Skip to Content

11. மௌனத்தில் வெளிப்படும் மனோசக்தி

இச்சையற்றவர்க்குச் சித்திக்கும்' என்பது தமிழ்நாட்டு வாக்கு. இது ஆத்மீக அடிப்படையில் ஏற்பட்ட உண்மை. இந்த மகத்தான உண்மையின் ஒரு சிறு பகுதி, ஒரு கதிர் போன்ற மற்றொரு உண்மையைப் பற்றிய கட்டுரை இது. நாம் எண்ணிய கருத்தை வெளியிட வேண்டிய காலத்தில் மனத்தைக் கட்டுப்படுத்தி, அதை வெளியிடாமல் இருந்தால், அந்தக் கருத்திற்கு ஒரு சக்தி வருகின்றது. நாம் வெளியிட்டுப் பெறும் பலனைவிட, வெளியிடாமலிருக்கும்போது கிடைக்கும் பலன் அதிகமானது. அந்தச் சக்தி மனத்தின் சக்தியாகும். மௌனமாக நாமிருக்கும்பொழுது சக்தியுடன் வெளிப்படும் எண்ணத்தின் திறனாகும். அதை silent will என்கிறோம். பழம்பெரும் பள்ளி ஒன்றில் திறமை மிகுந்த இளைஞர் ஒருவர் ஆசிரியராகச் சேர்ந்தார். எல்லா ஆசிரியர்களும் அவருடன் விருப்பமாகப் பழகினார்கள். அவருடைய திறமையை வெளிப்படையாகப் புகழ்ந்தார்கள். ஒரு சில ஆண்டுகள் கடந்தன. முதிய ஆசிரியர்கள் இருவர், இவருடைய (இளைஞருடைய) நெருங்கிய நண்பர்கள், பொறாமையால் கொந்தளிக்க ஆரம்பித்தனர். தலைமையாசிரியரிடம் புகார் செய்தனர். தலைமையாசிரியர் இவரை விசாரித்தார். இளைஞர் தாம் நண்பராகக் கருதிய முதிய ஆசிரியரிடமே சென்று இது பற்றிச் சொல்வார். இதுபோல் 29 புகார்கள். முடிவில் இளைஞருக்கு அறிவு வந்தது. புகார் செய்பவர்கள் யார் என உணர்ந்தார். நெருக்கடி தாங்க முடியாமல் தலைமை ஆசிரியர், ஆசிரியர் கூட்டத்தைப் போட்டு இந்தப் புகார்களை விவாதிக்க ஏற்பாடு செய்தார். இளைஞர் மீது

இருந்த 29 புகார்களில் ஒன்று, அவர் அடிக்கடி ஆசிரமம் செல்கிறார்' என்பது. இது போன்ற கூட்டங்களில் தலைவர் தெளிவில்லாதவரானால் நிகழ்ச்சிகள் எந்தப் பாதையில் போகும் என்று சொல்ல முடியாது. பள்ளியின் 100 ஆண்டு வாழ்க்கையில் நடக்காத நிகழ்ச்சி. எல்லா ஆசிரியர்களும் மிரண்டுபோயிருந்தனர். ரகளை நடக்குமா, உத்தியோகம் போகுமா, மற்றவர்களுக்கெல்லாம் எதிர்காலம் எப்படி இருக்கும்? எதனையும் சொல்ல முடியவில்லை. மிரட்சி நிறைந்த முகத்துடன் பீதியுணர்வோடு கூட்டம் ஆரம்பமாயிற்று. இளைஞர் silent willஐக் கடைப்பிடிப்பது என முடிவு செய்தார். தன் மனதிலுள்ள எதையும் பேச வேண்டாம் என முடிவு செய்தார். தலைமை ஆசிரியர் குற்றப்பட்டியலைப் பாதி வரைக்கும் பேசினார். மேலே பேச முடியவில்லை; திணறினார்; நின்றார். ஓர் ஆசிரியர் எழுந்து, "இந்தச் செய்தியெல்லாம் எப்படிக் கிடைத்தது?'' என்றார். தலைமை ஆசிரியரின் முகத்தைப் பார்த்தபின், பதில் எதிர்பார்க்காமல் உட்கார்ந்துவிட்டார். புகாரைக் கிளப்பிய முதிய ஆசிரியர் எழுந்தார். "இந்த மாதிரிப் பிரச்சினைகளை.....'' என ஆரம்பித்தார். தலைமை ஆசிரியர் பொறுமை இழந்தார். "உட்கார். இங்கு நான் தலைமை ஆசிரியர். நான் என்ன செய்ய வேண்டும் என எனக்கு யாரும் சொல்ல வேண்டியதில்லை. அவரவர் வேலையைச் செய்யுங்கள். என்னிடம் புகார் கொண்டுவர வேண்டாம்'' என்று இரைந்து பேசினார். கூட்டம் கலைந்துவிட்டது. இளைஞரின் மனதில் உள்ள எண்ணத்தை அதே சொற்களில் தலைமையாசிரியர் பேசிவிட்டார். அவருடைய மௌனத்திற்குப் பலன் கிடைத்தது. அன்னை அவருடைய மௌனத்தின் மூலம், மனக் கட்டுப்பாட்டின் மூலம் செயல்பட முடிந்தது.

நம் மனத்தின் எண்ணங்களைத் திறம்படப் பேசினால் சிறப்பான பலன் கிடைக்கும் நேரங்களுண்டு. திறமை அதிகமானால், பலனுடைய சிறப்பு அதிகமாகும். ஏதோ ஒரு சமயத்தில் திறமை பலனற்றுப்போகும். எவராலும் எதுவும் செய்ய முடியாமற்போகும். அப்பொழுது மனிதத் திறமை செயல்பட முடியாது; தெய்வம் செயல்பட வேண்டும்.

அத்தகைய செயலுக்கு மௌனமான மனம் சிறந்த கருவியாகும். B.N. ராவ் ரிசர்வ் பேங்க் கவர்னர். பர்மீய சர்க்கார், ஆலோசனைக்- காக அவருக்கு அழைப்பு அனுப்பியது. போகும் வழியில் அவர் கல்கத்தா ராஜ்பவனில் தங்கினார். இந்து-முஸ்லீம் கலகம் தலைவிரித்தாடும் நேரம். ராவ் அங்கு I.G.யைப் பார்த்தார், விசாரித்தார். I.G. போலீஸ் எடுத்த முஸ்தீபுகளை விவரித்தார். கலகத்தை எப்படிக் கட்டுப்படுத்தினார்கள் என்று கூறினார். ராவ் இந்தியப் போலீஸின் திறமையை வியந்தார். பர்மா சென்று திரும்பி வரும்பொழுது ராஜ்பவனில் தங்கினார். கலகம் நிலைகடந்தவிட்ட நேரம். போலீஸை நம்ப முடியவில்லை. ராணுவத்தை நம்ப முடியவில்லை. நவகாளியில் பயங்கரப் படுகொலை. மனித யத்தனம் பயனற்றுப் போய்விட்டது. இனி கலகம் தானே அடங்கினால் உண்டு. காந்திஜி நவகாளிக்குச் சென்றார். இந்துக்களையும், முஸ்லீம்களையும் ராம்துன்' பாடச் சொன்னார்; அமைதியைப் பரப்பினார். அந்த நேரம் ராவ் அங்கு ராஜ்பவனில் தங்கியிருந்தார். மீண்டும் I.G.யைப் பார்க்க நேர்ந்தது; விசாரித்தார். "எல்லாம் ஒரு மனிதன் - காந்திஜி - செய்த அற்புதம்'' என்றார். மனிதத் திறமை தேவை; அதற்கெல்லை உண்டு. அது பயன்படாதபொழுது தெய்வம் செயல்படும். நம் வாழ்க்கையில் அது போன்ற நூற்றுக்கணக்கான சந்தர்ப்பங்கள் வருகின்றன. நம்மை மீறிய சந்தர்ப்பங்களில் நாம் மனத்தை அடக்கி, மௌனமாக இருந்தால் அன்னையின் செயல் சிறப்பாக நடைபெறும். நம் திறமைக்கு உட்பட்ட சந்தர்ப்பங்களிலும் மௌனத்தைக் கடைப்பிடிப்பது அரிது. அது யாருக்கு முடியுமோ அவர்களுக்கு வாழ்க்கையில் யோகத்திறன் ஏற்பட்டுவிடுகிறது. இதற்குப் பெரிய மனிதர்களிடம் போக வேண்டாம். நமக்குத் தெரிந்த சாதாரண நபர்கள் சிலருக்கு இந்தக் குணம் அமைந்திருக்கும். அப்படிப்பட்ட நபர்களிடம் மற்றவர்கள் "நீபாட்டுக்குத் தலையை ஆட்றே, அவுங்க எல்லாத்துக்கும் ஒத்துக்கிறாங்க. இது உன் ராசி'' என்று சொல்வதைக் கேட்கலாம். இன்னும் சில பொறுமைசாலிகளைப் பார்க்கலாம். "நானாக எதையும் தேடிப் போக மாட்டேன். தானே வருவது வரட்டும்''

என்பார்கள். அவர்களைத் தேடி எல்லாம் வரும்; இது ஒரு பெரிய குணம். எளிய மனிதர்களிடையேகூட தென்படும்.

கேட்டாலொழிய கிடைக்காது என்ற சந்தர்ப்பங்கள் உள்ளன. அப்பொழுது கேட்பது சரி. கேட்காவிட்டால் மற்றவர்களுக்கு உன் தேவை எப்படித் தெரியும்? தெய்வம்கூட மனிதன் கேட்கட்டும் என்றுதானே இருக்கிறது. மாறாக, கேட்டதனால் காரியம் கெட்டுப் போகிற சமயம், கேட்டே கெடுத்தோம் என்பது போன்ற நேரமும் உண்டு. இந்த வித்தியாசத்தை எப்படிப் புரிந்துகொள்வது?

உன்னுடைய உரிமையும், தேவையும் நியாயமானவை. ஆனால் மற்றவர்களுக்குத் தெரியாது என்னும்பொழுது கேட்பது சரி. பெண்ணுக்கு மாப்பிள்ளையைத் தேடிப் போக வேண்டியது அவசியம். கல்லூரி சேர விண்ணப்பம் போட வேண்டியது அவசியம். நான் silentwillஐ கடைப்பிடிக்கப்போகிறேன்' என்று சொல்ல முடியாது. சித்தப்பாவுக்குப் பிள்ளையில்லை. அவருடைய சொத்தை அவர் குடும்பத்திலுள்ள 4 பிள்ளைகளில் ஒருவருக்குக் கொடுக்கலாம். அவருக்கு உன்னைப் பற்றியும், மற்ற பங்காளிகளைப் பற்றியும் முழுவதும் தெரியும். கேட்காமலிருக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம். silent willஇன் முழுச்சக்தியும் இந்த மாதிரி நேரங்களில் தெரியும். ஒரு கமிட்டி கூட்டம் நடக்கிறது. விழாவை ஆகஸ்டில் வைத்தால் நல்லது. எல்லோரும் அறிவாளிகளாகவும், நல்லவர்களாகவும் இருந்தால், ஏன் ஆகஸ்டில் கூட்டத்தை வைக்க வேண்டுமென்று சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள். அங்கு விளக்கம் கொடுப்பது முறை. கமிட்டியில் உள்ளவர்கள் தங்கள் முக்கியத்தை மட்டுமே கருதுபவர்களானால், நீங்கள் சொல்லியதற்காகவே மறுத்துப் பேசுபவர்களானால், விதண்டாவாதக்காரர்களானால், அங்கு விளக்கம் பலன் தாராது; மௌனம் பலன் தரும். முந்திக்கொண்டு வரும் நம் எண்ணத்தைப் புறக்கணிப்பது பிரம்மப் பிரயத்தனம்.

புறக்கணித்தால் நம் மனதில் உள்ள அதே எண்ணத்தை மற்றவர்கள் அனைவரும் பேசுவார்கள்.

லால்பகதூர் சாஸ்திரியும், இந்திரா காந்தியும் முதன்முறை பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபொழுது நாட்டுக்கே ஒரு வியப்பான செய்தியாக இருந்தது. அவர்கள் silent will பழகவில்லை. நிலைமையும், அவர்களது மனப்பாங்கும் அமைந்த விதம் அது. அவர்கள் பதவியை நாடவில்லை; பதவி அவர்களை நாடியது. அவர்கள் அந்தப் பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால் கிடைத்திருக்குமா? அல்லது இவ்வளவு சுமுகமாகக் கிடைத்திருக்குமா என்பது கேள்வி.

வீட்டிலும், ஆபீசிலும் அடிக்கடி நாம் கேள்விப்படுகிறோம், நாங்கள் எல்லாம் ஆசைப்படுகிறோம், கேட்கிறோம். எங்களுக்கு எல்லாம் கொடுக்கவில்லை; பரவாயில்லை. கேட்காத ஒருத்தருக்கு வலியப்போய் ஏன் கொடுக்கிறீர்கள்? என்ன விந்தை இது?' என்று சொல்லும் சந்தர்ப்பங்களுண்டு.

அன்றாட வாழ்க்கையில் நாம் அன்னையின் செயலை எல்லா இடங்களிலும் பார்க்கலாம். silent will மனோசக்தி, மௌனத்திற்கு உள்ள சக்தி என்பதை அன்னை விளக்கியிருக்கிறார். சுருக்கமாகச் சொன்னால், ஒருவரிடம் நாம் ஒரு விஷயமாகப் பேசும்பொழுது நாம் நம் கருத்தை விளக்கிக் கூறுவதைவிட, கூறாமலிருக்கப் பழகிக் கொண்டால் இந்த மனோசக்தி செயல்படும் என்பதேயாகும். நாலு பேர் சந்தித்துப் பேசும்பொழுது ஒவ்வொருவரும் தம் தம் கருத்தைத் தெரிவிக்க ஆர்வத்தோடு முயல்வதை நாம் காணலாம். நாம் அங்கிருந்தால் நமக்கு அது போன்ற ஆர்வம் இருப்பதைக் காணலாம். அந்த ஆர்வத்தைக் கட்டுப்படுத்தி மௌனமாக இருந்தால் அந்த மௌனத்தின் மூலம் நம் எண்ணம் செயல்படும் என்பதே கருத்து. ஹார்மன் என்று ஓர் அமெரிக்க ஆபீசர். நூறு கோடி ரூபாய் turnover கம்பெனியில் vice presidentஆக இருக்கிறார். இவர் ஒரு புத்தகம் எழுத முன்வந்தார். அதற்குப் பல பெரிய கம்பெனிகளைப்

பற்றி ஏராளமான விபரங்கள் தேவைப்பட்டன. அவற்றிற்கெல்லாம் கடிதமெழுதினார். எந்தக் கம்பெனியும் பதில் போடவில்லை; நேரில் போய்ப் பார்க்கலாம் என்று ஒரு கம்பெனிக்குச் சென்றார். இது ஆயிரம் கோடி ரூபாய் turnover உள்ள கம்பெனி. ஹார்மன் இந்தக் கம்பெனித் தலைவர், உபதலைவரிலிருந்து ஆரம்பித்து, கடைசிச் சிப்பந்திவரை ஒரு 10 பேரை interview செய்ய வேண்டும். கம்பெனிக்குப் போய் ரிசப்ஷன் மானேஜரைப் பார்த்தார். அவர் "நீங்கள் நினைப்பது நடக்காது, போகலாம்'' என்று சுருக்கமாக முடித்துவிட்டார். ஹார்மன் தம் புத்தகத்தைப் பற்றியும், அதனால் இந்தக் கம்பனிக்கு என்ன பலனிருக்கும் என்றும் விளக்கினார். மானேஜர் எதையும் காதில் வாங்கவில்லை. ஏன் தமக்கு interview கொடுக்க வேண்டும் எனச் சில அரிய கருத்துகள் அவர் மனதிலிருந்தன. அவற்றை விளக்கிச் சொன்னால் பலனிருக்கும் என ஹார்மனுக்கு அளவுகடந்த ஆர்வம். தம்மையும் மீறி கருத்துகள் மனதில் வரிசைப்படுத்திக் கொண்டு வெளிப்படத் துடிக்கின்றன. அப்பொழுது ஹார்மன் silent will என்ற கருத்தை நினைவுபடுத்திக்கொண்டு சோதனை செய்ய எண்ணினார். இவரது எண்ணத்தைப் புறக்கணித்துவிட்டு, மேற்சொன்ன கருத்துகள் முந்துகின்றன. பிரம்மப் பிரயத்தனம் செய்து தம் கருத்துகளைப் புறக்கணித்தார்; வெற்றி கண்டார். அரை நிமிஷத்தில் மானேஜர் பேச ஆரம்பித்தார். ஹார்மனுடைய முதல் கருத்தைக் கூறி "பார்க்கலாம்'' என்றார். ஹார்மனால் தம்முள் பொதிந்து கிடக்கும் கருத்து வரிசையைப் புறக்கணிக்க முடியவில்லை. அரை நிமிஷத்தில் தம் கண்ணெதிரே கண்ட ஆச்சரியத்தை நம்ப முடியவில்லை. போராட்டம் அவரை உலுக்கியது. அவர் திணறிக் கொண்டே இருக்கும்பொழுது மானேஜர் ஹார்மன் மனதிலுள்ள இரண்டாம் கருத்தைத் தாமே சொல், "நீங்கள் சொல்வதும் சரிதான்'' என்றார். ஹார்மனுக்கு ஆச்சரியம் அதிகரித்ததைப் போலவே கருத்து முந்திக்கொள்ளும் மனப்போராட்டமும் மேலிட்டது. ஒவ்வொன்றாக மானேஜர், ஹார்மன் மனதில் உள்ள எட்டு கருத்துகளையும் சொல்லி, முடிவாக 10 interview ஏற்பாடு

செய்வதாகச் சொன்னார். இதுவே நாம் நம் மனதை அடக்குவதால் ஏற்படும் பலன். அன்னை இதை silent will என்கிறார்கள். மௌன சக்தி என நாம் கூறலாம். மனத்தை அடக்குவது, புலன்களைப் புறக்கணிப்பது, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது போன்றவை உயர்ந்த செயல்கள். வாழ்க்கையில் பெரும்பலன் தரக்கூடியவை. அன்னை பக்தர்களுக்குப் பெறற்கரிய பெரும்பலன்களைத் தொடர்ந்து பெற்றுக் கொடுக்கக்கூடியவை.

ஓர் அரசியல் செல்வாக்குள்ள தாலுக்கா ஆபீஸ் குமாஸ்தாவுக்கு ஒரு பெண். அந்த ஊர் தலைமை ஆசிரியருடைய குடும்பமும், இவருடைய குடும்பமும் நெருங்கிய நண்பர்கள். ஆசிரியருக்கு 9 பிள்ளைகள். எல்லோரும் பட்டதாரிகள். ஒருவர் இந்தப் பெண்ணை தகப்பனாரின் செல்வாக்குக் கருதி மணக்க விரும்பினார். அவர் சாது. போஸ்டாபீஸ் குமாஸ்தா. அதிகம் பேச மாட்டார். அவர் தம்பி பட்டதாரி ஆசிரியர். அதே காரணத்திற்காக அவரும் அந்தப் பெண்ணை விரும்பினார். ஒருவர் மனம் மற்றவர்க்குத் தெரியாது. தம்பி அந்தப் பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று அவளைச் சந்தித்துப் பேசுவார். பெண்ணின் தகப்பனாருக்குச் சந்தோஷம். பெண்ணுக்கு அந்த வீட்டிலிருந்து ஏதாவது ஒரு பிள்ளையை மணம்புரிய அவருக்கு அவா. அண்ணன், தம்பியின் கருத்து தெரிந்தவுடன் தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டார். வெளி மாநிலத்திற்கு மாற்றலாகிப் போய்விட்டார். திருமணம் செய்ய வேண்டிய நேரம் வந்ததும் திருமண ஏற்பாட்டை churchஇல் செய்வதற்கு முன் தகப்பனார் முறைக்காக பெண்ணையும் ஒரு வார்த்தை கேட்கலாம் என்று நினைத்தார்; கேட்டார். பதில் வேறு மாதிரி வந்தது. "எனக்கு சின்னவரைப் பிடிக்காது, பெரியவரைப் பிடிக்கும்''. ஊரே அதிசயப்பட பெரியவருக்கே பெண்ணைக் கொடுத்தார்கள். பெரிய உத்தியோகம் வாங்கிக் கொடுத்தார் மாமனார். I.A.S.உம் வாங்கிக் கொடுத்தார். கலெக்டராக ரிடையர் ஆனார் பெரியவர்.

மௌனத்தின் சக்தி பெரியது. மனதிலுள்ளதைக் கட்டுப்

படுத்துவது ஒரு வகை மௌனம். எந்தத் தகுதியிருந்தாலும், எதையும் கனவிலும் கருதாமருக்கக்கூடியது உயர்ந்த மௌனம். ஒரு பக்தர் வெளியூரிலிருந்து ஆசிரமம் வருபவர். எல்லாத் தரிசன நாள்களைவிட ஸ்ரீ அரவிந்தர் சமாதியான நாள் அவருக்கு முக்கியமான நாள். அன்றைய தினம் தவறாமல் வருவார். அன்றுள்ள அமைதி ஆஸ்ரமத்தில் மிகவும் சிறப்பானது. அன்றைய தினம் சமாதியைச் சுற்றி தியானம் நடக்கும். ஸ்ரீ அரவிந்தர் இருந்த காலத்தில் அவருக்கு நேரடியான சேவை செய்த சாதகர்களில் ஓர் 20 பேருக்கு அன்னை அன்றைய தினத்தில் ஸ்ரீ அரவிந்தருடைய கட்டிலுக்கு அருகில் அமர்ந்து தியானம் செய்யும் பாக்கியத்தை அளித்திருந்தார். அந்த வெளியூர் பக்தருக்கு ஆசிரமத்தைப் பற்றி எந்தச் செய்தியும் தெரியாது. அதுபோல் இந்த ஏற்பாடும் அவருக்குத் தெரியாது. ஒரு டிசம்பர் 5ஆம் தேதி தியான மண்டபத்தில் அன்று குறிப்பிட்ட சாதகர்கள்தாம் உட்கார முடியும். இவர் தியானத்திற்கு வந்தார்; தியான மண்டபத்திற்கு வெளியே உட்கார்ந்தார். இவரைத் தெரிந்த முதிய சாதகர் ஒருவர் இவரை அன்று அழைத்துப்போய் ஸ்ரீ அரவிந்தரின் அறையில் உட்காரவைத்து "இங்கேயே தியானம் செய்'' என்று சொல்லி, அமர்த்திவிட்டு வந்தார். இதுவும் ஒரு silent will ஆகும். கேட்காமலிருத்தல் என்பது வேறு, வெளியிட முடியாத பேராசை என்பது வேறு. கேட்காமலிருப்பது என்பது ஓர் உயர்ந்த மனத் திண்மையிருந்து வருகிறது. மற்றது தம் பேராசையை மற்றவர்கள் தெரிந்துகொண்டால் கேவலமாயிற்றே என்ற வெட்கத்தால் ஏற்படுவது. கேட்காமலிருப்பவர்களைக் கேட்டால், தாமே கிடைத்த பெரிய பேறுகளை வரிசையாகச் சொல்வார்கள். மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் கேட்பவர்கள், பல முறை வற்புறுத்திக் கேட்பவர்களைக் கேட்டால், கேட்டுக் கிடைக்காமற்போன நீண்ட பட்டியலைச் சொல்வார்கள்.

சிலர் "நான் வேண்டியதைக் கேட்பேன். கேட்டபொழுதெல்லாம் கிடைத்திருக்கிறது'' என்பார்கள். அவர்கள் வலிமையுள்ள உள்ளம்

உடையவர்கள். இவர்களுக்கு இது சரி. இவர்களும் கேட்காமலிருக்கப் பழகிக்கொண்டால் இதைவிடப் பெரும்பலன் அடைவார்கள்.

சிலர் "நான் ஒவ்வொரு முறையும் கேட்கிறேன். எப்பொழுதும் கிடைப்பதில்லை. எதுவும் கேட்டுக் கிடைத்ததில்லை'' என்பர். இவர்கள் ஆசைக்குட்பட்டவர்கள். இவர்கள் கேட்பதை நிறுத்தினால் இப்பொழுது கிடைக்காதது கிடைக்கும்.

சிலர் "நான் எதையும் கேட்பதில்லை. வேண்டியதெல்லாம் கிடைக்கிறது'' என்பர். இவர்களே மௌன சக்தியைப் பிரயோகம் செய்பவர்கள்.

சிலர் "நான் எதையும் கேட்பதேயில்லை. எதுவுமே கிடைத்ததும் இல்லை'' என்பர். இவர்கள் திறமையற்றவர்கள். இவர்கள் ஓரளவு தகுதியைப் பெற்றபின் கேட்க ஆரம்பித்தால் கிடைக்கும்.

20 பாக்டரிகள் உள்ள ஒரு தொழிலதிபருடன் ஒரு பாக்டரி உள்ளவர் கூட்டாளி' என்ற பெயரில் பழகியவர். இந்தப் பெரிய முதலாளி தம் 40 வருட வாழ்க்கையில் தம் technology, விற்பனை உரிமை, (trade sheets), தொழில் ரகசியங்கள், எதையுமே தம் உறவினர்கட்குக்கூட சொல்லியதில்லை; கொடுத்ததில்லை. இந்தச் சின்ன முதலாளி அவருக்கு எல்லாச் சேவைகளையும் செய்வார் - எதையும் கேட்காத குடும்பத்தில் பிறந்தவர். 10 ஆண்டுகள் கழிந்தன. பெரியவர், சின்னவருக்கு ஒன்று ஒன்றாய் கொடுக்காதவற்றை எல்லாம் தாமே கொடுக்க ஆரம்பித்தார். சின்னவர் 5 வருட காலத்தில் பெரியவருக்குச் சமமாக வந்துவிட்டும், இன்னும் சேவைதான் செய்வார்; எதையும் கேட்கமாட்டார்.

கைரசீதுகூட இல்லாமல் ரூ.150 சம்பளக்காரரிடம் 1960இல் 12,500 ரூபாயைக் கொடுத்தவரை உலகமே எச்சரித்தது. அவர் ரசீதும் பெறவில்லை; பணத்தையும் கேட்கவில்லை. பணம் தானே அவர் வீடு தேடி வந்தது. எவருமே நம்பவில்லை. பணத்தைக் கொடுத்தவருக்கு

அன்னை துணை. கேட்காமலிருந்த தன்மை அன்னைக்குக் கருவி.

சிறியவர்கள், பெரியவர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள், எல்லோரும் தன்னையறியாமல் இந்த முறையைப் பல சமயங்களில் கையாளுகிறார்கள். பொதுவாகத் தம் கருத்தை வெளியிட முடியாத நிலைமைகளில் அவர்கள் மௌனத்தைக் கடைப்பிடிக்கின்றார்கள். அதற்கும் உரிய பலன் உண்டு. தம்மால் தம் கருத்தை வெளியிடச் சந்தர்ப்பம், உரிமை, சலுகை முழுமையாக இருக்கும்பொழுது மனக் கட்டுப்பாட்டில் கருத்தை வெளியிடாமல் இருப்பது சிறப்பு. சிறந்த பலன் அளிக்கும். அவர் அன்னையின் பக்தரானால் அன்னை செயல்பட உதவியாக இருக்கும்.

இதன் தத்துவம் என்ன? சென்னையிலிருந்து விழுப்புரம் செல்லும் ரயில் செங்கல்பட்டில் ஏறுபவர், நம்ம ரயில் எப்பொழுது வரும்' என்கிறார். ரயில் பொதுவானது. பிரயாணிகளுடைய உடைமை இல்லை. ஆனால் பேச்சுவழக்கு அப்படி அமைந்துள்ளது. அதேபோல் என் எண்ணம்' என்று நாம் கருதும் எண்ணம் பல வருஷங்களுக்கு முன் தோன்றி, பலர் மனதில் உதித்து, உலவி வருகிறது என்பதே ஆத்மீக உண்மை. ஸ்ரீ அரவிந்தர் யோகப் பயிற்சியை மேற்கொண்ட போது மகாராஷ்ட்ரா யோகி விஷ்ணு லீலீ அவரை "உட்கார்; கண்ணை மூடிக்கொள்; எண்ணங்கள் வெளியிலிருந்து உன் மனதில் புகுவதைப் பார்ப்பாய்'' என்றார். ஸ்ரீ அரவிந்தர் தம் தியானத்தில் அந்த உண்மையைக் கண்டார். எண்ணங்கள் உலகில் உலவுகின்றன; ஒருவர் மனதில் புகுந்து வெளிப்படுகின்றன; அவரை வெளிப்படுத்தத் தூண்டுகின்றன; வெளிப்படத் துடிக்கின்றன என்பதுதான் அடிப்படை உண்மை. ஒருவர் தம் மனதில் தோன்றிய எண்ணத்தை வெளியிட மறுத்தால், அந்த எண்ணம் அதை ஏற்றுக்கொள்வதில்லை. மற்றொருவர் மூலம் வெளிப்படுகிறது. இதுவே மௌன சக்தியின் தத்துவமாகும்.

தம் மனதில் தோன்றிய எண்ணங்களெல்லாம், ஒன்று தவறாமல்,

ஒரு காலத்தில் இல்லாவிடில் மற்றொரு காலத்தில் உலகத்தில் நிறைவேறியுள்ளன என ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.

அன்னையின் பக்தர்கள் அனுபவபூர்வமாய்க் கண்டதும், உண்மை என அன்னையால் விளக்கம் அளிக்கப்பட்டவை கீழ்க் காண்பவை.

(i) அன்பர் பிரார்த்தனை ஆசிரமக் கட்டிடத்தினுள் வந்து சேர்ந்த அதே சமயம் பூர்த்தியாகிறது; (ii) விஷயம் முடிந்த பிறகு செய்த பிரார்த்தனையும் ஓர் அபூர்வமான வழியாகப் பூர்த்தியாகிறது; (iii) ஒரு கடிதம் எழுதி அன்னைக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துவிட்டாலும் எழுதியதற்குப் பலனாக, பிரார்த்தனை பலிக்கிறது; (iv) கடிதம் அன்னைக்குக் கிடைத்து, அவர் படித்தமாத்திரத்தில் பலன் கிடைக்கிறது; (v) கடிதத்தை அன்னை படிக்காவிட்டாலும் பலன் கிடைக்கிறது; (vi) அன்னை ஒரு காலத்தில் உங்களைப் பற்றி ஒரு விஷயத்தைச் சொல்லி, பின்னர் அவர் அதை மறந்துவிட்டாலும் பலிக்கிறது.

இவைபோல் பல வகையான பிரார்த்தனைகள் பல கட்டங்களில் பூர்த்தியாகின்றன. அங்கெல்லாம் செயல்படுவது மனோசக்தியே ஆகும்.

அன்னையை ஏற்றுக்கொண்ட கொஞ்ச நாட்களுக்குப்பின் இவையெல்லாம் அன்பர்கள் வாழ்க்கையில் வெவ்வேறு அளவில் செயல்படுகின்றன. அன்பர்கள் நான் நினைத்தவை எல்லாம் நடக்கின்றன', பல விஷயங்களை நினைக்கிறேன், முக்கியமானவை பூர்த்தியாகின்றன', தற்செயலாக அப்படிச் சொன்னேன். பிறகு பலித்து விட்டது' என்றெல்லாம் அடிக்கடி சொல்வதுண்டு. வாக்கும், மனமும் தூய்மையாக இருந்தால், அந்தத் தூய்மை வழியாக அன்னை செயல்படுவதை இவை குறிக்கும்.

திறமைமிக்க இளைஞரான இன்ஜினீயர் அற்புதமான தொழில்

சம்பளத்திற்கு வேலை செய்துகொண்டிருந்தார். கம்பனி அவரிடம் கொடுத்த மெஷின் ரூ.80,000. அவர் கம்பனிக்கு மாதம் ரூ.80,000 சம்பாதித்துக் கொடுத்துக்கொண்டிருந்தார். பெருந்தன்மையுள்ள இளைஞர். தம்மிடம் ரூ.80,000 இருந்தால் தானே அவ்வளவு சம்பாதிக்கலாம். மாமனுக்கு 80 பஸ்கள் ஓடுகின்றன. உதவி கேட்டுப் பழக்கமில்லாதவர். சென்னையினல் உள்ள ஓர் இன்ஜினீயரிங் கம்பெனிக்கு ஒரு நாள் வழக்கம்போலப் போயிருந்தார். லேசாகப் பழக்கமான ஒருவர் இவரிடம் வந்து கைகுலுக்கி "என்னுடன் பார்ட்னராக உங்களுக்குச் சம்மதமா? உங்களையும், உங்கள் தொழிலையும் நான் அறிவேன். தேவையான மூலதனத்தை நான் கொடுக்கிறேன்'' என்று வலிய வந்து கேட்டார். அவருக்கு 1 கோடிக்கு மேல் சொத்து. அவருடைய அண்ணன் ஒரு மாநில முதலமைச்சராக இருந்தார்.

*********



book | by Dr. Radut