Skip to Content

14. ஸ்ரீ அன்னையின் கருத்துகள்

அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் அடிப்படையில் ஒருவரே. அவர்களது செயலையும், சிந்தனையையும் பிரித்துப்பார்க்க முடியாது. ஒருவர் ஓர் இடத்தில் சொல்லியதை, மற்றவர் வேறோர் இடத்தில் சொல்லியிருப்பதால் எது ஸ்ரீ அரவிந்தர் கருத்து, எது அன்னையி- னுடையது எனப் பல இடங்களில் தீர்மானிக்க முடியாது. கூடியவரை அவரவர் கருத்துகளை அவரவர் பெயரிலேயே கொடுக்க முயல்கிறேன்.

  1. ஒருவர் அன்னையிடம் வந்தால், அவருக்கு எந்த விஷயத்தில் அதிக ஆர்வமிருக்கிறதோ, அதையே அன்னை அவருக்கு அளிக்கிறார்.

மனிதன் தன் தேவையை அறிவதைவிட அன்னை அவனுடைய தேவையையும், உண்மையான ஆர்வத்தையும் அறிந்துகொள்கிறார். அறிந்தபின் அவன் கேட்டதை விட்டு, கேட்காமலிருந்த ஒன்றை அவனுக்கு அளிப்பது அவர் வழக்கம்.

ஒரு பட்டதாரி ஆசிரியர். அவருக்கு உள்ளூரில் வேலை கிடைக்க வேண்டி முயன்றார். அவர் வீடு பள்ளிக்கூடத்திற்கு எதிரில் இருந்தது. அவர் பட்டம் பெற்று வந்ததும் அங்கு வேலை கேட்டார். கிடைக்க- வில்லை. 3 மைல் தூரத்தில் உள்ளூரிலேயே அதனைச் சார்ந்த மற்றொரு பள்ளியில் அவருக்கு வேலை கிடைத்தது. வீட்டிற்கு எதிரில் உள்ள பள்ளியில் வேலை கிடைத்தால் சௌகரியம் என்பதுடன், அந்தப் பள்ளி மாணவர்கள் அவரிடம் வந்து ட்யூஷன் படிக்க வசதியாய் இருக்கும். அது நடக்கவில்லை. பல ஆண்டுகள் கழிந்தன. அடுத்த

பள்ளியில் அவர் சீனியர் ஆசிரியராகிவிட்டார். அன்னையிடம் பக்தி கொண்டு, ஒரு முறை ஒரு குறிப்பிட்ட பிரச்சினை தீர வந்து பிரார்த்தித்தார். பிரச்சினை தீரவில்லை. பிரார்த்தனை செய்து, பிரச்சினை தீரவில்லை என்பது கேள்விப்படாத ஒன்று. மேலும் விசாரிக்கப்போனால், சற்றும் எதிர்பாராத வகையில் அவருக்கு வீட்டிற்கு எதிரேயுள்ள பள்ளியில் வேலை கிடைத்துவிட்டது. தீராத பிரச்சினையை ஒதுக்கிவிட்டு, மறந்துவிட்டு, வேலை கிடைத்த மகிழ்ச்சியில் அவர் திளைத்திருந்தார்.

ஒருவர் அன்னையின் எதிரே சென்றவுடன் அவருடைய ஆழ்ந்த உணர்ச்சிகள் அன்னையின் மீது அலைபோல் சென்று படிகின்றன. அவர் அன்னையிடம் சொல்லிய சொற்கள் அன்னையின் காதில் விழுகின்றன. ஆனால் ஆழ்ந்த உணர்ச்சிகள் அன்னையின் ஜீவனில் படிகின்றன. அன்னையை அறியாமலேயே அவை உத்தரவு பெற்று, செயல்பட்டுவிடும். அக்காரணத்தாலேயே அன்பர் பிரார்த்தனை செய்தாலும், செய்யாவிட்டாலும், அவர் மனத்தில் ஆழத்திலுள்ள அபிலாஷைகள் அன்னையிடம் வந்தவுடன் பூர்த்தியாகின்றன. எம்.பி. சீட் கிடைக்காதவர் அன்னையிடம் பிரார்த்தனை செய்தபொழுது அவருக்கு மந்திரி பதவி கிடைத்தது. வாயால் கேட்டது M.P. சீட்டாக இருந்தாலும், அவர் மனத்தின் அடியில் மந்திரி பதவி இருந்தது போலும்.

  1. தியானத்தை விட நிஷ்காம்ய கர்மம், பலன் கருதாத செயல் உயர்ந்தது. தியானத்தில் ஈடுபடுவது மனம். செயலில் ஈடுபடுவது உடல். ஆர்வத்தோடு செயல்படும்பொழுது உடலும், உணர்ச்சியும் ஈடுபடுகின்றன. ஓர் இலட்சியத்தை உணர்ந்து, அறிந்து, மனம் ஏற்றுக்கொண்டபின் அதற்காக செய்யும் செயலை ஆர்வத்துடன் செய்தால், அந்தச் செயலில் உடலும், உணர்வும், அறிவும் ஈடுபடுகின்றன. அன்னையை ஏற்றுக் கொண்டு அந்த இலட்சியத்தைப் பூர்த்தி செய்ய நடக்கும் எந்த ஒரு செயலையும் சாதகர் ஏற்றுக்கொண்டு ஆர்வத்துடன்

செய்வாரானால், தியானத்தில் மனம் அடைந்த தெளிவை ஜீவன் முழுவதும் அடைகின்றன. எனவே செயலால் செய்யப்படும் சேவை இந்த வகையில் தியானத்தைவிட உயர்ந்ததாகும்.

  1. உன்னுடைய கடமைகளை ஆர்வத்துடன் செய். உனக்குப் பிரியமான காரியத்தைச் செய்யப் பிரியப்படாமல், செய்யும் காரியத்தில் பிரியத்தையும், ஆர்வத்தையும் காட்டு.

கடமைகளைச் செய்கிறவர்கள் குறைவு. ஆர்வத்துடன் கடமையைச் செய்ய வேண்டுமானால் மனிதனுக்கு உயர்ந்த பக்குவம் தேவை. அதைச் செய்தால் அந்தப் பக்குவம் வரும். சினிமா பார்க்கும் ஆர்வத்துடன், பள்ளிக்கூடப் பாடத்தைப் படிக்க வேண்டுமானால் மாணவனுக்கு என்ன மனமாற்றம் தேவையோ, அந்த வகையான மனமாற்றம்தான் இதற்குத் தேவை.

  1. புற நிகழ்ச்சிகள் உனது உள்ளுணர்வையே பிரதிபலிக்கும்.

ஆன்மீகத் தத்துவப்படி கல்லும், மண்ணும், மரமும், மனிதனும், உலகிலுள்ள எல்லாப் பொருள்களும் பிரம்மாகும். அகமும், புறமும் ஒன்றே. எல்லாம் ஒன்றே, ஒரே பிரம்மமாகும். ஆகவே நம் மனத்துள் எழும் எண்ணங்கள் வேறு, நம் செயல்கள் வேறு என நாம் நினைப்பது சரியில்லை. நம் செயல்கள் நம் எண்ணங்களைப் பிரதிபலிக்கின்றன. நாம் பூமியில் பிறந்தோம். அந்த மண்ணும், இந்த மண்ணும் ஒன்றே. நம்மைச் சுற்றியுள்ள சூழலின் குழந்தையே நாம். அதிலிருந்தே நாம் உற்பத்தியாகிறோம். எனவே, உள்ளத்தின் அடியில் உள்ள எண்ணங்கள் நம் அறிவுக்குத் தெளிவாகப் படாவிட்டால், நாம் உள்ள சூழ்நிலையை உற்று நோக்குவோமேயானால், நம் ஜீவனின் ஆழத்தில் உள்ள இரகசியங்கள் தெரியும்.

  1. ஒருவரைத் திருத்த முடிந்தால் திருத்து; இல்லையேல் அவரைப் பற்றிக் குறை கூறாதே.

ஆசிரியர், பெற்றோர், அதிகாரி, முதலாளி, தலைவர் போன்ற ஸ்தானங்களில் உள்ளவர்களுக்கு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்- களைத் திருத்தும் கடமையும், தகுதியும் உண்டு. இது அன்றி, நட்புறவில் ஒருவர் கருத்தை மற்றவர் ஏற்றுத் திருந்திக்கொள்ளும் உறவுகளும் உண்டு. இவற்றிற்குப் புறம்பான இடங்களில் அந்தக் கடமை இல்லை. ஒருவருடைய நடைமுறை குறைபாடு உடையது எனில், அது நம் பார்வையில் பட்டால், அதைப் பற்றி விமரிசனம் செய்யும் உரிமை நமக்கில்லை என அன்னை கூறுகிறார். ஆழ்ந்து நோக்கினால் உலகில் நாம் ஒரே ஒருவரைத்தான் திருத்த முடியும். அது நம்மைத்தான். அதை மட்டும் நாம் செய்தால் போதும் என்பதே கருத்து. ஒருவருடைய குறைபாடு உள்ள செயல் நம் கண்ணில் பட்டால், ஏன் அது நம் கண்ணில் பட வேண்டும்? நம்முள் உள்ள எது அதை நம் பார்வைக்குக் கொண்டுவந்தது?' என்று நாம் சிந்திக்கலாம்.

ஒரு நட்புறவில் அவருடைய குறையை நாம் வெளிப்படையாகப் பேசிவிட்டால், அவரைத் திருத்தும் தகுதியும், திறமையும், வாய்ப்பும் போய்விடும். அதனால்தான் அன்னை அப்படிக் கூறியிருக்கிறார்.

  1. ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு கணமும் இறைவனை நோக்கி நாம் செல்ல என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதைச் செய்ய வேண்டும்.

பொதுவாக எல்லா மனிதர்களும், ஏற்கனவே இருந்ததைவிட அதிகமாக உயர வேண்டும் என நினைக்கிறார்கள். மேலும் நல்ல உடை உடுத்த வேண்டும், இதைவிட உயர்ந்த பதவி வேண்டும், இன்னும் வசதி வேண்டும், மேலும் புகழ் வேண்டும் எனக் கருதுகிறார்கள். இந்த எண்ணங்கள் எல்லோருக்கும் முழுமையாக உண்டு. அதே ஆர்வத்தை, மேலும் உயர்ந்த இலட்சியங்களைக் கடைப்பிடிக்க வேண்டும், அதிகத் தூய்மை வேண்டும், மேலும் உண்மை தேவை என்றெல்லாம் நினைப்பதும், நினைத்துச் செயல்படுவதும்

இறைவனை நோக்கி நாம் செல்வதாகும்.

  1. திருமூர்த்திகள் போன்ற தெய்வங்கள் பூமியின் அளவு இருக்கிறார்கள்.

சிவபெருமான், மகாவிஷ்ணு, பிரம்மா, இந்திரன், லட்சுமியி- லிருந்து ஆரம்பித்து நாரதர்வரை வந்தால் ஓர் ஆயிரம் கடவுள்கள் இருக்கும். அன்னை அவர்களுடைய அளவு, அதாவது பரிணாமம், பூமியின் அளவு எனச் சொல்லுகிறார்.

  1. மலர்களுக்குத் தனித்தன்மையுண்டு. அவை தனித்து வைக்கப் படுவதையே விரும்பும்; பொறாமையும் உண்டு.

ரோஜா மலர்களை மற்ற மலர்களுடன் சேர்த்து வைத்தால் அவை கவலைப்படுவதாக அன்னை சொல்கிறார். தனியாக அவற்றை வைத்தால் நிமிர்ந்து, தெளிவாக, பெருமையுடன் காணப்படுவதாகச் சொல்கிறார். ஒரு முறை ஒரு ரோஜாவை மற்ற புஷ்பங்களுடன் வைக்க அன்னை எடுத்தார். அந்த மலர் வளைந்து தன் முள்ளால் அன்னையின் கையைக் குத்திற்று. தன் கோபத்தை என் மேல் அந்த ரோஜா காண்பித்தது என்றார். .

  1. விலங்குகட்குப் புலன்கள் மிகவும் கூர்மையாக இருக்கின்றன. மனிதனிடம் பழகும் விலங்குகள் தங்கள் சொந்த உணர்வை இழந்து, அவனை நம்பி வாழ்கின்றன.

உதாரணமாக காட்டில் உள்ள மாடு விஷப்புல்லைப் பார்த்தால், முகர்ந்து பார்த்து விலகிவிடும். எது நல்லது, தனக்கு எது நல்லதில்லை என்ற பாகுபாடு அவற்றுக்குண்டு. ஆனால் வீட்டில் உள்ள மாடு மனிதனை நம்பிவிடுகிறது. அவன் போடும் புல்லை நம்பிக்கையுடன் தின்னும். காட்டிலிருக்கும்போது அதற்கிருந்த பாகுபாடு இப்பொழுது இருப்பதில்லை. விஷப்புல்லை மனிதன்தான் பிரித்து எடுக்க வேண்டும். அவன் தவறி, விஷப்புல்லை மாட்டிற்குப் போட்டால், அது புல்லைத் தின்று மயங்கிவிழும்.

  1. உலகில் ஆக்க வேலைகளைப் பெண்கள் திறம்படச் செய்கிறார்கள்.

இந்தக் கருத்தை விளக்க முஸ்லீம் நாடுகளில் உள்ள ஒரு பழமொழியை அன்னை எடுத்துக்காட்டுகிறார். பெண்களிடம் கிடைத்த பணம்போல என அப்பழமொழி கூறுகிறது. தமிழ்நாட்டில் ஆண்களிடம் கிடைத்த குழந்தையும், பெண்களிடம் கிடைத்த பணமும் உருப்படாது' என்பது வாக்கு. இது ஆண்களுக்குக் குழந்தை வளர்க்கத் தெரியாது, பெண்களை ஏமாற்றிப் பணத்தை மற்ற ஆண்கள் எடுத்துக் கொள்வார்கள் என்பதைக் குறிக்கும். சில துறைகளில், தமிழ்நாட்டில் ஆண்களும், பெண்களும் ஏராளமாகச் சம்பாதிக்கின்றனர். அங்குப் பல ஆண்கள் பணத்தை இழந்துவிடுகிறார்கள். சிலரே அப்படிச் செய்வதில்லை. ஆனால் பெரும்பணம் சம்பாதித்த பெண்களில் பணத்தை இழந்தவர் மிகக் குறைவு. .

  1. பெற்றோர்கள் தங்களுக்கு விரோமான குணங்களைத் தம் குழந்தைகளிடம் காண்பர்.

மனிதனிடம் நல்ல குணங்களும், கெட்ட குணங்களும் கலந்து காணப்படுகின்றன. அவன் நல்லதை வெளிப்படையாகக் காண்பிக்- கின்றான். மற்ற குணங்கள் வெளிப்படாதவாறு பார்த்துக்கொள்கிறான். அவை வெளிப்படவில்லை என்றாலும், அவனிடமே இருக்கின்றன. அவை குழந்தைகளிடம் தெரியும் என்று அன்னை கூறுகிறார். .

  1. இந்திய விவசாயி, ஐரோப்பிய மேதைகளைவிட இறைவனை உணர்ந்திருக்கிறான்.

இந்தியா உலகின் குரு. ஆத்மீகம் வளர்ந்த நாடு. இங்கிலாந்தின் தொடர்பு ஏற்பட்ட இடமெல்லாம் இந்தியா தன் ஆத்மீகத்தை இழந்தது; அழுகிப்போயிருக்கின்றது. இன்னும் 70% இந்தியா தூய்மையாக இருக்கிறது. உலகில் இந்தியாவுக்கு அடுத்தபடியாகப் பிரான்ஸ் விளங்குகிறது. ஒரு நாள் இந்தியா

உலகத்தின் தலைவராகவும், குருவாகவும் மிளிரும் என அன்னை கூறுகிறார்.

  1. இந்தியாவின் சீதோஷ்ண நிலை வடதுருவத்தைப் போல் மாறும்; பனி பெய்யும்.

ஆரோவில் நகரத்தில் வடதுருவத்திலுள்ள சில செடிகளையும், மரங்களையும் கொண்டுவந்து அன்னை நடச் சொன்னார். இந்த வெய்யிலில் அவை கருகிப்போய்விடும் என்று சாதகர்கள் சொன்ன பொழுது, வடதுருவத்தின் சீதோஷ்ண நிலை இங்கு வரும் என்று கூறினார்.

  1. சமஸ்கிருதம் மட்டுமே ஆன்மீகக் கருத்துகளைத் தெளிவாகத் தெரிவிக்க முடியும்.
  2. ஒருவன் இறந்தவுடன் அவனது உயிர் உடலை விட்டுப் போவது இல்லை. அதற்குச் சில நாட்களாகின்றன. அதற்குள் உடலைத் தகனம் செய்வதால் அந்த உயிர் அதிர்ச்சியடைகிறது. புதைப்பதே நல்லது என்று அன்னை கூறுகிறார்.
  3. உயிரில்லாத பொருள்களையும் கவனமாக வைத்திருந்தால் அவை நம் கவனத்துக்குரிய சேவையைச் செய்கின்றன.
  4. நம்மால் மன்னிக்க முடியாது என்று சொல்லக்கூடிய குற்றம் ஒன்றில்லை.
  5. அதற்குரிய நேரம் வரவில்லைபோலும்' என நாம் பல சமயங்களில் சொல்கிறோம். அன்னை, நம் மனப்பாங்கை மாற்றிக்கொண்டமாத்திரத்தில் அதற்குரிய நேரம் வந்துவிடும்' என்கிறார். அது நம் கையிலிருக்கிறது'.
  6. 1967க்குப்பின் உலக அரசாங்கங்கள் மேலும் மேலும் தெய்வீகச் சக்திக்குட்பட்டுச் செயல்படுகின்றன.

  1. உடல் நோயுள்ளபோது எவ்வளவுக்கெவ்வளவு நாம் நோயை கவனிக்கின்றோமோ, அவ்வளவுக்கவ்வளவு நோய் வளரும்.
  2. மனிதர்களிடையே நிலவும் அன்பு (human love) சுயநலத்தால் நிரம்பியது.
  3. அன்னையை நாடி வந்த அனைவரும், ஆசிரமத்திலேயே தங்கி உள்ளவர்களும், கொஞ்ச நாள் தங்கியிருந்தவர்களும், முற்பிறவிகளில் அன்னையுடனிருந்தவர்கள்.
  4. பாவம் என்பது நாம் செய்யும் செயல் இல்லை. தவறான காரியங்களைச் செய்யும்பொழுது அவற்றால் நாமடையும் கீழான இன்பத்தால்தான் பாவம் ஏற்படுகிறது.
  5. பல பிறவிகளில் செய்யும் தவப் பயனை, ஆசிரமத்திலிருந்து யோகம் செய்பவர்கள் சில மாதங்களில் பெறலாம்.
  6. சண்டை என்று ஏற்பட்டபின் தவறு' இரு கட்சிகளிலும் உள்ளது.
  7. அவசரம், திறமைக் குறைவுக்கு அஸ்திவாரம்.
  8. நியாயமாக எடுத்துச் சொன்னால், குழந்தைகள் அவற்றை ஏற்றுக்கொள்ளும்.
  9. நேர்மையாக வளர்ந்து, ஆண்டவனை அடைய குழந்தைகட்கு நாம் உதவி செய்ய வேண்டும்.
  10. பணம் ஓர் இடத்தில் குவிந்து இருக்கக்கூடாது. அது நடமாடிக் கொண்டேயிருக்க வேண்டும்.
  11. மனத்தில் உண்மையில்லாதவர்களைச் சந்தித்தால் உடல் சீக்கிரத்தில் களைத்துவிடும்.

******



book | by Dr. Radut