர்ப்பணத்தாலும் போகிறோம்.

பகவான் - ஆம்.

பக்தன் - ரிஷிகள் அடிமனத்தைப் பற்றி என்ன சொல்கிறார்கள்?

பகவான் - அடிமனம் அவர்கள் அறியாததில்லை. அவர்கள் யோகமெல்லாமல் மேல்மனத்துடன் நின்று விட்டன.

பக்தன் - கல்லூரி பட்டம் தருகிறது. ஆராய்ச்சி செய்பவர்கட்கு பெரிய ஆராய்ச்சிப் பட்டங்களை அளிக்கிறது. ஐன்ஸ்டீன் போன்ற மேதைகள் கல்லூரிகளில் கற்பித்துள்ளனர். ஆனால் மேதைகளைத் தயார் செய்வதை எந்தக் கல்லூரியும் மேற்கொள்ளவில்லை. ரிஷிகளை சத்தியஜீவியம், அடிமனம் விஷயத்தில் அதுபோல் சொல்லலாமா?

பகவான் - சொல்லலாம். உதாரணத்தை அடிப்படையாகக் கொண்டு மேலும் கேள்விகள் எழுப்பாவிட்டால் இதுவரை உதாரணம் பொருந்தும்.

பக்தன் - இதுவரை மேதைகள் தாமே எழுந்தனர். மேதைகளைத் தயார் செய்வது என்பது இதுவரையில்லை. ரிஷிகள் சத்திய ஜீவியத்தைத் தனிப்பட்ட முறையில் அடைந்துள்ளனர். சத்திய ஜீவியம் உலகில் இறங்கி வந்து அனைவருக்கும் பயன்படும் முறை இதுவரையில்லை என்பதுபோல் கூறலாமா?

பகவான் - கூறலாம். உதாரணம் (analogy) அத்துடன் நிற்க வேண்டும்.

பக்தன் - உலகில் மேதைகள் ஏராளமாகப் பிறக்கும் நேரம் வந்து விட்டது என்பது உண்மையா?

பகவான் - நேரம் வந்து விட்டது என்றால் தானே நடக்கும் என நினைத்துக் கொள்வார்கள். கம்ப்யூட்டர் அதுபோல் பரவுகிறது. எதையும் எடுத்துச் செய்தால் விரைவாகப் பரவும். சத்தியஜீவியசக்தி உலகிலிருப்பதை அறிந்து அத்துடன் தொடர்பு கொள்ள அனைவரும் முயன்றால், அந்த நேரம் வந்து விட்டதாகக் கூறலாம். இல்லாவிட்டால் மேதை இன்றுபோல் 100 ஆண்டுகளில் ஓரிருவர் உதயமாவார்.

பக்தன் - ஐக்கியம், சத்தியம், நன்மை, ஞானம், சக்தி, அன்பு ஆகியவை ஒன்றுபோல் பூரணமாக உலகம் காத்திருக்கிறது என்ற கருத்தை ஆசிய நாடுகளில் வறுமையிருப்பதற்குக் காரணமாகக் கூறி விளக்க முடியுமா?

பகவான் - நம் நாட்டில் 200 ஆண்டுகட்குமுன் கல்வி பரவினாலும், முன்னோடிகளே பலன் பெற்றனர். 1960க்கு மேல்தான் கல்வி தானே பரவுகிறது.

பக்தன் - வசதியில்லை என்பதைக் காரணமாகக் கூறலாமா?

பகவான் - 100 அல்லது 150 ஆண்டுகட்கு முன்னும் வசதியற்ற குடும்பங்கள் பல கல்வியை நாடின. Enterprise, leadership, Alertness விழிப்பு, சுறுசுறுப்பு, ஆர்வம், தலைமை ஆகியவைகட்குப் பங்குண்டு. வசதி வந்தால் அனைவரும் பெறுகின்றனர். வசதி வருமுன் ஆர்வமானவர் பெறுகின்றனர். இன்று சத்தியஜீவிய விஷயத்தில் ஆர்வமிருந்தால், நீ கேட்கும் சட்டத்தை ஆர்வம் தானே பூர்த்தி செய்யும். ஆர்வமில்லாவிட்டால், உன் சட்டப்படி மெதுவாக நடக்கும்.

பக்தன் - இன்று ஆர்வமுள்ளவர், மேதைகளைத் தயார் செய்ய முனைகிறார் என்பதை விட சத்தியஜீவியம் செயல்படும் முன்னோடி என்று கூறலாமா?

பகவான் - ஆமாம். அது சரி.

பக்தன் - இந்த ஆறு அம்சங்களும் சத், சித், ஆனந்தத்தின் அம்சங்களா?

பகவான் - சத் என்பது புறமானால் சத்தியம். சித் என்பது ஞானம், சக்தி. ஆனந்தம், அன்பு. சத்தியமும் ஞானமும் சேர்ந்தால் நல்லது வரும். சிருஷ்டிக்கு முன் சத் கடந்த நிலையில் transcendent ஆக உள்ளபொழுது அதற்கு ஐக்கியம் உண்டு.

பக்தன் - நம் வாழ்வில் இந்த அம்சங்கள் செயல்படுவதைக் கேட்கப் பிரியப்படுகிறேன்.

பகவான் - பரம்பரைச் செல்வம் பண்புடன் சேர்ந்த குடும்பங்கள் செழுங்கிளை தாங்கி வாழும் குடும்பங்கள். அங்குத் தலைவருக்கு வயதும் அனுபவமும் நிறைந்த நேரம் இந்த அம்சங்கள் நிறைவு படுவதைக் காணலாம். நேருவின் குடும்பம் அப்படிப்பட்டது என்பதால் 40 ஆண்டு நாட்டை ஆண்டது.

பக்தன் - அப்பண்பு சத்தியஜீவியத்திலிருந்தால். . . . . .

பகவான் - அவர்கள் உலகில் முதன்மையான குடும்பமாக இருப்பார்கள். நாட்டை ஆளவும் முன்வரமாட்டார்கள். செல்வத்தைத் தேடமாட்டார்கள். பதவியை நாடமாட்டார்கள். இன்று அதுபோன்ற குடும்பமில்லை.

பக்தன் - பிரபஞ்ச சிருஷ்டியில் நூல் Determinism நிர்ணயத்தை முக்கியமாகக் கூறுகிறது. ஆக்ஸிஜன், ஹைடிரஜனிலிருந்து நீர் வருவது எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பதறிந்து நான் கூறும் உதாரணம் சரியா என்று கூற வேண்டும். கையில் பணம் இருந்தால் தொழில் ஆரம்பிக்கும்பொழுது எந்தத் தொழில் என்பதை நாமே நிர்ணயிக்கிறோம். அது வேறெந்த காரணத்தாலும் நிர்ணயிக்கப்படவில்லை. அதுபோல் நீர் உற்பத்தியாவதை self conception மூலம் infinite நிர்ணயிக்கிறது என்று கூறலாமா?

பகவான் - எந்த நிமிஷமும் நாம் எதையாவது முடிவு செய்தபடியிருக்கிறோம். அவையெல்லாம் நமது முடிவுகள். நம்மைக் கட்டுப்படுத்த எவரும் இல்லை. நீர் அது போன்றதே.

பக்தன் - அம் முடிவுகள் சந்தர்ப்பத்தால் நாம் கட்டாயப்படுத்தப்பட்டு எடுத்தவை என்று விஞ்ஞானி கூறுவது எந்த அளவுக்கு உண்மை?

பகவான் - கோட்டிற்கு மேலே முடிவு நம்முடையது. கோட்டிற்குக் கீழே சந்தர்ப்பத்தினுடையது. சந்தர்ப்பம் நிர்ப்பந்தம் செய்தாலும், முடிவின் முடிவான பாகம் நம்முடையது.

பக்தன் - இன்று பள்ளிக்குக் குழந்தையை அனுப்பாமலிருக்க முடியாது. அது நிர்ப்பந்தம், ஆனால் எந்தப் பள்ளியில் சேர்ப்பது என்பது நம் முடிவு.

பகவான் - அது சரி. மேலும் சமூகம் செய்யும் நிர்ப்பந்தத்தை 80% மக்கள் ஏற்கிறார்கள். 20% ஏற்கவில்லை. ஏற்பதா, இல்லையா என்பது நம் முடிவு.

பக்தன் - முடிவு முடிவாக நம்முடையது.

பகவான் - ரொம்ப சரி. நம்முடையது என்பதை ஆராய்ச்சி செய்தால் முடிவாக பிரம்மத்தின் முடிவு எனவும், சத்தியஜீவிய முடிவு எனவும் தெரியும்.

பக்தன் - அது அகந்தையின் முடிவாக, ஊரார் முடிவாக, காலத்தின் முடிவாக, கர்மத்தின் முடிவாக, ஆத்மாவின் முடிவாக, சைத்தியப் புருஷன் முடிவாக, சத்தியஜீவிய முடிவாக, பிரம்ம முடிவாக இருப்பது. எந்த முடிவாக இருக்க வேண்டும் என்பது நமது முடிவு.

பகவான் - நாம் யார் என்பதை நிர்ணயிக்கும் சுதந்திரம் நமக்குண்டு.

பக்தன் - இன்று நான் எளிமையாக இருக்கிறேன். உயர்வாகப் பிரியப் பட்டால். . . . . .

பகவான் - உள்ளபடி (sincere) முடிவெடுத்தால் அது பலிக்கும்.

பக்தன் - க்ஷணத்திலும் பலிக்குமா?

பகவான் - Sincere ஆனவர் மெய்யான முடிவு எடுத்தால், அது அகத்தின் முடிவானால் அது பலிக்கும்.

பக்தன் - நாம் பொய்யாக முடிவெடுப்பதையே taste of ignorance என்பதா?

பகவான் - ஆமாம்.

பக்தன் - பொய்யிலிருந்து நாமே நம்மை விடுதலை செய்தாலன்றி நமக்கு மெய்யை ஆண்டவன் அளிக்கப் போவதில்லை.

பகவான் - அதுவரை உலகம் காத்திருக்கும். அப்படிப்பட்ட நேரம் இறைவன் வரும் தருணம்.

பக்தன் - இந்த நேரம் விழித்தெழாதவர் எந்த நேரமும் விழிக்கப் போவதில்லை. மக்களாட்சி வந்தது மகாப் பெரிய புரட்சி.

பகவான் - அது ஆன்மீகப் புரட்சி. மார்டின் லூதர் கத்தோலிக்கப் பாதிரிகளை எதிர்த்து நடத்திய புரட்சியின் விளைவாக Protestantism உண்டாயிற்று. அந்த ஆன்மீகப் புரட்சியின் அரசியல் வடிவம் மக்களாட்சி.

பக்தன் - இவையிரண்டிற்கும் என்ன தொடர்பு?

பகவான் - பாதிரியார்கள் ஆண்டவனுக்கும் மக்களுக்கும் இடையேயிருந்ததை மார்டின் லூதர் ஏற்க மறுத்தார். நேரடியாக ஆண்டவனுடன் தொடர்பு கொள்ள ஏற்பட்டது புராடஸ்டண்ட் மதம். மன்னராட்சியில் அரசகுலத்தில் பிறந்தவனுக்கே நாட்டை ஆளும் உரிமை. புரட்சி வந்த பொழுது அடுத்த கட்டத்திலுள்ள மந்திரி, சேனாதிபதிக்கு அது வரவில்லை. எவருக்கும் உண்டு என்று மக்களாட்சி ஏற்பட்டது. எவரும் நாட்டை ஆளலாம் என்பது பாதாளம் பரமாத்மாவைப் பெறுவது.

பக்தன் - பூரண யோகம் ஆன்மீகத்தில் அதையே செய்கிறது. ரிஷிகள் கடவுளாகலாம் என்று கூறவில்லை. எவரும் பரமாத்மாவை அடையலாம் என்பதில்லை. எவரும் பரமாத்மாவாகலாம் என்பது மக்களாட்சி போலிருக்கிறது.

பகவான் - அறிவுத்துறையில் எவரும் genius மேதையாகலாம். அதே போல் எவரும் கோடீஸ்வரனாகலாம். எவரும் எதுவாகவுமாகலாம்.

பக்தன் - இன்றைய அறிஞருலகம், மேதைகள், ரிஷிகள், தலைவர்கள் நினைத்தும் பார்க்க முடியாதது.

பகவான் - படிப்பை இம்முறையுடன் கற்பித்தால் 15 அல்லது 20 வயதில் பையன் உலகத் தலைவர்கட்குரிய திறமையை வித்தாகப் பெறுவான். திறமையின் அனுபவமிருக்காது. திறமைக்குப் பாத்திரமாவான்.

பக்தன் - குழந்தைகளை, பொய், பயம், நாலுபேர் போன்றதை விலக்கி அன்னையின் கோட்பாடுகளை அவர்களே அறிந்து போற்றுமாறு வளர்த்தால், அவர்கள் அதை விரும்பி ஏற்று மலர்ந்தால் குழந்தைகள் அன்னையாக வளரும் என்று நினைக்கலாமா?

பகவான் - நமக்குள்ள குறைபாடுகள் ஏராளம். நாம் எப்படிக் குழந்தைகளை நம் குறைபாடின்றி வளர்ப்பது?

பக்தன் - படிக்காத தாயாரைக் குழந்தைகள் படிக்காதவள் என்று அறிவது போல், குறைபாடுகளைக் குறைபாடுகளாக அறியும்.

பகவான் - அதற்குப் பெற்றோருக்கு மனம் வருமா? நான் பொய் சொல்வேன். நீங்கள் சொல்லாதீர்கள் எனக் குழந்தைகளிடம் பெற்றோர் சொல்வார்களா?

பக்தன் - அது நடக்காது. அது நடந்தாலும் குழந்தை நாம் செய்வதைத்தான் செய்யும். சொல்வதைச் செய்யாது.

பகவான் - நாம் பொய்யை அறவே விட்டொழிக்க முயன்றால், குழந்தைகள் பொய்யை விட்டுவிடும். நமக்கு எவ்வளவு வெற்றி என்பது வேறு. நமக்குச் சாதனை முழுவதுமாக இல்லாவிட்டாலும் முயற்சி முழுமையாக இருந்தால்,

குழந்தை அன்னையாக வளரும் வாய்ப்புண்டு.

நடைமுறையில் மேதையாக, கோடீஸ்வரனாக வளரும்.

பக்தன் - மேதையானாலும் அடக்கமாக இருக்கும். கோடீஸ்வரனானாலும் பணத்தின் கர்வம், பெருமிதம், ஆசையிருக்காது. The Life Divineஇல் வரும் எல்லாக் கருத்துகளையும் இதுபோல் வாழ்வில் பொருத்திப் பார்த்தால் மனம் உயர்கிறது. இதுவரை இல்லாத நிறைவு, பெருநிறைவு வருகிறது. பகவான் - வேதரிஷிகள் immortality அமரத்துவம் என்றது ஆத்மாவுக்கு. அதைச் சரணாகதியால், அகந்தையை அழித்துப் பெற்றனர். அதை supreme infinity, divine universality என்கிறோம். பிரபஞ்சம் கோரமாக இருப்பதை விஸ்வரூபம் காட்டியது. தெய்வீகமாகப் பிரபஞ்சம் உள்ளது. நாம் finite. தெய்வம் infinite. தெய்வம் அனந்தம் என்றால் அனந்தம் நிலைக்கேற்ப அனந்தமாகும். நம் உலகில் அனந்தம் என்பது முடிவற்றது boundless finite. நடக்க நடக்க முடிவில்லை என்பது இடம் அனந்தம். அதேபோல் காலம் அனந்தம். நிலம் ஆயிரமாண்டாக பலன் தருகிறது. அதற்கு முடிவில்லை. இவையெல்லாம் சிறியதன் அனந்தம். சத்புருஷன் சிருஷ்டிக்கும், காலத்திற்கும், சத்தியத்திற்கும், சச்சிதானந்தத்திற்கும் முன் கடந்த நிலையில் (transcendent) உள்ளது. அதை Supreme என்கிறேன். அதற்குரிய அனந்தம் Supreme infinity.

பக்தன் - Self - existent infinity சுயமான அனந்தம். Not the opposite of finite சிறியதற்கு எதிரான பெரியதன்று, சுயமான பெரியது என்றோம். Supreme infinity i.e., divine universality ஆத்மா பெறுவது அமரத்துவம் என்கிறீர்கள்.

பகவான் - சரி. அதையே ஆத்மா பிறப்பில்லாத நிலையையும், பிறப்பில் உள்ள நிலையையும் பெறுவதுமாகும்.

பக்தன் - பிறப்பில்லாத நிலை being, பிறப்பு becoming, இரண்டும் சேர்வது being of the becoming.

பகவான் - சரி. இந்த நிலையை உடல் பெற்றால் மனிதன் பிறக்கிறான் என்பது மறுபிறப்பு பெறும் விளக்கம். இப்பிறப்பிலேயே மறுபிறப்பாகும். இதற்கடுத்த நிலை ஆன்மீக மனிதன். அவனே திருவுரு மாற்றத்திற்குரியவன்.

பக்தன் - வாடகை வீட்டில் குடியிருப்பவர் வசதி வந்தவுடன் பெரிய வீட்டிற்கு மாற்றிக் கொள்வது மறுபிறப்பு.

பகவான் - ஆமாம்.

பக்தன் - பெரும் வசதி வந்தவுடன் இருக்கும் வீட்டையே மாற்றிக் கட்டிக் கொள்வது உடல் அமரத்துவம் பெற்று விலங்கு மனிதனாவது.

பகவான் - இதை வேத ரிஷிகள் சரணாகதியால் பெற்றனர்.

பக்தன் - அந்தச் சரணாகதி திருவுருமாற்றம் தாராதா?

பகவான் - அகந்தையை அழித்த அந்தச் சரணாகதிக்கு மோட்சம் உண்டு. திருவுருமாற்றம் சத்திய ஜீவியத்திற்குத்தான் உண்டு. ரிஷிகள் அங்குப் போகவில்லை.

பக்தன் - சத்தியஜீவியம் போக பிரபஞ்சம் வழிப் போக வேண்டுமன்றோ?

பகவான் - அதற்குரிய வழி ஆன்மீக மனம்.

பக்தன் - ஆன்மீக மனம் முனி, ரிஷியாயிற்றே. ஏராளமான முனிவர்கள், ரிஷிகள் இருந்திருக்கிறார்களே.

பகவான் - ஒருவர் தொழில் நடத்தினால் 100 பேருக்கு வேலை கொடுக்கிறார். 100 பேர் சம்பாதிக்கிறார்கள். வீடு கட்டுகிறார்கள். அது மறைமுகமான சேவை. தான் சம்பாதிக்க ஆரம்பித்த தொழில் மறைமுகமாகப் பிறருக்கு வசதி தருகிறது. 100 பேருக்கு வசதி வேண்டும் என தொழில் ஆரம்பிக்கவில்லை. லாபம் சம்பாதிக்கத் தொழில் ஆரம்பித்தார்.

பக்தன் - இங்கு 100 பேர் சம்பாதிக்க வேண்டும், வீடு கட்ட வேண்டும் என தொழில் ஆரம்பிக்கிறோம். எல்லா இலாபமும் ஊழியர்கட்கு. அதுவே சத்தியஜீவியம் பூமிக்கு வருவது.

பகவான் - குழந்தையை பயம், பொய்யின்றி வளர்த்தால் நமக்குள்ள புத்திசாலித்தனம் 3 வயதிலிருப்பது தெரியும்.

பக்தன் - அது சுதந்திரமாக வெளிப்படும்.

பகவான் - குழந்தை புத்திசாலி என்பதை எவரும் விரும்புவார். அந்தப் புத்திசாலித்தனம் தன்னை மிஞ்சுவதை சிலர் விரும்ப மாட்டார்கள். சுதந்திரமாக வளர்ந்தால் 6, 7 வயதில் நமக்குப் பிடிபடாத வீட்டு விஷயம் குழந்தைக்குப் பிடிபடும். அதைப் பெற்றோர் ஏற்க மாட்டார்கள். ஏற்றால் குழந்தை தகப்பன் சுவாமியாகும். ஆயிரத்தில் ஒருவரும் அதை விரும்ப மாட்டார்கள்.

பக்தன் - குழந்தை assert அதிகாரம் செய்யாவிட்டாலும், மனம் குழந்தை தம்மை மிஞ்சுவதைப் பெரும்பாலும் பெரியவர்கள் வெறுப்பார்கள்.

பகவான் - அந்நிலையைக் கடந்தால் தானே குழந்தை மேதையாகும்.

பக்தன் - குருவை மிஞ்சிய சிஷ்யனை அதிகப்பிரசங்கி என்பர்.

பகவான் - அடக்கம், அதிகப்பிரசங்கத்தை விலக்கும். குழந்தை மேதை, தான் வெறும் மனிதன் என்று மனிதன் கண்டுகொண்ட நேரம் குழந்தையின் மலரும் ஆன்மா கருகும்.

பக்தன் - பாதாளம் பரமாத்மாவாகத் தடை மனிதன், அவனது அகந்தை, பொறாமை.

பகவான் - பொறாமைபோல் 30 குணங்களுண்டு.

பக்தன் - இப்படி வாழ்வைப் புரிந்து கொண்டால் The Life Divine கதைப் புத்தகம் போலிருக்கும்.

பகவான் - தன் அறிவு, அழகு, செல்வம், திறமை போன்றவற்றைப் பிறருக்கு அளிக்கும் திறமை மனிதனுக்கில்லை.

பக்தன் - என்ன காரணம்? சுயநலமா?

பகவான் - மனிதன் பெறுவான், தரமாட்டான். தரும் திறமை அவனுக்கில்லை.

பக்தன் - ரிஷிபத்தினிக்கும், சிஷ்யனுக்கும் அவர் தவப்பயன் வரும் என்கிறார்களே.

பகவான் - அது அடிமனம் நேரடியாக அடிமனத்திற்குத் தருவது. எந்தக் குருவும், மனிதகுருவும் தான் பெற்றதை சிஷ்யனுக்கோ, மனைவிக்கோ, மகனுக்கோ கொடுக்க முன்வருவதில்லை.

பக்தன் - கொடுக்கும் கருவியில்லை.

பகவான் - அது self-giving, அகந்தையுள்ளவரை கொடுக்க முடியாது. தான் கடவுளானபின் பிறருக்கு அதைக் கொடுத்தால் மனிதன் ஆன்மீக மனிதனாகிறான்.

பக்தன் - அகந்தை அழிய வேண்டும் என்றால் மற்ற லோகங்கள் தெரிய வேண்டும். காலத்தைக் கடக்க வேண்டும். பிரபஞ்சம் முழுவதும் ஆத்மா பரவ வேண்டும். அதைப் போன்ற ரிஷிகள் இல்லையே.

பகவான் - பூரண யோகம் அதை அனைவருக்கும் தருகிறது.

பக்தன் - நீங்கள் சொல்வதை எந்த ஒரு முறையாலும் பெற முடியாது போலிருக்கிறதே.

பகவான் - எல்லா முறைகளும் தேவை. அவற்றையும் கடக்க வேண்டும்.

பக்தன் - அதுதான் சரணாகதியா? அப்படியானால் சரணாகதியை நாங்கள் புரிந்து கொள்ளவில்லையா? ரிஷிகள் சொன்ன சரணாகதி, கீதை சொல்லும் சரணாகதி என்ன?

பகவான் - மோட்சம் என்ற பலன் பெற ஏற்றது அது.

பக்தன் - பலனை நினைத்தால், சரணாகதியில்லையே.

பகவான் - சரணாகதியை அன்னை ஏற்பதே பலன்.

பக்தன் - இது சரணாகதியைவிடச் சிரமமானது.

பகவான் - சிரமம் அகந்தைக்கு.

பக்தன் - அதாவது பொய், சுயநலம். மக்கள் ஆட்சியில் இராணுவம் அரசியல் தலைவர்கட்குக் கட்டுப்பட்டுள்ளது. பல ஆசிய நாடுகளில் இராணுவம் அரசியல் தலைவரை சிறையிலடைத்து ஆட்சிக்கு வருகிறது. இதர நாடுகளில் அரசியல் தலைமைக்குக் கட்டுப்பட்டுள்ளது. இதற்கும் காலத்தின் மூன்றாம் நிலை, Mind over Matter ஜடம் மனத்திற்குக் கட்டுப்படும், ஆன்மா ஜடத்தை ஆளும் (p.1039 The Life Divine) என்றவற்றுடன் பொருத்திக் கூறுங்கள்.

பகவான் - மக்களாட்சி மூலம் The Life Divine முமுவதையும் சொல்லலாம். நீ கேட்பவை அனைத்தும் பொருத்தமான உதாரணம். துப்பாக்கி போன்ற ஆயுதம், பதவியிலிருப்பவர் ஆணை ஆர்ப்பாட்டம் செய்பவனைக் கட்டுப்படுத்தும் என்பதை ஏற்பார்கள். மனம் அடங்கி எழும் சொல் துஷ்டனைக் கட்டுப்படுத்தும் என்பதை எவரும் கேட்டுக் கொள்ள மாட்டார்கள். காலத்திற்கு மூன்றாம் நிலைபோல அதிகாரத்திற்கு இது மூன்றாம் நிலை. அடங்குவது முதல் நிலை, அடக்குவது இரண்டாம் நிலை, மனம் அடங்கி உள்ளே போவது மூன்றாம் நிலை. உலகில் முடிவான அதிகாரம் அதற்குண்டு. இராணுவத் தலைவர் முன் காந்தியும், நேருவும், பெண்ணான இந்திராவும், வயதான வாஜ்பேயும் என்ன செய்ய முடியும்? அவர்கள் தாமே கட்டுப்பட்டு அடங்கியிருப்பது உண்மை.

பக்தன் - சிறப்பான சரித்திர நிகழ்ச்சிகள் உண்டா?

பகவான் - அமெரிக்க ஜனாதிபதி கொரியாவில் உத்தரவை மீறிய சேனாதிபதியை டிஸ்மிஸ் செய்தார். டிஸ்மிஸ் ஆனவர் வீட்டுக்குப் போனார். எதிர்க்கும் நிலையில்லை, திறனில்லை.

பக்தன் - ஆசிய நாடுகள் உதாரணம்.

பகவான் - பர்மாவில் பிரதம மந்திரி தியானம் செய்ய ஓராண்டு வேண்டும் என இராணுவத் தலைவரிடம் பிரதம மந்திரி பதவியை ஒப்படைத்துவிட்டு மடத்திற்குப் போனார். ஓராண்டு முடிந்து திரும்பி வந்ததும் சேனைத் தலைவர் பதவியை மீண்டும் கொடுத்துவிட்டார். கொஞ்ச நாள் கழித்து அவரே பிரதமரைச் சிறையிட்டார். அது பர்மாவில் நடக்கும், இந்தியாவில் நடக்காது.

பக்தன் - 1975இல் எமர்ஜென்சியிருந்தபொழுது இராணுவம் ஆளப்போகிறது என்று வதந்தி. இந்திரா இராணுவத் தலைவரைக் கூப்பிட்டுக் கேட்டார். அது உண்மையில்லை என்றார். அப்படியே இராணுவம் ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள் என இந்திரா எடுத்துக் கூறினார். பர்மிய மக்கள் விவரம் அறியாதவர். இந்தியர் விழிப்பானவர். பாக்கிஸ்தானில் நடப்பது இந்தியாவில் நடக்காது. இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸில் அதை நினைத்தும் பார்க்க முடியாது. மக்கள் படித்தவர், விஷயம் அறிந்தவர்.

பகவான் - படித்து விழிப்பான மக்கள் தலைவர் சொல்லுக்கு இராணுவம் கட்டுப்படுவது ஆச்சரியம். ஞானம் பெற்று விழிப்பான ஆன்மாவுக்கு உடல் கட்டுப்படுவதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

பக்தன் - குடும்ப உதாரணம்.

பகவான் - தாழ்ந்த குடும்பங்களில் தகப்பனார் கடைசிவரை பெட்டிச் சாவியைப் பையனிடம் தருவதில்லை. தந்தால் தவறாது தகப்பனார் மூலைக்குப் போவார். உயர்ந்த குடும்பங்களில் இளமையிலேயே பையன் நிர்வாகத்தை ஏற்பான். தகப்பனாருக்கு மரியாதை குறையாது.

பக்தன் - இரண்டாங்கெட்டான் குடும்பங்கள் ஏராளம்.

பகவான் - மனத்தில் உண்மையில்லாமல் பையன் மதிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது வீண். மனம் உண்மையானால் முழு மரியாதை இருக்கும் என்பது அனுபவம், அரிபொருள்.

பக்தன் - அதிகாரத்தின் மூன்றாம் நிலையை அனுபவிக்க காலத்தின் மூன்றாம் நிலைக்கு வர வேண்டும்.

பகவான் - ஆமாம். ஓர் அம்சத்தில் மூன்றாம் நிலையை அடைய ஓரளவு எல்லா அம்சங்களிலும் மூன்றாம் நிலைக்கு வர வேண்டும்.

பக்தன் - 30,000 ஆண்டுகட்குப்பின் வரக் கூடியது 30 ஆண்டில் வரும் என்பதன் தத்துவம் என்ன? விளக்கம் என்ன? உதாரணம் உண்டா?

பகவான் - ஒரு மூட்டை மணலை சுருக்க முடியாது. அதுவே gas ஆனால் சுருக்கலாம். அளவு கடந்தும் சுருக்கலாம். காலம் சுருங்கும் என்பதை நாம் விரைவான வாகனங்கள் வந்த பிறகு காண்கிறோம். விஞ்ஞான வளர்ச்சியில் காலம் பலவகையிலும் சுருங்குகிறது. கல்வி காலத்தைச் சுருக்குகிறது. தந்தி, தபால் அதைச் செய்கின்றன.

பக்தன் - சுருங்காதது சுருங்காது. சுருங்குபவை அதிகமாகச் சுருங்கும் என்றால் 1000 மடங்கும் சுருங்குமா?

பகவான் - புறம் அகமானால் சுருக்கம் ஏராளம். உலகம் சுற்றி அறிவதை பூகோளப் புத்தகம் சுருக்கமாகக் கூறும். கையால் செய்வதை அறிவால் செய்தால் காலம் சுருங்கும். சர்ச்சில், நெப்போலியன், சிவாஜி, காந்திஜீ போன்ற தலைவர்களை உற்பத்தி செய்ய ஒரு குடும்பம் பல தலைமுறைகளாகப் பாடுபடுகிறது. இன்று ஒரே தலைமுறையில் உற்பத்தி செய்யலாம். அதற்காகப் பள்ளி வைத்து 15 ஆண்டில் உற்பத்தி செய்யலாம்.

பக்தன் - புறத்தில் உழைப்பால் செய்வதை அகத்தில் அறிவால் செய்வது காலத்தைச் சுருக்கும் என்பது விளங்குகிறது. அதை அடுத்த கட்டத்தில் ஆன்மாவில் ஞானத்தால் செய்வது உடனே முடியும் என்றால் புரியும்.

பகவான் - அதற்கு யோகம் எனப் பெயர்.

பக்தன் - அந்த யோகத்திற்கு உடலுக்குரிய ஆசனம் போன்ற முறைகள் பயன்படா. எந்த முறை பயன்படும்?

பகவான் - மனத்திற்குப் பாராயணம் பயன்படாது. அறிவும் நெடுநாளைக்குப் பயன்படாது. ஞானம் பயன்படும். அடுத்த கட்டம் integral experience பூரண அனுபவம் பயன்படும்.

பக்தன் - படிப்பு, பயிற்சி, அனுபவம் என்பது ஒர்க்ஷாப்பில் உடல் பெறுவது. படிப்பை விடப் பயிற்சியும், பயிற்சியை விட அனுபவமும் காலத்தைச் சுருக்கும். பயன் அதிகம். மனம், ஆன்மாவில் அது எப்படி வெளிவருகிறது?

பகவான் - புத்தகம் எனக் கொடுத்தால் மனப்பாடம் செய்பவனுக்கு அதன் விஷயம் புரியாது என்பதுபோல் அறிவால் புரிந்து கொள்பவனுக்கு மனப்பாடத்தை விட அதிகமாகப் புரிந்தாலும், மூலம் புரியாது.

பக்தன் - மனப்பாடம் செய்பவன் அறிவிருந்தாலும் உபயோகப் படுத்துவதில்லை.

பகவான் - அதேபோல் அறிவால் புரிந்து கொள்பவன் ஆத்மா இருந்தும் பயன்படுத்துவதில்லை.

பக்தன் - எப்படி ஆன்மாவை அனுபவிக்கச் செய்வது?

பகவான் - அறிவைப் பயன்படுத்துவதில்லை என்றால் அறிவு விலகும். விலகினால் ஆன்மா வெளிவரும்.

பக்தன் - அது பெரியது, integral experience முழு அனுபவம். கேட்கவே தயக்கமாக இருக்கிறது.

பகவான் - ஆன்மா என்பது சத்தின் அனுபவம். ஆன்மா விலகி சத் முன்வந்தால் அதற்கு முழுமையுண்டு. அதன் அனுபவம் முழுமையானது.

பக்தன் - அறிவு சமர்ப்பணத்தால் விலகி ஆன்மாவை வெளிப்படுத்துமா?

பகவான் - அறிவு சமர்ப்பணத்தால் வளரும் ஆன்மாவை வெளிப்படுத்தும். ஆன்மாவை அறிவு தியானத்தில் எட்டும்.

பக்தன் - தியானம் பலிக்க ஒரு ஜென்மமாகுமே.

பகவான் - சரணாகதியை ஏற்றால் உடனே பலிக்கும்.

பக்தன் - சரணாகதி பலிக்க பல ஜென்மங்களாகும்.

பகவான் - எழுத்துக் கூட்டிப் படிப்பவன் எட்டுப் புத்தகம் படிக்க 10 வருஷமாகும். நாமெல்லாம் எழுத்துக் கூட்டிப் படித்துத்தான் கற்றுக் கொண்டோம். எட்டுப் புத்தகம் படிக்க எட்டு மாதமாகாது. ஏன்?

பக்தன் - பள்ளிப்பயிற்சி.

பகவான் - பெரிய பள்ளிகளில் படித்த 10ஆம் வகுப்பு பையன் ஒரு நாளில் 200 பக்கம் படிக்கிறான். வேறு பள்ளியில் படித்தவன் 200 பக்கம் படிக்க 10 நாளாகிறது.

பக்தன் - பெரிய பள்ளியில் படிப்புக்குரிய சூழல் உள்ளது.

பகவான் - சத்தியஜீவியம் உலகில் இருப்பதால், அன்னைச் சூழலிருப்பதால் சரணாகதி பலிக்க பல ஜென்மமாகாது.

பக்தன் - ஒரே ஜென்மத்தில் பலிக்குமா?

பகவான் - உடனே பலிக்கும்.

பக்தன் - எனக்குப் பலிக்கவில்லையே.

பகவான் - அறியாமை மீதுள்ள ஆசையை விட்டவுடன் பலிக்கும். முடியாது என்ற பொழுது விட்டுவிடுகிறோம். இது negative surrender. முடியும் என்ற பொழுது விட்டு விடுவது conscious surrender.

பக்தன் – Silent willஇல் வருகிறது.

பகவான் - Silent will என்பது பேசுவதை விட்டுக் கொடுக்கிறது. பேச்சிற்கு அடுத்தது உணர்ச்சி. அதற்கடுத்தது செயல். உணர்ச்சியை விட்டுவிட்டால் உலகம் புரளும். செயலை விட்டுவிட்டால் ஜெகத்தை ஆளலாம்.

பக்தன் - Silent willபோல உணர்வையும், செயலையும் விட்டுக் கொடுத்தால் காலம் சுருங்கும். சரணாகதி சீக்கிரம் பலிக்கும். என் அனுபவத்தில் 8 வருஷத்தில் முடிந்தது. நான் முயலவில்லை என்ற முடிவுக்கு வந்தவுடன் ஒரு நாள் மாலை 2 மணிக்கு ஆரம்பித்து மறுநாள் மாலை 4 மணிக்கு முடிந்தது. அறிவதைச் சரணம் செய்து, உணர்வதைச் சரணம் செய்து, காரியம் செய்வதைச் சரணம் செய்தால் சரணாகதி பலிக்கும் என்பது தத்துவம்.

பகவான் - இது பலிக்க ஆரம்பித்தால் முதலில் காரியம் பெரியதாகும். மனம் காரியத்தை விட்டகன்றால் முறை புரியும். அதை விட்டகன்றால் ஞானம் வரும். அது பூரண ஞானம்.

பக்தன் - சரணாகதி பலிக்க ஆரம்பிக்கும்வரை பொறுத்திருக்க வேண்டும். இந்தத் தத்துவம் பலிக்கும் முறைப்படி பாடம் சொல்லிக் கொடுத்தால் மேதைகள் உற்பத்தியாவார்கள். உலகத் தலைவர்களை உருவாக்கலாம்.

பகவான் - அது உண்மை. அதற்கு வேண்டிய இரண்டு,

  1. பொருத்தமான முறை.
  2. அதைத் தம் வாழ்வில் சாதித்த ஆசிரியர்கள். 

பக்தன் - அப்படிப்பட்ட ஆசிரியர்கள் இந்த முறைகளை எல்லாம் - முரண்பாடு உடன்பாடு, ஜடமே ஆன்மா, 3ஆம் நிலை போன்ற 30, 40 முறைகள் - தங்கள் வாழ்விலும், பயிற்சி முறைகளிலும் பின்பற்ற வேண்டும்.

பகவான் - அது அவசியம்.

பக்தன் – The Life Divineஐ வாழ்வுடன் பொருத்தி அங்கு கூறும் தத்துவங்களை எல்லாம் மனதில் வாங்கிக் கொள்வது மேற்கூறியதைச் சாதிக்கும்.

பகவான் - உதவும். சாதிக்கக் கடைப்பிடிக்க வேண்டும்.

பக்தன் - ஒரு தத்துவத்தைப் பல உதாரணங்கள் மூலமும், பல விளக்கங்களை ஒரே நிகழ்ச்சி மூலமும் அறிவது நல்லது.

பகவான் - அது பெரிய விஷயம். எவருக்கும் பிடிக்காது.

பக்தன் - ஒரே நிகழ்ச்சியில் அத்தனை தத்துவங்களையும் புரிந்து கொள்வது முக்கியம். சரணாகதி பலிக்காததற்கு நம் அறியாமையில் நமக்குள்ள unconscious நம்பிக்கை என்று கூறலாமா?

பகவான் - அப்படிச் சொல்லலாம். அது ருசியாக இருப்பது உண்மை. பிச்சைக்காரனை விடுதியில் உட்கார வைத்து சாப்பாடு போட்டால், அவன் தப்பித்துப்போய் பிச்சை எடுக்கிறான். பிச்சை எடுப்பது அவனுக்கு இனிய அனுபவம். நமக்கும் படிப்பு, புதியன கற்பது, ஆராய்ச்சி செய்வது, கண்டுபிடிப்பது, சோதனைகள் செய்வது, பாராயணம் செய்வனவெல்லாம் பிடிக்கின்றன.

பக்தன் - ரொம்பப் பிடிக்கும்.



book | by Dr. Radut