Skip to Content

15. அசுர சூறாவளி (Tornado)

 

இந்தியப்     பல்கலைக்கழகப்     பேராசிரியர்     ஒருவருக்கு அமெரிக்காவில்   ஒரு   மாதம்   (visiting professor)   சில   பல்கலைக் கழகங்களில்    சொற்பொழிவு    ஆற்றும்    பணி    ஏற்பட்டது.    இவர் அமெரிக்காவில்  தங்கி  ஏற்கனவே  5  ஆண்டு  படித்துப்  பட்டம்  பெற்றவர். அடிக்கடி  அமெரிக்கா,  கானடா  போன்ற  இடங்களுக்கு  இது  போன்று பணியாற்றச்  சந்தர்ப்பம்  கிடைத்துப்  போகும்பொழுது  தம்முடைய  பழைய நண்பர்களைச்   சந்திப்பது   வழக்கம்.

இம்முறை   பேராசிரியர்,   கம்ப்யூட்டர்   விஞ்ஞானி   ஒருவரைச் சந்திக்க   அவரிருந்த   ஊருக்குப்   போனார்.   அவருடன்   இரு   நாள் தங்கினார்.   மறுநாள்   திங்கள்   கிழமை   காலை   11   மணிக்கு   100 மைலுக்கு   அப்பாலுள்ள   கல்லூரியில்   சொற்பொழிவு.   ஞாயிறு   மாலை புறப்பட்ட   அவரை   நண்பர்   மறுநாள்   காலையில்   போகலாம்   எனக் கேட்டுக்கொண்டதை  மறுத்து,  பேராசிரியர்  புறப்பட்டுப்  போய்விட்டார். திங்கள்  காலை  8  மணிச்  செய்தியில்  முதல்  நாள்  அவர்  தங்கியிருந்த பகுதியில்   (Tornado)   சூறாவளியால்   சேதம்   என்று   அறிவித்தார்கள். பேராசிரியர்   நண்பரைப்   போனில்   கூப்பிட்டு   விசாரிக்க   நினைத்த அதே   நேரத்தில்   நண்பரிடமிருந்து   போன்   வந்தது.

தென்னிந்தியாவில்   நவம்பர்-டிசம்பர்   மாதங்களில்   அடிக்கும் காற்றை   நாம்   புயல்   என்றும்,   சுழற்காற்றென்றும்   அறிவோம்.   சுமார் 50  மைல்  முதல்  70, 80  மைல்  வேகத்தையும்  எட்டிவிடும்.  அளவுகடந்த சேதம்   ஏற்படுவது   அப்பொழுதுதான்.   பூமத்திய   ரேகை   நாடுகளான ஜாவா,    சுமத்திரா,    பிப்பைன்ஸ்    ஆகிய    இடங்களில்    டைபூன் (typhoon)    என்று    வர்ணிக்கப்படும்    காற்று    அதிகச்    சேதம் விளைவிக்கக்கூடியது.    தீவுகளில்    வீசும்    புயலுக்கு    ஹரிகேன் (huricane)  என்று  பெயர்.  சேதம்  விளைவிப்பதில்  தலைமையானது இது.   அமெரிக்காவில்   டார்னடோ   (Tornado)   என்று   கூறப்படும் காற்று   300   மைல்   வேகத்தில்   வீசும்.   ஏதோ   ஒரு   சமயம்   இதன் வேகம்   500   மைலைத்   தொடக்கூடும்.   புயல்   இரவெல்லாம்   அடிப்பது உண்டு.   டார்னடோ   சில   நிமிஷங்கள்   வீசி   அடங்கிவிடும்.   1964ல் அதுபோன்ற  சேதம்  அமெரிக்காவில்  ஏற்பட்டபொழுது  70  டன்  எடை உள்ள    ரயில்வே    கோச்சுகள்    100    அடி    தூரத்திற்குத்    தூக்கி எறியப்பட்டன,   கார்கள்   காற்றில்   பறந்தன,   50   குழந்தைகளைக் காற்றில்  உயரே  தூக்கிப்  பலூன்  போல  வெகுதூரத்தில்  போட்டுவிட்டது. அதுபோன்ற   ஒரு   விபத்து   நேர்ந்துள்ளது   என்பது   பேராசிரியருக்குக் கவலையளித்தது.

நண்பர்  போனில்  பேசினார்.  தனக்கும்,  தன்  குடும்பத்தவருக்கும் ஆபத்தில்லை   என்றார்.   தன்னைச்   சுற்றிப்   பெரிய   சேதம்   என்றார். பேராசிரியருக்கு   நிம்மதி   ஏற்பட்டது.   தான்   முன்   இரு   தினங்களும் நண்பர்   வீட்டில்   தங்கியிருந்தபொழுது   அன்னை   படத்தின்   முன் அமர்ந்து  தியானம்  செய்தது  நினைவுக்கு  வந்தது.  அன்னைக்கு  நன்றி தெரிவித்துவிட்டுச்  சொற்பொழிவாற்றப்  போனார்.  அது  முடிந்தவுடன் நேரே  நண்பர்  தங்கிய  இடத்திற்குச்  சென்றார்.  அது  ஒரு  செல்வர்கள் உள்ள   காலனி.   90   வீடுகள்   மட்டுமேயுள்ள   இடம்.   வீடுகள்   தரை மட்டமாக  இருந்தன;  வீடுகள்  இருந்த  இடத்தில்  இடிந்த  குவியல்களே (debris)   காணப்பட்டன;   மரங்களைக்   காணோம்;   வேஷ்டியைத் துவைத்துப்  பிழிவதைப்  போல்  எலக்ட்ரிக்  கம்பங்கள்  சுருட்டி  வளைத்துக் கொண்டிருந்தன;  எங்குப்  பார்த்தாலும்  காற்றின்  அமர்க்களம்;  உயிர்ச் சேதம்   அதிகம்;   அடிபடாதவர்களேயில்லை.   நண்பருடைய   மாடி   வீடு மட்டும்  நிலைகுலையாமல்,  ஆடாமல்,  அசையாமல்  இருப்பதைக்  கண்ட பேராசிரியர்  ஸ்தம்பித்துப்  போனார்.  நண்பரும்,  அவர்  குடும்பத்தினரும் உயிர்  தப்பியது  ஆச்சரியம்.  அவர்கள்  வீடு  சேதமடையாததை  அங்கு நின்றுகொண்டு   இருக்கும்பொழுது   அவரால்   நம்ப   முடியவில்லை. (நண்பர்,   தாம்   எப்படிக்   காப்பற்றப்பட்டோம்   என்று   தெரியாமல் திகைப்பதாகச்   சொன்னார்).   நண்பர்   வீட்டில்   நின்ற   150   அடி   உயர மரம்கூட  சேதப்படவில்லை,  அவர்களுடைய  இரண்டு  கார்களும்  சேதப் படவில்லை.   மரத்தின்   கிளை   ஒன்று   ஒடிந்து   கார்   மீது   விழுந்து, கண்ணாடி   மட்டும்   சேதப்பட்டுள்ளது.   வீட்டு   மாடியில்   கொரனாஸ் சிறிதளவு   சேதப்பட்டது.   பேராசிரியரை   நண்பர்   மீண்டும்   மீண்டும் கேட்டார்,   "எப்படி   நான்   காப்பாற்றப்பட்டேன்?''   என்று.

பேராசிரியருக்கு  எதுவும்  சொல்ல  முடியவில்லை.  அன்னையின் அற்புதங்களை   நான்   20   ஆண்டுகளாகப்   பல   வகைகளில்   பார்த்து இருக்கிறேன்,   இது   என்னால்   நம்ப   முடியாத   ஒன்று.   இரண்டு நாளைக்கு   முன்   நான்   பார்த்த   இந்த   இடம்   எங்கே?   என்னைச் சுற்றியுள்ள  பாழடைந்த  வீடுகள்  எங்கே?  இதன்  நடுவில்  ஒரு  வீடும், அதன்  உறுப்பினர்களும்  முழுமையாகக்  காப்பாற்றப்பட்டார்கள்  எனில் அன்னையின்   அருள்   அவர்களுடைய   வீட்டை   இரும்புக்   கவசமாகச் சூழ்ந்திருக்க    வேண்டும்'    என்றெல்லாம்    நினைத்த    அவர், "அன்னையின்   படம்   இரண்டு   நாள்   உங்கள்   வீட்டில்   இருந்தது. அதனுடைய   பலனே   இது''   என்று   சொல்லி   முடித்தார்.

******book | by Dr. Radut