Skip to Content

7. நல்லது மட்டுமே நடக்கும்

அமெரிக்கர் ஒருவர் பாண்டிச்சேரி வந்திருந்தார். 56 வயதானவர். மனைவி, 3 வயதுவந்த குழந்தைகளை விட்டுவிட்டு வந்திருந்தார். அவருடைய வீட்டில் (telex) தந்தி வசதி இருந்தது. இங்கு வந்து தங்குமிடத்திலும் அதே வசதியிருந்ததால், தம் மனைவியிடம் வீட்டுச் செய்திகளை அடிக்கடி அனுப்பும்படிச் சொல்லி இருந்தார். வந்தவர் வந்த வேலையில் மூழ்கித் தம்மை மறந்திருந்தார். 7 நாட்களாக மனைவியிடமிருந்து ஒரு செய்தியும் இல்லை. அதாவது அவர் வேலையைப் பற்றிய செய்திகள் அடிக்கடி வருகின்றன. வீட்டில் உள்ளவர்களைப் பற்றிய செய்திகள் ஒன்றுகூட இல்லை. 7ஆம் நாள் அவர் மனம் உடைந்துவிட்டார். செய்தி நல்லதாக இருந்திருந்தால் என் மனைவி அனுப்பியிருப்பாள். நல்ல செய்தியில்லை என்பதால் அதை இங்கு அனுப்பி என் வேலையைக் கெடுக்கக்கூடாது என்று எண்ணி அனுப்பாமலிருக்கிறாள் என்று தீர்க்கமான முடிவுக்கு வந்து கலங்க ஆரம்பித்தார். இப்படிப்பட்ட நேரங்களில் அன்னை என்ன ஆலோசனை கூறுகிறார் என்றறிய முயன்றபொழுது, "நல்லது மட்டுமே நடக்கும்'' என நினைத்து மற்ற எண்ணங்களை விலக்க வேண்டும் என அன்னை கூறியிருப்பது தெரியவந்தது. அவர் மனம் அதை ஏற்றுக்கொண்டது. உணர்ச்சி ஏற்றுக்கொள்ள மறுத்தது. போராடி உணர்ச்சியைத் தம் கட்சியில் சேர்த்துக்கொண்டார். அது மனநிம்மதியைக் கொடுத்ததுடன், மன நிறைவையும் கொடுப்பதைக் கண்டு வியந்து, தன் வியப்பை விளக்கிக்கொண்டிருக்கும்போது வீட்டில் உள்ள தந்தி ( telex) மெஷின் அடிக்க ஆரம்பித்து "everyone here is in top form'' அனைவரும் இங்கு அற்புதமாக

இருக்கிறார்கள் என்ற செய்தி வந்தது. இதுவே நல்லது மட்டும் நடக்கும் என்ற எண்ணத்திற்குள்ள பலம். நினைத்ததை நடத்திக் கொடுக்கும் திறம்.

அன்னையை வந்தடைந்தபின் நல்லது மட்டும் நடக்கும்; இல்லை என்பது இங்கில்லை; எது நடந்தாலும் அது பின்னர் நன்மையை மட்டுமே விளைவிக்கும்; என்பதெல்லாம் உண்மை. எண்ணத்தின் திறத்தால் விளையும் நன்மை அவற்றிலிருந்து சிறிது வேறுபட்டுள்ளது. உதாரணமாக, புகழ் வாய்ந்த பள்ளியில் போய்ச் சேர்ந்தால் தானே பாஸ் வரும், பெயிலாக இங்கு வழியில்லை எனும்பொழுது, அது பள்ளியின் திறனைப் பற்றிப் பேசுவதாகும். மாணவன் சிறந்த முறையைக் கையாண்டு, அதனால் பெரும்பலன் பெறுவது மாணவனுடைய தனித்திறமையைக் காட்டும். அன்னையால் நல்லது மட்டுமே நடக்கும் என்பது அருளின் திறன். எண்ணத்தால் நல்லது மட்டுமே நடக்கும் என்று பக்தன் நம்புவதால் நடப்பது பக்தனுடைய உயர்வு. அன்னை அம்முறையை மிகச்சிலாக்கியமானதொன்றாகக் கூறுகிறார். அப்படிப்பட்ட பக்தன் அன்னையின் அருளை ஏற்றுக் கொள்வது, சிறப்பான மாணவன் புகழ் வாய்ந்த கல்லூரியில் சேர்ந்து, சிலாக்கியமான முறையொன்றைத் தானே கடைப்பிடிப்பது போலாகும்.

நல்லது மட்டுமே நடக்கும் என்ற கருத்தை அன்னை அளவின்றி வற்புறுத்தியுள்ளார்கள். குப்புற விழுந்தாலும் அதுவும் அருளின் செயலே என்று நாம் உணர வேண்டும் என்று அன்னை அருளுக்கு விளக்கம் கொடுக்கும்பொழுது சொல்கிறார்கள். இக்கூற்றில் பொதிந்துள்ள உண்மை பெரியது. எனினும் ஒரு பெரிய ஆன்மீக உண்மையைச் சுட்டிக்காட்டும் கூற்றாக எடுத்துக்கொண்டபின் மட்டுமே இதன் பயனை நாம் அடைய முடியும். தர்க்கத்துக்குரிய கருத்தாக எடுத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்யலாம் என்றால், இக்கட்டுரையின் நிலை அதற்கு இடம் கொடுக்காது. தர்க்கத்திற்குரிய இடத்தில் தர்க்கரீதியாக அவ்வுண்மையை நிலைநாட்ட முடியும். அதைத் தவிர்த்து ஆன்மீகப் பேருண்மையை சுட்டிக்காட்டும்

கருத்தாகக் கொண்டு, அதை விளக்குவதற்குத் தேவையான லௌகீக உதாரணங்களையும், உணர்ச்சிபூர்வமான நிகழ்ச்சிகளையும், அறிவுபூர்வமான விளக்கங்களையும் மட்டும் கட்டுரையில் எழுதுகிறேன்.

இந்த நிகழ்ச்சிகள் இரு வகைகளாகும். ஒன்று பெரிய சிரமத்தை விலக்குவதற்கு ஏற்படும் சிறிய சிரமம். மற்றொன்று பிற்காலத்தில் பெரிய நல்லதைக் கொடுக்க இப்பொழுது ஏற்படும் பெரிய சிரமம்.

1965இல் ( F.A.O.) உலக உணவுக் கழகத்தினர் தம் வல்லுனர்களை அனுப்பி இந்திய உணவு நிலைமையைக் கணிக்கச் சொன்னார்கள். அடுத்த 5 ஆண்டில் 10 இலட்சம் பேர் பட்டினியால் இறப்பார்கள் என்ற ரிப்போர்ட் கொடுத்தார்கள். இந்திய அரசாங்கம் பீதியடைந்து இந்த நிலைமையைத் தவிர்க்க எதையும் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து, ஆண்டுக்கு 100 கோடி பெறுமான கோதுமையை இறக்குமதி செய்ய வேண்டும், இந்திய விவசாயத்தைப் புதுப்பிக்க வேண்டும், என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்ததால் பசுமைப் புரட்சி ஏற்பட்டு, உணவு உற்பத்தி பெருகி, அத்துறையில் இந்தியா உலகத்தின் தலைமைப் பதவியை அடைந்து, அந்த சாதனைக்காக உலகப் பரிசுகள் இரண்டையும் பெற்றது. 1965இல் வந்த பஞ்சம், இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லதை விளைவித்தது.

டாக்டரிடம் சென்று டான்ஸில் இருக்கிறது என்று காண்பித்தால், சில சமயங்களில் அதை எடுக்கக்கூடாது; எடுத்தால் வேறு பெரிய கோளாறு வரும். உடலுக்குப் பெரிய கோளாற்றைத் தடுக்கும் திறன் உண்டு. அது கையாளும் உபாயங்களில் டான்சில் ஒன்று என்று சொல்வதுண்டு.

சண்டை, சச்சரவை எவரும் விரும்புவதில்லை. அதுவும் வீட்டிற்குள் அவை வந்தால் மனநிம்மதி போய்விடும். வயது முதிர்ந்த

அனுபவசாலிகள் ஒருவர் வீட்டில், எல்லோரும் தனித்தனியே பிரிந்து போய்விட்டார்கள். தாய் தனி, தகப்பன் தனி, அவரவர்கள் தனித்தனியே இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டால், அவர்கள் வீட்டில் எப்பொழுதுமே சண்டையிருந்ததில்லை. அதனால்தான் பிரிந்து விட்டார்கள்' என்று சொல்வது வழக்கம். பண்புள்ள குடும்பம் அன்பால் அரவணைக்கப்படுகிறது. பண்பு குறைவாக இருந்தால் சண்டையும், பூசலும் கிளம்பும். சச்சரவுகள் மூலம் மனத்திலுள்ளதைக் கொட்டித் தீர்த்துவிடுவார்கள். பிறகு ஒன்றாக வாழ்வார்கள். பண்பும் இல்லை, சண்டையும் இல்லை என்றால், கொட்டித் தீர்க்காத வெறுப்புகள் அவர்களைப் பிரித்துவிடும்.

கலைஞர்கள் இருவர். ஒருவர் திறமைசாலி ஆனால் புகழ் பெறவில்லை. மற்றவருடைய புகழ் அவருக்குப் பொறாமையைக் கொடுத்தது. அவரைக் கொலை செய்ய முயன்றார்; தவறியது. அந்த நிகழ்ச்சிக்கப்புறம் மற்றவருடைய புகழ் அதிகமாகி, அடுத்த துறைகளிலும் பரவி, மாநிலத்தினின்று நாடு முழுவதும் புகழ் பரப்பியது. வந்த பெருங்கேடு அபரிமிதமான வெற்றிக்கு வித்தாகி விட்டது.

ஒரு தெய்வ பக்தியுள்ள சாமானிய மனிதன். இவருடைய தூய்மையான பக்தி ஒரு பெரிய மடத்தில் முக்கிய பதவி வகிப்பவனுக்குக் கண் உறுத்தலாயிருந்தது. அவனோடு சாமானிய மனிதன் தொடர்புகொண்டதால் ஏற்பட்ட விளைவு, பெரிய மந்திரக்காரன் மூலம் இந்த எளியவனுடைய உயிரைப் போக்க அந்த மடத்து அதிகாரி ஏற்பாடு செய்தான். எளியவனுக்கு அது புரிய நாள் ஆயிற்று. புரிந்தபின் தன் பக்தியால் உயிரைக் காப்பாற்ற முடிவு செய்தான்; வெற்றி பெற்றான். எளிய பக்தி இந்நிகழ்ச்சியால் உயர்ந்த சித்தாக அவனுக்கு மாறியது. எந்த ஒரு கஷ்டமும் உயர்ந்த நிலைக்கு உன்னை உயர்த்த முயலும் பாதை என்பது பெரியோர் வாக்கு.

12 வயதில் கிழிந்த கால்சட்டையுடன் சென்னைக்கு ஓடி வந்த

சிறுவன் பல கோடி சம்பாதித்தபின், தன்னூரில் தன்னுடன் இருந்த பிள்ளைகளைப் பார்க்கும்பொழுது, நானும் அவர்களைப்போல் குமாஸ்தாவாக இல்லை என்பதற்கு ஒரே காரணம் அன்று வறுமை தாங்காமல் ஓடி வந்தேன் என்பதுதான் என்று தனக்குத் தானே விளக்கம் கொடுப்பது நமக்கு விளங்கும். ( social events) வாழ்க்கையில் நடக்கும் பொது நிகழ்ச்சிகளில் பொதிந்துள்ள இந்த உண்மை எல்லோருக்கும் விளங்கும். தனிப்பட்டவருடைய வாழ்க்கையில் உத்தியோகத்தை இழந்தது, செல்வத்தை இழந்தது, பிறர் அறிய முடியாத கொடுமைகளை அனுபவித்தது போன்ற நிகழ்ச்சிகளால் அவருக்கு எதிர்காலத்தில் கிடைத்த பலன்களை மற்றவர்கள் அறிய முடியாது. ஆனால் அவருக்குத் தெளிவாகத் தெரியும்.

சிறு வயதில் மாற்றாந்தாய்க் கொடுமையை அனுபவித்தவனிடம் அது அவனுக்கு நல்லதையே விளைவித்திருக்கும் என்று மற்றவர் சொல்ல முடியாது. அவனுக்கே பெரும்பாலும் தெரிய முடியாது. அதை நினைத்தாலே ஆத்திரம் வரும்பொழுது ஆராய்ச்சிக்கு இடமேது. அப்படிப்பட்ட ஒருவர் A.G.S. ஆபீஸில் குமாஸ்தாவாகச் சேர்ந்தார். தமக்கு மாற்றாந்தாய் இழைத்த கொடுமையை நினைந்து, அதனால் தமக்குக் குழந்தை பிறக்கக்கூடாது என்று அவர் பிரார்த்தனை செய்ததுண்டு. உயர்ந்த மனமுடையவராதலால் அதே மாற்றாந் தாய்க்கு அவர் எதிர்பாராதவிதமாக ஆயிரம் உதவி செய்து, பெரிய அன்பளிப்பையும் கொடுத்தார். புறச் செயலை மாற்றிக்கொண்ட பெருந்தன்மையிருந்தும், மனம் அந்தக் கொடுமைகளை மறக்கவில்லை. அவருடைய நண்பர்கள் பெரும்பாலோர் குமாஸ்தாவாகவும், சூப்பிரெண்டெண்டாகவும் ரிடையர் ஆனார்கள். இவர் Deputy A.G.. பதவிக்கு உயர்ந்தார். சிறு வயதில் பட்ட கொடுமை, அதை மறக்க முயன்றதால் ஏற்பட்ட திறன், அவருடைய நிலையை உயர்த்தியது. இவை போன்ற மறைபொருளாயுள்ள உண்மைகள் விவேகிகளுக்கே தெரியும். பிரச்சினைக்குரியவருக்கே சமயத்தில் தெரிவதில்லை.

(Spiritual truths) ஆன்மீக நிகழ்ச்சிகளின் பலன் அடுத்த

பிறவியில் தெரியும். அன்னை பக்தர்களுக்கு அதுவும் உடனே தெரியும்படி நிகழ்ச்சிகள் நிகழும்.

ஒரு மாஜிஸ்ட்ரேட்டுக்கு வயதுவந்த பிள்ளைகள் 4 பேர். அவர் மனைவி இறந்துவிட்டார். மாஜிஸ்ட்ரேட் campக்குப் போயிருக்கும் பொழுது பிள்ளைகள் அடித்துக்கொண்டனர். ஒருவன் மற்றவனைக் கடித்துவிட்டான். ஒருவாறாகச் சண்டை ஓய்ந்தது. மூன்றாம் பிள்ளை சொல்லாமல் ஓடிவிட்டான். சென்னைக்கு ஓர் உறவினர் வீட்டிற்குப் போய்த் தங்கினான். அவருடைய நண்பர் பெரிய அதிகாரி. பையனைப் பார்த்தார்; படிப்பை விசாரித்தார்; தம் பெண்ணைக் கொடுப்பதாகச் சொன்னார்; பையன் சம்மதித்தான். குடும்பத்தோடும், பையனுடனும் மாஜிஸ்ட்ரேட்டைச் சந்தித்து மணம்முடித்தார். சண்டை போட்டு, கடித்து, வீட்டை விட்டு ஓடியதன் முடிவு திருமணம்.

உத்தமமான குணம் உடையவருக்கு எல்லாக் கெட்ட பழக்கங்களும் இருந்து, அவர் பெற்ற பெருஞ்செல்வத்தை அழிக்க உதவியது. வாழ்க்கையில் எல்லையைத் தாண்டி பயங்கரத்தின் ராஜ்யத்திற்குள் அடி எடுத்து வைத்துவிட்டார். அவரது ஆன்மா விழிப்படைந்தது. ஆன்மாவின் தலைவனுக்கு அறைகூவல் அனுப்பியது. குரல் இறைவன் காதில் விழுந்தது. விழுந்த குரலை இறைவன் ஏற்றுக் கொண்டான். பயங்கரத்திலிருந்து திரும்பி வந்தார். ஒரு சிறிய சௌகரியம் ஏற்பட்டது; ஏற்றுக்கொண்டார். பல பெரிய சௌகரியங்களை இறைவன் அளித்தான்; ஏற்றுக்கொள்ள மறுத்தார். அவர் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேறு சௌகரியங்களை அளித்தான்; ஏற்றுக்கொண்டார். இறை பணியை அளித்தான்; முழுவதும் ஏற்றுக் கொண்டார். அந்த இருளின் எல்லைக்குப் போகாமலிருந்தால், இன்று ஒளியின் சேவை கிடைத்திருக்காது என்று அவருக்குப் புரிய முடியாது. இவை ஆத்மீக உண்மை. பொதுவாக அடுத்த பிறவியில் பலிக்க வேண்டியது. அருள் இருந்ததால் இதே பிறவியில் பலித்தது.

ஆன்மீகக் கருத்து என்பதால் ஏற்றுக்கொள்ளலாம் என்று

நினைத்தமாத்திரத்தில் மனம் ஆயிரம் கேள்விகளை எழுப்பும். ரூ.2,500 சம்பாதித்த கணவன் வேலையிழந்து வீட்டில் அயர்ந்து உட்கார்ந்து இருக்கிறார் எனும்பொழுது, மனைவியின் மனம், இது ஆன்மீக உண்மை. ஆகையால் இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்' என்று சொல்ல முன்வருமா? கோபமும் எரிச்சலும்தான் வரும். இப்பொழுது யாராவது ஆன்மீகத்தைப் பற்றிப் பேசினால் ஆன்மீகத்தின் மீது கோபம் வரும். ஒரு பெண்மணி பெரியமனது செய்து அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டார். இதுவும் நல்லதே' என்று தமக்கே சொன்னார். 15ஆம் நாள் ரூ.3000த்தில் வேலை கிடைத்தது. புரட்சி செய்யும் மனம், ஆன்மீகக் கருத்தைப் புரிந்துகொள்ள வந்ததன் பலன் இது.

அபாரத் திறமையுடைய பாதிரியார் ஒருவர். ஒரு பள்ளிக்கூடம் கட்ட மடத்தில் உதவி கேட்டார். மடம் மறுத்தது. உடன் அவரை கேலியும் செய்தது. முடிந்தால் மடத்தின் உதவியில்லாமல், நீயே பள்ளியைக் கட்டு என்று சவால்விட்டது. சவாலை ஏற்றுக்கொண்டார். 400 வருட சரித்திரத்தில் இல்லாத ஒரு காரியத்தைச் சாதித்தார். மடத்தின் உதவியில்லாமல் பெரிய பள்ளியைக் கட்டினார். அதன் விளைவாக அளவுகடந்த புகழ் அடைந்தார். புகழ் அடைந்தது 25 ஆண்டுகளுக்குப்பின். மடம் கேலி செய்யும் காலத்தில் இதுவும் எனக்கு நல்லதே' என்று தன் மனத்திற்கே தான சொல்லக்கூடிய தைரியம் அசாதாரணம்.

உன் மைத்துனன் இறந்துவிட்டான் என்று தந்தி வந்தபின், இறந்தவரை போனில் கூப்பிட்டார் ஒருவர். இறந்தவர்' போனில் பேசினார். முடிந்துவிட்டதாக வாழ்க்கை அறிவிக்கும் செய்தியை ஏற்றுக்கொள்ள மறுக்கும் தைரியமும், மனத்தெளிவும் இருந்தால், அது நிலைமையை மாற்றிவிடக்கூடிய திறனுடையது.

வருத்தப்படக்கூடிய செய்த வந்தபின், நிகழ்ச்சி நடந்தபின், வருத்தப்படமாட்டேன் என்ற உறுதி அந்தச் செய்தியை மாற்றவல்லது. மனம் உறுதியானால் வாழ்க்கை அதற்குட்பட்டு வளைந்துகொடுக்கும்.

Little Princess இளம் இராஜகுமாரி' என்ற ஒரு ஆங்கிலக் கதையில், செல்வர் தன் மகளைப் பள்ளியில் சேர்க்கிறார். எல்லோரும் அவளைப் புகழ்கின்றனர். வைரச்சுரங்கத்தில் முதலிட்டு, ஏமாந்து, மாரடைப்பால் இறந்து, இராஜகுமாரியை வெறும் குமரியாக்கிவிட்டார் தகப்பனார். எல்லோரும் புகழ்ந்தபோது தானிழக்காத நிதானம் இன்றும் அவளுடன் நிலைத்துநின்றது. வறுமையின் வண்ணங்களைப் பூரணமாக அனுபவிக்கும்பொழுதும் நல்ல மனப்பாங்கை அவள் இழக்கவில்லை. தகப்பனுடைய பார்ட்னர் அவளைத் தேடி அலைந்து, உலகெங்கும் கிடைக்காத நிலையில், அடுத்த வீட்டில் கண்டுபிடித்து, நஷ்டமான சுரங்கம் மேலும் தோண்டிய நிலையில் அதிக லாபத்தைக் கொடுத்ததாகவும், அதற்கு அவளே வாரிசு எனவும் அறிவித்தார்.

வாழ்க்கை வளத்தை உற்பத்தி செய்வது மன வளம். வற்றாத மன வளம் வாழ்க்கையின் வளத்தை மீண்டும் அவளுக்குக் கொண்டு வந்து கொடுத்தது.

புற நிகழ்ச்சி எதுவானாலும் அகவுணர்வு நல்லது மட்டுமே நடக்கும் என்று அகமகிழ்ந்து சொல்லுமானால், அளவிறந்த நன்மையை அவ்வுணர்வு ஏற்படுத்தக்கூடியது. அத்தகைய சிறப்பு மனித உள்ளத்திருந்தால் அன்னை அங்கு அமுதத்தைச் சுரக்கச்செய்வார்.

எந்த ஒரு நிகழ்ச்சியோ, செய்தியோ நம்மைத் தேடி வரும் பொழுது, இது நல்ல செய்தியாக மட்டுமே இருக்கும்' என உண்மையாக மனத்தளவில் நம்புபவர்கட்கு நல்ல செய்திகள் மட்டுமே வருவதை நான் பார்த்திருக்கின்றேன்.

இளவயதில் கொடுமைக்காளானவர்கள், பள்ளியில் எல்லாப் பிள்ளைகளாலும் கேலி செய்யப்பட்டவர்கள், குடும்பத்தினராலேயே வெறுத்து ஒதுக்கப்பட்டவர்கள், உரிய பதவி உயர்வு மறுக்கப்பட்டவர்கள், அறிவின் திறத்தை அறிந்து புறக்கணிக்கப்பட்டவர்கள், பொய் வழக்கால் புகலிடம் இல்லாமல்போனவர்கள், ஜாதிப்பிரஷ்டம் செய்யப்

பட்டவரைப்போல் சேவை செய்ததற்காக ஒதுக்கப்பட்டுத் தண்டனை அனுபவித்தவர்கள், வேலையிலிருந்து விலக்கப்பட்டவர்கள் வாழ்க்கையின் உச்சிக்குச் சென்றதை நாம் அறிவோம்.

ஒரே சட்டை வைத்திருந்த ஏழைப் பையனைச் சிறு வயதில் நண்பர்கள் எல்லாம் எக்காளமிட்டு சிரித்து, கேலி செய்வதால் அவன் மணி அடித்தவுடன் வீட்டுக்கு ஓடிவிடுவான். பிற்காலத்தில் அவன் புகழ் மாநிலமெங்கும் பரவி, உயர்ந்த ஸ்தாபனத்தின் தலைவனாகவும் ஆனான்.

அளவுகடந்த எழுத்துத் திறமையிருந்தும், எழுத்தாளர் மத்தியில் வாழ்ந்த ஒரு பையனுக்கு அவனுடைய திறமையைப் பாராட்ட ஒருவரும் முன்வரவில்லை. அவர்கள் சேர்ந்து நடத்திய அச்சகத்தில் ஒரு கம்பாஸிட்டர் வேலை கொடுத்தார்கள். 20 ஆண்டுகளுக்குப்பின் அவர்களுள் ஒருவர் பெயர்கூட உலகில் வெளிவரவில்லை. அவனுடைய எழுத்து நாட்டில் பெறாத பரிசேயில்லை.

திறமைக்கும், புலமைக்கும், உரிமையான ஒருவரை ஒதுக்கி விட்டு, வெற்று மாணவனுக்கு ஆசிரியர் முதல் பரிசைப் பாரபட்சத்தின் பரிசாகக் கொடுத்தார். வாழ்க்கை ஓடியது. பரிசை வாங்கியவர் அதன் உதவியால் ஆறு அங்குலம் உயர்ந்தார். மற்றவரைக் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் தேடிவந்தன. புலமையை மெச்சி பேராசிரியர் பதவி அளித்தனர். புதிய பல்கலைக்கழகம் நிறுவும் பொழுது அவரை முதல் துணைவேந்தராக நியமித்தனர்.

இராமலிங்க சுவாமி எழுதியது அருட்பா இல்லை, அது மருட்பா என ஓர் அறிஞர் வழக்குப் போட்டார். இன்று அவர் பெயர் நம்மில் எவருக்கும் தெரியாது. இராமலிங்க வள்ளலை அறியாதவர் நாட்டில் இல்லை.

கெட்டதாலும், கொடுமையாலும், வம்பாலும், வழக்காலும், பாரபட்சத்தாலும், கேலியாலும், புறக்கணிக்கப்பட்டதாலும், பின்னால்

நல்லதே ஏற்படும் என்று சில நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டேன். இந்த மனப்பான்மை இருந்தால் அன்னை அதன் மூலம் அளவுகடந்து செயல்படுவார்கள் என்றேன். 25, 30 வருஷங்களுக்குப்பின் வாழ்க்கை அளிக்கும் பலன்களை அன்னை 25 மாதத்திலும், 25 நாட்களிலும் வழங்குவார். அந்த மனப்பான்மையைப் பெற, அதன் மூலம் அன்னை வழிபாட்டைச் சிறப்புறச் செய்ய, நாம் செய்ய வேண்டியதென்ன? செய்யக்கூடியது என்ன?

முதல் கடமையாக எந்தக் காரியம் நடந்தாலும், அதை நல்ல காரியமாக மட்டும் கருதி, அதற்கேற்ற நடைமுறையை மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒருவன் உன்னைப் பொறாமையால் திட்டி அவமானப்படுத்தினால், இதில் ஏதாவது 1% உண்மையிருக்குமா, நான் திருந்த உதவுமா என மனம் கருத வேண்டும். அவனுடைய பேச்சுக்கு அவனை அறைவதே தர்மம் என்றாலும், அது போன்ற காரியத்தையோ, சொல்லையோ சொல்லாமலிருக்க முடிவு செய்ய வேண்டும்.

திட்டியவனுக்குப் பதில் சொல்லாமல் சமாளித்துக்கொண்டு வந்துவிட்டது பெரிய காரியமானாலும், மனம் ஆயிரம் திட்டுகளை அவனுக்கு வழங்கும். அது நம் கட்டுப்பாட்டில் இருக்காது. செயலில் கிடைத்த வெற்றி, எண்ணத்தில் கிடைக்காது. கால் பங்கும் கிடைக்காது. அறிவை விளக்கம் செய்து, அதற்குரியவற்றைச் சொல்லி புரியவைத்து, பின்னர் நம் பக்கம் இழுக்க முயன்று வெற்றி பெற்றால், அது மௌனம் சாதிப்பதைவிடப் பெரிய காரியம். முடிந்தவரை பயின்று, மேலும் தொடர முடிவு செய்ய வேண்டும்.

செயலைக் கட்டுப்படுத்தி, அறிவை நம் பக்கம் சேர்த்துக் கொண்டாலும், உணர்ச்சி பொங்கி எழும். எப்பொழுதுமே நமக்கு அது கட்டுப்பட்டதில்லை. இதுபோன்ற சமயங்களில் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முயல்வது அறிவீனமாகத் தோன்றும்.

Air Force-ல் சேர ஆள் எடுப்பதைக் கேள்விப்பட்டு 400 பேர் வந்தார்கள். அவர்களை வரிசையாக நிற்கச் சொல்லிப் பார்த்துக் கொண்டே வந்த சார்ஜண்ட் இராமசாமியைப் பார்த்ததும் இடப் புறங்கையால் வேகமாக இராமசாமியின் மார்பில் அறைந்தார். அவர், மேலே மற்றவர்களைப் பார்த்துக்கொண்டு போனார். இராமசாமியின் நிலையும் சார்ஜண்டின் நிலையும், மலையும் மடுவும் போன்றவை. ஏன் அறைந்தார் எனத் தெரியவில்லை; பதில் சொல்ல வாயெழவில்லை; உடல் பதறுகிறது; முகம் சிவக்கிறது; உதடு துடிக்கின்றது. எதுவும் அவர் கட்டுப்பாட்டில் இல்லை. திரும்ப சார்ஜண்டை அவர் அறையாதது ஒன்றுதான் குறை. சார்ஜண்ட் அவரை மட்டும் தேர்ந்தெடுத்தார். "உனக்குள்ள தன்மானத் துடிப்பைப் பார்க்கவே அறைந்தேன். நீ கொதித்தெழுந்ததாலேயே தேர்ந்தெடுத்தேன்'' என்றார் சார்ஜண்ட். உணர்ச்சியையும் மாற்றி, பக்குவத்தை ஏற்றுக்கொள்ளச் சொல்வதை விட யோகமும், தவமும் எளிது என்று தோன்றும். அதுவும் ஒரு வகையில் உண்மையே.

புறச் செயலை அறிவுக்கு உட்படுத்தி, அறிவை விளக்கத்தை ஏற்றுக்கொள்ளச் செய்து, உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி, பக்குவத்தை ஏற்றுக்கொள்ளச் செய்து இந்த பயிற்சியை ஆரம்பிக்கலாம்.

இவ்வளவையும் ஒருவாறு சாதித்தபின், பழைய பழக்கங்கள், எண்ணங்கள், உணர்வுகள் ஆயிரம் முறை நம் கட்டுப்பாட்டை மீறி எழும். அவற்றை ஒவ்வொரு முறையும் மாற்றி, புதிய அன்னை பாதையில் கொண்டுவருவதே இம்முறையின் குறிக்கோள்.

அதில் வெற்றி கிடைக்க ஆரம்பித்தால் அதன் பிரதிபலிப்பு வாழ்க்கையில் எப்படியிருக்கும் என்பது ஒரு கேள்வி. நமக்குக் கிடைக்கும் வெற்றிக்கு மூன்று நிலைகள் உள்ளன. ஒவ்வொன்றும் முந்தையதைவிட ஆழமானது. ஒவ்வொரு நிலைக்கும் உரிய பிரதிபலிப்பு எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்.

முதல் நிலை அறிவு நிலை. அடுத்தது உணர்வு நிலை. அதற்கடுத்தது ஆழத்தில் உள்ள முழுநிலை. ஓர் உதாரணத்தின் மூலம் கூறுகிறேன்.

ஒரு நகை அல்லது உரிமை அல்லது சொத்துப் பிரச்சினை ஏற்படுகிறது. ஒருவருக்கு முழு உரிமையிருக்கிறது. ஆனால் உரிமையை நிலைநாட்ட வேண்டிய எல்லா அத்தாட்சிகளும் இல்லை. ஓர் அத்தாட்சிகூட இல்லை. ஊரில் பலருக்கும் உண்மை தெரியும். என்றாலும் பஞ்சாயத்தில் உண்மையைவிட தாஸ்தாவேஜூ மட்டுமே செல்லுபடியாகும். இந்த நிலையில் அவருக்குச் சந்தேகம் வரும். பல எண்ணங்கள் தோன்றும். இல்லை என்று மனம் கூறும். இருந்தாலும் யார் நியாயத்தைப் பேசுவார்கள் என்று மனம் கேட்கும். எழுத்தில் இல்லாததை எவர் ஏற்றுக்கொள்வார் என்று மனம் கூறியபடி இருக்கும்.

இவருக்கு முதல் நிலையான அறிவு நிலையிலேயே நல்லது நடக்கும்' என்று சொல்லிக்கொள்ள முடியாவிட்டால், பிரச்சினையே இல்லை. சொத்து தானே பறிபோய்விடும். பஞ்சாயத்தளவுக்கு வர வேண்டிய கட்டமே வராது. மாறாக அறிவால், தெளிவாக நல்லது நடக்கும்' என்று அவர் நம்பி, உணர்வு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், பஞ்சாயத்தில் அனைவரும் இவருடைய உரிமையை ஏற்றுக் கொண்டு பேசுவார்கள். எவரும் உரிமையை மறுக்கமாட்டார்கள். அறிவு நம்பியதன் பலன் அத்துடன் நின்றுவிடும். மேலும் எழும் விவாதம் பல வகைகளாகச் செல்லும். பஞ்சாயத்தார் இவரை வாயளவில் ஏற்றுக் கொள்கிறார்களே தவிர, சொத்துக்கு உரியவனுக்கு அநீதி இழைக்கப் படுவதை அவர்கள் உணர்வு ஏற்றுக்கொள்ளாது. அதற்குரிய வாதங்கள் எழும். பலன் இவருக்குக் கிடைக்காது.

அடுத்த கட்டமாகிய தம் உணர்வில் நல்லதே நடக்கும். நல்லது மட்டுமே நடக்கும்' என்று இவர் உணர்ந்தால், பஞ்சாயத்தில் அனைவரும் பதறிப்போவார்கள். இவருக்காக உணர்ச்சிபூர்வமாகப்

பரிந்து பேசுவார்கள். ஆனால், வேறொரு பிரச்சினை ஏற்பட்டு முட்டுக்கட்டையாகும். சொத்து இவருக்குக் கிடைக்காமல் போய்விடும்.

கடைசி கட்டமான ஆழ்ந்த மனத்தளவில் அசையாமல் நல்லது மட்டுமே நடக்கும்' என இவர் உறுதியாக நினைத்தால், பஞ்சாயத்தில் குதர்க்கவாதிகளிருந்தாலும், பொறாமைக்காரர்கள் இருந்தாலும், அவர்களெல்லாம் புறக்கணிக்கப்பட்டு சொத்து இவரை வந்தடையும்.

அதுவும் அப்படிப்பட்ட மனநிலையை அன்னை பக்தர்கள் ஏற்றுக் கொண்டால் சாதாரண மனிதனைவிட ஒரு கட்டம் அதிகமாக அவர்களுக்குப் பலிக்கும். சொல்லப்போனால் முதற்கட்ட நல்ல எண்ணம் கடைசியிலே முழுப்பலனையும் கொடுக்கும்.

மனம், மொழி, மெய்களால் நல்லதை மட்டும் விழையும் மனப்பாங்கு, அன்னையை ஏற்றுக்கொண்ட நிலை, இரண்டையும் உடையவர்களுக்குப் புத்தி ஒரு பெரிய கருவி. நல்ல எண்ணம் திறன் வாய்ந்த கருவி. கருவியின் பலனை அன்னை முழுமையாக்கிக் கொடுப்பார்.

ஞானயோகத்தில் இறைவனை உணர ஒரு முறையை முக்கியமாகக் கருதுவார்கள். அந்த விசாரத்தைப் பயிலுவதற்கு, பயின்று இறைவனே எல்லாம், மற்றவை எல்லாம் மாயை என உணருவதற்கு, நான் யார்' என்ற கேள்வியைக் கேட்பார்கள். உடலைப் பார்த்து, நான் உடல் இல்லை'; அறிவைப் பார்த்து, நான் அறிவில்லை', நான் மனமில்லை', நான் செயலில்லை', நான் உணர்வில்லை' என்று நமக்குத் தெரிந்த அத்தனையும் உண்மையான நான்' இல்லை என்று விலக்கியபின் உண்மையான நான்' தானே உதயமாகி, ஞானம் ஏற்படுகிறது. மனிதனை விலக்கி, அவனுள் உள்ள இறைவனை உண்மையான நான்'ஆகக் கண்டறியும் பாதை ஞானயோகம்.

இது நடக்காது', இது ஆபத்து', அவர் உதவமாட்டார்', நான் சொல்வதைக் கேட்கமாட்டார்', எனக்கில்லை இது', என்னால்

முடியாது' என்பன போன்ற ஆயிரம் நம்பிக்கையில்லாத எண்ணங்கள், இல்லை' என்ற எண்ணங்கள் மனதில் தோன்றும். அதுவும் ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கும்முன் தோன்றும். அப்பொழுது எல்லாம் இது அன்னைக்குகந்த எண்ணமில்லை' என இவற்றை விலக்கிக்கொண்டே இருந்தால், இது நடக்கும்', இது சரி', அவர் உதவுவார்', நான் சொல்வதைக் கேட்பார்', எனக்குண்டு', என்னால் முடியும்' போன்ற எண்ணங்களை மட்டும் மனதில் அனுமதிக்கக் கற்றுக்கொண்டால், மனத்தின் போக்கு மாறி, மனப்பாங்கு உயர்ந்ததாகி, வெற்றியின் கருவியாகும். அன்னைக்குரிய அற்புதக் கருவியாகும். இது வாழ்க்கைக்குச் சிறப்பு அளிக்கக்கூடியது. அன்னைக்கு உரியது. அதனால் பெருஞ்சிறப்புக்குரியது. இப்படிப்பட்ட மனப்பாங்கால் வாழ்க்கையில் சாதிக்க முடியாதது என்று ஒன்று இல்லை.

ஸ்ரீ அரவிந்தர் கோட்பாடுகளை அடிப்படையாகக்கொண்டு ஒரு புதிய மதம் ஆரம்பிக்க வேண்டும் என ஐரோப்பாவில் ஒரு குழுவினர் அன்னையைக் கேட்டனர். அதற்கவர் கொடுத்த பதில் மதம் மனிதனுக்கு உதவிய காலம் மாறிவிட்டது. எதிர்காலம் ஆன்மீகத்திற்கே உரியது என்பதாகும். மேலும் அதை விளக்கமாகவும் சொல்கிறார் அன்னை.

ஒருவருடைய ஆன்மீக அனுபவத்தைப் பலருக்குப் புரியும்படி, பாமரனுக்கு எட்டும் வகையில், விளக்கங்கள் மூலமாகவும், நிகழ்ச்சிகள் மூலமாகவும் சொல்லி மனிதனை வழிநடத்த முயன்றது மதம். அந்த வகையில் அதன் சேவை இதுவரை தேவைப்பட்டது. எதிர்கால மனிதனுக்குப் பிறருடைய ஆன்மீக அனுபவம் போதா. நேரடியாகத் தானே பெறும் ஆன்மீக அனுபவமே எதிர்கால மனித வாழ்க்கையைச் செப்பனிடும். நேரடியாகத் தானே ஆன்மீக அனுபவம் பெறுவது, மௌனம் மனத்தைத் தீண்டுவது, தியானம் தானே அமைவது, இறைவனை மனத்தில் காண்பது போன்ற ஆன்மீக

அனுபவங்களே இனி வருங்காலத்திற்கு உதவும் என்று அன்னை விளக்குகின்றார்.

செயல் நிறைந்த வாழ்க்கையில் எண்ணங்கள் பதினாயிரம் உற்பத்தியாகின்றன. ஆன்மீக அனுபவமான சாந்தம், மௌனம், தியானம் மட்டும் பூரணயோகத்திற்குப் போதாது. ஒவ்வொரு செயலையும், எண்ணத்தையும், உணர்ச்சியையும் ஆன்மீகச் செயலாக, ஆன்மீக எண்ணமாக, ஆன்மீக உணர்வாக மாற்றி அமைத்தால்தான் பூரணயோகப் பாதையில் அடி எடுத்து வைக்க முடியும்.

நல்லதே நடக்கும்', நல்லது மட்டுமே நடக்கும்' என்ற எண்ணம் இறைவனை எண்ணத்தில் வெளிப்படுத்தும் முயற்சியின் வெற்றியாகும். இது நடக்காது' என்று நினைப்பவன் மனிதன். மனிதனுள் உள்ள தெய்வம் இது நடக்கும்' என்று பேசும். இது நடக்காது' என்று தோன்றுவதை, இது நடக்கும்' என்று நாம் முயன்று மாற்றும்பொழுது நம்மை விலக்கி, நான்' என்பதை விலக்கி, நம்முள் உள்ள மனிதனை ஒதுக்கி, உள்ளுறை தெய்வத்தைப் பேசவைப்பதாகும். எண்ணத்தை ஆன்மீக எண்ணமாக மாற்றுவதாகும். எண்ணத்தின் அளவில் ஆன்மாவுக்கு ஓர் இடம் கொடுப்பதாகும். அதன் வழியே அன்னையின் ஆதிக்கத்திற்கு அதிக இடம் கொடுப்பதாகும்.

********book | by Dr. Radut