Skip to Content

9. பிரார்த்தனை

சாவித்திரி:

"மனித வாழ்வு பரம்பொருளின் பேரருளுடன் இணைந்தால் அற்புதம் மலரும். மலர்ந்த அற்புதம் அன்றாடமும் மலரும். அதை நிகழ்த்தவல்லது மேதையின் புதிய கருத்து, வீரனின் தீரச்செயல், பக்தனின் பிரார்த்தனை'' என்ற பொருளில் பகவான் ஸ்ரீ அரவிந்தருடைய காவியமாகிய சாவித்திரியில் இரண்டு வரிகள் உண்டு. உயர்ந்த செயலுடனும், உன்னதமான எண்ணத்தோடும் பகவான் பிரார்த்தனையை ஒப்பிடுகின்றார். தெய்வங்களைச் சிருஷ்டித்த பரம்பொருளை நாம் பலவாறு குறிப்பிடுகிறோம்; பிரம்மம் என்பது ஒரு வழக்கு; சச்சிதானந்தம் என்பது மற்றொன்று. ஆதி, அனாதி என்றெல்லாம் நாம் அறியும் பரமனைவிட உயர்ந்த ஒன்றை இவ்வுலகம் பெற்றதில்லை. மேல் உலகத்திற்கும் பரமனைவிட உயர்ந்த நிலையொன்றில்லை. மனிதன் பாமரன். அப்பாவி மனிதனுக்கு அனாதியான பரமன் வரம் அருள விழைந்து அதற்குரிய திறனாகப் பிரார்த்தனையை வழங்கியிருக்கின்றான். இதை மனிதன் முழுவதுமாக உணர்ந்தானில்லை; உபயோகப்படுத்துவதுமில்லை. நான் அளித்த கருவியைப் பயன்படுத்தி, என்னை அழைத்து உன் வாழ்வில் செயல்பட அனுமதித்தால், செயல்களை அற்புதங்களாக நான் அனுதினமும் மாற்றிக் கொடுக்கிறேன் என்று அவன் விடும் வானுலக அறிக்கை ஒலிபரப்பப்படாமல் விட்டுப்போன ஒன்று.

வாழ்க்கை நொடித்து, கஷ்டம் வந்த காலத்தே பக்தன்

 

பிரார்த்தனை செய்வது வழக்கம். சிறப்பாக வாழ்க்கை நடக்கும் பொழுது மனிதன் பிரார்த்தனை செய்வதில்லை. பழக்கமாக ஏற்றுக் கொண்ட தினசரி வழிபாட்டிற்குமேல் அவன் செல்வதில்லை. கஷ்டத்தை விலக்கப் பயன்படும் பிரார்த்தனை கருவூலம் போன்ற ஆன்மீகச் செல்வத்தை அளவின்றி பெற்றுத்தரும் என்பதை மனிதன் மறந்து விட்டான். கெட்டதை விலக்க மட்டுமே பிரார்த்தனையை நாடும் மனிதன் நல்லதைச் சேர்க்க வேண்டும் எனும்பொழுது பிரார்த்த- னையை நாடுவதைவிட தன் முயற்சியையே பெரிதும் நம்பிச் செயல்படுவான். பிரார்த்தனை செய்ய நினைத்தால் தன் முயற்சி பலிக்க வேண்டும் என பிரார்த்திப்பான். தன் முயற்சி எல்லாம் தோற்ற பின்னரே, பரம்பொருள் தன் வாழ்வில் செயல்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்வான்.

தெய்வத்திடம் எதைக் கேட்கலாம் என்ற கேள்விக்கு அன்னை பதிலிறுக்கும்வாயிலாக "எதையும் கேட்கலாம்'' என்று ஆரம்பித்து, விளக்கியபின் "மனிதன் தானும் தெய்வமாக வேண்டும் என்று மட்டும் கேட்பதே சிறந்த பிரார்த்தனை'' என்று அன்னை முடிக்கின்றார். பரம்பொருளே இம்மையிலும், மறுமையிலும் சிறந்ததெனினும், அதை அடைய பிரார்த்தனை உகந்த கருவியெனினும், மனிதனைப் பொருத்த வரையில் பிரார்த்தனைக்கு முக்கியத்துவமில்லை. பெண்டு, பிள்ளை, வீடு, கன்று, மாடு, தனம் மட்டுமே அவன் கவனத்திற்கும், கவலைக்கும் உரியதாக இருக்கின்றன. காலம் மாறியதால் மனிதன் மாறினான் என்றால், அந்த மாறிய நிலையிலும் பரமனுக்கும், பிரார்த்தனைக்கும் இடம் இல்லை. பட்டியல் கன்று, மாடு மாறி, T.V., ஸ்கூட்டராக இருக்கலாம். மனிதனுடைய பட்டியலுக்கு வெளியேயுள்ள விஷயங்கள் எவ்வளவு உயர்ந்தவையானாலும், மனிதனுடைய கவனத்தை அவற்றின் பக்கம் திருப்பும் சக்தி உலகத்தில் இல்லை. மந்திரமானாலும், ஜோசியமானாலும், அரசியல் உரிமையானாலும், அந்தராத்மாவின் குரலானாலும், குறி சொல்வதானாலும், தன் பட்டியலைப் பூர்த்தி

செய்வதானால், மனிதனுக்கு அதில் ஆர்வமிருக்கும்; மற்றதெல்லாம் அவனுக்கு அவசியமில்லை. முனிவர்கள் உலகத்தைத் துறந்தார்கள் எனில், மனிதன் தெய்வ வழிபாட்டை இம்மையில் துறக்க முயல்கின்றான். மனிதனுடைய தெய்வம் அவனது அன்றாட வாழ்வு. அதில் உயர்ந்த கட்டங்களை அடைவதே அவனுடைய குறிக்கோள்.

ஆன்மீகம் உலகத்தைத் துறந்தது; துறவறம் பூண்டது. அன்னை உலகத்தைத் துறக்கவில்லை. மாறாக, அன்னை தம் ஆன்மீக வாழ்வை அன்றாட மனித வாழ்வில் நிலைநிறுத்தப் பாடுபடுவதையே தம் குறிக்கோளாகக் கொண்டுள்ளார். பரம்பரையான ஆன்மீக மரபிருந்து அன்னை முற்றிலும் மாறுபடுவதைப்போல, மனித வாழ்விருந்தும் அன்னை வாழ்வு முற்றிலும் மாறுபடுகிறது.

மரபு, இல்லறத்தைத் துறந்தது. மக்கள் இல்லறத்தை நடத்த எதையும் துறக்கத் தயாராக இருக்கிறார்கள். இல்லறம் செம்மையாக நடக்குமானால், வாழ்க்கை வளம் பெற்றதாக இருக்குமானால், மனிதனுக்கு அதைக் கொண்டுவரும் மார்க்கங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடியவையே. நியாயமாகச் சம்பாதிக்காத பணம் தேவையில்லை; சிபாரிசு மூலம் உத்தியோகம் பெறக்கூடாது; பணத்தால், சிபாரிசால், அந்தஸ்தால், குறுக்கு வழியால் சாதிக்கப் பட்டவை விலக்கப்பட வேண்டியவை என்று கருதுபவர்கள் குறைவு. பணத்தைச் சம்பாதிப்பது அவசியம்; உத்தியோகம் அத்தியாவசியம்; அவற்றையடைய உபயோகப்படும் சாதனங்கள் சிறந்தவை என்ற மனப்பான்மைக்கு மெஜாரிட்டி உண்டு.

அன்னை மனிதனிலிருந்தும், மரபிலிருந்தும் வேறுபட்டவர். வாழ்க்கையை முழுவதுமாக ஏற்றுக்கொண்ட அன்னை, மனிதனுடைய அத்தியாவசியமான அனைத்தையும் ஆர்வத்துடன் ஏற்றுக் கொள்கிறார். அவற்றை அவனுக்கு முழுமையாகக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை உணர்கிறார். ஆனால் வாழ்க்கை இருளாலும், பொய்யாலும் சூழப்பட்டது. வாழ்க்கையிலுள்ள ஒளியும்,

மெய்யும் கண்ணுக்குத் தெரியும் அளவிலில்லை. பாமரனையும், பாமரனின் அத்தியாவசியங்களையும், அவனது இல்லறத்தையும் ஏற்றுக்கொள்ளும் அன்னை, அவற்றைப் பவித்திரமான பாத்திரமாக ஏற்றுக்கொள்கிறார். பரமனையடையும் பாதையில் முதற்படியாக ஏற்றுக்கொள்கிறார். இருளுக்கும், அகந்தைக்கும் மரபு வழிவந்த ஆன்மீகம் அளிக்கும் அளவுக்குக்கூட அன்னை மனிதனுடைய இல்லறத்தில் கொடுக்கத் தயாராக இல்லை. அதற்காக அவன் பிரார்த்தனையை எப்படிப் பயன் தரும் வகையில் பயன்படுத்துவது என்பதே இக்கட்டுரையின் மையக்கருத்து.

அன்னையின் இல்லறம்:

மனிதன் பாதையை மாற்றிக்கொள்ள வேண்டும். மறுமையில் இறைவனடியை விழையும் உலக மாந்தர், இம்மையில் இறைவனின் திருவுள்ளத்தை இல்லறத்தில் பூர்த்தி செய்ய முன்வர வேண்டும். பாதையின் போக்கு பரமனை நோக்கி அமைய வேண்டும். அகந்தைக்கு இடம் இல்லை. ஆன்மீகச் சிறப்பானாலும் அடக்கத்திற்கே உயர்வு. அகந்தைக்கு ஆசனமில்லை. வறுமையும், வெறுமையும் நிறைந்த மனித வாழ்வை வளமும், நிறைவும் உள்ளதாக மாற்ற அன்னை மஹாலட்சுமியாக வரக் காத்திருக்கின்றார். ஆனால் அசுரனுடைய பிடியிலிருந்தும், மருளின் மயக்கத்திலிருந்தும் மனிதன் விலகி வந்து, பரமனையும், பகவானையும் நோக்கிப் புறப்பட்டால் அன்னை அவன் மனதை ஆன்மீக ஞானத்தால் நிரப்பவும், அவன் உயிரைக் காளியின் வீரியத்தால் காக்கவும், வாழ்வை மஹாலட்சுமியின் வரப்பிரசாதம் ஆக்கவும், செயல்களைச் சரஸ்வதியின் திறத்தால் மிளிர வைக்கவும், ஆர்வத்துடன் காத்திருக்கின்றார்.

இருளை விட்டு ஒளியை நாடும் மனிதனுடைய இல்லறம் அன்னையின் ஆன்மீகச் சிறப்புள்ள அற்புதமான துறவறமாகும்.

வழிபாடும் சரணாகதியும்:

எந்த உதவியும் பிறரைக் கேட்காமலிருப்பதே சிறந்த கோட்பாடு; நம் மரபில் வந்த உயர்ந்த இலட்சியம். மனிதனையே உதவி கேட்கவில்லை என்றால், தெய்வ சந்நிதியில் நிற்கும்பொழுது எப்படி இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்பது? மனிதனைக் கேட்பவரும் இறைவனைக் கேட்க கூச்சப்படுவார்கள். சிறப்பானவர்கள் இறைவனை நினைத்தபின் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள். மறந்த நிலையே சிறந்த நிலையாகும். எதை வேண்டுமானாலும் தெய்வத்தைக் கேட்கலாம் என்ற அன்னை, அத்துடன் நிற்காமல் எதையும் கேட்காமலிருப்பது சிறந்தது என்றார். இவற்றையெல்லாம் எப்படி விளங்கிக்கொள்வது?

முயற்சி என்பது சிறந்தது. முயற்சி செய்து ஒரு காரியத்தைச் சாதிக்க முடியும் என்ற நிலை இருக்கும்வரை முயற்சிக்கு இடம் உண்டு. அந்த முயற்சி தெய்வத்திற்கு விருப்பமானது. தெய்வச் சேவைக்கு நிகரானது. உடலின் முயற்சியை உழைப்பு என்கிறோம். உழைப்புக்கு உலகத்தில் எங்கும் சிறப்புண்டு. அறிவின் முயற்சியை ஆராய்ச்சி என அறிவோம். ஒருவனுடைய ஆராய்ச்சி உலகை உயர்த்தக்கூடியது. கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு. பிரார்த்தனை ஆன்மீக முயற்சி. எனவே முயற்சிகளில் முதன்மை ஆனது.

தன் முயற்சியைப் பூர்த்தி செய்த மனிதன் மீதியை இறைவனுக்குச் சரணம் செய்கிறான். தன் முயற்சியில் குறை வைத்தவனுக்குச் சரணாகதியில் இடம் இல்லை. தன் முயற்சியைப் பூர்த்தி செய்தவனே சரணாகதிக்கு உரியவனாகிறான் என்பதால், சரணாகதியை ஏற்றுக்கொண்டவனுக்கு முயற்சி இனி இல்லை. எனவே ஆன்மீக முயற்சியான பிரார்த்தனையும் இல்லை.

மழை வேண்டும் என்று நினைக்கும் விவசாயி, மழையைத்

தேடுமுன் விதையைத் தேடியிருக்க வேண்டும்; உழுவதற்குரிய ஏர், கலப்பையைத் தேட வேண்டும். மழை அவனுடைய முயற்சியிலில்லை. விதை, உழவு, ஏர், கலப்பை, உழைப்பு அவனுடையன. தன் பங்கை எல்லாம் குறைவறச் செய்தபின் அவன் மழைக்காகப் பிரார்த்தனை செய்தால், உடல் உழைப்பையும், அறிவின் பொறுப்பையும் பூர்த்தி செய்தபின் ஆன்மீக முயற்சியான பிரார்த்தனையை அவன் நாடுவதாக அர்த்தம். ஒரு முறை பிரார்த்தனை செய்தால் பெருமழை பெய்யும். தன் கடமையை நிறைவேற்றியதால், விவசாயி பிரார்த்திக்க ஆரம்பிக்குமுன் மழை தானாகப் பெய்யும்; பிரார்த்தனை தேவை இல்லை. உழைப்பும், பொறுப்பும் உயர்ந்த பிரார்த்தனைகளாகும்.

ஒரு கட்டத்தில் முயற்சி நமக்குரியது. அதில் உயர்ந்த முயற்சி, ஆன்மீக முயற்சியான பிரார்த்தனை. நமக்கு முயற்சிக்குரியது என்ற வரைக்கும் பிரார்த்தனைக்கு இடம் உண்டு. அடுத்த கட்டத்தில் நம் முயற்சி முடிந்துவிட்டால், சரணாகதியை மேற்கொள்கிறோம். அங்கு முயற்சியில்லை. எனவே ஆன்மீக முயற்சியான பிரார்த்தனைக்கும் இடமில்லை. அன்னை இதே கருத்தை யோக மொழியில் சொல்லும் பொழுது "(ego) தான் எனும் உணர்வு உள்ளவரை முயற்சி அவசியம். தான் எனும் உணர்வு அழிந்தபின் முயற்சியும், அதன் வடிவமான பிரார்த்தனையும் தேவையில்லை'' என்கிறார். தான் அழிந்தபின், மனித முயற்சியை அவனுள் உறையும் தெய்வமே நேரடியாக மேற்கொள்கிறது என்கிறார். முதற்கட்டத்தில் முயற்சியைக் குறைப்பதும், இரண்டாம் கட்டத்தில் முயற்சி எடுப்பதும் சரியில்லை. தவறாகவும் கருதப்படும். நாம் முதற்கட்டத்தை மட்டும் கருதுவதால், அதில் சிறந்த முயற்சியான பிரார்த்தனையை எப்படி மேற்கொள்வது என்பதை மட்டும் இக்கட்டுரையில் கருதுவோம்.

அன்னையிடம் நாம் காணும் முறையின் சிறப்பு ஒன்றை மட்டும் பிரார்த்தனையுடன் தொடர்புள்ளதால் கூறிவிட்டு மேலே போகிறேன். வாழ்க்கையில் ஒரு முயற்சியை மேற்கொண்டால் பிரார்த்தனை என மனிதன் அறிந்தது என்னவென்றால் அந்த முயற்சி உரிய காலத்தில்

வெற்றியடைவதே. கல்லூரியில் சேரும் மாணவன் பிரார்த்தனை செய்து அது பலித்தால், அவனது படிப்பு இடையூறின்றி முடிந்து, எதிர்பார்த்த பலனைக் கொடுக்கும். அன்னை முடிவில் கிடைக்க வேண்டிய பலனை முதலிலேயே கொடுத்துவிடுவார்.

பிரார்த்தனை உயர்ந்தது, அற்புதங்களை நிகழ்த்தவல்லது என்பதனால், அதைச் சிறந்த முறையில் பயன்படுத்துமுன் எதற்கு அதைப் பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியம். ஆன்மீகப் பலன்களை அடைவதற்காகப் பயன்படுத்துவதே தலையாயது. தியானம் பலிக்க, சாந்தம் நிலவ, மௌனம் சித்திக்க, பக்குவம் பெற பிரார்த்தனையைப் பயன்படுத்துவதே அதற்குச் சிறப்பாகும். அதற்கு அடுத்தபடியாக, அறிவு வளர, நேர்மையைக் கடைப்பிடிக்க, கற்பனை சிறக்க, புது எண்ணங்கள் மனதில் உதிக்க பிரார்த்தனையைக் கையாளலாம். அடுத்த நிலையில் கலைவளம் பெருக, தைரியம் அதிகமாக, உற்சாகம் வளர பிரார்த்தனை செய்யலாம். கடைசியாக ஆயுள் வளர, ஆரோக்கியம் பெருக பிரார்த்திக்கலாம். ஆன்ம நலம், மன விசாலம், உயிர், உயிர் சிறப்பு ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்ட பிரார்த்தனைகள் இவை. இக்கட்டுரையில் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளையே முக்கியமாகக் கருதி, அதற்குப் பிரார்த்தனையை எப்படிப் பயன்படுத்த வேண்டும் எனக் கருதுவதால் மேற்சொன்னவற்றை விளக்காமல் அன்றாட வாழ்க்கையில் அவை இடம் பெறும் அளவுக்கே அவற்றை எடுத்துக்கொள்வோம்.

மனிதனுடைய பிரச்சினைகள் நமக்குப் பரிச்சயமானவை. அவற்றைப் பாகுபாடு செய்து சில உதாரணங்கள் மூலம் விளக்குமுன் பிரார்த்தனைக்குரிய முறையைக் கருதுவோம்.

பிரார்த்தனைக்கு ஜீவன் உண்டு:

பிரார்த்தனை சிறப்புற வேண்டுமானால் அதற்குரிய ஜீவன் சிறப்புறும் வகையிலும், நம்முடைய ஜீவனோடு பிரார்த்தனையின்

ஜீவன் சக்தி வாய்ந்த தொடர்புகொள்ளும் வகையிலும் பிரார்த்த- னையை நாட வேண்டும். பிரார்த்தனையின் சிறப்பை நாம் உணர்ந்து, அதன் ஜீவனின் உயர்வை நம் ஜீவன் உணர்ந்தால் முதல் கட்டம் வெற்றி பெறுகிறது. எளிய மொழியில் சொன்னால், "அவருக்குப் பிரார்த்தனை என்றால் உயிர். அது சம்பந்தமான விஷயங்களை லேசாகப் பேசாதே'' என்று பிறர் சொல்லும்பொழுது நம் ஜீவனில் பிரார்த்தனையை இஷ்ட தெய்வமாக பிரதிஷ்டை செய்துவிட்டோம் என்று பொருள். நம் வாழ்க்கைக்குப் பிரார்த்தனை மையமாகவும், உயிருள்ள மையமாகவும் இருக்க வேண்டும்.

குறிப்பாகத் திருமணம் ஆக வேண்டும், பரீட்சை பாஸாக வேண்டும் என்பன போன்ற பிரார்த்தனைகளை மேற்கொள்வதெப்படி என்பதைக் கருதுவதன் முன்பு பிரார்த்தனை என்ற முறையை எப்படி அனுஷ்டிப்பது என்பது அவசியம். இதற்குக் காலம், இடம், பிரச்சினை என்று பல அம்சங்களிருந்தாலும், பிரார்த்தனையை மிகவும் உயர்ந்த முறையில் கையாள அதன் ஜீவனுடன் நம் ஜீவன் தொடர்புகொண்ட பின் முதலாவதாகச் செய்ய வேண்டியது பிரார்த்தனைக்கு நம்முள் இடம் அளிப்பதாகும். பிரார்த்தனையின் பலன் இரு விஷயங்களைப் பொருத்தது. ஒன்று, இறை அருள். மற்றது, நம்முடைய தீவிரம். இறையருள் என்றும் ஒரே நிலையிலுள்ளது. நம் தீவிரத்தின் அளவு நம்மிடம் இருப்பதால், நம் தீவிரத்தை அதிகபட்சமுள்ளதாகச் செய்துகொள்ளுதல் முக்கியம்.

பிரார்த்தனைக்குரிய இலட்சணம்:

பிரார்த்தனையின் தீவிரம் நம்முடைய சக்தி (energy), மனத்தின் நிலை (level of concentration), பிரச்சினையைத் தீர்ப்பதில் உள்ள அக்கறை, பிரச்சினையின் உருவத்தைப் புரிந்து கொள்ளும் அளவு, பிரச்சினையில் நம் பங்கை விலக்க நாம் முன் வருதல் போன்ற பல அம்சங்கள் உள்ளன.

காலையில் நாம் தெம்புடன் இருக்கிறோம். அக்காரணத்தால் அந்த நேரம் பிரார்த்தனைக்குச் சிறந்தது. நமக்குச் சக்தி அதிகமாக இருந்தால் பிரச்சினை எளிதில் தீரும். மனம் எந்த அளவுக்கு ஒரு நிலைப்படுகிறதோ, அந்த அளவுக்குப் பிரச்சினை எளிதில் வழிவிடும். பிரச்சினை தீர்வதில் நமக்கு ஆர்வம் அதிகமாக இருந்தால், அது தீர்வுக்கு உதவும். பிரச்சினை உண்டான வழிவகை நமக்குப் புரியாவிட்டால், அது தீர அது ஒரு தடையாகும். ஏற்பட்ட வகை தெளிவாகத் தெரிந்தால், சுலபமாகத் தீரும். நாமே ஒரு வகையில் பிரச்சினை உருவாகக் காணரமாக இருந்திருந்தால், அதை விலக்கும் வரை பிரச்சினை தீராது. எனவே, பிரச்சினை தீர ஒரு பிரார்த்தனையை மேற்கொள்ளுமுன் அதற்குரிய நேரம் நாம் தெளிவு அதிகமாகப் பெற்ற நேரமாக குறிப்பிட வேண்டும். குறிப்பிட்டபின் கூடியவரை தினமும் அதே நேரத்தில் பிரார்த்தனையைத் துவக்க வேண்டும். மனம் ஒரு நிலைப்படுதல் அவசியம் என்பதால், பிரார்த்தனையை மேற்கொள்ள சில மணி முன்னர் மனத்தை நிலைப்படுத்தி, பிரச்சினையின் பக்கம் கொண்டுவந்து ஒரு நிலையாக இருக்க நம்மைத் தயார் செய்துகொள்ள வேண்டும். பிரச்சினையைத் தீர்க்க நம்முடைய ஆர்வம் எப்படிப்பட்டது என்று சோதனை செய்து, பிரார்த்தனையை ஆரம்பிக்குமுன் ஆர்வத்தை அதிகபட்சமாக்கிக் கொள்ளுதல் நலம். நமக்குரிய பங்கு என்று ஒன்று அதிலிருந்தால், பிரார்த்தனையை ஆரம்பிக்காமல், நம் பங்கை விலக்க முயன்று, விலக்கிய பின்னரே பிரார்த்தனையைத் துவங்க வேண்டும்.

இவ்வளவையும் நமக்குத் திருப்தியாகத் தயார் செய்தபின், மனத்தைச் சோதனை செய்தால், பிரார்த்தனை ஆரம்பித்த கொஞ்ச நாழிகைக்கெல்லாம் தானும் பேச ஆரம்பிக்கும். நாம் ஒரு பக்கம் பிரார்த்தனையைச் சொல்லிக்கொண்டிருந்தால், மனம் ஒரு பக்கம் வேறு ஒன்றைச் சொல்ல ஆரம்பிக்கும். மனம் 3 நிமிஷம் கழித்துப் பேச ஆரம்பித்தால், பிரார்த்தனையை 3ஆம் நிமிஷமே நிறுத்திவிடுதல் நல்லது. அடுத்த முறை பிரார்த்தனை சலனமின்றி 5 அல்லது 6

நிமிஷம் வரை பலிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக, நிமிஷம் நிமிஷமாக அதிகரித்து, பிரார்த்தனை 30 நிமிஷமானால் 30 நிமிஷமும் மனம் நிலையாக இருக்கும்படிக் கொணர்தல் அவசியம். மனத்தில் சலனம் பின்னணிக்குப் போனால் மௌனம் ஏற்பட்டு பிரார்த்தனையைச் சூழ்ந்துகொள்வது தெரியும். மௌனம் வளர நாம் துணையாக இருக்க வேண்டும்.

இவ்வளவு முஸ்தீபுகளையும் நமக்குத் திருப்தியாகச் செய்து, பின்னர் நேரம், இடம் குறிப்பிட்டு பிரார்த்தனையை ஆரம்பித்து, தினமும் தவறாது தொடர்ந்தால், பிரார்த்தனை அதற்குரிய இலட்சணத்துடனிருக்கிறது என்று பொருள்.

அப்படிப்பட்ட பிரார்த்தனை அதற்குரிய பலனைக் கொடுக்கும். அது தீவிரமானதொன்றானால், அதிக பலனை அளிக்கும். பிரார்த்தனையால் மனம் நெகிழ்ந்தால், பலன் உடனே கிடைக்கும். எடுத்த பிரார்த்தனையை ஒரு நாளும் தவறாமல் கைக்கொண்டால் பலன் நிச்சயமாகக் கிடைக்கும். குடும்பத்துப் பிரச்சினையாயிருந்து அனைவரும் பிரார்த்தனை செய்தால், பலன் அபரிமிதமாக இருக்கும். அண்ணனுக்கு வேலை வேண்டும் என்று நாம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும்பொழுது, அண்ணன் தானே பிரார்த்தனை செய்ய முன்வந்தால் பலன் அதிகமாகச் சீக்கிரம் கிடைக்கும்.

பிரார்த்தனையை மேற்கொள்ளுமுன் நாம் செய்யக்கூடியது என்று ஒன்றிருந்தால், அதைப் பூர்த்தி செய்து பின் பிரார்த்தனை செய்தல் நல்லது. இல்லையெனில் பிரார்த்தனைத் திறனில் ஒரு பகுதி அந்தக் குறையை நிறை செய்யச் செலவாகும்.

ஒரு வேலையில் உள்ள எல்லாப் பொறுப்புகளையும் பூரணமாக நிறைவேற்றினால் பலன் கிடைக்கும். அங்கு பிரார்த்தனை தேவைப்படாது. பிரார்த்தனை தேவைப்பட்ட ஒன்றானாலும், பிரார்த்தனையின்றி பலிக்கும். ஏதாவது ஓர் அம்சம் குறையானால்தான்

பிரார்த்தனை தேவைப்படுகிறது. தன் பங்கைச் சரிவர முடித்துவிட்ட விவசாயி, மழை தன் கையில் இல்லாததால் பிரார்த்தனை செய்தால் உடனே மழை பெய்யும். பிரார்த்தனையே செய்யாவிட்டாலும் கடமைகளை நிறைவேற்றிய காரணத்தால் மழை தானே பெய்யும் என முன்னரே குறிப்பிட்டேன்.

ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறோம். நம் பங்கைச் சரிவர முடித்துவிட்டோம்; தலைவர் நேரத்தில் வருவதோ, கூட்டம் நடக்கும் பொழுது மின்சாரம் தடைப்படாமலிருப்பதோ, நாம் மேடையில் பேசும்பொழுது பேச்சு நினைவுக்கு வருவதோ, நம் கையில் இல்லை. இதுபோல் ஓர் அம்சம் குறைவுபட்டால், பிரார்த்தனை தேவைப்படுகிறது. நம்மால் முடிந்த அத்தனையும் செய்தபின் நம் கையில் இல்லாத அம்சத்தால் குறை வரக்கூடாது என்று செய்யும் பிரார்த்தனை பூரணமாகப் பலிக்கும். நம் திறன் முடியும் இடத்தில் அன்னை செயல்பட ஆரம்பிக்கிறார். இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் நம்மால் தீர்க்க முடியாத பிரச்சினை என்று ஒன்று இல்லை என்பதை அனுபவம் காண்பிக்கும்.

அகவுணர்வும் புற நிகழ்ச்சியும்:

ஒரு காரியத்தில் 10 விஷயங்கள் அடங்கியிருக்கும்பொழுது 9 விஷயங்கள் நம் கையில் இருந்தாலும், பத்தாவது விஷயம் நம் கையில் இல்லாவிட்டால், 9 விஷயங்களிலும் நம்மால் செய்யக்கூடியவற்றை முடித்தபின், அன்னை அந்தப் பத்தாவது விஷயத்தை முடிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் நம்பிக்கையால்தான் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. நம்பிக்கையால் ஏற்றுக்கொண்டால் போதும். இருந்தாலும், அதற்கும் ஒரு விளக்கம் கொடுக்கலாம்.

ஆன்மீக அடிப்படையில் வெளி நிகழ்ச்சிகளும், மன நிலையும் ஒன்றே. நம் கண்ணுக்குத் தெரிவது வெளி நிகழ்ச்சி; அகவுணர்வு

தெரிவதில்லை. தெரிந்தால் புரிவதில்லை. புற நிகழ்ச்சி அகவுணர்வின் பிரதிபலிப்பு என்பது ஆன்மீகக் கருத்து. வேலை போய்விட்டது. போன வேலை திரும்பக் கிடைக்க, பொதுவாக ஒரு வருஷமாகும். இதுவரை என் அனுபவம் அதுவே என்றவர்க்கு மேற்சொன்ன கருத்தைச் சொல்லி, அகவுணர்வைப் பூர்த்தி செய்தால் வேலை கிடைக்கும். அதற்கு ஒரு வருஷம் உங்கள் அனுபவம் எந்த நிமிஷம் அகவுணர்வு பூர்த்தியாகிறதோ, அதே சமயத்தில் வேலை கிடைக்கும்' என்று சொன்னால், அவர் நான் வேலை வேண்டும் என்றுதானே நினைக்கின்றேன்; பூர்த்தி செய்ய என்ன இருக்கிறது' என்று கேட்கிறார். வேலை வேண்டும் என்பது வேறு. வேலை செய்யப் பிரியப்படுகிறேன் என்பது வேறன்றோ? வேலை செய்யப் பிரியப்படாததால், வேலை போயிற்று. அந்த மனநிலைக்குரிய புற நிகழ்ச்சி வேலை போவது. அந்த மனநிலையை மாற்றி, உண்மையாகவே மாற்றி, இப்பொழுது வேலை செய்ய வேண்டும் என்ற பிரியத்தை மனதில் ஏற்படுத்தினால், அகவுணர்வு பூர்த்தியாகிறது. அப்படி மனத்தை மாற்றி, உள்ளுணர்வைப் பூர்த்தி செய்தபின், வெளிநாட்டிலிருந்து செல்வாக்குள்ள உறவினர் வீட்டுக்கு வந்து உள்ளூரில் பெரிய கம்பெனியில் பெரிய வேலைக்கு ஏற்பாடு செய்து 15ஆம் நாள் வேலையில் சேர்ந்தார் ஒருவர்.

நமக்குப் புற நிகழ்ச்சியாகத் தெரிவது அகவுணர்ச்சியின் பிரதிபலிப்பே. புற நிகழ்ச்சி நம் கையில் இல்லை; அகவுணர்ச்சி நம் கட்டுப்பாட்டுக்குட்பட்டது. அதை மாற்றும் திறன் நமக்குண்டு. அதைச் செய்ய முன்வருவோர்க்கு வெளிநிகழ்ச்சிகள் அதே சமயத்தில் கட்டுப்படும். பிரார்த்தனை பலிக்க உதவி செய்யும் முறைகளில் இதுவும் ஒன்று.

ஓர் அமெரிக்கருக்குச் சிறு வயதிலிருந்து ஒரு கதை எழுதி வெளியிட வேண்டும் என்ற அவா அதிகமாகவுண்டு. 6 வயதில் ஒரு கதை எழுதினார். M.A. முடித்தபின் பிரபலமான தினசரி பேப்பரில் நிருபராக வேலை செய்தார். வெளிவரும் ஒவ்வொரு கதையையும்

படிப்பார். தாம் எழுத இருக்கும் கதை'யுடன் ஒப்பிடுவார். எப்படியாவது ஒரு புத்தகம் தம் பெயரில் வெளிவர வேண்டுமென்ற ஆவல் மிகுந்து இருந்தது. தென் அமெரிக்காவில் ஒரு பத்திரிகைக்கு ஆசிரியராகச் சென்றார். இங்கிலாந்தில் ஒரு சர்வதேச மாத இதழுக்கு 15 ஆண்டுகள் ஆசிரியராக இருந்தார். அபிலாஷை பூர்த்தியாகவில்லை. ஆசிரியராகப் பிறர் எழுதுவதை வெளியிடும் பாக்கியமே கிடைத்தது. மேலும் உயர்ந்த பதவிகளை எட்டினார். வயது 50ஐத் தாண்டியது. அன்னையைப் பற்றிக் கேள்விப்பட்டார். ஆசிரமம் வந்தார். ஓர் உயர்ந்த புஸ்தகம் எழுத நிறைந்த கருத்துகளை வைத்துக்கொண்டு, அதை வெளியிடும் தகுதியில்லாமல் தகுதியுடைய ஒருவரைத் தேடிக்கொண்டு இருக்கும் இளைஞரைச் சந்தித்தார். இவருடைய தகுதி மிக உயர்ந்தது. நிருபர், ஆசிரியர் பதவிகளை வகித்து, அதைவிட உயர்ந்தவர். கதை எழுத முடியவில்லை. தம் துறையில் இளைஞர் புதுக்கருத்துகள் சொல்வதைக் கேட்டார். இளைஞருடைய கருத்தும், இவருடைய தகுதியும் சேர்ந்து புத்தகம் வெளிவந்தது. 5 மொழிகளில் பிரசுரம் ஆயிற்று. இவருக்கிருந்த ஆர்வம் பெரியது. அது அபிலாஷையாகவே இருந்தது. அதற்குரிய திறமையில்லை. தம் துறையிலும் எழுதக்கூடிய தகுதியில்லை; வெளியிடக்கூடிய அந்தஸ்து இருந்தது. அன்னையிடம் வந்தவுடன் இவருடைய ஆர்வத்தைப் பூர்த்திசெய்ய, இவரிடம் எந்தக் குறையிருந்ததோ அதை இன்னொருவர் நிறைவு மூலம் பூர்த்தி செய்தார் அன்னை. வாழ்க்கை பூர்த்தி செய்யாத விஷயங்களை, பூர்த்தி செய்யத் திறமையில்லாத விஷயங்களை அன்னை பூர்த்தி செய்கிறார். அன்னையின் குறிக்கோள் சிருஷ்டி. அதாவது புதியன படைத்தல். ஒருவருக்கு எழுத்துத் திறமையிருக்கிறது; வெளியிடும் அந்தஸ்து இல்லை. மற்றொருவருக்குப் புத்தகத்தை வெளியிடும் அந்தஸ்து (social status) இருக்கிறது; எழுதும் திறமையில்லை. இவையிரண்டும் சேர்ந்தால் புத்தகம் என்பது சிருஷ்டிக்கப்படும். அது போன்ற சிருஷ்டியை அன்னை அனுதினமும் செய்துகொண்டிருப்பதால் நமக்குள்ள திறமையெல்லாம் செலவு செய்து முயற்சியை முடித்தபின் அன்னைக்குப் பிரார்த்தனை செய்தால், நமக்கில்லாத விஷயத்தைக்

கொண்டுவந்து சேர்த்து, பிரார்த்தனையைப் பூர்த்தி செய்வார்.

திறமையில்லாத பணக்கார முதலாளிக்குத் திறமையும், நேர்மையும் உள்ள மானேஜர் அமைந்தால், அதை அதிர்ஷ்டம் என்கிறோம். நேர்மையே இல்லாத வல்லுநரை எவரும் நம்பி வேலை கொடுக்கமாட்டார்கள். வல்லுநராக (expert) இருந்தால் மட்டும் போதாது, நேர்மையும் வேண்டும். நேர்மையான பார்ட்னர் கிடைப்பதை அதிர்ஷ்டம் என்கிறோம். பொறுப்பில்லாத கணவனுக்கு பொறுப்புள்ள மனைவி அமைவதை அதிர்ஷ்டம் என்பது வழக்கம். நமக்கு எது இருக்கிறது, எது இல்லை என்ற பிரச்சினையில்லை. இருப்பதை முழுவதுமாகப் பயன்படுத்தியபின் அன்னைக்குப் பிரார்த்தனை செய்தால், இல்லாத அனைத்தையும் மற்றவர்கள் மூலமாகவும், புது சந்தர்ப்பங்கள் மூலமாகவும் அன்னை பூர்த்தி செய்வது வழக்கம். அதுவே அன்னைக்கு உரிய சிறப்பு. சிறப்பால் தவறாது அன்னை நம் வாழ்வில் செயல்பட நாம் செய்ய வேண்டியது பிரார்த்தனை. பிரார்த்தனையை அதற்குரிய ஆன்மீக இலட்சணத்துடன் பூர்த்தி செய்ய வேண்டும். பிரார்த்தனையை ஆரம்பிக்குமுன் அதற்குரிய நிபந்தனைகளைச் சரிவரப் பூர்த்தி செய்ய வேண்டும். நம் கடமைகளையும், திறமைகளையும் முழுவதுமாகப் பயன்படுத்த வேண்டும் (exhaust) என்பது ஒரு நிபந்தனை. இது போன்ற பிரார்த்தனை தவறியதை நான் 31 வருஷ காலத்தில் ஒரு முறையும் பார்த்ததில்லை. எவரும் கண்டதாக நான் கேட்டதும் இல்லை.

பிரார்த்தனையை எளிதாகவும் கருதலாம். எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிய பெரிய விஷயமாகவும் கருதலாம். அப்படிக் கருதினால், பிரார்த்தனைக்குரிய ஒவ்வொரு அம்சத்தையும் ஓர் உதாரணத்தின் மூலம் விளக்கி எழுத முயன்றால், அது கட்டுரையாக ஆரம்பித்து புத்தகமாக வளர்ந்துவிடும். இக்கட்டுரையில் முக்கியமான எல்லா அம்சங்களையும் குறிப்பிட்டு, சில சிறப்பான உதாரணங்- களையும், குறிப்பான நிகழ்ச்சிகளையும் மட்டும் சொல்கிறேன்.

பிரார்த்தனையின் ஜீவனோடு தொடர்புகொண்டு அதை ஆரம்பிக்க நேரம், இடம் குறிப்பிட்டு, அதற்குமுன் நம் கடமைகளை எல்லாம் பூர்த்தி செய்தபின், நாம் எடுத்துக்கொண்ட பிரச்சினையை அன்னை முன் வைத்தபின், என்ன வேண்டும் என்று பிரார்த்திப்பது ஒரு கேள்வி. அதற்குரிய பதில்கள் பல.

கடன் கொடுத்தோம். இனி வாராது என்ற நிலையில், இந்தக் கடன் திரும்பி வர வேண்டும்' என்றாவது, வட்டியுடன் வர வேண்டும்' என்றாவது, ஒரே மாதத்தில் கிடைக்க வேண்டும்' என்றாவது குறிப்பாகப் பிரார்த்தனை செய்யலாம். பெரும்பாலும் பிரார்த்தனை செய்தபடியே பூர்த்தியாகும். அப்படியில்லை என்றால், அதைவிட ஒரு பெரிய நல்லதைக் கொடுப்பதற்கு மட்டுமே அன்னை எதிர்பார்க்கும் பலனை மாற்றுவார்.

தவறிய பிரார்த்தனை:

வியாபாரி ஒருவர் ஜில்லா ஏஜென்சி எடுக்க முழுக்க அபிப்பிராயப்பட்டு, அதற்குரிய முறையில் பிரார்த்தனையைப் பொருத்தவரை எதுவும் தவறில்லாமல் செய்துவிட்டு, ஒரு மாத காலம் அலைந்துகொண்டிருக்கும்பொழுது, சமாதிக்குப் பல முறை வந்தவர் முழுவதுமாக ஏமாந்துவிட்டார். ஏஜென்சி கிடைக்கவில்லை என்ற ஏமாற்றம் பெரியது. தாங்கிக்கொள்ள முடியவில்லை. என்றாலும் அன்னை மீது நம்பிக்கைக் குறையவில்லை. மீண்டும் ஒரு முறை ஆசிரமம் வர முடிவு செய்தபொழுது வழியில் ஒரு கார் ரிப்பேராகி இருப்பதைப் பார்த்து அவர்களுக்கு உதவப்போய், உதவி நட்பாக மாறி, நட்பு வியாபாரக்கூட்டாக மாறி, கூட்டு ஏழாம் நாள் ஷேர் வாங்கியதில் முடிந்து, மனம் நிறைந்த நிலையில் அவர் கண்ட புதுமை என்னவென்றால், எந்தப் பொருளுக்கு ஜில்லா ஏஜென்சி கிடைக்கவில்லையோ, அந்த பொருள் உற்பத்தி செய்யும் கம்பெனியில் இவர் வாங்கிய ஷேர் சர்ட்டிபிகேட் இவரை அக்கெம்பெனியின் டைரக்டராக நியமித்தது.

அன்னையிடம் செய்த பிரார்த்தனை தவறுவதில்லை. தவறினால் அதன் மூலம் நாம் எதிர்பார்ப்பதைவிடப் பெரிய நல்லதே நடக்கும். இது அன்னையின் அவதாரச் சிறப்பு. பெரும்பாலும் குறிப்பிட்ட பிரார்த்தனைக்குப் பலன் கேட்டது போலிருக்கும். பிரார்த்தனை அதற்குரிய இலட்சணத்துடனிருந்தால், கேட்டது கேட்டபடியே கிடைக்கும். இதுவே பிரார்த்தனைகளில் சிறியது.

நமக்குத் தெரிந்த பலன் இருக்கிறது. அதைக் கேட்கிறோம். கேட்டபடி கிடைக்கிறது. இதைவிட வேறென்ன வேண்டும் என்று நினைக்கலாம். போர்ட் டிரஸ்டில் குமாஸ்தாவாகப் போன மேதை சீனுவாச ராமானுஜத்திற்கு கேம்பிரிட்ஜ் போகும் வாய்ப்பு அந்த உத்தியோகத்தின் பின்னணியில் புதைந்திருந்தது அவருக்கோ, மற்றவர்க்கோ தெரியவில்லை. அதேபோல், ஒவ்வொரு நிகழ்ச்சிக்குப் பின்னும், ஒரு பெரிய உலகம் மறைந்திருக்கிறது. அதை நாம் அறிவதே இல்லை. நமக்குப் புரிந்த பலனைக் கேட்டால் அன்னை அதைக் கொடுக்கிறார். அதற்குப் பதிலாகப் பிரச்சினையை அன்னை முன் வைத்து, அன்னையின் திருவுள்ளப்படி இது தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்வது சிறப்பு. இப்படிச் செய்வதால் பிரார்த்தனை சமர்ப்பணமாகி அந்த நிகழ்ச்சி மூலம் அன்னை நம் வாழ்வில் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட முடியுமோ அவ்வளவு சிறப்பாகச் செயல்படுவார். நடைமுறையில் நமக்குத் தெரிந்த பலன் என்று ஒன்று இருந்தால் மனம் அதை மட்டுமே விழையும்; வேறெதையும் காதில் போட்டுக் கொள்ளாது. இதுபோல் பிரார்த்தனை செய்வது அரிது; செய்தால் சிறப்புண்டு.

ஒரு வியாதி வருகிறது என்றால் பிரார்த்தனை செய்தால் அது குணம் அடையும். பிரார்த்தனை அதற்குரிய இலட்சணத்துடன் இருந்தால் அந்த வியாதி பின்னர் வாராது. வியாதி வந்தவுடன் ஒரு முறை பிரார்த்தனை செய்தால் சில சமயங்களில் உடனே அது விலகும். விலகியபின் வியாதி நமக்கு நினைவு வருவதில்லை. மீண்டும் வியாதி வந்தால்தான் நினைவு வரும். அது போன்ற சமயங்களில்,

பிரார்த்தனையை முறையாக, அர்த்தபுஷ்டியாக, சிறப்பாகச் செய்யா விட்டாலும், இது மீண்டும் வரக்கூடாது என ஒரு பிரார்த்தனையையும் சேர்த்துக்கொண்டால், அந்தப் பிரார்த்தனையும் பூர்த்தியாகும்.

ஒரு தொந்தரவு வந்தால் அது விலகவேண்டும் என்றுதான் நமக்குப் பிரார்த்தனை செய்யத் தோன்றும். மாறாக, இந்தத் தொந்திரவு நல்லதாக மாறி, நல்ல பலனைக் கொடுக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்யலாம்; அதுவும் பலிக்கும்.

கஷ்டம் வந்து கண்ணீரால் நனைந்திருக்கும் சமயம், இது எப்பொழுது விலகும் என்று மட்டுமே மனம் காத்திருக்கும். அன்னையின் பல்வேறு அம்சங்கள் தெரிந்தவர்கள் அந்தச் சமயத்தில் இந்தக் கஷ்டம் வந்து விலகுவதால் நான் அன்னையிடம் நெருங்கி வர வேண்டும் என்று பிரார்த்தித்தால், கஷ்டம் விலகும். நமக்கு நம்பிக்கையும், பக்தியும் பெருகி ஆன்மீகச் சிறப்புறுவோம். கோபம் போன்ற குணக்கேட்டால், அவசரப் புத்தியால் ஒரு சிக்கலை நாம் ஏற்படுத்திவிட்டால், பிரச்சினையைத் தீர்க்க பிரார்த்தனை செய்கிறோம். (அத்துடன் பிரச்சினைக்கு வித்தான அவசரமும் நம்மை விட்டுப் போகவேண்டும், மீண்டும் இதேபோல் அவசர புத்தியால் சிரமம் ஏற்படக்கூடாது என்ற பிரார்த்தனையையும் சேர்த்துக் கொண்டால், அது பிரச்சினைக்குரிய அஸ்திவாரத்தையே மாற்றுவது ஆகும்). குடும்பத்தில் ஏற்பட்ட கோளாறுகள் பல. அந்தத் தலைமுறை போய்விட்டது. அவர்கள் செய்த கர்மத்தால் இப்பொழுது நான் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது என்றால், பிரச்சினையை விலக்கச் செய்யும் பிரார்த்தனையுடன் அதன் பூர்வத்திரமான கர்மமும் கரைய மற்றொரு பிரார்த்தனையும் சேர்த்துக்கொள்ளலாம். ஒரு பெரிய சொத்தை விலைக்கு வாங்கும்பொழுது, விலை படிந்து பத்திரம் சிக்கல் இல்லாமலும், குளறுபடிகள் இல்லாமலும் சொத்து கைக்கு வர வேண்டும் என்பது இயல்பான பிரார்த்தனை. இது போன்ற நேரங்களில், பெருந்தொகை ஈடுபட்டிருப்பதால், விஷயம் பெரியது

என்பதால், மனிதர்களுடைய குணவிசேஷங்களைச் சிறப்பாக அறிய முடியும். தொகை அதிகமானால் நிதானமானவன் அவசரப்படுவான். பரம்பரையான நாணயஸ்தன் நாணயத்தை இரண்டாம்பட்சமாக்கி தொகைக்குரிய அளவில் பேச்சை மாற்றிப் பேசுவான். எல்லோரிடமும் மறைந்துள்ள குணவிசேஷங்கள் செயல்படும் நேரம் அது. நமக்கு அதை எல்லாம் கவனிக்க நேரமிருக்காது. காரியம் கூடிவர வேண்டும் என்பதே முக்கியம். அன்னைக்கு இது போன்ற சந்தர்ப்பங்களில் செய்யும் பிரார்த்தனையுடன் மனிதனுடைய குண நுணுக்கங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று வேறொரு பிரார்த்தனையையும் சேர்த்துக்கொண்டால், சிறிய மனிதனுக்குள்ள பெருந்தன்மை, பெரிய மனிதனிடம் இதுவரை வெளிப்படாத மிகப்பெரிய குணம், நல்லவனுக்கு உள்ள கெட்ட குணம், நண்பனுடைய துரோக மனப்பான்மை, லஞ்சத்திற்குப் பேர்போன புரோக்கருடைய சாமர்த்தியம், நாணயம் போன்றவை வெளிவந்து 25 வருஷ அனுபவத்தை 25 நாட்களில் நமக்களிக்கும்.

இன்று ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினையை அன்னை தீர்க்க வேண்டும், அத்துடன் எதிர்காலத்தில் இதுவோ, மற்ற எதுவோ பிரச்சினையாக நம் வாழ்வில் எதிர்படக்கூடாது என்றும் பிரார்த்திக்கலாம். கடன்பட்டுக் கலங்கியவர்கள் கடன் தீரும்பொழுது அப்படி நினைப்பதுண்டு. அன்பர்கள் அப்படிப் பிரார்த்தனை செய்தால் அது பலிக்கும். 1916இல் அன்னை ஜப்பானில் உள்ள சமயம் ஒரு கொடிய ஜுரம் எங்கும் பரவி அன்னையையும் பாதித்தது. அன்னை தம்மைக் குணப்படுத்திக்கொண்டபின் நாடெங்கும் ஜுரம் விலகியது. அதன்பின் அந்த ஜுரம் ஜப்பானை விட்டே நிரந்தரமாகப் போய்விட்டது.

ஒரு பிரச்சினை ஏற்பட்டு, அது பிரார்த்தனையால் தீரும் பொழுது இனி எந்தப் பிரச்சினையையும் தீர்க்கும் திறன் எனக்கு வேண்டும் என்றும் பிரார்த்திக்கலாம். குடும்பத்தில் சண்டையும்,

பூசலுமாக இருந்தால், பூசல் ஒழியப் பிரார்த்திப்பதுடன், இந்தப் பூசல் ஒழிவதன் விளைவாக இனி இக்குடும்பம் அன்புக்கும், ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்றும் பிரார்த்திப்பது நல்லது.

பிரச்சினையின் பூர்வோத்திரம்:

பிரார்த்தனை முறையுள்ளதாகவும், அதற்குரிய எல்லா அம்சங்களைப் பூர்த்தி செய்திருந்தாலும் சில சமயங்களில் பலன் இருப்பதில்லை. அதனால் பிரார்த்தனை பலிக்கவில்லை என்று பொருளில்லை. நாம் செய்தது குறையானது என்றும் அர்த்தமில்லை. பிரச்சினை என்று ஆரம்பிப்பதற்கு முன்னால் அதற்கு ஒரு பூர்வோத்திரம் இருக்கிறது என்று அர்த்தம். பெரும்பாலும் கொஞ்சம் யோசனை செய்தால் அது விளங்கும். விளங்கிய காரணத்தை விலக்கியவுடன் இதுவரை செய்த பிரார்த்தனை எதிர்பார்த்த முழுப் பலனை அளிக்கும். ஒரு செல்வருடைய மகன் சிறப்போடும், செல்வாக்கோடும் இருக்கும் நிலையில், அவரை நம்பி அவருடைய நிழல் வாழ்க்கையை நடத்தும் அவருடைய தமக்கை புருஷர் இவரைக் கேலி செய்ய ஆரம்பித்துவிட்டார். கேலி, நையாண்டி எல்லாம் கேலிக்கூத்தாக மாறி, பொறுக்க முடியாத அளவுக்கு வந்துவிட்டது. முறையாகச் செய்யும் பிரார்த்தனையால் இந்தப் பிரச்சினையை அவரால் தீர்க்க முடியவில்லை. அவர் கவலைக்குரியவராக இருந்த நேரத்தில் இந்தக் கருத்துப்படி அவர் பிரச்சினை தீரும் என்பதை உணர்ந்தார். கருத்தை விளக்கிய அன்பர், செல்வர் மகனைத் தன் வாழ்க்கையை நினைவுபடுத்தும்படிக் கூறினார். உடனே நினைவுக்கு வந்தது அவருடைய பள்ளிப் படிப்பு. சிறு வயதில் பிறரைக் கேலி செய்வதில் கெட்டிக்காரன் என்று தான் பெயர் வாங்கியதும், தான் செய்த கேலி பொறுக்க முடியாமல் பள்ளியை விட்டு ஒரு மாணவன் நின்றதும் நினைவுக்கு வந்தது. இன்றைய பிரச்சினையின் ஆணிவேர் அன்றைய நிகழ்ச்சி என்பது தெரியவந்தவுடன், இனி மனத்தளவிலும் அந்த மனப்பாங்கு கூடாது என்று அவர் உணர்ந்து, பழைய

நிகழ்ச்சிக்காக முழு மனதுடன் வருந்தி, புதிய மனப்பாங்கை ஏற்றுக் கொண்டார். எட்டாம் நாள் கடையிலும், வீட்டிலும், உறவிலும், ஊரிலும் உள்ள நிலைமைகள் பல்வேறு காரணங்களால் பல்வேறு விதங்களாக மாறிக்கொண்டிருந்தன. தமக்கை புருஷர் செல்வர் மகனைத் தேடி வந்தார். (இதுநாள்வரை இருந்த கேலியைக் காணோம்). மனிதர் மாறியிருந்தார். இனி தாம் எப்படி நடந்துகொள்ளப்போகிறார் என்பதை அவர் விவரித்ததும் செல்வர் மகனால் நம்ப முடியவில்லை. முழு அடக்கத்திற்கு உரியவரானார். பூர்வோத்திரம் புரிந்தவுடன் பிடிபடாத பிரார்த்தனை பிடிபட்டுப் பூரணமடைகிறது.

நம்முடைய அவசரம் வேலையைக் கெடுக்கிறது. கோபம் நண்பர்களை எதிரியாக்குகிறது. சோம்பேறித்தனம் நஷ்டத்தைக் கொடுக்கிறது. குத்தலாகப் பேசும் பழக்கத்தால் வந்த நல்ல வரன் தவறிப் போகிறது. நமக்குப் பல குறைகள் இருக்கின்றன. நாமே முயன்று பல குறைகளை நீக்கலாம். நீக்க முயன்ற பின்னும், தீராத குறைகளுண்டு. என்னால் முடிந்தவரை என் குறையை நீக்கி விடுகிறேன். மீதியை நீங்களே நீக்க வேண்டும் என்று அன்னைக்குப் பிரார்த்தனை செய்து பலன் அடைவதுண்டு.

சிறிய பிரார்த்தனையின் ஆன்மீக உயர்வு:

தெய்வத்திடம் போய் பாஸ் வேண்டும், பிரமோஷன் வேண்டும் என்றெல்லாம் கேட்பது தவறு, குறைவு, நல்ல பழக்கமில்லை என்று கருதும் மனப்பான்மை உயர்ந்தது. என்றாலும் இரகஸ்யமான ஒரு நுணுக்கம் இதில் பொதிந்துள்ளது. எந்த அளவு சிறிய காரியங்களை நாம் தெய்வத்திடம் கேட்கிறோமோ அந்த அளவுக்கு நாம் உயர்ந்த பக்தராவோம். கேட்கும் மனப்பான்மை காரிய சித்தியானால், கேட்பது குறைவு, தவறு. கேட்கும் மனப்பான்மை சமர்ப்பணமானால், கேட்பது நல்லது, உயர்ந்தது. மனப்பான்மையே செயலின் தன்மையை நிர்ணயிக்கும். ரயிலில் போவதா, பஸ்ஸில் போவதா என்பதையும்,

தகப்பனாரைக் கேட்டபின் செய்யும் 50 வயது அதிகாரி, தாம் தகப்பனாரிடம் கொண்டுள்ள பிரியத்தையே அச்செயல்கள் மூலம் தெரிவிக்கின்றார். எதில் போவது என்று அறியாதவரில்லை அவர். அவ்வளவு சிறு காரியங்களையும் தகப்பனார் இஷ்டப்படிச் செய்யும் அளவுக்கு உயர்ந்த மனப்பான்மையுள்ள மகன் அவர் என்று நாம் உணர்கிறோம்.

மனப்பான்மையைக் காரியவாதத்திலிருந்து மாற்றி பக்தியாகவும், பவித்திரமாகவும், சமர்ப்பணமாகவும் செய்துவிட்ட பின்னர், எவ்வளவுக்கெவ்வளவு சிறு காரியங்களை அன்னையிடம் சமர்ப்பித்து பிரார்த்தனை செய்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு உயர்ந்தது நம் பக்தியும், ஈடுபாடும். மூன்று நாள் பிரார்த்தனை:

பொதுவாக ஒரு முறையைக் கையாண்டு பலன் பெறலாம். அம்முறையின்படி நாம் தினமும் செய்யும் தியானத்திற்கு முன் 10 நிமிஷ பிரார்த்தனையை மேற்கொள்ளலாம். நமக்குக் குறையாக இருக்கும் எல்லாக் காரியங்களையும் வரிசைப்படுத்தி தியானத்திற்கு முன் அன்னையிடம் பிரார்த்தனையாகத் தினமும் ஒரு முறை அல்லது காலை, மாலை இரு முறை சொல்வது இம்முறையாகும். நாளடைவில் பார்த்தால், நம் பட்டியல் உள்ள பிரச்சினைகள் ஒவ்வொன்றாய்த் தீர்ந்துவருவது தெரியும். வாடகைக்கு நல்ல வீடு வேண்டும், பரீட்சையில் முதல் மார்க் வாங்க வேண்டும், அடிக்கடி வரும் தலைவலி போக வேண்டும் என்பன போன்ற பல பிரச்சினைகள் உள்ளன. அவை இங்கு இடம்பெறும்.

34ஆம் வயதிலும் திருமணமாகாத பெண், 4 வருஷமாகத் தீராத கோர்ட் கேஸ், நீண்ட நாளைய வியாதி, குடும்பத்திற்கே பரம்பரையான உரிமையுடைய வறுமை வெகுநாட்களாகச் சிலரை வாட்டுவதுண்டு. தீராக் கடன் அதைப் போன்றது. இவற்றை நம்

தினசரி பிரார்த்தனையில் சேர்த்துக்கொண்டால் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரச்சினை அசைந்துகொடுத்து, இழை இழையாகத் தீர்வதைப் பார்க்கலாம். ஆனால் இவற்றுக்குரிய முறை வேறு. பிரச்சினை கடுமை நிறைந்தது, நாள்பட்டது, சுலபத்தில் அசையாது, எப்படியாவது தீர்ந்தால்போதும் என்ற கொடூரத்தை எட்டிவிட்டது என்றால், பிரார்த்தனைக்குரிய அனைத்து இலக்கணங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் நம்மை நாம் தயார் செய்துகொண்டு, மனத்தை ஒரு நிலைப்படுத்தி, தீர்வு காண தீவிர ஆர்வம்கொண்டு, நம்முடைய சக்தி முழுவதும் அதைத் தீர்ப்பதில் (force) முனைந்து, பிரச்சினை உருவு பெற்ற வழியை அலசி ஆராய்ந்து, அதன் கூறுகளை விளக்கமாகப் புரிந்துகொண்டு, அதில் நம் இன்றைய பங்கைக் கண்டு விலக்கி, பூர்வோத்திரமிருந்தால் அதையும் விலக்கி, மனத்தை அமைதி செய்து ஓரளவு மௌனத்தை வரவழைத்து, மனத்தில் ஓடும் குறுக்குப் பேச்சுகளை அகற்றி, பிரார்த்தனையை ஆரம்பிக்க முடிவு செய்தால் 3 நாள் இடைவிடாமல் 72 மணி நேரம் அதுவே குறியாக இருந்தால், பிரச்சினை முழுவதும் பிடிபட்டு, புற நிலைமை மாறி, புதிய சூழ்நிலைகள் ஏற்பட்டு, நிகழ்ச்சிகள் விரைந்து செயல்பட்டு, தீர்வு ஏற்படுவதைக் காணலாம்.

தீராத பிரச்சினையாக வருஷக்கணக்காக நம்மை வாட்டுவதால், 3 நாள் பிரார்த்தனை முயற்சி இதைப் பொருத்தவரை அதிகமில்லை. தினசரி ஒரு முறை அன்னையிடம் சொன்னால் 6 மாதத்தில் 180 முறையோ அல்லது 360 முறையோ சொல்கிறோம். தொடர்ந்து இதே வேலையாக அன்னையிடம் முறையிட்டால் 3 மணி நேரத்தில் 300, 400 முறை சொல், 6 மாதத்திய பலனை 3 மணியில் பெறுகிறோம். 3 நாள் தொடர்ந்து பிரார்த்திக்க ஒருவர் சம்மதித்தால் அதுவே அவருடைய தீவிர தீர்மானத்திற்கு அறிகுறி, அதனால் நல்ல முடிவு வரும் என்பது முதலேயே தெரிந்துவிடும்.

பிரார்த்தனையின் பின்னணி:

பிரார்த்தனையின் பலன் நாம் பிரார்த்தனைக்கு நம்மைத் தயார் செய்யும் முறையைப் பொருத்தது. தீவிரமாகத் தயார் செய்து கொண்டால், முழு ஈடுபாட்டுடன் தயாரானால், முழுமூச்சுடன் பிரார்த்தனையை மேற்கொண்டால், பலன் அது போன்றிருக்கும்.

பிரார்த்தனை என்பதை ஒரு சடங்காகச் செய்து, அதற்கு உரிய நேரத்தில் பூஜை அறையில் உட்கார்ந்து பல விஷயங்களில் மனம் ஓடும்பொழுது (concentration) மனம் ஒரு நிலையிலில்லை என எழுந்து வருவதற்குப் பதிலாக, பிரார்த்தனை இன்றைய எல்லாக் காரியங்களிலும் சிறந்தது, அதைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று நாள் முழுவதும் மனத்தின் பின்னணியிலுள்ள பீடத்திருத்தி, அதற்கு உரிய நேரத்திற்காகக் காத்திருந்து, அந்த நேரம் நெருங்கும் பொழுது மனம் ஒரு நிலைப்படுவதைக் கண்டு, மௌனம் லேசாக மனத்தை நாடி வருவதைப் பார்த்து, அந்த நேரத்தை அன்னை வரும் நேரமாகக் கருதி, அதற்காகக் காத்திருந்து, பணிவுடனும், பவ்யத்துடனும், பக்தியுடனும் பிரார்த்தனையை மேற்கொண்டால், அதற்குரிய அதிகபட்சப் பலன் தனக்கேயுரிய பெருஞ்சிறப்புடனும், அன்னைக்கேயுரிய அருள் வடிவத்துடனும் நம்மை வந்தடையும். இது போன்ற மனநிலையுடன் ஒரு பெண் தன் பூஜை அறையை மனதால் ஒவ்வொரு க்ஷணமும் பூஜித்து வந்தபொழுது அவருடைய குழந்தைகள் ஒரு நாள் பள்ளிக்கூடத்திருந்து வந்து அன்னை, ஸ்ரீ அரவிந்தர் படங்களைப் பார்த்து, அவை ஒளிமயமாய் இருப்பதைக் கண்டு, அம்மா, படங்களுக்கு பாலிஷ் போட்டீர்களா?' எனக் கேட்டார்கள். மனத்திலுள்ள பக்தி படத்தில் பாலிஷ் போட்டதுபோல் காட்சி அளிக்கிறது.

நான் 85 டிசம்பரிருந்து அன்னையை வழிபடுகிறேன். எனக்கு ஏற்பட்ட இடர்கள் அநேகம். நான் செய்த சிறு பிரார்த்தனைகள் ஆயிரம், பெரிய பிரார்த்தனைகள் அநேகம். ஒரே ஒரு முறைகூட

அன்னை என்னைக் கைவிட்டதில்லை எனக் கல்லூரி ஆசிரியையாய் இருக்கும் பெண்மணி ஒருவர் சொன்னார். M.SC. படித்ததால் அறிவு கூர்மையாக இருக்கிறது. பிரார்த்தனையைத் தெளிவாக மனதில் சொல்ல முடிகிறது என்பது இவருடைய பிரச்சினைகள் தீர்வதற்கு ஒரு காரணம். பொதுவாகப் பிரார்த்தனை செய்வதற்குப் பதிலாக, ஒவ்வொரு முறை ஒவ்வொரு வகையாக எண்ணத்தைச் சொல்வதற்கு பதிலாக, நம் எண்ணத்தைத் தெளிவுபடுத்தி, சுருக்கி, ஒரு விஷயமும் விட்டுப்போகாமல் ஒரு வாக்கியமாக உருவுபடுத்தி அதையே தினமும் (formulate the prayer) திருப்பித் திருப்பிச் சொல்வது நல்லது.

நம்பிக்கையின் அவசியம்:

நமக்கு அன்னையிடம் பொதுவாக பக்தியும், நம்பிக்கையும் நிறைய இருந்தாலும் இன்று நாம் எடுத்துக்கொண்ட பிரச்சினையைத் தீர்க்கும் அளவுக்கு நமக்கு நம்பிக்கையிருக்கிறதா, நமக்கிருக்கும் நம்பிக்கை போதுமா என்று பரிசீலனை செய்ய வேண்டும். நமக்குள்ளது சிறப்பான நம்பிக்கையானாலும் இன்றைய திட்டம் பெரியதானதால், இந்த நம்பிக்கை போதாது, மேலும் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிந்தால், பிரார்த்தனையை ஆரம்பிக்குமுன் நம்பிக்கையைப் போதுமான அளவுக்கு உயர்த்திக் கொள்ள வேண்டும்; நம்பிக்கையின் அளவு பிரார்த்தனை பலிக்கும் திறத்தை நிர்ணயிக்கும். பிரார்த்தனையை மேற்கொண்டபின் நம்பிக்கை அன்னை மீது மட்டும் இருக்க வேண்டும். டாக்டரிடம் சென்று மருந்து சாப்பிடும்பொழுது செய்யும் பிரார்த்தனை பலிக்க வேண்டுமானால், மனம் டாக்டரையும், மருந்தையும் கருவியாக மட்டும் கருதி அன்னையை மட்டும் சக்தியாகக் கருத வேண்டும். வம்பனிடம் உள்ள பிரச்சினை வழக்காகி கோர்ட்டிற்குப் போனால், வக்கீலும், சட்டமும், கோர்ட்டும் கருவிகளே; என் பிரச்சினையைத் தீர்க்கும் சக்தி அன்னையே என்ற நம்பிக்கை வேண்டும்.

குழப்பம்:

மனதில் குழப்பமாயிருந்தால் அதன் மூலம் அன்னை செயல்படுவது சிரமம். குழப்பத்தை நீக்கி அல்லது குறைத்து தெளிவை ஏற்படுத்தினால் பிரார்த்தனை அதிகம் பலிக்கும். பிரார்த்தனையால் ஏற்படும் தீர்வு பல நாளாகும் என்று நாம் நினைப்பதுண்டு. அது உண்மையில்லை. நம் மனநிலையைத் தெளிவுபடுத்துவதற்கே நாள் ஆகிறது. தீர்வு க்ஷணத்தில் ஏற்படுகிறது என்பதே உண்மை.

வெள்ளைப்புள்ளி:

என் உடல் வெள்ளை வெள்ளையாகத் திட்டுத் திட்டாக இருக்கிறது. இது தீர எவ்வளவு நாளாகும் எனக் கேட்பது இயல்பு. உன் மனநிலையைப் பிரார்த்தனை பலிக்கும் நிலையாக மாற்றவே நாளாகிறது. அருள் செயல்பட நாள் தேவையில்லை; ஒரு க்ஷணம் போதும். உடல் வெள்ளைத் திட்டுக்களுள்ளவர் ஒருவர் மேற்சொன்னபடி பிரார்த்தனைக்குரிய நம்பிக்கையும், மற்ற மனநிலைகளையும் பெற்றபின் அன்னையின் ஒளி அந்தத் திட்டுகளின் மீது படியும்போல் கற்பனை செய்தால் அவை மறைந்துவிடும். ஒளி உடலினுள்ளிருந்து வரும்படிக் கற்பனை செய்வது சிறப்பு. இருதயத்தில் ஓர் ஒளிரேகை உற்பத்தியாகி உடல் வெள்ளைத் திட்டு மைய இடத்தை அடைந்து, கீழ்ப்புறமாக வந்து அவ்விடத்தில் பரவுவது, அப்படி நாம் செய்யும் கற்பனைக்கு அதிகபட்சப் பலனுண்டு.

உலகத்திற்குப் புதியது அன்னை சக்தி:

ஒருவனுடைய அறிவு (intelligence) அவனுடைய பிறப்பால் நிர்ணயிக்கப்பட்டது. அதை இப்பிறப்பில் அதிகப்படுத்த முடியாது என்பது சர்வதேச வல்லுநர்கள் தீர்ப்பு. ஒருவன் தன் ஆன்மாவுடன் தொடர்புகொள்ள முடிவு செய்துவிட்டால் அறிவும், நம் நம்பிக்கையைப்

பொய்க்கும் வகையில் வளர ஆரம்பிக்கும் என்று அன்னை சொல்கிறார். அதற்குச் சான்றாகப் பாரிசில் நாட்டியமாடிய கிராமப் பெண்ணின் வாழ்க்கையை விளக்குகின்றார். அன்னைக்குச் செய்யும் நம் பிரார்த்தனை ஆன்மாவுடன் தொடர்புகொள்ளும் பிரார்த்தனை. எனது புத்திசாலித்தனம் அதிகரிக்க வேண்டும் என்று அன்னைக்குப் பிரார்த்தனை செய்தால் அது வளரும். நினைவு, அழகு, திறமை போன்றவை வேண்டும் என்ற பிரார்த்தனைகளை அன்னை பூர்த்தி செய்திருக்கின்றார்.

அதிர்ஷ்டமும், அன்னையின் அதிர்ஷ்டமும்:

அதிர்ஷ்டம் என்பது அமைப்பு; நாம் இஷ்டப்பட்டு பெறக்கூடியது இல்லை என்பது நாமறிந்தது. அன்னையை எனக்கு அதிர்ஷ்டம் வேண்டும் என்று கேட்டுப் பிரார்த்தனை செய்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும். குறிப்பாக, இந்தப் பிரார்த்தனை ஒருவர் மேற்கொள்ளத் தடையானது அவருடைய நம்பிக்கையே. அதிர்ஷ்டத்தைக் கொடுக்க முடியுமா? அப்படி ஒரு தெய்வம் இருப்பதாக நாம் கேள்விப்பட்டது இல்லையே என்ற கேள்வி எழும். பின்னர் பிரார்த்தனைக்கு வேலை இல்லை. இந்தக் கேள்வியும், தயக்கமும் கொஞ்சநஞ்சமிருந்த நம்பிக்கையையும் போக்கிவிடும். இதுவரை உலகில் இல்லாத ஒரு கருத்தை மனம் ஏற்றுக்கொள்வது மேதையின் நிலை. அதில் நம்பிக்கையையும் ஏற்படுத்திக்கொள்வது உயர்ந்த பக்தி நிலை. அன்னை அதிர்ஷ்டத்தைக் கொடுப்பார் என்ற நம்பிக்கை ஏற்பட்டு விட்டால் அதிர்ஷ்டம் வந்துவிடும். அன்னை எளிதில் உன் பிரார்த்தனையைப் பூர்த்தி செய்வார். நம்பிக்கையே முக்கியம்.

அன்னையை வழிபட நேர்ந்ததே அதிர்ஷ்டம் என்பதில் ஐயம் இல்லை. அன்னையைக் கேட்டு அதிர்ஷ்டத்தைப் பெறுதல் அதனினும் சிறப்பு. (Mother's Luck) அன்னையின் அதிர்ஷ்டம் என்பது ஒன்று உண்டு. அதிர்ஷ்டம் என்பதை விளக்கத் தேவையில்லை. ஒருவன்

வாழ்வில் ஓர் அம்சத்தால் அதிர்ஷ்டம் வந்துவிட்டால் அவன் நடுத்தெருவிலிருந்து நாட்டின் நடுவுக்குச் சிறப்புற உயர்ந்து விடுகிறான். அன்னையின் அதிர்ஷ்டம் என்பது மனிதனுடைய எல்லா அம்சங்களையும் அதிர்ஷ்டமுடையதாகச் செய்வதாகும். அதன் தன்மை சிறப்புடையது. நாளுக்கு நாள் வளரும் தன்மையுடையது. இதுவரை இல்லாததை உற்பத்தி செய்து முதலில் நமக்கு அளிக்கக்கூடியது. அதைப் பெற நாம் செய்ய வேண்டியது பிரார்த்தனைதான். பிரார்த்தனைக்குரிய நிபந்தனைகளைச் சொல்வது எளிது; கடைப்பிடிப்பது எளிதன்று. மலர்ந்த மனம், சந்தோஷம் பொங்கும் நெஞ்சம், காண்பவரெல்லோரையும் கடவுளாகக் கருதும் மனப்பான்மை, சிறிய புத்தியே அறியாத பெருந்தன்மை, குறையால் நிரம்பியவன் வாழ்வில் உள்ள நிறைவின் வித்துகளைக் கண்டு அவற்றை வளர்க்கப் பாடுபடும் இலட்சியம், மற்றவர்கள் வெற்றியால் மனம் துள்ளும் இயல்பு போன்ற நல்ல குணங்களால் மட்டுமான சுபாவம் அன்னையின் அதிர்ஷ்டத்தைப் பெறத் தகுதியுடையது. இந்த நிபந்தனையைப் பூர்த்தி செய்யக்கூடியவர்கள் அன்னையின் அதிர்ஷ்டத்தையும் கேட்டுப் பிரார்த்திக்கலாம்.

முடிவான பலன் முதலில் கிடைக்கும்:

முடிவான பலனை முதலில் கொடுக்கும் திறன் அன்னைக்கு உரியது. அன்னையின் அன்பர்கள் தங்கள் தொழிலில் அடிக்கடி இதைப் பார்ப்பதுண்டு. கேவல்கோ என்ற தொழில் அதிபர் ஒரு சிக்கல் மாட்டிக்கொண்டு அதிலிருந்து தப்பிக்க அன்பர் ஒருவரை நாடினார். அன்பருக்குக் கேவல்கோவைப் பிரார்த்திக்கச் சொல்ல முடியாது. எனவே தொழிலைப் பற்றிய சில நுணுக்கங்களைச் சொல்லி, அவற்றைப் பின்பற்றினால், இவற்றால் 5, 6 கோடி வியாபாரம் பெருகும். அதன் வழியாகச் சிக்கல் தீரும் என்றார். சொல்லிய அன்பர் தம் இடம் வந்து அன்னைக்குப் பிரார்த்தனை செய்தார். இரண்டாம் நாள் கேவல்கோ அன்பரைக் கூப்பிட்டு தனக்கு 5, 6 கோடி

வியாபாரம் இரண்டு நாளில் ஏற்பட்டதாகச் சொன்னார். ஒரு முறையைக் கைப்பிடித்து, முடிவாக வர வேண்டிய பலனை முதலிலேயே கொடுக்கும் திறனுடையது அன்னையின் அருள். நமக்கு அது வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்யலாம். அதற்குரிய நிபந்தனையை மட்டும் பூர்த்தி செய்ய வேண்டும்; முடிவான பலன் வர நாம் என்ன முயற்சி செய்ய வேண்டுமோ அம்முயற்சியைப் பிரியமாகச் செய்யும் அளவுக்கு மனம் இன்று பக்குவமடைய வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. தாலுக்கா ஆபீஸ் குமாஸ்தா சர்வீஸ் முடிவில் டெபுடி கலெக்டராக ரிடையர் ஆவார் என்றால், இன்று அவருடைய மனநிலை டெபுடி கலெக்டருக்குரிய மனநிலையாக மாறுமேயானால், அந்த மனநிலைக்குரிய பதவியை அன்னை இன்றே அளித்துவிடுவார்.

முடிவான பலன் முதலிலேயே வேண்டும் என்று பிரார்த்தனை செய்பவர், முடிவான நிலையிலுள்ள மனப்பக்குவத்தை இன்று பெற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

திறமை, சாமர்த்தியம், அனுபவம், நுணுக்கம், அரிய சந்தர்ப்பம், நல்ல குணம், உயர்ந்த மனப்பான்மை ஆகியவற்றை நாம் அனுபவத்தால் பெறுகிறோம். அனுபவத்தால் பெறும் எந்தத் திறமையையும், எந்த அம்சத்தையும் அன்னையிடமிருந்து பிரார்த்தனையால் பெறலாம். இருவர் ஒரு பெரிய பிரமோஷனுக்காகப் பரீட்சை எழுதினார்கள். இரண்டு பேரும் பாஸ் செய்தனர். இருவருக்கும் பிரமோஷன் கிடைத்தது. ஒருவர் மற்றவரைப் பார்த்து கேலியாக "நான் படித்து பாஸ் செய்தேன். ராமஜெயம் எழுதிப் பாஸ் பண்ணவில்லை'' என்றார். படித்து பாஸ் செய்வது அறிவின் முயற்சி. ராமஜெயம் எழுதி அதே பலன் பெறுவது ஆன்மீக முயற்சி. படித்தவர் ராமஜெயம் எழுதியிருந்தால், ராமஜெயம் எழுதலாமே தவிர, அது பாஸ் கொடுக்காது. அதற்கு ஒரு பக்குவம் தேவை. எத்தனையோ பேர் ராமஜெயம் எழுதுகிறார்கள். எல்லோருக்கும் அதே பலன் கிடைப்பதில்லை.

வெய்யிலின் கடுமை குறைய வேண்டும், மழை வேண்டும் என்று பிரார்த்தனை செய்து பலன் பெறுவதுண்டு.

பிரார்த்தனையின் இரகஸ்யம் நம்பிக்கை; அன்னையால் இதைக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையே பிரார்த்தனையின் கரு.

பிரார்த்தனையால் சாதிக்கக்கூடியவை:

  • 1. யோக சித்தி பெறுதல்.
  • 2. நம் அறிவு நிலை, மனநிலை, செயல் நிலைகளை உயர்த்தி, உயர்ந்த சமூக நிலையை அடைதல் (To raise your level of of functioning and status).
  • 3. பிரச்சினைகளைத் தவிர்ப்பது.

முதல் இரண்டையும் கருதாமல் மூன்றாவதாகப் பிரச்சினையைத் தீர்த்தலை மட்டும் இக்கட்டுரையில் எழுதுகிறேன். உடல் நலம், புத்திசாலித்தனம், தோற்றப்பொலிவான அழகு, அந்தஸ்து, சந்தோஷம், அதிர்ஷ்டம் ஆகியவற்றைப் பிரார்த்தனையால் பெறலாம். நாமறிந்த வாழ்க்கையில் இவையெல்லாம் நடக்காது என அறிவோம். அன்னை வாழ்வில் அத்தனையும் நடக்கும் என்பதைப் பிரார்த்தனை நமக்கு அறிவுறுத்தும்.

தொலைந்த பொருள்கள்:

தொலைந்த பொருள்களைத் தேடும்போது அவை கிடைக்க வேண்டுமென்று பிரார்த்தனை சிலருக்கு உடனே பலிக்கும்; பலருக்குப் பலிப்பதில்லை. தன் வீட்டில் 1 1/2 இலட்சம் பெறுமான நகை களவு போனதை ஊரிருந்து திரும்பி வந்து பார்த்தவர், போலீஸுக்குப் புகார் கொடுப்பதன் முன் ஆசிரமத்திற்குச் செய்தியனுப்பி, பிரார்த்தனை

செய்தார். 3ஆம் நாள் வேறோர் ஊர் போலீசாரிடம் அது தற்செயலாக முழுவதுமாகக் கிடைத்தது, இவருக்குச் சேதி வந்தது.

பொருள் தொலைந்தபின் மனம் பதட்டமாக இருக்கும். இந்த நிலையில் செய்யும் பிரார்த்தனை பதட்டத்தைக் குறைக்குமே தவிர, அன்னையின் காதில் போய் விழாது. மனத்தைத் திடம் செய்து கொண்டு, அன்னைக்குப் பிரார்த்தனை செய்தால் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை மீண்டும் புதுப்பித்துக்கொண்டு, மனம் பதட்டம் அடங்கும்வரை காத்திருக்க வேண்டும். அதன்பின் போய்த் தேடினால் உடனே கிடைக்கும்.

தலைவலி போன்ற வியாதிகள்:

வியாதி ஏற்பட்டபின் பிரார்த்தனை செய்தால் பத்தில் ஒன்பது குணமாய்விடும். ஏதோ காரணத்தால் ஒன்று பிரார்த்தனைக்கு அசையாது. அதுபோன்ற நிலையில் பிரார்த்தனைக்குமுன் அன்னையின் ஒளி தலை முழுவதும் நிரம்புவதுபோல் கற்பனை செய்தால் அது தலைவலி குணமாவதற்குப் பயன்படும். எந்த இடத்தில் வலி இருக்கின்றதோ அந்த இடம் அன்னையின் ஒளியால் அல்லது சாந்தியால் நிரம்புவதுபோல் கற்பனை செய்வது பிரார்த்தனைக்குத் துணையாகும்.

கெட்ட கனவு:

காலையில் எழுந்தவுடன் அன்றிரவு நல்ல தூக்கம் வேண்டும் என்று பிரார்த்தனை செய்து, மாலையில் குளித்து, சுத்தமான துணியை அணிந்து, இரவில் படுக்குமுன் கை, கால் கழுவி, வாயைக் கொப்பளித்துப் படுத்தால் கெட்ட கனவுகளை நம் பிரார்த்தனை விலக்க உதவும். நம்மைச் சுற்றி (cocoon of peace) அமைதியால் ஆன கூண்டு ஒன்றை கட்டிக்கொள்ளுதல் நல்லது என்று அன்னை கூறுகிறார்.

வெளியூர் பிரயாணம்:

கணவன் அடிக்கடி வெளியூர் சென்றால் பத்திரமாகத் திரும்பி வர வேண்டுமென மனைவி பயப்படுவாள். கணவன் போக வேண்டிய இடத்திற்கெல்லாம் மானசீகமாக அன்னையை முதலேயே அழைத்துச் சென்று, பின்னர் பிரார்த்தனை செய்தால், மனபாரம் குறையும். அன்னையின் பாதுகாப்பு கணவருடன் இருக்கும்.

பிரார்த்தனை என்பது தெய்வம் மனிதனுக்கு அளித்த வரப்பிரசாதம். அதனால் பெற முடியாத வரம் ஒன்றில்லை. அதைப் பயன்படுத்தக்கூடிய திறனும், பயிற்சியும், மனநிலையும் உள்ள எவரும் பிரார்த்தனை மூலம் எதையும் பெற முடியும்.

சிறப்பான பிரார்த்தனை:

தினந்தோறும் பிரார்த்தனை செய்யும் நேரம் மாலையானால் அந்த நேரம் வருவதற்காக ஆர்வத்துடன் காத்திருந்து, பிரார்த்தனை செய்யும்பொழுது மனம் இனிமையாக இருந்து, அது முடிந்தவுடன் இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதே என்ற ஏக்கம் ஏற்பட்டால் நமக்கு பிரார்த்தனைக்கு உரிய மனநிலை இருக்கிறது என்று பொருள். அதுவே பிரார்த்தனையின் சிறப்புக்குரிய அடையாளம்.

********book | by Dr. Radut