Skip to Content

5. பக்தனின் வாழ்வில் அன்னையின் பிரத்யட்சப் பலன்

கோயிலுக்குப் போய் தெய்வத்தை வணங்கும் மனிதன் வானுலகில் உறையும் தெய்வம் வழிபாட்டுக்குரியது என்பதை அறிந்தவன். நாளடைவில் இந்தப் பழக்கம் வேரூன்றி மனிதன் தெய்வத்திடமிருந்து விலகி, மரணத்திற்குப்பின் சேர வேண்டிய இடம் இறைவன் திருவடி என உணர்ந்து, தன் வாழ்வை வழிபாட்டுக்கு உரியதாகக் கொள்கிறான். இதன் பலன் தெய்வம் என்பது உலக வாழ்வில் உணர முடியாத ஒன்று என்று நாம் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. உலகமாந்தர் அனைவரும் பக்தியால் உந்தப்பட்டவரானாலும், நடைமுறையில் ஆத்மீகம் பின்னணிக்குப் போய் பூஜையும், விழாவும் நிறைந்த மதச் சடங்குகளே நிதர்சனமாக நிலைக்கின்றன.

இறைவனின் சக்தியைத் தவம் மூலம் அறியலாம். எளிய மனிதன் தெய்வத்தை வழிபடலாம். சக்தி வாய்ந்த இறைவனின் திருவிளையாடல்கள் நமக்கில்லை என்று உலகமாந்தர் ஏற்றுக் கொள்கின்றனர். எனினும் இதுவே முடிவானதொன்றில்லை.

ஆபத்துக் காலத்தில் மனிதன் எழுப்பும் குரல் அலறலாகி, தெய்வத்தின் காதில் விழுந்து அற்புதம் என அறியும் வகையில் தெய்வம் அவனைக் காப்பாற்றுவதுண்டு. ஏதோ ஒரு சமயம் நிகழ்வது இது. மனிதனும் தெய்வத்தின் செயலை பார்ப்பதுண்டு. ஆனால் அது அன்றாட நிகழ்ச்சியாக அவன் வாழ்க்கையில் இல்லை.

அன்னையை ஏற்றுக்கொண்டு நாம் ஆசிரமம் வரும்பொழுது வழிபடும் தெய்வமாகவே நாம் அன்னையைப் புரிந்துகொள்கிறோம். இதனாலேயே அன்னை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி தாம் ஒரு சக்தி, இடையறாது இயங்கும் தெய்வீகச் சக்தி என்று தம் நிலையை விளக்குகிறார். அன்பர்களுடைய வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் அவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. திகைப்பிலிருந்து மீள்வதற்கு முன் மீண்டும் அவை போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. தன் வாழ்க்கையில் புதிய ஒன்றைக் காண்பதாக நினைக்கின்றான். "இவ்விஷயமே வேறு மாதிரியாக இருக்கிறது'' என்று அறிகிறான். எதிர்பாராத நிகழ்ச்சிகள், திடீர்த் திருப்பங்கள், தொடர்ந்து மனத்தில் சாந்தி நிலவும் ஆன்மீக உணர்வு போன்ற நிகழ்ச்சிகள் பக்தனைச் சிந்திக்கவைக்கின்றன. அன்னை வெற்று வழிபாட்டுக்குரிய தெய்வம் மட்டுமில்லை. ஜீவனுள்ள சக்தி என்பதை அவன் ஏற்றுக்கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்படும். நாள் செல்லச் செல்ல, பக்தன் அன்னையைச் சக்தியாகக் காண்பது குறைந்து வரும். பின்னர் அவை போன்ற நிகழ்ச்சிகள் நடப்பது நின்றுவிடும். எனினும், முதலில் தான் கண்டது பக்தன் மனதில் ஒரு மூலையில் ஒளிந்துகொண்டிருக்கும். இக்கட்டுரையில் அன்னை, சக்தி நிறைந்த தெய்வம், அற்புதங்களை அன்றாடம் நிகழ்த்தும் சக்தி என்பதை எப்படிக் கண்டுகொள்வது, கண்டுகொண்டதை எங்ஙனம் நிரந்தரமாக நிலைபெறச் செய்வது என்று விளக்க முற்படுகிறேன்.

அன்னையைப் பற்றிக் கேள்விப்பட்டு, மனதில் அன்னை தெய்வம் என்றுணர்ந்து, அன்னையை ஏற்றுக்கொள்ளும் நேரத்தில், பக்தன் மனித வாழ்க்கையின் மையத்திருந்து நகர்ந்து வந்து சூட்சும உடலின் சூழல் (physical aura of Mother) அன்னை உறையும் நிலையையடைந்து அன்னை தம்மை ஏற்றுக்கொள்ளக் காத்திருக்கும் பொழுது, அன்னை ஜோதியிலிருந்து ஒரு பொறி புறப்பட்டு அவன் ஜீவனில் வந்து தங்கி, அவனுக்கு அன்னை பக்தன் என்ற ஆத்மீகத் தகுதியை நிரந்தரமாகத் தருகின்றது. அவன் அகவாழ்வில் ஏற்படும்

மாறுதல்கள் அசாதாரணமானவை; எவரும் மறக்க முடியாதவை. இதன் பிரதிபலிப்பாக புற வாழ்வில் எதிர்பாராத பெரிய நல்லவை நடக்கின்றன. நாளடைவில் இந்தப் புதுமை பழகிப்போன காரணத்தால், பழமையாகிறது. ஆரம்ப காலத்தில் ஏற்பட்ட ஜீவனுடைய சிறப்பும், வாழ்க்கைப் பொலிவும் தூசி படிந்து, கண்ணுக்குத் தெரியாதவண்ணம் புதைந்துவிடுகின்றன.

சிறுபான்மையான ஒரு தரத்தார், வாழ்வில் அன்னையிடம் வந்த ஆரம்ப நாட்களிலும் இது போன்ற புதுமைகள் காணப்படுவதில்லை. அதனால் அன்னையின் சக்தி செயல்படவில்லை என்றாகாது. செயல்படும் விதம் கண்ணுக்குப் புலப்படாத வகையில் இருக்கின்றது என்றாகும். தீராத வியாதி ஆரம்ப நிலையில் இருக்கின்ற ஒருவர், அன்னையிடம் வந்தால் அன்னையின் ஜோதி அவருள் எந்த அளவில் இறங்கிச் செயல்பட்டாலும், அதன் திறன் முழுவதும் அந்த வியாதியைக் குணப்படுத்தவே உதவும். அன்பருக்கு அது தெரிவது இல்லை. வியாதி வந்ததையே அவர் தெரிந்துகொள்ளவில்லை. அதைக் குணப்படுத்தி- யதையும் அவரால் தெரிந்துகொள்ள முடியாது. சனி திசையின் ஆரம்ப காலம், பயங்கர நோய், பலத்த கண்டம் வரும் நேரம் அன்பர் புதியதாக அன்னையை வந்தடைந்தால், அன்னையின் அருள் அவர் வாழ்வில் அற்புதங்களை நிகழ்த்துவதை அவரால் பார்க்க முடியாது. வரும்பொழுதே அருளுக்கு வேலையையும் தாங்கி வந்திருக்கிறார் அவர். கண்டத்தைக் கரைப்பதையும், வியாதியின் மூல வேரை அரிப்பதையும், சனிபகவானுக்கு ஈடு கொடுப்பதையும் அருளுக்குக் கடமையாகக் கொண்டுவந்துள்ளார். இது தவிர, மற்றவர்கள் வாழ்க்கையில் கண்டறியாத புதுமைகள் தவறாமல் நிகழும். அருள் செயல்படும் வகைகள் ஆயிரம். மனிதன் அருளைப் பெறும் வகைகள் அநேகம். அருளிலிருந்து தப்பித்துப் போய் தன் சுபாவத்தின் சுக, துக்கங்களை மனிதன் அனுபவிப்பதும் அநேக வழிகள். அவற்றை எல்லாம் நான் விளக்க முற்படவில்லை. பெற்ற அருளின் பெரும் பேற்றை ஆயுள் முழுவதும் நிலைக்க என்ன செய்யலாம்? முதலில்

பெற்று, பின்னர் இழந்த அருளை, மீண்டும் எப்படிப் பெறலாம் என்பதை மட்டும் இக்கட்டுரையில் கருதுவோம்.

நாமறிந்த மனித வாழ்வுக்கும், அன்னையை மனிதன் ஏற்றுக் கொண்டபின் அவனுக்கு அமையும் வாழ்வுக்கும் உள்ள வித்தியாசம் எவரும் மறுக்க முடியாத ஒன்று. குருடனுக்கும் புரியும் வகையில் இருப்பதால், கண்ணில் படாமல் இருக்காது. மனதில் ஆழ்ந்த புதிய அபிப்பிராயத்தை ஏற்படுத்தத் தவறாது. விரைவு, நெகிழ்வு, சந்தோஷம், வெற்றி, அழைப்பை ஏற்கும் விரைவு, ஆகியவை உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக இருக்கும். திடீரென மரியாதை ஏற்படுகிறது. அன்றாடக் காரியங்கள் அபரிமிதமான பலனை அளிக்கின்றன. புதியதாகப் புத்திசாலித்தனம் வந்துவிடும். நாள் முழுவதும் உழைத்தாலும் களைப்பேற்படாது. உற்சாகம் வழக்கத்திற்கு மீறிய அளவில் உற்பத்தியாகும். எதுவும் அளவுகடந்து கூடிவரும். மனிதர்களும், நிகழ்ச்சிகளும் நம்மை வரவேற்றுப் பலன் அளிக்க விழைவது போல் தோன்றும். வாழ்வு பொலிவு பெறும். அன்னையை ஏற்றுக்கொண்டபின் அமையும் வாழ்வு நம் அன்றாட வாழ்வைவிடத் திறனுடையதாகையால், இந்த மாற்றம் நமக்குத் தெரிகிறது. புதுமை மாறினாலும், பக்தன் பழைய நிலைக்குத் தள்ளப்படுவதில்லை. அடுத்த நிலைக்குப் போக முடியாமல் அங்கேயே நிற்பான். தொடர்ந்த முன்னேற்றம் தொலைவுக்குப் போய்விடும். இருப்பினும் அடிக்கடி மின்னல்போல் அன்னையின் சக்தி இங்கும், அங்குமாய்ச் செயல்பட்டுக் கொண்டிருக்கும்.

புதியதாய் அன்னையிடம் வரும்பொழுது நமக்கும், அன்னைக்கும் உள்ள இடைவெளி பெரியதாய் இருப்பதால், நடக்கும் நிகழ்ச்சிகள் ஆச்சரியமாக இருக்கின்றன. அன்னை பழகிப்போனபின் புதுமை குறைந்து, நிகழ்ச்சிகள் பழமையாய்விடுகின்றன. அதனால் அன்னையிடம் இருந்து நாம் பெறக்கூடியது அவ்வளவுதான் என்பது இல்லை. புதுமையுணர்வு தொடர்ந்திருந்தால், புதுமை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கும். அன்னையைப் பல அளவுகளில் நாம் அறியலாம்.

முதற்கட்டம் முடிந்து பழகிப்போனபின், அன்னையை அதிகம் தெரிந்து கொள்ள முயன்றால் ஆரம்ப காலத்தைப்போல் மீண்டும் வாழ்க்கை மாறும். ஒவ்வொரு கட்டம் பழகிப்போனபின், அன்னையை அதிகமாக ஏற்றுக்கொள்ள முயல்வது, தொடர்ந்து அன்னையை நம் வாழ்வில் ஆரம்ப காலத்தில் செயல்பட்டபோல் செயல்பட உதவும். அதிகமாகத் தெரிந்துகொள்ள உதவுவது ஆர்வம் (aspiration). அன்னையின் சக்தியைப் பெற்றுத் தருவது அழைப்பு. எனவே ஆர்வமும், அழைப்பும் சேர்ந்து, தொடர்ந்து செயல்பட்டால், அன்னை என்றும் நம் வாழ்வில் புதுமணம் பரப்பும் நறுமலராக விளங்குவார்.

ஒருவர் அன்னையை நாள் முழுவதும் நினைவுகூர்ந்தால் அவர் அகவாழ்வு ஒளி பெறும்; சிறக்கும். ஆனால் இக்காரணத்தாலேயே அன்னை செயல்பட ஆரம்பித்துவிடமாட்டார். ஏராளமாகப் படிக்கும் பையனுக்கு அறிவு அதிகமாகும். ஆனால் அப்படிப்பட்ட படிப்பால் ஒரு பட்டத்தை எடுத்துவிட முடியாது. பட்டம் பெற அதற்குரிய புத்தகங்களை ஆழ்ந்து பயில வேண்டும். அதே போல் அன்னையை இடைவிடாது நினைத்தால் மனநிலையை உயர்த்துமே தவிர, எந்தக் குறிப்பிட்ட காரியத்திலும் அன்னையை வெளிப்படுத்த உதவாது.

ஒரு செயலில் அன்னை வெளிப்பட வேண்டுமானால், அச்செயல் அன்னையின் சக்தியால் நிரம்பி வழிய வேண்டும். நம் வாழ்வு பல தரப்பட்டது. ஆபீஸ் வேலை, வீட்டு வேலை, சொந்த வேலை என பல வகைகளாகப் பிரிந்து, ஒவ்வொன்றும் தனித்தனியானது போல் தோன்றும் அளவுக்கு அமைந்துள்ளன. ஒவ்வொரு வேலையிலும் பல பகுதிகள் உள்ளன. கடிதம் எழுதுவது என்பது சொந்த வேலையில் ஒரு பகுதியானாலும், அதுவே ஒரு தனித்தன்மையுடைய முழு வேலை போலிருக்கிறது. குளிப்பது என்பதை ஒரு குறிப்பிட்ட சிறு வேலை எனலாம். அன்றாட வாழ்வில் அதுபோன்ற பல்வேறு வேலைகள் உள்ளன. சாப்பிடுதல், குளித்தல், தூங்குதல், படித்தல், விருந்தினரை வரவேற்றல், நட்பு, உறவு, வேலையிடுதல், கடைக்குப் போவது,

பொழுதுபோக்கு, புதிய துணி வாங்குவது, விசேஷம், பயணம் ஆகியவை அத்தன்மையானவை.

அன்னையை வாழ்வில் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளுதல் முழு யோகம் என்பதால், அதைக் கருதாது, ஏதாவது ஒரு முழுக் காரியம் (complete act) அன்னையால் நிரப்பப்பட்டு அன்னையின் புதுமை பொலிவுற வெளிப்படுதல் எப்படி என்பதை மட்டும் கருதுவோம். தீவிர பக்தர் எவராலும் இதைச் செய்ய முடியும் என்பதால் இதை மட்டும் எடுத்துக்கொள்கிறேன். நாம் எடுத்துக்கொண்ட செயலின் எல்லாச் சிறு பகுதிகளிலும் அன்னையை நினைவுகூர்ந்தால் அன்னை அச்செயலில் வெளிப்படுவார். கடைக்குப் போவதை ஒரு முழுக் காரியமாகக் கொண்டு இந்தச் சோதனையைச் செய்யலாம். கடைக்குப் போவதுடன் தொடர்புள்ள எல்லாச் சிறு செயல்களிலும் அன்னையை நினைத்துச் செயல்பட்டால், போய் வந்தவுடன் அன்னை அச்செயல் முழுவதுமாகப் புதுமையை நிரப்பித் தம் முத்திரையிட்டது தெரியும்.

ஒரு காரியம் என்பது எண்ணமாக உதித்து, உணர்வாகப் பூரித்து, செயலாக நடக்கிறது. ஒரு டிக்ஷனரி வாங்க வேண்டும் என்றவுடன் அன்னை நினைவுக்கு வருவதில்லை. எந்தக் கடையில் வாங்கலாம், எத்தனை மணிக்குப் போகலாம், யாரை அழைத்துப் போகலாம் என்றெல்லாம் மனதில் தோன்றும். முதலில் எண்ணம் தோன்றியவுடன், அதை விலக்கி அன்னையை நினைக்க வேண்டும். அதேபோல் ஒவ்வொரு எண்ணத்தையும் சமர்ப்பணம் செய்ய வேண்டும். அதாவது எண்ணத்தை விலக்கி, அன்னையை நினைக்க வேண்டும். அதையே இங்குச் சமர்ப்பணம் என்று கூறுகிறேன். அதேபோல் கடையுள் நுழைந்தவுடன், அங்குள்ளவரைப் பார்த்தவுடன் இவர் இனியவர்' அல்லது இவனைக் கண்டாலே எனக்குப் பிடிக்காது. இன்று இவன் நிற்கிறான்' என்று விருப்பான உணர்வோ, வெறுப்பான உணர்ச்சியோ தோன்றும். எண்ணங்களைச் சமர்ப்பணம் செய்ததுபோல் உணர்ச்சிகளையும் சமர்ப்பணம் செய்ய வேண்டும். அதாவது

உணர்ச்சிகளை விலக்கி, அன்னையை உணர வேண்டும். அதேபோல் நம் ஒவ்வொரு செயலையும், டிக்ஷனரி வாங்குவதில் உள்ள ஒவ்வொரு செயலையும், சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

கடைக்குப் போவது என்ற காரியத்தைக் குறிப்பிட்டு நம் சோதனைக்குட்படுத்தி, சமர்ப்பணம் செய்ய ஆரம்பித்து, தொடர்ந்து வந்தால், இதனுடன் சம்பந்தப்பட்ட எரிச்சலான காரியங்கள் விலகிவிட்டதைப் பார்க்கலாம். கடைக்குப் போக ஆரம்பித்தால் அதற்குத் தேவையான சந்தர்ப்பங்கள் அனைத்தும் தாமே பொருந்தி அமைந்து, செயல் சிறப்பாக இருக்கும். பொருத்தத்தில் ஆரம்பித்து, நம் மனதில் இல்லாத சிறப்புகள் எல்லாம் இந்தச் செயலில் ஒன்று ஒன்றாய் வெளிப்படும். டிக்ஷனரி வாங்குவதையே எடுத்துக் கொள்வோம். நாம் கடைக்குப் போய் டிக்ஷனரி வேண்டும் என்றவுடன், புதிய பதிப்பு ஒன்று வந்திருக்கிறது. பழைய பதிப்பில் 1920 ஆண்டு வரையுள்ள சொற்கள் சேர்க்கப்பட்டன. இதில் 1952 வரையுள்ள புதிய சேர்க்கையுள்ளது' என்ற சேதி கிடைக்கும். டிக்ஷனரியையும், அதற்கு உரிய மற்றவைகளையும் எடுத்துக்கொண்டு ஒரு சேல்ஸ்மேன் உங்களை வந்து ஆபீஸில் சந்திக்கும் வினோதமும் தெரியும். நினைவில் தட்டுப்பட முடியாதபடி ஒரு நண்பர் வந்து எந்த டிக்ஷனரியை நாம் வாங்க வேண்டும் என விருப்பப்பட்டோமோ அதையே கொண்டுவந்து அன்பளிப்பாகவும் கொடுப்பதைப் பார்க்கலாம். அடுத்தடுத்து நம்ப முடியாத செயல்கள் கடைக்குப் போவது' என்ற இக்காரியத்தில் தொடர்ந்து நடக்கும். சோதனைக்காகத் தெரிந்தெடுத்த செயல் கடைக்குப் போவது'. சமர்ப்பணத்தை முழுமையாக இங்கு மேற்கொள்கிறோம். அன்னையின் பூரண வெளிப்பாட்டை இங்கு மட்டுமே காண முடியும். மற்ற செயல்கள் என்றும் போலிருக்கும். அழைப்பையும் சமர்ப்பணத்துடன் இணைத்து விட்டால் இதற்கடுத்த கட்டத்திலும் நிகழ்ச்சிகள் ஏற்படும்.

ஆசிரம தரிசனங்களுக்கு வருவதை ஒருவர் சமர்ப்பணத்தின் முழுப்பிடியில் கொண்டுவந்தார். தொடர்ந்து 22 வருஷங்களாக எந்த

ஹர்த்தாலும், தடைகளும், ஆபீஸ் இன்ஸ்பெக்ஷன், முக்கியமான திருமணங்கள், தவிர்க்க முடியாத முக்கியத்துவங்கள், உடல்நலக் குறைவு, புயல், வெள்ளம் ஆகிய எதுவும் அவர் தரிசனங்களுக்குப் போவதை ஒரு முறைகூட தடை செய்யவில்லை. எல்லாம் தாமே ஒதுங்கி, விலகி வழிவிட்டன. அவர் செய்த சமர்ப்பணத்தை அன்னை ஏற்றுக்கொண்டதற்கு அது அடையாள முத்திரை.

தம் வீட்டில் தியானம் குறிப்பிட்ட நேரத்தில் செய்ய ஏற்றுக் கொண்ட பக்தர், தியான நேரத்தில் மின்சாரம் நிற்கக்கூடாது என்பதற்காக, தியானம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் சமர்ப்பணம் செய்ததன் விளைவாக, வாரத்தில் 10 முறை நின்றுபோகும் கரெண்ட், 12 ஆண்டுகளாக ஒரே ஒரு தடவைகூட அவருடைய தியான நேரத்தில் நின்றதில்லை. ஒரு கடையில் நீங்கள் சேல்ஸ்மேனாக இருந்தால், விற்கும் ஒவ்வொரு பொருளையும் இதுபோன்ற சமர்ப்பணத்திற்கு உட்படுத்தினால், வருஷம் பத்தானாலும், உங்கள் கையால் விற்ற பொருள்கள் பத்தாயிரமானாலும், ஒரே ஒரு பொருளிலும் குற்றம், குறை, திருப்பிக்கொடுப்பது என்பதெல்லாம் இருக்காது. குழாய் கிணறு (bore well) தோண்டுவது, லாட்டரி சீட்டு வாங்குவது போல் இதை மேற்கொண்டு திவாலானவர்கள் அநேகர். சமர்ப்பணத்திற்கு ஆளாக்கி, தாம் தோண்டிய 15, 10 கிணறுகளிலும் வற்றாத ஊற்றைக் கண்டுபிடித்தார் ஓர் அன்பர். பாங்கில் கடன் பெறுவதைச் சமர்ப்பணம் செய்து, தம்முடைய சிறு அக்கௌண்டில் 3 ஆண்டு காலம் தாம் கேட்டவையெல்லாம் பெற்றார் மற்றொருவர். அதிலும் ஒரு சிறப்பு. பாங்க், ஈடில்லாமல் அவருக்கு தானே முன்வந்து 13 இலட்சம் கொடுக்க வேண்டும் என்று கருதியது. இந்தக் கருத்தின் முழு விளக்கம் கொடுப்பதற்குமுன், இதனுடன் சம்பந்தப்பட்ட வேறு சில முக்கியமான விஷயங்களையும் கருத வேண்டியிருக்கிறது.

ஒரு முழுக் காரியம் (complete act) அன்னையின் சக்தியால் நிரப்பப்பெறுமானால், அன்னை தம்மை அக்காரியத்தில் முழுவதுமாக வெளிப்படுத்துவார். எந்த முறையினால் அக்காரியம் சக்தியைப்

பெற்றது என்பது முக்கியமில்லை. ஆழ்ந்த பிரார்த்தனைக்கு அதே பலன் உண்டு. ஜீவனின் ஆழத்திலிருந்து பிரார்த்தனை கிளம்புவதால் அது அன்னையின் சக்தியைப் பூரணமாகப் பெறுகிறது. அன்னையின் அற்புதத்தை அச்செயலில் காண்கிறோம். தம் படிக்கும் பழக்கத்தைச் சமர்ப்பணம் செய்து, அன்னையை ஒருவர் தம் படிப்பில் கண்டுவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். அவர் படித்துக்கொண்டிருக்கும்பொழுது 20 வருஷமாகச் சொந்த ஊரில் செய்துகொண்டிருந்த வேலை இன்று வெளியூருக்கு மாற்றலாகப்போகிறது என்ற செய்தி கிடைத்தால், சமர்ப்பணத்தால் அவர் படிப்பு பெற்ற பெரும்பலன் அப்பொழுது அவர் செய்யும் பிரார்த்தனைக்குக் கிடைக்கும். தாம் மாற்றலாகக்கூடாது என அவர் செய்யும் பிரார்த்தனைக்கு சமர்ப்பணத்தில் முழு ஆற்றல் ஏற்பட்டு, பிரார்த்தனை சிறப்பாகப் பூர்த்தியாகும். ஆழ்ந்த பிரார்த்தனைக்கும், சமர்ப்பணத்திற்குள்ள திறனுண்டு. பயத்தால் பீடிக்கப்பட்ட நிலையில் செய்யும் பிரார்த்தனைகள் முழுமையானவை. ஏனெனில் அவை ஆழத்திலிருந்து வருபவை. அன்னை அவற்றை முழுமையாகப் பூர்த்திசெய்வார்.

மற்றும் ஒரு கருத்து; அது அருளைப் பற்றியது. சமர்ப்பணத்தால் புனிதமடைந்த பூரணச் செயல் (முழுக் காரியம், complete act) அன்னையின் சிறப்பை வெளிப்படுத்துவது வேறு, அருளின் செயலால் அன்னை வெளிப்படுவது வேறு. அருள் தானே செயல்படுவது. சமர்ப்பணத்தால் செயல் புனிதப்பட்டு, அன்னையின் சக்தியைத் தன்னை நோக்கி இழுக்கிறது. சமர்ப்பணம் பூமியிலிருந்து இறைவனைக் கூவி குரல் கொடுத்து அழைக்கிறது. அருள் தன்னிச்சையால், தான் விரும்பியபொழுது, விரும்பியவண்ணம் தானே செயல்படுகிறது. சமர்ப்பணத்தையும், அருளையும் ஒன்றோடொன்று கலந்து தெளிவைக் கலக்குதல் தவறு.

ஒரு செயலில் அன்னை தம்மை வெளிப்படுத்துவது என்றால் என்ன? நம் ஊனக்கண்ணுக்கு அன்னையின் வெளிப்பாடு தெரியுமா? அன்னையின் சக்தியைத் தெளிவாக விளக்க முடியுமா?

வாழ்க்கைக்கும், அதற்கும் உள்ள வேறுபாட்டைச் சுட்டிக்காட்ட முடியுமா?

இன்றிருக்கும் நிலையைக் காப்பாற்ற முயல்வதே வாழ்க்கையின் இயல்பு. வாழ்க்கையில் சிருஷ்டி என்று நாம் சொல்வது நமக்கு ஏற்கனவே தெரிந்த காரியங்களைச் சிறப்பாகச் செய்வதைத்தான். அன்னையின் சக்திக்கு ஒரு சிறப்புண்டு. புதியதாகப் படைக்கும் ஆற்றல் அதற்குண்டு. சிருஷ்டிக்கும் (creative) திறனுடையது அன்னையின் ஆற்றல் என்றால் இதுவரை நாம் கண்டறியாததைச் சிருஷ்டிக்கும் ஆற்றல் என்று பொருள். புது வழியில் பிரச்சினைகளைத் தீர்ப்பது, புதிய முறையில் செயல்படுவது, புதிய வாழ்க்கைப் பாதைகளைச் சமைப்பதே அதன் குறிப்பான திறன். பழைய பிரச்சினைகளுக்குப் புதிய பாணியில் தீர்வு காண்பது, புதிய வாய்ப்பை ஏற்படுத்துவது அன்னைக்குரிய சிறப்பு. அன்னையின் சக்தியால் ஏற்படும் அனைத்துக்கும் ஒரு முத்திரை உண்டு. ஏதாவது ஒரு வகையில் அது புதியதாக இருக்கும். அதற்கும் மேலாக, இந்தப் புதிய சக்தியை உற்பத்தி செய்யும் திறமையும் உடையது. தானே வளரும் தன்மையுடையது.

எங்கெல்லாம் புதிய பாதை தென்படுகிறதோ, புதிய வழி உற்பத்தியாகிறதோ, புதியதாக ஏதாவது ஒன்று இருக்கிறதோ, அங்கெல்லாம் அன்னையிருப்பதற்கு நியாயம் உண்டு. முரடன் சாந்தமாகப் பழகினால், வழக்கத்திற்கு மாறாக முதலாளி இனிமையாகப் பேசினால், விதண்டாவாதக்காரன் நியாயமாகப் பழகினால், சுக்காஞ்செட்டி தாராளமாக இருந்தால், பேரத்திற்குப் பேர்போனவன் சொன்ன விலைக்கு வாங்கிச்சென்றால், அன்னை அங்கெல்லாம் செயல்படுகிறார் என அறியலாம்.

வாழ்க்கை ஆற்றொழுக்காகப் போகிறது. அதற்கு ஒரு முறை உண்டு. எதற்கும் ஒரு காலவரையறையுண்டு. பட்டம் வாங்க 4 ஆண்டுகள் தேவை என்றால், எவராலும் அதை 4 மாதத்தில் பெற வழியில்லை. காலத்தின் கதியைக் கதிரவனாலும் மாற்ற முடியாது.

பட்டத்திற்கு 4 ஆண்டு, வாழை பலன் தர 12 மாதம், பிறந்த குழந்தை நடக்க ஒரு வருஷம் என ஒவ்வொரு செயலுக்கும் முறையும், கால வரையறையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஏட்டில் படித்ததை வாழ்க்கை அனுபவமாக மாற்ற சில ஆண்டுகள் தேவை. பதட்டப்பட்டவன் அடங்கப் பல மணி நேரம் தேவை. காலம் வந்துவிட்டால் நடக்கும்; நடந்துவிடும். அதை யாராலும் தடுக்க முடியாது. காலம் வருமுன் அதை முடிக்க உலகில் ஒரு சக்தியில்லை. காலத்தின் முன் அனைத்தும் தலைவணங்கும். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது வழக்கு. அன்னையின் சக்தி விரைவானது. ஒரு வினாடியில் 26,000 மைல் சுற்றளவுள்ள பூமியை 7 முறை சுற்றிவரும் ஒளியின் வேகத்தைவிட அதிக வேகமாகச் செயல்படக்கூடியது. மின்னல் வேகத்தில் செயல்படுவதே அதன் இயல்பு. மனித வாழ்வின் இருள் அதன் வேகத்தைத் தடுக்கின்றதே தவிர அன்னையின் சக்திக்குரிய வேகம் அபரிமிதமானது.

அதன் வேகம் சிருஷ்டிக்கு முன் உள்ள இறைவனின் சக்திக்குரிய வேகம். அது மனிதனுக்குத் தெரியாமற்போகாது. அலுவலக விசாரணையை (departmental enquiry) ஆரம்பிக்கப் பல மாதங்களாகும். குற்றம்சாட்டியபின் அதை நீக்க எல்லாவிதமான சாதகச் சூழ்நிலைகள் இருந்தாலும், மீண்டும் பல மாதங்களாகும். 4 வருஷம் திட்டம்தீட்டி, 6 மாத காலமாகத் தயார்செய்து ஓர் அன்பர் மீது சுமத்தப்பட்ட அபாண்டத்தை, அன்னையிடம் ஒரு நாள் காலை 10 மணிக்குச் சொன்னபொழுது, அன்று மாலை குற்றப்பத்திரிகை கிழித்தெறியப்பட்டு குற்றத்தைச் சுமத்தியவர் தலைகுனிந்து, வெட்கி, தான் செய்த பாவத்தை அழித்தெறிந்தார். அன்னையின் முத்திரைக்கு மற்றோர் அடையாளம் உண்டு. அன்னையால் தீர்ந்த பிரச்சினைகளில் சொச்ச, நச்சம் என்றிருக்காது; பாவத்தைப் பவித்திரமாகத் துடைத்து எடுத்துவிடும்.

அதிர்ஷ்டக்காரர் பலருண்டு. 100 கோடி கம்பெனிக்குப் பேர் தெரியாத சப்ளையராக ஒரு அன்பர் வந்துசேர்ந்தார். அன்னையின்

முறைகளைத் தம் கம்பெனி நிர்வாகத்தில் முறையாகப் பயன்படுத்தினார். 10 ஆண்டுகளுக்குள் தாம் சப்ளை செய்யும் கம்பெனியின் அளவுக்கு வளர்ந்துவிட்டார். 50 ஆண்டில் முதலாளி பெற்ற பெருஞ்செல்வத்தை ஊர், பேர் தெரியாத இவர் 10 ஆண்டுகளில் பெற்றார்.

ஒரு பக்தர் தம் படைப்புத் திறன் முழுவதும் பயன்படுத்தி, திறமையான திட்டம் தீட்டி, பணக்காரர்களின் உதவியால் ஊரார் பொறாமைப்படும் அளவுக்கு, 5 ஆண்டில் பிரபலம் அடையும் அளவுக்கு வெற்றிகண்டார். அடுத்தத் திட்டம் தீட்டினார். தம் புத்திசாலித்தனத்தைப் புறக்கணிப்பது என்று முடிவு செய்தார். பணக்காரரை நாடக்கூடாது எனக் கருதினார். எதற்காகவும் அலைவதில்லை என்று சபதம் பூண்டார். யாரையும் போய்ப் பார்க்க வேண்டாம் என்றார். எதையும் எதிர்பார்த்து செயலாற்றுவதில்லை எனக்கொண்டார். மனித யத்தனத்தை நம்ப வேண்டாம், மற்றவர்களையும் எதிர்பார்க்க வேண்டாம் என்பதே தற்போதைய கொள்கை. இந்தத் திட்டம் நினைவுக்கு வரும்பொழுதெல்லாம், அந்நினைவைப் புறக்கணித்து அன்னையை மட்டும் நினைப்பது என்ற விரதத்தை மேற்கொண்டார். நிலைமை மாறியது. புதியன புறப்பட்டன. காண்பவரெல்லாம் கருத்தொருமித்தவராய் கலந்துரையாடினர். அவரையறியாதவருக்கு அவர் திட்டத்தில் திடீரென ஆர்வம் ஏற்பட்டது. அளவுகடந்த செல்வர்களிடம் அறியாதவர்கள் தாங்களே தலையில் அட்சதையைப் போட்டுக்கொண்டு அவரது திட்டத்தைப் பற்றி பிரஸ்தாபம் செய்தனர். "கேட்கும் ஒலியிலெல்லாம் உந்தன் கீதம் இசைக்குதடா நந்தலாலா'' என்பதற்கொப்ப, வாயைத் திறந்து பேசியவர் அனைவரும் நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசினர். அனைவரும் இவரது திட்டத்தைச் சீக்கிரத்தில் முடிக்க வேண்டுமென்ற ஆர்வம் காட்டினர். எல்லாம் கூடிவந்தன. திட்டம் இரு மடங்காகியது. 63ஆம் நாள் அனைத்தும் நடந்தேறியது. நம்மை ஒதுக்கி, நம் அறிவை ரத்து செய்து, நம் அவசரத்திற்கு விடுமுறை அளித்து, நம் கணக்கைக் காததூரம்

தள்ளிவைத்து, ஆசையை அழித்து, அன்னையை மட்டும் பூரணமாக ஏற்றுக்கொண்டு, அன்னையை செயல்பட நாமும், நம் அறிவும் முழு அனுமதியளித்தால், முதல் திட்டத்தில் 63 மாதம் அல்லலுற்று சாதித்ததை அன்னை 63 நாளில் இப்பொழுது அற்புதமாகச் செயல்படுத்துகிறார்.

அன்னையின் சக்தி, சத்தியத்தின் சக்தி. வாழ்வு பொய்யால் ஆனது. வாழ்வுக்கும் சத்தியம் தேவை. தன் பொய்யை ஆதரிக்கும் அளவுக்கு மட்டுமே மெய் தேவை. ஒருவர் உண்மை மட்டுமே பேச முடிவு செய்தால், தம் பூர்வோத்திரங்களை ஒளிவு, மறைவின்றி கூறினால் அவருக்கு வேலை கிடைப்பது கஷ்டம்; திருமணம் ஆகாது. உடையது விளம்பேல்', தோழனோடும் ஏழைமை பேசேல்' என்பது உலகம் எதிர்பார்ப்பது. சொல்ல வேண்டியதைச் சொல். எல்லாவற்றையும் சொன்னால் உண்மை பேசுவதாக அர்த்தமில்லை என்பதெல்லாம் சமூகம் நம்மிடம் நிர்ப்பந்தமாக எதிர்பார்ப்பதாகும். எதிர்மறையாக, அன்னை பூரணமான சத்தியத்தை முழுவதுமாக எதிர்பார்க்கின்றார். எவ்வளவுக்கெவ்வளவு உண்மையிருக்கின்றதோ, அவ்வளவுக்கவ்வளவு அன்னையின் வெளிப்பாடு சிறக்கும். பார்லிமெண்டில் வந்து உன்னை அலசிப்பார்க்கலாம், பயங்கர எதிர்ப்பு உருவாகலாம். அன்னை, உன் மீது சுமத்தப்பட்ட பழியை அழிப்பதுடன், புதிய வெற்றி வாகைகளையும் வழங்குகிறார். உன் சத்தியம் அன்னையின் பொக்கிஷம். சத்தியமே பேசினால் வாழ்க்கையில் சத்தியமாக அவன் அழிந்துவிடுவான்; அழிக்கப்படுவான். வாழ்க்கைக்கே உரிய வலிமை அது. சத்தியம் மட்டும் பேசினால் அன்னை அவனுக்குச் சத்தியஜீவியத்தை (supramental consciousness) அளிக்கிறார். எது வாழ்க்கையில் அழிவுக்கு அடிகோலுகிறதோ, அதுவே அன்னையிடம் மகுடம் பெற அஸ்திவாரமாகிறது. எங்கெல்லாம் சத்தியம் ஜெயிக்கின்றதோ, அங்கெல்லாம் அன்னையைக் காணலாம். கசப்பான உண்மைகள், கற்பனைக்கெட்டாத விருதுகளைக் கொண்டுவரும் அபூர்வ நிகழ்ச்சிகளும் உண்டு. மனிதன் எதையும் ஒரு நேரத்தில் விட்டுக்

கொடுத்துவிடுவான். மானத்தை இழக்க மனித மனம் சம்மதிக்காது. பாதாளத்தில் புதைந்துள்ள உண்மைகளைக் காப்பது மானம். அதே ஆழத்தில் மறைந்துள்ள அவமானத்தையும் காத்துக்கொண்டிருப்பது சொரணை என்று சொல்லப்படுவது. கோரமான உண்மைகள் ஆழமான இடத்தில் இருக்கலாம். சொரணையை இழந்தால்தான் அவற்றையும் சொல்ல முடியும். சூடு, சொரணை எனப்படுபவைகளையும் ஒதுக்கி வைத்து உண்மை பேசினால் மட்டுமே இறைவனின் கருவியாகி, பிரபஞ்சத்தில் இறைவனின் பெரிய காரியங்கள் ஜெயிக்க மனிதனால் துணைநிற்க முடியும் என்கிறார் அன்னை.

அன்னையின் சக்தி செயல்பட தனியே அறிவு தேவையில்லை. இதன் அமைப்பு இன்று உலகில் இல்லாத ஒன்று. சக்தி வெளிப்பட்டால், அறிவு தானே செயல்படும் அமைப்பு இதனுடையது. ஏனெனில் அறிவும், திறனும் செயல்படும் அமைப்பு இதனுடையது. ஏனெனில் அறிவும், திறனும் ஒருங்கே அமைந்த சக்தி அன்னையின் சக்தி. ஓர் இன்ஜினீயர் வீடு கட்ட முற்பட்டால் அவருக்கு அறிவு இருக்கிறது. ஆள் பலமும், பணமும் வீட்டைக் கட்டி முடிக்கத் தேவை. அவை தேவையான சக்தியை அளிக்கின்றன. ஒரு காண்ட்ராக்டரிடம் ஏராளமான ஆட்களும், மூட்டையாகப் பணமும் இருந்தால், அவரால் ஒரு பாலத்தைக் கட்ட முடியாது. ஓர் அனுபவமுள்ள இன்ஜினீயரை அவர் நாடிச் செல்ல வேண்டும். நம் வாழ்வில் அறிவும், திறனும் தனித்து இயங்குகின்றன. ஒரு காரியம் நடைபெற அவை இணைந்து செயல்பட வேண்டும். அன்னையின் சக்தியில் அறிவும், அன்னையின் ஞானத்தில் சக்தியும் உள்ளுறைந்து காணப்படுகின்றன. ஒன்றில் மற்றது பிணைந்துள்ளது. தனக்கில்லாத அறிவை ஒரு மனிதன் உபயோகப்படுத்துவதைப் பார்த்தால், அது அன்னையின் சக்தி என அறியலாம். திறனற்ற ஒருவன் தன் அறிவை வெளிப்படுத்தும்போது அதற்குரிய சக்தி இயல்பாக அமைந்துள்ளது என்றால் அதை அன்னையின் ஞானம் என நாம் உணரலாம். அன்னையின் சக்தியைப் பெற்றால் அதற்குரிய ஞானம் தானே ஏற்படும். அன்னையின்

ஞானத்தை அடைந்தால் அதற்குரிய சக்தியை அதுவே கொண்டு வரும்.

அறிவிற் சிறந்த அன்பர் பல இலட்சம் சம்பாதிக்கும் திட்டத்தை ஆயிரம் ரூபாய்கூடக் கையில் இல்லாமல் ஆரம்பித்தபொழுது, திட்டத்திற்குத் தேவைப்பட்ட முழுப் பணமான ரூ.1,15,000 அவரைத் தேடி வந்தது. தேவைப்பட்ட எல்லாத் திறனையும் (பணத்தையும்) தம்மை நோக்கி இழுக்கும் திறனுள்ள அவருடைய அறிவு, அன்னையின் ஞானம் என்பதில் ஐயமில்லை.

ரூ.100 மாதச் சம்பளம் பெறும் ஒருவர் 4 லட்ச ரூபாய்க்குத் திட்டம் தீட்டினார். பாங்க் அவரது திட்டத்தை சாங்ஷன் செய்தது. பாங்க் சேர்மனிடம் விஷயம் போனபோது அவருக்கு ஏராளமான கோபம் வந்துவிட்டது. மோசடி எனச் சந்தேகப்பட்டார். மனுதாரர் சேர்மன் முன் கொண்டுவந்து நிறுத்தப்பட்டார். அவரிடம் சத்தியம் இருந்தது. ஆனால் அவ்வளவு பெரிய அதிகாரியிடம் அவர் பேசியது இல்லை. ஒரு கணம் திகைத்துப்போனார். அன்னை அவர் கட்சி. இது மாதிரி சந்தர்ப்பங்களுக்குரிய அனுபவமோ, திறமையோ அவருக்கில்லை. தம் கட்சியை எடுத்துச் சொன்னார். அபரிமிதமாக வெற்றி பெற்றார். சேர்மன் அவரைப் பாராட்டினார். எப்படிப் பேசினோம் என்று அவருக்குத் தெரியாது. பின்னர் யோசித்தபொழுது தாம் கூறிய வாதங்கள் தமக்கே வியப்பளிப்பதை உணர்ந்தார். அவருடைய திறன் அன்னையின் சக்தி என்பதால், அதற்கு உரிய அறிவு தானே அவருக்கு ஏற்பட்டது.

தம்முடைய இராசியை எவரும் அறிவார்கள். என் கர்மவினை என்று சொல்வார்கள். சிலருக்கு எதுவும் பலிக்காது. மற்றவர்களுக்குப் பல தோல்விகளுக்கப்புறம் பலிக்கும். சிலருக்குப் பண விஷயம் கூடி வராது. வேறு சிலர் எதைச் செய்தாலும் புரளி பறக்கும். சிலருடைய இராசி வீட்டில் இருப்பவர்களே எப்பொழுதும் எதிர்ப்பார்கள். அப்படிப்பட்டவர் அன்னையை ஏற்றுக்கொண்டு செயலில் இறங்கி,

தங்கள் இராசியும், கர்மமும் வந்து கழுத்தை அறுக்கவில்லை என்று கண்டால் அவர்கள் செயலில் வெளிப்படுவது அன்னையின் சக்தி என நாம் அறியலாம். கர்மம் விலகுகிறது என்றால் அங்கு அன்னை இருக்கிறார்கள் என்று பொருள். வாழ்க்கை கர்மத்திற்கு அடிமை. கர்மம் செயல்பட வாழ்க்கை பூரணமாக அனுமதிக்கும். சமர்ப்பணத்தால் ஒரு செயல் அன்னையின் சக்தியால் நிரம்பினால், அச்செயலில் கர்மபலன் இருக்காது. அதை விட்டுக் கர்மம் விலகும்.

"சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி குறுக்கே நிற்கிறான்'' என்போம். பார்லிமெண்ட் சாங்ஷன் செய்தபின் நிர்வாகம் தடை செய்யும். M.P.S.C. பாஸ் செய்தபின் போஸ்டிங் வராது. தலைமை அலுவலகம் ஆர்டர் போட்டபின் உள்ளூர் காஷியர் ஒன்பது தடைகளைக் கிளப்புவார். அன்னையின் சக்தியால் நிரப்பப்பெற்ற செயல் முன் அனைத்துத் தடைகளும் விலகிப்போகும்.

அன்னையின் சக்தி ஒரு செயலில் நுழைந்துவிட்டால், பழம் பெருச்சாளிகளை விரட்டுவிட்டு வேகமாகச் செயல்படும். தாம் செயல்பட சாதகமான சூழ்நிலையில்லை என்றால் தமக்கேற்ற சூழ்நிலையை அன்னை ஏற்படுத்திக்கொள்கிறார். பழைய சந்தர்ப்பங்கள் மூலமாகவும் அன்னை சக்தி செயல்படும். ஆனால் புதிய சந்தர்ப்பங்கள் மூலமாகச் செயல்படுவதை அது பெரிதும் விரும்பும்.

பொதுவாக அன்னையின் சக்தி எப்படிச் செயல்படுகிறது, அதன் வழிவகை என்ன என்று நாம் புரிந்துகொள்ள முடிவதில்லை. நாம் முடிவான பலனை மட்டுமே பார்க்கிறோம். நாம் இருளில் புதைந்து உள்ளோம். அன்னை மின்னலாகச் செயல்படுகிறார். இருளை விலக்கி, பலனை அளிக்கிறார். க்ஷணத்தில் நம்மிருள் மீண்டும் வந்து நம்மைக் கவ்விக்கொள்கிறது.

அன்னையின் சட்டதிட்டங்களை நாமறிவோம். அறிவை நம்பாதே; வசதியைத் தேடாதே; ஆசைப்படாதே; குறை கூறாதே;

புற நிகழ்ச்சிகளைப் பார்; முழுமுயற்சி எடு; உண்ணும் முன்னும், உறங்கும் முன்னும், பேசும் முன்னும், செயல்படுமுன்னும் அன்னையை நினைவுகூர்ந்து செயல்படு என்பதே அவர் சட்டங்கள். எளிய பக்தனால் ஆகக்கூடியதில்லை இது. பூரணமாக முடியவில்லை என்றால், பக்தன் ஒரு சிறிய செயலில் சோதித்துப்பார்க்கலாம். முறை எளிது. அன்னையை அழைத்து, செயலைச் சமர்ப்பணம் செய்து, அதை அன்னையின் சக்தியால் அளவிறந்து நிரப்பி, பலன் கருதாது பொறுமையாக இருப்பதே முறை. மேலும் ஒரு நிபந்தனை. மேற்கூறிய 10 விதிகளையும் ஒரு சிறு செயலில் பூர்த்தி செய்யும்பொழுது, பொதுவாக அன்னைக்கு எதிரான எதையும் செய்தல் கூடாது என்பது முக்கியமான நிபந்தனை.

இவற்றைப் பூர்த்திசெய்தால், அன்னை செயலில் தரிசனம் தருகிறார். ஜீவனற்ற செயல் உயிர் பெற்றெழும். உன் பிறந்த நாளன்று ஹர்த்தாலால் ஆசிரமம் போவது தடைப்படும்பொழுது, உன் எதிரே ஒரு டாக்ஸி வந்து நின்று உன்னை அழைத்துச் செல்கிறது. பெரும் புயலால் இலட்சக்கணக்கான சேதம் ஏற்பட்டு ரூ.50கூட புரட்டமுடியாத நிலையில் உன்னைப் பிடித்து வலுக்கட்டாயமாக உன் பையில் ரூ.5,000/-த்தை திணிக்கிறது வாழ்க்கை. அனாதைப் பையனுக்கு முனிசிபல் சேர்மன், எடுத்துக்கட்டிக்கொண்டு, வேலை பெற்றுத் தர, உயிரைவிட்டு வேலை செய்கிறார். பிறந்த நாள் பொற்கிழி எதிர்பார்த்ததைப்போல் 24 மடங்கு பெருகுகிறது. வருஷ வருமானம் இரண்டு நாள் வேலைக்குக் கிடைக்கிறது. 8 முறை பெயிலான பரீட்சைகள் இரண்டில் ஒரே சமயத்தில் உடனே பாஸ் வருகின்றது. மோசடிக்குப் பேர்போன மக்கள் பாங்குப் பணத்தைத் தாமே முழுவதும் திருப்பிக் கொடுக்கின்றார்கள். 20 ஆண்டு தேடிக் கிடைக்காத வேலை 3 நாளில் மும்மடங்கு சம்பளத்துடன் வருகிறது.

அன்னை வந்தபின் தடைகள் தகர்ந்துபோகின்றன. எனினும் பிடிவாதம், வக்ரபுத்தி, பொறுப்பின்மை அன்னையின் செயல் வேகத்தைக் குறைக்கக்கூடியவை. மின்னல் வேகத்தில் வேலை

நடக்கும்பொழுது தடை ஏற்பட்டால், என்ன குறை என்று யோசனை செய்தாலும், எங்கு தடை என்று பரிசீலனை செய்தாலும் உடனே அது தென்படும். விட முடியாத பழக்கங்கள், வேண்டுமென்றே செய்யும் காரியங்கள் அத்தகைய தடைகளை உற்பத்தி செய்யும். அவற்றைக் களைந்தால் மின்னல் வேகம் தொடரும். பழைய தடைகள் ஆத்ம சமர்ப்பணத்தால் விலகும். வேண்டுமென்று செய்யும் காரியங்களை விலக்க நாமே முன்வர வேண்டும். ஒரு காரியத்தை, அதாவது ஒரு வகையான காரியத்தை (உ.ம். கடைக்குப் போவது) ஓர் அன்பர் சமர்ப்பணத்தால் அன்னையின் ஆட்சிக்கு உட்படுத்திவிட்டால், அவருக்கு வாழ்க்கையில் வெற்றி கிட்டிவிட்டது என்று அர்த்தம். மற்ற வகையான செயல்களையும் அதேபோல் சமர்ப்பணத்தால் அன்னையின் ஆளுகைக்குள் கொண்டுவருதல் அவரைப் பொருத்தது. அடிப்படையானது இந்த இரகஸ்யம்; மனிதனுக்குப் பிடிபடாத ஒன்று. இரகஸ்யம் கிடைத்தபின் எந்தச் செயலையும் இதனால் வெற்றி காணச் செய்யலாம். அதே முறையைப் பயன்படுத்தி எவ்வளவு பெரிய காரியத்தையும் சாதிக்கலாம். நெடுநாளைய குறிக்கோளைப் பூர்த்தி செய்யலாம்.

ஒரு முக்கியமான கேள்வி. வழிவகை (process) தெரியும் என்பதால், பெரிய இலட்சியங்களையும் இதனால் பெற முடியும் என்றால், அதற்குரிய வலிமை எங்கிருந்து வரும்? எப்படிக் கிடைக்க முடியும்? வலிமை என்பது ஞானத்தைவிடச் சிறியது. ஞானம் மனத்தில் உதிப்பது. மனத்தைவிடச் சிறியதான பிராணனில் செயல்படுவது வலிமை. ஞானம் வழிவகையில் உள்ளது. வழிவகை புரிந்தால் ஞானம் ஏற்பட்டுவிடும். இந்த முறையை எத்தனை பெரிய திட்டத்தை நிறைவேற்றவும் பயன்படுத்தலாம். அதற்குரிய முயற்சியை விரும்பி ஏற்றுக்கொள்ளுதல் பக்தன் பங்கு. பெரியதான ஞானம் வந்தபின், சிறியதான வலிமையை அடைய பக்தன் செய்ய வேண்டியது ஒன்றுதான். தான் எடுத்துக்கொள்ளும் திட்டம் பூர்த்தியடைய முழு விருப்பத்துடனும், முழு மனத்துடனும் உழைக்க முன்வர வேண்டும்.

அன்னை உட்பட எந்தத் தெய்வத்திற்கும் இல்லாத திறன் ஒன்றுண்டு. விருப்பமில்லாத மனிதனை விருப்பத்துடன் செயல்பட வைக்கும் திறனிது. இறைவனாலும் மனிதனைக் கட்டாயப்படுத்தி அவனுக்குப் பிரியமில்லாத காரியத்தைப் பூர்த்தி செய்ய முடியாது.

மனிதன் விரும்பி ஏற்றுக்கொள்ளும் திட்டம், இலட்சியம் எவ்வளவு பெரியதானாலும் அன்னை அதைப் பூர்த்தி செய்வார்.

*******book | by Dr. Radut