Skip to Content

13. ஸ்ரீ அரவிந்தரின் எண்ணங்கள்

 1. உலகில் எந்த ஒரு புதிய மாற்றம் ஏற்பட வேண்டுமென்றாலும்,

முதலில் அதை ஆஸ்ரமத்தில் கொண்டுவர வேண்டும்.

பிரபஞ்சத்திலுள்ள எல்லா அம்சங்களும் பூமியில் இருக்கின்றன. பூமி பிரபஞ்சத்தின் பிரதிநிதி. அதேபோல் பூமியில் உள்ள எல்லா அம்சங்களையும் ஒன்று சேர்த்து ஸ்ரீ அரவிந்தாஸ்ரமம் அமைக்கப்பட்டு உள்ளது. புதியதாக இங்கு எது செய்தாலும் அது உலகத்தில் பரவும். யோகத்திற்காக ஆஸ்ரமம் ஏற்படுத்தியதுபோல், வாழ்க்கைக்காக அன்னை ஆரோவில் நகரை நிர்மாணித்தார். 3வது உலக யுத்தத்தைத் தடுப்பதற்காக அன்னை செய்த யுக்தியிது. ஆரோவில் உள்ளவரை 3ஆம் யுத்தம் வாராது. மனித சுபாவத்தின் எல்லா அம்சங்களையும் பிரதிபலிக்குமாறு ஆரோவில் ஏற்பட்டுள்ளது.

 1. விதி வலியது அன்று. உரமான எண்ணங்கொண்ட மனித

உள்ளத்தின் முன் விதி பின்வாங்கும்.

விதி என்பது இறைவனால் ஏற்பட்டது அன்று. நம் முந்தைய பிறப்புகளில் ஏற்பட்ட செயல்களின் பலனே விதி என்று நாம் கூறுவது. புருஷன் என்ற ஆத்மாவும், பிரகிருதி என்ற இயற்கையும் சேர்ந்ததே சிருஷ்டி. விதி, பிரகிருதியினால் உற்பத்தியாவது. மனிதன் தன் ஆத்ம பலம் வெளிப்படும் வகையில் தெளிவு பெற்றால் விதி அதற்குக் கட்டுப்பட வேண்டியது நியாயமன்றோ? தொன்றுதொட்டு வாழ்ந்த மனிதன் ஆத்ம பலன் துறவிக்கும், பிரகிருதியின் விதி குடும்பஸ்த- னுக்கும் என வாழ்ந்துவருகிறான். பிரகிருதியின் சூழலில் வாழும்

மனிதன் விதியின் விலக்க முடியாத பிடியில் இருப்பதும் நியாயமே. ஸ்ரீ அரவிந்தர் மனித வாழ்வை, தெய்வீக வாழ்வாக மாற்றுவதை இலட்சியமாகக் கொண்டவர். இந்த நிலையில் உள்ள வாழ்க்கை பிரகிருதியின் பிடியில் இல்லாமல், ஆத்மாவின் ஆதிக்கத்திலிருக்கும். ஆகையால் விதி வலிதன்று.

 1. கர்மம் பாதிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை.

விதி என்பதும் கர்மம் என்று நாம் குறிப்பிடுவதும் அடிப்படையில் ஒரே அமைப்பையுடையவை. இவை இரண்டும் இறைவனால் நிர்ணயிக்கப்பட்டவையில்லை. மனிதன் தன் முந்தையச் செயல்களால் நிர்ணயித்துக்கொண்டவை. அதிக வலிமையுடைய கர்மத்தை விதி என்றும், மற்றவற்றை கர்மம் என்றும் நாம் குறிப்பிடுகிறோம். தன் சுபாவத்தின் பிடியில் உள்ள மனிதன் கர்மத்திற்கும், விதிக்கும் கட்டுப்பட்டே ஆக வேண்டும். தான் பிரகிருதியின் (இயற்கை) அம்சமான சுபாவத்தின் கூறு இல்லை; புருஷனான ஆத்மாவின் அம்சம் என உணர்ந்து, அதன் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட மனிதனுக்கு, தானே ஏற்படுத்திக்கொண்ட பழைய நிலைகளை - கர்மாவை - மாற்றிக்கொள்ளும் திறன் உண்டு.

 1. விஞ்ஞானிகளும், சாதாரண மனிதனைப்போல் மூடநம்பிக்கை உள்ளவர்களே.

ஞானம் என்பது ஒரு விஷயத்தை அது இருப்பதுபோல் அறிந்து கொள்வது. தனக்கு ஏற்கனவே தெரிந்த விஷயத்தைக் கொண்டு புதிய விஷயத்தை ஏற்றுக்கொள்ளும் மனிதன் மூடநம்பிக்கையை வளர்த்துக்கொள்கிறான். மின்சாரத்தைப் பற்றி விளக்கமாகக் கேட்டுக்கொண்ட அறிவிலி "எல்லாம் சரி, இந்த விளக்கில் எண்ணெய் எங்கு ஊற்ற வேண்டும் என்று சொல்லவில்லையே'' என்று கேட்டதற்குக் காரணம், அவன் மின்விளக்கை, அதன் அமைப்பை, எண்ணெய் விளக்கு மூலம் புரிந்துகொள்ள முயல்கின்றான். விஞ்ஞானியின் முறை இதுவே. ஆதலால் அவர்கள் தங்கள் துறையில்

ஏராளமான மூடநம்பிக்கைகளை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு குழுவினர் தங்கள் மூடநம்பிக்கைகளை நம்பாத மற்ற குழுவினரைக் கேலி செய்கின்றனர். இந்த அடிப்படையை விளக்கும் வகையில் ஸ்ரீ அரவிந்தர் ஒரு கணித மேதையும், மூடநம்பிக்கை உள்ளவனும் சந்தித்துப் பேசுவதாகவும் மேதையை அவன் கேலி செய்வதாகவும் எழுதியுள்ளார்.

 1. நோயுற்ற உடல் தன்னைத் தானே குணம் செய்துகொள்கிறது. டாக்டர்கள் உடலில் வியாதியை உற்பத்தி செய்து, பின்னர் அதை உடலின் திறத்தால் குணம் செய்கின்றனர்.
 2. தமிழும், சமஸ்கிருதமும் ஒரே தாயின் இரு புதல்வர்கள்.
 3. எல்லா நாடுகளும் ஒன்றிணைந்து மனித சமுதாயம் ஒருமைப்படும். எல்லா அரசாங்கங்களும் ஒரே உலக சர்க்காரின் கீழ் வர வேண்டும்.
 4. ஆசியர்கள், மங்கோலியர், வெள்ளையர் என பல இனங்கள் இருந்தாலும், எந்த ஓர் இனமும் கலப்படமில்லாமல் தூய்மை- யாய் இன்று உலகில் இல்லை.
 5. ஒரு கல்லைச் சிருஷ்டிப்பதற்கு இறைவன் எடுத்துக்கொள்ளும் முயற்சியும், மனிதனைச் சிருஷ்டிப்பதற்கு எடுத்துக்கொள்ளும் முயற்சியும் ஒன்றே. இறைவனுடைய கணிப்பில் கல்லுக்கும், மனிதனுக்கும் உள்ள வித்தியாசம் மிகக் குறைவு.
 6. யோகம் முதிர்ச்சியடைந்தால், தன் கழுத்தைப் பிடித்து நெறிக்கும் கைகளிலும் இறைவனைத் தீண்டும் இன்பத்தை நுகரலாம்.
 7. ஒருவனது ஆயுள் முடியும் காலத்தில் அவனது ஆத்மா வெளியே வந்து, அந்தப் பிறப்பின் அனைத்துச் செயல்களையும் க்ஷண நேரத்தில் விமரிசனம் செய்து, அடுத்த பிறப்பில் எங்கு ஜனிப்பது என்று முடிவு செய்து, மீண்டும் தன்னிடத்திற்குப் போய் விடுகிறது.

 1. மிருகங்களைக் கொடுமைப்படுத்துபவன், விலங்குக்கும் கீழான உணர்ச்சியுடையவன்.
 2. தேவாலயங்களில் வணங்குபவர்கள் பவித்திரமாக இருக்கும் வரை பிரதிஷ்டை செய்த தெய்வங்கள் அங்கு இருக்கும். பக்தர்களுடைய தூய்மை குறைந்த காலத்து அத்தெய்வங்கள் அங்கு இருக்கா. வணங்குபவர்களின் தன்மைக்குத் தக்கவாறு வேறு தெய்வங்களோ, ஆவிகளோ அங்கு வந்து குடியேறும்.
 3. பூரண யோகம் இறைவனது யோகம்; மனிதனது யோகமில்லை. மனிதன் செய்யக்கூடியது எல்லாம் தன் சரணாகதியை பூரணமாக்கி, இறைவனுக்குக் கருவியாக மாறுவதுதான்.
 4. உலகத்தில் பூரண யோகம் பூரணமாகப் பலித்தால், இறைவனது சத்தியம் உலகில் வந்து நிரம்பும். அது மரணம், மூப்பு, பொய்மை, அறியாமை போன்றவற்றை அடியோடு அழித்துவிடும்.
 5. அன்னையை ஏற்றுக்கொண்டு புதிய சத்திய வாழ்வை நாடும் பக்தன், சாஸ்திரம், சம்பிரதாயம், ஜோஸ்யம், சகுனம், நல்ல-கெட்ட நேரங்களுக்கு அப்பாற்பட்டவன். அவன் அவற்றின் ஆட்சிக்கு உட்பட்டவனில்லை.
 6. மேலைநாடுகள் லௌகீகச் சிறப்பை, பொருளாதாரப் பெரு வாழ்வை நாடுகின்றன. அவை மனித குலத்திற்கு நாசம் விளைவுக்கக்கூடியவை.
 7. மனிதன் தெய்வங்களைவிட ஆத்மீகத்தால் உயர்ந்தவன். தெய்வங்கள் அபரிமிதமான சக்தியுடையவை. அவற்றின் அளவு பூமியின் அளவு. ஒவ்வொரு கடவுளும் பூமி அளவு பெரியதாகும். அவர்கள் வசிக்கும் லோகம் சிருஷ்டியில் பூலோகத்தைவிட 3 நிலைகள் மேலானதாகும். ஆனால் தெய்வங்கள் சிருஷ்டி முடிய

தெய்வங்களாகத்தான் இருக்க முடியும். தங்களுடைய ஆத்மீக நிலையை உயர்த்திக்கொள்ளும் திறன் அவர்களுக்கில்லை. மனிதனுக்கு ஆத்மாவும், அதன் பிரதிநிதியான (psychic being) சைத்தியப் புருஷனும் உண்டு. சைத்திய புருஷன் வாழ்க்கையில் செயல்படுகிறான். ஆத்மா சிருஷ்டிக்கு அப்பாற்பட்டது. சைத்திய புருஷன் சிருஷ்டியில், வாழ்க்கையில் செயல்படுபவன்; அவனுக்கு வளர்ச்சியுண்டு. அதன் மூலம் மனிதன் தன் ஆத்மீக நிலையில் தொடர்ந்து முன்னேறுகிறான். தெய்வங்களுக்கு இந்த ஆத்மாவின் பிரகிருதியான சைத்திய புருஷன் கிடையாது. ஆதலால் தங்களுக்கென ஏற்பட்ட அளவிறந்த சக்தியை அவர்கள் பிரயோகம் செய்து மகிழலாம். தங்கள் ஆத்மீக நிலையை உயர்த்திக்கொள்ள முடியாது. அவர்கள் அப்படி விரும்பினால் பூவுலகத்தில் மனிதராகப் பிறந்தால்தான் முடியும் என்பது ஸ்ரீ அரவிந்தரது கருத்து.

 1. மனிதப் பிறவியில் 99% இறைவனுக்கு எதிரான சக்தியாகும்.
 2. ஒரு கணம்கூட மனிதனால் (ego) தான் எனும் உணர்வை வெளிப்படுத்தாமல் செயல்பட முடியாது.
 3. இதுவரை (ego) மனிதனுடைய அகந்தை இறைவனுக்குப் பெரிய சேவை செய்தது. சிருஷ்டியின் சிறப்பை இந்த அளவுக்குக் கொண்டுவந்தது இதுதான். எதிர்காலத்தில் இதுவே மனிதனுடைய ஆத்மீக வளர்ச்சிக்குத் தடையாக அமைந்துள்ளது.
 4. மதங்களுடைய காலம் முடிந்துவிட்டது. எதிர்காலம் ஆன்மீகத்- திற்கேயுரியது.
 5. யுகாந்த காலமாகவுள்ள சிருஷ்டியில் சிறப்பான நேரங்களுண்டு. அதை இறைவனின் நாழிகை' என்பர். ஆயிரமாயிரம் ஆண்டுகளில் சாதிக்க முடியாத காரியங்களை இப்படிப்பட்ட நேரத்தில் உடனே சாதிக்கலாம். இன்று அப்படிப்பட்ட ஒரு

விசேஷ காலமாகும். இதை ஆங்கிலத்தில் ஸ்ரீ அரவிந்தர் Hour of God என்கிறார்.

 1. தன் பாவத்தை இறைவன் அழிக்கும்பொழுது மனிதன் புளகாங்- கிதமடைகிறான். தன் புண்ணியத்தை இறைவன் அழிக்கும் பொழுது மனிதன் கவலைப்படுகிறான். பாவமும், புண்ணியமும் இறைவனை அடையத் தடையாக இருப்பதை அவன் உணருவது இல்லை.
 2. அற்புதங்கள் அரிபொருளாக இருக்கின்றன. அன்னையை ஆத்மாவில் பிரதிஷ்டை செய்தபின் அற்புதங்கள் அன்றாட நிகழ்ச்சிகளாகின்றன.
 3. ஒரு பாடத்தை (கணிதம், மொழி, இலக்கியம், சரித்திரம்) நன்கு கற்றுக்கொண்டால் அவனது படிப்பு முடிந்துவிடும். மற்ற பாடங்களை அவனே பயில முடியும்.
 4. பணம் தெய்வத்தின் சொத்து. ஆன்மீகவாதிகள் பணத்தைப் புறக்கணித்தால், அநியாயவாதிகள் பணத்தை எடுத்துக் கொள்வார்கள். இறைவன் சார்பில் பணத்தை தீய சக்திகளிடம் இருந்து இறைவனுக்காகக் கொண்டுவருவது ஆன்மீக- வாதிகளின் கடமை.
 5. அன்னையின் பாதம் ஊன்றிய இடமெல்லாம் ஆனந்தம் பெருக்கெடுக்கின்றது.
 6. அன்னையிடமிருந்து கிடைக்கும் தண்டனையும் அவரது அருள் நிறைந்ததாகும்.
 7. உணர்ச்சிகளை, புலன்களை அவிப்பது மரபு. அது இறைவனின் திருவுள்ளமில்லை. அவற்றைத் தூய்மைப்படுத்தி இறைவனின் கருவியாக்குவதே பூரண யோகத்தின் நோக்கம்.
 8. உடன் ஆழத்தில் ஏராளமான சக்தி புதையுண்டிருக்கின்றது.

சித்தர்கள் வெளிப்படுத்தும் சக்திகளுக்கெல்லாம் உடலே உறைவிடம்.

 1. மனிதனுக்கு எழும் பிரச்சினைகள் எல்லாம் அவனுடைய திறமைக்கு உட்பட்டவையே. அவனை மீறிய பிரச்சினைகளை இறைவன் அவனுக்குக் கொடுத்ததில்லை.

******book | by Dr. Radut