Skip to Content

4. அன்பர்கள் வழிபாடு

ஒரு முறை அன்னையை எப்படி வழிபடுதல் சிறந்தது என்ற பிரச்சினை பல்வேறு கோணங்களில் விவாதிக்கப்பட்டபொழுது ஒரு பிரஞ்சுக்காரர் அன்னையிடம் இது பற்றி குறிப்பிட்டார். "Why do you want to worship the divine? Why don't you become the divine?'' இறைவனாகவே நாம் மாற முடியும் எனும்பொழுது, ஏன் நாம் இறைவனை எப்படி வழிபட வேண்டும் என்று விவாதிக்க வேண்டும் என்ற கருத்தை அன்னை வெளியிட்டார். அன்னை நாம் அவரிடம் பிரார்த்திகாமலே அளித்துள்ள தெய்வீக வரப்பிரசாதம் அது: சாதகன் யோகத்தால் இறைவனாக மாறலாம்; அன்னையாகவும் மாறலாம்.

இந்த யோகச் சிகரத்திருந்து படிப்படியாக 100 நிலைகளில் உள்ள சித்திகளை அன்னை சாதகனுக்கு அளிக்க விரும்புகிறார். அவற்றுள் கடைசி நிலையில் உள்ளதுகூட மனிதனுக்கு மிகப் பெரியதாகத் தோன்றக்கூடியது. அவையெல்லாம் யோகத்திற்கே தம்மைச் சர்வபரித்தியாகமாக அர்ப்பணித்துக்கொண்ட சாதகர்களைச் சேர்ந்த இலட்சியங்கள்.

ஒரு வருஷமாக மாதம்தோறும் அன்னையின் சூழல் (atmosphere) திரண்டு தியானம் செய்து வரும் அன்பர்கள் அதைப் பொருத்தவரை சிறப்பானவர்களே. அவர்கள் யோக இலட்சியத்தைத் தேடும் சாதகர்கள் இல்லை. ஆனால், அன்னை மீதும், பகவான் ஸ்ரீ அரவிந்தரிடமும் தீராத பக்தியும், குறைவில்லாத நம்பிக்கையும் உடையவர்கள். இவர்களுடைய வீடுகளில், அல்லது பூஜை அறையில்

அன்னையின் சமாதிச் சூழல் ஓரளவுக்குத் தெரியக்கூடும். அன்னாருக்குப் பயன்படக்கூடியவகையில் அன்னையின் முறைகளில் ஒன்றையோ, சிலவற்றையோ, பல முறைகளையோ எடுத்து விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்று கருதி இக்கட்டுரையை எழுதுகிறேன்.

பக்தியும், நம்பிக்கையுமே அன்பர் வழிபாட்டின் அடிப்படை. அவை உயர்ந்தவை, சிறப்பானவை, அதுவே போதுமான அஸ்திவாரம். அவையின்றி வழிபாடில்லை; பலன் இல்லை. அவை இருப்பதே வழிபாடுதான்; அதற்குரிய பலன் தானே உண்டு. இதுவே பொதுவான உண்மை.

பொதுவான உண்மைக்கும் மேலாக, குறிப்பான உண்மை என்றும் ஒன்றுண்டு. புத்திசாத்தனம் இல்லாமல் படிப்பு வாராது, புத்திசாலித்தனம் உள்ளவனுக்குப் படிப்பு தானே வரும் என்பது பொதுவான உண்மையானால், அதற்கும் மேலாகக் குறிப்பான உண்மையும் உண்டு. முயற்சி, புத்திசாலித்தனத்தைப் பிரகாசிக்கச் செய்யும் என்பதே அந்தக் குறிப்பான உண்மை. புத்திசாலித்தனம் போதுமான அளவிருந்தும் அதன் முழுப்பலனை எல்லோரும் அடைவதில்லை. பலன், முயற்சியின் அளவைப் பொருத்தது என்பது நாம் அறிந்தது.

அதேபோல் பக்தியும். நம்பிக்கையும் உள்ள அன்பர்கள் தங்கள் சிறப்புக்குரிய முழுப்பலனையும் அடைய உதவும் முறைகள் பல உண்டு. அவற்றை எல்லோரும் அறிவார்கள். அம்முறைகளால் முழுப்பயன் அடைய நாம் செய்யக்கூடியது என்ன என்பதையே இங்கு நான் எடுத்துக்கொள்கிறேன்.

ஈடுபாடும், பக்தியும் உள்ளவர்கள் பலர் பின்வருமாறு சொல்ல நாம் கேள்விப்படுகிறோம்:

"நம்பிக்கைக்கு எல்லாம் குறைவில்லை. நடைமுறையில் மனம்

பல வழிகளில் சென்று, கடைசியில் எதுவும் முடியாமற் போகிறது''.

"எனக்கு எப்பொழுதும் அன்னை நினைவு குறைவது இல்லை. இருந்தாலும் தரிசனத்தன்று உள்ள விசேஷம் மற்ற நாட்களில் இருப்பதில்லை''.

"நானும் பல முறைகளைக் கடைப்பிடிக்கத் தீவிரமாக ஆரம்பித்துள்ளேன். எல்லாம் இரண்டு, மூன்று நாள்கள்தாம். பிறகு பழையபடி இறங்கிவிடுகின்றன''.

"ஆசிரமத்தில் இருக்கும்போது இருப்பதைப்போல், தினமும் எதிர்பார்த்தால் எப்படி முடியும்?''

"எனக்கு ஏதாவது ஒரு விஷயம் என்றால்தான் தீவிர பக்தி வரும்''.

இப்படிப்பட்ட எண்ணங்கள் இயல்பானவை. எல்லா விஷயங்களைப்போல, பக்திக்கும் ஏற்றம், இறக்கம் உண்டு என்பது உண்மைதான். இருந்தாலும் நமக்குள்ள பக்திக்கு உரிய முழுப்பலனையும் நாம் பெற வழியுண்டு என்பதை விளக்க நான் சொல்லும் ஒரே உதாரணம் பரீட்சைக்குப் படிக்கும் மாணவனே. கல்லூரியில் படிக்கும் மாணவன் ஆராய்ச்சி நிபுணனாகலாம் (research scholar), சிறந்த சிந்தனையாளனாக (original scholar) மலரலாம். தன் பாடத்தில் புதிய கருத்துகளைக் காணலாம் (can contribute to his subject), மேதையாகவும் வளரலாம். இவையெல்லாம் உயர்ந்த நிலைகள். அவற்றைத் தவிர்த்து பரீட்சை பாஸ் செய்து பட்டம் பெறுவதே குறிக்கோள் என்று கொண்டால் தன் அறிவின் திறனுக்குரிய அதிகபட்ச மார்க்குகள் வாங்குவது எப்படி? என்பதே என் விசாரம். I class வாங்கக்கூடிய மாணவன் வெறும் பாஸ் மட்டும் செய்தால் அது சரியில்லை, II class- ஐ தவறவிட்டாலும் அது முறையில்லை. State First வரக்கூடியவன் I class ஆகவோ, college first ஆகவோ வந்தாலும் சரியில்லை. பாஸ் செய்யக்கூடியவன் பெயிலாவதும் சரியில்லை. அதாவது ஒவ்வொரு

மாணவனும் தன் தன் திறமைக்குரிய அதிகபட்ச மார்க்குகளை வாங்க ஒரு முறை உண்டானால், அவன் அந்த முறையால் பயன் அடைய வேண்டும்.

அதுபோல நம் பக்தியின் திறனுக்குரிய அதிகபட்ச வரப்பிரசாதத்தை எப்படிப் பெறலாம் என்பதற்குச் சில யோசனைகளையே நான் சொல்லுகிறேன். அவற்றை வரிசைப்படுத்தி முதலில் சொல்லிவிட்டு பிறகு விளக்கங்களைத் தனித்தனியாகவும், சேர்த்தும் சொல்லுகிறேன்.

 1. நம் பக்தியின் திறனுக்குரிய அன்னையின் அருள் பிரசாதங்கள் எவை என்பதை ஓரளவு தெளிவாக நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இது அவசியம். இது தெரிந்துவிட்டால் அளவுக்கு மீறிய செயலைத் தவிர்க்கலாம். நமக்கு உரியதை விட்டுப் போகாமல் காப்பாற்றலாம்.
 2. அன்னையின் முறைகளில் நம்மால் தொடர்ந்து ஏற்றுப் பயிலக்கூடியவை எத்தனை என்பதை உத்தேசமாகவோ, அனுபவத்திலோ நிர்ணயித்துக்கொள்ளுதல் நலம்.
 3. நமக்குரிய முறைகள் எவை (to what type I belong & what methods are best suited for me) என தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
 4. தினமும் எவ்வளவு நேரம் நிச்சயமாகத் தியானத்திற்கு ஒதுக்க முடியும் என்பதை நிதானம் செய்து தீர்மானிக்க வேண்டும். அந்தக் கால அளவு (duration) குறிப்பிட்ட நேரத்திலேயே இருக்க முடியுமானால் அது சிறந்தது.
 5. அன்னையின் எந்த முறையும் பக்குவமானவர்களுக்கே உரியது. அதனால் நமக்குப் பக்குவம் எந்த அளவுக்கு இருக்கின்றதோ, அதே அளவுக்குரிய முறைகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் (சில்லறையான மனப்பான்மை, சிறிய புத்தி,

விளையாட்டு புத்தி, நினைத்து நினைத்துச் செயல்படுதல், எடுத்ததற்கெல்லாம் மனம் உடைந்து போவது போன்ற குணங்களுக்கும் அன்னை முறைகளுக்கும் ஒத்து வாராது. அப்படிப்பட்டவர்கள் இம்முறைகளைக் கையாள விரும்பினால் தங்கள் குண விசேஷங்களை மாற்றிக்கொள்ள முன்வர வேண்டும்).

 1. எந்த முறையைத் தேர்ந்தெடுத்தாலும், எந்த அளவில் எடுத்துக்கொண்டாலும், கடைசிவரை அதைத் தவறாமல், முறையாக, நெறியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

மேற்சொன்னவற்றைக் கடைப்பிடித்து, ஒரு முறையைத் தேர்ந்தெடுத்துப் பயின்றால் தினமும் தரிசனம் போல் பெரிய அளவுக்கு மனம் உணரும். அதற்குரிய வாழ்க்கைச் சிறப்பும் இருக்கும். அப்படி நாம் கையாளக்கூடியவை சுமார் 30, 40 வழிகள் உள்ளன. அவை யாவன:

 1. காலை, மாலையில் தியானம்.
 2. நாம ஜெபம்.
 3. அழைப்பு (calling Mother).
 4. பொதுவான ஆத்ம சமர்ப்பணம்.
 5. ஒரு குறிப்பிட்ட செயலைப் பூரண சமர்ப்பணத்துக்கு எடுத்துக்கொள்ளுதல் (complete consecration of one type of act).
 6. நம் முக்கியப் பிரச்சினையைச் (major work) சமர்ப்பணம் செய்தல்.
 7. தொந்தரவான பிரச்சினையைச் சமர்ப்பணம் செய்தல்.
 8. வாய்ப்பைச் சமர்ப்பணம் செய்வது.

 1. தரிசனங்களுக்கு ஆசிரமம் செல்வது.
 2. மாதந்தோறும் காணிக்கை செலுத்துவது.
 3. நினைவே வழிபாடு.
 4. சுத்தம்.
 5. ஒழுங்கு.
 6. தணிவான பேச்சு.
 7. சண்டைகளைத் தவிர்த்தல்.
 8. குறை கூற மறுத்தல்.
 9. ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் அன்னையின் கருத்தை அறிந்து கொள்வது.
 10. மற்றவர் நோக்கில் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முயல்வது.
 11. நம் வீட்டில் அன்னையை எல்லா அறைகளிலும் பிரதிஷ்டை செய்வது.
 12. நம் குடும்பத்தினர் அனைவர் உள்ளத்திலும் அன்னையை நிரந்தரமாகப் பிரதிஷ்டை செய்வது.
 13. பகவான் ஸ்ரீ அரவிந்தர் நூல்களை முறையாகப் பயில்வது.
 14. பராசக்தி அன்னையின் கட்டுரைகளைப் பயனடையும் வண்ணம் படித்து உணர்வது.
 15. மந்திர ஜெபம்.
 16. புற நிகழ்ச்சிகளை நம் உள்ளுணர்வின் பிரதிபலிப்பாக அறிதல்.
 17. நமக்கு அமைந்த கடமையில் முழு ஆர்வம் காட்டுதல்.
 18. புரளி பேசாதிருத்தல், சில்லறையாக நடப்பதில்லை என்ற முடிவு.

 1. ஒவ்வொரு நாளும் அன்னையை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தல்.
 2. நன்றியறிதல்.
 3. செயல்களுக்குள்ள அர்த்தபூர்வமான தொடர்பு.
 4. சிந்தனைக்குரிய ஆராய்ச்சி அல்லது ஆராய்ச்சிக்குரிய சிந்தனை.
 5. தீராத பிரச்சினை.

சில முறைகளைக் குறிப்பிட்டுள்ளேன். இன்னும் பல சேர்க்கலாம். ஒருவர் ஒரு முறையை முழுவதுமாக, பூரணமாகக் கடைப்பிடிப்பது சிரமம். ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளை எல்லோராலும் பூரணமாகக் கடைப்பிடிக்க இயலாது. முயற்சி தீவிரம் உள்ளவர்களால் மட்டுமே முடியும். எனவே, ஒவ்வொரு முறையாக எடுத்துக்கொண்டு, அம்முறை பூரண பலனைக் கொடுக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டு வருகிறேன். மீண்டும் ஒரு கருத்தை வலியுறுத்த நினைக்கிறேன். நாம் பெறும் பலன் நம் முயற்சியைப் பொருத்தது. இந்த முறை - உதாரணமாக சமர்ப்பணம் - எந்த அளவு பலன் கொடுக்கும் என்பதை இங்கு முக்கியமாகக் கருதாது இம்முறை எனக்கு, நான் இருக்கும் சந்தர்ப்பத்தில் அதிகபட்சம் எவ்வளவு பலன் கொடுக்கும் என்பதே நமக்கு முக்கியம். முறைக்குரிய அதிகபட்சத் திறன் வேறு, நமக்கு அதே முறை கொடுக்கக்கூடிய அதிகபட்சப் பலன் வேறு. நமக்குரிய அதிகபட்சப் பலன் கிடைக்க, நாம் நம் முழுச் சக்தியையும் (energy) நமக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்; சிதறவிடக்கூடாது. சக்தியின் (energy) அளவு பலனின் அளவை நிர்ணயம் செய்யும். நம் பங்குக்குச் சக்தியை முழுமையாகக் கொடுத்த பின், அந்த அளவு சக்தியால் நாம் எடுத்துக்கொண்ட முறை அதிகபட்சப் பலனைக் கொடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதே கீழே காணும் முக்கியக் கருத்தாகும்.

1. காலை, மாலை தியானம்:

தியானம் உயர்ந்தது. பெரும்பாலோர்க்கு அது பலிப்பதில்லை. தியானத்தைத் தேர்ந்தெடுப்பவர்கள், தங்களுக்கு ஓரளவு தியானம் பிடிபட்டால்தான் அதைத் தெரிந்தெடுத்துக்கொள்ள வேண்டும். தியானத்திற்குரிய சிறப்பான நேரம் காலை 6 மணிக்கு முன் உள்ள நேரம். 6 மணிக்கு முன், அதாவது 5 அல்லது ஐந்தரை மணிக்குள் குளித்துவிட்டு, தியான அறையைச் சுத்தம் செய்துவிட்டு தியானத்திற்குரிய மனச் சூழ்நிலையுடன் தயாராக முடியும் என்பவர்களுக்கு இது உகந்தது. மனச் சூழலைப் போல் புறச் சூழலும் (house circumstances) பெரிய அளவுக்கு அமைதியாக இருத்தல் நலம். நேரமும், மனமும், சூழ்நிலையும், எழுந்திருக்கும் பழக்கமும் ஒத்து வந்தபின், தியானத்தின் அடுத்த அம்சங்களைப் பார்ப்போம்.

எல்லா முறைகளுக்கும் பெரும்பாலும் பொதுவான ஒரு நிலையுண்டு. அதாவது முறைகளுக்கு ஜீவன் உண்டு. முறை என்பதே நாம் ஏற்படுத்தியதுதான் என்றாலும் அவற்றிற்கும் ஜீவன் உண்டு. தியானம் என்பதற்கு ஜீவன் பூரணமாக உண்டு. நாம் தியானத்தை மேற்கொண்டு முழுப் பலன் அடைய வேண்டுமானால், தியானம் ஜீவனுள்ளதாக இருக்க வேண்டும். தியானத்தின் ஜீவனும், நாமும், உயிருள்ள, உணர்வுள்ள தொடர்பு கொள்ள வேண்டும். அது போன்ற தொடர்பு ஏற்பட வேண்டியவற்றை நாம் மேற்கொள்ள வேண்டும்.

மேஜைக்கும், நாய்க்குட்டிக்கும் உயிரைப் பொருத்தவரை ஒரு வித்தியாசமிருந்தால் குட்டியை நாம் உயிருள்ள ஜீவனாக நடத்துகிறோம். அதேபோல் தியானத்தை உயிருள்ளதாக அறிந்து அறிவிலும், உணர்விலும் அத்துடன் ஒரு ஜீவனுள்ள தொடர்பை உள்ளூர ஏற்படுத்தி, அதை நாளாவட்டத்தில் வளர்த்து வர வேண்டும். இதற்குச் சில உபாயங்கள் உதவும்.

 1. அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் தியானத்தைப் பற்றி சுமார்

100, 200 இடங்களில் குறிப்பாகவும், சிறப்பாகவும், பொதுவாகவும், விளக்கமாகவும் எழுதியுள்ளார்கள். ஒரு சிரமத்தை மேற்கொண்டு அவையெல்லாவற்றையும் திரட்டி, (a small booklet "Meditation" is sold by Sri Aurobindo Society) அவற்றைப் பயின்று, அங்குள்ள கருத்துகளை வெறுங் கருத்தாக எடுத்துக்கொள்ளாமல், யோக ரகஸ்யங்களாகக் கருதி, மனதில் பதிய வைத்து, ஜீவனில் ஏற்றுக்கொள்ள வேண்டும். பல்வேறு புத்தகங்களில் தியானத்தால் பல மகான்கள் அடைந்த சிறப்புகளைத் திரட்டிப் படித்து, தியானத்தின் உன்னதமான மேன்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

 1. நம்முள் தியானத்துடன் ஓர் உறவு பிறந்து வளர வேண்டும்.
 2. நாள் முழுவதும் தியானத்தின் நினைவு நம் செயல்களுக்குப் பின்னணியாக இருந்தால், அது அன்றைய தியானத்திற்கு உதவும். 4 நாள் கழித்து வெளியூரிருந்து மகன் வரப் போகிறான் என்றால், அவ்வெண்ணம் நம் மனத்தின் அடியில் இருப்பதைப் போல், தியானம் இருக்க வேண்டும்.
 3. எந்த இடத்தில், எந்த முறையில் (pose) உட்கார்ந்தால் தியானத்திற்கு அதிகப் பொருத்தமாக இருக்குமோ, அந்த முறையை நாமே நமக்கு வகுத்துக்கொள்ள வேண்டும் (most comfortable sitting posture is best suited).
 4. தியானம் வரும்பொழுது குறுக்கிடும் எண்ணங்களைக் கவனித்தால் பெரும்பாலானவற்றை விலக்க முடியும். உதாரணமாக ஒரு கடிதம் எழுதும் எண்ணம் தியானத்தில் குறுக்கிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அடுத்த முறை அதுபோன்ற கடிதம் எழுத வேண்டியிருந்தால், அதை முன்கூட்டி எழுதிவிட்டால், அவ்வெண்ணம் விலகிவிடும். நம்மால் முடிந்த விஷயங்களைச் சரி செய்து தியானம் பூரணமாக உதவ வேண்டும்.

 1. மனத்தில் குறையாக ஒரு பிரச்சினையிருந்தால் - e.g. எதிர்பார்த்த ஆர்டர் வரவில்லை, வராது போலிருக்கிறது - அதைத் தியானத்திற்கு முன் பிரார்த்தனையாகச் செய்தால் நல்லது. அப்பிரச்சினையைத் தீர்க்கும் திறன் தியானத்திற்கு ஒரு கட்டத்தில் வருவதுண்டு. அந்நிலைக்கு வந்துவிட்டால், அந்நிலையைக் காப்பாற்றும்படி நாம் நம் அன்றாட வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். தியானத்தின் திறனைப் பாதிக்கும் எந்தக் காரியத்தையும் விலக்க வேண்டும்.

இந்த அளவில் தியானத்தை மேற்கொண்டால், நாம் இருக்கும் நிலையில் தியானம் அன்னையின் அருளை எவ்வளவு அதிகமாகப் பெற்றுத் தர முடியுமோ அதைத் தரும் திறனுடையதாகும்.

2. நாம ஜெபம்:

மிக எளிமையான முறை. எல்லோரும் கையாளக்கூடியது. எளிமையான முறை என்பதால் இதனால் பெரும்பலனை அடைய முடியாது என்றில்லை. எளிமையான முறையை, எளிமையாகப் பின்பற்றினால் பெரும் பலன் கிடைக்காது. எளிமையான முறையானாலும், அதற்குரிய கரு உருப்பெறும்வண்ணம் அதைக் கடைப்பிடித்தால் அதனால் அதிகபட்சம் நாம் எவ்வளவு பெற முடியுமோ அதைப் பெறலாம்.

நாம ஜெபத்தின் தத்துவம் என்ன? மனிதனுடைய அழைப்புக்கு ஆண்டவன் செவிசாய்க்கின்றான் என்பதே இதன் அடிப்படைக் கரு. நாம ஜெபம் செறிந்து அடுத்த கட்டத்திற்குப் போனால் அழைப்பு எழும். ஜெபத்தின் அதிகபட்சப் பலனைப் பெற நாம் ஜெபம் செய்யும்பொழுது நம் முழுச் சக்தியும் (energy) அதில் வெளிப்பட வேண்டும். அது வேண்டுமானால் மனம் மௌனமாக இருக்க வேண்டும். அது உயர்ந்த நிலை. அது இல்லை என்றால், மனம் ஒரு நிலையாக இருக்க வேண்டும். பொதுவாக நாம ஜெபத்தை

ஏற்றுக்கொண்டு அனுதினமும் அனுஷ்டிப்பவர்கள் மனம் ஓரிடத்திலும், ஜெபம் வேறிடத்திலும் எனப் பிரிந்து நிற்கும். அந்நிலையை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதாவது வாய் ஜெபத்தைச் சொல்லும், மனம் வேறு சிந்தனையில் இருக்கும். இந்த நிலையில் ஜெபத்திற்குக் குறைந்தபட்ச பலன்கூட வாராது. ஜெபம் செய்பவர்கள் மனத்தை மௌனமாக்கிக்கொள்வது சிறந்தது. அது கடினம் என்பதால் நான் அதைக் கருதவில்லை. அதற்கு அடுத்த படியாக, நாம ஜெபத்தை (Mother, அம்மா, மா, அன்னை) மேற்கொள்ளுமுன் மனத்தை ஒரு நிலைப்படுத்தி, அந்நிலையில் இருந்து ஜெபம் செய்யப் பழகிக்கொள்ள வேண்டும். அந்நிலை 6, 7 நிமிஷத்தில் கலைந்தால், ஜெபத்தை அத்துடன் நிறுத்திக்கொண்டு அடுத்த முறை ஜெபம் 7, 8 நிமிஷம் வரை ஒரே நிலையிருந்து சொல்ல முயல வேண்டும். அதேபோல் 20, 30 நிமிஷம் வரை பழகிக்கொண்டால், ஜெபம் ஆரம்பித்தவுடன் மனம் அலைவது நிற்கும். இதுவே ஜெபத்திற்குத் திறனளிப்பது. காலை, மாலை தியான நேரத்தில் நிலைத்த மனத்துடன் ஜெபத்தைப் பழகுவது முதற்கட்டம்.

இரண்டாம் கட்டம் முக்கியமானது; திறனுடையது; உயர்ந்தது. அதாவது நாள் முழுவதும் நாம் வேலை செய்யாமலிருக்கும் நேரங்களில் மனம் அலைபாய்வதும், சலனம் அடைவதும், கவலைகளை ஊன்றிப் பார்த்து வளர்ப்பதும் போன்ற காரியங்களில் ஈடுபடும். வேறு வேலை செய்யாமல் சும்மா உட்கார்ந்திருக்கும் பொழுது, சுமார் 2, 3 நிமிஷம் மனம் நிலைத்து ஜெபம் செய்யப் பழகி, அது பலித்தால், நாம் சும்மா இருக்கும் நேரம் முழுவதையும் ஜெபத்தின் பிடியில் நாளாவட்டத்தில் கொண்டுவந்துவிடலாம். பொறுமையாக நாம் இதைச் செய்து வெற்றி பெற்று, 7 அல்லது 10 நாள் பலித்துவிட்டால், பின்னர் காலை, மாலை அரை மணி அல்லது ஒரு மணி நேரம் ஜெபம் செய்தால் போதும். நாள் முழுவதும் மற்ற நேரங்களில் ஜெபம் உயிருடன் மனத்தின் அடியில் இருக்கும். முடிந்தவரை ஜெபித்தால் நல்லது. முடியாவிட்டால் மனம் தானே ஜெபிக்கும். நாம ஜெபத்தால்

பெரும்பலன் அடைய இது உதவும். மனம் மௌனமாக (silent repetition) ஜெபத்தை ஏற்றுக்கொண்டால் நாமஜெபத்தின் உச்சியை நாம் அடைவோம்.

3. அழைப்பு:

இதைப் பற்றி ஒரு முழுக் கட்டுரை (அமுத ஊற்றெழும் அழைப்பு) எழுதியிருப்பதால் மீண்டும் இங்கு அதைக் குறிப்பிடவில்லை.

4. பொதுவான ஆத்ம சமர்ப்பணம்:

சமர்ப்பணம் என்பதன் பொருள் மனிதன் தன்னை விலக்கி, அந்த இடத்தில் இறைவனை வைப்பதையே, ஒவ்வொரு செயலிலும் நாம் சமர்ப்பணம் என்று குறிக்கிறோம்.

பரீட்சை அடுத்த மாதம் வரும்பொழுது இந்த மாதமே படிக்க ஆரம்பித்தால்தான் நல்ல மார்க் வாங்க முடியும் என அறிவு சொல்கிறது. டென்னிஸ் விளையாட்டு ஆர்வம் அதைப் புறக்கணித்து விளையாடச் சொல்கிறது. மனிதனுக்குள்ளே அறிவுக்கும், ஆசைக்கும் உள்ள முரண்பாடு இது. இதேபோல, மனிதனுடைய ஒவ்வொரு செயலையும் எப்படிச் செய்ய வேண்டும் என்ற நியதியை அவனுடைய ஆசை சில இடங்களிலும், அறிவு சில இடங்களிலும், பண்பு மற்ற இடங்களிலும் நிர்ணயிக்கின்றன. இவையெல்லாம் இறைவனின் நியதியிருந்து வேறுபட்டிருக்கலாம், மாறுபட்டிருக்கலாம், முரணாக இருக்கலாம். ஆதலால் ஒரு செயலைச் செய்யும் முன் ஆசையை, அறிவை, பண்பைக் கேட்பதற்குப் பதிலாக உள்ளுறையும் இறைவனைக் கேட்டு, அவன் நியதிப்படி அதைச் செய்வதே ஆத்ம சமர்ப்பணமாகும். பொதுவான ஆத்ம சமர்ப்பணம் என நான் இங்கு குறிப்பிடுவதும் இதையே என்றாலும், சிறப்பான மற்ற சில சமர்ப்பணங்களிலிருந்து ஓரளவு வேறுபடுகிறது. நம் அன்றாடச் செயல்கள் அனைத்தையும் சமர்ப்பணம் செய்து, பின்னர் செயல்படுவதைப் பொதுவான

சமர்ப்பணம் என்றேன். அழைப்புக்கும், சமர்ப்பணத்திற்கும், நினைவே வழிபாடு என்பதற்கும் என்ன வேறுபாடு என்றொரு கேள்வியை எழுப்பி சுருக்கமாகப் பதில் அளித்துவிட்டு மேலும் தொடருகிறேன்.

நினைவே வழிபாடு; சமர்ப்பணத்தைவிட எளியது. அதனால் நினைவை நாள் முழுவதும் மேற்கொள்வதால், அது சமர்ப்பணத்தின் பலனை அளிக்கும். போஸ்ட் ஆபீஸுக்குப் போக வேண்டும் என்றால் அன்னையை நினைத்துப் பிறகு போகிறோம். சும்மா உட்கார்ந்திருக்கும் பொழுது அண்ணன் நினைவு வந்தால், அன்னையை நினைத்துப் பிறகு அண்ணனை நினைக்கிறோம். இடைவிடாது ஒவ்வோர் எண்ணத்திற்கும், செயலுக்கும் முன்பாக அன்னையை நினைப்பதை "நினைவே வழிபாடு'' என்கிறோம். சமர்ப்பணம் என்பதைச் சும்மா இருக்கும்பொழுது செய்வதில்லை. ஒரு காரியத்தைச் செய்யுமுன் அதை ஆத்மாவுக்குச் சமர்ப்பணம் செய்து, பின்னர் அது விட்ட வழியே அக்காரியத்தைச் செய்வதை, சமர்ப்பணம் என்கிறோம். ஆகவே நினைவு எப்பொழுதும் உள்ளது. அன்னையை நினைத்துவிட்டு நம் இஷ்டப்படிச் செயல்படுகிறோம். சமர்ப்பணம் என்பது செயல்களுக்கு முன்னர் மட்டுமே எழுவது. சமர்ப்பணம் செய்தபின் அச்செயலை நம் இஷ்டப்படிச் செய்ய முடியாது. ஆத்மாவின் ஆணைப்படியேதான் செய்ய வேண்டும். அழைப்பு என்பதன் மூலம் அன்னையின் சக்தியை நம்முள் கொண்டுவருகிறோம். அந்தச் சக்தி நம் செயலை, நம் விருப்பப்படி, தீவிரமாகச் செய்ய உதவும். நினைவு (Memory) என்பது மனத்தின் ஒரு பகுதி. சமர்ப்பணத்தைச் செய்வது நினைவில்லை, (will power) மனத்தின் செயல் திறன். அழைப்பதும் (will power) அதுதான். (Memory,will) நினைவு, செயல்திறன் என்பவை மனத்தின் வெவ்வேறு பகுதிகள். அழைப்பின் மூலம் அன்னை சக்தி உள்ளே வருகிறது. சமர்ப்பணத்தில் நம் (will) விருப்பத்தை விட்டுக்கொடுக்கிறோம். ஆகவே, நினைவு, அழைப்பு, சமர்ப்பணம் ஆகியவை இந்த அளவில் வேறுபட்டவை ஆகும்.

பொதுவான சமர்ப்பணம் நாம் எடுத்துக்கொண்ட நோன்பானால், நம் அனைத்துச் செயல்களும் கதவைத் திறப்பது, ஒருவருக்கு இல்லை என்பது, மற்றொருவருக்கு உடன்படுதல், சாப்பிடுதல், பாங்கில் பணம் போடுதல், பேப்பர் படித்தல், பிரமோஷனுக்கு விண்ணப்பம் போடுதல் ஆகிய அனைத்துச் செயல்களையும், சிறியவை, பெரியவை எல்லாவற்றையும் ஆத்மாவுக்குச் சமர்ப்பணம் செய்து, பின்னர் செய்தல் என்று பொருள். அப்படிச் செய்வதால் மனிதனுடைய (ego) அகந்தை விலகி, ஆன்மாவின் ஆதிக்கம் நம் முழு வாழ்வையும் சூழ்ந்து கொள்ளும். அது சிறப்பு. அச்சிறப்பின் மூலம் அன்னை பெருவாரியாகச் செயல்படுவார். இம்முறை ஒரு வகையில் எளிமையானது. சமர்ப்பணம் செய்தபின் சில சமயங்களில் நம் அறிவின்படியே நடக்க வேண்டியிருக்கும். சில சமயங்களில் நம் விருப்பத்தை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். மற்ற சமயங்களில் நம் விருப்பத்திற்கு மாறாக நடக்க வேண்டியிருக்கும். என்றாலும் பொதுவாகச் சமர்ப்பணத்தை மேற்கொள்வது எளிது. வேறொரு வகையாகப் பார்த்தால், கடினமானது. எல்லாச் செயலையும் தவறாது சமர்ப்பணம் செய்ய வேண்டியிருப்பதால், சமர்ப்பணத்தைப் பூரணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் கடினம் என்றாகும்.

ஒரு செயலைச் சமர்ப்பணம் செய்யும்பொழுது அது சம்பந்தப்பட்ட எண்ணம், உணர்வு, செயல் மூன்றையும் சமர்ப்பணம் செய்வதே முறை. அந்த முறையைக் குறிப்பான சமர்ப்பணம், பிரச்சினையைச் சமர்ப்பணம் செய்தல், வாய்ப்பைச் சமர்ப்பணம் செய்தல், ஆகியவற்றில் எடுத்துக்கொள்கிறோம். பொதுவான சமர்ப்பணம் என்பதால் செயலில் செயல் பகுதியை மட்டுமே சமர்ப்பணம் செய்வதை இங்குக் கருதுகிறோம். அந்த வகையில் இது எளிது. வாழ்வின் எல்லாச் செயல்களையும் தழுவுவதால் கடினம். அகலம் கருதுதல் கடினமான முறை. ஆழம் கருதுதல் எளிமையான முறை.

5. ஒரு குறிப்பிட்ட செயலைப் பூரண சமர்ப்பணத்திற்கு எடுத்துக்கொள்ளுதல் (Consecration of a complete act & all acts of that type):

சமர்ப்பணத்தை வாழ்க்கையின் எல்லாச் செயல்களிலும் கைக்கொள்ளுதல் யோகத்தைப் பூரணமாக ஏற்றுக்கொள்ளுதல் ஆகும். சாதகரில்லை, அன்பர் என்பதால், நான் சொல்லும் முறையின் பூரணப் புனிதம் யோகத்தைச் சார்ந்ததெனினும், அளவை அன்பரின் சந்தர்ப்பங்களைப் பொருத்துக் குறைத்து, சாதாரண பக்தனுக்கும் சாத்தியமாகும்படிச் செய்ய முயல்கின்றேன்.

ஆனால், ஏதாவது ஒரு வகையான காரியத்தை மட்டும் குறிப்பிட்டு அதன் எல்லைக்குள் சமர்ப்பணத்தைப் பூரணமாகக் கடைப்பிடிப்பது என்ற முறை இது.

நம் வாழ்வு, செயல்களால் நிரம்பியது. செயல்கள் பலதரப் பட்டவை. அளவு கருதியும், வகை கருதியும், செயல்கள் வேறுபடுகின்றன. உதாரணமாக நம் செயல்களை வீடு, ஆபீஸ், மற்ற இடங்கள் என்று பிரிக்கலாம். பணம் சம்பந்தப்பட்டவை, மனிதர் சம்பந்தப்பட்டவை, விசேஷங்களை ஒட்டியவை எனப் பிரிக்கலாம். குளிப்பது, சாப்பிடுவது, தூங்குவது, படிப்பது, குடும்ப நிர்வாகம், ஆபீஸ் கடமை, கடன் கொடுப்பது, வாங்குவது, கடைக்குச் சென்று சாமான் வாங்குவது, கடிதம் எழுதுவது போன்ற சுமார் 100, 200 செயல்களைக் கொண்டது நம் வாழ்வு. அவற்றுள் ஒன்றைத் தேர்ந்தெடுப்போம். உதாரணமாக, பஸ்ஸில் பயணம் செய்வதை எடுத்துக்கொள்வோம். அது சம்பந்தப்பட்ட எல்லா (1) எண்ணங்களையும், (2) உணர்ச்சிகளையும், (3) செயல்களையும் சமர்ப்பணத்திற்குப் பூரணமாக, நூற்றுக்கு நூறு உட்படுத்துவோம். செயல் சமர்ப்பணத்தால் நிரம்பியவுடன் (saturated) அன்னையின் அருட்பிரவாகம் அதில் தெரியும். அதிசயிக்கத்தக்க முறையில் தெரியும். இந்த யோகப்

பலனைப் பார்த்த பின், நமக்கு எந்த ஒரு செயலும் சமர்ப்பணத்தால் பூரண அருள் பெறும் திறன் ஏற்பட்டு விடுகிறது.

6. நம் முக்கிய பிரச்சினையைச் சமர்ப்பணம் செய்தல்:

சமர்ப்பணம் என்பது இறைவனை வாழ்வில் நம் தலைவனாகப் பிரதிஷ்டை செய்தல். ராமகிருஷ்ண பரமஹம்சரானாலும், ரமண மகரிஷியானாலும் பகவான் ஸ்ரீ அரவிந்தரானாலும், அன்னையானாலும், இவர்களை நெஞ்சார ஆழ்ந்து உணர்ந்த பக்தரால் நெகிழ்ந்து, வழிபட முடியும். அடுத்த கட்டத்தில் வீட்டில் உள்ள ஒரு பிரச்சினையை, அதுவும் நம் சுபாவம் ஏற்றுக்கொள்ள மறுக்கும் பிரச்சினையை பக்தன் இப்படிப்பட்ட குருவுக்குச் சமர்ப்பித்து "நீங்கள் எந்த முடிவு சொன்னாலும், நான் அதை தெய்வ வாக்காகக் கருதி, அப்படியே இந்தக் காரியத்தில் கடைப்பிடிக்கிறேன்'' என்று சொல்ல முன்வருவாரா, என்று கேட்டால் அதில் தேறுபவர்கள் உண்டு. ஆனால் மிகக் குறைவு. ஞானாநந்தரிடம் அப்படி ஒரு சிறப்பான சிஷ்யர் இருந்தார். அவர் கிழித்த கோட்டைத் தாண்டுவதில்லை. பக்தர் வீட்டில் பிள்ளை திருமணப் பிரச்சினை. பிள்ளைக்கும் பெற்றவர்களுக்கும் மாறுபாடு. பெற்றவர் ஞானாநந்தரின் அத்யந்த சிஷ்யர். அவரிடம் முறையிட்டார். சுவாமியோ, "பிள்ளை இஷ்டத்தில் தவறில்லை, மறுக்காதே'' என்றார். சிஷ்யரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. "சுவாமி பெரியவர். எல்லாம் உணர்ந்தவர்தாம். ஆனால், கல்யாணத்தைப் பற்றி சுவாமிக்கு என்ன தெரியும்?'' என்று தமக்கே விளக்கம் கொடுத்து, சுவாமியின் அறிவுரையைப் புறக்கணித்தார். இதே காரணத்தால்தான், பெரியவர்கள் தங்களை அணுகி ஆலோசனை கேட்பவர்களுக்கு, அவர்களுடைய சுபாவத்தை ஒட்டி யோசனை சொல்வது வழக்கம்.

அன்னையை வணங்கும் தெய்வமாகவும், வழிபடும் கடவுளாகவும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகக் கொள்வது மிகச் சிரமம். அதனால், சிறப்பு, அதுவும் வாழ்க்கையில்

முழுமையான வழிகாட்டியாகக் கொள்வது மிகச் சிரமம். அதனால் அதிக விசேஷம். இரண்டு லட்ச ரூபாயை 1970இல் முதலிட்டு, திட்டமிட்டு, பாங்க் 33 இலட்சம் கொடுக்க இசைந்தபின் பாதி கூட்டாளியாகி, பணம் போட்டவருடன் ஒரு வருஷம் சேர்ந்து உழைத்து 2 இலட்ச முதல் 6 இலட்ச இலாபம் சம்பாதித்த நிலையில், தமக்கும் பணம் முதலிட்டவருக்கும் பிணக்கு ஏற்பட, "இந்த நிலையில் அன்னையின் கருத்தென்ன?'' என்று தம்மையே கேட்டுக்கொண்டு, அன்னைக்குச் சண்டை பிடிக்காது என்று பதில் மனதில் கூறி, சண்டையைத் தவிர்க்க, தாம் தம் உரிமை, உடைமை, அனைத்தையும் தாமே முன்வந்து தியாகம் செய்வதே சரி என்று முடிவெடுத்து, கூட்டாளி கேட்காமலேயே, அவரிடம் தாம் நிபந்தனையின்றி விலகுவதாக ஒருவர் சொன்னார். உலகத்திலேயே இல்லாத ஓர் அற்புதம் 10ஆம் நாள் நிகழ்ந்தது. திட்டத்தில் பாதிக்கு உரிமையுள்ளவர் விட்டுக்கொடுத்தார். முழுத் திட்டமும் (project) 10ஆம் நாள் அவரைத் தேடி வந்தது. அன்னையை வாழ்வில் முழுமையாக ஏற்றுக்கொள்வதென்றால் இப்படியெல்லாம் நடக்கவேண்டியிருக்கும். அதற்கு அப்படிப்பட்ட பலன் உண்டு. 7000 ரூபாய் முதலிட்டு 1968இல் தொழில் ஆரம்பித்து, 3 வருஷத்தில் 3 தொழில்களை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தியவர் ஆசிரமத்திற்குத் தொழில் சம்பந்தமாக வந்து போகும் பொழுது, அன்னையின் இந்த மேற்கூறிய முறையைப் பற்றிக் கேள்விப்பட நேர்ந்தது. அவருடைய ஒரு தொழிற்சாலையில் வேலை நிறுத்தம் வந்தது. பொறாமைக்காரர்கள் பொங்கி வழியும்படி, கம்பெனியை மூட இன்னும் விரல்விட்டு எண்ணும் நாட்களே உள்ளன, என்று பேசுமளவுக்கு நிலைமை முற்றிவிட்டது. முதலாளிக்கும் அது புரிந்தது. திடீரென ஒரு செய்தி நினைவுக்கு வந்தது. ஆசிரமத்தில் அவர் கேள்விப்பட்டதுதான். அதன்படி அன்னைக்கு ஒரு தந்தி கொடுத்தார். அன்றிரவு தொழிலாளிகள் கூட்டம் போட்டு, வேலை நிறுத்தத்தை நிறுத்த முடிவு செய்து, மறுநாள் வேலைக்குத் திரும்ப வந்து, தங்களுக்கெல்லாம் குறையாக எதுவும் இல்லை; பன்னிரண்டு தறுதலைகள் மட்டுமே இந்த மாதிரி எல்லாம் செய்கிறார்கள் என்று

முதலாளி ஏற்கனவே அறிந்ததைப் பறைசாற்றினார்கள். அன்று மாலை, தொழிலாளர் தலைவனை, வாட்ச் திருடியதனால் போலீஸ் கைது செய்து, "உங்கள் முதலாளி ஜாமீன் கொடுத்தால் விடுகிறோம்'' என்று சொல்ல, மானேஜ்மெண்டைச் சேர்ந்த அனைவரும், "பொன்னான சந்தர்ப்பம். பன்னிரண்டு பேருடைய ராஜினாமாவை வாங்கிக் கொண்டு ஜாமீன் கொடுக்கலாம்'' என்றார்கள். பன்னிரண்டு பேரும் வேலைக்கு வரவில்லை. தாங்கள் ராஜினாமா செய்வதாகக் கூறினார்கள். அதனால் மீண்டும் வேலை தொடங்கியுள்ளது. முதலாளியோ அன்னை பக்தர் இல்லை. ஆசிரமம் வரும் சமயம் அங்குப் பல விஷயங்களைக் கேள்விப் பட்டவர். "தந்தி கொடுத்தேன். வேலை நிறுத்தம் முடிந்தது. இப்பொழுது அன்னை என்ன சொல்வார்?'' என்று அவர் நினைத்தபொழுது, பழைய செய்தி ஒன்று நினைவுக்கு வந்தது. அதன் சாரமாவது: தன் கையில் உள்ள பிடியை வைத்துக்கொண்டு பேசுவது நம் பழக்கம். அன்னைக்கு உகந்த முறை அந்தப் பிடியை விட்டுவிட்டுப் பேசுவது. இது நினைவுக்கு வந்ததும், முதலாளி தாம் நேரே சென்று, அவனை ஜாமீனில் விடுதலை செய்துவிட்டு திரும்பி வந்தபொழுது, மேனேஜ்மெண்ட், ஆபீஸில் உள்ளவர்கள் முகம் பேயறைந்தது போலிருந்தது. முதலாளியோ, தாம் ஒரு பெரிய காரியத்தைச் செய்துவிட்டதாக உணர்ந்தார். மறுநாள் மாலை 12 பேரும் வந்து தங்கள் ராஜினாமாவை ஆபீஸில் டைப் செய்து கொடுங்கள்; கையெழுத்திட்டுத் தருகிறோம் என்று கூறி, அதன்படிச் செய்தனர். அன்றிருந்து இன்றுவரை அங்கு தொழிலாளர் தகராறு இல்லை.

முக்கியமான பிரச்சினை, முக்கியமான இடத்தில் ஏற்படுகிறது. அதில் முக்கியமான குணம் கலந்திருக்கும். முக்கியமான பிரச்சினையைச் சமர்ப்பணம் செய்வது என்றால் முக்கியமான குணத்தை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். எவ்வளவுதான் தப்பு என்று தெரிந்தாலும், எவ்வளவு பெரிய நஷ்டம் ஏற்பட்டாலும், முக்கியமான குணத்தை மாற்றிக்கொள்ள எல்லோரும் முன்வர

மாட்டார்கள். கன்னிமாரா ஹோட்டலில் I.A.S. ஆபீஸர்களுக்குப் பார்ட்டி நடக்கும்பொழுது 12 வருஷமாகத் தம்மிடமிருந்த டிரைவர், ஆபீஸர்களுடன் உட்கார்ந்து சாப்பிடுவதைப் பார்த்த முதலாளி அவனை டிஸ்மிஸ் செய்து, பின் மன்னிப்புக் கேட்டுக் கொண்டால் எடுத்துக்கொள்கிறேன் என்றபோது, அவன் அதற்கு உடன்படவில்லை. அவர் ஊரில் இல்லாதபொழுது, அவர் பெயரைச் சொல்லி அவருடைய காரைப் பாதி விலைக்கு விற்க முயன்றவன் அவன். அப்பொழுதும் அவர் மன்னித்துவிட்டார். இப்பொழுது அவனால் மன்னிப்புக் கேட்க முடியவில்லை. அதுவே முக்கியப் பிரச்சினைக்கு அடையாளம்.

பொதுவான சமர்ப்பணம் என்பது எல்லாக் காரியங்களையும் அன்னையை நினைத்துச் செயல்படுதல். இதை வாயால் சொல்வதே பழக்கம். அது ஜீவன் இல்லாத சமர்ப்பணம். "நான் இக்கடிதம் எழுதுவதை அன்னைக்குச் சமர்ப்பணம் செய்கிறேன். இந்தச் சாப்பாட்டைச் சமர்ப்பணம் செய்கிறேன்'' என்பன போன்றவை. இதையே முழுமையாகச் செய்தால் வியப்பான பலன்கள் கிடைக்கும். இந்த 30 ஆண்டுகளாக இதுபோன்ற ஒருவரை நான் சந்தித்ததில்லை. நான் பொதுவான சமர்ப்பணம் என்ற தலைப்பில் குறிப்பிடுவதில் முதல் கட்டம் இது. அதில் அடுத்த மூன்று நிலைகள் உள்ளன. முதலில் எண்ணம், அடுத்தது உணர்வு, கடைசியாகச் செயல். சென்னைக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் பொழுது, அந்த எண்ணத்தைக் கவனித்து, அதை நாம் ஏற்றுக் கொள்ளாமல் அன்னைக்குச் சமர்ப்பணம் செய்ய முயன்றால், எண்ணம் சமர்ப்பணத்தை மீறி, எப்பொழுது போவது, யாரைச் சந்திப்பது? என்று வேகமாகப் போய்க்கொண்டிருக்கும். அதன் பயணத்தை நிறுத்தி, வேகத்தைத் தடுத்து, சமர்ப்பணம் செய்ய முடியாது. முடிந்தால் மனம் மௌனத்தில் திளைக்கும். அதீத சக்தி மனதில் அதே க்ஷணத்தில் சேரும். சமர்ப்பணம் அறுந்து போகாமல் தொடர்ந்து மனதில் இருந்தால், மனம் ஓடாது; எண்ணம் மறந்து போகும்; மனம் ஆழ்ந்த நிம்மதியடையும். அரை மணிக்குப் பிறகு யாரைச் சந்திக்கச்

செல்ல வேண்டும் என்ற நினைத்தோமோ அவர் நம்மைத் தேடி வருவதாகக் கடிதம் வரும். இதைப் பலரிடம் சொல்லியிருக்கிறேன். ஒரு முறை வெற்றியாகச் செய்து, பலன் பெற்று, ஆச்சரியப்பட்டு இருக்கிறார்கள். உணர்ச்சி, அடுத்த கட்டம். இதை விடுவது சிரமம்; பலன் அதிகம். சென்னைக்குப் போகலாம், தங்கையைப் பார்க்கலாம் என்றபொழுது அந்தச் செயல் சம்பந்தப்பட்ட எல்லா உணர்ச்சிகளும் ஒரே சமயத்தில் வந்து தலைதூக்கி, நம்மையும், அன்னையையும், சமர்ப்பணத்தையும் மறக்கச் செய்யும். சென்னைக்குப் போய்வந்து பல நாள் ஆனபின் ஒரு குறை ஏற்படும்பொழுதுதான், சமர்ப்பணம் நினைவுக்கு வரும். மாறாக உணர்ச்சிகளை எல்லாம் கவனித்து, ஒதுக்கிச் சமர்ப்பணம் செய்துவிட்டால், உள்ளம் புளங்காகிதம் அடையும். காரணமில்லாத சிறிய செயல்களுக்கெல்லாம் உடல் துள்ளும். சமர்ப்பணம் பலித்த நிலையில் நடக்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் சென்னைக்குப் போய், தங்கையைப் பார்த்து, மனம் நிறைந்து, காரியங்களைக் கலந்து முடிவு செய்து, பலன் ஏற்பட்டது போன்ற உணர்வைக் கொடுக்கும் நிகழ்ச்சிகள் பல தொடர்ந்து நடக்கும். சென்னைக்குப் போய் செய்ய வேண்டிய வேலை, போகாமல் முடிந்துவிட்டது தெரியவரும். இந்த ஒரு முறை சமர்ப்பணம் செய்தால், குறிப்பிட்ட வேலை பெரிய அளவில் நிறைவடையும். இதைவிடப் பெரியது உடல் அசைவுகளைச் சமர்ப்பணம் செய்தல். அதையும் ஒருவர் செய்துவிட்டால், அடுத்த கணம் விஷயம் பூர்த்தியாவதுடன், அதன் மூலம் தொடர்ந்து பல நல்ல நிகழ்ச்சிகள் நடந்தபடியிருக்கும். இவையெல்லாம் பக்தி மிகுந்தவரால் செய்யக்கூடியவையே. ஏற்றுக்கொண்டு செய்தால் சிறப்பு. பொதுவான சமர்ப்பணத்தை வாயால், மனத்தின் எண்ணத்தால், உணர்ச்சியால், உடல் அசைவுகளால் பூர்த்தி செய்வதைப் பற்றியவை இவை.

முக்கியமான பிரச்சினையைச் சமர்ப்பணம் செய்வது கடினம். ஏனெனில் அதில் முக்கியமான குணம் பின்னிக்கொண்டிருக்கும். அந்தக் குணத்தை விடாமல் சமர்ப்பணம் செய்ய முடியாது. இந்தப்

பிரச்சினையைப் பொருத்தவரையாவது அந்தக் குணத்தை மாற்றிக் கொள்ளாமல் இதைச் செய்ய முடியாது. இது கடினம் என்றாலும், சுபாவத்தை மாற்றுவதுபோல அவ்வளவு கடினமில்லை. சுபாவத்தை விட்டுக்கொடுப்பதே அதிகக் கடினம்.

முக்கியமான குணம் நம் பிரச்சினையில் கோபமானால், கோபத்தை இந்தப் பிரச்சினையைப் பொருத்தவரையில் விட்டுவிட முன்வர வேண்டும். எப்படிப்பட்ட கோபக்காரனும், தன் முதலாளியிடம் கோபத்தைக் காட்டுவதில்லை. கோர்ட்டில் வாக்குமூலம் கொடுக்கும் பொழுதும் காட்டுவதில்லை. அதையே பிரச்சினையின் முக்கியத்தைக் கருதி, வாடிக்கைக்காரரிடம், மனைவியிடம், தகப்பனாரிடம், மகனிடம், எளியவரிடம், பக்கத்து வீட்டுக்காரரிடம் பின்பற்றுதல் கடினம். பக்கத்து வீட்டுக்காரன் 3 அடி நம் மனைக்குள் வந்து சுற்றுச்சுவர் கட்டுகிறான். போலீஸ், பஞ்சாயத்து, சிபாரிசு எல்லாம் செய்து பார்த்தாகிவிட்டது. இனி முடியாது என்று கைவிட்ட நிலையில் "இப்பிரச்சினையில் கோபத்தை விட்டுவிட்டு, மனதிலும் கோபப்படாமல், சமர்ப்பணம் செய்ய வேண்டும்'' என்று முடிவு செய்து சமர்ப்பணம் செய்தபின், பக்கத்து வீட்டுக்காரன் 3 அடி தள்ளி தன் மனையில் பள்ளம் தோண்டுவதைக் கண்டாலும் நம்ப முடியாது. கோபம் பலருக்கு வரும். ஆனால் மனிதர்களுக்கு முக்கியமான பிரச்சினைகளை வளர்க்கும் குணங்கள் ஏராளம். பிடிவாதம், பிறர் புண்படப் பேசுதல், புரளி பேசுதல், ஒட்டுக் கேட்பது, சுயநலம், அகராதி, தான் செய்ததைச் சரி என்று நிலைப்படுத்துவது, நண்பர்கள் மீது சந்தேகப்படுவது, அவசரம், வரவேண்டிய வருமானத்தைக் கணக்குப் போடுதல், மனக்கோட்டைக் கட்டுதல், தன் நியாய மனப்பான்மையின் உயர்வை நினைத்து வியத்தல், போன்ற தவறான குணங்களால் மட்டும் முக்கியப் பிரச்சினைகள் வரும் என்பதில்லை. நல்ல குணங்களாலும் முக்கிய பிரச்சினைகள் வரும். குணம் நல்லதா, கெட்டதா என்ற ஆராய்ச்சியை விட்டு, ஒரு குணத்தால் பிரச்சினை ஏற்பட்டால் அந்தக் குணத்தை விட்டுவிட முன்வர வேண்டும். குறைந்தபட்சம், அந்தப் பிரச்சினையைப்

பொருத்தவரையிலாவது விட்டுவிட முன்வர வேண்டும். குணத்தை விடாமல், அதாவது பிரச்சினையை உற்பத்தி செய்த குணத்தை விடாமல், சமர்ப்பணம் செய்ய முடியாது. வாயால் சொல்லலாம். அதற்கு மேலே சொன்ன உடனடிப் பலன் இருக்காது. விடாமல் தொடர்ந்து சொன்னால் கொஞ்சம், கொஞ்சமாக நாள்பட்ட பலன் இருக்கும்.

நம்பிக்கை, உண்மை பேசுதல், விருந்தோம்பல், பிரியம், பாசம், பற்று, கடமையைச் செய்தல், மனச்சாட்சிக்குப் பயந்து செயல்படுதல், சட்டத்தைக் கடைப்பிடித்தல் போன்ற உயர்ந்த குணங்களாலும் முக்கியமான பிரச்சினை வரும். பொதுவாக எல்லா மனிதருக்கும் கெட்ட குணங்களால் பிரச்சினை ஏற்படும். நல்ல குணங்களால் ஒருவருக்குப் பிரச்சினை ஏற்படவேண்டுமானால், அவர் ஏற்கனவே உயர்ந்த நிலைக்கு வந்தவராயும், உயர்ந்தவராயும், செல்வம், அந்தஸ்து, நாணயம் உடையவராயும் இருப்பார். அவருக்கும் நல்ல குணங்களால் பிரச்சினை ஏற்படுவது குறைவு. ஆனால், நல்ல குணங்களால் அவர் வாய்ப்பை இழப்பதுண்டு.

1935இல் காந்தி ஆசிரமம் நிறுவி, தம் வீட்டில் ஹரிஜனங்களை வேலைக்கு வைத்துக்கொண்டு, ஹரிஜனப் பெண்ணுக்கு வேளாளர் குல மாப்பிள்ளையை மணமுடித்து ஒரு மிராசுதார் "காந்தி'' எனப் பெயர் பெற்று விளங்கினார். இவருடைய பிள்ளை, B.A.. முடித்து விட்டான். ஸ்ரீ R.K.. சண்முகம் செட்டியார் அவருடைய நண்பர். பிள்ளையை ஆக்ஸ்போர்டுக்கு (Oxford) அனுப்ப, செட்டியார் ஒரு வார்த்தை சொன்னால் போதும். மிராசுதாருக்கு உதவி கேட்டுப் பழக்கம் இல்லை. 3 ஆண்டுகளாக பிள்ளையும், நண்பர்களும், உறவினர்களும் அவரை, "செட்டியாரைக் கேளுங்கள். பிரியமாகச் செய்வார்'' என்று வற்புறுத்தியும் மறுத்துவிட்டார். அவரது குணம், நல்ல குணம். அதனால் பிரச்சினையில்லை; வாய்ப்பு போகிறது. பிறகு அவர் R.K.S..ஐ சந்திக்க நேரிட்டது. கேட்கவே நா எழவில்லை. செட்டியாரே முன்வந்து மிராசுதார் நிலையறிந்து தாமே விசாரித்து உதவி செய்தார்.

அன்னையிடம் நெருக்கம் ஆகும்பொழுது பிரச்சினை தீரும். நல்ல குணத்தால் பிரச்சினை ஏற்படுவது அபூர்வம். ஆனால் நல்ல குணத்திற்கும் முக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் திறன் உண்டு. வருமானமில்லாத சகோதரனுக்கு வருஷக்கணக்காக உதவுவது நல்ல குணம். ஆனால் உன் உதவியைப் பெற்ற சகோதரன் "உனக்குப் பச்சையாகத் தீங்கிழைப்பேன்'' எனச் சபதமிட்டு உன் கண்ணெதிரே செயல்படுகிறான். உன் உத்தியோகத்திற்கு ஆபத்து, சொத்துக்கு நஷ்டம், நல்ல பெயர் கெடுகிறது, உயிருக்கும் ஆபத்து வருகிறது. உன்னால் உன் நல்ல குணத்தை மாற்றி, உன் உதவியை நிறுத்த முடியவில்லை. உதவியை நிறுத்தினால் சகோதரன் அடங்கிவிடுவான். இது நல்ல குணத்தால் ஏற்படும் தீங்கு.

ஒரு பெருந்தொழில் அதிபர். பழைய நண்பர்களை எல்லாம் தம் கம்பெனியில் உயர்ந்த பதவிகளில் அமர்த்தினார். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவருக்குத் தீங்கு செய்தனர்; கவிழ்க்கத் திட்டமிட்டனர். அவருக்கு ஒன்றரைக் கோடி நஷ்டம் வந்தது. அவரிடம் நடப்பதைச் சொன்னால், "ஏதாவது செய்யட்டும். நண்பர்கள் மீது நான் கடுமையாக இருக்க முடியாது'' என்றார். அவர் அதிர்ஷ்டம், அவர் தம்மூருக்குப் போகும்போது பாண்டியில் தங்க ஆரம்பித்தார். தெய்வ பக்தியுள்ளவர். சமாதி தரிசனம் செய்வார். அடிக்கடி அது நடந்தது. நண்பர்கள் எல்லோரும் தங்கள் எண்ணம் பூர்த்தி ஆகாததால், ஒவ்வொருவராக அவரை விட்டுப் போய்விட்டார்கள். அதிபர் 10 கோடியிருந்து தம் கம்பெனிகள் 100 கோடிக்குப் போவதைக் கண்டு மகிழ்ந்தார்.

முக்கிய குணங்களால் முக்கிய பிரச்சினை ஏற்படும். அவற்றைத் தீர்க்க அந்த விஷயத்தைப் பொருத்தவரையிலாவது அந்தக் குணத்தை மாற்றிக்கொள்ள முன்வர வேண்டும். அப்படி இல்லை என்றால் மேலெழுந்தவாரியாகச் செய்யும் சமர்ப்பணம் நாளாவட்டத்தில் பலன் தரும். அதுவும் இல்லை என்றால், வேறொரு வகையில் - தியானம், சேவை, காணிக்கை போன்றவை - அன்னையிடம் நெருக்கமாக வந்தால் பிரச்சினையின் தீவிரத்தைவிட அன்னையிடம் நெருக்கம் ஆகும்போது பிரச்சினை  தீரும்.

7. தொந்தரவான பிரச்சினையைச் சமர்ப்பணம் செய்தல்:

சமர்ப்பணம் என்றால் என்ன என்று நமக்குத் தெரியும். பொதுவான பிரச்சினையைச் சமர்ப்பணம் செய்வதுபோலத்தான் குறிப்பான சமர்ப்பணமும். அதேபோன்றுதான் தொந்தரவான பிரச்சினையின் சமர்ப்பணமும் என நினைக்கத் தோன்றும். தொந்தரவு வந்து அதைச் சமர்ப்பணம் செய்யும்வரைதான் இந்த நினைவெல்லாம்.

தொந்தரவு பல வகைகளில் வரும். உத்தியோகத்திற்கு ஆபத்து வரும் போலிருக்கிறது; இருமல் வருவதைப் பார்த்தால், டாக்டர் செய்யச் சொல்லும் test எல்லாம் நினைத்தால் T.B. என டாக்டர் சந்தேகப்படுகிறார்; மகனுடைய நடவடிக்கையை நினைத்தால் இரவில் தூக்கம் வருவதில்லை. இதுபோன்ற தொந்தரவுகள் வந்து பல நாள் ஆனபின் யாராவது "சமர்ப்பணம் செய்தீர்களா?'' எனக் கேட்கும் போதுதான் இத்தனை நாளாகச் சமர்ப்பணம் செய்யவில்லை என்பது நினைவு வரும். தொந்தரவு அஸ்தியில் ஜுரத்தை ஏற்படுத்தியபின் தொந்தரவு மட்டும்தான் நினைவிருக்கும். சமர்ப்பணம் நினைவுக்கு வாராது; அன்னைகூட நினைவுக்கு வாராது; நினைவுபடுத்திய பின்னும் சமர்ப்பணம் செய்யும் நிலையில் மனம் இருக்காது. "என்னை ஒன்றும் தொந்தரவு செய்யாதீர்கள். மனம் ஒரு நிலையில் இல்லை. இப்போது சமர்ப்பணத்திற்கெல்லாம் நேரமில்லை. இதெல்லாம் ஒரு வழியாக அடங்கட்டும்'' என்று சொல்லத் தோன்றும். அப்படியும் மீறி சமர்ப்பணம் செய்ய முனைந்தால், சமர்ப்பணம் மூன்று நிமிஷத்தில் மறந்துபோகும். பிரச்சினை ஆயிரம் கோர ரூபங்களில் மனக்கண் முன் தாண்டவமாடும். இந்த நிலையில் என்ன செய்வது? நம் மனத்தை இரண்டாம் பேர்வழியாகச் செய்து அதனுடன் வாதாட வேண்டும். அதனிடம், "எத்தனை முறை அன்னை பெரிய சிக்கல்களிலிருந்து உன்னை விடுவித்துள்ளார்கள்? ஏன் இம்முறை இப்படி பிடிவாதம்

செய்கிறாய்? அன்னையை நீ உனக்குத் துணையாக அழைக்காவிட்டால், உனக்கு யார் துணை இருப்பார்கள். உன் மகன் நடத்தை சரியில்லை என்றால், நீ இரவு, பகலாய் கவலையில் மூழ்கினால், அவன் மாறப்போகிறானா? உன்னால் அவனை வெளியில் அனுப்பாமல் இருக்க முடியுமா? அனுப்பியபின் அவன் நடத்தை உன் கட்டுப்பாட்டில் இருக்குமா? அவனைத் திருத்த யார் இருக்கிறார்கள்? எவரும் இல்லை என்று சொன்னால், அன்னையாலும் முடியாது என்று பொருள் அல்லவா? அன்னையை அழைத்தால் பிரச்சினை தீரும் என்று உனக்குத் தெரியாதா? மற்றவர்களைப்போல் பிரச்சினையை நினைத்தால், அது தானே வளரும். சமர்ப்பணம் சிரமமானால், முடியாதது என்று அர்த்தமா? எல்லோரும் செய்யும் தவற்றை நீ செய்யலாமா? மனதைத் திடப்படுத்திக்கொண்டு, அன்னையை அழைக்க முடிவு செய். அது மட்டுமே சரியான பாதை. அடம் பிடிக்காதே. கவலையைக் கருதாதே. அன்னையை நினைவுகூர். நீயே இப்படி இருந்தால், உனக்கு யார் சொல்வது? எழுந்திரு. அன்னையிடம் வா. மனதை மாற்று'' என்று மனதை அன்னையிடம் செலுத்தவேண்டும். தொந்தரவான பிரச்சினை கிளம்பிவிட்டால், மனிதன் நிலையிழந்து விடுவான். அன்னையை மறந்துவிடுவான். நினைவு வந்தாலும், அன்னையிடம் முறையிடும் அளவுக்குத் தெம்பிருக்காது. அந்நிலையில் முதலாவதாகச் செய்ய வேண்டியது மனதை அன்னையிடம் திருப்பி, அன்னை மீதுள்ள நம்பிக்கையைப் புதுப்பித்து, அன்னை நம் பிரச்சினையைத் தீர்ப்பார் என உறுதிபூண்டு, சமர்ப்பணத்தை ஆரம்பிக்க வேண்டும். இதுவே கடினமான கட்டம். இதைச் செய்துவிட்டால் பெரும்பகுதி வெற்றி கிட்டியதாகும்.

அடுத்த கட்டத்தில் சமர்ப்பணத்தை நினைவு கூரும் அளவுக்குப் பிரச்சினை இடம் கொடுக்காது. பிரச்சினையை ஒதுக்கி வைத்து, எண்ணம், உணர்வு, செயல் ஆகிய மூன்றையும் சமர்ப்பணம் செய்தால்,

பூரண சமர்ப்பணத்தின் கீழ் கொண்டு வந்தால், பிரச்சினை நகர ஆரம்பிக்கும்; தீரும். அப்படியும் தடை இருந்தால் ( past consecration) அப்பிரச்சினையின் பூர்வோத்திரத்தைச் சமர்ப்பணம் செய்தால், பிரச்சினை முழுவதும் கரையும்; பூரணமாக விலகும்.

ஒருவரால் தொந்தரவான பிரச்சினை வந்தபின்னும், அன்னையை நினைவு கூர முடியும் என்றால், அதைச் சமர்ப்பணம் செய்ய முடியும் என்றால், அவரால் செய்ய முடியாதது ஒன்றில்லை எனலாம். இது பெரிய திறன். இத்திறன் கைக்கு வந்தால், அன்னையிடம் பெரிய பேறுகளைப் பெறலாம்.

8. வாய்ப்பைச் சமர்ப்பணம் செய்தல்:

சமர்ப்பணம் சம்பந்தப்பட்டவரை வாய்ப்புதான் (opportunity) மிகவும் கடினம். வாய்ப்பைச் சமர்ப்பணம் செய்வது எளிதன்று; மிகக் கடினம். தொந்தரவான பிரச்சினை வந்துவிட்டால், அன்னையை மறந்துவிடுவோம். அதன் பிறகும் அன்னை நினைவுள்ளவர் சிறந்த பக்தர். வாய்ப்பு அதைவிடச் சிரமம். ஒரு வாய்ப்பு வந்தபின் அன்னை நினைவு இருப்பது அரிது. அதன் பின்னும் அன்னை நினைவு இருந்தால், அவரைவிடச் சிறந்த பக்தர் இல்லை எனலாம்.

தாசில்தார் போன்ற ஆபீசரை முனிசிபல் சேர்மன் நிறுத்தி விசாரித்து, "எங்கள் வீட்டிற்கு வர வேண்டும்'' என்று சொன்ன பிறகு, தாசில்தாருக்கு அன்னை நினைவு இருந்த இடம் தெரியாமல் போய்விடும். மனிதன் சாதாரணமானவன். வழியில் போய்க்கொண்டு இருக்கும் ஒருவனைக் காரில் அவன் போகுமிடத்திற்குக் கொண்டு போய்விட்டால், பாங்க் ஏஜெண்ட், வாடிக்கைக்காரருக்கு "உங்களுக்குப் பாங்கில் இன்னும் கொஞ்சம் அதிகமாகப் பணம் கொடுக்கலாம்'' என்று சொல்விட்டால்; கதாசிரியரைப் பார்த்து ஒரு புத்தகம் வெளியிடுபவர், "உங்கள் கதையை நான் வெளியிட விரும்புகிறேன்'' என்றால்; நம் தெருவில் வசிக்கும் பார்லிமெண்ட் மெம்பர் தம் வீட்டு

விருந்துக்கு அழைத்துவிட்டால்; மனிதன் தன் நிலையிழந்துபோகிறான். அன்னை மட்டும் அல்லர், அவனுக்கு எல்லாம் மறந்துபோகிறது. வாய்ப்பைச் சமர்ப்பணம் செய்வது என்ற பிரச்சினைக்கு இடமில்லை. அன்னை இவை போன்ற வாய்ப்புகளை மட்டும் கொடுப்பதில்லை. மலை போன்ற மனத்திடம் உள்ளவனுக்கும், நிலைகுலையும்படியான வாய்ப்பை அளிப்பது அன்னையின் வழக்கம். அன்னையின் இராஜ்யத்தில் பள்ளி ஆசிரியரை, துணைவேந்தர் வீடு தேடி வந்து பார்ப்பார். பிரதம மந்திரியின் அந்தரங்க நண்பர் எளிய பக்தனை நெருங்கி வந்து, "உங்களைப் பார்க்கவே வந்தேன். இன்னும் கொஞ்ச நாழி உங்களுடன் பேசப் பிரியப்படுகிறேன்'' என்பார். "எங்கள் நாட்டு பார்லிமெண்டில் நீங்கள் வந்து உரையாற்ற வேண்டும்'' என்று சொந்த ஊர் அசெம்பிளியிலும் பேசாதவருக்கு அழைப்பு வரும். இவை போன்ற வாய்ப்புகள் வந்தபின்னும் அன்னையை நினைந்து, சமர்ப்பணம் செய்து, தொடர்ந்து எல்லா எண்ணங்களையும், உணர்ச்சிகளையும், செயல்களையும் அந்த வாய்ப்புடன் தொடர்பு உள்ள அனைத்தையும் ஒருவர் சமர்ப்பணம் செய்கிறார் எனில், அது பெருஞ்சிறப்பு. உயர் தனிச்சிறப்பு. அவர்கள், நிகழ்ச்சிகளால் பாதிக்கப்படாதவர்கள், தன்நிலை குலையாதவர்கள். அப்படிப்பட்ட ஒரு (discipline) கட்டுப்பாட்டை நாம் மேற்கொண்டு, சாதித்தால், அது பெருஞ்சாதனையாகும்.

9. தரிசனங்களுக்கு ஆசிரமம் செல்வது:

பக்தர்களுக்கு முக்கியமான இடம் ஆசிரமம். அங்கு முக்கியமான நேரம் தரிசன நாட்கள். நமக்கு முக்கியமான இடத்திற்கு, முக்கியமான நாட்களில் தவறாது சென்று வழிபாடு செய்தால், வருஷம் முழுவதும் தியானம் செய்வதற்குச் சமமான பலனைக் கொடுக்கும். அப்பலனைப் பெற நாம் கடைப்பிடிக்க வேண்டியது என்ன?

இடம் முக்கியம். நாள் முக்கியம். அந்நாள்களில் அங்கு செல்வதை நாம் நம் வாழ்வில் முதல் முக்கியத்வம் வாய்ந்ததாகக் கருதினால், கருதி அதன்படி நடந்தால் போதும். அதுபோல் நாம் தரிசனப் பிராயாணங்களை மனதில் ஏற்றுக்கொண்டிக்கிறோம் என்பதற்கு ஒரு சான்று உண்டு. இந்தப் பிரயாணங்களுக்கு எந்தத் தடையும் எப்பொழுதும் இல்லை என்றால், நாம் சரிவர மனதில் அதை ஏற்றுக்கொண்டோம் எனப் பொருள். அதை செய்வதெப்படி? இப்பொழுது நாம் செய்வதில் என்ன குறை? மற்ற எந்த முறைகளையும் கருதாது, அம்முறைகளால் கிடைக்கும் அதே பலன் கிடைக்கும் அளவுக்கு தரிசனப் பயணங்கள் பலன் தர வேண்டுமானால், நாம் அந்தக் கருத்தை - தரிசனப் பயணங்களை - முதன்மையாக மனதில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னேன். ராஜ சபையில் யார் பேசினாலும், எந்தக் காரியம் நடந்துகொண்டு இருந்தாலும், எல்லோருடைய பார்வையும் ராஜா மீதே இருக்கும். ஒரு நாட்டியம் நடப்பதால் எல்லோரும் நாட்டியத்தைக் கவனித்தாலும், எல்லோர் மனமும் ராஜாவின் மீதே இருக்கும். அதேபோல், நாம் எங்கிருந்தாலும், என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் தரிசனத்திற்கு ஆசிரமம் போக வேண்டும் என்ற எண்ணம் ஜீவனில் பிரதானமாக இருக்க வேண்டும். அதில் குறை என்று மயிரிழைகூட இருக்கக்கூடாது. மீதியெல்லாம் இரண்டாம்பட்சம். தரிசனப் பயணங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் சமர்ப்பணம் செய்யலாம். அதுபோல் பல இதர காரியங்களையும் செய்யலாம்; செய்யாமருக்கலாம். ஆனால், அவ்வெண்ணம் ஜீவனில் பிரதானமான எண்ணமாக இருக்க வேண்டும். நாம் செய்தது சரி என்று சொல்வதுபோல் அது சம்பந்தப்பட்டவை தடையின்றி நடந்தால், மேலும் அந்த ஒரு விரதத்திற்காக நமக்கு அன்னையிடமிருந்து அதிகபட்சம் கிடைக்கும் பலன் கிடைத்துவிடும்.

பல வகைகளில் இக்கருத்தை மேலும் விளக்க முடியும். என்றாலும், தேவையில்லை என்ற காரணத்தால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

10. மாதக் காணிக்கை (Prosperity Offerings):

நம் மரபில் ஏற்பட்ட ஒரு முக்கியமான பழக்கம் தெய்வத்தை வழிபடும் பக்தன் தன் உடல், பொருள், ஆவி, அனைத்தையும் தன் வழிபாட்டில் ஈடுபடுத்துகிறான். வழிபாடு முழுமையாகவேண்டி வாயால் துதி பாடி, மனத்தால் பக்தி செலுத்தி, உடலால் உழவாரப்படை பணி போன்ற உழைப்பை நல்கி, தன் கரணங்கள் அனைத்தையும் வழிபாட்டில் பக்தன் ஈடுபடுத்துகிறான். மனத்தால் எவரும் பக்தி செலுத்த முடியும். வாயால் எல்லோராலும் துதி பாட முடியும். ஆனால் கோயிலுக்குப் போகின்ற எல்லோராலும் உடலால் உழைப்பை நல்க வாய்ப்பிருப்பதில்லை. இது சந்தர்ப்பத்தால் ஏற்பட்ட விளைவு.

ஜீவனால் மலர்ந்து தெய்வத்தைத் தன்னுள் அழைப்பது சிறந்தது. அது முடியாதவர்கள் மனதால் தெய்வ நாமத்தை உச்சரிக்கின்றார்கள். அதுவும் முடியாதவர்கள் வாயால் நாம ஜெபம் செய்கிறார்கள். உடலால் தெய்வத்திற்குப் பணி செய்தால்தான் உடலின் பங்கு பூர்த்தியாகும். இதைப் பூர்த்தி செய்ய முடியாதவர்கள் தங்கள் உடல் உழைப்பின் பலனைத் தெய்வத்திற்குச் சமர்ப்பித்தால், உழைப்பால் வந்த ஊதியத்தைச் சமர்ப்பணம் செய்தால், உடலால் தெய்வ வழிபாடு செய்ததற்குச் சமமாகும். இதுவே காணிக்கை செலுத்துவதன் ஆன்மிக அடிப்படை.

எந்தக் கரணத்தால் இறைவனைப் பூஜிக்கின்றோமோ, அந்தக் கரணம் அருளால் நிரம்பி வழிகிறது. ஸ்தோத்திரம் பாடி வழிபட்டால், மனம் இறைவனது அருளால் தெளிந்து, விசாலமாகி, புத்தி கூர்மை ஏற்படும். பக்தியால் பரவசப்பட்டால், மன வியாகூலங்கள் விலகி, உள்ளம் பூரித்து, சந்தோஷத்தால் நிறைகிறது. ஒரு கரணத்தால் செய்யும் தொண்டிற்கு மற்றொரு கரணத்தை நிரப்பும் திறன் இல்லை. ஆங்கிலத்தில் அதிகத் திறமையுள்ள மாணவனுக்கு கணிதத்தில் அதனால் மார்க் வாராது. கணிதத்தில் அவன் வாங்கிய 12 மார்க் 42ஆக வேண்டுமானால், அவன் தன் நேரத்தைக் கணிதப் பயிற்சியில்

செலவிட வேண்டும். கணிதத்தில் மார்க் குறைவாக இருப்பதால், ஆங்கிலப் புத்தகங்களை அனுதினம் படித்தால், அது கணிதத்திற்குப் பயன்படாது.

பொருள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது. பொருளை ஈட்டுவது உடலும், அதன் உழைப்பும். பக்தன் தன் வருமானம் பெருக வேண்டுமென அன்னையிடம் பிரார்த்தனை செய்தால், அவன் அன்னைக்கு உடலால் சேவை செய்ய வேண்டும். அதுவே அவனுக்கு நேரிடையாக உதவுவது. அதற்கு நேரிடையாக உதவ, அவனது உடலால் அன்னைக்குச் செய்யும் சேவை. இந்தச் சேவையின் உட்கருத்தை அறிந்து, தான் செய்யும் சேவை அன்னைக்குச் சேரும்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்வது எப்படி என்பதை "சேவை'' என்ற கட்டுரையில் விளக்கியிருக்கிறேன். எல்லோராலும் அதைச் செய்ய முடிவதில்லை. நேரடியாக ஆசிரமம் வந்து சேவை செய்வதும் எல்லோராலும் செய்யக்கூடியதில்லை. அன்னையின் பிரதாபங்களைச் சொல்லும் புத்தகங்களை ஏராளமாக விற்று, அதனால் தனக்கிருந்த ஏழரை நாட்டுச் சனியனின் தரித்திரத்தைப் போக்கி, அபரிமிதமாக வளம் பெற்றவர்கள் பலருண்டு. அதுவும் எல்லோராலும் செய்ய முடிவதில்லை. எதுவும் முடியாதவர்களுக்கு உகந்தது காணிக்கை. இதன் சிறப்பை விளக்க ஒன்றைக் குறிப்பிட்டால் போதும். ஆசிரம டிபார்ட்மெண்ட்களில் புதிய வேலை ஆரம்பிக்கும்பொழுது அன்னைக்குக் காணிக்கை செய்வது உண்டு.

ஜனவரி முதல் தேதியை வருஷத்திற்கு (prosperity day) சுபிட்ச தினம் என அன்னை கூறுகிறார். ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று ஆசிரம சாதகர்கட்கு அன்னை அவர்களுடைய தேவையை தாமே வழங்கி, தரிசனம் கொடுத்து, அனுக்கிரஹம் செய்ததுண்டு. அதனால் ஆசிரமத்தில் மாதம் முதல் தேதிக்கு சுபிட்ச தினம் (prosperity day) எனப் பெயர். இதெல்லாம் கருதியே அன்பர்கள் தங்கள் மாத வருவாயில் ஒரு பகுதியை அன்னைக்கு முதல் தேதியன்று அனுப்பி வைப்பது வழக்கம். ஓர் அன்பர் வேலை

செய்த ஸ்தாபனத்தில் சம்பளத்தை 7 முதல் 10 தேதிவரையில் ஒரு பகுதியையும், 15 முதல் 20 தேதியில் அடுத்த பகுதியையும் கொடுப்பது நீண்ட கால வழக்கமாக இருந்தது. அங்கிருந்து ஆசிரமத்திற்கு ஓர் அன்பர் வர ஆரம்பித்தார். தம் ஊதியத்தில் ரூ.10ஐ காணிக்கையாக அனுப்பினார். அதே மாதம் ஸ்பதானத்தின் தலைவர் மாறினார். அவர் செய்த முதல் வேலை சம்பளம் சம்பந்தமானது. "சம்பளத்தைத் தாமதப்படுத்திக் கொடுப்பது சரியில்லை. இந்த மாதத்திலிருந்து சம்பளத்தை முழுவதுமாக முதல் தேதி மாலை கொடுத்துவிட வேண்டும்'' என்று கூறி, அதை நிறைவேற்றினார். அன்பர் சில மாதங்களுக்குப் பின் தம் காணிக்கையை ரூ.20ஆகச் செய்தார். அதே மாதம் சர்க்கார் புதிய சட்டம் போட்டு, அது போன்ற ஸ்தாபனங்களுக்கு சர்க்காரே நேரடியாகச் சம்பளம் வழங்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. அன்பருக்கு ஒரு மாதமாவது தம் முழு ஊதியத்தையும் அன்னைக்குக் காணிக்கையாகச் செலுத்த வேண்டும் என்று ஆவல். ஓராண்டு கழிந்து அது முடிவு பெற்றது. தம் 188.75 சம்பளத்தைக் காணிக்கையாக அந்த டிசம்பரில் செலுத்தினார். அடுத்த டிசம்பரில் அவர் தினமும் ரூ.188.75 செலவு செய்யும் ஸ்தாபனத்தின் தலைவராகி, தம் வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் போய்விட்டார். 3 ஆண்டுகளுக்குப் பின் அவரது குடும்பத்தில் தினமும் ரூ.188.75 செலவாகும் நிலைக்குப் போய்விட்டார்.

மாதக் காணிக்கையாக 1 நாள் ஊதியம் கொடுப்பவருண்டு. வருஷத்தில் மொத்தக் காணிக்கை 1 மாத ஊதியமாக இருக்கும்படிக் கொடுப்பவருமுண்டு. காணிக்கை அவசியம். ஆனால் அதற்கு அளவு இல்லை. நம் பிரார்த்தனை பூர்த்தியாக காணிக்கை எந்தத் தொகையாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறைந்தபட்சத் தொகைக்கும் செய்த பிரார்த்தனை பலிக்கும். ஒருவர் அதிகமான காணிக்கை செலுத்தினால் அது சேவையாக மாறிவிடும். வியாதி உள்ள ஒருவர் ஸ்ரீ அரவிந்தர் சமாதியை தரிசனம் செய்துவிட்டு,

ஸ்ரீ அரவிந்தர் அறைக்குப் போனார். காணிக்கை செலுத்த நினைத்தார். அவர் எந்தக் காணிக்கை - ரூ.5 அல்லது ரூ.10 - செலுத்தினாலும் வியாதி குணமாகும். அவர் செல்வர். காணிக்கை வேண்டித் திரும்பினார். அருகிலிருந்தவர் எதுவும் புரியாமல் பல ரூ.100 நோட்டுக்கட்டுகளைக் கொடுத்தார். எல்லாவற்றையும் காணிக்கையாகச் செலுத்திவிட்டார். 8ஆம் நாள் வியாதி குணம் ஆயிற்று. அத்துடன் எல்லாவற்றையும் மறந்துவிட்டார். இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் புதிய நிலைமை ஏற்பட்டது. கனவிலும் கருதாத ஒன்று அவர் வாழ்க்கையில் நடந்தது. அவருடைய மாநிலத்தில் அவரை முதன் மந்திரியாக ஆக்க வேண்டுமென்று அநேகர் விரும்பினர். அவருக்குப் புரியவில்லை. அதுவும் நடந்தது. காணிக்கை செலுத்தும் நேரத்தில் பக்தியால் உந்தப்பட்டு பெருந்தொகைகளைச் செலுத்துபவர்களுக்குப் பெரிய விஷயங்கள் நடப்பதுண்டு.

மாதம்தோறும் காணிக்கை செலுத்துவதை மட்டும் நோன்பாக ஏற்றுக்கொள்ளும் அன்பர் அதன் மூலம் முழுப் பலன் பெற செய்யக் கூடியவை என்ன?

 1. தல் கருத்து, காணிக்கைக்கு ஜீவனுண்டு என்பதை அறிந்து நாம் செலுத்தும் காணிக்கைக்கு ஜீவன் ஏற்படும் வகையில் அதைச் செலுத்தி, அந்த ஜீவனுடன் நாம் நித்தியத் தொடர்பு கொள்ள வேண்டும். அதை நிறைவேற்ற காணிக்கை ஒரு கடமை என்று செய்யாமல், ஜீவனுள்ள குழந்தையை வளர்ப்பது போன்ற உணர்வுடன் அதில் ஈடுபடவேண்டும்.
 2. காணிக்கை என்பது நம் உடல் உழைப்பின் பக்தியை அன்னைக்குச் செலுத்துகிறது என உணர்ந்து, நம் உழைப்பை அன்னையின் சேவையாக, பொதுவாகக் கருத வேண்டும்.
 3. காணிக்கையின் அளவை நம் சந்தர்ப்பத்திற்கேற்ப நிர்ணயித்துக் கொள்ளலாம். அளவு இரண்டாம்பட்சம். நிர்ணயித்தபின் அதைக் குறைக்கக்கூடாது.

 1. மாதம் வருமானம் வந்தவுடன், முதல் செலவு காணிக்கையாக இருக்க வேண்டும்.
 2. காணிக்கை அனுப்பும்பொழுது அது சம்பந்தமான வேலைகளை, M.O. அனுப்புவது, செக் (cheque) எழுதுவது, தபாலில் சேர்ப்பது போன்றவற்றை நாமே நேரில் செய்ய வேண்டும்.
 3. மனம் காணிக்கையைப் பவித்ரமாகக் கருத வேண்டும். பணமாகக் கருதக்கூடாது.

காணிக்கை சம்பந்தப்பட்ட வேலைகளைச் சமர்ப்பணம் செய்ய முடிந்தால் சிறப்பு. நாம் செய்ய வேண்டியவற்றை முறையாகச் செய்தால், காணிக்கை நேரத்தில் உரிய இடத்திற்குச் சென்று, மறு தபாலில் பிரசாதம் வரும். காணிக்கையின் பூரணத்தையும், பவித்திரத்தையும், பிரசாதம் வரும் வேகத்தில் அறிந்து கொள்ளலாம். உதாரணமாக M.O. அனுப்பும்பொழுது நாம் புதிய நோட்டுக்களைப் போஸ்டாபீஸில் கொடுத்தால், அவை நேரடியாக ஆசிரமத்திற்குச் செல்லாது என்று நமக்குத் தெரியும். ஆனால், நாம் கொடுக்கும் மனப்பான்மையே முக்கியம். காணிக்கையாக அனுப்பும் பணம் நம் மாத வருமானத்திருந்து வந்த அதே பணமாக இருப்பது நல்லது. M.O. மூலமாகவும், செக் (cheque) மூலமாகவும் அதே ரூபாய் நோட்டு போகாது என்றாலும், நாம் செய்வது நம்மைப் பொருத்தவரை நமக்குகந்தவையாகச் செய்துவிடுவது நல்லது. நம் ஸ்தாபனத்தில் சம்பளம் பல தேதிகளில் கொடுக்கலாம். நம்மைப் பொருத்தவரை நம் கைக்குச் சம்பளம் வந்தவுடன் முதல் காரியமாகக் காணிக்கையை அனுப்பிவிட்டால் போதும். ரூ.2000 சம்பளம் வாங்கிய ஒருவர் 1978இல் ரூ.200 காணிக்கையாக அனுப்பிக்கொண்டிருந்தார். அவர் வேலையை விட்டு பயிற்சிக்காக ரூ.1000 சம்பளத்தில் அமர்ந்தார். ஏனோ அவர் காணிக்கையைக் குறைக்கவில்லை. தொடர்ந்து ரூ.200 அனுப்பினார். 1 வருஷம் என நினைத்த பயிற்சி 3 வருஷமாயிற்று. பல நல்ல காரியங்கள் நடந்தன. பெரிய இக்கட்டுகள் ஏற்பட்டன. 1978 முதல்

1988 வரை அவர் 5 இடங்கள் மாறினார். மூன்று வேறு தொழில்களில் இருந்தார். பயிற்சி ஓர் இடத்தில், சம்பள வேலை மற்றோர் இடத்தில், கூட்டாளியாக வேறோர் இடத்தில் என பல நிலைகளில் அவர் இருந்தபொழுது பணம் அருமையானதாக மாறிய நேரங்கள் பல உண்டு. காணிக்கையின் அளவை அவர் இந்த எல்லா நிலைகளிலும் குறைக்கவில்லை. இன்று 2 கோடி ரூபாய் நிறுவனத்தில் தலைவராகவும், முக்கிய பங்குதாரராகவும் விளங்குகிறார். அதுவே காணிக்கையின் மகத்துவம்

11. நினைவே வழிபாடு:

பகவான் ஸ்ரீ அரவிந்தருடன் சுமார் 30 ஆண்டு காலம் உடன் உறைந்து அவருக்குப் பணி செய்தவர் ஒரு சாதகர். ஒரு சமயம் பகவானை அவர் தமக்கு ஏதாவது சொல்லும்படிக் கேட்க, பகவான் "இரவும், பகலும், எப்பொழுதும், தவறாது, இடைவிடாது, பிழை இல்லாமல் இறைவன் நினைவு வேண்டும் என்று பிரார்த்தனை செய்'' என்றார். அதுவே இந்த முறை. பொதுவாகப் பார்க்கப் போனால் இது மிக எளிய முறை. எவரும் பின்பற்றலாம். அதன் முழுமையைக் கவனித்தால், இம்முறைக்குச் சிறப்புண்டு என்று தெரிகிறது.

எந்தச் செயலைச் செய்தாலும் - இறைவனை - அன்னையை நினைத்துச் செய்கிறோம். எந்தச் செயலைச் செய்யவில்லை என்றாலும், அன்னையை நினைவுகூர்கிறோம். எந்த எண்ணம் தோன்றினாலும் அன்னையை நினைத்தபின் எண்ணத்தைத் தொடர்கிறோம். எந்த உணர்ச்சி தோன்றினாலும் அன்னையை முதலில் நினைக்கிறோம். அதனால் இடையறாத நினைவு ஒரு தெய்வீகப் பூரணத்தைக் கொடுக்கிறது. ஆகவே அன்னை நம் வாழ்வில் பூரணமாகச் செயல்படமுடிகிறது. வாழ்வின் அஸ்திவாரங்கள் மாறுகின்றன. அவற்றின் தன்மை மாறுகிறது. தரம் மாறுகிறது. திறன் மாறுகின்றது. வழிபாட்டின் சிறப்பு மெல்ல, மெல்ல வாழ்வு முழுவதும் பரவி, அன்னையின்

ஆதிக்கத்துள் நம்மைக் கொண்டு வந்துவிடுகிறது.

இடையறாத அன்னை நினைவு:

 1. வாயால் ஒரே ஒரு வார்த்தையும் பேசுதல் கூடாது.
 2. எந்தச் சப்தம் கேட்டாலும், சப்தம் மனதைத் தொடுமுன் அன்னையை அழைக்க வேண்டும்.
 3. உடல் அசையும்பொழுது, அசையுமிடத்தில் அன்னையைக் காணுதல் அவசியம்.
 4. எந்தப் பொருளைத் தொடுமுன்னும் அதன் மீது அன்னையின் உருவத்தைக் காண வேண்டும்.
 5. கண்ணில் படும் காட்சிகள் மனதைத் தீண்டும் முன் அன்னையின் உருவம் மனதைத் தொட வேண்டும்.
 6. ஓர் எண்ணம் தோன்றினால், அதை விலக்கி, அன்னை நினைவால் அதை மாற்ற வேண்டும்.
 7. எண்ணங்கள் தோன்றுமுன் அன்னை ஒளி மனதில் பளிச்சிட வேண்டும்.
 8. ஒரு கவலை மனதில் எழுந்தால், வலிய அதை விலக்கி, அன்னையை அங்கு, இனி அக்கவலை எழாவண்ணம் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
 9. ஒரு யோசனை மனதில் தோன்றினால், இதை யோசிப்பதை விட அன்னையை நினைப்பதால், யோசனையால் ஏற்படும் பலன் முழுவதும் ஏற்படும் என்று அன்னையை நினைக்க வேண்டும்.
 10. ஒரு காரியம் செய்யும்பொழுது அதைப் பல பாகங்களாக்கி, ஒவ்வொரு பாகத்தை நினைக்கும் முன்னும், மனம் அன்னையை நினைக்க வேண்டும்.

 1. நமக்கு நடந்த எந்த நல்ல காரியம் நினைவுக்கு வந்தாலும், உடனே அன்னையை மனதால் நமஸ்கரித்து, நெஞ்சால் நன்றியை உணர வேண்டும்.
 2. நமக்கு நடந்த எந்தக் கெட்டது நினைவு வந்தாலும், நினைவைச் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.
 3. யார் நினைவுக்கு வந்தாலும், அன்னையை நினைப்பது மேல் என நினைவை மாற்றிக்கொள்ள வேண்டும்.
 4. ஏதேனும் எரிச்சல் எழுந்தால், நாம் அன்னையை விட்டு விலகிப் போகிறோம் என அறிந்து, மனத்தின் திசையை மாற்றி, எரிச்சலை அடக்கி, அழித்து, கூடுமானவரை அதைச் சந்தோஷமாக மாற்ற முயல வேண்டும்.
 5. ஒரு காரியத்தை மேற்கொள்ளுமுன், அன்னை இதைப் பற்றி என்ன சொல்யிருக்கிறார், அவர் இதை எப்படிச் செய்வார் எனக் கருத வேண்டும்.
 6. பாசம், பிரியம், ஆசை, வேலையில் ஆர்வம், வேகம், தீவிரம் மனதுள் எழுந்தால், அவற்றை ஆன்மீக ஆர்வமாக மாற்ற வேண்டும்.
 7. ஒரு செய்தி கேட்டுக் கவலை, ஏக்கம், பாரம், உற்சாகம் எழுந்தால், இவற்றையெல்லாம் அனுமதிக்கக்கூடாது; பதிலாக, அன்னை நினைவு சந்தோஷம், சுகம், ஆர்வத்தை எழுப்ப வேண்டும் என அறிய வேண்டும்.
 8. குறையான காரியங்கள் நினைவு வரும்பொழுது, கவலை ஏற்படாமல், நம்பிக்கை குறையாக இருக்கிறது என அறிந்து, அன்னை நினைவை, நம்பிக்கை வளரும் வகையில் கொண்டு வர வேண்டும்.
 9. யார் மீது கோபம், பிரியம் வந்தாலும், அதைவிட அன்னை நினைவு சிறப்பு என அதை நினைக்க வேண்டும்.

 1. கடந்தகாலப் பழிவாங்கும் நினைவுகள் எழுந்தால், நாம் அன்னையை நெருங்க முடியாத தூரத்தில் உள்ளோம் எனப் புரிந்து, பழிவாங்கும் நினைவை அன்னை நினைவால் மாற்ற வேண்டும்.

இடையறாத அன்னை நினைவு:

"நினைவு என்பதென்ன'' என்பது ஒரு பெரிய தத்துவ விசாரம். ஞாபகம் என்பது அனைவருக்கும் முழு அளவில் இருப்பதில்லை. அதிக ஞாபக சக்தி உள்ளவர்களைக் கண்டு உலகம் வியக்கும். ஞாபகமே மனிதன் என்றும் கருதுபவருண்டு. மேல் மனத்திற்குத்தான் (surface mind) ஞாபகம் உண்டா, இல்லையா என்ற பிரச்சினை. உள்மனம் (inner mind) அப்பிரச்சினையைக் கடந்தது. அதற்கு அத்தனையும் நினைவுண்டு. நம் காதில் படாமல் நம்மைச் சுற்றி எழும் ஒலிகளும், நம் கவனத்தைக் கவராத காட்சிகளும் அங்குப் பதிவு செய்யப்படுகின்றன. மீண்டும் அதை நினைவுக்குக் கொண்டுவரும் திறன் உள்மனத்திற்குண்டு. மேல்மனம், உள்மனத்திலிருந்து பிரிக்கப்பட்டு, அறியாமையால் செப்பனிடப்பட்டது. அதனால், அதற்கு மற்ற அம்சங்களைப்போல, நினைவும் அளவுக்குட்பட்டது. மனத்திற்கு ஒரு மையம் உண்டு. அம்மையத்திற்கு அக்கரையுண்டு. அந்த அக்கரையில் படும் நிகழ்ச்சிகளை மனம் நினைவிருத்தும். மற்றவற்றை நினைவில் இருத்துவதில்லை. நிகழும்பொழுதே நினைவிருத்தப்படாதவற்றை, மீண்டும் நினைவுக்குக் கொண்டுவருவதில்லை. எனவே, இடையறாத நினைவு என்பது எந்த விஷயத்திலும் மனிதனுக்கு இருப்பதில்லை.

நாயன்மார் ஆண்டவனை இறைஞ்சிக் கேட்பது இடையறாத நினைவு. பகவானுடனிருந்த சாதகர் அவர் அறையிலேயே தூங்குவார். ஒரு மணி நேரம்கூட அறையை விட்டு வெளியில் போகாதவர். தனக்கு ஏதாவது கூறும்படி பகவானைக் கேட்டார். இரவும், பகலும், எப்பொழுதும் அகலாத இறைவன் நினைவு வேண்டும் எனப்

பிரார்த்திக்கச் சொன்னார். அந்தச் சாதகர் இறைவன் முன்னாலேயே இரவும், பகலும் இருக்கிறார். இருந்தாலும், கண் முன்னாலிருப்பது மனத்தில் நிலைத்திருக்கும் என்பதில்லை. மனத்தில் நீங்காமல் பகவான் குடிகொண்டால்தான் நீங்காத நினைவு ஏற்படும். இந்த நினைவு அன்னை மீதிருக்க வேண்டுமெனில் மனத்திற்கு அதிகத் திறன் வேண்டும். எளியவற்றை எளிமையாக நினைவிருத்தலாம். சிக்கலானவை, பெரியவை, விளங்காதவை நினைவில் எளிதில் தங்கா. அன்னையை மனத்திலிருத்த முழுத் திறனும் - சக்தி - தேவை. மனம் வேறெதிலும் ஈடுபடாமலிருந்தால் அன்னையை நினைக்க முடியும். மனத்தில் எண்ணம் எழுந்தால், மனத்தின் சக்தியை ஓரளவு எண்ணம் எடுத்துக்கொள்ளும். அதனால் அன்னையை நினைவுபடுத்துதல் கடினம். எண்ணமற்ற மனம் அன்னையை நினைவுகூரத் தேவை. எண்ணமே கூடாதுஎனில், எண்ணம் பேச்சாக மாறி வெளிவந்தால் அன்னை நினைவு அகலும். எனவே, வாயால் ஒரு வார்த்தை பேசினாலும் அன்னை நினைவு விலகும் என்பது உண்மை. மௌனத்தைத் தபஸ்விகள் நாடியதன் காரணத்தில் இதுவும் ஒன்று. பேசும் அவசியம் ஏற்பட்டால் என்ன செய்வது? அன்னையை நீங்காத நினைவுடன் பெற மனம் விழைந்த பின் பேச்சு தானே அற்றுப்போய், குறைந்துவிடும். அன்னை மௌனத்தைப் பாராட்டவில்லை. Controlled Speech அளவுடன் பேசுவதையே அன்னை பாராட்டினார். பேசும் சந்தர்ப்பம் எழுந்தால், நாம் பேசினால் அது பேச்சு. பேச்சு மனத்தை அன்னையிடமிருந்து விலக்கும். எழும் பேச்சை அன்னைக்குச் சமர்ப்பணம் செய்தால், தேவையான பேச்சுக்கு அவர் அனுமதி அளிப்பார். அது அளவோடுள்ள பேச்சு. இது நாம் பேசுவதில்லை. இது நம்முள் அன்னை பேசுவதாகும். இப்பேச்சு மௌனத்தைக் கலைக்காது, அன்னை நினைவை அதிகப்படுத்தும். இதன்றி நம் மனத்தில் எழும் எண்ணம், சமர்ப்பணமின்றி வெளிவருவது பேச்சு. அதுபோன்ற சொல் வாயால் ஒன்றுகூட வரக்கூடாது.

இது முதல் நிபந்தனை. இடையறாத அன்னை நினைவை

நாடுபவர் வாயால், ஒரு சொல்லும் சமர்ப்பணமின்றி வரக்கூடாது. ஒலி, ஒளி, மணம் போன்றவை புலன் வழி உள்ளே வருகின்றன. புலன் வழி வருபவற்றை மனம் ஏற்றுப் புரிந்துகொள்கிறது. அன்னை புலன்களிலில்லை, மனத்திலில்லை, ஆன்மாவில் - சைத்தியப்புருஷன் - இருக்கிறார். ஆன்மாவே அன்னையை நினைக்க முடியும். மனத்தில் எழும் எண்ணம் அன்னை நினைவுக்குப் புறம்பானது. எனவே, மனத்தையும் கடந்து புறவெளியில் உலவும் புலன்களால் அன்னையை நெருங்க முடிவது இல்லை. ஓர் ஒலி கேட்கிறதுஎனில், காது மனத்திற்கு அதைச் சொல்கிறது. ஒயை ஏற்கும் மனம், ஒலியை ஏற்று, அதன் பாதை வழியே ஒலி உற்பத்தியான இடத்தை நாடுகிறது. அன்னை வெளியில் இல்லை. அகத்தில் ஆன்மாவிலிருக்கிறார். அன்னை நினைவை நாடுபவர் ஒலி கேட்டவுடன், மனத்தைத் தாண்டி உள்ளே வீற்றிருக்கும் ஆன்மாவைத் தட்டி எழுப்பி, வெளியே போகும் சந்தர்ப்பம் வருகிறது. போகாதே, உள்ளே போய் அன்னையைக் காணுதல் தேவை என்று சொல்ல வேண்டும். அதைச் சொல்ல ஒயை உள்ளே அனுமதிக்காமல், ஒலி மனத்தைத் தொடுமுன் அன்னையை நினைந்து, ஆன்மாவை நாட வேண்டும்.

எந்தச் சப்தம் கேட்டாலும், சப்தம் மனத்தைத் தொடுமுன் அன்னையை அழைக்க வேண்டும்.

நாம் நடமாடிக்கொண்டிருக்கிறோம், பேசுகிறோம், ஏதாவது செய்துகொண்டேயிருக்கிறோம். சும்மா உட்கார்ந்திருக்கும் பொழுதும் உடல் லேசாக அசைகிறது, கை, கால்களை அசைக்கிறோம், கண் சிமிட்டுகிறோம், ஆடையைத் திருத்துகிறோம். உடல் இருள் நிறைந்தது. மனம் ஒளியுடையது. உடலால் அன்னையை நினைப்பது கடினம். மனத்தில் அன்னை நினைவை நிலைநிறுத்தியபின், உணர்வைக் (vital) கவனித்தால், உணர்வு ஓயாமல் அசைந்துகொண்டே இருப்பதைக் காணலாம். விளையாடும் குழந்தையிடம் எதையும் சொல்வது சிரமம் என்பதுபோல், வேகமாக அசையும் உணர்விடம்

எதையுமே சொல்ல முடியாது. அதை நிறுத்தி, அன்னையை நினைக்கும்படி சொல்வது எளிதல்ல. இது எவ்வளவு சிரமம் என அறிய உணர்வையே அன்னையை அழைக்கச் சொன்னால், அது முடியாது என எளிதில் காணலாம். அது முடிந்தால், க்ஷணத்தில் உடல் சக்தியால் நிரம்பி, யானை பலம் வருவது தெரியும். உடல் அதையும் தாண்டி இருளே உருவானது. உடலிடம் அன்னையைப் பற்றிச் சொல்ல மனம் முயன்றால், உடலைத் தொட்டவுடன், அதனிருளில் மனம் தன்னையே இழந்து திகைப்பதைக் காணலாம். இடையறாத அன்னை நினைவு பலிக்க வேண்டுமானால், உடலே அன்னையை நினைவுகூர வேண்டும். (Gross) ஸ்தூல உடலில்லாத தெய்வங்களால் இடையறாத நினைவு முடியாது எனத் துர்கா அன்னையிடம் கூறினார். இடையறாத அன்னை நினைவு ஸ்தூல உடலுக்குரியது. அது இருள் மயமானதெனினும் அதுவே சாதிக்க வல்லது. எனவே, உடல் அசைந்தால், அசைவுள்ள இடத்தில் உணர்வு எழுந்து மனத்தை அடையும்.

அதற்குப் பதிலாக, அசைவு எழுமுன் அங்கு அன்னையைக் கண்டால், அன்னை எழுந்து மனத்தையடைந்து, ஆன்மாவுக்குச் சென்று நினைவை நிலைப்படுத்துவார்.

உடல் அசையும்பொழுது அசையுமிடத்தில் அன்னையைக் காணுவது அவசியம்.

நம்முடலின் அசைவு நம்முள் எழுவது. உடலின் பகுதிகள் வேறு பொருளைத் தொட்டு, தொடு உணர்வு ஏற்பட்டாலும் சட்டம் இதுவே ஆகும்.

எந்தப் பொருளைத் தொட்டாலும், தொடுமுன் அதன்மீது அன்னையின் திருவுருவத்தைக் காண வேண்டும்.

காது ஒளியைக் கேட்டு மனத்தை அடைவதைப்போல், கண்

தான் கண்ட காட்சியை மனத்திற்கு எடுத்துச் செல்வதால்,

கண்ணில் கண்ட காட்சிகள் மனத்தைத் தொடுமுன் அன்னையின் உருவம் மனத்தைத் தொட வேண்டும்.

அதேபோல் எண்ணத்தைப் பற்றி முதல் சொல்லியதால்,

ஓர் எண்ணம் தோன்றினால் அதை விலக்கி, அன்னை நினைவால் அதை மாற்ற வேண்டும்.

எண்ணம் தோன்றியபின் மின்னல் வேகத்தில் - மனோ வேகத்தில் - நகருவதால், தோன்றியபின் அதைக் கட்டுப்படுத்துவது இயலாது. எண்ணம் மனத்திற்குரியது; மனத்தில் தோன்றுகிறது. அன்னை நினைவு ஆன்மாவுக்குரியது; ஆன்மாவில் எழுவது. நாம் மனத்தில் விழிப்பாக இருப்பதால் எண்ணம் தோன்றுகிறது. ஆன்மா, எண்ணம் தோன்றும் மனத்தைவிடப் பெரியது; வலிமையானது. ஆன்மாவில் நாம் விழிப்பாக இருந்தால், மனம் அசைந்து எண்ணம் எழுமுன், ஆன்மா அசைந்து அன்னை நினைவு எழும். இந்த விழிப்பும் (உஷாரும்) அன்னை நினைவுக்கு அவசியம்.

எண்ணங்கள் தோன்றுமுன் அன்னை ஒளி ஆன்மாவிலிருந்து புறப்பட்டு மனத்தில் பளிச்சிட வேண்டும்.

ஐம்புலன்களை நாம் அறிவோம். எண்ணம், கவலை போன்றவை அவற்றைக் கடந்தவை. எண்ணம் மனத்திற்குரியது; கவலை உணர்வுக்குரியது. கவலை சகஜமாக எழும். எழுந்தமாத்திரம் உணர்வைக் கவ்விக்கொள்ளும். உணர்விலிருந்து மனத்தை எட்டி, கவலை நியாயமானது எனக் கூறும். மனம் அதை ஏற்றால், பிறகு கவலையை அழித்தல் கடினம். மனத்தைக் கட்டுப்படுத்துவதைவிட உணர்வைக் கட்டுப்படுத்துவது சிரமம். சிரமமாயினும் செய்வது அவசியம்.

ஒரு கவலை மனத்தில் எழுந்தால், வலிய அதை விலக்கி, அன்னையை அங்கு, இனி அக்கவலை எழாவண்ணம் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

யோசனை என்பது பல எண்ணங்கள் சேர்ந்தது. இந்தக் காரியத்தைச் செய்யலாமா எனில், அதனுள் பல எண்ணங்கள் திரண்டிருக்கும். யோசிக்க ஆரம்பித்தால் எண்ணங்கள் செயல்படும். செயல்பட ஆரம்பித்த எண்ணங்கட்கு வலிமை அதிகம். வலிமை சேர்ந்தபின் அவற்றைக் கட்டுப்படுத்துவது கடினம். அவற்றை மீறி அன்னை நினைவு எழாது. யோசித்து நாம் ஒரு முடிவுக்கு வருகிறோம். முடிவைச் செயல்படுத்தினால், பலன் வரும். அப்பலன் நம் முடிவையும், யோசனையையும் பொருத்தது. தினமும் நமக்குப் பல்வேறு யோசனைகள் எழுகின்றன. எனவே, அன்னை நினைவு யோசனையற்ற மற்ற நேரங்களுக்கேயுரியது எனத் தோன்றுகிறது. இந்த மனப்பான்மையுடன் அன்னை நினைவைப் பெறலாம். ஆனால் இடையறாது பெற முடியாது. இதை மாற்ற வேண்டும். யோசிக்கும் பொழுது யோசனையை நம்புகிறோம். அதை நம்பினால் பலன் யோசனையால் நிர்ணயிக்கப்படும். யோசிக்காமல் செயல்படுவதைவிட யோசனை மேல். யோசனையைவிட நம்பிக்கை உயர்ந்தது. நாம் யோசிப்பதற்குப் பதிலாக, நம் முடிவை விட உயர்ந்த அன்னை முடிவை நாடுதல் சிறப்பு. அன்னையை நினைவுகூர்ந்தால் நம்பிக்கை நம்மிடமிருந்து அன்னைக்கு மாறுகிறது. மாறியபின் செயல்படுவது அன்னை முடிவு. அது பெரியது. அதை நம்பினால், யோசனையை விலக்கி, அன்னையை நினைவுகூர வேண்டும்.

ஒரு யோசனை மனதில் தோன்றினால், இதை யோசிப்பதைவிட அன்னையை நினைப்பதால், யோசனையால் ஏற்படும் பலன் முழுவதும் ஏற்படும் என்று அன்னையை நினைக்க வேண்டும்.

நாம் செய்யும் காரியங்களை நாம் ஆரம்பிக்கிறோம்; செய்கிறோம். அதற்கு வரும் பலனைப் பெறுகிறோம். சமர்ப்பணம் செய்தால் அன்னையின் பலன் வருகிறது. அதைவிட உயர்ந்த நிலை

ஒன்றுண்டு. காரியத்தைப் பல பாகங்களாக்கி, ஒவ்வொரு பாகத்தையும் சமர்ப்பணம் செய்தால், காரியம் பெரிய அளவில் அன்னை பலனை அளிக்கும்.

ஒரு காரியம் செய்யும்பொழுது அதைப் பல பாகங்களாக்கி ஒவ்வொரு பாகத்தை நினைக்கும் முன்னும், மனம் அன்னையை நினைக்க வேண்டும்.

கடந்த கால நினைவு வந்தபடியிருக்கும். அவற்றுள் நல்லவை, கெட்டவை கலந்திருக்கும். நல்ல காரியங்கள் மனத்தைச் சந்தோஷப்படுத்தும். அந்நேரம் நாம் அன்னையை மனதால் நமஸ்காரம் செய்து, நன்றியுணர்வால் நிறைதல் நினைவை நிலைப்படுத்தும்.

 

நமக்கு நடந்த எந்த நல்ல காரியம் நினைவுக்கு வந்தாலும், உடனே அன்னையை மனதால் நமஸ்கரித்து, நெஞ்சால் நன்றியை உணர வேண்டும்.

கெட்டவை நினைவுக்கு வந்தால், மனம் வேதனைப்படுகிறது. வேதனைப்பட்டாலும், வருத்தப்பட்டாலும் நடந்தவை - கெட்டவை - வலுப்படும். நாம் எப்பொழுதும் உணர வேண்டிய ஒரேயுணர்வு சந்தோஷம். கெட்டவை நினைவு வந்தால் சந்தோஷம் எப்படி வரும்? கெட்டவை பல காரணங்களுக்காக நடக்கின்றன.

 • 1. பின்னால் வரக்கூடிய பெரிய கெட்டதைத் தவிர்க்க,
 • 2. நம் மனம் உணர வேண்டியவைகளை உணர,
 • 3. நம்மை விட்டு விலக்க வேண்டியவர்களை விலக்க,

என்பன போன்ற பல காரணங்களுக்காக அவை நடப்பதை நாம் அறிந்து, வருத்தப்படுவதையும், வேதனைப்படுவதையும் மாற்றி, நமக்கு ஏன் அவை நடந்தன எனப் புரியவில்லை; எனவே, வருத்தப்படுவது

சரியில்லை என்று முடிவு செய்தால் சரி. அப்படியும் அந்நிகழ்ச்சி மனத்தை விட்டகலவில்லைஎனில், அவற்றின் வரலாற்றைச் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

நமக்கு நடந்த எந்தக் கெட்டது நினைவு வந்தாலும் அந்நினைவைச் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

நமக்குப் பலர் பற்றிய நினைவுகள் வந்தபடியிருக்கின்றன. ஒருவரைப் பற்றி நினைத்தால் நினைவு அவ்வழியே பல நிகழ்ச்சிகளுக்கு ஓடுகிறது. ஓடியபின் அன்னை நினைவு விலகும். யாரையும் நினைப்பதைவிட, அன்னையை நினைப்பது மேல் என மனத்தை மனிதரிடமிருந்து அன்னைக்கு மாற்ற வேண்டும்.

யார் நினைவு வந்தாலும், அன்னையை நினைப்பது மேல் என நினைவை மாற்றிக் கொள்ள வேண்டும்.

எரிச்சல் பல விதம். கோபத்தை அடக்கினால் எரிச்சல் வகிறது. எரிச்சலை அடக்கினால் விரக்தி ஏற்படுகிறது. அதை விலக்க முயன்றால் படபடப்பு வருகிறது. Irritation, annoyance, irksomeness, pinpricks, tension, listlessness, impatiencence எரிச்சல், குத்தல், சலிப்பு, பொறுக்க முடியவில்லை எனப் பல உருவங்களில் எரிச்சலும், அதன் உருவங்களும் நம்மை நாடுகின்றன. இவை அன்னையை விட்டு விலகி அகலும் பாதைகள் என நாம் அறிய வேண்டும். அறிந்து, விலகி, அவற்றைச் சந்தோஷமாக மாற்ற வேண்டும்.

ஏதேனும் எரிச்சல் எழுந்தால், நாம் அன்னையை விட்டு விலகிப் போகிறோம் என அறிந்து, மனத்தின் திசையை மாற்றி, எரிச்சலை அடக்கி, அழித்து, கூடுமானவரை அதைச் சந்தோஷமாக மாற்ற வேண்டும்.

நமக்குப் பழக்கமில்லாத புதிய சூழ்நிலைகள் ஏற்பட்டால், நாம் யோசிக்கிறோம்; பிறரைக் கலந்து ஆலோசிக்கிறோம். அவை நல்லவை. அன்னை இதைப் பற்றி ஏதேனும் சொல்யிருக்கிறாரா என அறிய முயல வேண்டும். அன்னை இது போன்ற காரியங்களை எப்படிச் செய்வார் என நினைக்க வேண்டும். இடையறாத அன்னை நினைவுக்குப் பெருந்துணை இது. . ஒரு காரியத்தை மேற்கொள்ளுமுன், அன்னை இதைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார், அவர் இதை எப்படிச் செய்வார் எனக் கருத வேண்டும்.

பாசம் இயல்பாக எழுகிறது. பிரியம் சில சமயம் உதயம் ஆகிறது. ஆசைக்கு எப்பொழுதும் அலுவலுண்டு. வேலையில் ஆர்வம் திறமையுள்ளவர்க்குண்டு. வேகம், ஆவேசம், தீவிரம் மனதுள் எழும் நேரமுண்டு. அன்னையை ஏற்றுக்கொண்ட பின் ஆர்வம் அன்னையை மட்டும் நாட வேண்டும். எனவே, மேற்சொன்ன உணர்வுகளை அன்னை மீது ஆர்வமாக மாற்ற வேண்டும். எப்படி? குழந்தை மீது பாசம், மனைவி மீது பிரியம், துணி மீது ஆசை, வேலையில் ஆர்வம் எழும்பொழுது, இவற்றை அனுமதித்தால் நாம் மனிதனாக இருக்கிறோம். நாம் அனுமதிக்கக் கூடியது அன்னை ஆர்வமே என உணர்வு மையத்திலிருந்து - பாசம் போன்றவை எழுமிடம் - ஆன்மாவுக்குச் சென்று ஆர்வத்தை எழுப்ப வேண்டும்.

பாசம், பிரியம், ஆசை, வேலையில் ஆர்வம், வேகம், தீவிரம் மனதுள் எழுந்தால், அவற்றை aspiration ஆன்மீக ஆர்வமாக மாற்ற வேண்டும்.

செய்திகள் கவலையைத் தாங்கி வருகின்றன. சில ஏக்கத்தைக் கிளப்புகின்றன. மற்றவை மனத்தில் பாரமாகின்றன. சில உற்சாகத்தைக் கொடுக்கின்றன. நல்ல உற்சாகமானாலும், கெட்ட

கவலையானாலும், இவை அனுமதிக்கப்படக்கூடியவையல்ல. சந்தோஷம், சுகம், ஆர்வம் ஆகியவை அனுமதிக்கப்படக்கூடியவை என அறிந்து, அவற்றை மாற்ற முயல வேண்டும்

ஒரு செய்தி கேட்டுக் கவலை, ஏக்கம், பாரம், உற்சாகம் எழுந்தால், இவற்றை எல்லாம் அனுமதிக்கக்கூடாது; பதிலாக அன்னை நினைவு, சந்தோஷம், சுகம், ஆர்வத்தை எழுப்பவேண்டும் என அறியவேண்டும்.

நாம் செய்தவற்றில் குறையானவையுண்டு. அவை நினைவு வரலாம். வந்தால் மனம் குறைபடும், கவலைப்படும். அதற்குப் பதிலாக, ஏன் காரியம் குறையாக நின்றது எனச் சிந்தித்தால், நம் நம்பிக்கை குறையாக இருப்பதால், காரியம் குறையாக நின்றுவிட்டது எனப் புரியவேண்டும்.

குறையான காரியங்கள் நினைவு வரும்பொழுது, கவலை ஏற்பட்டால் நம்பிக்கை குறையாக இருக்கிறது என அறிந்து, அன்னை நினைவை நம்பிக்கை வளரும் வகையில் கொண்டுவர வேண்டும்.

கோபம் வந்தபடி இருக்கும். அதேபோல் பிரியம் எழுந்தபடி இருக்கும். கோபம் பொல்லாதது; பிரியம் நல்லது. நாம் எக்காரணத்திற்காகக் கோபப்பட்டாலும், யார் மீது கோபப்பட்டாலும், நஷ்டம் நமக்கு என்ற தெளிவிருந்தால், கோபம் தணியும். தணிந்த கோபம் தணலாக நிற்கும். அன்னை நினைவு குளிர்ந்த தென்றல். அன்னையை நினைத்தால் தணிந்த கோபம் குளிர்ந்தடங்கும். கோபம் இருக்கும்வரை அன்னை நினைவு நிலைக்காது என்பதால், கோபம் எழும்பொழுது, அன்னையை நினைவுபடுத்துதல் நலம். பிரியம் நல்லது; கோபத்தைப்போல் பொல்லாததல்ல. ஆனால், யார் மீது பிரியம் எழுகிறதோ, எது மீது பிரியம் எழுகிறதோ, அதை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும். பிரியம் வளர்ந்தால், அப்பொருளோடு நாம் ஐக்கியமடையவேண்டிவரும். இது அன்னையை நினைக்கவோ, அடையவோ, இடையறாது நினைக்கவோ பயன்படாது.

யார் மீது கோபம், பிரியம் வந்தாலும், அதைவிட அன்னை நினைவு சிறப்பு என அதை நினைக்க வேண்டும்.

மனம் பக்குவப்படவில்லை எனப் பொருள். மனம் பக்குவப்பட பல வழிகள் உள. அவற்றுள் சிறந்தது அன்னையை நினைப்பது. அதைவிடச் சிறந்தது, பழிவாங்கும் எண்ணத்தையும், அதனுடன் சேர்ந்த நிகழ்ச்சிகளையும் சமர்ப்பணம் செய்து, பிறகு அன்னையை நினைப்பதாகும்.

கடந்தகாலப் பழிவாங்கும் நினைவுகள் எழுந்தால், நாம் அன்னையை நெருங்க முடியாத தூரத்தில் உள்ளோம் எனப் புரிந்து, பழிவாங்கும் நினைவை அன்னை நினைவால் மாற்ற வேண்டும்.

இடையறாத நினைவு சித்தியாகும். அது சித்தித்தால் அடுத்த கட்டத்தில் இடையறாத தரிசனம் சித்திக்கும். அதன் விளைவாக பரமாத்மா, பிரபஞ்சத்தின் ஆன்மா, ஜீவாத்மா தரிசனம் கிடைக்கும். சர்வம் பிரம்மம் என்பதை ரிஷிகள் கண்டபின், கீதையே முதன்முதலாக இம்மூன்று புருஷர்களையும் பிரித்துத் தத்துவத்தை விளக்கியதாகப் பகவான் எழுதுகிறார். ஆத்ம தரிசனம் மோட்சம். பரமாத்மாவை ஜீவாத்மா ஒன்றி, பரமாத்மாவை அடைவது பூரணயோக சித்தி, அதற்கு அடிப்படை இடையறாத தரிசனம். அதற்கு முன் நிலை இடையறாத அன்னை நினைவு. இது சித்தித்ததற்குப் பல்வேறு அடையாளங்களுண்டு. அவற்றுள் ஒன்று,

இணைபிரியாத ஆன்ம எழுச்சி:

இடையறாது நம் மனத்தை ஆட்கொள்வது ஒன்றுண்டு. அதை நாம் அறிவதில்லை. அறிந்தாலும் பொருட்படுத்துவதில்லை. விளையாட்டில் உற்சாகமுள்ள மாணவன் இரண்டு மணி நேரம் விளையாடினால், அதைப் பற்றி நண்பர்களுடன் ஐந்து மணி நேரம் பேசுவான். மீதி நேரம் முழுவதும் அவன் மனத்தை விளையாட்டு

ஆட்கொண்டிருக்கும். விளையாடும் வயதில், விளையாட்டு மனத்தை நிரப்பிக்கொண்டிருக்கும். திருமண வயதில் "இளநங்கை'' மனதில் அகலாமல் வீற்றிருப்பாள். வேலைக்குப் போனபின் வேலை, குடும்பம், உயர்வு, அதேபோல் மனத்தில் உரிமை கொண்டாடும். வேலை மனத்திலிருந்தால், அதனடியில் மனைவியும், அதற்கடியில் விளையாட்டும் இருப்பதை நாம் அறிவோம். ஆனால், அதைக் கவனிப்பதில்லை. இவை இடையறாது முழுமனதை ஆட்கொண்டு இருப்பதை ஆங்கிலத்தில் occupation என்பார்கள். அவற்றுள் ஒன்று பிரச்சினையாகிவிட்டால் தீவிரமாக மனம் அதையே நினைப்பதை preoccupation என்பார்கள். நாயன்மார்கள் மனம் சிவபெருமானால் அதுபோல் நிரப்பப்பட்டிருந்தது. மகனுக்குப் பெயரிடத் திருநாவுக்கரசு என்பதை நினைத்தவர், அடுத்தடுத்த மகன்கட்கும் அதே பெயரையிட்டு, மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு என்றார். திருமணமான பெண் ஆங்கிலம் கற்றுக்கொள்ளும்பொழுது, அவளைத் தினமும் 500 வாக்கியங்கள் எழுதச் சொன்னார். அவள் தன் மாமனை மணந்தவள். Uncle is tall, Uncle bought a bike, Uncle has come என 500 வாக்கியங்களில் 100க்கு மேல் மாமனைப் பற்றி எழுதினாள். அவள் மனம் மாமனால் நிரப்பப்பட்டுள்ளது. எது நம் மனத்தை நிரப்பியுள்ளது எனில் நம் வாழ்வில் வளரும் முனை நிரப்பியுள்ளது எனப் புரிகிறது. அதற்கு முந்தைய நிலைகள் படிப்படியாக அவற்றிற்கு அடியில் அமைந்துள்ளன.

உடல் வளரும்பொழுது உடல் வளர்ச்சியும், அதற்கு உரியவையும் மனத்தை நிரப்புகின்றன. உணர்வு வளரும்பொழுது ஆசை மனத்தை நிரப்புகின்றது. மனம் வளரும்பொழுது எண்ணம் மனத்தை நிரப்புகிறது. ஆன்மா நம்முள் வளர்ந்தால் பக்தி மனத்தை நிரப்பும். அந்நிலை இடையறாத நினைவுக்குரியது. நம்முள் அன்னை வளர வேண்டும். உடல், உணர்வு, மன வளர்ச்சியைத் தாண்டி ஆன்மாவில் அன்னை வளர்ந்தால், அம்மனநிலை இடையறாத அன்னை நினைவுக்குரியது ஆகும். உடலுக்குரிய பொருளையும், உணர்வுக்குரிய ஆசையையும்,

மனத்திற்குரிய அறிவையும் கடந்து, ஆன்மாவுக்குரிய அன்னையை நம் ஜீவன் விழைந்தால், இடையறாத அன்னை நினைவு பலிக்கும்.

இடையறாத நினைவு மிகப்பெரிய சாதனை; யோகசித்தியில் முதற்கட்டம் எனப் புரிகிறது. மிகப்பெரிய சாதனையை, இன்று நமக்குள்ள சக்தி சாதிக்க முடியாது. நமக்குத் தொழில் செய்ய, குடும்பம் நடத்த சக்தியுள்ளது. இது ஒரு தொழிற்சாலை நடத்தவோ, கட்சித் தலைவராக இருப்பதற்கோ போதாது. சக்திகளின் நிலை பல.

மிகச்சிறியதான சக்தி உடல் உழைப்பால் எழுவது. அது உழைப்பாளியின் சக்தி. அவனுடைய முழு உழைப்புக்கு, நெற்றி வியர்வை நிலத்தில் விழுந்தால் தினக்கூலி கிடைக்கும். அதைவிட உயர்ந்தது பிராணனுடைய சக்தி vital energy . இது மானேஜர் பதவியிலுள்ளவருக்குரிய தகுதி. அதற்கடுத்த உயர்ந்த நிலை மனத்தின் சக்தி. (Experts) தொழில் நுணுக்க வல்லுநருடைய சக்தி அது. மனத்தில் ஆன்மா வெளிப்பட்டால், வல்லுநர் புதியதாக ஒரு முறையைக் கண்டுபிடித்து புகழடைவார். இது மனத்தின் சக்தியைவிடப் பெரியது. பிராணனில் உள்ள ஆன்மா வெளிப்பட்டால் அடுத்த உயர்ந்த நிலை சக்தி எழும். அது சிப்பாயின் தைரியம், I.A.S. அதிகாரியின் நேர்மையிலிருந்து எழும் சுதந்திரமான தைரியம். அதற்கு அரசியல் தலைவர்களும் அடங்குவார்கள். கடைசி கட்ட உயர்நிலை சக்தி உடலில் உள்ள ஆன்மா வெளிப்படுவதால் எழுவதாகும். இது பூரணயோகத்திற்கு உரிய அன்னை சக்தி. இத்தனை சக்திகளையும் அன்னை நமக்கு வழங்குகிறார். எந்த நேரம் எது வருகிறது என நாம் அறிவதில்லை. பிரார்த்தனையால் திடீரென சூழ்நிலை மாறி ஆச்சரியம் போல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அன்னையிடமிருந்து வருவது ஒரு காரியத்தைப் பூர்த்தி செய்து மின்னல் போல் மறையும். அதே சக்தி நம்முள்ளிருந்து எழுந்தால், அது நிரந்தரமாக இருக்கும். இந்த கடைசி கட்ட பூரணயோக சக்தி உடலிலிருந்து எழுவதால், அதிக வலுவுள்ளது. அதுவே இடையறாத அன்னை நினைவை சாதிக்கும்.

நாமுள்ள நிலையிலிருந்து அதை எட்ட நினைப்பது அறிவுடைமையா என்று நினைக்கலாம். மனம் இடையறாத நினைவை நாடினால், அது நம் முயற்சிக்குச் சித்திக்கும் எனப் பொருள். மனம் அதை நாடாதவர்க்கு அதில்லை.

மனம் அதை நாடுகிறது, அடிக்கடி இடையறாத நினைவு வேண்டும் என்று தோன்றுகிறது என்றால் பலிக்கும் வித்துளது எனப் பொருள். அதற்குரிய முயற்சி பலன் துரம். இந்நினைவு ஓரளவு இதற்குரிய சக்தியைத் தரும். நாம் உள்ள நிலையில் மற்றவர்களைவிட அதிகமாகச் சாதிக்க இது உதவும். நாம் செய்யும் காரியங்களில் இதுவரை நம் கண்ணில் படாதவை படும். எந்தத் தொழிலுக்கு முதன்முறையாகப் போனாலும், அங்கு இதுவரை பெயரெடுத்தவர்களை விட அதிகமாகச் சாதிக்க முடியும் என்பதைக் காணலாம். விவசாயத்தை மூன்று தலைமுறையாக அறியாதவர் அவசியத்தால் விவசாயத்தை மேற்கொண்டு செய்ததைக் கண்ட பரம்பரை விவசாயி, "நாமெல்லாம் இங்கேயே இருக்கிறோம். பரம்பரையாக விவசாயம் செய்கிறோம். இவர் ஊருக்குப் புதியவர்; விவசாயத்திற்குப் புதியவர். நம்மைவிட அளவுகடந்த சிறப்போடு செய்திருக்கிறார். நாம் இவரைப் பின்பற்ற வேண்டும்'' என மேடை ஏறிப் பேசினார்.

பண வசூல் செய்வது என்பது மிகச்சிரமமான காரியம். இலட்சியமான காரியங்களுக்கு உண்டி குலுக்கலாம், தொகை வசூல் செய்வது முடியாது. முடியும் என்ற சூழ்நிலைகளிலும் அனுபவம் வேண்டும்; ஏராளமான அனுபவமும் தேவை. பத்து வருஷங்களாக இத்துறையில் அனுபவப்பட்டவர் 1967, 1968 ஆண்டுகளில் நல்ல பெரிய சந்தர்ப்பம் வந்தபொழுது, 20,000 ரூபாய்க்கு வாக்கு பெற்றார். வாக்கு கொடுத்தவர் அனைவரும் தினமும் ரூ.20,000 சம்பாதிப்பவர்கள். சுமார் 30, 40 பேர்களிடம் பம்பாய், டெல்லி, கல்கத்தா, நாக்பூரில் அவர்களை நேரடியாகச் சந்தித்த நேரத்தில் ரூ.20,000 வாக்குப் பெற்று, அதை வசூல் செய்ய ரூ.2,000 செலவு செய்து இந்த ஊர்களுக்கெல்லாம் போய்ச் செலவு செய்த தொகையான

ரூ.2,000த்தை வசூல் செய்து வந்தார். ரூ.20,000 வாக்கு (promise) ரூ.2,000 வசூலில் முடிந்தது. பக்தர் ஒருவர் பக்திக்காக ரூ.10,000 வசூல் செய்ய முன்வந்து ரூ.45,000 வாக்கு கிடைத்தது. அதை இவர் பக்தர் வாயிலாகவே கேள்விப்பட்டு வாய்விட்டுச் சிரித்துவிட்டார். பக்தர் ஊர் பயணம் போகவில்லை; யாரையும் கேட்கவில்லை. ரூ.1,73,000 வசூலாயிற்று. தொடர்ந்த உபரி வசூல், தொகையை ரூ.2,45,000க்கு கொண்டுவந்தது. "நீங்கள் எங்கும் போகவில்லை; யாரையும் கேட்கவில்லை. அத்துடன் முன்அனுபவமேயில்லை. எப்படி இது முடிந்தது?'' என்று அனுபவசாலி பக்தரைக் கேட்டார். புதிய தொழிலும், அனுபவசாலியைவிடத் திறமை தானே எழுந்தால் உபரியான அன்னை சக்தி உள்ளிருந்து எழுகிறது என்று பொருள்.

ஆசிரியர் பயிற்சியின்றிப் பள்ளி நடத்தி நல்ல பெயர் வாங்குவது, ஆங்கிலத்தில் படிப்பின்றி, பயிற்சியின்றி பயிற்சி பெற்றவரைவிட நல்லபடியாகச் சொல்லிக்கொடுப்பது, மானேஜ்மெண்ட் அனுபவமேயில்லாமல், அத்துறையில் உலக வல்லுநர் போற்றும் வகையில் புத்தகம் எழுதுவது ஆகியவை அன்பர்கள் அனுபவம்.

நாம் ஆசையால் செயல்படுகிறோம். அதன் சக்தி அளவுக்கு உட்பட்டது. அறிவால் செயல்படுபவன் அதிக சக்தியுடையவன். அன்னை ஆன்மாவாலும், கரணங்களில் - மனம், உடல் - உள்ள ஆன்மாவாலும் செயல்படுவதால், அச்சக்தி அபரிமிதமானது. (Mother's Energy) அன்னை சக்தி வெளிப்படுவதற்குப் படிப்பு, மந்திரம், தியானம் பயன்படும். இவை பழைய முறைகள் என்பதால் சிறு துளியே இவற்றால் வெளிப்படும். தியானத்தை அன்னை எப்பொழுதுமே பாராட்டியதில்லை; விரும்பியதில்லை. தியானத்தின் உச்சக்கட்ட சமாதியைப் பகவான் தன்னையறியாத நிலை என்கிறார். வேலையில் அன்னையை வெளிப்படுத்தினால், தியானம் உற்பத்தி ஆகும். நாம் செய்யும் வேலையில் ஆசையை வெளிப்படுத்துகிறோம், அறிவை வெளிப்படுத்துகிறோம். அதற்குப் பதிலாக, வேலையைச் சமர்ப்பணம் செய்தால் வேலையில் அன்னை வெளிப்படுவார். ஒரு

மணிக்கு 40 இரசீதுகள் எழுதும் பெண், சமர்ப்பணம் செய்தபொழுது ஒரு மணியில் 69 இரசீதுகள் எழுதினார். அன்று வேலை முடியும்பொழுது களைப்பே தெரியவில்லை, தியானம் மனதில் நிறைந்து இருந்தது என்றார். இந்தச் சக்தியே அன்னையை நினைவுகூரும். மனத்தில் எழும் இச்சக்தியைப் பக்தியால் உயர்த்தினால் உடல் சக்தி வெளிப்படும். அது இடையறாத நினைவை ஏற்படுத்தும். அச்சக்தியை நிலைப்படுத்தினால் இடையறாத நினைவு நிலைக்கும்.

நாம் இன்று செய்யும் செயல்களைக் கவனித்துச் சமர்ப்பணம் செய்தால், அன்னை சக்தியை அவற்றின் மூலம் வெளிப்படுத்தினால், உள்ளே பெரிய சக்தி எழும். செய்யும் காரியத்தில் இதுவரை தென்படாதது தென்படும். புதிய பார்வை ஏற்படும். புது எண்ணங்கள் தோன்றும். புதுத் திறமைகள் உருவாகும். யோகத்தை மேற்கொண்டால், எந்தப் புதிய திறமையையும் உருவாக்க முடியும் என்கிறார் பகவான். நம் திறமை உயரும், சக்தி உயரும்; அது நினைவை எழுப்பும். நினைவு இடையறாது இருக்கும். இந்நிலை நிலைப்பெறும்.

இடையறாத அன்னை நினைவு இன்று உலகில் கிடைத்தற்கு அரியது. அதை விழைந்தால், பலிக்கும் என்று அறியலாம். மனம் அதை நாடினால் பலிக்கும் என்பதால், அதற்குரிய ஆன்மீக முயற்சி - தவம், விரதம் - அதைப் பெற்றுத் தரும்.

இடையறாத அன்னை நினைவு பலித்து நிலைக்கும் முன்,

உடலின் ஆன்மீக சக்தி வெளிப்பட வேண்டும். அதற்கு முன்,

உயிரின் ஆன்மீக சக்தி (சைத்தியப்புருஷன்) வெளிப்பட வேண்டும். அதற்கு முன்,

மனத்தின் ஆன்மீக சக்தி வெளிப்பட வேண்டும். அதற்கு முன், மேல்மனத்திருந்து உள்மனத்திற்குப் போக வேண்டும்.

அது பலிக்கச் செயலைச் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

சமர்ப்பணம் பலிக்க அளவுகடந்த அன்னை சக்தி தேவை.

நம் பார்வை அகன்று, ஆழ்ந்தால்தான் அச்சக்தி வெளிப்படும்.

பார்வை வளர, ஆர்வம் தேவை.

ஆர்வம் எழ, செயலில் முதன்மையான நிலை வேண்டும்.

செயல் முதன்மையாக, நாம் நமக்காகச் செயல்படாமல் அன்னைக்காகச் செயல்பட வேண்டும்.

நாமுள்ள இன்றைய நிலையில் செயல்திறனில் முதன்மை பெற்று, பார்வை அகன்று விரிந்து, சூட்சுமமடைந்து, சமர்ப்பணம் பூர்த்தியாகி, உள்மனத்தை அடைந்து, மனம், உயிர், உடல் ஆகியவற்றின் ஆன்மீக சக்திகள் படிப்படியாக வெளிப்பட்டு அன்னை நினைவு ஏற்பட்டால், இந்நிலைகள் நிலைபெறுவதால், நினைவு இடையறாத அன்னை நினைவாக நிலைக்கும்.

இது பலிக்க அவன் நம்மைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். அன்னை நம்மை நாடி வருவதால், நம்மை அன்னை தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்றாகும். எனவே, அன்னை பக்தருக்கு இடையாத நினைவு பலிக்கும்.

சமர்ப்பணம், சரணாகதி, பிரார்த்தனை, ஆர்வம், தியானம் மனத்தை ஒரு நிலைப்படுத்துவது. பக்தி விசாரம் போன்றவைகள் வேறு வேறல்ல. ஒரு வகையில் அத்தனையும் ஒன்றே என்கிறார் அன்னை. இவற்றுள் எதையும் கடைசிவரை பின்பற்றினால் அதன் மூலம் எந்தப் பலனையும் அடையலாம். ஒன்றை முழுமையாகப் பின்பற்றுவதால், மற்றதின் பலன் வருவதும் உண்டு என்பது அனுபவம்.

இது உண்மையானால், பிரார்த்தனையால் இடையறாத அன்னை நினைவைப் பெற முடியும். இடையறாத அன்னை நினைவு வேண்டும்

என்ற பிரார்த்தனையை ஆரம்பித்தவுடன், மற்ற நினைவுகள் தானே விலகி, அன்னை நினைவு முன்வருவதைக் காணலாம்.

இடையறாத அன்னை நினைவு

என்ற மலரைக் கையில் எடுத்தவுடன் அன்னை நினைவு தானே மேலோங்குவதைக் காணலாம். அம்மலரை பக்தியுடன் பாராட்டினால் இந்த இலட்சியம் பூர்த்தியாகும். பிரார்த்தனை ஆரம்பித்தவுடன் அன்னை நினைவு வருவதைப்போல, கொஞ்ச நேரத்தில் மனம் பிரார்த்தனையை விட்டகல முயல்வதைப் பார்க்கலாம். மனம் அதுபோல் அகல்வதைத் தடுக்கக்கூடியவர்க்கு இப்பிரார்த்தனை பலன் தரும். எவ்வளவு நேரம் மனம் பிரார்த்தனையில் ஈடுபடும் என்பது மீண்டும் நம்மை மனத்தின் சக்திக்கு எடுத்துச் செல்லும். பிரார்த்தனையைப் பலன் தரும் வகையில் இதுநாள்வரை பயன்படுத்தியவர், இப்பொழுது நினைவுக்காகப் பிரார்த்தனையை மேற்கொள்ளுமுன், பிரார்த்தனையால் அன்னை சக்தி அதிகமாகும் வகையில் பிரார்த்தனையைப் பின்பற்ற டியுமானால், பிரார்த்தனை பலன் தரும். அத்துடன் மனோசக்தி அதிகமாகும். இது பலிக்க பிரார்த்தனை பலிக்கும் என்ற நம்பிக்கை வேண்டும். பிரார்த்தனை எழும்பொழுது சிறிது, சிறிதாக எழுமிடம் மனத்தில் ஆழப்படுதல் அவசியம். அது ஒரு வகை தியானம். ஜீவன் அன்னையை நாடினால் பிரார்த்தனை மனத்தின் ஆழத்தை அதிகப்படுத்தியபடியிருக்கும்.

நாம் மனம் என அறிவது மேல்மனம். மேல்மனம் முழுவதும் ஒன்றில் ஈடுபட்டால் நம் ஆர்வம் அதிகரித்து உச்சக்கட்டத்தில் நம்மை மறந்துவிடுகிறோம். என்னை மறந்தேன்; சூழ்நிலை தெரியவில்லை; நேரம் போனதே தெரியவில்லை என்பது மேல்மனம் முழுவதும் அன்னையிடம் ஈடுபடுவதால், இப்படி நேர்வதுண்டு; ஆனால் குறைவு. இந்த நேரம் அன்னை நினைவு சிறப்பாக இருக்கும். அந்நிலையை விட்டு வெளிவந்தால், கொஞ்சம் கொஞ்சமாக அன்னை நினைவு பின்னணிக்குப் போய் மறைந்து விடும்.

வேண்டும். ஓர் எண்ணம் எழுந்தால், அதன் மேற்பகுதியில் எண்ணத்தின் போக்கும், உள்ளே ஆன்மீக சாரமும் உண்டு. நாம் எண்ணத்தை மேலெழுந்தாற்போல் அனுமதிக்காமல் சமர்ப்பணத்தால் அதன் உள்ளுறை சாரத்தை நாடினால், அது சைத்தியப்புருஷனில் கொண்டுவரும்.

பரிசோதனை:

நம் உச்சக்கட்டத் திறமைக்கு மீறிய அளவில், அதற்கடுத்த (level) நிலையில் ஒரு (Project) வேலையை மேற்கொண்டால், அது முடியும்வரை நம்மால் வேறெதையும் நினைக்கவே முடியாது. அதையும் (complete act) பூரணச் செயலாக்க முடிவு செய்தால், அது நிச்சயம் பலிக்கும். அன்னை நினைவால் அத்திட்டத்தைப் பூர்த்தி செய்தால், அது பூர்த்தியாவதுடன் இடையறாத அன்னை நினைவு நிரந்தரமாகப் பலிக்கும் அஸ்திவாரம் எழும்.

நான் சொல்லும் பரிசோதனை எவராலும் கேலி செய்யக் கூடியது என்பதால், இதை நம்பிக்கையுள்ளவர், நம்பிக்கை இருப்பதால் தானே செய்ய முன்வர வேண்டும். எவரைக் கலந்து ஆலோசித்தாலும் அவர்களுடைய நம்பிக்கையின்மையாலும், நையாண்டியாலும் ஆரம்பிக்கவே முடியாமற் போய்விடும். சைக்கிள் வாங்க முடியாதவரை, கார் வாங்கச் சொல்வது போன்ற சோதனை இது. சொஸைட்டியில் இருந்த வாலிபர் ஒருவர் திறமையுள்ளவர்; ஆனால் அன்னை மீதும், எந்த உயர்வு மீதும் நம்பிக்கை இல்லாதவர். அவரது பழக்கங்கள் எல்லாக் காரியத்தையும் கெடுக்கக் கூடியவை. 2000 ரூபாய் சம்பாதித்தவரை 1977இல் இராஜினாமா செய்து, தொழில் ஆரம்பிக்கச் சொன்னேன். அவருடைய சோம்பேறித்தனத்தால் தடைகள் எழுந்தபொழுது, இந்த வாலிபர் கேலியாக நினைப்பதைக் கண்டு மனம் விட்டுப் பேசச் சொன்னேன். "நல்ல வேலையை விட்டு வந்துவிட்டார். பனம்பழத்தை குருவித் தலைமீது வைப்பது போன்றது

உங்கள் யோசனை'' என்றார். சோம்பேறிக்கும் திட்டம் பலித்துப் பல கோடி தொழிலுக்கு அவர் அதிபதியாகிவிட்டார். கேலி செய்தவர் இன்று 550 ரூபாய் சம்பளத்திற்கு கடையில் வேலை செய்கிறார்.

தனக்குள்ள உச்சக்கட்டத் திறமையைக் கற்பனையின்றிக் கணித்து, அதற்கடுத்த கட்டத்தில் திட்டத்தை ஏற்று, பூரண செயல் ஆக்கினால், அது பலிக்கும். அது முக்கியமல்ல. அதன் மூலம் கிடைக்கும் இடையறாத அன்னை நினைவு முக்கியம். கல்சுவர் வைத்துக் கூரை போட்டு வீடு கட்ட முடியாதவர் மெத்தை வீடு கட்டினார். அவர் பின்பற்றிய முறை இது. Bank குமாஸ்தா வேலைக்கு செலக்ஷன் ஆகவில்லை என்ற பின் I.A.S. எழுதி பரீட்சை பாஸாகி, நேர்முகத் தேர்வில் வெற்றி பெறாமல் பாங்க் ஏஜண்ட் ஆனவர், இம்முறையைப் பின்பற்றினார். S.S.L.C. வந்தால் போதும், தாண்ட டியாது என்ற இருவரில் ஒருவர் தொழிற்பட்டமும், அடுத்தவர் Ph.D. பட்டமும் பெற்ற முறை இது. இது பலிக்க வேண்டிய நிபந்தனைகள் இரண்டு.

 • 1. திறமையிருப்பதைக் கற்பனையின்றிக் கணிக்க வேண்டும்.
 • 2. நம்பிக்கை வேண்டும்.

மேலும், இச்சோதனையை அன்னை நினைவுக்காக மட்டும் செய்யும் மனப்பான்மை நிச்சயமாக இடையறாத அன்னை நினைவைத் தரும்.

மனம் பேசிக்கொண்டேயிருக்கிறது. அதற்கு ஓய்வில்லை. மனத்தில் ஆயிரம் கேள்விகள் உண்டு. அது கேட்டபடியிருக்கும். பகவான் (censor) இதைச் சோதிப்பவன் என்கிறார். புரியாததை மனம் கேட்கும். புரிந்ததை இனி கேட்காது, ஏற்றுக்கொண்டவற்றில் கேள்வி எழாது, தெளிவேற்பட்டால் கேள்வி நிற்கும், புதியது பழையதானால் கேள்விக்கு இடம் இல்லை. கேள்விகள் நிற்க வழி என்ன? புரியாதது புரிவதும், ஏற்க முடியாததை ஏற்பதும், தெளிவில்லாதது தெளிவடைவதும், புதியது பழகிப்போவதும் கேள்விகள்

நிற்கும் மார்க்கம் என அறிகிறோம். இதுபோல் உலகளவுள்ள கல்லாததைக் கற்க யுகங்களாகும் அல்லவா? ஆம். அதுவே உண்மை. மனம் நிதானமாக, ஒவ்வொன்றாய், ஆர அமர, அவசரமின்றிக் கற்கும் பாங்கு உடையது. ஆனால், இதுவே ஒரே வழி என்பதல்ல. மனத்தைக் கட்டுப்பாட்டால் விலக்கி, ஒதுக்கி, நாம் முன்னே செல்லலாம். அதுவே தவத்தை மேற்கொண்டவர்கள் தேர்ந்தெடுத்த வழி.

பூரணயோகம் அனுஷ்டிக்கும் பாதை சரணாகதி. நம் நிலைக்குரிய முறை மெதுவானது. நமக்கு உயர்ந்த நிலைக்குரிய முறை வேகமானது. நாம் நம்மைவிட உயர்ந்த நிலையை விரும்பி ஏற்றுக்கொண்டால், நம் நிலைக்குரிய மெதுவான முறை தானே விலகும். அடுத்த நிலைக்குரிய உயர்ந்த வேகமான முறை செயல்பட ஆரம்பிக்கும். இது சரணாகதியின் மார்க்கம். நாம் அன்னையைச் சரணடைவதை மார்க்கமாகக் கொண்டுள்ளோம். அன்னை சத்திய ஜீவிய அவதாரம். அதுவே பரிணாமத்தின் (evolution) உச்சக்கட்டம். நாம் அன்னையைச் சரணடைய முயன்றால், சரணாகதி உடனே உச்சக்கட்டத்தில் பூர்த்தியாவதில்லை. நமக்குகந்த கட்டத்தில் பூர்த்தியாவது வழக்கம். அடுத்த கட்டம் நாமுள்ள கட்டத்திற்குரிய கேள்விகளை எழுப்பாது. நாமுள்ள கட்டத்தில் புரியாதவை அடுத்த கட்டத்திற்குப் புரியும். நாம் ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை அடுத்த கட்டம் எளிதாக ஏற்றுக்கொள்ளும். நமக்குப் புதியதானவை அடுத்த கட்டத்திற்குப் பழையவை. அடுத்த கட்டத்தில் நம் சரணாகதி முயற்சி பூர்த்தியானால், மனம் கேள்விகளை எழுப்பாது. அமைதியுறும். கேட்பவன் வேலை செய்யமாட்டான். கேட்பவன் வேலை செய்யாவிட்டால், அன்னை நினைவு அதிகமாக எழும். எழுந்த நினைவு அதிக நேரம் இருக்கும்.

மனத்தால் அடுத்த கட்டச் சரணாகதி பூர்த்தியாவதைவிட, உணர்வால் அடுத்த கட்டச் சரணாகதி பூர்த்தியாவது கடினம். மனம் அடங்கிய பின்னும், உணர்வு எழும். எழும் கேள்விகளை ஒதுக்குவது போல், எழும் உணர்வுகளை ஒதுக்க முடியாது. மகள் நினைவு வந்தால்,

அன்னை மறந்துபோகும். தனக்கு வரவேண்டிய பிரமோஷனைப் பறித்துக்கொண்டு போனவன் நினைவெழுந்தால் ஆத்திரம் எழுவதைத் தடுப்பது எளிதல்ல. தான் உணர்ச்சி வசப்பட்டு உத்தமமாக விரும்பிய பெண், வேறொருவரை விரும்புகிறாள் என்றறிந்த நிகழ்ச்சி மனத்தை உறுத்தும்பொழுது, பூரணயோகமும், அன்னை பராசக்தியும் உள்ளத் திரையில் இடம் பெறா. அடுத்த கட்டத்தில் அன்னை உணர்வில் பூர்த்தியானால் மகள் நினைவு வராது; பிரமோஷனைப் பெற்றவன் மீது கோபம் வராது; தன்னை விட்டு அடுத்தவனை விரும்பும் பெண் மீது பிரியம் ஏற்படாது; அவை மாயையாக மறைந்துபோகும். அது யோக முன்னேற்றம். மகளும், பிரமோஷனும், பெண்ணும் அகன்று, அன்னை காட்சி தருவார். அன்னை நினைவு உணர்வை உத்தமம் ஆக்கும். அது நிலைக்கும். உடல் அதுபோல் அன்னையை நினைப்பது இதற்கும் அடுத்த கட்டம். இதைவிடச் சிரமமானது. அதுவும் பூர்த்தியானால், நினைவு நிலையாக இடம் பெறும்.

இடையறாத அன்னை நினைவைத் தடுப்பவை எவை, அவற்றை விலக்கி, அதைப் பெறுவது எங்ஙனம் என்பதையே கட்டுரையில் முக்கியமாக இதுவரை கருதினோம். இனி, இந்நினைவை அளிப்பவை எவை, அவற்றைப் பெறுவது எங்ஙனம், பெற்று நிலைப்பெறச் செய்யும் வகையுண்டா என்பவற்றையும் பார்ப்போம்.

அபிப்பிராயம் அழிந்து மனமும், நோக்கம் மாறி உணர்வும் அன்னையை நாடுகின்றன. மனமும், உணர்வும் முக்கியமானவை; ஆனால் ஜீவனின் பகுதிகள். ஜீவனை முழுமையாக நடத்திச் செல்வது அபிப்பிராயமோ, பழக்கமோ, நோக்கமோ அல்ல. இவற்றால் ஜீவன் நடத்திச் செல்லப்பட்டால் மனம் அல்லது உடல் அல்லது உணர்வு ஜீவனை நடத்துவதாகும். அதாவது, பகுதி முழுமையை ஆள்வதாகும். ஜீவனின் முழுமை ஜீவனுக்கேயுண்டு. இதன் ஜோதிமயமான ஆன்மீகப் பகுதி சைத்தியப்புருஷனாகும். சைத்தியப்புருஷன் நம் ஜீவனின் ஆன்மீகத் தலைவன். அதற்கு முந்தைய நிலை எது?

ஆசை அழிந்து பிராணமயப்புருஷனும், அகந்தை கரைந்து சைத்தியப்புருஷனும் வெளிப்படுகிறான். பிராணமயப்புருஷன் வெளிப்பட்ட பின் ஜீவனின் திறன் பல மடங்கு அதிகரிக்கப் படுகிறது. பிராணமயப்புருஷன் ஆட்சி செய்வது ஆழ்ந்த நோக்கம். பகவத் கீதை ஆழ்ந்த நோக்கத்தைச் சரண் செய்யச் சொல்கிறது. ஆழ்ந்த நோக்கம் வாழ்வாக - மனித வாழ்வாக - இருந்தால் பிராணமயப்புருஷன் செயல்படுகிறான். ஆழ்ந்த நோக்கம் தெய்வீக வாழ்வானால் செயல்படுவது சைத்தியப்புருஷனாகும்.

சாதாரண மனிதனுக்கு அபிப்பிராயமே இருப்பதில்லை. நாலு பேர் சொல்வதை - சமூகத்தின் அபிப்பிராயத்தை - அவனும் சொல்கிறான். சொந்தமாக அபிப்பிராயம் என்றிருப்பதில்லை. நோக்கம் சாதாரண மனிதனுக்கு (survival) பிழைத்தால் போதும். "எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும். தொந்தரவு கூடாது. நிம்மதி வேண்டும்'' என்பதே பொதுவான இலட்சியம். அதுவே நோக்கம். ஆழ்ந்த நோக்கமும் மக்களுக்கு அதுவே. வாழ்ந்தால் போதும், எப்படியாவது வாழ்ந்தால் சரி, யாருக்கும் தொந்தரவு இல்லாமல், யாரையும் எதிர்பார்க்காமல் போனால் போதும் என்பவர் எளிய மனிதர். இந்த நோக்கம் மாறி இலட்சியம் எழ வேண்டும். தெய்வீக இலட்சியம் வேண்டும். நாம் அன்னையை ஏற்று, அன்னைக்காக வாழவேண்டும் என்ற நோக்கமும், அதுவே ஆழ்ந்த நோக்கமாகவும் அமைய வேண்டும். குடும்பத்திலுள்ளவன் கடமைக்காகவும், உயர்ந்தவன் அன்புக்காகவும் வாழ்கிறான். தேசபக்தன் நாட்டின் மீதுள்ள அன்புக்காக உயிர் வாழ்கிறான். மனித குலத்தை நேசித்த பெருமக்கள் பலர். அதையும் தாண்டித் தெய்வத்திற்காக, தெய்வ அன்பிற்காக வாழும் நோக்கம் எழுந்து, அதுவே ஆழ்ந்த நோக்கமானால், அந்தத் தெய்வம் அன்னை ஆகும்பொழுது, மனம் அன்னையில் லயிக்கும், அன்னையை நாடும், அன்னை நினைவு எழுந்தபடியிருக்கும். அந்நினைவு இடையறாதும் இருக்கும்.

நமக்கென ஓர் ஆழ்ந்த நோக்கம் இருந்தால் அது குடும்பத்தின் கடமையைப் பூர்த்தி செய்வதாக இருக்கும். அதன் அன்பைப் பெறுவதாக அமையும். நாட்டின் நலன் கண்களில் நீரைப் பெருக்கும். உலகம் உய்ய உத்தமர் நெஞ்சம் நிறைந்து தழுதழுப்பது உண்டு. இவை உயர்ந்த நல்ல ஆழ்ந்த நோக்கங்கள். இது போன்றவையுள்ள மனிதன் அன்னை மீது இடையறாத நினைவை நாடினால், இன்றுள்ள நோக்கத்தைச் சரணம் செய்து அன்னை வாழ்வான தெய்வீக வாழ்வை நாடி, அதையே தன் ஆழ்ந்த நோக்கத்தின் குறிக்கோள் ஆக்கினால், அன்னை நினைவு இடையறாது எழும்.

இடையறாதெழும் அன்னை நினைவு, சில சமயம் அன்னை தரிசனமானால் நினைவு நிலைத்துவிட்டதெனப் பொருள். இடையறாத அன்னை தரிசனம், இடையறாத அன்னை நினைவுக்கு அடுத்த உயர்ந்த கட்டம் என்பதால், அது தென்பட ஆரம்பித்த உடன் முந்தைய நிலை, நிலைபெற்றுவிட்டதாக நாம் அறியலாம்.

இடையறாத அன்னை தரிசனம்:

நினைவு முதிர்ந்து தரிசனமாகிறது. நினைவு மனத்திற்குரியது. மனத்தின் ஒரு பாகமான எண்ணம் நினைவால் நிறைந்தபொழுது நினைவு நிரந்தரமாகிறது. தரிசனம் காட்சிக்குரியது. அதன் நிலைகள் பல.

நிஷ்டையிலுள்ள தபஸ்வி கண் மூடியிருக்கும்பொழுது அவர் மனம் காட்சிகளைக் காண்கிறது. கண் புலன், காண்பது மூளை. மூளையில் காட்சிக்கும், ஒலிக்கும், சுவைக்கும் உள்ள நரம்பு மையங்கள் உள்ளன. கண், காட்சியை இந்த நரம்பு மையத்திற்கு அறிவிக்கிறது. மனம் அதைக் காண்கிறது. காண்பது கண் அல்ல. காண உதவும் கருவி கண். சாப்பிடுவது வாய், கையல்ல. சாப்பிட உதவும் கருவி கை. கண் முழுவதும் சரியாக இருந்து, மூளையில் காணும் பகுதி பழுதானால் கண்ணுக்குப் பார்வையிருக்காது. பார்ப்பது

மனம், புலன் உதவியால் மனம் பார்க்கிறது. புலன் உதவியின்றும் மனம் பார்க்க முடியும். அதற்கு மனம் புலனிருந்து விடுபட வேண்டும். நிஷ்டை புலனை - கண்ணை - அவிப்பதால், மனம் நிஷ்டையில் விழித்துக்கொண்டு பார்க்கிறது. இது சூட்சுமப் பார்வை. மனம் இதுபோல் கேட்கும், சுவைக்கும், தொட்டு உணரும், வாசனையறியும்.

மனத்திற்குரிய இத்திறன் உணர்வுக்குண்டு. உணர்வு என்பது (vital) பிராணன் எனப்படும். ஆசையுள்ள மையம் இது. உணர்வால் இந்த 5 புலன்களாக மனம்போல் செயல்பட முடியும். சினிமா பாட்டை நாள் முழுவதும் கேட்டு ரசித்து, அதிலேயே திளைப்பவர் வயிற்றிலிருந்து - நாபி - பாட்டு கிளம்புவதை அறிவார். உணர்ச்சி வசப்பட்ட பக்தர்கள் தாம் வணங்கும் கடவுள்களை இங்குக் காண்பதுண்டு. உடலுக்குத் இத்திறனுண்டு. ஐம்புலன்களின் திறன் உடையது உடல். நாம் அவற்றை நாகரிகம் பெற்றபின் இழந்து விட்டோம். உடலால் காண முடியும், கேட்க முடியும். மூலாதாரத்தில் உடல் காட்சிகளைக் காண்பதுண்டு. (அன்னையின் உருவத்தை மூலாதாரத்தில் கண்டால், வியாதி மறையும்). இவை மனத்தின் காட்சி, உணர்வின் காட்சி, உடலின் காட்சிகளாகும். உணர்வு மார்பிலும் காண்பதுண்டு. மார்புக்குப் பின் ஆன்மா - சைத்தியம் - உள்ளது. அங்குக் காண்பது ஆன்மீகக் காட்சி; ஆன்மா பெறும் தரிசனம். நாம் அதையே "தரிசனம்'' என்கிறோம்.

புலன்கள் அவிந்தால் மனம் காட்சியைக் காண்கிறது என்றோம். ஆன்மா எப்பொழுது தரிசனம் காணும்? ஜீவன் கரணங்கள் - மனம், உடல் - மூலம் வெளிநடந்து இயங்குகிறது. அதுவே வாழ்வு. ஜீவன் கரணங்களில் ஈடுபடுவது குறைந்து, அழிந்தால், அதாவது ஜீவன் கரணங்களிலிருந்து விடுபட்டால், விடுதலையடைந்தால், ஆன்மா விழிப்புறும். விழிப்புற்ற ஆன்மா காட்சியைக் காணவல்லது. காட்சி தரிசனமாகும். ஆசிரம தரிசன நாட்களில் சூழல் செறிந்திருக்கும் வேளை என்பதால் தியானத்தில் அன்னை தரிசனம் தருவார். பிறந்த

நாள், தரிசனத்திற்குரிய நேரம். தியானம் ஆழ்ந்த நேரம் தரிசனம் கிடைக்கும். விழிப்பான நேரத்தில் கிடைக்கும் அன்னை தரிசனம் பூரணயோகத்திற்குரிய தரிசனம். பூரணயோகம் விழிப்பில் நிஷ்டையை நாடுவதால், விழிப்பிலும் தரிசனம் உண்டு. அது சிறப்பு.

உயர்ந்த மனம் (higher mind) எண்ணத்தை இழந்த நிலையில் ஞானம் பெறுவது. இடையறாத அன்னை நினைவு இம்மனத்திற்கு உரியது. சத்வ குணமுடையது இம்மனம். முனிவர் நிலைக்குரியது இது. ஒளிமயமான மனம் ( illunined mind) ஞானத்தை ஜோதியாகப் பெறுவது. இடையறாத அன்னை தரிசனம் இதற்குரியது. இது ரிஷியின் நிலை. இதற்கடுத்தது யோகியின் நிலை. இங்கு எண்ணமோ, ஒளியோ இல்லை. ஞானம் நேரடியாக உள்ளது. இங்கு அன்னை ஞானம் இயல்பாக அமைந்துள்ளது. நம் ஜீவியம் ஞானமாக மாறுமிடம் இது.

இடையறாத தரிசனம் பெற, முதலில் இடையறாத நினைவு நிலைக்க வேண்டும். மனம் ஆன்மா ஒன்றி லயிக்க வேண்டும். எண்ணங்களும், செயல்களும், மனத்திலிருந்து எழுவதற்குப் பதிலாக, ஆன்மாவிருந்து எழ வேண்டும். கரணங்கள் - மனம், உயிர், உடல் - தங்கள் முனைப்பை இழந்து அமைதியடைய வேண்டும்.

பொதுவாக, காட்சிகள் அகத்தில் எழுந்து, ஆன்மாவை அடைய வேண்டும். பொதுவான காட்சிகள், அன்னையாக மாறி, அது ஆன்ம தரிசனமாகி, அன்னை தரிசனமாகி, அடிக்கடி ஏற்பட்டு, நிலையாகி, நிரந்தரமாக வேண்டும். இடையறாத நினைவுக்குச் சொல்லிய 20 கருத்துக்களும் இடையறாத தரிசனத்திற்குப் பயன்படும். எந்த சப்தம் கேட்டாலும் அன்னையை நினைக்க வேண்டுமென்றோம். இதற்கு "நினைப்பை'', "காண வேண்டும்'' என மாற்றிக்கொள்ள வேண்டும். அன்னை தரிசனத்தின் வகை பல. வானளாவ அன்னை காட்சியளிப்பதிருந்து, உள்ளே தரிசனம் தரும் வரை பல நிலைகள்

உண்டு. எல்லாப் பொருட்களும் அன்னையாகக் காட்சியளிப்பதுவே முடிவான தரிசனம்.

12. சுத்தம்:

சுத்தம், புறத் தூய்மை, அகத் தூய்மை என இரு பகுதிகளாகும். இரண்டும் இருந்தால் சிறப்பு. வாழ்க்கையில் அது முழு யோகம். அகத் தூய்மை மிக உயர்ந்தது. அதை நான் இங்கு எடுத்து விளக்கவில்லை. புறத் தூய்மையை மட்டுமே குறிப்பிடுகிறேன். அதற்குரிய சிறப்பை விளக்கவே இப்பகுதியில் முயல்கிறேன். (purity of atmosphere) வீட்டுச் சூழல் தூய்மை என்றும் ஒன்றுண்டு. அன்னையின் திருவுருவப்படம் அந்தத் தூய்மையை வளர்க்கும். தெய்வச்சிலை, படங்கள் அதை வளர்க்கும். குட்டிச்சாத்தானை வணங்கினால், சித்து விளையாடுபவர்களுடன் தொடர்புகொண்டால் அந்தத் தூய்மை கெட்டு, இருளின் சூழல் ஏற்படும். பிறருக்குத் தீங்கு செய்யும் மந்திரப் பிரயோகங்கள் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டால், அவர்கள் சம்பந்தப்பட்ட பொருள்கள், படங்கள் வீட்டிருந்தால், அன்னையின் திருவருள் அங்கு செயல்படாது. அப்படியே செயல்பட்டாலும் மிகக்குறைந்த பலனையே தரும்.

வீட்டில் புறத் தூய்மை என்றால் என்ன? என்பது எளிமையான கேள்வியாகத் தோன்றுகிறது. அன்னையின் சக்தி (Mother's Force) (supramental Force) சத்தியஜீவிய சக்தியாகும். அது ஓர் இடத்தில் வர, வந்து நிரந்தரமாகத் தங்க, புறத் தூய்மை (physical cleanliness) அத்தியாவசியம். இது எவ்வளவு முக்கியமானது, கடினமானது என்பதை விளக்க ஒரு நிகழ்ச்சியைச் சொல்லுகிறேன். ரூ.25 இலட்சம் செலாவணியுள்ள கம்பெனி முதலாளியின் மனைவி கல்லூரிப் பேராசிரியர். அவர்களுடைய வீட்டில் முக்கிய விருந்து நடந்த அன்று உள்ளே நுழைந்தவுடன் நமக்கு அறிமுகமானது "அழுக்கு வாடை''. வீட்டில் பல நாட்களாகச் சேர்ந்துள்ள தூசி, அழுக்கு,

அழுக்குத் துணிக்குவியல், இவை எல்லாவற்றையும் மறைத்து வைத்தாலும் தாங்கள் இருப்பதை அறிவிக்க அவை வாடை மூலம் நம்மை வந்து அடைகின்றன.

கையை வைத்த இடங்கள் தூசியில்லாமல் இருப்பது என்பது எத்தனை வீடுகளில் இருக்க முடியும்? நம் வீட்டிற்கு அந்தத் தகுதி உண்டா? சுவரில் மாட்டியுள்ள படங்களைத் தொட்டுப் பார்த்தால், விரலால் கோடிட்டுப் பார்த்தால், நாம் எத்தனை நாளைக்கு ஒரு முறை அந்த படங்களைச் சுத்தம் செய்கிறோம் என்பது நினைவுக்கு வரும். "குடித்தனம் செய்யும் பெண்ணின் சுத்தத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், அலமாரிக்கு அடியில் பார்த்தால் தெரியும்'' என்பார்கள். நாம் தினமும் குளிக்கின்றோம். சிலர் தலையில் தினமும் தண்ணீர் விட்டுக் கொள்வார்கள். தலைமுடி நீளமாக இருப்பதால் தமிழ்நாட்டுப் பெண்கள் தினமும் தலையை நனைப்பதில்லை. வங்காளத்தில் அந்தப் பழக்கம் உண்டு. தலையை தினமும் நீராட்டாவிட்டால் தலையில் அழுக்கு சேர்வது இயல்பு. வீட்டைப் பெருக்குகிறோம். ஆனால் வீட்டில் உள்ள மேஜை, நாற்காகளைத் தட்டுகிறோம். அவற்றில் உள்ள தூசி நாம் பயன்படுத்துவதால் அகற்றப்படுகிறது. தினமும் மேஜை, நாற்காலி, படம், அலமாரி, இவற்றை நாம் சுத்தம் செய்வதில்லை. அதிகக் குப்பை சேர்ந்தால் சுத்தம் செய்கிறோம். படங்களுக்குப் பின்புறம், சோபா சீட்டிற்கு அடியில், அலமாரிக்குப் பின்புறம் ஒட்டடை சேரும். எண்ணெய் பொருள்கள் உபயோகிக்கப்படுவதால், பெஞ்சு, ஸ்டூல், முதயவற்றில் அழுக்கு படை படையாக ஒட்டிக்கொண்டு இருக்கும். சமையல் அறை ஆசாரமானவர்கள் வீடுகளில் சுத்தமாக இருக்கும். மற்ற வீடுகளில் சுத்தமாக இருக்காது. (store foom) சாமான்கள் அறை ஒரு வீட்டில் சுத்தமாக இருந்தால், அதை மிகச் சுத்தமான வீடாக நாம் கருதலாம். ஜன்னல், கதவு, மேஜைக்கு அடிப்புறம் முதல் ஆரம்பித்து ஸ்டோர் அறை வரை எல்லா இடங்களையும், எல்லாப் பொருள்களையும், எல்லா நேரத்திலும் சுத்தமாக வைத்துக்கொள்ளும் அவசியத்தை நாம் உணர

வேண்டும். உணர்ந்தவர்களுக்கு ஒரு பிரச்சினை. ஆபீஸ் வேலை, குடும்பப் பொறுப்பு, மற்ற காரியங்களை நிறைவேற்றியபின், இந்த அளவு வீட்டில் தூய்மையை நிலைநிறுத்த முடியுமா என்பது கேள்வி. என்னுடைய பதிலுக்கு இரு பகுதிகள் உண்டு. 1. இந்த அளவு தூய்மையை நம் இன்றைய அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக நிறைவேற்றுவது இயலாத காரியம். 2. தூய்மையை நாம் அன்னையின் வழிபாடாக ஏற்றுக்கொண்டு அதை நிறைவேற்ற கங்கணம் கட்டிக்கொண்டால், நம் அத்தியாவசியமான வேலைகள் எதற்கும் குந்தகமின்றி நிறைவேறும். அத்துடன் நம் அத்தியாவசியமான வேலைகள் சிறப்புறும். என் இரு பதில்கள் முரணானவைபோல் தோன்றுகின்றன. முரண்பாட்டை நீக்கி, விளக்கம் கொடுக்கிறேன்.

பொதுவாக நாம் ஆபீஸ், குடும்ப வேலைகள் முடிந்தபிறகு, முக்கியமாக நேரத்தைச் செலவிடுவது எதில் என்று பார்த்தால், சினிமா, நண்பர்களை வரவேற்றுப் பேசுவது, விசேஷங்களுக்குச் சென்று அதிகபட்ச நேரத்தைச் செலவிடுவது, சாரமில்லாத பத்திரிகைகளைப் படிப்பது, அக்கம் பக்கத்துச் செய்திகளை அத்தியாவசியமாகச் சேர்ப்பது என்பன போன்ற செயல்களில் என்று தெரியும்.

மாறாக, பரீட்சைக்குப் படிக்கும்பொழுது, வீடு மாற்றும் பொழுது, திருமணம் ஏற்பாடு செய்யும்பொழுது, எப்படி அவற்றிற்கு முக்கிய முதலிடம் கொடுத்து, பின்னரே அன்றாட வேலைகளை இரண்டாம்பட்சமாகச் செய்கிறோமோ, அதுபோல், "வீட்டின் சுத்தம் அன்னை வழிபாடு'' எனக் கொண்டு, அதற்கு முதலிடம் கொடுத்து, வீட்டில் உள்ள அனைவரும் திருமணத்திற்கு வேலை செய்வதைப் போல் வேலை செய்து, சுத்தத்தை முழுத் திருப்தியுடன் பூர்த்தி செய்த பிறகு கவனித்தால், ஆபீஸ் வேலை, குடும்பப் பொறுப்பு, அத்தியாவசியமான கடமைகள் எதுவும் தடைபடவில்லை என்று தெரியும். சுத்தத்தைத் தலையாய காரியமாக மேற்கொண்டு நிலைநிறுத்தியபின் நேரமில்லை என்பது வம்பளப்பதற்கு, ஊர்

சுற்றுவதற்கு, சினிமா பார்ப்பதற்குத்தானே அன்றி, அவசியமான கடமைகளுக்கு நேரமில்லாமல் இல்லை என்பது தெரியவரும். இந்த முறையின் ரகஸ்யமே அதுதான். வீணான காரியங்களில் மனதைச் செலுத்தாமல் இருக்க முடிவு செய்தால்தான் சுத்தத்தைத் திருப்தியாக நிறைவேற்ற முடியும்.

அப்படிப்பட்ட சுத்தம் அன்னைக்குச் சிறந்த வழிபாடு. அந்த வழிபாடு ஒன்றே வாழ்க்கைச் சிறப்பைத் தேடித் தரும்.

13. ஒழுங்கு (Orderliness):

ஒழுங்கு என்பது (discipline) கட்டுப்பாட்டைக் குறிக்கும். இங்கு ர்ழ்க்ங்ழ்ப்ண்ய்ங்ள்ள் என்ற கருத்தை ஒழுங்கு என்ற சொல்லால் குறிக்கின்றேன். Discipline, regularity என்பவற்றுக்கும், ஒழுங்கு என்ற தமிழ்ச் சொல் பொருந்தும். என்றாலும், Orderliness என்பதே என் தலைப்பு. அதைக் குறிக்கவே ஒழுங்கு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன்.

பொதுவாக (discipline) கட்டுப்பாடு என்றால் என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். அதேபோல் regularity என்றாலும் தெரியும். இவை இரண்டையும் நீக்கி (orderliness) ஒழுங்கு என்ற கருத்தை மட்டுமே இங்கு நான் கருதுகிறேன். மேலும் தெளிவுபடுத்த வேண்டுமானால் (clumsiness) குழறுபடி என்ற கருத்துக்கு எதிரானது ஒழுங்கு என்று நான் குறிப்பிடுவது.

அலமாரியில் உள்ள புத்தகங்கள், மேஜை மீதுள்ள பொருள்கள், ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே இங்கு கூறப்படும் கருத்து. அலமாரி, மேஜையில் ஆரம்பித்து, வீட்டில் உள்ள எல்லா இடங்களிலும் உள்ள எல்லாப் பொருள்களும் - தலையணை, பாய், பெட்டி, படுக்கை, சமையல் சாமான்கள், மற்ற அறைகளில் உள்ள பொருள்கள் - வேலை நடக்காத நேரத்தில் அழகாகவும்,

அடுக்காகவும், வரிசையாகவும், ஒழுங்காகவும், நிரந்தரமாகவும் இருக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இதையே ஒழுங்கு என்று நான் குறிப்பிடுகிறேன். ஒழுங்கு இருந்தால், அதற்குரிய சுத்தம் தேவை என்பதைச் சொல்லத் தேவையில்லை.

வீட்டில் உள்ள பொருள்கள் பலவகைப்பட்டவை; சமையல் சாமான்கள், கடப்பாரை, அரிவாள் போன்ற கருவிகள், புத்தகங்கள், படுக்கை சம்பந்தப்பட்டவை, எப்பொழுதோ உபயோகிக்கப்படும் பொருள்கள் எனப் பல தரப்பட்டவை. அவையெல்லாம் உபயோகமில்லாதபொழுது ஒழுங்காக, சுத்தமாக அடுக்கி வைக்கப் பட்டிருக்க வேண்டும்.

ஓர் எலெக்டிரிக் பில் வேண்டுமானால், L.I.C. ரசீது வேண்டுமானால், B.A. சர்ட்டிபிகேட் வேண்டுமானால் வீடு முழுவதும் தேடுவது பெரும்பாலோர் பழக்கம். அப்படியின்றி, எவை, எங்கு இருக்கின்றன என்ற தெளிவுடன் வைக்கப்பட்டு இருந்தால், ஒன்று வேண்டும் எனும்பொழுது நேராகச் சென்று எடுத்துக்கொள்ளலாம். அந்த அளவுக்கு ஒழுங்குமுறை தேவை. இம்முறையின் சிறப்பு மனதில் இருக்கிறது. மனம் முறையாக இருந்தால்தான், பொருள்களை முறையாக வைக்க முடியும் (பொருள்களை ஒழுங்குபடுத்தி வைக்க வேண்டும் என்பதன் மூலம், மனத்தை முறைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே பொருள்). முறைப்படுத்தப்பட்ட மனத்தில் அன்னையின் சக்தி தீவிரமாகச் செயல்படும்.

இதைச் செய்வதில் என்ன கஷ்டம்? ஒருவர் இதைக் கையாள ஆரம்பித்தால் 2, 3 நாட்களுக்குப்பின் அதை விட்டுவிடுவார். அப்படியே அவர் தொடர்ந்து செய்தாலும், இவர் அடுக்கி வைப்பதையெல்லாம் மற்றவர் கலைத்துக்கொண்டே வருவார். அவருக்குப் பயித்தியம் பிடித்துவிடும்.

வெற்றிகரமாக, தொடர்ந்து, சிறப்பாக ஒழுங்கைக் கடைப்பிடிக்க

வேண்டுமானால், அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். முதலில் வீடு முழுவதையும் ஒழுங்குபடுத்தியபின் அவரவர்கள் தங்கள், தங்கள் பகுதியில் ஒழுங்கைக் கலைக்காமல் தொடர்ந்து கடைப்பிடிக்க ஒத்துக்கொள்ள வேண்டும். அந்த ஒத்துழைப்பில்லாமல் இதைச் செய்ய முடியாது.

சுத்தம் (Supramental Force) அன்னையின் சக்தி வந்து தங்க அவசியம் என்பதைப்போல், ஒழுங்கு, குறிப்பாக மனத்தில் ஒழுங்கு, அன்னையின் சக்தி நம்முள் வந்து செயல்படவும், தங்கவும் அவசியம். சிறப்பாக இதைச் செய்து முடிக்க வேண்டுமானால்,

 • 1. நாம் முதலில் நம் மனத்தில் தீர்க்கமான முடிவை எடுத்து, ஒழுங்கைப் பூரணமாக ஏற்படுத்தி, தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டிய அவசியத்தை உணர வேண்டும்.
 • 2. வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் நம்மைப் போன்ற தீவிர முடிவுக்கு வரவில்லை என்றாலும், செய்து வைத்த ஏற்பாடுகளைக் கலைக்கக்கூடாது. தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற அளவிலாவது தீவிரம் கொள்ள வேண்டும்.
 • 3. ஒழுங்கைப் பூரணமாக நிலைநாட்டத் தேவையான மற்ற பழக்கங்களை விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும்.
 • 4. மாதம் ஒரு முறை அல்லது இரு முறை முதலில் ஏற்படுத்திய அளவுக்கு ஒழுங்கை மீண்டும் திருத்தி அமைக்க வேண்டும் (Every month the original level of orderliness must be restored).
 • 5. ஒவ்வொரு மாதமும் அல்லது வாரமும் ஒழுங்கின் தரத்தைச் சிறிதளவு உயர்த்த வேண்டும்.

14. தணிவான பேச்சு:

பொதுவாக நாம் உயர்ந்த குரலில் பேசுகிறோம் என்பது நமக்கே தெரிவதில்லை. மேலைநாட்டார் குழுமியுள்ள இடத்தில் நாம் பேசும்பொழுது அவர்கள் குரல் அளவுக்கும், நம் குரல் அளவுக்கும் உள்ள மாறுபாடு தெரியும்.

பேச்சு என்பது சக்தி (energy). சக்தி என்பது செல்வம். பேச்சைக் குறைத்தால் சக்தி சேரும். சக்தி சேர்ந்தால், பணம் சேரும். அதிக அளவு செல்வத்தைப் பெற பேச்சைப் பெரிதும் குறைத்தல் நலம்.

முதலில் நாம் உயர்ந்த குரலில் பேசுகிறோம் என்று உணர வேண்டும். எதிரில் உள்ளவர்கட்குக் கேட்கும் அளவிலேயே குரலைத் தாழ்த்திப் பேச முயன்று, வெற்றி காணவேண்டும். அதன் பின்னர் பேச்சின் அளவு (i.e number of words) குறைக்கப்பட வேண்டும். ஒரு 10 நிமிஷம் நாம் பேசியபின் - சுமார் 800, 1000 வார்த்தைகள் 10 நிமிஷத்தில் பேசப்படும் - மீண்டும் நாம் சொல்லியவற்றை நினைவுகூர்ந்து அதற்கு ஒரு (precise) சுருக்கம் எழுத வேண்டும். அப்படிப் பார்த்தால் அதே கருத்துகளைச் சுமார் 40, 50 வார்த்தைகளில் சொல்லியிருக்கலாம் என்றுத் தெரியும். குரலின் அளவைத் தாழ்த்தியும், வார்த்தைகளின் ஓட்டத்தைச் சுருக்கியும் பேச வேண்டும்.

குரலைத் தாழ்த்துவதால் நாம் நம் பிராணனை (vital) நம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருகிறோம். வாழ்க்கையை நடத்துவதே பிராணன் என்பதால், பிராணன் கட்டுப்பட்டால் வாழ்க்கை கட்டுப்படும். கட்டுப்பட்ட வாழ்க்கையின் மூலம் அன்னை செயல்படுவது எளிது. வாழ்க்கை நமக்குக் கட்டுப்பட்டு விட்டதால், அன்னையால் நம் வாழ்க்கையை எளிதில் வளப்படுத்த முடியும்.

தாழ்ந்த குரலும், குறைந்த சொற்களும், உயர்ந்த வாழ்க்கை நிறைந்து விளங்க உதவும்.

15. சண்டைகளைத் தவிர்த்தல்:

வாய்ச்சண்டை (quarrel), வாக்குவாதம் (discussion), ஒருவரோடு ஒருவர் பேசாமருத்தல் (disharmony), பிணக்கு (conflict), விதண்டாவாதம் (contention) ஆகியவை நம் வாழ்வில் பங்குபெறுகின்றன. "நாலு பேர் சேர்ந்தால் சண்டை வராமல் இருக்காது'', "எவ்வளவு பெரிய இடமானால் என்ன, அங்கே போய்ப் பார்த்தால் தெரியும். எங்கேயும் இதெல்லாம் இருக்கும்'', "சென்ட்ரல் காபினெட்டிருந்து, உள்ளூர் காலேஜ்வரை சண்டையில்லாத இடமே இல்லை'', "பெரிய மதாசாரியார்களெல்லாம் தவிர்க்க முடியாததை, நம் வீட்டில் இருக்கக்கூடாது என்றால் எப்படி அது நடக்கும்?'' என்றெல்லாம் சொல்லி, நாம் சண்டையிடுவது சகஜம் என்று கொள்கிறோம்.

நாம் பழகும் இடத்தில் எந்தச் சண்டையும் என்னால் வரக் கூடாது என்ற முடிவை ஓர் அன்பர் கொண்டால், சண்டைகளைத் தவிர்ப்பதே என் கொள்கை என்றொருவர் ஆரம்பித்து அதில் வெற்றி பெற்றால், அன்னையிடம் அவர் பரிசு பெறலாம். இப்படி ஒருவர் சொன்னால் அதற்கென்ன அர்த்தம்? அவர் மனதில் வெறுப்பு, கசப்பு, பிணக்கு, பொறாமை இல்லை என்று பொருள். அந்த வெற்றியை அவர் பெற்றபின் அவர் நெஞ்சம், அன்னையின் பொக்கிஷம்.

சண்டைகளைத் தவிர்க்க நாம் என்ன செய்யலாம்?

 • 1. சண்டை அன்னைக்குப் பிடிக்காது என்பதால், அதை அறவே நீக்க வேண்டுமென முடிவு செய்தல்.
 • 2. நம்முடன் ஒருவர் சண்டைக்கு வந்தால், "இதற்கு நான் எப்படித் துணையாவேன், அந்தக் காரணத்தைக் கண்டுபிடித்து

விலக்குவேன்'' என்ற கொள்கையை மேற்கொள்ள வேண்டும்.

 • 3. பிறர் சொல்வதில் உள்ள உண்மையை அலசிப் பார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
 • 4. நம் கருத்தில் உள்ள தவற்றை ஆராய்ந்து விலக்க வேண்டும்.
 • 5. நம் பழக்கத்தில் சண்டையை வளர்ப்பதற்குத் துணையானவற்றைக் கண்டு விலக்க வேண்டும்.

16. குறை கூற மறுத்தல்:

அன்னை (psychic education) சைத்தியப்புருஷனை முன் கொண்டுவரும் கல்வி என்ற பகுதியில் 10 சட்டங்களைச் சொல்கிறார். இது அவற்றில் ஒன்று.

மேல்நாட்டு மனநூல் (psycology) துறையில் ஒரு வாசகம் உண்டு. "உனக்கு ஒருவரைப் பற்றித் தெரிய வேண்டுமானால், அவரைத் தூண்டி பிறரைக் குறைகூறச் சொல். பிறர் மீது அவர் கூறும் எல்லாக் குறைகளும் அவரிடம் இருக்கும்''. நம்மிடம் உள்ள குறைகள் நம் கண்ணுக்குத் தெரியாது. ஆனால் உண்மையிலேயே, நம் குறைகளை - நமக்குத் தெரியாதவற்றை - நாம் விரும்புவது இல்லை; வெறுப்பதும் உண்டு. பிறரிடம் நம் குறைகளைக் கண்டவுடன் நம் வெறுப்பு வெளிப்படுகிறது. பிறர் மீது நாம் குறை கூறுவதன் மூலம் நாம் நம்மிடம் உள்ள குறைகளை வெளிப்படுத்துகிறோம். நாம் அவர் மீது குறை சொல்லிவிட்டால் மனம் திருப்தியாகிவிடுகிறது. குறை சொல்லாவிட்டால் அந்தச் சக்தி ( energy) நம்மைத் திருத்திக்கொள்ள உதவும். குறையைச் சொல்லிவிட்டால் நம்மைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பை இழந்துவிடுகிறோம்.

"பிறரைத் திருத்த முடியவில்லை என்றால், அவர் மீது குறை கூறாதே'' என்கிறார் அன்னை.

பிறரிடம் ஒரு குறையைக் கண்டபின், அதைப் பேச மனம் துடிக்கும். அந்தத் துடிப்பு நமக்குக் கட்டுப்படாது. அவருடைய குறைக்குக் காரணம் புரிந்துவிட்டால், குறை சொல்லத் தோன்றாது. ஆகவே குறையைச் சொல்வதற்குப் பதிலாக, அதன் காரணத்தை அறிய முற்பட வேண்டும். அந்தக் குறையுள்ள மனிதனுடன் நாம் பழகவேண்டியது எதனால்? நம்மிடம் உள்ள ஒரு குறையே குறை உள்ள ஒரு மனிதனை நம்மிடம் கொண்டு வந்துள்ளது என்று உணர வேண்டும். நம் குறையை அகற்றினால், அவர் மாறுவார் அல்லது நம்மை விட்டகலுவார்.

ஓர் இளைஞன் தன்னைவிட 10 வயது பெரியவர் ஒருவருடன் பழகினான். பெரியவருடைய முழு சுயநலம் இளைஞனைப் பாதித்தது. ஏன் சுயநலமி என்னிடம் வரவேண்டும்? என யோசனை செய்தான். சுயநலம் நிரம்பியவருடனும், அவர் மனம் கோணாமல் தன்னால் பழக டியும் என்று தான் பெருமைப்படுவதை உணர்ந்தான். அடுத்த நாளிலிருந்து அந்தச் சுயநலமிக்கு வேறு வேலை வர இவர்களுடைய சந்திப்பு 1%ஆகக் குறைந்துவிட்டது.

யார் மீதுள்ள குறையையும் வெளியில் சொல்ல முழுவதுமாக மறுத்தால், நம் மனத்திலுள்ள குறைகளை அகற்ற முடியும். இது அன்னை விரும்பும் மனப்பாங்கு. இதை ஏற்று பூரணமாகப் பயின்றால், அன்னை நம்மிடம் பூரணமாக வந்து தங்குவார்கள்.

17. ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் அன்னை கூறியதைத் தெரிந்துகொள்ளுதல்:

அன்னையைப் பற்றிய முக்கிய விஷயங்கள் பல. அவை எல்லாம் (public secret) எல்லோருக்கும் தெரிந்த இரகஸ்யங்கள் எனலாம். உதாரணமாக, பொய் சொல்லக்கூடாது என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்ததே. ஆனால் வேறொரு வகையாகப் பார்த்தால், அதுவே பெரிய யோக ரகஸ்யமாகும். அதனால் சாதிக்க முடியாத

யோக சித்திகள் கிடையாது. அழைப்பு, சமர்ப்பணம் என்பவை அதுபோல் அன்னைக்கு முக்கியமானவை. இதைத் தெரியாதவர்கள் இல்லை. எவரும் பின்பற்றுவதில்லை. அன்னை கூறியதைத் தெரிந்துகொள்ளுதல் எனும்போது அன்னை எழுதியுள்ளவற்றைப் படிப்பது எனப் புரிந்துகொண்டால் விஷயம் தடம் மாறிப்போகும். எதிர்ப்பார்த்த பலன் இருக்காது. சாதாரணமாக ஒரு விஷயத்தைப் படித்துத் தெரிந்துகொள்வதற்கும் (to know it as information), அதன் உட்கருத்தை உணர்ந்து புரிந்து கொள்வதற்கும் (to receive it as knowledge) உள்ள வித்தியாசத்தை ஓர் உதாரணத்தின் மூலம் கூறுகிறேன்.

அன்னை தம் சாதகர்கள் மௌனமாயிருப்பதை விரும்பவில்லை. அதிகமாகப் பேசுவது தவறு என்கிறார். நம் மரபுக்கு மாறாகப் பேச்சை அவசியமான அளவுக்குப் பேச வேண்டும் (controlled speech) என்று சொல்கிறார்கள். இதன் உட்கருத்து விளங்காவிட்டாலும், இந்த முறையைக் கையாள்பவர்களுக்கு அது பலன் தரும். (இங்கு நாம் கருதுவது என்னவென்றால் முறையைக் கையாளாமல், அம்முறையின் சூட்சுமக் கருத்தைப் புரிந்துகொள்வதால் அம்முறையைக் கையாண்ட பலன் எப்படிக் கிடைக்கும் என்பதே. இந்தத் தலைப்பு அதற்காக ஏற்பட்டதே. ஒரு முறையைக் கையாண்டால் அதற்குப் பலன் உண்டு. எல்லாக் கருத்துகளின் சூட்சுமத்தை உணர்ந்தால், ஒரு முறையைக் கையாளும் பலன் உண்டு). அளவோடு பேச வேண்டும் என்பதை எவரும் எளிமையில் புரிந்துகொள்ளலாம். மௌனம் தேவையில்லை. அதிகமாகப் பேசக்கூடாது. தேவையான அளவுக்குப் பேசவேண்டும் என்பதைப் புரிந்துகொள்வதில் சிரமம் இல்லை. அப்படிப் புரிந்துகொண்டால் அதன் உட்கருத்துப் புரியாது. சூட்சுமம் புரியாது. இதன் உட்கருத்து ஒரு யோகப் பயிற்சி. பேசுவது இயல்பு. அதைக் கட்டுப்படுத்துவது கடினம். அதை விலக்கி, 10, 20 ஆண்டுகள் ஒருவர் பேசாமலிருப்பது சிறப்பு. அவரை மௌனி, சாது என்கிறோம். இவர் வாயால் பேசுவதில்லை. மனத்தில் பேச்சு ஓடிக்கொண்டிருக்கும்.   மனத்திலும் மௌனம் நிலைத்தால் இவர் முனிவராகிறார். அது பெரிய நிலை. மௌனம் என நாம் சாமியார்களிடையே அறிந்தது வாயால் பேசுவதில்லை என்பதே. அதுவும் மிகக்கடினம்.

அன்னை, மனத்தில் உள்ள மௌனம் நிலைத்த பிறகும் வாயால் பேசாமல் இருப்பது அவசியமில்லை என்கிறார். கரு உள்ள இடம் இதுதான்.

சிறப்பான மனிதன் யோகத்திற்கு வருகிறான். அவனைப் பேசு என்றால் பேசுவான். பேசாதே என்றால் பேசாமலிருப்பான். சாதாரண மனிதனால் முடியாததை அவன் செய்வான். ஆனால் அன்னை, "தேவைப்பட்ட அளவுக்குப் பேசு'' என்கிறார். கூர்ந்து கவனித்தால் வாயால் பேசாதவன் மனத்தில் பேசிக்கொண்டிருக்கிறான். மனத்திலும் மௌனம் பூண்டவனுக்கும் பேசவேண்டுமென்ற ஆசை இருக்கிறது. அது அழியவில்லை. தன் மன வலிமையால் அந்த ஆசையை அடக்கிவைத்திருக்கிறான். அவன் சில வார்த்தை பேச ஆரம்பித்தால் தன் கட்டுப்பாட்டை இழந்து தொடர்ந்து பேசுகிறான். ஏனெனில் பேசவேண்டும் என்ற ஆசை அழியவில்லை. அந்த ஆசையையும் ஒழித்தவன் சில வார்த்தைகள் பேசினால், அதன் மூலம் கட்டுப்பாட்டை இழக்கமாட்டான். எனவே அன்னை அளவோடு பேசு என்று சொல்வதன் உட்கரு பேசவேண்டும் என்ற ஆசையை அழித்திடு என்று பொருள். ஆசையானது பேச்சைப் பொருத்த அளவில் அழிக்கப்பட வேண்டும் என்பதே இதில் உள்ள சூட்சுமம். இதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றே நான் சொல்கிறேன்.

நமது அன்றாட வாழ்வில் பெற்றோருடன் பழகுவது, குழந்தைகளைக் கண்டிப்பது, கடன் கொடுப்பது, கடன் வாங்குவது, படிப்பது, பொழுதுபோக்குக்காக ஒன்றைச் செய்வது, என்றெல்லாம் சுமார் 400, 500 விஷயங்கள் உள்ளன. முதலில் சொல்லியதுபோல் - எல்லோருக்கும் தெரிந்த இரகஸ்யம் - அன்னை ஒரே ஒரு விஷயத்தில்கூட நம் மரபை ஏற்றுக்கொள்வதில்லை. மரபில் உள்ள

ஒவ்வொரு விஷயத்திலும் அன்னை மாறுபட்ட கருத்தை, பழக்கத்தை அளிக்கின்றார். நாம் நம் வாழ்வில் உள்ள அனைத்து விஷயங்கள் பற்றியும் அன்னை என்ன சொல்லியிருக்கிறார்? அதன் சூட்சுமம் என்ன? மரபிருந்து எப்படி அது மாறுபட்டது? என்பதைத் தெரிந்துகொண்டால் - ஒரு விஷயத்தில் இல்லை, எல்லா விஷயத்திலும் தெரிந்துகொள்ள வேண்டும் - அந்த ஞானத்திற்கு ஒரு முறையை முழுவதும் கையாளும் பலன் உண்டு.

ஆன்மீக ஞானத்திற்கும் ( spiritual knowledge) அன்னையின் ஞானத்திற்கும் (Mother's knowledge) உள்ள வித்தியாசம் முக்கியமானது. ஆன்மீக ஞானத்தின் திறனை ஆன்மா மட்டுமே பெற முடியும். அன்னையின் ஞானத்தின் திறனை வாழ்க்கையும் பெற முடியும். ஒரு தபஸ்வி ஆன்ம ஞானம் பெற்றால், அதனால் அவர் மோட்சமடையலாம். அவருடைய வாழ்வைப் பொலிவு படுத்தும் திறன் அவருடைய ஆன்மீக ஞானத்திற்குக் கிடையாது. அவருக்கு வாழ்க்கையும் இல்லை. வாழ்க்கைத் தேவையும் இல்லை. அதனால் அவருக்குப் பிரச்சினை இல்லை. வாழ்க்கையில் ஞானி ஒரு காரியத்தைச் சாதிக்க வேண்டுமானால், வாழ்க்கையில் உள்ள பெரியவர்கள் எவரும் அவருக்குக் கட்டுப்படுவார்கள். அவர்கள் மூலமே அதை அவர் நிறைவேற்ற வேண்டும். அன்னையின் ஞானத்திற்குத் தன் நிறைவு (self fulfilment) உண்டு. ஞானம் இருப்பதால், தானே அது வாழ்க்கையில் பூர்த்தி பெறும். இது அன்னையின் சிறப்பு. அதனால் அன்னையின் முறைகளின் சூட்சும ஞானத்தை அறிவதால் அன்பர்களுக்கு வாழ்க்கையில் பூரணம் உண்டு.

18. பிறர் கண்ணோட்டத்தில் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள வேண்டும்:

அக்பர் அரண்மனையில் உள்ள வீடு பெருக்குபவன் (sweeper) ஒருவனுடைய இராசி பயங்கரமானதென அறிந்து, அவனைக்

காலையில் பார்க்க எல்லோரும் பயப்படுவார்கள். ஒரு நாள் அக்பர் அவன் முகத்தில் விழித்தார். அன்று அரண்மனையில் தகராறு. வெளிநாட்டுப் படையெடுப்பைப் பற்றிய ஒற்றர் தகவல். அக்பர் அவனுக்குத் தூக்குத்தண்டனை விதித்தார். அவருடைய மந்திரி, "தண்டனைப் பெரிது. பெருக்குபவனது (sweeper) மனதில் என்ன இருக்கிறது என்று நாம் தெரிந்துகொள்வதும் அவசியம்'' என்றார். அக்பர் அவனைக் கூப்பிட்டனுப்பினார். மந்திரி, "இன்று காலையில் நீ யார் முகத்தில் விழித்தாய்?'' என்று கேட்டார். அவன் சக்கரவர்த்தி முகத்தில் விழித்ததாகச் சொன்னான். மந்திரி மேலும் அவனை என்ன நேர்ந்தது என்றார். தன்னைத் தூக்கு மேடைக்கு அனுப்பினார்கள் என்றான். அரசன் மன்னித்தான்.

பெருக்குபவன் முகத்தில் விழித்ததால் தனக்குப் பல இடையூறுகள் ஏற்பட்டன என அரசன் நினைத்தால், அரசன் முகத்தில் விழித்த அவனுக்கு உயிர் போயிற்று என்று அவன் கருதுகிறான். அது உண்மையும்கூட. எந்தப் பிரச்சினையையும் எதிராளியின் நோக்கில் புரிந்துகொள்ள முயன்றால் உண்மை விளங்கும்.

ஒரு பிரச்சினை நம்மை எப்படிப் பாதிக்கிறது என்றுதான் நாம் நினைப்பது வழக்கம். பிறர் கண்ணோட்டத்தில் என்ன என்று நினைப்பவர் குறைவு. அப்படி நினைப்பதே ஒரு நல்லெண்ணம்; விசால புத்தி. அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்திலும் அப்படி நினைக்க நாம் நமக்குப் பயிற்சி அளித்துக்கொண்டால், மனமும் ஆத்மாவும் பக்குவம் அடையும். பக்குவமான ஆத்மா மூலம் அன்னை சிறப்பாகச் செயல்பட முடியும்.

19. நம் வீட்டில் அன்னையைப் பிரதிஷ்டை செய்தல்:

ஒரு பிரபலமான ஹனுமார் கோயில். அங்கு கொண்டாடும் லக்ஷதீப திருவிழாவுக்கு ஜில்லாவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மக்கள் வருவதுண்டு. அக்கோயிலின் பிரபலத்திற்கு முக்கியக்

காரணம் அங்குள்ள குருக்கள்தான் என்பார்கள். குருக்களுக்கு ஹனுமாரிடம் ஈடுபாடு அதிகம். அவருடைய ஆர்வத்தாலேயே கோயில் பிரபலம் அடைந்தது. அவருடைய முகம் ஹனுமார் போலவே இருக்கும். குருக்கள் ஹனுமாரைத் தம் ஆன்மாவிலும், உடலும் பிரதிஷ்டை செய்துள்ளார். ஹனுமார் மீதுள்ள பக்தியால் (identification) அவருடன் ஒன்றிப்போய்விட்டார். தம் முகம்கூட தாம் வணங்கும் தெய்வத் திருவுருவம் தாங்கும் அளவுக்கு ஹனுமாருடன் குருக்கள் உள்ளும், புறமும் இரண்டறக் கலந்துவிட்டார்.

நம் வீட்டில் அன்னையைப் பிரதிஷ்டை செய்யுமுன், நாம் அன்னையை மனதில் பிரதிஷ்டை செய்ய வேண்டும். கண்களை மூடி உள்ளே மூடிய கண்களின் பார்வையைச் செலுத்தினால், அன்னை மனத்தில் கோயில் கொண்டுள்ளது தெரிய வேண்டும். அந்நிலைக்கு வந்த பின்னரே வீட்டில் அன்னையின் சான்னித்தியத்தை நிலைபெறச் செய்ய முடியும்.

சுருக்கமாகச் சொன்னால், வீட்டில் உள்ளவர் அனைவரும், அன்னைக்குப் புறம்பான செயல்களை விலக்கி, அன்னைக்கு முக்கியமான செயல்களை விரும்பிச் செய்தால், அன்னையை வீட்டில் பிரதிஷ்டை செய்வது எளிது. அப்படியில்லை என்றால் அதிகமான பிரயத்தனத்தால்தான் அதைச் சாதிக்க முடியும்.

நம் மனத்திலும், உடலிலும் அன்னையைப் பிரதிஷ்டை செய்தல் முதற்படி. இடையறாது மனத்தால் நினைத்தால் அன்னை அங்கு நிரந்தரமாகக் குடியேறுவார். உடலைத் தூய்மையாக வைத்துக் கொண்டு, உடலால் மனதறிந்த தவறு எதுவும் செய்யாவிட்டால், உடல் அன்னை குடியேறுவதற்குத் தகுதி உள்ளதாகிவிடும். நம் உடல் அல்லது உடலுக்குரிய சூட்சமச் சக்கரத்தில், அதாவது மூலாதாரத்தில் அன்னையைப் பிரதிஷ்டை செய்ய முயன்று, வெற்றி பெறுதல் அடுத்த கட்டம். எளிதானது இல்லாவிட்டாலும், அது பலித்துவிடும். பின்னர் நம் வீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் சிறிது நேரம் தினமும் நின்று

தியானம் செய்தால், நாளடைவில் வீட்டில் அன்னையிருப்பது தெரியும். 19 வயது பையன் ஓர் அன்பர் வீட்டிற்கு வந்தான். சற்றுத் தொலைவில் அவனுக்கு அவர் வீட்டிற்கு மேலே பெரிய ஒளி தெரிந்தது. யாரிடமும் சொல்லக் கூச்சப்பட்டான். அவர் வீடு மாறினார். புது வீட்டில் அவனுக்கு ஒளி சிறிதே தெரிந்தது. 3 மாதங்களுக்குப் பின்னர் புது வீட்டில் பழைய அளவுக்கு அவனால் ஒளியைப் பார்க்க முடிந்தது. பின்னர் அவன் அவரைச் சந்தித்து தான் கண்டதைச் சொல்லி விளக்கம் கேட்டான்.

பக்தருடைய இடைவிடாத தியானம் அன்னையின் ஒளி அவர் வீட்டில் வானளாவ உயரும்வரை கொண்டு வந்துள்ளது.

20. அன்னையை நம் வீட்டில் உள்ளவர் அனைவர் மனத்திலும் பிரதிஷ்டை செய்வது:

தம் மனதில் அன்னையைப் பிரதிஷ்டை செய்தவராலேயே இதைச் செய்ய முடியும். இடைவிடாது அன்னையைப் பக்தியுடன் நினைவுகூர்பவர்க்கு மனதில் அன்னை வந்து நிரந்தரமாகத் தங்குவார். நம் மனதில் அன்னை தங்கிவிட்டார் என்பதற்கு ஏதாவது அறிகுறி உண்டா? என்றால் முக்கியமானவற்றை மட்டும் சொல்கிறேன். ஏராளமான அறிகுறிகள் உண்டு.

 • 1. மனம் அலாதியான சந்தோஷத்தால் நிரம்பி வழிந்து, லேசாகி, வாழ்க்கையில் பிரச்சினையே இல்லை என்று கருதும்.
 • 2. தூக்கம் தியானம் போன்றிருக்கும். தூங்கி எழுந்தால் தியானம் கலைந்தது போன்றிருக்கும்.
 • 3. பயம், சந்தேகம், கவலை போன்றவை எக்காரணத்தை முன்னிட்டும் எள்ளளவும் இருக்காது.
 • 4. கண்களை மூடினால் அன்னை நெஞ்சில் இருப்பது தெரியும். உருவம் தெரியாவிட்டாலும், அன்னை இருப்பதைத் தெளிவாக உணர முடியும்.

தன் மனதில் அன்னையைப் பிரதிஷ்டை செய்ததைப் போலவே அன்னையை உணர்விலும், உடலிலும், வீட்டிலும் முழுமையாகப் பிரதிஷ்டை செய்ய வேண்டும். இதுவே முதற்படி. சுருக்கமாகச் சொன்னால் எந்த உணர்ச்சி வருமுன்னரும் அன்னை நினைவு வந்தால் அன்னையை உணர்வில் பிரதிஷ்டை செய்தாயிற்று எனலாம். எந்தச் செயலையும் ஆரம்பிக்கும் முன்னே அன்னை நினைவு தானே வந்தால் உடலில் அன்னை உறைகின்றார் என்று பொருள். நம் வீட்டிற்கு வருபவர்கள் இது அன்னை குடி இருக்குமிடம் என்று உணர்ந்தால், நம்மிடம் சொன்னால் அன்னை நம் வீட்டிற்கு வந்துவிட்டார் என்று அர்த்தம்.

இதுவரை செய்வதே பக்தனைப் பொருத்தவரை பெரிய காரியம். அடுத்த கட்டமே அன்னையை நம் வீட்டார் மனதில் பிரதிஷ்டை செய்வது. அதையும் பூர்த்தி செய்வது யோகத்தில் வெற்றி கண்டதற்கு நிகராகும்.

நம் வீட்டில் உள்ள அனைவரும் நம்மிடம் நல்லெண்ணம், அன்பு, நம்பிக்கையுடையவராயிருந்தால்தான் இதைச் செய்ய முடியும். நமக்கு முரணானவர், நம்மைப் பிடிக்காதவர், நம் மீது நம்பிக்கையில்லாதவர், நம் மீது கசப்புள்ளவர்கள் மனதில் நம்மால் அன்னையைப் பிரதிஷ்டை செய்ய முடியாது. முயன்றால் பலன் எதிர்மாறாக இருக்கும். இதைச் செய்யும்பொழுது பிறரைக் கலந்து ஆலோசிக்காமலே செய்ய வேண்டும். எப்படி ஒருவருடைய மனதைத் தெரிந்துகொள்வது என்ற கேள்வி 10இல் 9 பேரிடம் எழாது. ஏதோ ஒருவர் விஷயத்தில் நாம் தெளிவில்லாமல் இருப்போம். நாம் அன்னையை இவர் மனதில் இருத்தினால் இவர் ஏற்றுக்கொள்வாரா, இல்லையா என்ற கேள்வி எழுந்தால், சுலபமாகச் சோதனை செய்யலாம்.

நாம் மனதை ஒரு நிலைப்படுத்தும்பொழுது (concentrate) தலையிலாவது, நெஞ்சிலாவது ஒரு நிலைப்படுத்துகிறோம். அதே போல் தியான அறையில் இருந்து ஆபீஸில் நம் அறையில் நாம் நம் மனதை ஒரு நிலைப்படுத்தலாம் (we can concentrate on our office while sitting in our meditation room). அதே போல் மற்றவர் மனதில் நம் எண்ணங்களை ஒரு நிலைப்படுத்தினால், அன்னையை அவர் மனதில் நாம் நினைத்தால், மாடியிலிருந்த அவர் எழுந்து உங்களை நோக்கி வந்தால், அல்லது அவர் முகம் மலர்ந்தால், அல்லது உங்கள் கருத்தை அவர் வெளியிட்டால், (நீங்கள் நினைத்தபடி அவர் செய்தால்), அல்லது பொதுவாக அவர் நல்ல காரியம் செய்தால், நீங்கள் அவர் மனதில் அன்னையை இருக்கச் செய்ததை அவர் ஏற்றுக்கொள்கிறார் என்று பொருள். மாறாக அன்னையை அவர் மனதில் நீங்கள் நினைத்தவுடன் அவருக்கு எரிச்சல் வந்தால், உங்களிடம் சண்டைக்கு வந்தால், உங்களைத் திட்டிப் பேசினால், கொட்டாவி வந்தால், அவர் எழுந்து நடக்கும் பொழுது மேஜை மீது இடித்துக்கொண்டால், அன்னையை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை எனப் பொருள்.

பிள்ளைகளானாலும், கணவனானாலும், மனைவியானாலும், பெற்றோரானாலும், அன்னையை அவர்களுக்கு வலியுறுத்தி, அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக, கொடுக்க முயலக்கூடாது. அது தவறு; பிடிவாதமாக அதை ஒருவர் செய்தால் மற்றவரால் அவருக்குத் தீங்கிழைக்க முடியும்.

நம்மவர் அனைவரும் நம்மிடம் நல்ல எண்ணம் உள்ளவர் எனக் கொள்வோம். நம் மனதில் concentrate செய்வதற்குப் பதிலாக அவர் மனதில் வர ஆரம்பிப்பார். நம்முள் எப்படி அன்னையைப் பிரதிஷ்டை செய்தோமோ, அப்படியே மற்றவர் மனத்திலும் பிரதிஷ்டை செய்யலாம். "நான் உங்கள் நெஞ்சில் எல்லாம் குடி இருக்கிறேன்'' என அன்னை ஆசிரமவாசி ஒருவரிடம் சொல்லியது இதைத்தான். நம்முள்ளும், நம்மவர் மனதிலும், நம் வீட்டிலும் அன்னையைப் பிரதிஷ்டை

செய்தவருடைய வாழ்க்கை புனிதம் நிறைந்ததாகவும், புதுமை உள்ளதாகவும் இருக்கும்.

21. பகவான் ஸ்ரீ அரவிந்தருடைய நூல்களைப் பயிலுதல்:

22. அன்னையின் நூல்களைப் படித்து ஆன்மீகப் பலன் பெறுதல்:

பகவான் எழுதியவை, அன்னை எழுதியவை ஆகியவற்றிற்கு மந்திர சக்தியுண்டு. தினமும் இந்த நூல்களில் சில பக்கங்களைப் படிப்பது தியானத்திற்கு ஒப்பாகும். படித்த முடித்தவுடன் தியானம் வருவது தெரியும். பாரிச வாயுவினால் பாதிக்கப்பட்டவர் Life Divine படிக்கச் சொல்லிக் கேட்டு அதனாலேயே குணம் அடைந்தார்.

இரவு படுக்கப் போகும் முன் Synthesis of Yoga எனும் நூலில் ஓரிரு பக்கங்கள் படிப்பது நல்லது என்று அன்னை சொல்கிறார். அன்னையின் நூல்களைப் பயிலும் முறையை, பொதுவாக, படிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளுதல் நலம். ஸ்ரீ அரவிந்தருடைய நூல்களைப் பயில விரும்புபவர்கள் தீவிரமாக ஒரு காரியத்தைச் செய்பவர்களாக (serious people) இருத்தல் நலம். அன்னையின் நூல்கள் எளிமையானவை. நுணுக்கமான கருத்துகளை அன்னை அவற்றில் தெரிவிக்கிறார். இந்நூல்களைப் பயில்பவர்கள் அன்னையின் விளக்கங்களின் நுணுக்கத்தை அறிந்து படித்தல் முழுப் பலனைத் தரும். அவை எளிமையாக எழுதப்பட்டுள்ளன.

ஸ்ரீ அரவிந்தருடைய நூல்கள் எளிமையானவை அல்ல. ஆழ்ந்த கருத்துகளைத் தாங்கி வருபவை. சரியான மனப்பக்குவத்துடன் அவற்றைப் பயின்றால் பகவானுடைய (conciousness) யோகப் பக்குவம் படிப்பவரை வந்தடையும் என்கிறார்.

( Serious minded people) நெறியான வாழ்க்கையை உடையவர்களுக்குப் பகவானுடைய நூல்களும், மற்றவர்களுக்கு அன்னையின் நூல்களும் பொருந்தும். இவற்றைப் பயிலுவது ஒரு யோகப் பயிற்சியாகும். தியானத்திற்கு ஒப்பாகும்.

23. மந்திர ஜெபம்:

மந்திரங்கள் சக்தி வாய்ந்தவை. தொடர்ந்து அவற்றை ஜெபிப்பதால் அந்தச் சக்தி நம்முள் செயல்படும். ஸ்ரீ அரவிந்தர் எழுதிய ஸ்ரீ அரவிந்தரின் காயத்ரி மந்திரம் அன்னையைப் பற்றி எழுதிய மந்திரம் சிறப்பானவை. அன்னை விரும்பி ஜபித்த மந்திரம் "ஓம் நமோ பகவதே''. அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் திருநாமங்களே இந்த யோகத்தில் எல்லா மந்திரங்களைவிட உயர்ந்தவை என ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.

மந்திர ஜபத்தால் தியானம் பலிக்கும். நம் பிரார்த்தனைகளுக்கும் வலிமை கூடும். மந்திர ஜபத்தை விரும்பி ஏற்றுக்கொள்பவர்களுக்கு இது ஏற்ற முறையாகும்.

24. புற நிகழ்ச்சிகளை நம் உள்ளுணர்வைப் பிரதிபலிப்பதாகக் கருதுவது:

அடிப்படையில் மண்ணும், மனிதனும் ஒன்றே. நம் சூழ்நிலையின் ஒரு பகுதியே நாம் என்ற கருத்தை அஸ்திவாரமாகக் கொண்ட கருத்து. மரத்தின் வேர், அடிமரம், கிளை, பட்டை, காய்ந்த சருகு, தளிர் இலை, பூ, மொக்கு, காய், பழம், எதையும் மைக்கிராஸ்கோப்பின் (microscope) அடியில் வைத்துப் பார்த்தால் எல்லாம் ஒன்றுபோல் இருக்கும். பழத்திற்கு ருசி உண்டு; பூவுக்கு வாசனை உண்டு; தளிர் பச்சையாக இருக்கும்; பட்டை காய்ந்து போனது; ஆனால் மைக்கிராஸ்கோப்பின் அடியில் தெரிவது அவற்றின் அடிப்படை

அமைப்பு. அவை எல்லாம் ஒரே அமைப்பு. மேலும் சொல்லப்போனால், மரமும், அது வளரும் மண்ணும் ஒன்றே. மரம் ஒரே இடத்திலிருக்கிறது; மனிதன் நடமாடுகிறான். மரத்தையும், மனிதனையும் உற்பத்தி செய்தது மண். எனவே, மண்ணும், அது உற்பத்தி செய்த மரமும், மனிதனும் அடிப்படையில் ஒன்றேயாகும். அதே போல் நம் அக உணர்வுகள், புற நிகழ்ச்சிகள் என்கிறோம். அது நமக்குத்தான் வேறுபாடாகத் தெரிகிறது. புறமும், அகமும் ஒரு பெரிய சூழலின் பகுதிகளே. எனவே அகமும், புறமும் ஒன்றே. அகத்தில் இருப்பதே புறத்தில் தெரிகிறது. அகத்தை உணர முடியாதவன், புறத்தைப் பார்த்து அகத்தை உணர்ந்துகொள்ளலாம்.

கண்ணாடி முகத்தைப் பிரதிபலிக்கிறது. புற நிகழ்ச்சிகள் அக உணர்வைப் பிரதிபலிக்கின்றன. பல நாள் கழித்து வரப்போகும் பெரிய நல்ல செய்தியையும், கெட்ட செய்தியையும் புற நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனிப்பவரால் தெரிந்துகொள்ள முடியும்.

இரு கூட்டாளிகள். பணம் போட்டவர் ஒருவர். உழைப்பவர் ஒருவர். Project ஆரம்பித்த 12 மாதத்தில் 2 இலட்ச ரூபாய் முதல் 6 இலட்சம் இலாபம் சம்பாதித்தது. தகராறு வந்தது. கஷ்ட கூட்டாளி தாமே விலகிவிட்டார். விலகியவர் ஆசிரமச் சாப்பாட்டறையில் சாப்பிட வரிசையில் வந்து நின்றார். தோளில் ஒருவர் கைவைத்து அவரை அழைத்து, கையில் கொஞ்சம் பாதாம் அல்வாவைக் கொடுத்து, "அன்னையிடமிருந்து வந்தது; பிரசாதம்; சாப்பிடுங்கள்'' என்றார். 11ஆம் நாள் பணம் போட்டவருடைய குடும்பத்தலைவர், கூட்டாளிகளுக்குள் நடந்ததைக் கேள்விப்பட்டு Projectஐ கஷ்டக் கூட்டாளிக்கே கொடுக்கும்படிப் பணம் போட்டவரைப் பணித்தார். அன்னையிடமிருந்து வந்த பிரசாதம் அவர் மனநிலையைப் பிரதிபத்தது. கூட்டாளிகளுக்குள் பிணக்குக் கூடாது என்ற மனநிலை அன்னையின் பிரசாதத்தில் பிரதிபலிக்கிறது. அன்னையின் பிரசாதமாக அவருக்கு முழு Project கிடைத்தது.

பெரிய விஷயங்களில் அக உணர்ச்சியைப் புற நிகழ்ச்சிகள் பிரதிபலிப்பதை உணர ஆரம்பித்து, எல்லா நிகழ்ச்சிகளையும் அது போல் புரிந்துகொள்ள ஆரம்பித்து, கடைசியில் மிகச்சிறிய நிகழ்ச்சிகளுக்கும் அதே போல் விளக்கம் தெரிந்துகொண்டால், ஒரு வகையில் யோகத்தை முழுமையாகப் புரிந்துகொண்டதற்குச் சமம். ஒருவருக்கு வாய் தெற்றும் (stammering). அவர் யாரைப் பார்த்தால் வாய் அதிகமாகத் தெற்றுகிறது, யாரைப் பார்த்தால் குறைவாகத் தெற்றுகிறது என கவனிக்க ஆரம்பித்தால், இந்த படிப்பினையே அவருடைய தெற்றுவாயை முழுவதுமாகக் குணப்படுத்த உதவும்.

நாம் இருக்கும் இடம், நாம் பழகும் நபர்கள், மனத்தில் எழும் எண்ணங்கள், ரோட்டில் போகும்பொழுது கண்ணில் படும் காட்சிகள், காதில் விழும் சொற்கள், ஆகிய அனைத்தையும் கவனித்துப் பார்த்தால், அவற்றுக்குள்ள தொடர்பு தெளிவாகத் தெரியும். நம் மனம் பதட்டமாக இருந்தால், கண்ணில் படும் காட்சிகள் சச்சரவாக இருக்கும். கண்ணில் தெரியும் தோற்றம் இனிமையானதானால், நம் எண்ணங்கள் விரும்பத்தக்கதாக இருக்கும். ஒருவர் இப்பயிற்சியை ஆரம்பித்துக் கூர்மையாகத் தம்மையும், நிகழ்ச்சிகளையும் கவனித்தால், அவருடைய செயல்கள் சிறப்படையும். அந்நிலைக்கு வந்தவருக்கு அவரை அறியாமல் எதுவும் நடக்க முடியாது. அவருடைய வாழ்க்கை அந்த அளவில் அவருக்குக் கட்டுப்படும். அவரால் தம் வாழ்க்கையின் போக்கை நிர்ணயிக்க முடியும். இது ஒரு பெருந்திறன்.

 

25. கடமையில் ஆர்வம் காண்பிக்க வேண்டும்:

கடமைகளைச் செய்பவன் சிறப்பான மனிதன். அவர்கள் குறைவு. கடமைகளைச் செய்பவர்கள் அவற்றை ஏற்றுக்கொண்டு செய்கிறார்கள். மாணவனுக்கு விளையாட ஆசை; அவனது கடமை படிப்பு. படிப்பின் அவசியத்தால் விளையாட்டை விட்டு, படிப்பை ஏற்றுக்கொண்டு படிக்கிறான். இதுவே சிறப்பு. ஆனால் அன்னை சொல்வது

விளையாட்டில் உள்ள ஆர்வம் படிப்பில் இருக்க வேண்டும் என்பது. கூர்ந்து கவனித்தால் இது அசாத்தியமான காரியம். சொல்லப் போனால் மனித சுபாவத்தில் இல்லாத ஒன்று.

கசப்பான கடமைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை பெரியது. அந்தக் கடமைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காண்பிப்பது மனித மனத்தில் இன்றில்லாத சிறப்பு. இந்தச் சிறப்புக்கு ஒருவன் தன்னைப் பாத்திரமாக்கிக்கொண்டால், அவன் மனிதனை விடவும், தேவரை விடவும் உயர்ந்தவனாகிறான்.

ஒவ்வொரு கடமையை நிறைவேற்றுவதிலும் முழு ஆர்வம் உடையவன் வாழ்வு உயர்ந்தது. அது யோக வாழ்வாகும். அவனுடைய வாழ்வில் அன்னை பூரணமாகப் பரிமளிக்க முடியும். அன்னையின் அநேக விதிகளில் இது ஒன்றேயானாலும், முழுமையாகப் பின்பற்றினால் அன்னையின் முழு வெளிப்பாடும் அவனுடைய வாழ்வில் ஏற்படும்.

26. புரளி பேசாதிருத்தல்: சில்லறையான பழக்கங்களை ஒதுக்குதல்:

அன்னையை ஏற்றுக்கொள்பவர்கள் பொதுவாகச் சிறப்பான குணங்களையுடையவர்களாக இருப்பார்கள். சில சமயங்களில் உயர்ந்த பக்தியும், சின்ன புத்தியும் சேர்ந்து காணப்படுவதுண்டு. பக்தியின் உயர்வால் அன்னையிடம் வந்துவிடுகிறார்கள். பழக்கத்தை விட டிவதில்லை. இந்தப் பழக்கம் உடையவர்களுக்கு மட்டுமே இம்முறை பலன் அளிக்கும். தணிவான பேச்சை ஏற்றுக் கொள்ளுதல், தியானம் பழகுதல் எவ்வளவு கடினமோ, அந்த அளவு இப்பழக்கங்களை விடுதல் கடினம். அந்தக் கடினமான முயற்சியை மேற்கொள்வதால்தான் உயர்ந்த பலன் கிடைக்கிறது. இம்முறையில் முழுப் பலன் கிடைக்க வேண்டுமானால் இப்பழக்கங்களை விட்டு விடுவதுடன், இவற்றின் மீது மனதில் உள்ள ஆசையையும் முழுவதுமாக நீக்க வேண்டும்.

27. ஒவ்வொரு நாளும் அன்னையை நோக்கி ஓர் அடியெடுத்து வைக்க வேண்டும்:

இதுவரை சொல்லிய முறைகளில் எல்லாவற்றையும்விட இது கடுமையானது. சாதாரண அமெரிக்கர் ஒருவர் Larry Apply என்று பெயருடையவர், நூறு கோடி ரூபாய் செலாவணி உள்ள கம்பெனியின் தலைவராக வந்தார். படிப்படியாக அவரது வாழ்வில் முன்னேற்றம் அடைந்து, எளிமையான நிலையிருந்து உயர்வுக்கு எட்டினார். இவர் "தினமும் ஏதாவது புதியதாக ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும்'' என்ற கொள்கையைக் கடைப்பிடித்தார். தம் தொழில் சம்பந்தப்பட்ட ஒரு நுணுக்கத்தை அவசியமாக அன்றாடம் அவர் கற்றுக்கொள்வார். இரவு தூங்கப் போகுமுன் இன்று எதைக் கற்றுக்கொண்டோம் எனத் தம்மையே கேட்டுக்கொள்வார். ஒரு நாள் தம்மால் எதையும் கற்றுக்கொள்ள முடியவில்லை என்று அறிந்து, அன்று அவரால் தூங்க டியவில்லை. அகராதியை (dictionary) எடுத்துத் தமக்குப் புதிய சொல் ஒன்றைக் கற்றுக் கொண்டார். அதன் பின்னரே அவரால் தூங்க முடிந்தது. இது ஒரு அற்புதமான கொள்கை.

அன்னையிடம் வந்தபின் ஆயுளில் ஒரு முறை அன்னையை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தால் அது தவம் பலித்ததற்கு நிகராகும். தினமும் ஏதாவது ஒரு விஷயத்தில் செய்வதெப்படி? கடினம்தான். அந்தக் கடினமாக முறையைக் கைக்கொண்டு பலன் அடைய வேண்டும் என்பதே கொள்கை. இதிலும் ஒரு சிறப்பு; மனம் பக்குவம் அடைந்து இக்கொள்கையை ஏற்றுக்கொண்டால், அன்னை கடினமான முறையையும், சந்தோஷமான முறையாக மாற்றிக் கொடுப்பார். பின்னர் ஒவ்வொரு செயலிலும் எப்படி அன்னையை நோக்கி முன்னேறுவது என்பதை அன்னையே புரிய வைக்கிறார். வாழ்வின் கூறுகள் ஆயிரம். ஒவ்வொரு செயலுக்கும் நூறு பகுதிகள் உள்ளன. ஒரு பகுதியிலாயினும் நாம் அங்கு ஒரு முன்னேற்றத்தைக் காண முடியும். இதை ஏற்றுக்கொண்டவர்கள் இல்லை. ஆனால் ஒருவர்

ஏற்றுக்கொண்டால், இது போன்ற புதுமை இல்லை என்பதை அவர் காண்பார். அன்னையின் சிறப்பான பார்வைக்குரியவராவார் அவர்.

28. நன்றியறிதல்:

நன்றியுணர்வு மனிதனுடைய பண்புகளில் சிறந்த ஒன்று. இதன் சிறப்பு மென்மை. மிருதுவான குணமும், மென்மையான சுபாவமும் உடையவர்களுக்கு இயல்பாக அமைவது நன்றியுணர்வு. நன்றி என்று பொதுவாக நாம் அறிந்தது பிறர் செய்த உதவிக்குப் பிரதியாக நம்முள் எழும் நல்ல எண்ணமே. பெற்ற உதவிக்குப் பலனாக மனம் கனிந்து இனிப்பதையே நன்றியுணர்வு என்று நாம் சொல்கிறோம். மேலைநாட்டில் thank you என்று சொல்வது போன்ற பழக்கம் நம் நாட்டில் இல்லை. அதற்கொத்த சொல்லும் தமிழில் எழவில்லை. சொல்லால் நம் நன்றியைத் தெரிவிக்கும் பழக்கம் நம் நாட்டில் இல்லை. ஒருவர் நமக்கு நல்லது செய்தால் நம் உள்ளம் தழுதழுத்துப்போகிறது. உணர்ச்சி மூலமே நன்றியைத் தெரிவிப்பது நம் இயல்பு.

நன்றியுணர்வு என அன்னை குறிப்பிடுவது ஒரு பெரிய கருத்து. நாமறிந்த நன்றி அதனுள் ஒரு பகுதியாகும். இவ்வுணர்வு பூவுலகத்திற்குப் புதியது என்றும் அன்னை கூறுகிறார். ஒவ்வொரு குணத்திற்கும் ஒரு தெய்வம் இருப்பதைப் போல் நன்றிக்கும் ஒரு தெய்வம் உண்டு என்கிறார் அன்னை (Goddess of  gratitude). அன்னை தாம் கண்ட காட்சி (vision) ஒன்றில் பல தெய்வங்கள் கலந்துகொண்டதாகவும், ஓர் இளந்தெய்வம் வெண்ணிறமாகக் காணப்பட்டதாகவும், அவரை அடையாளம் புரியாமல், "நீங்கள் யார்?'' என்று கேட்டதற்கு, "நான் புதியதாகப் பூமியில் உதித்த நன்றி என்ற தெய்வம்'' எனச் சொல்லியதாகவும் கூறுகிறார்.

நிகழும் நிகழ்ச்சிகளின் பின்னணியில் இறைவனின் சக்தி செயல்படுவதை அறிந்துணர்வதையே நன்றியுணர்வு என்று அன்னை குறிப்பிடுகிறார். பொதுவாக நாம் எல்லா நிகழ்ச்சிகளையும் தாமே

நடப்பவை என்று கொள்கிறோம். சிறப்பாக நடப்பனவற்றையே நாம் கூர்ந்து கவனிக்கின்றோம். இயல்பாக நடக்காத ஒன்றை, ஒருவர் நடத்திக் கொடுத்தால் நாம் அதைக் குறிப்பாக உணர்கிறோம். நன்றிக்கு உரிய செயலாக அதை நாம் கருதுகிறோம். அன்னசத்திரம் கட்டுதல், ஏழைக்கு எழுத்தறிவித்தல் போன்ற செயல்களை நாம் நம் நன்றிக்கு உரியவை எனக் கொள்கிறோம். அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று உணர்ந்தவருக்கு ஒவ்வோர் அசைவும் நம் நன்றிக்குரியது எனத் தெரிகிறது. தம் அறைக்கு வெளியேயுள்ள தென்னை மரத்தில் பானை வெடித்துப் பூ மலர்வதைத் தாம் வியந்து கூர்ந்து கவனித்து இறைவனுக்கு நன்றி தெரிவித்ததை அன்னை குறிப்பிட்டுள்ளார். தாம் பிரான்சிலிருக்கும்பொழுது, குழந்தைகள் தெருவில் ஆர்ப்பரித்து விளையாடியதைப் பார்த்து மெய்சிலிர்த்து இறைவனுக்கு நன்றி தெரிவித்ததை அன்னை கூறியிருக்கின்றார். புற நிகழ்ச்சிகளில் இறைவனைக் கண்டு, தாம் அவனைக் கண்டதால் புளகாங்கிதம் அடைவதை அன்னை நன்றியுணர்வு என விளக்கம் அளிக்கின்றார்.

நன்றி என்பது அன்பு என்பதைப் போல் உயர்ந்த குணம். இவற்றை உணரும் தன்மை மனிதனின் உயர்ந்த பகுதியான ஆத்மாவுக்கே உரியது. உடலுக்கும், வெற்று உணர்வுக்கும், சாதாரண அறிவுக்கும் அத்திறன் இல்லை. அன்னை நன்றியை மனிதன் உணரும் பகுதி (psychic being) சைத்தியப்புருஷன், ஹிருதயத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் கட்டைவிரல் பிரமாணமுள்ள ஆன்மா என்கிறார். தெளிவாகச் சொல்வதாக இருந்தால், அதை ஆன்மாவின் பிரதிநிதி என்கிறார். அந்த ஆன்மா விழிப்பாக உள்ளவர்களுக்கே நன்றியுணர்வு உண்டு. நன்றி உணர்வை வளர்த்துக்கொண்டால், ஆன்மா விழிப்படையும். குழந்தைப் பருவத்தில் ஆன்மா விழிப்பாக இருக்கின்றது என்ற மரபை விளக்கும் வகையில் உள்ளது, "குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்'' என்ற பழமொழி. தெய்வத்தன்மை குழந்தைக்கு உண்டு என்பது நம் மரபு.

அன்பர் வழிபாட்டில் நன்றியுணர்வு எந்த இடம் பெறுகிறது? வழிபாடு என்பது பல வகையின. பரம்பரையிருந்து விலகியுள்ள பூரணயோகத்தில் வழிபாட்டுக்குகந்த முறைகளை இக்கட்டுரையில் சொல்வருகிறேன். நன்றியுணர்வு வழிபாட்டில் எப்படி வரும் என்பது ஐயம்.

நன்றியுணர்வை நாம் வலியுறுத்தும்பொழுது (சைத்திய புருஷன்) ஆன்மா விழிப்படைந்து செயல்படுகிறது. ஆன்மா அசைந்து தன் செயலை இறைவனுக்கு அர்ப்பணம் செய்வதே ஆன்மீக வழிபாடு. எனவே ஒவ்வொரு செயலிலும் நாம் இறைவனுக்கு நன்றி கலந்த சமர்ப்பணம் செய்தால், வெற்று மனித வழிபாடு ஆன்ம வழிபாடாக மாறி உயருகிறது. இதுவே அடிப்படை.

மேலும் சொல்லப்போனால், வழிபாட்டையும் கடந்து நன்றி உணர்வு நம் வாழ்க்கைக்கு உறுதுணையான கருவியாகவும் பயன்படக்கூடும். அத்திறனும் அதற்குண்டு. ஒரு வகையாகப் பார்த்தால், மனிதன் நல்லுணர்வோடு வாழும்போது அவன் வாழ்க்கை ஆற்றொழுக்காக, இடையூறின்றி, பிரச்சினையின்றி, தங்கு தடையின்றி, மேலும் மேலும் வளர்ந்து பெருகிச் செல்கிறது. நல்லுணர்வு குன்றி, நன்றியுர்வை மறந்து, மற்ற உணர்வு மேலிடும் பொழுது பிரச்சினைகள் தோன்றுகின்றன. மற்ற உணர்வை வலியுறுத்தினால், மனம் கடுமையடைந்தால் பிரச்சினைகள் வலுக்கின்றன. எனவே பிரச்சினைகளை அழிக்க மனிதன் கடுமையான உணர்வை விட்டொழித்து, நன்றி போன்ற நல்லுணர்வை வளர்த்துக்கொண்டால் போதும் எனவும் சொல்லலாம்.

உதாரணமாக, செவ்வையாக நடக்கும் ஒரு காரியம் திடீரெனத் தடைப்பட்டால், அன்பர் ஒரு கணம் நிதானித்து அக்காரியத்தின் பகுதியை நினைவுகூர்ந்து, எங்காவது நன்றியறிதல் குறைந்துவிட்டதா எனப் பார்த்து, குறைந்த இடத்தைக் கண்டு, குறைவை நிறைவாக்கினால் பிரச்சினை மறையும் என்பது இதன் அடிப்படைக் கருத்து.

கற்பனைக்கெட்டாத விலையுள்ள பொருளைப் பெற, ஊரில் எவருக்கும் கிடைக்கமுடியாத சிபாரிசு கிடைத்த சமயத்தில், வந்த பெருந்தடைகளை நன்றி குன்றிய இடத்தில் குறைவை நிறைவு செய்து, தடையை விலக்கிப் பலன் பெற்றவர் உண்டு. அன்னை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மனிதர்களும், பொருள்களும், நிகழ்ச்சிகளும் வழக்கத்திற்கு மாறாக நன்றியுர்வுள்ளவர்களாக இருப்பார்கள். சில சமயங்களில் மனிதர்கள் தவறினாலும், உதவியைப் பெற்றுக்கொண்ட பொருள்கள், இடங்கள் நன்றியை உணர்ந்து அதன்படி நடப்பார்கள்.

ஒரு பிரம்மாண்டமான எஸ்டேட், ஆங்கிலேயருடையது. உலகத்தில் யாரும் காணாத மாதிரி விவசாயம் செய்தார். அவர் இருந்த இடத்திருந்து 15 மைலுக்கு அப்பால்தான் எலக்ட்ரிசிட்டி இருந்தது. எல்லா வேலைகளையும் முடித்த அவர் மின்சாரம் பெற முனைந்தார். அருகிலுள்ள கிராமத்திற்கு மின்சாரம் வருவதானால் தான் எஸ்டேட்டிற்குக் கிடைக்கும் என்பதால், அந்தக் கிராமத்திற்காக இவர் முனைந்து பாடுபட்டார். மின்சாரம் மின்னல் வேகத்தில் கிராமத்திற்கு வந்துவிட்டது. அந்த ஊர் மக்களுக்கு மின்சாரத்தைப் பயன்படுத்தத் தெரியவில்லை. தெருவிளக்கோடு நின்றுவிட்டது. Estimate போட்ட டிபார்ட்மெண்டார் பல வழிகளையும் (route) கணித்து, சிக்கனமான வழியாக (route) மின்சாரத்தைக் கொண்டு வந்தனர். இந்த முறையில் எஸ்டேட் விடுபட்டுவிட்டது. எஸ்டேட்டுக்கும், எலக்ட்ரிக் லைனுக்கும் 2 மைல் இருக்கிறது. எனவே எஸ்டேட்டிற்கு மின்சாரம் கிடைக்கவில்லை. 15 வருஷமாகியும் கிடைக்கவில்லை. எஸ்டேட்டோடு முக்கியமாக தொடர்புள்ள ஒருவர் வெளியூரிலுள்ள அவருடைய நண்பரை அழைத்து வந்து எஸ்டேட்டைக் காட்டி உதவி கேட்டார். நண்பரின் செல்வாக்கு 15 நாளில் எஸ்டேட்டிற்கு மின்சாரத்தைக் கொண்டுவந்து கொடுத்தது. மின்சாரம் கிடைத்த செய்தியைக்கூட எஸ்டேட்டில் உள்ளவர்களோ, உதவியைக் கேட்டவரோ வாங்கிக் கொடுத்தவருக்குச் சொல்லக்கூட இல்லை. அவரே டிபார்ட்மெண்டில் கேட்டு விஷயத்தைத் தெரிந்து கொண்டதுடன்,

உதவியைப் பெற்றவர்களின் "நன்றியுணர்வை''யும் தெரிந்துகொண்டார். சாதாரணமாக மனிதர்கள் இப்படித்தான் செயல்படுவார்கள். ஏதோ ஒரு வகையில் அன்னையிடம் தொடர்புள்ள இடம் இது. 20, 30 ஆண்டுகட்கு முன் அன்னையின் கார் அந்த வழியாகப் போய் இருக்கின்றதாம்.

கொஞ்ச நாள் கழித்து மின்சாரத்தை எஸ்டேட்டுக்கு வாங்கிக் கொடுத்தவர் தம் ஊரில் தம் நண்பரிடம் ஓர் அல்சேஷியன் குட்டி வேண்டுமெனக் கேட்டார். நண்பர் நல்லதொரு நாய்க்குட்டியை அவருக்கு இரண்டு நாளில் கொண்டுவந்து கொடுத்தார். பிறகு விசாரிக்கப்போனால், அந்த நாய்க்குட்டி மேலே சொன்ன எஸ்டேட்டில் இருந்து வந்ததாம். மனிதர்களுக்கில்லாத நன்றியுணர்வை உதவியைப் பெற்றுக்கொண்ட நிலம் தெரிவிக்கிறது. அன்னையின் சிறப்பு இது.

ஒரு பெரிய சொத்து. உரிமைப் பிரச்சினை எழுந்தது. அநியாயக்காரன் அநியாயமாக எழுப்பியது. பிரச்சினை நாளுக்கு நாள் வளருகின்றதே தவிர குறையவில்லை. பல ஆண்டுகளாக வம்பு, பின்னர் வழக்கு, 3 கோர்ட்டுகளுக்குப் போய்விட்டது. அநியாயக்- காரனுக்கே காலமாயிருந்தது. பலனைப் பெற வேண்டியவர்கள் ஒன்றுகூடினார்கள். அநியாயத்தை வாய் ஓய நிந்தித்தார்கள். ஒருவர் மட்டும் கேட்டார், "அடிப்படையில் பெரும் பலனைப் பெற வேண்டியவருக்கு நன்றியுணர்விருக்கிறதா?'' என்று. சம்பந்தப்பட்டவர் வெட்கப்பட்டார். மனம் மாற சம்மதிக்கவில்லை. ஆனால் "நான் அந்தக் குறை உடையவன்'' என்று ஒத்துக் கொண்டார். மறுநாள் மாலை கோர்ட்டில் இருந்த வழக்கு வெளியே கொணரப்பட்டு நியாயமாகத் தீர்ந்தது. நன்றியறிதலுக்குள்ள வலு அது. ஒரு தடங்கல் ஏற்பட்டால், அது சம்பந்தமாக ஏதாவது ஓர் இடத்தில் நன்றியுணர்வு குறைவதைக் கண்டுபிடித்து அதை நிவர்த்தி செய்தால், தடங்கல் விலகும்.

அன்னையிடம் வந்தபின் வாழ்க்கையில் நிகழ்ந்த நல்லவைகட்கு எல்லாம் பூரண நன்றியுணர்வுடன் மனம் சிறப்படைந்தால், எதிர்

காலத்தில் தடங்கல், குறை, பிரச்சினை வாராது. தற்போது 6 பிரச்சினைகள் உள்ள ஒரு பக்தர் தாம் அன்னையை ஏற்றுக் கொண்டதிருந்து நிகழ்ந்தவற்றை நினைவுகூர்ந்து நன்றியுணர்வை பூரணப்படுத்தினால், அந்த 6 பிரச்சினைகளும் விலகிவிடும்.

நன்றியுணர்தல் வழிபாட்டுக்குரிய முறை; பிரச்சினைகளைத் தீர்க்கவல்ல சிறந்த முறையும்கூட.

29. செயல்களுக்குள்ள அர்த்தபூர்வமான தொடர்பு:

ஆன்மீக அடிப்படையின்படி நாமும், நாம் வாழும் சூழ்நிலையும், பிரம்மம் என்றதனால் ஆனதே. மனிதனுடைய ஊனக் கண்ணுக்கே நாம் வேறு, எதிரில் உள்ள சுவர் வேறு என்றுத் தெரிகிறது. இரண்டும் பிரம்மத்தால் ஆனதே. இதுவே ஆன்மீக அடிப்படை.

புற நிகழ்ச்சிகள் அக உணர்ச்சிகளின் பிரதிபலிப்பே என்பது அன்னையின் வாக்கு. ஆன்மீகத் தெளிவுள்ள யோகி புற நிகழ்ச்சிகளைத் தம் உள்ளுணர்வால் தெரிந்துகொள்கிறான். இதை மனக்கண் (inner eye) எனலாம். முதிர்ந்த யோகிக்கு ஞானதிருஷ்டி இருக்கிறது. எதிர்காலத்தை அறிவதற்கும் அவர் தம்முள்ளே இருப்பதைக்கொண்டே தெரிந்துகொள்கிறார்.

சாதாரண மனிதனுக்குத் தன் உள்ளுணர்வு பெரும்பாலும் புரிவதில்லை. தனக்குள்ள அறிவின் திறனை மாணவன் தனக்குக் கிடைக்கும் மார்க்கைக் கொண்டுதான் புரிந்துகொள்ள முடிகிறது. சொந்தமாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு மாணவன் 9ஆம் வகுப்பு வரை கணக்கில் பொதுவாக பூஜ்யமும், சில சமயங்களில் 7, 8, 10 மார்க்கும் வாங்குவது வழக்கம். 10ஆம் வகுப்பில் புதிய ஆசிரியர் வந்தார். அவன் 92 மார்க் வாங்கி, இரண்டாம் மாணவனாக வந்தான். தனக்குள்ள திறமையை அவனால் அறிந்துகொள்ள முடியவில்லை. மார்க் என்ற கண்ணாடி வளைவாக இருந்ததால் அவனது திறமையை

அது தலைகீழாகப் பிரதிபத்தது. தனக்குள்ள குறைகளை மனிதன் லேசாகப் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் அவனது புற நிகழ்ச்சிகள் துல்லியமாக அவற்றைப் பிரதிபலிக்கும். புற நிகழ்ச்சிகளைக் கொண்டு தன்னை உணர மனிதன் ஆரம்பித்தால் அவனுக்குப் புரியாததே ஒன்றும் இருக்காது. தன்னைச் சரிவர புரிந்துகொள்பவனுக்குப் பிரச்சினை இருக்க முடியாது. அன்னையை வழிபட அதைவிடச் சிறந்த முறை ஒன்று இல்லை. ஏனென்றால், ஒவ்வொரு நிகழ்ச்சியும் எந்த அளவு நாம் மனதில் அன்னையை ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்பதைத் தெளிவாகப் பிரதிபலிக்கும்.

ஆறு மாதத்திற்கொருமுறை நாம் ஒருவர் வீட்டிற்குப் போவோம். ஒவ்வொரு முறையும் அங்கு வேறொருவரைச் சந்திப்போம். இதைத் தற்செயலாக நடந்ததாகக்கொள்ளலாம். அப்படிக் கொள்வதால் அந்த நிகழ்ச்சியில் பொதிந்துள்ள அர்த்தத்தை இழந்துவிடுவோம். ஏதோ அதில் ஓர் உண்மை பிரதிபலிக்கிறது என்பதை நாம் அறிந்து கொண்டால், பிற்காலத்தில் வேறு சந்தர்ப்ப விசேஷங்களால் அவரும், நாமும் சேர்ந்து செயல்பட நேரிடும்பொழுது முந்தைய நிகழ்ச்சி இதைச் சுட்டிக் காட்டியது தெரியும். எந்த ஒரு செயலுக்கும் அர்த்தம் உண்டு. அதை நாம் புரிந்துகொள்ள முயல்வது நல்லது. 40 வயதிற்கு மேற்பட்ட பின் நம் இளம்வயது நிகழ்ச்சிகளை இன்று கூர்ந்து ஆராய்ந்தால், பின்வரும் நிகழ்ச்சிகளை முன் நடந்தவை அறிவுறுத்தியுள்ளது தெரியும்.

ஒருவர் தம் மாணவ நாட்களில் தம் அனுபவத்தைச் சொல்லும் பொழுது, "எனக்கு B.A. பாஸ் செய்யும்வரை ஒரு வகுப்பில்கூட நல்ல ஆசிரியர் அமைந்ததில்லை. பள்ளியில் இருப்பதிலேயே சொத்தையான ஆசிரியரே அமைவது வழக்கம்'' என்றார். அவர் ஆசிரியரானார். அவரும் சொத்தை ஆசிரியராக ரிடையர் ஆனார். மற்றொருவர் சாதாரண பள்ளிகளிலும், பிரபலம் இல்லாத கல்லூரிகளிலும் பயின்றவர். ஸ்தாபனத்தில் உள்ள சிறப்பான ஆசிரியர்கள் எனக்குத் தவறாது கடைசிவரை அமைந்தார்கள்

என்றார். பிற்காலத்தில் இவர் சிறந்த கருத்துகளை, உயர்ந்த முறையில் பலருக்குச் சொல்லக்கூடிய நிலைக்கு வந்தார். மனம் போல் மாங்கல்யம் என்ற வழக்கில் இந்த உண்மை தெரிகிறது.

ஒரு கல்லூரி ஆசிரியர் இலட்சியவாதி, தேசீயவாதி, நிறையப் படித்தவர். பெரிய லைப்ரரியை வீட்டில் வைத்திருப்பவர். நேருவின் (Glimpses of World History) புதிய பதிப்பு வந்தவுடன் ஆர்வமாக அதை வாங்கிப் படிக்க ஆரம்பித்தார். இவர் கடவுள் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவுவாதி. 3 பக்கம் படித்தவுடன் தவறான செய்தி வந்தது. புத்தகத்தை மூடிவிட்டு, செய்தியை நாடிச் சென்றார். "அந்தப் புத்தகத்தை எப்பொழுது எடுத்துப் படித்தாலும் ஏதாவது தவறான செய்தி வருகிறது. 20 பக்கத்திற்கு மேல் நான் படிக்கவில்லை. என் பகுத்தறிவு மனச்சாட்சி என்னை உறுத்துகிறது'' என்று நண்பர்களிடமும், மேடையிலும் பேசுவார். ஒரு முறை புத்தகத்தை எடுத்து, இம்முறை முடிக்காமல் வைக்கப்போவது இல்லை' என்று திடமாக உட்கார்ந்தார். தந்தி வந்தது. ஒரே தம்பி, 32 வயதான இன்ஜீனியர் விபத்தில் மாட்டி இறந்துவிட்டான் என்றது செய்தி. "இனிமேல் எனக்கு ஆராய்ச்சியும் தேவையில்லை. பகுத்தறிவும் தேவையில்லை. இந்தப் புத்தகத்தை இனி தொட மாட்டேன்'' என்றார். எது உண்மையோ, இல்லையோ, அந்தப் புத்தகத்திற்கும், அவருக்குக் கிடைத்த செய்திக்கும் தொடர்புண்டு. இந்தத் தொடர்பே நமக்கு முக்கியம். தொடர்பை அறிவது அவசியம். அதன் மூலம் நம்மை அறிவது பலன் தரும். எதிர்ப்பார்த்தால் நடக்காது. இச்சை அற்றுப்போனால் சித்திக்கும் என்பவை நம் பழக்கத்திலுள்ள கருத்துகள். அவற்றின் உண்மையை நாம் அனுபவத்தில் அறிவோம்.

பலன் கருதாது கடமையைச் செய்ய வேண்டும் என்பது கீதை. பலனை மறந்து காரியத்தில் தீவிரமாக ஈடுபட்டால் கிடைக்கும் பலன் அபரிமிதமானது என்பது அனுபவம். பலனை மறந்து, காரியத்தைச் சமர்ப்பணம் செய்து, அன்னை நினைவுடன் தன்னை மறந்து செயல்பட்டால், உள்ளே ஆனந்தம் பிறக்கும். காரியம் வெற்றியா,

தோல்வியா எனக் கேட்க வேண்டாம். பருத்தி புடவையாகக் காய்த்தது போலிருக்கும் பலன். புற நிகழ்ச்சி அக உணர்வை முழுவதுமாகப் பிரதிபலிக்கின்றது. திறமையாகச் செயல்பட்டால் முழுமையான பலன் கிடைக்கும். கடமையை மட்டும் கருதிச் செயல்பட்டால், பலன் அடுத்த உயர்ந்த கட்டத்தில் கிடைக்கும். கடமையையும் சமர்ப்பணம் செய்து செயலாற்றினால், வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நம்மை இந்தச் செயல் அழைத்துச் செல்லும். ஒருவர் பரிசை நாடிப் போனார். அவருக்கே பரிசைக் கொடுப்பதாகக் கமிட்டி ஏகமனதாக ஏற்றுக் கொண்டது. அவர் பதட்டத்துடனிருந்தார். கடைசிக் கட்டத்தில் அவர் பெயரை அடித்து, கமிட்டியின் சிபாரிசைப் புறக்கணித்து வேறு ஒருவருக்குப் பரிசளித்தனர். அவர் பரிசை மறந்தார். தமக்குரிய மற்றக் கடமைகளில் ஈடுபட்டு சிறப்பாகச் செயலாற்றினார். ஒரு முறை இரவு வெகுநேரம் கண் விழித்து காரியங்களை முடிக்கவேண்டிய சமயம். அர்த்த இராத்திரியில் கதவைத் தட்டி, "உங்களுக்குப் பரிசளித்தாய்விட்டது. எந்நேரமானாலும் சொல்லவேண்டுமென வந்தேன். சென்ற ஆண்டு தவறியது இந்த ஆண்டு கிடைத்தது'' என்று வீடு தேடி வந்தது செய்தி. மேலும் அவர் கடமைகளை அர்ப்பணித்துச் செயல்பட ஆரம்பித்தார். பரிசளிக்கும் கமிட்டி மெம்பர் பதவி அவரைத் தேடி வந்தது. மனநிலையை வெளி நிகழ்ச்சிகள் பிரதிபலிக்கின்றன.

விருப்பு, வெறுப்பின்றி நம் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும், செயல்களையும் கூர்ந்து கவனித்து, நமக்கு வரும் கடிதங்கள், வரும் விசிட்டர்கள், நம் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டேயிருந்தால், இந்தத் தொடர்பு பூரணமாகத் தெரியவரும். அது ஒரு முழுமையான ஞானம் (total knowledge), நம் வாழ்க்கையின் எதிர்காலப் பாதையை வகுத்துக்கொள்ள உதவும். பிரச்சினைகள் ஏற்பட்டால், மனதில் எதை மாற்றி வெளியில் பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என விளங்கும்; பிரச்சினைகள் விலகும்; வாழ்க்கை புரியும்; நம் கட்டுப்பாட்டில் வரும்.

மனதில் உள்ள அன்னை நினைவுக்குப் புற வாழ்க்கையில் என்ன பலன்கள் கிடைக்கின்றன என்பது பூரணமாகத் தெரியவரும். மானஸீக வழிபாட்டின் சிறப்பையும் அதனால் வாழ்க்கையில் ஏற்படும் பெரும் பலனையும் அறியலாம்.

மனத்தைத் தெளிவாக வைத்துக்கொள்ளுதல் சிறப்பு. மனத்தில் அன்னையின் நினைவை ஆர்வமாக, நிரந்தரமாக இருத்திக் கொள்ளுதல் உயர்வு. இந்த உயர்ந்த மனப்பான்மையை ஒரு முறை பூரணமாக ஏற்படுத்தி, சில நாள் அப்படியே தொடர்ந்தால், வாழ்க்கை இதுவரை நமக்களிக்காத பரிசுகளை எல்லாம் தொடர்ந்து, இனிமையாக வழங்கிக்கொண்டேயிருக்கும் என்பதைக் காணலாம்.

இதுபோன்ற நிலையில் மனம் நிலைத்து நிற்கும்பொழுது கண்ணில் படும் நிகழ்ச்சிகள், காதால் கேட்கும் சொற்கள், நம் இன்றைய மனநிலையையும், நாளை நடக்கப்போவதையும் பூரணமாக எதிரொப்பதைப் பார்க்கலாம்.

இந்த அறிவைப் பெற்றபின் எந்தப் புற நிகழ்ச்சியை, எந்த உள்ளுணர்வால் மாற்றலாம் என்பது தெரியும். மனமாற்றத்தால் நிகழ்ச்சி மாறுவதைக் கண்கூடாகக் காணலாம்.

இப்படிப்பட்ட ஞானத்தால் வழிபாடு செய்யவேண்டுமானால், அன்னையை என் உணர்ச்சிகளில் நான் பிரதிஷ்டை செய்கிறேன். அன்னை எனக்களிக்கும் வாழ்வை மனநிறைவுடன் ஏற்றுக் கொள்கிறேன் என்ற முடிவுக்கு வந்தால் வழிபாடு பக்தியாகும்; வாழ்க்கை ஒளிமயமாகும்.

30. சிந்தனைக்குரிய ஆராய்ச்சி:

ஆத்மாவை அடைய ஞானத்தைத் தேடுகிறோம். ஞானம் என்பது அறிவு; ஆனால் ஆத்மாவை அறியும் அறிவு. பூவுலகத்தில் பெறக்

கூடியவற்றில் சிறந்தது ஞானம். அதனுடைய ஆரம்பத்தை ஞானோதயம் என்கிறோம்.

மகான்களுக்குரியது ஞானமானால், மக்களுக்குரியது அறிவு. எளிய பாஷையில் புத்திசாலித்தனம் என்பர். அன்னையை வழிபடுவதற்கு உரிய முறைகளில் சிந்தனை என்பதையும் நாம் ஒன்றாகக் கொள்ளலாம். மனத்தின் கருவியான சிந்தனை சிறப்பாக இருந்தால், நம் வழிபாடு சிறப்பாக இருக்கும். இந்தக் கட்டுரையில் அன்பர்கள் தங்கள் வழிபாட்டை வாழ்க்கை விளக்கம் பெற்றதாக அமைப்பதெப்படி என்றே முதலிலிருந்து கருதி வருவதால், பிரச்சினைகள் தீர சிந்தனை எப்படிப் பயன்படும் என்பதை விளக்கமாகப் பார்ப்போம்.

தெளிவில்லாததால் பிரச்சினைகள் உற்பத்தியாகின்றன. தெளிவு ஏற்பட்டால் பிரச்சினை விலகும் என்பது நாம் அறிந்த ஒன்று. தெளிவிருந்தாலும் தீராத பிரச்சினைகள் இல்லையா என்று ஒரு கேள்வி. அதற்கு இரு வகைகளில் பதில் சொல்லலாம். (1) தீராத பிரச்சினைக்குரிய தெளிவு ஏற்பட்டால் அது தீரும். (2) அப்படி ஒரு பிரச்சினை இருந்தால், அது நூற்றுக்கு ஒன்றாக இருக்கும். தற்சமயம் அதை மட்டும் விலக்கிப் பொதுவாக எல்லோரையும் பாதிக்கும் பிரச்சினைகளுக்குச் சிந்தனை எப்படிப் பயன்படும் என்பதை மட்டும் கவனிப்போம்.

எந்த ஒரு காரியத்தையும் நாம் கற்றுக்கொள்ளும்போதும் நுணுக்கமாகக் கற்றுக்கொள்கிறோம். அக்காரியத்திற்கே உரிய நுணுக்கத்தைக் கூர்ந்து அறிந்து பற்றிக்கொள்கிறோம். இது அனுபவத்தால் பெறக்கூடியது. சூட்சுமமாகக் கவனிப்பதால் சீக்கிரமாகப் புரிந்துகொள்ளலாம். கொச்சை மொழியில் குழந்தைகளைப் பற்றிச் சொல்லும்பொழுது "சூட்டிகை''யான குழந்தை; ஒரு முறைக்கு மேல் சொல்ல வேண்டியதில்லை என்பது இந்தச் சூட்சும அறிவைக் குறிக்கிறது. இதை வாழ்க்கையில் எல்லா இடங்களிலும் பார்க்கலாம். இது இல்லாதவர்களுக்குக் காரியம் மெதுவாக முடியும்; கடினமாக

இருக்கும்; அவர்களுக்குத் தடை ஏற்படும்; பிரச்சினை வரும். 40 பேருக்கு தினம் கூலி கொடுக்கும் இடத்தில் பணத்தை ரூ.100, 50 நோட்டாகக் கொண்டுவந்து பிரித்துக் கொடுக்கச் சிரமப்பட்டு, சண்டை வளர்த்து, பட்டுவாடாவுக்கு இரண்டரை மணி நேரம் ஆகிறது. அதேபோல் மற்றோர் இடத்தில் பாங்கில் பணம் வாங்கும்பொழுதே சில்லறையாக வாங்கி வந்து, தலைக்கு என்ன கூலி என்று 1 மணி நேரம் முன்னதாக எடுத்து, தனிக் கவர்களில் போட்டு வைத்து 40 பேருக்கும் 10 நிமிஷத்தில் பட்டுவாடாவை முடித்துவிடுகிறார். இது ஒரு வகை அறிவு.

4 வருஷமாகத் தலைவலி மண்டையைப் பிளக்கிறது. அந்தத் தலைவலி மருந்துக்கும் கட்டுப்படவில்லை என ஒரு கிராமவாசி படித்தவரிடம் சொன்னபொழுது, கண் பார்வையைச் சோதனை செய்யச் சொன்னார்; பார்வை குறைவாயிருந்தது; கண்ணாடி போட்டவுடன் வலி போய்விட்டது. கிராமவாசிக்கு, தலைவலிக்கும், கண் பார்வைக்கும் உள்ள தொடர்பு தெரியவே முடியாது. விவரம் தெரியாததால் ஏற்படும் குறை இது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு உண்டு. ஆனால் அவனுக்குத் தெரியவில்லை.

1946இல் ஒரு நெசவாளியின் மகள் இண்டர்மீடியட் படித்துக் கொண்டிருந்தாள். கணக்கில் எப்பொழுதும் 100க்கு 100உம், பௌதிகத்திலும், இரசாயனத்திலும் 90க்கு மேலும் மார்க் வாங்குவது வழக்கம். தமிழில் மட்டும் எப்பொழுதும் முதல் மார்க்குக்குரிய பெண் அவள். இரண்டாம் வருஷம் செலக்க்ஷனில் இப்பெண்ணைப் பெயிலாக்கி, பெயிலான 6 பேரில் ஒருத்தியாக அறிவித்தார்கள். 500 பேரில் 6 பேர் மட்டுமே பெயில். அந்த ஆறு பேர்களில் இவளும் ஒருத்தி; காரணம் புரியவில்லை. அவளுடைய கிராமத்தைச் சுற்றியுள்ள இடங்களிலிருந்து சுமார் 10, 12 மாணவர்கள் பல்கலைக் கழகத்தில் படிப்பதற்காக ஒரே தெருவில் குடியிருந்தார்கள். சிறப்பான மாணவிக்குச் சிக்கல் வந்துவிட்டது. எல்லோரும் கூடிப் புலம்பினார்கள். வண்டி அழைத்து வந்தார் தகப்பனார். பெட்டி, படுக்கைகளை ஏற்றி

விட்டார்கள். அந்தச் சமயம் அதே தெருவில் இருந்த மற்றொரு மாணவன் வந்து என்ன விஷயம் என்று விசாரித்தார். அவர் விபரம் தெரிந்தவர். இந்த மாணவியின் வகுப்பில் படிப்பவர். ஒரு மாதம் நோய்வாய்ப்பட்டு இந்த மாணவி கல்லூரிக்கு வரவில்லை. அதற்கான டாக்டர் சர்ட்டிபிகேட் கொடுக்கவில்லை. அதனால் போதுமான வருகை (attendance) இல்லாததால் (unselected) தேர்வு ஆகவில்லை என்பது அவருக்குப் புரிந்துவிட்டது. பெண்ணின் தகப்பனாரிடம் விளக்கிச் சொன்னார். 20 பேர் சொல்லும்பொழுது ஒருவர் மட்டும் மாற்றிச் சொல்வதை எப்படி நம்புவது? பெண்ணை அழைத்துக்கொண்டு கல்லூரி புரொபஸரிடம் போய்க் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பெரியவரும், மகளும் இசைந்தார்கள். புரொபசர், "சர்ட்டிபிகேட் வேண்டும்; வந்தால் போதும்'' என்றார். மாணவி பரீட்சை எழுதி, முதல் வகுப்பில் (I class) பாஸ் செய்து, 3 பாடங்களில் முதலாவதாக வந்து பரிசு பெற்றாள்.

அவர்களுக்குப் பிரச்சினை மிகப்பெரியது. ரிஜிஸ்ட்ரார் கையெழுத்திட்டு, நோட்டீஸ் போட்டபின் மாற்ற முடியாது என்று உடனிருந்த கிராமத்து மாணவர்கள் அனைவரும் சொன்னார்கள். எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வுண்டு. தன்னைவிட அதிக விவரம் தெரிந்தவர்களை விசாரிக்க வேண்டும், அல்லது ஒரு புரொபஸரை விசாரிக்க வேண்டும். அது சம்பந்தமாக அதிக விபரம் தெரிந்தவர்களைக் கேட்க வேண்டும். பலரானாலும், எல்லோரும் நம்மைப் போன்றவர்களானால், அவர்களுடைய யோசனைக்கு அர்த்தமில்லை.

விவரம் தெரியாமல், விஷயம் தெரியாமல், விதிகள் தெரியாமல், சட்டம் தெரியாமல், வாழ்க்கை நுணுக்கம் அறியாமல், இங்கிதம் உணராமல், நாட்டு வழக்கம் புரியாமல், பிரச்சினைக்குரிய அனுபவமில்லாமல் தமக்குத் தெரிந்ததையே நம்பும் பழக்கத்தாலும், இழந்த சொத்துகள், விட்டுப்போன பிரமோஷன், பிரிந்துபோன

குடும்பங்கள், உடைந்துபோன கட்சிகள், விரயமான பெருந் தொகைகள் ஏராளம்.

பிரச்சினை என்று ஒன்று ஏற்பட்டால், ஆயிரத்தில் ஒன்று தவிர, அதற்கு அறிவுபூர்வமான தீர்வுண்டு. அது நமக்குத் தெரியாமல் இருக்கலாம். எவருக்குமே இந்தப் பிரச்சினை வந்து தீர்ந்ததில்லை என்றால் அதற்குத் தீர்வில்லை எனலாம். ஒருவருக்குத் தீர்ந்துள்ளது என்றால், அவருக்கு ஏற்பட்ட மார்க்கம் எது, அது நமக்குக் கிடைக்குமா என ஆராய்ந்து பார்க்கலாம்.

பொதுவாகப் பிரச்சினைகள் வந்தபின், அது தீராது என்று முடிவு செய்வதை விட்டு, நாமே யோசனை செய்தால் பாதி பிரச்சினைகளுக்கு வழி பிறக்கும். நம்மைவிட அறிவாளிகள், அனுபவசாலிகளைக் கேட்டால், முக்கால்வாசி பிரச்சினைக்கு வழி உண்டு. அதே துறையில் உள்ளவர்களை அணுகினால் சிக்கலும் உடையும். நுணுக்கமானவரைக் கலந்தால் எதற்கும் வழி பிறக்கும். இதையெல்லாம் தாண்டி ஒரு பிரச்சினை மிச்சமானால், பிறகு செய்யும் பிரார்த்தனை உடனே பலிக்கும்.

படித்தவர் ஒருவருக்கு ஏதாவது ஒரு கொப்புளம் வருகிறது. ஒன்று மறைந்தால் மற்றது தோன்றுகிறது. பல டாக்டர்களுக்குப் பிடிபடவில்லை. கவலையுடன் இருந்த அவரை ஓர் அமெரிக்கர் கேட்டார். "எத்தனை நாளாக இது இருக்கிறது? அப்பொழுது என்ன பழக்கம் மேற்கொண்டீர்கள்? குறிப்பாக, உணவில் என்ன பழக்கம் ஏற்பட்டது?'' என்று. தாம் காப்பி சாப்பிடுவதில்லை; புதியதாகக் காப்பி சாப்பிட ஆரம்பித்ததாகச் சொன்னார். "அப்படியானால் காபியை நிறுத்திப் பார்த்தால் தேவலை'' என்றார். காபியை நிறுத்தினார். கொப்புளம் நின்றுவிட்டது.

ஆராய்ச்சி, சிந்தனை என்பது நல்லது. சிந்திக்கும் மனத்தில் அன்னையின் சக்தி சிறப்பாகச் செயல்படும். சிந்தனையே

பிரச்சினையைத் தீர்க்கும். அது தீர்க்காவிட்டாலும், மனம் சிந்தித்தால் சிறப்படையும்; அன்னை சிறப்பாகச் செயல்படுவார்; பிரச்சினை தீரும்.

31 வயது வரை திருமணம் தட்டிப்போகும் ஒரு செல்வர் மகளை விசாரித்தவர், அப்பெண் முதலில் வந்த வரன்களை வேண்டாம் என்று சொல்லும் பழக்கம் உடையவர் எனத் தெரிந்து, அதில் உள்ள சூட்சுமத்தைத் தெரிவித்தார். ஒரு வரனை நமக்குப் பிடிக்கவில்லை என்பது வேறு; வருகிற வரனை வேண்டாம் என்று சொல்வது வேறு. அப்படிச் சொன்னால் மேலும் வரும் வரன் தவறிவிடும் என்பது (subtle truth) சூட்சுமமான உண்மை. அப்பெண் அதை உணர்ந்து ஏற்றுக்கொண்டபின் வந்த முதல் வரனுக்குத் திருமணம் முடிந்தது.

பிரச்சினைகளைத் தீர்க்க சிந்தனை உதவுவதுபோல், வாய்ப்புகளை உற்பத்தி செய்யவும் உதவும்.

S.S.L.C. சிரமப்பட்டு முடித்து (complete) attenderஆக இருந்து கிளார்க்கானவர் ஒருவர், யாராவது சரளமாக இங்கிலீஷ் பேசினால், அவரைத் தேவலோகப் பிறவியாகப் பாவிப்பார். ஆங்கிலம் பேச முழு ஆசை. அமைப்பு அப்படியில்லை. அவருடைய அவாவைக் கண்ணுற்ற ஒருவர், மொழி நுணுக்கத்தை அறிந்தவர். மொழியைக் கற்றுக்கொள்ள அறிவு தேவையில்லை என்பது சர்வதேச நிபுணர்கள் அறிந்த ஒன்று. எந்த நாட்டிலும் அறிவில்லாதவர்கள் உண்டு. அவர்கள் அந்த நாட்டு மொழியைப் பேசுகிறார்கள். ஒரு மொழியை அறிந்தவனுக்கு மற்றெந்த மொழியையும் பயிலும் திறன் உண்டு. சர்வதேச வல்லுனர்கள் அறிந்த இந்த மொழியியல் நுணுக்கங்களை நம் நாட்டில் படித்த அறிஞர்களே ஆங்கிலம் சம்பந்தப்பட்ட வரை ஒத்துக்கொள்ளத் தயங்குவார்கள். இந்தியாவில் ஆங்கிலத்திற்குள்ள அந்தஸ்து அது. இந்த கிளார்க் எப்படி அதை ஏற்றுக்கொள்வார்? அவருடைய ஆர்வம் கருதி, அவரை ஆங்கிலம் பேச வைக்க முயன்று, அதில் உள்ள நுணுக்கத்தில் முக்கியமான ஒன்றை விளக்கி, ஒரு முறையையும் சொல்லிக்கொடுத்தார். "உங்கள் சிந்தனையை

முழுமையாக மாற்றி, ஆங்கிலத்திலேயே சிந்திக்க முயன்று, சிந்தனையில் பூரண வெற்றி பெற்றால், பிறகு பேசுவது பலிக்கும்'' என்று சொன்னார். அவரும் முப்பதாம் நாள் பேச ஆரம்பித்து, சரளமாக ஆங்கிலம் பேசக் கற்றுக்கொண்டார்.

பசுமைப் புரட்சியின் வெற்றிக்கு வித்தானது இது போன்ற ஒரு நுட்ப அறிவுதான். விவசாயி ஓர் ஏக்கரில் 15 மூட்டை மகசூலை 17 மூட்டையாக மாற்றி, நாட்டின் உற்பத்தியைப் பெருக்கத் தான் பரம்பரையாகக் கையாளும் பழக்கத்தை விட்டு, புதிய முறையைக் கற்றுக்கொள்ள முன்வரமாட்டான். 15 மூட்டை விளைந்த இடத்தில் 25 மூட்டை விளையுமானால், விவசாயி புதிய முறையைக் கற்றுக் கொள்வான். உற்பத்தி பெருகி, விலை குறைந்தால், விவசாயி பழைய பழக்கத்திற்குப் போய்விடுவான். அவன் எவ்வளவு உற்பத்தி செய்தாலும் சர்க்கார் நல்ல விலைக்கு வாங்க உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற இரு நுட்பங்களே பசுமைப் புரட்சியின் வெற்றிக்குக் காரணம். ஈ. சுப்ரமணியம் பரம்பரை விவசாயக் குடும்பத்தினர். அக்காரணத்தாலேயே அவருக்கு இந்த சூட்சுமங்கள் விளங்கின.

பிரச்சினைகளைத் தீர்க்கவும், வாய்ப்பைப் பெறவும், அன்னையின் அருளை அதிகமாகப் பெறவும் சிந்திக்கும் ஆற்றல் துணை புரியும்.

31. தீராத பிரச்சினை:

இறைவன், மனிதனுக்கு அவனால் தீர்க்க முடியாத பிரச்சினையைக் கொடுப்பதில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனால் தீர்க்கக்கூடிய பிரச்சினைகளை மட்டுமே இறைவன் கொடுக்கிறான். ஆனால் மனிதன் அதிகபட்ச முயற்சி எடுத்து, முயன்றால் அவை தீரும். சாதாரண முயற்சியால் சாதாரணப் பிரச்சினை தீரும். தீவிர முயற்சியால் எந்தப் பிரச்சினையும் தீரும். பலர் முயன்று தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு முன்னேறுகிறார்கள். மற்றவர் அந்த முயற்சியை எடுப்பதில்லை. முயன்றோர்க்கு முன்னேற்றம், என்பது அன்னை பிரச்சினைகளைப் பற்றி சொல்லியிருப்பது.

ரூ.2000 மாத வருமானமும், ரூ.75,000 சொத்தும் உள்ளவர்க்கு இரண்டரை இலட்ச ரூபாய் கடன். ஆனால் அது அவரால் தீர்க்கக்கூடிய பிரச்சினை என்று எப்படிச் சொல்வது? அவரை மீறிய பிரச்சினை அல்லவா அது? மேற்படி நபர் நாணயமானவர். அவர் போட்ட திட்டம் (project) வெகு இலாபகரமானது. அவரது நாணயத்தாலும், திட்டத்தின் அதிகபட்ச இலாபத்தாலும் கடன் கிடைத்தது. தற்சமயம் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கவில்லை; வட்டி சேர்ந்து பாரமாகிவிட்டது; விழி பிதுங்குகிறது, என்ற நிலையில் கடைசியாக அன்னையால் ஏதாவது வழி பிறக்குமா என்று அரைகுறை நம்பிக்கையுடன் ஆசிரமம் வந்தார். மறுநாளே கழுத்தில் இருந்த கத்தி விலகியது. ஆனால் விழி பிதுங்கும் நிலை ஒன்றரை வருஷம் மாறவில்லை. எந்தச் சாதுர்யத்தைப் பயன்படுத்திக் கடனை முதலில் வாங்க முடிந்ததோ, அதே சாதுர்யத்தைப் பயன்படுத்தி நிலைமையைச் சமாளிக்க வேண்டும் என்ற சவால் அவருள்ளிருந்து எழுந்தது. அதன்பின் பிரார்த்தனை பலித்தது. புதிய நிலைமை சாதகமாக ஏற்பட்டது. உயிரை விட்டுச் செய்த முயற்சியால் திட்டத்தை வெற்றிப்பாதைக்கு மாற்றிவிட்டார். நிலைமைக்கு மீறிய கஷ்டத்தை உற்பத்தி செய்தவர்கள் தங்களுக்கு உள்ள சாமர்த்தியம், சாதுர்யம், நாணயம், செல்வாக்கு, சிபாரிசு, ஆகிய முழு முயற்சியுடன் தம் முழுமூச்சுடன் செயல்பட்டு அந்தக் கஷ்டத்தை உருவாக்கி இருப்பார்கள். முயற்சி பெரியது. அறிவு இல்லாமல் ஆசையால் உந்தப்பட்டு ஒரு நிலைமையை ஏற்படுத்தி விடுவார்கள். பின்னர் பிரச்சினை வடிவம் பெற்று, உயிர் பெற்று, வேரூன்றி, தீர்க்க முடியாது என்றாகிவிட்டால், அப்படியே போட்டு விட்டு ஓடிவிடலாம் என நினைப்பார்கள்; ஓடிவிடுவார்கள். எப்படி முழுமூச்சோடு நிலைமையை உருவாக்கினார்களோ, அந்த முழு மூச்சுடன் நிலைமையைச் சமாளிக்க முயன்றால், பிரச்சினை தீரும். அன்னைக்குச் செய்யும் பிரார்த்தனை பலிக்கும்.

இப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் உள்ளவர், இப்படிப்பட்ட முடிவை எடுத்துவிட்டால், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பல வழிகள் உள்ளன. அப்படிப்பட்ட முயற்சியை எடுக்க முடிவு செய்தபின் செய்யும் பிரார்த்தனை பூரணமாகப் பலிக்கும். முயற்சியைச் செய்வதற்கு முன்னும் பக்கும். இந்தக் கோணத்தில் பார்த்தால், தீர்க்க முடியாத பிரச்சினை, தீராத பிரச்சினை என்று ஒன்றில்லை எனலாம்.

இந்த முடிவை நிறைவேற்ற உதவும் முறைகள் பல. அவை யாவன:

 • 1. தவறு என்னிடம் இருக்கிறது. நான் திருத்திக்கொள்கிறேன் என்று முடிவை ஏற்றுக்கொள்ளுதல்.
 • 2. இதுவரை நான் செய்த முயற்சிகளைவிட அடுத்த கட்டத்தில் ஒரு முயற்சியைச் செய்ய நான் தயார்.
 • 3. இதுவரை என்னால் விட முடியாத குறையை நான் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக விட்டுவிட முடிவு செய்து விட்டேன்.
 • 4. இன்று செயல்படும் கட்டத்தில் (perfection) பூரணச் சிறப்பை அடைய முயல்வேன்.
 • 5.மு யன்றால் முடியாதது ஒன்றில்லை என்ற நம்பிக்கை இருக்கிறது. பிரச்சினை தீரும்வரை விடாமுயற்சி செய்வேன்.
 • 6. மற்றொருவரால் இதுபோன்ற பிரச்சினையைத் தீர்க்க முடியுமானால், என்னால் அது முடியும்.
 • 7. பிரச்சினையைத் தீர்க்கக்கூடிய இரகஸ்யம் ஒன்று உண்டு. அதைக் கண்டுபிடிக்க முயல்வேன்.
 • 8. நாம் நம்பும் கருத்துகளின் எதிர்மறையானவையும் (opposite ideas) உண்மை என நான் ஏற்றுக்கொள்கிறேன்.

 • 9. முயற்சி செய்யாமல் அழிவதைவிட, முயற்சி செய்து தோல்வி அடைதல் சிறப்பு.

1. தவறு என்னுடையதே:

இந்தக் கொள்கை சிறப்பானது. என் மீது தவறில்லை எனும்போது செயல்படுவது அகந்தை. நான் எனும் முனைப்பு, அகங்காரம். தவறு என்னுடையதே என்று சொல்லியவுடன் அகந்தை அகற்றப்படுகிறது. அத்துடன் நம் திறமைகள் எல்லாம் அகந்தையின் பிடியிருந்து விலகி, பிரச்சினையைத் தீர்க்க தங்கள் வலுவை நமக்குக் கொடுக்கின்றன. இது பெரிய விஷயம்.

"தவறு என்னுடையது மட்டுமே. எல்லாத் தவற்றுக்கும் நானே பொறுப்பாளி. திட்டம் (project) கூடிவரவில்லை என்றால் தவறு இருக்கிறது என்று பொருள். அப்படி இருக்கும் தவற்றுக்கு முழுப் பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன்'' என்று கூறி முதல் போட்ட கூட்டாளியிடமிருந்து விலகிய கஷ்டக் கூட்டாளிக்கு, 10ஆம் நாள் ழுத்திட்டமும் ( project) தானே திரும்ப வந்தது. இந்தக் கொள்கைக்குரிய திறன் அத்தகையது.

"தவறு என்னுடையது என்று ஏற்றுக்கொண்டேன். திட்டம் (project) வந்துவிட்டது. ஆனால் கூட்டாளி செய்த துரோகத்தை நினைத்தால் இன்றும் ஆத்திரம் பொங்கிவருகிறது. கோபம் வருவது தவறு. இனி என் கோபத்தை அழிக்க முற்படுவேன்'' என்று சபதமிட்டு கோபத்தை முழுவதுமாக அடிக்கடி நான்காண்டுகள் முயன்று வெற்றி கிட்டிய அதே க்ஷணத்தில், துரோகம் செய்த கூட்டாளி அவரை அழைத்து, "நடந்ததெல்லாம் சரியில்லை. நீங்கள் செய்தது அனைத்தும் சரி. ஆரம்பத்திருந்தது போல் நாமிருப்போம்'' என்று கூறி நட்பை அளிக்க முன்வந்தார்.

2. இதுவரை செய்யாத முயற்சியை நான் செய்ய ஏற்றுக்கொள்கிறேன்:

S.S.L.C.யை எட்டினால் போதும், நம் வீட்டுப் பையன் S.S.L.C. பாஸ் செய்ய முடியாது என திட்டவட்டமாக நம்பிய குடும்பத்தில் அவர்கள் வீட்டுப் பையன் S.S.L.C.யை மூச்சைப் பிடித்துக்கொண்டு பாஸ் செய்து, இன்டர்மீடியட் சேர்ந்து 3 முறை தவறி, 4ஆம் முறை 35 மார்க்குடன் பாஸ் செய்தான். அவனை B.A. (Hons.) சேர வேண்டுமென சொன்னபொழுது அவனுக்குப் பீதி ஏற்பட்டது. B.A. (Hons.) மூலம் 4 வருஷ M.A. படிப்பை 3 வருஷத்தில் முடிக்கலாம். ஆனால் பரீட்சை ஒரே ஒரு முறைதான் எழுதலாம். பெயிலானால் மீண்டும் இன்டர்மீடியட்தான் நிலைக்கும். B.A. (Hons.) அட்மிஷன் வாங்குவது கஷ்டம். தான் இதுவரை அசுரப் பிரயத்தனம் செய்துவருவதால் இதைவிட அதிக முயற்சிக்கு இடம் இல்லை எனப் பையன் பின்வாங்கினான். "நீ செய்த முயற்சி அளவு கடந்தது, சரி. ஆனால் முயற்சியின் தரத்தை (quality) உயர்த்தினால் பலனுண்டு. முயற்சியின் அளவை (quantity) இனி உயர்த்த முடியாது. இதற்கு நீ சம்மதித்தால் நல்ல எதிர்காலம் உண்டு'' என்று அறிவுரையை அவன் ஏற்றுக்கொண்டான். B.A. (Hons.) முதல் நிலையில் (I class) பல்கலைக்கழகத்தில் முதல்வனாகத் தேறி, M.Litt.ம் பெற்று வெளியே சென்று, மீண்டும் M.A.யும், Ph.d.யும் பெற்று பல்கலைக்கழகப் பேராசிரியராகவும் ஆனான்.

இன்றுவரை உள்ளதைவிட உயர்ந்த நிலை ஒன்றுண்டு. அதை அடையச் செய்யும் முயற்சிக்கு உள்ள பலனைக் கனவிலும் நாம் கருத முடியாது. அப்படிப்பட்ட முயற்சியே அன்னை வழிபாடு. அன்னையை வழிபட அதைவிடச் சிறந்த முறைகளில்லை. அன்னார் வாழ்வில் அன்னை அளவிறந்து செயல்படுவார்கள். வாழ்வே வழிபாடு ஆகும்.

3. விட முடியாத குறையை விட்டுவிடுகிறேன்:

நாள் தவறாமல் இரண்டு சினிமாப் பார்க்கும் பட்டதாரி. யாரையும் பார்த்துப் பேச விரும்பமாட்டார். நீங்கள் எந்த ஊர்? உங்கள் தகப்பனார் யார்? என்று கேட்டுவிடுவார்களோ என அஞ்சி விலகி இருந்தவர், சினிமா பார்ப்பதையே அறவே நிறுத்த முன்வந்தார். ஊரில் பிரபலமானார். "ஜில்லாவில் உங்கள் பெயர் தெரியாதவர் இல்லை'' என்று ஊரில் உள்ள பெரிய மனிதர் அவரிடம் சொல்லும் அளவுக்கு அவர் வாழ்க்கை மாறியது. டெல்லிக்கும், காஷ்மீருக்கும், வாஷிங்டனுக்கு அவர் சேவையும், பெயரும் எட்டின.

4. செயல் சிறப்படைய உழைப்பேன்: (Will Aim at perfection in work):

சர்க்கார் உத்தியோகத்தில் இருந்த என்ஜினியர். எந்த வேலை கொடுத்தாலும் சிறப்பாகச் (perfect) செய்ய முழுமுயற்சி எடுப்பார். எக்ஸிகியூடிவ் இன்ஜினியராக இருக்கும்போதே அவருடைய வேலையின் சிறப்பின் காரணமாக மாநிலத்தில் முதன்மை பெற்றார். அவர் புகழ் டெல்லிக்கும் எட்டியது. சர்க்கார் சம்பளம் 2000 ரூபாய் இருக்கும்பொழுது ரூ.15000 சம்பளத்திற்கு வெளிநாட்டில் வல்லுநராகப் (expert) போக வேண்டும் என அடுத்த மாநிலத் தலைமை என்ஜினியர் அவரை நேரே வந்து அழைத்தார். ஒரு கடமையில் சிறப்பை நாடி அதை அடைபவருக்கு, வாழ்க்கையின் உச்சகட்டச் சிறப்பும், புகழும் வர முடியும் என்பது உயர்மட்ட அனுபவம் உள்ளவர்களுக்குத் தெரியும். அத்தகைய அன்பர்களை அன்னை அரவணைத்துக்கொள்வார்.

5. முயன்றால் முடியாதது ஒன்றில்லை:

1952இல் எந்தக் கட்சிக்கும் சென்னை அசெம்பிளியில்

மெஜாரிட்டி இல்லை என்றபொழுது ராஜாஜியை முதன்மந்திரியாக்க மத்திய, மாநிலத் தலைவர்கள் முயன்று, முடியாது என்று கைவிட்டபின் ஈ. சுப்பிரமணியம், தான் முயல்வதாகச் சொல்லி, முயன்று வெற்றி பெற்றார். மத்திய சர்க்காரில் உணவு இலாகாவில் மந்திரி ஆனவர்களுடைய அரசியல் வாழ்வு முடிந்துவிட்டதென பெயர் பெற்றுவிட்டது 1964இல். லால்பகதூர் பிரதமரானபின் உணவு இலாகாவை ஒத்துக்கொள்ள எவரும் முன்வரவில்லை. சுப்ரமணியத்தை சாஸ்திரி கேட்டார். முயன்றால் முடியாதது ஒன்று இல்லை என்ற கொள்கையுடையவர் சுப்ரமணியம்; ஏற்றுக்கொண்டார்; முயன்றார்; வெற்றி மட்டும் கிடைக்கவில்லை; நாட்டின் உணவுப் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்க்கும் வகையில் பசுமைப் புரட்சியை ஆரம்பித்து வெற்றி கண்டார்.

6. ஒருவரால் முடியுமானால், என்னாலும் முடியும்:

இராமபுரம் கிராமத்தில் எவரும் போர்கிணறு (borewell) தோண்ட முன்வராதபோது இராமசாமி முன்வந்தார். அவரால் முடியும் என்றால், என்னாலும் முடியும் என்று அனைவரும் முன்வந்தனர். அதன் விளைவாகப் பயிரில் பலன் ரூ.200ருந்து ரூ.20,000 ஆயிற்று. மற்றவர் ஒருவரால் செய்யக்கூடிய ஒன்றை நாமும் முயன்று செய்யலாம். அதற்குப் பெரும்பலன் உண்டு.

7. எந்த விஷயத்திலும் நுணுக்கம், இரகஸ்யம் என்றுண்டு. அதைக் கண்டுபிடித்தபின் அந்த விஷயத்தில் வெற்றி நிச்சயம்:

5 வகுப்புப் படித்து தமிழாசிரியராக இருந்த ஒருவர் B.A. பட்டம் பெற 1950இல் பிரியப்பட்டார். விளைவு, அனைவரும் அவரைக் கேலி செய்தனர். முயற்சியைக் கைவிட்டுவிட்டார். அடுத்த ஆண்டு அவர் ஒரு இளைஞரைச் சந்தித்தார். தாம் கைவிட்ட எண்ணத்தை

அவரிடம் சொன்னார். மொழியியல் உள்ள நுணுக்கங்களை அறிந்தவர் இளைஞர். அந்த நுணுக்கங்களைப் புரிந்துகொண்டு B.A. பட்டத்திற்குரிய ஆங்கிலப் படிப்பை மேற்கொண்டால் அது வெற்றி பெறும் என விளக்கினார். ஒரு மொழியில் சில வாக்கிய அமைப்புகள் ( sentence structures) உண்டு. ஆங்கிலத்தில் அத்தகைய அமைப்புகள் 5, 6தான் இருக்கின்றன. அவற்றைப் புரிந்துகொண்டு தேவையான பயிற்சியை மேற்கொண்டால் ஆங்கிலம் எளிமையாகும் என்றார். தமிழாசிரியர் அதை ஏற்றுக்கொண்டார். நுட்பத்தை அறிந்து கொண்டார். மகிழ்ச்சி அடைந்தார். B.A.க்கு விண்ணப்பித்தார். பயிற்சியை மேற்கொள்ள மறுத்தார். 2 முறை தவறி மூன்றாம் முறையாக பட்டம் பெற்றார். பின்னர் B.A.யும் பெற்றார். B.T.யும் பெற்றார். தலைமையாசிரியரானார். விருதும் பெற்று ஓய்வு பெற்றார்.

படிப்பு, நோய், பிள்ளைகளை வளர்த்தல், தொழில், பணம், அரசியல், பொதுவாழ்வு, உயர்ந்த நன்மை, தாழ்ந்த தீமை, எவற்றிலும் ஓர் உட்கருத்தான நுட்பம் உண்டு. அனுபவத்தில் அதைத் தெரிந்து கொள்ளலாம். அறிவால் சீக்கிரத்தில் உணரலாம். வாழ்வில் பலன் அளிக்கக்கூடியவை அவை. அன்னை வழிபாட்டில் சிறப்பைக் கொணர்ந்து சேர்க்கும் திறன் அதற்குண்டு.

8. எதிர்மறையான கருத்திலும் உண்மையிருக்கிறது என்று ஏற்றுக்கொள்கிறேன்:

பகவான் ஸ்ரீ அரவிந்தர் தாம் எழுதிய பெரிய நூல்களை எல்லாம் 1914இல் ஆரம்பித்து, 1919, 20இல் எழுதி முடித்துவிட்டார். இதுவும் அவர் எழுத வேண்டுமென திட்டமிட்டதன்று. அன்னையும், அவருடைய கணவரும் ஸ்ரீ அரவிந்தரை முதலில் சந்தித்தபொழுது, "உங்களிடம் உள்ளது பெரிய பொக்கிஷம். அதை உலகுக்கு நீங்கள் எழுத்தின் மூலம் அளிக்க வேண்டும்'' எனக் கேட்டதன்பேரில் அந்த நூல்களை எழுதினார். அந்த எல்லா நூல்களையும் முறையாக வேதம்

எனக் கருதி பயின்று, அதன் சாரத்தைப் பூரணமாக உணர்ந்து, ஆன்ம ஞானத்தைப் பெற்றவர் ஒருவர் பகவானுடைய சிறிய நூலாகிய (Thoughts and Aphorisms) கருத்துகளும், பொன்மொழிகளும் என்ற கருத்துடைய தலைப்பில் உள்ளதைப் படித்தால், ஸ்ரீ அரவிந்தருடைய மூல நூல்களில் பல ஆயிரம் பக்கங்களில் உள்ளதை 540 வரிகளில் இங்கு கூறியிருக்கிறார் என்பது விளங்கும். இந்நூலை மட்டுமே பகவான் எழுத விரும்பினார்போலும். 1913இல் இதை எழுதியிருக்கிறார். மேலும், இவருடைய மூல நூல்களில் இல்லாத சில பெரிய கருத்துகளையும் இதில் கோடி காட்டியவாறு குறிப்பிடுகிறார். இந்நூலை எழுதி முடித்தபின் 7 வரி பின் சேர்க்கையாக உள்ளது. அதில் முதல் கருத்து, "நான் சொல்லியவை எல்லாம் உண்மையானாலும், இவற்றின் எதிர்மறையும் உண்மையே'' என்பது.

விவேகிகள் அறிந்த உண்மை இது. தத்துவரீதியாக இந்தக் கூற்றை ஆராய்ச்சி செய்வதை விட்டு, அன்பர் வழிபாடு, பிரச்சினைகளைத் தீர்த்தல் என்ற (context) நிலைகளில் மட்டுமே இதைப் பார்ப்போம்.

இங்கிலாந்தில் எல்லாத் துறைகளுக்கும் சங்கம் இருப்பதுண்டு. மது அருந்துபவர்களுக்குச் சங்கம், மது அருந்தாதவர்களுக்குச் சங்கம். (Teetotaller) ஓர் ஆண்டு விழாவை மது அருந்தாதவர்கள் சங்கம் கொண்டாடியது. பலர் மதுவின் கொடுமையைப் பற்றிப் பிரசங்கம் செய்தனர். முடிவில் தலைவர் சுருக்கமாக உறையாற்றினார்: "என் உடல் ஆரோக்கியத்தைப் பாருங்கள். எனக்கு வயது 65. இந்தத் திடகாத்திரமான ஆரோக்கியத்திற்குக் காரணம் நான் அதைத் தொட்டதேயில்லை'' என்றார். பலத்த கரகோஷம். ஒருவர் எழுந்தார். தமக்குப் பேச அனுமதி கேட்டார். செழிப்பான உடல்நலம் பெற்ற அவருக்கு வயது 70. மேடைக்கு வந்தார். "என் செழிப்பான உடல் நலத்தைப் பாருங்கள். நான் மதுவைத் தவிர வேறு எதையும் தொட்டது இல்லை'' என்றார். ஓர் உண்மைக்கு எதிரான கருத்தும் உண்மையாக

இருக்கும். எல்லாத் துறைகளிலும் இதற்கு உதாரணம் கொடுக்கலாம். நம் பிரச்சினை வேறு. நம் மனத்திலுள்ள கருத்துக்கு எதிர்மறையான கருத்தின் உண்மையை ஏற்றுக்கொண்டவுடன் மனம் பரந்து விசாலம் அடைகிறது. விசால புத்தி ஏற்பட்டால் தெளிவு பெருகும். பிரச்சினைகளை ஏற்படுத்திய சின்ன புத்தி அழிந்து, பிரச்சினைகள் அழியும். மனம் பக்குவம் அடையும். வழிபாட்டுக்குரிய திறனைப் பல மடங்கு அதிகரிக்கும். பிரச்சினைகளை அழிக்கும் திறன் வலுவடையும். இந்த முறையை நடைமுறையில் எப்படிக் கையாள்வது? இதனால் வழிபாட்டை வகுத்துக்கொள்வது எப்படி? பிரச்சினைகளை இதனால் எங்ஙனம் விலக்கலாம்?

நாத்திகர்களாக வாழ்க்கையைத் தொடங்கி, கடைசிக் காலத்தில் திருவாசகமும் கையுமாக உள்ளவர்கள் உண்டு. பூஜை, ஸ்தோத்திரம், அனுஷ்டானத்தில் அதீத படிப்போடு இளமையில் இருந்தவர்கள், ஓய்வு பெற்றபின் சந்தியாவந்தனம்கூட செய்யாமல் இருப்பதுண்டு. மறைமுகமாக மேற்கூறிய உண்மையை ஓரளவுக்குச் சுட்டிக்காட்டும் உதாரணங்கள் இவை.

ஒரு சர்க்கார் உத்தியோகஸ்தர். வேலையை விட்டுவிட்டு, தொழிலை ஆரம்பித்தார். முதல் ஆண்டு ரூ.80,000 விற்பனையாயிற்று. அவருடைய தகப்பனார் ரூ.100 பென்ஷனுடன் ஓய்வு பெற்றவர். அவர்கள் குடும்பத்திலும், ஊரிலும் தகப்பனாருக்கு ஓர் உயர்ந்த அந்தஸ்து உண்டு. வீட்டிலும் அளவுகடந்த மரியாதையுண்டு. தகப்பனார் சொல்லை ஊரில் அனைவரும் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள். வீட்டில் அவருடைய சொல்லே வேதவாக்கு. ரூ.900 வருவாய் வரும் சர்க்கார் வேலையை விட்டு, சொந்தமாகத் தொழில் நடத்தினார். முதல் ஆண்டு ரூ.80,000 விற்பனையாகி, ரூ.25,000 இலாபம் நின்றது. லைசென்ஸ் எடுக்க, டெண்டர் போட, புது ஆள் வைக்க, எல்லாக் காரியங்களுக்கும் தகப்பனார் சொல்லே கடைசி. அடுத்த ஆண்டு வியாபாரம் பெருகியது. சில ஆண்டுகளில் வியாபாரம் 20 இலட்சத்தைத் தாண்டியது. தகப்பனார் யோசனைக்கும்,

வியாபார நிர்ப்பந்தங்களுக்கும் ஒத்துவரவில்லை. ஆயிரம் ரூபாய் தகப்பனாருக்குப் பெரிய தொகை. ஒன்றரை இலட்சம் டெண்டர் என்றால் தகப்பனாருக்கு அதிர்ச்சியாயிருக்கிறது. மகனுக்கு மனதில் போராட்டம். தொழிலை விட்டாலும் விட்டுவிடுவாரேயொழிய, தகப்பனார் அபிப்பிராயத்தை எதிர்த்துப் போக முடியவில்லை. மனப் போராட்டத்தில் சில ஆண்டுகள் கழிந்தன.

"உங்கள் தகப்பனாருக்கு மரியாதை செலுத்துவது சரி. அவருடைய எண்ணங்களை இன்றையத் தொழில் அமுல் நடத்த முடியாது'' என்று எல்லோரும் சொன்னார்கள். இவருக்கு என்ன நல்ல யோசனை சொல்லலாம் என அவர் நண்பர்கள் என்னைக் கேட்டார்கள். அவர்களிடம் நான், "தகப்பனார் சொல்வது சரி. அதற்கு எதிரானதும் சரி. மகன் எதிர்மறையான உண்மையை ஏற்றுக் கொண்டால் தொழில் வளரும்'' என்றேன். இந்தக் கருத்தை அவரால் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ள முடிந்தது. அதே சமயம் அவர் தகப்பனார், "எனக்கு ரூ.200 என்றால் பெரிய தொகை. நீ 2 இலட்சம், 3 இலட்சம் என்று பேசுகிறாய். எனக்குப் பயமாயிருக்கிறது. இனி, தொழிலில் நீ அனுபவம் உடையவனாகிவிட்டாய். நீ சொல்வது நன்றாக இருக்கும். என்னைக் கேட்காதே'' என்றார். மகனுக்கு மனப்போராட்டம் விலகியது. சில ஆண்டுகளில் வருஷச் செலாவணி 60 இலட்சமாயிற்று.

எந்தப் பிரச்சினையானாலும், அதைத் தீர்க்க வழியில்லா விட்டால் நம் கருத்துக்கு எதிரான கருத்தில் உண்மையுண்டா எனச் சோதனை செய்யும் மனப்பான்மையுள்ளவர்களுக்கு வழி பிறக்கும்.

9. முயற்சி செய்யாமல் அழிவதைவிட, முயற்சி செய்து தோல்வியடைந்தால் சிறப்பு:

Harper and Raw என்பது அமெரிக்காவில் பெரிய புத்தக வெளியீட்டுக் கம்பெனி. அவர்கள் நூற்றுக்கணக்கான புத்தகங்களை வெளியிடுகிறார்கள். பல்கலைக்கழகம், ஆராய்ச்சி நிறுவனங்களுக்குப்

போய் அங்குள்ள (Ph.d thesis) டாக்டர் படிப்பு ரிப்போர்ட், சர்வே ரிப்போர்ட் (survey report) போன்றவற்றைப் பரிசீலனை செய்து, சிலவற்றை வெளியிடுவது ஒரு பழக்கம். இம்மாதிரி வெளியீடுகள் 10, 12 முதல் ஆயிரம் பிரதிகள் வரைதான் விற்கும். ஒரு சமயம் மக்கின்ஸி கம்பெனியின் ரிப்போர்ட் ஒன்றைப் படித்து, அதை வெளியிட வேண்டி எழுதியவராகிய பீட்டர்ஸ் என்பவருக்குக் கடிதம் எழுதினார்கள். பீட்டர்ஸின் அந்த ரிப்போர்ட் கம்பெனியிலேயே எல்லோரும் ஒத்துக்கொண்ட ஒன்றன்று. "நீங்கள் வெளியிடுவது பற்றி எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆயிரம் பிரதிகூட விற்காது என்பதே என் அபிப்பிராயம்'' என பீட்டர்ஸ் பதில் எழுதினார். கம்பெனியார் 10 ஆயிரம் பிரதி விற்கும் என்று கருதி வெளியிட்டார்கள். 3 ஆண்டுகளில் அந்தப் புத்தகம் 50 இலட்சம் பிரதிகள் விற்பனை ஆயின. தாம் எழுதிய ரிப்போர்ட்டின் திறன் தமக்கே தெரியவில்லை. இது சமீப காலத்து நிகழ்ச்சி.

ஒரு கெஜட் பதவி உத்தியோகஸ்தரை அவர்கள் இலாகா டைரக்டர் 1965இல் (oust) வேலை நீக்கம் செய்தார். எல்லோரும் அவரை டைரக்டருக்கு மேலே செக்ரடரிக்கு அப்பீல் செய்யச் சொன்னார்கள். "எங்கள் இலாகாவில் கடந்த 20 ஆண்டுகளாக டிபார்ட்மெண்டில் நினைவு இருக்கும்வரை டைரக்டருக்கு எதிராக செக்ரடரிக்குச் செய்த அப்பீல் மனு ஒன்றுகூட பலிக்கவில்லை. எதற்கு நான் அப்பீல் செய்வது'' என்றார். கடைசியில் ஒருவாறாக அப்பீல் செய்தார். 3ஆம் நாள் மீண்டும் வேலையில் அமர்த்த செக்ரடரி ஆர்டர் போட்டுவிட்டார். "டைரக்டர் செய்தது தவறு. அவரைத் தண்டிக்க வேண்டும். அப்பீல் மனு வந்தால் உடனே ஆர்டர் போடலாம்'' என செக்ரடரி காத்துக்கொண்டிருந்ததாகப் பின்னர் தெரியவந்தது.

நம் நிலையில் முழு நியாயம் இருந்தாலும், பெரிய உண்மை இருந்தாலும், சத்தியம், நேர்மையிருந்தாலும், பல சந்தர்ப்பங்களில் நாம் வாயைத் திறக்கவே முடியாது. காலம் நடைமுறைக்கே. பணம் பேசும். பெரிய இடம் நிற்கும். ஏழை சொல் அம்பலம் ஏறாது.

செல்வாக்கின் எதிரே நின்று போராடச் சக்தியில்லை என்ற நிலைமையிலும்கூட கேட்காமல் அழிவதைவிட, கேட்டுவிட்டே தோல்வி அடையலாம் என்ற மனநிலைக்கு வாழ்க்கையில் சில சமயங்களில் பலன் கிடைப்பதுண்டு. அன்னையிடம் அந்த மனநிலைக்குத் தவறாமல் நூற்றுக்கு நூறு பலன் கிடைக்கும். தனக்கென்று இருந்த அத்தை மகளுக்கு I.A.S. மாப்பிள்ளை வந்தபின், இந்த B.A. கிளார்க்குக்குப் பேச்சேது என்பது ஒரு சந்தர்ப்பம். கோயங்காவே M.P. சீட்டுக்கு நின்று விமானம் மூலம் விளம்பரம் செய்யும்போது, கோர்ட்டுக்குப் போகாத வக்கீலுக்கு ஜெயிக்க சந்தர்ப்பம் ஏது? அட்வான்ஸ் இல்லாமல் ரூ.50,000த்திற்குக் கிரயப் பத்திரம் எழுதியாயிற்று. 4 மாத காலாவதி ஆகப்போகிறது. கிரயத்துக்கான ரொக்கம் கிடைக்கவில்லை. ரொக்கம் கொடுக்காமல் கிரயப் பத்திரத்தை ரிஜிஸ்டர் செய்து கொடு என்று எப்படி வாய் வந்து கேட்பது. இது நடக்காது. நடக்கவே நடக்காது என்று பகுத்தறிவுக்கும், நாட்டு வழக்கத்திற்கும் பூரணமாக, நிதர்சனமாகத் தெரிந்தாலும், நம்மிடம் உண்மையிருந்தால், மனதில் சத்தியம் இருந்தால், சந்தர்ப்பத்தின் நிலையை ஒதுக்கிவைத்துவிட்டு முயன்று பார்ப்பதில் தவறில்லை. அன்னை பக்தர்களுக்கு அது நல்ல முயற்சி. தவறாது பலிக்கும்.

********book | by Dr. Radut