Skip to Content

04. சேவை

சேவை

அன்னைக்குச் சேவை செய்ய ஆர்வம் உள்ள பலர், ‘எவ்வாறு சேவை செய்யலாம்? எப்படிச் செய்யலாம்?’ என வினவி அடிக்கடி கடிதம் எழுதுகின்றார்கள்.

செய்யும் வேலையை தன்னலம் கருதிச் செய்யும் பொழுது அதற்குப் பெயர் உழைப்பு. பிறருக்காகவோ, ஓர் இலட்சியத்திற்காகவோ, பொது நன்மைக்காகவோ செய்யும் வேலைக்கு, ‘சேவை’ என்று பெயர். இறைவனுக்காகச் செய்யும் பணி, ‘திருப்பணி’ என்று அழைக்கப்படுகின்றது. அதையே ‘சேவை’ என்றும் சொல்கின்றோம். பொதுவாக, கோயில்கள் சம்பந்தப்பட்ட பணிகளும், பூஜை சம்பந்தப்பட்டவையும், மத சம்பந்தமான பணிகளும் ‘ஆண்டவனுக்கு செய்யப்படும் சேவை’ எனக் கருதப்படுகின்றன.

முயன்று செயல்படுவதைப் ‘பாடு’ என்கிறோம். இது உடலால் செய்யப்படுவது. தியாக சீலர்களை, ‘உடல், பொருள், ஆவியாகிய அனைத்தையும் இலட்சியத்திற்காக ஈந்த செம்மல்’ என்று புகழ்ந்து கூறுவதுண்டு. ‘சேவையை உடலாலும், பொருளாலும், உயிராலும் செய்யலாம்’ என்பதே இதற்குப் பொருள். உடலால் செய்யப்படும் பாட்டை ஆர்வத்துடன் செய்தால், அது உயிரால், உடலால், ஆவியால் செய்த சேவையாகின்றது.

பொதுவாக, அன்னைக்குச் சேவை செய்ய ஆர்வம் உள்ளவர்கள், ஆசிரமத்தில் கொஞ்ச காலம் தங்கி இருந்து, ஏதாவதொரு பணியை மேற்கொண்டு செய்கின்றனர்.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னால் ஓர் இளைஞன் எம்.ஏ. முதல் வகுப்பில் தேறி இருந்தான். அவனுடைய தந்தை ஒரு அரசாங்க குமாஸ்தா. அன்று இவனும் தந்தை போலக் குமாஸ்தாவாகப் போயிருந்தால், மாதம் 30 ரூபாய் தான் சம்பளமாகக் கிடைக்கும். விலைவாசிப் படி எல்லாம் கொடுக்கப்படாத காலம் அது. ஒரு பெரிய பட்டத்தைக் கையில் வைத்துக்கொண்டு இந்தச் சுண்டைக்காய் வேலையைச் செய்ய அவனுக்கும், அவன் தந்தைக்கும் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. பையன் படுகிற பாட்டைக் கண்டு அவனுடைய தந்தையின் நண்பர் ஒருவர் தன்னுடைய நிறுவனத்தில் ரூ.60 சம்பளத்தில் வேலை போட்டுக் கொடுத்தார். அந்த ஆண்டு அவன் ஆசிரமத்திற்கு வந்து ஸ்ரீ அரவிந்தரையும், அன்னையையும் தரிசித்தான்.

ஆசிரமத்தில் அந்த இளைஞனுக்கு வேண்டிய பெரியவர் ஒருவர் இருந்தார். அவர் அவனுடைய நிலையை நன்கு அறிந்திருந்தார். அவனுடைய படிப்புக்கு ஏற்றதொரு வேலையைப் பெற்றுத் தர வேண்டும் என்று நினைத்த அவர், வேலையை ராஜிநாமா செய்து விட்டு வந்து ஆசிரமத்தில் சேவை செய்யும்படி அவனிடம் கூறினார். அவன் லாப நஷ்டக் கணக்கெல்லாம் போட்டுப் பார்க்காமல் வேலையை ராஜிநாமா செய்துவிட்டு ஆசிரமத்திற்கு வந்து உணவுப் பகுதியில் 6 மாதம் சேவை செய்தான். அச்சமயம் ஒரு புதிய லாரி உற்பத்தி நிறுவனம், அதிகாரிகளைத் தேர்ந்து எடுப்பதற்காக விளம்பரம் செய்திருந்தது. அவன் அதற்கு விண்ணப்பித்தான். தேர்வில் வெற்றி பெற்று 250 ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தான். அன்றைய நாட்களில் டெபுடிக் கலெக்டருக்கே சம்பளம் 230 ரூபாய்தான்! அவன் அந்த நிறுவனத்தில் சேர்மன் பதவிக்கு அடுத்த பதவி வரை உயர்ந்து, 10,000 சம்பளத்தில் ஓய்வு பெற்றான். இது அவன் ஆசிரமத்தில் செய்த சேவையின் மகத்துவம்.

வேலை தேடி அலைந்த இளைஞன் ஒருவன், சேவையின் மகத்துவத்தை உணர்ந்து, ஆசிரமத்தின் வெளியீடு ஒன்றை விற்க முடிவு செய்து, மூன்று பிரதிகளைத்தான் விற்றான். அதற்குள் அவனுக்கு வேலை கிடைத்துவிட்டது. அதன் காரணமாக, பக்தியாலும், நன்றியாலும் உந்தப்பட்ட அந்த இளைஞன், முயற்சியைத் தீவிரப்படுத்தி 100 பிரதிகள் வரை விற்றான். அவன் விற்பனையைப் பெருக்கப் பெருக்க, அவனது செழிப்பும் பெருகிக் கொண்டே போயிற்று. சில ஆண்டுகளுக்குப் பிறகு என்னைச் சந்திக்க வந்திருந்த அவன், ‘‘இப்பொழுது எனக்கும் என் மனைவிக்குமாக 3000 ரூபாய்க்கு மேல் சம்பளம் வருகிறது. வேலை காரணமாக நாங்கள் வெவ்வேறு ஊர்களில் இருப்பதால், இரட்டிப்புச் செலவாகின்றது. இருந்தாலும், எங்கள் இருவரின் சேமிப்பாக இன்று ஓர் இலட்சம் இருக்கின்றது. அதை எப்படிப் பயன்படுத்தலாம்?’ என்று கேட்டான்.

அதற்கு நான் அளித்த பதில் இங்கு தேவை இல்லாதது. அவன் சேவையின் பலனை முழுதுமாகப் பெற்றான் என்பதுதான் இங்கு முக்கியம்.

‘சேவைகளின் வகைகள் என்ன? அவற்றிற்குரிய பலன்கள் யாவை? இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே செய்யக்கூடிய சேவை ஏதேனும் உண்டா? பக்தி, ஞானம், யோகம் இவற்றிலிருந்து சேவை எப்படி வேறுபடுகின்றது? அவற்றுக்குள்ள ஒற்றுமை என்ன?’ என்பன போன்ற பல கேள்விகள் எழுகின்றன.

‘உடலால் செய்யும் சேவையை விட உயிரால் செய்யும் சேவை சிறப்பானது’ என்பதில் ஐயமில்லை. அறிவால் செய்யும் சேவை அதனினும் மேம்பட்டது. உடல், உயிர், அறிவு ஆகியவற்றால் செய்யப்படும் சேவைக்கு அப்பாற்பட்டது ஆத்மாவால் செய்யப்படும் சேவை.

சேவையில் ஆர்வம் கலக்கும்பொழுது அது பக்தி பூர்வமாகின்றது. சேவைக்குப் பக்தி ஜீவனை அளிக்கின்றது. தெளிந்த அறிவுடன் இந்த பக்திபூர்வமான சேவையை மேற்கொள்ளும்பொழுது, சேவை ஞானத்தின் சிறப்பைப் பெறுகின்றது. அதன் மேற்கட்டத்திற்குச் சென்று ஆத்ம விளக்கத்தையும் கொடுக்கும்பொழுது, சேவை யோகமாக மாறுகின்றது. ஆக, ஞானத்தின் வழியில் உள்ள படிக்கட்டில் சேவை என்பது முதற்படியாகும்.

சாதாரண வாழ்க்கைச் சூழ்நிலையில் வாழ்பவர்களிடம் பல கட்டங்களில் உள்ள சேவை, பக்தி பூர்வமான சேவை முதலியன எப்படி வருகின்றன?

முதலில் முதற்கட்டமான உழைப்பு, சேவையாக மாறுவதைப் பார்ப்போம். அதற்கு முன்னால் ஒரு கேள்வி. ஒரு பக்தர் தன் குடும்பத்தில் உழைப்பை எப்படிச் சேவையாக மாற்ற முடியும்?

அன்னைக்குத் தூய்மை முக்கியம். தூய்மையான இல்லத்தில் அன்னை விரைந்து வந்து குடி கொள்வார். ஒரு பெண்மணி அன்னையின் பக்தர். அவருடைய பூஜை அறை எப்பொழுதுமே சுத்தமாக இருக்கும். அன்னையின் படத்தை வைத்து வணங்க ஆரம்பித்த பிறகு, அந்தப் பூஜை அறையை மேலும் சுத்தப்படுத்துவதில் கவனம் செலுத்தலானார். அதற்குப் பிறகு அவருடைய வீட்டிற்கு வந்தவர்கள் எல்லாம், அங்கு தெய்வீக மணம் கமழ்வதாகக் கூறினார்கள். மற்றொருவர் தொழிலாளி. அவர் தன் குடிசையில் அன்னையின் படத்தை வைத்து வணங்கி வந்தார். அந்தப் பக்கம் வந்தவர்கள் எல்லாம் குடிசைக்குள்ளிருந்து ஊதுவத்தி மணம் அள்ளிக் கொண்டு வருவதாகச் சொன்னார்கள். உண்மையில் அந்தத் தொழிலாளி ஊதுவத்தி ஏற்றவில்லை. அதற்கான வசதி அவருக்கு இல்லை. ஆனால் அவர் அன்னையின் படம் இருந்த இடத்தை மிகத் தூய்மையாக வைத்திருந்தார். தூய்மையான இடத்திற்கு அன்னையின் திருவுருவம் ஊதுவத்தி மணத்தைக் கொடுக்கின்றது.

தூய்மை, ஒழுங்கு முறையில் அமையும் செயலுக்கு அஸ்திவாரம் போன்றது. ஒரு பெண் அன்னையை நீண்ட காலமாகப் பிரார்த்தனை செய்து வந்தார். அவருடைய கோரிக்கை நிறைவேறவில்லை. ‘அதற்கு தடையாக இருப்பது எது?’ என்பதை அறிந்து, அதன்படி செயல்பட்டார். அதாவது வீட்டைச் சுத்தப்படுத்தத் தொடங்கினார். அதன் பலனாக அது வரையில் தடைப்பட்டிருந்த செல்வம், அமைதி, ஆனந்தம் எல்லாம் தொடர்ந்து அவரை நோக்கி விரைந்து வந்தன.

ஒருவர் தன் வீட்டைத் தூய்மையாகவும், முறையாகவும் வைத்துக்கொண்டால், அவருடைய உழைப்பு அத்தூய்மையின் காரணமாக, சேவையாக மாறுகின்றது. அன்னை அந்தச் சேவையைப் பெரிதும் ஏற்றுக் கொள்கின்றார்; விரும்புகின்றார். இதைச் சொல்வது எளிது. செய்வது சிரமம். தொடர்ந்து செய்வது மிகச் சிரமம். வீட்டின் எல்லாப் பகுதிகளையும் சுத்தமாக வைத்துக் கொள்வது ஒரு பெரிய முயற்சி. ஆண்டுக்கு ஒரு முறை வேண்டுமானால் அதைச் செய்யலாம். அப்படிச் செய்வதுதான் வழக்கமாகவும் இருந்து வருகின்றது. நம்மவர்கள் பொங்கலை ஒட்டி இதைச் செய்கிறார்கள். வீட்டைச் சுத்தப்படுத்துவது, வெள்ளை அடிப்பது, பழையன போக்குவது (போகி) ஆகியவை எல்லாம் அப்பொழுது நிகழ்கின்றன.

தூய்மைப் படுத்துவதை ஒரு பண்டிகை நிகழ்ச்சியாகக் கொள்ளாமல், இலட்சிய நோக்காகக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக வீட்டின் எல்லாப் பகுதிகளையும் தூய்மையின் ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்து, பிறகு அதை நீடிக்கச் செய்து நிலைக்க வைக்கும் பொழுது, அன்னையின் அருளே அந்த இல்லத்தின் முகவரியாகி விடுகின்றது.

‘‘இது முடிகின்ற காரியமா? வீட்டை அலம்பி அலங்காரம் செய்து கொண்டு இருந்தால், பிறகு வேலைக்குப் போவது எப்படி? வயிற்றை அலம்புவது எப்படி?’’ என்றெல்லாம் கேள்விகளைக் கேட்டால், அதற்கு நம்முடைய பதில் : ‘‘கடலில் அலைகள் இருக்கத்தான் செய்யும். அதில் தான் நீராட வேண்டும். ஆபீஸ், பிழைப்பு என்ற அலைகளுக்கு நடுவே வீட்டைத் தூய்மையாகப் பேணவும் பெருமுயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.’’ இதற்கு நம்முடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு நிச்சயமாகக் கிடைக்காது. இது சேவையின் அரிச்சுவடிக் கட்டம்தான். என்றாலும் மலை ஏறுவது போலத் தலையைச் சுற்றும். என்றாலும் சமாளித்துக்கொண்டு வெற்றி கண்டு விட்டாலோ, சேவை இந்த ஆரம்பக் கட்டத்திலேயே பலித்து விடுகின்றது.

தூய்மையான சூழலில் உழைப்பு சேவையாக மாறுகின்றது.

அடுத்தது ஆர்வமிக்க சேவை. ‘‘செய்யும் காரியங்களை ஆர்வத்துடன் செய்ய வேண்டும்’’ என்பது அன்னையின் கருத்து. பொதுவாக நமக்குப் பிடித்தமான காரியங்களை ஆர்வத்துடன் செய்கின்றோம். பிரியமில்லாத காரியங்களை அவசியத்தை முன்னிட்டும், கடமையைக் கருதியும் ஆர்வம் இல்லாமல் செய்கின்றோம். ‘செய்ய வேண்டிய கடமைகளையும் செயல்களையும் விருப்பம் இல்லாவிட்டாலும் கூட, ஆர்வத்தோடு செய்வதே பக்தன் எனக்குச் செய்யும் சேவை’ என்கிறார் அன்னை.

புதுத் துணிமணிகள் வாங்குவது, பயணம் செய்வது, சினிமாப் பார்ப்பது, நண்பர்களுடன் உரையாடுவது போன்றவை, எல்லா வயதினருக்கும் ஆர்வத்தைக் கொடுக்கக் கூடியவை. பெண்களுக்கு அன்றாட வீட்டு வேலைகள், மாணவனுக்குப் பரீட்சைக்குப் படிப்பது, அச்சகத்தில் அச்சுக் கோப்பவர் கவனத்துடன் அச்சுக் கோர்ப்பது, தொழிலாளிக்குக் கடுமையான வேலைகள் போன்றவை உற்சாகத்தைக் கொடுக்கக் கூடியவை அல்ல.

நமக்குப் பிரியமான வேலைகளில் ஆர்வத்தைக் காட்டினால் ஆசைதான் வளரும்; திறமை வளராது. நமக்கு ஏற்பட்ட எந்த ஒரு வேலையையும் மிகவும் நேசித்து ஆர்வத்தோடு செய்தால், திறமை வளரும்; மனம் நிம்மதி அடையும். அன்னை அத்தகைய ஆர்வத்தைச் சிறந்த சேவையாக ஏற்றுக்கொள்கின்றார். கூர்ந்து சிந்தித்தால் வீட்டைத் தூய்மையாக வைப்பதைவிட, இது மிகவும் கடினம். ஒருவர் இந்த முயற்சியை மேற்கொண்டால், அவருள் கோணல் மாணலாக சிக்குப்பட்டுக் கிடக்கும் அத்தனை குணங்களும் எதிர்ப்பாக எழுந்து புரட்சி செய்யும். இந்தச் சூறாவளிக்கு இடையே இந்த முயற்சியைத் தொடங்குவது என்பது எளிதான காரியம் அன்று. அப்படியே தொடங்கினாலும் ஒரு மணி நேரத்திற்கு மேல் தாக்குப் பிடித்துத் தொடர்வது கடினம். இந்தக் கடினத்தையும் கடந்து விடாப்பிடியாக இலட்சிய முயற்சியை மேற்கொண்டு முன்னேறினால், அன்னையின் சாந்தமும், மௌனமும் தவம் செய்யாமலேயே தானாக வந்து குடிகொள்ளும்.

வேதம், உபநிடதம், கீதை போன்ற நூல்களைப் படித்து, அவற்றின் உட்பொருளை உணரும் பொழுது தியானத்தில் அது ஞானமாகப் பலிக்கின்றது. அதற்கு ‘ஞானோதயம்’ என்று பெயர்.

ஸ்ரீ அரவிந்தருடைய நூல்கள் மிக உயர்ந்தவை. அவற்றில் உள்ள கருத்துக்களைப் புரிந்து கொள்வதற்கு அறிவு மட்டும் போதாது; ஞானமும் வேண்டும். அன்னையை ஆழ்ந்து ஏற்றுக்கொள்கின்றவர்களுக்கு ஞானக்கதவம் திறந்து கொள்கின்றது; ஸ்ரீ அரவிந்தரின் நூல்களைப் பயிலும் பக்குவம் ஏற்படுகின்றது. பயிலப் பயில, தயிரில் வெண்ணெய் திரள்வது போல ஆத்மிக அனுபவம் திரண்டு வருகின்றது. ஸ்ரீ அரவிந்தரின் நூல்களைப் பயில்வதும், அன்னையின் நூல்களில் ஆழ்வதும் ஒரு வகையான ஞான யோகமேயாகும். மனம் அன்னைக்குச் சேவை செய்ய விரும்பினால், அன்னை இதை ஒரு சேவையாக ஏற்றுக்கொள்கின்றார். இதை, ‘இலக்கிய சேவை’ எனக் குறிப்பிட்டால் அது மிகவும் பொருந்தும். அவர்களின் நூல்களில் தோய்ந்ததை அடிப்படையாக வைத்து, கட்டுரைகள் எழுதியோ, சொற்பொழிவுகள் ஆற்றியோ, விண்டுரைக்க முடியாத சூட்சுமமான நூல் பகுதிகளை விளக்கிக் கூறியோ தொண்டு செய்கின்ற பொழுது, அது பக்தன் அன்னைக்கு அறிவால் செய்யும் சேவையாகின்றது.

‘அறிவை நம்பாதே. ஆன்மாவை நம்பு’ எனக் கூறுகின்றார் அன்னை. நாம் செய்யும் செயல்களையும், சந்திக்கும் நிகழ்ச்சிகளையும், மனிதர்களையும் நம் பட்டறிவுக்கு ஏற்பப் புரிந்து கொள்கின்றோம். ஸ்ரீ அரவிந்தர், ‘‘வாழ்வே தெய்வம். ஒவ்வொரு ஜீவனும் தெய்வம். நிகழ்ச்சிகள் அனைத்தும் தெய்வச் செயல்கள். மனிதர்கள் எல்லாம் ஆத்மாக்கள்’’ என்கின்றார். இதன் உட்பொருளை நம் அறிவு அன்றாட வாழ்க்கையில் உணர்த்துமேயானால், அது ஒரு ஞானச் சிறப்பாகும். இதை விடச் சிறந்த சேவை அறிவுக்குக் கிடையாது.

யோகிகளை, ரிஷிகளைச் சந்தித்தவர்கள், அவர்களிடம் காணப்படும் சாந்தம், பொறுமை, நிதானம் போன்ற உயர்ந்த குணங்களால் கவரப்படுகின்றார்கள். ஆனந்தம், ஞானம், சாந்தம், மௌனம், எந்நிலையிலும் சலனமற்ற நிதானம் ஆகியவை ஆத்மாவின் அம்சங்களாகும். ஆணவத்தை விட்டு ஆத்மாவில் குடி புகுந்தவனுக்கு ஓர் அறிகுறி உண்டு. அதுவே எல்லையற்ற பொறுமை; வரையறையற்ற நிதானம். மனிதனைத் துள்ள வைக்கும் செய்திகளை அவன் அசைவின்றிக் கேட்பான். கேட்டவுடன் மூர்ச்சையடைய வைக்கக் கூடிய செய்திகளை நிதானமாகக் கேட்டுப் பரிகாரம் தேடுவான். நாம் இந்த நிலையை, ‘பக்குவம்’ என்ற சொல்லால் குறிக்கின்றோம்.

இது ஆத்மாவின் குணம். ஆத்மா தன் இருப்பிடத்திலிருந்து வெளியே வந்து பக்தனுடைய வாழ்வில் செயல்பட ஆரம்பிக்கின்ற பொழுது, இந்தப் பக்குவம் ஏற்படத் தொடங்குகின்றது. ஆன்மீக வாழ்வில் நீண்ட காலம் ஊறிப் பழுத்துக் கனிந்து பெற வேண்டிய அரிதினும் அரிதான பக்குவத்தை, அன்னை தன்னை ஏற்றுக் கொள்பவர்களுக்கு ஆரம்பத்திலேயே அளித்து விடுகின்றார். ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகத்தில், ‘தெய்வம் மனிதனைத் தேடி வந்து ஆன்மிகப் பலன்களை அவனுக்கு அளிக்க விழைகின்றது’ என்கின்றார். அதனால் இறுதியில் கிடைக்கக் கூடிய பலன், ஆரம்பத்திலேயே இந்த யோகத்தால் கிடைத்துவிடுகிறது. இதற்காக மனிதன் செய்ய வேண்டியது ஒன்றுதான். உண்மையை மட்டுமே கடைப்பிடித்து உளமார அன்னையை அடைவதற்கு முழு ஆர்வம் கொள்ளுதல். இதைச் செய்ய முன் வருபவர்கள், அன்னைக்கு ஆத்மாவினால் சேவை செய்பவர்கள் ஆகின்றார்கள்.

  1. தூய்மையையே இலட்சியமாகக் கொண்டு பொருள்களையும், வீட்டையும் சிறப்பாக கையாளுதல் உடலால் மனிதன் செய்யும் சேவை.
  2. கடமைகளைச் செய்யும் பொழுது உண்மையான ஆர்வத்துடன் செயல்படுதல், அதைவிடச் சிறப்பான சேவை. இது உணர்வால், பிராணனால் செய்யும் சேவை.
  3. வேதம், உபநிடதம், கீதை, ஸ்ரீ அரவிந்தரின் நூல்களைப் பயிலுதல் அறிவாலும், மனத்தாலும் செய்யும் சேவையாகும். இந்தச் சேவையைச் சிறப்பாகச் செய்ய வேண்டுமானால், ‘ஒவ்வொரு செயலும், பொருளும், நிகழ்ச்சியும் தெய்வத்தால் நிகழ்பவை. அவை தெய்வத்தின வடிவங்களே’ என, அறிவு நமக்கு உணர்த்த வேண்டும்.
  4. எல்லையற்ற பொறுமையையும், எதற்கும் அசையாத நெஞ்சத்தையும், எதுவும் நம் உள்ளத்தைத் தொட முடியாத பக்குவத்தையும் அன்றாட வாழ்வில் பெற முயற்சி செய்தல் ஆத்மாவால் அன்னைக்கு நாம் செய்யும் சேவையாகும்.

‘மேற்சொன்னவை எல்லாம் மனிதன் தனக்கே செய்து கொள்ளக் கூடிய செயல்களாக இருப்பதால், இது எப்படி சேவையாகும்?’ என்பது கேள்வி. இந்த நான்கு வழிகளின் மூலமாகவும் அன்னை வருகின்றார். அன்னை வருகின்ற வழிகளைப் புனிதமாக்குதல் வேண்டும் அல்லவா?

மேற்கூறியவற்றை ஸ்ரீ அரவிந்தாசிரமம், அதன் கிளைகள், நாம் வேலை செய்யும் அலுவலகம், பிறரின் வாழ்க்கை போன்றவற்றில் கடைப்பிடிப்பது மேலும் சிறப்பாகும்.

மனிதன் தன்னை மனிதனாகக் கருதும் வரை அவனது செயலின் விளைவு அவனுடைய முனைப்பை வலுப்படுத்துகின்றது. அவன் தன்னை ‘ஆத்மா’ என உணர்ந்து செயல்படும் பொழுது, அச்செயல் அவனுடைய ஆத்மாவை வலுப்படுத்துகின்றது. தான் ஆன்ம விளக்கம் பெறுமாறு மனிதன் செய்யும் எல்லாச் செயல்களையும், அன்னை தனக்குச் செய்யும் சேவையாகக் கருதுகின்றார்.

அதிர்ஷ்ட சேவை:

அன்னையை அடுத்தவருக்கு கொடுப்பது அதிர்ஷ்ட சேவையாகும். அதை நாமே முனைந்து செய்தால் பலனிருக்காது. அவர்களே கேட்டுப்பெறும் அளவுக்கு மனதில் சேவை சிறப்புறப்பெற்றால், நாம் பிறருக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் சேவையைச் செய்யலாம்.

மனதால் முடியாதவர்கள், கையால் சேவை செய்யலாம். அதைப் பூர்த்தி செய்வது புத்தக சேவை.

*********book | by Dr. Radut