Skip to Content

2. அமுத ஊற்றெழும் அழைப்பு

பகவான் திருநாமத்தை ஸ்மரணை செய்வது நம் பழக்கம். பூரணயோகத்தில் அன்னையை அழைத்து மனதில் பிரதிஷ்டை செய்வது அடிப்படையான யோகப்பயிற்சி. பக்திப்பெருக்கால் ஒரு நேரம் தானே ஆரம்பித்த அழைப்பு, சில சமயம் நீண்ட நேரம் தொடர்வதுண்டு. ஆர்வத்தால் ஆரம்பித்த அழைப்பு எதிர்பாராத நல்ல சில பலன்களையும் தருவதுண்டு. பிரச்சினைகள் தீருவது, புதிய திறமைகள் ஏற்படுவது, இடையறாத அன்னை நினைவு நிலைப்பது போன்றவையும் நிகழ்வதுண்டு. க்ஷண நேரம் அன்னையுடன் இரண்டறக் கலக்கும் பேரின்பச் சித்தியும் கிடைப்பதுண்டு.

குடும்பத்தினர் அனைவரும் இந்தப் பயிற்சியை ஏற்றுக் கொண்டு இடைவிடாது தொடர்ந்து ஒரு வார காலம் அன்னையைத் தங்கள் ஜீவனுள் அழைத்தால், அக வாழ்வின் மலர்ச்சி எத்தகையதாக இருக்கும், அதன் பிரதிபலிப்பாக புற வாழ்வின் பொலிவுகள் எப்படி மிளிரும் என்பதை விளக்கவேண்டியே இக்கட்டுரையைத் தொடங்குகிறேன்.

பூரணயோகத்திற்கு அஸ்திவாரமாக அமைகிறது என்பதால் இதற்கு - அன்னையை நம் ஜீவனுள் அழைப்பதற்குப் - பெரிய சக்தியுண்டு என்று தெரிகிறது. ஆர்வத்தைச் சொல்லால் ஒலிப்பதே அழைப்பு எனப்படும். பக்தியின் திரட்சியான சக்தி ஜீவனின் குரலாக எழுந்து அன்னையின் சக்தியை நம்முள் சேகரம் செய்ய இந்த அழைப்பு உதவுகிறது. ஆர்வம் தீவிரமாகி, செறிவு பெற்றால் அதை ஒலியாக எழுப்ப முடிவதில்லை. நிறைவு பெற்ற பக்தியினால், தொண்டை

அடைத்துக்கொண்டு பேச முடியாமல் திணறும். ஆர்வம் அதன் உச்சக்கட்டத்திற்குச் சென்றவுடன் சொல்லாக எழுந்து, குரலாக ஒலித்து, அக்னிப் பிழம்பாக மாறி, வானுயர ஓங்கி, அருளின் அரண்மனைக் கதவைத் தட்டித் திறக்கச் சொல்லும். இந்த உச்சக்கட்டத்தில் நெஞ்சம் சொல்லை இழந்த நிலையிலும் ஒரு குரலை ஆழத்திருந்து எழுப்ப முயன்றால், குரல் நெஞ்சத்தை விட்டு அகன்று ஜீவனின் ஆழத்தில் சென்று, அங்கிருந்து கிளம்பி, மணியோசையாக ஒக்கும். உடன் மூலைமுடுக்குகளிலெல்லாம் இருந்து குரல் எழுவதை நாம் உணருவோம். ஆழம் அதிகம் ஆனதால் குரலை எழுப்பும் ஜீவனின் பரப்பு அகன்று மனிதனை முழுவதுமாக ஆட்கொள்வதைக் காணலாம். இந்த நிலைக்கு வந்த பக்தனுக்குச் சொர்க்கம் பெரியதன்று. ஏனென்றால் தன்னுள் சொர்க்கத்தின் சுகத்தைப் பெரிதும் உணர்கிறான். அழைப்பின் பலனாக அடைந்த ஆன்மீகப் பேறு, சித்தி பெற்றவரும் பெருமைப்படும் நிலைகள் என அறிந்து மகிழும் நிலையில் மற்றோர் எண்ணமும் தோன்றுவதுண்டு. அழைப்பின் பெருமையை அடைந்தவரே எனினும், அன்னையிலிருந்து வேறுபட்டு இருப்பதாலேயே நாம் "அழைக்கும்'' நிலையில் உள்ளோம் எனப் புரியும்பொழுது ஆத்மாவுக்கு ஏற்படுவது வேதனையேயாகும். இரண்டறக் கலந்த நிலையிலிருந்தால் அழைப்பு தேவையிருக்காது என்பது இப்பொழுது ஆத்மாவுக்குப் புரிகிறது.

அழைப்பின் அடிப்படை ஒரு புனித ரகஸ்யம். அந்த ரகஸ்யத்தின் பலனையடைவதே நம் குறிக்கோள். சிருஷ்டியிருந்து இன்று வரை மனிதன் என்று நாம் குறிப்பிடுவதும், இறைவன் என்று சொல்வதும் ஆன்மீக அடிப்படையில் ஒன்றே. மனிதனும், இறைவனும் ஒன்றே. எது இறைவனாக இருக்கிறதோ, அதுவேதான் மனிதனாகவும் இருக்கின்றது. சொல்லப்போனால் கல்லும், மண்ணும், மனிதனும், இறைவனும் அடிப்படையில் ஒன்று என்பதே ஆன்மீக இரகஸ்யம். எனவே தாயை விட்டுப் பிரிந்த குழந்தை, தாயிடம் செல்ல எழுப்பும் குரலே ஜீவன் அன்னையை அழைப்பது. பூர்வஜென்மத்தை மறந்துவிட்ட

ஜீவன், அதையுணர்ந்து இப்பொழுது மீண்டும் தன் பிறப்பிடத்தை அடைய எழுப்பும் ஆர்வக்கனலே அழைப்பு. உடருந்து விடுபட்ட ஜீவன் எழுப்பும் குரல் வலுவடையும்பொழுது (Origin) ஆதியிலிருந்து வரும் பதில் ஜீவனுக்குப் பிறப்பிலிருந்து மோட்சம் அளித்து, தன்னுள் ஏற்றுக் கொள்ளும். ஜீவன் உடலுடன் பிணைந்திருப்பதால் ஜீவனுடைய குரல் வலுவடையும்பொழுது, ஆர்வம் உடல் எங்கும் பரவும். ஜீவன் எழுப்பும் ஆர்வக்குரல் மோட்சம் அளிப்பதற்குப் பதிலாக, மனிதனை விழிப்புறச் செய்யும். அவனது உடலையும் விழிப்புறச் செய்யும். ஆர்வக்குரல் பலத்த ஒலியுடன் ஆர்வக்கனலானால், உடலின் நுணுக்கமான பகுதிகளான அணுக்களும் விழிப்புற்று தங்கள் குரலையும் சேர்த்து எழுப்பும். பரந்து விரிந்த குரல் நுணுக்கமான மூலைகளிலும் பரவியபின் ஜீவன் விழிப்புற்று, தன் ஜடத்தன்மையை இழந்து, சிருஷ்டியின் ஆரம்பத்தில் தனக்குரிய ஆன்மீகப் பொலிவு பெற்று (Origin) ஆதியுடன் இரண்டறக் கலக்கும். யோகத்தின் இலட்சியமான திருவுருமாற்றத்தையடைய அவசியமான முதற் கட்டம் இரண்டறக் கலத்தல்.

ஜீவனின் எந்த ஆழத்திருந்து குரல் எழுகிறது, அன்னையின் எந்தச் சிகரத்தை நோக்கி அழைப்பு அமைகிறது, அதைப் பூர்த்தி செய்ய பக்தன் கையாளும் முறைகள் எவை என்பவற்றைப் பொருத்தது முதலில் பெறும் திருவுருமாற்றம் ( transformation) என்ற பூரணயோகச் சித்தி.

நாமஸ்மரணை முதற்கட்டம். காணாமற்போன பொருளைப் பெறவோ, கலங்கிய மனதைத் தெளிவுபடுத்தவோ அது உதவும். வாயால் எழுப்பும் ஒலி அது. அழைப்பு ஜீவனின் ஆர்வக்குரல். பெருந்திறன் படைத்தது அழைப்பு. குரல் எழுப்பும் ஜீவனுக்குப் பல நிலைகள் இருப்பதைப்போல், அழைப்பை ஏற்றுக்கொள்ளும் அன்னைக்கும் ஆயிரம் நிலைகள் உண்டு. இறைவன் என்பது முடிவான நிலையானால், அன்னை என்பது பூரணமான மற்றொரு நிலை (Supramental Mahasakthi). ஈஸ்வரி, லக்ஷ்மி, சரஸ்வதி,

காளி என்ற நிலைகள் அன்னையிடம் மகேஸ்வரி, மஹாகாளி, மஹா லக்ஷ்மி, மஹாசரஸ்வதி என, அன்னையின் அம்சங்களாக இருக்கின்றன. அன்னையைச் சுற்றி அவர் அறியாமலேயே செயல்படும் அற்புதச் சூழல் (atmosphere) பக்தனின் குரல் கேட்டு அவனது பிரச்சினைகளுக்குப் பதில் அனுப்பும். உதாரணமாக, பக்தன் மஹாசரஸ்வதியை அழைக்கின்றான் என்று கொள்வோம். அவன் ஓர் ஓவியன் என்போம். அவனது அழைப்பு அவனை அன்னையுடன் இரண்டறக் கலந்த பேரின்ப நிலைக்கு அழைத்துச் செல்லாது. அன்னையின் ஒளி ஓவியமணியாக அவனை மாற்றும் வண்ணம் அவனை அடைந்து, அவனுக்கு உலகப் புகழைப் பெற்றுத் தரும். விஸ்வாசம், பெருந்தன்மை போன்ற சக்திகள் பன்னிரண்டு அன்னையிடம் உறைகின்றன. அவற்றில் ஒன்றை விளித்து அனுப்பும் அழைப்பு அவனுக்கு அப்பெருங்குணத்தை நிறைந்து வழியும் அளவுக்கு அளிக்கும். பொதுவாக அழைப்பை ஏற்றுக்கொண்டு பயிலும் அன்பர்கள் தானிருக்கும் நிலையை உணர்ந்தவராக இருப்பதில்லை. எதை அழைக்கின்றோம் எனவும் அறிந்திருப்பதில்லை. அழைத்தால் பலன் இருப்பதுண்டு. அன்றுள்ள மனநிலைக்கேற்ற, ஜீவநிலைக்கேற்ப பலன் அமையும். குறிப்பிட்ட நேரங்களில் பக்தன் தன்னை உணர்ந்து, அன்னையை அறிந்து அழைப்பதும் உண்டு. பிறந்த நாளன்று அன்னை மீது ஆர்வம் பெருக பக்தியால் சிறந்து உணர்வாய் வழிந்த நிலையில் அழைப்பை மேற்கொண்டால் அவனது பிராணன் அல்லது (vital) உணர்வில் இருந்து குரல் எழும். நெகிழ்ந்த இனிய தெய்வீக அன்பு அன்னையிடமிருந்து (Divine Love) அவனை வந்து பிரவாகமாக அடையும். ஒருவர் ஒரு புத்தகம் எழுதலாம் அல்லது புதியதாக கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ளலாம் அல்லது அரசியல் பதவியை நாடலாம். அந்த நிலையில் அன்னையை அழைத்தால், அழைப்பு மஹேஸ்வரியின் காதில் விழும். எழுதும் புத்தகம் ஆன்மீக மெருகு பெறும். மஹாசரஸ்வதியின் காதில் விழுந்து கம்ப்யூட்டரை எளிதில் சிறப்புறக் கற்றுக்கொள்ளலாம். மஹாகாளி குரலைக் கேட்டு அரசியலில் அவர் அநேக வெற்றி வாகைகளைச் சூடலாம்.

எந்த நிலையிலிருந்தும் ஜீவாத்மா தன் குரலை எழுப்பலாம்; அன்னையின் எந்தப் பெருமையையும் நோக்கி அழைக்கலாம் என்பது உண்மை. ஒரு வார காலம் குடும்பத்தார் அனைவரும் சேர்ந்து இந்த யோகச் சிறப்புள்ள "அன்னையை அழைத்தல்'' என்பதை மேற்கொள்ளும்போது, தன்னுள் பூரண விழிப்புள்ள பகுதியிலிருந்து அழைப்பதே சிறந்தது. தானறிந்த அன்னையின் பெருமையையே கூப்பிடுதல் உசிதம். நாம் எந்த நிலையில் இருக்கின்றோம் என்ற கேள்வி எழலாம்.

ஒவ்வொரு விஷயத்தையும் அன்னையின் நோக்கில் புரிந்து கொள்ள முயல்பவர், அவரது புத்தியில் விழிப்பாக இருக்கின்றார் என்றாகும். நாம் உணர்வில் விழிப்பாக இருக்கின்றோமா என எப்படி அறிவது? அடுத்த முறை பேசும்பொழுதோ, சாப்பிடும் பொழுதோ நம்மையே ஊன்றிக் கவனித்தால் பேச்சு எழுமுன் அன்னை நினைவு தானாக வந்தால், சாப்பாட்டுக்கு முன் அன்னை நினைவு எழுந்தால் நாம் உணர்ச்சியில் விழிப்புடனிருக்கின்றோம் என்று பொருள். பேனாவைத் திறப்பது, கடிகாரத்தை நிமிர்ந்து பார்ப்பது போன்ற சிறு சிறு செயல்களுக்கு முன்னும் அன்னை நினைவு வந்தால் உடல் விழிப்புப் பெற்றுள்ளது என்று தெரிகிறது. அன்னையை வரமளிக்கும் தெய்வமாக அறிந்தவர் சிலர். தெளிந்த அறிவைத் தருபவர் அன்னை என்பவருண்டு. மௌனத்தின் உறைவிடமாக அறிபவரும் உண்டு. வெற்றி தரும் அன்னையாகக் கொள்வோர் சிலர். தெளிவை உணர்ந்தவர் அன்னையின் மஹேஸ்வரி அம்சத்தை அறிந்தவர். வெற்றி மஹாகாளியினுடையது. வரம் அன்னையின் அற்புதப் புறச் சூழலிலிருந்து உற்பத்தியாவது. மௌனம் அன்னையிடமிருந்தே எழுவது.

தன் நிலைமையை உணர்ந்து, அன்னையின் நிலையை அறிந்து அழைப்பை மேற்கொண்டாயிற்று. இனி எழும் குரல் எளிதில் புறப்பட்டு, தெளிவாக உயர்ந்து, முறையாக அன்னையை அடைகிறதா எனப் பார்க்க வேண்டும். ஒரு வார காலத்தைக் குறிப்பிட்டுப் பயிற்சியை

ஆரம்பிக்கு முன் இக்குரலை எழுப்பி, அதன் யாத்திரையைத் தொடர்ந்து பின்சென்று அழைப்பின் தரம், திறம் எத்தன்மையானது எனத் தெளிய வேண்டும். எளிமையான எழுச்சி, நிறைந்த நிலை, தொடர்ந்த யாத்திரை, முழுமையான முடிவு என அழைப்பின் போக்கு அமைந்திருந்தால், அழைப்பு இலக்கணத்திற்கு உரிய முறையில் அமைந்திருப்பதாகும். அப்படி இல்லை என்றால், அழைப்பின் அளவைக் குறைத்து, அதற்குப் பூரணத் தெளிவைத் தருவது அவசியம். வேறு எண்ணங்களோ, நினைவுகளோ அழைப்புக்கு இடையூறாக இருக்கலாம். அல்லது மனம் நிலையிழந்து அலைமோதும். இப்படிப்பட்ட நிலையிருந்தால் மனத்தைத் தெளிவுபடுத்தி ஒரு நிலையில் இருக்கச் செய்வது முக்கியம்.

எண்ணம் குறுக்கிடுவது என்போம். நமக்கு நாமே "அன்னை நினைவு எந்த எண்ணத்தையும் விடச் சிறந்தது'' என்று சொல்லிக் கொண்டால், மனம் அதை ஏற்றுக்கொள்ளும். ஒவ்வோர் எண்ணத்தையும் புறக்கணித்து அன்னையை நினைவுகூர்ந்தால் சிறிது நேரத்தில் மனம் நிலைப்பட்டுவிடும். சப்தம், காட்சிகள், வாசனைகள் மனத்தைப் புறத்தே ஈர்க்கலாம். அப்படியிருந்தால் அன்னையின் ஒளியை நம் (நாதம், பிராணன்) உணர்வு எனுமிடத்தில் கற்பனை செய்தால் அவ்வொளியை உணர்வு ஏற்று, குறுக்கிடும் ஒலியை மனத்திலிருந்து விலக்கும்.

அலைபாயும் மனம் அழைப்புக்கு முதல் எதிரி. முதலில் அலையை அழித்து மனத்தை நிலைப்படுத்தவேண்டியது அவசியம். இது எளிதன்று. 100க்கு 100 பேர்களுக்குத் தோல்வியை அளிக்கும் மனநிலை இது. இதற்கும் ஒரு வழியுண்டு. நாம் அழைப்புக்குரிய இடத்தை நம் ஜீவனிலும், அன்னையின் சிகரத்தை ஆன்மாவிலும் குறிப்பிட்டு அழைப்பை ஆரம்பித்திருக்கிறோம். இந்த இடைவெளியில் அன்னையின் ஒளியைக் கற்பனை செய்து அம்முழுப் பரப்பையும் ஒளியால் நிரப்ப முயன்றால், ஒளியின் வருகை மோதும் அலையை அழித்து அமைதியை நிலைநாட்டும்.

எந்த அளவுக்கு ஒளி பரவுகிறதோ, அதுவே நமக்கு அமைந்த திறன். நாள் செல்லச் செல்ல ஒளியின் அளவை அதிகரிக்க முயலலாம். இத்துடன் ஒரு வார அழைப்பை ஆரம்பிக்க வேண்டும்.

ஆரம்பித்தவுடன் தன் பாதை சரியா எனத் தெரிவது அவசியம். குறுக்கீடுகளின்றி, மனம் குவிந்து, குரல் நிதானமாக எழுந்து அதன் இலக்கைச் சென்றடைகிறதென்றால் அழைப்பின் அமைப்பு சரியானதாகும். அன்னையின் பெயரை விரைந்து சொல்ல முயலக்கூடாது. ஒரு முறை அழைத்தவுடன் பொறுமையான என்ன நடக்கிறது என்று கவனித்தால், அமைதி, சாந்தம், சந்தோஷம் பொங்கி எழுந்து உடல் முழுவதும் பரவுவது தெரியும். முதல் அலை முழுவதும் பரவி அடங்கும்வரை நிதானமாக இருத்தல் நன்று. பின்னர் அடுத்த முறை அழைக்கலாம். அழைப்பும், அதைத் தொடர்ந்து அமைதியின் அலையும் இருப்பதும் தெரியும். பின்னர் அமைதி பொங்கி எழுவதும், அழைப்பும் இணைந்து வருவதும் தெரியும். அழைப்பால், அமைதி அலை எழுவது ஒரு முறை. இரண்டும் பிணைந்து வருவது மற்றொரு வகை. அழைப்பின்றி அமைதி அலை அலையாக எழுவது வேறொரு நிலை. இந்நிலையில் தொடர்ந்து அழைத்தல் சிறந்தது. கொஞ்சம் கொஞ்சமாக ஒரு நாள் முழுவதும் அழைக்க முயன்று, பின்னர் ஒரு நாளை ஒரு வாரமாக ஆக்கவேண்டும்.

இந்த அழைப்புக்கு நம்மைத் தயார் செய்துகொள்ளும் பொழுதே நம்மைச் சுற்றியுள்ள நம்முலகம் மெதுவாக நமக்குக் கட்டுப்பட்டு அடங்குவதைக் காணலாம். நமக்குச் சிறியவர்கள்கூட ஏற்றுக்கொள்ள மறுக்கும் நம் கருத்துகளை இப்பொழுது, நமக்குப் பெரியவர்கள்கூட ஏற்றுக்கொள்வதைக் காணலாம். நம் சொல்லுக்குக் கட்டுப்படாதவர்- கள் எளிதில் கட்டுப்படுவது தெரியும். எந்த வேலைகள் கூடிவரவில்லை என்பது நமக்குத் தெரியுமோ, அவை இப்பொழுது பூரணமடையும். அதாவது நம் மனமும், வாழ்வும், உடலும் திறனடைந்து உயர்வதைக் காண்போம்.

ஆன்மீக நிலையிலும் மாற்றம் தெரியும். ஒரே நிமிஷமானாலும் மௌனம் மனத்தைத் தேடி வரும். ஒரு க்ஷணமானாலும் நெஞ்சம் சந்தோஷத்தால் நிறைந்து பூரணம் பெறும். படபடத்த உடல் கொஞ்ச நேரம் அமைதியுறும். வீட்டிலும், வேலை செய்யுமிடத்திலும் (disharmony) பிணக்கு ஒழியும். ஒரு சமயம் தலையை நீட்டினாலும் சிறிது நேரத்தில் மறைந்துவிடும்.

நாமஜெபம் என்பது வேறு. அழைப்பு என இங்கு குறிப்பிடுவது அதனின்று முற்றிலும் வேறுபட்ட ஒன்று. ஜெபம் வாயால் எழுப்பும் ஒலி வடிவம். அழைப்பு ஜீவன் முழுவதும் நிறைந்தெழுந்த ஆர்வக் குரல். அதன் திறன் மிக அதிகம். வாயால் ஜெபிப்பதை ஒலி என்கிறோம். மனத்தால் நிசப்தமாகச் செய்யும் ஜெபம் மனத்தின் உச்சரிப்பாகும். மனம் முழுவதும் அழைப்பில் கலந்து எழுப்பும் ஒலி, நிசப்தமான நிறைவு பெற்றதாகும். அதே போல் உணர்வு ஒலிக்கும் நிலையைக் கடந்து நின்றால் அதை ஆர்வம் என்போம். அதையே முழு நெஞ்சும் ஏற்று நிறைகுடமானால் ஆர்வம் அமைதியுற்ற தீவிரமாகும். இந்த நிலையை நாம் தன்னிலை இழந்த பரவசம் என்றறிவோம்.

உடலும் அழைக்கும். அணுவும் அழைப்பில் கலந்து கொள்ளும். அழைப்பு நம்மை ஊடுருவி உடலையும், அவற்றின் அணுவையும் அடைந்து, அங்கிருந்து "அன்னை'' என்ற ஓசையை எழுப்பினால் அவ்வொலி தெளிவுற நம் காதில் விழும். இங்கும் அழைப்பு உடல் முழுவதும் பரவினால் ஒலி அடங்கும். உடல் அமைதியால் பொங்கி விம்மி எழும். கடைசி கட்டம் இதற்கும் அடுத்தது. உடல், மனம், ஆவி அனைத்தும் ஆன்மாவுடன் சேர்ந்து ஜீவன் எனப்படுகிறது. ஜீவன் முழுமையாக அழைப்பை ஏற்றுக் கொள்வதும் உண்டு. அழைப்பின் அந்த நிலைக்கும் பல கட்டங்கள் உண்டு.

இராம நாம ஜெபம், கிருஷ்ண நாம ஜெபம் செய்வதும், நமசிவாய என்று உச்சரிப்பதும் நம் பழக்கம். எந்தத் தெய்வத்தை அழைக்கிறோமோ

அந்தத் தெய்வத்தின் சக்தி நம்முள் வந்து செயல்படுகிறது. இராம நாமம் சத்துவ குணத்தையும், கிருஷ்ண ஜெபம் தெய்வ சக்தியையும் கொண்டு வருகின்றன. அன்னையை அழைத்தால் தெய்வ லோகத்திற்கும், சச்சிதானந்தத்திற்கும் இடையேயுள்ள (Supramental) சத்தியலோக சக்தி - Mother's Force- அன்னையின் சக்தியை நம்முள் கொணர்ந்து செயல்படுகிறது. அழைப்பின் திறம், முடிவில் நாம் பெறும் யோகப் பலனை நிர்ணயிக்கின்றது. ஜீவன் முழுவதும் அன்னையை அழைத்தால், ஜீவன் அன்னையாகத் திருவுருமாற்றம் அடையும் வாய்ப்பைப் பெறும். திருவுருமாற்றம் என்பதன் மூன்று நிலைகளைப் பகவான் குறிப்பிட்டு, அவை 1. சைத்தியப்புருஷன், 2. ஆன்மா, 3. சத்தியஜீவன் ( Supramental being) என விளக்குகின்றார். முதல் நிலையில் சைத்தியப்புருஷனாகவும், இரண்டாம் நிலையில் ஆன்மாவாகவும், கடைசி நிலையில் சத்தியஜீவனாகவும் மனிதன் திருவுருமாற்றம் அடைகிறான். அன்னை என்பது பல நிலைகளில் உள்ளது என்கிறோம். (Mother Nature) "இயற்கை அன்னையைச் சந்தித்தேன்'' என அன்னை கூறுகிறார். உடல், உணர்வு, புத்தி, தெய்வம், சத்தியம் என்ற ஒவ்வோர் நிலைக்கும் உரிய (Mother Force) அன்னை வடிவம் உண்டு. நம்முடைய முழு ஜீவனும் அன்னையை அழைத்தால் நாம் உள்ள நிலைக்குரிய அன்னையாக மாறும் வாய்ப்புண்டு.

நம் ஜீவனின் ஆழத்தை அடைந்து, அங்கிருந்து அன்னையை அழைத்து, அழைப்பைத் தொடர்ந்து நிலைபெற முடியவில்லை என்றால் என்னாகும்? அழைப்பு நடுவில் அறுந்து போகலாம். ஆனால் அழைப்பின் பலன் ஜீவன் முழுவதும் சூழ்ந்துகொண்டு அதுவரைக்கும் உண்டான ஆன்மீகப் பலனையளிக்கும். நடைமுறையில் வெளியுலகில் நம் பிரச்சினைகள் தீர்ந்து, வாய்ப்புகள் தலைதூக்கும்.

மனத்தளவில் பிரச்சினை என்பது மனத்திலுள்ள குழப்பம். வாய்ப்பு என்பது புதிய கருத்துகள். மனம் அன்னை சக்தியால் நிரம்பினால் குழப்பம் மறைந்து, புதுப்புதுக் கருத்துகள் மனத்தில்

ஒளிரும். உணர்ச்சி அன்னையால் நிரம்பினால் எரிச்சல் ஒழிந்து, மனோதிடம் பெருகும். நம்மைவிட உயர்ந்த நிலையிலுள்ளவர்கள் நம்மிடம் உதவி மனப்பான்மையுடன் பழகுவார்கள். உடல் அதே சக்தியைப் பெற்றால், நோயொழிந்து ஆயுள் பெருகும் நிலை ஏற்படும். ஜீவன் முழுவதும் அன்னையைப் பெற்று உயரலாம். அப்படியானால் நமக்குப் புதிய திறமைகள் ஏற்படும். நம் இயலாமை (incapacity) மறையும்.

மனத்திற்கும், உணர்ச்சிக்கும், உடலுக்கும், ஒவ்வொன்றுக்கும் மூன்றாக மொத்தம் 9 நிலைகள் ஜீவனுக்குண்டு. ஒவ்வொரு நிலையையும் சுட்டிக்காட்ட அதன் தன்மையொன்றைக் கீழேயுள்ள முதல் பத்தியில் குறிப்பிடுகிறேன். அந்நிலை அன்னையின் சக்தியைப் பெற்று மாறும் அடுத்த நிலையை அதன் எதிரே எழுதியிருக்கிறேன். இந்த 9 நிலைகளில் அன்னை சக்தி வந்தால் அங்கு எந்தவிதமான மாற்றம் ஏற்படும் என்பதை விளக்கவே இந்தக் கீழ்க்கண்ட இரு பத்திகளை (column) எழுதுகிறேன்.

 1.  

அது புரியவில்லை எனக்கு பிடிக்கவில்லை

இப்பொழுது புரிகிறது அதனால் பிடிக்கின்றது*

 1.  

திக் என்றது

திக்குமுக்காடும்படிச் சந்தோஷம் ஏற்பட்டது

 1.  

சொரேர் என்றது

நான் எங்கோ (அதிக உயரத்தில்)போய் விட்டேன்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- *குழப்பம் நிறைந்த மனதில் வெறுப்பு இருக்கிறது. அன்னை சக்தி அங்கு வந்தபின் குழப்பம் நீங்கி வெறுப்பு விருப்பமாக மாறுகிறது.

 1.  

எனக்குத் தாங்கவில்லை

சந்தோஷம் தலைகால் புரியவில்லை

 1.  

எல்லாமே போய் விட்டது

பரம திருப்தி.

 

 1.  

சோர்ந்து வீழ்ந்து விட்டேன்

பெரு நிறைவு பெற்றேன்

 1.  

உடல் பயத்தால் ஆடிற்று

மெய் சிலிர்த்தது

 1.  

பைத்தியம் பிடித்த மாதிரி இருந்தது

சந்தோஷம் தாங்காமல் எழுந்து ஓட நினைத்தேன்

 1.  

மயக்கமுற்றேன்

சந்தோஷம் வந்ததால் பைத்தியம் மாதிரி உளறினேன்.

மீண்டும் ஒரு முறை மேலே உள்ள பத்திகளை வேறு வகையாக மேலும் விளக்குவதற்காக எழுதுகிறேன். குறையையும் நிறையையும் குறிப்பிட்டுத் தெளிவுபடுத்த முயல்கிறேன்.

 • i.

சந்தேகம், கவலை ஒழிந்தன

தெளிவும், தெம்பும் ஏற்பட்டன.

 • ii.

திக்குமுக்காடும் சந்தோஷம் எழுந்தது

மனம் விரிந்து ஜீவன் பெருக்கெடுத்தது

 • iii.

செய்வதறியாது திகைத்தேன்

உச்சாணிக் கொம்புக்கு உயர்ந்தேன்

 

 • iv.

சந்தோஷம் தலைகால் புரியவில்லை

ஜீவன் பெருகி சந்தோஷம் வழிந்தோடியது

 • v.

ஆழ்ந்த நிறைவடைந்தேன்

உணர்வு ஆனந்தப் பெருக்கெடுத்தது

 • vi.

இனி எதுவும் பொருட்டில்லை என்றுணர்ந்தேன்

மனம் லேசாகி உடல் காற்றில் பறப்பது போலாயிற்று

 • vii.

உடல் குதூகலத்தால் பதறியது

புத்துணர்வு, பொலிவுடன் உடல் பரவியது

 • viii.

ஊரை மறந்து உன்மத்தனானேன்

என்னால் முடியாததொன்று இல்லை என அறிந்தேன்

 • ix.

உலகம் ஒரு பொருட்டன்று என்றிருந்தேன்

வெட்கமறியேன், அன்னைக்காக எதையும் செய்யும் நிலையடைந்தேன்

ஜடம் பெற்ற வரம்:

பூமி ஜடப்பொருளால் நிரம்பியது. இறைவன் பூமிக்கு அளித்த வரத்தைப் பூமிக்கு மட்டுமே கொடுத்திருக்கின்றான். சிருஷ்டியில் இறைவனை விட்டு அகன்ற ஜடம் தான் விரும்பியபொழுது இறைவனைத் திரும்ப வந்தடையலாம் என்ற வரப்பிரசாதத்தை ஜடப்பொருளுக்கு இறைவன் சிறப்பான வரமாக அளித்துள்ளான். பல்வேறு வரங்களை இழந்த மனிதன் இந்த வரத்தையும் இழந்து விட்டான். அன்னை, இழந்த வரத்தை மனிதனுக்கு மீண்டும் அழைத்து

அளிக்கின்றார். ஆனால் வலியுறுத்திக் கொடுப்பதில்லை. ஒரு முறை கொடுக்கின்றார். இந்த வரத்தைப் பெற அழைப்பு உதவும். அழைப்பு சில சமயங்களில் தீவிரப்பட்டு ஆழ்ந்து ஊடுருவும். அதுபோன்ற நேரங்களில் மனிதன் சிருஷ்டியின் எல்லையைக் கடந்து ஆதியின் (Origin) வாயிற்படிக்கு வருகிறான். அழைப்பின் தீவிரம் வாயிற் கதவைத் திறந்து ஆதியினுள் அவனைச் செலுத்தவல்லது. க்ஷணத்தில் மனிதன் அன்னையை நினைவுகூர்ந்தால், அதாவது ஆதியின் உள் சென்ற கணத்தில் அன்னை நினைவுக்கு வந்துவிட்டால் அழைப்பு ஆதியில் வேரூன்றிவிடும். அப்படி விழுந்த வேர் சல்லி வேரானாலும், பின்னால் உயிர் பெறக் கூடியதாகும். அன்னை என்று நாம் அறிவதும், ஆதி என்றுணர்வதும் வெவ்வேறு என்பதைக் கவனிக்க வேண்டும். அழைப்பு ஆதிக்கு அழைத்துச் சென்றது. மற்றோர் அழைப்பு அங்கு வேரூன்றியது. ஆக இவையிரண்டும் வேறு வேறு என்பது குறிப்பிடத்தக்கது. முதல் அழைப்புக்கும் அடுத்த அழைப்புக்கும் என்ன வித்தியாசம்? ஏன் மறுமுறையும் அழைக்க வேண்டும்? என்ற கேள்விகள் எழுகின்றன. பொதுவான முதல் அழைப்பு ஜீவனை ஊடுருவி ஆதிக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. ஆதியின் உள் சென்ற அந்த வரப்பிரசாதம் அத்துடனே மறைந்துவிடாமல் மீண்டும் நாம் விரும்பியபோதெல்லாம் கிடைக்க வேண்டுமானால், இன்னோர் அழைப்பு தேவை. ஆதியின் உள்ளே இருக்கும்பொழுது அழைத்தால், அந்த அழைப்பு மீண்டும் உயிர் பெற்று வர முடியும். இது அவசியம். ஆதியின் உள்ளே நுழைவது, நுழைந்தபின் அன்னையை அழைப்பது, மீண்டும் விரும்பியபொழுது அங்குத் திரும்ப வருவது ஆகியவை யோகத்தில் சிறப்பான சித்திகளாகும். அழைப்பின் திறன் உயர்ந்த காலத்து இந்த உயர்ந்த சித்திகளையும் பெற்றுத் தரும் தன்மை உடையது "அழைப்பு''.

இவற்றை எல்லாம் உணர்ந்த பக்தன், தன் மனநிலையைத் தயார் செய்துகொண்ட காரணத்தால், ஒரு வாரம் இடைவிடாது அன்னையை அழைக்கும் நோன்பைத் தொடங்க தகுதியுள்ளவன்

ஆகிறான். தான் செய்த முஸ்தீபுகள் அதிகம், பெரியவை என்பதால் தனக்கு எல்லா யோகச் சித்திகளும் கிடைக்கும் என்று நினைப்பது இயல்பு. அது உண்மையில்லை என்பதை முதலிலேயே தெளிவுற உணர வேண்டும். அழைப்பு முக்கியமானது. ஆனால் முடிவானதொன்றில்லை. பயிற்சியும் இன்னும் பல கட்டங்களைத் தாண்ட வேண்டும். பலனும் கடைசிப் பலனாக இருக்காது என்பதை நன்கு தெரிந்திருக்க வேண்டும். இந்த முறைக்கு உரிய சிறப்புகள் இரண்டு, 1. எவரும் இதைக் கையாளலாம், 2. பக்தன் தனக்கு அதிகபட்சம் கிடைக்கக்கூடிய யோக சித்தியை இதன் மூலம் பெறலாம்.

நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் எல்லோருக்கும் உரிய முறை என்பதாலேயே இம்முறையில் எளிமை ஒரு வகையில் கலந்திருக்கும். எளிமை கலந்திருப்பதால் கடைசிக்கட்ட பெருமைக்கு உகந்தது இம்முறையில்லை. தனக்கு அதிகபட்சம் கிடைக்கக்கூடியதைப் பெற்றுத்தரும் முறை என்பது வேறு, அதிகபட்சப் பலனை அளிப்பது வேறு என்பது தெளிவாக இருக்க வேண்டும்.

எப்படியிருப்பினும், முறையாக அழைப்பைப் பின்பற்றினால் (Origin) சிருஷ்டியின் ஆரம்பத்திற்கு - இறைவனிடம் - அழைப்பு நாம் விரும்பியபோதெல்லாம் அழைத்துச் செல்லக்கூடியது. அந்த அளவில் அழைப்புக்கு உயர் தனிச் சிறப்புண்டு.

இம்முறையில் உள்ள குறையையும், சிறப்பையும் குறிப்பிட்டேன். அழைப்பின் பலன் தொடர்ந்து வர வேண்டுமானால், நம் பயிற்சியின் தீவிரம் உச்சக்கட்டத்திலேயே இருக்க வேண்டும். அந்நிலையை அடைந்து, தொடர்ந்தால் அழைக்கும் ஜீவனின் அளவை - ஆழத்திற்கும், சிகரத்திற்கும் உள்ள இடைவெளியை - நாம் அதிகப்படுத்தலாம். ஆழத்திற்கும் போகலாம். உயர்ந்த சிகரத்தை எட்டவும் முயலலாம். அவை எல்லாம் பலிக்க வேண்டுமானால், முயற்சி எந்த நேரத்திலும் தீவிரமான உச்சக்கட்டத்திலேயே செயல்பட வேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு நோன்பை ஒருவர் மேற்கொள்ளுதல் அருமை, சிறப்பு. ஒரு வாரம் தொடர்ந்து பயிலுதல் சிறப்பின் சிகரம். குடும்பத்தார் அனைவரும் சேர்ந்து ஏற்றுக்கொண்டால் அதன் சிறப்பை உதாரணத்தால் விளக்க ஒரு நிகழ்ச்சி இன்று நாம் வாழும் உலகத்தில் இல்லை. "ஏதோ உரைப்பன் எதிர்'' என்பது போன்றது. அக வாழ்வின் மலர்ச்சி அற்புதமானது. புற வாழ்வின் பொலிவுகள் கணக்கிலடங்கா. ராக்கட்டின் வேகத்தை எந்தப் பறவையுடன் ஒப்பிடமுடியும்? கம்ப்யூட்டரின் திறத்தை எதனுடன் ஒப்பிடலாம்? எந்த வகையாக விளக்கம் அளித்தாலும் மேகத்தின் வர்ணஜாலங்களைக் கலங்கிய சேற்று நீரில் பிரதிபலிப்பால் புரிந்து கொள்வது போலாகும். முடிந்தவரை சொல்லிப் பார்க்கிறேன்.

மனத்தில் கவலை என்பதென்ன என்று அறிய முடியாத அளவுக்குக் கனிவும், கருணையும் நிறைகின்றன. அவற்றின் விளைவாக, புற வாழ்வில் பிரச்சினையின் சுவடுகளே அற்றுப் போகின்றன. ஆன்மீகச் சிறப்புகளான மௌனம் மனத்தைத் தேடி வந்து தங்கிவிடும். சாந்தம் நமக்கேயுரியதாகிறது. சந்தோஷம் பெரு நிறைவு பெறுகிறது. ஆனந்தம் என்பதை அடிக்கடி உணருகிறோம். செயல்திறன் சிறக்கும். அவை வாழ்விலும் பிரதிபலிக்கின்றன. புத்தியில் புதிய எண்ணங்கள், இதுவரை உலகத்தில் உதயமாகாத கருத்துகள் தோன்றும். வாழ்க்கை ஒவ்வொரு செயலிலும் நமக்கு மகுடம் அளிப்பதையே தன் கடமையாக ஏற்றுக்கொள்ளும். வாழ்க்கை நிலையுயர்ந்து, அந்தக் கட்டத்திலும் வெற்றிக்கு மட்டும் உரியவராகிறோம். நம் வாழ்க்கை சிறியதானாலும், பெரியதானாலும் அளவோடு கூடியது. அந்த வரையறைக்குள் நமக்கு முழு அதிகாரம் ஏற்படும். "விரல் அசைந்தால் வீடு அசையும். உதடு அசைந்தால் ஊர் அசையும்'' என்பதை நிதர்சனமாகப் பார்க்கிறோம்.

அகத்தின் தெளிவு புரியும். புறத்தின் சிறப்பை உணரலாம். என்றாலும் நம் வாழ்வில், நம் வீட்டினுள் ஏற்படும் நிகழ்ச்சிகளே விளக்கமாக இருப்பதை நாம் உணருவோம். என் மனம் எப்படி

இருக்கும்? வீட்டில் அன்றாடம் வாழ்க்கை எப்படி அமையும்? நான் சந்திக்கும் நபர்கள் எப்படி என்னிடம் நடந்து கொள்வார்கள்? வருமானம் என்ன ஆகும்? என்றெல்லாம் மனம் கேள்வியை எழுப்பும். இதையும் ஓரளவுக்குச் சொல்லலாம். அப்படிச் சொன்னால் சில விஷயங்கள் தடம் மாறிப் போகும். மற்றவை கோணலாக இருக்கும். வேறு சில வினோதமான தவறுகளை ஏற்படுத்தும். பெரிய காரியங்களைச் சிறிய நிகழ்ச்சிகள் மூலமாகச் சொன்னால் நாம் சிறிய பலன்களை நாடுவதுபோல் தோன்றும். நம் சிற்றூரில் சென்ற வருஷம் ஆரம்பித்துள்ள கல்லூரியில் M.A. படிப்பதைவிட தாம்பரம் கிருஸ்துவக் கல்லூரியில் சேர்வது சிறப்பு என்ற கருத்தை வலியுறுத்த அந்தக் கல்லூரி ஹாஸ்டல் சாப்பாட்டின் பெருமையை விளக்குவது போலாகும். ஒருவருடைய நாணயத்தின் உயர்வை வலியுறுத்த அவருடைய குரல் கவர்ச்சியைக் காரணமாகக் காட்டுவது போன்று இருக்கும். உயர்ந்த மனிதன் இவர் என்பதை அவர் பெற்ற பட்டத்தின் உயர்வால் விளக்கினால் பல சமயங்களில் அது தவறாகிறது. அவர் பெற்ற செல்வத்தின் அளவால் விளக்கினால் - அதில் ஓர் உண்மை இருந்தாலும்கூட - விளக்கம் விபரீதமாகும். "அவருடைய எடை 240 பவுண்டு அதனால் எவ்வளவு உயர்ந்த உள்ளம் உடையவர் என்று பார்த்துக் கொள்ளுங்கள்'' என்பது போருக்கும்.

வேறு வழியில்லாததால், இருக்கும் உபாயங்களைக் கொண்டு சொல்கிறேன். சொல்லும் மனப்பாங்கை மட்டும் ஏற்கும் நோக்குடன் புரிந்துகொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

 • 1. குடும்பத் தலைவரின் வருமானம், குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் வந்தால் எப்படியிருக்குமோ அது போன்ற வருமானம் ஏற்படும்.
 • 2. குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் தலைவருக்கு உரிய பொறுப்புணர்ச்சியை ஏற்றுக்கொண்டது போல் குடும்பம் உயர்ந்துவிடும்.

 • 3. வாழ்வில் ஒரு முறை வரும் பெருநிறைவு, அன்றாட நிகழ்ச்சியாகி அதற்குரிய சிறப்புகளைச் சேர்க்கும்.
 • 4. வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நாம் உந்தித் தள்ளப்படுவோம்.
 • 5. அன்றாடச் சாப்பாடு, விசேஷ தின விருந்தாக மாறும்.
 • 6. உடுத்தும் உடையெல்லாம் உயர்ந்த உடையாகும். தினமும் பட்டு உடுத்துவது போலாகும்.
 • 7. ஒரு நாள் ஒரு க்ஷணமாகத் தோன்றுமளவுக்கு உள்ளம் பூரிக்கும்.
 • 8. நமக்கு முக்கியத்துவம் வந்துவிடும்.
 • 9. முக்கியமானவர்களைத் தொடர்ந்து சந்திக்கும் சந்தர்ப்பங்கள் வந்தபடியிருக்கும்.
 • 10. சில்லரையை எடுத்த கை சிறிய பவுன் காசை எடுக்கும்.
 • 11. நம்மவர் அன்னியோன்யமாக அளவளாவி மகிழ்வர்.
 • 12. வீடு திருமாளிகையாகக் காட்சியளிக்கும்.
 • 13. கண்ணில் படுபவரெல்லாம் காட்சிக்கு இனியவராக இருப்பார்கள்.
 • 14. நினைத்ததை மற்றவர் நிறைவேற்றுவார்கள். உத்தரவு, ஒலிபரப்பிய சட்டமாகும்.
 • 15. முகம் மலரும்; புன்சிரிப்பு புனித ஒளியாகும்.
 • 16. எண்ணம் இலக்கியமாகும். இலட்சியம் தன் நிறைவு பெறும்.
 • 17. பேச்சு நட்பாகும். நண்பர் பிசிராந்தையாராவார்.
 • 18. உண்ணீரும் ஊற்று நீராகும். பருகுவதெல்லாம் அமிர்தம் ஆகும்.
 • 19. சாப்பாடு திரு அமுதமாகும்.

 1. தெய்வமே தாயாக வருவதால், தாயாரே தெய்வமாவார்.
 2. கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகும். மாணிக்கம் மனிதனுக்குக் கல் போன்றதாகும்.
 3. கடுமையும் இனிக்கும். கனிவு ஏற்பட்டபின் கனிவு மட்டும் கசியும் இதயத்தில் கருணை மழை பொழிவதை மயிர் கூச்செரியும் உடல் வெளிப்படுத்தும்.
 4. .பெருந்தலைவருக்குரிய பெருமையும், பெருந்தன்மையும் இனிமையாக வெளிப்படுவதை பிறர் சொல்லக் கேட்டும் நம்பமுடியாது.
 5. நாம் கல்லானாலும், புல்லானாலும் பிறருக்குத் தெய்வமாகவே காட்சியளிப்போம். (பிறர் கருத்தை நாமே நம்பிவிட்டால், கல்லும் புல்லும் நிலையாக வந்துவிடும்).
 6. நம் மனத்தில் பொய்யும், குறையும் அற்றுப்போனதால், உலகிலேயே அவை அழிந்துவிட்டதாகத் தோன்றும்.
 7. உள்ளம் தெய்வம் உறைவிடமாகும்; உடல் திருக்கோயில் ஆகும்.
 8. தினமும் தீபாவளியாக இருக்கும்.

பயிற்சி முறை:

வீட்டில் உள்ள அனைவரும் அழைப்பை ஏற்றுக்கொள்ள- வில்லையானால், ஒருவர் மட்டும் ஆரம்பிக்கலாம். இந்த முறையை எப்படி ஆரம்பிப்பது என்பதைப் பல பகுதிகளாகப் பிரித்து, அவற்றை வரிசைக்கிரமமாக எழுதுகிறேன். பூரண நம்பிக்கையுள்ளவர்களுக்கே உரிய முறை இது. அதுவே அடிப்படை.

 1. குறிப்பிட்ட நேரத்தை - ஒரு மணி அல்லது அரை மணி - ஒதுக்கி, நாள்தோறும் தவறாது அதே நேரத்தில் பயில வேண்டும். முதலில் Mother, அன்னை, அம்மா என்பனவற்றில் ஒன்றை வாயால் தொடர்ந்து உச்சரிக்க வேண்டும்.

 1. சில நாட்களுக்குப் பின், வாயால் சொல்வதைப் படிப்படியாக நிறுத்திவிடவேண்டும்.
 2. மனதால் செய்யும் உச்சாடனம் மனதை முழுமைப்படுத்தி நிரப்புவதையும், அதிலிருந்து பெருகி வாழ்வில் ஓடி வருவதையும் பார்க்கலாம்.
 3. மனம் நிறைந்த பின் (after saturation of mind) மனதால் சொல்வதை லேசாக மாற்றி நெஞ்சால் (heart) சொல்ல ஆரம்பிக்க வேண்டும்.
 4. நெஞ்சம் நிரம்பி வழியும் நிலை வந்தபின், உச்சரிப்பை நிறுத்திக்கொண்டால், தானே Mother என்ற சொல் தானாக நெஞ்சிருந்து உற்பத்தியாகும். அதுவே அழைப்பு.

********book | by Dr. Radut